Jeyamohan's Blog, page 32
September 8, 2025
பண்பாட்டின் மலர்வு
Satchitananda – III by Sukanta Das | Acrylic Painting | Artflute.com
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் நாவலை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்த நாவலை நான் 2009ல் வாங்கினேன். வாசிக்க பலமுறை முயன்றும் 100 பக்கம் தாண்டவில்லை. என்ன காரணம் என்று யோசித்தேன். நான் வாசிக்கும்போது எனக்குக் கொஞ்சம் கூடத் தெரியாத ஒரு விஷயம் வரும்போது அப்படியே நிறுத்திவிடுகிறேன். அது புரியாமல் மேலே புரியாமலாகிவிடும் என்று சந்தேகம் வந்துவிடுகிறது. இப்படி பல இடங்கள். மேலே செல்லமுடியாமல் நின்றுவிட்டேன்.
அதன்பின் சென்ற ஏப்ரலில் ஒரு முடிவு எடுத்தேன். தொழில்விஷயமாக நான் ஜப்பான் போகவேண்டியிருந்தது. அங்கே நிறைய நேரம் கிடைத்தது. புரிகிறதோ புரியவில்லையோ அப்படியே படித்து முடிப்போம் என்று முடிவெடுத்து படித்துக்கொண்டே போனேன். ஒரு கட்டத்தில் முதல் பகுதி மிக தீவிரமான அனுபவமாக அமைந்தது.
ஆனால் மீண்டும் இரண்டாம் பகுதியில் தடை. தத்துவ விவாதங்கள் எனக்குப் புரியவில்லை. ஆகவே ஒன்று செய்தேன். அதில் பேசப்படும் விஷயங்களை விக்கியில் போய் பார்த்து அது என்ன என்று மட்டும் தெரிந்துகொண்டேன். (மிக கூடுதலான தகவல்களுக்குள் போகவில்லை) கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு உருவாக ஆரம்பித்தது.
உண்மையில் தத்துவ விவாதப்பகுதி அபாரமான பேலன்ஸுடன் தான் இருக்கிறது. ஓர் அத்தியாயத்தில் தத்துவ விவாதம் நிகழ்ந்தது என்றால் அடுத்த அத்தியாயத்தில் பகடி, அல்லது கவித்துவமும் உணர்வுபூர்வமானதுமான ஓர் உரையாடல் அல்லது நிகழ்வு என்றுதான் செல்கிறது. தத்துவப்பகுதி என்ன ஏது என்று புரிந்தால் பகடி அற்புதமாக உள்ளது. (மொழி பற்றி மதியச்சாப்பாட்டுக்குமேல் மண்டபத்தில் நிகழும் உரையாடல் அபாரமான ஒரு பகடிக்கவிதைபோல் இருந்தது)
படித்து முடித்ததும் முன்பு புரியாமலிருந்த பகுதிகள் எல்லாமே புரிய ஆரம்பித்ததன. விஷ்ணுபுரம் படிக்க விஷ்ணுபுரமே பயிற்சியை அளிக்கும் என்பது தெரிந்தது. இப்போது மொத்த நாவலையும் என் மனதுக்குள் பல பகுதிகளாக பகுத்து, ஒவ்வொன்றாகத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.
The quest is divine; attainment is vain. என்று எனக்குப் பிரித்த ஒரு வரி உண்டு. எங்கே படித்தேன் என்றே ஞாபகமில்லை. ஆனால் என்னுடன் இருந்துகொண்டிருக்கிறது, நீண்டநாட்களாக. நாவல் முழுக்க அந்த வரிதான் நினைவில் வந்துகொண்டே இருந்தது. தேடல் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்திற்குக் கொண்டுசென்று சேர்க்கிறது. தேடலின் விளைவு என ஒன்றும் திரளவில்லை. அப்படிப்பார்த்தால் விஷ்ணுபுரம் ஒரு depressive ஆன நாவல்தான். ஆனால் தேடலின் எல்லா வண்ணங்களையும் அளிக்கும் படைப்பு இது. அந்தவகையில் ஒரு பெரிய வைரம்போல. திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
எஸ். என்.கிருஷ்ணன்
அன்புள்ள கிருஷ்ணன்,
விஷ்ணுபுரம் நாவலை வாசிப்பதற்கான முதன்மைத் தடை என்பது அதில் பேசப்பட்டுள்ள சிற்பக்கலை, ஆலயக்கட்டுமானம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி நம் வாசகர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதே. அதைத் தெரிந்துகொள்வதற்கான வழிகளும் இல்லை. நம் கல்விமுறையில் அவை இல்லை. நூல்கள் வழியாக கற்பது எளிதல்ல. எளிதான நூல்களும் இல்லை.
ஆனால் அதற்காக அப்படிப்பட்ட நாவல்களை எழுதாமலும் இருக்க இயலாது. வாசகர்களே இல்லை என்றாலும் நாவல் எழுதப்படும். வாசகர்கள அறிந்தவையே நாவலாக எழுதப்படவேண்டும் என்றால் திரும்பத் திரும்ப நடுத்தரவர்க்கத்து வாழ்க்கை, குடும்பம், ஆண்பெண் உறவு மட்டுமே எழுதப்பட முடியும். அவைதாம் அதிகமும் எழுதப்படுகின்றன. எனக்கு அத்தகைய எழுத்துக்கள்மேல் பெரிய ஈடுபாடு இல்லை.
நாவல் பெரிய வினாக்களுடன் புனைவை விரிக்கும் கலைவடிவம். அதை நாவல் எழுத வருவதற்கு முன்னரே சொல்லியிருக்கிறேன். (நாவல் கோட்பாடு) நாவல் தத்துவத்தின் கலைவடிவம் என்னும் கருத்தே மேலைநாட்டு விமர்சக மரபில் உண்டு. அத்தகைய பெருஞ்சித்திரம் வரலாற்றையும், பிற பண்பாட்டுக்கூறுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டே எழமுடியும். நாவல் என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டின் நேரடிப் பதிவு. அச்சமூகத்தின் பண்பாட்டின் உச்சகட்டங்களின் வெளிப்பாடு.
அச்சமூகம் அப்பண்பாடு பற்றி முற்றிலும் அறியாமை கொண்டிருக்கும் என்றால் நாவலை எழுதாமலிருக்க முடியாது. அச்சமூகம் அந்நாவலை வாசிக்கமுடியாது என்பது உண்மை. ஆனால் நாவல் என்றல்ல எந்த இலக்கியமும் வாசகர்களின் ‘தேவைக்காக’ உருவாவது அல்ல. செடியில் மலர் விரிவதுபோல ஒரு பண்பாடு தன்னியல்பாக கலைப்படைப்பை உருவாக்குகிறது. அச்சூழலில் அந்நாவலே அப்பண்பாட்டின் ஆவணமாகவும் ஆகிறது. அப்பண்பாட்டை கற்க அந்நாவலே வழிமுறையும் ஆகிறது.
இங்கே நம் ஒவ்வொரு நகரிலும் மாபெரும் ஆலயங்கள் ஓங்கி நின்றுள்ளன. அவற்றை உருவாக்கிய அடிப்படையான விசைகள் என்ன, அவற்றில் வெளிப்படுவது என்ன என்று அறியும் ஆர்வம் கொண்ட எவருக்கும் விஷ்ணுபுரம் ஒரு பெரிய வாசல். அதை வாசிக்க பின்புலப்பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாதவர்களுக்கு அந்நாவலே அப்பயிற்சியை அளிக்கும். அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் வழக்கமான யதார்த்தவாத , அன்றாடவாதக் கதைகளை வாசிக்கும் எளிய மனநிலையில் இருந்து முன்னகர்வது மட்டுமே. தானறிந்த உலகம் நோக்கி அந்நாவலை இழுக்காமல் தன்னை அந்நாவல் உருவாக்கும் உலகம் நோக்கி விரித்தல் மட்டுமே.எளிமைப்படுத்தவே நமக்குத் தோன்றும். எவ்வகை எளிமைப்படுத்தலும் அதை முழுமையாக இழப்பதிலேயே கொண்டுசேர்க்கும்.
இன்று, இணையம் வந்தபின் தரவுகள் மற்றும் விளக்கங்களை எளிதில் பெறமுடியும். ஒரு கலைச்சொல் புரியாமலிருந்தால் கூகிளில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தேடினால்போதும். நீங்கள் சொல்வதுபோல அதிகம் அதற்குள் செல்லாமல், இந்நாவலை வாசிக்க எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் தகவல்களை தெரிந்துகொண்டு வாசித்தால் விஷ்ணுபுரத்திற்குள் எளிதில் செல்லமுடியும்.
பல அடுக்குகள் கொண்ட நாவல் அது. பல உள்ளோட்டங்கள் கொண்டது. தொன்மங்களும் நம்பிக்கைகளும் அதன் கருவிகள் மட்டுமே. ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளும் கதைகள், ஒன்றையொன்று மறுக்கும் கதைகள் வழியாக அது ஒரு பெரிய பரப்பை உருவாக்குகிறது. தேடல், கண்டடைதல், நிலைகொள்ளுதல் என அது உருவாக்கும் ஆன்மிகப்பயணத்தின் சித்திரங்கள் பல. அது ஒரு நகரை, அதன் வரலாற்றைச் சொல்வதேயானாலும் அது பேசுவது இந்திய உள்ளம் நிகழ்த்திக்கொள்ளும் அகத்தைப்பற்றியே.
ஐயமே இல்லாமல் உலக அளவில் வெளிவந்த நவீன நாவல்களில் விஷ்ணுபுரம் முக்கியமானது. விரைவில் உலகவாசகர்களுடைய வாசிப்புக்கும் செல்லவிருக்கிறது. அதை வாசிப்பதென்பது இந்த மொழியில், இப்பண்பாட்டில் நிகழ்ந்த ஒரு அகவெளிப்பாட்டை, கலைவெற்றியை அறிந்திருப்பதுதான்.
ஜெ
விஷால்ராஜா
தமிழில் புனைகதைகளும் இலக்கிய விமர்சனக்கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய வடிவிலும் மொழியிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்பவராக மதிப்பிடப்படுகிறார்.
விஷால்ராஜா
விஷால்ராஜா – தமிழ் விக்கிசிறுகதைத்தொகுப்புஎனும்போது உனக்கு நன்றி (2017, ஜீவா படைப்பகம்)திருவருட்செல்வி (2023, விஷ்ணுபுரம் பதிப்பகம்)
வரலாற்றின் நிழலுருக்கள்
1870 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு பஞ்சத்தில், ஆயிரக்கணக்கான தலித்துகள் இறந்தனர். இந்த துயரத்திற்கான முதன்மையான காரணங்கள் அன்றிருந்த அரசாங்கங்கள் , சமூகத்தின் அணுகுமுறை, மற்றும் வணிகர்களின் சுரண்டல் என்று கூறப்படுகிறது. இது தலித்துகள் மத்தியில் ஆழ்ந்த கோபத்தைத் தூண்டியது. தலித் அரசியல் அங்கே உருவாகியது.
ஆனால் உயர் சாதி ஆதிக்கத்தில் ஆழமாக வேரூன்றிய நீதிக் கட்சி மற்றும் திராவிட இயக்கம் போன்றவை பின்னர் உருவாகி பிராமண எதிர்ப்பு உணர்வுகளில் முழுமையாக மூழ்கியிருந்தன.பிராமண அரசியலும் எதிர்ப்பரசியலும் பரவியதால், தமிழ்நாட்டில் தலித் அரசியல் படிப்படியாக தங்கள் அடையாளத்தை இழந்தது என்பது ஒரு வரலாற்று உண்மை.
வரலாற்றின் நிழல்களில் தள்ளப்பட்ட தலித் அடையாள இயக்கங்களை உண்மையிலேயே புரிந்து கொள்ள, ஒருவர் தமிழ் வரலாற்றை நேர்மையுடன் படிக்க வேண்டும். இதைச் செய்த சில எழுத்தாளர்களில் ஜெயமோகனும் ஒருவர்.
1921 இல் நடந்த பின்னி மில்ஸ் தொழிலாளர் வேலைநிறுத்தம் தலித் தலைமையின் திறமைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. அந்த நேரத்தில், கிராமங்களில் விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்ட மில்லியன் கணக்கான தலித் தொழிலாளர்கள் நகரங்களுக்கு குடிபெயர்வது ஒரு அன்றாட நிகழ்வாக இருந்தது. அவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து உடல் உழைப்பையும் மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் ஒடுக்கப்பட்டு சேரிகளில் வாழ்ந்தனர்
1878 ஆம் ஆண்டு தலித்துகளால் மட்டுமே நடத்தப்பட்ட ஒரு வேலைநிறுத்தம் உயர்சாதி தரகர்கள், சூத்திர நில உரிமையாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கப்பட்டது.
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து, வரலாற்றின் புதைபடிவங்களில் இரத்தம், சதை மற்றும் கண்ணீரைப் புகுத்தி, ஒரு அற்புதமான மற்றும் துடிப்பான உயிருள்ள நாவலை எழுதியுள்ளார். அதில், அயோதிதாஸ் போன்ற அந்தக் காலத்தின் உண்மையான தலித் தலைவர்களாக இருந்த கதாபாத்திரங்கள் தோன்றுகின்றன. அந்தக் காலகட்டத்தில் தனிநபர்களின் துயரமான சமூக–அரசியல் நிலைமைகள் மற்றும் உளவியல் நிலை பற்றிய ஒரு சிறந்த மனிதநேயக் கணக்கை ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.
“வரலாற்றின் பக்கங்களில் முடிவில்லாமல் எரியும் தீப்பிழம்புகளில் நமது பயனற்ற வாதங்களையும் பயனற்ற நியாயப்படுத்தல்களையும் வீசுவதை நாம் நிறுத்த வேண்டும்,” என்று எழுத்தாளர் ஜெயமோகன் மிகுந்த வேதனையுடன் கூறுகிறார்.
தமிழ் நாவலான வெள்ளையனையின் தெலுங்கு மொழிபெயர்ப்பு “தெல்லா யெனுகு” (வெள்ளை யானை) என்று பொருத்தமாகத் தலைப்பிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்களான குமார் எஸ் மற்றும் அவினேனி பாஸ்கர் ஆகியோர் தமிழ் மூலத்தின் மைய சாரத்தை திறமையாகப் படம்பிடித்துள்ளனர், இதனால் மொழிபெயர்ப்பு மூல நாவலைப் போலவே உயிரோட்டமாக உணரப்படுகிறது. “சாயா” மோகன் குழுவினர்தான் பதிப்பாளர்கள், அவர்கள் இத்தகைய அசாதாரண இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதன் மூலம் அரிய சேவையைச் செய்துள்ளனர்.
இந்த வகையான இலக்கியம் வரலாற்றின் நிழலில் நடந்த பல இருண்ட அநீதிகளுக்கு சாட்சியாக நிற்கிறது. தென்னிந்தியாவில் தலித் இயக்கங்களின் வரலாறு, பிராமணிய அரசியல் சதித்திட்டங்கள் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமானமற்ற தன்மை – இவை அனைத்தும் புதைக்கப்பட்டுள்ளன – நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், ஜெயமோகனின் “தெல்லா யெனுகு” அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
ஏ.என் நாகேஸ்வர ராவ்
தெலுங்கு எழுத்தாளர்.
என் வெள்ளை யானை நாவல் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. தெலுங்கு எழுத்தாளர் ஏ.என்.நாகேஸ்வர ராவ் எழுதிய மதிப்புரை இது. தெலுங்கில் தொடர்ச்சியாக மதிப்புரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
நீண்ட இடைவேளைக்குப்பின் வெள்ளையானை நாவலை 200 பக்கம் வரை ஒரு ரயில் பயணத்தில் வாசித்தேன். நண்பர் அலெக்ஸ் நினைவுகள் வந்தன. நான் நாவலில் இருந்து வெகுவாக விலகி வந்துவிட்டிருக்கிறேன். வெண்முரசு என்னும் நாவல் தொடர் இருநூறுக்கும் மேல் சிறுகதைகள். கடல், காவியம் என இரு பெரிய நாவல்கள். அந்தமுகில் இந்த முகில், கதாநாயகி, ஆலம், படுகளம் என நான்கு சிறிய நாவல்கள்.
இன்று ஒரு வாசகனாகப் படிக்கையில் அந்நாவல் தமிழில் ‘இன்னும் படிக்கப்படாத’ ஒரு நாவலாகவே நீடிக்கிறதோ என்ற ஐயம் எழுந்தது. அதன் பக்கங்கள் வழியாகச் செல்லும் அகத்தத்தளிப்பு ஒன்று உள்ளது. ஏய்டன் தன்னை ஷெல்லியுடன் அடையாளம் காணும் இடங்களின் கவித்துவம் சிறந்த நவீனக்கவிதைகளில் மட்டும் இயல்வது. அந்நாவலின் அழகு அப்பகுதிகளின் நவீன மொழியோட்டத்தால் ஆனது. அடுத்ததாக இந்தியச் சாதிமுறை, பிரிட்டிஷ் நிர்வாகமுறை பற்றிய நுணுக்கமான அவதானங்கள் கதைமாந்தரின் அங்கதமும் சீற்றமும் கொண்ட பேச்சினூடாக வெளிப்படுவதிலுள்ள எதிர்மறைக் கவித்துவம்.
இவற்றை எவர் எழுதியிருந்தாலும் அதை நான் கொண்டாடியிருப்பேன் என நினைக்கிறேன். இந்நாவலின் மிகச்சிறந்த பகுதி சென்னப்பட்டிணம் தெருக்களில் மாண்டவர்களின் நிழலுருக்கள் ஊர்வலம் செல்லும் காட்சி. தெலுங்குப்பதிப்பின் அட்டையிலும் அதுவே இடம்பெற்றுள்ளது. தமிழில் குறைவானவர்களே அதை கவனித்தார்கள் என்று தோன்றுகிறது.
ஜெ
வெள்ளையானை வாங்க வெள்ளையானை விமர்சனங்கள்கன்யாகுமரி- தவிப்பும் மீள்வும்
நாவல் துவக்கத்தில் எனக்கு பிடிபடாமல் , ஏதோ என்று இருந்தது. ஆனால் ஜெமோ அவர்கள் மீது நம்பிக்கையினால் அந்த நாவலை படிப்பதில் முன் சென்றேன். வழக்கம் போல நாவலை படித்து முடித்த பிறகு ஏற்படும் அதிர்வலையை , ஒரு கற்பனையின் இன்பத்தை, அற்புதமான தத்துவத்தின் தரிசனத்தை, வாழ்வை பிடித்து முன் செல்ல ஒரு நம்பிக்கையை இப்புத்தகமும் எனக்கு அளித்தது.
நாவலில் வரும் விமலாவின் அணுகுமுறையும், அவள் பக்குவமும், வாழ்வை எதிர் கொள்ளும் விதமும், பிரவீணா கதாபாத்திரம் சூழ்நிலையை கணித்து சரியான சமயத்தில் சரியான சொற்களை உதிர்க்கும் விதமும் அற்புதமாக இருந்தது. மைய பாத்திரமான ரவி, ஆண் பெண் உறவு, பெண்னை வென்றிட நினைக்கும் ஆண் , அவன் மனம் போராட்டம், பிற பெண்களை வீரத்தால் வீழ்த்திய போது இருந்த வீரம், தனக்கு பிறகு தன் மகள்கள் என்ன ஆவார்களோ என்று நினைக்கும் நிலையில் கண்ணீராக மாறிவிடும் நிலைக்கு சுழற்றப்பட்ட ஸ்டீபன் வாழ்க்கை. கடைசியில் அவன் கண்ணீருக்கே கரமாக, அவன் செய்த பிழைக்கு பதிலாக, விமலா பாத்திரத்தை கொண்டு வந்து இருப்பது எல்லோர் மனங்களையும் கலங்க வைத்து விடும். பெண்கள் மீது மதிப்பை கூட்டி விடும்.
சந்தானம்
(வாசிப்பை நேசிப்போம் குழுமம்)
கடிதங்கள் எழுதுபவர் யார்?
என்னுடன் என் நண்பனும் வந்தான். அவன் ஓர் திமுக அனுதாபி. உங்கள் தளத்தில் வரும் கடிதங்களை எல்லாம் பார்த்துவிட்டு இந்த கடிதங்களை எழுதுபவர்கள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள், முகநூலில் இவர்களை தேடிப்பார்த்தால் கிடைப்பதில்லை என்பான். இத்தனை அறிவார்ந்தும், புத்தகங்களை வாசித்துவிட்டும் யார் எழுதப்போகிறார்கள் என்பான். இதெல்லாம் ஜெயமோகன் அவரே எழுதிக்கொள்பவை என்பான்
Those rock paintings were God’s own signature; that is why they still survived. We have to read those letters to understand what he is telling us.
The signature of GodSeptember 7, 2025
விஷ்ணுபுரம் விருது 2025 ரமேஷ் பிரேதனுக்கு…
தமிழில் முதன்மை இலக்கியப் பங்களிப்பாற்றிய மூத்த படைப்பாளிகள் விருதுகளால் புறக்கணிக்கப்படுவதை கண்டு அவர்களை கௌரவிக்கும் பொருட்டு 2010 ல் நிறுவப்பட்டது விஷ்ணுபுரம் விருது. குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெறாத படைப்பாளிகளுக்குரிய விருதாக இது அளிக்கப்பட்டு வருகிறது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகள் பலர் ஏற்றுக்கொண்ட பெருமைக்குரியது இவ்விருது.
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர், புனைவெழுத்தாளர், மற்றும் இலக்கியச் சிந்தனையாளர் என்னும் நிலைகளில் தமிழுக்கு பங்களிப்பாற்றிய ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது.
ரமேஷ் பிரேதன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 8 செப்டெம்பர் 2025 அன்று புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை நண்பர்கள் அரிகிருஷ்ணன், சிவாத்மா, யோகேஸ்வரன், கடலூர் சீனு , மணிமாறன், முத்துக்குமரன், சிவராமன், சரவணன் ஆகியோர் ரமேஷ் பிரேதனை நேரில் சந்தித்து மலர்ச்செண்டு அளித்து வாழ்த்துக்களுடன் செய்தியை அறிவித்தனர்.
டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் இந்த விழா வழக்கம்போல கோவையில் நிகழும். முதல்நாள் படைப்பாளிகள் அரங்கு. இளம்படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் ஆகியோருடன் வாசகர்கள் உரையாடலாம். இரண்டாம் நாள் விருதுவிழா. தமிழின் முதன்மையான இலக்கிய விழாவாக இன்று மாறிவிட்டிருக்கும் இந்த இலக்கிய ஒருங்கிணைவுக்கு நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
ரமேஷ் நீண்டநாட்களாக உடல்நலம் குன்றியிருப்பதை அறிந்திருப்பீர்கள். அவரை புதுச்சேரியில் இருந்து கோவை கொண்டுவர முயல்கிறோம். அவரும் ஆர்வமாகவே உள்ளார். இதற்கு முன் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து கலந்துகொண்ட நிகழ்வு பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விஷ்ணுபுரம் விழாதான்.
உடல்நலம் குன்றிய நிலையிலும் ரமேஷ் படைப்பாளிக்குரிய அக ஊக்கத்துடன் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரமேஷுக்கு இவ்விருதை அளிப்பதன் வழியாக விஷ்ணுபுரம் நண்பர்குழு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறது.
ரமேஷ் பிரேதன் rameshpredan@gmail.com. எண் 8903682251
ரமேஷ் பிரேதன். தமிழ் விக்கி விஷ்ணுபுரம் விருதுகள் தமிழ் விக்கிகுழந்தைகளும் இயற்கையும்
வாழ்க்கை முழுக்க உடன்வரும் ஒரு பெரும் இன்பம் இயற்கையுடன் இருத்தல். இயற்கையை ரசிக்க, அதன்பொருட்டு பயணம் செய்ய முடிந்தவனுக்கு எல்லா உலகியல் சிடுக்குகளில் இருந்தும் தப்பிக்க ஒரு பெரிய வாசல் திறந்திருக்கிறது. அதை நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறோமா?
நம் குழந்தைகளுக்கு இயற்கையை அறிமுகம் செய்வோம்அரசியல், கருத்தியல், ஜனநாயகம்
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க
பின் தொடரும் நிழலின்குரல் வாங்க
அன்புள்ள ஜெமோ
பின்தொடரும் நிழலின் குரல் நாவல் பற்றி மார்க்ஸிய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் வழக்கம்போல ‘வன்மம்’ ‘திரிபு’ ‘அவதூறு’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் பார்த்தவரை மார்க்ஸியர்களின் அணுகுமுறை என்பது குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் அக்குற்றச்சாட்டை மிகமிக மூரக்கமாக மறுப்பதுபோலத்தான். அதில் நிதானம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டுவிட்டதே என்ற பதற்றம் மட்டுமே உள்ளது. பதற்றமும் சீற்றமும் நிறைந்த எதிர்வினைகள் வந்தனவே ஒழிய நிதானமான ஒரு எதிர்வினை வந்ததில்லை.
நான் என் மார்க்ஸிய நண்பரிடம் சொன்னேன். ‘வேறு எதை நீங்கள் மறுத்தாலும் கண்முன் மார்க்சியம் சிறுத்து வருவதையாவது ஏற்றுக்கொண்டாகவேண்டும். அந்நாவல் எழுதப்பட்ட 1999 வாக்கில் இந்தியாவில் மூன்று மாநிலங்களில் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில் இருந்தது, அல்லது ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருந்தது. இன்று கேரளத்தில் மட்டுமே அது குறிப்பிடத்தக்க கட்சி. ஆனால் அதானியுடன் சேர்ந்து தனியார்மயத் திட்டங்களை அறிவிக்கும் நிலையில் உள்ளது. தமிழகத்திலேயே இளைஞர்கள் கட்சிக்குள் வருவது மிகமிக குறைவாகிவிட்டது. 2000 வரை டி.வை.எஃப்.ஐ எவ்வளவு வலுவாக இருந்தது என்பதும் இப்போது எப்படி இருக்கிறது என்பதும் கண்கூடு. தொழிற்சங்க இயக்கம் கூட தேய்வடைந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க விரும்பினீர்கள் என்றால், ஒரு விமர்சனம் என்ற அளவிலாவது பின்தொடரும் நிழலின் குரல் நாவலை பொருட்படுத்தலாமே? இத்தனை மூர்க்கமான மறுப்பை விட்டு அது என்ன சொல்கிறது என்று கொஞ்சம் யோசிக்கலாமே’
நீங்கள் நினைப்பது சரி. நண்பர் மேலும் கடுமையான வசைகளை பொழிந்தார். ‘இந்துத்துவச் சதிவலை’ என்றார். அவரிடம் பேசமுடியாது என்று தெரிந்து அமைதியானேன். உண்மையில் பின்தொடரும் நிழலின் குரல் பேசுவதே அந்த ‘பேசமுடியாத தன்மை’யைத்தானே?
சபாபதி சண்முகம்.
அன்புள்ள சபாபதி அவர்களுக்கு,
பின்தொடரும் நிழலின் குரலின் பேசுபொருளே அதுதான். கருத்தியல் மூர்க்கம். உயிர்நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொலைபுரிய முற்படும் அளவுக்கு அது செல்வது ஏன் என்னும் கேள்வி. நேற்றுவரை தலைவராக திகழ்ந்தவர் ஒரே இரவில் எப்படி துரோகி ஆகிறார் என்னும் கேள்வி.
அந்நாவல் வெளிவந்தபோது கடுமையான விமர்சனம் எழுதிய ஒருவர், அவர் தலைவராக எண்ணியிருந்த மருதையன் அவதூறு செய்யப்பட்டு, வசைபாடப்பட்டு, அந்த கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டபோது மனம் குமுறி, பின்தொடரும் நிழலின் குரல் பேசும் உண்மையின் ஒளியை குறிப்பிட்டு எனக்கு ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதியிருந்தார்.
அதேபோல ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒருவர் கடிதம் எழுதுவதுண்டு. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் உ.ரா.வரதராசன் சாவின்போது இரண்டு தோழர்கள் அதேபோல கடிதங்கள் எழுதியிருக்கின்றனர்.மறைந்த கேரள மார்க்ஸிய ஆசான் பி.கோவிந்தப்பிள்ளை (அவருக்கு நன்றாகத் தமிழ் பேசத்தெரியும்) நாவல் வெளிவந்தபோது என்னிடம் ஒரு பிரதி கேட்டு வாங்கி படித்துவிட்டு எதிர்நிலையாக விமர்சித்தார். அவரே கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, அவதூறு செய்யப்பட்டபோது என்னிடம் பேசினார். சுருக்கமாக ‘உண்மை அப்படித்தான், அது மண்டையோட்டை உடைத்துத்தான் உள்ளே நுழையும்’ என்றார்.
இந்தக் கருத்தியல்மூர்க்கத்தை நேற்று மதவெறி மூர்க்கமாகப் பார்த்தோம். இன்று மதவாதஅரசியல், இன அரசியல், மொழியரசியல் அனைத்திலும் பார்க்கிறோம். இந்நாவல் வெளிவந்தபோது இதை இதற்குள் செயல்படுபவர்கள் மட்டுமே நேரடியாக உணரமுடியும் என்னும் சூழல் இருந்தது. இன்று, இருபத்தைந்தாண்டுகளுக்குப்பின், நம் சமூகவலைத்தளச் சூழல் அதை அப்பட்டமாகக் காட்டுகிறது. இதை நேரடியாக உணராத வாசிக்கும் நபர் என்று எவரும் இருக்கமுடியும் என நான் நினைக்கவில்லை.
நம்மூர் மார்க்ஸியர்களால் காழ்ப்பும் நிராகரிப்புமாகவே பேச முடியும், இன்று அவர்கள் கிட்டத்தட்ட மார்க்ஸியத்தை மட்டுமல்ல தொழிலாளர் நலனைக்கூட கைவிட்டுவிட்டு, இன்றைய திராவிட அரசியல் கட்சிகளின் கோஷங்களையும் கொள்கைகளையும் எதிரொலிக்கும் சிறிய ஒட்டுண்ணிக் கட்சியாக ஆகிவிட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் இடதுசாரிகள்மேல் பெரும் பற்றுடன் இருந்தவர்கள், அதன்பொருட்டு என்னை வசைபாடியவர்கள்கூட இன்று உளம்புழுங்கிக்கொண்டிருக்கின்றனர். சிலர் பொதுவெளியில் ஓர் அடையாளமாக கட்சிச்சார்பை வைத்துக்கொண்டு களமாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் என் நாவல் மார்க்ஸியத்துக்கு எதிரானது அல்ல. அன்றுமின்றும் அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அது மார்க்ஸியத்தின் மகத்தான மானுடநேய இலட்சியவாதத்தை உணர்ச்சிகரமாக முன்வைக்கும் நாவல் – எந்த மார்க்ஸியச் சார்புநூலையும் விட. மார்க்ஸிய வரலாற்றுவாதம் இன்றைய மிகச்சிறந்த ஆய்வுமுறை என வாதிடும் நாவல். மார்க்ஸிய அரசியலையே அது நிராகரிக்கிறது. அதிலுள்ள சர்வாதிகாரச் சாய்வுநிலை, கண்மூடித்தனமான விசுவாசத்தை எதிர்பார்க்கும் ராணுவமனநிலை, கருத்தியல் மூர்க்கம் இன்றைய ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது என்று வாதிடுகிறது.
என் பார்வையில் மார்க்சியம் இந்தியாவில் தேய்ந்துகொண்டிருப்பதற்கு மூலக்காரணம் இந்த மூர்க்கமே. ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்ள அந்த மூர்க்கமே தடையாகிறது. மார்க்ஸியம் தேய்ந்தழிவதென்பது இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளைப் பொறுத்தவரை பொருளியலில் பேரழிவு. தொழிற்சங்கச்சூழலில் அந்த அழிவை கண்கூடாகக் காணமுடிகிறது.
ஜெ
சந்திரா தங்கராஜ்
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள்
சந்திரா தங்கராஜ் – தமிழ் விக்கிசிறுகதைத் தொகுப்புகள்பூனைகள் இல்லாத வீடு (உயிர்மை 2007)காட்டின் பெருங்கனவு (உயிரெழுத்து,2009)அழகம்மா (உயிரெழுத்து 2011)சோளம் (மொத்த கதைகளின் தொகுப்பு)(2022)கவிதைத் தொகுப்புகள்நீங்கிச் செல்லும் பேரன்பு ( உயிரெழுத்து,2009)வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் (2015)மிளகு (எதிர் வெளியீடு,2020)வேறு வேறு சூரியன்கள் (சால்ட், 2024)
நாகர்கோயிலில் ஓர் உரையாற்றுகிறேன்
நூல் வெளியீடு. தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள். முனைவர் எச். முகமது சலீம் தொகுத்த கவிதைகள். நான் பேசுகிறேன். இடம் ஹோலிகிராஸ் கல்லூரி நாகர்கோயில். நாள் 10 செப்டெம்பர் புதன்கிழமை காலை 10 மணி.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

