Jeyamohan's Blog, page 1692
January 6, 2017
என் கல்யாண்ஜி
வணக்கம்.
வண்ணதாசன் ஆவணப்படத்தின் இரண்டு இடங்களில் அழகான சில கணங்கள் வருகின்றன. அவற்றைத் திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை GIF படங்களாக இணைத்துள்ளேன். சன் கீர்த்திக்கு என் எல்லையில்லா அன்பும் நன்றியும்.
நன்றி.
வே. ஸ்ரீநிவாச கோபாலன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80
[ 33 ]
காளி தான் சேர்த்துவைத்திருந்த கிழங்குகள் கொண்ட கூடையை தலையிலேற்றிக் கொண்டாள். அர்ஜுனனுக்கு இன்சுவைக்கிழங்குகளை அளித்தாள். அவன் அவற்றை உண்டதும் மலைத்தேன் குடுவையை அளித்தாள். சுனைநீருண்டதும் அவன் உடலாற்றல் மீண்டான். அவன் உடலில் இருந்த அம்புகளை அகற்றி பச்சிலை சாறூற்றினாள். அனலென எரிந்து குளிர்ந்தணைந்தபோது புண் மூடிக்கொண்டுவிட்டதை அவன் அறிந்தான். நடந்தபோது வலியிருக்கவில்லை. வெந்நீர் ஓடிய சிற்றோடைகளையும் விழுந்துகிடந்த பெருமரங்களையும் கடந்து அவர்கள் சென்றனர்.
அவர்களுடன் செல்கையில் அந்தச்சிறு காடு அவன் அப்போது வரை அறியாத முகங்களை காட்டத்தொடங்கியது. மலைகளின் இடுக்கு ஒன்றை செறிந்த மரங்கள் மூடியிருந்தன. அதனூடாகச் சென்றபோது அந்த மறைவாயிலின் இரு பக்கங்களிலும் திமில்பெருத்து திமிரெழுந்த நோக்குடன் நின்றிருந்த காளைவடிவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். “அவை எங்கள் குலக்குகுறிகள். இவற்றுக்கு அப்பால் எங்கள் வாழ்நிலம்” என்று பன்றியை தோளில் சுமந்துகொண்டுவந்த மூத்தமைந்தன் சொன்னான்.
“இங்கே காவல் என்று ஏதுமில்லையே?” என்றான் அர்ஜுனன். “காவலா? எதற்கு?” என்று காளி கேட்டாள். “இதற்குள் வரும் விலங்குகள் அனைத்தும் எங்கள் சொல்கேட்பவைதான்.” அர்ஜுனன் “எதிரிகள் வரக்கூடுமே?” என்றான். “எதிரிகள் என்றால்?” என்றான் மூத்தமைந்தன். அர்ஜுனன் “உங்களை தாக்குபவர்கள். வெல்பவர்கள். அடிமைப்படுத்தி திறைகொள்பவர்கள். கொள்ளையடித்துச் செல்பவர்கள்” என்றான். காளன் ஒருகையால் தொடையை அறைந்து வெடித்துச்சிரிக்க காளி சினத்துடன் திரும்பி “அதென்ன எப்போதும் ஒரு மூடச்சிரிப்பு? செவி ரீங்கரிக்கிறது?” என்றாள். காளன் சற்று குறுகி சிறுவன் போல “இவன் காலால் என் மார்பை வருடி கூச்சமளித்தான். அதனால்தான்” என்றான்.
காளி அர்ஜுனனிடம் “நாங்கள் இங்கிருப்பதை எவரும் அறியமாட்டார்கள். இந்த எல்லைக்கு அப்பால் சென்று பிறவுலகை அறிந்து வந்தவர்களே நானும் இவரும் மட்டும்தான். பிறருக்கு புறமென ஒன்று உண்டென்றே தெரியாது” என்றாள். “புறவுலகுக்கு நீங்கள் ஏன் சென்றீர்கள்?” என்றான் அர்ஜுனன். காளன் “எல்லா வகையான காதல்களையும் செய்துபார்ப்பதற்காகத்தான்” என்றான். “அய்யோ” என்றபடி காளி அவனை அறைந்தாள். அவன் விலகிக்கொண்டு உரக்கநகைத்தபடி “ஹை ஹை ஹை” என ஓசையிட்டு நடனமிட்டான். அவள் அவனை அடிக்கச்செல்ல அவன் நடனமிட்டபடி விலகினான். அவன்மேல் அமர்ந்த இளையவன் கைகளை வீசி எம்பி குதித்து பால்பற்கள் தெரிய சிரித்தான்.
மூத்தவன் அர்ஜுனனிடம் “நன்றாக ஆடுவார்… உள்ளே போனதுமே சிவப்புகை இழுப்பார். அதன்பின் இரவெல்லாம் ஆட்டம்தான்” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் அவர்களைப் பார்த்தான். காளி மூச்சிரைக்க “உள்ளே வருக… பார்க்கிறேன்” என்றாள். மூத்தவன் “சிலதருணங்களில் நானும் ஆடுவேன். எனக்கு களிமயக்கு எழவேண்டும்” என்றான். “சிவப்புகை எடுப்பாயா?” என்றான் அர்ஜுனன். “இல்லை, எனக்கு வயிறு முழுமையாக நிறைந்தாலே களியெழுந்துவிடும்” என்றான் மூத்தவன்.
அர்ஜுனன் சட்டென்று நின்று “ஆ!” என்றான். “என்ன?” என்று அவள் கேட்டாள். “நாகம் கொத்திவிட்டதா? அஞ்சாதே, எங்களிடம் நஞ்சுநீக்கும் பச்சிலைகள் பல உள்ளன.” அர்ஜுனன் “இல்லை அன்னையே, நீங்கள் அஸ்தினபுரிக்கு வந்திருந்தீர்களா?” என்றான். “நாங்கள் மண்ணிலுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றோம்” என்றான் காளன். “ஆமாம், மண்முழுக்கச் செல்வது… அறிவில்லாமல் எதையாவது பேசுவது. கேட்டால் ஒரு கிறுக்குச் சிரிப்பு” என நொடித்தபின் “ஏன் கேட்கிறாய், மைந்தா?” என்றாள்.
“நீங்களெல்லாம் பேசுவது அஸ்தினபுரியின் தனிச்செம்மொழியை… அந்த உச்சரிப்புகூட அப்படியே அஸ்தினபுரியிலுள்ளது” என்றான். அவள் “அப்படியா?” என்றாள். “ஆம், மலைநோக்கி வருந்தோறும் மொழியில் பீதர்மொழியின் ங ஒலியிருக்கும். மேற்குநோக்கி சென்றால் யவனர்களின் ழ ஒலியிருக்கும். தெற்கே சென்றால் தென்மொழியின் குறுமுழவோசை கலக்கும்” என்றான் அர்ஜுனன். “அஸ்தினபுரியின் மொழி கங்கைக்கரை ஓசைகொண்டது. வங்கம் முதல் பாஞ்சாலம் வரை புழங்கும் இம்மொழியில் யாழின் ஓசை கலந்திருக்கும்.”
“நாங்கள் இந்தமொழியை உன் உள்ளத்திலிருந்தே எடுத்துக்கொள்கிறோம்” என்றான் காளன். “உளம்புகுக் கலையா? நான் அதை கற்கமுடியுமா?” என்றான் அர்ஜுனன். “உளமழியும் கலை என்று சொல்லலாம். கற்பதற்கு உளமில்லாதாகும்போது வந்தடையும் கலை அது” என்று சொல்லி காளன் கண்சிமிட்டினான். “இவர் பேசுவதை புரிந்துகொள்ள முயலாதே. அது இவருக்கே தெரியாது. நீ உனக்கு வேண்டியதை மட்டும் கற்றுக்கொள்” என்றாள் காளி. “மறந்தும் இவரிடமிருந்து சிவப்புகையை பெற்றுக்கொள்ளாதே. பெற்றதாய் மைந்தனுக்கு ஊட்டுவதுபோல கொஞ்சிக்கொஞ்சி நீட்டுவார். வாங்கி இழுக்கத் தொடங்கினால் அதன்பின் உனக்குள் ஒரு சொல்லும் இருக்காது. உறவும் கடமையும் மறக்கும். வெறும் முகில் மட்டுமே இருக்கும்.”
அர்ஜுனன் “இல்லை, அன்னையே” என்றான். அவனை நோக்கி காளன் கண்சிமிட்டி மீண்டும் புன்னகைசெய்தான். அர்ஜுனன் மூத்தவன் மிக எளிதாக அந்தப்பெரிய பன்றியை தூக்கிவருவதைக் கண்டான். அவனுக்கு ஐந்துவயதுகூட இருக்காதென்று முகம் காட்டியது. ஆனால் அர்ஜுனனின் தோள் அளவுக்கு உயரமிருந்தான். “உன் பெயர் என்ன?” என்றான். “கொம்பன்” என்றான் அவன். அவ்வொலி அர்ஜுனனை சற்று திகைக்கச் செய்தது. “அதன் பொருள் என்ன?” என்றான். “களிற்றுயானை. பெருங்கொம்பு கொண்டது” என்றான் கொம்பன். “என் இளையோன் பெயர் குமரன்… சிறுவன் என்று அதற்குப் பொருள். தந்தை அவனை அழகன் என்று அழைப்பார்.”
அஞ்சிய முட்பன்றியென அர்ஜுனனுக்குள் அனைத்துப் புலன்களும் முள்கொண்டன. அவன் நின்றுவிட்டான். “ஏன்?” என்றான் கொம்பன். “இந்தப் பெயர்கள் தென்மொழியில் அமைந்தவை….” என்றான். “தென்மொழியா?” என்றபடி கொம்பன் அவனை ஏறிட்டு நோக்கினான். “பாரதவர்ஷத்தின் தென்முனம்பில் பேசப்படும் மொழி அது. தென்னவர் தொன்மையான கடலோடிகள். முத்துக்களை பணமாகக் கொண்டு உலகுடன் வணிகம்செய்பவர். இசைதேர்ந்தவர்கள். ஏழுவகை யாழ்கொண்டவர்கள். அவர்களின் மொழியிலமைந்த பெயர்கள் இவை.”
அர்ஜுனன் அந்தப்பெயர்களை மீண்டும் சொல்லி “கொம்பன் என்ற பெயரிலேயே தென்னகப்பாணன் ஒருவன் அஸ்தினபுரிக்கு வந்திருக்கிறான். அவன் முகத்தைக்கூட நினைவுறுகிறேன்” என்றான். கொம்பன் “அவன் என்னைப்போலவே சிறந்த வீரனா?” என்றான். “அவன் பாணன்” என்றான் அர்ஜுனன். “அவனால் முழுப்பன்றியை உண்ணமுடியுமா?” என்றான் கொம்பன். அர்ஜுனன் சிரித்துவிட்டான்.
அப்பால் காளியும் காளனும் தங்களுக்குள் ஏதோ பேசியபடி வந்தனர். தலைக்குமேல் குமரன் விழுந்து துயின்றுகொண்டிருந்தான். “அவன் மேலே ஏறினாலே துயின்றுவிடுவான். என்னை அவர் அப்படி ஏற்றிக்கொள்வதில்லை” என்றான் கொம்பன். “நான் எடை மிகுதி. மேலும் செல்லும்வழியெல்லாம் கனிகொய்து உண்பதனால் அவரால் நடக்கவும் முடியாது” அர்ஜுனன் “என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்றான். “அவர்கள் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார்கள். சண்டைபோடுவதற்காக பேசுவார்கள். மீண்டும் பேசுவதற்காக சண்டை போடுவார்கள்” என்றான் கொம்பன்.
அவர்கள் சென்றடைந்த நிலம் தென்னகம் போலவே இருந்தது. ஓங்கிய தென்னைமரங்கள் உடல்வளைத்து நடமிடும் பாணர்களும் விறலியரும்போல இலைவிரித்து நின்றிருந்தன. கொடிமரங்களின் செறிவென கமுகுகள், கிழிந்த பேரிலையை யானைச்செவிபோல அசைத்தபடி வாழைகள், கருங்கால்வேங்கைகள், விழுதுபரப்பிய ஆல்கள், இலைச்சிமிட்டல்கள் அடர்ந்த அரசுகள், பொன்னணிந்த கொன்றைகள், இலுப்பைகள். இலை சிலிர்த்த வேம்பு. புதுத்தளிர்விட்ட புங்கம். இளவேனில் எழுந்திருந்தது அங்கு. பறவைகளின் ஓசை தலைக்குமேல் பெருகிநிறைந்திருந்தது. இலைகள்மேல் காற்றோடும் ஓசை அருவியை அணுகுவதுபோல எண்ணச்செய்தது.
விழிவிரிய சுற்றிலும் நோக்கியபடி “தென்னகநிலம்!” என்றான் அர்ஜுனன். காளன் அதைக்கேட்டு அருகணைந்து “ஆம், தெற்கே இதைப்போலொரு நிலமிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது எங்கள் பாடல்களில்” என்றான். பசும்பரப்பின் ஊடாகச்சென்ற கால்தடப்பாதையில் அவர்கள் சென்றனர். பசுமைக்குள் தெரிந்த மலைப்பாறைகள் அனைத்துமே முகங்களாக செதுக்கப்பட்டிருந்தன. ஊழ்கத்தில் மூழ்கிய முகங்கள் சில. விழி உறுத்து கேளாச்சொல்லொன்றைச் சொல்லி அமைந்தவை. கனிந்துபுன்னகைக்கும் அன்னையர் முகங்கள். தந்தையருக்குக் கீழே எருதுகளும் யானைகளும் செதுக்கப்பட்டிருந்தன. அன்னையருக்கு கலைமான்களும் சிம்மங்களும். அவர்கள் அனைவருமே சடைத்திரிக்கூந்தல் கொண்டிருந்தனர். அவை வழிந்து விழுதுகளென நிலம்தொட்டு விரிந்திருந்தன.
“அவர் எங்கள் குலமூதாதையர்” என்றான் காளன். “உங்கள் குலப்பெயர் என்ன?” என்று அர்ஜுனன் கேட்டான். “காலர்” என்று காளன் சொன்னான். “கால் எனில் காற்று. அலையலையென எழுந்துவரும் முடிவிலா காற்றென்றே காலம் எங்கள் மூதாதையரால் அறியப்பட்டது. பருவங்களைச் சமைப்பது அதுவே. மலர்களை முகிழவிழச்செய்கிறது. மகரந்தங்களால் சூலுறச்செய்கிறது. காயும் கனியும் ஆக்குகிறது. விலங்குகளிலும் பறவைகளிலும் காமத்தை எழுப்புகிறது. மழையையும் பனியையும் சுமந்துவருகிறது. வெயிலை குளிரவைத்து அளிக்கிறது.”
“காற்றே மூச்சு என உடலில் ஓடுகிறது. காலமென்றாகி நெஞ்சில் துடிக்கிறது. எண்ணங்களாகி அகத்தை நிறைக்கிறது. காற்று அகலும்போது அன்னம் மீண்டும் அன்னமென்றாகிறது” என்று காளன் தொடர்ந்தான். “அன்ன எனில் போல என்று பொருள். அன்னதே அன்னமென்றாகியது. பொருளை பிறிதொன்றுடன் ஒப்பிடாமல் அறியமுடியாது. ஒப்பிடப்பட்ட முதற்பொருளின் முன்பாக அனைத்துடனும் ஒப்பிடப்படும் முழுப்பொருள் நின்றிருந்தது” என்றான். “அது அன்னத்தைப் பொருளென்றாக்குகிறது. சொல்லில் பொருளென குடிகொள்கிறது.”
சிவந்தவரிகள் ஓடிய அவன் விழிகள் சிப்பியின் உட்தசைபோலிருந்தன. கருவிழிகளுக்கு நடுவே நோக்கிலாதவைபோல வெறித்தன இரு உள்விழிகள். “குடி என்றால் வாழ்வது. கூடுதல் என்றால் இணைவது, மிகுவது. கூடுவதே குடி. குடியை கூடு என்றும் நாங்கள் சொல்வதுண்டு. வழிதலென்பது வழியென்றானது. வழியே வாழ்வென்றானது. வாழ்வே வழுத்துதல் என்க! வழுவும் அதுவே.” அருகே நின்ற பேரிலைக்கதலியை கையால் தட்டி “வாழ்வதென்பதனால் இது வாழை. குளிர்ந்தது, கனிவது, வேர்முளைப்பது, முழுமைகொண்டழிவது” என்றான்.
“தென்மொழியேதான்… ஐயமே இல்லை. அத்தனை சொற்களும் அம்மொழியே” என்றான் அர்ஜுனன் வியப்புடன். “நன்று, அதை நானறியேன். அவர்கள் இங்கிருந்து மொழியை கொண்டுசென்றிருக்கக்கூடும். இதுவே ஊற்றுமுகம். இங்கு எழுந்த அனலே எங்கும் பற்றிக்கொண்டது” என்று காளன் சொன்னான். “முழுமுதற் சொல்லை பெற்றுக்கொண்ட மூத்தகுடியென்பதனால் நாங்கள் இங்கு மலைசூழ்ந்து காக்க அதில் திளைத்துவாழ்கிறோம்.” அவன் தலையைத் தொட்டு “வருக!” என அவன் முன்சென்றான்.
“அந்த முதற்சொல் வாட்கருக்கு கொண்ட வைரம். அருநஞ்சும் ஆராவமுதும் ஒன்றென்றானது. அதை எங்களுக்கு உகந்த முறையில் மெருக்கிக்கொண்டோம். எங்கள் தலைமுறைச்சரடின் காலப்பெருக்கில் உருண்டு உருண்டு மொழுத்தமையால் அதை மொழி என்கிறோம்” என்றான் காளன். “எங்கள் மொழியை அறிக! எங்கள் தொல்மூதாதையர் கண்ட முழுமுதன்மை ஆயிரம் நாவுகளில் அமைந்ததே எங்கள் மொழி. சொல்தொட்டு பொருள்பெற்று பின்னகர்ந்து சென்றமைக! அதுவே இங்குள்ள ஊழ்கம்.”
அவன் அர்ஜுனனின் தோளில் தன் வேங்கைமரக்கிளைபோன்ற பெருங்கையை வைத்தான் “அந்த முதற்சொல்லே பாசுபதம் என சொல்லப்படுகிறது.” அர்ஜுனன் மின்தொட்ட மரம் என சுடர்ந்து நின்றான். பின்னர் மெல்ல எரிந்தணைந்தான். நீள்மூச்சுடன் “ஆம், அதன்பொருட்டே வந்தேன்” என்றான்.
அவர்களை நோக்கி அங்குள்ள சோலைக்குள் இருந்து இளையோர் கூச்சலிட்டபடி ஓடிவந்தனர். கரிய முகத்தின் வெண்பல்நகைகளும் இடையணிந்த வெண்கல்நகைகளும் மட்டும் முந்தித்தெரிவதுபோலத் தோன்றியது. அவர்களின் குரல்கேட்டு தந்தையின் தோளிலிருந்த இளையவன் எழுந்து கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தான். “இறக்கு இறக்கு” என்று கூவினான். அவனை இறக்கிவிட்டதும் கைவிரித்துக்கொண்டு ஓடி அவர்களுடன் இணைந்துகொண்டான். அவர்கள் அவனிடம் பேசியபடியே உள்ளே ஓடினர்.
உள்ளிருந்து கல்நகைகளும் மான்தோல் ஆடையும் அணிந்த கரிய பெண்கள் இலைப்பசுமைக்குள் இருந்து தோன்றினர். அர்ஜுனனை வியப்புடன் நோக்கி “மீண்டும் வந்திருக்கிறாரா?” என்றாள் ஒரு முதுமகள். “அவர் வேறு ஒருவர். இவர் அவருடைய நண்பர்” என்றான் காளன். “யார்?” என்று அர்ஜுனன் கேட்டான். உடனே பீலிமுடியன் என காளி சொன்னது நினைவிலெழுந்தது. “அவரா? இங்கு வந்துள்ளாரா?” என்றான். “ஆம், அவனுடைய முதிரா இளமையில்… உன்னுடன் என நான் அவனுடன் போரிட்டேன்” என்றான் காளன்.
அர்ஜுனன் “அதன்பின்?” என்றான். “அவன் ஆழியைப் பற்றி இங்கே கொண்டுவந்துவிட்டேன். என் பின்னால் அவனே வந்தான். இங்கு சிலநாட்கள் தங்கிச்சென்றான். அதன்பின் இங்கு வருபவன் நீ மட்டுமே” என்றான் காளன். மேலும் மேலும் பெண்கள் வந்து அவர்களைச் சூழ்ந்தனர். அனைவரும் அர்ஜுனனை ஆர்வத்துடன் நோக்கி உடன் நடந்தனர். அவன் விழி அவர்களை சந்தித்ததும் புன்னகைத்தனர். வெண்பரல்நிரை கரியநீரிலெழுந்ததுபோன்ற சிரிப்புகள். நீர்த்தண்மை நிறைந்த விழிகள்.
“முன்பு எவர் வந்திருக்கிறார்கள்?” என்றான் அர்ஜுனன். “குறுமுனிவன் ஒருவன் வந்தான். என் முழங்காலளவே உயரமானவன். பெருவயிறன். தாள்தோய்ச் சடையன்” என்றான் காளன். “அகத்தியர்” என்றான் அர்ஜுனன். “இப்போது தெரிகிறது, தென்மொழி இம்மொழிபோன்று எழுந்தது எவ்வாறென்று” என்றான். வியப்புடன் தலையை அசைத்தபடி “இங்கிருந்து சென்ற அனலா?” என தனக்குள் சொல்லிக்கொண்டான்.
[ 34 ]
அந்த மலையுச்சித் தாழ்வரையின் பெயர் கைலை. அதன் நடுவே விண்முட்ட எழுந்து நின்ற களிறுவடிவ மலையே கைமா என்றழைக்கப்பட்டது. கைமாமலை மருவி கைலையென்றாகி அத்தாழ்வரையே அப்பெயர சூடிக்கொண்டது. கைமா மீது எப்போதும் அனல்முகில் அமர்ந்திருந்தது. அதற்கப்பாலிருந்த பன்னிரு அனல்மலைகளின் வெம்மையால் கோடைவெம்மை கொண்டிருந்த அந்நிலத்தில் கதிர்விரியும் பகுதிகளுக்குரிய மரங்களும் செடிகளும் புட்களும் பூச்சிகளும் பிறந்துபெருகி ஒரு தனியுலகை அமைத்திருந்தன.
பச்சைப்பாசி படிந்த கருங்கற்பாளங்களை சுவரென்றும் கூரையென்றும் அமைத்துக் கட்டப்பட்ட தாழ்ந்த இல்லங்களின்மேல் பீர்க்கும் சுரையும் இலைவிரித்துப் படர்ந்தேறியிருந்தன. மூங்கில்வேலிக்குமேல் பூசணிக்கொடிகள் பூக்கள் விரிய நீர் உண்ட செழிப்புடன் பேரிலை விரித்து நின்றிருந்தன. அத்தனை இல்லங்களிலும் முகப்பில் மரத்திலோ மண்ணிலோ செய்யப்பட்ட எருதுச்சிலை வைக்கப்பட்டிருந்தது. சாய்ந்த பின்காலைவெயில் படிந்த சிறுமுற்றங்களில் மூங்கில்பாய்களில் கம்பும் தினையும் சாமையும் வரகும் காயப்போடப்பட்டிருக்க காகங்கள் சூழ்ந்தெழுந்து பறந்தன. கையில் இலைச்செண்டுகொண்ட நீண்ட கழியுடன் அமர்ந்திருந்த மூதன்னையர் பாடல்போலக் கூவி கோல்வீசி காகங்களைத் துரத்தும் அகவலோசைக்கு மரங்கொத்திகளும் அணில்களும் எழுப்பிய கொத்தொலிகளும் செதுக்கொலிகளும் தாளமாயின.
கிளைகளின் ஊடாக இறங்கி புற்பரப்பில் பதிந்து இளம்பச்சை வட்டங்களாக ஆன வெயில்பட்டைகளில் சிறுபூச்சிகளும் சருகுத்திவலைகளும் ஒளிகொண்டு மிதந்தன. அதன் ஒலிவடிவம் என எங்கோ குழலோசை ஒன்று சுழன்று சுழன்று காற்றில் கரைந்து மீண்டும் உருக்கொண்டது. பச்சையின் அழுத்தமாறுபாடுகளால் ஆன சோலைகள். தளிர்ப்பச்சையை வெட்டி அமைத்த சிறுபாத்திகளில் பசும்பயிரின் அலைகள். அவற்றின்மேல் நீராவியென எழுந்து அமைந்த சிறுபூச்சித்தொகையின் ஒளிர்வுகள். காலடிகள் படிந்த செம்மண் தரையில் முந்தைய மழையின் ஈரம் எஞ்சியிருந்தது. கொன்றைகளுக்குக் கீழே கால்குழித்தடங்களில் பொன்பொடி என மகரந்தம் உதிர்ந்து கிடந்தது.
அத்தனை இல்லங்களிலிருந்தும் சிறுவர்கள் இறங்கிவந்து இளையோனுடன் விளையாடலாயினர். அவர்களின் கூச்சல்கள் செவிதுளைக்க முகம் சுளித்த காளி “உண்பதெல்லாம் குரலென்றே வீணாகிறது…” என்றாள். “நான் குரலெழுப்புவதே இல்லை, அன்னையே” என்றான் கொம்பன். “நீ சற்று குரலெழுப்பி உடல்கரைத்தால் நன்று” என்று அவள் சொன்னாள். கொம்பன் அர்ஜுனனிடம் “நாம் இதை மன்றுக்குக் கொண்டுசென்று சேர்ப்போம். அடுமடையர்கள் இதைச் சுடுவார்கள். இஞ்சியும் மிளகும் மலையுப்புடன் சேர்த்துப்பூசி சுட்டால் பன்றியின் ஊன்நெய் உருகி அதிலிணைகையில் அமுதென்றிருக்கும்” என்றான். “செல்க, உண்பதற்கு அவனிடம்தான் கற்கவேண்டும்” என்றாள் காளி.
வெண்ணிறக் கல்லில் செதுக்கப்பட்ட எருதுச்சிலை எழுந்த அவர்களின் இல்லத்தை அடைந்ததும் காளன் “நீ மன்றுக்குச் செல்க, இளவரசே! நாங்கள் அங்கு வந்துவிடுகிறோம்” என்றான். அவன் இல்லத்திற்குமேல் தோகைசரிய மயில் ஒன்று அமர்ந்திருந்தது. காலடியோசை கேட்டு நீள்கழுத்து ஒளிமழுங்க அது திரும்பி நோக்கியது. தோகை தொங்கி அசைய சிறகோசையுடன் பறந்து அருகே நின்ற மகிழமரத்தின்மேல் சென்று அமர்ந்து கழுத்தைச் சொடுக்கி அகவியது. அவர்கள் பசுங்குடிலென ஒளிகொண்டிருந்த அந்த இல்லத்திற்குள் நுழைய உள்ளிருந்து கன்றுக்குட்டி ஒன்று வெளியே பாயந்தது. காளி உரக்க நகைத்து அதன் முதுகில் தட்டினாள்.
அவர்கள் இருவரும் இல்லத்திற்குள் செல்ல கொம்பன் அர்ஜுனனிடம் “அங்கே சென்றதுமே சண்டைபோடுவார்கள்” என்றான். “எப்படி தெரியும்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அவர்களில் யார் உயர்ந்தவர் என்பது இன்னும் முடிவாகவில்லை” என்ற கொம்பன் “நாம் செல்வோம். பன்றி உடல்வெம்மையை இழந்தபடியே செல்கிறது. சுவைகுன்றிவிடும்” என்றான். “ஆம், இது எனக்கு அன்னை அளித்த கொடை” என்றான் அர்ஜுனன். கொம்பன் ஐயத்துடன் நோக்கி “அப்படியா? நம்மிருவருக்கும் உரியது என்றல்லவா சொன்னார்?” என்றான். அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “ஆம், நான் மறந்துவிட்டேன்” என்றான்.
மன்றுமுற்றத்தில் மையமாக ஒரு பெரிய பீடம் இருந்தது. அதன் நடுவே செங்குத்தாக எழுந்த பெரிய சிவக்குறியை அர்ஜுனன் கண்டான். தீட்டப்பட்ட கரியகல்லில் சூழ்ந்திருந்த மரங்களின் பாவைகள் ஆடின. அதன்முன் இருந்த பலிபீடத்தில் காலையில் படைக்கப்பட்ட மலரும் பொரியும் இருந்தன. சிறுகுருவிகள் எழுந்தமைந்து பொரியை உண்டுகொண்டிருந்தன. மன்றில் மூன்று முதியவர்கள் சிறிய கல்பீடத்தில் அமர்ந்து சுருங்கிய விழிகளுடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் திரும்பி நெற்றியில் கைவைத்து நோக்கினர். ஒருவரின் தாடை மெல்ல விழ வாய் சிறுதுளையெனத் தெரிந்தது. உள்ளே நாக்கு பதைத்தது.
அவர்கள் மூவருமே செஞ்சடையை மகுடமெனச் சுற்றிவைத்து நெற்றியில் மூவிழி வரைந்து உடலெங்கும் நீறுபூசியிருந்தனர். இடையில் புலித்தோல், கழுத்தில் கருவிழிமணிமாலை. ஒருவர் கையில் முப்பிரிவேல் இருந்தது. அர்ஜுனன் அவர்களை அணுகியதும் கை தலை மார்பு வயிறு கால்கள் நிலம்படிய விழுந்து வணங்கினான். அவர்களில் முதியவர் முப்பிரி வேலை நீட்டி அவன் தலையைத் தொட்டு “எழுக!” என்றார். அவன் எழுந்து அமர்ந்ததும் “அஸ்தினபுரியின் இளவரசருக்கு நல்லூழ் அமைக!” என்றார். அர்ஜுனன் மீண்டும் கைகூப்பினான்.
கொம்பன் அந்தப்பன்றியை கால்பிணைத்து தூக்கி முக்கால் நடுவே தலைகீழாகக் கட்டினான். “அடுமடையர்கள் எங்கே?” என்றான். “பொறு மைந்தா… பிறரும் வரட்டும்” என்றார் முதியவர். அர்ஜுனன் அந்த முழுவட்டத் தாழ்வரையைச் சூழ்ந்திருந்த நீலமலையடுக்குகளை நோக்கினான். அவற்றின் அடிவளைவில் இருந்து பசியகாடு எழுந்து வந்து அவ்வூரைச் சூழ்ந்திருந்தது. அங்கிருந்து குரங்குகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. காட்டின் மீது வெண்முகில்கள் சிதறி மெல்ல காற்றில் பிரிந்துகொண்டிருந்தன. முதியவர் “அமர்க!” என்று கையை காட்டினார்.
அர்ஜுனன் அவர்களின் காலடியில் அமர்ந்துகொண்டான். “என்பெயர் சடையன்” என்று முதல் முதியவர் சொன்னார். “நெடுந்தொலைவு வந்துள்ளாய். நீடுதவம்செய்து உடலுருகியிருக்கிறாய்…” இன்னொருவர் “என்பெயர் பேயன்” என்றார். “நீ உகந்த வழிகளினூடாகவே இங்கு வந்துள்ளாய் என உன் விழிநோக்கி அறிகிறேன்” என்றார். அர்ஜுனன் அவரை வணங்கி “அவ்வாறன்றி இங்கு வர இயலாதென்று அறிவேன், எந்தையே” என்றான். அவர் நகைத்து “ஆம்” என்றார். மூன்றாமவர் “என்னை எரியன் என அழைக்கிறார்கள். உன்னைக் கண்டதும் நான் மகிழ்ந்தேன், மைந்தா” என்றார். “அது எந்தையரிடமிருந்து நான் பெற்ற நல்லூழ்” என்றான் அர்ஜுனன்.
“சொல்க, நீ எங்களிடமிருந்து விழைவது என்ன?” என்றார் சடையன். பிற இருவரும் கண்களில் புன்னகையுடன் அவனை கூர்ந்து நோக்கினர். “நான் பாசுபதம் பெறுவதற்காக இங்கு வந்தேன்” என்றான் அர்ஜுனன். சடையன் நகைத்து “நன்று, அதைக்கொண்டு நீ செய்யப்போவது என்ன?” என்றார். அர்ஜுனன் என்ன சொல்வதென்றறியாமல் அவர்களை முன்னும்பின்னும் நோக்கினான். “மைந்தா, எந்த அறிதலும் படைக்கலமாகும். பாசுபதம் முழுமுதல் அறிதலென்பதனால் அதுவே நிகரில்லா கொலைக்கருவி. நீ வெல்ல விழைவது எது?” என்றார் பேயன்.
அர்ஜுனன் இடையில் கைவைத்து திகைத்த உள்ளத்துடன் நின்றான். பின்னர் “நிகரற்ற படைக்கலத்தால் வென்றடையப்படுவதென இங்குள்ளது என்ன? நிகரற்ற ஒன்றை நோக்கி அல்லவா அதை செலுத்தவேண்டும்?” என்றான். “ஆம், நீ வெல்லப்போவது எதை?” என்றார் எரியன். அர்ஜுனன் “இம்மண்ணில் எதையும் அல்ல” என்றான். சடையன் உரக்க நகைத்து “சொல்லெண்ணுக! மானுடர் எய்தற்கரிய பெரும்படைக்கலம் உன்னிடமிருக்கும். நீ காணும் கொலைப்போர்க்களங்களில் உன்னைவிட ஆற்றலுள்ளோர் உனக்கு எதிர்வருவர். உன் உற்றார் அவர்களின் படைக்கலம்முன் நிற்பர். உன் அரசும் குடியும் புகழும் உன்வில் ஒன்றையே சார்ந்திருக்கும். ஆனால் அனைத்தையும் வெல்லும் பெரும்படைக்கலத்தை நீ எடுக்க முடியாது” என்றார்.
“ஆம், எடுக்க மாட்டேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க, உன் மைந்தர் சிரமறுந்து விழும் களத்திலும் அதை கைக்கொள்ளமாட்டாயா?” அர்ஜுனன் “இல்லை, அத்தனை பெரிய படைக்கலத்தை ஏந்தியவன் வான் தொட தலை எழுந்த விராடன். அவன் எளியமானுடர்மேல் கருணையுடன் மட்டுமே இருந்தாகவேண்டும்” என்றான். “நன்று” என்றார் சடையன். “பாசுபதம் பெறும் தகுதிகொண்டவனே நீ, நன்று!” என்று பேயன் நகைத்தார். “தந்தையரே, பாசுபதம் பெற நான் செய்யவேண்டியதென்ன?” என்றான் அர்ஜுனன். “குனிந்து இம்மண்ணிலுள்ள ஒரு கூழாங்கல்லை எடு” என்றார் சடையன். அர்ஜுனன் குனிந்து ஒரு சிறுகல்லை எடுத்துக்கொண்டான். “இளையவனே, இதுவே பாசுபதம்” என்றார் சடையன்.
தொடர்புடைய பதிவுகள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
January 5, 2017
லண்டன் பிரபு,சு.வேணுகோபால்,ஒரு போட்டி
புத்தாண்டுக் குறிப்பில் லண்டன் பயணம் குறித்த நினைவுகளில் நான் லண்டன் பிரபுவை விட்டுவிட்டேன் என நண்பர் ஒருவர் கூப்பிட்டுச் சொன்னார். சொரேர் என்று உறைத்தது. அது ஏன் என்று நானே மண்டையைத் தட்டிக்கொண்டேன். பிரச்சினை இதுதான். ஒருவரை முதலில் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் ஆழ்மனம் பதிவுசெய்துகொள்கிறது. லண்டன் பிரபு ஊட்டி சந்திப்புகளுக்கு வந்து அறிமுகமானவர். அந்நினைவுடன் கலந்தே அவர் முகம் இருப்பதனால் லண்டனுடன் அவர் தொடர்பு படவே இலை.
இது ஏன் என்பதை எவ்வளவு மண்டையை குடைந்தும் புரிந்துகொள்ள முடியவில்லை. நினைவுகளை உள்ளம் சேமிக்கும் விதம் அது. இவ்வளவுக்கும் ஒவ்வொரு ஊட்டி சந்திப்புக்கும் ‘பிரபு ஆப்செண்டா?” என்று கேட்டு அவர் லண்டன்வாசி என்று கிருஷ்ணன் சொல்வார். ஐரோப்பியப் பயணத்தில் அவரை நினைவூவுகூர வேண்டும் என்பதற்காகவே ”எனக்கு ஒரு லண்டன்பிரபுவை தெரியும்” என கட்டுரை எழுதப்போகிறேன் என்று கேலியும் செய்திருந்தேன்.
இன்னொரு விஷயம் பெயர்கள். என்னுடன் இரண்டு ஆண்டுக்காலம் பயணங்கள் பல செய்தும்கூட ராஜமாணிக்கத்தை ராஜரத்தினம் என்றே நினைவில் வைத்து அப்படியே கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவரும் அதை திருத்துவதே இல்லை. பின்னர் மெல்ல நானே திருத்திக் கொண்டேன். ‘மோட்டார்’ சீனிவாசன் இன்னொரு சீனிவாசனுடன் ஊட்டி சந்திப்புக்கு வந்தார். இருவரும் கடலூர்காரர்கள் என ஏன் என் மனப்பதிவு இருக்கிறது என யோசித்தேன். அவர்கள் கடலூர்க்காரரான மணிமாறனுடனேயே இருந்தமையாலா?
இம்முறை கமலக்கண்ணனைப் பார்த்தபோது கோவைக்காரரான தாமரைக்கண்ணனை நினைத்துக்கொண்டு அவர் எங்கே என்று கேட்டேன். அருகிலேயே நின்றிருந்தார். தூயன் போன்ற பெயர்களுக்குச் சிக்கல் இல்லை. அவை மறப்பதே இல்லை. ஆனால் சிங்கப்பூர் நெப்போலியனும் இவரும் நெருக்கமானவர்கள் என ஒரு மனச்சித்திரம். ஏனென்றால் நெப்ஸ் புதுக்கோட்டைக்காரர். மாரிராஜையும் மலைச்சாமி அழகரையும் ஏதோ வகையில் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறது உள்ளம்
அதைவிடச் சிக்கல் மொழி. சக மலையாளியான நிர்மால்யாவிடம் என்னால் தமிழில்தான் பேசமுடியும். அவர் மனைவியிடம் மலையாளத்தில் பேசுவேன். அவர் மனைவியிடம் பேசிவிட்டு திரும்பி அவரிடம் பேசும்போது இயல்பாகவே மலையாளம் தமிழாகிவிடுகிறது. பலமுறை முயன்றுபார்த்தேன். இருவருக்குமே சிரிப்பு. அதேபோல பச்சைத்தமிழரான மலையாள நடிகர் பாலா வை சந்தித்தால் மலையாளத்தில்தான் பேசமுடியும். இன்று காலைமுதல் பலமுறை முயன்றேன். வாய் பிடிவாதமாக தமிழ்பேச மறுத்துவிட்டது.
இந்தக்குளறுபடிகள் அளிக்கும் சின்ன உறவுச்சிக்கல்கள் பல. அவ்வப்போது நண்பர்களிடம் மன்னிப்பு கோரவேண்டியதுதான் லண்டன் பிரபுவுக்கு ஒரு மன்னிப்புக்கடிதம் அனுப்பினேன். அதன்பின் தொடர்பினூடாகச் சென்று அவர் சு. வேணுகோபால் பற்றி எழுதிய பழைய கட்டுரையை வாசித்தேன். நல்ல கட்டுரை. ஆனால் குறிப்பு என்று சொல்லவேண்டும். இதை அவர் இன்னமும்கூட விரிவாக்கி எழுதலாம். இதில் அவர் ஓர் அவதானிப்பை நிகழ்த்துகிறார். சு.வேணுகோபால் மானுட உள்ளங்களின் இருண்மையை எழுதுபவர். ஆனால் அவ்வப்போது வரும் ஒளி ஒரு சிறு துயரம் போன்ற கதைகளில் தெரிகிறது. அதுவே அவரது சாரம் என தோன்றுகிறது
இந்தவகையான அவதானிப்புகள்தான் இலக்கியவிமர்சனத்திற்கான தொடக்கங்கள். ஆனால் இதை மேலும் கூர்மையாக்கி, பொதுவான கொள்கையாக்கி உசாவிக்கொள்ளவேண்டும். ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள்? ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள்? வேறு எழுத்தாளர்களுடன் சு. வேணுகோபாலை ஒப்பிட்டு அதை விரிவாக்கிக்கொள்ளலாம். எழுத்தாளர்கள் இருவகையில் மானுடக்கீழ்மையை எழுதுகிறார்கள். மானுடக்கீழ்மை என்பது மனிதனின் அகம் இயல்பாக வெளிப்படும் ஒர் உச்சம் என எண்ணும் படைப்பாளிகள் உண்டு. மானுட அறத்துக்கான தேடலில் மானுடக்கீழ்மையை கண்டு சீற்றம்கொண்டு எழுதுபவர்கள் உண்டு. சு. வேணுகோபால் எந்தவகை? அவரது கதைகளில் கீழ்மைச் சித்தரிப்பில் கண்டுகொண்டமையின் கொண்டாட்டமா அல்லது அறச்சீற்றமா எது வெளிப்படுகிறது?
[image error]
ஒரு விமர்சனம் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரிலிருந்து பொதுவான அறக்கேள்விகளை நோக்கிச் செல்லும்போதே ஆழமான விமர்சன ஆய்வாக ஆகிறது. இலக்கியவிமர்சனம் என்பது அபிப்பிராயம் என்பதிலிருந்து வேறுபடும் இடம் இதுவே. ஓர் எழுத்தாளனின் புனைவுலகிலிருந்து மேலெழுந்து அடிப்படை வினாக்களை எழுப்பிக்கொள்ளுதல், அந்த அடிப்படைவினாக்களை அந்தச்சூழல், அந்த மரபு எப்படி கையாண்டது என்பதைப் பார்த்து மதிப்பிடுதல், அந்தப்பின்புலத்தில் அந்த மரபில் அந்த எழுத்தாளர் எப்படி பொருள்கொள்கிறார் என்பதை மீண்டும் மதிப்பிடுதல் – இதுவே இலக்கியவிமர்சனத்தின் வழி
அப்படி எழுப்பிக்கொண்டால் சு.வேணுகோபாலை ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் என ஒரு வரிசையில் நிறுத்திப்பார்க்கமுடியும். அறக்கேள்விகளை, மானுட இருண்மைகளை அவர் கையாளும் விதம் முன்னோடிகளிடமிருந்து எப்படி முன்னகர்ந்திருக்கிறது என்பதை நோக்கியிருக்கமுடியும். அந்தப்பயணம் மேலும் விரிவான ஒரு கட்டுரையாக ஆகி வாசகர்களுக்கு புதிய திறப்பை அளித்திருக்கும். இப்போது லண்டன்பிரபுவின் கூடிய கட்டுரை நல்ல வாசகனை “ஆம், நானும் அதையே நினைத்தேன்” என்று மட்டுமே சொல்லவைக்கும். அவர் ஓர் ஒட்டுமொத்தநோக்கை முன்வைத்திருந்தால் நல்ல வாசகன் விவாதிக்க எழுந்திருப்பான். அவனை தனக்குள்ளேனும் விவாதிக்க வைப்பதே விமர்சனத்தின் ஒரே நோக்கம்.
இலக்கியவிமர்சனத்தின் நோக்கமும் பணியும் படைப்பிலிருந்து எழும் சிந்தனைகளை விரித்து ஒட்டுமொத்த மரபை, முழுமையான சிந்தனைப்புலத்தை நோக்கி கொண்டுசெல்வதும் அங்கிருந்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் அந்த நூலையும் ஆசிரியரையும் மீண்டும் மதிப்பிடுவதும்தான். தன் முடிவுகளை மட்டுமே சொல்வது எளிய மதிப்புரை மட்டுமே. லண்டன்பிரபு தொடர்ந்து எழுதவேண்டும்
சரி, ஒரு போட்டி வைப்போம். இந்தக்கட்டுரையில் இருந்து இதேவினாவை எழுப்பி மேலே சென்று ஒரு கட்டுரையை நண்பர்கள் எழுதமுடியுமா? மூன்றுகட்டுரைகளை இந்த தளத்திலே பிரசுரிக்கிறேன். பரிசாக என் நூல்கள் அனுப்பிவைக்கப்படும். 15 நாட்கள், ஜனவரி இருபத்தொன்றாம் தேதிக்குள் அனுப்பலாம்.
சு வேணுகோபால் சிறப்பிதழ் கட்டுரை லண்டன் பிரபு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குகாவை ‘மொழிங்கடித்தல்’
இனிய ஜெயம்,
ராமச்சந்திர குகா அவர்களின் “சுற்று சூழலியல் ஒரு உலகம் தழுவிய வரலாறு” நூலை திரு பொன் சின்னத்தம்பி முருகேசன் மொழி ” பெயர்த்து” இருக்கிறார்.
இப்படி.—-
நானும் காலையில் இருந்து தமிழில் இதை எப்பாடு பட்டேனும் மறு மொழி பெயர்த்து விளங்கிக் கொள்ள முயல்கிறேன்.
முடிந்தால் உதவவும்.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
தப்புசெய்துவிட்டீர்கள், சீனு தப்பு செய்துவிட்டீர்கள்
இதை தமிழாக்கம் செய்யக்கூடாது கூகிள் மொழியாக்க இயந்திரத்தைப் பயன்படுத்தி. ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து மீண்டும் நீங்களே கூகிளைக்கொண்டு தமிழாக்கம் செய்து வாசிக்கவேண்டும். நான் அவ்வப்போது அப்படிச் செய்வதுண்டு. பின்நவீனத்துவ எழுத்து என்றால் ஆங்கிலத்தில் இருந்து பிரெஞ்சுக்கு மொழியாக்கம் செய்து மீண்டும் ஆங்கிலமாக ஆக்கி அதை மீண்டும் தமிழாக்கம் செய்யவேண்டும்.
அதன்பின் நாம் ராமச்சந்திர குகாவுக்கே பாடம் எடுக்கமுடியும். பாவம் அவர் பதறிவிடுவார்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79
[ 32 ]
வானில் எழுந்த கருமுகில் திரளிலிருந்து இடியோசையுடன் மின்னலொன்று இறங்கி அர்ஜுனனை தாக்கியது. விண்யானையின் துதிக்கையால் தூக்கி வீசப்பட்டு அவன் சென்று மல்லாந்து விழுந்தான். அவன் முடியும் தாடியும் பொசுங்கிய எரிமயிர் மணம் மூக்கை நிறைத்தது. கண்களுக்குள் அவன் ஆழ்ந்திருந்த பணிகசிவம் என்னும் நுண்சொல் ஒளியலையாக கொந்தளித்தது. அவன் பற்கள் கிட்டித்திருந்தன. அவை உரசும் ஒலியை காதுகள் கேட்டன. அத்தனை தசைகளும் இழுபட்டு இறுக இழுத்து வளைக்கப்பட்ட முற்றிய மூங்கில்வில்லென கிடந்து துள்ளியது அவன் உடல்.
பின்னர் அறுபட்ட நாணொலியுடன் அவன் அகம் விடுபட்டது. இடக்கை மட்டும் இழுபட்டுத் துடித்தது. மூக்கில் தசைபொசுங்கும் வாடை. வாயில் குருதி நிறைந்திருந்தது. அவன் செங்கோழையைத் துப்பியபடி இடக்கையை ஊன்றி எழுந்தான். நெஞ்சில் உதைபட்டவன்போல பின்னால் சரிந்து விழுந்தான். கண்களை மூடி குருதியலைகளைக் கண்டபடி சற்றுநேரம் இருந்தான். அவை மெல்ல அடங்கியபின் மீண்டும் எழுந்தான். நிலம் சரிந்திருப்பதுபோலத் தோன்றியது. இருமுறை தள்ளாடி நிலைகொள்ளமுயன்றபின் மீண்டும் விழுந்தான்.
மூன்றாம் முறை எழுந்து கைகளை சற்று விரித்து விழிகளை தொலைவில் இருந்த பாறை ஒன்றில் நட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். ஒரு வலுவான சரடு போல அந்நோக்கு அவனை நிலை நிறுத்தியது. கடிபட்ட நாக்கு அதற்குள் வீங்கத் தொடங்கியிருந்தது. தலைமுடி உச்சியில் கொத்தாக கருகிச் சுருண்டு புகைந்துகொண்டிருந்தது. தொட்டு நோக்கியபோது சுருண்ட முடி பிசின் என ஒட்டியது கையில். அந்தப் பொசுங்கல்வாடை உடல்குமட்டி அதிரச்செய்தது. மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். மீண்டும் மீண்டும் நெஞ்சை நிரப்பி ஒழித்தான்.
சற்றே நிலைமீண்டபின்னர் காற்றை பற்றிக்கொள்பவன் போல தள்ளாடி நடந்து ஆற்றை அணுகி ஆவியெழ ஓடிக்கொண்டிருந்த சிற்றோடை ஒன்றில் குனிந்து நீர் அள்ளி குடித்தான். நீருக்கான தவிப்பே உடலுள் நிறைந்திருப்பதை அது செல்லும்போது உணரமுடிந்தது. நீர் உள்ளே சென்றதும் நனைந்தமைந்த உட்தசைகள் மீண்டும் தலைசுற்றச்செய்தன. கண்களை மூடி உள்ளோடிய செங்குமிழ்களின் சுழற்சியை நோக்கிக்கொண்டிருந்தான். விழித்து மீண்டும் நீரை அள்ளி முகத்தை கழுவிக்கொண்டான்.
எழுந்தபோது விழிதெளிந்திருந்தது. உடல் இயல்புமீண்டு கால்கள் மண்ணைக் கவ்வி நின்றன. பெருமூச்சுடன் விண்ணை நோக்கினான். அவனை குளவியெனக் கொட்டிவிட்டு அந்தக் கருமுகில் அகன்று சென்றிருந்தது. அதன் சிறகுகள் மெல்ல விரிந்திருந்தன. அதன் கருமைக்குள் இருசிறு மின்னல்கள் சீறித் துடித்து அடங்கின. அவன் தன் அடிவயிற்று வலியென பசியை உணர்ந்தான். அது பசியென சித்தம் அறிந்ததுமே உடலெங்கும் பசி பரவியது. கைவிரல்கள் நடுங்கலாயின. சூழிடமெல்லாம் உணவுக்காகத் துழாவியது விழி. மணம் கூர்ந்தது மூக்கு. ஒலி தேடியது செவி. நா ஊறி சுவைகொண்டது.
தன் வில்லையும் அம்புத்தூளியையும் எடுத்துக்கொண்டு மெல்லிய காலடிகளுடன் நடந்தான். நாலைந்து காலடிகளுக்குள்ளாகவே அவனுள் உறைந்த வேட்டைக்காரன் எழுந்தான். அடிமேல் அடி பூனைப்பாதமென பதிந்தது. அவனைத் தொட்ட இலைகள் ஓசையிலாது நிமிர்ந்தன. அவன் மூச்சு அவன்செவிக்கே கேளாதபடி ஒலித்தது. அவன் ஒரு பன்றியின் மணத்தை அடைந்தான். சிலகணங்கள் அசைவிலாது நின்று அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தான். பின்னர் குனிந்து முற்றிலும் நாணல்புதருக்குள் உடல் மறைத்து நாணல்கள் உலையாமல் நீரோடை செல்வதுபோல மென்மையாகப்பிளந்து முன்னால் சென்றான்.
தொலைவில் பன்றியின் சூர் எழுந்தது. ஆண்பன்றி எனத்தெளிந்தான். தேற்றையால் மண்ணைக் கிளறி முன்னங்காலால் கிண்டி கிழங்குகளை உண்டுகொண்டிருந்தது. அவன் அருகே சென்று அம்புதொடும் தொலைவை அடைந்ததும் ஒரு நாணல்கதிர்கூட அசையாமல் அம்பை எடுத்தான். நாணொலி எழாது இழுத்து அம்பைச்செருகி குறிநோக்கி அதன் இடதுவிழியில் தொடுத்தான். அம்பு சென்று தைத்ததும் பன்றி முடிசிலிர்க்க ஒருகணம் அதிர்ந்து நின்றது. பின் உறுமல் ஒலியுடன் குழறியபடி திரும்பி அவனை நோக்கியே பாய்ந்து வந்தது.
அஞ்சி பின்காலெடுக்காமல் அதன் மேல் வைத்தவிழியசையாமல் அவன் அடுத்த அம்பை எய்ததும் அதையும் ஏற்றுக்கொண்டு விழுந்து வந்தவிசை முடியாமல் உருண்டு அணுகியது. அதன் மேல் மேலுமிரு அம்புகள் இருப்பதை அவன் கண்டதும் இன்னொரு அம்பை நாணேற்றி நிமிர்ந்தபோது உள்ளுணர்வால் தன்மேல் முன்னரே ஓர் அம்பு கூர்கொண்டிருப்பதை உணர்ந்தான். அவன் அம்புக்கு நேர் எதிரே ஒரு காட்டாளன் பன்றிக்கு மறுபக்கம் நாணல்களுக்குள் இருந்து எழுந்து நின்றிருந்தான். அவன் அம்பின் கூரிலிருந்த நீலம் அது நஞ்சென்பதைக் காட்டியது.
இருவரும் ஒருவரை ஒருவர் அம்புகளால் நோக்கியபடி அசைவற்று நின்றனர். அவர்களின் விழிகளும் ஒன்றோடொன்று தொட்டுநின்றன. இருவருக்கும் நடுவே இருந்த வெளி அஞ்சி சிலிர்த்து நிற்கும் முள்ளம்பன்றி போல அசைவற்றிருந்தது. அர்ஜுனனின் தோளில் ஒரு நாணல்பூ தொட்டுச்செல்ல அவன் அறியாது சற்று தோளசைத்தான். அவ்வசைவு காட்டாளனிலும் ஏற்பட்டது. கணங்களாக ஓடிச்சென்ற அத்தருணத்தின் ஒரு புள்ளியில் தன்னை அறுத்துக்கொண்டு தோள்தளர்ந்து அர்ஜுனன் தன் வில்லைத் தாழ்த்தி பெருமூச்சுவிட்டான். காட்டாளனும் வில்தாழ்த்திவிட்டு இயல்பானான்.
காட்டாளன் அர்ஜுனனைவிட அரைமடங்கு உயரமும் அதற்கேற்ப பருமனும் கொண்டிருந்தான். அர்ஜுனனின் தலையளவு இருந்தன அவன் தோள்தசை உருளைகள். வேங்கைத்தூர் என சேற்றில் புதைந்திருந்தன நரம்பு புடைத்த கால்கள். உடலெங்கும் சாம்பல் பூசி இடையில் புலித்தோல் அணிந்திருந்தான். செஞ்சடைக்கற்றைகளை சுருட்டிக் கட்டி அதில் பன்றித்தேற்றையை பிறைநிலவென அணிந்திருந்தான். நெற்றியில் மூன்றாம் நீள்விழி செந்தழல் எனத் தெரிந்தது.
“யார் நீ?” என இருவரும் ஒரேகுரலில் கேட்டனர். குரல்கள் முட்டிக்கொண்டதை உணர்ந்து தயங்கி அர்ஜுனன் “யார் நீ?” என்றான். அவன் புன்னகைத்து “நீ யார்? இது என் நிலம்” என்றான். “நான் அஸ்தினபுரியின் குருகுலத்துப் பாண்டுவின் மைந்தனாகிய அர்ஜுனன். இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் யுதிஷ்டிரனின் இளையோன்” என்றான். “நான் காட்டாளன். கரியவன் என்பதனால் காளன்” என்று அவன் சொன்னான். அகன்ற கரியமுகத்தில் வெண்பற்கள் மின்ன ஒரு புன்னகை வந்துசென்றது.
சற்றே எரிச்சலுடன் “என்னை நீ அறிந்திருக்கலாம். நான் வில்விஜயன். நூறு களம் கண்டவன். நூறுபரணிகளால் பாடப்பட்டவன். என்றுமிருக்கும் சூதர்மொழிகளின் பாட்டுடைத்தலைவன். இமையசைவதற்குள் தலையறுத்து வீழ்த்தும் வல்லமை கொண்டவன்” என்றான் அர்ஜுனன். “என்னை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என் மனைவியால் நன்கறியப்பட்டவன். பங்காளிகளால் வெறுக்கப்படுபவன். நீ எண்ணுவதை முன்னரே அறியும் திறன்கொண்டவன்” என்றான் காளன். அவன் முகத்தில் மீண்டும் அந்த வெண்சிரிப்பு விரிந்தது.
அவன் தன்னை கேலிசெய்வது அப்போதுதான் அர்ஜுனனுக்குப் புரிந்தது. காட்டாளர்கள் கேலிசெய்வார்கள் என்னும் எண்ணமே தன்னுள் ஏன் எழவில்லை என அவன் உள்ளம் ஓர் எல்லையில் விலகி நின்று வியக்க மறுஎல்லையில் பழுத்த உலோகத்தில் நீர் விழுந்ததுபோல சுரீலென சினம் மூண்டது. அவன் கை அம்பை நாடுவதற்குள் காட்டாளன் அம்புபூட்டி வில்தூக்கிவிட்டிருந்தான். அர்ஜுனனின் கை தழைந்தது. “நன்று, நீயும் கலையறிந்தவன் என ஏற்கிறேன்” என்றான். “இந்தப் பன்றி உணவின்பொருட்டு நான் வேட்டையாடியது. வேட்டைநெறிகளின்படி இது எனக்குரியது.”
காளன் புன்னகையுடன் “வேட்டைநெறிகளின்படி வேட்டைப்பொருள் ஷத்ரியருக்குரியது என்று உரைக்கிறாயா?” என்றான். மீண்டும் தலைக்கேறிய சினத்தை மெல்ல அடக்கி “இல்லை, இதன்மேல் முதலில் விழுந்த அம்பு என்னுடையது என்பதனால்” என்றான். “இளவரசே, இதன்மேல் முதலில் பதிந்த அம்பு என்னுடையது என்றே நான் சொல்கிறேன்” என்றான் காளன். கைசுட்டி “நோக்குக! இப்பன்றி என் அம்பு பட்டு திகைத்து நின்று பின் உன்னை நோக்கிப்பாய்ந்தது” என்றான். அர்ஜுனன் பற்களைக் கடித்தபடி “என் அம்பு பாய்ந்தபோது உன் அம்பு அதனுடலில் இருக்கவில்லை” என்றான். “ஆம், அதையேதான் நான் சொல்வேன். என் அம்பு பாய்ந்தபோது உன் அம்பை நான் பார்க்கவில்லை” என்றான் காளன்.
அர்ஜுனன் “என் அம்புபட்டு பன்றி என்னை நோக்கி சினந்துவந்தது. தாக்குதல் வந்த திசைக்கே பாய்வது பன்றிகளின் இயல்பு” என்றான். காளன் தலையை அசைத்து “இல்லை, என் அம்புபட்டு அதன் வலக்கண் நோக்கிழந்தது. எனவேதான் இடக்கண் காட்டிய திசைநோக்கி அது பாய்ந்தது” என்றான். அர்ஜுனன் கையை வீசி அவனைத் தவிர்த்து “இச்சொல்லாடலுக்கு முடிவிருக்கப்போவதில்லை. பார், பன்றி என் திசைக்கு வந்துள்ளது” என்றான். “அதை அங்கே செலுத்தியவன் நான்” என்றான் காளன்.
அர்ஜுனன் சினத்தை அடக்க கையிலிருந்த அம்பை சிலமுறை உருட்டினான். அருகே சென்று அந்தப்பன்றியை நோக்கி குனிந்து அதன் முகத்தைப்பார்த்தான். அதன் இருவிழிகளிலும் அம்புகள் தைத்திருந்தன. இரு விலாக்களிலும் அம்புகள் ஒரே ஆழத்தில் இறங்கி நின்றிருந்தன. குருதி நிலைத்து உறுதிகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது, அவன் அதை நன்கு நோக்கியும் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. காளன் அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான். அந்த நிகழ்வே ஓர் பகடிநாடகமெனத் தோன்றியது ஒருகணம்.
பின்னர் தன்னை அடக்கிக்கொண்டு அர்ஜுனன் ஏறிட்டு நோக்கி “சரி, காட்டாளனே இதை நான் உனக்கு அளிக்கிறேன். இன்னொன்றை நான் வேட்டையாடிக்கொள்கிறேன். நீ இதை நீர்தெளித்து நான் அளிக்க கொடையென பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். காளன் சிரித்து “நன்று, நான் வென்றதை ஏன் கொடையெனப் பெறவேண்டும்? இளவரசே, இதை நான் தோளில் ஏற்றிக்கொண்டு வெற்றிக்குரலுடன் மட்டுமே என் குடிக்குச் செல்வேன்” என்றான். அர்ஜுனன் நெற்றிப்பொட்டு துடிப்பதை உணர்ந்தான். விழிகளைத் தாழ்த்தி மெல்லிய குரலில் “உனக்கு வேண்டியது என்ன, பன்றிதானே?” என்றான்.
“இல்லை, கொடைகொள்ளும் இடத்தில் நான் என்றுமிருந்ததில்லை. ஏற்பது என் வில்லுக்கும் குலத்திற்கும் இகழ்ச்சி” என்றான் காளன். அர்ஜுனன் ஏறிட்டு நோக்கியபோது பரிவுதோன்ற புன்னகைத்து “நீ பசித்திருக்கிறாய் என்றால் கூறு, இதை நான் உனக்கு கொடையென்று அளிக்கிறேன். பொழுதிருள்வதற்குள் நூறு பன்றிகளை வேட்டையாட என்னால் இயலும்” என்றான். அர்ஜுனன் முகம்சீறிச் சுளிக்க பற்களைக் கடித்தபடி “சேறுநாறும் காட்டாளனிடம் இரந்துண்டு வாழ்வேன் என நினைத்தாயா? நான் அரசமகன்” என்றான். “ஆம், அரசர்கள் சேறுநாறும் மக்களிடம் கொள்ளையடித்து உண்ணலாம் என்றே நெறியுள்ளது” என்றான் காளன்.
“இனி உன்னிடம் பேசிப்பயனில்லை” என்ற அர்ஜுனன் எதிர்பாராதபடி அம்பொன்றை அவன்மேல் எய்தான். அது சென்று எய்தும்முன்னரே காளனின் அம்பால் இரண்டாக முறிக்கப்பட்டது. காளனின் அம்பு வந்து அர்ஜுனனின் தோளுரசிச் சென்றது. அவன் சினந்து எய்த அம்பை காளன் கிளம்பும்போதே முறித்தான். மீண்டும் எழுந்த அம்பை நாண் தொடும் முன்னரே தெறிக்கவைத்தது. அடுத்த அம்பை அவன் தொடுவதற்குள்ளே அது அம்பறாத்தூணியிலிருந்து பறந்தது. அவன் பின்னங்காலெடுத்துவைத்து நாணலுக்குள் அமிழ்ந்து ஒளிந்துகொண்டு மூச்சிரைத்தான்.
“சினம்” என சொல்லிக்கொண்டான். சினம் கைவிரல்களில் துடித்தது. உதடுகளில் நெளிந்தது. சினத்தை வெல். கடந்துசெல். இந்த ஆட்டத்தை பார்த்தன் ஆடவிட்டு நீ உள்ளே தனித்திரு. ஒவ்வொரு விரலையாக மெல்ல மெல்ல விடுவித்தான். மூச்சை இழுத்து சீராக விட்டான். அவன் அம்புகளுக்கு இலக்காகும் வெளியில் மிக இயல்பாக நின்று தன் தோளில் வந்தமைந்த கொசுவை அடித்தான். வில்லால் முதுகை சொறிந்துகொண்டான். குனிந்து பன்றியை நோக்கி அதன் விழியில் குத்தியிருந்த அம்பை மெல்ல அசைத்தான்.
அத்தனை தன்னம்பிக்கையுடனிருக்கிறான் என்றால் அவனால் இயலும். அவன் நோக்கிழந்திருக்கிறான் என எண்ணி அம்பெய்தால் அக்கணமே அவன் அதை வெல்வான். அச்செயல்வழி மீண்டும் தன்னை சீண்டுவான். இப்போது தேவை அவனை நிலைகுலையச்செய்யும் ஓர் அடி. ஒரு துளிக்குருதி. அவன் மீள்வதற்குள் அதை அளித்தாகவேண்டும். அவன் கை மெல்ல சென்று அம்பைத் தொட்டது. மீண்டுமொரு பாழ் அம்பா? இல்லை. இது வென்றபின் எளிய அம்புகளே போதும். முதல் அடி வென்றேயாகவேண்டும்.
அவன் அம்பைத் தொட்டு யமன் அளித்த அமுதச்சொல்லை மும்முறை சொன்னான். அந்நுண்சொல்லின் நெறிகளுக்கேற்ப அவன் கட்டைவிரல் வளைந்து சுட்டுவிரல் நீண்டது. தண்டபாசம் அவன் கையில் நெகிழ்ந்து உருக்கொள்வதை உணர்ந்தான். இரைகவ்வும் தவளையென எழுந்து அதேவிரைவில் அதைத்தொடுத்தான். உறுமலுடன் பாய்ந்து நாகமென வளைந்து காளனை அணுகியது அது. அவன் உடல் குழைந்து வளைந்தெழ அவன் முன் வந்து நெஞ்சுநோக்கிச் சென்றது. பின்காலிட்டு விலகி தன் அம்பால் அதை முறித்து வீழ்த்தினான் காளன்.
அனைத்துக்கட்டுகளும் அகல பெருங்கூச்சலுடன் எழுந்து அந்தர்த்தானையின் நுண்சொல்லை உரைத்து அம்பை எய்தான். அவன் பற்களனைத்தும் ஒளிரும் சிரிப்புடன் சிறிய அம்பொன்றால் அதை முறித்தான். அவன் விடுத்த அம்பொன்று வந்து அர்ஜுனனின் தோளில் தைத்தது. அந்த விசையில் நிலையழிய பிறிதொரு அம்புவந்து அவன் தொடையை துளைத்து நின்றாடியது. அவன் மல்லாந்து விழுந்து அதே விசையில் கால்களை உதைத்து புதர்களுக்குள் தன்னை முழுமையாக இழுத்துக்கொண்டான். அவன் உள்ளங்காலில் காளனின் அம்பு வந்து தொட்டது.
தான் அழுதுகொண்டிருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். பற்களைக் கிட்டித்து, முகம் இழுபட, விழிநீர் தாடிமயிர்தொகையில் வழிய, விம்மினான். அவ்வொலி கேட்டதுமே தன்னிழிவுகொண்டு சினம் மிஞ்ச தலையை அசைத்தான். கைகள் பதைத்துக்கொண்டிருந்தன. உள்ளம் மலைப்பு கொண்டிருந்தது. என்ன நிகழ்கிறது? இவன் யார்? புவியிலொருவன் இப்படி இருக்கக்கூடுமா? அங்கே நகரங்களில் வில்வேதமென்று ஓதப்படுபவை, வாழ்நாளெல்லாம் படைத்து கற்கப்படுபவை அனைத்தும் வீணென்றாகும் ஒரு இடம் புவியிலிருக்கலாகுமா? வேதமுதன்மைகொண்ட தெய்வங்களின் நுண்சொல் அமைந்த வாளிகளும் விளையாட்டென்றாவது ஒரு காட்டாளனின் வில்முன்னரா?
வாருணவாளியை எடுத்தபோது அவனுக்கே நம்பிக்கை இருக்கவில்லை. கைகள் நடுங்குவதை உணர்ந்து தன் விழிகளை மூடி உள்விழியை நெற்றிக்குவியத்தில் நிறுத்தி ஒவ்வொருகணமாக நுண்சொல்லை தன் உளம்வழியாக கடந்துசெல்லவிட்டான். இலைசெறிந்த மரத்திலிருந்து நீர் சொட்டுவதைப்போல அவனுள் அச்சொல் நிகழ்ந்துகொண்டிருந்தது. இலைமேல் இலைசொட்டி இலைகள் ஒளிந்தசைய தன்னுள் அலைகளெழுந்து அறைவதை உணர்ந்தான். பேரலையொன்று வந்து பாறைகளை அறைந்து வெண்சிறகென எழுந்து சிதறி அமைந்தகணம் எழுந்து அவ்வாளியை ஏவினான்.
அலையென எழுந்து ஓசைபொங்கச் சென்று அவனை அடைந்த அதை அவன் அம்பு முறித்த அந்தக் கணத்தை ஆயிரம் மடங்கு நீட்டிப்பரப்பி அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கைசென்று அம்பெடுத்து நாணுக்களிக்க நாண் விம்மியமைந்து அதை ஏவ கிளையுதைத்தெழும் புள் என அம்பு காற்றிலெழுந்து சென்று வருணபாசத்தைக் கவ்வி சற்றே குதறி முறித்து தானும் சரிந்து புல்லில் விழுந்தது. அமைந்து மீண்டும் நிமிர்ந்த புல்லின் வெண்பூக்குலை சிலிர்த்தது.
அவன் எழுந்து ஒரு கையில் வில்லும் இன்னொரு கையில் அம்புமாக நின்றான். எதிரே காளன் கரும்பாறைமேல் சிறகுகோட்டி அமர்ந்த வெண்கொக்குநிரைபோல பற்கள் தெரியும் சிரிப்பெழுந்த முகத்துடன் நின்றான். “நாம் போரிட்டுவிட்டோம் என எண்ணுகிறேன், இளவரசே. நீ மாபெரும் வில்லவன் என அறிந்துகொண்டேன். பன்றியை நான் எடுத்துச்செல்கிறேன். அன்றி நீ அதை விழைகிறாய் என்றால் உனக்கே கொடையளிக்கிறேன்” என்றான்.
அனைத்தையும் மறந்த பெருங்கூச்சலுடன் அர்ஜுனன் வஜ்ரத்தை எடுத்து அவன் மேல் ஏவினான். சிம்மத்தின் உறுமலென அதுசென்ற ஒலி கேட்டது. காளனின் அம்பு அதை வழியிலேயே தடுத்தது. பிறிதொரு அம்பு அதை திசைதிருப்பியது. மூன்றாம் அம்பு அதைச் சுழற்றி நிறுத்த அவன் கையால் அதைப்பற்றி அதன் முனையை நோக்கினான். விழிதூக்கி அவனை நோக்கி “எளிய அம்புதான்… ஏன் இத்தனை ஆற்றல் இதற்கு?” என்றான். அதை வீசிநோக்கியபின் “அம்பில் ஏதுமில்லை… அதை ஏவுகையில் நீ சொல்லும் நுண்சொல்லில் உள்ளது இதன் விந்தை” என்றான்.
அர்ஜுனன் வில்லைத் தளரவிட்டு நின்றான். அனைத்தும் கனவென்றாகுமென அவனுள் இருந்த சிறுவன் விழைந்தான். காளன் மகாவஜ்ரத்தை தூக்கிப்போட்டு பிடித்து “எளிய மூங்கிலம்பு… அது எப்படி இத்தனை பேரொலி எழுப்பியது? இடியெழுகிறதென்றே எண்ணினேன். மின்னலை நோக்கினேன்” என்றான். “இதைச் சொல்கையில் உனது விரல் அதற்கேற்ப அறியாது வளைகிறது போலும்.” அதை கீழே போட்டுவிட்டு “நான் பன்றியுடன் செல்லப்போகிறேன்… நீ விரும்பினால் இப்போதுகூட இதை பெறமுடியும்” என்றான்.
அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “நன்று, முடித்துவிட்டுப்போ” என்றான். காளன் புரியாமல் “போராடல் முடிந்துவிட்டதே” என்றான். “என்னை கொல். அதுவே போரின்முறை” என்றான் அர்ஜுனன். “இல்லை ஷத்ரியனே, நான் உண்ணாத உயிரை கொன்றதே இல்லை” என்றான் கிராதன். கைவீசி “திரும்பிச்செல்க…” என்றபடி குனிந்து பன்றியின் காலைப் பற்றினான். நெஞ்சில் கையால் அறைந்தபடி “அடேய், நீ என்மேல் சிறிதளவேனும் மதிப்புகாட்ட விழைந்தால் என்னை கொல்” என்று அர்ஜுனன் கூவினான். “மதிப்புகாட்டும்பொருட்டு கொல்வதா? மண்ணவர் நெறிகளே எனக்கு விளங்கவில்லை” என்றான் காளன்.
“மூடா” என வீரிட்டபடி அர்ஜுனன் தன் வில்லை அவன் மேல் வீசினான். “கொல் என்னை… கொன்று செல் என்னை!” அவன் “என்ன சொல்கிறாய் ஷத்ரியனே? உன்னை நான் ஏன் கொல்லவேண்டும்? நீ என் உணவல்ல. என்னை கொல்லப்போகிறவனும் அல்ல” என்றான். “இழிமகனே, காடனே, கொல் என்னை… நீ ஆண்மகன் என்றால் என்னைக் கொல்” என்று கூவியபடி அர்ஜுனன் கீழே கிடந்த கற்களை எடுத்து அவன் மேல் எறிந்தான். புகைபோல உடல் வளைத்து அவன் அக்கற்களை ஒழிந்தான்.
மூச்சிரைக்க அர்ஜுனன் நின்றான். கண்ணீர் வழிய “சிறுமை செய்யாதே… நான் என் உயிரை பறித்துக்கொள்ளும்படி ஆக்காதே… கொல் என்னை” என்றான். “நான் இதுவரை மானுடரை கொன்றதில்லை, ஷத்ரியனே” என்றான் காளன். “உன்னுடன் விளையாடவே வந்தேன்… ஆடல் முடிந்துவிட்டது. நீ விழைந்தால் நாம் நெஞ்சுசேர தோள்தழுவுவோம்” என்று கைகளை விரித்தான். “தோள்தொடுவதா? உன்னிடமா? உன் இழிந்த கையால் இறந்தாலும் எனக்கு விண்ணுலகுண்டு. உன்னை நிகரென நினைத்துத் தழுவினால் நானே விண்ணுலகை விழையமாட்டேன்… நீ செய்யக்கூடுவதொன்றே. கொல் என்னை….” என்று அர்ஜுனன் குனிந்து தன் தொடையிலிருந்த அம்பை பிழுதெடுத்தான். “இப்போதே என்னை கொல். இல்லையேல் என் கழுத்துநரம்பை அறுத்து உன்முன் குருதிசோர விழுவேன்.”
குட்டைமரங்களின் இலைத்தொகை சலசலக்க அவன் திரும்பி நோக்கினான். தழைப்புக்கு அப்பாலிருந்து கரியநிறமும் செஞ்சாந்துப் பொட்டிட்ட பெரிய வட்டமுகமும் கொண்ட பெண் ஒருத்தி இடையில் மலர்சூடிய குழல்முடித்து ஆடையின்றி அமர்ந்திருந்த இளமைந்தனுடன் தோன்றினாள். அவள் அணிந்த மான்தோலாடையைப் பற்றியபடி பெருவயிறனாகிய மூத்தவன் கையில் பாதியுண்ட கனியொன்றுடன் நின்றான். இரு சிறுவரும் ஆவலுடன் அர்ஜுனனை நோக்கினர். “இங்கிருக்கிறீரா? எத்தனை நேரம்?” என்றவள் அர்ஜுனனை நோக்கி “யார் இவன்? முன்பு வந்த பீலிமுடியர் போலிருக்கிறான்?” என்றாள். கணவன் அளவுக்கே அவளும் உயரமிருந்தாள். பெருமுலைகளுக்குமேல் வெண்கல்மாலை கரும்பாறைமேல் அருவியெனக் குழைந்தது.
கண்களில் புன்னகையுடன் “அவனுடன் நான் போரிட்டேன்” என்றான் காளன். “அவனிடமா? உமக்கென்ன அறிவில்லையா? இளமைந்தர் போல விழிகொண்டிருக்கிறான், அவனிடமா போரிடுவீர்?” என்று அவள் சினந்தபின் அவனை நோக்கி “பித்தர்… நீ பொருட்படுத்தவேண்டியதில்லை மைந்தா” என்றாள். “அவன் அந்த அம்புக்கூரால் தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளப்போவதாக சொல்கிறான். நான் அது கூடாது என்றேன்” என்றான் காளன். “தன்கழுத்தையா? எதற்கு?” என்றாள் அவள். “என்னிடம் தோற்றுவிட்டான். தோற்றபின் உயிர்துறப்பது அவர்குடியினரின் வழக்கமாம்.”
சீற்றம் கொண்டு திரும்பி “என்ன சொல்கிறாய்? அறிவே இல்லையா உனக்கு? போடு அதை கீழே” என்று கையை ஓங்கியபடி அதட்டிக்கொண்டு அவள் அர்ஜுனன் அருகே வந்தாள். அவன் “நான்…” என்று ஏதோ சொல்ல “போடச்சொன்னேன், கீழே போடு” என்றாள். அவன் கீழே போட்டுவிட்டு “நான் இவரிடம் போரில்…” என காளனைச் சுட்டி சொல்லவர “அவர் பித்தர். பித்தரிடம் எவராவது போரிடமுடியுமா? நீ அழகிய இளையவன் போலிருக்கிறாய்… “ என்றபின் திரும்பி “வரவர என்ன செய்கிறீர் என்றே தெரியவில்லை உமக்கு?” என்றாள். காளன் தலைதூக்கி வாய்திறந்து உரக்கச் சிரித்தபடி அர்ஜுனனிடம் “இவள் என் மனைவி. காளி என்று அழைப்பேன். சீற்றம் மிக்கவள்…” என்றான்.
காளி அர்ஜுனனிடம் “இளையவனே, எதற்காக போர்? உனக்கு என்ன வேண்டும்? இந்தப்பன்றியா? இதோ எடுத்துக்கொள். வேண்டுமென்றால் இந்தக்காட்டிலுள்ல அத்தனை பன்றிகளையும் உனக்கு இவர் வேட்டையாடித்தரச்சொல்கிறேன். இதற்கா பூசல்?” என்றாள். “அதை நான் முன்னரே அவனுக்கு கொடுத்தேன். மறுத்துவிட்டான்” என்றான் காளன். அவள் அவனிடம் “நீர் வாயை மூடும்…” என சீறிவிட்டு “நான் கொடுக்கிறேன் உனக்கு. நீ கொண்டுசென்று உண்க, மைந்தா! இது என் கொடை” என்றாள். அவன் சிறுவன்போல சரி என தலையசைத்தான்.
அவள் குனிந்து ஒற்றைக்கையால் அந்தப்பன்றியைத் தூக்கி அர்ஜுனனை நோக்கி நீட்டினாள். அர்ஜுனன் இயல்பாகக் கைநீட்டி அந்தப்பன்றியை வாங்கினான். அவள் பிடிவிட்டதும் எடைதாளாமல் அவன் கையிலிருந்து நழுவி அது கீழே விழுந்தது. “அவரால் தூக்கமுடியவில்லை” என்று மூத்த மைந்தன் சொன்னான். “நானே கொண்டு கொடுத்துவிட்டு வரவா?” காளி “அதெல்லாம் அவரே கொண்டுசெல்வார்… நீ பேசாமல் வா. அங்கேயும் சென்று பாதியைப் பிடுங்கி தின்றுவிட்டு வர நினைக்காதே” என அவன் தலையை தட்டினாள்.
அர்ஜுனன் அவள் முகத்தை நோக்கியபடி உளமழிந்து நின்றான். அவள் விழிகள் முலையூட்டும் அன்னைவிழியென கனிந்திருந்தன. சின்னஞ்சிறு குமிழுதடுகளில் எப்போதுமென ஒரு புன்னகை இருந்தது. அவிழ்ந்த நீள்குழலை அள்ளிச் சுழற்றி முடிந்தபடி அவள் திரும்பியபோது அவன் அறியாமல் அவர்களை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தான். அவள் திரும்பி “என்ன?” என்றாள். அவன் நெஞ்சு கலுழ விம்மி அழுதபடி “இனி நான் வாழ விரும்பவில்லை, அன்னையே” என்றான். அவள் அவனை நோக்கி புருவம் சுளித்து “ஏன்?” என்றாள். “நான் தோற்றுவிட்டேன்… தோல்விக்குப்பின் வாழ்வது என்னால் இயலாது” என்றபோது அவன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து நெஞ்சில் சொட்டியது. உதடுகளை இறுக்கி அவன் தலைகுனிந்தான்.
அறிவிலியே என புன்னகையிலேயே செல்லமாக அழைத்து “தோற்றாய் என்றால் நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்கிறாய் என்றல்லவா பொருள்? அதைக் கற்கும் ஒரு வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும் நன்மாணவன்?” என்றாள். அவன் உள்ளம் சொடுக்க, விழிதூக்கி அவளை நோக்கினான். உதடுகள் சொல்லில்லாமல் அசைந்தன. இனிய மென்குரலில் “நீ கற்றிராததை இவரிடமிருந்து கற்றுக்கொள். கற்பிக்கும் இவர் உன் ஆசிரியர். ஆசிரியனிடம் தோற்பதில் இழிவென ஏதுமில்லை. ஆசிரியன் முன்பு முற்றிலும் தோற்காதவன் எதையும் கற்கத்தொடங்குவதில்லை” என்றாள்.
அர்ஜுனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். ஒரு மூச்சிலேயே உளம்கொண்ட சுமையெல்லாம் அகன்று எடையிழந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். “அவர் காலடியை வணங்கி கல்வியை கேள்” என்றாள் அவள். அவன் காலை நொண்டியபடி எடுத்து முன்னால் வைத்து காளனின் அருகே சென்று வலியுடன் முழந்தாளிட்டு “காலவடிவரே, நான் எளியவன், ஆணவத்தால் ஆட்டிவைக்கப்படும் இழிந்தோன். உம்மிடமுள்ள அறிவையும் திறனையும் எனக்கும் கற்பித்தருளவேண்டும்” என்றான். காளன் உரக்க நகைத்து அவன் தலைமேல் கைவைத்து “எழுக… நான் அவள் ஆணைகளை மீறுவதில்லை…” என்றான்.
மார்பில் எச்சில்கோழை வழிய வாயில் இடக்கையை வளைத்து வைத்து கசக்கி சுவைத்துக்கொண்டிருந்த இளமைந்தன் கைகளை விரித்து “ந்தையே” என்று தாவ “ஆ! வா வா! என் அழகனல்லவா?” என்றபடி வாங்கிச் சுழற்றி தன் தோளில் வைத்துக்கொண்டான். தந்தையின் மார்பில் இருகால்களையும் போட்டுக்கொண்டு எம்பி குதித்து “யானை…! யானை! பெரீ யானை!” என்றான் இளையவன். மூத்தவன் வந்து அர்ஜுனனின் கைவிரலை இயல்பாக பற்றிக்கொண்டு “பெரிய பன்றி… நாம் அதைக் கொண்டுசெல்வோம்” என்றான். அவனை நோக்கி காளி புன்னகைசெய்தாள்.
அர்ஜுனன் “நானே எடுத்துவருகிறேன்” என்றான். காளி “இல்லை, உன் கால்கள் புண்பட்டிருக்கின்றன. அவனே கொண்டுவரட்டும். உணவென்றால் அவன் யானை. எத்தனை எடையையும் சுமப்பான்” என்றாள். “ஆம், பன்றி மிகச்சுவையானது” என்ற மூத்தவன் திரும்பி நோக்கி கைசுட்டி “சிரிக்கிறது” என்றான். அர்ஜுனன் திரும்பி நோக்க பற்கள் தெரிய கிடந்த பன்றி நகைப்பதைப்போல தெரியக்கண்டு தன்னை மீறி சிரித்துவிட்டான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
சென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து
சென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக. மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம் என தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
January 4, 2017
இரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி
தல்ஸ்தோயின் பெரும்நாவல்களில் ‘அன்னா கரீனினா’ மட்டுமே வடிவநேர்த்தி கொண்ட படைப்பு என்று ஒரு பேச்சு உண்டு. அவரது கடைசிநாவலான புத்துயிர்ப்பு ஒரு வகையான சென்று தேய்ந்திறுதல் கொண்டது. ‘போரும் அமைதியும்’ வடிவமற்ற வடிவம் கொண்டது. ஹென்றி ஜேம்ஸ் அதை ஒரு மாபெரும் கதைமூட்டை என்று சொன்னார். ‘கொஸாக்குகள்’ போன்ற ஆரம்பகால நாவல்கள் நாவலுக்கான முயற்சிகளே.
அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.
அந்த விரிந்துசெல்லும் கேள்விகளை நாவலின் எலும்புச்சட்டகம் என்று வைத்துக்கொண்டால் தல்ஸ்தோயின் உணர்ச்சிச் சித்தரிப்பும் சூழல் விவரணையும் ரத்தமும் தசையும் எனலாம். அவரது கவித்துவமோ அதன் ஒளிரும் புன்னகை. அதன் தரிசனமே உயிர். அன்னா கரீனினா ஓர் உயிருள்ள கலைப்படைப்பு. உயிர்வடிவுகளில் தேவையற்றது என்று ஒன்று இருப்பதில்லை. ஆகவே வடிவப்பிழை என்பதற்கு இடமில்லை.
அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’ தன் சகோதரன் ஸ்டீவின் மணவாழ்க்கையின் சிக்கல்களை தீர்ப்பதற்காக அன்னா கரீனினா பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மாஸ்கோவிற்கு வருகிறாள். ஆனால் வந்தவள் தன்னையறியாமலேயே விரான்ஸ்கியுடன் காதலில் விழுகிறாள்.
கரீனின் என்ற கறாரான அதிகாரியின் மனைவி அன்னா. அவளுக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால் காதலின் வலிமை அவளை விரான்ஸ்கியை நோக்கி இழுக்கிறது. குற்றவுணர்வு கொண்டு அவள் அதிலிருந்து விலக முயலும்தோறும் குற்றவுணர்ச்சியின் தீவிரத்தாலேயே அந்தக்காதல் மேலும் உக்கிரமானதாக ஆகிறது. குழந்தையையும் கணவனையும் விட்டுவிட்டு விரான்ஸ்கியுடன் ஓடிப்போகிறாள். அவனுடன் குறுகியகால காதல் கொண்டாட்டம்

அதன்பின் அந்தக் காதலுக்கு அடியில் மூடி வைத்திருந்த ஒவ்வொன்றாக வெளியே தலைநீட்ட ஆரம்பிக்கின்றன. விரான்ஸ்கிக்காக தான் இழந்தவை மிக அதிகம் என்பதனாலேயே விரான்ஸ்கி தன் மேல் பூரணமான அன்பு செலுத்தவேண்டும் என அன்னா எதிர்பார்க்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த எதிர்பார்ப்பு விரான்ஸ்கியை மூச்சுத்திணறச் செய்கிறது. மகனைப்பிரிந்த குற்ற உணர்ச்சியால் அன்னா வதைபடுகிறாள்.
ஒரு நாடக அரங்கில் உயர்குடிப்பெண்கள் — அவர்களில் பெரும்பாலானவர்கள் ரகசியமான கெட்ட நடத்தை கொண்டவர்கள் — அன்னா தங்களுடன் அமரக்கூடாது, அவள் ஒழுக்கம் கெட்டவள் என்கிறார்கள் சமூகத்தின் முன் பாவியாக நிற்பதன் விளைவாக வீம்பும் கசப்பும் கொண்டவளாகிறாள் அன்னா. அவளுடைய இனிமையும் நாசூக்கும் இல்லாமலாகி சிடுசிடுப்பான, உள்வாங்கிய பெண்ணாக ஆகிறாள். அவளிடமிருந்து விரான்ஸ்கியின் மனம் விலக ஆரம்பிக்கிறது.
அன்னாவுக்கு விரான்ஸ்கியில் ஆன்னி என்ற இரண்டாவது குழந்தை பிறக்கிறது. அவள் பிரசவத்தில் மாண்டுபோகக்கூடும் என்ற நிலை இருந்தபோது கரீனின் அவளைப் பார்க்க வருகிறான். அவளது நோய்ப்படுக்கையின் முன்னால் வைத்து அவன் விரான்ஸ்கியை மன்னிக்கிறான். கணவனின் இன்னொரு முகத்தை அன்னா பார்க்கிறாள். மனித உறவுகளை எல்லாம் வேறு ஒரு கோணத்தில் பார்க்க அவளால் முடிகிறது. குற்றவுணர்ச்சி கொண்ட விரான்ஸ்கி தற்கொலைக்கு முயல்கிறான்.
ஆன்மீகமாக அன்னாவின் வீழ்ச்சியை பல படிகளாகச் சித்தரிக்கிறார் தல்ஸ்தோய். அன்னா விரான்ஸ்கியை தனக்கு ஓர் உணர்ச்சியடிமையாக இருக்க வைக்க முயல்கிறாள். அப்படி அவன் முயலும்தோறும் அவனை அவள் ஐயப்படுகிறாள், அவனை துன்புறுத்துகிறாள். தன்னுடைய ஈர்ப்பு குறைகிறதோ என்ற ஐயம் காரணமாக அவள் பிற இளம் ஆண்களை கவர முயல்கிறாள். அந்த கவர்ச்சி மூலம் தன்னைத் தனக்கே நிரூபித்துக்கொள்கிறாள்.
விளைவாக அவள் மெல்ல மெல்ல மனம் நைந்தவளாக உச்சஉணர்ச்சிநிலைகளும் பதற்றங்களும் கொண்டவளாக ஆகிறாள். கனவுகளுக்கும் நனவுகளுக்கும் இடையே அலைகிறாள். தூங்குவதற்கு அவள் மார்பின் பயன்படுத்துவதும் அதற்குக் காரணமாகிறது
கடைசியில் அனைத்திலும் நம்பிக்கை இழந்த அன்னா தன்னை வந்து பார்க்கும்படி விரான்ஸ்கிக்கு ஒரு தந்தி கொடுத்துவிட்டு ரயில் நிலையம் செல்கிறாள். ரயில் நிலையத்தில் காத்திருக்கிறாள். ரயில் கிளம்பும்போது சட்டென்று உருவான ஒரு நிராசையால் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் பாய்ந்து உயிர்விடுகிறாள்.
அன்னாவின் கதை நுட்பமான எத்தனையோ ஆராய்ச்சிகளுக்கு ஆளாகியிருக்கிறது. உலக இலக்கியத்தில் உளவியல் ரீதியாக அதிநுண்ணிய ஆய்வுகள் செய்யப்பட்ட வெகு சில நாவல்களில் ஒன்று அன்னா. ஆனால் இன்றும் ஒரு நல்ல வாசகன் தன் வாழ்க்கை மூலம் அவனே கண்டுபிடிக்கும் நுண்மைகள் கொண்டதாகவே இந்நாவல் உள்ளது.
உதாரணமாக இந்நாவலில் கிட்டி என்ற இளம்பெண்ணுக்கும் அன்னாவுக்குமான உறவு. என் வாசிப்பில் இத்தனை நுட்பமான ஒரு வாழ்க்கைக்கூறினை எந்த புனைகதையிலும் வாசித்ததில்லை. இந்த இருபத்துஐந்து வருடங்களில் எத்தனையோ முறை நான் சிந்தனைசெய்திருக்கும் ஒன்று இது. கிட்டி அன்னாவின் சகோதரன் ஸ்டீவின் மனைவியின் தங்கை. ஸ்டீவின் குடும்பச் சிக்கலை தீர்ப்பதற்கு வரும்போதுதான் அன்னா கிட்டியைச் சந்திக்கிறாள்.
கதை ஆரம்பிக்கும்போதே அன்னா இளமையைத் தாண்டியவளாக, குடும்பத்தலைவியாகவும் தாயாகவும் இருக்கிறாள். கிட்டி முதிரா இளமைக்குரிய துடிப்புடன் துள்ளலுடன் இருக்கிறாள். அவளுக்கும் விரான்ஸ்கிக்கும் இடையே மண ஆலோசனைகள் நிகழ்கின்றன. அதற்காகவே விரான்ஸ்கி வருகிறான். ஆனால் அன்னா அவனை மிக நுட்பமாக தன் பெண்மையின் வசீகரத்தால் கவர்ந்து கொள்கிறாள்.
அன்னா அதை ஏன் செய்தாள்? தெரிந்து திட்டமிட்டுச் செய்யவில்லை. அவளில் இருந்த பெண்மை அதை நிகழ்த்தியது. ஓர் ஆணைக் கவரவேண்டுமென எண்ணும் பெண்ணின் உடலில் பார்வையில் சிரிப்பில் கூடும் பேரழகு அவனை வீழ்த்தியது. அந்தச்செயல் அவளில் அவளையறியாமலேயே நிகழ்ந்தது என்றுகூடச் சொல்லலாம்.
கிட்டியின் வாழ்க்கை சிக்கலாகிறது. அதன்பின்னர் அவளுக்கு லெவினுடன் காதல் மலர்கிறது. அவர்கள் மணம்புரிந்துகொள்கிறார்கள். லெவின் நாவலின் ஆரம்பத்திலேயே அன்னாவை காணவருபவன். இந்நாவலில் தல்ஸ்தோயின் இயல்புகள் தெரியும் கதாபாத்திரம் அவன். மாஸ்கோவில் லெவின் கிட்டியுடன் வாழ வரும்போது மீண்டும் அன்னாவைக் காண்கிறான். இப்போது அன்னா விரான்ஸ்கியின் மனைவியாக அவன் குழந்தையின் அன்னையாக இருக்கிறாள். இப்போது லெவினை அன்னா மெல்ல நுட்பமாக தன் மீது காதல்கொள்ளச் செய்கிறாள். அந்த வசீகரத்தை தாங்க முடியாத லெவின் அதை கிட்டியிடமே கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அதில் இருந்து விடுபடுகிறான்.
அன்னாவுக்கும் கிட்டிக்கும் என்ன உறவு? நாவலில் தல்ஸ்தோய் எதுவுமே விவரிப்பதில்லை. அன்னா கிட்டியைப்பற்றி அதிகமாக யோசிப்பதே இல்லை. அவர்களிடையே பெரிய அளவில் தொடர்பும் இல்லை. ஆனால் அன்னாவின் வாழ்க்கையை தீர்மானிப்பவளாக கிட்டி இருந்திருக்கிறாள். எப்படி?
கிட்டியை முதன்முதலில் காணும் அன்னா தன் முன் காண்பது தன்னையேதான் என்று எனக்குப் பட்டது. சென்று மறைந்த தன் முதிரா வயது பிம்பத்தை. நிரந்தரமாக தான் இழந்த ஒரு காலகட்டத்தை. அது அவளுடைய பெண்மனதில் உருவாக்கிய ஒரு வீம்பினால்தான் அவள் விரான்ஸ்கியைக் கவர்ந்தாள். அதன் வழியாக கிட்டியை தோற்கடித்தாள். இன்னமும் தன் இளமையும் அழகும் போய்விடவில்லை என்று தனக்குத் தானே நிரூபித்துக்கொள்பவள் போல. சென்று மறைந்த அனைத்தும் தன்னிடம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதைப்போல
மீண்டும் கிட்டியின் கணவன் லெவினைப் பார்க்கும்போது அவன் விரான்ஸ்கியை விட வலுவான ஆளுமையாக இருப்பதை அன்னா காண்கிறாள். அவனை வெல்லாமல் அவளால் இருக்க முடியாது. அவளுடைய இளமையின் பிம்பமாகிய கிட்டியிடமிருந்து அவனை அவள் வென்றாக வேண்டும். அந்த வீம்பு அவனை வென்றதுமே தணிந்து ஒரு வெறுமையை அவள் உணர்கிறாள்.
அன்னா பேரழகி. அந்த அழகுடனேயே அவள் வளர்ந்து வந்திருப்பாள். போற்றப்பட்டவளாக, காதலிக்கப்பட்டவளாக. இளமை தாண்டி அந்த பொக்கிஷத்தை இழப்பதன் உளச்சிக்கலே அவளை கிட்டியுடன் போட்டிபோட வைத்ததா என்ன? அவள் போட்டி போட்டது காலத்திடமா? அவளை அழகற்ற, விரும்பத்தகாத, கிழவியாக ஆக்கிக்கொண்டே இருக்கும் காலத்துடன் போட்டியிட்டு வெல்லவா அவள் முயன்றாள்? அத்தனை பெண்களுக்கும் நடுவயதில் ஏற்படும் மனச்சிக்கல்தான் அவளையும் துரத்தியதா? அவ்வளவுதானா, முடிந்து போயிற்றா என்ற ஏக்கம். இனி என்னில் என்ன மீதி என்ற பதற்றம்…
தெரியவில்லை. ஆனால் அன்னாவின் இறுதிநாட்களில் அவள் ஏங்குவது காதலுக்காக அல்ல என்று இப்போது நாவலை வாசிக்கும்போது தோன்றுகிறது. தன்னைச் சந்திக்கும் அத்தனை கண்களும் தன் அழகையும் வசீகரத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என அன்னா நினைக்கிறாள். அவளுடைய உடலெங்கும், அவள் சலனங்கள் முழுக்க, அந்த விருப்பம் நிறைந்திருந்தமையால் அவளைச் சந்தித்த அத்தனை இளைஞர்களும் அவளை காதலிக்கும்போது அவள் தன்னால் வெல்லப்படமுடியாதவனாக விரான்ஸ்கியை உணர்கிறாள். அவனை வெல்ல கடைசியாக அவள் கண்டுபிடித்த வழிதான் அந்த தற்கொலை. அவனுள் ஆழமானதோர் குற்றவுணர்ச்சியை உருவாக்கிவிட்டு நிரந்தரமாக அவள் சென்றுவிட்டாள்.

அன்னாவின் மரணத்தின் கணத்தை எளிய சொற்களில் தீவிரமாகச் சித்தரிக்கிறார் தல்ஸ்தோய். அப்போது இளம்சிறுமியாக அவள் வாழ்ந்த நாட்கள், அவளுடைய முதிரா இளமையின் உல்லாசங்கள்தான் அவள் நினைவில் காட்சிகளாகப் பீரிட்டுக் கிளம்புகின்றன. அந்தத்தருணத்தில் எல்லாவற்றையும் மூடிக்கொண்டிருந்த இருள் சட்டென்று விலகிவிடுகிறது. ஆம் அன்னா எப்போதும் நிரந்தரமாக வாழ விரும்பிய பொன்னுலகம் அதுவே, ஆனால் மண்ணில் எவருக்குமே அது சாத்தியமில்லை.
ரயில் தல்ஸ்தோயின் மனதில் ஒரு குறியீடு. நவீன இயந்திர யுகத்தின் சின்னமாகவே அவர் பல கதைகளில் ரயில் வருகிறது. தல்ஸ்தோய் அதை கொஞ்சம் வெறுப்புடன், நிராகரிப்புடன் தான் பார்த்தார். அது சென்ற யுகத்தின் அரிய மதிப்பீடுகளை, நுண்ணிய உணர்ச்சிகளை சிதைத்துவிடுகிறது என்று அவர் நினைத்தார்.
தல்ஸ்தோயைப் பொறுத்தவரை அன்னாவின் பிரச்சினைக்குக் காரணமே சென்ற கிறித்தவயுகம் முன்வைத்த தியாகத்திற்குப் பதிலாக போகத்தை முன்வைத்த நவீனக்காலகட்டம்தான். அவரது கட்டுரைகளில் கூட அவர் விரிவாக அதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ஆடம்பரத்தை, ஒருவருக்கொருவர் போட்டியை, வெட்கமில்லாத நுகர்வை அது முன்வைக்கிறது என்று அவர் நினைத்தார். அந்த யுகத்தின் பலியே அன்னா
அன்னாவுக்கு ஒரு கனவு வந்துகொண்டே இருக்கிறது, விரான்ஸ்கியைச் சந்திக்கும் முன்னரே. ஒரு பரட்டைத்தாடிகொண்ட கிழவர் இரும்பை இரும்புச் சுத்தியலால் அடித்து நொறுக்கி கொண்டே இருக்கிறார். அவர் ·ப்ரெஞ்சில் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கிறார். அந்த உறுத்தும் ஒலி தாங்கமுடியாமல் அவள் தவித்து விழித்துக்கொள்கிறாள். அந்தக் கனவு எதைக் குறிக்கிறது? கனவுகளுக்கே உரிய தோராயமான முறையில் அது நவீனக் காலகட்டத்தை, இரும்பின் யுகத்தையே குறிக்கிறது என்று படுகிறது. இன்னமும் குறிப்பாக அந்த பிரெஞ்சு. தல்ஸ்தோயின் காலத்தில் பிரெஞ்சு நவீன காலகட்டத்தின் மொழியாக, உயர்குடி ஆடம்பரத்தின் மொழியாக இருந்தது
அன்னா ரயிலின் சக்கரங்கள் நடுவே பாய்கிறாள். கனத்த இரக்கமற்ற இரும்பு அவளுடைய மெல்லிய உடலைச் சிதைத்து இழுத்துச் செல்கிறது. அந்தச் சித்திரத்தை காட்டும் தல்ஸ்தோய் ‘ஒரு சிறிய விவசாயி தனக்குள் முணுமுணுத்தபடி தண்டவாளத்தில் வேலைசெய்துகொண்டிருந்தான்’ என அக்கனவை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
*
இந்திய மொழிகளில் எல்லாம் அன்னா கரீனினா 1950களிலேயே வெளியாகியிருக்கிறது. அனேகமாக உலக மொழிகளில் அனைத்திலும் வெளிவந்திருக்கலாம். அன்னா கரீனினாவின் சுருக்கமான வடிவம் ஏற்கனவே சந்தானம் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்திருந்தாலும் இப்போதுதான் இந்த மாபெரும் நாவல் முழுமையாக வெளிவருகிறது. பல்வேறு ருஷ்ய நாவல்களை மொழியாக்கம் செய்த மூத்த மொழிபெயர்ப்பாளரான பேரா.நா.தர்மராஜன் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். மதுரை பாரதி புக் ஹவுஸ் வெளியிட்டிருக்கிறது.
மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.
ஒரு மாபெரும் கலையனுபவத்துக்காக, மானுட வாழ்க்கையைப்பற்றிய மெய்த்தரிசனத்துக்காக இன்றைய வாசகன் மீண்டும் அன்னா கரீனினாவிடம் செல்லவேண்டியிருக்கிறது. இம்முறை தமிழிலேயே. அதற்காக நா.தர்மராஜனும் பாரதி புத்தக நிலையமும் நன்றிக்குரியவர்கள்
அன்னா கரீனினா, லியோ டால்ஸ்டாய், தமிழாக்கம் பேரா நா.தர்மராஜன். பாரதி புக் ஹவுஸ், மதுரை. Bharathi Book House D 28, Corporation shopping Complex Periyar Bus Stand Madurai 625001 விலை ரூ 500
பழைய கட்டுரைகள்
இரும்புதெய்வத்திற்கு ஒரு பலி
கனவுபூமியும் கால்தளையும்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
வாழ்க்கையை காட்டுவதும் ஆராய்வதும்
====================
தொடர்புள்ள கட்டுரைகள்
=====================
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 8, 2010 @ 0:06
தொடர்புடைய பதிவுகள்
தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்
செவ்விலக்கியங்களும் செந்திலும்
இருவகை எழுத்து
வாழ்க்கையின் விசுவரூபம்
இரண்டாயிரத்துக்குப்பின் நாவல்
வரலாறும் இலக்கியமும்
இலக்கியமும் நோபலும்
தல்ஸ்தோயின் மனைவி
கனவுபூமியும் கால்தளையும்
இரண்டு வானோக்கிய சாளரங்கள்
வரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்
சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு
நாஞ்சில்நாடனின் ஆசிரியன்குரல்
ஆழமும் அலைகளும்
மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…
ஜோ.டி.குரூஸுக்கு பாராட்டு விழா
எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை
ஐரோப்பாக்கள்
தமிழில் வாசிப்பதற்கு…
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
அன்னா கரீனினா -கடிதம்
ஜெ,
எல்லோரையும்போல பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பட்டியலில்தான் முதன்முதலாய் லியோ டால்ஸ்டாய் அவர்களின் பெயரை நானும் மனப்பாடம் செய்திருக்கிறேன். அப்போதிலிருந்தே அவரின் பெயரை எனக்கு பிடிக்கும். பெயரிலேயே ஒருவித ஈர்ப்பு எனக்கு. கல்லூரியிலேயும் அவரின் பெயரை நினைவுபடுத்தினார்கள். ஆனால் அவர் என்ன அப்படி எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார் என எண்ணி வியப்பதோடு என் தேடலும் ஆராய்ச்சியும் நின்றுவிட்டது. ஒருவேளை பாடபுத்தகங்களைப் படிக்காமல் கதைபுத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தால் மார்க் குறைந்துவிடும் என்ற பயம் கூட அவரைத் தேடாமலிருந்ததற்கு காரணமாக இருக்கலாம்.
பள்ளியும் முடிந்தது. கல்லூரியும் முடிந்தது. வேலைக்கும் வந்தாயிற்று. அதுவும் பதினைந்து வருடங்கள் வேலை வேலை என்று. அதை வேலை வேலை என்று சொல்ல முடியாது. தனிமைப்படுத்தப்பட்ட வேலைக்கு நானே என்னை ஆட்படுத்திக் கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இங்கும் அதே பீடிப்பு. ஒருவேளை வேலை பார்க்காமல் கதை புத்தகம் படித்தால் அன்றன்றைய வேலையை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயம். கடைசி கடைசியாக நான் சிறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்பட்டு விடுதலையளிக்கப்பட்டேன் என்றுதான் இப்போதுள்ள சூழலைச் சொல்லவேண்டும். ஆமாம். குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த நான் எல்லையில்லா பெருவெளியில் பாய ஆரம்பித்தேன்.
பலருடன் வேலை பார்க்கும் அனுபவம் எனக்கு புதிதாகவும் கடினமாகவும் இருந்தது. ஆனால் என் சிறுவயது ஈர்ப்புகள் என்னவென்று உணரவைத்த சூழல் இதுதான். ஏனெனில் என் பால்யகால விருப்பங்கள் தேடல்கள் ஆராய்ச்சிகள் இவையனைத்துக்கும் விடைகளை இப்பரந்த சூழலில்தான் கண்டடைந்தேன். பல மனிதர்களோடு பழகுகையில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் மகத்தானவை. ஏன் என்னை இத்துணை அருமை மனிதர்களிடமிருந்து இத்தனை வருடங்களாக ஒதுக்கி வைத்துக்கொண்டேன் என என்னை நானே நொந்துகொண்டேன். இதற்கெல்லாம் காரணம் அந்தப் பலரில் என் விருப்பத்தோடு ஒத்துப் போகின்றவர்களைக் கண்டதாலும் அவர்களோடு உரையாடி என் சிந்தனை வளத்தை மேம்படுத்திக் கொண்டதாலும்தான் என நான் சொல்லத் தேவையில்லை.
இப்படித்தான் மெல்ல நான் பல பயங்கள் காரணமாக விட்டுவிட்ட கதைப்புத்தகங்கள் வாசிப்பைத் தொடர்ந்தேன். ஆனால் இனி நான் வாசிப்பவற்றை கதைப்புத்தகங்கள் என சொல்லக்கூடாது என அறிந்தேன். அவை அனைத்தும் வாழ்க்கை அனுபவங்கள். அச்சிறுகதைகளில் அக்குறுநாவல்களில் அப்பெரும் புதினங்களில் வரும் மாந்தர்கள் கதைமாந்தர்கள் அல்ல. அனைவரும் கதாமாந்தர்கள் என உணர்ந்தேன். எந்த எந்த புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்று கூட அறியாமல் இருந்த எனக்கு என் புதிய அலுவலகம் வழிகாட்டியையும் தந்தது. நிறைய கேட்டேன். நிறைய பேசினேன். நிறைய வாசித்தேன். நிறையவே எழுதினேன். நிறைவும் அடைந்தேன். தமிழ்ப்பற்று, தமிழிலக்கியப்பற்று, இந்தியப்பற்று, உலக இலக்கியப்பற்று, உலகமயமாதல் என என சின்னஞ்சிறு குருவியைப் போன்ற பார்வை வானுயரே வட்டமிடும் வல்லூறுவினுடையதானது.
அப்போதுதான் உலகப்புகழ் வாய்க்குமாறு என்னதான் எழுதுகிறார்கள் என்ற என் நின்றுபோன தேடலும் ஆராய்ச்சியும் தொடங்கியது. அனைத்து புகழ்வாய்ந்த எழுத்தாளர்களெல்லாம் இனி உலகப்புகழ்பெறப்போகும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அவரின் உலகப்புகழை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் மகாபாரதத்தின் நவீனத்துவ வடிவம் கொண்ட வெண்முரசுவை வாசித்துக்கொண்டே அவரின் அறிமுகத்தினாலும் ஏற்கெனவே என் தேடலுக்கான விடையைத் தெரிந்து கொள்ளும் ஆவலினாலும் என் விடுபட்டுப்போன ஆராய்ச்சியை புதுப்பிக்க உற்றதுணையாய் ஆராய்ச்சியாளனாய் எழுத்தாளனாய் கிடைத்த அலுவலக நண்பனின் தூண்டுதலினாலும் புதுமைப்பித்தன், க.நா. சுப்ரமணியம், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களை வாசித்தேன். இன்னும் லா.ச.ராமமிர்தம், சுந்தர ராமமூர்த்தி, அசோகமித்திரன், தாராசங்கர் பானர்ஜி, வண்ணதாசன்….இன்னும் இருக்கிறார்கள் நான் வாசிப்பதற்கு. எவ்வளவு வாசித்தாலும் தீராத வாழ்வனுபவங்கள் கொட்டிக்கிடக்கின்றன
ஒவ்வொரு நூலிலும். சரி. நான் தமிழச்சி. தமிழில் இருந்தால்தானே நான் ஈர்க்கப்பட்ட பெயரைக் கொண்டவரை வாசிக்கமுடியும். அவரோ ரஷ்யர். ஆவல் முடங்கிவிட்டது. ஆனால் என் ஆராய்ச்சியாள நண்பனோ விடவில்லை. நூலகத்தில் தேடி எடுத்துக்கொண்டு வந்துவிட்டான் லியோ டால்ஸ்டாயைத் தமிழில். நா.தர்மராஜன் அவர்களின் அரும்பாட்டால் தமிழில் வெளிவந்த லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளும குறுநாவல்களும் தொகுப்பே நான் முதலில் வாசித்தது. அட! இது உலகளாவிய எழுத்தேதான்! என என்னுள் நான் உணர்ந்தபோது நான் அடைந்த பரவசத்துக்கு அளவேயில்லை. அடுத்ததாக அதே அவரின் தமிழ் மொழிபெயர்ப்பு “அன்னா கரீனினா”. இதை வாசித்து முடிக்கையில்தான் லியோ டால்ஸ்டாயை ஏன் உலக எழுத்தாளர் எனவும் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் எனவும் அன்னா கரீனினா நாவலை ஏன் உலக சிறந்த நாவல் எனவும் புகழ்கிறார்கள் என புரிந்துகொண்டு ஆனந்தகண்ணீர் வடித்தேன்.
மொத்தம் 726 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். ஏன் வாசித்து முடிக்கையில்தான் உணர்ந்தேன் என்றால் முதல் 600 பக்கங்கள் வரை என்ன இது என்ன இது என்று பல கேள்விகள். புரியாத புதிர்கள். இது என்ன வாழ்க்கையா ஏன் இந்த வாழ்க்கை இப்படிப்பட்ட வாழ்க்கை அவசியம்தானா இதுவும் வாழ்க்கையோ இப்படியும் வாழலாமா என குழப்பங்களும் சஞ்சலங்களும் சில நேரங்களில் சலனமின்மையும் சலிப்பும் தோன்றி விரக்தியின் வெறுப்பின் விளிம்பிற்கே கொண்டுவந்துவிட்டது இந்நாவல் என்னை. ஆனால் இத்தனை குழப்பத்திற்கும் சஞ்சலத்திற்கும் விடையளிக்கும் நேரம் வந்துவிட்டதை உணர்த்துமாறு 600 பக்கங்களுக்குப்பிறகு வரும் நூறு பக்கங்களில் வாழப்படும் வாழ்க்கை அதிவேகமாக அமைந்துள்ளது.
அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நொடியில் கட்டப்படுகின்றன. அல்லது சுக்குநூறாக்கப்படுகின்றன. என் கடந்த வாழ்க்கை- முதல் 36 வருட வாழ்க்கையானது இந்நாவலின் முதல் 600 பக்கங்கள் போல. கடந்த இரண்டாண்டு காலமாக நான் அறியும் வாழ்க்கை இந்நாவலின் கடைசி 100 பக்கங்கள் போல. நூல்களை வாசிக்க வாசிக்க வாழ்வின் வேகமும் அதிலுள்ள சுவையும் தெரிகிறது. அன்னா கரீனினா நாவலின் கதாமாந்தர்கள் வாயிலாக டால்ஸ்டாய் எனக்கு வாழ்க்கையின் அதுவும் மனித வாழ்க்கையின் ருசியைக் காட்டிவிட்டார். வாழ்வு என்பது இறப்பிற்கு பிறகுதான் என்பதை இதன்மூலம் நான் கண்டுகொண்டேன். இதைவிட வாழ்க்கையின் இனிமையை நான் வார்த்தைகளால் சொல்ல விரும்பவில்லை. வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன்! அன்பு நண்பர்களே! இயன்றால் இவர்களுடன் வாழ வாருங்கள். வாழ்வின் இனிமையை வாழ்ந்து காணுங்கள்!
அன்புடன்
கிறிஸ்டி
அன்புள்ள கிறிஸ்டி
நூறாண்டுகளுக்கும் மேலாக அன்னா கரீனினா உலக வாசகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. அறிவுஜீவிகளின் ஆய்வுகள் மெல்ல நின்றுவிட்டன. அவர்களுக்கு வடிவம், மொழி ,பின்புலம் ஆகியவற்றுக்கு அப்பால் சென்று பேச ஏதுமில்லை. ஆனால் வாசகர்களுக்கு அவர்களின் வாழ்க்கை சார்ந்து அன்னா கரீனினாவில் நுண்ணிய தருணங்கள் சொல்வதற்கென வந்தபடியே உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் தலைமுறைகள் கண்டடைகின்றன. இலக்கியம் என்பது வாழ்க்கையை விளக்கும் ஒரு நிகர் வாழ்க்கை மட்டுமே, வேறொன்றுமே அல்ல என நிறுவும் படைப்பாக இன்று அன்னா கரீனினா உள்ளது
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
விவேக் ஷான்பேக்- மீண்டும் ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
விவேக் ஷன்பேக் மொழியாக்கம் பற்றி
என் எழுத்து ஏதோ ஒரு வடிவத்தில் உங்கள் வலைத்தளத்தில், 50000+ வாசகர்களின் பார்வை பட! நள்ளிரவில் இவ்வூரின் மெல்லிய குளிரில் அதை பார்த்து படித்தபோது எழுந்த பரவசமும் புல்லரிப்பும் இன்னும் நீங்கவில்லை. வேறொருவர் எழுதியது போல முற்றும் வாசித்தேன். மீண்டும் வாசித்தேன்.
இந்த சில வரிகளாவது எழுதும் அளவிற்கான ஊக்கம் பெருமளவிற்கு 2 1/2 ஆண்டுகளாக உங்கள் வலைத்தளம், நூல்கள், ‘நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்’ சுட்டிய நூல்கள் இவற்றை வாசித்ததால் வந்தது.
நன்றி ஐயா, நன்றி!
பா ராஜேந்திரன்
அன்புள்ள பா ராஜேந்திரன்
மீண்டும் நான் சொல்வதைக் கவனியுங்கள். உங்களுக்கு கூர்மையாக தைக்கவேண்டுமென்றே அதைச் சொன்னேன். மனிதர்களுக்கு முதலில் நம்பிக்கையை அளியுங்கள், சந்தேகத்தை அல்ல. சந்தேகத்தை மனிதர்கள்மேல் நீட்டும்போது மொத்த மானுடகுலத்தை அவமதிக்கிறீர்கள். உங்களுடைய இருண்ட பக்கம் ஒன்றைக்கொண்டு உலகையே அறிகிறீர்கள்.
ஆயிரம் வணிக, தொழில் விஷயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நம்சூழலில் ஒரு கன்னட நூலை உட்கார்ந்து மொழியாக்கம் செய்பவர்கள், அதை சொந்தப்பணம் போட்டு நம்பி வெளியிடுபவர்கள், வெறும் லாபநோக்குடன் அதைச்செய்யமாட்டார்கள், அதற்காக மோசடியாக ஒன்றை முன்வைக்கமாட்டார்கள் என்றுதான் இயல்பாக ஒருவர் எண்ணுவார். அந்த நம்பிக்கை உங்களுக்கிருந்திருந்தால் அதன் அடிப்படையில் அந்நூலை அணுகியிருந்தால் இந்த கோபமோ எரிச்சலோ வந்திருக்காது.
அப்படியென்றால் என்ன பிரச்சினை? உங்கள் பிரச்சினை நீங்கள் நல்லவர் என நம்ப பிறரை அயோக்கியர் என நிறுவ விரும்புகிறீர்கள் என்பதுதான். ஆகவே உண்மையாகவே அர்ப்பணிப்பு கொண்ட, நல்லவிஷயங்கள் உலகில் நிகழும் என்பதை உங்களால் நம்பமுடியவில்லை. உலகை வேவுபார்க்காதீர்கள். உலகிடமிருந்து அன்னியப்படுவீர்கள்.
இதை நான் பலமுறை எழுதியிருக்கிறேன். ஒரு சேவையாளர், பொதுநல ஊழியர் பற்றி எந்த அவதூறை எவர் சொன்னாலும் உடனே அதை நம்ப பொதுமக்களில் ஒரு சாரார் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் இருண்ட பக்கத்தால் அனைத்தையும் பார்க்கிறார்கள். இயல்பாகவே நல்லியல்பு கொண்டவர்கள் பிறருக்கும் அந்நல்லியல்பையே திறந்து காட்டுவார்கள். இந்தவேறுபாட்டை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78
[ 30 ]
மலையில் நின்றது தனிமரம். காய்ந்த மலர்களும் சருகுகளும் உதிர்ந்து அதன் காலடியை மூடின. எடையிழந்து எழுந்தாடி காற்றைத் துழாவின கிளைகள். பின்னர் மலர்களையும் கனிகளையும் உதிர்த்து தனக்கே அடிபூசனை செய்தன கிளைகள். பின்னர் இலைகளையும் காய்களையும் உதிர்க்கத்தொடங்கியது மரம். மெல்ல பிஞ்சுகளும் தளிர்களும் உதிரலாயின. இறுதியில் வெறுமையை சூடிநின்ற கிளைகள் உதிர்ந்தபின் அடிமரம் வேர்மேல் உதிர்ந்தது. வேர் மண்ணில் பிடிவிட்டது. ஆணிவேரின் குவைக்குள் ஓர் உயிர்த்துளி மட்டும் அனன்றது.
புவியை உண்டு முன்னகர்ந்தது மண்புழு. உடலே நாவென சுவையறிந்தது. நாவே குடலென நெளிந்து செரித்தது. உண்ட மண்ணும் உமிழ்ந்த மண்ணும் நிகரென்றாக உப்பை மட்டும் எடுத்து உடல்நெளிவாக்கிக் கொண்டது. இன்மையைச் சென்றடைந்து திரும்பி நோக்கியபோது புவி ஒரு மண்குவியலென தன்பின்னால் எழுந்திருக்கக் கண்டது. தன் மூச்சை இழுத்து படம்கொண்டது. மேலும் பசித்து தன் வால்நுனியின் அசைவைக் கண்டு வெருண்டெழுந்தது. மும்முறை நிலம் கொத்தியெழுந்தபின் பாய்ந்து அதைக் கவ்வி உண்டது.
தன் நிழல் கண்டு விழிவிரித்து உடல்சிலிர்த்து நின்றது மான். செவியசைந்தபோது நீருள் எதிரி ஒன்று செவியசைக்கக் கண்டு உடல் வெருண்டு அவ்வெருட்சியை தான் கண்டது. அலையின் ஆழத்திலிருந்து ஆடிய அதன் விழிகளின் அருகே விழியென மிதந்து சென்றது மீன். சிறகசைத்தன மூன்றுமீன்கள். கோடி மான்விழிகள் ஒளி நோக்குடன் முகில் துழாவிச்சென்றன. உடலெங்கும் விழியாகும் ஒரு நீலவிழியாகி வான்நோக்கிக் கிடந்தது சுனை. அதன்மேல் அலையலையலை என விழுந்துகொண்டிருந்தன மரம் உதிர்த்த பனித்துளிகள். ஒரே பனித்துளி. ஒன்றுபோல் ஒன்றென முடிவிலாது பனித்து உதிர்ந்தது விசும்பு.
குத்துவிளக்கிலிருந்து திரை வழியாக சுவடியடுக்கில் பற்றி ஏறியது அனல். நெறிநூல்களை உண்டது. இலக்கண நூல்களை உண்டது. காவியங்களை உண்டு எழுந்து வேதங்களை பற்றிக்கொண்டது. சுவடிகள் எரிந்து நெளிந்து துவண்டு கருகி சாம்பலாக அவை கொண்ட சொற்கள் எரிமேல் எழுந்து சிறகடித்து கூவிச் சுழன்று பறந்தன. பின்னர் அவையும் சிறகுகள் கருகி அனலிலேயே விழுந்து அனல்பற்றி எரிந்து கூவிச் சுழன்று மூழ்கி மறைந்தன. அனல் என்ற சொல்லாக அனல் மட்டும் எரிந்தது. அச்சொல் வெளியில் நின்று தவிக்க அனல் அணைந்தது. அச்சொல் எழுந்து வானில் பரவி மறைந்தது.
முட்டைவிட்டு எழுந்த கணமே தன்னை பறவை என்று அறிந்தது ஓர் உயிர். முதற்கிளைவிட்டு எழுந்து வானில் சுழன்றதன் பேருவகையால் ஆட்டுவிக்கப்பட்டது. இரைதேட இணையறிய முட்டை மீறிய குஞ்சுகளுக்கு சிறகளிக்க பறந்துகொண்டே இருந்தது. முதிர்ந்து இறகுகள் உதிர்ந்து எடைமிகுந்து ஒரு சிறுகிளையில் அமர்ந்து குளிர்ந்து வரும் உடலை உணர்ந்தது. “என் வாழ்நாளின் பொருள்தான் என்ன?” என்று எண்ணியபோது வாழ்நாளெல்லாம் தான் பறந்த தடங்கள் அனைத்தையும் வானில் ஒரு வலை எனக் கண்டது. விழிதிருப்ப அருகே ஒரு சிலந்தி நெய்த வலையைக் கண்டு உளம்திகைத்து பின் புன்னகைத்தது.
கொந்தளித்த கடல் எழுந்து கார்முகிலென வான் நிறைத்தது. கோடிகோடி துளிகளென்றாகி மண்ணை அறைந்து மூடி பெருகிச் சுழித்து திரண்டு ஓடி கடலாகியது. துளியென்றாகாத நீரின் ஓர் அணு வானில் எஞ்சியது. அதன் மேல் விழுந்த விண்மீன்களின் ஒளியால் அதுவும் ஒரு விண்மீன் என்றாகியது. கீழ்வானில் நீலநிறம் கொண்டு மின்னிய அதை மீன்கணங்கள் கண்டுகொண்டு விழிதுளித்து நோக்கி நின்றன. விடாய் கொண்ட பறவைகள் அதை நோக்கி நா நுணைத்தன. விண்ணிலொரு கடலென்று அது நின்றது. மண்ணிலொரு துளியென கடல்.
எழாம் கடலென்பது வானமே. ஆறுகடல்களாக அலையடிப்பதன் அமைதி அது.
*
கரிய தேவன் ஒருவனால் ஓட்டப்பட்ட கரியதேர் வந்து நின்றது மாளிகை முகப்பில். கதவிடுக்கின் வெள்ளிக்கோல் கரியபட்டையென்றாகியது. திறந்து வெளிவந்து படிகளில் நின்றான். அவன் உடல் கனலாக ஆடைகள் எரிந்துகொண்டிருந்தன. அத்தழலில் இருந்து மாளிகையின் கதவும் சுவரும் பற்றிக்கொண்டன. அவன் தசைகள் உருகிச் சொட்டி விழுந்த துளிகளும் புகையுடன் எரிந்தன. வாய்திறந்தபோது உள்ளிருந்து தீ பறந்தது. மூக்கினூடாகப் புகை எழுந்தது.
ஏழு குதிரைகளும் எண்ணைமின்னும் கருவண்ணம் கொண்டவை. அவற்றின் திறந்தவாய்களும் நாக்குகளும் பற்களும்கூட கரியவை. கருங்கல் குளம்புகள் கற்தரையில் முட்டும் ஓசை. கரிய இரும்பாலான தேரின் சகடவட்டமும் கரிய ஒளியே கொண்டிருந்தது. அதன் பீடத்தில் எழுந்த தேவனின் கண்விழிகளும் பற்களும் கைநகங்களும் கருஞ்சிப்பி போல இருளொளி கொண்டிருந்தன. அவன் இரும்புக்குறடுகள் கல்லில் ஒலிக்க அணுகி பணிந்து “வருக!” என்றான்.
“ஏன்?” என அவன் கேட்டான். “வருக!” என்று அவன் மீண்டும் சொல்லி கைகாட்டினான். “நீ யார்?” என்றான். “நான் குரோதன். என் தலைவர் உன்னைத் தேடி வந்துள்ளார்.” அவன் எரிந்துகொண்டே சென்றான். உள்ளே கரியபட்டுத்திரை அசைந்தது. “யார்?” என்றான். “அவரை அதர்வன் என்கிறார்கள் தேவர்கள். அழிவற்ற ஆற்றலே அவர் என வழிபடுகின்றனர் முனிவர்.”
அஞ்சியபடி அவன் நடந்து சென்று தேரிலேறி அத்திரையை விலக்கினான். உள்ளே புகைமூடிய அனல் என அமர்ந்திருந்தது எரியுடல் கொண்ட தெய்வம். கரிய முட்கள் என மயிர் சிலிர்த்த பன்றிமுகம். வெறிமயங்கிய கருமணிக்கண்கள். “வருக!” என அவனை கைநீட்டி அழைத்தது. எட்டு கைகளில் வாளும் வேலும் வில்லும் அம்பும் பாசமும் அங்குசமும் குளிர்மலரும் அமுதகலமும் கொண்டிருந்தது. அனல் அனலை என அவன் அத்தெய்வத்தின் மடியில் அமர்ந்தான். சவுக்கு சொடுக்கப்படும் ஒலி கேட்டது. தேர் அசைந்து சகட ஒலியுடன் கிளம்பியது.
அவனுக்கு எதிர்வந்தது பிறிதொரு கரியவண்ணத்தேர். அதன் கொடி புகைச்சுருள் என பறந்தது. அதிலமர்ந்திருந்தவனின் எரிவிளிம்புகளை அவன் கண்டான். “அவன் உன் வெஞ்சினத்தின் இலக்கு. அவனை வென்றால் நீ முற்றடங்கி குளிர்வாய். பாண்டவனே, நீ சென்றடையத் தடையென எப்போதும் இறுதியில் எழுந்து நிற்பது இதுவே” என்றது தெய்வம். “யார் அவன்?” என்றான் அர்ஜுனன். “உன் உடன்பிறந்தோன். யுகமடிப்புகள் தோறும் நீங்கள் போரிட்டே வருகிறீர்கள்.”
அர்ஜுனன் விழிகூர நோக்கியதுமே அடையாளம் கண்டுகொண்டான். “என் படைக்கலங்களில் ஒன்றை எடுத்து அவனை எதிர்கொள்க!” என்றது பன்றிமுகத்தெய்வம். அவன் உடல் விம்மி பின் மெல்ல தணிந்து “அந்த மலர் என் படைக்கலமாகுக!” என்றான். அதர்வன் புன்னகையுடன் “அவ்வாறே ஆகுக!” என்றான். அர்ஜுனன் எடுத்து வீசிய அந்த மலர் பெருகி மாமழையென்றாகி அக்கரியதேர்மேல் பொழிய அது குளிர்ந்து நீர்ப்புகையெழ நின்றது. அனல் அணைந்து அது அமைவதை அவனால் காணமுடிந்தது.
புன்னகையுடன் ஏதோ சொல்ல முயன்ற கணம் ‘ஆம்! ஆம்! ஆம்!’ என்னும் முழக்கத்தைக் கேட்டபடி அவன் உதிர்ந்து தேர்த்தட்டிலிருந்து கீழே விழுந்தான். அவன் எரிதல் அணைந்து விட்டிருந்தது. எழுந்து நின்றபோது தன் உடலின் மென்மையையும் மணத்தையும் அறிந்தான். பூனைமயிர் படர்ந்த முகமும் நாண் இழுத்த கைவில்போன்று இறுகிய இளைய உடலுமாக அவன் முதிராஇளைஞனாக மாறிவிட்டிருந்தான்.
பேரியாழின் நரம்புகளின் அதிர்வு போன்ற ஒலியைக் கேட்டு அவன் நோக்கினான். இளஞ்செந்நிற தாமரைமலர் நீரலையில் எழுந்தமைந்து அணுகுவதுபோல வந்த தேர் ஒன்று தெரிந்தது. செந்தாமரையின் மலர்ந்த ஏழு இதழ்கள் போன்ற குதிரைகள் குளம்புகளை உதைத்து கழுத்து திமிறி கனைப்போசையுடன் நின்றன. அதை ஓட்டிவந்த பாகன் மலர்நடுப்புல்லி போலிருந்தான். இறங்கி தலைவணங்கி “நான் காமன்” என்றான். “இது என் தலைவனுடன் நீங்கள் செல்லும் தேர்.”
அவன் அந்தத் தேர் மீட்டி முடித்த யாழென இசைவிம்மிக் கொண்டிருப்பதை தன் உடலால் உணர்ந்தான். அணுகியபோது அவ்விசையை உள்ளம் உணர்ந்தது. “என் தலைவரை சாமன் என்கிறார்கள். வானில் கார் நிறைப்பவர். மரங்களை மலர்கொள்ளச்செய்பவர். யானைத்துதிக்கைகளை குழையச்செய்பவர். மான்விழிகளில் ஒளியாகுபவர். மலைத்தேன்கூடுகளுக்குள் இனிமையை நிறைப்பவர்” என்றான் காமன். “ஷட்ஜன், ரிஷபன், காந்தாரன், பஞ்சமன், மத்திமன், தைவதன், நிஷதன் எனும் ஏழு புரவிகளால் இழுக்கப்படும் இந்தத்தேர் சுநாதம் எனப்படுகிறது.”
அவன் தேரைத் தொட்டதுமே தன் உடல் முழுக்க இசை நிறைவதை உணர்ந்தான். தேனில் துழாவிய நாக்கு என்றாகியது அவன் உடல். அவ்வினிமையை தாளமுடியாமல் அவன் விழிகசிந்தான். உடல்நடுங்கி அதிர தேருக்குள் ஏறி அங்கே முற்றிலும் மலர்ந்த தாமரை மலரென அமர்ந்திருந்த தெய்வத்தைக் கண்டான். புரவியின் தலை. விழிகள் நீலமலர்கள் போலிருந்தன. ஆறு கைகளில் வில்லும் அம்பும் மலரும் மின்கதிரும் கொண்டு அஞ்சலும் அருளலுமென அமைந்திருந்தது. “வருக, மைந்தா!” என அவனை கைபற்றி தன் அருகமரச்செய்தது.
இசையின் அலைகளில் எழுந்தமைந்து அவன் சென்றுகொண்டிருந்தான். எதிரே இளஞ்செந்நிறத்தேர் ஒன்று மிதந்தணைவதைக் கண்டான். “உன் காமத்தின் நிறைவை அளிப்பவள் அவள். நீ இக்கணம் வரை சற்றும் அறியாதவள். இளையோனே, எதிர்ப்படும் அத்தனை முகங்களினூடாகவும் நீ தேடிக்கொண்டிருந்தது அவளையே. இதோ உனக்கு அவளை அளிக்கிறேன். விழைவை ஆற்றலெனக்கொண்டு எழுக! அத்தனை புலன்களாலும் அவளை அடைக! இசைதலின் பேரின்பத்தை அறிந்து கடந்தெழுக!” என்றது அத்தெய்வம்.
ஒருகணம் எண்ணியபின் “அறிந்து அதைக் கடந்தவர் எவருமில்லை” என்றான். அக்கணமே அவன் ஒரு சிறுமைந்தனாக மாறி இடையில் கிண்கிணியும் கழுத்தில் ஐம்படைத்தாலியும் மட்டும் அணிந்து அத்தேரில் நின்றிருந்தான். அவனை அறியாமல் எதிர்த்தேர் கடந்துசென்றது. அவனை இரு கைகள் இறக்கி கீழே விட்டன. கடந்து செல்வனவற்றை விழிமலர்ந்து புன்னகைத்து நோக்கியபடி அவன் அங்கே நின்றிருந்தான்.
பொற்குண்டலம் ஒன்று கீழ்த்திசையில் எழுவதைக் கண்டு கைகளை வீசி சிரித்தான். அது பெருகி அணுகியபோது பொன்னிறப்புரவிகள் இழுக்கும் ஒரு தேர் அது என்பதைக் கண்டான். பொன்னொளி தரையில் மஞ்சள்நீர் என பரவிக்கிடக்க அது வந்து அவனருகே நின்றது. பழுத்த வாழைப்பழச்சீப்பு என புரவிகள் நிலைகொள்ள பாகன் இறங்கி வந்து அவனிடம் “நான் மோகன். எந்தை யஜுர்வனின் தேருக்கு வருக!” என்றான்.
அகிற்புகை மணக்கும் அத்தேரினுள்ளில் கலைமான் உருவில் அமர்ந்திருந்தது நான்கு கைகளில் மலரும் அமுதும் அஞ்சலும் அமுதும் கொண்ட தெய்வம். கவர்கொம்புகளில் மலரும் தளிரும் எழுந்திருந்தன. “வருக, குழந்தை!” என அவனை அள்ளி தன் மடியில் அமர்த்திக்கொண்டது. “இங்கு தெரியும் அனைத்தும் உன்னுடையதே. நீ விழைந்தவையும் அடையாதவையும் மட்டும் நிரைவகுக்கும் வெளி இது. நிறைக!” என்றது.
அவன் விழிவிரித்து வாயில் கையை விட்டுக்கொண்டு ஒவ்வொன்றையாக பார்த்தான். பின் சிணுங்கி அழுதபடி “அம்மா வேண்டும்” என்றான். “இவற்றில் எதை வைத்து விளையாட விழைகிறாய் நீ?” என்றது தெய்வம். “ஒன்றுமே வேண்டாம். அம்மாவிடம் செல்கிறேன். அம்மா மட்டும் போதும்” என்றான். “இதை நீ இனி அடைய முடியாது. இது மிகமிக அரியது” என அவனுக்கு ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டியது. “அம்மா! அம்மாவிடம் செல்கிறேன். அம்மா அம்மா” என அவன் அலறி கால்களையும் கைகளையும் உதைத்தபடி திமிறி அழத்தொடங்கினான்.
அழுது மூச்சு சிக்கிக்கொள்ள உடல் நீலம்பாரித்து அவன் துடித்தான். “அம்மா அம்மா” என்று உதடுகள் அசைந்துகொண்டே இருந்தன. அவனை இறக்கி படுக்கவைத்துவிட்டுச் சென்றது தேர். புழுதியில் அவன் கிடந்து நெளிந்து அழுதான். வெண்மை ஒளிரும் தேர் ஒன்று அவனருகே வந்து நின்றது. வெண்புரவிகள் காலோய்ந்து மூச்சு சீறின. அதிலிருந்து சாந்தன் எனும் பாகன் இறங்கினான். அம்மகவை இரு கைகளால் அள்ளி எடுத்து தேருக்குள் அமர்ந்திருந்த தெய்வத்திடம் அளித்தான்.
வெண்பசுவின் தலையும் அஞ்சலும் அருளலுமென மலர்ந்த இரு கைகளும் கொண்டிருந்தாள் ரிக் என்னும் அன்னை. யஜுர்வன், சாமன், அதர்வன் என்னும் மூன்று மைந்தர்களைப் பெற்றவள். அவள் அவனை தன் முலைகளுடன் அணைத்து அமுதுக்காம்புகளை அவன் வாயில் வைத்தாள். ஆவலுடன் சப்பி உறிஞ்சி உண்ண உண்ண அவன் சுருங்கி ஒரு மொட்டென்று ஆனான். அவனை தன் இடையில்லிக்குள் செலுத்தி கருவறைக்குள் வைத்துக்கொண்டாள். அங்கே அவன் கைகள் குவித்து உடல்சுருட்டி அமைந்தான்.
அவன் உடல் பொன்னாகியது. உருகிச்சொட்டும் பொற்துளி என அவள் கருவறைக்குள் இருந்து அவன் பிறந்தெழுந்தான். ஒன்பது சூரியன்கள் ஒளிவிட்ட பிறிதொரு உலகில். “ஹிரண்யகர்ப்பனே, வருக!” என்று ஓர் அறிந்த குரல் அவனை அழைத்தது.
*
எரிந்தது முதற்புரம், செந்தசைக்கோட்டை சூழ் பெருநகரம். அணுவெனக் குறுகியது. விதையுள் கருவென ஆகியது. இருப்பென்றும் இல்லையென்றும் ஆடும் ஓர் ஊஞ்சல். எரிந்தது மறுபுரம். வெள்ளிச்சிலந்தி பின்னிய வலைநகரம். ஒருகண்ணி பிறிதொன்றை ஆக்கும் நெசவு. அவிழ்ப்பதே இறுக்குவதாக ஆகும் அவிழாச்சுழல். எரிந்தது பிறிதொரு புரம். பொன்னிறக் கருவறை. ஆடிகள் தங்களுள் நோக்கி அமைத்த மாநகரம். எதிர்ப்பவரை அள்ளி தன் குடிகளென்றாக்குவது. கோடிக் களம் கொண்ட ஆடல். கோடிக்காய்கள் நின்றிருக்கும் களம். எரிந்தழிந்தது முப்புரம். செம்பு எரிந்தது. எரிந்தது வெள்ளி. உருகி அழிந்தது பொன். மூவிழி அனலில் தழல் மூண்டழிந்தது முப்புரம். கைப்பிடி நீறென்றாகியது. எஞ்சியது அது. நீறெனும் வெண்மை.
[ 31 ]
ஸ்ரவ்யம் என்னும் காட்டில் ஓர் ஆண்குயில் மஞ்சள் கொடி ஒன்று பறப்பதைக் கண்டு அருகணைந்தது. அது கொன்றைமரம் பூத்திருப்பது என்று அறிந்ததும் தன் உடல் விம்மி இறகுகள் எழுவதை உணர்ந்தது. சிறகுகளைச் சுழற்றியபடி மாதவிக்கொடி ஒன்றின் வளைவிலிருந்து ஊசலாடியபோது தன் அலகிலிருந்து அன்றுவரை அறிந்திராத இன்னிசை ஒன்று எழுவதைக் கேட்டது. அவ்விசையின் சுழலில் இன்னும் இன்னுமென தித்தித்துச் சென்றுகொண்டிருந்தது.
பின் அதை கேட்பவர் எவர் என உணர்ந்து விழிப்புகொண்டது. மிக அருகே வரிவரியென உடலிறகு கொண்டு அமைந்திருந்த பெண்குயிலை கண்டுகொண்டது. அதைநோக்கி தன் விடாயை பாடியது. விடை எழாமை கண்டு தன் தனிமையைச் சொன்னது. அதை துயரென்று மீட்டியது. அதன் விழிகளைக் கண்டதும் ஒலியடங்கியது. அவள் கொண்ட அமைதி தன் இசையின் உச்சமென உணர்ந்தது.
வீக்ஷம் என்னும் காட்டில் ஓர் ஆண்மான் குளிர்ச்சுனை ஒன்றில் குனிந்து நீர் அருந்தியபோது தன்னருகே நின்ற துணைமானை அங்கு கண்டது. நீரில் ஒளியென நடனமிட்ட அவ்வழகைக் கண்டு பெருங்காதல்கொண்டு முத்தமிட்டது. விடாய்மிகுந்து நாகுவித்து தன் துணைவியை அள்ளி அள்ளிக் குடிக்கலாயிற்று. ஒருதுளியும் குறையாமல் தன் உடல் ஊறி நிறைந்துகொண்டிருப்பதை உணர்ந்து மயங்கி நின்றிருந்தாள் அவள்.
தம்சம் என்னும் காட்டில் இரு யானைகள் சேற்றுப்பரப்பொன்றில் இறங்கி தங்கள் உடல் எடையை இழந்தன. துதிக்கை தழுவியும் உடல்வழுக்கியும் இணைந்து பிளிறியும் காதல்கொண்டன. மதமெழுந்து கன்னம் நனைந்த களிறு கொம்புகளால் பிடியைத் தூக்கிச் சுழற்றி வீசியது. சினம்கொண்ட பிடி எழுந்து திரும்பி துதிக்கையால் களிற்றை அறைந்து தன் சிறு தந்தத்தால் அதன் விலாவை குத்தியது. காடதிர முழங்கியபடி களிறு பிடியைக் குத்தி தந்தத்தை இறக்க பிடி அலறிய ஒலியில் பறவைகள் வானிலெழுந்தன.
சினம்கொண்ட இருபேருடல்களும் வெடிபடும் ஒலியுடன் மத்தகங்களால் முட்டிக்கொண்டன. துதிக்கைகளைச் சுழற்றிப்பற்றி ஒன்றை ஒன்று உந்திச் சுழற்றின. மரங்கள் கடைபிழுது விழுந்தன. கிளைகள் ஒடிந்து சொரிந்தன. பாறைகள் சரிவில் உருண்டன. உழுத வயலென்றாகியது காடு. இருபெரும் அடிமரங்கள் நடுவே பிடி சிக்கிக்கொண்டது. களிறு அதை அடக்கி மேலேறி உடலிணைந்தது. இருவர்கொண்ட விசைகளும் எதிரெதிர் முட்டி அசைவிழந்தன. குருதிவழியும் புண்கள் இனிக்கத் தொடங்கின.
ரம்யம் என்னும் காட்டில் இரு தட்டாரப்பூச்சிகள் காற்றில் இணைகண்டுகொண்டன. ஆணும் பெண்ணும் தங்கள் சிறகுகளை இணையாக்கி உடலை ஒன்றாக்கி எழுந்தமைந்த இளங்காற்றில் சுழன்று பறந்தன. இரு சிறகுகளும் ஒற்றைவிசை கொண்டபோது ஒன்றுக்கொன்று முற்றிலும் எடையற்றவையென்றாகின. தொடுவுணர்வு மட்டுமே அவற்றிடையே இருந்தது. சிறகுகள் முற்றிலும் பொருந்தியசைந்த கணத்தில் தங்கள் காதலால் மட்டுமே அவை தொட்டுக்கொண்டன.
தன்யம் என்னும் காட்டில் அரசித்தேனீயின் அரண்மனையை தேனால் நிரப்பின தேனீக்கள். காடெங்கும் மலர்ந்த பல்லாயிரம் மலர்களின் இனிமை. அவற்றை தேடிச்செல்லவைத்த மணம். அவற்றை உண்டு சுமந்து வருகையில் எழுந்த இசை. அவற்றை நிறைத்தபின் ஆடிய நடனம். விழிசொக்கி அமர்ந்திருந்த பெண்ணின் முன் ஒன்று நூறு ஆயிரமென பெருகியது ஆண். ஒன்று நூறு ஆயிரம் என விரிந்து அன்னையைச் சூழ்ந்தது தந்தை.
*
ஊழ்கத்திலமைந்திருந்த அம்மையப்பனின் உடலில் இருந்து தன் கருணையால் பிரிந்தெழுந்தாள் அன்னை. மெல்ல அவனைத் தொட்டு எழுப்பினாள். “அருந்தவம் முதிர்ந்துவிட்டது அவனுக்கு. இன்னமும் பிந்துதல் அழகல்ல” என்றாள். விழித்தெழுந்து புன்னகைத்து “முலை ஊறுகிறது போலும் உனக்கு” என்றார் ஐயன். “குழவியின் அழுகையை நெடுநேரம் பொறுத்தல் எந்த அன்னைக்கும் அரிது” என்றாள் அவள்.
குனிந்து கீழே ரிஷபவனம் என்னும் சோலையை பார்த்தார் பசுபதி. அங்கே அவன் அருகமைந்து தவம்செய்த கருங்கல் சிவக்குறி உயிர்கொண்டு விதையென்று ஆகிவிட்டிருந்தது. “ஆம், இது தருணம்” என்று அவர் சொன்னார். “குழவியின் உயிர்விசைபோல் அன்னையை மகிழ்விப்பது பிறிதொன்றில்லை” என்றாள் தேவி.
தொடர்புடைய பதிவுகள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 49
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

