Jeyamohan's Blog, page 57
August 7, 2025
எகிப்தில் ஒரு மனப்பதிவு
எங்கள் எகிப்துப் பயணத்தின்போது, அஸ்வான் நகரில் எடுக்கப்பட்ட காணொளி இது. எகிப்து ஒரு பொருளியல் வளர்ச்சியை அடைந்து மேலெழுந்து, மதவாதத்தால் வீழ்ந்து, மீண்டும் எழுந்துகொண்டிருக்கும் சித்திரத்தை அளிக்கும் உரை.
தமிழ்,இசை, நினைவுகள்
2023 முதல் ஆண்டுதோறும் தமிழிசை முன்னோடியான பெரியசாமி தூரன் நினைவாக நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் தமிழின் சிறந்த இளம் நாதஸ்வரக் கலைஞர்களை அறிமுகம் செய்து தனி இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். தற்செயலாகத்தான் இந்த எண்ணம் உருவாகியது. புகழ்பெற்ற தவில் இசைக்கலைஞரின் மகனான நண்பர் யோகேஸ்வரன் ஒரு நல்ல நாதஸ்வரக்கச்சேரி வைக்கலாம் என்னும் கருத்தைச் சொன்னார். அதையே தூரனின் பாடல்களால் ஆனதாக வைக்கலாமே என்னும் எண்ணம் தொடர்ந்து உருவானது. அப்படியே அதை விரிவாக்கிக்கொண்டே சென்றோம்.
முதல் ஆண்டு நிகழ்வு நாங்கள் எண்ணியதைவிட சிறப்பாக அமைந்தது. பங்கேற்பாளர்கள் அதை மிகச்சிறந்த அனுபவம் என்று சொன்னார்கள். நாஞ்சில் வந்து தழுவிக்கொண்டு பாராட்டினார். அத்துடன் அந்த நிகழ்விலேயே ஓர் அளவீட்டை உருவாக்கிவிட்டொம். நாங்கள் எங்கள் நிகழ்வுக்கு ஒரு நாதஸ்வரக் கலைஞரை அழைப்பதென்பது ஒரு கௌரவம், ஓர் ஏற்பு என்றாகியது. பல கலைஞர்கள் அடுத்த ஆண்டு யார் என பேச ஆரம்பித்தனர். நாதஸ்வர விமர்சகர் நண்பர் இனி நீங்கள் ‘எவரோ ஒருவரை’ அழைக்க முடியாது, உங்கள் அளவீடுகள் தெளிவாக இருக்கவேண்டும், இது ஒரு முக்கியமான அங்கீகாரமாக ஆகிவிட்டது என்றார்.
அதன்பின் எல்லா ஆண்டும் நாதஸ்வரக் கலைஞர்களை தெளிவாக விவாதித்துத்தான் தேர்வுசெய்கிறோம். ஓர் ஆண்டு நாங்கள் தேர்வுசெய்யும் கலைஞர் எங்களுடைய சிபாரிசு. அவர்கள்தான் இப்போது வாசிக்கும் கலைஞர்களில் மிகச்சிறந்தவர்கள். அதை தெரிவுசெய்ய இக்கலையில் ஊறியவர்களின் சிறு குழு ஒன்றும் உண்டு. பொதுவாக கோவை பகுதிகளில் திருமணத்திற்கு கோடிகளை இறைப்பார்கள், சகிக்க முடியாத நாதஸ்வர ஓலமும் இருக்கும். ஏனென்றால் எவரை அழைப்பது என்று தெரிந்திருக்காது, திருமண ஏற்பாட்டாளர்களே அதையும் செய்துவிடுவார்கள். அவர்கள் நல்ல நாதஸ்வரக்கலைஞர்களாக இருப்பதில்லை. எங்களுடைய இந்தப் பரிந்துரை ஒரு முதல்தர மங்கல நிகழ்வுக்கு அழைக்கப்படவேண்டிய கலைஞர்கள் எவர் என்பதற்காகவும்தான்.
இந்தக் கலைஞர்கள் கூடுமானவரை இளையதலைமுறையினராக இருக்கவேண்டும் என எண்ணியிருக்கிறோம். பொதுவான பார்வையில் நாதஸ்வரக் கலைஞர்களில் மேதைகள் இல்லை என்று தோன்றும், ஏனென்றால் நாம் கூர்ந்து கவனிப்பதில்லை. ஊடகங்களும் கவனிப்பதில்லை. ஆனால் உண்மையில் நாதஸ்வரம் தமிழிசையின் மைய வாத்தியம். அது எப்படியும் அழியாது நீடிக்கும். அதில் மேதைகள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். நாங்கள் தேடிக்கொண்டிருப்பது அவர்களையே.
முதல் ஆண்டு வாசித்த குழுவினர்.
திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்அவர்களின் தரவுகளை தமிழ்விக்கியில் விரிவாகப் பார்க்கலாம். தொடர்பு எண்களுடன்.
2024 ஆம் ஆண்டுக்கான இசைநிகழ்வில் வாசித்த இசைக்கலைஞர்கள்
முனைவர் சின்னமனூர் ஏ.விஜய் கார்த்திகேயன் இடும்பாவனம் வே.பிரகாஷ் இளையராஜா ” தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் கோவில்சீயாத்தமங்கை டி.ஏ.எஸ். குமரகுருதூரனும் துவஜாவந்தியும்- யோகேஸ்வரன் ராமநாதன் தூரன் விழா இசை நிகழ்வு 2023 இருகரம் கூப்பி கேட்ட இசை அழுகையர் தொழுகையர் துவள்கையர் ஒருபால் மூன்று இனிமைகள் தமிழ்விக்கி தூரன்விழா இசைநிகழ்வு 2024 தமிழொடு இசைப்பாடல் மறந்தறியேன்
விக்ரமாதித்யன்
விக்ரமாதித்யன்நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான நவீனக் கவிஞர்களில் ஒருவர். உத்திராடன் எனும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். கவிதை, புனைவிலக்கியம் ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். இலக்கிய உலகில் அண்ணாச்சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர்.
விக்ரமாதித்யன்
விக்ரமாதித்யன் – தமிழ் விக்கி
ஓஷோ: மரபும் மீறலும்-12
இந்திய சிந்தனை முறைகளில் இந்து மரபுடன் ஓஷோ எங்கெல்லாம் முரண்படுகிறார், எங்கெல்லாம் உடன்படுகிறார், எவற்றை முன்வைக்கிறார் என்று பார்த்தோம். இந்திய சிந்தனையில் முதன்மையிடம்பெறும் தத்துவமரபான பௌத்தத்துடன் ஓஷோவுக்கான தொடர்பு என்ன?
பௌத்தம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தலையை மொட்டையடித்து காவி உடுத்தியிருக்கும் பிக்ஷு. எனவே அதற்கும் ஓஷோவுக்கும் ஒரு தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் பௌத்தம் பற்றிய ஒரு சித்திரத்தை உண்டாக்கிக்கொண்டால் ஓஷோ ஏற்கக்கூடியதும் மறுக்கக்கூடியதுமான நான்கு வித பௌத்தங்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
ஆசாரவாத பௌத்தம்
ஐரோப்பிய ஆய்வாளர்கள் இங்கு வருவதற்கு முன்பிருந்த பௌத்தம் ஆசாரவாத பௌத்தம், அல்லது மரபார்ந்த பௌத்தம். பௌத்தத்தில் முறையே புத்தம், தர்மம், சங்கம் என மூன்று விஷயங்கள் உள்ளன. அதைத் தலைகீழாகப் போட்டால் ஆசாரவாத பௌத்தம் என்று சொல்வார்கள். சங்கம், புத்தம், தர்மம் என்று. சங்கத்துக்காகவே பௌத்தமே. தர்மம் இருந்தால் இருக்கட்டும் இல்லாவிட்டால் பரவாயில்லை என்பதே ஆசாரவாத பௌத்தம்.
ஆசாரவாத பௌத்தம் ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொன்றாக உள்ளது. இலங்கை, பர்மா, தாய்லாந்து, சீனா என ஆசாரவாத பௌத்தத்தின் முகங்கள் பல. அவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏராளம். ஆனால் அடிப்படையில் அவையெல்லாமே பௌத்தத்தின் மெய்த்தரிசனங்களை அன்றாட அனுஷ்டானங்களாக ஆக்கிக்கொள்பவை, அமைப்புகளாக தங்களை வரையறைசெய்துகொண்டு தங்களையும் பிறரையும் கட்டுப்படுத்த முயல்பவை.
இந்த ஆசாரவாத பௌத்தம் ஓஷோவுக்கு முற்றிலும் முரணானது. அவருடைய மொத்த உரையிலும் இந்த ஆசாரவாத பௌத்தத்திற்கு எதிரான நக்கல்கள், கிண்டல்கள் உண்டு. அவர் இதை காயடிக்கப்பட்ட பௌத்தம் என்று விமர்சிக்கிறார்.
சீர்திருத்த பௌத்தம்
இன்று நாம் பௌத்தம் என்று சொல்லக்கூடியது ஐரோப்பிய ஆய்வாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் அவர்கள் இங்கு வரும்போது கீழைநாடுகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகை பௌத்தம் இருப்பதை பார்த்தனர். அவற்றுக்கிடையே ஒரு ஒற்றுமையை கண்டடைய முயன்றனர். அத்தகைய பௌத்தங்களுக்கு இடையே இருக்கும் பொதுவான நூல்களை மொழிபெயர்த்து ஒன்றாக சேர்த்து ஒரு பௌத்தத்தை கட்டமைத்தனர். அவ்வாறு அவர்கள் கட்டமைக்கும்போது அதில் இருக்கும் பொதுத்தன்மையை பௌத்தர்கள் கண்டுகொண்டனர். அதுவே உலகளாவ பௌத்தம் என்னும் கருத்துரு உருவாக வழியமைத்தது.
கயாவில் இருந்த இடிந்த மகாபோதி ஆலயத்தை அனைத்து பௌத்த தரப்பினரும் சேர்ந்து கட்டியெழுப்புவது என்பது பௌத்தத்தை அவர்களே கட்டியெழுப்பிக் கொள்வதுதான். பௌத்தம் ஒற்றை மதமாக அறியப்பட்டது அதற்குப் பிறகுதான். அதற்கு முன் இலங்கை பௌத்தத்திற்கும் திபெத்திய பௌத்தத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அப்படி வேறு பௌத்தமரபுகள் இருப்பதே அவர்கள் எவருக்கும் தெரியாது. பல்வேறு பகுதிகளில் இருந்த பௌத்த பிரிவினருக்கு இடையே பொதுத்தன்மைகள் உருவாகி வந்தது நவீன காலகட்டத்தில்தான்.
அதில் ரைஸ் டேவிட்ஸ் (Thomas William Rhys Davids) என்ற ஆய்வாளர் முக்கியமானவர். பௌத்த ஆய்வுகளை செய்து அவற்றையெல்லாம் ஒருவாறு தொகுத்தளித்தவர் இவரே. பிரம்மஞான சபையை சேர்ந்த கர்னல் ஆல்காட் (Henry Steel Olcott) ஒரு பௌத்த ஆய்வாளர். பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று இவரை சொல்லலாம். இன்று நாம் பார்க்கக்கூடிய பௌத்தத்தின் முகத்தை உருவாக்கியவர் பால் காரஸ் (Paul Carus) என்பவர். இவர் எழுதிய The Gospel of Buddha என்ற நூல்தான் மேலைநாடுகள் முழுக்க பாடபுத்தகமாக இருந்தது. பௌத்தத்தை பற்றிய உலகளாவிய புரிதலை உருவாக்கியது அந்த புத்தகம்தான். ஆனால் பௌத்தத்தை கிறிஸ்தவ அச்சில் இட்டு வார்த்தெடுத்த ஒரு புத்தகம்.
ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட இந்த பௌத்தத்தை செயலூக்கம் கொண்ட பௌத்தம் எனலாம். அதாவது மரபார்ந்த பௌத்தத்தில் இருக்கக்கூடிய மூடநம்பிக்கைகள், பேதங்களை களைந்து ஒருவித சீர்திருத்த பௌத்தத்தை உருவாக்க அவர்கள் முயன்றனர். கர்னல் ஆல்காட்டின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அநகாரிக தர்மபாலா (Anagarika Dharmapala) என்பவர் இலங்கையில் இருந்து உருவாகி வந்தார். அவர் மகாபோதி ஆலயத்தை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றியவர். அநகாரிக என்றால் நகரத்தில் எங்கும் தங்காமல் அலைந்து திரியக்கூடியவர் என்று பொருள். ஆனால் அவர் திருமணமானவர், அதற்குரிய ஆசாரங்களை கடைபிடித்தவர்.
இந்த சீர்திருத்த பௌத்தம் (Activist Buddhism) நம்பிக்கைகளை களைந்த தர்க்கபூர்வமான பௌத்தம். அந்த பௌத்தத்தின் செல்வாக்குதான் அயோத்திதாசரில் வெளிப்படுகிறது. அதன் இன்னொரு வெளிப்பாடுதான் அம்பேத்கரின் நவயான பௌத்தம். ஆனால் இவ்வகையான சீர்திருத்த பௌத்தமும் ஓஷோவுக்கு ஏற்புடையதல்ல. இந்த சீர்திருத்த பௌத்தம் ஆன்மீகத்தன்மையை இழந்து அரசியல்மயப்படுத்தப்பட்ட பௌத்தம். அதாவது பௌத்தம் எதற்காக இருக்கிறதோ அந்த அம்சத்தையே களைந்துவிட்டு எஞ்சிய பௌத்தம் அது. பௌத்தம் எதை சொல்கிறதோ அவை அனைத்தையும் அதில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் சீர்திருத்த பௌத்தம் வந்துவிடும் என்கிறார் ஓஷோ.
ஜென் பௌத்தம்
ஜென் பௌத்தம் ஓஷோவுக்கு ஏற்புடையது. இந்திய சூழலில் ஜென் பௌத்தத்திற்கு இவ்வளவு பெரிய ஏற்பை உருவாக்கியவர் ஓஷோதான். ‘ஒருகூடை ஜென்’ என்ற புத்தகம் தமிழில் பலராலும் படிக்கப்பட்ட ஒன்று. ஓஷோயிஸ்டுகள் பலரும் ஓரிரண்டு ஜென் கவிதைகளை எழுதிப்பார்த்திருப்பார்கள். ஜென் பௌத்தத்தில் ஆசாரம் கிடையாது. அது தூய தத்துவார்த்தமான பௌத்தம். மெய்ஞானத் தரிசனம் கொண்டது. அதேவேளை, தத்துவத்திற்கான தர்க்க அமைப்பு அதனிடம் இல்லை. அந்த தரிசனத்தைக் கவிதைகளாக, படிமங்களாக முன்வைப்பது. ஆகவே இலக்கியம், கலை ஆகியவற்றில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதன் சாராம்சம் என்பது மறைஞானப் பயிற்சிதான்.
ஜென் பௌத்தத்தில் உள்ள ‘ஒருகை ஓசை’ என்ற உவமை ஓஷோவுக்கு மிகவும் பிடித்தது. ஒருகை ஓசையெழுப்புமா என்றால், இந்தப்பக்கம் இருந்து ஒரு நுண்மையான கை சென்று அதை தடுத்தால் ஓசையெழுப்பும். அது உங்களுக்கு மட்டும்தான் கேட்கும். அந்த ஓசையை தியானத்தால் அடைவதுதான் ஜென் பௌத்த நிலை. ஓஷோ ஜென் பௌத்தம் பற்றி பல கோணங்களில் பேசியிருகிறார். ஜென் படிமங்கள்மேல் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஜென் மறைஞானப் பயிற்சிகளையும் தன் மரபுக்குள் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
திபெத்திய மறைஞான பௌத்தம்
திபெத்திய பௌத்தம் என்பது இந்தியாவில் இருந்த வஜ்ராயன பௌத்த மரபு பத்மசம்பவரால் திபெத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, திபெத்தில் இருந்த மந்திரவாதச் சடங்குமதமாகிய பான் மதத்துடன் இணைக்கப்பட்டு உருவாகி வந்தது. அது வஜ்ர மார்க்கம், அதாவது இடிமின்னலின் பாதை. வஜ்ராயனம் இந்தியாவின் தாந்த்ரீக மரபில் இருந்து உருவாகி வந்தது. தாந்த்ரீக பௌத்தம் என்றே அது சொல்லப்படுகிறது. ஓஷோ தாந்த்ரீகத்தை தன் வழிமுறைகளில் முதன்மையாக கொண்டவர், ஆகவே அவர் திபெத்திய வஜ்ராயன பௌத்த மரபை தனக்கு அணுக்கமானதாக எண்ணினார். அதன் பல வழிமுறைகளை தன் மரபுக்குள் இணைத்துக்கொண்டார்.
ஓஷோ திபெத்தியச் சாவுநூல் என்னும் மறைஞான நூலுக்கு ஆற்றிய விளக்கவுரை குறிப்பிடத்தக்கது. ஓஷோ அந்த தாந்த்ரீகமுறைகளை சடங்குகளாக நம்பிக்கைசார்ந்து ஏற்றுக்கொள்ளவில்லை. அவை அகம்சார்ந்த குறியீட்டுச் செயல்பாடுகள், நவீனமுறையில் அணுகவேண்டியவை என்று எண்ணினார். அவற்றுக்கு நவீன விளக்கம் அளிக்க முயன்றார்.
5 சமணம்
ஓஷோ பிறப்பால் ஒரு சமணர். அவரது இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின். அந்த ஒரு காரணத்தினாலேயே இந்த உலகில் அவருக்கு பிடிக்காத மதம் அதுதான் எனலாம். ஓஷோவின் முன்னால் சிவப்பு துணியை காட்டுவது போலத்தான் சமணத்தைப் பற்றிப் பேசுவது . ஒட்டுமொத்த சமணத்திலுமே ஓஷோவுக்கு உவப்பான எதுவுமில்லை என்றுகூட சொல்லலாம். நிர்வாணமாக இருப்பது ஓஷோவுக்கு ஏற்புடையதா என்று கேட்டால், அவர் நிர்வாணத்தை ஆதரிக்கக்கூடியவர் அல்ல. அப்படி ஆதரித்தாலும் இளம் பெண்கள் நிர்வாணமாக இருக்கலாம், மற்றவர்கள் இருக்கத்தேவையில்லை என்றுதான் அவர் சொல்லக்கூடும்.
சமணத்தை பற்றி ஓஷோவின் சொற்களால் சொல்லவேண்டுமென்றால், மனிதனை மகிழ்ச்சியில்லாமல் ஆக்குவது எப்படியென்று, சுவையற்ற உணவு வழியாக, கடினமாக அமரும் முறைகள் வழியாக, தவறான அன்றாட வழக்கங்கள் வழியாக இரண்டாயிரம் ஆண்டுகளாக சோதனை செய்து உருவாக்கியெடுக்கப்பட்ட மதம் சமணம் என்கிறார். இப்படிப்பட்ட ஒரு கோடரி சமண மதத்திற்குள் அவர்களுக்கே எதிராக உருவாகி வந்தது என்பது அவர்களின் நீண்டகால ஊழின் விளைவாகத்தான் இருக்கும். ஓஷோ ஊழில் நம்பிக்கை கொண்டவர். ஆனால் சமணர்களை நாம் நம்பமுடியாது. இன்னும் ஐநூறாண்டுகளுக்குப்பின் இருபத்தைந்தாவது தீர்த்தங்கரராக ஓஷோ அமர்ந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. இந்த இயந்திரம் அப்படியே ஓடிவந்து சேர்ந்துவிடும்.
சமணத்திலுள்ள ஊனுண்ணாமை ஓஷோவுக்கு உவப்பானதே. அவர் மாமிச உணவை நிராகரித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவரை நம்ப முடியாது. வேறு எங்காவது மாமிச உணவே சிறந்தது என்றுகூடச் சொல்லியிருக்க வாய்ப்புண்டு.
ஆனால் சமணத்தில் உள்ள ஒரு விஷயம் ஓஷோவுக்கு உவப்பானதாக இருக்கலாம். சமணத்தில் சியாத்-வாதம் என்று ஒரு தர்க்கமுறை அல்லது தத்துவக் கொள்கை உள்ளது. ‘ஆனால்-வாதம்’ என்று அதை சொல்லலாம். எல்லா சாத்தியங்களையும் சொல்லிவிட்ட பின்பும் ஒரு ஆனால் மீதமிருக்க வேண்டும். ‘இந்த மலை இங்கு இருக்கிறது. ஆனால்…’ என்பது சமணத்தின் முக்கியமான ஒரு கண்ணோட்டம். எல்லா உண்மைகளும் ஒரு ‘ஆனால்’ஐ சேர்த்துக்கொண்டுதான் சொல்லப்படவேண்டும். முழுமையான ஒன்று இல்லை என்பது அவர்களின் சிந்தனை (Syādvāda – Theory of Non Absolutism). இந்த சியாத்-வாதம் ஒருவேளை ஓஷோவுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் இதுபற்றி எங்கேனும் சொல்லியிருக்கிறாரா என்று புரட்டிப்பார்ப்பது கடினம். எழுநூற்றி அறுபது நூல்களில் எங்கேனும் இருக்க வாய்ப்புண்டு. அதுபற்றி ஓஷோ ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும்.
மேலும், பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் பொதுவாக சர்வாஸ்திவாதம் (Sarvāstivāda – The theory of all that exists) என்ற கருதுகோள் உள்ளது. வேதாந்திகள் எதுவும் இல்லை என்ற மாயாவாதத்தை சொல்வர் (Māyāvāda – The doctrine of illusion). சர்வாஸ்திவாதத்தை ‘அனைத்திருப்புவாதம்’ என்று சொல்லலாம். பொருள்கள் அனைத்துமே உண்மையில் இருக்கின்றன, அவற்றின் பருவடிவ இருப்பு மறுக்கமுடியாது என்று சொலும் ஒரு தர்க்கமுறை அவர்களுக்கு உள்ளது. அது ஓஷோவுக்கு உடன்பாடானதாக இருந்திருக்கலாம்.
6 பிறமரபுகள்
இந்திய ஞானமரபுக்குள் ஓஷோவை வைக்கும் பார்வையே இதுவரை நான் முன்வைத்தது. ஏனென்றால் ஓஷோவின் இடம் அதற்குள்தான். அவர் ‘மதமற்றவர்’ என்று சொல்லி இந்திய மரபுகளில் இருந்து அவரைப் பிரித்துப் பார்க்கும் பலர் அவர் தன்னை இந்திய மரபின் தாந்த்ரீகம், யோகம் முதல் பௌத்தம் வரையிலான மரபுகளுடனேயே பிணைத்துக்கொண்டார் என்பதையும்; பிறமதங்களை வெளியில் இருந்தே பார்த்தார் என்பதையும் காண்பதில்லை. அவர் பிறமதங்களை எப்படி அணுகினார் என்பதைக் காணலாம்.
இஸ்லாம்
இஸ்லாமை பொறுத்தவரை, குரானை ஒரு இராணுவ பயிற்சி கையேடு என்றுதான் ஓஷோ கருதுகிறார். அதவாது அது ஒருவகையான இராணுவத்தை உருவாக்குவதற்கான பயிற்சிமுறை என்கிறார். இன்று நினைத்துப்பார்க்கும்போது ஓஷோ சரியான காலகட்டத்தில் பிறந்து பாதுகாப்பாக இறந்துபோனார் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இந்தியாவில் இன்று ஓஷோ இருந்திருந்தால் எல்லா தரப்பினரிடமும் அடிவாங்கக்கூடியவராக இருந்திருப்பார். இங்கு ஓஷோவை பற்றி பேசும்போது மிக கவனமாகவே பேசுகிறேன். ஆனால் ஓஷோ இவ்வாறு பேசியிருக்கவில்லை. அவர் மிகவும் கட்டுப்பாடில்லாமல்தான் பேசியிருக்கிறார். ஆனால் இஸ்லாமின் ஒரு பகுதி அவருக்கு உடன்பாடானதாக இருந்திருக்கிறது. அது சூஃபிசம்.
சூஃபிசத்திற்கு இஸ்லாமில் வேர் உண்டு. நபியின் குகைத்தோழர்கள் என்று சிலர் இருந்திருக்கிறார்கள். மையப்போக்கிற்கு வெளியே எப்போதும் சிலர் இருந்திருக்கிறார்கள். சூஃபிசம் இன்று இஸ்லாமிய மதத்தால் கடுமையாக தாக்கப்படக்கூடிய காலகட்டம். நான் எனது மனைவியுடன் நாகூர் தர்க்காவிற்கு சென்றேன். பத்துபேர் வழிமறித்து, ‘போகாதீங்க, அது சமாதி வழிபாடு. நீங்கள் வழிபடக்கூடாது’ என்றனர். ‘நாங்க இந்துக்கள்’ என்றேன். ‘சரி போங்க, அது உங்களுக்குத்தான்’ என்றனர். இன்று சூஃபிசத்திற்கு எதிராக மிகப்பெரும் பிரச்சாரம் நடக்கிறது. இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்துக்கள் தங்கள் மதத்தின் ஒரு பகுதியாக சூஃபிசத்தை எடுத்துக்கொள்ளவேண்டி வரும் என்று நினைக்கிறேன். அவர்கள் கைவிடும்போது நாம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே ஏராளமான தீர்த்தங்கரர்களுக்கு கிரீடம் வைத்து முனியாண்டி சாமியாக உட்கார வைத்திருக்கிறோம்.
அந்த சூஃபிசம் ஓஷோவுக்கு நெருக்கமானதாக உள்ளது. சூஃபி மரபில் இருப்பது ஒருவித கட்டற்ற தன்மை. நிறையக் கதைகளை உதாரணமாக சொல்லலாம். எங்கள் ஊரில் பீர் முகமது அப்பா என்ற ஒரு சூஃபி இருந்தார். அவர் ஐந்துவேளை தொழுகை செய்வது கிடையாது என்ற புகார் எழுந்தது. அப்போது மார்க்க பேரறிஞராகிய சதக்கத்துல்லா அப்பா காயல்பட்டினத்தில் இருந்து கிளம்பி இவரை தேடி வருகிறார். ‘நீங்கள் ஐந்துவேளை தொழுகை செய்வதில்லையா ?’ என்று கேட்கிறார். பீர்முகமது ‘இல்லையே, பாங்கு கிடைத்ததுமே தொழுகை செய்துவிடுகிறேனே’ என்கிறார். சரி பார்க்கலாம் என்று சதக்கத்துல்லா அங்கு உட்கார்ந்து கவனிக்கிறார். அப்போது பாங்கு ஒலி கேட்கிறது. பீர்முகமது தொழுகை செய்யாமல் நெசவு செய்துகொண்டிருக்கிறார். அதைக்கண்ட சதக்கத்துல்லா ‘நீங்கள் தொழுகை செய்யவில்லையே’ என்று கேட்கிறார். ‘எனக்கு பாங்கு சத்தம் கேட்கவில்லையே’ என்கிறார் பீர்முகமது.
சிறிதுநேரம் கழித்து ஒரு பசுமாடு கத்தும் சத்தம் கேட்டது. பாங்கு வந்துவிட்டது என்று பீர்முகமது தொழுகை செய்கிறார். ‘இது மாடு கத்தும் சத்தம்தானே’ என்கிறார் சதக்கத்துல்லா. பீர்முகமது அவரிடம் தனது கையை தொட்டுக்கொண்டிருக்கும்படி சொல்கிறார். சதக்கத்துல்லாவும் அவ்வாறே செய்கிறார். அடுத்தமுறை ஒரு நாய் குரைக்கும்போது இருவருக்குமே பாங்கு ஒலி கேட்கிறது.அப்போது சதக்கத்துல்லா பீர்முகமதை இறைஞானி என்று உணர்ந்து அவரை வலியுல்லா என்று அழைக்கிறார். அதன்பின் அவருக்கு தர்க்கா அமைகிறது. ஆகவே ஐந்துவேளை தொழுகைக்கு வெளியே இருப்பவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.
கோழிக்கோட்டில் ஒரு புகழ்பெற்ற சூஃபி இருந்தார். அவர் ஆடை அணியும் வழக்கமற்றவர். கோழிக்கோடு சந்தைப்பகுதியில் நிர்வாணமாகத்தான் அலைந்துகொண்டிருப்பார். யாரோ ஒருவர் அவருக்கு வேட்டி அளித்தார்கள். அவர் அந்த வேட்டியை கையில் எடுத்துக்கொண்டு சென்றார். ஒரு காவலர் அவரை பிடித்து ‘எங்கு செல்கிறாய்’ என்று விசாரித்தார். அவர் ‘எஜமான், ஆடை மாற்றுவதற்கு மறைவான இடம் தேடி செல்கிறேன்’ என்றார்.
ஒருநாள் அவர் கோழிக்கோடு அங்காடி முன்னால் துணியில்லாமல் நின்றுகொண்டிருந்தார். திடீரென்று அருகில் இருக்கும் ஒரு துணிக்கடைக்கு சென்று அவசரமாக ‘ஒரு துண்டு கொடு’ என்று கேட்டார். கடைக்காரர் ஒரு துண்டை எடுத்துக்கொடுத்தார். அதை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்து சாலையில் நின்றார். நாராயணகுருவும் அவருடைய மாணவர்களும் அவ்வழியாக சென்றார்கள். அவர்கள் கடந்து சென்றுவிட்டபின்பு மீண்டும் துண்டை அவிழ்த்துப்போட்டுவிட்டு சென்றார். ‘என்ன செய்கிறீர்கள்’ என்று அங்கிருந்தவர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘ஒரு மனுஷன் முன்னால் துணியில்லாம நிக்கக்கூடாதுல்ல’ என்றார்.
சூஃபிசத்தில் மீறல் வழியாக, நகைச்சுவை வழியாக தொடர்புறுத்தக்கூடிய ஒரு மரபு உள்ளது. அந்த மரபு ஓஷோவுக்கு மிக நெருக்கமானதாக உள்ளது. ஓஷோ ஜலாலுதீன் ரூமியை பற்றி எழுதியிருக்கிறார். ஓஷோ அவரை ஒரு சூஃபியாகத்தான் பார்க்கிறார். இந்திய சூஃபி இயக்கம் பற்றி ஓஷோ பேசியிருக்கிறார். இஸ்லாமில் ஓஷோவுக்கு உடன்பாடான அம்சம் என்பது அதுதான்.
கிறிஸ்தவம்
சமணத்திற்கும் ஓஷோவுக்கும் என்ன உறவு இருக்கமுடியுமோ அதே அளவு உறவுதான் அவருக்கு கிறிஸ்தவத்துடன் இருக்க வாய்ப்புள்ளது. ஓஷோவின் உரைகளிலுள்ள கிறிஸ்தவ எதிர்ப்பு புகழ்பெற்றது. எந்த பேருரையிலும் கன்யாஸ்திரீகளையும், கிறிஸ்தவ போதகர்களையும் கிண்டல் செய்ய அவர் தவறுவதில்லை
கிறிஸ்தவத்தில் மையப்போக்காக இருப்பவை மூன்று மரபுகள்.
நாஸ்டிக் (Gnosticism)
ரோமன் கத்தோலிக்கத்திற்கு முன்னால் இருந்த ஒருவகை நோன்புமுறையை நாஸ்டிக் மரபு என்கிறார்கள். அதன் அம்சம் இன்று இந்தியாவில் வேறொரு வடிவில் காணப்படுகிறது. அதாவது உபவாச ஜெபம், தன்னைத்தானே வருத்திக்கொள்வது போன்றவை. இன்று அது கிறிஸ்தவத்தின் பல சபைகளின் பொதுவான நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறையாக உள்ளது. தொடக்ககாலக் கத்தோலிக்கம் நாஸ்டிக் மரபை முழுமையாக ஒறுத்தது. அவர்கள் ரகசிய இயக்கமாக நீடித்தனர். ஆனால் ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் அது கத்தோலிக்கத்திற்குள் வேறுவழியாக உள்நுழைந்துவிட்டது. அதை ஞானவாத கிறிஸ்தவம் என்றும் சொல்வர். இதை ஓஷோவால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாஸ்டிக் மதத்தை பற்றி சொல்லும்போது, ‘பட்டினி கிடப்பதென்றால் கிட, அதை ஏன் கிறிஸ்துவின் பெயரால் செய்கிறாய்’ என்று கேட்கிறார்.
கத்தோலிக்க கிறிஸ்தவம் (Roman Catholicism)
கத்தோலிக்க கிறிஸ்தவத்தை எந்நிலையிலும் ஓஷோவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உங்களுக்கு தெரியும். அவருடைய கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் பற்றிய கிண்டல்களை இன்று மேடையில் சொன்னால் சட்டம் என்மேல் பாயும் சூழல் உள்ளது. அவரால் கத்தோலிக்கத்தை எவ்வகையிலும் ஏற்கமுடியாது. சிரிக்காத ஒரு கிறிஸ்தவத்தை உண்டாக்கிவிட்டார்கள் என்று அதைப்பற்றி சொல்கிறார். காயடிக்கப்பட்ட கிறிஸ்து என்கிறார். ஆனால் ஆச்சரியமான ஒன்றுண்டு, கத்தோலிக்க துறவிகளில் ஓஷோவின் செல்வாக்கு கொண்ட பலர் உண்டு. அந்த அமைப்பின் இறுக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்கள் அவர்கள். ஆண்டனி டிமெல்லோ அவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
சீர்திருத்த கிறிஸ்தவம் (Protestantism)
கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் எதிராக தோன்றியதே சீர்திருத்த கிறிஸ்தவம். அப்படியென்றால், சுரண்டலுக்கு எதிராக உண்டான அந்தp பிரிவு புரட்சிகரமானதாக இருந்திருக்கும் என்று நினைப்பீர்கள். ஆனால் அப்படியல்ல. சுரண்டலுக்கு எதிராக தோன்றிய ஒரு அமைப்பு அதைவிட பெரிய சுரண்டல்தனத்துடன் இருக்கமுடியும் என்பதை சீர்திருத்த கிறிஸ்தவம் நிரூபித்தது. ஏனென்றால் அது கத்தோலிக்க ஆட்சிக்கு எதிராக உருவான தேசிய அரசுகளால், அதாவது அரசர்களால் ஆதரித்து வளர்க்கப்பட்டது.
உலகம் முழுக்க காலனியாதிக்கத்தை ஏற்படுத்தி, பஞ்சங்களை உருவாக்கி, உலக மக்கட்தொகையில் மூன்றிலொரு பகுதியை கொன்றழித்தது சீர்திருத்த கிறிஸ்தவம்தான். உலகம் முழுக்க உலகப்போர்களை உருவாக்கி பேரழிவுகளை உருவாக்கியதும் அதுதான். இன்று உலகின் மிகத்தீவிரமான அடிப்படைவாதிகள் நீங்கள் எண்ணுவதுபோல ஐ.எஸ்.ஐ.எஸ். அல்ல. அது சீர்திருத்த கிறிஸ்தவம்தான். ஓஷோவுக்கு அது எவ்வகையிலும் உடன்பாடானது கிடையாது.
ஆனால் அந்தக் கிறிஸ்தவத்தில்கூட ஓஷோவுடன் உரையாடக்கூடிய ஓர் இடம் உள்ளது. அது தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ், எமிலி சோலா, பேர்லாகர் க்விஸ்ட், நிகாஸ் கசண்ட் ஸகீஸ் போன்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் உருவாக்கிய கிறிஸ்துவின் மானுட வடிவம். பதினேழாம் நூற்றாண்டில் இருந்து சீர்திருத்த கிறிஸ்தவத்தையும் கடந்து சிந்திக்கக்கூடியவர்கள், வேறுவகையில் கிறிஸ்துவை அணுகக்கூடிய இலக்கியவாதிகள் உருவாகிவந்தனர். கிறிஸ்துவை ஒரு மாபெரும் மனிதநேயராக, ஒரு மகத்தான விடுதலை அடையாளமாக அவர்கள் சிந்தித்தனர். அவர்களுக்கு முந்தைய மூன்று தரப்பினரும் உருவாக்கி வைத்திருந்த மரபான மத அடையாளங்களிலிருந்து கிறிஸ்துவை மீட்டெடுத்தனர்.
எனது கிறிஸ்துவும் அந்த கிறிஸ்துதான். நான் இங்கு கீதை உரை ஆற்றியபோது அரங்கில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புண்பட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். எனக்கு கிருஷ்ணன் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு கிறிஸ்துவும் முக்கியம் என்று அந்த உரையில் சொன்னேன். எப்போதும் அதை சொல்வேன். நான் கண்டடைந்த கிறிஸ்து தல்ஸ்தோயுடைய, நிகாஸ் கசந்த்சாகீஸுடைய, யோஸ் செரமாகோவுடைய (José Saramago) கிறிஸ்து. அது கலைஞர்களால் கண்டெடுக்கப்பட்ட கிறிஸ்து. ஆதிக்க கிறிஸ்துவோ மதமாற்ற கிறிஸ்துவோ அல்ல. பேருந்தில் நம் அருகில் கையில் பைபிளுடன் வந்து உட்காரும் வெறிகொண்ட தப்பரப்பாளனின் கிறிஸ்து அல்ல.இந்த உலகில் எத்தனையோ ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் தன்னை அறிவற்றவர்களின் தரப்பில் இருந்து, பாவியின் தரப்பில் இருந்து பேசிய ஞானி, மனிதகுமாரர் அவர். அந்த கிறிஸ்துவுக்கு ஓஷோ மிக நெருக்கமானவர். அவருடைய உரைகளில் மேற்கோள்களாக வரும் கிறிஸ்து இந்த கிறிஸ்துதான்.
ஓஷோவின் மீமதம்
இங்கு நான், ஒவ்வொரு மதத்திலும் எது ஓஷோவை சென்று தொடுகிறது, எதைப்பற்றி அவர் பேசியிருக்கிறார், எதை மறுக்கிறார் என்பதைத்தான் சொல்லிவந்தேன். இந்த வரையறை என்பது ஓஷோவை புரிந்துகொள்வதற்கு மிக உதவியானது. வேறொரு வகையில் சுருக்கமாக இப்படி சொல்லலாம். இந்த ஒவ்வொரு மதத்திலும் செயலூக்கம் கொண்ட, வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறிச்செல்லக்கூடிய, மாற்று சிந்தனையாக நிலைநிற்கக்கூடிய, பிறிதொன்றாக எழுந்து வரக்கூடிய ஒரு தரப்பு உள்ளது. அது அந்த மதம் அல்ல, பிறிதொரு தரப்பு என அதைச் சொல்வேன். அந்த பிறிதொன்றுகள் அனைத்தையும் சரடுகளாக கோர்த்து முடைந்து ஓஷோ தனது தரிசனத்தை முன்வைக்கிறார். Seven Samurai போன்ற படங்களில் ஒரு பெரிய செயல்திட்டத்திற்காக வெவ்வேறு திறன்கொண்ட ஆட்களை ஒருங்கிணைப்பார்கள். அதுபோல எல்லா ஞான மரபுகளில் இருந்தும் தகுதியானவற்றையெல்லாம் எடுத்து தொகுத்து முன்வைக்கிறார்.
அவருடைய தரப்பை ஒருவித Meta religion அல்லது Meta spirituality என்று சொல்லலாம். Meta என்ற சொல்லுக்கு ஒன்றிலிருந்து கிளைத்த, ஒன்றுக்கு அடுத்து இரண்டாவதாக இருக்கக்கூடிய என்று பொருள். மீமதம் என மொழியாக்கம் செய்யலாம். மதத்தில் முளைத்து, மதத்தை விமர்சித்து, மதத்தின் மாற்றாக நிலைகொள்ளும் எதிர்மதம் அது. அத்தகைய மீமதத்தை ஓஷோ முன்வைக்கிறார் எனலாம். ஒருவகையில் அவரை சந்தனமரம் என்று சொல்லலாம். சந்தனமரம் மண்ணில் இருந்து எதையும் எடுத்துக்கொள்வதில்லை. மற்ற மரங்களின் வேர்களுடன் பிணைந்து, அம்மரங்கள் எடுக்கக்கூடிய சத்துகளை தான் எடுத்துக்கொண்டு வளர்கிறது. இந்த காட்டில் விளைந்த ஒரு சந்தனமரம் என்று ஓஷோவை சொல்வேன்.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
How did Renaissance movements become fundamentalist movements?
There is a curious thing in history; common political analysts never notice it. Modern religious renaissance moments actually created religious fundamentalism all over the world, and today’s global crisis is this political surge of fundamentalism.
இந்தியாவில் சாமானியர்களிடம் ஒரு மனநிலை உண்டு. கலைகளை அறிய எந்த பயிற்சியும் தேவையில்லை என நினைக்கிறார்கள். எந்த அறிமுகமும் இல்லாமல் கர்நாடக இசையை கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என்பார்கள்.
கலைக்கான பயிற்சிAugust 6, 2025
பதஞ்சலியோகம்- வகுப்புகள்
குரு சௌந்தர் நடத்திவரும் பதஞ்சலி யோகமரபின்படியான யோகப்பயிற்சிகளில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு முறை இரண்டாம்நிலை வகுப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிற்கு வெளியிலும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தொலைக்காட்சி ஊடகங்களிலும் யோகமுறைகளை விளக்கி வருகிறார்.
யோகம் இன்றைய காலகட்டத்தின் தவிர்க்கமுடியாத ஒரு வாழ்க்கைக்கூறாக உலகமெங்கும் பரவியுள்ளது. இன்று தொடர்ச்சியாக உடலையும் உள்ளத்தையும் மிகையான அழுத்தத்திலேயே வைத்திருக்கிறோம். உள்ளம் மிகையழுத்தம் கொள்கையில் முதுகு, கழுத்து போன்றவற்றில் வலிகள் உருவாகின்றன. உடல் மிகையழுத்தம் கொள்கையில் உள்ளம் சலிப்பு, சோர்வு, துயிலின்மையை அடைகிறது.
இன்னொரு பக்கம் முதிய அகவையில் உடலை எந்தப் பயிற்சியும் இல்லாமல் வைத்திருக்கிறோம். உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீரான பயிற்சி அளிப்பதில்லை. உடலுக்கான பயிற்சி ஒரே சமயம் உள்ளத்துக்கான பயிற்சியாகவும் அமைவதில்லை. ஆகவே உடல்வலிகளும், உளச்சோர்வும் உருவாகி ஒன்றையொன்று வளர்க்கின்றன.
யோகம் இளையோர், முதியோர் இருவருக்குமான மீளும்வழியாக உலகமெங்கும் ஏற்பு பெற்றுள்ளது. பதஞ்சலி யோகமுறையின் மிகத்தொன்மையான மரபுகளில் ஒன்றாகிய பிகார் சத்யானந்த ஆசிரிய மரபில் முதுநிலை ஆசிரியருக்கான பயிற்சியை எடுத்துக்கொண்டவர் குரு சௌந்தர். அவர் நடத்தும் இந்த யோகப்பயிற்சி அனைவருக்குமானது.
சரியான யோகப்பயிற்சி நேரடியான ஆசிரியரிடமிருந்து தொடங்கப்படவேண்டும். ஒவ்வொருவருக்கும், அவருடைய பிரச்சினைகளை உணர்ந்து ஆசிரியர் யோகப்பயிற்சியை பரிந்துரைக்கவேண்டும், வழிகாட்டவேண்டும், கட்டுப்படுத்தவும் வேண்டும். ஆகவேதான் நேருக்குநேர் ஆசிரியருடன் மூன்றுநாள் இருந்து கற்கும் இந்தப் பயிற்சி முறையை அறிமுகம் செய்திருக்கிறோம்.
(முன்னர் பங்குகொண்டவர்களும் மீண்டும் பயில விரும்பினால் விண்ணப்பிக்கலாம்)
நாள் செப்டெம்பர் 12, 13 மற்றும் 14 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
யதார்த்தமெனும் கலை
தமிழில் அவ்வப்போது சிலாகிக்கப்படும் மலையாளப்படங்களை நான் பார்ப்பதுண்டு. தமிழகத்தில் சிலாகிக்கப்பட்டாலே அவை நல்ல படங்கள் அல்ல என்னும் என் எண்ணத்தை உறுதிசெய்பவை அவை. அவை தமிழ்ப்படங்களின் இன்னொரு வடிவங்கள் என்று தோன்றும். ‘மெய்யான மலையாளப்படம்’ என ஒன்று உண்டு. அது மிக நிதானமாக நகர்வது. யதார்த்தத்தை மட்டுமே காட்டுவது. ஆகவே அதைப் பார்க்க ஒரு பொறுமையும் பயிற்சியும் தேவை. அந்தப் படங்களை பொதுவாக இங்கே எவரும் குறிப்பிடுவதில்லை என்று காண்கிறேன்.
வெறும் வசனங்கள் வழியாக, ஒரே செட்டுக்குள் நகரும் இந்த சினிமாவின் பதினைந்து நிமிடத்தில் வரும் ஒரு ‘எபிசோட்’ இது. இது எழுதப்பட்டிருக்கும் விதத்திலுள்ள உளவியல் ஆழம், அது எடுக்கப்பட்டிருக்கும் விதத்திலுள்ள இயல்பான ஓட்டம், நுணுக்கமான சிறிய தகவல்கள், உதிரிக் கதாபாத்திரங்களின் ஆளுமை வெளிப்படும் விதம், ஒவ்வொருவரும் சாதாரணமாக நடித்திருக்கும் நுட்பம் ஆகியவைதான் மலையாள சினிமா நூறாண்டுகளில் வந்தடைந்த இடம். அதை ரசிக்கும் பயிற்சி கொண்ட நூறுபேர் தமிழகத்தில் இருந்தால் நான் ஆச்சரியப்படுவேன்.
படத்தொகுப்பு பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தப் படத்தை அதன்பொருட்டே பார்க்கலாம். ஒரு ஷாட்டில் இருந்து இன்னொன்றுக்கு காட்சிக்கோணம் மாறுவதையே நாம் உணர்வதில்லை. ஒரு ஷாட்டில் சம்பந்தமற்ற ஒருவர் நுழைவது நிகழ்கிறது, அடுத்த ஷாட்டில் அவர் வேறொரு திசையில் வெளியேறுகிறார். இவை தனித்தனியாக எடுக்கப்பட்ட ஷாட்கள் என்று நாம் உணர்வதே இல்லை, நாம் ஒரே நிகழ்வை கண்களைத் திருப்பி பார்த்துக்கொண்டே இருப்பதைப்போலவே உணர்கிறோம், அதுவே செய்நேர்த்தி. seamless என சொல்லத்தக்க இந்த ஒழுக்குதான் மிகச்சிறந்த எடிட்டிங்.
முழுப்படமும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள்தான் நிகழ்கிறது. இப்படி ஒரு சிறு இடத்தில் படத்தை நிகழ்த்தும் இயக்குநர்கள் சாதாரணமாக அந்த இடத்துக்குள் வேறுபட்ட கோணங்களைக் கண்டுபிடிப்பதற்காக சம்பந்தமில்லாத கோணங்களை வைப்பதுண்டு. பொருத்தமே இல்லாமல் ‘டாப் ஆங்கிள்’ அல்லது ‘லோ ஆங்கிள்’ வைப்பார்கள். அது இப்படத்தில் இல்லை. எல்லா காட்சிக்கோணங்களும் இன்னொரு கதாபாத்திரத்தின் கோணத்தில், அல்லது அந்த ஸ்டேஷனில் இருக்கும் ஒருவரின் கோணத்திலேயே உள்ளன.
இந்தப் படத்தில் ‘கதை’ என ஏதும் இல்லை. திருப்பங்கள் , எதிர்பாராத நிகழ்வுகள் ஏதுமில்லை. சொல்லப்போனால் கதாபாத்திரங்களுக்கு இடையே முரண்பாடு கூட இல்லை. ஆனால் கதைகள் உள்ளன. வெவ்வேறு வாழ்க்கைகளின் சில கீற்றுகள், அந்தக் கீற்றிலேயே கதைமாந்தரின் குணச்சித்திரம் மட்டுமல்ல அந்த மொத்தக்கதையும் உணர்த்தப்படுகிறது. நவசினிமா என்பது ‘நடிப்பு’ அல்ல, சரியான தோற்றம் கொண்ட நடிகர்கள் ஒரு கதாபாத்திரமாக இயல்பாகப் புழங்குவதுதான் என்பதை இந்தப்படம் காட்டுகிறது.
ஒரு பெண்போலீஸின் வாழ்க்கையின் ஒரு பக்கம், அவ்வளவுதான். ஆனால் கேரளத்தில் மிக ரசிக்கப்பட்ட படங்களுள் ஒன்று இது. இங்குள்ள இணையவிமர்சகர்கள் ‘இழுக்கிறது’ என்பார்கள். சுமாருக்குக் கீழ் என்பார்கள். ஆனால் நடிப்பென்று ஏதும் நிகழாத நடிப்பு வழியாக, ஒரு சூழலின் ஒட்டுமொத்தத்தைச் சித்தரித்து அதில் ஒருசில புள்ளிகளை மட்டும் அழுத்திக் காட்டும் கதைத்தொழில்நுட்பத்தின் வழியாக, உணர்வுநிலைகள் மிகையாக ஆகாமல் நிகழும் காட்சியமைப்பு வழியாக, வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வை உருவாக்குகிறது இந்தப் படம். எனக்கு இதன் எல்லா காட்சிச்சட்டகங்களும் எல்லா வசனங்களும் எல்லா முகபாவனைகளும் சுவாரசியமாக இருந்தன.
வனிதா மலையாளத் திரைப்படக் காட்சி
முழுப்படமும்…
ஓஷோ: மரபும் மீறலும்-11
3 ஆறு தரிசனங்கள்
இந்திய சிந்தனை முறையில் ஆறு தரிசனங்கள் இருக்கின்றன. அவை, சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம் ஆகியன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனி மதமாக ஒருகாலத்தில் கருதப்பட்டவை. அவற்றில் வேத ஏற்பு மதங்களும் உண்டு, வேத மறுப்பு மதங்களும் உண்டு. அவற்றில் எவற்றுடன் ஓஷோவை எந்த அளவுக்கு இணைத்துப் பார்க்கமுடியும்?
சாங்கியம்
சாங்கிய தரிசனத்தின்படி இந்த உலகிலுள்ள பருப்பொருட்கள் அனைத்தும் பிரகிருதி அல்லது இயற்கை. இந்த பூமியைப்போல இப்பிரபஞ்சம் முழுக்க இருக்கக்கூடிய மொத்த பருப்பொருள்களையும் ஒட்டுமொத்தமாக சேர்த்தால் எதுவோ அதுதான் மகாபிரகிருதி. அந்த பிரகிருதி என்பது பொருள் (matter). அதில் மூன்று குணங்கள் உள்ளன – சத்வம், ரஜஸ், தமஸ். வேறொருவகையில் அம்மூன்று குணங்களையும் மாறாநிலை (தமஸ் / Static), செயலூக்கநிலை (சத்வம் / Dynamic), சமநிலை (ரஜஸ் / Neutral) என்று சொல்லலாம். இக்குணங்களுக்கிடையே சமநிலை இருக்கும்போது பிரகிருதியானது அசைவற்றதாக காலத்தில் மாறாததாக இருந்தது. ஒருகட்டத்தில் சமநிலை குலைந்தது. அந்த சமநிலை குலைவில் இப்பிரபஞ்சம் உருவாகி இவ்வளவு விஷயங்கள் வந்துள்ளன.
இதில் இரண்டு பிரிவுகள் உண்டு. பழைய சாங்கிய தரிசனத்தை நிரீஸ்வர சாங்கியம் (இறையிலி சாங்கியம்) என்பார்கள். பின்னாளில் வந்தது ஈஸ்வர சாங்கியம் (இறை சாங்கியம்). பழைய சாங்கியத்தை ஓஷோவுக்கு நெருக்கமானதாக பார்க்கலாம். அவர் இந்த சமநிலையின்மை என்ற கருத்தை பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அவருடைய உரையில் எங்கெல்லாம் இந்த விஷயம் வருகிறதோ அதெல்லாம் சாங்கியத்துக்கு மிக நெருக்கமானவை. ஏனென்றால் ஓஷோ பேசுவது யோகம். யோகம் என்பது சமநிலையிழப்பை வென்று சமநிலையை மீட்பதைப் பற்றிப் பேசுவது.அதன்பின் வந்த ஈஸ்வர சாங்கியத்தில் பரமபுருஷன் என்ற கருதுகோள் உள்ளே வந்தது. அதை ஓஷோ ஏற்பதில்லை. தூய இயற்கை என்னும் கருத்து எங்கெல்லாம் ஓஷோவிடம் வருகிறது என்பதைப் பார்ப்பது ஒரு நல்ல வாசிப்புமுறை. ஓஷோவை வகுத்துக்கொள்ள அது மிக உதவும்.
வைசேஷிகம்
விசேஷம் என்ற சொல்லில் இருந்து வந்ததே வைசேஷிகம். ஒவ்வொரு பொருளும் இங்கிருக்கின்றன. அவை மறுக்கமுடியாத இருப்பு கொண்டவை. அப்பொருள்களின் மிகச்சிறிய துகள் என்பது அணு. அணுவாதத்தைதான் வைசேஷிகம் என்பர். ஒரு பொருளுடைய அடிப்படை விசேஷ குணம் எதுவோ அதுதான் அப்பொருள். நெருப்பு என்பது எரிக்கும், தண்ணீர் என்பது அணைக்கும் என்பது அந்தந்த பொருள்களின் விசேஷ குணங்கள். அந்த விசேஷ குணங்கள் அந்தந்த பொருள்களின் ஓரோரு அணுக்களிலும் இருக்கிறது என்பது வைசேஷிகத்தின் கொள்கை.
இத்தரிசனம் அடிப்படையில் பொருள்முதல்வாத நோக்குடையதே. பின்னாட்களில் அதில் தன்மாத்ரங்கள் (Tanmātra) போன்ற கருதுகோள்கள் உள்ளே வரும்போது கடவுள் வந்துவிடுகிறார். ஆனால் அவ்வாறு கடவுளின் வருகைக்கு முன்னே இருந்த வைசேஷிகம் ஓஷோவுக்கு நெருக்கமானது. அவர் பல இடங்களின் அதன் மேற்கோள்களை எடுத்தாண்டிருக்கிறார்.
யோகம்
இது சாங்கியத்தின் துணைத்தரிசனம். சாங்கிய–யோகம் என்றே சொல்வதுண்டு. யோகத்தின் முதன்மை நூல் என்பது பதஞ்சலியின் யோக சூத்திரமே. ஓஷோ பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு மிகப்பெரிய உரை எழுதியிருக்கிறார் (பதஞ்சலி யோகம் – ஒரு விஞ்ஞான விளக்கம்). ஓஷோவைப்பற்றி அதிகம் பேசக்கூடியவர்கள் பெரும்பாலும் இந்த நூலை படித்திருக்க மாட்டார்கள். இந்த நூலுக்கு வருவதற்கான வழி என்ன என்பதைத்தான் சொல்லவிரும்புகிறேன்.
கபிலரின் பழைய சாங்கியத்தில் கடவுள் கிடையாது. ஆகவே பதஞ்சலி யோக சூத்திரத்திலும் கடவுள் கிடையாது. ‘யோக சித்தவிருத்தி நிரோத’ என்று அந்நூல் தொடங்குகிறது. மனதின் செயலை நிறுத்துவதுதான் யோகம். அதை செய்வதற்கான யம -நியமங்களில் ஒன்றாக அது பக்தியை முன்வைக்கிறது. ஆனால் அடையவேண்டிய இறுதி இலக்கு கடவுள் அல்ல. பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு ஓஷோ எழுதிய உரைக்கும், வெளியே பக்தி நோக்கில் எழுதப்பட்ட உரைகளுக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு இதுதான்.
யோகம் வழியாக நீங்கள் சென்றடைவது என்ன ? பதஞ்சலி யோகம் காட்டக்கூடிய வழி என்ன ? அது கடவுளின் காலடியை சென்றடைவதோ சொர்க்கத்திற்கு செல்வதோ அல்ல. ஓஷோ தனது உரையில் இதை விரிவாக பேசுகிறார். ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய முக்கியமான நூல் இது. அதன் வழிநூலாக இன்னொரு நூலை எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. நான்கு அத்தியாயங்கள் எழுதினேன். தொடர்ந்து எழுதக்கூடும்.
சாங்கிய தரிசனத்தில் குறிப்பிட்ட கேள்வி எழுகிறது. ஆதி இயற்கை என்ற ஒன்று இருக்கிறது. அதில் செயலூக்கம், நிலைத்தன்மை, சமரசத்தன்மை என மூன்று குணங்கள் இருக்கின்றன. அந்த குணங்கள் அங்கு இருக்கவேண்டும் என்றால் அதை பார்க்கக்கூடிய ஒருவன் இங்கிருக்க வேண்டுமல்லவா ? பார்வையாளன் இல்லாமல் காட்சி இருக்கமுடியாதல்லவா ? உணர்பவன் இன்றி உணரப்படும் பொருள் இருக்காதல்லவா ? இவ்வாறு குணத்தை உணரக்கூடிய அந்த ஒருவன் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அவர்கள் புருஷன் என்ற கருதுகோளை முன்வைத்தார்கள். உயிருக்குள் இருந்துகொண்டு இயற்கையை பார்ப்பவன் யாரோ அவன் புருஷன். அந்த புருஷன்தான் மூன்று குணங்களையும் பார்க்கிறான். இயற்கையை பார்க்கக்கூடிய தன்னிலை (Subjectivity) யாரோ அவன்தான் புருஷன். இயற்கையை செயல்வடிவமாக பார்க்கக்கூடியவன் எனக்குள் இருக்கும் புருஷன்.
அந்த புருஷன் யார் என்ற கேள்விக்கு அடுத்ததாக செல்கிறார்கள். நீங்கள் வெளியே பார்க்கும் இயற்கை துண்டுபட்ட இயற்கை. ஆனால் சாங்கியத்தின்படி இவையனைத்தும் ஒன்றுதானே, ஆதி இயற்கைதானே. அப்படியெனில் அதை பார்க்கும் உயிர்களில் இருக்கும் புருஷர்கள் எல்லாம் சேர்ந்து ஒரே புருஷன்தானே என்ற கேள்வி எழுகிறது. எனவே அந்த ஒற்றை புருஷனை பரமபுருஷன் என்றனர். உடனே ஒரு தாவலாக அந்த பரமபுருஷனே கடவுள் என்றாகியது.
யோகம் சொல்வதென்னவெனில், புருஷன் பிரகிருதியை பார்த்து அது வேறு, இது வேறு என்று நினைக்கிறான். எனவே துயருறுகிறான். எல்லா துயர்களுக்கும் காரணம் பிரகிருதி-புருஷ பேதம்தான். அந்த பேதம் அழிந்து பிரகிருதியின் ஒரு பகுதிதான் தான் என்று புருஷன் உணரும்போது, பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கக்கூடிய பரமபுருஷனின் ஒரு துளியாக தானும் ஆகும்போது, வேறுபட்ட நிலையை களையும்போது அடையக்கூடிய அபேத நிலைதான் முக்தி என்பது. மற்றபடி அது கடவுளை அடைவதை பற்றியல்ல.
நவீன அறிவியலின்படி சொல்வதென்றால், மனிதன் என்று இங்கு இருக்கும் ஒருவர், அலகிலாமல் விரிந்துகிடக்கும் பிரபஞ்சத்தில் இருக்கும் பல்லாயிரம் கருதுகோள்களில் ஒரு துளிதான். அதற்கப்பால் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொள்வது எளிது. ஆனால் அனுபவப்பூர்வமாக அப்படி ஆகக்கூடிய ஒரு தருணத்தை தியானம் செய்து, தன்னை ரத்துசெய்து, அடைவதற்கு பெயர்தான் யோகம். தான் யார் என்பதில் உள்ள ஒவ்வொரு அடையாளத்தையும் ரத்து செய்துகொண்டே வந்து புருஷன் மட்டுமாகி, பரமபுருஷன் மட்டுமாகி, பிரகிருதியின் ஒரு பகுதியாக மாறக்கூடிய ஒரு அபேத நிலையை / இரண்டின்மை நிலையைத்தான் யோகம் சொல்கிறது.
அதைத்தான் ஓஷோ சொல்கிறார். ஓஷோ அதை நவீனச் சூழலில் நின்று விளக்குகிறார். ஆகவே இந்த ஆறு தரிசனங்களில் ஓஷோவுக்கு மிக உவப்பாக இருந்ததும், கிட்டத்தட்ட அதன் பிரதிநிதியாக நின்று அவர் பேசியதும் யோக தரிசனமே. அவருடைய அந்த உரை மட்டும் தனியாக இருப்பதற்கு காரணம் அதுதான். யோகம் என்பது கடவுளை அடைவதற்காக அல்ல; தன்னை அடைவதற்காகக்கூட அல்ல. அது ‘தான் அல்ல தான்’ என்பதை அறிவதற்காகவே. அதை அனுபவபூர்வமாக உணர்வதற்காகவே. ஓஷோ அவருடைய பயிற்சிகள் வழியாக அதற்கான வழிமுறைகளையும் முன்வைத்தார் எனப்படுகிறது. அவருடைய நூல்களில் அதற்கு இன்றைய நவீன வாழ்க்கையிலுள்ள இயல்பான தடைகளை விரிவாகச் சுட்டிக் காட்டுகிறார். நுகர்வுவெறி முதல் தன்நலமே நாடும் முனைப்பு வரை. கட்டுப்படுத்தும் மரபான சிந்தனைகள் முதல் மிதமிஞ்சி நம்மை தூண்டிவிடும் தற்காலச் சிந்தனைகள் வரை. ஓஷோவின் கொடை என்பது இயல்பான யோகப்பயிற்சிக்குத் தடையாக ஆகும் அனைத்தையும் ஓஷோ எங்காவது சொல்லியிருப்பார் என்பதுதான்.
நியாயம்
இது வைசேஷிகத்தின் துணை தரிசனம். நியாயம் என்றால் நாம் பேச்சுவழக்கில் சொல்லும் நியாயமேதான். அதாவது தர்க்கம் (Logic). ஒரு நியாயமும் இல்லை என்று சொல்வது logic இல்லை என்ற பொருளிலேயே. நாம் பேசக்கூடிய அத்தனை தர்க்க முறைகளும் நியாய சாஸ்திரத்திற்கு உட்பட்டுதான் இருந்திருக்கின்றன. நெடுங்காலமாக நியாய தரிசனம் வைதிக மரபுக்கு வெளியேதான் இருந்திருக்கிறது. நியாய சாஸ்திரத்திற்கு பௌத்தர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் ஒவ்வொரு பௌத்த குருவும் நியாயத்துக்கு உரை எழுதுவார். அந்த உரையின் அடிப்படையில்தான் அவர் தன்னை முன்வைப்பார்.
இன்றைக்கு ஒரு டீக்கடையில்கூட ஒரு விஷயத்தை விவாதித்து நிறுவமுடியாது என்பதை கவனித்திருக்கிறீர்களா ? விவாதிக்கக்கூடியவர்கள் இங்கே இருப்பீர்கள். எந்தவொரு விஷயத்தையும் எங்கும் விவாதித்து நிறுவமுடியாது. ஏனெனில், ‘நீ ஆயிரம் சொல். என்னால் ஏற்கமுடியாது’ என்றுதான் ஒருவன் இறுதியில் சொல்வான். இல்லையெனில், ‘இதை பிறகு பேசுவோம்’ என்று சொல்லி கிளம்பிச்சென்றுவிடுவான். ‘ஆமாங்க, நீங்க சொல்வது சரிதான்’ என்று உங்களிடம் இதற்குமுன் யாராவது சொல்லியிருக்கிறார்களா ? என்னிடம் யாரும் சொன்னது கிடையாது. எனது நெருங்கிய நண்பரான கிருஷ்ணன்கூட என்னிடம் எந்தவொரு விஷயத்தையும் ஒப்புக்கொண்டது கிடையாது. ஏனெனில் நமக்கு பொதுவான தர்க்கமுறை என்று ஒன்று கிடையாது.
இன்னின்ன தர்க்கங்களின்படி ஒன்றை சொன்னால் அதை மறுக்க முடியாது. அறிவியலுக்கு தர்க்கம் உண்டு. அறிவியலில் ஒரு விஷயத்தை சொல்லும்போது அதை சரி என்றோ தவறு என்றோ சொல்லிவிடலாம். ஆனால் இன்று அறிவியலுக்கு வெளியே சரி, தவறு என்பது கோட்பாட்டுத்தளத்தில் கிடையவே கிடையாது. முடிவற்ற தர்க்கங்களே உள்ளன. இல்லையெனில் கருத்து மோதல்களில் முடியும். ஆனால் பழைய காலத்தில் எல்லா தரப்பினரும் அமர்ந்து தங்களுக்குள் விவாதித்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பொதுவாக இருந்தது நியாயத்தின் தர்க்கமுறை. நீங்கள் விவாதிக்க சென்றால் உங்களிடம் கேட்கப்படும் கேள்வி, ‘நீ எந்த ஆசிரியனின் மாணவன் ? எந்த மரபில் இருந்து வருகிறாய் ? உனது நியாய நூல் எது ?’ என்பதுதான். அவருடைய நியாய நூலின்படி அவர் வாதிடுவார். அந்த நியாயத்தின்படி அவருடைய கருத்து மறுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வார். இத்தகைய புறவய தர்க்கமுறையைத்தான் (Objective Logical system) நியாயம் என்ற பெயரில் சொல்கிறார்கள்.
ஓஷோ அந்த நியாய முறைமையின்மீது மிகுந்த மதிப்புடன் தன்னை முன்வைப்பதை பார்க்கலாம். தன்னை தார்க்கிகன் (logician) என்று சொல்கிறார். ‘I am not a visionary. Sometimes i am a logician’ என்கிறார். Pure Logic என்ற சொல்லை ஓஷோவின் உரைகளில் பார்க்கலாம். அது நியாயத்திற்கு நெருக்கமானதாக உள்ளது.
எனது ஆசிரியர் பேசும்போது வேடிக்கையாக ஒன்றை சொல்வார். ஐந்து விரல்களில் கட்டைவிரல் வேதாந்தம். மற்ற நான்கு விரல்களும் சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம் ஆகியன. கட்டை விரலானது மற்ற எல்லா விரல்களையும் தொடுவதுபோல வேதாந்தம் மற்ற அனைத்து தரிசனங்களோடும் உரையாடும் என்பார். அப்போது ஒருவர், ‘குரு, அப்போ நியாயம்?’ என்று கேட்டார். ஆசிரியர், ‘It is Middle finger’ என்றார். வேடிக்கையாக மட்டுமல்ல, உண்மையிலேயே மற்ற அனைத்து தரிசனங்களுக்கும் நியாயம் தனது நடுவிரலையே காட்டுகிறது.
உண்மை என்பதை பற்றிய நியாயத்தின் ஒரு கண்ணோட்டம் உள்ளது. உண்மை என்பது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரையறுக்கப்பட்டு பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்றே. அப்படித்தான் உண்மைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அறிவியல் உண்மைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நிபுணர் குழுவுக்கு உடன்பாடான உண்மைகளே ஒழிய அதைத்தாண்டிய முழுமையான உண்மை (Absolute truth) என்பதை அறிவியலில் சென்றடையவே முடியாது.
தடுப்பூசி என்பது கோவிட்டுக்கு மருந்து என்று அறிவியலாளர்கள் சபை முடிவெடுத்துவிட்டால் அது உண்மைதான். சிறிது காலம் கழித்து அவர்களே அது வேண்டாம் என்று சொல்லவும்கூடும். எண்பதுகள் வரைக்கும் மனநோய்க்கான சிகிச்சையாக தலையில் மின்சாரம் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். நாற்பதுகள் வரைக்கும் அலோபதி மருத்துவத்தில் எந்தவொரு நோய்க்கும் உடலில் இருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஒரு சிகிச்சை முறையாக செய்துகொண்டிருந்தார்கள். இன்று யாரும் அவ்வாறு செய்வது கிடையாது. ஆகையால் ஒரு குறிப்பிட்ட சூழலில், காலகட்டத்தில் சிலரால் பொதுவான உடன்பாட்டால் ஏற்கப்பட்டதுதான் உலகியல் உண்மை. எனவே நியாயத்தை பொறுத்தவரை, முழுமையான உண்மை என்பது என்ன, அது எங்கு உள்ளது என்ற கேள்வியே கிடையாது. ஒரு விஷயத்தை எப்படி பொதுவாக வரையறுத்துக்கொள்வது என்பதை பற்றி மட்டும்தான் அவர்கள் பேசுவார்கள். அப்போதைக்கு அதுதான் உண்மை. அச்சூழலுக்கு அதுதான் உண்மை. அதற்கப்பாலுள்ள உண்மை என ஒன்றில்லை.
அப்படிப்பார்த்தால் அது மற்ற அனைத்து தரிசனங்களுக்கும் தனது நடுவிரலையே காட்டிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு தர்க்கபூர்வமான ஒன்றுமட்டுமே உண்மை என்று நம்பக்கூடிய ஒரு தரப்பு இங்கு நீண்டகாலம் இருந்துள்ளது. நமது ஆயிரக்கணக்கான ஆன்மீக சொற்பொழிவுகள் எதிலுமே இடம்பெறாத தரப்பு அது. அதேசமயம் நம் மரபில் இருக்கும் மையத்தரப்பும்கூட. இராமானுஜர் தனது எதிர்த்தரப்பினருடன் நியாயத்தின்படிதான் பேசியிருப்பார். ஆனால் நமது வைணவ மேடையில் நியாயத்தை பற்றி யாரும் பேசமாட்டார்கள். அதுபோலவே சங்கரரும். இன்று ஒரு அத்வைத மேடையில் சங்கரரை புகழ்ந்து பேசுவார்களேவொழிய நியாயத்தை பற்றி பேசமாட்டார்கள். ஆனால் அது இங்கு உள்ளது. அதை நவீன காலகட்டத்தில் பேசக்கூடிய ஒருவராக ஓஷோ இருக்கிறார்.
பூர்வமீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை
பூர்வமீமாம்ஸை வேள்விச்சடங்குகளை முன்வைக்கக்கூடிய தரிசனம். ஓஷோ நூறு சதவீதம் ஒத்துப்போகாத விஷயம் இதுதான். அவர் வெறும் கிண்டல் வழியாகவே அதை நிராகரித்துச் செல்கிறார். ஆனால் உத்தர மீமாம்ஸையாகிய வேதாந்தத்துடன் அவர் உரையாடுவதற்கான இடம் உள்ளது. கீதைக்கு அவர் எழுதிய உரை அதற்கான மிகப்பெரிய சான்று. அந்த உரையை அவருக்கே உரித்தான முறையில் தொடங்குகிறார். ‘தான் பார்க்காத ஒன்றைப்பற்றி பார்க்கமுடியாத ஒருவனுக்கு ஒருவன் விளக்கியதுதான் கீதை’ என்று ஆரம்பிக்கிறார். சஞ்சயன் எதையும் பார்க்கவில்லை. திருதராஷ்டிரனுக்கு கண் தெரியாது. இவனுக்கு அவன் சொன்னதுதான் கீதை என்று தொடங்குகிறார். ஆனால் மிகப்பெரிய உரையை கீதைக்கு எழுதுகிறார்.
அத்வைதத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது இந்திரனைப்போல. இந்திரனுக்கு உடலெங்கும் ஆயிரம் குறிகள் இருந்தன. பின்பு அவற்றையெல்லாம் கண்களாக மாற்றிக்கொண்டான். ஆண்களை பொறுத்தவரை கண்ணும் குறியும் ஒன்றுதான் என்று சொல்வார்கள். அத்வைதம் ஆயிரம் குறிகள் கொண்ட தத்துவம். அதற்கு எல்லா தத்துவங்களுடனும் உறவு உண்டாகமுடியும். எல்லா தத்துவ தரப்புகளிலும் ஒரு டீஸ்பூன் அளவுக்காவது அத்வைதம் இருக்கும். ஜென் தத்துவம், சூஃபி தத்துவம், நவீன பௌத்த சிந்தனைகள் உள்ளிட்ட பலவற்றிலும் அத்வைதம் உண்டு.
பிரம்மமும் ஜீவனும் இரண்டல்ல என்பதே அத்வைதத்தின் வாதம். மிக விரிவான அளவில் இந்த வாதத்தை ஏற்றும் மறுத்தும் ஓஷோ பேசியிருக்கிறார். ஓஷோவின் உரையாடல் புள்ளி அத்வைதத்திற்கு நெருக்கமானது. பெரும்பாலும் தூய அத்வைதிகள் ஓரளவுக்கு ஓஷோவுடன் உரையாடக்கூடியவர்களாகவும் அவரை ஏற்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். குரு நித்யா உட்பட.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
சாத்தூர் பிச்சைக்குட்டி
வில்லிசைக் கலைஞர். மருத்துவர், ஹோமியோபதி மருத்துவம் பயின்றவர். அலோபதி மருத்துவத்திலும் அனுபவம் கொண்டவர். முறைப்படி கர்நாடக சங்கீதமும், தமிழ் இலக்கியமும் பயின்றவர்.எழுத்தாளர் சோ. தர்மன் சாத்தூர் பிச்சைக்குட்டியை பற்றி வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி என்னும் வாழ்க்கை வரலாறு நூல் எழுதியுள்ளார்
சாத்தூர் பிச்சைக்குட்டி – தமிழ் விக்கி
சார்ல்ஸ் ஆலன், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சில வருடங்களுக்கு முன்பு உங்கள் தளத்தில் வெளியான கடலூர் சீனுவின், பேரரசன் அசோகன் புத்தக வாசிப்பைத் தொடர்ந்து எனக்கு சார்லஸ் ஆலன் அறிமுகமானார். ஆலனின் கோரமண்டல் மற்றும் Mountain in Tibet நான் விரும்பி படித்த நூல்கள்.
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பது பொதுவாக சொல்லும் அறிவுரை. ஆனால் எனக்கு நதிகளின் ஊற்று முகமும் அது கடலில் சங்கமிப்பதை பார்ப்பது (அதைப் பற்றி அறிந்து கொள்வது) மிக பிடித்தமானது. ஊற்று முகங்கள் ஒரே நேரத்தில் எனக்கு வியப்பையும் ஏமாற்றத்தையும் அளிக்கும்.
சென்ற வாரம் உங்களுக்கு கடிதம் எழுதிய பிறகு மறுபடியும் Mountain in Tibet வாசித்தேன். பிரம்மபுத்திரா, இண்டஸ், சட்லஜ், கர்னால் நதிகள் மானசரோவரருக்கு அருகில் எங்கிருந்து உருவாகிறது என்பதை அறிய cartographers மேற்கொண்ட சாகச பயணங்களை விவரிப்பது.
அக்பரின் காலத்திலேயே புனித நதியான கங்கை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை அறிய அக்பர் ஒரு சிறு குழு அமைத்து பயணம் செய்கிறார்கள். அக்குழு திரும்பி வந்து கொடுத்த தகவல்களின்படி ” Purchas His pilgrimes” என்கிற புத்தகத்தின் வரைபடத்தில் கங்கையின் தோற்றுவாயை ஹரித்துவார் அருகில் குறித்து வைத்துள்ளார்கள்.
அதன் பிறகு அக்பரின் அரசவையில் இருந்த போர்ச்சுகீசிய Jesuits, திபத்தில் பிரெஸ்டர் ஜானின் ( Prester John) வழித்தோன்றல்கள் உருவாக்கிய ஒரு கிறிஸ்துவ குடி இருப்பதாக நம்பிக் கொண்டு பயணம் மேற்கொண்டார்கள்.
Father Antonio DeAndrade மற்றும் Manuel Marques இருவரும் சேர்ந்து ஸ்ரீ நகரில் இருந்து மானா பாஸ் வழியாக லடாக் சென்று அங்கிருந்து திபத்தை ( Guge) அடைந்தார்கள். அங்கே அவர்கள் எதிர்பார்த்த கிறிஸ்துவ மக்கள் இல்லை. திபத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு ராஜ்யம் Guge. தற்போது இவ்விடத்தின் பெயர் Tsaparang. அந்நிலத்தின் ராஜா அவர்களுக்கு ஒரு சர்ச் கட்ட அனுமதித்தார். ஐந்து வருடங்களில் அங்கு பத்து பதினைந்து Jesuits கோவாவில் இருந்து புறப்பட்டு வந்து சேர்ந்தார்கள். இவர்களின் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்டு ,கோபம் அடைந்த உள்ளூர் லாமாக்கள் லடாக்கின் படை உதவியோடு சர்ச்சை இடித்து விட்டு அவர்களை சிறைப்பிடித்தார்கள். ராஜாவை வெளியேற்றி லடாக்குடன் தங்களை இணைத்தார்கள்.
1712ஆம் ஆண்டு Ippolito Desideri எனும் இத்தாலியர் போப் ஆண்டவரின் ஆதரவுடன், Gage சென்ற Jesuits என்ன நேர்ந்தது என்று கண்டறிய ஆக்ராவிலிருந்து திபத் கிளம்பினர். Tartar இளவரசியின் உதவியுடன் லாசா சென்றார். 6 வது தலாய் லாமாவை சந்தித்தார். திபத்து மொழியில் புலமை பெற்றார். கிறிஸ்தவத்தை அவர்களுக்கு புரிந்த மொழியில் புரிந்த விளக்கங்களோடு மாற்றினர். அவர் அங்கு இருந்த சமயம் தான் சீனா லாசாவை ஆக்கிரமித்தது. திபெத் Manchu warriors அரசின் கீழ் வந்தது. Desideri லாசாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இப்படியாக 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிலிருந்து சென்ற இரண்டு Jesuits குழுக்களுக்குமே, கிறிஸ்துவை அங்கு சேர்க்க முடியவில்லை. கரு நாவலுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் உங்களுடன் இதை பகிர வேண்டும் என்று தோன்றியது.
பிரம்மபுத்திரா நதி மூலத்தை கண்டுபிடிக்க சென்ற பல சாகச பயணங்கள் பற்றிய தொகுப்புகள் மிக நேர்த்தியுடன் பதிவாகி உள்ளது. பிரிட்டிஷ் ராஜின் சர்வேயர் ஜெனரல் ஆக இருந்த Major James Rennal எப்படி இந்திய ” Pundits” முறையை உருவாக்கினார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இமாலய மலைகளில் சர்வே எடுக்க கற்றுக் கொள்பவர்களே ஆரம்ப காலங்களில் Pundit. நயின்சிங்க ராவத் பிரபலமானவர்.
இந்தியாவில் காஷ்மீர், லடாக், அஸ்ஸாம், குமான் பகுதிகளில் உள்ள கணவாய்கள் வழியாக எவ்வாறு Surveyors திபெத்திபத்தைச் சென்றார்கள் என்று விவரிப்பது ஜாக்கிரபி புக் மாதிரி இல்லை ஒரு திரில்லர் நாவல் மாதிரி தான் இருந்தது. ஆனால் யாரும் அருணாச்சலப் பிரதேசத்தின் வழியாக செல்லவில்லை. தலாய்லாமா தான் அந்த வழியில் வந்தவர்.
Mount Kailash மலையை சுற்றி நாலு பக்கங்களில் இருந்தும் 4 நதிகள் தோன்றுகிறது. இதில் பிரம்மபுத்திராவும் Tsangpo ஒரே நதி தான் என்று தீர்மானம் செய்ய, சரத் சந்திர தாஸ் ஆய்வு உதவுகிறது.
இந்நதிகள் பற்றி படிக்கும் பொழுது தென்னிந்தியாவில் உள்ள அகநாசினி நதி எனக்கு நினைவில் வந்தது. உத்தர கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையில் sirsi என்னும் இடத்தில உற்பத்தியாகும் இந்த நதி, 120கிமீ பயணித்து கடலில் கலக்கிறது. நடுவில் எவ்வித தடைகளும் கிடையாது. நதியின் முழு நீளத்திலும் எவ்வித சாக்கடைகளோ இன்டஸ்ட்ரியல் வேஸ்ட் கலப்பதில்லை. மனிதர்களின் கை அதன் மேல் படவே இல்லை. One of the pristine virgin rivers in India. காரிலேயே அதன் பாதையை ஒட்டி செல்லலாம். ஒரே நாளில் மூலத்திலிருந்து கடலில் சங்கமம் வரை சென்று பார்த்து விடலாம். 2 பெரிய நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது. அதில் ஒன்று பிரபலமான உன்சல் நீர்வீழ்ச்சி. Moonbow அடிக்கடி தோன்றும் ஒரு இடம்.
எதற்காக பிறப்பு எடுத்தோமோ அதை எவ்வித தடைகள் இன்றி சென்றடைவது தான் பேரானந்தம். நல்லூழ் கொண்ட நதி. பெயரைக் கேட்டாலே பரவசம் அளிக்கும் ஒரு நதி.
அன்புடன்,
மீனாட்சி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


