Jeyamohan's Blog, page 55
August 10, 2025
ஓஷோ: மரபும் மீறலும்-15
ஓஷோவின்
தியான
முறை
தமிழ் புனைவிலக்கியத்திலும் கவிதையிலும் முன்னோடியாக திகழ்ந்தவர் ந.பிச்சமூர்த்தி. அவர் ‘ஆத்தூரான் மூட்டை’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அது அக்காலத்தில் கும்பகோணத்தில் உண்மையில் இருந்த ஆத்தூரான் என்பவரை பற்றியது. அவரது பழக்கம் என்னவென்றால் சாலையில் செல்லும்போது கையில் சிக்கக்கூடிய காகிதங்கள், அவருக்கு பிடித்த மற்ற பொருள்களையெல்லாம் பொறுக்கி தனது மூட்டைக்குள் போட்டுக்கொள்வார். நாளடைவில் மூட்டை பெருத்துவந்தது. ஒரு கட்டத்தில் அவரால் அந்த மூட்டையை சுமக்க முடியவில்லை. அந்த மூட்டையை கீழிறக்கி வைக்கவும் முடியாது, அதில் மேன்மேலும் பொருள்கள் சேர்வதை தடுக்கவும் முடியாது. பின்பு மூட்டையை அசைக்கமுடியாமல் தரையில் இழுத்து செல்கிறார். அதன்பிறகு இழுக்கவும் முடியாமல் அந்த மூட்டையை பிடித்து அதன் அருகிலேயே படுத்துக்கொண்டு இறந்துபோகிறார்.
இதன் பொருள் என்னவென்று உங்களுக்கு உடனே தெரியும். ஒவ்வொருவரும் ஒரு ஆத்தூரான் மூட்டையுடன் இருக்கிறோம். அந்த மூட்டையை நம்மால் விடமுடியாது. அதை எப்படி கீழே வைப்பது என்பது நமக்கு தெரியாது. அப்போது நம்மிடம் வந்து ஒருவர் சொல்கிறார், ‘அதற்குள் இருப்பது வெறும் குப்பைதான். அது உனது மனச்சிக்கல். அந்த மூட்டையை மட்டும் நீ விட்டுவிட்டால் உன்னால் எழுந்து சென்றுவிட முடியும். ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழமுடியும்’. ஆனால் ஆத்தூரானை பொறுத்தவரை அது அவர் வாழ்நாள் முழுக்க சேகரித்த செல்வம். அதில் அவருடைய உழைப்பு உள்ளது. அவரிடம் இப்படி சொன்னால் அவர் என்ன சொல்லியிருப்பார் ? ‘என்ன உளறிக்கிட்டு இருக்கே? இதை நான் சேர்த்துவைக்க நாற்பது வருஷமாச்சு தெரியுமா ?’ என்று அதட்டியிருப்பார்.
புகழ்பெற்ற ஒரு நம்பூதிரி நகைச்சுவை உண்டு. நம்பூதிரி மாட்டின் வளைந்த கொம்புகளுக்கு இடையே கழுத்தை விட்டுக்கொண்டார். மாடு ஓடத்தொடங்கியது. ஊர்க்காரர்களெல்லாம் சேர்ந்து வளைத்துப்பிடித்து அவரை மீட்டனர். அப்போது ஒருவர் கோபமாக ‘என்ன நம்பூதிரி, கொஞ்சம்கூட யோசிக்காம இப்படி பண்ணிட்டீங்களே’ என்று கேட்டார். அதற்கு நம்பூதிரி, ‘அத மட்டும் சொல்லாதே. முப்பத்தாறு வருஷமா நான் இதைத்தவிர வேறு எதுபற்றியும் யோசித்தது கிடையாது’ என்றார். இதை எப்படி செய்வது என்பதைத்தான் இத்தனைக்காலம் யோசித்திருக்கிறார். இப்போது செய்துபார்த்துவிட்டார்.
நம் வாழ்க்கை என்பது இப்படியான அபத்தங்கள் வழியாக சென்றுகொண்டிருக்கிறது. நாம் அசட்டுத்தனங்களையே யோசித்து, கனவுகண்டு, அர்த்தமில்லாதவ்ற்றைச் சேர்த்துக்கொண்டு, இங்கே வாழ்கிறோம். அதை ஒருவகையில் இயல்புநிலை நோக்கி திருப்பக்கூடியவையாக ஓஷோவின் தியான முறைகள் உள்ளன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், நீங்கள் அந்த தியான முறைக்கு சென்றீர்கள் என்றால் அது இயல்பு கடந்த ஒன்று என்றும் நீங்கள் இயல்பாக இருப்பதாகவும் தோன்றும். நீங்கள் சுயபுத்தியோடும் தர்க்கபுத்தியோடும் இருப்பதாகவும், அது கிறுக்குத்தனமாகவும் தோன்றும். ஆனால் உண்மையில் அந்த தியானத்தின் நோக்கம் என்னவென்றால் ஒரு கிறுக்கனுக்கு இயல்நிலையை உருவாக்குவதற்கான முயற்சியே.
டைனமிக் தியானம்
ஓஷோ தனது தியான முறைக்கு Dynamic Meditation என்று பெயரிட்டார். பின்னர் அதற்கு வேறு பெயர்களும் வந்தன. ஆனால் அந்த சொல் அவரால் புகழ்பெற்றது என்பதால் நாம் அதையே பயன்படுத்துகிறோம். அவருடைய பரிணாமத்தின் நான்கு கட்டங்களில் மூன்றாவது நிலையில் அவர் இந்த தியான முறையை ஏற்படுத்த முக்கிய காரணம், அறிவார்ந்து நிறைய பேசிவிட்டோம், அவையனைத்தும் இன்னொரு வகை அறிவாகத்தான் ஆகிறது, எனவே அதை சமநிலைப்படுத்த தராசின் மறுபக்கத்தில் ஒரு அறிவின்மையை அல்லது எதிர்அறிவை வைக்கலாம் என்ற அவருடைய நோக்கமே.
ஆனால் இந்தியாவின் மரபார்ந்த தியான முறைகளில் பழக்கம் உள்ளவர்களுக்கு ஓஷோவின் தியான முறைகள் நகைப்புக்குரியவையாகவே இருந்தன. தியான முறைகளில் இருக்கும் மிகப்பெரிய அபாயம் என்னவென்றால், சிலகாலம் நீங்கள் தியான முறையை பயின்றுவிட்டீர்கள் என்றால் உங்களை நீங்களே ஒரு ஆன்மீக குருவாக கற்பனை செய்துகொள்வீர்கள் என்பதுதான். எனது அறிதலில் மிக அதிகமான ஆன்மீக குருக்கள் நடமாடும் இடம் கோவை. நேற்று ஒருநாள் மட்டும், எப்படி நான் மெய்ஞானத்தை அடைவது என்று ஆலோசனை சொல்லி பதினைந்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. இந்த ‘ரெடிமேட் ஞானிகள்’ ஓஷோவை சகஞானியாக எண்ணிவிடுவார்கள். எனவே அத்தனைபேரும் ஓஷோவைப்பற்றி பரிகாசமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். கபீருடைய பாடல் என்று நினைக்கிறேன். ‘கங்கையில் குளித்தால் மோக்ஷத்திற்கு செல்லலாம் என்றால் கங்கையில் உள்ள மீன்கள் எல்லாம் மோக்ஷத்திற்கு செல்லும்தானே’ என்றொரு வரி உண்டு. அதை கொஞ்சம் மாற்றி வேறுவிதமாக சொல்வார்கள். ‘சக்கரமாக சுழன்றால் மெய்ஞானம் வரும் என்றால் அத்தனை வீட்டுக்கும் ஒரு ரங்கராட்டினம் வாங்கிக்கொடுக்கலாமே’ என்று. கையை விரித்துச் சுழன்றுவரும் ஓஷோவின் தியான முறை பற்றிய கேலி இது.
எது தியானம், எது தியானமல்ல என்று ஒரு சிறிய வரையறை கொடுக்கவேண்டியுள்ளது. தியானம் என்ற சொல் ‘ஆழ்ந்து நினைப்பது’ என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது. வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்களில் ‘அவன் என்னை நோக்கி கத்தியுடன் வந்தான். நான் என்ன செய்வது என்று தியானித்துவிட்டு…’ என்று வரும். அங்கே தியானித்துவிட்டு என்றால் ஆழமாக யோசித்துவிட்டு என்று பொருள்.ஒரு வசதிக்காக இவ்வாறு பிரித்துக்கொள்ளலாம். யோகம் என்ற சொல்லின் ஒரு மரூஉதான் தியானம். ஆழ்நிலையை அடைவதற்கான அக, புற பயிற்சிகளை மொத்தமாக யோகம் என்றும், அகப்பயிற்சியை மட்டும் தியானம் என்றும் சொல்லலாம். தியானம் என்ற சொல்லுக்கு சமானமாக தமிழில் ஊழ்கம் என்று சொல்லப்படுகிறது. அது ஒரு சமண வார்த்தை. பௌத்தர்களும் அதை பயன்படுத்துகிறார்கள். திருமுறைகளில் அந்த வார்த்தை உள்ளது என்று ஒருவர் சொன்னார். எனக்கு அதுபற்றி தெரியவில்லை.
ஆழ், ஊழ் இரண்டும் ஒன்றுதான். ஆழ்ந்து செல்லுதல் என்பதில் இருந்து ஊழ்கம் என்ற சொல் வந்திருக்கலாம். ‘ஊழ்’ என்ற சொல்லேகூட ஆழம் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம். இச்சொல் நெடுங்காலமாக இங்கே இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் Contemplation என்று மொழிபெயர்க்கிறார்கள். ஆனால் அதன் பொருள் ‘கூர்ந்து கவனித்தல்’ என்பது மட்டுமே. Meditation என்பதும் ஊழ்கத்திற்கு இணையானது அல்ல. ஒன்றில் குவிந்திருத்தல் என்றே அதற்குப் பொருள். தியானம் / யோகம் என்பதுதான் சரியான வார்த்தை. யுஜ் என்ற வேர்ச்சொல்லில் இருந்து யோகம் என்ற சொல் வந்தது என்பார்கள். இணைத்தல் / ஒருங்கிணைதல் என்பது அதன் பொருள்.
இந்தியாவில் நெடுங்காலமாக இந்த தியான முறைகள் இருந்திருக்கின்றன. நமக்கு இன்று கிடைத்திருக்கக்கூடிய மிகத்தொன்மையான அடையாளங்களில் ஒன்று, சிந்து சமவெளியில் கிடைத்த, யோகத்தில் அமர்ந்திருக்கும் பசுபதி உருவம்தான். சிவன் யோகேஸ்வரன் என்று சொல்லப்படுகிறான். கிருஷ்ணனும் யோகத்தில் அமர்ந்தவனே. இந்து மரபின் எல்லா தெய்வங்களும் யோகத்திலமர்ந்த தோற்றம் கொண்டவையே. சமணத் தீர்த்தங்காரர்கள் அனைவருமே யோகத்தில் அமர்ந்தவர்கள்தான். பௌத்தம் யோகத்தை வளர்த்தெடுத்தது, யோகாசார மரபு என ஒன்று அதற்குள் உண்டு.
எவை தியானமல்ல ?
எது தியானம், எது தியானமல்ல என்கிற வேறுபாடு இங்கு மிகவும் மழுங்கிவிட்டதால் அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஜபம் என்பது தியானமல்ல
மந்திர ஜபம், நாம ஜபம் போன்றவை தியானமல்ல. வைதிக மரபின் அடையாளமாக இருப்பது நாம ஜபம்தான். பல்வேறு எண்ணிக்கைகளில் சொல்லப்படவேண்டிய நாம ஜபங்கள் உள்ளன. கூட்டாக சொல்வதும், தனியாக சொல்வதும் உள்ளன. அவர்கள் செய்தே ஆகவேண்டிய ஒன்றாக வேதம் அதை சொல்கிறது. ஜபம் என்பதை ஒரு சொல்லை சொல்லிச்சொல்லி கடத்தல் எனலாம். சொல்லச்சொல்ல சொல் பெருகி, தன்னைத்தானே இல்லாமலாக்கி வேறொரு இடத்திற்கு கொண்டுசெல்லும்.
மகாபாரதத்தில் தியானம் என்ற சொல் வருகிறது. ஆனால் மகாபாரத காலம் வரை யோகமுறை என்பது நாமஜபத்தோடு தொடர்புடைய விஷயமாகத்தான் இருந்துள்ளது. மந்திர உச்சாடனம், மந்திரத்தை உருவாக்கிக்கொள்ளுதல், தெய்வம் வந்து மந்திரத்தை அளித்து அதை பல்லாயிரம் முறை சொல்வது போன்றவை உள்ளன. தபஸ் என்பதே மந்திரத்தோடு தொடர்புடையதாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பாரதத்தை ஆராயக்கூடிய நவீன அறிஞர்கள் அதற்குள் யோகத்தை பற்றி நிறைய குறிப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். அது வைதிக மரபோடு தொடர்புடையது அல்ல, அவற்றுக்கு வெளியே இருக்கும் மரபுகளோடு தொடர்புடையதாக உள்ளதென்றும் சொல்கிறார்கள். மகாபாரதத்திற்கு பிறகுதான் கீதை உருவாகி வந்தது என்பது என் எண்ணம். அதில் கிருஷ்ணன் தன்னை ஒரு யோகி என்று சொல்லிக்கொள்கிறான். அர்ஜுனன் ஒரு யோகியாகத்தான் மகாபாரதத்தில் வருகிறான். கீதையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு யோகம் என்றே அறியப்படுகிறது. இந்த யோகம் என்ற சொல் மகாபாரதத்திலும் கீதையிலும் வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.
பிரார்த்தனை என்பது தியானமல்ல
வேண்டுதல் என்பது கேட்டுப்பெறுவது. அது தவறு என்று நான் சொல்லவில்லை. நாம் உலகியலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மை சூழ்ந்திருக்கும் முடிவில்லாத வெளியுடன், நமக்கு அப்பால் இருக்கும் விசைகளுடன், தெய்வங்களுடன் நாம் நமது எளிய ஆசைகளை சொல்லி வேண்டுவது என்பது தவறல்ல. அது தவறு என்று நானும் சொன்ன காலமுண்டு. ஆனால் உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தபின்பு அதை சொல்லமாட்டீர்கள். ஏதோவொரு தருணத்தில் வேண்டிக்கொண்டிருப்பீர்கள். வேண்டுதல் என்பது எல்லா மதத்திலும் உள்ளது. ஆனால் அது யோகமோ தியானமோ அல்ல.
அதாவது, தியானமானது வைதிக மரபிலும் இல்லை, பக்தியிலும் இல்லை. மிக சமீப காலம் வரைக்கும் ஆலய வழிபாட்டின் ஒரு பகுதியாக யோகமோ தியானமோ இருந்தது கிடையாது. ஆலயத்தில் நாமஜபங்கள், வேண்டுதல்கள், வேள்விகள் உண்டு. ஆனால் யோகமும் தியானமும் கிடையாது. அது துறவிகளுக்குரியதாக, வேறுவகை சாதகர்களுக்கு உரியதாகவே இருந்திருக்கிறது. தமிழகத்தில் யோகத்திற்கு இத்தகைய நீண்ட மரபு இருந்திருந்தும் கூட பதஞ்சலி யோகத்திற்கு மொழிபெயர்ப்போ உரையோ கிடையாது. ஏனெனில் அது குரு சிஷ்ய தொடர்ச்சி வழியாக சொல்லிக்கொடுக்கக்கூடியதாக உள்ளது. அதற்கு நூல் அவசியமானதாக இருக்கவில்லை.
இந்திய மரபிலுள்ள யோகமுறைகள் பல. அவற்றைச் சுருக்கமாக அறிந்துகொண்டால் ஓஷோவின் தியானம் எந்தெந்த மரபுகளில் இருந்து உருவானது என்று அறியமுடியும்.
பதஞ்சலி யோகம்
இந்தியாவின் மைய யோகமரபு என்பது பதஞ்சலி யோகம்தான். அது ஆறு தரிசனங்களில் ஒன்றாக, சாங்கியத்தின் துணை தரிசனமாக உள்ளது. பதஞ்சலி யோகசூத்திரங்கள் நூல் ஒரு வழிநூலே. அதற்கு முன்னால் பல நூல்கள் இருந்திருக்கின்றன. அந்த நூல் ‘யோக: சித்த விருத்தி விரோத:’ என்று தொடங்குகிறது. விருத்தி என்றால் வளரும் செயல். சித்தத்தின் வளரும் செயல்பாட்டை ஒறுத்தல் என்பதே யோகம். ஒரு நதியை அதன் ஊற்றுமுகத்திற்கு கொண்டுசெல்வது. ஒரு புருஷன் தன்னை பரமபுருஷனாக உணர்வதும், பிரகிருதியை மூலப்பிரகிருதியாக உணர்வதும், பிரகிருதி-புருஷ பேதத்தை அழித்து பெருநிலையை உணர்வதும் அதன் இலக்கு. அதற்கான வழிமுறைகளாக யம நியமங்கள் கற்கப்படுகின்றன. ஓஷோ பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.
தாந்திரீக மரபு
இரண்டாவது முக்கியமான மரபு என்பது தந்த்ரா எனும் தாந்திரீக மரபு. ஓஷோ அதுபற்றி நிறைய பேசியிருக்கிறார். இம்மரபை பற்றி தனியாகத்தான் பேசவேண்டும். இருப்பினும் இதை இங்கு சுருக்கமாக சொல்கிறேன். தந்த்ரா என்ற சொல்லின் நேரடிப்பொருள் ‘நடைமுறை செயல்பாடு’ என்பதே (Tantra – The regular order). இச்சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுவதால் பல்வேறு குழப்பங்கள் எழுகின்றன. உதாரணமாக சிற்ப சாஸ்திரமும் தந்த்ரா என்று சொல்லப்படுகிறது. பூஜை முறைகள், தியான முறைகள் போன்றவையும் தந்த்ரா என்று சொல்லப்படுகின்றன. இவை மூன்றும் வேறுவேறே.
தாந்திரீக வழிபாட்டு முறை (Tantric Rituals)
தமிழகத்தில் ஆகம முறைப்படியான வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால் கேரளத்தில் தாந்திரீக முறைப்படியான வழிபாடுகள் உள்ளன. அந்த தந்திரம் என்பது நாம் இன்று சொல்லக்கூடிய யோக தந்திரங்களோடு இணைந்தது அல்ல. அது வழிபாட்டு, பூஜை முறைகளை பற்றிய தந்திரம். அதற்கு ஆதாரமாக தந்திர சமுச்சயம் (Tantra Samuccaya) என்ற நூல் உள்ளது. அது பஞ்ச மகாரங்கள் என்பதோடு சேர்ந்தது. மது, மங்கை, மாமிசம், மாவு, மந்திரம் என்பவை பஞ்ச மகாரங்கள். கைகளால் காட்டப்படும் சைகைகள், உச்சாடனங்கள் மட்டுமேயான மந்திரங்கள் போன்றவை காணப்படும். அதன் வழிபாட்டு முறையே முற்றிலும் வேறுபட்டது.
வரலாற்று ரீதியாக ராஜராஜ சோழன் கேரளத்தில் தாந்திரீக பூஜையை நிறுத்தி ஆகம முறையை கொண்டுவந்தான். பதினான்காம் நூற்றாண்டில் கேரள மன்னர்கள் ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் தாந்திரீக பூஜை முறையை கொண்டுவந்தனர். இன்றுவரை கேரள கோயில்களின் அதிகாரம் என்பது தந்திரீகர்கள் எனும் உபாசகர்களிடமே உள்ளது. அவர்கள் பரம்பரையாக வரக்கூடியவர்கள்.
தாந்திரீக சிற்பமுறை (Tantric Iconography)
சிற்பங்கள், அதில் உள்ள முத்திரைகள் எப்படி அமையவேண்டும் என்று சொல்லும் தந்திர நூல்கள் உள்ளன. சைவமரபில் நெடுங்காலம் தாந்திரீகம் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. சைவத்தின் பல பிரிவுகள் தாந்திரீக நடைமுறை உள்ளவையே. இங்குள்ள எல்லா சிவாலயங்களிலும் தாந்திரீகம் தொடர்பான சிற்பம் ஏதோவொன்று இருக்கும். சிலவகை சிற்பங்கள் தாந்திரீக மரபால் மட்டுமே உருவாக்கப்பட்டவை.
உதாரணமாக, யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு நிற்கும் கரியுரித்த சிவன் (கஜசம்ஹார மூர்த்தி). அதற்கு கஜமுகாசுரனை சிவன் வதம் செய்த கதையை சொல்வார்கள். ஆனால் தாந்திரீகத்தில் அது வேறொரு அர்த்தம் கொண்ட வடிவம். ‘இரு நிலவுகள் எழுந்த இரவில் எழும் ஒளி’ என்று அதற்கு குறியீட்டுரீதியான அர்த்தம். யானையின் இரண்டு தந்தங்கள் இரண்டு நிலவுகள். அந்த யானைதான் இரவு. அதை கிழித்து எழக்கூடிய அனல் வடிவம்தான் சிவம்.
அதுபோல லிங்கம் பிளந்து வெளிவரக்கூடிய லிங்கோத்பவர் வடிவம். அந்த லிங்கத்தின் பிளப்பு யோனிவடிவில் இருக்கும். ஆவுடையில் இருந்து வெளிவரக்கூடிய சிவன். அதுவும் தாந்திரீகத்தில் மிக நுட்பமான பொருள் கொண்டவையே. மேலும், பிக்ஷாடனர், கங்காளர் போன்ற சிவ வடிவங்களையும் தாந்திரீகத்தோடு தொடர்புடையதாக சொல்வார்கள்.
இந்த வகைமைகளில் ஒன்றே தாந்தீர்க யோகமுறை.
தாந்திரீக யோகமுறை (Tantric Yoga)
மேற்சொன்ன இரண்டு தாந்திரீக முறைகளும் தாந்திரீக யோக முறையினின்றும் வேறுபட்டவை. அந்த யோகமுறை இந்நாட்டில் நெடுங்காலம் மறைவாகத்தான் இருந்திருக்கிறது. நமது வரலாற்றில் மகாபாரத காலத்திலேயே அது மிக வலுவாக இருந்திருக்கிறது. ஆனால் ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பக்தி இயக்கம் வலுவாக இருந்த காலங்களில் பக்தி மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது. பக்தி மரபு வேள்விச் சடங்குகளையும் முக்கியமாக கருதவில்லை. மறுபுறம் தாந்திரீக சடங்குகளை வெறுத்து ஒதுக்கியது. அத்தகைய சடங்குகளுக்கு சமூகத்தில் இடமில்லாமல் ஆக்கியது.
இந்தியாவில் எழுநூறாண்டுகாலம் தாந்திரீகத்திற்கு எதிரான மையவோட்டம் உருவானது. தாந்திரீகர்கள் தலைமறைவாகவும் வேறு உலகை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் சித்தர்கள், வீரசைவர்கள், அகோரிகள், நாகா துறவிகள் என வெவ்வேறு விதமாக இந்தியா முழுக்க உள்ளனர். தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு வரை தாந்த்ரீக சைவம் மிக வலுவாக இருந்தது. குறிப்பாக பாசுபதம். அதன் முதன்மையாசிரியரான லகுலீஸர் இங்கே தெய்வத்துக்கு இணையாக வழிபடப்பட்டார்.ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் பக்தி இயக்கம் உருவானது. அதன் பின் தமிழ்நாட்டில் மதங்களின் மையப்போக்கு என்பது பக்தியால் நிரம்பியிருந்தது. ஒரு சாமானியனிடம் தாந்திரீக சடங்குகளுக்கு செல்லவேண்டாம் என்றுதான் ஆழ்வார்களோ நாயன்மார்களோ சொல்லியிருப்பார்கள். அவை பயனற்றவை என்று சொல்லும் நூல்கள் பக்தி இயக்கத்திலுள்ளன.
பின்பு இங்கு வந்த வெள்ளையர்கள்தான் தாந்திரீக மரபை கண்டுகொள்கிறார்கள். இப்படியொரு மரபு குரு- சிஷ்யத் தொடர்ச்சியாக இங்கு இருந்ததை காண்கிறார்கள். முக்கியமாக பிரம்மஞான சபையின் மேடம் பிளவாட்ஸ்கி (Helena Petrovna Blavatsky) இதுபற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு சிறிதளவுதான் தெரியும். பெரும்பகுதி கற்பனைதான். ஆனால் இப்படியொரு விஷயம் இருப்பதை அவர்களால் கண்டடைய முடிந்தது. அதன்பிறகு ஆய்வாளராகிய, ஆர்தர் ஆவலோன் என்ற பெயரில் எழுதிய சர் ஜான் வுட்ரோஃப் (Sir John Woodroffe) முக்கியமானவர். அவர் ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார். ஒரிசாவிலும் வங்காளத்திலும் பணிபுரிந்ததால் தாந்திரீகர்களை சந்திக்கவும் அவர்களிடமிருந்து தெரிந்துகொள்வதற்கும், அவர்களின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திய தாந்திரீகத்தை பற்றி பேசும்போது அவரைப்பற்றி பேசாமல் இருக்கமுடியாது.அதுபோல அகேகானந்த பாரதி (Agehananda Bharati) என்ற அமெரிக்கர் இந்தியா வந்து துறவுபூண்டு இந்திய தாந்திரீக முறை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இவர்கள் வழியாகத்தான் தாந்திரீகம் பற்றி நமக்கு தெரியவருகிறது.
பொதுவாக இந்த தாந்திரீக யோகமுறை பலவாறாக பிரிந்திருக்கிறது. அது ஒற்றை அமைப்பு அல்ல. அதில் நான்கு வெவ்வேறு மார்க்கங்கள் உள்ளன.
1) வாசியோகம் – இது மூச்சுப்பயிற்சி சார்ந்தது. இதை தென்னிந்தியாவை சார்ந்ததாக சொல்கிறார்கள். வட இந்தியாவிலும் அதற்கு வேர்கள் உண்டு என்றும் சிலர் சொல்கின்றனர். இதுபற்றி ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் அது தெற்கில் மிக வலுவாக இருந்திருக்கிறது. திருமூலர் அதன் முக்கியமான ஆளுமை என்று இங்குள்ள சைவர்கள் சொல்கின்றனர்.
2) அந்தர்யோகம் (அ) சித்தயோகம் – இது அகப்பயிற்சிகளால் ஆன யோகமுறை. ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்தவர்கள் அத்தகைய பயிற்சியை அளித்திருக்கிறார்கள். இதில் புறப்பயிற்சிகள் குறைவு.
3) ஹடயோகம் – இது முழுக்கவே உடலைப் பயிற்றுவிக்கும் பயிற்சி சார்ந்தது.
4) சக்ரயோகம் (அ) முத்ரா யோகம் – இந்த முறைமையில்தான், இன்று அதிகமாக பேசப்படக்கூடிய ஏழு சக்கரங்கள், மையங்கள் உள்ளன. மூலாதாரம் முதல் சஹஸ்ரம் வரைக்குமான ஏழு சக்திநிலைகள் / தாமரைகள் / சக்கரங்கள். அவை உருவகங்கள்தான்.
இதை இங்கே முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும். சென்னை விஜயா பார்க் விடுதிக்கு அருகில் சந்துக்குள் ஒரு அறிவிப்புப்பலகை ஒன்றை பார்த்தேன். ‘இங்கு மூலாதாரம் திறந்து கொடுக்கப்படும், ரூ.300’ என்று இருந்தது. அப்போது என் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கேட்டார் ‘சார் முன்னூறு ரூபாய்தானா?’ என்று. ‘திறக்குறதுக்கு முன்னூறுதான். ஒரு வாரம் கழித்து, சாமி மூடிக்கொடுங்க என்று கேட்டு செல்வீர்கள். அப்போது முப்பதாயிரம் கேட்பார்’ என்றேன்.
மூலாதாரத்தில் குண்டலினி சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. குண்டலினி என்றால் தீ, குண்டத்தில் இருப்பவள். அந்த நாகவடிவிலான ஆற்றல் எழுத்து சஹஸ்ரத்திற்கு செல்வது என்பது உருவகமாக சொல்லப்படுகிறது. அது பல வடிவங்களில் பேசப்படுகிறது. ஆர்தர் ஆவலோன் ஒரு விளக்கமளிக்கிறார். மூலாதாரம் என்று சொல்லப்படுவது படைப்பாற்றல் (creativity) / இனப்பெருக்க ஆற்றல். அதில் இருந்து பசி, சொல், சிந்தை என்பதாக மேல்நோக்கி செல்கிறது என்கிறார். அதன் முழுமை ஆயிரமிதழ்கொண்ட தாமரையாக மலர்கிறது , அதுவே சகஸ்ரம்.
இந்த நான்கு முறைகளும் இந்தியாவில் பிரபலமாக இருந்திருக்கின்றன. இவை தனித்தனியாக இருந்திருக்கின்றனவா என்றால் அவ்வாறும் சொல்லமுடியாது. சித்தர் பாடல்களை பார்த்தால் இந்நான்கும் கலந்துதான் காணப்படுகின்றன. குறிப்பாக இந்நான்கும் ஒரே இடத்தில் இருக்கும் நூல் என்றால் அது திருமந்திரம்தான். அதை முழுக்கவே ஒரு யோக நூலாகத்தான் சொல்லவேண்டும். தமிழர்களின் துரதிருஷ்டம், அதை ஒரு அரசியல் நூலாக புரிந்துகொள்ள முற்பட்டிருக்கிறோம். ஒரு யோகிதான் அதுபற்றி உரை எழுதவும் பேசவும் முடியும். ஒரு சிறு வட்டத்திற்குள் மட்டும்தான் அதுபற்றி விவாதிக்கவும் முடியும்.
கேளி யோகம்
கேளிக்கையாக, கொண்டாட்டமாக அமையும் ஒரு யோகமுறை உண்டு. அதன் சிறு பகுதியை நீங்கள் மதுராவுக்கு சென்றால் காணலாம். நான் நண்பர்களுடன் மதுராவிற்கு சென்றிருந்தேன். அப்போது வழிகாட்டி ஒருவர் கைதட்டி எங்களிடம் ‘பாருங்க, நீங்க இப்போ பிருந்தாவனம் வந்திருக்கீங்க. இது ராதையின் நிலம், பிரேமையின் நிலம். இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக மட்டும்தான் இருக்கவேண்டும். இங்கு யாரும் கவலைப்படக்கூடாது. யாரும் எதைப்பற்றியும் எதிர்மறையாக பேசக்கூடாது’ என்றார். ‘யாருக்கெல்லாம் சுகர் இருக்கு’ என்று கேட்டுவிட்டு, ‘சுகர் இருந்தாலும் கவலைப்படக்கூடாது. எல்லோரும் லட்டு எடுத்துக்கோங்க’ என்றார். ‘ராதே ஷ்யாம் சொல்லி எல்லோரும் சிரிங்க’ என்றார். எல்லோரும் சிரித்தோம். இது யோக முறையின் ஒரு சிறு பகுதி.
நான் அலைந்து திரிந்த காலங்களில் காசியில் ஒரு ரயிலில் ஏறி படுத்தேன். பயங்கரமான குளிர். குளிருக்கு சிறந்த வழி இருக்கைகளுக்கு அடியில் படுப்பதுதான். திடீரென்று ஒரு கூட்டம் வந்து ரயிலில் ஏறியது. எல்லோரும் பஞ்சகச்சம், தலைப்பாகை கோலத்துடன் கையில் வாத்தியங்களோடு இருந்தனர். வந்து அமர்ந்து பாடத்தொடங்கினர். என்னை அழைத்து ‘கிருஷ்ணா இங்க வா, சாப்பிடு’ என்றனர். அனைத்தும் இனிப்பு வகைகளாக இருந்தன. இரவு முழுக்க பாடிக்கொண்டே இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு தமிழ் தெரியும். அவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஸ்ரீசைலம் பக்கத்தில் தையற்காரராக பணிபுரிகிறார். ஆண்டில் ஆறுமாதங்கள் தையற்காரராக இருந்து சம்பாதித்ததை மனைவியிடம் கொடுத்துவிட்டு, அதன்பின் அங்கிருந்து கிளம்பி இரவும் பகலும் தன்னை ராதையாக மட்டும் உருவகித்துக்கொண்டும் பாடிக்கொண்டும், ஒரு பெரிய கூட்டத்துடன் பண்டரீபுரம் வரைக்கும் சென்றுவிட்டு பின்பு உடுப்பி வழியாக திரும்பி தனது ஊருக்கு வந்து மீண்டும் தனது தையல் தொழிலை செய்யத்தொடங்குவார்.
இப்படியொரு வாழ்க்கை உள்ளது. இனிப்பும் பாட்டும் மட்டுமேயான வாழ்க்கை. நான் அப்போது மெலிந்திருப்பேன். கிளம்பும்போது என் கைகளை பிடித்துக்கொண்டு சொன்னார் ‘உடம்ப பாத்துக்கோ கிருஷ்ணா, கிருஷ்ண மதுரத்தை தங்கத்தட்டில்தான் வைக்கணும்’. அதுபற்றி ஒரு அனுபவக்கட்டுரை எழுதியிருக்கிறேன்.
சுவாமி ஆத்மானந்தா எங்கள் ஊரை சேர்ந்தவர். அவரது இயற்பெயர் கிருஷ்ண மேனன். அவர் கேரள அரசில் உயர் காவலதிகாரியாக பணியாற்றியவர். ஒவ்வொரு நாளும் தனது வீட்டு முகப்பில் வேதாந்த வகுப்புகள் நடத்துவார். அந்த வகுப்புக்கு திருவிதாங்கூர் மகாராஜா வருவார். பின்பு ஒன்பது மணிக்கு கிருஷ்ண மேனன் சீருடை அணிந்து பணிக்கு சென்று மகாராஜாவை கண்டு சல்யூட் அடிப்பார். அவருடைய உரையை கேட்பதற்காக ஜூலியன் ஹக்ஸ்லி (Julian Huxley) வந்திருக்கிறார். உலகின் முக்கியமான பல சிந்தனையாளர்கள் வந்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமி தனது நினைவுக்குறிப்பில் க.நா.சு. அங்கு வந்ததைப்பற்றி எழுதியிருக்கிறார். கிருஷ்ணன் நம்பி அங்கு சென்றுவந்து அது ஐ.நா.சபை மாதிரி இருப்பதாக சொன்னதையும் எழுதியிருக்கிறார். க.நா.சு.வுக்கு பிடித்த புகழ்பெற்ற ஆத்மானந்தரின் மேற்கோள் ‘Waves are nothing but water. So is the sea’.
ஆனால் திடீரென்று ஒருநாள் அவர் ராதையாக மாறினார். புடவையெல்லாம் கட்டி, தலையில் பூச்சூடி ராதையாக வாழ்ந்தார். அந்த காலகட்டத்தில் மட்டும் அவர் கவிஞராக இருந்தார். அதற்கு முன்னர் அவர் கவிஞரல்லர். ஆனால் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், இன்றும் புகழ்பெற்று இருக்ககும் ராதா மாதவம் என்ற இசைப்பாடலை எழுதினார். அதன்பிறகு மீண்டும் வேதாந்தியானார். இடையில் அத்தகைய குறிப்பிட்ட யோகம் அவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ராதையாக இருப்பது ஒன்று, கிருஷ்ணனாக இருப்பது ஒன்று என இருமுனைகளில் அந்த யோகம் உள்ளது.
ஆனால் அந்த யோகத்தை தவறாக செய்த ஒருவர் என்று காந்தியை சொல்லலாம். அவருக்கு சில ஆலோசகர்கள் இருந்திருக்கிறார்கள். ரைஹானா தயாப்ஜி (Raihana Tyabji) என்பவர் அதுபற்றி காந்திக்கு எழுதியிருக்கிறார். காந்திக்கு போலோநாத் என்ற ஆசிரியர் இருந்திருக்கிறார். நான் அதுபற்றி காந்தியும் காமமும் என்ற கட்டுரை எழுதியிருக்கிறேன்.இன்றைய காந்தி நூலில் அக்கட்டுரை உள்ளது. அந்த ஆலோசனையை காந்தியின் பாரிஸ்டர் மனப்பான்மை தவறாக புரிந்துகொண்டது. வழக்குரைஞராக இருப்பதன் அபாயம் அது. எதையும் தப்பாகப் புரிந்துகொள்ளுதல். இதை நான் எனது நண்பர் ஈரோடு கிருஷ்ணனிடம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். காந்தி அந்த யோகத்தை வேறுவிதமாக புரிந்துகொண்டு, ஆசிரியரில்லாமல் தானே செய்யத்தொடங்கி ,கூடுமானவரை எல்லா அவப்பெயர்களையும் வாங்கிக்கொண்டார். யோகத்தை அரசியல் எனும் சந்தை நடுவே வைத்து செய்தவர் என்று அவரை சொல்லலாம்.
சமணத்தின் யோகம்
சமணத்தின் அனைத்து தீர்த்தங்கரர்களும் யோகத்தில்தான் அமர்ந்திருக்கின்றனர். நின்றுகொண்டிருப்பதைக்கூட உத்திஷ்ட யோகம் என்பர். உள்ளங்கைகளை ஒன்றின்மீது ஒன்றாக விரிந்த நிலையில் வைத்திருப்பது உபேக்ஷா. ஆனால் அவர்கள் யோக முறைமை பற்றி குறைவாகத்தான் எழுதியிருக்கிறார்கள். அவர்களது முறைமை துறவுதான். ஒவ்வொன்றாக உதிர்த்துக்கொண்டே செல்வது. ராக்கெட் மேலே செல்லச்செல்ல எது தன்னை மேலே தூக்கிவிட்டதோ அந்த எரிபொருள் கலனை உதிர்த்துவிட்டுதான் செல்லும். ஞானம் வழியாக மேலே சென்று அந்த ஞானத்தை உதிர்த்துவிடுவது அவர்களது வழி.
ஓஷோ அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கிறார். துறவு சரியானது. ஆனால் எதை வைத்து துறப்பாய் ? அதைவிட பெரிய ஒன்றைக் கொண்டுதானே ? அந்த ஒன்றை எப்படி வெளியே தள்ளமுடியும் ? ஒன்றை துறப்பதற்கு நீ வைராக்கியம் என்பதை உருவாக்கிக்கொள்வாய். ஆனால் அந்த வைராக்கியத்தை உன்னால் துறக்க முடியாது என்கிறார்.
இதற்கு ஒரு சர்தார்ஜி நகைச்சுவை சொல்கிறார். சர்தார்ஜி ஒருவர் இயந்திரத்தை இயக்குபவர். ஒருநாள் இடதுகையில் பெரிய கட்டு போட்டிருந்தார். ஒருவர் என்னவென்று கேட்டதற்கு மெஷினில் கை மாட்டிக்கொண்டுவிட்டதாக சொன்னார். அதை கேட்டவர் ‘நல்லவேளை, வலதுகை மாட்டியிருந்தா என்ன ஆயிருக்கும்’ என்றார். அதற்கு சர்தார்ஜி சொன்னார், ‘எனக்கு தெரியாதா, நான்தான் கடைசி நிமிஷத்துல கையை எடுத்துட்டு இடதுகையை விட்டுட்டேன்ல’. அதுபோல இவர்களுடைய துறவு என்பது இன்னும் பெரிய ஒன்றை பற்றிக்கொள்வதுதான் அது. அத்தகைய வைராக்கியமே துறவுக்கு எதிரானது என்கிறார். எனவே அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
பௌத்தத்தின் யோகம்
பௌத்தம் மிக விரிவான யோக முறைகளை உருவாக்கிக்கொண்டது. அதற்கு நிறைய கிளைகள் உள்ளன. முக்கியமாக யோகாச்சார பௌத்தம் என்ற கிளையை சொல்லலாம். அதிலும் தேரவாதம் என்றும் மகாயானம் என்றும் இரண்டு கிளைகள் உள்ளன. இன்றைக்கு பௌத்த தியான முறைகள் இந்தியாவில் மிக பிரபலமாக உள்ளது. எந்தவொரு எழுத்தாளரை பார்த்தாலும் தான் அதை செய்வதாக சொல்கிறார்கள். முக்கியமாக விபாசனா தியானமுறை. பொதுவாக பார்த்தால் பௌத்தர்களுக்கு இரண்டுவகையான ஊழ்க முறைகள் உள்ளன.
உபாசனா – ஒரு மூர்த்தத்தை உபாசிப்பது. அதன்படி தன்னை தொகுத்துக்கொள்வது. இது திபெத்திய பௌத்தத்தில் மிக வலுவானது. காலதேவர் தொடங்கி போதிசத்வர் வரைக்குமான ஏதோவொரு குறிப்பிட்ட மூர்த்தத்திற்கு தன்னை முற்றாக அளிப்பது.
விபாசனா – தன்னை ஒவ்வொரு கணமும் பகுத்துக்கொண்டே செல்வது. பௌத்தத்தில் முக்கியமான சிந்தனை ஒன்றுண்டு. அதற்கு பிரதீத்ய சமுத்பாதம் (Pratītyasamutpāda) என்று பெயர். இதை ஒரு சிறு உவமை வழியாக விளக்கலாம். மினாண்டர் என்ற மன்னனுக்கு நாகசேனர் சொன்ன உவமை அது. கண்முன்னால் நாம் தீயை பார்க்கிறோம். ஆனால் நாம் பார்த்த கணத்தில் உள்ள தீ அல்ல அடுத்த கணத்தில் இருப்பது. தீ என்பது ஒரு நிகழ்வுதானேவொழிய ஒரு பொருள் அல்ல. ஒரு மலையும் நிகழ்வுதான். தீ வேகமாக நிகழ்கிறது, மலை மெதுவாக நிகழ்கிறது அவ்வளவுதான். இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே நிலையானவை அல்ல. எல்லாமே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த நிகழ்வுக்கு ஒரு தர்மம் (Order) உள்ளது. அந்த தர்மம்தான் அதை நம்மை பொருளாக உணரச்செய்கிறது. தீ என்பது ஒளிகொண்டதாகவும் வேகமாக மேல்நோக்கி செல்லக்கூடியதாகவும் உள்ளது. ஆகவே நாம் அதை பொருளாக பார்க்கிறோம். மலையும் அவ்வாறுதான். கொஞ்சம் மெல்ல நிகழ்கிறது. ஐம்பது லட்சம் ஆண்டுகள் நம்மால் உயிர்வாழ முடிந்தால் அந்த மலை உருமாறியிருப்பதை நாம் பார்ப்போம்.
இதை க்ஷணபங்கவாதம் (Kṣaṇabhaṅgavāda) என்று சொல்வதுண்டு. ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றும் அழிந்து மாறிக்கொண்டே உள்ளன. நாம் அறியும் அந்த கணத்தில் அறிந்த பொருள் இல்லை. ஆகவே நாம் அறிவது அனைத்தும் ஒரு கணத்திற்கு முந்தைய பொருளைத்தான். அதன் தொடர்ச்சியை நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். தன்னிலை (Self) என்பதும் க்ஷணபங்கம்தான். அதை ஒரு யோகமுறையாக விரிவாக்கிக்கொள்வதே விபாசனா.
சமீபத்தில் ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் என்பவர் குரு எனும் நூலை எழுதியிருக்கிறார். அவர் கன்னட வீரசைவ மரபை சேர்ந்தவர். அவர் விபாசனா யோகம் செய்ததை பற்றி சொல்கிறார். அதை செய்தபின்பு அவரால் கவிதையே எழுதமுடியாமல் போய்விட்டது. அவர் தனது ஆசிரியரிடம் அதுபற்றி கேட்கிறார். அவர் ‘நல்லதுதானே, நீ விடுபட்டுவிட்டாயே. குறைந்தபட்சம் ஒன்றாவது விலகிச் சென்றிருக்கிறதே’ என்றார். ஆனால் தனது கவிதைதான் தான், அது இல்லாத சுயம் தனக்கு தேவையில்லை என்று விபாசனாவை விட்டு வெளியே வந்து சைவ முறைகளுக்குள் திரும்பியதை எழுதியிருந்தார். இன்று விபாசனா என்பது எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் பரவிக்கொண்டு இரு
இரா.கிருஷ்ணமூர்த்தி
இரா. கிருஷ்ணமூர்த்தி இந்தியாவின் தலைசிறந்த நாணயவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சேர, சோழ, பாண்டியர் கால நாணயங்களைக் கண்டறிந்து அவற்றில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் சின்னங்களையும் ஆய்ந்து சங்ககாலம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றாக நிறுவினார். சங்க காலம் வளர்ச்சியடைந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மையை அவரது ஆய்வுகள் புலப்படுத்தின. பண்டைத் தமிழகம் கிரேக்கம் போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்தததையும் அவரது ஆய்வுகள் உறுதிப்படுத்தின. தமிழ் மொழியின் தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் வரலாற்று ஆதாரங்களைக் கண்டடைந்ததில் ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகளுடன் கிருஷ்ணமூர்த்தியின் பணி ஒப்பு நோக்கத்தக்கது. தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழக, தென்னிந்திய நாணயவியல் கழகங்களை நிறுவி, பல மாநாடுகளை ஒருங்கிணைத்தது இந்திய நாணயவியலுக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு.
தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2023, நினைவுகள்
தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2023 அதற்கான ஒரு கட்டமைப்பை முதல் விழாவிலேயே உருவாக்கிக் கொண்டுவிட்டது. ஆகவே அதை அப்படியே விரிவாக்கம் செய்வதை மட்டுமே இரண்டாவது விழாவில் செய்தோம். பாண்டியன் சதீஷ்குமார் என்னும் நண்பர் அளித்த நிதியில் ஒரு நாதஸ்வர இசைநிகழ்வை ஒருங்கிணைத்தோம். அது மிகப்பெரிய அளவில் ஏற்பு பெற்றது.
தூரனின் பாடல்களை தமிழுக்கான இசைக்கருவியான நாதஸ்வரத்தில் வாசிக்கச் செய்தோம். அதன்பொருட்டு தமிழின் தலைசிறந்த இசைக்கலைஞர்களை தெரிவுசெய்து அழைத்தோம். நண்பர் யோகேஸ்வரன் ராமநாதன் அதற்கு பொறுப்பேற்றார். அந்த ஆண்டே அது ஒரு ‘தரவரிசை’ யாக ஏற்பு பெற்றது. எல்லா ஆண்டும் நாதஸ்வரம், அதில் இசைக்கலைஞர்களை முறையாகத் தெரிவுசெய்யவேண்டும் என்னும் கட்டாயம் உருவானது. தூரன் விருது வழங்க அறிஞர் தேர்வு செய்யப்படுவதுபோலவே இதுவும் ஒரு தெரிவு.
2023 ஆம் ஆண்டு விருது மு.இளங்கோவனுக்கு. கூடவே ஒரு சிறப்பு விருது எஸ்.ஜே.சிவசங்கருக்கு. ஆய்வாளரும் கவிஞரும் எழுத்தாளருமான சிவசங்கர் இதயநோய்க்கு ஆளாகி உளம் சோர்ந்திருந்த காலம் அது. அவருக்கு விருது ஓர் ஊக்கமாக அமைந்தது.
விருதுவிழா வழக்கம்போல ஆய்வாளர்களுடனான வாசகர்சந்திப்பு, உரையாடல்களுடன் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. இன்னொரு விஷ்ணுபுரம் விருதுவிழா என வளர்ந்துவிட்டது. இரண்டு மடங்கு பார்வையாளர்கள், விருந்தினர்கள். செலவும் இரு மடங்கு. ஆனால் நிறைவுதரும் ஒரு நிகழ்வு. தமிழில் ஆய்வுக்காக நிகழ்த்தப்படும் மிகப்பெரிய விருதுவிழாவாக தூரன் விருதுவிழா அதற்குள் உருமாறிவிட்டிருக்கிறது.
விருதைப்போலவே விழாவன்று உரையாற்ற அழைக்கப்படும் ஆய்வாளர்களும் முக்கியமானவர்களாக ஆகிவிட்டனர். அவர்களின் அரங்குக்காக விவாதங்களுக்குப்பின் தெரிவுகள் செய்யப்படுகின்றன. ஆய்வாளர்கள் பலவகை. கல்வியாளர்கள், தொல்லியல்துறை ஊழியர்கள், தனிப்பட்ட முறையில் ஆர்வத்தால் ஆய்வுசெய்பவர்கள். இந்த மூன்று களங்களில் இருந்தும் குறிப்பிடத்தக்கவர்களை அழைத்து இந்த விவாதத்தை ஒருங்கிணைக்கிறோம்.
காந்திராஜன் கொங்கு சதாசிவம் லோகமாதேவி தியடோர் பாஸ்கரன் சுவாமி பிரம்மானந்தர் ப. ஜெகந்நாதன்என எங்கள் விருந்தினர் பட்டியலும் மிகக்குறிப்பிடத்தக்கது.
ஜெ
தூரன் விழா 2023 கடிதம் தூரன் விழா, கடிதங்கள் தமிழ் விக்கி -தூரன் விருது விழாவில்… தூரன் விழா உளப்பதிவுகள்
————————————————————————————
தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2022 நினைவு தமிழ்,இசை, நினைவுகள்வேதகாலப் பெண்கள்
வெண்டியின் கருத்தென்பது ஆழ நோக்காமையின் வெளிபாடா? அல்லது பெண்கள் வேதம் கற்றார்கள் என்பதை ஒரு புனைவின் பகுதியாக வெண்முரசில் நீங்கள் சேர்த்தீர்களா…? விளக்கினால் தெளிந்து கொள்வேன்.
வேதகாலப் பெண்கள்
Guru Nitya calls it a dialectical approach. It is an established way in Indian also thought—it is called the yogatma approach.
The dialectical wayஅமெரிக்காவில் கம்பராமாயண இசைநிகழ்வு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நான்கு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஆரம்பித்த எமெர்சன் முகாமில் கம்பராமாயணம் அமர்வில், நாங்கள் கம்பனின் பாடல்களை உணர்வே இல்லாமல் ஒரு நவீன உரையைப் போல வாசித்து உரையாற்றினோம். ஒரு சின்ன புன்முறுவலுடன், கம்பனை எப்படி வாசிக்கவேண்டும் என்று ஒரு வகுப்பு எடுத்தீர்கள். அடுத்து அடுத்து நடந்த முகாம்களில், நான்கு ஐந்து நண்பர்கள், கம்பராமாயணம் அமர்வின் பொழுது , ராலே ராஜனிடம் பயிற்சி பெற்று கற்றுக்கொண்ட மெட்டுடன் அமர்வுக்கான பாடல்களைப் பாடினார்கள். முகாம் முடிந்தும், அந்த அமர்வில் கேட்ட பாடல்கள் காதில் ஒலித்த வண்ணம் இருக்கும். அப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்து காணொளி தயாரித்து யூட்யூபில் வெளியிட்டால் உலகளவிய இலக்கிய ரசிகர்கள் கேட்பார்கள் என, கடலோ மழையோ பாடலை ராலே ராஜன் இசையமைத்து ப்ரியா கிருஷ் பாட வித்வான் சிக்கில் குருச்சரண் , நாஞ்சில் நாடன் மற்றும் தங்கள் முன்னிலையில் ஜனவரியில் வெளியிட்டோம். எப்பொழுதும் முன்னகரும் சிந்தனையில் இருக்கும் நண்பர்கள், கம்பனின் பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து பொதுமக்கள் முன்னிலையில் பாடினால் என்ன என்று விவாதிக்க, கடலோ மழையோ என நிகழ்விற்குப் பெயரிட்டு, ஆகஸ்ட் 16, மாலை 4 மணிக்கு ப்ரிஸ்கோ (டாலஸ்) நகரில் கம்பராமாயண இசைமழை பொழியவிருக்கிறோம்.
ஒரு “அலை பாயுதே கண்ணா”, பாடலைப் போலவோ, அல்லது “குறை ஒன்றும் இல்லை” பாடலைப் போலவோ, யாவரும் ரசிக்கவேண்டும் என்றால் தாளம் சேர்ந்த இசை வேண்டும் என்று திட்டமிட்டு, இசையமைப்பாளர் ராலே ராஜன், பத்து பதினைந்து பாடல்களை தேர்வு செய்து, பாடகர் ப்ரியா கிருஷை , கர்நாடக இசையின் ராகத்தில் , தாளத்துடன் பாடிப் பயிற்சி பெறச் செய்துள்ளார். அவருடன் உமா மகேஷ் (வயலின்) ராஜு பாலன் (மிருதங்கம்) , ஸ்கந்த நாராயணன் (கஞ்சிரா), சாய் கணேஷ் (பியானோ) இணைய இந்தக் கச்சேரி ஆலாபணை, கற்பனை ஸ்வரம், தனி ஆவர்த்தனம் என அனைத்துக் கர்நாடக சங்கீத விஷயங்களும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமையான கச்சேரியாக இது அமையவிருக்கிறது. பழனி ஜோதி, ஒவ்வொரு பாடலையும் ப்ரியா கிருஷ் பாடுவதற்கு முன், அதன் கவிதை நயத்தையும், சிறப்பையும் விளக்கவிருக்கிறார்.
வெண்முரசு ஆவணப்படத்திற்கு இசை அமைத்த, Four Seasons படத்தின் மூலமாக திரை உலகிலும் அடியெடுத்து வைத்த ராலே ராஜனுக்கும், விஷ்ணுபுரம் நிகழ்வுகளை பாடித் துவக்கி வைக்கும் , தனது மகள் ஆராதிரிகாவுடன் “பாலும் தெளிதேனும்” பாடியும் பொதுவெளியில் பிரபலமாக உள்ள ப்ரியா கிருஷுக்கும் அதிக அறிமுகம் தேவையில்லை. அவர்களுடன் இக்கச்சேரியில் இணைந்து வாசிக்கவிருக்கும் டாலஸ், ப்ரிஸ்கோ, ப்ளேனோ, இர்வின் நகரங்களில் பிரபலாகவிருக்கும் இசைக்கலைஞர்களைப் பற்றிய சிறு குறிப்புகளை தருகிறேன்.
குரு பால பாலகிருஷ்ணா பிள்ளையிடம், தனது ஒன்பதாம் வயதிலேயே, வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்ட உமாமகேஷ், ஶ்ரீ நெடுமன்காடு சிவானந்தம், பேராசிரியர் ஆர். தியாகராஜன் வழிநடத்தலில், மேலும் தனது வயலின் வாசிப்பை மேன்படுத்திக்கொண்டார். இந்தியாவிலிருந்து வந்து இசைக் கச்சேரி நடத்திய சீர்காழி சிதம்பரம், Dr. பேபி ஶ்ரீராம், விவேக் மூழிகுளம் ஆகியோருக்கு வயலின் வாசித்துள்ளார்.
மிருதங்க வித்வான் ராஜுபாலன், துபாயை பூர்விகமாகக் கொண்டவர். தனது அன்னை விதூஷி சரோஜா பாலனிடம் வாய்ப்பாட்டுப் பயிற்சி பெற்று அவரது இசைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். வித்வான் தளவூர் என்.எஸ். ராஜீவ் அவர்களிடம் பத்து வருட பயிற்சி பெற்றுள்ளார். இசை வல்லுனர்கள் தஞ்சாவூர் சங்கீத பாலசுப்ரமணியன், வயலின் மதுரை அனந்தகிருஷ்ணன், மண்டலின் சூர்யா மனோகர் ராவ் ஆகியோருடன் இணைந்து கச்சேரியில் வாசித்த அனுபவம் ராஜு பாலனுக்கு உண்டு.
கர்நாடக சங்கீதத்தில் இருபத்து நான்கு வருடம் தொடர் பயிற்சியில் இருக்கிறேன் என்று சொல்லும் Dr சாய் சங்கர் கணேஷ் , சம்பை வைத்யநாத பாகவதர் குருகுல வழி வந்த திருச்சி எஸ். கணேசனிடம் இசைப்பயிற்சி பெற்றுள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடியிருக்கும் இவர் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் -4-ல் கால் இறுதி வரை தேர்வாகியுள்ளார். இசையை பிரதானமாகக் கொண்டு 2014-ல் வெளிவந்த வானவில் வாழ்க்கை படத்தில் முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மான், தேவி ஶ்ரீ பிரசாத், எஸ்.எஸ். தமண் அவர்கள் அமெரிக்கப் பயணத்தில் நடத்தும் கச்சேரியில் பியானோ வாசித்த அனுபவமும் உண்டு.
இவர்களுடன் ஆஸ்டினிலிருந்து நண்பர் ஸ்கந்த நாராயணன் இணைந்து கஞ்சிரா வாசிக்க இருக்கிறார். ஸ்கந்தா, பூன் எமெர்சன் முகாமில் நண்பர்கள் பாடும்பொழுது மிருதங்கம், கஞ்சிரா வாசித்து அதை பேரனுபவமாக மாற்றுவார். ஆஸ்டினில் நடக்கும் வார இறுதி கச்சேரிகளில் ஸ்கந்தா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாசிப்பார் என்பதை கச்சேரி செல்லும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.
அமெரிக்காவில் முதன் முதலாக நடக்கவிருக்கும் இந்தக் கம்பராமாயணக் கச்சேரியை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் முன்னின்று நடத்துகிறது. நண்பர்கள், அவர்களை காண அமெரிக்கா வந்திருக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ள கட்டணம் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
August 9, 2025
புக்பிரம்மா விழாவில் இன்று
பெங்களூர் புக்பிரம்மா விழாவின் இறுதி நாளான இன்று என்னுடைய வெள்ளையானை நாவலின் தெலுங்கு மொழியாக்கம் வெளியாகிறது.மொழியாக்கம் எஸ்.குமார். பேசுபவர் அவினேனி பாஸ்கர்.
நேரம். 10- ஆகஸ்ட் 2025 காலை 11 மணிக்கு. அனாவரணா அரங்கு.
புக்பிரம்மா இணையப்பக்கம்
சென்னையில் நாவல் எழுத பயிற்சி முகாம் நடத்துகிறேன்
சைதன்யாவும் அவள் தோழி கிருபா கிருஷ்ணனும் தொடங்கியிருக்கும் பெண்ணெழுத்துக்கான ஆங்கிலப் பதிப்பகமான Manasa Publications P Ltd சார்பாக ஒரு நாவல்போட்டியை அறிவித்துள்ளனர். 25 வயதுக்குக் குறைவான பெண்கள், மாணவிகளுக்காக ஒரு போட்டி. பிற பெண்களுக்கான இன்னொரு போட்டி. விருது ரூ 1 லட்சம். நூல்களை மானசா பதிப்பகம் வெளியிடும்.
அதன்பொருட்டு ஒரு நாவல் பயிற்சி முகாம் வரும் ஆகஸ்ட் 30, 31 ஆம் தேதிகளில் சென்னை அடையாறில் மானசா பதிப்பகம் அலுவலகத்தில் நிகழ்கிறது. நான் பயிற்சியை அளிக்கிறேன்.
இது எழுத எண்ணுபவர்கள் எழுதும் முறை, கருவை விரித்தெடுக்கும் முறை, நாவலை இறுதியாகத் தொகுத்துக்கொள்ளும் முறை ஆகியவற்றை எப்படி செய்வது என்பதற்கான பயிற்சி. காலை முதல் மாலை வரை ஒருநாள் பயிற்சி.
25 வயதுக்குக் குறைவான Young Adult களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 30. பிறருக்கான வகுப்பு ஆகஸ்ட் 31. முன்பதிவு செய்யவேண்டியது அவசியம். நபர் ஒருவருக்கு உணவுக்கான செலவு ரூ 300 கட்டவேண்டியிருக்கும்.
எழுத ஆர்வமுள்ள மாணவிகளை குறிப்பாக வரவேற்கிறோம்.
மேலதிகத் தகவல்களுக்கு connect@manasapublications.com. 7904952722
பிரம்மத்தை வழிபடும் இடங்கள்
பிரம்மம் அனைத்துமாக உள்ளது. அனைத்திலும் உள்ளது. இறைவன் என்னும் சொல்லே கடந்தவன், உறைபவன் என்னும் இருபொருள் கொண்டது. ஆனால் நாம் எங்கும் அதை இயல்பாக உணர்வதில்லை. நம் கண்களின் பழகிய போக்கை திகைக்கச் செய்து ‘இதோ நான்’ என பிரம்மம் தன்னைக் காட்டும் சில இடங்கள் உண்டு.
இலக்கியவிழாக்களின் பணி
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் போன்று இன்று இந்தியாவில் எந்த இலக்கிய அமைப்பும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு அல்லது அதன் கிளை அமைப்புகள் சார்பாக ஆண்டு முழுக்க, அனேகமாக எல்லா நாளும் எங்கோ ஏதோ நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆண்டில் மூன்று இலக்கிய விழாக்கள். இரண்டு இலக்கியக் கருத்தரங்குகள்.
இத்தனை நிகழ்ச்சிகளால் என்ன பயன் என்று அவ்வப்போது எவரேனும் எழுதுவதுண்டு. எந்தப் பயனுமில்லை என வசைபாடுபவர்களும் உண்டு. ஆனால் அவர்களே தங்கள் நூல்களுக்கு விழாவெல்லாம் வைத்துக்கொள்வார்கள், என்ன பயன் என கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகவே இலக்கியத்தால் என்ன பயன் என்று கேட்பவர்கள்தான் பெரும்பகுதியினர்.
இலக்கிய நிகழ்வுகளால் இலக்கியம் வளருமா? இலக்கிய புதியதாகத் தோன்றுமா? இலக்கியவாதிகளை ‘கண்டுபிடிக்க’ அல்லது ‘உருவாக்கி எடுக்க’ முடியுமா? அதற்கெல்லாம் சற்று இலக்கியமறிந்த எவரும் ‘தெரியவில்லை’ என்ற பதிலை மட்டுமே சொல்லமுடியும். இலக்கியம், இலக்கியவாதி உருவாவதற்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டு. சமூகக் காரணங்களும் உண்டு. சமூகத்தில் ஒட்டுமொத்தமாக ஓர் இலக்கியச் சூழல் இருக்கவேண்டும், இலக்கியவாதிக்கு அது உதவ வேண்டும். இலக்கியச்சூழல் மழை, இலக்கியவாதியின் படைப்புசக்தி விதை. விதைகளுக்கு மழை தேவை.
இலக்கிய நிகழ்வுகளால் என்ன நிகழ்கிறது? இலக்கியம் ‘நிகழ்கிறது’, அவ்வளவுதான். இலக்கியம் தனிமையில் எழுதப்படுகிறது, தனிமையில் வாசிக்கப்படுகிறது. ஆனால் இலக்கியம் கண்கூடாக நிகழவும் வேண்டும். ‘நாம் இலக்கியவாதிகள்’ என உணர்வதற்கான இடங்கள் நமக்குத் தேவையாகின்றன. இலக்கியத்தை விவாதிப்பதற்கு மேடைகள் தேவை. இலக்கிய அரட்டைகள் தேவை. இலக்கியவாதிகளுடன் தனிப்பட்ட அறிமுகத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டிய இடங்கள் தேவை. இலக்கியத்திரளாக நம்மை நாமே உணர்வதற்கான அரங்குகள் தேவை. இலக்கியநிகழ்வுகள் அதற்காகவே.
அந்த வகையான நிகழ்வுகள் வழியாகவே நான் இலக்கியவாதியாக உருவானேன். நான் எந்த இலக்கிய நிகழ்வையும் என் இளமையில் தவறவிட்டதில்லை. தேடித்தேடிச்சென்று பங்கேற்பேன். இலக்கிய ஆசிரியர்களுடன் அறிமுகம் செய்துகொண்டேன். இலக்கிய நண்பர்களைக் கண்டடைந்து அவர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தேன். எண்பதுகளில் இருந்த ஒரே உரையாடல் ஊடகமென்பது கடிதம். நான் ஒரு நாளில் பத்து கடிதங்கள் வரை எழுதினேன், பத்துப்பதினைந்து கடிதங்களை பெற்றுக்கொண்டும் இருந்தேன்.
அச்சூழல் எனக்கு எந்த அளவுக்குத் தேவைப்பட்டது என்று நான் இன்றும் உணர்கிறேன். ஆகவேதான் இத்தனை நிகழ்வுகள். இந்நிகழ்வுகளில் சில ஆண்டுகளுக்கு முன் அச்சமும் தயக்கமுமாக வந்தவர்கள்தான் இன்று நிகழ்வுகளின் மேடையில் எழுத்தாளர்களாகவும், இதழாளர்களாகவும்,பேச்சாளர்களாகவும் தோன்றுகிறார்கள். இன்று தமிழகத்தில் எங்கள் அரங்குகளினூடாக உருவாகி வராத ஒருவரேனும் இல்லாமல் ஒரு நவீனஇலக்கிய நிகழ்வை எவரும் நிகழ்த்துவதில்லை.
இன்று இவை தேவையா, இன்று இணையவழி உரையாடல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே என்று கேட்கலாம். இணையவழியில் நிகழ்வது தனிப்பட்ட உரையாடல் அல்ல. தனிப்பட்ட உறவு உள்ளவர்கள் மேற்கொண்டு இணையத்தில் உரையாடலாம், ஆனால் இணையம் இலக்கிய உரையாடலுக்கான களம் அல்ல. அதை நேர்ச்சந்திப்புகளில் கலந்துகொண்டவர்களிடமே சொல்லமுடியும், சொல்லவே வேண்டாம், அவர்களுக்கே தெரியும். தேவதேவன் போன்ற ஒருவரின் நட்பு, அவருடனான சந்திப்பு எத்தனை ஆழ்ந்த அக எழுச்சியை, ஊக்கத்தை அளிப்பது என்பதை அதை உணராத ஒருவரிடம் எப்படி புரியவைக்க முடியும்?
அதேசமயம் இது அமைப்பு அல்ல. இதற்கென இலக்கியக் கொள்கைகளோ, அரசியல்கொள்கைகளோ கிடையாது. இதற்கென நிர்வாகநெறிகளோ, முறைமைகளோ இல்லை. தலைமையோ நிர்வாகிகளோ இல்லை. இது ஒரு விரிவான நட்புக்கூட்டமைப்பு மட்டுமே. ஒருவரை ஒருவர் அறிந்த நண்பர்கள் ஒரு பொதுநோக்குக்காக இணைந்து செயல்படுகிறார்கள், அவ்வளவுதான். இந்த நெகிழ்வுத்தன்மையால்தான் இது இத்தனை விரிவாக இயங்கமுடிகிறது. இந்தவகையிலும் இந்தியாவிலேயே முன்னுதாரணமான அமைப்பு இது.
ஓஷோ: மரபும் மீறலும்-14
ஓஷோவின் மொத்தச்சிந்தனைகளையும் தொகுத்து ஒரு தொகைநூல், அதாவது ‘ரீடர்’ வெளியிடப்படும் என்றால் ஓஷோவை எப்படி தொகுக்கலாம் என்பதற்கு எனது கருத்து ஒன்று உள்ளது. அதை ஐந்து புள்ளிகளில் தொகுக்கலாம் என்று நினைக்கிறேன்.
(1) ‘ இன்று ‘ வாதம்
ஓஷோவின் நூல்களை பார்த்தால் அடிக்கடி வரக்கூடிய வார்த்தை ‘இன்று’ (Today / present) என்பது. ஒரு கலைச்சொல் போன்று அதை பேசிப்பேசி அவர் உருவாக்குகிறார். அவர் ஏன் அதை சொல்கிறார் என்பதைத்தான் இதற்கு முன்னால் பேசினேன். அவருக்கு முன்னால் இருப்பவன் யார் என்று பார்த்தால் ‘நேற்று’ என்பதை ஒரு நானூறு கிலோ எடையாக தோளில் சுமந்துகொண்டிருந்த ஒருவன். அதன் சுமை தாளாது வளைந்து கூனியிருக்கக்கூடிய ஒருவன். அர்ஜென்டின எழுத்தாளர் போர்ஹஸின் (Jorge Luis Borges) ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உண்டு. ”நேற்று என்பது கங்கு. அது எரிந்தணைந்த சாம்பலில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்”. இதற்கு நேர்மாறாக ஓஷோ சொல்கிறார், ”நேற்று என்பது அழுகிவிட்டது, இன்று பிறந்தாக வேண்டும்” என்று. ‘Like Today’ என்பது அவருடைய செய்திகளில் ஒன்றாக உள்ளது. ‘இன்று’ என்பதை எந்தெந்த விதங்களில் பொருள் வேறுபாடுகளுடன் கையாள்கிறார் என்பதை தொடர்ந்து பார்ப்பதென்பது மிக முக்கியமான ஓஷோ ஆய்வாக அமையும்.
நேற்று என்பது உங்களுக்கு எதையெல்லாம் தருகிறது என்பதை ஓஷோ சொல்கிறார்.
அடையாளம்
நேற்று என்பது அடையாளத்தை தருகிறது. ஒரு சாதாரண மனிதனாகிய நான் இங்கு நின்றுகொண்டிருந்தால் எத்தனை ‘நேற்று’கள் வந்து என்மீது அடையாளத்தை போடுகின்றன? நீ ஒரு இந்தியன், நீ ஒரு இந்து, நீ ஒரு தமிழன், நீ இன்ன சாதி என்று நீ… நீ… என்பதாக என்மீது பல்வேறு அடையாளங்களை அது போடுகிறது. கிட்டத்தட்ட வழிதவறி வந்துசேர்ந்த தபால் அட்டை போன்று அவ்வளவு முத்திரைகளுடன்தான் நாமனைவரும் இருக்கிறோம். பல சட்டைகளை போட்டுக்கொண்டு மனநோயாளிகள் தெருவில் திரிவதுபோல இருக்கிறோம். அவ்வளவு சட்டைகளை ‘நேற்று’ உங்கள்மீது போட்டு உங்களை முழுமையாக தனக்குள் மூழ்கடித்துவிடுகிறது .ஓஷோ சொல்வது ‘அந்த சட்டைகளை கழற்று’ என்பதுதான். அவ்வளவு புழுக்கம் உனக்கு தேவையில்லை, வெளிக்காற்று படட்டும் என்கிறார்.
ஒழுக்கம்
நேற்று என்பது உங்களுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்திச் சொல்கிறது. ஒழுக்கவியல் அனைத்துமே நேற்றில் இருந்து வரக்கூடியதே. இன்றைக்கான ஒழுக்கத்தை பேசக்கூடிய ஒழுக்கவியலாளர்களை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா ? ஒழுக்கத்தை பேசும் அத்தனைபேரும் சொல்லக்கூடிய அடுத்தவரி, ‘நம் முன்னோர்கள் அப்படியில்லை’ என்பதுதான். இன்றைக்குள்ள ஒழுக்கம் என்பது போக்குவரத்து விதிமுறைகள் மட்டும்தான். மீதி அனைத்துமே நேற்றைய ஒழுக்கம்தான். நேற்றிலிருந்து வரும் ஒழுக்கம் நமது சிந்தனைகளை, ஆளுமையை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.
சிந்தனை
சிந்தனை என்பதும் நேற்றிலிருந்துதான் வருகிறது. ஒரு பெரிய சிந்தனை உங்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்றால், அதன் பிறகு அதை கீழேயும் வைக்க முடியாது, கையிலும் வைத்திருக்க முடியாது. அதற்கு சிறந்த வழி என்பது கைமாற்றி விடுவதுதான். குலேபகாவலியில் ஒருவன் கரடியை இரண்டு கைகளாலும் பிடித்திருப்பான். அவனுக்கும் கரடிக்கும் நடுவே ஒரு மரம் இருக்கும். அந்த கரடியை பிடித்துக்கொண்டு மரத்தையே சுற்றிவருவான். இன்னொருவன் வந்து என்ன நடக்கிறது என்று கேட்பான். ‘நான் ஒரு விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கிறேன். நல்ல விளையாட்டு’ என்பான். ‘நானும் விளையாடலாமா?’ என்று அவன் கேட்க ‘வா வந்துபிடிச்சுக்கோ’ என்று சொல்லி அவனிடம் கரடியைக் கொடுத்துவிட்டு இவன் கிளம்பிவிடுவான். சிந்தனைகள் இப்படித்தான் கைமாற்றப்படுகின்றன. நாம் கடந்தகாலச் சிந்தனைகளின் அடிமைகள். அவை நம்மை முன்னகரவிடாமல் கவ்வி நிறுத்திக்கொண்டிருக்கின்றன.
பொறுப்பு
ஆற்றவேண்டிய பொறுப்புகளின் பெரிய சுமையை நேற்று நமக்கு அளிக்கிறது. ஓஷோ ‘பொறுப்பின்மை’ என்பதை ஒரு விடுதலையாக, ஒரு பெரிய விழுமியமாகச் சொல்கிறார். அதை மிக எளிமையாக, ‘பொறுப்பில்லாமல் இருக்க’ அவர் சொல்வதாக நாம் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நேற்றிலிருந்து வந்து சேரும் பொறுப்புகளையே அவர் பேசுகிறார். நமக்கான எளிய உலகியல் பொறுப்புகளை நாம் ஏற்றுக்கொள்வதை பற்றி அவர் பேசவில்லை. மரபில் இருந்து அளிக்கப்பட பொறுப்புகள் நம்மீது அமர்ந்திருக்கின்றன. அவை ஒரு பெரிய சுமை என்கிறார்.
அர்த்தப்படுத்தல்
நாம் ஒவ்வொன்றையும் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். இதை நாம் நேற்றிலிருந்துதான் அர்த்தப்படுத்துகிறோம். அர்த்தப்படுத்தாத ஒன்று நமக்கு பதற்றத்தை அளிக்கிறது. ஒரு புதிய கருத்தை, புதிய ஆளுமையை, புதிய நிகழ்வை நாம் எதிர்கொள்ளும்போதெல்லாம் நம் முன்னோர் காலத்தில் இருந்து வந்த அர்த்தங்களை அதன்மீது போட நினைக்கிறோம்.
நீண்ட நாட்களுக்கு முன்னால் எனது மைத்துனர் ஒருவரை ஒகேனக்கல் அருவி பார்ப்பதற்கு அழைத்துச்சென்றேன். அவர் அதற்கு முன் அருவி பார்த்தது கிடையாது. பார்த்தவுடன் மலைத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து என்னிடம் கேட்டார், ‘இது ராத்திரி பகலா இப்படி கொட்டிட்டே இருக்கும் என்ன’. அப்படியொரு கோணம் இருக்குமென்றே எனக்கு தெரியவில்லை. நெடுங்காலம் எனக்கு அதை நினைக்கும்போதெல்லாம் சிரிப்பு வந்தது. நான் அப்போது அவரிடம் தமாஷாக சொன்னேன் ‘இல்லை, ராத்திரியில் மூடிவிடுவார்கள்’.
அருவி என்ற அந்த செயல்பாட்டுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. இவர் அதற்கு ஒரு அர்த்தத்தை போட முயல்கிறார். மலைகளை பார்க்கும்போது ஒரு கணம் மனம் பிரமையடைகிறது என்பார்கள். ஏனெனில் அது அர்த்தமின்மை. ஆனால் அந்த பிரமை ஐந்து நிமிடங்கள் மட்டும்தான். அடுத்த கணம் ஒருவர் சொல்வார், ‘இடதுபக்கம் பார்த்தா கரடி மாதிரி இருக்குல்ல’, ‘இத பார்த்தா யானை மாதிரி இருக்குல்ல’, ‘நம்ம சம்பந்தம் மாமா மூஞ்சி மாதிரி இருக்குல்ல’ என்று. அர்த்தம் அளிக்கப்பட்டாயிற்று. அதன்பிறகுதான் நம்மால் அதை கையாள முடிகிறது. இத்தகைய அர்த்தப்படுத்தலை நாம் ஒவ்வொரு கணமும் செய்துகொண்டே இருக்கிறோம். இதுவும் நேற்றிலிருந்து வருவதே.
இவற்றிலிருந்து விடுதலை அடைவதையே ஓஷோ சொல்கிறார். ‘There is no thought in the present’ என்பது அவரது முக்கியமான மேற்கோள்களில் ஒன்று. இன்றின் கணத்தில் சிந்தனை கிடையாது என்கிறார். நிகழ்கின்ற கணத்தில் நீங்கள் யோசிப்பதில்லை. கையிலிருந்து ஒரு பொருள் நழுவிவிழும் கணத்தில் யாரும் யோசிப்பதில்லை. நிகழ்கணம் (present) என்பதே தியான நிலை என்கிறார். உங்களுக்கு அளிக்கப்பட்டவை அனைத்தும் நிகழ்கணத்தில்தான் உள்ளது, கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை என்கிறார்.நிகழ்கணம் இறந்தகாலத்தின் கதவுகளால் மூடப்பட்டுள்ளது. நம் நிகழ்காலம் என்பது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கும் கதவு தட்டல்தான். இதை தனது உரைகள் முழுக்க தொடர்ந்து சொல்கிறார்.
இரண்டாயிரம் ஆண்டு மதத்தையும், உலகப்போர்களையும் தனக்குப் பின்னால் வைத்துக்கொண்டிருக்கும் ஹிப்பியிடம் இதைச் சொல்கிறார். பல்லாயிரமாண்டு நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் வரலாறுகளையும் வைத்துக்கொண்டிருக்கும் நம்மிடம் இதைச் சொல்கிறார். ஆமையிடம் ஓஷோ சொல்கிறார் ‘உன் ஓட்டை உதிர்த்துவிட்டு வா. நீ ஆமையல்ல பறவை’ என்று. எத்தனைபேர் பறந்தார்கள் என்று தெரியவில்லை. ஓட்டை வைத்துக்கொண்டு சிறகுபோல காலசைக்கும் ஆமைகள் உள்ளன. ஓடு என்பது பாதுகாப்பு என்று, அடையாளம் என்று எண்ணிக்கொண்டு சிறகுகளை வெறும் கனவாக வைத்துக்கொள்ளும் ஆமைகள் உள்ளன. ஆனால் பறவைகள் எல்லாமே ஒரு கட்டத்தில் முட்டைக்குள் இருந்தவைதான். சிறகுகளின் வேட்கையே அவற்றைப் பறக்கச் செய்தது.
ஓஷோ பேசியது அன்றைய ஆமைகளிடம். அவர் இன்று என்பது அந்தக் காலகட்டத்தை. ஆனால் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் அவர் பேசியவற்றை வாசிக்கும்போது அதில் ‘இன்று’ என்பதில் இருக்கும் ‘என்றுமிருக்கும் அம்சத்தை’ நாம் உணரமுடியும். ஓஷோவின் அந்த மாற்று மதத்தை பொறுத்தவரை அந்த ‘இன்று’ என்பது ஒரு ஆப்தமந்திரம் போல.
(2) தன்னிலை
இரண்டாவதாக ஓஷோ சொல்லும் முக்கியமான புள்ளி தன்னிலை (Self / Subjectivity). நாம் என்று உணர்வது தன்னிலை. இது நமது வேதாந்த மரபில் விரிவாக விவாதிக்கப்பட்ட ஒன்று. அனைத்து புலன்களையும் நிறுத்திவிட்டு இருளில் தனிமையில் அமர்ந்தாலும் கூட தன்னைத்தானே உணர்வது ஒன்றுண்டு. அதுதான் தன்னிலை. அதை ஸ்வயம்பிரகாசம் என்று சொல்வதுண்டு. தன்னை வெளிப்படுத்தும் வேட்கையும் அதற்கான இயல்பும் கொண்டது தன்னிலை. இந்த தன்னிலை பற்றி எல்லா மதங்களும் வெவ்வேறு விதமாக பேசியிருக்கின்றன. அவற்றில் இரண்டு விரிவான வரையறைகளை சுட்டிக்காட்டலாம்.
செமிட்டிக் வரையறை
யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பொறுத்தவரை தன்னிலை என்பது மந்தையின் ஒரு பகுதி. ‘எனது சமூகம் உனக்கு முன்னால் செல்லும்’ என்பது கிறிஸ்துவை இடையனாகவும் தன்னை மந்தையில் ஒருவனாகவும் உருவகிக்கிறது. ஒரு பெரிய திரளின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மந்தையின் ஒரு பகுதியாக தன்னை உருவகிக்கக்கூடிய ஒரு தன்னிலை அந்த மதங்களுக்கு உண்டு. அந்த தொகுப்புத்தன்மை அவர்களுக்கு பாதுகாப்பை, வலிமையை அளிக்கிறது. ஒரு படைவீரன் தன்னை படையாக உணர்கிறான். படையின் மொத்த வலிமையையும் தன்னுடையதாகவும் உணர்கிறான்.
அந்த இரட்டைநிலை இன்று உலகமெங்கும் அத்தனை அரசியல் கொள்கைகளும், அத்தனை அதிகார அமைப்புகளும் முன்வைக்கும் ஓர் இலட்சியம். ‘நாம்’ என்றுதான் அத்தனை அரசியல் கொள்கைகளும், அமைப்புகளும் பேசுகின்றன. தொகுப்பதனூடாகவே அவை மனிதர்களை ஒற்றைப்பேரமைப்புகளாக ஆக்கி அதிகாரத்தை நிலைநாட்டுகின்றன.
இந்திய வரையறை
இந்திய மரபுகளை பொறுத்தவரை தன்னிலை என்பது திரளடையாளம் அல்ல, முழுக்கமுழுக்க தனியடையாளம். ஆத்மா என்று அதை சொல்கிறோம். ஒவ்வொருவரும் தன்னுள் தானை உணரும் ஒன்று. அதிலிருந்து அகங்காரம், மமகாரம் போன்ற பல்வேறு நிலைகள் சொல்லப்படுகிறது. ஆனால் அது எப்போதும் தனித்தது. அதற்கு இன்னொன்றுடன் இயல்பான இணைவு என ஒன்று இல்லை. இன்னொன்றை அது எந்நிலையிலும் ‘தான்’ என உணர்வதில்லை. ‘அது’ என்றே உணர்கிறது. ஆகவே அதன் உறவுகள் எல்லாமே அந்தந்த சூழலுக்கும் தருணத்திற்கும் உரியவை மட்டுமே.
இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பால் உள்ள மூன்றாவது நிலையைத்தான் ஓஷோ சொல்கிறார். தன்னிலை என்பதை ‘There is no Self’ என்கிறார். பல உரைகளில் No Self என்ற சொல்லை பயன்படுத்துகிறார். இது பற்றிய அவருடைய சுவாரசியமான வரிகளின் வழியாக அவரது எண்ணங்களை கோர்த்துக்கொள்ள முடியும். ‘Consciousness of self is a disease. Self consciousness is medicine’. ‘தான்’ என்ற ஒன்றை தொகுத்துக்கொண்டு, வரையறுத்துக்கொண்டு முன்வைப்பது ஒரு நோய்க்கூறு. எதை வரையறுத்துக்கொள்கிறோம் என்று தன்னைத்தானே அறிந்துகொள்வது அதற்கான மருந்து.
இன்னொரு உரையில், நீ வலியை உணர்ந்தால் Self என்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பாய், no self ஆக இருக்கத்தான் முயற்சிப்பாய் என்கிறார். நமக்கு கடும் வலி ஏற்படும்போது மயக்கமருந்து கொடுக்கும்படி கேட்போம். அதாவது self ஐ அழிக்க விரும்புவோம், அந்த கணத்தை தாண்ட விரும்புவோம். எதற்கு வலிக்கிறதோ அது அல்ல தான் என்று உணரவே விரும்புவோம். ஆகவே self என்பது ஒரு நோய் என்று தனது உரையில் மீண்டும் மீண்டும் ஓஷோ சொல்கிறார்.
இதற்கு பல நூல்களில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். பௌத்தர்களுக்கு அனாத்மவாதம் என்ற கருதுகோள் உண்டு. பாலியில் அதை அனாத்தம் என்பார்கள். ‘ஆத்மா இன்மை’ என்று அதை மொழிபெயர்க்கலாம். ஆனால் சாரமின்மை என்பதே சரியான பொருள். ஏனெனில் மனிதர்களுக்கு ஆத்மா இல்லை என்பது மட்டுமின்றி, பருப்பொருள்களுக்கும் அதன் சாராம்சமான தன்மை கிடையாது என்கின்றனர். ஒரு மேஜையின் ஆத்மா என்பது அதன் மேஜைத்தன்மை. அப்படிப்பட்ட சாராம்சமான மேஜைத்தன்மை கிடையாது என்பது பௌத்தக் கொள்கை. சமணமோ பொருள்களுக்கு ஆத்மா உண்டு என்கிறது. ஆனால் பௌத்தத்தில் எந்தவொரு பொருளுக்கும் அதன் மாற்றமுடியாத தனித்தன்மை என்பது கிடையாது.
உதாரணமாக, தண்ணீர் இருக்கிறது. தண்ணீரின் தனித்தன்மை நீர்மமாக, வழிந்து செல்லக்கூடியதாக உள்ளது. ஆனால் இந்த தன்மை என்பது மனிதனால் உணரப்படும் ஒரு நிலை மட்டுமே. மனித உடல் நெருப்பால் ஆனது என்றால் அவன் அறியக்கூடிய தண்ணீர் வேறுவகையானதே. Flash Gordon கார்டூனில், வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள். அவர்கள் அனைவருமே இரும்பைவிட ஆயிரம் மடங்கு கடினமான உலோகத்தாலான உடல் கொண்டவர்கள். எனவே அவர்கள் இங்கு மண்ணில் நீந்துகிறார்கள். நாம் தண்ணீரில் நீந்துவதைப்போல அவர்கள் மண்ணில் நீந்துகிறார்கள். எனவே ஒன்றின் ‘இயல்பு’ என்பது மற்றொன்றால் உணரப்படக்கூடியதுதான். மாறாத ஒரு இயல்பு என்பது பொருள்களுக்கும் கிடையாது, மனிதர்களுக்கும் கிடையாது. அதுதான் அனாத்மவாதம் (அனாத்தம்). இதை ஓஷோ பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.
இதைவிட சுவாரசியமான ஒரு உவமையை சொல்கிறார். நேற்று என்பது இறந்துவிட்டது. ஆனால் நீங்கள் யாரென்பதற்கு நீங்கள் வைத்திருக்கக்கூடிய அடையாளங்களில் எல்லாமே நேற்றையது. ஒரு மனிதன் தன்னைப்பற்றி பேசத்தொடங்கும்போதே அவன் நேற்றிலிருந்துதான் தொடங்குகிறான். ‘நாங்களெல்லாம் யார் தெரியுமா ? 2500 ஆண்டுகளாக நாங்கள் இங்கே…’ என்று ஆரம்பித்துவிடுவார்கள். எல்லா அடையாளங்களுமே இறந்தகாலம். ‘நீ சொல்லக்கூடிய self என்பது இறந்த செல்களால் ஆனது. இறந்த செல்களால் ஆனதுதான் உனது தோல். அந்த இறந்த செல்கள் மீதுதான் நீ காமம் கொள்கிறாய், முத்தமிடுகிறாய். நீ மற்றவர்களில் பார்ப்பதே இந்த செல்களைத்தான்’ என்கிறார். உயிருள்ள செல்களை நம்மால் காணமுடியாது. தோலை உரித்து ஒருவரிடம் காமம் கொள்ளமுடியாது.
ஆகவே Self என்பது இறந்த காலத்தில் இருந்து நாம் கட்டமைத்து உருவாக்கிக்கொண்டு வந்து நிறுத்தக்கூடிய ஒரு தோற்றம் மட்டும்தான். அது அந்த தருணத்தில் நாம் ஆக்க விரும்பும் ஒன்று மட்டும்தான். அது ஒரு நோய்க்கூறு. வாழ்நாள் முழுக்க மனிதர்கள் செய்துகொண்டிருப்பது ஒத்திசைவான ஒரு தன்னிலையை உருவாக்குவதற்கான வீண் முயற்சியைத்தான். நீங்கள் நாள்தோறும் ஒருவரை சந்தித்து பேசினால், அவர் பேசுவது அத்தனையும் முரண்பாடுகள் என்று தெரியும். ஒரே அனுபவத்தையே ஒரு மாதத்திற்குள் மாற்றிச்சொல்வார்கள். மனிதர்கள் பேசுவதே ‘தான்’ என்ற ஒன்றை உருவாக்கும்பொருட்டு ஒரு திரைக்கதையை முரண்பாடின்றி எழுதிக்கொண்டே இருப்பது மட்டும்தான். நடுவே நிறுத்தி, ‘இல்லங்க, இந்த திரைக்கதையில் ஓட்டை இருக்கு’ என்று சொன்னால், ‘ஓட்டை இருக்கா, அடைச்சிருவோம்’ என்பர். மனிதர்களின் பேச்சு என்பது பெரும்பாலும் இதுதான்.
இவ்வாறு ஒரு புனைவை நாம் self என்று முன்வைப்பதைத்தான் ஓஷோ விமர்சிக்கிறார். There is no Self என்கிறார். நீ உருவாக்கும் அந்த புனைவில் நீயே சிக்கிக்கொண்டால் அது நோய். சிலந்தியானது தனது வலையில் சிக்காது. ஆனால் மனிதர்கள் தங்கள் வலையில் தாங்களே சிக்குவார்கள். ரயில் பயணத்தில் ஒருவர் பேசத்தொடங்கினால் அவர் தன்னைப் பற்றிய புனைவையே உருவாக்குவதை காணலாம். அந்த குறைந்த கால ரயில் பயணத்தில் அவர் தன்னை பற்றிய ஒரு நாவலையே உருவாக்கி விடுவார். நாகர்கோவிலில் இருந்து மதுரை வருவதற்குள் அவர் உருவாக்கிய புனைவை அவரே நம்பிவிடுவார். சில விஷயங்களை சொல்லும்போது சிலர் அழுதுவிடுவார்கள். அது பொய் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நான் ஒரு எழுத்தாளன். நீங்கள் என்னிடம் மட்டும்தான் பொய் சொல்லமுடியாது. அது பொய்தான், ஆனால் அந்த உணர்வு உண்மையானது. ஏனெனில் அவர் அதை நம்பிவிட்டார். நாம் நம்பக்கூடிய மிக வலுவான புனைவு என்பது நாம் உருவாக்கக்கூடிய புனைவுதான்.
‘நான் மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லக்கூடியவன் சார், நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கிறதில்லை ‘ என்று நம்மிடம் சொல்பவர்கள் அதை பொய்யாகச் சொல்லவில்லை. அந்த கணத்தில் அந்தப் புனைவை முழுமையாக நம்பித்தான் சொல்கிறார்கள். ஆகவேதான் தழுதழுக்கிறார்கள். ஆகவேதான் இத்தகைய புனைவை உருவாக்கும் வீண் வேலையில் இருந்து வெளிவந்து self என்பது அக்கணத்தில் நிகழக்கூடிய ஒன்று, இங்கிருந்து நீ விட்டுச்செல்லக்கூடிய ஒன்று என்று நினைத்துக்கொண்டால் போதும் என்கிறார் ஓஷோ.
இன்னொன்றையும் சொல்கிறார். ஆதிகாலத்தில் கற்கருவிகளை பயன்படுத்திய மனிதர்கள் ஒரு கல்லை எடுத்து கொட்டையை உடைத்தால் அந்தக் கல்லை எடுத்துச்செல்ல மாட்டார்கள். அதுபோல இந்த குறிப்பிட்ட self என்பது இந்த கொட்டையை உடைப்பதற்கு உருவானது. அதை விட்டுவிட்டு போ என்கிறார்.
சுவாரசியமான அம்சம் என்னவென்றால் அவர் இதை எழுபதுகளில் சொல்கிறார். அப்போது நவீன இலக்கியத்தில் இருத்தலியல் (Existentialism) ஓங்கியிருந்த காலகட்டம். Self என்பதை பற்றி அவ்வளவு சிக்கலான பேச்சுகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. மனிதனுடைய தன்னிலைக்கு இந்த பிரபஞ்சத்தின் முன்னால், காலத்தின் முன்னால் என்ன இடம் இருக்கிறது என்ற கேள்விதான் இருத்தலியலின் அடிப்படை கேள்வி. எப்படியெல்லாம் தன்னிலையை வரையறை செய்யலாம் என்பதுதான் அன்றைய முக்கியமான தத்துவப்பிரச்சினையாக இருந்தது. அப்போது ஓஷோ இங்கு உட்கார்ந்துகொண்டு அப்படி ஒன்று இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
தொண்ணூறுகளில் பின்நவீனத்துவமும் அதைத்தான் சொல்கிறது. There is no subjectivity என்று. நமக்கு ஓஷோ சொல்லும்போது அது ஒருவகை ஆன்மிக சிந்தனையாக தெரிகிறது.நம் முற்போக்கினருக்கு விலக்கம் ஏற்படுகிறது. ஆனால் ழாக் லக்கான் சொல்லி உளவியல் தொழில்நுட்பச் சொற்களோடு வரும்போது அதே கொள்கை பாடபுத்தகத்துக்குள் வந்துவிடுகிறது. நவீன இலக்கியவாதிகள் லக்கானை மேற்கோள் காட்டுவதுண்டு. லக்கானுடைய எந்தவொரு மேற்கோளுக்கும் இணையான மேற்கோளை அதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பு ஓஷோவிடமும் காணமுடியும். அதை நவீன அறிவுஜீவிகள் சொல்வதில்லை.
தன்னிலை என்பது சூழலால் கட்டமைக்கப்பட்டது, நம்மால் உருவகப்படுத்தப்படுவது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். பின்நவீனத்துவம் சொல்வதற்கும் ஓஷோ சொல்வதற்கும் சிறு வேறுபாடுண்டு. பின்நவீனத்துவம் சொல்வது, இந்த தன்னிலை என்பது நீயே புனைவது அல்ல, சூழலால் புனையப்படுவது என்று. ஆப்பிள் நிறுவனம் உன்னை ஒரு நுகர்வோராக புனைகிறது, ஒரு தொலைக்காட்சி சேனல் உன்னை ஒரு பார்வையாளராக புனைகிறது, ஒரு அரசியல்வாதி உன்னை ஒரு வாக்காளராக புனைகிறார். இவையெல்லாம் சேர்ந்துதான் நீங்கள் என்கிறது பின்நவீனத்துவம். ஆனால் ஓஷோ, மாறாத தன்னிலை என்பது நமக்கு கிடையாது என்கிறார். அதன் தொடர்ச்சியை அவர் பௌத்தத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறார்.
3. அன்பு , காதல்
தமிழில் இதுபற்றி அதிகமாக பேசப்பட்டுள்ளது. ஏனென்றால் தமிழனின் அடிப்படைச் சிக்கலே இதுதான். பாலியல், காதல், அன்பு ஆகியவற்றிந் நடுவே உள்ள குழப்பம். தமிழ் வாசகர்கள் ஓஷோவை இந்த ஒரே புள்ளி வழியாகவே அறிந்திருக்கிறார்கள். ஆகவே ஓஷோ இதைப்பற்றி என்ன சொல்வார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் இதுபற்றி மூன்று புள்ளிகளை சொல்கிறார்.
(i) நிபந்தனைகளுடன் கூடிய அன்பு என்பது அன்பு கிடையாது. நீ இப்படியெல்லாம் இருந்தால் நான் உன்மீது அன்பாக இருப்பேன் என்பது அன்பு அல்ல, அது உடன்படிக்கையே. ஆனால் அப்படி நிபந்தனையற்ற அன்பு எங்குள்ளது என்று வாழ்க்கையில் தேடிப்பார்த்தால் நாம் ஏமாற்றத்தையே அடைவோம். ஓஷோ அத்தகைய அன்பைத்தான் முன்வைக்கிறார். அது சாத்தியம் என்கிறார், அதற்கான அகப்பயிற்சியையே அவர் யோகம் என்கிறார்.
(ii) என்றுமுள்ள தன்மையை உறவுடன் கலந்துகொண்டால் அது உறவாக அமையமுடியாது. இந்த உறவு அப்படியே காலாகாலத்துக்கும் இருக்கும் என்று கருதக்கூடாது. வாழ்க்கை மிகப்பெரியது. காலத்தில் உருமாறிக்கொண்டே செல்வது.
(iii) உறவை வாழ்க்கை முழுமைக்குமானதாக கருதிக்கொள்ளக்கூடாது. அன்பு, காதல் என்பது வாழ்க்கை மொத்தமும் அல்ல. வாழ்க்கையில் அன்பைவிட, உறவுகளைவிட பெரியவை பல உள்ளன. ஒட்டுமொத்த வாழ்க்கையும் சேர்ந்து அவற்றுக்கு அர்த்தமளிக்க முடியாது.
இதை நான் இங்கு சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். ஆனால் ஓஷோ இதுபற்றி விரிவாக பேசியிருக்கிறார். இதை நாம் வரையறுத்துக் கொண்டால்தான் அன்பு என்பதை நாம் உண்மையில் உணரமுடியும். அன்பு என்ற பெயரில் துன்பத்தை அனுபவிப்பதற்கு மனிதனுக்கு ஒரு ருசி உள்ளது. ஒரு மனிதனிடம் அவனுடைய அன்பை பற்றி பேசச்சொன்னால் உடனடியாக அவன் அவனுடைய துக்கத்தை பற்றி பேசத்தொடங்குவான் என்கிறார் ஓஷோ. ‘நானெல்லாம் அவளை நினைத்து ராத்திரியெல்லாம் அழுதிருக்கிறேன்’, ‘நானெல்லாம் அவனுக்காக சாவதற்குக்கூட தயாராக இருந்தேன்’ என்பார்கள். இது அன்பல்ல, துயரம். அன்பைப்பற்றிப் பேசும்போதெல்லாம் நாம் ஏன் உடனடியாகச் சாவைப்பற்றிப் பேசுகிறோம்? ஓர் அன்பின் பொருட்டு நாம் அடைந்த துன்பங்களைக்கொண்டு ஏன் அன்பை மதிப்பிட்டுக்கொள்கிறோம்?
ஒரு வண்டியை ஓட்ட நீங்கள் வண்டியின் தொழில்நுட்பத்தைப் பயிலவேண்டியுள்ளது. ஆனால் அன்பாக இருப்பதற்கு நீங்கள் எவ்வித பயிற்சியும் எடுத்துக்கொள்வதில்லை என்கிறார் ஒஷோ. நமது பெண்களுக்கு அவர்கள் அன்பில்லாமல் இருப்பதற்கான பயிற்சியை கன்னிப்பருவத்திலேயே அளித்துவிடுகிறோம் என்கிறார். அவள் பருவமடையும்போது யாரிடமும் காதல் வந்துவிடக்கூடாது என்பதால் அன்பு இல்லாமல் இருப்பதற்கான பயிற்சியை பதினெட்டு இருபது வயதுவரை அளித்து அதன்பின் திருமணம் செய்துகொடுத்துவிடுகிறோம். அதன்பின் அவளை கட்டிக்கொண்டவன் பாடு. அன்பு என்பதை பற்றி அவர் மீண்டும் மீண்டும் இதை சொல்கிறார், அன்பாக இருக்க ஒருவர் முறையான பயிற்சியை எடுத்தாகவேண்டும்.
4. மகிழ்ச்சி
ஓஷோவிடம் வரக்கூடிய அத்தனைபேரும் திரும்பத்திரும்ப மகிழ்ச்சியாய் இருப்பதை பற்றித்தான் கேட்கிறார்கள். பி.கே.பாலகிருஷ்ணனிடம் நான் கேட்டேன், ‘ஏன் ஓஷோவிடம் கேள்வி கேட்பவர்கள் எல்லோருமே மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று கேட்கிறார்கள்’ என்று. அவர் ‘அவன் ஒருவனிடம்தான் சென்று மகிழ்ச்சியாய் இருப்பது பற்றி கேட்கமுடியும். மற்ற சாமியார்களிடம் கேட்கமுடியுமா ? அவர்களே துக்கமாகத்தானே இருக்கிறார்கள்’ என்றார். துக்கமாக இருப்பது எப்படி என்று சொல்லக்கூடிய சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களின் படங்களிலேயே அவர்கள் அழுதுகொண்டு இருப்பதைப்போலத்தான் இருக்கும். அத்தனை புனிதர்களும் துயரம் கப்பிய தோற்றம் கொண்டவர்கள். எழுபதுகளில் ஒரேயொரு துறவியிடம் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று கேட்கமுடியும்.
ஓஷோ மகிழ்ச்சிக்கு ஒரு வரையறை அளிக்கிறார். ‘Happiness is so unusual, so useless’ என்கிறார். ஏனெனில் மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சியின்மையுடன் ஒப்பிட்டுதான் நமக்கு வரமுடியும். விடுதலை என்பது மகிழ்ச்சி. ஆனால் கட்டுண்டு இருந்தால்தான் விடுதலையை அனுபவிக்க முடியும். உடல் நலம் என்பது மகிழ்ச்சியானது. ஆனால் நோயை வைத்துதான் உடல் நலனை மதிப்பிட முடியும். மகிழ்ச்சி என்பதே சார்புடையது. துயரத்துடன் ஒப்பிட்டு மட்டும்தான் உங்களால் மகிழ்ச்சியை உணரமுடியும். ஆகவே மகிழ்ச்சி என்பது பயனற்றது. எனவே அந்த சொல்லை விட்டுவிடு என்கிறார்.
அவர் சொல்வது நிறைவை பற்றி (Fulfillment). சிறந்த மகிழ்ச்சி என்பது இன்னொன்றுடன் ஒப்பிடுவதாக அல்லாமல், வேறொன்றின் நிபந்தனையாக அல்லாமல் ஏற்படுவதுதான். நான் பல இடங்களில் மற்றவர்கள் பேசும்போது ஓஷோவை நினைவுகூர்வேன். ஊட்டியில் அற்புதமான இயற்கை காட்சியை பார்த்துக்கொண்டிருப்பார்கள். சில நேரத்திலேயே ‘இந்நேரம் சிந்தாதிரிப்பேட்டையில் கனகனன்னு இருக்கும்’ என்பார்கள். சிந்தாதிரிப்பேட்டையை வைத்துதான் இந்த மகிழ்ச்சியை அவர்களால் உணரமுடிகிறது. அது உண்மையான மகிழ்ச்சி அல்ல, ஒப்பீடு மட்டும்தான். ஓஷோ சொல்வது அத்தகைய மகிழ்ச்சியை அல்ல. அந்த தருணத்தின் நிறைவையே. மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்ற கேள்விக்கு Be fulfilled என்கிறார் ஓஷோ. அதற்கு அப்பால் ஒரு பதில் இல்லை.
ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. நாயர் ஒருவர் நம்பூதிரியிடம் செல்கிறார். அந்த நம்பூதிரி ஒரு பெரிய வைத்தியர். நாயர் தனது தொண்டையை காண்பித்து, தன்னால் எதையும் விழுங்க முடியாது என்றும் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். நம்பூதிரி தொண்டையை பரிசோதித்துவிட்டு, ‘தொண்டை நிரந்தரமாக கெட்டுப்போய்விட்டது. இனி எதையும் விழுங்கவே முடியாது’ என்றார். பின்பு ‘நான் மனிதன் ஆசனவாய் வழியாக சாப்பிடமுடியுமா என்பது பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்’ என்றார். நாயர் ‘அது முடியுமா’ என்று கேட்டார். நம்பூதிரி ‘பார்க்கலாம். முதலில் ஓரிரு பருக்கைகள் சாப்பிடு. பின்பு அதிகமாக சாப்பிடலாம். நீ ஆறுமாதம் இங்கேயே இரு. நான் உன்னை பழக்குகிறேன்’ என்றார்.
நாயர் அங்கேயே இருந்துகொண்டு ஆசனவாய் வழியாக சாப்பிட பழகினார். பின்பு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் சிறிது நாட்கள் கழித்து அங்கு வருகிறார். அப்போது ஒரு மாதிரி நடனமாடிக்கொண்டே இருக்கிறார். நம்பூதிரியிடம் ‘நான் இப்போது நல்லா ஆயிட்டேன். மீன், இறைச்சி எல்லாம் சாப்பிடுகிறேன். உங்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன்’ என்றார். நம்பூதிரி ‘ஏன் நடனமாடிக்கொண்டே இருக்கிறீர்கள், ஏதேனும் பிரச்சனையா?’ என்று கேட்கிறார். அதற்கு நாயர் ‘அது ஒன்றுமில்லை, டைம்பாஸுக்காக சூயிங்கம் போட்டிருக்கிறேன்’ என்றார்.
நீங்கள் மகிழ்ச்சியை எந்தவொரு வடிவிலும் அடைய முடியும். எந்தவொரு வடிவில் இருந்தும் மகிழ்ச்சிக்கு செல்ல முடியும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் உணராத நிலைதான் மகிழ்ச்சி என்கிறார். ‘எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கு…’ என்று சொல்லிவிட்டாலே அது மகிழ்ச்சி அல்ல. ஏனெனில் அதை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள். நிறைவடைய, நிகழ்காலத்தில் முழுமையாக இருக்க, அதாவது மகிழ்ச்சியாக இருக்க பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சிக்கு தடையாகவும் நிபந்தனையாகவும் இருக்கக்கூடிய விஷயங்களை ரத்து செய்யுங்கள் என்கிறார் ஓஷோ.
(5) ஞானம்
பெரும்பாலான ஞானங்கள் அனுபவங்களில் இருந்து திரட்டி எடுக்கப்படுபவை, ஆனால் அந்த அனுபவத்திற்கு எந்த வகையிலும் பயன்படாதவையாகவும் இருப்பவை என்கிறார் ஓஷோ. இதற்கொரு நம்பூதிரி நகைச்சுவை சொல்லலாம். நம்பூதிரி வீட்டைவிட்டு வெளியே வருகிறார். வழக்கத்துக்கு மாறான ஒரு பாதையில் செல்கிறார். வழியில் மஞ்சளாக ஏதோவொன்று கிடக்கிறது. குனிந்து அதை தொட்டுப்பார்க்கிறார். பிசுபிசுவென்று இருக்கிறது. முகர்ந்து பார்த்தபோது நாற்றமடித்தது. கையை வேட்டியில் துடைத்துவிட்டு ‘மலம் என்று நினைக்கிறேன். நல்லவேளை அதை மிதிக்கல’ என்றார்.
அனுபவத்திற்கு முன்னால் இருக்கக்கூடிய அறிவு மட்டும்தான் உனது அறிவு என்கிறார் ஓஷோ. ஞானம் என்பது அனுபவத்தை அறிவதற்காக பயன்படவேண்டும். அனுபவத்தால் பின்னர் ஏற்படும் அறிவினால் எந்தப்பயனும் இல்லை. ஏனென்றால் அந்த அனுபவம் மீண்டும் வரப்போவதில்லை. வருபவை முற்றிலும் புதியவை. அவற்றுக்கு பழைய அனுபவஞானம் உதவாது. மெய்மை, தியானம் போன்ற விஷயங்களை Enlightenment என்ற சொல்லால் சுட்டுகிறார். அதுபற்றி சொல்லும்போது ‘Enlightenment is something you know about yourself in the eternity’ என்கிறார். முடிவின்மையில் நீ உன்னைப்பற்றி அறியும் அறிவுதான் enlightenment. அதுதான் ஞானத்தின் விடுதலை என்கிறார்.
ஓஷோ சொல்லும் இந்த ஐந்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி பார்க்கலாம். ஒன்றிலிருந்து ஏன் அடுத்தது வருகிறது என்று பார்க்கலாம். காதலை பற்றி சொல்லும்போது ஒத்திசைவு என்ற விஷயத்தை பற்றி சொல்கிறார். இன்னொரு மனிதனுடன் ஒத்திசைந்து போகும்போதுதான் அது அன்பு. ஆனால் அவ்வாறு ஒத்திசைந்து இருப்பதை நிபந்தனையாக போட்டால் அது துன்பமாகிவிடும். அதற்கு அவர் ஓர் உதாரணம் சொல்கிறார். நான் இலக்கியவாதி என்பதால் பெரும்பாலும் உதாரணங்களையே நினைவில் வைத்திருப்பதை பார்க்கலாம். எனக்கு அதில் இருக்கக்கூடிய கவித்துவம்தான் நினைவில் இருக்கும்.
இரண்டுபேர் நடனமாடுவதை அவர் உதாரணமாக சொல்கிறார். ஒருவர் மற்றொருவருடைய நடனத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தவில்லை, ஆணையிடவில்லை. ஆனால் இருவரும் மிகச்சரியாக ஆடினால் ஒருவருடைய நடனம் இன்னொருவரின் நடனத்தை வடிவமைக்கும். ஒன்றின் அசைவு மற்றொன்றில் தெரியும். அப்படிப்பட்ட இயல்பான நடனம் போல உறவு இருக்குமென்றால் அது சரியான உறவு. ஒருவர் இன்னொருவரின் நடனத்தைக் கண்காணித்தால், உருவாக்க முயன்றால் அது சிக்கிக்கொள்ளும் உறவு, அன்பான உறவல்ல என்கிறார்.
கேரளத்தில் தோலன் நம்பூதிரி பற்றிய நகைச்சுவை பிரசித்தமானது. ஒரு மதயானை சினந்து சாலையோரத்தில் நிற்கிறது. யாரும் அருகில் செல்லவில்லை. அப்போது தோலன் நம்பூதிரி ‘மூனு சக்கரம் கிடைத்தால் நான் யானையை அடக்குறேன்’ என்றார். [*சக்கரம் – நாணயம்]. அவருக்கு மூன்று சக்கரம் கொடுக்கிறார்கள். அவர் யானை முன் நின்று தனது மூக்கின் மீது விரல்களை வைத்து ஆட்டிக்காட்டுகிறார். அதைக்கண்ட யானை அவரை துரத்துகிறது. நம்பூதிரி உடனே ஓடிச்சென்று உழுதுபோட்ட வயலில் இறங்கி மறுபக்கம் சென்றுவிட்டார். யானை அந்த சேற்றில் இறங்கி மாட்டிக்கொண்டது. மனிதர்களை கொண்டுவந்து இவ்வாறு சிக்கவைப்பதுதான் இங்கு அன்பாக உள்ளது. அது அன்பல்ல .அவ்வாறு சிக்கிக்கொள்வது பற்று. அந்த பற்றில் இருந்து பொறுப்பு, அதிலிருந்து துயரம் என்று வரிசையாக செல்லும்.
இந்த புள்ளிகள் வழியாக ஓஷோவை ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அவருடைய மொத்த உரையிலும் Enlightenment என்று அவர் எதை சொல்கிறார் எனில், அது இன்றிலிருப்பதைத்தான். இன்றில் முழுமையாக இருப்பதை தவிர மெய்ஞானம் என்று ஒன்று இல்லை. இன்றிலிருப்பதற்கு என்ன செய்யவேண
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


