Jeyamohan's Blog, page 70
July 16, 2025
குருபூர்ணிமா அனுபவம்- செல்வகுமார்
குழந்தைப் பிராயத்து கண்ணனின் ஆயர்பாடி வாழ்க்கையை வெண்முரசிலிருந்து சுபா அவர்கள் வாசித்து அளித்தது அருமை. “கண்ணன் பா…வ…ம்” எனும் அவரது குரலில் கண்ணனே கண்ணுள் வந்தான். வெண்முரசு நாளில் வெண்முரசுக்குள் வரும் புதிய வாசகனாகிய எனக்கு நல்ல தொடக்கத்தை அளித்துள்ளார் சுபா.
I was amused to see the strange rock formations in your video, and your speech on that natural phenomenon is also exciting. There are many wonders of nature around us. Most of them are unknown to educationists also.
Wonders of land.July 15, 2025
பெருங்கனவுகளின் விளிம்பில்…
டாலஸ் இலக்கியக்கூடுகைவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பை தொடங்கியபோது அதை ஒரு நெகிழ்வான நண்பர்கூட்டமாக மட்டுமே நடத்தவேண்டும் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. அதை நண்பர்களுடன் பேசி புரியச்செய்து அது வெற்றிகரமான ஒரு இயக்கவடிவம்தான் என்பதை நிறுவ சில ஆண்டுகள் ஆகியது. இதற்கு மைய நிர்வாகம் என ஏதுமில்லை. தலைமையும் இல்லை. (சில இடங்களில் டிரஸ்ட் தேவைப்படுகையில் சில பெயர்கள் பதிவுசெய்யப்படுகின்றன). இதை சார்ந்த நண்பர்கள் தங்கள் ஊர்களில், தங்கள் ஈடுபாட்டின்படி இலக்கியச் செயல்பாடுகளை முன்னெடுக்கலாம். அவை இலக்கியம்- தத்துவம் சார்ந்தவையாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
இன்று இலக்கியவாதிகள் முற்றிலும் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். தங்களை எவரேனும் கவனிக்கவேண்டும் என்பது இலக்கியவாதிகளின் ஏக்கம். எவரேனும் கவனிக்கிறார்கள் என்றால் மட்டுமே அவர்கள் செயல்படவும் முடியும். ஆகவே அவர்கள் முகநூலுக்குள் நுழைகிறார்கள். முகநூல் என்பது தனிமைப்பட்டுப்போன நடுவயதினரின் உலகம். அவர்கள் வெவ்வேறு அரசியல் பாவனைகளுடன் அங்கே வெறுப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அங்கே செல்லும் எழுத்தாளர்கள் அவர்களால் அடித்துத் துவைக்கப்படுகிறார்கள். அல்லது மெல்ல தாங்களும் அப்படி ஆகிவிடுகிறார்கள். எங்கள் செயல்பாடுகளில் முதன்மையானது இலக்கியத்தைப் பயில்வதைப்போலவே அந்த இலக்கியவாதிகளுடன் உரையாடுவதும் ஆகும். அவர்களிடம் அவர்களின் படைப்பைக் கூர்ந்து வாசிக்கும் வாசகர்கள் உள்ளனர் என்று தெரிவிப்பதுதான் அது.
குரு சௌந்தர். யோகப்பயிற்சிதமிழகத்திலும் ‘உலகமெங்கும்’ விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எல்லா வார இறுதியிலும் குறைந்தது மூன்று நிகழ்வுகள். ஆனால் சிலசமயம் நிகழ்வுகள் ‘நெரிசலாகி’ நண்பர்கள் ஒன்றை விட்டுவிட்டால் மட்டுமே இன்னொன்றுக்கு செல்ல முடியும் என்ற அளவில் ஆகிவிடுகிறது.அத்தகையது சென்ற வாரம். எங்கெங்கே என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்று என்னால் நினைவுகூரவே முடியவில்லை. நானே எழுதியும் நண்பர்களிடம் விசாரித்தும் தெரிந்துகொண்டேன்.
நான் ஐரோப்பாவில் இருந்தேன். ஆஸ்திரியா நாட்டில் சாலிஸ்பர்க் அருகே மிட்டர்சில் என்னும் ஊரில் மலைத்தங்குமிடம் ஒன்றில் ஐரோப்பிய விஷ்ணுபுரம் குழுமம் நடத்தும் முதல் தத்துவப் பயிலரங்கம். 32 பேர் கலந்துகொண்டனர். (அவ்வளவுதான் இடம்). ஒரு நாள் இலக்கியப் பயிற்சி. மூன்றுநாட்கள் தத்துவப் பயிற்சி. இங்கே இந்த வகுப்பு தொடர்ந்து நிகழும். என்னுடன் சைதன்யா இருந்தாள். சைதன்யா நீலி இதழுக்காக நடத்திய காணொளி உரையாடல் இரண்டுநாட்களுக்கு முன்னர்தான் நடைபெற்றிருந்தது. (நீலி சைதன்யா உரையாடல்)
சுப்ரபாரதி மணியன். கோவை சொல்முகம்ஜூலை 10 அன்று குருபூர்ணிமா. அன்றுதான் மிட்டர்சில் நிகழ்வு தொடக்கம். ஆகவே ஜூலை 10 அன்று ஒரு இணையச் சந்திப்பை நிகழ்த்தினேன். வெண்முரசு பற்றி உரையாடினேன்.நூறுபேர் கலந்துகொண்டார்கள். காவியம் நாவல் உருவானது, வெண்முரசுக்கும் அதற்குமான உறவு, ஒரு பெருஞ்செயலைச் செய்வதும் அதை நீங்குவதும் என பல தளங்களிலான பேச்சும் கேள்விபதிலும்.(வெண்முரசு நாள் உரையாடல்- ஜெயமோகன். இணையம்)
அன்று ஈரோடு அருகே வெள்ளிமலையில் குரு சௌந்தர் குருபூர்ணிமா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கதக் நடனம், பாடல், வெண்முரசு விவாதம் என விரிவான முழுநாள் நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து அவர் நடத்திய யோகப்பயிற்சி மூன்றுநாள் நடைபெற்றது. (குருபூர்ணிமா, நடனங்கள், இலக்கிய அரங்கு- யோகேஸ்வரன் ராமநாதன் )
குருபூர்ணிமா நிகழ்வு வெள்ளிமலை.அந்த வாரம் முழுக்க எங்கெங்கோ நிகழ்ச்சிகள். ஓசூரில் நண்பர் பாலாஜிக்குச் சொந்தமான பள்ளியில் நண்பர் வேணு வேட்ராயனும் சரண்யாவும் கவிஞர் தேவதேவனுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். கவிஞருடன் உடனுறைதல். தேவதேவனின் பேச்சைக் கேட்பதற்கான இரண்டு நாட்கள். அதை பற்றி பலர் கடிதங்களில் உணர்ச்சிபூர்வமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். முந்தைய வாரத்தில் நண்பர் சுப்ரபாரதி மணியனுடன் ஒரு சந்திப்பை கோவை சொல்முகம் குழுவினர் கோவை விஷ்ணுபுரம் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பெங்களூர் சொல்லாழி நண்பர்கள் பாவண்ணனுடன் ஒரு சந்திப்பை ஆட்டக்கலாட்டா நூல்விற்பனையக அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதே நாளில் அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்கள் கூடி என்னுடைய மத்தகம் கதை பற்றி விவாதித்தனர். அடுத்த நாளே சேலத்தில் வெண்முரசு வாசகர் வட்டத்தின் சந்திப்பு நிகழ்ச்சி.
தேவதேவன் சந்திப்பு. ஓசூர்மேலும் மேலும் நிகழ்ச்சிகள். வரும் ஆகஸ்ட் மாதத்தில் 14,15,16 தேதிகளில் ஈரோட்டில் தமிழ்விக்கி தூரன் விருதுவிழா நிகழ்கிறது. இம்முறை கர்நாடகத்தின் புகழ்பெற்ற தொல்லியலாளர் ஒருவரும் தமிழகத்தின் தொல்லியல்- வரலாற்றாய்வாளர்களும் வாசகர்களுடன் உரையாடுகிறார்கள். தமிழகத்தில் இன்று இதற்கான வாய்ப்புள்ள நிகழ்வுகள் மிகச்சிலவே உள்ளன. நவீன இலக்கியம் என்பது ஒரு வகை வம்புப்பேச்சு என்னும் உளப்பதிவு தேர்ந்த வாசகர்களிடம் உண்டு. அதைக் களைவதற்கான முயற்சிகள் இவை.
வாரந்தோறும் முழுமையறிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஜெயக்குமாரின் மரபிசை வகுப்பும் அஜிதனின் மேலையிசை வகுப்பும் ஜூலை இறுதியில் நிகழ்கின்றன. ஏ.வி.மணிகண்டனின் நவீனக்கலைவகுப்பு ஆகஸ்ட் முதல்வாரம். ஆகஸ்ட் மூன்றாவது வாரம் நான் தத்துவ வகுப்பை நடத்துகிறேன். ஆகஸ்ட் நான்காவது வாரம் ஜெயக்குமார் ஆலயக்கலை வகுப்பை நடத்துகிறார். முழுமையறிவு நிகழ்ச்சிகள் ஒரு பெரிய அறிவு- கலை இயக்கமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.
மிட்டர்ஸில் தத்துவ வகுப்புகள்- ஆஸ்திரியாவரும் அக்டோபரில் நான் அமெரிக்கா செல்கிறேன். என் நூலான Stories of the True வெளியீட்டை ஒட்டிய விளம்பர நிகழ்வுகள் பல உள்ளன. கூடவே வழக்கம்போல பூன் முகாம். அங்கே இம்முறை இரண்டு நாள் தத்துவமுகாம் இரண்டாம் நிலை. கூடவே தத்துவ முகாம் முதல்நிலையும் நிகழும். அமெரிக்காவில் இந்நிகழ்வை தொடர்ச்சியாக நடத்தும் எண்ணம் உண்டு.
நான் அமெரிக்காவில் இருந்து திரும்ப வந்ததுமே இந்த ஆண்டு டிசம்பர் தொடக்கவாரத்தில் நானும் அஜிதனும் லண்டன் செல்கிறோம். லண்டனில் என் நூலின் வாசிப்பு நிகழ்வுகள் இரண்டு. (லண்டன், மற்றும் பிர்மிங்ஹாம்). லண்டனில் அஜிதன் நடத்தும் மேலைத்தத்துவ அறிமுக முகாம் நிகழ்கிறது. ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம், அறிவிப்பு வரும். டிசம்பர் இறுதியில் விஷ்ணுபுரம் விருது விழா. ஜனவரிக்கான திட்டங்கள் தனி.
பெங்களூர் சொல்லாழி. பாவண்ணன் சந்திப்புஇந்த வகுப்புகள் வழியாக நாங்கள் ‘வாசகர்களை’ மட்டும் உருவாக்கவில்லை. ஆகவே ‘பெருவாரியான’ பங்கேற்பை நாங்கள் விரும்பவில்லை. நிகழ்ச்சிகளை முடிந்தவரை தீவிரமாகவே நடத்துகிறோம். அந்த தீவிரத்துடன் இணைந்துகொள்பவர்களே எங்களுக்குத் தேவை. இணையம் இன்று உருவாக்கிக் கொண்டிருக்கும் முடிவற்ற வம்புகளுடன் தொடர்புடையவர்களை விலக்கிவிடுகிறோம். அவர்களால் செயல்களில் ஈடுபட முடியாது, ஒருங்கிணைப்பை உருவாக்கவும் முடியாது, கசப்புகளையே விளைவிக்க முடியும். இன்னொரு வட்டம் உருவாகவேண்டும் என திட்டமிட்டோம். எதிர்பார்த்ததற்கும் பல மடங்கு வீச்சுடன் மிகப்பெரிய இளைஞர்வட்டம் ஒன்று திரண்டுகொண்டிருக்கிறது. உலகம் எங்கும்.
நாங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பது அடுத்த தலைமுறை ஆசிரியர்களை. அந்தத் தகுதிகளுடன் திரண்டு வந்துகொண்டிருப்பவர்கள் எவர் என்று கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் விரிவான கனவுகள் இன்று எங்களுக்கு உள்ளன. நாங்கள் இப்போது எண்ணியிருப்பது மிகப்பெரிய ஒரு கல்வி இயக்கத்தை உருவாக்குவதைப்பற்றி…. விரைவில் அதை அறிவிப்போம்.
கீதா பென்னட்
[image error]இந்திய, அமெரிக்க வாழ்வுமுறைகளின் (குறிப்பாகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின்) கலாச்சார, பண்பாட்டுச் சிக்கல்களைத் தன் எழுத்துக்களில் பதிவு செய்தார்.
கீதா பென்னட்
கீதா பென்னட் – தமிழ் விக்கி
கோடல், ஏஷர், வடிவங்கள், கணிதம், அழகியல்- கடிதம்
[image error]
பொற்சுழல்அன்புள்ள ஜெயமோகன் ,
இந்த வாரம் எனக்கு ஒரு முழுமையான வாரம் என்றே தோன்றுகிறது. நான் முன்னமேயே படித்தவையும், அறிந்தவையும், பங்கேற்றவையும், இழை இழையாக உருவாகி ஒன்றையொன்று தொட்டு பிணைந்து முழுமையாக பெருகிக்கொண்டே வருவதுபோல தோன்றுகிறது. இதைப்பற்றி சொல்லியேயாகவேண்டும்….
முதல் இழை: கடந்தவாரம் உங்களின் தத்துவ வகுப்பு (4 ஆம் அமர்வு) கலந்துகொண்டேன். கபிலரின் சாங்கியம் என்ற மாபெரும் தரிசணத்தை சுட்டும் விளக்கும் ஒரு அமர்வு. ஒரு மனதிறப்பாகத்தான் இருந்தது; இதைப்பற்றி மறுபடி பின்னால் வருகிறேன்…
இரண்டாம் இழை: நேற்று திரு. லோகமாதேவியின் “பொற்சுழல்” கட்டுரையை படித்தேன். எவ்வாறு தாவர பரிணாமங்களில் கணிதம் வெளிப்படுகிறது என்பது பற்றி அவர் எழுதியிருந்த தாவரவியலையும் கணிதத்தையும் இணைத்த கட்டுரை ஓரு அருமையான பதிவு. அவர் எழுதியவற்றின் மைய கருத்து நான் முன்பே அறிந்ததுதான் – கடந்த ஆறேழு வருடங்களாய் நான் கணிதம் கற்றுக்கொடுப்பதாலும், மேலும், கணிதத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் முரண்பாடுகளையுமே கணிதம் கற்பிப்பதற்கான ஒரு வழியாகவே கையெடுப்பதாலும். [image error]
Golden Ratio/Angle என்ற கருத்துருவை விவாதிப்பவர்கள் பொதுவாக ஃபிபொனாச்சி எண் வரிசையை (Fibonacci Series) விளக்கிவிட்டு, அது வெளிப்படும் மலரின் இதழ், நத்தையின் ஓடு, சூராவளியின் சுழல், அல்லது பால்வழி மண்டலத்தின் அமைப்பு இவற்றை சுட்டிக்காட்டி, ஆகவே இந்த golden ratio/angle-தான் இயற்கையின் விதியை சமைக்கிறது என்கிற, அல்லது இயற்கையையே தீர்மானிக்கிறது என்கிற கோணத்தில் சென்றுவிடுவார்கள். என்னைப்பொறுத்தவரை இயற்கையோடு இயைந்த கணிதத்தின் ஒத்திசைவு இயற்கைக்கு காரணமல்ல, இயற்கையை தெளிவுபடுத்தும் காரியம் என்பதே.. பொற்சுழல் கட்டுரையில் திரு. லோகமாதேவி “சூரியகாந்தியில் ஒவ்வொரு விதையும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளாமல் ஒவ்வொரு விதையும் சரியாக வளர்வதற்கு இடம் அமைந்து, அனைத்து விதைகளுக்கும் சூரிய ஒளி சீராகக் கிடைக்கும் படியும், …. மலருக்கு வலிமை அளிக்கவும்….” என்று காரண விளக்கங்களுடன் சென்றிருந்தார். இயற்கை தன்னை உயிர்களின் இயல்புகளாலும், பொருட்களின் தன்மைகளாலும், அதனினும் முக்கியமாக இயற்பியல் / வேதியல் விதிகளாலும் விரித்துக்கொண்டே செல்கிறது. அதை நாம் அனுகுவதற்கு புரிந்துகொள்ளுவதற்கு ஆய்வதற்கு நமக்கிருக்கும் ஒரு மிகப்பெரிய அறிவுக்கருவி – கணிதம். இயற்கையின் நிகழ்வுகளை புரிந்துகொள்ள ஒரு அறிவியல் கருத்துரு எவ்வாறு மொழியினூடாக வெளிப்படுகின்றதோ, அதேபோல் அந்த இயற்கை நிகழ்வின் ஒழுங்கமைவு ஒரு கச்சிதமான கணித சூத்திரமாக வெளிப்படுகிறது. அவ்வளவே! அவ்வளவே என்று சொல்லுவது “அதில் ஒன்றுமில்லை” என்ற அர்த்ததில் இல்லை.. தன்னளவில் கருத்துரு அல்லது சூத்திரம் மட்டுமே என்றாலும், இத்தகைய “அவ்வளவேயான” கருத்துருக்களும் சூத்திரங்களும்தான் நம்முடைய புறவய பார்வையையே முழுமையாக வடிவமைக்கும் ஆடியாக, புறவய பிரபஞ்சத்தையே மனதில் மொத்தமாக உருவாகித்தரும் அறிவாக தங்களையே நிறுவிக்கொள்ளுகின்றன என்ற அர்த்தத்தில் தான்…. இந்த விதத்தில், “இவை அவ்வளவே” அல்ல; “இவைதான் அவ்வளவுமே” என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.
மூன்றாம் இழை: இதற்கான பதிலாக நீங்கள் எழுதிய பதிவில் Gödel Escher Bach : The Eternal Golden Braid புத்தகத்தைப்பற்றி எழுதியிருந்தீரகள். இது என் நினைவுகளை பல ஆண்டுகளுக்குப்பின்னே இழுத்துச்சென்றுவிட்டது. அது நான் கணினிஅறிவியல் படிக்கும்போது வாங்கிய முதல் புத்தகம். அந்த புத்தகத்தின்மேல் பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் ஆன் யாசுஹாரா என்ற என் கணித பேராசிரியர்; இவர் பாடங்களை ஒப்பிப்பது இல்லை; நமக்குள் திணிப்பது இல்லை; ஏன், பாட புத்தகத்தை பிரிப்பது கூட இல்லை. ஏதாவது ஒரு கணித கருத்தை எடுத்துக்கொண்டு அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து நம்மை அதற்குள் விட்டு விடுவார்; அதிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு யோசித்து விடை தேடி விவாதிக்க வேண்டும். கடைசியில் அவர் எந்த புத்தகத்தையும் முழுதாக வகுப்புகளில் முடித்ததே இல்லை; ஆனால் எந்த புத்தகத்தையும் அனுகவும் படிக்கவும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டிவிட்டார்.
அந்த செமஸ்டெர் அவர் எடுத்த ஒரு தலைப்பு/கருத்துரு – சுய–மறு–நிகழ்வு (recursion) என்பதைப்பற்றி… அதாவது, ஒரு கணினி செயல்பாடு (computing function) தன்னையே தனக்குள்ளேயே மறுபடி குறிப்பிட்டுக்கொள்வதை (\self-refer) அல்லது நிகழ்த்திக்கொள்ளவதை (self-execute) பற்றி. இது கணிதத்திலும் கணினி அறிவியல் தொழில் நுட்பத்திலும் எல்லோருக்கும் தெரிந்த, எல்லோரும் பயன்படுத்திக்கொள்ளும் ரீகர்ஷன் ஃபங்ஷன் (recursive function) என்ற பொதுவான ஒரு விஷயம்தான். ஆனால், இதை அவர் ஒரு கருத்துருவாக எடுத்துக்கொண்டு, அவர் சுயமறுநிகழ்வு நடக்கும் மற்ற அமைப்புகளைப்பற்றி பேச ஆரம்பித்தார். கணினி அறிவியலிலிருந்து அது இயற்கை (நதியின் வழிகள், கடற்கரை அமைப்பு), இயல்பியல் (பால்வெளி மண்டல அமைப்பு), உயிரியல் (மரம்/கிளை அமைப்புகள்), வேதியல் (பனி படிகங்கள் அமைப்பு) என விரிந்துகொண்டே இருந்தது. திரு லோகமாதேவி விவரித்திருந்த சூரியகாந்தி மலர், ரொமெனெஸ்கோ பூக்கோஸ், எல்லாமே…. இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சுயமறுநிகழ்வும், மற்றும் பின்ன வடிவவியல் (Fractal Geometry) கணிதத்தில் சொல்லப்படும் சுயமறுநிகழ்வு கருத்துக்களும் சூத்திரங்களும்.
அந்த வாரம் முழுவதும் ஆன் வகுப்பிலும் உரையாடல்களிலும் எங்களுக்கு காண்பித்தது M C எஸ்சர் வரைந்த பல ஓவியங்களையே. அவரது ஒவ்வொரு படத்திலும் சுயமறுநிகழ்வு – நேரடியாகவோ அல்லது ஊடுருவியோ – எப்படி நடக்கிறது என்று விவாதித்துக்கொண்டிருந்தோம். என் பங்கிற்கு சுயமறுநிகழ்வுக்கு நான் கொண்டு சென்றது ஒன்றுக்குள் ஒன்றாக ஊடுறுவிச்செல்லும் தமிழ் விக்கிரமாதித்தன் கதைகளை (ஆயிரத்தோரு அரேபிய இரவுக்கதைகளும் இந்த வகையை சார்ந்தவையே). ஆனாலும் எஸ்சர் ஓவியங்களின் நேரடித்தன்மை எப்போதும் மறக்க முடியாத ஒரு தெளிவை அளிக்கின்றன. ஓவியம் ஒரு பொருளை விளக்குவதற்காக அல்லாது, அதை நேரடியாக உணரவைக்கும் படைப்பு.
ஃபிபொனாச்சி எண் வரிசை சுயமறுநிகழ்வுகளாலான இயற்கையின் தோற்றங்களை புரியவைக்கும் கருத்துரு அல்லது சூதிரம் என்றால், எஸ்சரின் ஓவியங்கள் அந்த நிகழ்வை நேரடியாக உணரவைக்கும் பிம்பங்கள். அதன் அழகில் ஒழுங்கில் ஒன்றித்தான் இந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். இதே போலத்தான் இசையும் நேரடியாக உணரக்கூடியது என்று இப்போது தெரிகிறது…. ஒரு ராகத்தை மீண்டும் மீண்டும் ஆலாபனையாக நிகழ்த்தி விரிவாகவும் செறிவாகவும் முழுதாகவும் (அதே சமயத்தில் எப்போதும் முடிவிலியாகவும்) ஆக்குவதைப்போல.
நான்காம் இழை: ஆனால் ஹாஃப்ஸ்ட்ரேட்டரின் அந்த புத்தகம் அதர்க்கெல்லாம் ரொம்ப மேலே…. அது படித்து புரிவதற்கு பல வருடங்கள் ஆயின. அவர் கருவாக இந்த புத்தகத்தில் எடுத்துக்கொண்டது [இப்போதைய] கணிதத்தின் எல்லையையே வரையறுத்த கர்ட் கோடல் (Kurt Gödel) என்ற ஆஸ்திரிய கணித மேதையின் முழுமையின்மை தேற்றத்தை (Incompleteness Theorem) நிறுவுவதையே…. இந்த தேற்றம், எண்கணிதத்தின் (Number Theory) அடிப்படை கோட்பாடுகளும் (Axioms), கணித தர்க்கமும் (Mathematical Logic) எவ்வளவுதான் முயன்றாலும் நிறுவப்படமுடியாத உண்மையான தேற்றங்கள் எண் கணிதத்தில் உள்ளன என்று நிறுவுகிறது. அது சொல்லுவது “இப்போது நிறுவப்படாத தேற்றங்கள்” என்றல்ல…. “எப்போதும் யாராலும் நிறுவப்படவே முடியாத தேற்றங்கள்” என்றே! அதுவரை கணிதத்தால் நிறுவமுடியாத கணித தேற்றங்கள் இருக்கமுடியும் என்றே எவரும் எண்ணவில்லை. இப்போது தெரியாமல் இருக்கலாம்; நூற்றாண்டுகளோ ஆயிரம் ஆண்டுகளோகூட ஆகலாம்; ஆனால் என்றைக்காவது யாராலேயோ எந்த ஒரு உண்மை தேற்றத்தையும் நிறுவமுடியும் என்றே எண்ணியிருந்தார்கள். கோடலின் இந்த தேற்றம் கிட்டத்தட்ட கணிதத்தின் முடிவையே மாற்றி எழுதிவிட்டது. கணிதத்தையே, இரண்டாகப்பிரித்து 1931-க்குமுன்னென்றும் 1931-க்குப்பின்னென்றும் சொல்லிவிடலாம் போல….
இந்த தேற்றத்தைத்தான் அடிப்படை தர்க்கத்தையும் பொதுவாக புரிந்துகொள்ளக்கூடிய உருவகங்களையும் உவமைகளையும் கொண்டு ஹாஃப்ஸ்ட்ரேட்டர் இந்த புத்தகத்தில் விவாதிக்கிறார், விளக்குகிறார் (கோடலின் வாதங்கள் வழியே). கோடலின் மேதைத்தனமே கணிதத்தின் காரணமான அடித்தளத்தையே கேள்வி கேட்கும் சிந்தனையும், தன்னைத்தானே சுட்டும் ஒரு முரண்பாடான தேற்றத்தை உருவாக்கி, கணிதத்தின் வழிகளிலேயே அதை நிறுவி, பின்னர் அதன் காரியமாக அந்த கணிதத்தின் எல்லையையே வரையறுத்ததுதான் . இந்த ஆய்வின் மையச்சுழி சுயமறுநிகழ்வு என்னும் நம் பழைய கருத்துருவே! அந்த 800-பக்க புத்தகமும் சுயமறுநிகழ்வு பற்றியும், அதை கோடல் எவ்வாறு தன் தேற்றத்தை நிறுவ கையாண்டார் என்பதும்தான்.
Kurt Gödelஐந்தாம் இழை: சரி, கோடலும் கணிதமும் அதன் எல்லைகளும் அதன்படி இருக்கட்டும். ஆனால், இந்த புத்தகத்தில், ஹாஃப்ஸ்ட்ரேட்டர் சுயமறுநிகழ்வு எப்படி M C எஷ்சர் ஓவியங்களிலும், பாஃக் இசையிலும், இயற்கையிலும் மீள மீள வருகிறது என்பதை, பல பல உதாரணங்களின் வழியே காட்டுகிறார். இந்த சுயமறுநிகழ்ச்சிக்கு அவர் வைத்த பெயர் – விசித்திர சுழல்கள் (strange loops). இந்த விசித்திர சுழல்கள் என்ற கருத்துரு மூலமே, அவர் கோடல் தேற்றத்தை (கோடலை பின்பற்றி) நிறுவுகிறார்.
கோடலின் தேற்றத்துக்கு பிறகு, அவர் இன்னொரு வெகு வெகு முக்கிய கருத்தை அலசுகிறார்… ஒரு இயந்திரத்தனமான ஆனால் விதிகளுக்குட்பட்ட ஒழுங்காக அமைப்பு அல்லது ஒருங்கியம் (very orderly symbolic/material system) ஒன்றை எடுத்துக்கொள்ளுவோம். உதாரணமாக, எண்களும் அதன் கணித விதிகளுமோ, விண்வெளியில் பரந்திருக்கும் தூசி மேகங்களும் இயற்பியல் விதிகளுமோ, ஒரு குடுவையிலிருக்கும் ரசாயன கலவையும் வேதியல் விதிகளுமோ, இவை எல்லாமே ஒருங்கியங்களே. நாம் “அவ்வளவே” என்று நினைக்கும் இப்படிப்பட்ட ஒரு அமைப்பில், “தான்” என்ற ஒரு கருத்து தானாகவே எழ/நிகழ முடியுமா என்ற ஒரு கேள்வியை முன்வைக்கிறார். இது அசாதாரண கோப்பர்நிக்கன் கேள்வி! இதற்கு, ஹாஃப்ஸ்ட்ரேட்டர் , ஆம் அப்படிப்பட்ட ஒரு சாத்தியம் இருக்கிறது என்றும், அதன் அடிப்படை காரணம் இந்த ஒருங்கியத்தில் தோன்றும் விசித்திர சுழல்களே என்றும் திரும்ப திரும்ப வாதிடுகிறார். ஒரு ஒருங்கியத்தின் பொருள்/விதிகள் ஒருங்கியத்திற்கு வெளியேயான உலகத்தை தனக்குள்ளே உருவாகும் வடிவங்களால் (patterns) பிரதிபலிக்க முடியும் என்றும், அதனால் அத்தகைய வடிவங்கள் மூலம் தன்னையே அது உருவகித்துக்கொள்ளுவது முழுதும் சாத்தியம் மட்டுமல்ல, நடந்தே தீரும் என்றும் வாதிக்கிறார். இந்த வாதம் சுலபமாகவோ முழுதாகவோ நிராகரிக்கப்படக்கூடியது அல்ல. [இதையும் சொல்லியே ஆகவேண்டும்: இவர் “தான்” என்று சொல்லுவது ஒரு கருத்தா அல்லது உணர்வா என்பது பற்றி அதிகம் பேசவில்லை. இவர் சொல்லும் இந்த வடிவங்களையும் உணர்வது வேறு ஒன்றாகக்கூட இருக்கலாம்தான்.] “நான்” என்ற கருத்து அகம் இல்லாத புறவய உலகத்திலேயே நிகழ முடியும் என்றால்கூட, இது ஒரு கோப்பர்நிக்கன் திருப்பமே. 
ஆறாம் (சரி, மீண்டும் முதலாம்) இழை: கடந்த தத்துவ வகுப்பு சாங்கிய தரிசனம் பற்றியது. ஒரு அருமையான அறிமுகத்துடனும், மற்ற சில தரிசனங்களுடனான ஒப்பிடுதல்களுடனும் விவாதங்களுடனும். ஆசிரியருடனும் மற்றவர்களுடனும் ஒரு நல்ல நட்புகளும் கூட. கடைசி நாளில் ஒரு நண்பர் கேட்டார்: நீங்கள் சாங்கியமா அல்லது அத்வைதமா என்று. அவர் நான் கலந்துகொண்ட விவாத குழுக்களைப்பற்றிகேட்டார் என்றெண்ணி முதல் நாள் சாங்கியம், அடுத்தநாள் அத்வைதம் என்றேன். அவர் கேட்டது அதுவல்ல என்று உடனேயே புரிந்தது. அது மேலும் விவாதமாக ஆகாவிட்டாலும், இந்திய தத்துவங்களை ஆழமாக புரிந்துகொள்ளாமல் இதைப்பற்றி எந்த முடிவும் எடுக்கமுடியாது என்ற போதிலும், சாங்கியத்தின் மீது எனக்கு ஏற்படும் ஒரு முழுஈர்ப்பை மறுக்கமுடியவில்லை. அவர் கேட்ட கேள்வியையே திரும்பிவரும் பயணத்திலும் மேலும் சில நாட்களும் நினைத்துக்கொண்டிருந்தேன்.
அன்று வகுப்பில் எனக்கு தோன்றியது இது: நிரீஸ்வர சாங்கியம், மூலப்பிரகிருதி என்ற இயற்கையை மட்டுமே சார்ந்த ஒரு தூய தரிசனத்தை முன்வைத்திருக்கிறது. அந்த தரிசனம் பின்னர் புருஷன் என்ற கருத்துரு கலந்தபிறகு வெகுசிக்கலாகிவிட்டதோ என்றே தோன்றியது. ஆனாலும், ஒரு பொருளில் தோன்றும் தன்னுணர்வை பொருட்களின் மூலமாகவே விளக்க வழியில்லாதால் அனுபவிக்கும் தன்னிலையாக புருஷனென்ற கருத்துருவை சேர்ப்பதை மறுக்கமுடியவில்லை. அதை அன்று அப்படியே விட்டுவிட்டேன்.
ஆனால், இன்று என்னையே இப்படி கேட்டுக்கொள்ளுகிறேன்: இயற்கை ஒரு ஒருங்கியம். சாங்கியம், இப்படிப்பட்ட இயற்கையான ஒருங்கியம் பருப்பொருளின் சீரான விதிகளால் தன் இயல்பின் வழியான நடந்துகொண்டிருக்கிறது என்றே சொல்லுகிறது. இப்படி ஒரு ஒருங்கியத்தில் தன்னுணர்வு பருப்பொருட்களின் இயல்பினால் மட்டுமே உருவாவதற்க்கு சாத்தியங்கள் உண்டு என்றே ஹாஃப்ஸ்ட்ரேட்டர் சொல்லுகிறார். பருப்பொருளே இல்லாத, சீரான கருத்துருக்களாலேயேயான கணிதத்திலேயே இது ஆகுமென்றால், பருப்பொருட்கள் நிறைந்த வெகு சீராக விதிகள் கூடிய பிரபஞ்சத்தில் தன்னுணர்வு தானாகவே – பொருளின் இயல்பாக –ஏற்படுவது சாத்தியம்தானே? அப்படியென்றால், அனுபவிக்கும் தன்னிலையாக புருஷன் என்ற கருத்துருவே தேவையா? இந்த இரு நாட்களாக (மேலிருக்கும் இழைகளின் வழியாக) இதையே எண்ணிக்கொண்டு இருக்கிறேன்…. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மற்ற இந்திய தத்துவங்களைப்பற்றி (குறிப்பாக, அத்வைத்த வேதாந்தம்) ஒரு ஆழமான புரிதல் வரும்வரை காத்திருக்க வேண்டியது தேவை என்று உணர்கிறேன்; காத்திருக்கவும் தயார்தான். இப்போதைக்கு எனக்கு இது நிச்சயமாக ஒரு திறந்த கேள்விதான்…
திரு லோகமாதேவியின் பதிவையும், உங்கள் மறுமொழியையும் அதனால் எழுப்பப்பட்ட எண்ணங்களினாலும் இதையும் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. இவையெல்லாம் – ஜேயமோகன் – உங்களின் எழுத்துக்களாலும், வலை பதிவுகளாலும், வகுப்புக்களாலும் ஒன்றுதிரண்டு வருவது ; உங்களுக்கு என் நன்றி.
குமரன்
காவியம் என்ற இதிகாசம்- சுசித்ரா
1
ஆசிரியருக்கு,
பிரபஞ்சத்தை புரிந்துகொள்ளவும் அர்த்தங்களை உருவாக்கிக்கொள்ளவும் தான் மனிதர்கள் கதைகளை புனையத் தொடங்கினார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ‘காவியம்’ நாவல் எழுதப்பட்டதைப் பற்றிய பதிவுகளை படித்தபோது, மனிதர்களில் மகத்துவமான கதைசொல்லிகள் இங்கே எதையுமே புனைவதில்லை, மாறாக எங்கோ ‘இருந்துகொண்டிருக்கும்’ கதைகளைத்தான் பெற்றுக்கொண்டு நிகழ்த்துகிறார்கள் என்ற எண்ணம் உருவானது. இதிகாசம் என்ற சொல்லின் பொருள் – ‘இவ்வாறு இருந்தது’ என்பது – துல்லியமாகப் புரிந்த பொழுது அது. காவியமும் ‘இவ்வாறு இருந்த’ கதை என்று அக்கதையின் வீச்சும் ஒருமையும் எனக்குள் உணர்த்துகிறது. அப்படிப்பார்த்தால், காவியம், ஒரு நவீன இதிகாசமும் கூட.
‘இருந்துகொண்டிருக்கும்’ கதை என்றால், எங்கே இருந்துகொண்டிருக்கும் கதை? ‘இருந்துகொண்டிருக்கும்’ ஒரு கதையை பெற்றுக்கொள்வது எவ்வாறு? அக்கதையை சொல்லப் பயில்வது எவ்வாறு?
‘காவியம்’ நாவல் வெளிவரத் தொடங்கிய நாள் முதல், நாள் ஒரு அத்தியாயமாக மொழிபெயர்க்க முடிவுசெய்திருந்தேன். பெங்களூரில் நீங்கள் நாவலின் முன்வரைவை சொன்ன போதே இது பெரிய நாவல் என்று தோன்றியது. ஒரு பெரிய நாவல் எவ்வாறு எழுதப்படுகிறது என்பதை அது எழுதப்படும்போதே பின் தொடர்ந்து சென்று கற்க முடியுமா என்ற விருப்பம் இருந்தது. ஆகவே ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயத்தை வாசித்து, அதன் கதையை, அமைப்பை ஒரு வரைவாக எழுதி, அங்கிருந்து தொடங்கி மொழியாக்கம் செய்ய முற்பட்டேன். அந்த அமைப்பின் பின்னலை புரிந்துகொள்வதன் வழியாக, அடுத்தடுத்து நாவல் எங்கு நகரும், எப்படி மொழிவெளிப்பாடு நிகழப்போகிறது என்று ஊகிக்கமுடியுமா என்று முயற்சித்தேன்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் நாவலின் அமைப்பு புரியத் தொடங்கினாலும், அதன் போக்கு எந்த இடத்திலும் கணிக்கக்கூடியதாகவே இல்லை. அடுத்த அத்தியாயத்தில், அடுத்த பகுதியில் என்ன நிகழும் என்று முந்தின பகுதியிலிருந்து எந்த நேரடித் தொடர்ச்சியும் எடுக்க முடியவில்லை. அந்தத் தொடர்ச்சியில் உள்ள மாபெரும் ஒற்றுமை மட்டும் மனதில் கூடிக் கூடி வந்தது. ஆனால் அந்த ஒருமை எப்படி அமைகிறது — அல்லது ஆசிரியர் அதை எப்படி அமைக்கிறார் —- என்று எனக்குள் எரிந்துகொண்டிருந்த கேள்விக்கான பதிலை பிரதியை ஆராய்வதிலிருந்து எடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த முயற்சியை கைவிட்டேன். ஒரு மகத்தான இயற்கை நிகழ்வைக் காணும்போது மனதைக் கைவிட்டு கண்ணாக மாறிக் காண்போமல்லவா, அப்படி அந்த நிகழ்வுப் பெருக்கை உள்வாங்கத் தொடங்கினேன். ஆம், இது ‘இருந்துகொண்டிருக்கும்’ கதை என்ற உணர்வு உருவானது அப்போதுதான்.
இந்தப் பயிற்சியில், என் புரிதலுக்காக நாவலின் அமைப்பை நான் இவ்வாறு தொகுத்துக்கொண்டேன், கீழ்கண்ட படத்தைக் காணவும்.
இந்தப் படம் என்னைத் தவிர எவருக்காவது பொருள்படுமா தெரியவில்லை. ஆசிரியரிடம் இதைக் காட்டுவதும் அர்த்தமற்றது ஏனென்றால் இது பிரதியிலிருந்து எடுக்கப்பட்ட அமைப்பொருமை. ஆசிரியரின் மனத்தில் எழுதும் கணத்தில் இருந்த ஒருமை முற்றிலும் வேறு விதமாக உணரப்பட்டிருக்கலாம். ஆனால் அதை வாசகர் அறியவும் முடியாது. இந்த இடைவெளிகளுக்கு நடுவில், ‘இருந்துகொண்டிருக்கும்’ ஒரு கதையை ஆசிரியர் எவ்வாறு பெற்றுக்கொண்டார், எவ்வாறு வெளிப்படுத்தினார் என்ற கேள்விக்கான பதிலை சற்றேனும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரதி வழியாகவே அது சாத்தியமாகிறது. இந்தப் பிரதியின் அமைப்பில் நான் கண்ட ஒரு சிறப்பம்சத்தை தொட்டுக்காட்டவே இந்த வரைபடத்தைப் பகிர்கிறேன்.
நாவல் நீங்கள் குறிப்பிட்டது போல் ஒரு குடும்பம், அதன் சமூக இடம், பண்பாட்டுப் பின்புலம், தொன்மப் பின்புலம், அனைத்துக்கும் அடியில் உள்ள மண் என்று படிப்படியாக ஆழம் கொள்கிறது. ஆனால் இந்த இழைகள் கதைக்குள் பின்னப்பட்டு பின்னப்பட்டு, இறுதியாக ஒரு தனிமனிதனின் உள்ளத்தில் பிணைந்து வேர் என்றான போக்கு பிரம்மிக்கச் செய்தது.
அடித்தள தலித் வாழ்க்கைக்கும் சிருங்காரம் மினுங்கும் சமஸ்கிருத காவியத்துக்கும் என்ன தொடர்பு? கருணைமிக்க பிசாசும் சாதிமீறும் காதலும் இணையும் இடம் எது? ஏனென்றால் இவையெல்லாமே நம்மைச் சுற்றியுள்ள இழைகள். புரிந்துகொள்ளமுடியாமல் கொட்டிக்கிடக்கின்றன. ஒன்றோடொன்று தொடர்பற்றவை என்று எண்ணுகிறோம். ஆனால் ஆழத்திலுள்ள தொடர்பை, ‘இருந்துகொண்டிருக்கும்’ தொடர்பை, காவியம் நிகழ்த்திக் காட்டியது.
இந்தத் தொடர்பை நிகழ்த்தியது ஆசிரியரால் முனைந்து பல்லைக்கடித்து ‘அடையப்பட்ட’, ‘உருவாக்கப்பட்ட’ வடிவம் அல்ல என்பது மேலும் பிரம்மிக்கச்செய்யும் விஷயம். ஆசிரியரின் ஆன்மாவிலிருந்தோ — அல்லது எங்கிருந்தோ ‘பெற்றுக்கொண்ட’வற்றிலிருந்தோ —- தன்னியல்பாக உருகொண்டு எழுந்த ஓர் வடிவம் தான் இந்நாவல், என்று கதையமைப்பும், நாவல் முடிந்தபின் வெளியிடப்பட்ட கட்டுரைகளும் வெளிப்படுத்துகின்றன. ஆண்டாண்டுகால பயிற்சியும் கைநேர்த்தியும் இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது, உண்மை. ஆனால் அடிப்படையில் இது புனையப்பட்ட கதை அல்ல, நிகழ்ந்த கதை, ‘இருந்துகொண்டிருக்கும்’ கதை என்ற எண்ணம் எனக்குள் வலுவடைய இதுவே காரணம்.
2
இவ்வாறு ‘உருகொண்டு’ வந்த வடிவத்தை வரைபடம் போட்டுப் பார்த்தபோது, நாவலின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க இழை தெளிந்து வந்தது. நாவலில் கதை சொல்லும் பிசாசு ஒரு மைய இழை. கதாநாயகனும், அவன் தலித் பின்னணியும், அவன் கற்கும் சமஸ்கிருத காவியமும் எல்லாம் மற்ற இழைகள். இவற்றின் பலனாகவே அவன் குணாட்யரையும் அவர் காவியத்தையும் சென்று அடைகிறான்.
ஆனால் கதையில் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வரும் மற்றொரு இழை உள்ளது. அதை அன்பு என்றும் பிரியம் என்றும் கருணை என்றும் மகத்துவம் என்றும் வெவ்வேறாகச் சொல்லலாம். என் வரைபடத்தில் அதை love என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அடிப்படையில், அது ஓர் அறம் என்று நினைக்கிறேன். சைதன்யா பேசிய பண்புசார் அறத்துக்கு நெருக்கமான ஒன்று. ஆரம்பம் முதல் கடைசி வரை இருட்டில் பனிநீர் போல ஈரமாக மின்னிக்கொண்டிருக்கும் ஒன்று. இக்கதையின் உயிரும் மூச்சும் மௌனமும் குடிகொள்வது அங்குதான் என்று நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்பை செப்பனிடும்போது தான் கவனித்தேன். பிசாசு கதைசொல்லியின் அம்மாவை தேடி வருவதில்லை. அம்மாதான் கதைசொல்லும் பிசாசை வரித்துக்கொள்கிறார். தன் குழந்தை போல் அவர் வளர்த்தத் தங்கை கொல்லப்படும் அநீதியைக் காண்கிறாள். அதற்கு எதிராக அவரால் நிகழ்த்தப்படும் அறம் அது. அது தான் கதையின் தொடக்கம். அங்கிருந்து வளர்ந்து சென்று, அவள் மரணம் நிகழ்ந்து கதைசொல்லி அதை உணர்ந்த மறு கணத்தில் அம்மா மீண்டும் இயல்பாக வந்து கதைசொல்லும் பிசாசை அவனிடம் கையளித்துவிட்டுச் செல்வதாக அவன் உணரும் இடம் அதிமகத்துவமான ஒன்று. இப்போது எழுதும் போதும் கண்ணீர் துளிகள் விசைப்பலகையில் விழுகின்றன.
அந்தக் கையளிப்பு என்ன? அம்மாவின் இறுதி ஆசையா? அவள் கருணையா? மகனின் ஆழ் விருப்பமா? தன் முழுத்தனிமைக்கு மாற்றாக அம்மா தன்னுடைய பிசாசை தனக்குத் தந்துவிட்டுப் போகவேண்டும் என்ற அவன் மன்றாட்டுக்கு அவள் கொடுத்த அந்தரங்க பரிசா? அம்மாவிடம் அப்படி ஒரு பிசாசை இருந்தது அவனுக்குத் தெரிந்திருந்ததா? தெரிந்திருந்தது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அவள் அந்த பிசாசை பெற்றதும் மகனுக்குக் கையளித்ததும் மகனே அதை அவளிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டதும் எல்லாம் ஒரு பேரறத்தின் இயக்கம் தான்.
அம்மா இறந்த தருணத்தில் மகன் உணர்ந்த முற்றிலும் கைவிடப்பட்ட உணர்வும் தனிமையும் அம்மாவும் தன் தங்கை குரூரமாகக் கொல்லப்பட்டபோது உணர்ந்திருப்பாள் அல்லவா? அறம் முற்றிலும் பிழன்ற உலகில் வாழ்கிறோம் என்று உணரும் அனைவரும் அத்தகைய தனிமையை அறிந்தவர்கள் என்று நினைக்கிறேன். யாருமே வரப்போவதில்லை என்று உணர்ந்தவரின் தனிமை அது. அவர்கள் தங்களுக்குள் சென்று தங்களுக்கென்று அறத்தை புனர்கண்டடைய விதிக்கப்பட்டவர்கள். அப்படித் தன் அறத்தைக் கண்டுபிடித்துத் தனக்குள் வாழ்ந்து மறைவதும் ஓர் அறம் தான். அறமும் அவர்களால் தான் நிலைகொண்டு இவ்வுலகில் வாழ்கிறது. அம்மா பிசாசை வரித்துக்கொண்டு வாழ்ந்த அறம் அத்தகையது.
இந்த அறத்துக்கு நேர் எதிராகத்தான் ருக்மிணி தேஷ்பாண்டேயின் துரோகம் நிகழ்கிறது. “தன் குழந்தைகளுக்காக நீதியைக் கைவிடும் தாய் வேறொன்றுக்காகத் தன் குழந்தைகளையும் கைவிடுவாள். எந்நிலையிலும் நீதிக்காக நிலைகொள்பவளாக ருக்மிணி இருந்திருந்தால் ராதிகா கொல்லப்பட்டிருக்க மாட்டாள்,” என்று கானபூதி சொல்வதை, கதைசொல்லியின் அம்மாவின் மகத்துவமான செயலோடு வேறுபடுத்திப் பார்க்கலாம். பிரியம் மாறுபடும்போது, திரியும்போது, ஒற்றைக்கோணம் கொள்ளும்போதெல்லாம் அறமீறல் நிகழ்வதை காவியம் சுட்டிக்காட்டுகிறது.
வால்மீகி இயற்றிய சீதாயனத்தின் முகப்பையும் முடிவையும் வெட்டி சீதை தன் பிள்ளைகள் மூலம் ராமனிடம் கொடுத்தாள் என்று கானபூதி சொல்கிறது. தன் பிள்ளைகள் மீதான பற்றாலேயே அவ்வாறு செய்து, வால்மீகியின் அறவுணர்வின் வெளிப்பாட்டைச் சிதைத்து ராமன் கதையை நிலைநாட்டினாள் என்கிறது அது. ஏற்றுக்கொள்ள கடினமாக பகுதியாக அமைந்த ஒன்று இது. இந்திய பண்பாடு தன் மகுடத்தில் அணிந்திருக்கும் சீதையின் மீதல்லவா இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால் மெல்ல மெல்ல அதனுடன் உரையாட முடிந்தது. சீதையின் அனுமதி இல்லாமல் ராமன் கதை அவ்வடிவில் நிலைத்திருக்க முடியாது. அதை சீதையின் பதிவிரதத்துக்குச் சான்றாகவும் கொள்ளலாம். மண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியுடன் அவள் எப்படியோ சமரசம் செய்தமைக்கான சான்றாகவும் கொள்ளலாம்.
அம்மாவைப் போலவே ஶ்ரீகர் மிஸ்ராவின் கதாபாத்திரமும் அறம் உணர்ந்தது, மகத்துவமானது. தூய அழகின் வடிவமாய் பெண்களை பார்க்கும் கண்ணை காவியங்களிலிருந்து பெற்றவராக இருக்கிறார். அண்டை வீட்டுப் பெரியவர் தன் தங்கையை அவள் திருமண நாள் அன்று நிற்க வைத்துக் கண்குளிரக் கண்டதன் காட்சி விவரிப்பு உயரமான ஓர் இடத்தில் நிற்கிறது. அழகைப் பார்த்துக் கண் கலங்குபவன் அடிப்படையில் அறவுணர்வு கொண்டவன், அறம் பிழறமாட்டான் என்று உணர்த்தியது. அழகுணர்வு அறவேயற்ற ஃபணிந்திரநாத், ஹரிந்திரநாத், அஸ்வத் போன்ற பாத்திரங்களுக்கு மறுதட்டில், நாவல் குறுகிய காலத்தில் வந்துசென்றாலும் மகத்துவமாக நிலைகொள்ளும் ஶ்ரீகர் மிஸ்ராவை முன்வைக்கிறது. அம்மாவைப் போலவே அவரும் இந்த நாவலுக்கு ஓர் அளவுகோல்.
ஶ்ரீகர் மிஸ்ரா அந்தக் கரடியைப் பற்றிச் சொல்வதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் அவரில் நிலைத்திருக்கும் அவர் அறவுணர்வின் சான்று. கதைசொல்லும் பிசாசு எப்படி இத்தனை யுகங்களின் அநீதிகளை மீறி கானகத்தில் கதைகளை சொன்னபடி நிலைகொள்கிறதோ, அந்தக் கரடியின் இருப்பைப் பற்றிய உணர்வும் இங்கே சில மனங்களுக்குள் ஆழத்தின் ஊற்றாக நிலைகொண்டு வருகிறது. ஆம், இங்கே ‘இருந்துகொண்டிருக்கிறது’. அந்தக் கரடியை பற்றிய தன் உள்ளுணர்வை ஶ்ரீகர் மிஸ்ரா சொல்லும் இடம் ஓர் அறவெளிப்பாடு. சரியாக அந்த இடத்தில் ராதிகா துக்காராம் மீது காதல்கொள்வதும் அவ்வறத்தின் தவிர்க்க முடியாத நீட்சி என்றே தோன்றியது.
காதல் என்ற உணர்வும் ஓர் அறவெளிப்பாடா என்ற கேள்வி இக்கதை வழியாக எனக்குள் எழுகிறது. மனிதர்கள் ஒருவர் மீது மற்றொருவர் காதலும் பிரியமும் கொள்வது எதனால்? தங்கள் வாழ்க்கைகளை இணைத்துக்கொள்வதும், வேர்களை பிணைத்துக்கொள்வதும் எதை சாதிப்பதற்க்காக? இரு மனித மனங்கள் இணையும்போது ஆழத்தில் கண்ணுக்குத் தெரியாத நிழல்களையும் மூதாதயர்களையும் பிசாசுகளையும் தட்டி எழுப்புகிறதா? அவையே வானில் எழுகையில் மணமும் சங்கீதமும், கந்தர்வர்களாகவும் வித்யாதரர்களாகவும் தோற்றமளித்து அவர்களை சூழ்கின்றனவா? காதலில் ‘ஏழேழு ஜென்மம்’ என்று உணர்வதெல்லாம் எல்லாம் இதைத்தானா? இந்த நாவலின் பின்னணியில் செம்புலப்பெயநீராரின் பிரபலமான நான்கு வரி முற்றிலும் வேறுவகையாக அர்த்தம் பெருகிறது.
ராதிகா துக்காராமின் மேல் காதல் கொள்வது அந்த கரடி, அல்லது பிசாசின் வழியாகத்தான். அவர்களுக்கு (நமக்கும்) அந்த கட்டத்தில் என்னெவென்று முழுதும் புரியாத ஓர் உள்ளுணர்வு தான் அவர்களை இணைக்கிறது. உள்ளுணர்வு இந்த நாவலில் மிகப்பெரிய இடத்தை வகிக்கிறது. ராதிகா ராமை கண்டடைவது தன் உள்ளுணர்வால் தான். அவள் அந்தக் கரடியை அறிவதும் தன் உள்ளுணர்வால் தான். அந்தப் பகுதி கதைக்குள் நேரடியாகக் கூறப்படுவதில்லை என்றாலும் ராதிகாவின் குடும்பக்கதை வழியாக அவளுக்குள் அந்த உள்ளுணர்வு உருவாகியிருக்கக்கூடிய பாதையை நாம் கற்பனையால் அடைய முடியும்.
உண்மையில் அப்படி ஒரு பயணத்தை நிகழ்த்தும் ஒரு வாசகன் அந்த காதலின் தவிர்க்கமுடியாமையை உணர முடியும். இக்கணம் மனம் பெருமூச்சு கொள்கிறது — அப்படி எத்தனை தவிர்க்கமுடியாமைகளால் பின்னப்பட்டுள்ள வாழ்க்கை இது! தவிர்க்கமுடியாதது. ஆனால் உள்ளுணர்வால் உணரக்கூடியது. அந்த உள்ளுணர்வை இறுதி வரை உறுதியாக பின் தொடர்ந்து நிகழ்த்தியதே ராதிகாவின் அறம் என்றும் அவள் மகத்துவம் என்றும் தோன்றுகிறது.
இந்த நாவலை வாசித்துச்செல்லும் போது எனக்குள் ஒரு நடைமுறையாளரின் குரல், ராதிகா ராமை பின்தொடர்ந்து செல்லாமல் இருந்திருக்கலாமே, அவன் வாழ்க்கை அழிந்திருக்காதே என்று ஆதங்கப்பட்டது. பிற்போக்குத்தனமாகத் தோன்றலாம். ஆனால் அதுவே நடைமுறைக்கு உகந்த நடத்தையோ என்று நினைத்தது உண்மை.
ஆனால் இந்த நாவல் உள்ளுணர்வின் தடத்தில் மட்டுமே பயணிக்கும் அமைப்புக் கொண்டது. உள்ளுணர்வு வழியாக மட்டுமே ராம் அடைந்தவற்றை — கானபூதி, குணாட்யர், ததாகதர் உட்பட — அவன் நடைமுறை வாழ்வில் அடைந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படிப் பார்த்தால் ராதிகாவின் அந்தக் காதல் ராமுக்கு ஒரு பெரும் கொடை, வரம். அவளுடைய சாவுக்கு இறுதி வரை நீதி கேட்டு மன்றாடுவதால் தான் கானபூதி அவனை உள்ளே உள்ளே என்று ஆழம் வரை அழைத்துச் செல்கிறது. ‘காவியம்’ இருட்டான நாவல் என்று பல நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் அறமும் நீதியும் கருணையும் அத்தனை தவிர்க்கமுடியாமல் இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது — ஆம் ‘இவ்வாறு இருந்துகொண்டிருக்கிறது’ — என்ற நிச்சயத்தின் கதையாகத்தான் எனக்கு காவியம் வாசிக்கக்கிடைத்தது.
( 3 )
அறம் அறம் என்று அரற்றிக்கொண்டிருக்கும் மண்ணின் ஓயாத சப்தம் காவியத்தில் கேட்க முடிகிறது. அந்த சப்தத்தைக் கேட்கும் காதை வாசகருக்கு அளித்தது தான் காவியத்தின் சாதனை. இது மண்ணைப் பற்றிய கதை — ‘மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’ என்ற வரியே இந்நாவலின் ஆதார சுருதி. ஆனால் இந்த வரியும் ஆசிரியர் கதைக்குள் ‘திட்டமிட்டு’ நுழைக்கவில்லை. மாறாக கதையமைப்பின் பகுதியாக, துக்காராமின் தேடலின் விளைவாக இயல்பாக எழுந்து வந்த வரி என்ற எண்ணமே நாவலை வாசிக்கும் போது உருவாகிறது. ‘இவ்வாறு இங்கே இருந்துகொண்டிருக்கும்’ ஓர் உண்மை, ஒரு மெய்–யதார்த்தம், நாவல் அதன் சுருதியை மீட்டும் போது, அந்த அலைவரிசையை தட்டும்போது, இயல்பாக திறந்துகொள்கிறது.
பொதுவாக புனைவுகளை ‘புனைவு’ என்ற கவசத்தால் மட்டுமே அணுக முடியும். புனைவும் அந்த விருப்புடன் தான் அமைக்கப்படுகின்றன என்று தோன்றுகிறது. ‘நிஜத்திலிருந்து’ ஒரு தூரத்தை அவை பேண விரும்புகின்றன. அப்போதுதான் நிஜத்தை மேலும் துல்லியமாக அவற்றால் கூறமுடிகின்றது.
ஆனால் காவியம் ஒளி ஊடுருவக்கூடிய காகிதத்தை நினைவுபடுத்துகிறது. அதன் அமைப்பில் அத்தனை மடிப்புகளும் ஆழங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நேரடியாக இங்கே அப்பட்டமாக மறைக்கப்பட்டிருக்கும் யதார்த்தம் ஒன்றைக் காணும் துணுக்குரலை அளிக்கிறது. ஆங்கிலத்தில் hiding in plain sight என்ற பதம் உண்டு. காட்டில் இரவு வேளையில் இன்ஃப்ரா–ரெட் கண்ணாடிகளை அணிந்தால் விலங்குகளின் உடல் வெப்பத்தை ‘பார்க்க’ முடியும். அவற்றின் உடல் வெப்பத்தையே ஒரு தடமாக பின் தொடர முடியும். அது போன்ற ஒரு பார்வைக்கோணத்தை காவியம் அளிக்கிறது. இரவில் கானகத்தில் உலவும் ஒரு கரடியை காட்டுகிறது.
ஒப்புநோக்க பின் நவீனத்துவ நாவல்களில் நிஜத்துக்கு நெருக்கமாக வருகிறேன் என்றும், நிஜத்துக்கும் புனைவுக்குமான இடைவெளியை மங்க வைக்கிறேன் என்றும் செய்யப்படும் autofiction வகையான சோதனைகள் படு அசட்டுத்தனமாகத் தோன்றுகின்றன. அவை தன்னிலையை சிதறடிப்பதன் மூலம், ரத்துசெய்வதன் மூலம் ஒன்றை அடைந்து வெளிப்படுத்துவதாக கூறிக்கொள்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் அதே தன்னிலையைத்தான் அப்பட்டமான வேஷங்களில் நிகழ்த்துகின்றன. மறுபால் உடையணியும் ஆண், பெண் வேடம் பூணும்போதும், அவன் அணிந்திருக்கும் போலி கண் இமைகளையும் உதட்டு சாயத்தையும் மீறி அவன் ஆண் என்று அப்பட்டமாகவே தெரியும். ஆனால் நீ ஆண் என்று சொன்னால் கோபித்துக்கொள்வான். தான் பெண் என்று போலிக்குரலில் சாதிப்பான். அது போல ‘அது நான் அல்ல’ என்று நாவலாசிரியர் சொல்வதே ஒரு பின்நவீனத்துவ முரண்நகையாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் அடிப்படையில் இது சாரமற்ற விளையாட்டு என்ற எண்ணம் காவியம் வாசித்தப்பின் வலுவடைகிறது.
காவியம் இந்த விளையாட்டுகளை வலுவான புனைவின் அமைப்பின் வழியாகவே தவிர்க்கிறது. ஆகவே எந்த தன்னிலையும் ‘நான் நீங்கள் நினைக்கும் தன்னிலை அல்ல,’ என்ற அறிவிப்புடன் கவனம் வேண்டி துருத்தி நிற்கவில்லை. அதே சமயம், துக்காராம் எங்கே முடிகிறான் கானபூதி எங்கே தொடங்குகிறது, கானபூதி எங்கே முடிகிறது வால்மீகியும் வியாசனும் குணாட்யரும் எங்கே தொடங்குகிறார்கள் என்ற மயக்கம் இந்த நாவலில் உள்ளது. ஒவ்வொரு கதைசொல்லியும் ஒரு காகிதத்தாள் போல மறுபக்கம் வீசும் உண்மையென்னும் ஒளியை தன் வழியாக வடிகட்ட அனுமதிக்கிறார்கள். இறுதியில் ஆசிரியர் கானபூதியை கண்டடையும் இடத்தில் கதை தன் ஒருமையின் ஊற்றை வந்தடைகிறது. சிதறடிப்பற்ற இந்த ஒருமை – இதுவே காவியத்தின் மொழிபை பின் நவீனத்துவத்தின் ஆழமற்ற மீபுனைவு உக்திகளிலிருந்து மேலெழச்செய்கிறது.
அடிப்படையில் காவியம் ‘இருந்துகொண்டிருக்கும்’ ஒரு கதையைத்தான் சொல்கிறது. இயல்பான வெளிப்பாடாகக் கூறுகிறது. ‘மண்ணின் அறம்’ என்ற ஒருமை தொடக்கம் முதலே கதையின் இணைப்பாக அமைகிறது. அதுவே கதையின் அமைப்பை தீர்மானித்த முதன்மை விசைகளில் ஒன்று என்று நினைக்கிறேன். அந்த ஒருமையை தன் உள்ளுணர்வின் தடத்தில் உணர்ந்த ஓர் ஆசிரியர் இந்தப் பிரதியோடு இணைந்தே இருக்கிறார். அவர் உருவாக்கும் ஆசிரியர் அல்ல. புனையும் ஆசிரியர் அல்ல. கதைச்சொல்லும், கதைக்குள் பேசும் ஆசிரியர் அல்ல. உள்ளுணர்வாலேயே அனைத்துக் கதாபாத்திரங்களின் இயக்கமாக விளங்கும் ஆசிரியர். உள்ளுணர்வாலேயே ஆழங்களை உணர்ந்து அங்கே சென்று வாழ்ந்து மீண்டு வரும் ஆசிரியர். உள்ளுணர்வாலேயே ‘இருந்துகொண்டிருக்கும்’ ஒன்றை அறிந்து சாட்சி சொல்பவர். ஒரு கோணத்தில் இந்தக் கதையில் ஆசிரியர் இல்லை. இன்னொரு கோணத்தில் இந்தக் கதையில் ஆசிரியர் மட்டும் தான் இருக்கிறார். அல்லது அவர் உள்ளுணர்வு மட்டும் தான் இருக்கிறது. அன்புள்ள ரோலந்த் பார்த், உங்கள் அறுவைசிகிச்சையில் இறந்துபோன ஆசிரியர் இப்போது பிசாசாக உருமாறி பிரதிக்குள் ஒழிந்துகொண்டிருக்கிறார். பிரதி எங்கே பிசாசு எங்கே என்று பிரித்துச்சொல்லுங்கள் பார்ப்போம்?
மேலும் இந்தப் பிரதியே மண்ணை ஆதாரம் என்று சொல்கிறது. மண்ணும் கதை சொல்லும் பிசாசும் பிணைக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கையில் பிரதி மட்டும் ஆசிரியர் இல்லாமல், அடிமரம் இல்லாமல், வேர்கள் இல்லாமல், எப்படி அந்தரத்தில் மிதக்க முடியும்? ஆசிரியரின் கற்பனா பரிணாமம் நிகழாமல் இந்த நாவல் அதன் வடிவை எப்படி அடைந்திருக்க முடியும்? அப்படிப்பார்த்தால், ஆசிரியர் இல்லாத, மையமில்லாத, ஒருமையில்லாத, தரிசனம் இல்லாத பிரதிகளுக்கு எதிரான ஓர் அறிக்கை, ஓர் அறைகூவல் என்று கூட காவியத்தை வாசிக்கலாம்.
4
ஆனால் இவ்வளவு ஆழங்களுக்குள் செல்லும் காவியத்தில் ஒரு மர்மமான விடுபடல் உள்ளது. அல்லது ஒரு வெற்றுப்பக்கம். யோசித்தால் இது காவியத்தின் வெற்றுப்பக்கம் அல்ல. காவியம் குவித்துக் காட்டும் பண்பாட்டாழத்தில் தன்னளவில் உள்ள வெற்றுப்பக்கம்.
காவியம் மண்ணைப் பற்றிய நாவல். பெண்ணைப் பற்றிய நாவல். பெண்கள் மீது இயற்றப்படும் அநீதிகளை பற்றி, பெண்கள் தங்கள் மீது இயற்றிக்கொள்ளும் அநீதிகளை பற்றிய கதை.
ஆனால் நாவலுக்குள் கதை சொல்லும், அல்லது கானபூதியிடம் அமர்ந்து கதை கேட்கும் ஒரு பெண்ணும் இடம் பெறவில்லை. கதைசொல்லியின் அம்மா பிசாசின் கதையை கேட்கிறாள், ஆனால் அவள் கேட்ட கதைகள் அவளுடனேயே மறைகின்றன.
ஏன்? அதுவும் உள்ளுணர்வின் விளைவு என்று தான் தோன்றுகிறது. யோசித்தால் அந்த வெற்றுப்பக்கம் ஓர் அகழி போல் எத்தனை அகலமாக இங்கே உள்ளது! நம் பழைய மரபில் காவியம் படைத்தப் பெண் ஒருவர் கூட இல்லை. இந்த நாவல் முழுதும் பெண்ணின் அறமும் அறமீறலும் உள்ளுணர்வால் தொட்டுச் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் இவற்றைத் தன் உணர்வுகளாகத், தன் சொற்களில் கூறிய பெண் எவருமே நம் பண்பாட்டில் இல்லை. நாவலில் காவியம் பயின்று வந்த ஒரே பெண் கதாபாத்திரம் கொலையாவதும் ஒரு குறியீடென்று வாசிக்க இடம் உள்ளது. அந்தக் கொலைக்கான நீதியைத் தேடி நடக்கும் அகழாய்வில், பாற்கடலிலிருந்து என்பது போல் வெளிவருவது, ஒரு வெற்றுப்பக்கம்.
‘வெற்றுப் பக்கம்’ என்ற பெயரில் ஐசக் தினெசன் ஒரு நல்ல சிறுகதையை எழுதியிருக்கிறார். காவியத்துடன் என் மனம் எப்படியோ இந்தச் சிறுகதையை இணைத்துக்கொண்டது. ஒருவேளை அதுவும் மறக்கப்பட்ட கதைகளை உள்ளுணர்வால் ‘பெற்றுக்கொள்வது’ பற்றிய கதை என்பதால் இருக்கலாம். அல்லது அதுவும் பெண்ணைப்பற்றிய, மண்ணைப்பற்றிய கதை என்பதால் இருக்கலாம்.
அக்கதையின் தொடக்கத்தில் ஒரு கதைசொல்லி தன் மாணவியான பேத்தியிடம் சொல்கிறாள்: ‘கதைக்கு விசுவாசமாக இரு. என்ன இடர் வந்தாலும், ஒரு நொடிகூடத் தளராமல் உன் கதையை மாறாப்பற்றுடன் பின் தொடர்ந்து போ. கதைசொல்லி எப்போதும், எந்நிலையிலும், கதைக்கு மாறாபற்றுடன் இருப்பாரென்றால், அங்கு கதை முடிவில், மௌனத்தின் குரல் பேசும். இறுதி சொல்லை உரைத்த பின் மோனத்தின் குரல் அங்கு கேட்கும்.’
கானபூதி சொல்லும் கடைசி கதையில் ஆனந்தர் ஆயிரம் காலடி திருப்பி வைத்து பகதியை அடைந்து அவள் பாதம் பற்றி கண்ணீருடன் ஏதோ சொல்கிறார். பகதி அவரை அணைத்து பதில்சொல் உரைக்கிறாள். ஆனந்தர் பகதியிடம் என்ன சொன்னார், பகதி ஆனந்தரிடம் என்ன சொன்னாள் என்ற கேள்விகளுக்கு, “அளவேயில்லாத கதைகளை அறிந்தவன் நான். மண்ணிலும் விண்ணிலும் நானறியாத ஒன்றுமில்லை. ஆனால் எனக்கும் தெரியாது,” என்கிறது கானபூதி.
கானபூதியே சொல் அணைந்து மௌனமாகும் இடம் இது. ஆழங்களை நிறைக்கிறது மௌனம், ஊற்றெடுத்துக் கொப்பளித்து எழுகிறது மௌனம். கதை சொல்லும் கானபூதியிலும், கதை கேட்கும் துக்காராமிலும், கதையை எழுதிச்செல்லும் ஆசிரியரிலும் அதை படிக்கும் வாசகியிலும் அந்த மௌனம் நிறைகிறது. இந்தக் காவியத்தின் மகத்தான வெற்றுப்பக்கம் அது. அதை வாசிக்கமுடியாது. ஆனால் அதுவரை எரிந்துகொண்டிருந்த உள்ளத்தீ அங்கே சற்று அடங்கத் தொடங்குகிறது. ஆம், இது இருந்தது. இது இருந்துகொண்டிருக்கிறது. இதுவே நிகழும். ஓம், அவ்வாறே ஆகுக.
5
இப்போது நள்ளிறவு தாண்டிவிட்டது. இன்று குரு பூர்ணிமை. ஜன்னலுக்கு வெளிய எரிந்துகொண்டிருக்கும் முழுநிலவை பார்த்துக்கொண்டே, மௌனத்தை உணர்ந்தவாரு அமர்ந்திருக்கிறேன். கதைசொல்லி தன் சொற்பெருக்கை நிறுத்திய பொழுதில் எழும் மௌனம். ஆழமானது. வெள்ளி வழியும் இம்மௌனத்தில் ஒரு புன்னகையை காண்கிறேன்.
இத்திருநாளில், கதைகளின் தெய்வப்பிசாசு கானபூதியையும், அதன் வழிவந்த தெய்வீக கதைசொல்லிகளான என் குருநாதர்களுக்கும், மண்ணில் சிரம் பதித்து வணங்குகிறேன்.
அன்புடன்,
சுசித்ரா
ஏன் இத்தனை காணொளிகள்
I saw your Guru Purnima greetings. There is nothing wrong with you following the Advaita sect, which prioritizes the Vedas. What is the need for this in Tamil Nadu, which mostly follows the Agama sect Saivasiddhanta tradition?
நீங்கள் காணொளிகள், சமூகவலைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிரானவர். நீங்களே இப்போது கிட்டத்தட்ட இத்தனை காணொளிகளை வலையேற்றம் செய்கிறீர்கள். தரவுக்குவிப்புக்கு எதிரான நீங்களே இத்தனை காணொளிகளை வெளியிடுவது முரண்பாடாக இல்லையா?
ஏன் இத்தனை காணொளிகள்?நீலநிழல்- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,நிழல்கள் உடனான உங்களின் ஆட்டம் இன்னும் ஓயவில்லை போலும். அதுவும் இது கருமையான நிழல் அல்ல, நீல நிழல். அறிய முடியாமையின் நிறம் நீலம். கருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம். கொற்றவையில் தொடங்கி நீலம் கண்ணன் வழியாக, அருதியாக, அறிய முடியாத , முடிவற்ற வல்லமை கொண்ட எல்லாவற்றிற்கும் நீல வண்ணம் கொடுத்துள்ளீர்கள்.“நாயகனான” நாயக்கர் சொல்லுவது எல்லாம் சிறந்த தத்துவ ஆசிரியர் பேசுவது போல் உள்ளது.” வெட்டுவது தாண்டா உன் வேலை அவன் சாவு உன் வேலை இல்லை” என்பது கிட்டத்தட்ட கீதையின் வரிகளுக்கு (” கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” சமானம். சாவு என்பது உடல் சாவு மட்டுமல்ல உயிருக்கு நிகராக ஒன்றை செய்வதை நிறுத்துவதும் சாவுதான். As usual it is more of a personal catharsis journey than a definite answers. நாயக்கரை நீட்சேயின் உபர்மேனின் ஒரு பகுதியாக கருதலாம். தூக்கு கயிறு அருந்து விழும் வேளையில் நான் புதுமைப்பித்தனின் எமன், கிழவியுடன் ஆன உரையாடலை நினைத்துக் கொண்டேன்.நாயக்கர் தனது சாவை , சாவாக பார்க்காமல் வாழ்க்கை எக்ஸ்டென்ஷன் ஆக பார்க்கிறார, அவருக்கு சாவு இல்லை. Legacy continues. பிறக்கும் முன்பிருந்தே நாய் குட்டி மாதிரி கூடவே வருகிறது. நாயக்கரும் காலத்திற்கு அப்பால் நிற்கிறார்.மூன்று மாதங்களாக உங்களின் நிழல் விளையாட்டை, வார்த்தைகளில் படிப்பதற்காகவே கண் விழிக்கிறேன்.அன்புடன்,மீனாட்சி
நீலநிழல்- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,நிழல்கள் உடனான உங்களின் ஆட்டம் இன்னும் ஓயவில்லை போலும். அதுவும் இது கருமையான நிழல் அல்ல, நீல நிழல். அறிய முடியாமையின் நிறம் நீலம். கருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம். கொற்றவையில் தொடங்கி நீலம் கண்ணன் வழியாக, அருதியாக, அறிய முடியாத , முடிவற்ற வல்லமை கொண்ட எல்லாவற்றிற்கும் நீல வண்ணம் கொடுத்துள்ளீர்கள்.“நாயகனான” நாயக்கர் சொல்லுவது எல்லாம் சிறந்த தத்துவ ஆசிரியர் பேசுவது போல் உள்ளது.” வெட்டுவது தாண்டா உன் வேலை அவன் சாவு உன் வேலை இல்லை” என்பது கிட்டத்தட்ட கீதையின் வரிகளுக்கு (” கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” சமானம். சாவு என்பது உடல் சாவு மட்டுமல்ல உயிருக்கு நிகராக ஒன்றை செய்வதை நிறுத்துவதும் சாவுதான். As usual it is more of a personal catharsis journey than a definite answers. நாயக்கரை நீட்சேயின் உபர்மேனின் ஒரு பகுதியாக கருதலாம். தூக்கு கயிறு அருந்து விழும் வேளையில் நான் புதுமைப்பித்தனின் எமன், கிழவியுடன் ஆன உரையாடலை நினைத்துக் கொண்டேன்.நாயக்கர் தனது சாவை , சாவாக பார்க்காமல் வாழ்க்கை எக்ஸ்டென்ஷன் ஆக பார்க்கிறார, அவருக்கு சாவு இல்லை. Legacy continues. பிறக்கும் முன்பிருந்தே நாய் குட்டி மாதிரி கூடவே வருகிறது. நாயக்கரும் காலத்திற்கு அப்பால் நிற்கிறார்.மூன்று மாதங்களாக உங்களின் நிழல் விளையாட்டை, வார்த்தைகளில் படிப்பதற்காகவே கண் விழிக்கிறேன்.அன்புடன்,மீனாட்சி
July 14, 2025
பண்பாட்டின் தொடக்கப்புள்ளி…
இலக்கியம், தத்துவம், மெய்யியல் என ஒருங்கிணைந்த அறிதலை நிகழ்த்தி முன்செல்லும்தோறும் எனக்கு மானுடப்பண்பாட்டின் தொடக்கப்புள்ளிகளாகிய கற்காலத்தில்தான் நாம் அறியவேண்டிய அனைத்தும் உள்ளன என்று தோன்றலாயிற்று. அவற்றை அறியாமல் நாம் எதை அறிந்தாலும் அரைகுறை அறிதலே.
பண்பாட்டின் தொடக்கப்புள்ளி…
இலக்கியம், தத்துவம், மெய்யியல் என ஒருங்கிணைந்த அறிதலை நிகழ்த்தி முன்செல்லும்தோறும் எனக்கு மானுடப்பண்பாட்டின் தொடக்கப்புள்ளிகளாகிய கற்காலத்தில்தான் நாம் அறியவேண்டிய அனைத்தும் உள்ளன என்று தோன்றலாயிற்று. அவற்றை அறியாமல் நாம் எதை அறிந்தாலும் அரைகுறை அறிதலே.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

