Jeyamohan's Blog, page 68

July 19, 2025

குமரிச்செழியன்

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், உரையாசிரியர். தமிழக அரசின் தணிக்கைத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். கவிதை, கட்டுரை நூல்களை எழுதினார். இலக்கிய நூல்கள் சிலவற்றுக்கு உரை எழுதினார். கவிமாமணி, கவிதைச்செம்மல் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றார்.

குமரிச்செழியன் குமரிச்செழியன் குமரிச்செழியன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2025 11:33

கடல் : மூன்று மனிதர்களின் கதை

இருளாலும் ஒளியாலும் ஆனது இந்த உலகம் எனக் காட்டும் இந்த நாவல் இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்லப்படும்  மாந்தர் குறித்தும் எடுத்துரைக்கிறது.

கடல் : மூன்று மனிதர்களின் கதை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2025 11:32

வேதாச்சலம், கடிதம்

தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? பாண்டியநாடும் வேதாசலமும் வேதாசலத்துக்கு விருது- கடிதம் வெ.வேதாசலம்- கடிதம் வேதாசலம், தமிழ்விக்கி விருது – கடிதங்கள்

வேதாச்சலம் அவர்களுக்கு தமிழ்விக்கி – தூரன் விருது அளிக்கப்படுவது அறிந்து மகிழ்ச்சி. அவருடைய காத்திரமான பங்களிப்புகள் இன்றைய வரலாற்றாய்வுக்கு மிகப்பெரிய கொடை. இன்று உண்மையில் வரலாற்றாய்வே சோர்வுற்றிருக்கிறது. உண்மையான வரலாற்றாய்வுக்கு இன்றைக்கு நம் பொதுச்சூழலில் எந்த மதிப்பும் இல்லை. இன்றைய வரலாற்றாய்வாளர்களுடன் ஒப்பிட நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் போன்றவர்கள் எல்லாம் சக்கரவர்த்திகளுக்குரிய மதிப்புடன் இருந்தார்கள் என்று சொல்லவேண்டும். 

இன்று வரலாற்றாய்வாளர்களுக்கு நிதியுதவிகளும் இல்லை. மைய அரசும் சரி, மாநில அரசும் சரி நிதியுதவிகளை நிறுத்திவிட்டிருக்கின்றன. அரசியல்தான் இன்று வரலாற்றாய்விலும் ஓங்கியிருக்கிறது. அரசியலுக்கு ஏற்ப ஆய்வுகளை திரித்தும் ஒடித்தும் சொன்னால்தான் பிழைக்கமுடியும் என்னும் நிலை. இன்று வரலாற்றாய்வாளர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு அறிமுகத்தை அளிக்கும் முயற்சிகள் வரவேற்புக்குரியவை.

ஆனால் வேதாசலம் அவர்களின் ஆய்வுகளின் கோணம், முடிவு ஆகியவற்றுடன் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு என்பதையும் சொல்லியாகவேண்டும். பொதுவாக உலகமெங்கும் வரலாற்றாய்வில் அமைப்புச்சார்பு, அமைப்பு எதிர்ப்பு என்று இரண்டு கோணங்கள் உண்டு. இரண்டு தரப்பும் வரலாற்று நோக்கில் ஒரு திரிபு கொண்டவர்கள்தான். அதற்கேற்ப முடிவுகளும் திரிபடையும். அமைப்பை ஆதரிக்கும் ஆய்வுகள் இரண்டு வகை. மைய அரசு சார்ந்த ஆய்வுகளில் இந்துமதம், இந்துப்பண்பாடு சார்ந்த பார்வைகளுக்கே இடம். இங்கே தமிழக ஆய்வுகளில் தமிழ்ப்பெருமை சார்ந்த பார்வையை முன்வைப்பதே அமைப்புசார்பாளர்களின் வழக்கம்.

அமைப்பு எதிர்ப்பு பார்வையைக் கொண்டவர்கள் மார்க்ஸியர்கள். அவர்கள் எதை அமைப்புசார்பானவர்கள் சொல்கிறார்களோ அதற்கு நேர் எதிராகச் சொல்ல முயல்வார்கள். ஜே.என்.யூ சார்ந்து அப்படி ஒரு பெரிய மரபு உண்டு. அவர்கள் எம்.என்.ராய், டி.டி.கோஸாம்பி வழி வந்தவர்கள். ரொமீலா தாப்பர் முதல் கே.என்.பணிக்கர் வரை அவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களின் பார்வையும் திரிபானதே. இந்த இரண்டாம் வகையினர் மையப்போக்கான இந்துப்பார்வையின் எதிர்த்தரப்பாக சமணம், பௌத்தம் ஆகியவற்றை முன்வைப்பார்கள். அதற்காக சமணத்தையும் பௌத்தத்தையும் முற்போக்கானவையாகக் கட்டமைப்பார்கள். 

இந்தப் பார்வையின் செல்வாக்கு வேதாச்சலம் அவர்களின் சமணம் பற்றிய ஆய்வுகளில் காணப்படுகிறது என்பதே என்னுடைய கருத்தாகும். சமணத்தின் அழிவு பற்றிய அவருடைய நோக்கும் சரி, அதன் பங்களிப்பு பற்றிய நோக்கும் சரி இடதுசாரிப்பார்வையின் சாயல்கொண்டவை. ஆனால் அவருடைய ஆய்வின் வீச்சும், தரவுகளின் நேர்த்தியும் பாராட்டத்தக்கவை.

எஸ்.ஆர்.சுப்ரமணியம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2025 11:31

AI and our language. A Letter

Your sharp 10-minute speech on the use and misuse of AI is intelligent and encouraging. We can use AI software to develop our language and expression, but we can’t use it to talk for us.

AI and our language. A Letter

https://www.manasapublications.com/manasalitprize

 

பல நூறாண்டுகளாக இந்தியப் பெண் ஆணாதிக்க- தந்தைவழிச் சமூகத்தால் உருவாக்கப்பட்டவள். அவள் கட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக அவள் அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறாள். இந்த வேறுபாடுதான் முக்கியமானது

எழுத்தும் விடுதலையும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2025 11:30

July 18, 2025

இறந்தகாலத்தில் இருந்து வரும் உயிர்

விந்தையான ஓர் இடத்தில் இருந்து பதிவுசெய்யப்பட்ட காணொளி. காவியம் நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும், அந்தக் கதை நிகழும் நாககட்டத்தில் ஓர் இடிந்த அரண்மனைக்குள். அங்கே அமர்ந்திருக்கையில் தோன்றிய சில சிந்தனைகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2025 11:36

ஆத்மாவின் அலைகடல்

“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…

அன்புள்ள ஜெ

கடல் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் படத்தைத்தான் பார்த்தாச்சே என்ற மனநிலை எனக்கும் இருந்தது. ஆனால் நாவல் பெரியதாக இருந்தது. ஆகவே மேலும் நிறைய உள்ளது என்ற எண்ணம் உருவானது. ஆகவே நூலை வாசித்தேன். ஏற்கனவே விஷ்ணுபுரம் நாவலை வாங்கி ஒரு வருடம் வாசித்தேன். இதுவும் அப்படித்தான் என்று தோன்றியது. ஆனால் மூன்றுநாட்களில் இரவும் பகலும் அமர்ந்து நாவலை வாசித்து முடித்தேன்.

எந்த கனவுக்கும், கற்பனைக்கும் இடம் அளிக்காத அப்பட்டமான ஒரு அக உலகம் இந்நாவலிலே உள்ளது. வாசிக்க ஆரம்பித்தால் நமக்குள் இருக்கும் நஞ்சும் நெருப்பும் அமுதும் நீரும் பொங்கி வருகின்றன. நான் டஸ்டேய்வேஸ்கியின் கிரைம் ஆண்ட் பனிஷ்மெண்ட் வாசித்து இதே கொந்தளிப்பை அடைந்திருக்கிறேன். அதற்கிணையான நாவல் அனுபவம் இது. இன்னும் இரண்டு முறையாவது இதை வாசிப்பேன் என நினைக்கிறேன்.

இரண்டு ஆத்மாக்கள் காலவெளியற்ற ஒரு இடத்தில் உக்கிரமாக ஒன்றையொன்று சந்தித்து மோதிக்கொள்வதுபோல இருக்கிறது இந்நாவல். இரண்டு ஆத்மாக்களும் மொழியாக மாறி ஒன்றையொன்று சந்திக்கின்றன. எனக்கு இருந்த மனப்பிம்பமே கன்யாகுமரி கடல்தான். அங்கே அரபிக்கடலும் வங்காள விரிகுடாவும் சந்திக்கும் கோடு தெரியும். இரண்டுபக்க அலைகளும் வந்து ஒன்றோடொன்று முட்டிக்கொள்வதை கைடு காட்டித்தருவார். அதுபோன்ற ஓர் அனுபவம் இந்நாவல். இரண்டு கடல்களின் போராட்டம் இந்நாவல்.

இந்தக் கடற்கரை வாழ்க்கை எனக்கு மிக அன்னியமானதாக உள்ளது. நான் பிறந்து வளர்ந்த கடற்கரையின் வாழ்க்கை இன்னும் நவீனமாகிவிட்டது. இது 80 களில் நிகழும் கதை என நினைக்கிறேன்.

இந்நாவல்தான் நீங்கள் எழுதியவற்றில் சிறந்தது என்பது என் எண்ணம். இதை ஒரு சினிமாவுக்காக எழுதியிருக்கிறீர்கள் என்பதே ஆச்சரியம். அத்துடன் இதை பத்து ஆண்டுகள் வெளியிடாமலேயே வைத்திருந்தீர்கள் என்பதும், வெளியிடவேண்டாம் என நினைத்தீர்கள் என்பதும் மேலும் ஆச்சரியம். வெளியிடாமலிருந்திருந்தால் எவ்வளவு பெரிய இழப்பு என்று நினைத்துக் கொள்கிறேன்.

இந்நாவலை நீங்கள் எழுதிவீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் நித்ய சைதன்ய யதி ஆசிரமத்தில் ஏசுவை நினைத்துக்கொண்டதைப் பற்றி நாலைந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். கிறிஸ்துமஸ் கவிதைகளும் பல எழுதியுள்ளீர்கள். கிறிஸ்து பற்றி பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் பகுதிகளும் மகத்தானவை. மெக்தலீனா மறியா பற்றி ஒரு நாவல் எழுதுங்கள் என்று நான் உங்களுக்கு 2012 ல் ஒரு கடிதம் எழுதியபோது பார்ப்போம் என்று எழுதினீர்கள். இரண்டு ஆண்டுக்குப்பின் இதை எழுதியிருக்கிறீர்கள். இதுவும் மக்தலீனாவின் கதைதான்.

ஜெய்ஸன் சாமுவேல்

அன்புள்ள ஜெய்ஸன்.

நன்றி.

ஒரு நாவலை எழுதுவதே என்னளவில் முக்கியம். அது என் வரையில் ஓர் அகப்பயணம், ஒரு தியானம், ஒரு எய்துதல். அது நிகழ்ந்தபின் அதிலிருந்து கூடியவிரைவில் வெளியேறிவிடுவதையே நான் செய்து வருகிறேன். உண்மையில் உலகிலெங்கும் இன்று அது வழக்கம் இல்லை. ஒரு நாவலை எழுதியபின் குறைந்தது நான்காண்டுகள் அந்நாவலை ‘பிரமோட்’ செய்ய அந்த ஆசிரியனே உழைக்கவேண்டும் எனறு இன்றைய மேலைநாட்டுப் பதிப்புலகம் எதிர்பார்க்கிறது.

கடல் நாவலின் அந்த அலைக்கொந்தளிப்பு என்பது வெவ்வேறு வகையில் என் அகம் சார்ந்ததுதான். என்னால் சாம், தாமஸ் இருவருடனும் அடையாளம் காணமுடிகிறது. ஒருவகையில் விஷ்ணுபுரமும் அந்த மோதலின் கதை அல்லவா? கதைகளின் வழியாக நான் கண்டடைவது ஒன்றுண்டு. கண்டடைந்ததை உறுதிப்படுத்திக் கொள்வதும் கதைகளின் வழியாகவே.

இந்நாவலை தமிழில் எத்தனைபேர் நுணுக்கமாக உள்வாங்க முடியும் என்னும் சந்தேகமும் எனக்கு இருந்தது. கடல் படம் வெளிவந்தபின் இது தமிழர்களுக்குரிய நாவல் அல்ல என்னும் எண்ணம் உருவாகி, சிலகாலம் நீடித்தது. இதை மலையாளத்தில் எழுதித்தருகிறேன் என்று நான் ஒரு பதிப்பகத்திற்கு வாக்களித்திருந்தேன். அதன்படி எழுத முடியவில்லை. இந்த மொழிநடையை மலையாளத்திற்குக் கொண்டு சென்றபோது அங்கே வேரூன்றியுள்ள பைபிள்நடை, அதன் தேய்வழக்குகள், உருவாகி வந்தன. ஆகவே விட்டுவிட்டேன்.

இது ‘சமூகயதார்த்தங்களை’ சொல்லும் நாவல் அல்ல. அப்படிப்பட்ட நாவல்களை வாசிக்கவே நம்மவர்கள் பழகியிருக்கிறார்கள். (இன்னொரு சிறுபான்மையினர் ‘நுட்பம்’ என சொல்லிக்கொண்டு பாலியலை மட்டுமே வாசிப்பார்கள்) நான் கூறும் அந்த கடற்கரை என்பது ஒரு ‘சமூக உண்மை’ அல்ல. அது ஒரு வாழ்க்கைக்களம். எங்கும் உள்ள வாழ்க்கைக்களம்தான், இங்கே கொந்தளிக்கும் கடல் அருகே உள்ளது என்பது மட்டுமே கூடுதலாக உள்ளது. நான் இந்தியாவின் வெவ்வேறு நிலங்களில் கண்ட அடித்தள வாழ்க்கையின் சித்திரத்தையே அக்கடற்கரையில் சித்தரிக்கிறேன்.அதை புனைவுக்களமாக விரித்தும் இருக்கிறேன்.

இந்நாவல் கடற்கரை வாழ்க்கையைச் சொல்வது அல்ல. பாவம்- மீட்பு, சாத்தான் – தெய்வம் என இரு எல்லைகள்  இருளென்றும் ஒளியென்றும் உலவும் ஒரு வாழ்க்கைக்களத்தைச் சித்தரிக்கவே முயன்றுள்ளேன். அவ்வாழ்க்கை சாம், தாமஸ் இருவரும் திகழ்வதற்கான பின்புலம்- அவ்வளவுதான். ஆகவேதான் அங்கே எந்தக் கதாபாத்திரமும் விரிவாக்கம் செய்யப்படவில்லை, அவை முகங்கள் மட்டுமே. நான் அறிந்த கடற்கரை என் கல்லூரிக்காலம் சார்ந்தது.

சாம், தாமஸ், பெர்க்மான்ஸ் ஆகியோர் ‘மெய்யான’ கதைமாந்தர் அல்ல. ‘ரத்தமும் சதையுமாக’ நாம் எங்கும் சந்திப்பவர்களும் அல்ல. மிக அரிதான தேடல்கொண்டவர்கள், அதன் பொருட்டு கிளம்பிச்செல்பவர்கள் மட்டுமே அத்தகைய அரிதான பேராளுமைகளைச் சந்தித்திருக்க முடியும். நான் அத்தகையோரைச் சந்தித்துள்ளேன். அவர்களின் சாயல் அக்கதையில் உண்டு. நான் அவ்வுலகைச் சார்ந்தவன். (சற்றேனும் அவ்வுலகுக்குள் வராத எவரும் என் வாசகர்கள் அல்ல)

தமிழின் பொதுவான வாசகன் ஒரு கதாபாத்திரத்தை identification வழியாகவே சென்றடைய பயின்றிருக்கிறான். தன்னுடனோ, தானறிந்த எவருடனோ ஒரு கதாபாத்திரத்திற்கு இருக்கும் தொடர்பே அவனால் புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது. அவனுடைய நடுத்தரவர்க்க எளிய வாழ்க்கைக்குள் அவன் அறிந்தவர்களையே எங்கும் எதிர்பார்க்கிறான். ‘இதைப்போன்ற ஒருவரை பார்த்ததே இல்லை’ என்பதே நம் வாசகன் அடிக்கடிச் சொல்லும் எதிர்விமர்சனமாக உள்ளது. அவன் அறிந்த சிற்றுலகுக்கு அப்பால் செல்ல அவனால் இயல்வதில்லை. எதையும் தன்னை நோக்கி இழுப்பவன் அவன்.

தாமஸ் அடைந்த துயரின் உச்சங்களை அடைந்தவர்களைப் பற்றி, சாம் சென்றடைந்த அகவிரிவை எய்தியவர்களைப்பற்றி, பெர்க்மான்ஸின் இருண்ட உலகைப்பற்றி நாம் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவை நம் அனுபவமண்டலத்திற்கு அப்பாலுள்ளன. அவற்றை மூர்க்கமாக நிராகரிக்கிறோம். ஆகவே பொதுவாகத் தமிழ்வாசகன் பற்றிய ஓர் அவநம்பிக்கை கடல் சினிமாவின் மீதான எதிர்விமர்சனங்களில் இருந்து உருவானது. வெளியிட ஊக்கமில்லாமலானமைக்கு அதுவும் காரணம்.

இந்நாவலின் முன்னுரையில் சொல்லப்பட்டிருப்பதுபோல ‘புதுமை’ (Novelty) என்னும் அம்சம் இந்நாவலில் இல்லை. உருவகத்தன்மையே உள்ளது. உருவகத்தன்மை புதுமைக்கு எதிரானது. இதிலுள்ள மூன்று அடிப்படை உருவகங்களும் இரண்டாயிரமாண்டு தொன்மை கொண்டவை, பத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பியக் காவியங்களில் சித்தரிக்கப்பட்டவை. அவற்றின் விரிவாக்கம் மற்றும்  அகவயமாக்கமே இந்நாவலில் நிகழ்ந்துள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பின் நாவலை படித்துப் பார்க்கையில் முன்பு ஜானகிராமன் சொன்னதுபோல ’இதற்கும் சிலர் இருப்பார்கள் என்னும் நம்பிக்கை’ உருவானது. ஆகவே வெளியிடத் தீர்மானித்தேன். உங்களை வந்தடைந்தது நிறைவளிக்கிறது.

இப்போது வியன்னாவில் இருக்கிறேன். நேற்று (17 ஜூலை 2025) செயிண்ட் ஸ்டீபன்ஸ் சர்ச்சில் ஒரு ஆர்கன் இசைநிகழ்வை கேட்டேன். இங்குள்ள சர்ச் ஆர்கன் நான்கு பகுதிகளிலாக மாபெரும் தேவாலயக் கூடத்தை நிரப்பியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆர்கன்களில் ஒன்று இது. ஒரு சிறு கட்டிடம் அளவுக்கு பெரியது என்றால் ஊகிக்கமுடியும் உங்களுக்கு.

செபாஸ்டியன் பாக், விவால்டி, வைடர் , வியன்னெ ஆகியோரின் இசையை சுவிஸ் நாட்டு ஆர்கன் மேதை  ஜீன் கெய்ஸர் (Jean-Christophe Geiser ) வாசித்தார். சுவிஸ் நாட்டிலுள்ள உலகின் மிகப்பெரிய ஆர்கனை இசைப்பவர் அவர். ஆர்கன் இசைப்பதைக் கற்பிக்கும் ஆசிரியரும்கூட.

ஒரு மாபெரும் தேவாலயக் கூடத்தில் அமர்ந்து, ஓர் இசைமேதையின் விரல்கள் எழுப்பும் இசையை, முந்நூறாண்டு தொன்மையான மிகப்பிரம்மாண்டமான ஆர்கனில் நேரடியாகக் கேட்பதென்பது ஒரு தவம் பலிப்பதுபோன்றது.

ஆர்கன் என்பது அந்த தேவாலயத்தையே ஒரு மாபெரும் இசைக்கருவியாக ஆக்கிவிடுவது. ஒரே ஒருவர் தன் விரல்களால் ஒரு கட்டிடத்தையே முழங்க வைக்கிறார். ஒரு மாபெரும் ஆர்க்கெஸ்டிராவுக்கு இணையான சேர்ந்திசை என்ற பிரமை எழுந்தது. அது ஒரு மகத்தான அனுபவம். பாவம், மீட்பு என்னும் இரு எல்லைகளை நோக்கி இசை ஆழிப்பேரலை என கொந்தளித்து சுழல்கிறது. கண்ணீர் மல்கி, நெஞ்சோடு கைசேர்த்து அமர்ந்திருந்தேன். அந்த அனுபவத்தின் துளியையேனும் அடையும் அகம் கொண்டவர்களுக்கு உரியது கடல்.

நம்மில் மிகச்சிலருக்கே நமது வழக்கமான அகவுலகத்தைக் கடந்து செல்ல இயல்கிறது. அப்படிக் கடக்கவேண்டும், இன்னொரு உலகில் நுழையவேண்டும் என்னும் முனைப்பே இங்கில்லை. பல நூறாண்டுகளாகத் தேக்கமுற்றுக்கிடக்கும் ஒரு பண்பாட்டுக்குரிய மனநிலை இது. மிகச்சிறிய வட்டத்திற்குள் முடிவில்லாது சுழல்வது. அதை உடைக்கவே இஸ்லாம், கிறிஸ்தவம் , மேலையிசை, மேலைக்கலை வகுப்புகளை அறிமுகம் செய்கிறோம். சிறில் அலெக்ஸின் கிறிஸ்தவ மெய்யியல் வகுப்புகள், அஜிதனின் இசை வகுப்புகள், ஏ.வி.மணிகண்டனின் கலைவகுப்புகள் கடல் நாவல் காட்டும் உலகுக்குள் நுழைவதற்கான அடிப்படைப் பயிற்சியை அளிப்பவை. அவற்றில் மிகச்சிலரே பங்குகொள்கின்றனர், குறிப்பாக அவர்களுக்காகவே நானும் எழுதுகிறேன். அந்த எண்ணம் உருவானபின் கடல் நாவலை வெளியிடலாம் என்ற எண்ணம் உருவாகியது.

ஜெ

கடல் வாங்க தொடர்புக்கு : contact@vishnupurampublications.com 

Phone : 9080283887

அஜிதன் மேலை இசை அறிமுக வகுப்பு ஜூலை 25, 26 மற்றும் 27 ஏ.வி.மணிகண்டன் மேலைக்கலை வகுப்பு ஆகஸ்ட் 8,9 மற்றும் 10 programsvishnupuram@gmail.com

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2025 11:35

குமாரசெல்வா

குமாரசெல்வா, விளவங்கோட்டுத் தமிழையும் அங்கு வாழும் மக்களின் யதார்த்த சூழலையும் தனது புனைவுகளில் காட்சிப்படுத்தினார். குமரி மாவட்டத்தின் அடித்தள மற்றும் விளிம்புநிலை மக்களின் அவல வாழ்க்கையை அவர்களது மொழியிலேயே புனைவாக்கினார். குமார செல்வாவின் ‘கய்தமுள்’ கவிதைத் தொகுப்பு, நவீன இலக்கியத்தில், வட்டார எழுத்திலான கவிதைகளை உள்ளடக்கிய முதன்மை நூலாக முன் வைக்கப்படுகிறது. குமரி வட்டாரக் கவிதையுலகில் புதிய தலைமுறையை உருவாக்கிய முன்னோடியாக குமார செல்வா அறியப்படுகிறார்

குமாரசெல்வா குமாரசெல்வா குமாரசெல்வா – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2025 11:33

கவிதைகள் இதழ் ஜூலை

அன்புள்ள ஜெ,

ஜூலை மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் ரீல்கவின் டுயினோ எலஜிக்கள் கவிதை தொகுப்பை பற்றி ‘ரீல்க  டுயினோ’ என்ற கட்டுரையை சைதன்யா எழுதியுள்ளார். கமலதேவி, போகன் சங்கர் கவிதை ‘உலராத கண்ணீர்‘ குறித்து வாசிப்பனுபவம் எழுதியுள்ளார். தேவதேவனின் கவிதையின் மதம் கட்டுரை தொகுப்பின் ஒரு பகுதியான ‘மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. ‘காதலெனும் துறவு‘ என்னும் தலைப்பில் சக்திவேல் எழுதிய கட்டுரையும், ‘வாழ்வைத் திருடும் திருடர்கள்‘ என்னும் தலைப்பில் மதாரஂ எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

https://www.kavithaigal.in/

நன்றி

ஆசிரியர் குழு

(மணவாளன், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2025 11:32

நம் குழந்தைகளின் அகவுலகம்

வகுப்பறைக்கல்வி உருவாக்கும் நெருக்கடியினால் மாணவர்கள் எதிரழுத்தத்தை அடைந்து இன்று மின்னணு விளையாட்டுகளையும் சமூக வலைதளத்தொடர்புகளையும் அடைகிறார்கள். அதன் விளைவாக போட்டித் தேர்வுகளுக்கான தகுதிகளிலிருந்தே தவறிவிடுகிறார்கள். ஒரு நீர்த்துளி பெரும்பாலை நிலத்தில் விழுவது போல ஒரு குழந்தை இன்றைய சமூக வலைத்தள சூழலில் மின்னணு விளையாட்டுகளின் சூழலில் சென்று விழுகிறது.

நம் குழந்தைகளின் அகவுலகம்

I listened to your speech in English; it was ok. You have to develop your pronunciation. There are many online classes available to help improve your pronunciation. Herewith I send some suggestions for your pronunciation development.

Our master’s voice
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2025 11:30

July 17, 2025

ஆல்ப்ஸ் மலைக்குளிரில் தத்துவம்

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஷர்மிளா முழுமையறிவு நிகழ்ச்சிகளுக்கு ஆஸ்திரியாவில் இருந்தே வந்துகொண்டிருந்தார். ஒருமுறை ஆஸ்திரியாவில் ஒரு விஷ்ணுபுரம் கிளை அமைத்தாலென்ன என்று என்னிடம் கேட்டார். அதை ஐரோப்பியக் கிளையாக அமைக்கலாம் என்று சொன்னேன். அதன் நடைமுறைகளைப் பற்றி ஆஸ்டின் சௌந்தரிடம் பேசும்படிக் கோரினேன். அதன்படி முதலில் ஒரு இணையக்குழுமம் தொடங்கப்பட்டது. பின் அது விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் (ஐரோப்பா) கிளையாக ஆக்கப்பட்டது.

அதன் சார்பில் ஒரு இலக்கிய- தத்துவ முகாம் இந்த ஆண்டில் திட்டமிடப்பட்டது. முப்பதுபேர் கலந்துகொள்ளும் அளவுக்கு ஒரு நிகழ்வு. நான்குநாட்கள் ஒரு மலைத்தங்குமிடத்தில் கூடி விவாதிப்பது. அதாவது அமெரிக்க பூன் முகாமின் அதே வடிவிலான சந்திப்பு இது. என் தளத்தில் அறிவிப்பு வெளியாகியதும் முப்பதுபேர் பெயர் கொடுத்தனர். அறிவிப்பை நீக்கியபின்னரும் இருவர் சேர்ந்துகொண்டனர்.

நான் ஜூலை 4 கிளம்பி ஜூரிக் நகரில் வந்து விமானமிறங்கினேன். என்னுடன் அருண்மொழியும் சைதன்யாவும் வந்திருந்தார்கள். சூரிக்கில் எங்களை வெங்கட்டும் ராஜனும் வரவேற்றனர். ராஜனின் இல்லத்திற்குச் சென்று அங்கே ஐந்து நாட்கள் தங்கியிருந்தோம். அவை தனியாக எழுதவேண்டிய நாட்கள். ஒன்பதாம்தேதி காலை சூரிக்கில் இருந்து கிளம்பி ரயிலில் சால்ஸ்பெர்க் வந்து அங்கிருந்து மிட்டர்ஸில் என்னும் மலைத்தங்குமிடத்தை அடைந்தோம்.

ஐரோப்பாவுக்கு இது வசந்தகாலம். எங்கும் ஒளிரும் பசுமை, முகில்நிறைந்த வானத்தின்கீழே பசுமையலைகளாக மலையடுக்குகள், நீலச்சுடர்போல நெளிந்தோடும் ஓடைகள், தெளிந்த நீர் பெருகிச்செல்லும் ஆறுகள். அவ்வப்போது மழையும், உடனே கண்களை நிறைக்கும் வெள்ளி வெயில்பெருக்கும். இயற்கையழகு என்று சாதாரணமாகச் சொல்லப்படுவது அல்ல, ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு கணத்திலும் இயற்கையின் பேரழகு மட்டுமே நிறைந்திருக்கும் நிலம் எங்களைச் சூழ்ந்திருந்தது.

அதிலும் சுவிட்ஸர்லாந்து எல்லா பக்கமும், எல்லா காட்சிக்கோணங்களிலும் அழகு. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ஒருக்கி அழகுசெய்து வைத்திருப்பதுபோல. எல்லா வீடுகளும், தெருக்களும், சோலைகளும், புல்வெளிகளும் அப்போது வரையப்பட்ட இம்பிரஷனிஸ ஓவியங்கள் போல இருந்தன. சிலசமயம் விந்தையான ஒரு கனவுக்குள் மிதந்து சென்றுகொண்டே இருப்பதுபோலிருந்தது.

சூரிக்கில் இருந்து புடாபெஸ்ட் செல்லும் ரயிலில் ஒன்பதாம்தேதி பயணம் செய்தோம். எட்டாம் தேதி இரவு அரங்கசாமி வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டார். நண்பர் ராஜனும், வெங்கட்டும் உடனிருந்தனர். அந்த ரயிலின் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே இருந்தேன். முதலில் புகைப்படம் எடுக்க கை பரபரக்கும். அதன்பின் எத்தனை எடுப்பது, எதைத்தான் எடுப்பது என்னும் திகட்டல் உருவாகி கண் மட்டுமாக அமர்ந்திருக்கநேர்ந்தது.

 

மாலையிலேயே மிட்டர்சில் வந்துவிட்டோம். அது ஒரு மலைச்சிற்றூர். பனிச்சறுக்குக்குப் புகழ்பெற்றது. பனிக்காலத்தில் அங்கே பல்லாயிரம்பேர் வந்து தங்கி விடுமுறையைக் கொண்டாடுவார்கள். நகர் முழுக்க அவர்களுக்கான மாளிகைகள்தான். எல்லாமே ஆஸ்திரியாவின் மரபான கட்டிடக்கலையை வெளிப்படுத்துபவை, பல கட்டிடங்கள் நூறாண்டுகாலத்திற்குமேல் தொன்மையானவை. ஒவ்வொன்றையும் சாளரங்கள் தோறும் மலர்ச்செடிகளை வைத்து அலங்கரித்திருந்தனர்.

வசந்தகாலம் ஆதலால் பெரிய கூட்டம் இல்லை. நாங்கள் தங்கியிருந்த விடுதி கொஞ்சம் ஆடம்பரமானது. வெந்நீர்- குளிர்நீர் நீச்சல்குளங்கள், ஸ்பாக்கள், உணவுக்கூடங்கள், ஓய்விடங்கள் என விடுமுறைக் கொண்டாட்டத்திற்கான எல்லா வசதிகளும் கொண்டது. அங்கே முப்பதுபேர் அமர்ந்து தத்துவம் பயில்கிறார்கள் என்றால் அந்த விடுதிக்காரர்கள் திகைத்திருப்பார்கள்.

ஜூலை பத்தாம் தேதி காலை 6 மணிக்கு (இந்திய நேரம் காலை 930) நான் குருபூர்ணிமா இணையச்சந்திப்பை நடத்தினேன். நூறுபேர் கலந்துகொண்டனர். வெண்முரசு, காவியம் நாவல்கள் பற்றிய கலந்துரையாடல். (உரையாடல் யூடியூப் இணைப்பு)

காலை ஒன்பதரை மணிக்கு இலக்கியச் சந்திப்பு தொடங்கியது. நான் இலக்கிய அரங்குகள் வழியாக இலக்கியம் பயில்வதைப் பற்றி, அந்த அரங்கின் நோக்கம் பற்றி ஒரு சுருக்கமான அறிமுக உரை ஆற்றினேன். இந்நிலத்தில் இப்படி ஒரு தொடக்கம் நிகழ்வது மெய்யாகவே என்னை உள எழுச்சி கொள்ளச் செய்திருந்தது.

முதல் அரங்கு   எழுத்தாளர் ரா. கிரிதரன் அறிவியல் புனைகதைகளைப்பற்றி. ஒன்றரை மணிநேரம் காணொளியுடன் அந்த உரையை நடத்தினார். அறிவியல்புனைகதைகளில் கறாரான அறிவியல் அம்சம் கொண்டவை முதல் மென்மையான அறிவியலம்சமும் மிகைக்கற்பனையும் கொண்டவை வரை பல்வேறு வகைமாதிரிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி அவற்றின் சாத்தியக்கூறுகளை விவரித்தார். முதல்வகைக்கு ஐசக் அஸிமோவ் என்றால் இரண்டாம் வகைக்கு உர்சுலா லெ க்வின் ஆகியோரை உதாரணம் காட்டலாம்.

தொடர்ந்து விவாதம் நிகழ்ந்தது. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய அறிவியல்கதைகளை தொட்டுக்கொண்டு விவாதம் விரிந்தது. பல சந்தர்ப்பங்களில் அறிவியல்புனைவுகள் உருவாக்கிய புதிய சாத்தியங்களை அறிவியல் தொடர்ந்து வந்து கண்டெடுத்துள்ளது. அறிவியல்புனைவு அறிவியல் அல்ல, ஆனால் அறிவியலின் சாத்தியங்களில் இருந்து முன்செல்லும்போதே அதற்கு அறிவியல்புனைகதை என்னும் இடம் அமைகிறது.

மதியம் சைதன்யா இரண்டு ஐரோப்பியக் கவிஞர்களை முன்வைத்து கவிதை பற்றிய ஓர் உரையை நிகழ்த்தினார். பிரெஞ்சுக் கவிஞர் பாதலேர், ஜெர்மானியக் கவிஞர் ரில்கே.நண்பர் ஆண்டனி ரில்கேயை ஜெர்மானிய மொழியில் வாசித்திருந்தார். பிரான்ஸில் இருந்து வந்திருந்த பிரசன்னா பாதலேரை பிரெஞ்சில் வாசித்திருந்தார். சைதன்யா அவர்களை ஆங்கிலம் வழியாக அறிந்திருந்தார்.

ரில்கே, பாதலேர் இருவரின் கவிதைகள் பெரும் கனவுகள், கற்பனாவாதம் ஆகியவற்றாலான முந்தைய ஐரோப்பிய யுகத்தின் மீதான எதிர்நிலைகளாக எப்படி தங்கள் அழகியலைக் கட்டிக்கொண்டிருக்கின்றன என்றும், கற்பனாவாதக் கவிதைகளின் ஒருங்கிணைவுள்ள வடிவத்திற்கு எதிராக சிதைவுற்ற மொழிவெளிப்பாட்டை அவை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன என்றும் சைதன்யா பேசினார். அவை உடைந்த துண்டுகளாக தோன்றினாலும் உணர்ச்சிகரமான உள்ளிணைப்பும் கொண்டிருப்பதைச் சொன்னார். தொடர்ந்து விவாதம் நிகழ்ந்தது.

மாலையில் நான் விவேகானந்தர் பற்றி ஓர் உரை ஆற்றினேன். ஒரு மணிநேரம் திட்டமிட்டிருந்த உரை ஒன்றரை மணிநேரம் நீடித்தது. குருபூர்ணிமா நாள் ஆகையால் விவேகானந்தரைப் பற்றிப் பேசலாம் என்று தோன்றியது. உண்மையில் அது விவேகானந்தரில் தொடங்கி பல்வேறு ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகூர்தலாக அமைந்தது. நாராயணகுரு, நித்ய சைதன்ய யதி, வள்ளலார் அனைவருமே உரையில் வந்துசென்றார்கள்.

இங்கே இரவு ஒன்பது மணிக்குத்தான் இருட்டு வருகிறது. காலை ஐந்து மணிக்கே நல்ல வெளிச்சம் பிறந்துவிடுகிறது. ஆகவே ஆறரை மணிக்குப் பின் ஒரு நீண்ட நடை சென்று வந்தோம். இங்குள்ளவர்களுக்கு குளிர் இல்லை, ஆனால் நமக்கு கொஞ்சம் குளிர். ஒரு மெல்லிய ஜாக்கெட் தேவைப்படும் அளவுக்கு. மிட்டர்சில் ஊரில் பெரிய நடமாட்டமேதும் இல்லை. ஆகவே பேசியபடி நடைசெல்வது இனியதாக இருந்தது.

ஜூலை 11 ஆம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு தத்துவ அறிமுக வகுப்பு தொடங்கியது. வெள்ளிமலையிலும் அமெரிக்காவில் பூன்முகாமிலும் நடத்திய அதே வகுப்புதான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதேனும் கொஞ்சம் புதியதாகச் சேரும். கதைகள், உவமைகள், தத்துவவிளக்கங்கள். அது அந்த தத்துவம் வழியாக நான் செல்லும் பயணத்தின் சான்று. எனக்குள் அவை விரிந்துகொண்டிருப்பதன் விளைவு. கற்பிப்பதே கற்பதற்குச் சிறந்த வழி என்று நித்யா சொல்வதுண்டு.

ஜூலை 12 ஆம் தேதி இரவும் 10 மணி வரை தொடர்ச்சியாகத் தத்துவ வகுப்பு நிகழ்ந்தது. 13 ஆம் தேதி காலையில் 11 மணிக்கு விடுதியை காலிசெய்யவேண்டும். காலையுணவு உண்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக விடைபெற்றோம். இன்னொரு சந்திப்பு மீண்டும் உடனேயே இங்கே நிகழவேண்டும் என முடிவு செய்தோம். தத்துவக் கல்வி தொடரவேண்டும் என்றும்.

இந்திய தத்துவத்தை மேலைச்சூழலில் ஏன் கற்பிக்கவேண்டும்? இந்தியசிந்தனை சார்ந்தே இங்குள்ள இந்தியர்கள் உலகைப் பார்க்கிறார்கள். அவர்கள் பல தலைமுறைகளாக இங்கே வாழ்ந்தாலும் இந்திய அடையாளத்தை இழக்கப்போவதில்லை. இழந்தால் அது அடையாளமிழப்புதான். அந்த சிந்தனைக்கோணத்தை வெறுமே நம்பிக்கைகளாக, மரபுகளாக கொண்டிருக்காமல் தர்க்கபூர்வமாகவும் வரலாற்றுநோக்கிலும் அறிந்திருப்பதற்கு தத்துவக் கல்வி அவசியம். புறவயமான தத்துவம் அவர்கள் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஐயங்களையும், குழப்பங்களையும் சட்டென்று தெளியச்செய்வதை அவர்களே உணரமுடியும்.

தத்துவம் என்னும்போது அறவுரைகள், ஆன்மிகவுரைகளை நான் உத்தேசிக்கவில்லை. இந்தியச் சிந்தனைமுறையை, அதன் உட்பிரிவுகளை, அதன் அடிப்படைக் கொள்கைகளை அறிமுகம் செய்கிறேன். அதைப் பயில்வதற்கான வழிமுறைகளை, அதையொட்டி சுயமாகச் சிந்திப்பதற்கான பாதையை அளிக்கிறேன். மெய்யான தத்துவக் கல்வி என்பது ‘தெரிந்துகொள்ளும்’ கல்வி அல்ல ‘சிந்தனைக்கான பயிற்சி’தான்.

தமிழ்ச்சூழலில் இதற்கான இடம் மிகமிக குறைவே. பொதுவாகவே நாம் மிக உலகியல்சார்ந்தவர்கள். இப்போதுதான் ஓரளவு பொருளியல் வசதி வரத்தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க வாய்ப்புகள் தேடிச்சென்று, சிலவற்றை அடைந்து வருகிறோம். அந்த வெற்றிகளை எளிய சுகபோகங்களாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளோம். சமூகக் கௌரவங்களை திட்டமிடத் தொடங்கியுள்ளோம். நம் எண்ணமெல்லாம் அதுவே உள்ளது. அது இயல்புதான். நம்மைவிட இருநூறாண்டுகள் பொருளியல், கல்வி, பண்பாடு ஆகியவற்றில் முன்னணியிலுள்ள ஐரோப்பா, அமெரிக்காவுடன் நம்மை ஒப்பிடக்கூடாதுதான்.

ஆனால் மிகச்சிறுபான்மையினர் காலத்தில் சற்று முன்னரே பயணப்படுகிறார்கள். அவர்களுக்கு கலை, இலக்கியம், தத்துவம் தேவைப்படுகிறது. எளிய கேளிக்கைகளில் சலிப்பும், சில்லறை சமூக அந்தஸ்து சார்ந்த கவலைகளில் இளக்காரமும் உருவாகிறது. அவர்கள் கலையிலக்கியங்களைக் கற்க வாய்ப்பு அமையவேண்டும். அதற்கான ஒரு தொடக்கமே இம்முயற்சிகள். சாதாரணமாக தமிழ்ச்சங்க விழாக்களுக்கு நடிகர்களையோ பட்டிமன்றப்பேச்சாளர்களையோ ரசிக்க வரும் பெருங்கூட்டத்தில் ஆயிரத்தில் ஒருவரே இங்கே வருவார்கள். ஆனால் அவர்களே எதிர்காலத்திற்கான விதைகள்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.