Jeyamohan's Blog, page 50

August 19, 2025

குருதிகோரல்- கலைச்செல்வி

அரசக்குல அன்னையர்கள் பதறுகின்றனர். போர் மூளுமெனில், அது நிலத்துக்கான போர் என்பதால் அதன் முதற்குறியும் பலியும் இளவரசர்களாகதானிருக்க முடியும் என்ற அச்சம் அவர்களை கவ்வியிருந்தது.  யுதிஷ்டிரனின் மனைவியும் சிபி நாட்டு இளவரசியுமான தேவிகை  நடக்கவிருக்கும் போரில் தன் மகன் களம் படுவான் என்ற நிமித்திகரின் சொல் கேட்டுப் பதறி அவன் நலம் வேண்டி குருஷேத்ரத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்திருந்த புண்டரீகச் சுனையில் நீராட வருவதில் தொடங்குகிறது நாவல். 

பெண்களின் உலகை அதிகமும் பேசும் நாவல் இது. பொதுவாக ஆண்களின் உலகம் பெண்கள் அறிய முடியாதது. பெண்களின் உலகம் ஆண்கள் அறிய விழையாதது. குடிகளாக பெண்கள் இருப்பதை விட அரசக்குல பெண்களாக இருப்பது சிரமம்தான். நல்வாய்ப்பாக அவர்களின் ஆணவமும் மேட்டிமையும் சாதாரண பெண்களிடமிருந்து அவர்களை பிரித்து விடுவதால் குடிப்பெண்களின் இயல்பான, அதிகம் பாசாங்குகளற்ற வாழ்வை அரசியர்களால் அணுகி அறிய முடிவதில்லை. அவர்கள் மகளென ஒற்றை வாரிசாகப் பிறந்தாலும் குழந்தையிலிருந்து குமரியென்றாகும் தருணத்தில் மனைவியென பலரில் ஒருவராக மறுநாடு புகுந்து எப்போதோ கிடைக்கும் கணவனின் அன்புக்காக காத்திருக்க வேண்டும். அதிலும் அவர்களை பூச்சிகளைக் கவ்வும் பல்லிகளைப் போல கவர்ந்துக் கொண்டு போகவும் அரசர்களுக்கு அதிகாரமுண்டு. அதற்கு அரசர்களின் வயதோ இளவரசியரின் விருப்பமோ பொருட்டே அல்ல. அரசியென ஆன பின்னர் அவர்களின் அரிதாரங்களில் புன்னகையும் சேர்ந்துக் கொண்டுவிடும். அதிகாரம், அது தொலைந்து விட கூடாத அச்சம், அதனை நிகழ்த்தித் தரும் சூழ்ச்சி, அது கிளர்த்தும் வஞ்சம் என எதிர்உணர்வுகளுடன் வாழ வேண்டியிருக்கும். அரண்மனையின் முறைமைக்குள் அடங்கவியலாது தவித்து திகைத்து சொல்லிழந்து பின்னர் பிறர் செய்வதை போன்று செய்வதற்கு பழகி, வெற்றுச் சடங்குகள், பொருளற்ற சொற்கள்., மீள மீள நிகழும் நீண்ட பகல்கள், களைந்து களைத்து உறங்கிப் போகும் குறுகிய இரவுகள் என்று அவர்களின் வாழ்வு சாணவண்டு நகர்த்திச் செல்லும் சாண உருண்டையென நகர்ந்து முடிந்து விடும். அவர்களை சிறுதாளம் கூட தப்பி விட கூடாத இசைக்கருவி, சிறு சுருதி கூட மாறி விட கூடாத பாடல் எனலாம். கருத்திருந்தும் நாவிழந்து, மொழியறிந்தும் சொற்களற்று, சிந்தனையிருந்தும் செயலற்று தேவயானி, திரௌபதி போன்று எங்கோ முளைக்கும் சில விதிவிலக்குகள் தவிர்த்து அழுத்தம் நிறைந்த வாழ்வில் குரல் என்ற ஒன்றேயிருக்காத உயிர்ப்பதுமைகள் அவர்கள். ஆனால் நிகழவிருப்பதோ அசாதாரணமான அசம்பாவிதம். அது கொண்டு வரவிருக்கும் சாவு, தாங்கள் கொடுக்க வேண்டிய காவு என்னவென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மங்களத்தை இழப்பதை விட உதிரத்தை இழப்பதே அதிக தவிப்பு அவர்களுக்கு.

குருஷேத்திரம் என்ற தொன்மையான போர்க்களத்தின் வர்ணனையே பயமுறுத்துகிறது. முட்புதர்கள், செம்மண்புற்றுகள், மரப்பட்டைகளில் பரவியேறிய செம்புற்றுப்பரப்பு, என்றோ இறந்த வீரர்களின் எலும்புகள், மண்டையோடுகள் என ஈரத்தின், இதயத்தின், ஆக்கத்தின், அறத்தின் வாசனையற்ற குண்டும் குழியுமான வெயிலாலான அந்த சிவந்த பூமி தன் நிலமெங்கும் முளைத்தெழுந்த கைகளோடு பலிக் கோரிக் காத்திருக்க, அதன் கோரிக்கையை நிறைவேற்ற ஆண்கள் தங்களால் இயன்றதை முயன்றுக் கொண்டிருந்தனர்.

திருதராஷ்டிடிரர் உணர்ச்சிகளாலும் பெருங்கருணையாலும் ஆளபட்டவர் மட்டுமன்று, சூட்சமக்கணக்குகளும் சூழ்ச்சியும் நிரம்பியரும் கூட. நிலம் மொத்தமும் தன் மகன் வசமிருப்பது அவருக்கு ஏற்புடையதே. அவர் மக்கள் நலம் நாடும் பேரரசரன்று.  தம் மக்களுடன் நேருக்குநேர் போரிடுவதோ அவர்களை கொல்லுவதோ கூடாதென்று தன் மகனறியாது சஞ்சயன் மூலம் பாண்டவர்களுக்கு துாது அனுப்பி தன் வாரிசுகளை பாதுகாத்துக் கொள்ள விழையும் இயல்பான தகப்பன். வேள்விப்பழிக்கு தேர்வான அந்தண இளைஞன் உளம் விழைந்தாலும் உதடுகளால் மறுப்பேதும் சொல்ல முடியாததை போன்று பாண்டவர்களால் பெரியதந்தையின் வேண்டுகோளை மறுக்க முடியாது. அப்பேரரசரின் விழைவும் அதுவே. 

புண்டரீக அன்னையிடம் முறையிட்டதோடன்றி தேவகி பூரிசிரவஸ் மூலம் பானுமதிக்கும் அசலைக்கும் அங்கரின் அரசி விருஷாலிக்கும் போர் வேண்டா துாது அனுப்புகிறாள். அதோடு உபப்பிலாவ்யத்தில் தங்கியிருக்கும் திரௌபதியிடம் வருகிறாள். தன்னிடம் காரசாரமான விவாதித்த தேவகியின் வாதத்திலிருக்கும் உண்மையும் அன்னைமையும் திரௌபதியின் தாய்மை என்ற மெல்லுணர்வை வெளிக்கொணர, அதனை எடுத்துரைக்க வேண்டி தேவகியோடு அஸ்தினபுரிக்குச் செல்ல திட்டமிடுகிறாள். இளமைகாலம் வேகத்தை முன் வைக்கும். முதுமை விவேகத்தை முன்னிருத்தும். அரசியானவள், அரசியென்றே வளர்க்கப்பட்டவள், அதிகாரத்தை பிடுங்கி  அவமானப்படுத்தப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்டவள் என்ற நிலையிலும் எந்த முறைமையும் இன்றி அஸ்தினபுரி செல்லுமளவுக்கு இப்போது அவளிடம் விவேகமிருந்தது. ஆனால் யுதிஷ்டிரரோ இளைய யாதவரின் வருகையை காரணம் காட்டி மனைவியின் பயணத்தை ஒத்திப் போடுகிறார்.

சகுனியுமே எண்ணமற்றவராக மாறியிருந்தார். அவரின் வஞ்சமுமே  நீர்மையிழந்திருந்தது. போரின் விளைவுகளை அறிய முடிந்த அவர் போர் நிகழ்வதற்குள் மைந்தர் அனைவருக்கும் மணம் செய்வித்து விட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதன் உட்பொருளை பெண்கள் அறியாதவர்கள் அல்ல. பானுமதியை விட துச்சாதனனின் மனைவி அசலை வேகமானவள். தேவகியின் துாது அவர்களிருவரையும் சென்றடைய அதனை ஏந்திக் கொண்டு மருமகள்களான அத்தமக்கையர் பேரரசி காந்தாரியிடம் செல்கின்றனர். காந்தாரிக்கு கற்சிலையாகி விட்ட கணவன் மீதும் அறமற்ற மகன் மீதும் நம்பிக்கை இல்லை. அவள் பீஷ்மரிடம் செல்கிறாள். பீஷ்மர் இருசாரராலும் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாத ஒரு முதியவன் மட்டுமே நான் என கைவிரித்து விட காந்தாரியை போல அசலை அவரை விட்டு விடுவதாக இல்லை. உள்ளத்தின் கேள்வியை எதிர்க் கொள்வதை விட அதிலிருந்து ஒழிந்து செல்வதே கடந்துச் செல்வது என்ற வழிமுறையை கைக்கொண்டு விட்ட அவர் இப்போதும் உண்மையிலிருந்து ஒழிந்து செல்லும் பொருட்டே இத்தருணத்தில் எடுக்க வேண்டிய முடிவை தவிர்ப்பதாக அவரை கூறு போடுகிறாள் அசலை. அம்பைக்குப் பிறகு அவரை நேர்குறுக்காக வகுப்பவள் அவளே. அவரோ வழக்கம்போல தந்தைக்கும் சகுனிக்கும் தான் அளித்தச் சொல்லை முன்வைத்து துரியோதனனின் அரியணை அமர்வை நியாயப்படுத்தி விட்டு எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிக்குக் காவலாக படைக்கலமேந்துவேன் என்ற தனது ஒருதலைப்பட்ட நியாயத்தை முன் வைத்து விட்டு சென்று விடுகிறார். பெண்களின் துாதுக்குழு துரோணர், கிருபரிடம் செல்ல, அவர்கள் தாம் போரில் பங்கெடுக்கவில்லையெனில், இறப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்கின்றனர். 

பீஷ்மரின் முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்ற அசலையின் பரிதவிப்பு அது அங்ஙனம் இருக்கப் போவதில்லை என்ற உணர்ந்த பிறகு ஏற்கனவே அறிந்து விட்ட ஒன்றை வெறும் சொற்களெழுப்பும் ஒலிகளாக கேட்டுக் கொள்கின்றன. அரசியரில் பானுமதி, அசலை, தாரை, துச்சளை பலந்தரை, கரேணுமதி, பிந்துமதி, விஜயை, தேவிகை, சுபத்தரை, விருஷாலி, சுப்ரியை, தாரை போன்ற பல பெண்களின் ஆளுமை வெளிப்படுகிறது. கலிங்க இளவரசிகளில் சுதர்சனை தவிர்த்து சேதி நாட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போன சுனந்தை, சுனிதை போல கர்ணனின் மனைவி சுப்ரியையும் தன் கருப்பை ஷத்திரிய இரத்தத்தை சுமக்கவியலாது போனதை எண்ணி கணவரை வெறுப்பவள். தேவிகை, விஜயை போர் மூளாதிருக்க எண்ணுகின்றனர். பிந்துமதிக்கும் கரேணுமதிக்கும் அந்த எண்ணமில்லை. பலந்தரை விதிவசத்தால் பீமனிடம் அகப்பட்டு  கொண்டவள். அவளுக்கும் பீமனுக்குமான ஆழ்மனப்பிடிப்பை இளையயாதவர் வெளிக்கொண்டு வருகிறார். பாரதவர்ஷத்திலேயே அதிக தீயூழ் நிறைந்தவள் காந்தாரியாகதான் இருக்க முடியும் இவற்றோடு கணவரான திருதரை அணுகுவதற்கு பிரகதியை சிபாரிசு கோரும் அவலம் வேறு. 

துரியோதனனுக்கு அப்பெருநிலத்தை தானே ஆள வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். அதிலொன்று குந்தி. தன் மைந்தர்களுக்கு நிலவிழைவை உண்டாக்குவதால் ஏற்பட்ட கசப்பு என்பதை விட கர்ணன் அவன் தோழன் என்பதே அவள் மீதான வஞ்சத்தின் பெருங்காரணமாக இருக்க முடியும். கர்ணன் யாரென அறிவான் அவன். அதனாலேயே குந்தியை வெறுப்பவன். ஷத்திரிய பேரவையில் குந்தியை அவமானப்படுத்துகிறான். கணவர் அறியாமல் விரும்பியவருடன் சென்று கருத்தரித்த மைந்தர்களே பாண்டவர்கள் என்கிறான். அவ்வண்ணம் இல்லையெனில் அவைக்கு வந்து தன் கற்புக்கு அவள் சான்றுரைக்கட்டும். மைந்தர்களை அளித்தவர்களின் பெயர்களை கூறட்டும் என்கிறான். ஆனால் வேள்விக் காவலனான தனதருகே வேள்வித் துணைவனாக கர்ணன் அமர முடியாமல் அவமானத்தோடு வெளியேறும்போது அவன் அமைதிக் காத்தது ஏனோ? இறுதியில் அவ்விடம் ஜெயத்ரதனுக்கு கிடைக்கிறது. 

குந்தியின் மீதான துரியனின் குற்றச்சாட்டைக் கேட்டு விதுரர் மயங்கி விழுகிறார். இளையயாதவர் கண்கலங்குகிறார். பீஷ்மரோ ஆசிரியர்களோ வாய் திறக்கவில்லை. யாரை குறைக்கூறுவது? சத்யவதியின் மீது காமம் கொண்ட சாந்தனுவையா? அதன்பொருட்டு பிரம்மசர்யம் மேற்கொண்டு வாரிசுகளற்று போன நிலையில் தன் இளவலுக்காக காசியின் இளவரசிகளை முறைமை தவறி கவர்ந்து வந்த பீஷ்மரையா? வாரிசுக்காக அப்பெண்களை பயன்படுத்திக் கொண்ட சத்யவதியையா? சொந்த நாடான காசியிலும் காதல் கொண்ட சால்வனிடமும் அதை தொடர்ந்து மலர காத்திருந்த தன்வாழ்வை சிறுமொட்டென பறித்தெறிந்து விட்டு போன பீஷ்மரிடம் தன் மனம் சென்றிருப்பதை அறிந்து திகைத்து, பின், தன் சுயம் கொண்ட உயர்வனைத்தையும் தொலைந்து பணிந்து இரந்து நின்ற அம்பையை புறக்கணித்த பீஷ்மரையா? எல்லாமுமே என்றாலும் பீஷ்மர் பேச வேண்டிய நேரத்தில் அமைதி காப்பதும் செய்ய வேண்டியவற்றை செய்யாது வாளாவிருப்பதும் வேண்டத்தகாததை நிறைவேற்றிக் காட்டுவதுமென பெருங்குற்றங்களை இழைத்துக் கொண்டேயிருக்கிறார். அவர்தான் அம்பையின் சாபம் அஸ்தினபுரியில் நிழலென படர்வதற்கு பொறுப்பு. பானுமதி கூட அம்பையை போல காசிநாட்டு இளவரசிதான். பாஞ்சாலிக்கு துகில் அளித்த பானுமதியின் மனம் இப்போது கணவன் வசம் சென்றிருந்தது.  ஒருவேளை அது அவளுள் அம்பை செய்திருக்கும் மாயமா? 

தேவகிக்கும் பால்ஹீகனுக்கும் நடக்கும் சந்திப்பு கதையை அங்கேயே விட்டு விட்டு அவர்களை தொடர வேண்டுமென எண்ண வைக்கிறது. மனஅணுக்கம் கொண்ட பழையவர்களின் புதிய சந்திப்பு. கலிங்கம், வங்கம், பௌண்டரம், கூர்ஜரம், மாளவம், அவந்தி, காமரூபம், அயோத்தி, கோசலம், விதர்ப்பம் போன்ற நாடுகளுக்கு மன்னர்பொருட்டு துாது சென்று அவர்களை கௌரவர் தரப்புக்கு கொண்டு வந்த வீரன் பூரிசிரவஸ். அவளோ யுதிஷ்டிரனின் மனைவி யௌதேயனின் தாய். அவையெல்லாம் பின் நகர்ந்து விடுகிறது. இப்போது அவள் தன் தோற்றம், வார்த்தைகள் என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தும் பெண். அவன் அவளை விரும்பும் ஆண். அனைத்தும் நீதான் என உளம் அணுக்கம் கொண்டு நெருங்கி விடும் தருணம் அது. உரிமை எடுத்துக் கொள்ளும். ஒருமையில் பேசத் தோன்றும். பேசும்போதே தெரியாமல் பட்டது போல காமமற்று அங்கத்தை எங்காவது தொட்டு விடத் துடிக்கும்.  வார்த்தை விடுக்கும் மொழியின் தாளக்கட்டுக்குள் சுதி சேராமல் கண்களின் மொழி படபடத்துத் தவிக்கும். அதை மறைக்க உதடு வார்த்தைகளுக்கு அதிகம் சப்தம் சேர்க்கும். வார்த்தைகள் அர்த்தமற்று விழும். ஒருவரையொருவர் சுமந்து கனத்த இதயத்தோடும் உடல் முழுக்க கண்களோடும் பிரிந்து நகர்கையில் கால்கள் தளர, கண்கள் இருள, எப்போது சந்திப்போம்…? என்ற மனதின் கேள்வியை கவனம்.. கவனம் என்று எங்கோ பின்னால் கிடந்த அறிவு ஓடி வந்து கைத்தலம் பற்றி பகர, இனி எப்போதும் வேண்டாம் என்று பதறி நகர்வர்.  அதெல்லாமே நிகழ்கிறது இருவருக்குள்ளும். இன்னொரு சுவாரஸ்யமான இணை கர்ணனின் துணைவி சுப்ரியையும் துச்சளையின் கணவன் ஜெயத்ரதனும். அடுத்து துச்சளை, பூரிசிரவஸ். பானுமதி கூட  கூட தான் ஒளித்து பாதுகாக்கும் மயிற்பீலியை எடுத்துப் பார்த்துக் கொள்கிறாள். 

பாண்டவர்களுக்கு தனியொரு நாடோ மக்களோ படைகளோ இல்லை. பெண் எடுத்த வீட்டின் வழியே வந்து சேர்ந்த நிலத்தில் அரசரென வீற்றிருக்க வேண்டிய காலியான வாசனைத் திரவிய குப்பி. காலம் நீர்க்க வைத்த வஞ்சக்கணக்குகளை திரட்டி எடுக்க வேண்டிய கட்டாயம் வேறு. கௌரவர்களோ புகழின் உச்சியில் இருந்தனர். சத்யவதியின் ஆட்சி காலத்தில் பலவீனமான வாரிசுகளுடன் நுண்வடிவில் யயாதியையும் ஹஸ்தியையும் குருவையும் வைத்துக் கொண்டு முதிய இளைஞனான பீஷ்மனுடன் தள்ளாடிக் கொண்டிருந்த அஸ்தினபுரியில் இப்போதோ நினைவுக் கொள்ளவியலாத அளவுக்கு வாரிசுகள். எங்கெங்கெங்கிலோ இருந்து மணம் செய்வித்து அழைத்து வரப்பட்ட பெண்கள். அஸ்தினபுரி என்பது பெயர் மட்டுமல்ல. பெருமையும் கூட. முன்னோர்களின் வீரம் செறிந்த அதன் பழமையும் அதன் நீட்சியாக அமர்ந்திருக்கும் பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் என்று பெருமக்களின் கூட்டமும். ஷத்திர குல பாரம்பரியமும் அதன் பொருட்டு அவ்வணியில் திரண்டு நிற்கும் ஷத்திரிய நாடுகளும் பின்னும் கர்ணன் என்னும் பலமும் துரியோதனன் துச்சாதனன் என்னும் அதிகாரத்துடன் கூடிய துடிப்பும் நிமிர்வும் திமிறி நிற்க அதற்கு நிகரென வைக்க குந்தியின் வெஞ்சினம் தவிர பாண்டவர்களுக்கு வேறேதுமில்லை. ஆனால் இளையயாதவர் என்ற பொருளை தராசிலிடும்போது அதற்கு நிகர் வைக்கவியலாது போய்விடும்.

குந்தியும் கணிகரும் உயிர்ப்புடன் இருந்தனர். கணிகர் உசுப்பி விட்ட குன்று பெருமலையென கலிதேவனின் கருணையுடன் இப்போது நிமிர்ந்து நிற்கிறது. குந்தியும் மைந்தர்களை உசுப்புகிறாள். ஒருவேளை போர் நின்று விடுமா? பயம் சூழ்கிறது அவளுள். மைந்தர்கள் நெஞ்சம் இளகி விடுவரோ? எது அவளை இயக்குகிறது? அவளேதும் முடி சூடி ஆள போவதில்லை. அதிகபட்சம் போனால் ராஜமாதா. அதுவொன்றும் அவள் அடையாத இடமல்ல. அவள் தன்னிலை இழந்து மகன்களிடம் அவர்கள் பாண்டுவின் குருதியினர் அல்ல என்ற தன் ரகசியங்களையெல்லாம் கவிழ்த்துக் கொட்டுகிறாள். விராடர் மகற்கொடையாக கொடுத்த கையளவு மண்ணில் அரியணை அமைத்து பொய்முடியும் வெறுங்கோலும் கொண்டு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு தருணமும் பாண்டுவின் முகத்தில் காறி உமிழ்கிறாய் என்ற அவளின் வார்த்தை தெறிப்பும் ஆழம் தொடும் வீச்சும் அதிகம். தன்னுள்ளிருக்கும் தவிப்பென்பது பாண்டுவின் இயலாமை எழுப்பிய வஞ்சினமே. அது ஒருபோதும் சொல்லென திரளாது உளபரிமாற்றத்தின் வழி உணர்ந்த கணவனின் கனவு. அது சிதைந்து விடாதிருக்க எத்தனை சிதைவுகளையும் உண்டாக்கலாம். அவர் கொடிவழிகள் பாரதவர்ஷத்தை ஆள வேண்டும். பாண்டு என்ற பெயர் புவியில் நிலைத்திருக்க வேண்டும். இதுவே தான் செய்துக் கொண்டிருக்கும் தவம் என்கிறாள். இது தவமா? தந்திரமா? அல்லது அனைத்துமே பாசாங்கா? யாராறிவார் யாருள்ளத்தை?

அங்கத்தை கர்ணனின் மைந்தன் விருஷசேனன் ஆள அங்கரின் உடலை மதுவும் உள்ளத்தை அஸ்தினபுரி அவையில் பாஞ்சாலியை சிறுமை செய்த வார்த்தைகளும் ஆண்டுக் கொண்டிருந்தன. அதன் பொருட்டு தன்னை மதுவில் எரித்தழிந்துக் கொண்டிருந்த கர்ணனை இளைய கௌரவர்களான சுஜாதன், விகர்ணன் அவன் மனைவி தாரை, குண்டாசி ஆகியோர் அஸ்தினபுரி அழைத்து வருகின்றனர். 

போரை விரும்புவோருக்கும் விரும்பாதோருக்கு அவரவருக்கான நியாயம் இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி போருக்கான தேவையும் இருந்தது. இளையயாதவர் தனது அரசுரிமையை மகன் மீது இறக்கி வைத்து விட்டு தானே துாதுவனாக சாத்யகியுடன் அஸ்தினபுரி கிளம்புகிறார். திருதராஷ்டிரர் சஞ்சயன் மூலம் உபப்பிலாவ்யத்திற்கு அனுப்பிய துாதை பற்றி கூறி விட்டு தன் முதற்செய்தியை எடுத்து வைக்கிறார். அவரின் இந்த முதற்செய்தி அறவுணர்வும் மென்னியல்பும் உணர்வு வயப்படுபவர்களுக்கும் போதுமானதொன்று. ஆனால் துரியோதனன் கல்லென அமர்ந்திருக்க விகர்ணன் குரலெழுப்ப, திருதர் உணர்வுகளில் பொங்கி வழிய இளையயாதவர் எங்கோ எதுவோ எவருக்கோ எதிலோ என்னவோ நடப்பதுபோல மோனத்தில் ஆழ்ந்து விட, கணிகர் இருக்கும்போது கவலையெதற்கு? கூடி வரும் கருமேகங்களை காற்று கலைப்பதுபோல எங்காவது கருணைமழை பொழிந்து விடுமோ என்று வஞ்சக்காற்றை வீசிக் கொண்டே இருப்பவர் அவர். ஒரு துறும்பை கூட பாண்டவர்களுக்கு விட்டு தர முடியாது என்கிறான் துரியோதனன். 

துரியோதரர்கள் போரை நோக்கி நெடுந்தொலைவு சென்று விட்டிருந்தனர். அதுதானே இளையயாதவர் விழைவதும். துச்சளை கலிதேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கவிருக்கும் தமையனுக்கு அறுதியும் இறுதியுமான அறம் போதிக்கிறாள்.  ஆனால் துரியோதனன் கைகளில் எதுவுமில்லை. அவன் எடுப்பார் கைப்பிள்ளை. எதுவாகிலும் அதை மிச்சமின்றி செய்ய வேண்டும். அதுவே நிறைவு, அது அழிவென்றாலும். அதையே தேர்கிறான்.  அது மீள வழியில்லாத பாதை. இறப்பு. மிரள வைக்கிறது கலி பூசை. அவன் எதை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்திருந்தான். இனி காலம் அவனை சுமந்துக் கொள்ளும். 

இளைய யாதவர் துள்ளல், துடிப்புகளற்ற அமானுடம் கொள்ளாத மானுடனாக இந்நாவலில் வருகிறார். பாரதவர்ஷத்தின் ஷத்ரியப்பேரவை கூடுகிறது. இப்போது அவர் ஐந்து கிராமங்களாவது கொடுக்க வேண்டும் என்ற துாதை அள்ளிக் கொண்டு வருகிறார் பாண்டுவின் மக்களிடமிருந்து. அது கூட அவர் எடுத்த முடிவே. குழம்பிக் கிடந்தார் தருமர். பீமருக்கு தோள்கள் பரபரத்தன. ஆயினும் அவர் இரண்டாமானவரே. தோள் அளிக்கலாம், ஆனால் முடிவுகளை அவர் எடுக்க முடியாது. மற்றவர்கள் எதிலுமே இல்லாதிருந்தனர், திரௌபதியைப் போல, அங்கரைப் போல. ஒருவாறு ஷத்திரியக்கூட்டு தகைந்து வரும் நிலையில் இளையயாதவர் அந்தணர்களை நோக்கி அன்று வேதமந்திரமுரைத்து தொடங்கிய அவையில் பனிரெண்டாண்டுகள் கானுறைவும் ஓராண்டு விழி மறைவும் இயற்றி மீண்டு வந்தால் விட்டுச் சென்றவை அவ்வண்ணமே திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது இப்போது மீறப்படுகிறது எனில், வேதச்சொல் முறிக்கப்பட்டு விட்டதாக தானே அர்த்தமாகிறது என்று அவையை குழப்பமாக்க, துரியோதனன் குந்தியை அவைக்கிழுத்து பாண்டவர்களை குடியிலிகளாக்கி, ஆகவே தன்னால் வேதச்சொல் காக்கப்பட்டதென்றே கொள்க என்றுரைக்க, யாதவர் இறைஞ்சி நிற்க, துரியோதனன் மறுத்து விடுகிறான். போர் நடக்க வேண்டும். நடந்தேயாக வேண்டும். கை மீறி செல்லும்போது ஆட்டத்தை கலைத்து விட்டு புதிதாக தொடங்க வேண்டும். 

அஸ்தினபுரி போர் அறிவிப்பு செய்து விட்ட நிலையில் அங்கு நடந்த புருஷமேதயாகத்தில் சாந்தீபனி குருநிலையின் ஆசிரியர் என்ற முறையில் இளையயாதவர் கலந்துக் கொள்கிறார். ஞானசபை விவாதங்கள் நடக்கின்றன. சபையில் கர்ணன் வழமைபோல சிறுமைப்படுத்தப்படுகிறான். மீண்டும் இறைஞ்சுகிறார் யாதவர். ஞான விவாதத்தில் நான் சொன்ன சொற்களுக்கான பரிசிலாக பாண்டவர்களுக்கு ஐந்து இல்லங்களையாவது கொடு என்கிறார். இரந்து நின்ற கரங்களில் வெறுமை வந்து விழுகிறது. அஸ்தினபுரியின் எளியகுடிகளாக கூட ஏற்க முடியாது என்கிறான் துரியோதனன். 

தன் மைந்தரையோ பேரனையோ போர்களத்தில் எதிர்கொள்வதோ கொல்வதோ செய்யலாகாது என்று பாண்டுவின் மக்களுக்கு தான் இட்டிருந்த ஆணையை திருதர் விலக்கிக் கொள்கிறார். அது இளையயாதவர் வழியாக சொல்லி அனுப்பப்படுகிறது. போரில் நேர் நிற்றலுக்கான தடைகள் இப்போது விலகி விட்டன. இனி சகோதரர்கள் களம் காண வேண்டியது மட்டுமே மீதம். வஞ்சனை மேகங்கள் குருஷேத்திரத்தில் கவிய, கொட்டவிருக்கும் குருதி மழைக்கான முன்னறிவிப்பாக குருதிச்சாரல் வீச தொடங்குகிறது. இயற்கையை, நிலப்பரப்பை, அந்நாளைய வரலாற்றை, புவியியலை, தத்துவத்தை, சமூக அமைப்பை, பண்பாட்டுத் தளத்தை அறியாமல் இதிகாசத்தை எழுத முடியாது. அவ்வகையிலேயே இந்நாவலும் தகைந்து வருகிறது.

கலைச்செல்வி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 11:31

அத்வைதமும் விசிஷ்டாத்வைதமும்

தமிழில் அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் சம்பந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே என்னுடைய சிக்கல் என்னவென்றால் தமிழில் அத்வைதம் பற்றி நல்ல நூல்களே அனேகமாக இல்லை. விசிஷ்டாத்வைதம் பற்றி நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே வைணவ பக்தி நோக்கிலே எழுதப்பட்டுள்ளன.

அத்வைதமும் விசிஷ்டாத்வைதமும்

The discussion about the relationship between religion and spirituality is a most relevant subject these days. Indeed, effectively deciphering this relationship is not an effortless task.

The religion and spirituality
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 11:30

புதுவை வெண்முரசு கூடுகை 85

வணக்கம் நண்பர்களே!

 புதுவையில் நடைபெறும் “வெண்முரசு” கலந்துரையாடலின் 85-வது அமர்வு, “வெய்யோன்” நூலை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 22, 2025 அன்று நடைபெறவுள்ளது. 

இதில் நண்பர் சிவராமன் பேசுவார். 

நிகழ்விடம் புதுச்சேரி, வெள்ளாழர் வீதியில் உள்ள கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” ஆகும். 

நேரம் மாலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை. 

வெண்முரசு வாசகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 11:30

August 18, 2025

வைரமுத்துவும் ராமரும்

வைரமுத்துவின் கம்பராமாயண உரை விவாதமாகியுள்ளது. வைரமுத்துவை வசைபாடி கட்டுரைகளும் உரைகளும் வருகின்றன. உண்மையில் அதிலுள்ள பிரச்சினை என்ன? நான் என்ன நிலைபாடு எடுக்கிறேன்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 11:36

தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள்

வழக்கம்போல தமிழ்விக்கி தூரன் விழா அமைப்பு- நிர்வாகம் முழுக்கவே ஈரோட்டு நண்பர்களால் செய்யப்பட்டது. ஈரோடு கிருஷ்ணன் வழிகாட்டுதலில் பிரபு, பாரி, சிபி, மெய்யரசு, அழகியமணவாளன் என பல நண்பர்கள் இணைந்து நடத்தினார்கள். நான் விருந்தினராக விழாநாள் அன்று காலை சென்று இறங்கினேன். விழா ஒருங்கிணைப்பு நிகழும்போது ஐரோப்பியப் பயணத்தில் இருந்தேன், ஆகவே என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொள்ளவில்லை.

ஐரோப்பாவில் இருந்து 31 ஆம் தேதி வந்தேன். வந்து ஒரு வாரத்தில், 7 ஆம் தேதி புக்பிரம்மா விழா. அங்கிருந்து 12 ஆம் தேதி நாகர்கோயில் மீண்டேன். இரண்டு நாட்களுக்குப் பின் 14 ஆம் தேதி மாலை ஈரோடு ரயிலில் நானும் அருண்மொழி நங்கையும் கிளம்பி மறுநாள் காலை ஐந்தரைக்கு சென்று சேர்ந்தோம். அந்தியூர் மணி, யோகேஸ்வரன் ராமநாதன் என பலர் ரயில்நிலையம் வந்திருந்தார்கள். நேராக விழா நிகழும் ராஜ்மகால் அரங்குக்குச் சென்றுவிட்டோம். அங்கே அஜிதன், தன்யா, ஜி.எஸ்.எஸ்.வி.நவின், கிருபாலட்சுமி, (அவர்களின் மகள் மானசாவும்தான்) ஆகியோருடன் தேவதேவனும் வந்து தங்கியிருந்தார்.

ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக வழங்கப்பட்டு வரும் தமிழ் விக்கி -தூரன் விருதுகள் நண்பர் வழக்கறிஞர் செந்திலின் திருமண மண்டபத்தில்தான் நிகழ்வது வழக்கம். நகரில் இருந்து சற்று தள்ளி இருக்கும் இடம். ஆகவே நகர்மக்கள் இயல்பாக வரமுடியாது. ஆனால் அந்த இடம் எங்களுக்கு கிட்டத்தட்ட இலவசமாகவே அளிக்கப்படுகிறது.(பராமரிப்புச் செலவு மட்டும்) எங்கள் செயல்முறையே மிகக்குறைவான செலவில் நிகழ்ச்சிகளை நடத்துவதுதான்.

நான் அறைக்குச் சென்றதுமே படுத்து ஒன்பது மணிவரை தூங்கிவிட்டேன். நிகழ்வுகள் மாலை நான்கு முதல்தான். வரும் வழியில் ஒரு காபி சாப்பிட்டிருந்தாலும்கூட நல்ல தூக்கம் வந்தது. ரயிலிலும் நன்றாகவே தூங்கியிருந்தேன். எப்படியும் கண் விழித்ததும் பேச்சும், சிரிப்பும் தொடங்கிவிடும். சக்தியை ஏற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. ஒன்பது மணிக்கு சிற்றுண்டி வந்துசேர்ந்தபோதுதான் விழித்துக்கொண்டேன்.

பிரகாஷ் வரைந்த ஓவியம்

நண்பர்கள் வரத்தொடங்கினார்கள். உரையாடல் தொடங்கியது. இத்தகைய நிகழ்வுகளின் அழகு என்பதே அந்த உரையாடல்கள்தான். இலக்கியவாதிகள் நடுவே ஒருங்கிணைக்கப்படும் உரையாடல்கள் ஒரு வகையில் உதவியானவை, அவர்களின் இலக்கியப்புரிதலுக்கு அவை உதவும். இலக்கியவாதிகள் வாசகர்களை இயல்பாகச் சந்திக்கும் இத்தகைய நிகழ்வுகளில்தான் தங்களை எவர் வாசிக்கிறார்கள், எப்படி வாசிக்கிறார்கள் என எழுத்தாளர்கள் அறியமுடியும். வெவ்வேறு களங்களில் எழுதிக்கொண்டிருக்கும் ஆய்வாளர்களை வாசகர்கள் அறியவும், சந்திக்கவும் முடியும்.

இத்தகைய விழாக்கள்தான் இலக்கியத்தை கொண்டாட்டமாக ஆக்குபவை. நீண்டநாட்களுக்குப் பின் இத்தகைய நிகழ்வுகளைத்தான் இலக்கியவாழ்வின் சிறந்த கணங்களாக நினைவுகூர்கிறோம். அரிய சந்திப்புகள் ஒருபக்கம். முக்கியமான தொடக்கங்களை நிகழ்த்திய உரையாடல்கள் இன்னொரு பக்கம். பலசமயம் அவை நிகழும்போது அவை எத்தகைய முக்கியத்துவம் கொண்டவை என நமக்குப் புரிவதில்லை.

 

நான் க.நா.சுவை இப்படி ஒரு நிகழ்விலேதான் முதலில் சந்தித்தேன், உரையாடினேன். அதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.மிகமிக இளம் வயதில் இத்தகைய ஒரு நிகழ்வில்தான் பெருநாவல் என்னும் கனவை என்னிடம் பி.கே.பாலகிருஷ்ணன் உருவாக்கினார். இத்தகைய நிகழ்வுகள் வழியாகவே நாம் இலக்கியம் மீதான நம் நம்பிக்கையை உறுதிசெய்துகொள்கிறோம்.

ஆனால் இலக்கியப்படைப்புகளை எழுதும் பலருக்கு இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, எதையும் அறியவோ கற்கவோ முடியாத தேக்கநிலை. இரண்டு, தாங்கள் அங்கே எப்படி மதிக்கப்படுவோம் என்னும் பதற்றம். மதிக்கப்பட மாட்டோமோ என்னும் குழப்பம். மதிக்கப்படவில்லை என்னும் சீற்றம். இக்காரணங்களால் விழாக்களைத் தவிர்ப்பவர்கள் உண்டு. அதைப்பற்றி எந்தக் கவலையும் தேவதேவனுக்கு இல்லை, அவர் மதிக்கப்படாத இடமும் இல்லை என்பதே அதற்கான பதில்.

ஷிண்டே அரங்கு

மாலை நண்பர்களுடன் ஒரு நடையாகச் சென்று கவுண்டச்சிப்பாளையத்திலுள்ள டீக்கடையில் டீ குடித்தேன். இந்த விழாவின்போது இது ஒரு சடங்கு. இந்த ஒரே கடைதான் அமர்ந்து டீ குடிக்க பொருத்தமானது. நம் நிகழ்வுக்காலம் முழுக்க எந்நேரமும் அங்கே இலக்கியவாதிகள் சிலர் அமர்ந்து ஆவேசமாக விவாதித்துக் கொண்டும் வெடித்துச் சிரித்துக்கொண்டும் இருப்பார்கள். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் அப்படி அங்கே டீ குடிப்பது ஒருவகையான இனிய சடங்காக ஆகிவிடுகிறது. காரணம் நல்ல நினைவுகள்.

நிகழ்வுகள் மாலை நான்கு மணிக்கு தொடங்கின. மதியத்திற்கு முன்னரே இருநூறுபேர் வரை வந்துவிட்டனர். இம்முறை இருநூறுபேருக்கு தங்குமிடம் தேவைப்பட்டது. கோவை விழாவில் தங்குமிடம் கோரி பதிவுசெய்பவர்களில் இருபது முப்பதுபேர் முன்னரே தெரிவிக்காமல் வராமலிருப்பதுண்டு. அந்த இடங்களுக்கு நாம் செய்த செலவு வீணாகும். ஈரோட்டில் கிருஷ்ணன் முந்தைய விழாக்களில் அப்படி வரத்தவறியவர்களை பட்டியலிட்டு அவர்களை நீக்கப்பட்டியல் ஒன்றில் சேர்த்துக்கொண்டே இருந்தார். கோவை பட்டியலில் அப்படி தெரிவிக்காமல் இருந்தவர்களை கண்டுபிடித்து நீக்கம் செய்தார். ஆகவே பதிவுசெய்த அனைவருமே வந்துவிட்டார்கள்.

சென்ற முறை விருது பெற்ற நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்) எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்) மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்) என நண்பர்கள். தேவதேவன் , சோ.தர்மன், சுப்ரபாரதி மணியன் என மூத்த எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.

நான்கு மணிக்கு நிகழ்வு தொடங்கும்போது அரங்கு முழுமையாகவே நிறைந்திருந்தது. ஓர் ஆய்வாளர் பேசும் அரங்குக்கு முந்நூறுபேர் கண் நிறையும் தொலைவு வரை நிரம்பியிருப்பது தமிழகத்தில் இன்னொரு வாய்ப்பில்லாத காட்சி. ஆறுமுக சீதாராமன் அரங்கை சபரீஷ் வழிநடத்தினார். ஆறுமுக சீதாராமனை எஸ்.ஜே.சிவசங்கர் கௌரவித்தார்.

வேலுதரன் அரங்கு

ஆறுமுக சீதாராமன் நாணயவியலில் இன்று தமிழகத்தின் முதன்மையான ஆளுமை. அவரும் அமைச்சர் தங்கம் தென்னரசும் இணைந்து எழுதிய தமிழகக் காசுகள் என்னும் பெருநூல் இப்போது வெளிவந்துள்ளது. ஒரு கலைக்களஞ்சியம் போன்ற பெருந்தொகுப்பு அது.

நாணயவியல் போன்ற துறைகளே வரலாற்றாய்வுக்கான அடிப்படைகளை வழங்குகின்றன. ஒரு தொல்பொருளில் மிக அதிகமாக அடையாளங்களும் எழுத்துக்களும் இருப்பது நாணயங்களிலேயே. ஆகவேதான் அவை வரலாற்றெழுத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. நாணயவியலை ஆழ்ந்து கற்பது ஒரு பக்கம். ஆனால் பொதுவாசகர்களுக்கு நாணயங்களின் உலகம் அறிமுகமிருக்கவேண்டும், அதனூடாக தான் வாழும் சமூகத்தின் ஒரு சித்திரம் அகத்தே உருவாகும்.

ஆறுமுக சீதாராமன் முதல் இருபது நிமிடங்களில் சங்ககாலத்து நாணயம் முதல் பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட தொடக்ககால நாணயங்கள் வரை தமிழகத்தின் வரலாற்றை நாணயங்கள் வழியாகவே சித்தரித்தார்.அதன்பின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஒவ்வொன்றும் நம் புரிதலை வெவ்வேறு திசைகளில் திறப்பவை.

உதாரணமாக, தமிழகத்தின் தொன்மையான காசுகள் பெரும்பாலும் சதுரவடிவமானவை, ஐரோப்பியத் தொடர்பால்தான் வட்டவடிவ நாணயங்கள் உருவாயின. இது பலருக்கும் தெரியாத எளிய செய்தி. ஓர் இலக்கியவாதிக்கு இது ஒரு குறியீடாகக்கூட விரியக்கூடும்.

கே.ஜி.கண்ணபிரானை கோவை மணி கௌரவிக்கிறார்.

பல முக்கியமான கேள்விகளும், வியப்பூட்டும் பதில்களும். உதாரணமாக, பழைய நாணயங்களின் மாற்றுமதிப்பு என்ன? (நாணயங்கள் பழங்காலத்தில் அவற்றின் உலோகத்தின் சந்தை மதிப்பையே தங்கள் மதிப்பாகக் கொண்டிருந்தன, தங்கம் மற்றும் வெள்ளியாலான காசுகள் அதனால்தான் வெளியிடப்பட்டன. ஆனால் செம்புக்காசுகளின் மதிப்பு உள்ளூரில் மட்டுமே. உள்ளூர் அரசு நிர்ணயம் செய்வது அது)

எவர் நாணயங்களை வெளியிட அனுமதி இருந்தது?(பழங்காலத்தில் ஒரு மைய அரசு மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்சியாளர்களும் நாணயங்களை வெளியிட்டனர்) பழங்கால நாணயங்களில் மிகப்பெரும்பாலும் உள்ள சின்னம் எது? (வேலியிடப்பட்ட மரம். ஆட்சிமரம்). நாணயங்களிலுள்ள தேள் எதைக்குறிக்கிறது? (பிரசவத்தை).ஒரு மணிநேர அமர்வு சட்டென்று முடிந்தது போல இருந்தது.

சுப்பராயலு அரங்கு

அடுத்த அமர்வு வெ.வேதாசலம் அவர்களுடையது. வேதாசலத்தை மு.இளங்கோவன் கௌரவித்தார். அதன்பின் ஒரு பாடலும் பாடினார். வேதாசலத்தின் அமர்வை ஜி.எஸ்.எஸ்.வி.நவின் ஒருங்கிணைத்தார்.

வேதாசலத்தின் அமர்வு அமர்வு சென்ற ஆண்டும் இருந்தது. இவ்வாண்டு அவரே விருது பெறுவதனால் அவருடைய நூல்களை வாசித்துவிட்டு வந்திருந்தார்கள். ஆகவே அவருடைய நூல்களை ஒட்டி தொடர்ச்சியாக வினாக்கள் எழுந்துகொண்டிருந்தன. அவர் கைக்கொள்ளும் ஆய்வு முறைமைகள், தமிழகத்தில் சமணம் தென்னிந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே கப்பல் வழியாக நேரடியாக வட இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்பதுபோன்ற அவருடைய ஊகங்கள், பாண்டிய நாட்டு நிலமானிய முறை பற்றிய அவருடைய கணிப்புகள் என தொடர்ச்சியான விவாதம்.

வேலுதரன் ஓர் சுதந்திர தொல்லியல் ஆய்வாளர். எந்த அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல. கல்வித்துறையாளரும் அல்ல. தனிப்பட்ட ஆர்வத்தால் ஆலயங்களுக்குச் செல்லத்தொடங்கி அப்படியே தொல்லியல் ஆர்வலர் ஆனார். அவருடைய பணி என்பது தொல்லியல் இடங்களை பார்த்துப் பதிவுசெய்வது மட்டுமே. குறிப்பாக வரலாற்றுக்கு முந்தைய நெடுங்கற்கள், நடுகற்கள் போன்றவற்றை விரிவாக பதிவுசெய்துள்ளார். ஶ்ரீவித்யா அந்த அரங்கை ஒருங்கிணைத்தார்.

அவரை ஒரு வலைப்பதிவர் என்றுதாந் சொல்லவேண்டும். ஆனால் பதிவுசெய்வதேகூட இன்று முக்கியமான பணிதான். ஒவ்வொரு அரங்கிலும் இப்படி தன்னார்வத்தால் பணியாற்றுபவர்களை அறிமுகம் செய்வது எங்கள் வழக்கம். முக்கியமான காரணம், இனி வருங்காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆர்வமுள்ள அனைவரும் இப்பணியைச் செய்யலாம் என்பதனால்தான். ஒவ்வொருவருக்கும் அவர்கள் ஆற்றக்கூடிய ஒரு பணி உள்ளது. இந்தியா போன்ற மாபெரும் நிலத்தில் தன்னார்வலர்கள் மூலைமுடுக்கெல்லாம் சென்று பதிவிட முடியும். தக்காணப்பீடபூமியின் பல வரலாற்றுக்கு முந்தையப் பதிவுகள் தன்னார்வலர் செய்தவை.

வேலுதரன் தமிழகத்திலுள்ள நடுகற்கள் உட்பட தொல்காலச் சின்னங்களை காட்சிகளுடன் பதிவிட்டு தொகுத்துரைத்தபின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். தொல் பண்பாட்டுடன் இன்றுள்ள பண்பாட்டின் உறவு உடபட பல சுவாரசியமான வினாக்கள் எழுந்தன. வேலுதரனை செந்தில் ஜெகந்நாதன் கௌரவித்தார். நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

மாலையில் கே.ஜி. கண்ணபிரான் வானியல் அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தினார். பொதுவாக இலக்கிய ஆர்வலர்களுக்கு அன்னியமான ஓர் உலகம் அது. ஆனால் சென்ற நூற்றாண்டு இலக்கியவாதிகள் பலர் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். சிவராம காரந்துக்கும் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவுக்கும் நல்ல பயிற்சி இருந்தது என கேள்விப்பட்டிருக்கிறேன். கே.ஜி.கண்ணபிரானை கோவைமணி கௌரவித்தார்.

இரவு 11 மணி வரை தொடர்ச்சியாக நிகழ்வுகள் இருந்தன.நான் களைப்புடன் தூங்கச் சென்றபோது 12 மணி கடந்துவிட்டிருந்தது. பேருந்துகளில் பங்கேற்பாளர்களை வெவ்வேறு தங்குமிடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இரவு நெடுநேரம் வரை திருமணமண்டபம் முழக்கமிட்டுக்கொண்டே இருந்ததைக் கேட்டேன்.

(மேலும்)

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 11:35

தமிழ் ஒளி

தமிழில் தலித் இலக்கியம் உருவாவதற்கு முன்னரே எழுதப்பட்ட தலித் இலக்கியம் தமிழ் ஒளி எழுதிய வீராயி. சென்னையில் கடும் வறுமையில் இருந்த தமிழ் ஒளி இறுதியில் புதுச்சேரியில் கொடிய வறுமையில் வாழ்ந்தார். அங்கே அவர் உளநோயால் அவதிப்பட்டதாகவும், கையில் குவளையும் ஒரு பையில் தன் படைப்புகளுமாக சாலைகளில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தமிழ் ஒளி 29 மார்ச் 1969 ல் 41 ஆவது வயதில் மறைந்தார்.

தமிழ் ஒளி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 11:33

நீலமெனும் அழகு

வெண்முரசு நாவல் வரிசையில் ஏழாவது நாவல் இந்திரநீலம். தினம் ஒரு அத்தியாயம் என்ற முறையில் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுடன் இணைந்து , தினமும் எனக்குள்ளும் ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன் வெண்முரசை. ஒருநாவல் முடிந்ததும் அடுத்ததை எடுத்து வெறுமனே எனது பார்வையில்படும்படி வைத்துக்கொள்வேன். பின்பு முன்னுரைகளை வாசிக்க ஒருநாள் எடுத்து அதை என்னுள் ஓடவிட ஒருநாள் என்று போகும். அவ்வாறான ஒரு செயல்பாட்டில் இம்முறை இறங்கியபோது எப்போதும்போல இப்போதும் பொய்க்காது நான் கண்டது திருசூழ் பெருநிலையை அதன் மூலமாய் அறிந்தேன் கேளு சரண் மகாபாத்யாய அவர்களை.

இப்போது இந்திரநீலம் பற்றி ..

துவாரகை கண்ட இளையயாதவன் தனது துணைவியராய் ருக்மிணி , ஜாம்பவதி , சத்யபாமை, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை , பத்ரை , காளிந்தி ஆகிய எட்டு நாயகியரை கண்டடைந்து காதல்கொண்டு தம் உள்ளம் அமர்ந்த அத்தேவியரை வான்தோய் வாயில் கொண்ட துவாரகையில் அமர்த்தும் கதைகளை சொல்வதே இந்த நாவல். எட்டு குலங்களில் இருந்து பெண்கொண்டு வரும் கதைகள் துருபத இளவரசன் திருஷ்டத்யும்னன், இளைய யாதவருக்காக தொழும்பர்குறி பெற்ற சாத்யகி இவர்கள் இருவரின் நட்பாடல்களில் நேர் உரையாடல்களாகவும் சூதர்கள் வழியாகவும் காவிய நாடகங்களின் காட்சிப்படுத்துதல்களிலும் சொல்லப்படுகிறது.

சுப்ரை நினைவிருக்க மலைமுடித்தனிமையுடன் திரௌபதியின் ஆணைப்படி உதவிகோரி துவாரகை வரும் திருஷ்டத்யும்னன் அந்த நகரின் பிரமாண்டத்தில் ஆடல்களில் பெண்களில் கவரப்படுகிறான். ஆனால் கரையாமல் கரைந்து கட்டுண்டு கிடப்பது இருவருக்காகவே ஒன்று தனது உற்ற நண்பனாய் மாறிய சாத்யகி, இன்னொருவர் தன்னை காண்பவரை மிச்சமில்லாமல் அனைத்தையும்விட்டு தன் நெஞ்சச் சிறையடைக்கும் இளையயாதவர்.

எட்டுக்குலங்களுக்கும் சென்று பெண்கொண்டுவந்த கதைகள் ஒவ்வொன்றும் அந்தந்த குலங்களின் வரலாறை அவர்களின் பண்பாட்டை , அரசியல், பொருளாதார தகுதியை என அனைத்தையும் சொல்கிறது . அதோடு மறுக்கமுடியாமல் அந்நாயகியர் துவாரகை மன்னன் மீது கொண்டுள்ள காதலையும் விவரிக்கிறது மிகைப்படுத்தாத காவியத்தன்மையுடன். பாராதவர்ஷத்தையே திரும்பிப்பார்க்கவைக்கும் வகையில் அரசு அமைத்து ஷத்ரிய தகுதி நோக்கி சென்று கொண்டிருக்கும் தலைவன் இளையயாதவன் . ஆனால் சிறிய அரசுகளில் துவாரகை கொள்ளும் மணவுறவுகள் அதற்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஆய்ந்தறிந்து பெண் கொண்டு மீள்கிறார் அவர் .

‘அவன் விரும்புவதை என்னை வைத்தே நிகழ்த்திக்கொள்கிறான் அது சில நேரங்களில் நான் விரும்பாததாக முதலில் இருந்தாலும் கூட‘ என்ற வகையில் ஒரு தருணத்தில் எப்போதும்போல சிரித்தபடி சொல்லும் பலராமர் , துவாரகையின் மூத்த அமைச்சர் அக்ரூரர், திருஷ்டத்யும்னன் , சாத்யகி போன்றவர்கள் இளையயாதவருக்கு உடன் நிற்பதுபோல காட்சியளிக்கிறார்கள் ஆனால் அவர்களும் நானே என்று காட்சிப்பிழை களைகிறார் இளையயாதவர்.

இந்தநாவலில் மைய ஆட்டத்தை நிகழ்த்துவது சத்யபாமையின் முன்னோர் சத்வ குலத்தின் வீரசேனன் சூரியனிடம் பெற்றதாக சொல்லப்படும் சியமந்தகமணி. வீரசேனரிடம் அகந்தை நிரப்பி இந்திரனை வணங்கவிடாமல் செய்தது  தொடங்கி அது செய்த வினைகள் பல. சத்ராஜித்தை கர்வம்கொண்டு நடைபோட செய்து பிரசேனனை பழிவாங்கியது, பின்பு அவரும் அதன் விழைவால் கொல்லப்படுவது , சத்யபாமையை பெண்கொள்ள வந்த சேதிநாட்டரசன் சிசுபாலன் நோய்பெற்று செல்வது,  இளையயாதவரின் அணுக்கர்களான அக்ரூரரை , திருதவர்மனை, ஏன் சாத்யகியைக்கூட விடவில்லை அந்த மணி. ஆனால் சாத்யகியிடம் அந்த மணி கொண்ட ஆடலை தூயநட்பு எனும் முழுபலத்துடன் எதிர்கொண்டு நிறுத்துகிறான் திருஷ்டத்யும்னன்.

காளிந்தி தவிர்த்த அரசியர்கள் எழுவரும் கொண்டுள்ளனர் ஒரு காரணத்தை மணி தனக்கே என்றுகூற. அவள் மட்டுமே சரியான பாடம் தன்தந்தையிடம் படித்ததாக சொல்கிறாள் . சாந்தர் ஒவ்வொரு அரிசியின் கையிலும் அந்த மணியை வைக்க சொல்லி இறுதியாக காளிந்தி கையில் வைக்கும்போது அது அனைவருக்கும் கூழாங்கல்லாய் காட்சி அளிக்கிறது. ‘ மகா யோகிகள் அருமணிகளைத் தொடமாட்டார்கள் , தொட்டால் அவை கூழாங்கற்களென ஆகிவிடும் என்பார் என் தந்தை‘ என்கிறாள் காளிந்தி. என் தேவியரில் எனக்கு அணுக்கமானவள் இவளே . என்னுடன் முதலில் இணைத்துப் பேசப்பட வேண்டியவள் இவளே என்கிறார் இளையயாதவர்.

அந்த அரங்கில் நடந்த உரையாடல்களில் இதுவே உச்சம் என எண்ணி முன் செல்லும் இடத்தில்

காளிந்தி கைவிரித்து முகம்பொத்தித் தலைகவிழ்ந்திருக்க , சத்யபாமை எழுந்து சென்று ‘இப்புவியில் நீயே பேரருள் பெற்றவள் இளையவளே , நீடுழி வாழ்க ! என்று சொல்ல பிற அரசியரும் எழுந்து கண்களில் நீருடன் கைகூப்ப சுபத்திரை மணியை இளைய யாதவரிடம் இருந்து பெற்று சாளரம்வழியாக வெளியே கடலில் போடுவது மற்றொரு உச்சம். அந்த நிகழ்வுகளின் பயனாய் யோகம் எதுவென அறிகிறான் திருஷ்டத்யும்னன்.

அரசியலும் சமூக அடுக்குகளும் ஊடுபாவாய் கலந்து வருகிறது இளையவர் மணம் கொண்ட எட்டுக்கதைகளிலும். ஆயர்களின் ஒவ்வொரு குடியும் அவர்களுக்கான தனிப்பெருமையை எக்கணமும் விடாது கொண்டிருப்பது மற்றும் அந்த பெருமை அவர்களை இட்டு செல்லும் பாதை. இது இன்றும் நம்மை ஊழாய் விழைவாய் தொடர்வதை உணரலாம்.

திரௌபதியின் தூதுடன் துவாரகை வரும் திருஷ்டத்யும்னன் சாத்யகியுடன் செல்லும் நகருலாக்கள் , பயணங்கள் , களியாட்டங்கள், நிகழ்த்துக்கலை மன்றங்கள், சூதர் அமர்வுகள் போன்றவை காண்பிப்பது வேறொரு உலகை. அவர்களின் உரையாடலின் ஊடாகவே இளையவர் மணம் கொண்ட கதைகள் நிகழ்கின்றன.

நகரில் அவன் கண்ட பிரமாண்டத்துக்கு நேரெதிராக காட்சி தந்து எளிமையான முறையில் திருஷ்டத்யும்னனை

வரவேற்கிறார் துவாரகை அரசர். அக்ரூரர் திருஷ்டத்யும்னன்  உரையாடல் ஒரு விரிவான சித்திரத்தை எந்த பூச்சும் இல்லாமல் அரசியலில் இன்று துவாரகையின் இடமென்ன என்று சொல்லிச்செல்கிறது அதன் மையமாக வேளாண்குடி மற்றும் யாதவகுடிகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடும் .

திருஷ்டத்யும்னன் துவாரகையில் மரியாதை நிமித்தமாக அரசியர்களை தனித்தனியாக சந்திக்கிறான் . அவன் பார்வையில் அவர்கள் அனைவரும் வேறொரு தோற்றம்கொள்கின்றனர். ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் அழகுடனும் அறிவுடனும் என ஒவ்வொருவரும் பல வகையில் தங்களை முன்வைக்கிறார்கள். அந்த சந்திப்புக்களில் சற்றே நாம் நின்றுசெல்லத்தக்க ஒரு இடம் ஜாம்பவதி ‘கற்பதறியாமல் கற்கவேண்டுமென்பதே எங்கள் குலமுறை‘ என்று சொல்வது.

அரசியர்களையும் அரசரின் அணுக்கர்களாகிய அக்ரூரர் , கிருதவர்மர் , சாத்யகி என அனைவரையும் பகடை என ஆட்டுவிக்கிறது சியமந்தக மணி. அந்த அனைத்து அக புற ஆடல்களுக்கு சாட்சியென நிலைகொள்கிறான் திருஷ்டத்யும்னன்.

சததன்வாவின் அரசியலாடலில் கட்டுண்ட அக்ரூரர் கிருதவர்மனை எண்ணி சினம் கொண்டவேளையில் நிகழும் போரில் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் தம்வீரர்கள் அனைவரையும் இழக்கும் தருவாயில் படகில் நின்றிருக்க எஞ்சிய இருவரில் ஒருவரான முதிய வீரர் திருஷ்டத்யும்னனை பார்க்கும் பார்வை எளியவன் ஒருவனை அரசனும் அஞ்சுவான் என்பதற்கு சான்று. அதன்பிறகு வரும் இளையவர் படகில் தான் முதலில் ஏறாமல் உயிருக்கு போராடும் வீரனை ஏற்றுவது இளவரசனும் மனிதனே என்பதற்கு சான்று.

அரசியலில் நாம் ஒன்று நினைக்க தலைமையும் ஊழும் வேறொன்று நிகழ்த்தும் என்பதற்கு திருஷ்டத்யும்னன் கிருதவர்மனை கைது செய்து அழைத்துவரும் காட்சியை சொல்லலாம். அவனின் தவறுக்காகவா இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கிறோம் என அவனே அவனை கேட்டுக்கொண்டு இல்லை சத்யபாமாவின் முன் அவனை அப்படி காண்பிப்பதே தனது ஆழ்மனதின் நோக்கம் என்று விடைகாண்கிறான்.

 

இருவரில் ஒருவர்(கிருதவர்மன்) மிகக்கீழான நிலையில் கொண்டுவரப்பட அடுத்தவர் (அக்ரூரர் ) சத்யபாமையின் அடைக்கலத்தில் சபை நுழைகிறார். ‘அடைக்கலம் கோரியவரிடம் வணிகம் பேசக்கூடாது அது அரசியருக்கு அழகல்ல ‘ என்கிறாள் சத்யபாமா பலராமரிடம்.

சததன்வா படைகொண்டு வரக்கூடும் என்பதில் தொடங்கி இறுதிவரை ஆடலை அதன்போக்கில் விட்டுவிட்டுபின்பு மொத்தத்தையும் தனதாக்கிக்கொள்கிறார். சபையில் ஒருவேண்டா விருந்தாளியைப்போல திருஷ்டத்யும்னன்  இருக்க, சத்யபாமை தன்னிடத்தை ஒருவகையில் நிறுவ என சென்றுகொண்டிருக்க, இளைய யாதவர் ஒரு நுண்ணிய செயலின்மூலம் அவர்கள் இருவரின் முனைப்பையும் சற்றே மட்டுப்படுத்துகிறார்.

மித்ரவிந்தையை பெண்கொண்டுவர இளையவர் தங்கை சுபத்திரையுடன் செல்லும்பயணம். அகச்சோர்வுறும் நேரங்களில் எல்லாம் எடுத்துவாசிக்கவேண்டிய பகுதியது ( இமையாநீலம் ஒன்பதில் ). சுபத்திரை உணர்வதாய் சில வரிகள் முதன்முறையாக இளையயாதவர் புரவியில் செல்வதில் விந்தையொன்றை அவள் கண்டாள். புரவியில் செல்பவர்கள் அதன் உடல் அசைவுக்கு ஏற்ப தங்கள் உடல் அசைவுகளைப் பொருத்திக்கொள்ளவேண்டும். அது காற்றில் ஒரு நடனம் . அவரோ மிதந்து ஒழுகிச்செல்பவர் போலிருந்தார். அப்புரவி அவர் உடலசைவுக்கென தன்னை மாற்றிக்கொண்டு சென்றது ‘ . இங்கு அவரவர் தத்தம் புரவியை எண்ணிக்கொள்ளலாம் . நாம் யாரென அறிய!

இளைய யாதவர் , பார்த்தனுடன் சென்று யமுனை ஆடி களிந்தவிழி தேடி செல்லும் பயணத்தில் பார்த்தன் அறிவது ‘தொடக்கம் எதுவும் மையமே‘ என்று. ‘சூரியனை வழிபட சியமந்தகம் எதற்கு‘ என்று சத்யபாமாவிடம் கேட்கிறார் கண்பார்வையற்று இருந்தாலும் ஒளிநோக்கும் திறன் மிகக்கொண்ட சாந்தர்.

கவிதைகள் / காதல்வரிகள் நாவலில் கொட்டிக்கிடக்கிறது என்றாலும் சில வரிகள் உவப்பாய் கூர்ந்து நோக்கி குறித்து வைக்க தூண்டிற்று .

‘இப்புவி ஓர் இனிய மதுக்கிண்ணம்‘

மன்மதனுக்கு உடலிருக்கலாகாதென்று கண்ட மூதாதை போல காமத்தை அறிந்தவன் எவருமில்லை .

விழிபூக்கும் செடிகளே பெண்ணின் உடல்களென்று சொன்ன சூதன் ஞானி

புன்னகை மாறா விழியுடையோன் ஒருவனை பெண்விரும்புதல் இயல்பு.

பட்டில் பட்டுப் பதிந்த பட்டுத்தடம்

அவர்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலை (இந்த வரிகள் துவாரகை நகரில் உள்ள பெண்களை குறித்து சொல்வது. ஆனால் நான் எனக்கு எடுத்துக்கொண்டேன் , யார் யார் மேலேல்லாமோ போட்டுப்பார்த்தேன் அப்படியே பொருந்தியது. அகாலத்தில் கணவனை இழந்த நான் கண்ட பலருக்கும் கூட அது பொருந்தியது என்றால் மிகையில்லை )

இன்றுவரை இப்புவியில் பிறந்தவர்களில் பெண்களை விடுதலை பெற்றவர்களாக மட்டுமே பார்க்கவிழையும் ஆண் அவர் ஒருவரே .சத்யபாமா கண்ணனை சந்திக்கும் தருணம் (எழுந்த நீலத்திருமுகம் ..நீயென சுட்டும் விரலென மூக்கு  :) )சத்யபாமைக்கு காட்சி அளிக்கும் ஏழு தேவியர்கள் வைஷ்ணவி, மகேஸ்வரி, வராகி , சாமுண்டி , இந்திராணி, பிராமி…

ஒரு முகத்தை மட்டும் மட்டும் எண்ணி ஒரு பெயரை மட்டும் மூச்சென ஆக்கி இருப்பதன் பேரின்பத்தின் முன் அவன்கூட ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது.

ஊனுடம்பு செல்லா வழிகளில் எல்லாம் உள்ளம் செல்லமுடியுமல்லவா .

மொழியிலும் காணாப்பெருவெளியிலும் எம்மைத் தவழவிடும் ஆசிரியருக்கு மிக்க நன்றி . உடன் பயணிக்கும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு என் அன்பு

சொல்லால் அமைந்த மரங்கள் சொல்வானத்துக்குக் கீழே சொல்மண்ணின் மேலெழுந்து சொல்மலர்களைச்சூடி நின்ற வெளியில் சொல்லேயாக பறந்தன புட்கள் . அவரன்றி பிறிதேதும் இலாத வெளியில் இருக்கிறேன் .

https://kmrvignes.blogspot.com/2025/07/blog-post.html

அன்புடன்

கே.எம்.ஆர். விக்னேஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 11:31

புத்தரில் அமைதல்

Nitya’s way consists of two basic elements. One is integrating music, art, and literature with spiritual philosophy. He often says that without this integration, proper learning is not possible. The second thing is learning philosophy through mind and brain.

The two priniciples 

மூச்சை கவனிக்கும் பயிற்சி ஆரம்பமானது, பின்பு மெல்ல உடம்பின பாகங்களை உற்று நோக்கும் பயிற்சி தன்னை உணரும் ஆரம்ப கட்ட கல்வியின் முதல் படிக்கல்லாக உணர்ந்தேன்.  நீண்ட நேரம் அமர்ந்து பயிற்சி செய்ய முடியுமா என என் கேள்விக்கு முடியும் என்ற பதிலை என் உடல் எனக்கு அளித்தது.

புத்தரில் அமைதல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 11:30

August 17, 2025

பறவை பார்த்தல் வகுப்புகள்.

செப்டெம்பர் இறுதி முதல் அக்டோபர் 2 வரை மாணவர்களுக்கு தசரா விடுமுறை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி. இந்த விடுமுறையில் மாணவர்களுக்கான ஒரு பறவை பார்த்தல் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம்.

அக்டோபர் 2, 3 மற்றும் 4 தேதிகளில். (வியாழன் வெள்ளி சனி) தேதிகளில் இந்நிகழ்வு நடைபெறும். ஞாயிறு ஓய்வுக்குப்பின் திங்கள் அக்டோபர் 5 பள்ளி திரும்பும் வசதிக்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய மாணவர்கள் செல்பேசி அடிமைத்தனத்திற்குள் வெகுவேகமாகச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர் விழிப்பாக இருந்தாலும் பள்ளி மற்றும் நட்புச்சூழலில் இருந்து வரும் தீவிரமான பாதிப்பை தடுக்கமுடியாது. செல்பேசி ஈடுபாடு காரணமாக எதையும் கூர்ந்து கவனிக்கமுடியாதவர்களாக, நீண்டநேரம் கவனம் நிலைக்காத பொறுமையின்மை கொண்டவர்களாக குழந்தைகள் மாறுகிறார்கள்.

இந்தச் சிக்கலுக்கு தீர்வாக முதன்மைநாடுகளில் கண்டடையப்பட்டிருப்பது ‘நேரடியான செயல்பாடுகள்’ என்பதே. கானகம் செல்லுதல், கைகளால் செய்யப்படும் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை. அவை கவனத்தை வெளிப்பக்கமாக ஈர்த்து உளக்குவிப்பை உருவாக்குகின்றன. ஆகவேதான் பல பெற்றோரின் கோரிக்கைக்கு ஏற்ப பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம். இது பாதுகாக்கப்பட்ட தனியார் நிலத்திலுள்ள இயற்கையான காட்டில் நிகழும் பயிற்சி. பறவைகளை எப்படிப் பார்ப்பது, எவற்றை கவனிப்பது என்னும் வகுப்புடன் நேரடிப் பயிற்சியும் அளிக்கப்படும்.

ஏற்கனவே மூன்று முறை இந்த பறவை பார்த்தல் வகுப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பங்குகொண்ட மாணவர்கள் மிகப்பெரிய மாற்றத்தை அடைவதை பெற்றோர் உணர்ந்தனர். அவர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்தமையால் மீண்டும் விடுமுறைக்காலத்தில் இந்த வகுப்புகள் நிகழ்கின்றன.

15 வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன் பெற்றோர் அல்லது காப்பாளர் ஒருவர் இருந்தாகவேண்டும் என்பது நிபந்தனை. பெற்றோருக்கும் கட்டணம் உண்டு, அவர்களும் வகுப்பில் அமர்வது நல்லது. மூன்றுநாட்களிலும் கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டும்.

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

நாள் அக்டோபர் 2, 3 மற்றும் 4 (வியாழன் ,வெள்ளி, சனி)

நம் குழந்தைகளின் அகவுலகம்

பறவைபார்த்தல், தாவரங்களை அறிதல் ஏன்?பறவையும் தாவரங்களும்தாவரவியல் கல்வி எப்படிப்பட்டது? பறவைத்தியானம்- சர்வா பறவைபார்த்தல், கடிதம் வானமும் பறவைகளும் குழந்தைகளுக்கு மேலும் பயிற்சிகள் பறவைகளுடன் இருத்தல் பறவையும் குழந்தைகளும் தாவரங்களும் குழந்தைகளும் தாவரங்களின் பேருலகம் தீராத இன்பங்கள் வனம், வகுப்பு- கடிதம் தாவரங்கள், கடிதம்  தாவர உலகம், கடிதம் அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை

குரு சௌந்தர் நடத்திவரும் பதஞ்சலி யோகமரபின்படியான யோகப்பயிற்சிகளில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு முறை இரண்டாம்நிலை வகுப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிற்கு வெளியிலும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தொலைக்காட்சி ஊடகங்களிலும் யோகமுறைகளை விளக்கி வருகிறார்.

யோகம் இன்றைய காலகட்டத்தின் தவிர்க்கமுடியாத ஒரு வாழ்க்கைக்கூறாக உலகமெங்கும் பரவியுள்ளது. இன்று தொடர்ச்சியாக உடலையும் உள்ளத்தையும் மிகையான அழுத்தத்திலேயே வைத்திருக்கிறோம். உள்ளம் மிகையழுத்தம் கொள்கையில் முதுகு, கழுத்து போன்றவற்றில் வலிகள் உருவாகின்றன. உடல் மிகையழுத்தம் கொள்கையில் உள்ளம் சலிப்பு, சோர்வு, துயிலின்மையை அடைகிறது.

இன்னொரு பக்கம் முதிய அகவையில் உடலை எந்தப் பயிற்சியும் இல்லாமல் வைத்திருக்கிறோம். உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீரான பயிற்சி அளிப்பதில்லை. உடலுக்கான பயிற்சி ஒரே சமயம் உள்ளத்துக்கான பயிற்சியாகவும் அமைவதில்லை. ஆகவே உடல்வலிகளும், உளச்சோர்வும் உருவாகி ஒன்றையொன்று வளர்க்கின்றன.

யோகம் இளையோர், முதியோர் இருவருக்குமான மீளும்வழியாக உலகமெங்கும் ஏற்பு பெற்றுள்ளது. பதஞ்சலி யோகமுறையின் மிகத்தொன்மையான மரபுகளில் ஒன்றாகிய பிகார் சத்யானந்த ஆசிரிய மரபில் முதுநிலை ஆசிரியருக்கான பயிற்சியை எடுத்துக்கொண்டவர் குரு சௌந்தர். அவர் நடத்தும் இந்த யோகப்பயிற்சி அனைவருக்குமானது.

சரியான யோகப்பயிற்சி நேரடியான ஆசிரியரிடமிருந்து தொடங்கப்படவேண்டும். ஒவ்வொருவருக்கும், அவருடைய பிரச்சினைகளை உணர்ந்து ஆசிரியர் யோகப்பயிற்சியை பரிந்துரைக்கவேண்டும், வழிகாட்டவேண்டும், கட்டுப்படுத்தவும் வேண்டும். ஆகவேதான் நேருக்குநேர் ஆசிரியருடன் மூன்றுநாள் இருந்து கற்கும் இந்தப் பயிற்சி முறையை அறிமுகம் செய்திருக்கிறோம்.

(முன்னர் பங்குகொண்டவர்களும் மீண்டும் பயில விரும்பினால் விண்ணப்பிக்கலாம்)

நாள் செப்டெம்பர் 12, 13 மற்றும் 14 (வெள்ளி சனி ஞாயிறு)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 (இந்தியதத்துவம் முதல்நிலை இடங்கள் நிறைவுற்றன)

இந்திய தத்துவம் ஐந்தாம் நிலை 

இந்திய தத்துவத்தின் ஐந்தாம் நிலை வகுப்பு நிகழ்கிறது. நான்காம் நிலை முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.

நாள் செப்டெம்பர் 26 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 19:45

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள்

வசந்த் ஷிண்டே

சென்ற 16 ஆகஸ்ட் 2025 அன்று ஈரோடு ராஜ்மகால் அரங்கில் இரண்டு நாட்கள் நிகழ்ந்த தமிழ்விக்கி தூரன் விருதுவிழாவில் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.

மூத்த வரலாற்றாய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர்எ.சுப்புராயலு

ஜெயமோகன் உரை

விருது பெற்ற  வெ.வேதாசலம் ஏற்புரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 11:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.