Jeyamohan's Blog, page 44

August 28, 2025

கோவை சொல்முகம் 69

நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 69வது இலக்கிய கூடுகை 31 ஆகஸ்ட், ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது. இக்கூடுகை வெண்முரசு கலந்துரையாடலுக்கு 50வது கூடுகையாக அமைந்துள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அமர்வு 1:

வெண்முரசு கலந்துரையாடல் – 50

நூல் – மாமலர்
அத்தியாயம் 13 முதல் 28 வரை

அமர்வு 2:

நாவல் – ‘தாண்டவராயன் கதை’
– பா. வெங்கடேசன்

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 31-ஆகஸ்ட்-25,
ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 10:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்                    – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2025 11:30

ஸ்மார்த்த பிராமணர் பற்றி சில கேள்விகள்

I saw the videos on Western music, and they were fascinating. You are trying to introduce and promote a new genre of sensibility to the Tamil mind. It is a tough job anyway. Most Tamil people lack any formal training in music. Despite having a vast collection of folk music, we no longer practice it.

On the effects of Western music

இந்த கேள்விகள் ஏன் உங்களுக்கு எழுகின்றன? ஏனென்றால் நீங்கள் உங்களை நீங்கள் பிறந்த சாதியுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். அதைப்பற்றி அறிய விரும்புகிறீர்கள். அதைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல விரும்புகிறீர்கள்.

ஸ்மார்த்த பிராமணர் பற்றி சில கேள்விகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2025 11:30

August 27, 2025

விஜய் அரசியல், இளைஞர்களின் அரசியல்.

மதுரையில் விஜய் நடத்திய அரசியல் மாநாடு பல கட்சியினரையும் பதற்றமடையச்செய்திருப்பதை காணமுடிகிறது. மதுரையில் எதற்கும் கூட்டம் வரும் என்பது ஓர் உண்மை, சில மாதங்களுக்கு முன்பு இந்துத்துவ அமைப்புகள் நடத்திய முருகன் மாநாட்டுக்கும் பெருங்கூட்டம் இருந்தது. அது வாக்குகளாக மாறுமா என்பது வேறொரு கேள்வி. வாக்களிக்கையில் மதுரையில் சாதி மட்டுமே கணக்கு. தமிழ்நாடு முழுக்க அப்படித்தான். ஆனாலும் விஜய்க்கு வந்த கூட்டத்தின் வெறியும் எண்ணிக்கையும் மற்றவர்களை மிரளச்செய்பவைதான்.

வழக்கத்துக்கு மாறாக இது சார்ந்து எனக்கு பல கடிதங்கள். காரணம் நான் விஜய் நடித்த சர்க்கார் படத்துக்கு எழுதினேன் என்பது. ‘விஜய் சர்க்கார்!’ என்ற கோஷம் அங்கே ஒலித்ததாம். நான் ‘பதில் சொல்ல கடமைப்பட்டவன்’ என்று சிலர் சொன்னார்கள். சிலர் ‘பூதத்தை திறந்துவிட்டதில்’ எனக்குப் பங்குண்டு என்றெல்லாம் கூட எழுதி பயமுறுத்தினார்கள்.

முதல் விஷயம், சர்க்கார் போன்ற படங்களின் எழுத்து என்பது ஒரு கூட்டுச்செயல்பாடு. என் பங்களிப்பும் அதிலுண்டு, அவ்வளவுதான். நான் எழுதிய எந்தப்படத்தையும் என் எழுத்து என நான் சொல்லிக்கொள்ள மாட்டேன்.

மறுபக்கமும் உண்டு. அண்மையில் வெளிவந்த இந்தியன் 2 படத்தில் நான் எழுதிய ஒரு வரிகூட இல்லை. நான் எழுதியது ஒரு படத்துக்காக. அதை இரண்டு படங்களாக ஆக்கியபோது வேறு இரு எழுத்தாளர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டனர். அவர்கள் உள்ளே வந்ததே படத்தின் முதல் விளம்பரம் வந்தபோதுதான் எனக்குத் தெரியும். அவர்கள் எழுதியதே படத்தில் இருந்தது. எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் முதலில் இருந்தது. ஆனால் அதற்கும் நான் பொறுப்பேற்றே ஆகவேண்டும்.

ஆகவே சர்க்கார் வசனங்களுக்கெல்லாம் நான் ஆசிரியன் என சொல்லமுடியாது. அதே சமயம் அதன் பொறுப்பை மறுக்கவும் முடியாது. சர்க்கார் வசனங்கள் மற்றும் காட்சிகளுக்காக பல மாதகாலம் இணையத்தில் வசைபாடப்பட்டேன். சரிதான் இதுவும் ‘பேக்கேஜ்’ஜில் ஒரு பகுதிதான் என்று எண்ணிக்கொண்டேன். பணம், அதுவும் பெரிய பணம், வாங்கிக்கொண்டிருக்கிறேன். இப்படி அடிவாங்குவதற்கும் சேர்த்துத்தான்.

ஏற்கனவே நான் என் அரசியல் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். ஒரு நூல் வெளிவந்துள்ளது. ‘ஜனநாயகச் சோதனைச்சாலையில்‘. அவற்றின் தொடர்ச்சியாகவே இவற்றைச் சொல்கிறேன். (கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும் )

இத்தகைய சமகால அரசியல் விஷயங்களை உடனே தொடர்ச்சியான, முடிவில்லாத அரட்டைகளாக ஆக்கிக்கொள்வதே நம் வழக்கம். அதை சமூகவலைத்தளச் சூழல் ஊக்குவிக்கிறது. ஆகவே பல்லாயிரம் கேள்விகள் எழும். எது சொன்னாலும் அதற்கு மறுப்பும் உண்டாகும். எவருக்கும் தெளிவு பற்றிய அக்கறை இல்லை, தேடலும் இல்லை. வெறும்வாய்க்கு அரசியல்.

இரண்டே இரண்டு கேள்விகள் என்னிடம் வந்தவற்றில் நான் பதில் சொல்லத்தக்கவை என்று தோன்றுகிறது. அவற்றை பற்றி மட்டும் சுருக்கமாகச் சில சொல்கிறேன்.

அரசியலின்மை

விஜய் ரசிகர்கள் வெறும் ரசிகர்கள், அரசியலற்றவர்கள். அவர்கள் அரசியலில் ஒரு சக்தியாக ஆவது ஆபத்து. அரசியல்படுத்தப்பட்ட இளைஞர்கள்தான் அரசியலை சரியாக முன்னெடுக்கமுடியும். இந்தவகையான அரசியலின்மையை முன்வைக்கும் என்னைப்போன்றவர்களே இதற்கெல்லாம் பொறுப்பு- இது ஒரு பொதுக் கேள்வி. அல்லது குற்றச்சாட்டு.

என் பதில் இதுதான். விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் அரசியலற்றவர்கள். ஆனால் ‘அரசியல்படுத்தப்பட்ட’ பிறருடைய தரம் என்ன? திராவிட இயக்கத்தவர், கம்யூனிஸ்டுகள், இந்துத்துவர், தமிழ்த்தேசியர் இதைவிட எந்தவகையில் மேல்? அவர்களுக்கு வெறும் பாவலாவாகச் சில கோஷங்கள் உள்ளன என்பதே வேறுபாடு. அதாவது சமூகநீதி, கார்ப்பரேட் எதிர்ப்பு, மொழிப்பற்று, இந்துப் பாதுகாப்பு என்றெல்லாம் சில வரிகள். அடியிலிருப்பது இந்தியாவில் எங்குமுள்ள வழக்கமான அரசியல்.

இந்திய அரசியல் என்பது மேல்தட்டில் முதலீட்டாளர்கள் மற்றும் பொருளியல் சக்திகளின் போட்டி மற்றும் சமரசத்தின் அரசியல்.இந்தியாவின் செல்வத்தை பங்கிட்டுக்கொள்வதற்கான போட்டி அது. கீழ்நிலையில் சாதிய சக்திகளின் போட்டி மற்றும் சமரச அரசியல். ஓரளவுக்கு தொழிலாளர்கள் போன்ற சில ஒருங்கிணைக்கப்பட்ட சக்திகளும் இந்தப் போட்டியில் உள்ளனர். மேலிருப்பாவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு அளிப்பவற்றை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதற்கான போட்டி அது.

இந்தப்போட்டியில் இச்சக்திகள் நடுவே சமரசம் செய்துவைப்பதைத்தான் அரசு செய்கிறது. இந்திய அரசும் சரி, தமிழக அரசும் சரி. அந்த அரசை எந்த கட்சி கைப்பற்றினாலும் அதைத்தான் செய்யப்போகிறது. செய்தாக வேண்டும். அந்த அரசை கைப்பற்றுவதற்கு உரிய ஒரே வழி, கீழிருக்கும் சாதிய சக்திகளை சாதகமாக திரட்டி, அவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறுவதுதான். அதைத்தான் அனைவரும் செய்கிறார்கள்.

திமுக அல்லது கம்யூனிஸ்டுக் கட்சி அல்லது நாம் தமிழர் கட்சி சொல்வதைத்தான் விஜய் சொல்கிறார். ஏனென்றால் அதுதான் இங்குள்ள பெரும்பாலானவர்கள் மேலோட்டமாக ஏற்றுக்கொள்ளும் அரசியல் கோஷம். உள்ளே அவரும் சாதிக்கணக்கீட்டைத்தான் கொண்டிருப்பார். இங்கே இந்துத்துவக் கருத்து முதன்மையாக இருந்தால் அவரும் அதையே பேசியிருப்பார். ஆந்திராவில் அரசியலுக்கு வரும் நடிகர்கள் இந்துத்துவத்தைத்தான் பேசுகிறார்கள்.

ஆகவே இந்த ‘அரசியல்படுத்தப்பட்டவர்கள்’,  ‘கொள்கைப்பிடிப்புள்ளவர்கள்’ என்னும் பாவலாக்களுக்கெல்லாம் என் பார்வையில் எந்த மதிப்பும் இல்லை. அண்மையில் ஒரு கேரள மார்க்ஸிய நண்பருடன் விவாதித்துக்கொண்டிருந்தேன். அவர் எழுத்தாளர். இடதுசாரி. இன்று பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் நிகழும் மைய ஆதிக்கத்தை, ஆணவப்போக்கை கடுமையாகக் கண்டித்தார்.

நான் கேட்டேன், ஐம்பதாண்டுகளில் காங்கிரஸும் அதே மைய ஆதிக்கம், ஆணவப்போக்கைத்தானே கொண்டிருந்தது? வடகிழக்கை அவர்கள் அரைநூற்றாண்டுக்காலம் இருட்டில் வைத்திருந்தனர். கோடிக்கணக்கில் வரி கட்டிவிட்டு வெறும் ரேஷன் அரிசிக்காக கேரளம் காங்கிரஸின் மைய அரசுடன் எத்தனை ஆண்டுக்காலம் போராடியது?  ‘அரி சமரம்’ என கேரள வரலாறு அதை பதிவுசெய்கிறது அல்லவா? (‘ஞங்ஙள்கு கிரி வேண்டா அரி மதி’ என்ற பழைய கோஷம் நினைவில் எழுகிறது)

நாளை காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அந்த டெல்லியின் அதிகார ஆணவ மையம் அப்படியேதான் நீடிக்கும் அல்லவா? இப்போதுகூட காங்கிரசில் இருப்பது அரசகுடி ஆதிக்க மனநிலைதான் இல்லையா? அங்கே ஒரு சிறு வட்டம் மட்டுமே அதிகாரம் கொண்டது, எஞ்சியவர்கள் அத்தனைபேருமே டம்மிகள் தான் அல்லவா? அதே நிலைதான் பாரதிய ஜனதாவிலும் இல்லையா?. இங்கும் ஒரு சிறுவட்டம்தான்.

அவர் ஆம் என்றார். ‘சரி, அப்படியென்றால் இவர்களை தூக்கிவிட்டு அவர்களை கொண்டுவர தொண்டையை உடைத்துக்கொள்வதனால் என்ன பயன்?’ என்று நான் கேட்டேன். அவர் இடதுசாரி கார்ப்பரேட் எதிர்ப்பு கோஷங்களை முழக்க தொடங்கினார்.

நாலைந்து நாட்கள் தாண்டவில்லை. அதானியுடன் பிணராய் விஜயன் மேடையில் அமர்ந்து கேரளத்தின் தனியார்மயப் பெருந்திட்டங்களை அறிவிக்கும் செய்தி வந்தது. நானே அவரைக் கூப்பிட்டேன். அவர் தயாராக இருந்தார். அதானியை நியாயப்படுத்தி பேசலானார்.கேரளம் மைய அரசால் புறக்கணிக்கப்படுகிறது. பெருந்திட்டங்கள் இல்லாமல் கேரளம் அழியும்.ஆகவே குறைந்த தீமை என்று அதானியை ஏற்றே ஆகவேண்டும். கொள்கையளவில் அதானிக்கு எதிரானவர்கள்தான். ஆனால் நடைமுறையில் ஒரு சமரசம் செய்தே ஆகவேண்டும்….

இந்த வகையான பொய்யான அரசியல்மயமாதலால் என்ன லாபம்? வெவ்வேறு கட்சிகள் தங்களுக்கு அணிசேர்க்கும் பொருட்டு உருவாக்கிக்கொண்டுள்ள வெற்றுக் கோஷங்களை நம்புவதற்கும் சினிமாநடிகரை நம்பி சட்டைகிழிய கூச்சலிடுவதற்கும் என்ன வேறுபாடு? இரண்டுமே அரசியல் அறியாமைதான்.

நான் சொல்லும் அரசியலின்மை என்பது  ‘அரசியல் அறியாமை’யை அல்ல. உண்மையான அரசியலை அறிந்திருத்தலை. உண்மையில் அரசியலில் எதையேனும் செய்வதுதான் நான் சொல்லும் அரசியல் சார்பு. உண்மையான அரசியல் என்பது அடித்தளத்தில் மக்களின் கருத்தை மெல்லமெல்ல மாற்றும் செயல்பாடு மட்டுமே. மற்றவை எல்லாம் எவரையேனும் அதிகாரத்தில் ஏற்றுவதற்கும், முடிந்தால் அதில் சில பருக்கைகளை தாங்களும் கொத்திக்கொள்வதற்கும் செய்யப்படும் முயற்சிகள் மட்டுமே.

என் அரசியல்

என் அரசியல் என்ன? என் தரப்பு என்ன? இதை கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டேன். ஆனால் முந்தைய பதில்களை படிக்கவே மாட்டார்கள். அத்துடன் தாங்கள் ஒரு கட்சியில் இருப்பதனால் அனைவரும் ஏதேனும் ஒரு கட்சியில்தான் இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். தங்களுடன் இல்லை என்றால் எதிரியுடன் இருப்பதாக உருவகிக்கிறார்கள். எல்லா பேச்சுகளும் ஏதோ ஒரு அரசியல் சதியின் ஒரு பகுதியாக சொல்லப்படும் சூழ்ச்சிப்பேச்சுக்களே என நம்புகிறார்கள். அவர்களிடம் பேசமுடியாது. ஆனால் மெய்யாக அறிய ஆர்வமுள்ளவர்கள் நான் என் அரசியல் என எதைச் சொல்கிறேன் என்று நான் பேசிய, எழுதியவற்றிலிருந்து அறியலாம்.

நேற்று அதிமுக இருந்தது, இன்று திமுக உள்ளது, நாளை தவேக வருமென்றாலும் எந்த அடிப்படை மாற்றமும் நிகழப்போவதில்லை. சில மேலோட்டமாக மாற்றங்கள் தவிர. நேற்றைய காங்கிரஸின் அதே ஆட்சிதான் இன்றும் நிகழ்கிறது. நாளை காங்கிரஸ் வந்தாலும் இதே அதானி- அம்பானி அரசுதான் இருக்கும். கோஷங்களில் சிறு மாறுதல்கள் இருக்கும். சில செயல்பாடுகளில் மேலோட்டமான மாற்றம் இருக்கும். சில முகங்கள் மாறும். பலமுகங்கள் அப்படியே நீடிக்கும். மதவாத அரசியலைக்கூட காங்கிரஸ் கையாளாது என்பதற்கு எந்தச் சான்றுமில்லை. காங்கிரஸ் அதை முன்னர் பஞ்சாபிலும் கஷ்மீரிலுமெல்லாம் கையாண்டுள்ளது.

ஆகவே மெய்யான மாறுதலை அதிகாரமாற்றம் வழியாக கொண்டுவர முடியாது. ஏற்கனவே  இருக்கும் அதிகாரச் சக்திகளை சமரசம் செய்து பயன்படுத்திக் கொண்டுதான் எந்தக் கட்சியானானாலும் ஆட்சியை நோக்கிச் செல்லமுடியும், ஆட்சி செய்யவும் முடியும். இது அப்பட்டமான உண்மை. சமூகத்தின் மனநிலையில், சிந்தனையில் உருவாகும் மாற்றமே உண்மையான மாற்றம். அப்படி கீழிருந்து மாற்றம் உருவாக முடியும் என பல செயல்பாடுகள் நிரூபித்தும் காட்டியுள்ளன. அந்த மாற்றத்துக்காக செயல்படுவதே உண்மையான அரசியல். அதையே நான் நுண்ணலகு அரசியல் என்கிறேன்.  அது அதிகார அரசியல் அல்ல. எனக்கு அதிகார அரசியலில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இருப்பவர்கள் செயல்படலாம், அதிலும் எதிர்ப்பில்லை.

(பார்க்க, காணொளி)

அரசியல் விவாதங்களின் எல்லை காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே? ஊடகங்கள், அரசியல், விவாதங்கள் இன்றைய அரசியல் கட்சியடிமைகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2025 11:35

பி.ஶ்ரீ.ஆச்சார்யா

பி.ஶ்ரீ.ஆச்சார்யா எழுதிய சித்திரராமாயணம் என்னும் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்தபோது தமிழகம் முழுக்க வாசகர்கள் பேரார்வத்துடன் அதை வாசித்தனர். கல்கியின் நாவல்கள் அளவுக்கே அந்தத் தொடர் புகழ்பெற்றிருந்தது. மரபிலக்கிய அறிஞரான பி.ஶ்ரீ. நெல்லை நேசன் என்ற பெயரில் பாரதி தேசியக்கவிஞரே ஒழிய மகாகவி அல்ல என்று குறிப்பிட்டு எழுதிய கட்டுரை பல ஆண்டுகள் நீடித்த பாரதி மகாகவியா என்னும் விவாதத்தை உருவாக்கியது.

பி.ஸ்ரீ. ஆச்சார்யா பி.ஸ்ரீ. ஆச்சார்யா பி.ஸ்ரீ. ஆச்சார்யா – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2025 11:33

அமெரிக்காவில் கம்பன், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமே விழைகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 16 இல் கம்பரின் சில பாடல்களை சரியான பொருள் & கவிதை நய விளக்கத்துடன் கர்நாடக இசைவடிவில் வழங்கும் “கடலோ மழையோ” நிகழ்வு டாலஸ் நகரில் மிகச் சிறப்பாக நடந்தது. 

இம்முறை எனக்கு இரட்டை மகிழ்ச்சி – நிகழ்வின் திட்டமிடல், செயல்படுத்துதல் என செயலூக்கமான ஒரு மாதம் மற்றும் வெற்றிகரமாக நடந்த நிகழ்வு ஒன்று. மற்றது , ரசிகனாக அடைந்த பெருநிறைவு.

நிகழ்வை தொகுத்து வழங்க முடியுமா எனக் கேட்ட போது வெகு எளிதாக ஒத்துக்கொண்டு, ஒத்திகையில் கூட இயல்பாக பேசிய நண்பர் அன்னபூர்ணா நிகழ்வன்று கையில் குறிப்பை வைத்துக்கொண்டு பதட்டமாக படித்துக்கொண்டிருந்தது பள்ளி கால தேர்வு நாட்களை நினைவுபடுத்தியது. ஆனால், மேடையில் எந்த ஒரு பதட்டமுமின்றி முழு அரங்கையும் இயல்பாக நிகழ்வுக்குள் கொண்டுவந்தார்.

அடுத்த தலைமுறை குழந்தைகளை இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்க முடிவெடுத்ததன்படி எங்கள் வாசிப்பு குழும நண்பர்களின் குழந்தைகள் நிலா கிரி, மீனாக்ஷி மூர்த்தி ஆகியோர் கலைஞர்களை மேடைக்கு அழைப்பதிலும்  காயத்ரி பாலாஜி வரவேற்புரையும் சிறப்பாக செய்தனர்.  நண்பர் ‘குறள்‘ செந்திலின் மகன்  சித்தார்த்  வருபவர்களை டிக்கெட் பரிசோதித்து உள்ளே அனுப்பும் பணியை வெகு சிரத்தையாக செய்தான் – பாடகி ப்ரியாவையே டிக்கெட் கேட்டு நிறுத்திவிட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இசைக் கச்சேரியாக மட்டுமில்லாமல் காப்பியம் என்றால் என்ன, அதன் இயல்புகள், அதை ரசிப்பதன் தேவைகள், அதன் மூலம் நாம் அடைவது என்ன, கம்பர் – அவர் கவி மேதைமை, ரசனையில் இசையின் இடம் என ஒரு அறிமுக குறிப்புடன் நிகழ்வை பழனி ஜோதி தொடங்கி வைத்தார்.

இறை துதி, அயோத்தியின் பெருமை, ராமனின் வடிவழகு, ராமர் சீதை சந்திப்பு, சீதையின் காதல் ஏக்கம்,  அவர்களின் வனம் புகுதல், ராம ராவண போர் என்ற உச்சங்களின் அபாரமான கவிதைகளை ரசிக்கும்படியான இசை வடிவமாக மாற்றியிருந்தார் ராஜன்.

மிருதங்க கலைஞர் ராஜு பாலன், கஞ்சிரா கலைஞர் நண்பர் ஸ்கந்தா, வயலின் இசைஞர் உமா மகேஷ் ஆகியோரின்  வாசிப்பு பலரும் மகிழ்ந்து தன்னிச்சையாக கரவொலி எழுப்புமாறு இருந்தது. கர்நாடக கச்சேரியில் பியானோவா என்ற ஆச்சரியத்தை தனியே உறுத்தாத தன் வாசிப்பால் சாய் சங்கர் கணேஷும், கார்ட்ஸ் (chords) க்கான காரணத்தை ராஜனும் தெளிவாக்கினார்கள் .

ப்ரியாவின் குரல் பல சாயல்களில் பாடலின் உணர்வுக்கேற்றவாறு மாறி மாறி ஒலித்தது. கேட்பவரையும் அதே உணர்வுக்கு ஆளாக்கும் வல்லமை கொண்ட சில குரல்களில் அவருடையதும் ஒன்று. விஸ்தாரணமான “தோள் கண்டார் ” பாடலின் முடிவில் அதிர்ந்த அரங்கம் “போர்மகளை கலைமகளை” இல் கலங்கிப்போனது.

நிகழ்வின் உச்சமாக நான் எண்ணுவது – “போர்மகளை கலைமகளை“. அதுவரை ராமனை குறித்த பாடல்களே இருந்தது.  போர் குறித்த சற்று உற்சாகமான தொனியில் அமைந்த பாடல் பார்வையாளர்களின் மனநிலையை ராமனின் வெற்றியை அது தரும் மகிழ்வை நோக்கி செலுத்திய வேளையில் ஒலித்த அப்பாடல் ராவணனைப் பற்றியது. அவன் ஆற்றல்களை கூறி ஒற்றையொரு  தவறால் வீழ்ந்ததை எண்ணி வருந்தும் அவன் தம்பியுடைய கூற்று. அதுவரை ராமனிடம் இருந்த அரங்கம் முழுதும் ராவணனுக்காக பெரிய துக்கத்தில் அமைதியாகிப் போனது. கம்பன் எனும் கவிச்சக்கரவர்த்தியை, அவர் கலையை , அதன் அலகிலா விளையாட்டை பல நூற்றாண்டுகள் கழிந்து உலகின் மறுமூலையில் இருக்கும் எல்லோரும் உணர்ந்து கொண்ட தருணமது.   

பாடல்களையும் அதற்கேற்ற ஓவியங்களையும் சேர்த்தளித்தவர்  நண்பர் கிருஷ்ணகுமார். திரையில் ஒளிர்ந்த அவ்வோவியங்கள் பலரையும் நிகழ்வில் ஒன்றச்செய்தது.

கவிதைகளை அதன் பொருள் மற்றும் கவி நயத்தையும் விளக்கி பின் இசைக்குள் அழைத்துச் செல்லும் பணியை வெகு சிறப்பாக செய்தார் பழனி ஜோதி. ஒவ்வொரு கவிதையைக் குறித்த அவரின் பார்வையும் அதை அவர் விளக்கிய விதமும் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது, சிறு குழந்தைகள் உட்பட. என் மகளிடம் அவள் எண்ணத்தைக் கேட்டபோது “கவிதைகள் மிகவும்  பிடித்தது – அதை விளக்கியவர் மிக அழகாக அதை செய்தார் ” என்றே கூறினாள். இசை நுழையாத இரும்புச் செவிகள் கொண்ட ஒரு நண்பரிடம் தயங்கி கேட்டபோது அவரும் இதையே சொன்னார். ஆம், பழனி இந்நிகழ்வை ஒரு ஓபரா போல உணர்ச்சி ததும்பும் ஒரு நாடகமாக ஆக்கினார்.   

வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் கலைஞர்களை ஒருங்கிணைத்து தன் இசையை அவர்களிடம் கடத்தி அவர்கள் மூலம் எங்களை வசியப்படுத்திய ராஜன்  வணக்கத்திற்குரியவர்.

இந்த பேரனுபவத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்று  தயக்கமில்லாமல் பரிந்துரைக்கிறேன். நண்பர்கள் ஆஸ்டின் சௌந்தர் அவர்களை vishnupuramusa@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம். 

 ஓவியம், இசை, கவிதை  மற்றும் தமிழ் என தளும்பிய கொண்டாட்ட மனநிலையை இரவுணவுடன் சேர்த்து நீட்டிக்கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.

அற்புதமான கலைஞர்களின் நட்பு, செயலூக்கம் மிகுந்த நண்பர்களின் சுற்றம், உயர் கலைகளை உணர்ந்து கொள்ளும் பேறு என எங்களை வழிநடத்தும் உங்களுக்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி 

டாலஸ் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2025 11:31

வேதாசலமும் கீழடியும்- கடிதம்

அன்புள்ள ஜெ,

நான் தமிழ்விக்கி- தூரன் விழாவிலே கலந்துகொண்டேன். சிறப்பான விழா. ஒவ்வொரு சிறு விஷயமும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அறிவுசார்ந்த விஷயங்களில் மட்டுமே ஈடுபாடு கொண்ட பெருங்கூட்டம் அங்கிருந்தது. அதை வேதாசலம் அவர்கள் பேச்சிலே குறிப்பிட்டார். அத்தனைபேரும் அப்படிக் கூர்ந்து பேச்சைக் கேட்டார்கள். கேள்விகள் எல்லாமே அறிவுபூர்வமானவையாகவும் அவரை படித்துவிட்டு வந்து கேட்டவையாகவும் இருந்தன.

அந்த அரங்கிலே ஒரு பேச்சாளர், அதாவது வேதாசலத்துடன் சேர்ந்து பணியாற்றிய ஆய்வாளர், அவரை கீழடி நாயகன் என்று சொன்னார். (அந்தவகையான புகழ்மொழிகள் வேறு எவரும் சொல்லவில்லை) அது ஆச்சரியமாக இருந்தது. அதன்பின்னர்தான் நான் அவரை பற்றி முழுமையாக ஆய்வுசெய்தேன். இன்றைக்கு நிறையப்பேசப்படும் கீழடியில் அவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். கீழடி ஆய்விலே வேதாசலம், சுப்பராயலு இருவருமே இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவருமே தங்களுடைய பல ஆய்வுகளில் ஒன்றாகவே அதையெல்லாம் சொன்னர்கள். அதைப்பற்றிய எந்தப் பெருமையையும் அவர்கள் கிளெய்ம் செய்யவில்லை. அதைக் கூட்டு உழைப்பாகவே சொன்னார்கள்.

கீழடி போன்ற ஆய்வுகளை பல ஆய்வாளர்கள் சேர்ந்துதான் செய்திருப்பார்கள். அப்படியென்றால் ஒருவர் மட்டும் ஏன் அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார். சரி, அவராவது ஆய்வாளர். ஏன் அரசியல்வாதிகள் ஏதோ அவர்களே அகழ்வாய்வு செய்ததைப்போல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? இதெல்லாம் என் மனதிலே எழுந்த கேள்விகள். அதற்கேற்ப சுப்பராயலுவும் அவர் உரையில் விரிவாக் அதைச் சொல்கிறார். ஒரு தொல்லியலாய்வு எப்படி நிகழும், எப்படி அதை பரபரப்பான செய்தியாக ஆக்கக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார். சுப்பராயலுவின் அந்த உரை மிக முக்கியமான ஒன்று.

ரத்னகுமார் வேலுச்சாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2025 11:31

A global element …

But there is an interesting question. Wagner is not communicable to non-European persons because, as he himself says, he is more ‘German.’ Mozart is extremely popular throughout the world.

A global element …

வாசகன் என்னும் ஆணவம் என்ற கட்டுரை வாசித்தேன். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தை நானும் கவனித்ததுண்டு. பொதுவாக நம் முகநூலில் வாசிப்புப் பழக்கம் இல்லாத சாமானியரானாலும் சரி, கொஞ்சம் புரட்டிப்பார்க்கும் வழக்கம் கொண்டவர்களானாலும் சரி, எழுத்தாளர்களை அவர்களின் அடக்கத்தை வைத்தே மதிப்பிடுகிறார்கள். நல்ல அடக்கமான எழுத்தாளர் என்றால் பாராட்டு. அவருக்கு அடக்கம் இல்லீங்க என்று வசை. ஆனால் எந்த எந்த முதலாளிக்கும், எந்த அரசியல்வாதிக்கும் அடக்கம் தேவை என்று இவர்கள் சொன்னதே இல்லை.

ஆணவம் என்னும் அருங்குணம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2025 11:30

August 26, 2025

புத்தருக்கான நிலம்

டார்ஜிலிங் அருகே ஒரு பௌத்த மடாலயத்தில் நின்று ஒரு சிந்தனை. புத்த மதம் ஏன் சமநில இந்தியாவிலிருந்து மறைந்தது, ஏன் மலைகளில் நீடிக்கிறது? பல வரலாற்று விளக்கங்கள் உண்டு. ஓர் ஆன்மிக விளக்கம் நான் சொல்வது.

 

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2025 11:36

புத்தருக்கான நிலம்

டார்ஜிலிங் அருகே ஒரு பௌத்த மடாலயத்தில் நின்று ஒரு சிந்தனை. புத்த மதம் ஏன் சமநில இந்தியாவிலிருந்து மறைந்தது, ஏன் மலைகளில் நீடிக்கிறது? பல வரலாற்று விளக்கங்கள் உண்டு. ஓர் ஆன்மிக விளக்கம் நான் சொல்வது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2025 11:36

அந்தக் கதை!

காவியம் என்ற இதிகாசம்- சுசித்ரா காவியம் – கதைகளின் கேள்விகள் வைதரணி மலர்கள் காவியத்தை வாசித்தல் காவியம், பெருந்தேடல் புதைந்த காவியம் ரா.ஶ்ரீ.தேசிகன் காவியம் நாவலுக்கு முதற் தூண்டுதலாக அமைந்த ஒரு கதை பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். அந்தக்கதையில் வரும் ‘அந்த நிலவிலே அந்த நிலவிலே மந்த மாருதம் மெல்ல வீசவே’ என்ற பாடல் பல ஆண்டுகள் என்னுடன் இருந்தது. அக்கதையை நான் என் பள்ளிநாட்களுக்குப் பின் படித்ததே இல்லை. ரா.ஶ்ரீ.தேசிகன் எழுதிய அக்கதையை நீண்டநாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன். அதை நண்பர் ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் தேடிக்கண்டடைந்து அனுப்பியிருக்கிறார். நிழல்களுடன் ஆடியது-4 நிழல்களுடன் ஆடியது-3 நிழல்களுடன் ஆடியது-2 நிழல்களுடன் ஆடியது-1

சக கமனம்

1

உலகத்தின் மீது உறைந்து கிடந்த நீள் இரவின் கன இருள் மெல்ல அகன்றது. கீழ்வானத்தில் வெள்ளொளி அரும்பிற்று. சிதறிக் கிடந்த நட்சத்திரங்கள் மங்கின. சோபையை இழந்த சந்திரன் தேய்ந்து விண்ணில் கிடந்தான். குண திசையில் ஒரு சுவர் போல் கிடந்த மேகத்தினின்று துருதுருத்த காலையிளஞ் செங்கதிர்கள் ஒரு மூச்சில் விந்திய மலைச் சிகரங்களின் மேலே தாவிக் குதித்து விளையாடின. இருளிலே உருவற்று ஒரே மெத்தையாய்க் கிடந்த மலைக்காட்சிகள் தனித்தனி உருவை அடைந்தன. வரைகளின் கம்பீர வரிசைகள், ஆழ்ந்த பள்ளத்தாக்குகள், தெளிந்த நீர்ச்சுனைகள், பூக்களைச் சொரிந்து நிற்கும் கொடி, செடி, மரங்கள். இவைகளெல்லாம் ஓவியப்புலவன் கையில் அலரும் படம் போல அலர்ந்தன.

நிர்மலமான விண்ணில் ஒரு நகை தோன்றிற்று; விந்தியசைலத்தில் ஒரு சாந்தி பிறந்தது. ஏகாந்தத்திலிருந்து எழும் அவ்வமைதியைக் கலைத்த ஒலிகள் காற்றின் மர்மரசப்தமும், பறவைகளின் இன்னிசைக் குரல்களும், இலைகள் ஆடி உதிரும் அரவமும் ஆகிய இவைகளே. கல்லுக்குக் கல் ‘கலீர் கலீர்’ என்று பாயும் மலையருவிகளின் ஓசையைக் கின்னர யஷ வித்யாதர அணங்குகளுடைய சிலம்புகளின் கிண்கிணியோசையென மலையில் வாழும் குறவர்கள் அயிர்த்தார்கள்.

பனி நனைந்த காலை, அனல் அடிக்கும் நடுப்பகல், அமைதி வழியும் அந்திப்பொழுது, நட்சத்திரம் தேர்ந்த நிசி என்னும் இவைகள் சுற்றிச் சுற்றி வரும் ஓய்வில்லாத நடனத்தை மலை யுகயுகமாய்ப் பார்த்து நிற்கிறது. ஒவ்வொரு யாமத்திலும் ஒவ்வொரு மாறுபாடு அம்மலை முகத்தில் தோன்றும்; கூர்ந்து நோக்கினால் ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு காட்சி அளிக்கும் அம்மலை. மாறி மாறி வரும் பல வர்ணத் தோற்றங்களைத் தரும் விசித்திரக் கனவு உலகம்போல விரிந்து கிடந்தது, அவ்விந்திய மலை. செறிந்த மூங்கிற் காடுகளில் காற்று புகுந்து புல்லாங்குழல் வாசிக்கும்; பல்லாயிரம் அருவிகள் பாய்ந்து இசை பரப்பும். பழுத்த பால்வெண்ணிலவில் பல்வேறு இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு காலில் சதங்கைகள் ஒலிக்க நடித்துக் கொண்டே பாடுவார்கள் குறவர்கள். இம்மதுர ஒலிகள் எல்லாம் சேர்ந்து காற்றில் மிதந்து வரும். மலை அடிவாரங்களிலுள்ள பட்டணவாசிகள் அவைகளைக் கேட்டு, “என்ன பேய்க் கூத்தா? அல்லது கின்னர கானமா?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளுவார்கள். நிழல்கள் நீண்டு இருளுகிற சமயங்களில் குறவர்கள் மலையிலிருந்து இறங்குவார்கள். அவர்களுடைய பேச்சுக்கள், அவர்களுடைய பார்வைகள், அவர்கள் தரித்திருக்கிற உடைகள் எல்லாம் கீழேயுள்ள மனிதர்களுக்கு அச்சத்தை விளைவித்தன. தங்களுக்கு விளங்காத பாஷையில் பேசுகிற குறவர்களின் வார்த்தைகளைக் கேட்டு, ‘ஏதோ பைசாச பாஷையாய் இருக்கிறதே!‘ என்று அவர்கள் கருதினார்கள்.

மலையிலே வாழ்கிற மறவர் குறவர்களுக்குப் பெண்டு பிள்ளைகள் உண்டு; கல்யாணம் கார்த்திகைகள் உண்டு; சாக்காடுகள் உண்டு; அழுகை உண்டு, சிரிப்பு; ஹாஸ்யம் உண்டு, சோகம் உண்டு; பொழுது பாட்டு உண்டு, கதை உண்டு, நடனம் உண்டு; இனிது தாங்கச் சில தத்துவங்களும் அவர்களுக்கு உண்டு என்ற விஷயங்களை நகர மாந்தர் மறந்துவிட்டார்கள். காற்றோடு காற்றாய்த் திரிகிற, மேகமாய்ச் சஞ்சரிக்கிற, அருவியோடு அருவியாய் அலைகிற, பறவைகளோடு பறவையாய்ப் பாடிப் பறக்கிற மலைவாழ் குறவர்களிடத்தில் உண்மையான காதல் வீர ஊற்றுக்கள் உள்ளத்தில் உண்டு, அவைகளைப் பெருக்கி ஒரு கவி வெள்ளமாய் உலகம் முழுவதும் பாயும்படி செய்ய அவர்கள் மத்தியில் ஒரு கவி தோன்றிவிட்டார். மனிதன் தோன்றின பிறகே மரஞ்செடி கொடிகளுக்கு அர்த்தமும் அழகும் பிறந்தன. உலகத்தில் ஒரு கவி எழுந்தவுடனே, குருடும் ஊமையுமாயுள்ள மனிதனுக்குச் செவியும் கண்களும் திறந்தன.

விந்திய மலை அப்பெரும்பாக்கியம் புரிந்துவிட்டது. அம்மலையில் செறிந்த காட்டிற்கு நடுவில் ஒரு சிகரம் இருக்கிறது. அச்சிகரத்துக்கு அடியில் ஒரு பெருங்குகை. சிகரத்திற்குப் போவதற்கு ஒற்றையடிப் பாதை ஒன்று உண்டு. குகைக்கு முன் ஒரு பெரிய மரம். அம்மரத்துக்கு அப்பால் சிரித்து ஓடுகிற ஓர் அருவி.

அச்சுந்தரமான காலைப் பொழுதில் அம்மரத்தின் அடியில் இருவர் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் ஓர் ஓலையைப் பார்த்துக்கொண்டே மற்றொருவரை வினவினார். 

“நீங்கள் வராஹமிஹிரரின் சிஷ்யரா?”

“ஆம்.”

“நீங்கள் நவத்வீபத்திலிருந்து எப்பொழுது புறப்பட்டீர்கள்?” என்று கேட்டார் கௌண்டின்யர். 

“நான் ஊரை விட்டு ஆறு மாதத்திற்கு மேலாகிறது. ஊரை விட்டுக் கிளம்பியதும் நேராகவே கோதாவரி நதி தீரத்தின் மீதுள்ள சுப்பிரதிஷ்டா நகரத்துக்குப் போனேன் ” என்று பதில் உரைத்தார் சாண்டில்யர்.

 “ஏன்? அங்கே போவானேன்? என் குரு குணாட்யர் அந்த ஊரை விட்டு வந்த விஷயம் உங்களுக்கு எட்டவில்லையா?”

“குணாட்யர் ராஜசபையை விட்டு நீங்கினது தெரியும். வராஹமிஹிரர் இதைக் கேட்டு நிரம்ப வருத்தப்பட்டார். இவர்கள் இருவரும் சோமதேவ பாதானந்தரிடம் சேர்ந்து பாடம் கேட்ட விஷயம் தங்களுக்குத் தெரியுமோ இல்லையோ?”

“ஆமாம், தெரியும். அது இருக்கட்டும். குணாட்யர் சுப்பிரதிஷ்டத்தில் இல்லை என்று அறிந்தும் ஏன் அங்கே போனீர்கள்?”

”அங்கே போனால் சமாசாரம் ஏதாவது கிடைக்கும் என்று போனேன்.”

”ஏதேனும் கிடைத்ததோ?” 

“ஒன்றும் கிடைக்கவில்லை. எங்கே போயிருப்பார் என்று கேட்டதற்கு விந்தியமலைக்குத்தான் போயிருப்பார் என்று அங்குள்ளவர்கள் பதில் சொன்னார்கள். எந்தக் காரணத்திற்காக அவ்வூரை விட்டார் என்றதை நான் விசாரிக்கவில்லை.”

“அதைச் சொன்னால் உங்களுடைய மனம் உடைந்து போய்விடும். எந்தக் காரியத்தை உத்தேசித்து இங்கே மலைகளையும் ஆறுகளையும் கடந்து வந்தீர்களோ, அந்தக் காரியம் நிறைவேறுவதற்கில்லை.“

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார் சாண்டில்யர்.

“என் குரு ஒரு சபதம் செய்திருக்கிறார்.”

“என்ன சபதம்?” 

“ஸம்ஸ்கிருத பாஷையோ தேசபாஷையோ பிராகிருத பாஷையோ இவைகளில் ஏதானாலும் கையினால் தொடுவதில்லை என்ற சபதந்தான்.”

சாண்டில்யர் திடுக்கிட்டுப் போனார்; “ஏன் அப்படி செய்தார்?” என்று தேய்ந்த குரலில் நீர்மல்கிய கண்களுடன் கேட்டார்.

“அந்தக் கதையைச் சொல்லுகிறேன், கேளுங்கள் சுப்பிரதிஷ்டா நகரத்து அரசன் சாதவாகனனைப்பற்றி தான் உங்களுக்குத் தெரியுமே!”

“ஆமாம். அவனுடைய பத்தினி சித்திரலேகைக்கு வியாகரணம் வரும். அவளுடைய தகப்பனார் என் குருவிடம் பாடம் கேட்டவர்.”

“அந்த சித்திரலேகையினால்தான் இவ்வளவு விளைந்தது. ஒரு நாள் தன் மனைவிமார்களுடன் ஒரு மலையின் ஏரியில் ஜலக்கிரீடை செய்துகொண்டிருந்தான் சாதவாகனன், சித்திரலேகை களைத்துப் போய்விட்டாள். அவள் அரசனைப் பார்த்து, ‘நாதா! போதும்‘ என்று ஸம்ஸ்கிருகத்தில் சொன்னாள். அரசன் அதற்கு அர்த்தம் தெரிந்து கொள்ளாமல் அவளுக்கு விதவிதமாய்ப் பக்ஷணத்தைக் கொண்டுவரச் சொன்னான். அங்கு இருக்கிறவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். அவளும் அரசனுடைய அறியாமையை கண்டு புன்னகை கொண்டாள். 

“அரசனுக்குக் கடுங்கோபம் வந்திருக்க வேண்டுமே?”

“கோபமான கோபம்!” 

”பிறகு என்ன நடந்தது?”

“வெகு நாள் வரையில் அரசன் முகங்கொடுத்தும் பேசவில்லை. சரியான ஊண் உறக்கம் இல்லை. உடம்பு இளைத்து, விடியற்கால நிலவு போல முகமும் வெளுத்து விட்டது.”

“இதற்கு என்ன சிகிச்சை செய்தார்?”

“உடம்பில் வியாதி ஒன்றும் இல்லை. எல்லாம் மனோ வியாதிதான் என்று என் குருநாதரும் மற்றொரு ஸம்ஸ்தான பண்டிதரான ஸர்வவர்மரும் தீர்மானித்து அரசனை வினவினார்கள்.”

“அரசன் அதற்கு என்ன சொன்னான்?”

”கட்டைக்கு அலங்காரம் பண்ணினதுபோல இருந்தென்ன? எனக்குக் கண் இருந்தும் கண் இல்லை. ஊனக்கண் இருந்து பிரயோஜனம் என்ன? ஞானக்கண் திறக்கவில்லை. இருட்டறையில் விம்முகின்ற குழந்தைபோல இருக்கிறேன். எனக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்து என்னைப் பண்டிதனாக ஆக்கவேண்டும்‘ என்று சொன்னான் அரசன்.”

“அவனுக்கு உங்கள் குரு என்ன பதில் சொன்னார்?”

“பன்னிரண்டு வருஷம் ஆகும் என்றார். இதைக் கேட்டு அரசன் பிரமித்துப் போனான்.”

“ஸர்வவர்மர் என்ன சொன்னார், அந்தச் சந்தர்ப்பத்தில்”

”’பன்னிரண்டு மாதத்தில் சொல்லித் தருகிறேன்’ என்றார்.

அதெல்லாம் முடியாத காரியம். எந்த வித்தைக்கும் பன்னிரண்டு வருஷமாகும். பிரம்மத்தை அடைவதற்குப் பன்னிரண்டு வருஷம் பிரம்மசரியத்தை அநுஷ்டிக்கச் சொல்லியிருக்கிறது.

ஸர்வவர்மர், ‘பன்னிரண்டு மாதத்தில் நான் சொல்லித் தந்தால் நீங்கள் என்ன பிரதிஜ்ஞை செய்கிறீர்கள்?’ என்று கேட்க, ‘நான் ஸம்ஸ்கிருதம், பிராகிருதம், தேச பாஷை இம்மூன்றையும் விட்டுவிடுகிறேன்’ என்றார் என் குருநாதர்.”

“பிறகு என்ன நடந்தது?”

”ஏதோ தெய்வ வசத்தால் சாதவாகனன் பன்னிரண்டு வருஷத்தில் கற்றுக்கொள்ளுவதைப் பன்னிரண்டு மாதத்திலேயே கற்றுக்கொண்டுவிட்டான்.”

”பன்னிரண்டு மாதத்தில் கற்றுக்கொண்டு விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?”

“இல்லை. ஏதோ விட்ட குறை தொட்ட குறையாக இருக்கும். பூர்வஜன்மத்தில் பெரிய பண்டிதனாய் இருந்திருப்பான் ராஜா. எந்தச் சாபத்தால் அவனுடைய வித்தை மறைந்துபோய்விட்டதோ! வெகுநாள் புதைந்து மூடிக்கிடந்த அவனுடைய வித்வீத்தனம் மீண்டும் அவனுக்குக் கிடைத்துவிட்டது.

“இம்மாதிரித்தான் நம்முடைய குருநாதர்களுக்குக் குருவான சோமதேவ பாதானந்தரைப்பற்றிச் சொல்லுகிற வழக்கம். பதினெட்டு வயசு வரையில் அவருக்கு ஸம்ஸ்கிருத பாஷையின் வாசனை கொஞ்சங்கூடத் தெரியாதாம். இருபது வருஷத்தில் அப்பியசிக்கக் கூடிய நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் இவைகளை நான்கு வருஷத்தில் கற்று கொண்டுவிட்டார்.

“என்னவோ இப்படி வித்தை வந்து அடைந்துவிடுகிறது. ஆனால் எனக்கு ஒரு வருத்தம். இவ்வளவு தூரம் அலைந்து வந்தீர்களே; என் குருநாதர் உங்களுக்குப் பாடம் சொல்லாத நிலையில் இருக்கிறாரே. இன்னும் எத்தனை வருஷப் படிப்பு உங்களுக்கு இருக்கிறது?”

“எல்லாம் என் குருநாதர் சொல்லிவிட்டார். சில நுட்பமான விஷயங்களையே உங்கள் குருவைப் போய்க் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி சொன்னார்” என்றார் சாண்டில்யர். 

“அவைகளை எனக்குத் தெரிந்த வரையில் உங்களுக்குப் பாடம் சொல்லுகிறேன். அவருடைய சுவடிகள் எல்லாம் குகையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.”

”அவரிடம் நேரே பாடம் கேட்க எனக்குப் பாக்கியம் இல்லை. நீங்களேனும் பாடம் சொல்லுகிறேன் என்கிறீர்களே! எனக்குச் சந்தோஷம். உங்கள் குருநாதர் எங்கே போயிருக்கிறார்? அவர் வருவதற்கு நாழிகை ஆகுமோ?”

”கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார். சுப்பிரதிஷ்டா நகரத்தில் பெய்ய வேண்டிய மழை விந்தியமலையில் பெய்துவிட்டது” என்று பெருமூச்சு விட்டுச் சொன்னார் கௌண்டின்யர்.

“நீங்கள் சொல்வது சிறிதும் புரியவில்லையே!”

“ஓர் இடத்திற்கு நஷ்டம் வந்தால் மற்றோர் இடத்திற்கு லாபம் ஏற்பட்டுவிடுகிறது” என்று சொல்லி மேலே ஆரம்பித்தார் கௌண்டின்யர்.

“இங்கே நாங்கள் வந்து பன்னிரண்டு வருஷங்கள் ஆகப்போகின்றன. இங்கே ஒரு நாள் இரவில் வந்தோம். நல்ல வெண்ணிலா. மலைக்கு மேலே கொஞ்சதூரம் போனால் ஓர் ஏரி தென்படும். அந்த ஏரியிலிருந்து ஓர் அருவி கீழே பாய்கிறது. அந்த ஏரி கரையில் குறவர்கள் பாடிக்கொண்டிருதார்கள். நாங்கள் ஒரு மரத்துக்குப் பின்னால் பதுங்கிக் கேட்டுக்கொண்டிருந்தோம். அவர்கள் பாஷை புரியவில்லை. தேவகானம் போல் எங்கள் செவிகளில் அவர்கள் பாட்டு விழுந்தது. எங்கள் ஆசார்யர் அந்தப் பாட்டில் மிகவும் ஈடுபட்டார். அந்த நாள், முதற்கொண்டு அவர்களோடு பழகி அவர்களுடைய பாவைகளைக் கற்றுக்கொண்டு அதில் ஏழு காவியங்கள் செய்திருக்கிறார் என் குருநாதர், அவைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ரஸம் ததும்பி நிற்கிறது. நீங்கள் கேட்பீர்களேயானால் இந்த ஸம்ஸ்கிருதம் என்னத்திற்கு என்று சொல்லுவீர்கள்; அவர்களுடைய பாஷையைத் தெரிந்து கொள்ள ஆவல் கொள்ளுவீர்கள்.”

“இந்த மலையில் வாழ்கிற குறவர் பாஷையிலா கவிதை செய்திருக்கிறார்?”

“வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஒரு நாணலைக் கையில் வைத்துக்கொண்டு பாடி அகில புவனங்களையும் தன் அமுத கீதவலையில் சுருக்கிவிடவில்லையா, பிருந்தாவனத்தில் யமுனா நதிக்கரையில் ஓர் ஆட்டிடையன்?”

“என்ன இருந்தாலும் பாஷைக்கு வளம் வேண்டாமா? சொற்களெல்லாம் வீணையின் தந்திகள் போன்றன அல்லவா?”

”ஆமாம், தந்திகள் தாம். மனிதனுக்கு ஆவேசம் ஏற்பட்டால் அந்த ஆவேசத்தில் உணர்ச்சிகள் எழ ஆரம்பித்துவிடும். உணர்ச்சிகளுக்கு ஏற்ற தந்திகளும் சிருஷ்டியாகிவிடும்.”

“நீங்கள் சொல்லுவது வாஸ்தவந்தான்.”

“இலக்கியத்திற்குப் பிறகுதானே இலக்கணம்? அதை மறந்துவிடுகிறார்கள்.”

”ஆமாம், அப்படித்தான். சாதவாகனன் இலக்கணமே உயிரென்று நினைத்து, வந்த புலவர்களை, சா-வுக்கு மாத்திரை என்ன? லக்ஷணம் என்ன? எனக் கேட்க ஆரம்பித்துவிட்டான் என்று அங்கே சொல்லிக் கொள்ளுகிறார்கள்.”

“ராணி இலக்கணம் கற்றுக்கொள் என்று சொன்னது விபரீதமாய்ப் போய்விட்டது அரசனுக்கு நந்தவனத்தின் மலர்கள் தெரியவில்லை. வேலிகள் ஒழுங்காய் இருக்கின்றனவா என்று பார்க்கிறான். ராணி சித்திர லேகை இருக்கிறாளே, அவள் கேவலம் இலக்கணம் மட்டும் வாசிப்பவளல்ல. அவளுக்குச் சங்கீத சாகித்தியம் நன்றாய்த் தெரியும். அவளுக்கு ஒரு குழந்தை தவறிப் போய்விட்டது. துக்கம் தாங்காமல் இரங்கல் பாட்டு ஒன்று பாடியிருக்கிறாள். அதைக் கேட்டால் கல்லும் கரைந்துவிடும். அவளுக்கு ஸர்வவர்மரின் பசையற்ற இலக்கண வாதங்களும் தர்க்கங்களும் பிடிக்கின்றனவோ என்னவோ! இன்னும் ஏதாவது அங்கே பிரஸ்தாபம் உண்டோ?”

அந்தப்புரத்திற்குப் பக்கத்தில் யாரோ ஒருவர் பாடிக்கொண்டு வந்தாராம். அதைக் கேட்டு மஹாராணி பரவசமாகி விட்டாளாம். அப்பேர்ப்பட்ட பாடகரது கானத்தைக் கேட்கவேண்டும் என்ற ஆசையாம். அதற்காக ஒரு வித்வத் சபை கூட்டப் போகிற சமாசாரத்தைத் தெருத்தெருவாய் ஜனங்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

”அப்படியா? அந்தச் சமாசாரம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது. குருநாதர் என்னை அனுப்புவதாகச் சாதவாகனனுக்கு ஓலை போக்கி இருக்கிறார். அந்தப்புரத்திற்கு அருகே பாடினவன் நானே. மஹாராணி மாடத்தின் மீது நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வை, பாடிக்கொண்டு மெல்ல மறைகிற என் பாட்டின் சுவட்டையே பின்பற்றித் தொடர்ந்தது. நானும் அவள் முகத்தை நோக்கினேன்.”

”அப்படியா? அப்பேர்ப்பட்ட கானமா?”

“எங்களுடைய குருவே அத்தகைய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வருவார், கேட்கலாம். அவர் வருவதற்குள் மலை உச்சியின் மேலே ஏறிப் பார்ப்போம். அந்தச் சிகரத்திலிருந்து அவர் போயிருக்கிற இடத்தைக் காண்பிக்கிறேன்” என்றார் கௌண்டின்யர்.

இருவரும் அங்கே வளைந்து செல்லுகிற ஒற்றையடிப் பாதை வழியாய்ச் சென்றார்கள். சுற்றிச் சூழ்ந்துள்ள வனப்பு வாய்ந்த காட்சிகளில் அவர்கள் மனம் ஈடுபட்டது. மௌனமாய் ஏறினார்கள். அம்மலையின் அமைதியில் மனிதனின் குரல்கூட ஓர் அபசாரந்தானோ என்று அவர்கள் கருதினார்கள் போலும். அங்கே ஒரு சிகரத்தை அடைந்து புதருக்குப் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்தனர். சூரியன் தன் யாத்திரையை மேலே வான வீதியில் நட, ஆரம்பித்துவிட்டான். அவன் பொழிகிற சுடர் வெள்ளத்தில் மலை முழுவதும் தோய்ந்து கிடந்தது. 

“அதோ தெரிகிறதே வெண்பட்டு நூலிழை போல; அதென்ன?” என்று சாண்டில்யர் கேட்டார்.

“அதுதான் நர்மதை; ஒரு நூல் போலச் சுருங்கிக் கிடக்கிறது தூரத்து நீலத்திலே. சற்றுக்கிழக்கே திரும்புங்கள். அதோ ஒரு வனதேவதையின் இடையிலிருந்து நழுவின வெண்பட்டுப் போலத் தெரிகிறதே அது என்ன என்று நினைக்கிறீர்கள்?”

”அதுவும் ஓர் ஆறாய் இருக்கலாம். வருகிறபொழுது பார்த்தோமே மலைமீது பல உத்தரீயங்கள் கிடந்தன போல;  அவைகளெல்லாம் ஆறுகள் தாமே?”

“ஆமாம். கீழே மதுரமாய் மிருதங்க ஒலிபோல ஒலிக்கிறதே, அது அந்த அருவியின் ஓசைதான். அந்த அருவி, அதோ தெரிகிறதே ஓர் ஏரி, அதிலிருந்து கீழே பெருகிப் போகிறது. அந்த ஏரிகரையில்தான் குடிசைகளில் குறவர்களும் மறவர்களும் வசிக்கிறார்கள். அங்கே இரவு முழுவதும் தங்கிக் காலையில் இங்கே வருவார் என் குருநாதர்.” 

இவர்கள் இப்படி அளவளாவிக் கொண்டிருக்கும் பொழுது மலையமைதியிலிருந்து வெடித்துக் கிளம்புவது போல ஒரு தேவகானம் எழுந்தது.

“அதோ வந்துவிட்டார் என் குருநாதர்” என்று மொழிந்தார் கௌண்டின்யர்.

“அதிமதுரமாக இருக்கிறதே! அந்தப் பாட்டிற்கு என்ன அர்த்தம்?”

”அந்த நிலவிலே, அந்த நிலவிலே, மந்த மாருதம் மெல்ல வீசவே. இதுதான் அப்பாட்டிற்கு அர்த்தம்” என்று அப்பாட்டை மலரின் உள்ளே ரீங்காரம் செய்யும் வண்டே போலத் தம் வாய்க்குள்ளே முனகிக்கொண்டு மெல்ல இறங்கினார் கௌண்டின்யர். நவத்வீபவாசியான சாண்டில்யர் பின் தொடர்ந்தார்.

2

சாயங்கால வேளை. சுப்பிரதிஷ்டா நகரம் அதிகமான சோபையோடு விளங்கிற்று. தெருவெல்லாம் தண்ணீர் தெளிக்கப்பட்டுப் புழுதி அடங்கி இருந்தது. மாடமாளிகை மீது கொடிகள் அசைந்தன. தோரணங்கள் காற்றில் ஆடின. பலவித மணம் எங்கும் பரந்து வீசியது. வித்யா மண்டபம் நிரம்பி விட்டது. வெளியிலே ரதங்களும் சிவிகைகளும் நின்றன. முத்து விதானத்தின் கீழ் ஒரு தங்க அரியாசனத்தின்மீது அரசன் சாதவாகனன் கம்பீரமாய் வீற்றிருந்தான். அவன் பக்கத்தில் மற்றோர் ஆசனத்தில் ஸர்வவர்மர் அமர்ந்திருந்தார். ஒரு வரிசையில் வித்துவான்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஆடவர்களும் பெண்களும் குழந்தைகளும் அவரவர்களுக்குத் தகுந்த ஆசனங்களை அலங்கரித்தனர்.

சபா மண்டபத்து மாடியில் அந்தப்புர ஸ்திரீகள் ஆவலாக உட்கார்ந்திருந்தார்கள். சித்திரலேகை ஒரு மயிற்பீலி ஆசனத்தில் அழகுபெற அமர்ந்திருந்தாள். 

பல வித்துவான்கள் தங்கள் சாமர்த்தியத்தைக் காண்பித்தனர். குணாட்யரின் சிஷ்யர் கௌண்டின்யர் சாண்டில்யரோடு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். ஸர்வவர்மர் கௌண்டின்யரின் வரவை அரசனுக்கு அறிவித்தபொழுது. அரசன் மந்தகாசம் செய்ததும் அவர்களுக்குத் தெரியும். தங்களுக்கு எப்பொழுது அவகாசம் கிடைக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடன் அவர்கள் காத்திருந்தனர்.

யமக ஸார்வபௌமர் வித்துவான்களுடைய கரகோஷத்திற்கு மத்தியில் எழுந்தார். பாடல்களை வாசித்துக் கொண்டே வியாக்கியானம் பண்ணினார்; சப்த ஜாலங்களாக இருந்தன; வாசால கோலாகலந்தான்; வார்த்தைகள் உதிர்ந்தன: வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள் தாம். சிலேடைகள், முரசபந்தம், வியாக்ரபந்தம். ஸிம்மபந்தம் நிரம்பிய தம் கவிச் சரக்கு மூட்டைகளை அவிழ்த்தார். ‘மா‘வுக்குப் பத்து அர்த்தமும், கு‘வுக்கு இருபது அர்த்தமும் சொன்னார். “பேஷ், பேஷ்” என்று அரசன் தலையை அசைத்தான். ‘தீஞ்சுவைத் தண்ணீராம், மாலை மதியமாம்! வீசு தென்றலாம், தரங்கமீது தவழ்ந்து வரு வெண்ணிலாவாம்! பித்துக்கொள்ளிகள்! இப்படிச் சொல்லிக்கொண்டு திரிகிற கவிகள் யாருக்கு வேணும்! எவ்வளவு அர்த்தம் அடங்கியிருக்கிறது! இலக்கணத்துக்கு மயிர் இழை இவர் விலகவில்லையே. இவரே வித்துவான்’ என்று மனத்தில் எண்ணினான் வேந்தன்.

வேந்தன் தலையை அசைக்கவே ஸர்வவர்மர் அதற்கு மேலே தலையை அசைத்தார். அரசனை அண்டிப் பிழைக்கிற வித்துவான்களின் தலைகள் சூறைக்காற்றால் ஆடும் பனங்காய்கள்போல உருள ஆரம்பித்தன. அவருடைய உக்கிர உபந்நியாசம் குழந்தைகள் ஆடவர்கள் மடவார்களுக்கு ஏதோ ஒரு கல்வருஷம் போலப்பட்டது. சொற் சிலம்ப வரிசைகளை விதவிதமாய்க் காட்டினார் அவ்வித்துவான். இந்தச் சந்தடிகளில் சிலபேர்கள் தூங்கினார்கள். மகாராணி தான் முன்பு கேட்ட பாடலைப் பாடியவர் முறை இன்னும் வரவில்லையே என்று கவலைப்பட்டாள். ‘எப்பொழுது இந்த அர்த்தமற்ற சொற்புழுதி அடங்கி இன்பமான கானமழை என் உலர்ந்த உள்ளத்தில் பெய்யுமோ?’ என்று நைந்தாள். ‘நாம் உலகமெங்கும் கேட்கப் பறையறிவித்த செய்தி அப்பாடகன் காதில் விழவில்லையா?’ என்று நினைத்த வண்ணமாய் இருந்தாள்.

சொற்போர் அடங்கிற்று. சூழ்ந்துள்ள அமைதியில் எல்லாம் கரைந்தது. குணாட்யரின் சிஷ்யர் கௌண்டின்யர் பாடவேண்டிய காலம் நெருங்கிற்று. தம்புரு சுருதியை மீட்டிக்கொண்டு தம் குருநாதரைத் தியானித்துப் பாடத் தொடங்கினார். பாடினவுடனே மகாராணி சித்திரலேகையின் சிந்தையாழில் தூங்கிக்கொண்டிருந்த ஒலி எழுவது போலப்பட்டது. ’அன்று பாடினவர் குரல் மாதிரி இருக்கிறதே!‘ என்று கௌண்டின்யர் முகத்தைச் சற்று நோக்கினாள். ‘அவரே; அதே முகந்தான். ஒரு தரம் பார்த்தாலும் என் உள்ளச் சுவரில் அவர் முகம் நன்றாய்த் தீட்டப்பட்டிருக்கிறது. ஆமாம், அவர்தாம். இதில் சந்தேகம் இல்லை.‘ 

பாட்டு மெல்லிய பூங்காற்றுப்போல ஒவ்வொரு முகத்திலும் வீசிற்று. “அப்பா! கல்லிலும் முள்ளிலும் போய்க் கடைசியில் ஒரு நந்தவனத்தில் புகுந்து ஒரு மேடைமீது உட்கார்ந்து நறுமணத்தை நுகருவதுபோல இருக்கிறது, இந்தப் பாட்டைக் கேட்கிறபொழுது” என்று ஒருவருக்கொருவர் வாய் பொத்திப் பேசிக்கொண்டார்கள். பிறகு வண்டுகள் ரீங்காரம் செய்வதுபோல அவர்கள் மனத்தில் ஒலித்தது. மணத்தையும் அழகையும் அது பரப்பிற்று. அருங்கோடையில் புனல் குடைந்த சுகத்தை விளைவித்தது. கேட்கக் கேட்கத் தெவிட்டாத ஆனந்தத்தைக் கொடுத்தது. புகுந்து புகுந்து பார்க்கப் பார்க்க ஊற்றுக்கு மேல் ஊற்றாகப் பலவித ரஸங்களைச் சுரக்கும்படி செய்தது; ஊழிகள் தேய்ந்தாலும் அழியாத காலை வனப்பை அது காட்டிற்று. மலைகளுக்கும் காடுகளுக்கும் நக்ஷத்திர மண்டலங்களுக்கும் அவர்களைப் பறந்து செல்லும்படி செய்தது. 

ஏதோ பூஞ்சோலையில் திரிவதுபோலவும், தீஞ்சுவைத் தண்ணீரைப் பருகுவது போலவும், நிலவில் விளையாடி அந்நிலவைப் பருகுவது போலவும் இருந்தது. ஆனால் அரசன் உள்ளத்திலும், ஸர்வவர்மர் உள்ளத்திலும் இந்த அமிருததாரை பாயவில்லை, அவர்கள் மனப்பாலையில் அது வற்றி வறண்டு போய்விட்டது.

‘என்ன பைத்தியக்கார பாஷை! இதற்குப் பாட்டு! இதை ஸம்ஸ்கிருதத்தில் வேறே சொல்லிக் காட்டுகிறது! வியாகரண நிபுணரான கௌண்டின்யரா வேணும் இதற்கு?’ என்று அரசன் எண்ணினான்.

அவன் இப்படி எண்ணி என்ன? அங்கே கூடியிருந்த ஜனங்களைக் கவர்ந்து சிறை செய்துவிட்டது அந்தத் தெய்வக் கவிதை. கடைசியில்,

“அந்த நிலவிலே அந்த நிலவிலே
மந்த மாருதம் மெல்ல வீசவே”

என்ற பாட்டைப் பாடினார் கௌண்டின்யர். பாடினவுடன் ஒவ்வோர் உள்ளத்திலும் ஒவ்வோர் உணர்ச்சியை அது கிளறிவிட்டது. தன் காதலியோடு வெண்ணிலவிலே கோதாவரியின் மீது படகில் சென்ற காட்சி ஒருவருக்கு வந்தது. கும்மி அடித்து விளையாடினதை நினைக்கிறார்கள் சிறுமிகள். குழந்தைக்கு அம்புலி காட்டினதைச் சிந்திக்கிறாள் ஒரு தாய். மகாராணி சித்திரலேகைக்கு வெகுநாளாய் மனத்தில் புதைந்து மூடிக்கிடந்த துக்கம் மேலே பிளந்துகொண்டு வந்தது. வெண்ணிலவின் ஒளியோடு, இறந்த தன் மகன் முகத்தில் மலர்ந்த சிரிப்புக் கலந்த துக்க சம்பவம் பளிச்சென்று மின்னல் அடித்தது. ‘ஹா‘ என்று தன் ஆசனத்தில் சாய்ந்தாள். பக்கத்தில் இருந்த தாதிகள் அவளைத் தாங்கினர்.

இதற்குள்ளே இச்செய்தி வேந்தன் காதில் விழுந்தது. ‘இந்தப் பைசாச பாஷை என் மனைவியின் புத்தியைக் கலக்கிவிட்டதே.’ ”யார் இங்கே பைசாச பாஷையைப் பேச விட்டது? குணாட்யர் சிஷ்யர்களை அடித்துத் துரத்துங்கள்” என்று சொல்லிவிட்டு அப்புறம் அகன்றான்.

ஸர்வவர்மர் எழுந்து, “அரசர் இங்கே இருந்து வேண்டிய சம்மானங்களைச் செய்ய முடியாமற் போயிற்று. அது உங்களுக்குத் தெரியும். சபையில் யமக ஸார்வபௌமருக்குக் கவிச்சக்கரவர்த்திப் பட்டம் சூட்டும்படி எனக்குச் சொல்லியிருக்கிறார்” என்று சொல்லித் தங்கக் கிரீடத்தை அவர் முடியில் சூட்டினார். அதன் ஒளி அவர் மார்பில் பாய்ந்தது. அதைப் பார்த்துச் சற்று மந்தகாசம் செய்து கொண்டார் யமக ஸார்வபௌமர். பண்டிதர் கோஷ்டியில் பலத்த கரகோஷம். ஆனால் கூடியிருக்கிற ஜனங்கள் முகத்தில் ஏமாற்றக் குறிகளும் சோகக்குறிகளும் தென்பட்டன. மேலும் அவர்களுக்கு மத்தியில் ஒரு பெருங்குழப்பம் ஏற்பட்டுவிட்டது. தெய்வ கானத்தைப் பிழிந்து தந்தவரைக் காண ஜனங்களின் கண்கள் துருதுருத்து அலைந்தன. இந்தக் குழப்பத்தில் மெல்ல நழுவிவிட்டார்கள் கௌண்டின்யரும் சாண்டில்யரும். தூரத்தில் சுப்பிரதிஷ்டா நகர கோபுரங்கள், மதில்கள் முதலியன மறைந்தன. தங்கள் நீண்ட தனிவழியிலே விந்திய மலையை நோக்கி இருவர் மெல்ல நடந்து வானில் நட்சத்திர கணங்கள் பின்தொடரப் போயினர்.

3

விந்திய மலையில் ஒரு சோக உருவம் திரிகிறது. சில சமயத்தில் ஆகாயத்தை அது பார்க்கிறது; மற்றும் சில வேளைகளில் பூமியை நோக்கிக் கண்ணீர் வடிக்கிறது. சுனைகளையும் அருவிகளையும் கடைசித் தரம் பார்த்து விடை கொள்ளுவது போல அசைகிறது. “நான் போகப் போகிறேன். என்னைப் போல எத்தனையோ பேர்கள் வந்து போவார்கள். மலையே, நீதான் இருக்கப் போகிறாய். ஆமாம். நீதான் நிரந்தரமாய் இருக்கப்போகிறாயா? நான் ஒரு கனவு;  நீதான் என்ன? ஒரு நீண்ட கனவு. கனவெல்லாம் அழியத்தானே போகின்றன?” என்ற முணுமுணுப்பு மலையிலே கேட்கிறது. அதோடு பெருமூச்சுக்கள் இடையிடையே கலக்கின்றன. 

வழக்கமாய்ப் போகிற இடங்களுக்குக் குணாட்யர் போவதை நிறுத்திவிட்டார். அவரோடு நெருங்கி ஒன்றாய்ப் பழகின மறவர் குறவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. மனம் முறிந்த நிலையில் தற்கொலை செய்துகொள்ளுவாரோ என்ற பயத்தில் அவர்களில் யாராவது ஒருவர் அவரை ஒரு நிழல் போலப் பின் தொடர்ந்தனர். சாண்டில்யருக்கும் கௌண்டின்யருக்கும் ஏற்பட்ட துக்கத்திற்கு எல்லை இல்லை. 

ஒரு நாள் குணாட்யர் அவர்கள் மத்தியில் வந்து குதித்தார். கண்களில் ஒரு பயங்கரமான தோற்றம்; முகத்தில் இந்த உலகத்து ஒளி வீசவில்லை.

“சககமனம் என்றால் உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியாமல் என்ன? பெண்கள் தாம் உடன் கட்டை ஏறவேண்டுமோ? அந்தத் தர்மம் இருவருக்கும் பொதுவானதுதானே? நான் காதலித்து மணந்து வெகு காலம் கூடிக் களித்த அருந்ததிபோல் உள்ளவளுக்கு அவமானம் வந்தது. அதனால் அவள் மாண்டாள். அவளுக்காகச் சேகரித்த என் ஏழு கிரந்தங்களையும் கொண்டு வாருங்கள்” என்றார். சிஷ்யர்கள் தயங்கினார்கள். “நான் சொன்னபடி கேட்கவேண்டும்” என்று உரத்த குரலில் பேசினார். தயங்கித் தயங்கிப் போய்க் கண்களில் அருவி பாய, அவர் பாதங்களில் அவருடைய கிரந்தங்களைச் சமர்ப்பித்தனர்.

”இன்றுதான் நீங்கள் எனக்கு உண்மையான சிஷ்யர்கள் ஆனீர்கள்” என்றார் அவர். மேல் விளைவை உன்னிச் சிஷ்யர்கள் மனம் உடைந்து, கைகளை மறித்து ஒன்றும் தேறாமல் தரையைத் தண்ணீரால் அளறுபடுத்திக் கொண்டு அசைவற்று நின்றனர்.

ஒரு நாள் விடியற்காலம்; வான் நுதலில் சுக்கிரன் சுடர்விட்டு எழுந்துவிட்டான். ஒரு பெரிய ஹோம குண்டம் வளர்க்கப்பட்டது. அதைச் சுற்றி மறவர்கள் வளையம் போட்டது போல நின்றனர். குணாட்யர் பக்கத்தில் அவருடைய சிஷ்யர்கள் கௌண்டின்யரும் சாண்டில்யரும் துக்கம் தேங்கிய முகங்களோடு உட்கார்ந்தார்கள். தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அநேக நாக்குகளை அக்கொழுந்து நீட்டிற்று. குணாட்யர் அருகில் அவருடைய கணக்கில்லாத சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாய் எடுத்தார். தம் இனிய குரலில் வாசித்தார். அவருடைய குரல் விந்திய மலை முழுவதும் பரவிற்று. அதைக் கேட்ட மரங்கள் செடி கொடிகள் எல்லாம் அசைவற்று நின்றன. துயிலெழுந்த மிருகங்கள் மேய்ந்த புல்லும். கடைவாய் வழி சோர நின்றன. எல்லாம் சித்திரத்தில் அலர்ந்தனபோலக் காணப்பட்டன.

கண்ணீர் சுவடியில் விழ அவர் வாசிப்பார். “என் கிரந்தத்தில் அனல் உமிழும் உணர்ச்சியெழுத்தாணி கொண்டு எழுதினது இந்த நிலைக்கா வரவேண்டும்?” என்று ஏங்குவார். சில சமயங்களில் காதற் சுவை நிரம்பிய ஏட்டை எடுப்பார், வாசிப்பார். அங்குள்ளவரின் உட்காதல் அவர்கள் மயிர்க்கால்தோறும் வழியும். கருண ரசம் வரும்பொழுது கண்கள் குளங்களாய்ப் போய்விடும். அந்த ஏட்டையும் தீயில் எறிவார். ஒரு கணத்தில் வியப்பு, மற்றொரு கணம் அச்சம்: இப்படி மாறி மாறி வருகிற ரசங்களைக் காட்டும் ஏடுகள் தீயில் விழும்.

ஒரு பொழுது சோகநாடகங்கள் முன்னால் எழும்; மற்றொரு பொழுது கோரம் பயங்கரம் முதலிய ரசம் ததும்புகின்ற சித்திரங்கள் முன் ஓடும். கோர ரசத்தில் திசைகள் கறுத்துவிடும்;  இருட்டையும் இன்னும் இருள வைக்கும். வீர ரசத்தில் மறவர்களின் ரத்தத்தில் ஒரு கொதிப்பு ஏற்படும். ஒவ்வோர் ஏட்டையும் அணைத்து அணைத்து முத்தமிட்டுக் கண்ணீராகிய ஹோம நெய்யில் தோய்த்துத் தோய்த்துப் போடுவார். மரங்களினி

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.