Jeyamohan's Blog, page 41
September 3, 2025
பூன், எமர்சன் நினைவு தத்துவ வகுப்புகள் – USA
நண்பர்களே,
ஆண்டுதோறும் அமெரிக்காவில் பூன் குன்றில் நிகழ்ந்துவரும் இலக்கிய முகாம், மற்றும் இந்திய தத்துவ முகாம் இந்த ஆண்டும் நிகழவிருக்கிறது.
சென்ற ஆண்டு நிகழ்ந்த இந்திய தத்துவ வகுப்பு முதல் நிலை மீண்டும் நிகழவிருக்கிறது. அதன்பின் தொடர்ந்து இரண்டாம் நிலை வகுப்பும் நிகழும். இரண்டிலும் கலந்துகொள்ளும் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்ற ஆண்டு முதல்நிலை வகுப்பில் கலந்துகொண்டவர்கள் இந்த ஆண்டு இரண்டாம்நிலை வகுப்பில் கலந்துகொள்ளலாம்.
தத்துவ வகுப்பு – நிலை 1 – அக்டோபர் 31 – நவம்பர் 01 2025 (அக்டோபர் 30 செக் இன் – நவம்பர் 2 செக் அவுட்)
தத்துவ வகுப்பு – நிலை 2 – நவம்பர் 02 – நவம்பர் 03 2025 (நவம்பர் 1 செக் இன் – நவம்பர் 4 செக் அவுட்)
இரண்டிலும் பங்கு பெறுபவர்கள் அக்டோபர் 30-ல் செக் இன் செய்து நவம்பர் 4-ல் செக் அவுட் செய்ய வேண்டும்.
வகுப்புகளுக்கு என செலுத்தப்படும் கட்டணத்தில் இருவருக்கு ஒரு அறை என்ற விகிதத்தில் தங்குமிடமும், உணவும், காலை மற்றும் மாலை தேநீரும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துச் செலவும் , மற்ற பயண ஏற்பாடுகளும் பயணர்களின் பொறுப்பு.
முகவரி :
Blowing Rock Conference Center
P.O. Box 2350
Blowing Rock, NC – 28605
Charlotte, NC (CLT) விமான நிலையத்திலிருந்து இரண்டு மணி நேரப் பயணம்.
தத்துவ வகுப்புகளில் இணைய விரும்பும் நண்பர்கள் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
contact@vishnupuramusa.org / vishnupuramusa@gmail.com
September 2, 2025
வளநிலம்
29-12-2007 ல் நாஞ்சில்நாடனுக்கு அறுபது வயது நிறைவடைந்தபோது நான், அருண்மொழி செலவில், எம்.வேதசகாயகுமார் உதவியுடன், நாகர்கோயிலில் ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். நாகர்கோயில் செட்டிகுளம் ஏபிஎன் பிளாஸா அரங்கில் அந்த விழா நடைபெற்றது. அந்த குளிர்சாதன அரங்கில் நிகழ்ந்த முதல் இலக்கிய விழா அது. கூட்டம் நிறைய வந்தமையால் அரங்கின் ஒரு சுவராக அமைந்த தட்டியை கழற்றி இரண்டு அரங்குகளை இணைக்கவேண்டியிருந்தது. நாஞ்சில் நாடன் ஈட்டியிருந்த அன்பு அத்தகையது. அவ்விழாவை ஒட்டி நான் எழுதிய நூல் தாடகை மலையோரத்தில் ஒருவர். இன்று எனக்கு அறுபத்திமூன்று வயது அமைகையில், ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு மறுபதிப்பாகிறது. இதுநாள் வரை மின்னூலாகக் கிடைத்துக்கொண்டிருந்தது.
அந்தக் காலம். நாஞ்சில்நாடன் கிடைத்த பேருந்தில் தொற்றிக்கொண்டு மாதம் இருமுறையாவது நாகர்கோயில் வந்துகொண்டிருந்தார். இங்கே அவருடைய சொந்தத்தில் திருமணம், காதுகுத்து என எந்த விழாவும் அவர் இல்லாமல் நடைபெறாது. .அவர் வருவதை எங்களுக்கு அறிவிப்பார். நான், வேதசகாயகுமார், குமரிமைந்தன் என ஒரு கும்பல் அழையா விருந்தாளிகளாக எல்லா விழாக்களுக்கும் செல்வோம். பலசமயம் முந்தையநாள் இரவே கல்யாணமண்டடபம் சென்று விடிய விடிய இருப்போம். இலக்கியச் சர்ச்சைகள், நையாண்டிகள், சிரிப்புகள். வேதசகாயகுமாரையும் குமரிமைந்தனையும் இன்று பெருமூச்சுடன் எண்ணிக்கொள்கிறேன்.
நாஞ்சில் அன்றுமுதல் இன்று வரை என்றும் இனியவர். காலந்தோறும் பழகினாலும் துளி கசப்பு எஞ்சாத ஆளுமை. சிரிப்பன்றி எதுவும் இல்லாத பெருந்தருணங்களை இளையவர்களுக்கு அளிப்பவர். ஒரு நவீன இலக்கியவாதியாகத் தொடங்கி, இன்று தன் முன்னோர்களைப் போலவே கம்பராமாயணத்தில் தோய்ந்து, கனிந்திருக்கிறார். அவருடைய கம்பராமாயண உரைகள் இன்று சர்வதேச அளவில் மாணவர்களைக் கொண்டுள்ளன.
நாஞ்சில்நாடனின் கதைகளிலும் அந்தக் கனிவு நிகழ்ந்து அது ஒருவகை மெய்ஞானமாக திரண்டுள்ளது. தமிழில் எழுதத் தொடங்கிய களத்தில் இருந்து அவ்வண்ணம் மேலும் முன்னகர்ந்து இன்னொரு உச்சத்தை எட்டிய எழுத்தாளர்கள் மிக அரிது. பூனைக்கண்ணன் கடத்திய அம்மன் போன்ற ஒரு மகத்தான கதையை அவர் இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்க முடியாது.
அவருடைய படிநிலைகளை கதைகளைக் கொண்டே மதிப்பிடலாம். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் கசப்பற்ற நையாண்டியும், சமூகவிமர்சனப் பார்வையும் கொண்ட நாஞ்சில்நாடனைக் காட்டுகிறது. யாம் உண்பேம் அடுத்த முன்னகர்வு. அதில் உலகுக்கே அமுதுடன் உளம்கனிந்த நாஞ்சில்நாடன் வெளிப்படுகிறார். பூனைக்கண்ணன் கடத்திய அம்மன் இந்த அத்தனை நாடகங்களையும் அப்பால் நின்று பார்க்கும் சித்தனின் அருகே அமர்ந்திருக்கும் நாஞ்சில்நாடனைக் காட்டுகிறது. மூன்று கட்டங்களிலும் நாஞ்சில்நாடனிடம் இருப்பது சிரிப்பு. அது கேலியில் இருந்து முதிர்ந்த அங்கதமாக உருமாறியிருக்கிறது.
இத்தருணத்தில் நாஞ்சில்நாடனை இளையோனாக அடிபணிந்து வணங்கி வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்கிறேன். இந்நூலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு நன்றி.
ஜெ தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் நாஞ்சில்நாடன் அறுபது பதிவுபா. திருச்செந்தாழை
தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். பா.திருச்செந்தாழையின் கவிதைகள் உணர்ச்சிகரக் கற்பனாவாதத் தன்மை கொண்டவை. ஆனால் கதைகளில் கூரிய யதார்த்தப்பார்வையுடன் மானுட உள்ளங்களின் நுண்ணிய அலைவுகளையும் விளையாட்டுக்களையும் எழுதிக்காட்டுகிறார்.
பா.திருச்செந்தாழை – தமிழ் விக்கி
மானசா பதிப்பகம், கடிதங்கள்
அன்பு ஜெ,
வணக்கம். நலம் விழைகிறேன்.
மானசா பதிப்பகம் கிருபாசைதன்யாவின் கனவு. சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதத் தொடங்கிய என்னை இவர்களில் பார்க்கிறேன்.
நம் புராணங்களின் படி ஈசன் மனதில் இருந்து பிறந்தவள் மானசா. இப்படி சொல்லும் போது எனக்குள் ஒரு சித்திரம் தோன்றும். ஆலகால விஷத்தை ஈசன் பருகும் போது நீலமாகிறார். அமுதத்திற்காக அனைவரும் காத்திருக்க மற்றவர்களுக்காக அவர் அமுதம் அளவே வீரியமான ஆலகாலத்தை பங்கிடாமல் நானே பருகுகிறேன் என்ற போது ஈசனின் மனதில் உருவான ஈரம் மானசை என்று நினைப்பேன்.
மனதில் தோன்றியவள் மானசை என்றால் மானசைக்கு இன்னொரு பெயர் கனவு என்றும் வைக்கலாம். கிருபாசைதன்யாவின் கனவுகள் விரிய வாழ்த்துகளும் அன்பும்.
அன்புடன்,
கமலதேவி
அன்புள்ள ஜெ,
மானசா பதிப்பக விழாவில் கலந்துகொண்டது பெரிய மகிழ்ச்சி.
நமது நண்பர்கள் குழுவிலேயே ஆங்கில புத்தகங்கள் வாசிக்க அதை உரையாட ஒரு சின்ன குழு வைத்து நாங்கள் சிலர் எப்போதும் பேசுக்கொண்டிருப்பதுண்டு. குறிப்பாக சித்தார்த். சிறில். ராம்குமார். ரவி என உடன் science fiction மற்றும் fantasy நாவல்கள் பற்றி தொடர்ந்து உரையாடுவது உண்டு. பின்னால் சினிமா மற்றும் தொடர்களாக வந்த ready player one, three body problem போன்ற நாவல்கள் எல்லாம் மிக முன்னரே வாசித்து விவாதித்திருந்தோம்.. இப்போதும் ஆங்கில புனைவு வாசிப்பும் உரையாடலும் ஒரு இணை வாசிப்பாக இருந்துகொண்டேயிருக்கிறது.
அதே சமயம் ஆங்கிலத்தில் நமது எழுத்துக்கள் மட்டுமே நிரப்பக் கூடிய இடம் பெரிய அளவில் இருக்கின்றது என நினைக்கிறேன்.
உதாரணத்துக்கு, சமீபத்தில் சும்மா ஒரு த்ரில்லர் வாசிக்கலாம் என chatgpt-யிடம் ஒரு ஆலோசனை கேட்டேன். அது எனக்கு சஜஸ்ட் செய்த நாவல். The silent patient.
அதை வாசித்த சின்ன குறிப்பாக கடந்த வாரம் எழுதியிருந்தேன்
பரபரப்பா ஏதாச்சும் வாச்க்கலாம் என நினைத்து தேடியபோது கிடைத்தது இது.
தொன்ம குறியீடு, சைகாலஜி, த்ரில்லர் என அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருந்தது இதைப் பற்றிய அறிமுகங்கள்.
நம்ம ஊர் தொன்ம கதையான சாவித்திரி மாதிரி தெரிந்தாலும், மகனின் இளைமையை வாங்கும் யயாதி கதைக்கு கொஞ்சம் அருகில் இருப்பது போல ஒரு கிரேக்க தொன்ம கேரக்டர் Alcestis.
உண்மையிலேயே மிக சுவாரஸ்யமான தொன்மம்.
தன் கணவனுக்காக உயிரைக்கொடுப்பது மட்டுமல்ல, sacrifice அதன்பின் நடக்கும் விஷயங்கள் மிக சுவாரய்மான கற்பனைக்கு இடமளிக்கிறது, அந்த தொன்மத்தில்.
ஒருவருக்காக உயிரைக்கொடுத்து, மரணத்துகுச் சென்றவர் மறுபடி இந்த உலகத்துக்கு வந்தால் அது வருபவருக்கு மகிழ்ச்சியளிக்குமா, அல்லது தன்னை மரணத்துக்கு அனுப்பியவரைப் பார்க்கும்போது என்ன பேசமுடியும் என்பது ஒரு சிந்திக்கபடவேண்டிய தருணம்.
இந்த நாவலும் அதில் இருந்து மிக சுவாயஸ்யமாக உருவாக்கி இருக்க எல்லா வாய்ப்புகளுடன் தொடங்குகிறது.ஆனால், மிக சாதாரணமாக முடிகிறது.
கடைசியில் வரும் அந்த ட்விஸ்டுக்கு ஏன் அய்யா இவ்வளவு கேரக்டர்கள்.
இந்த அளவு மிக சாதாரணமான நாவல் இந்த அளவு விற்பனையாகியிருக்கிறது, பிரபலமாகியிருக்கிறது என்பது மிக ஆச்சர்யளிக்கிறது.’
இந்த கரு நம்ம எழுத்தாளர்கள் எழுதியிருந்தால் எவ்வளவு ஆழத்துடன் எழுத வாய்ப்புள்ள ஒன்று, ஆனால் மிக சாதாரண “டிவிஸ்ட்” நம்பி எழுதப்பட்ட இந்த நாவல் இவ்வளவு பிரபலாகியிருக்கிறது என்றால், இந்த விஷயங்களில் தொடர் வாசிப்பு இருக்கும் நமது எழுத்தாளர்கள் இதுபொன்ற களங்களில் ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது தான் இந்த பதிப்பகம் பற்றி அழைப்பு வந்தது மிக மகிழ்ச்சியை அளித்தது.
இங்கிருந்து ஆங்கில நாவல்கள் வருவது இன்றைய தலைமுறைக்கு மிக முக்கியமானது, அந்த பொறுப்பை முன்னெடுத்தற்கு சைதன்யாவுக்கும், க்ருபாவுக்கும் எனது நன்றிகள்.
அன்புடன்
சுரேஷ் பாபு
விழா, சரண்யா ராஜேந்திரன்
முதல் முறையாக விருது விழாவில் பங்கெடுத்துள்ளேன் ஆசானே. ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என நினைப்பேன் ஆனால் ஆதித்யா சிறு குழந்தை என தவிர்ப்பேன். இந்த முறை ஈரோடு, பெரியசாமி தூரன் விருது விழா. என் அவதானிப்புகள் சில.
தங்குமிடம், உணவு…
விழாவுக்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பே தங்குமிடம் உறுதியானதன் மின்னஞ்சல் வந்தது. பின்னும் ஆனந்தகுமார் சார், குழந்தையை அழைத்து வருவீர்கள் எனில் என்ன வயது என்று கேட்டுக் கொண்டார். பெண்களுக்கு மட்டும் தனியாக ஒரு மண்டபம் என்றும் அதன் பொறுப்பாளர் விஜயபாரதி, மதன் தனுஷ்கோடி என்றும் சொன்னார். நான் உண்மையில் ஒரு பெரிய மண்டபத்தின் ஹாலில் ஜமுக்காளம் விரித்து அத்தனை பேரும் படுத்துக் கொள்ள வேண்டும் என்றே நினைத்தேன். ஏனெனில் எங்கள் ஊரில் மணமகன், மணமகள் அறை தவிர வேறு அறைகள் இருந்தால் அதிசயம் தான். அப்படி இருந்தாலும் மொட்டை மாடியில் தகர கொட்டகை போல தான் இருக்கும். போர்வை எடுத்து வரவில்லையே என வெள்ளி அன்று என்னை நானே திட்டிக் கொண்டேன். ஆனால் இரு பெண்களுக்கு ஒரு பெரிய கட்டில், ஏசி, டிவி என சகல வசதிகளும் கொண்ட பெரிய அறை. மண்டபம் முழுக்க பல அறைகள். வெள்ளி இரவு நான் அந்த ஆச்சர்யத்திலேயே இருந்தேன். ஒவ்வொரு செயலையும் மிகச் சரியாக, சிறப்பாக திட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றிகள் நிச்சயம்.
வெள்ளி மாலை நான் வரும் போது புரோட்டா போட்டுக் கொண்டிருந்தார்கள் சமையல் ஆட்கள். மணம் மூக்கைத் துளைத்தது. இரவு அருமையான விருந்து என்றே சொல்ல வேண்டும்.
அடுத்து வந்த அத்தனை நேரத்து உணவுகளும் அப்படித்தான். ஓடி ஓடி ஆதித்யாவும் சாப்பிட்டான். அனைவரும் விரும்பிய உணவு வகைகள்.
குழுவில்…
ஒரு வாரம் முன்னரே WhatsApp குழுவில் இணைந்து கொண்டோம். கிட்டதட்ட 150 பேர். விழாவின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் tamilwiki பக்கம், அவர்களின் நேர்காணல், அவர்கள் எழுதிய கட்டுரைகள் என நண்பர்கள் அனுப்பிக் கொண்டே இருந்தனர். அத்தனையையும் படித்த பின்பு அவர்களை சந்திப்பதே நியாயம். கேள்விகள் இருப்பவர்கள் தனியாக தொடர்பு கொள்ள சொல்லி இருந்தனர். நண்பர்கள் அனுப்பிய ஒவ்வொரு கட்டுரையும், தரவும் மிகுந்த ஆழம் கொண்டது. வலங்கை, இடங்கை கட்டுரையை நவீன் தமிழாக்கம் செய்து அனுப்பினார்.
மொத்த தொகுப்பும் மண்டைக்குள் சேர்ந்து விட்ட பிறகே விழாவுக்கு கிளம்ப முடியும்.
விழாவில்…
வெள்ளி மாலை முதலே அரங்குகள் ஆரம்பம். உண்மையிலேயே அத்தனை செறிவான கேள்விகளை கேட்கும் அறிவார்ந்த கூட்டத்தை வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அங்கே தான் பார்க்கிறார்கள் என்றே சொன்னார்கள். படித்து தெளிந்த பின் எழும் கேள்விகளும், படிக்கும் கூட்டமும் அப்படித்தானே இருக்கும்.
ஆதித்யாவுக்கு வரைய நோட்புக், பென்சில், அழிப்பான், கலர் பென்சில்கள் என வாங்கி வைத்திருந்ததால் அவன் அதைக் கொண்டு வரைந்து கொண்டே இருக்க, இங்கே நான் உரைகளை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு அரங்கும் சரியான நேரத்தில் முடிக்க வைக்க நண்பர்கள் இருந்தார்கள். சிறிய இடைவேளை பின் அடுத்த அரங்கு என்பதால் ஆதித்யாவையும் கொஞ்சம் கவனிக்க முடிந்தது. ஆனால் இடைவேளையில் நான் முழுக்கவே அங்கங்கே பேசிக் கொண்டிருந்த நண்பர்களை சுற்றி சுற்றி வந்தேனென்றே சொல்ல வேண்டும். அதுவும் போதாமல் அத்தனை புத்தகங்கள் வேறு சுற்றிலும். எதை வாங்க, எதை விட.
சனி காலை பறவைகள் பார்க்க வெள்ளோடு பறவைகள் சரணாலயம் சென்று விட்டு விரைவாக அரங்குக்கு வந்தோம். மிக நல்ல உணவு, நல்ல இடத்தில் உறக்கம்(இலக்கியம் பேச ஆள் இருந்தால் எப்படி வரும் உறக்கம்), அறிவுக்கு அத்தனை அரங்குகள் என எந்த குறையும் இல்லாத நாட்கள் அல்லவா.. அத்தனை குழந்தைகள் அங்கே.. மானசா தொடங்கி வரிசையாக மியூசிக்கல் சேர் விளையாடும் அளவு அவ்வளவு பிள்ளைகள். அவர்கள் உலகில் அவர்கள்… ஆனால் நாதஸ்வரம் இசைத்த போது அசையாத அவர்களைப் பார்த்தேன். பாடல் முடிவில் மானசாவின் மழலை அத்தனை இனிமை.
நண்பர்கள்…
கொற்றவை படிக்கும் குழுவில் இருந்த நண்பர்கள் ஈஸ்வரி, பிரீத்தி அவர்களின் குடும்பம், என் பிரியமான விஜயபாரதி சாரின் குடும்பம், மதன் குடும்பம், தம்பி சபரீஷ், சக்திவேல் அவன் அப்பா(சக்திவேலுக்கு ஊட்டும் போது அப்பாவிடம் எனக்கும் ஊட்ட சொல்லி சாப்பிட்டேன்), தம்பி சிவகுரு நாதன் குடும்பம், தம்பி மோகன் தனுஷுக், முனைவர் பத்மநாபன், கப்பல்காரன் ஷாகுல் அண்ணா மற்றும் அவரின் நண்பர்கள் என அத்தனை பேர்… பெயர் மட்டுமே என நான் கண்டிருந்த அனைவரும் உங்கள் தளத்தில் இருந்து எழுந்து வந்தாகவே தோன்றியது.
அத்தனைக்கும் மேல் கவிஞர் தேவதேவன்..
மீண்டும் மீண்டும் இலக்கியச் சுற்றம் தரும் நிறைவை, மகிழ்வை, நிம்மதியை சொல்லில் சொல்லி விட முடியுமா என்ன.. சனி இரவு இலக்கியம் என்னை தூங்க விட்ட நேரம் விடி வெள்ளி வந்து விட்டது.
ஞாயிறு காலை நீங்கள் நடத்தும் வகுப்பில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என குழந்தைகள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு ஓடியே வந்து விட்டேன். நல்லூழ் அல்லவா…
வகுப்பு முடிந்து மதிய உணவும் தந்து தான் அனுப்பினார்கள் நண்பர்கள்.
இதற்கு மேலும் என்ன வேண்டும் உலகில்… இனி வேறு எந்தக் காரணமும் சொல்லி எந்த விழா நிகழ்வையும் தவற விடக் கூடாது என்ற உறுதியோடு…
பிரியமுடன்
சரண்யா
திண்டுக்கல்
சிறப்பு விருந்தினர்கள் அரங்குகள், அவர்களின் உரை, நாதஸ்வர கலை உலகம், உங்கள் உரை எல்லாம் தனியாக ஒரு கடிதம் எழுத வேண்டிய அளவுக்கு செறிவானது.
தியானம் வழியாக மீட்பு, கடிதம்
என் விட்டு பின் புரம் இருக்கும் இடத்தில் மரங்கள் உடன் எனக்கு கிடைக்கும் நேரத்தில் என்னுடன் நான் இருக்கிறேன்.இந்த செயல் எனக்கு புது அனுபவத்தை தருகிறது.
தியானம் வழியாக மீட்பு, கடிதம்I found you are presenting deep philosophical and historical insights using this context. It is interesting to see how your mind was kindled by the visuals and how you were connecting the places with your thoughts.
Place and mind
September 1, 2025
பொறுப்பின்மை, மேம்போக்கு- இன்றைய தலைமுறையினர்
ஒவ்வொரு தலைமுறைக்கும் முந்தைய தலைமுறையை விட அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதே சமயம் முந்தைய தலைமுறையில் இல்லாத ஆபத்துகளும் அமைகின்றன. இன்றைய தலைமுறைக்கு இருக்கும் மிகப்பெரிய அபாயம் என்பது அவர்களுக்கு செய்திகள், அறிவு எதுவுமே இயல்பாக கிடைப்பதில்லை என்பதுதான். அவை இன்று வணிகமாக ஆகிவிட்டன. ஆகவே எதை விற்க விரும்புகிறார்களோ அதைத்தான் அளிக்கிறார்கள். அதை மட்டுமே அறிவு என்றும் செய்தி என்றும் நம்பி தங்கள் நேரத்தையும் கவனத்தையும் இழக்கிறார்கள் இளையதலைமுறையினர். இன்றைய இளைய தலைமுறை எப்படி இருக்கிறது?
கலாப்ரியாவின் கைநிறைய மலர்கள்.2
(3)
கலாப்ரியாவின் கவிதைகள் தொடக்க காலகட்டத்தில் தமிழ்க்கவிதை அதுவரை அடைந்திருந்த, தனக்குரிய இலக்கணமாகவே கொண்டிருந்த, இரண்டு அம்சங்களை மீறி வெளிப்பாடுகொண்டிருந்தன. ஒன்று, கச்சிதமான குறைவான வார்த்தைகள் என்பது தமிழ்க் கவிதையின் இயல்பாகவே ஆகியிருந்தது. சுந்தர ராமசாமி அதை வெவ்வேறு கட்டுரைகளில் வலியுறுத்துவதைப் பார்க்கலாம். நான்கு வரியிலிருந்து பதினாறு வரிகள் வரைக்குமான கவிதைகளே தமிழில் அதிகமும் எழுதப்பட்டன. அக்கவிதைகள் மிகச்செறிவான வார்த்தைகளில் மிகச்சுருக்கமான வெளிப்பாடு கொண்டிருந்தன. ஒருவரிக்கு நான்கைந்து வார்த்தைகள் மிகக்கவனமாக மடித்துப் போடப்பட்டு, இசைப்பாடலுக்குரிய வடிவம் கொண்டிருந்தன அக்கவிதைகள். அது எஸ்ரா பவுண்ட் நவீனக் கவிதைக்கு அளித்த இலக்கணம். க.நா.சு.வால் தமிழில் முன்வைக்கப்பட்டது.
ஒரு கவிதை எழுதப்பட்ட பிறகு அதிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் சுண்டிப்பார்த்து தேவையற்ற எல்லா சொற்களையும் வெளியே எடுத்துவிடவேண்டும் என்று நவீனக் கவிதைகளுக்கு சொல்லப்பட்டது. மூன்று தலைமுறை நவீனக் கவிஞர்கள் திரும்பத் திரும்ப அதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கவிதை மேல் உள்ள முதன்மை விமர்சனமே ‘சில வார்த்தைகளைக் குறைத்திருக்கலாம்’ என்பதாகவே எனக்குத் தெரிந்து தொண்ணூறுகள் வரைக்கும் இருந்தது. ‘வார்த்தை விரயம்’ என்பது ஒரு கவிஞன் மேல் விமர்சகன் வைக்கக்கூடிய முதன்மை குற்றச்சாட்டாகத் திகழ்ந்தது. ’சொற்சிக்கனம்’ என்பது அழகியல் சிறப்பாகவும்.
அச்சூழலில் கலாப்ரியா ஒருவகையான கட்டற்ற, தன்னியல்பான வெளிப்பாடு கொண்ட கவிதைகளை எழுதினார். அவருடைய கவிதைகள் சித்தரிப்புகளின் தொடர்ச்சியாகக் கண்ணால் கண்டறியப்படும் காட்சிகளின் சங்கிலியாக பல பக்கங்களுக்கு நீளும் தன்மை கொண்டிருந்தன. அக்கவிதைகளை படித்த அன்றைய வாசகர்கள் அக்கவிதை எப்போது முடியும் என்று பக்கங்களை புரட்டிப் பார்த்து திகைத்திருப்பார்கள். ஒவ்வொரு காட்சிச் சித்தரிப்புக்கும் படிம ரீதியாக என்ன அர்த்தம் என்று தேடிப்பார்த்து எண்ணி குழம்பியும் இருப்பார்கள்.
அக்கவிதைகள் எந்த உள்ளர்த்தமும் இன்றி வெறும் காட்சியாகவே நின்றிருந்தன, காட்சி என்ற அளவிலேயே அவை உணர்த்தும் உணர்வு நிலை ஒன்று உண்டு. அந்த உணர்வு நிலையை கவிதை ’ஒளித்து’வைக்கவில்லை. கவிதையிலேயே அது வெளிப்படவும் செய்தது. கவிதை என்பது பூடகமான ஒரு பேச்சு என்ற வரையறையை வைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் கலாப்ரியாவின் அந்த தொடக்க காலக் கவிதைகளால் பெரும் ஏமாற்றத்தை அடைந்திருப்பார்.
மலையாளத்தில் ஒரு கவிஞனைப்பற்றி பேசும்போது கல்பற்றா நாராயணன் எழுதிய ஒரு வரி என் நினைவுக்கு வருகிறது. ’பொன்வண்டுக்கு இணையான அத்தனை வண்ணமயமான வெளிப்பக்கம் கொண்டவர்.’ இந்த வரியை அவ்வப்போது நான் நினைப்பதுண்டு. கல்பற்றா சுட்டிக்காட்டிய மேதில் ராதாகிருஷ்ணன் விதவிதமான மொழி வெளிப்பாடுகளும், நகாசுகளும், அலங்காரங்களும் கொண்ட ஒரு நடையில் எழுதியவர். ஆர்ப்பாட்டம் என்று பிறர் சொன்ன ஓர் அம்சமே விமர்சகராகிய கல்பற்றா நாராயணனுக்கு பொன்வண்டுக்குரிய மேல்தோற்ற வெளிப்பாடு என்று தோன்றியது. அந்த அர்த்தம் அளிக்கப்பட்டதுமே என் மனதில் மேதி ராதாகிருஷ்ணனின் அந்த மொழி வேறொரு தளத்தை நோக்கி நகர்ந்துவிட்டது.
ஒரு வண்ணத்துப்பூச்சி ஏன் இவ்வளவு வண்ணங்களோடு இருக்கவேண்டும்? ஒரு பொன்வண்டு ஏன் இத்தனை மின்னவேண்டும்?. உலகத்தில் எல்லாமே பூடகமாக இருந்து கொண்டிருக்கலாமே… ஆனால் பிரபஞ்சமும் இயற்கையும் அவ்வாறு அல்ல. அவை அனைத்தும் ’ஸ்பூரிதம்’ என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் பொங்கி வெளிப்படும் தன்வெளிப்பாடு கொண்டவையாக இருக்கின்றன. வெளிப்படும் தன்மை அவற்றின் இயல்புகளிலேயே இருக்கிறது. இயற்கையை நேர் நின்று தன் உள்ளத்தாலும் மொழியாலும் சந்திக்க முயலும் ஒரு கவிஞன் இயற்கையிலிருக்கும் அந்த அப்பட்டமான தன்வெளிப்பாட்டை, பொங்கிப்பெருகும் அழகு வெள்ளத்தை அப்படியே தான் தன் மொழியில் உருவாக்க முயல்வதுதான் இயல்பாக இருக்க முடியும். படிமக்கவிஞன்தான் ஒவ்வொன்றையும் பூடகமாக ஆக்கவேண்டும். ஏனெனில் படிமம் என்பது முழுக்க முழுக்க வாசகனில் நிகழவேண்டியது. குறைந்த சொற்களில் ஒரு காட்சியை அளித்து, அக்காட்சி எதைக் குறிக்கிறது என்பதை முழுமையாகவே வாசகனில் நிகழவிட்டால் மட்டும்தான் அது படிமமாக பெருக முடியும். அந்த பூடகத்தன்மை காட்சி வடிவக்கவிதைக்கு தேவையில்லை தான்.
ஆனால் கலாப்ரியாவின் கவிதை வடிவம் என்பது அதன் நீளம் சொல்லமைப்பு ஆகியவற்றில் அன்று பிரபலமாக இருந்த வானம்பாடிக்கவிஞர்களின் அமைப்பு கொண்டது என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் வானம்பாடிக்கவிஞர்களிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் உரத்த தன்மை என்பது அவர்களின் சிந்தனையின் வெளிப்படைத்தன்மையே ஒழிய கலையின் வெளிப்படைத்தன்மை அல்ல. அக்கவிதைகளில் இருக்கும் சொல்விரயமோ, செயற்கையான உரத்த குரலோ, வாசகனிடம் ஒன்றை வலியுறுத்தும் ஆக்ரோஷமோ கலாப்ரியா கவிதைகளில் இருந்ததில்லை. கலாப்ரியாவின் கவிதைகளின் நீளம் என்பது அவருடைய பார்வையின் பயணம், அதன் ஒழுக்கு உருவாக்கியது. ஆகவே தன்னியல்பானது. பராக்குபார்க்கும் சிறுவனின் கண்ணால் பதிவுசெய்யப்பட்டது.
கலாப்ரியாவின் கவிதைகள் அந்த வகையில் மிகுந்த மொழி நுட்பத்துடனும், சொல்லடக்கத்துடனும் தான் வெளிப்பட்டிருக்கின்றன. எந்தக்காட்சியையுமே விவரித்து கலாப்ரியா விரிவாக்கவில்லை. எந்த உணர்ச்சியையுமே சொல்லவேண்டியவற்றுக்கு அப்பால் சொல்லிவிடவும் இல்லை. கூறியதுகூறல் அறவே இல்லை. பெரும்பாலான கவிதைகளில் ஒரு அதிநுட்பமான காமிரா மெதுவான ஒரு pan நகர்வை அடைவதைத்தான் காண முடிகிறது. அக்காமிராவுக்குள் வரும் காட்சிகள் அனைத்தும் துல்லியத்தன்மையுடன் அழகுடன் தங்கள் இருப்பைக் காட்டி, தங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு ஓர் உலகை உருவாக்கி நிறுத்துகின்றன.
அழகிய பழைய மதுச் சீசாவில்
அன்றைய தாமரைப் பூவை சொருகி
வழக்கம் போல் பத்தி கொளுத்தி
சிகைதிருத்தகம் மணக்க வைத்து
வாசலில் அமர்கிறான்
புகையும் பீடி தந்திப் பேப்பர் சகிதமாய்
படித்துச் சொல்லவும் முடி திருத்தவும்
வாடிக்கை எதிர்பார்த்து.
நான் வெறுமே கடப்பதை
ஏமாற்றப்புன்னகையுடன்
ஜீரணிக்கிறான்.
தந்தையர் விழிக்கும் முன்
சேரிக்குள் காலி பிராந்திக் குப்பிகள்
முந்திச் சேகரித்த பிள்ளைகள்
பழைய இரும்புக் கடை திறக்க
காத்திருக்கின்றன
உரசுகிறாற் போல் வந்து
பாதையோரத்தின்
புழு கொத்தி
பட்டென்று பறக்கிறது
பறவையொன்று.
என எண்ணி அடுக்கப்பட்ட சுருக்கமான சொற்களில் காட்சிகளை மட்டும் சொல்லி, பார்ப்பவனின் உளநிலை வழியாக அவற்றை தொடுத்துச் சரமாக ஆக்கிக்கொண்டே சென்று ஒரு முழுமைச்சித்திரத்தை அளித்து நிறுத்தும் தன்மை கொண்டவை கலாப்ரியா கவிதைகள். தமிழில் அவர் அறிமுகம் செய்தது இந்த காட்சித்தொடுப்பின் அழகியலை. அதன் வேர்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. மிக விரிவாக அதை நான் கலாப்ரியா பற்றி எழுதிய இன்னொரு கட்டுரையில் பேசியிருக்கிறேன்.
இக்காட்சிகள் படிமங்கள் அல்ல என்பது கலாப்ரியாவின் கவிதைகள் உருவான காலகட்டத்தில் இருந்த கவிதை வாசகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தன. வெறுமே பராக்குபார்க்கும் கவிதைகள், வெறும் சித்திரங்கள் என்று அவை அன்று சொல்லப்பட்டன. ஆனால் எனக்கு அவை அன்று பெரும்பரவசத்தை அளிப்பவையாக இருந்தன, இன்றும் அப்படியே நீடிக்கின்றன. விளையாடச்சென்ற குழந்தை கைநிறைய மலர்களுடன் திரும்பி வருவதுபோலிருக்கின்றன இக்கவிதைகள். குழந்தையின் தெரிவுகள் குழந்தைத்தன்மையாலானவை. நாம் சாதாரணமானவை என நினைக்கும் மலர்கள் அதன் கையில் இருக்கலாம். சிறுவயதில் கைநிறைய பூக்கள் இல்லாமல் சைதன்யா திரும்பி வருவதில்லை. அவள் கையில் செக்கச்சிவந்த நிறம்கொண்ட வாதாமரத்தின் உலர்ந்து உதிர்ந்த இலைகளும் இருக்கும். அவளுக்கு அவையும் மலர்வண்ணம்தான்.
( 4 )
இக்காட்சிச் சித்திரங்களினூடாக கலாப்ரியா உருவாக்கும் கலை அனுபவம் என்ன? அதை விவரிப்பதற்கு மீண்டும் ஒரு படிமத்தையே நான் பயன்படுத்துவேன். கவிதையை ஒருவகையில் கவிதையைக் கொண்டே மதிப்பிட முடியும் என்று ஒரு கட்டுரையில் கல்பற்றா நாராயணன் சொல்கிறார். கவிதையாக இல்லாத ஒரு கவிதை விமர்சனம் என்பது கவிதையை தொட்டறியாத ஒன்று.
ஒரு மரம் நம் கண்முன் எழுந்து நின்றிருக்கிறது. அதன்வேர்கள் மண்ணுக்குள் முடிந்தவரை நான்கு திசைகளுக்கும் பரவி, ஆழங்களுக்கு இறங்,கி சாத்தியமான அனைத்து இடங்களையும் பற்றிக்கொண்டு, அம்மரத்தை நிலைநிறுத்துகின்றன. மரத்திற்கு அடியில் இருந்துகொண்டிருப்பது நிலைகொள்வதற்காக அந்த வேர்கள் அடையும் பெரும் பதற்றம். ஆணிவேர், கிளைவேர், சல்லிவேர் என பல்லாயிரம் கைகளாலும் விரல்களாலும் மண்ணை அள்ளிப் பற்றிக் கொண்டுதான் ஒரு மரம் மண்ணுக்குமேல் தன்னை காட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு கல்லைப் புரட்டிப் பார்க்கையில் அதற்கு அடியில் வேர்களின் நுணுக்கமான பின்னலைப் பார்க்கிறோம். எங்கோ நின்றிருக்கும் ஒரு மரம் அத்தனை தொலைவுக்கு வந்து அந்த மண்ணையும் அள்ளிக்கொண்டிருக்க வேண்டும் என்ற தேவை என்ன என்ற வியப்பு உருவாகிறது. அந்த வேர்களினூடாக நீரையும் உயிர்ச்சத்தையும் அது எடுத்துக்கொண்டாக வேண்டும். மண்ணுக்குமேல் வானை நோக்கி தன் கிளைகளையும் இலைகளையும் விரித்து நின்றிருக்கும் மரம் ஒரு மௌனமான பிரார்த்தனை போல் தோன்றுகிறது. மண்ணுக்கு மேல் அது ஒரு பெரும் வேண்டுதல், மண்ணுக்கு அடியில் ஒரு பெரும் தியானம்.
கலாப்ரியாவின் தொடக்ககாலக் கவிதைகளைப் பார்க்கையில் ’பற்றிக்கொள்வதற்கான’ பெரும் தவிப்பு அவற்றில் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றியதுண்டு. ஒரு அகவயப்பட்ட இளைஞனின் பார்வை அக்கவிதைகளில் தொடர்ந்து இருப்பதை பார்க்கலாம். அவன் ரு கற்பனையான முன்னிலை ஆளுமையுடன் பேசிக்கொண்டிருக்கிறான் (சசி) தோல்வியுற்றவன், வாழ்க்கை பற்றிய பதற்றம் கொண்டவன், அவநம்பிக்கையும் தொடர் சஞ்சலமுமாக அவதிப்படுபவன். தன்னுடைய காமத்தை, தன் அற்பத்தனத்தை தானே அறிந்தவன், தன்னைச் சூழ்ந்துள்ள மானுடச்சிறுமையை ஒவ்வொரு கணமும் கண்டுகொண்டிருப்பவன்.
கலாப்ரியாவின் கவிதைகளில் சகமனிதர்கள் அந்த ‘கவிதைசொல்லி’ இளைஞனிடமிருந்து தொலைவில் இருக்கிறார்கள். அவர்களுடனான உறவு எதிர்மறைத்தன்மை கொண்டதாகவோ பலவீனமானதாகவோ இருக்கிறது. அந்தத் தனிமை கொண்ட இளைஞன் தனது அத்தனை வேர்களாலும் இந்தப்பிரபஞ்சத்தை அள்ளி பற்றிக்கொள்ளத்தவிக்கும் காட்சியை வெளிப்படுத்துபவை அவருடைய தொடக்ககாலக் கவிதைகள். அந்த வேர் என்பது பொருள்வயமாகப் பெருகியிருக்கும் பிரபஞ்சத்தை நோக்கி பரவி கண்ணில் தெரியும் ஒவ்வொரு பொருளையும் அள்ளுவதற்கான முயற்சிதான். ‘கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம் வசப்பட லாகாதோ?’ என்னும் தவிப்புதான்
அந்த ‘அள்ளிப்பற்றி நிலைகொள்ளத் தவிக்கும் பிரக்ஞை’யின் முதன்மை ஊடகமாக இருப்பது கண்தான். ஆகவே கலாப்ரியாவின் கவிதைகளில் ஒவ்வொரு காட்சியையும் கண் சென்று தொட்டு அறிகிறது. வெவ்வேறு காட்சிகளை தொட்டுத் தொட்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து இணைத்து தனக்கென ஒரு காட்சி வெளியை உருவாக்குகிறது. அந்தக் காட்சிவெளி என்பது அக்கவிதையில் வெளிப்படும் அந்த இளைஞன் இப்பிரபஞ்சத்தில் இருந்து தனக்கென அள்ளி எடுத்துக்கொண்ட ஒரு நிலம்தான். (தொடக்ககால கலாப்ரியாக் கவிதை ஒன்று எனது மேட்டுநிலம். தாகூர் கவிதை ஒன்றின் பாதிப்பில் எழுதிய அக்கவிதை அவர் எழுதிய முதற்சில கவிதைகளில் ஒன்று)
அந்த இளைஞனை அப்படியே பிடுங்கி எடுத்தால் அவன் வேர்கள் அள்ளிக்கொண்டிருக்கும் அந்த மண்ணுடன் தான் அவனை எடுக்க முடியும். அவ்வாறு ஒவ்வொரு காட்சியையுமே பெரும்பற்றுடன் அள்ளிக்கொள்ளும் அந்தப் பிரக்ஞை மேலோட்டமாக காட்சிகளை ஒன்றுடன் ஒன்று அடுக்கி செல்வதாக கவிதைகள் காட்டுகின்றன. ஆனால் அந்த அடுக்கிச் செல்வது தற்செயல் அல்ல. அதில் ஒரு பிரக்ஞை செயல்படுகிறது. தெரிவு உள்ளது. அந்தப்பிரக்ஞையின் தெரிவு எதனால் என்று யோசிக்கையில் அந்தக்காட்சிச் சித்திரங்கள் அனைத்தும் பொருள் கொள்கின்றன ஒரு காட்சிச் சித்திரத்துக்கு அப்பால் இன்னொன்று ஏன் வருகிறது, ஒன்றை இன்னொன்றுடன் எந்த அம்சம் இணைக்கிறது என்பது கலாப்ரியாவின் கவிதைகளை படிப்பதற்கான மிகச்சிறந்த வழியாகும் . ’கவிஞனின் இருப்பால் அர்த்தப்படுத்தப்பட்ட புறக்காட்சிச் சித்திரங்களின் தொகுப்பு’ என்று கலாப்ரியாவின் கவிதைகளை சொல்லலாம்.
அந்த அர்த்தம் அக்கவிஞனின் ஆளுமையாக ,அக்கண்ணிற்கு பின்னால் இருக்கும் ஒரு உள்ளமாக அனைத்துக் கவிதைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒன்று. அவருடைய நீள்கவிதையாகிய எட்டயபுரத்தில் இந்த தன்னுணர்வு ஓர் அரசியல் பிரக்ஞையாக சீற்றத்துடன் தன்னை முழுமையாக வெளிக்காட்டுகிறது. தமிழில் எழுதப்பட்ட வலுவான நீள்கவிதைகளில் ஒன்றாக எட்டயபுரம் நீடிப்பது அதிலிருக்கும் அந்த கூர்மையான அரசியல் பிரக்ஞை காரணமாகவே. பிற கவிதைகளில் மெல்லிய கசப்பாக, ஏளனமாக, விலகலாக அதே பிரக்ஞை நிலைகொள்கிறது. காட்சிகளை அந்த பிரக்ஞை படிமங்களாக ஆக்கவில்லை, ஆனால் அவற்றை ஒன்றெனத் தொடுத்து கவிதையாக்குகிறது, அக்கவிதையின் உணர்வுநிலையை கட்டமைக்கிறது.
ஒரு பொருளை கூர்மையாக்குவதென்றால் என்ன? பருப்பொருள் இருப்பது பொருள்வெளியில். அதை தீட்டித்தீட்டி இன்னொரு பெருவெளியான சூனியம் வரைக்கும் கொண்டு செல்வதற்குப் பெயர்தான் கூர்மைப்படுத்துவதென்பது. அதிகூர்முனைக்கு அப்பால் ஒரு துளி காலத்திற்கும் இடத்திற்கும் அப்பால் வெட்ட வெளி உள்ளது.இக்கவிதைகள் அனைத்தும் பொருள்வெளியை கூர்தீட்டி அந்த வெறும்வெளி வரைக்கும் கொண்டு சென்று நிறுத்துகின்றன. ஒரு கணத்துக்கும் முன்னால் வரைக்கும்தான். அதுதான் மானுட சாத்தியம். ஆனால் மானுட உள்ளம் இன்னும் ஒருகணம் முன்நகர முடியும். வாசகனிடம் இருக்கும் அந்த வாய்ப்பே கலாப்ரியாவின் கவிதைகளை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்குகிறது.
(நிறைவு)
கண்ணன் என் கவி
கு.ப.ராஜகோபாலன் -சிட்டி இணைந்து எழுதிய நூல். பாரதி மகாகவி அல்ல என்று பி.ஶ்ரீ.ஆச்சார்ரா, கல்கி போன்றவர்கள் கூறியதற்கு மறுப்பாக பாரதியை மகாகவி என்று நிறுவும் நோக்கத்துடன் எழுதப்பட்ட இலக்கியவிவாத நூல்.
கண்ணன் என் கவி – தமிழ் விக்கி
க.நா.சு உரையாடல் அரங்கு- ம.நவீன் பதிவு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். கம்பராமாயணம் இசை நிகழ்வு முடிந்து, ராலே ராஜனின் இயக்கத்தில் உருவான இனிய ரீங்காரம் இன்னும் எங்கள் காதில் ஒலித்துக்கொண்டே உள்ளது. முதலில் பழனி ஜோதியின் கம்பராமாயணப் பாடல்களின் விளக்கங்கள், அதைத்தொடர்ந்து ப்ரியா கிருஷின் இனிமையான குரலில் பாடல்கள் என இருவரும் இணைந்து டாலஸ் இசை நிகழ்வில் மாயங்கள் நிகழ்த்தினார்கள் என நண்பர்களின் பாராட்டுக்கள் கடிதங்களாகவும், பத்திரிகை செய்திகளாகவும் வந்துகொண்டு உள்ளன. மயக்கமோ கலக்கமோ , எழுத்தாளர் ம. நவீனுடனான உரையாடலை இன்று (ஆகஸ்ட், 23) திட்டமிட்டபடி நடத்தினோம். ஜாஜா–வின் காதிற்கு எல்லாச் செய்தியும் எப்படியோ சென்று சேர்ந்துவிடுகிறது. பழனி ஜோதியை கம்பன் ஜோதி என்று அழைக்க இணையவெளியில் சிரிப்பலை. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பற்றி அறிந்து , நிகழ்வில் பாட ஆர்வமாக இருந்த பெங்களூரைச் சேர்ந்த , பாலமீனாக்ஷி என்ற வாசகர், கபிலனின், ‘வேரல் வேலி’ பாடலைப் பாட , அரங்கம் அமைதி நிலையை அடைந்து ம. நவீனை வரவேற்கத் தயாரானது.
ம. நவீன், காதல் கவிதைகள் எழுதிப் பிரபலமாக இருந்த அந்தக் காலகட்டத்தைப் போலவே இன்றும் புகழுடனும் சிறப்புடனும் இருக்கிறார் என்பதை நிகழ்வு ஆரம்பிக்கும் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னரே இணைந்த வாசகர்களின் எண்ணிக்கை சொல்லியது. தனது படைப்பின் பாத்திரங்களென மாறி நவீன் எழுதுகிறார் என்றால், சிகண்டி நாவலை முன்வைத்துப் பேசிய மலர்விழி மணியம், அதன் பாத்திரங்களான தீபனாக, சராவாக, ஈபுவாக, நிஷாமாவாக வாழமுடிந்தது என தனது உரையை ஆரம்பித்தார். ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றிய சுருக்கமான விபரங்களுடன் நாவலை வாசிக்காதவர்களும் உணரும் வண்ணம் எடுத்துப் பேசினார். தான் பயப்படுவது , தீபனைப் போன்ற ஆன்மாவை உடைப்பவர்களை மன்னிக்கும் சரா–வைப் போன்றவர்களிடம்தான் என்றார். சரா–விற்கு இணையான மற்ற உலக இலக்கியப் பாத்திரங்களை ஒப்புமையாக சொன்னார். தீபன் பாத்திரத்தின் இருளையும் ஒளியையும் உதாரண நிகழ்வுகளுடன் கூறி, அவன் மீதான வெறுப்பைச் சொன்னார். ராஜகோபாலன் கூட அவனைப் பார்த்தால் தலையில் கொட்டுவேன் என்றார். தனது பாத்திரங்களை இவர்கள் இப்படி உருட்ட , அவற்றைப் படைத்த பிரம்மா முகம் மலரக் கேட்டுக்கொண்டு இருந்தார்.
அடுத்துப் பேசிய , ‘பொற்குகை’ ஆசிரியர், ஜெகதீஸ் குமார், சிகண்டி நாவலையோ, பேய்ச்சி நாவல் குறித்தோ தனக்கு நிகழ்வின் ஒருங்கமைப்பாளர் வாய்ப்புக் கொடுக்கவில்லை எனது ஆத்மார்த்தமான வருத்தத்தை பதிவு செய்துவிட்டு, நவீனின் , நகம் மற்றும் வைரம் சிறுகதைகளை குறித்துப் பேசி தனக்குக் கொடுத்த வாய்ப்பை நன்றியுடன் பயன்படுத்திக்கொண்டார். Good Prose is like a windowpane என்ற George Orwell நல்ல எழுத்தைப் பற்றிக் கூறிய விளக்கத்தை நவீனின் எழுத்துக்களுக்குச் சொல்லலாம் என்றார்.
நவீனத் தமிழ் இலக்கியத்தை முன்னெடுப்பவராக, மலேசியாவில் இயங்கிவரும் நவீன், ஆண்டிற்கு ஒரு நாவல் எழுதி படைப்பாளியாகவும் நிலைநிறுத்தும் அவரிடம் கேள்விக் கணைகள் தொடுக்க, ஜெயஶ்ரீ, மலர்விழி, ஜெகதீஸ், விசு, குருஜீ சௌந்தர், ஜமீலா, செல்வம், சாரதி, பிரஸாத் வெங்கட், பழனி ஜோதி மற்றும் நான் என zoom-ல் கைதூக்கினோம். ஜாஜா, யாருக்கும் வாய்ப்பைக் கொடுக்காமல், தாய் தெய்வங்கள் அவரது படைப்புகளில் விளைவிக்கும் பாதிப்புகள் குறித்து முதல் கேள்வியைக் கேட்டார். பதிலாக, நவீன், சிறு வயதில் அவர் கோவில்களில் பணி செய்ததும், மேலும் பாழடைந்த கோவில் குறித்து அறிந்து பயணம் செய்து பார்த்து தெரிந்து கொள்வதும், நாவலில் வெளிப்படுகிறது என்று அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். ஜாஜா முந்திக்கொண்டு அப்படிக் கேள்வி கேட்டது தவறில்லை என்பதைப் போல அடுத்துக் கேட்க வந்த ஜெயஶ்ரீ , அதையேதான் நானும் கேட்க வந்தேன் என்று சொல்லிவிட்டு, ஓசோவின் படைப்புகளால், நவீன் மொழியின் நுட்பத்தை அடைந்த விதத்தை குறித்து தனது இன்னொரு கேள்வியை கேட்டார்.
மலர்விழியும், ஜெகதீஸும் கேட்ட கேள்விகளும், நவீனின் பதில்களும் புதிதாக எழுத வருபவர்களுக்கு மிகவும் உதவுபவையாக இருக்கும். நவீன், தொழில் ரகசியம் என்றெல்லாம் எதையும் மறைக்காமல் பதில் சொன்னார். ஒரு படைப்பை எழுதும்பொழுது அதன் பாத்திரங்கள் பற்றிய மனநிலை தனது உடல் நிலையைக் கூட பாதிக்கும் என்று அவர் சொன்னது வீட்டில் ஒரு படைப்பாளியை வைத்துக்கொண்டிருக்கும் எனக்கும், ராதாவிற்கும் ஏதோ புரியாதது புரிவது போல் இருந்தது.
பேய்ச்சி நாவலின் சின்னி பாத்திரத்தின் படைப்பில் இருக்கும் முரண் பற்றிய சாரதியின் கேள்விக்கு, நவீனின் பதில், பாத்திரத்தின் குணங்கள் எழுதும் போக்கில், திட்டம் எதுவும் இல்லாமல் நிகழும் என்பதாக இருந்தது. நாவலின் முதல் பிரதியை வாசித்த சு.வேணுகோபால், நாவல் படைப்பாளியின் கைவிட்டுச் சென்று அதுவாக நிகழ்வதை கண்டு சொன்னதையும் குறிப்பிட்டார். எழுத்தாளர்களுடனான உரையாடலில், படைப்பு அதுவாக நிகழ்வதை , எத்தனை முறை அவர்கள் கூறக் கேட்டாலும், அந்த ஆச்சிரயத்திலிருந்து எங்களால் (வாசகர்களால்) வெளிவரமுடிவதில்லை. எல்லோரும், ஜெயமோகனின், நீங்களும் நாவல் எழுதலாம், பயிற்சி பெற்று எழுத ஆரம்பித்தால், வாசகர்களே பதிலை செயலின் வழி உணர்ந்து புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.
போட்டு உடைப்பதுபோல் பேசும், ஜமீலா–விற்கு நவீனின் படைப்புகளில், தமிழக உணவுகள் இல்லை என்று வருத்தம். புழுக்களை சாப்பிடும் காட்சிகள் அருவருப்பைக் கொடுக்கின்றன என்று சொல்லி, நிகழ்வை இலகுவான மன நிலைக்கு கொண்டு வந்தார். நவீனோ, அந்தப் புழுக்கள் சாப்பிட சுவையாக இருக்கும் என்றார். தமிழகத்தில், இட்லியை கையில் எடுத்துச் சாப்பிடுவது மற்ற நாட்டினருக்கு எப்படி அருவருப்பைத் தருமோ, அது போல நமக்கு அவர்கள் புழுக்களை மென்று சாப்பிடுவது அருவருப்பாக இருக்கிறது என்று ஜாஜா தீர்ப்பு வழங்கினார்.
ஏப்ரலில், எம். கோபாலகிருஷ்ணனுடனான உரையாடலில், அவர் ஒரு நல்ல பணியாளராக இருந்துகொண்டு . தேர்ந்த படைப்புகளை கொடுப்பது பற்றிக் கேட்டபொழுது, சனி , ஞாயிறுகளில் அவர் எப்படி நேரத்தை திட்டமிட்டு எழுதுவார் என்று பகிர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட அதே கேள்வியை, படைப்பாளியாகவும், இலக்கியத்தை முன்னெடுக்கும் அமைப்பாளராகவும் நவீன் இயங்குவதை குறித்த பழனி ஜோதியின் கேள்விக்கு அவரது பதில் ஊக்கமளிப்பதாகவும், நல்ல உதாரணமாகவும் இருந்தது.
பிரசாத் வெங்கட் வைரம் சிறுகதையின் லட்சுமணன் பாத்திரப் படைப்பை பற்றிய கேள்வியுடன், 21-ஆம் நூற்றாண்டில் இன்னொருமுறை சிறந்த சிறுகதைகள் எனத் தொகுக்கப்பட்டால், வைரம் அதில் இடம்பெறும் என்றார். குருஜீ கேட்ட கேள்விக்கு, நவீன், தனக்கு இசை அவ்வளவாகத் தெரியாது என்ற ஒரு உண்மையைச் சொல்லவேண்டியதாகிவிட்டது. நல்ல நாவலாசிரியன் தத்துவத்தின்மேல் ஆர்வமுள்ளவனாக இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வது , நவீனிடம் இருப்பதை இந்த நிகழ்வில் அறிந்துகொண்டோம்.
எப்பொழுதும் சொல்வதுபோல, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் க.நா.சு உரையாடல் அரங்கில் கலந்துகொள்ளும் விருந்தினர் எழுத்தாளருக்கு , மொத்த உரையாடல் அவரை அறிந்துகொள்ள உதவும் சிறந்ததொரு ஆவணப்படமாகிறது. வாசக நண்பர்கள், எழுத்தாளர் ம. நவீன் குறித்து வெளியாகியுள்ள ஆவணப்படத்தை யூட்யூபில் கட்டணம் எதுவும் இல்லாமல் பார்க்கலாம்.
அன்புடன்,
சௌந்தர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


