சுபமங்களா, நினைவுகளின் தொலைவில்…

ks-left


 


1991 முதல் வெளிவரத்தொடங்கிய சுபமங்களா என் இலக்கிய வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. அதுவரை சிற்றிதழ்களில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன். கோவை ஞானியின் நிகழ் இதழ் நான் எழுத களம் அமைத்துத் தந்தது. அதில் வெளிவந்த போதி, படுகை போன்ற கதைகள் என்னைப் பரவலாகக் கவனிக்கச்செய்தன. கணையாழி, புதியநம்பிக்கை, கொல்லிப்பாவை, காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன்.


ஆனால் நான் எழுதும் வேகத்திற்குச் சிற்றிதழ் போதவில்லை. பெரிய இதழ்களின் அளவுகோல்களுக்கு ஏற்ப எழுத என்னால் இயலவுமில்லை. நான் எழுதவிரும்பியவை எனக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. அவை அன்றைய பொதுவான எழுத்துமுறையைச் சேர்ந்த படைப்புகள் அல்ல.


அன்று கணையாழி ஓர் இலக்கியமையம். அது ஓர் அழகியலையும் சிற்றிதழ்ச்சூழலுக்குள் உருவாக்கியிருந்தது. அன்றாட வாழ்க்கையை  யதார்த்தச்சித்தரிப்புடன் முன்வைப்பது என்பது அதன் இலக்கணம். அக்கதைகளின் சாரமும் பெரும்பாலும் எளிய அன்றாட உண்மைகளாகவே இருக்கும். நான் வாசிக்கத் தொடங்கும்போதே அந்த எழுத்துமுறை சலித்துவிட்டிருந்தது. இன்னொரு பக்கம் முற்போக்கு முகாமில் அதே யதார்த்தச் சித்தரிப்பை கிராமம் சார்ந்த வறுமையுடன் கலந்து முன்வைத்துக்கொண்டிருந்தனர்.


வணிகப்பேரிதழ்களில் அன்று விரும்பப்பட்ட கதைகளுக்கு ஒரே இலக்கணம்தான், ‘ஆண்பெண் உறவைப்பற்றிய புதிய ஒரு கோணம். மீண்டும் மீண்டும் காதல். மீண்டும் மீண்டும் குடும்பப்பிரச்சினைகள். கல்லூரி நாட்களில் அத்தகைய கதைகளை பல்வேறு பெயர்களில் அவ்விதழ்களில் எழுதித்தள்ளி கிடைத்த காசுக்கு பரோட்டா பீஃப் தின்று பரோட்டாவே சலித்துவிட்டிருந்தது.


நானும் கோணங்கியும் தமிழில் புதிய கதைகளுடன் புகுந்தோம். தரையில் கால்பதிக்காத கதைகள் என்று அவற்றைச் சொல்லலாம். யதார்த்தத்தை எளிதாக மீறிச்சென்றவை அவை. படுகை நிகழ் இதழில் வெளிவந்தபோது அந்தத் தேக்கரண்டி நீருக்குள்  உருவான அலையை நினைவுகூர்கிறேன். இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா உள்ளிட்ட பலர் அக்கதையைப் பற்றி எழுதினர். புதியநம்பிக்கையில் மாடன் மோட்சம் வெளியானபோதும் அதே அலை. அதன் குமரிமாவட்ட நடை குறித்த சுஜாதாவின் கிண்டலும்.


ரப்பர் அப்போது வெளியாகி மிகப்பரவலாக வாசிக்கப்பட்டிருந்தது. ரப்பரை வெளியிட்ட அகிலன் கண்ணன் [தமிழ் புத்தகாலயம்] எனக்கு ஃபோன் செய்து சுபமங்களாவுக்கு நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு கதையை அனுப்பும்படி விலாசம் அனுப்பினார். எனக்கு கோமலை அப்போது அறிமுகமில்லை. அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தார். தண்ணீர் தண்ணீர் சினிமாவுக்குப்பின் புகழுடன் திகழ்ந்தார். ஆனால் சுபமங்களா என்னும் பெயர் குழப்பம் அளித்தது. இடதுசாரிகளின் இதழ் என்றால் அப்படிப்பட்ட பெயர் இருக்க வாய்ப்பில்லை


கோமலை கவரும் கதை என்றால் அது ஒரு வறுமைச்சித்தரிப்பாகவே இருக்கமுடியும் என தோன்றியது. அதை மிக எளிதாக என்னால் எழுத முடியும். அகிலன் கண்ணன் என்னிடம் அது ஒரு நடுவாந்தர இதழ் என்றும், அதற்கேற்ப எழுதலாமே என்றும் சொன்னார். ஆகவே ஒரு வீம்பு வந்தது. ஜகன்மித்யை கதையை எழுதி அனுப்பினேன். அது அன்றைய சிறுகதை வகைமை எதற்குள்ளும் அடங்குவதல்ல


சிலநாட்களுக்குப்பின் கோமல் என்னை ஃபோனில் அழைத்து அறிமுகம் செய்துகொண்டார். கதையைப் பாராட்டி அதைப்போல எழுதி அனுப்பும்படிச் சொன்னார். சுபமங்களாவை நான் ஆர்வத்துடன் பற்றிக்கொண்டேன். அதில் பல பெயர்களில் தொடர்ந்து எழுதினேன். கதைகள் மட்டும் என்பெயரில். மூன்றுசரித்திரக் கதைகள், ரதம், மண், வெள்ளம என பலகதைகள் அதில் வெளிவந்தன.


எனக்கு முன் எழுதிய சிற்றிதழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இல்லாத தனி அடையாளத்தை எனக்கு சுபமங்களா உருவாக்கியளித்தது. அன்றுமுதல் எப்போதும் எனக்கென்றே வாசகர்கள் இருந்திருக்கிறார்கள். அன்று என்னை அறிமுகம் செய்துகொண்டவர்களின் மைந்தர்கள் இன்று என் வாசகர்களாக இருக்கிறார்கள்


என் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான ‘மண்’ கோமலுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அது அச்சாகி வரும்போது அவர் உயிருடன் இருக்கவில்லை. சுபமங்களாவும் நின்றுவிட்டது. இப்போதும் கோமலை பிரியத்துடன் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பர்கள் அனைவருக்கும் அவரை அணுக்கமாகத் தெரியும், என் சொற்களினூடாக


கோமல் நடத்திய சுபமங்களா இதழ்கள் அவர் மகள் முன்னெடுப்பில் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. ஒவ்வொரு பக்கமும் எப்படி மூலத்தில் இருந்ததோ அப்படி மின்வடிவில் உள்ளது. புரட்டிப்படிக்கப்படிக்க ஒரு காலப்பயணம் போலிருந்தது


ஆனால் திடீரென நஸ்டால்ஜியா செயலூக்கத்தை அழிப்பது என்று தோன்றி நிறுத்திவிட்டேன். வயதிருக்கிறது. சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடி புரட்டிக்கொண்டிருக்கலாம். கோமலை நினைத்து ஏக்கத்துடன் பெருமூச்சு விடலாம்.


 


சுபமங்களா இணையப்பக்கம். அனைத்து இதழ்களும் மின்வடிவில்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 16, 2016 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.