Jeyamohan's Blog, page 1691
January 8, 2017
நடைதிறப்பு
இந்தியாவைப்பார்க்கும்பொருட்டு நாங்கள் கிளம்பியது 2008 செப்டெம்பரில். நண்பர் கிருஷ்ணன் பின்னர் சொன்னார், அந்தப்பயணத்தின் மிகப்புத்திசாலித்தனமான அம்சம் என்னவென்றால் அதற்கு இந்தியப்பயணம் என்று பெயரிட்டதுதான் என. நாங்கள் சென்றது ஈரோட்டிலிருந்து ஆந்திரம் வழியாக மத்யப்பிரதேசத்தைக் கடந்து காசிவரை. அப்படியே கயா வழியாக ஒரிசாவுக்குள் நுழைந்து விசாகப்பட்டினம் வந்து சென்னை வந்தோம். அதை இந்தியா என நம்பிக்கொண்டமை எங்களுக்கு மிகப்பெரிய மன எழுச்சியை அளித்தது. அந்த உத்வேகமே அப்பயணத்தை இன்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக ஆக்குகிறது.
பின்னர் பலபயணங்கள். அதைவிடப்பெரிய பயணமாக சமணப்பயணம். குகைகளின் வழியே ஒருபயணம். வடகிழக்கு, லடாக், பூடான், காஷ்மீர் என சென்றுகொண்டே இருக்கிறோம். ஆனால் இந்தியா இன்னமும் பார்க்கப்படாத ஒன்றாகவே எஞ்சுகிறது. ஆதிசங்கரர் முதல் நாராயணகுருவரை அத்தனை ஞானியரும், வியாசர் முதல் வைக்கம் முகமதுபஷீர் வரை அத்தனை கலைஞர்களும் அலைந்து கண்ட இந்த நிலத்தை அப்படிப் பார்த்து முடித்துவிடமுடியுமா என்ன? பின்னர் பல பயணங்கள் மேலும் உத்வேகமானவையாக அமைந்தன என்றாலும் எங்களுக்கு இப்பயணம் கருவறை நடைதிறந்து தெய்வத்தை முதலில் பார்த்த அனுபவம்.\
இப்போதெல்லாம் ஓர் ஆறுதல். நல்லவேளை, இன்னும் இந்தியா தீர்ந்துவிடவில்லை. இன்னும் நிறையவே எஞ்சியிருக்கிறது. இன்னும் நான் உயிருடன் இருக்கவாய்ப்புள்ள பத்துப்பதினைந்தாண்டுக்காலத்தில் இது எப்படியும் தீர்ந்துபோகாது. குளிர்ப்பெட்டி நிறைய இனிப்பு இருக்கிறது என நினைக்கும் சிறுவனின் நிறைவு.
இந்தியா ஒரு பெரிய கனவு. இப்பெருநிலத்தில் அலைவது ஒரு தவம். அதை சென்றுகாணாது எவரும் உணரமுடியாது. ஒவ்வொரு இடமாகச் சென்றுபார்க்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக்குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்தியதரிசனமே வேறு. நூறு கிலோமீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளே கூட மாறிக்கொண்டிருக்கும்.
ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம். அதுதான் இந்தியதரிசனம். இங்குள்ள அரசியல் வாயாடிகளால் காணமுடியாதது. வைக்கம் முகமது பஷீரும், சிவராமக் காரந்தும் பிபூதிபூஷண் பந்த்யோபாத்யாயவும் கண்டடைந்தது
அன்று எங்கள் பயணத்தில் உடனிருந்தவர்கள் வசந்தகுமார், கல்பற்றா நாராயணன், செந்தில்குமார், கிருஷ்ணன் , சிவா ஆகியோர் இன்றும் ஒரு பரவசத்துடன் நினைத்துக்கொள்ளும் பயணம் இது. இதேவழியில் என் வாசகர்களில் பலர் பலமுறை பயணம்செய்யவைத்தது இப்பயணப் பதிவு. இன்னும் இளையவர்களுக்கு தோளில் ஒருபையுடன் கிளம்ப இந்நூல் ஊக்கமளிக்கவேண்டும் என விரும்புகிறேன்
என் நண்பர் திருமலைராஜன் முதன்முறையாக அமெரிக்கப்பயணத்திற்கு ஏற்பாடுசெய்தவர். அமெரிக்கா என்றாலே எனக்கு சாஸ்தாமலையும் கிரேட்டர் ஏரியும்தான். அவை பலவகையான கனவுகளாக வெண்முரசு நாவல்தொடரில் வெளிவந்துகொண்டே இருப்பதைக் காண்கிறேன். தனிப்பட்டமுறையில் நான் மிகவும் கடன்பட்டிருப்பவர்களில் ஒருவர் அவர். இந்நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெயமோகன்
[கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் இந்தியப்பயணம் நூலின் முன்னுரை ]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஏழாம் உலகின் இருள்
ஜெ
முதல் முறை படிக்க வேண்டுமென்ற வேட்கையில் வாசித்ததினால் இந்நாவல் தொட்டுக் காட்டிய வலியையோ குரூரத்தையோ கீழ்மையையோ நான் முற்றாகக்கவனித்திருக்கவில்லை. அதனால்,மீண்டும் நூலகம் சென்று எடுத்து வந்து ஒரு வாரத்தில் வாசித்து முடித்தேன்.
முதலில் என்னைக் கவர்ந்தது அந்த வட்டார மொழி.அதன் ஓசை நயம்.
சில நாள்களுக்கு விளையாட்டாக பேசினாலும்,திட்டினாலும் அம்மொழியின் சிலசொற்கள் நாவில் ஊறும்.(சவிட்டிப் போடுவம் பாத்துக்க)இம்மாதிரி.
அடுத்து அதன் சித்தரிப்பு.நிஜ உலகிற்கு நிகரான அதன் புனைவு.நடுங்க வைப்பது.குறைபட்ட உடல்கள் கொண்ட மனிதர்கள்,சிறிய ஆத்மாக்கள்.விலங்குகளைப்போல.வளர்ப்புப் பிராணிகளைப் போல.
அவர்களால் பிறர் உதவியின்றி வாழ்வது கடினமில்லையா.அதனால்,
அவற்றை நல்ல ஆத்மாக்கள் காப்பாற்ற வேண்டும் என்பது பண்டாரத்தின் தரப்பு.அவர்களை விற்ப்பதும் கூட தவறு கிடையாது.அது அவர்கள் வாழ முருகன் கொடுத்த வழி.இப்படியான நியாங்களால் சமன் செய்ய முயன்றாலும் கூடஅந்தக் குற்றஉணர்வு ஒரு கணதில்,பெருநியதியின் ஒளிரும் ஒற்றைக் கண்போலத் தெரிந்து முதுகை சில்லிட வைக்கிறது.குடைக்குள் மறைந்து கொள்ளச்செய்துவிடுகிறது.
என்னதான் அவர்களை வணிகப்பொருள்களாக நினைத்தாலும் நெஞ்சின் ஏதோவொருமூலையில் சிறு கனிவேனும் இல்லாமலில்லை.
உணவு தீர்ந்துவிட்டது என்கிறபோது சிறு வருத்தமாக வெளிப்படுமதை
பிறகு,வசவுகளால் சமன் செய்துகொள்கிறார்.
குடியும்,பெண்ணும் விரும்பும் குடும்பக் கவலையும்,அன்பும்,பரிவும்
முருகன் மீதான பக்தியும் கொண்ட இன்னொரு முகம்.
நள்ளிரவில் கிளம்பிச் சென்று வளையல் வாங்கி வருவதும்,நினைத்து நினைத்துவிம்மி அழுது போக மறுப்பதாக நடித்து பின்,சென்று மரத்தின் கீழ்காத்திருந்து பெருமூச்சுடன் திம்புவதும்,உளமுடைந்து உடலளவில் திடமாகநின்று பின்,சென்றுவிட்டாள் என்ற கணத்தில் முற்றாக உடைந்து அழுது ஓடுவதுபோன்ற இடங்களில் பண்டாரம்,அசல் தந்தை.தனது செயல்களுக்கான நியாயத் தரப்பும்,வாழ்பனுபவமும் கொண்ட போத்தி.
ஏக்கியம்மை,பெருமாள்,கொச்சன்வாயில் நஞ்சு கொண்ட சிலர்.குறிப்பாக உண்ணம்மை. முதலியவர்களுடன்பின்னப்பட்ட நாவலின் ஏழாம் உலகம் மாங்காட்டுச்சாமி,ராமப்பன்,குய்யன்,முத்தம்மை,எருக்கு,தொரப்பன்,அகமது குட்டிமுதலியவர்களைக் கொண்டது.அவர்களின் வலி,துக்கம்,ஏக்கங்களுடன் சிறு சிறு இன்பங்களும் கொண்டது.
புறக்கணிப்புகளாலும் உடல் குறைபாடுகளாலும் கிடைத்த வாழ்வு.
பசியும்,கிண்டலும்,வசவுகளுமாகநகர்ந்து செல்கிறது.இருப்பு என்ற ஒன்றிற்காக.பேச்சும் பெருமூச்சுகளுமாக ராமப்பனும்,கேலியும் கிண்டலுமாககுய்யனும்,துக்கமும் தாய்மைமாக முத்தம்மையும்,சில காட்சிகளில் மறைந்ததொரப்பனுமாக நகர்ந்து மாங்காண்டிச் சாமியின் பாடலுடன் குய்யனின் சிரிப்புகலந்து கலங்க வைத்து நிறைவடந்த ஏழாம் உலகம் தொட்டுக் காட்டிய இன்னொருஉலகு மேற்கண்டவர்களைச் சுரண்டி சுயநலத்திற்காக மட்டும் வாழும்கீழ்மையானவர்களால் ஆனது.குறிப்பாக கொச்சனைப் போன்றோர்.
*
அச்சிறிய ஆத்மாக்கள் உடலளவில் மட்டுமே நம்மை விட வேறு மாதிரி.
அவர்களின் தனிமை,துக்கம்,வலி முதலியவற்றைப் புரிந்து கொள்ளாமல் கூட பலர்இருக்கலாம்.நம்மால் குறைந்தபட்சம் முடிந்தது பெருமூச்சுடன் கவனித்துச் செல்வது மட்டுமே.
சக்திவேல் லோகநாதன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82
[ 37 ]
கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர். மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய வாய்திறந்து மூங்கில்கழிகளில் தொங்கியபடி வந்தன. பெண்கள் கிழங்குகளையும் காய்களையும் கனிகளையும் கொண்டுவந்து நிரத்தினர். அனைத்து உணவும் மன்றிலேயே கொண்டு சேர்க்கப்பட்டன.
மூத்தோர் மூவரும் அங்கே இருந்து ஆணைகொடுக்க அடுமடையர்கள் பன்னிருவர் வந்து தாங்கள் கைத்தேர்ச்சிகொண்டிருந்த செம்புக்கத்திகளால் விலங்குகளின் தோலில் மெல்லிய கோடிழுத்து உள்ளே விரல்செலுத்தி இளங்கமுகுப்பாளைபோல் வெளுத்த உட்தோலை மடித்துப்புரட்டி சுருட்டி எடுத்து அகற்றி குடலும் நுரைக்குலைகளும் விலக்கி கீற்றுகளாக ஊன்கிழித்து உள்ளே உப்புமிளகுஇஞ்சிச் சாந்தை பூசி முக்காலிகளில் தொங்கவிட்டு கீழே அனல்மூட்டி சுடத்தொடங்கினர். வேகும் ஊனின் இனிய மணம் ஊரைச் சூழ்ந்தது.
உருகிச் சொட்டிய ஊன்நெய் எரிபட்டு அனலாகிச் சுடர்ந்து துளிகளாக விழுந்து விறகுக்குவைமேல் எழுந்த தழல்நாவுகளை துள்ளித் தழைந்து எழுந்து ஆடச்செய்தது. பொசுங்கி நெய்யூறி சிவந்து அருகி கருகி விரிசல் படர்ந்து உணவென ஆயிற்று ஊன். காய் ஒன்று கனிவதுபோலிருந்தது அது.
சூழ்ந்து அமர்ந்து அனலை நோக்கிக்கொண்டிருந்தனர் காலர்கள். அர்ஜுனன் அவர்கள் நடுவே சிறு கல்லொன்றில் கால் மடித்து அமர்ந்திருந்தான். அனலன்றி பிற ஒளியேதும் அங்கிருக்கவில்லை. விண்ணை முகில் மூடி இருந்ததனால்போலும், மீன்களென ஏதும் வானில் எழவில்லை. சீர்வட்டமென சுற்றியிருந்த மலைநிரை அலைகள் வானின் மங்கிய ஒளிப்பரப்பின் பகைப்புலத்தில் இருளுக்குள் நிழல்செறிந்த வடிவுகளெனத் தெரிந்தன.
தொலைவிலிருந்து காட்டின் இரவொலிகள் எழுந்து வந்து ஊரையும் காடென்றே எண்ணவைத்தன. அறுபடாத சீவிடுகளின் ஓசையின் சரடில் கோக்கப்பட்ட காட்டுஆடுகளின் கனைப்பு, கூகைக் குழறல், தொலைவில் வேங்கையொன்றின் உறுமல், அதைக் கேட்டெழுந்த களிறுகளின் ஓசைத்தொடர். மிக அருகே மான்கூட்டம் ஒன்று புதர்களில் சுள்ளிகள் ஒடிய நடந்தது. அனலிருப்பதனால் வேங்கை அணுகாதென்று அறிந்த மான்கூட்டங்கள் புதர்களுக்குள் சீறலோசை எழுப்பியபடி நின்று அவர்களை நோக்கின. விழிதிருப்பி வருகையில் ஒரு மானின் அனல் மின்னும் விழிகளை அவன் நோக்கினான்.
சேறுபூசி அருகமைத்த குழிசிக்குள் விறகுகள் எரிகொண்டு வெடித்து செம்பொறி சிதறின. அவற்றில் ஊறிய அரக்கு எரிந்தபடி பின்னால் வந்தது. அதைத் துரத்தியபடி செந்தழல் உடன் வழிந்தது. சூழ்ந்திருந்தோர் எத்தனை பேரென்று அவ்விருளில் அறியக்கூடவில்லை. சிற்றில்களில் இருந்து மேலும் மேலும் என வந்து ஓசையின்றி பின்னால் அமர்ந்துகொண்டனர். கல்லணிகலன்கள் குலுங்கியதாலும் அமரும் மூச்சொலிகளாலுமே அவர்கள் வந்தமர்வதை உணரமுடிந்தது. ஒளியில் தெரிந்த முகங்களனைத்தும் ஒற்றை உணர்வுகொண்டிருந்தன. சடைத்திரிக் குழல் கொண்ட அன்னையர். வலக்கொண்டை சரிந்த கன்னியர். பிடரியில் சடைக்கற்றை பரவிய இளையோர். அனல்படர்ந்த தாடியுடன் முதியோர். அனைத்து விழிகளிலும் நெருப்பு தெரிந்தது.
நெருப்பை அன்றி பிற எதையும் எவரும் நோக்கவில்லை என்று அவன் உணர்ந்தான். அருமணிக்குவை நோக்கும் கருமியின் மெய்மறந்த நிலைபோலும், பேரழகுப் பாவையொருத்தி மேடையேறி நின்றாடுவதை நோக்கும் காமுகனின் உவகைபோலும், கொலைக்கலம் ஏந்தி எழுந்த அறியா தெய்வம் ஒன்றைக்கண்டு அஞ்சிச் சொல்லழிந்ததுபோலும் நோக்கிச் சமைந்த விழிகள். நெருப்பு சீறிச்சுழன்று நாபறக்க துள்ளி அமைந்து எழுந்து தழைந்தாடியது. கழுகென இறகு விரித்தது. அரவென கழுத்து நீட்டியது. பசுவென நா துழாவியது.
திறந்த குங்குமச்சிமிழ்போல் அனல் அள்ளி நிறைத்து திறந்திருந்த விழிகளை மாறி மாறி நோக்கிச் சுழன்ற அவன் பார்வை குடிமூத்தார் மூவரில் அமைந்தது. சடையன் இரு கைகளையும் நெஞ்சில் கோத்தபடி அமர்ந்து அனலை நோக்கிக் கொண்டிருந்தார். பிசிறி நின்ற சடையின் உதிரி முடிகள் அனல் எனத் தெரிந்தன. பேயன் இருகைகளிலும் தலையை தாங்கியிருக்க முழங்கால்மடிப்பில் முகம் வைத்து அமர்ந்திருந்தார் எரியன். நாளும் எரியோம்புபவர்கள்போலத் தோன்றவில்லை அவர்களின் முகம். அன்று முதல்முறையாக பொன்னொளி கொண்டெழுந்த தேவனை நோக்குபவர்கள் எனத் தெரிந்தனர்.
காளன் நெருப்புக்கு வலப்பக்கம் கால் மடித்து முழங்கால்கள்மேல் கைவைத்து அமர்ந்திருந்தான். அவனருகே கொம்பன் அமர்ந்திருக்க இடப்பக்கம் காளி தன் மடியில் குமரனுடன் அமர்ந்திருந்தாள். கொம்பன் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை முன்னால் நீட்டி கனிந்த ஊனை மூக்கால் தொடவிழைபவன் போலிருந்தான். இளையவன் இருகைகளையும் வாய்க்குள் விட்டு அடிநிரம்பாச் சிறுபாதங்கள் சுருங்க கட்டைவிரலை சுழித்துக் கொண்டிருந்தான்.
ஊன் வெந்து சுவைமணம் எழுந்ததும் அறிந்த தெய்வம் ஒன்று அறியாவெளியிலிருந்து பெருகி நேரில் தோன்றியதென அர்ஜுனன் உணர்ந்தான். அடுமடையர் சேர்ந்து வெந்த ஊன் விலங்குகளை கணுக்கொழுவால் பற்றி அனலில் இருந்து விலக்கி எடுத்து தூக்கி இயல்பாகச் சுழற்றி தரையில் பரப்பப்பட்டிருந்த பாக்குமட்டைப் பாய்களில் வைத்தனர். வன்பால் நிலத்தில் முதல்மழை என வெம்மைஎழுந்த ஊனில் கொதிக்கும்நெய் சிறுகுமிழியுடன் வற்றிக்கொண்டிருந்தது. சொட்டிய ஊன்நெய் பாளைவரிகளில் தயங்கி வழிந்தது.
ஊன் அனைத்தும் இறக்கப்பட்டதும் கிழங்குகளையும் காய்களையும் பச்சைநாணலில் இறுக்கமாகக் கோத்து அனலில் காட்டி, சுழற்றிச் சுட்டு எடுத்து வாழை இலைமேல் பரப்பினர். காய்ச்சில் பெருங்கிழங்குகள் வெந்து வெண்புன்னகையென வெடித்திருந்தன. கருணைக்கிழங்கு கறைமணம் எழ தோல் வழண்டிருந்தது. முக்கிழங்கும் நனைகிழங்கும் கொடிக்கிழங்கும் வள்ளிக்கிழங்கும் கலந்து ஒன்றென மணத்தன. ஒவ்வொரு காயும் ஒரு வகையில் வெந்து சுருங்கியது. வழுதுணங்காய் பசுந்தோல் வழண்டது. மாங்காயின் கடுந்தோல் அதுங்கியிருந்தது. கோவைக்காய் கருகியிருந்தது.
இலைகளிலும் பாய்களிலும் உணவைப் பரப்பியதும் அடுமடையன் சென்று சடையன் முன் நின்று தலைவணங்கி “அன்னம் ஒருங்கிவிட்டது, மூத்தவரே” என்றான். அவர் தன் முப்பிரிவேலை அவன் தலைமேல் தொட்டு வாழ்த்தினார். சடையன் காளனை நோக்கி கைகாட்ட அவன் எழுந்து அனலை மும்முறை வணங்கிவிட்டு தன் கையிலிருந்த கத்தியால் வெந்து விரிந்திருந்த பன்றியின் தொடையொன்றை வெட்டி தனித்தெடுத்தான். அதை மூன்றாகப் பங்கிட்டு குடிமூத்தார் மூவர் முன் வாழையிலையில் படைத்தான். பின்னர் காளி எழுந்து ஊனையும் கிழங்குகளையும் அவர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளித்தாள்.
நீரிலிட்ட பொரி பரவுவதுபோல அன்னம் அத்திரளில் பிரித்து பகிரப்பட்டு ஓசையின்றி விரிவதை அர்ஜுனன் கண்டான். எவரும் கேட்கவில்லை. எவரும் விலக்கவுமில்லை. கிழங்கும் காய்களும் ஊனும் அவர்கள் முன் வாழை இலையில் படைக்கப்பட்டு முடிந்ததும் சடையன் முதல் பிடி ஊனை எடுத்து “மூதாதையரே, உங்களுக்கு” என்றுரைத்து அனலில் இட்டார். பேயன் “வாழ்பவர்களே, உங்களுக்கு” என்றுரைத்து அனலில் அன்னம் இட்டார். எரியன் “என்றுமிருப்பவர்களே, உங்களுக்கு” என்று கூறியபடி அனலூட்டினார்.
அங்கிருந்த அனைவரும் “ஆம். அன்னையரே, உங்களுக்கு. தந்தையரே, உங்களுக்கு” என்று உரைத்தபடி ஒரு சிறு உணவுத்துண்டை எடுத்து அனலில் இட்டனர். அனைவரும் சடையனையே நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் உண்ணத் தொடங்கியதும் தாங்களும் உண்ணலாயினர்.
மழைத்துளி சேற்றில் விழும் ஓசைபோல் உணவு மெல்லப்படும் மெல்லிய ஓசை மட்டும் அர்ஜுனனை சூழ்ந்திருந்தது. அவ்வப்போது சில மூச்சுகள், சில உதடோசைகள். சில குழவிகள் சிணுங்கின. சில மைந்தர் மென்குரலில் அன்னையிடம் ஏதோ சொல்லினர். கொம்பன் இருகைகளாலும் பன்றித்தொடையை எடுத்து ஓநாய்க்குட்டியென மிகுவிரைவுடன் உண்பதை அர்ஜுனன் ஆர்வத்துடன் நோக்கினான். விழிதிருப்பியபோது காளியின் விழிகளைக் கண்டு புன்னகைத்தான். உண்டு முடித்ததுமே முழந்தாளிட்டு கை நீட்டி இன்னொரு மான் தொடையை கொம்பன் அவனே எடுத்துக்கொண்டு அர்ஜுனனை நோக்கி நாணப்புன்னகை செய்தான்.
உண்ணுதல் ஒரு வேள்வியென அங்கு நிகழ்வதாக அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அனவருக்கும் உணவளித்த நிறைவுடன் நடுவே மெல்ல ஆடி நின்றிருந்தது அனல். உண்ணும் ஒலிகள் மெல்ல விரைவழிந்து ஓயும் மழையின் இறுதிச் சொட்டுகளென ஒலிக்கலாயின. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு மூச்சொலிகள் கேட்டன. பின்னர் ஒலிகள் அனைத்தும் அமைய ஒரு சிறு குழந்தை ஏப்பம்விட்ட ஒலி இனிய பறவையின் குரலென இருளில் ஒலித்தது. அர்ஜுனன் திரும்பி அக்குழவியை நோக்க விழி சுழற்றினான். மீண்டும் ஓர் ஏப்பம் ஒலித்தது. முதிய அன்னையொருத்தியின் நிறைவு அது. பின்னர் ஏப்ப ஒலிகள் இருளுக்குள் தொடர்ந்து எழுந்தன.
காளன் ஒரு சிறு மண்குழாயை அனலூட்டி வாய்பொருத்தி ஆழ்ந்து இழுத்தான். மூக்கினூடாக வந்த நீலப்புகை தாடியில் ஊடுருவிப் பரவியது. அவ்வனலை வாங்கி பிறிதொருவன் இழுத்தான். சுழன்றுவந்த அனல் மீண்டும் அவனிடமே வந்தது. இழுக்கையில் முன்னால் குனிந்து புகைவிடுகையில் அண்ணாந்து மீண்டும் குனிந்து என ஒரு தாளம் அவ்வசைவுகளுக்கு இருந்தது. புகை எடைமிக்க சேறுபோல அவர்களை அழுத்தி மூடி ஓசையற்றவர்களாக ஆக்கியது. விழிகள் மட்டும் அதிர்ந்தபடி இருந்தன.
கைகளை ஒன்றுடன் ஒன்று உரசித் துடைத்துக்கொண்டு உடலொடு உடல் தொட்டு பெரிய வட்டமாக அனலைச் சுற்றி அமர்ந்திருந்தனர் காலகுலத்தோர். அவர்களின் தோள்களும் மெல்ல அசைவதை அர்ஜுனன் கண்டான். ஒற்றைச் சரடில் கோக்கப்பட்ட மணிகளென அவை முற்றிலும் ஒத்திசைவு கொண்டிருந்தன. பின் கைகள் நெளிந்தும் குழைந்தும் குவிந்து நீண்டும் வளைந்தமைந்தும் விரல்கள் மலர்ந்தும் கூம்பியும் விழிச்சொற்களாயின.
பலநூறு முறை பயின்ற நடனம் என நிகழ்ந்தது அவ்வசைவு. பழுதற்ற பொறிபோல. அவர்களை ஆட்டுவிப்பது எது என அவன் எண்ணியதும் தன்னுடல் அப்பெருக்கில் இணையாததை உணர்ந்தான். அவ்விலக்கம் மூலமே அவ்வசைவை அவன் பார்ப்பதையும் அறிந்தான்.
தன் இடையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அக்கூழாங்கல்லை எடுத்து வலக்கையில் வைத்து பொத்திக்கொண்டான். அதை நெஞ்சோடு சேர்த்து விழிகளை மூடியபடி மெல்ல தன் உடலை அசைக்கலானான். இருபுறமும் தோள்கள் அவனை முட்டின. பின் அத்தொடுகையின் தாளத்தை அவன் உடல் அறிந்தது. அத்தாளம் மட்டுமே அவன் உடலில் அசைவென்றாகியது. அந்தக் கல் எடைகொண்டு அவனைத் தன் ஊசலென ஆக்குவது போலிருந்தது. அவன் மூச்சும் நெஞ்சும் அத்தாளத்தில் அமைந்தன.
காளன் “ஹாம்!” என்று ஒலித்தான். “ஹாம்!” எனும் நுண்சொல் மலையிடுக்கில் காற்றுநுழையும் ஒலியென எழுந்தது. எரிசுழல்வதுபோல் மாறியது. அவர்களின் உதடுகள் அவற்றை உச்சரிக்கவில்லை. அவர்கள் எவரும் அதை அறியவுமில்லை. அச்சொல் திரளென மட்டுமே இருந்த அவர்களிடமிருந்து இயல்பாக எழுந்தது. மீளமீள. முடிவிலாதென எழும் ஓர் ஒலி சித்தத்தை நிறுத்திவிடுகிறது. “ஹும்!” என்னும் அடுத்த நுண்சொல். மீண்டும் மீண்டும். ஊசல். முடிவிலாச் சுழல்.
தன்னைத் தான் சுற்றும் மையத்தின் அசைவிலா அசைவு. “ஹம்!” அனல் முழக்கம். அனல் ரீங்காரம். அனல் வெடிப்பு. “ஹௌம்!” அனைத்தையும் அறைந்து மூடித்தழுவும் அலை. “ஹௌ!” அனைத்தின் மேலும் பொழியுமொரு பெருமழை. “ஹ்ரீம்!” அனைத்தையும் வளைத்தெழும் பசி. அனைத்தையும் நொறுக்கும் “ஸ்ரீம்!” கொஞ்சல் என “ப்ரீம்!” அழைப்பு என “ரீம்!” ஆழ்ந்த அமைதிகொண்ட “க்ரீம்!” சீறி எழும் “ஸூம்!” அனைத்தையும் மூடிநின்றிருக்கும் “ஹோம்!” ஒலிகளின் நீள்பெருக்கு.
“ஆ” என்னும் ஒலியுடன் காளன் எழுந்தான். அவன் கைகள் நாகபடங்கள் என சீறி எழுந்தன. கால்கள் நிலத்தை உதைத்து உதைத்து துடித்தன. உடன் காலர்கள் இருவர் உடுக்கோசையுடன் எழுந்தனர். துடிதுடித்துப் பற்றிப் படர்ந்தேறிய அவ்வொலியில் துள்ளும் தசைகளுடன் காளன் பாய்ந்து கல்பீடம் மீதேறினான். பெருந்துடி தாளத்துடன் இயைந்து அவனைச் சூழ்ந்து நடனமிட்டனர் பன்னிரு காலர். நடுவே அவன் கணமொரு தோற்றம் கொண்டு கண்விரைவை முந்தி நின்றாடினான்.
கையொன்று சொல்ல கால் அதைத் துள்ள கண் அதற்கப்பால் எனச் சுட்ட சொல்தொடா சித்தம்தொடா விசையில் நிகழ்ந்தது ஆடல். இளநகை கொண்டது இதழ். மான் என்றது கை. சினம்கொண்டு சீறியது முகம். மழு என்றது கை. மலர் என்றது. மின்படை என்றது. அமுதென்றது. ஊழித்தீ என்றது. நஞ்சுண்டது. அமுதளித்தது. ஆக்கியது ஒரு கை. அனலேந்தி காத்துநின்றது மறுகை. அருளியது ஒரு கை. அடி பணிக என்று ஆணையிட்டது மறுகை. அங்கு அத்தனை கைகளும் உடல்களும் உரைத்த விழிச்சொற்கள் அனைத்தும் அவன் கைகளில் உடலில் நிகழ்ந்தன.
இடக்கால் எடுத்து சுழற்றி வலக்கால் சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்றாட பறந்தது புலித்தோல். சிறகென எழுந்து சுழன்றது சடைத்திரள். தூக்கிய கால் குத்தென எழுந்து தலைக்குமேல் ஒரு மையத்தில் நிலைக்க சுழன்று சுழன்று வெறும் சுழிப்பென ஆகி அவன் விழியிலிருந்து மறைந்தான்.
அர்ஜுனன் அச்சுழலில் தான் கரைவதை உணர்ந்தான். இதோ, இக்கணம், மறுகணம், இது, இக்கணம் என உணர்ந்து சென்று பின்பு அனலைச்சுற்றி மாபெரும் சுழியாகச் சுழன்றுகொண்டிருந்தான். விசைகொண்டெழுந்து அவ்வனலென்றானான். விசும்பின்மேல் வெளிசூடி நின்றான்.
[ 38 ]
“ஏழு முழுநிலவுகளை கைலைத் தாழ்வரையில் வாழ்ந்து கண்டு பாசுபதம் பெற்று பார்த்தன் திரும்பி வந்தான்” என்றான் சண்டன். திருவிடத்தின் தென்னெல்லையாக ஒழுகிய கோதை நீர்ப்பெருக்கின் கரையில் ஒரு நாணல்மேட்டில் அந்தணர் நால்வரும் இளஞ்சூதனும் அவனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தனர். “முத்துவிளைந்த சிப்பி மேலெழுந்து வருவதுபோல் அவன் வந்தான் என்கின்றது அயோத்தியின் பெருங்கவிஞர் கௌண்டின்யர் அர்ஜுனேந்திரத்தை தொடர்ந்து எழுதிய காவியமான பாசுபதார்ஜுனியம்.”
வெண்தாமரை மலரிதழ் அடுக்குகள் என அவனைச் சூழ்ந்திருந்த பனிமலை முடிகள் மெல்ல கூம்பி அவனை வெளியேற்றின. சிறு கருவண்டென அகன்று பின் திரும்பிநின்று அவை இளவெயிலில் வெளிறி மறைவதை நோக்கினான். அங்கு பெற்றவை அனைத்தும் முன்பு எப்போதோ அறிந்திருந்தவை என்று தோன்றும் விந்தையை எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு அறிதலுக்குப் பின்னரும் அவன் உணர்வது அது, அறிதலெல்லாம் நினைவுகூர்தல் மட்டுமே.
அவன் கண்முன் அந்தி எழுந்துகொண்டிருந்தது. மீண்டும் நின்று திரும்பி வெண்புகை நடுவே அனல் என எழுந்த கைலைமலைமுடியை அவன் நோக்கினான். அதைவிட்டு விழியகற்ற இயலாதவனாக நெடுநேரம் உறைந்திருந்தான். பின் எண்ணம் மின்ன தன் இடையில் இருந்து பாசுபதத்தை எடுத்து நோக்கினான். அவன் கையிலிருந்தது கைலைமுடி.
“இங்கு மட்டுமே இது இருத்தல் தகும். பிறிதெங்கும் அமைய ஒண்ணாது” என எண்ணினான். நீள்மூச்சுடன் புன்னகைத்து “நன்று, முழுமுதன்மை இவ்வண்ணம் எனக்கு வாய்த்தது” என்று தனக்கே உரைத்தபின் அதை வெண்பல்நிரை என எழுந்து ஒரு வான்நகைப்புபோலத் தெரிந்த இமயம் நோக்கி வீசினான். திரும்பாமல் நடந்து மீண்டான்.
மலையடுக்குகள் கடந்து சரிவிறங்கி வருகையில் வெள்ளி நாகமென ஓர் ஆறு வளைந்தோடி நுழைந்து மறைந்த பிலமொன்றைக் கண்டான். அதன் வழுக்கும் பாறைகளுக்குள் நுழைந்து இருண்டு குளிர்ந்த வாய்க்குள் புகுந்து நடந்தான். நூறு வளைவுகளுக்குப் பின் வில்லும் அம்பும் தூளியும் கொண்டு அவன் எழுந்தது கின்னரர்களின் தெய்வக்குகை முகப்பில்.
அது இளம்புலரிவெயில் எழுந்து சிறகுவிரித்து நின்ற நேரம். தங்கள் தெய்வங்களுக்கு பூசனை இட மலரும் நீரும் அன்னமும் கொண்டு அங்கு நின்றிருந்தனர் கின்னரர். காலைச் செவ்வொளியில் கைவில்லுடன் எழுந்து வந்த அவனைக் கண்டதும் குலத்தலைவர் தலைமேல் கைகூப்பி “எந்தையே, தெய்வங்களே!” என்று கூவினார். பூசகரும் பிறரும் அவனை வாழ்த்தி குரலெழுப்பினர். புன்னகையுடன் அவர்களை நோக்கி அருள்மொழி உரைத்தபின் அவன் நடந்து கீழே வந்தான்.
கின்னரஜன்யர்களின் சிற்றூரில் பார்வதி அவனுக்காக நோற்றிருந்தாள். அவன் மீளப்போவதில்லை என்றனர் அவள் குடியினர். தோழியரும் அவனை மறப்பதுவே அவளுக்கு உகந்தது என்றனர். அவள் “முயன்று மறப்பதென்று ஒன்றுண்டா என்ன? மறக்க இயலாதது அவ்வண்ணமே தன்னை நிறுவிக்கொள்கிறது, தோழியரே” என்றாள். “இது என் உடலுக்குள் அமைந்த உள்ளம் என, நான் என்றாகிய பிறிதொன்று. தானின்றி என்னை இருக்க விடாது. இது இவ்வண்ணமே திகழட்டும்” என்றாள்.
இளவேனிலின் முதல்நிலவு நாளில் கின்னரஜன்யர் மலையிறங்கிவரும் தங்கள் தெய்வங்களுக்காக படையல்கள் கொண்டு மலைச்சரிவின் எல்லையென அமைந்த கின்னரப்பாறையருகே கூடிநின்றிருந்தபோது தொலைவில் வெண்பனிமேல் படர்ந்த கதிரொளியில் ஓர் உடல்நிழல் அசைவதைக் கண்டனர். கின்னரர் என்று குலத்தலைவர் கூவினார். கின்னரஜன்யர்களின் குடிநிரைகள் வாழ்த்தொலி எழுப்பினர். பூசகர் மட்டும் இரு கைகளையும் கூப்பியபடி, சுருங்கிய முகமும் நடுங்கும் தலையுமாக காத்திருந்தார்.
“ஒருவன் மட்டுமே வருகிறான்” என்று ஒருவர் சொன்னபோது தலைதூக்கி முகம் விரிய நோக்கினார். “வில்லேந்தியவன்” என்றான் ஒருவன். “கின்னரரல்ல. இங்கிருந்து சென்ற இளையவர்” என்று ஓர் இளையோன் கூவினான். “அவர் வருவார் என்று நான் அறிவேன். அவர் வரவில்லை என்றால் தெய்வங்களும் பொருளிழந்துவிடும்.” அவர்கள் அனைவரும் கூர்ந்து நோக்கியபடி முண்டியடித்தனர். “அவரா?” என்று பிறிதொரு குரல் வியந்தது. “அவர்தான்” என்று நூறு குரல்கள் எழுந்தன.
பின்னர் வியப்பு எழுந்தமைந்த அவர்கள் குரல் அழிந்து நோக்கி நின்றனர். மலைச்சரிவில் கரிய எருதொன்று துணைவர அவன் இறங்கி வந்தான். ஊரெல்லைக்கப்பால் எருது நின்று காதுகளை அடித்துக்கொண்டு தலை குலுக்கி முன்காலால் சுரைமாந்தி நின்றது. அவன் புன்னகையுடன் வந்து அவர்கள் முன் நின்றான். குலத்தலைவர் எழுந்த உணர்வுப்பெருக்குடன் இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி “வருக, வீரரே! எங்கள் குடி தழைக்கட்டும்! மாவீரர் இங்கு பிறக்கட்டும்!” என்றார்.
அர்ஜுனன் பூசகரை அணுகி அவர் கால்களைத்தொட்டு சென்னி சூடினான். அவன் தோள்களை அள்ளி வளைத்து தன் நெஞ்சோடு சேர்த்து “வென்று மீள்வாய் என்று நான் நன்கறிந்திருந்தேன்” என கண்ணீர் விட்டார். எவரோ ஒருவர் தன் தலையணியைக் கழற்றி வானில் வீசி “இளைய பாண்டவர் வாழ்க! வில்கொள் விஜயன் வாழ்க!” என்று கூவினார். அப்பெருந்திரள் வாழ்த்தொலியால் கொந்தளித்தது.
பூசகரும் குலத்தலைவரும் இருபுறமும் அழைத்துச்செல்ல அர்ஜுனன் அச்சிற்றூருக்குள் புகுந்தான். ஊர்மன்றில் சென்றமர்ந்து அவனைச் சூழ்ந்து நின்ற இளையோரிடம் சொன்னான் “இவ்வூரைச் சூழ்ந்த அனைத்து கோட்டைகளும் அகற்றப்படுவதாக! படைக்கலம் கொள்ளுங்கள், அஞ்சி ஒளியாதிருங்கள். சார்ந்திருங்கள், பணியாதெழுங்கள். வென்று செல்லுங்கள், பழி கொள்ளாதீர்கள். என்றும் இவ்வூரின் நெறியென்று இது அமைக!” இளைஞர்கள் கைதூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” என்று முழங்கினர்.
“கின்னரர், ஊர்ணநாபர் இருவருமே உங்கள் தெய்வங்களென்று அமைக! உங்கள் விண்ணை கின்னரர் ஆள்க! உங்கள் மண்ணை ஊர்ணநாபர் ஆள்க! கிளைகள் தனித்து அசையட்டும். வேர்கள் பின்னி ஒன்றாக இருக்கட்டும். சிறப்புறுக!” என்று அர்ஜுனன் அவர்களை வாழ்த்தினான். “வாழ்க! வாழ்க!” என முதியோர் மலரிட்டு அவன் சொற்களை ஏற்றனர்.
மறுநாள் ஊர்மன்றில் குடிமூத்தார் எழுவர் கூடி பார்வதியை அவனுக்கு கடிமணம் செய்து கையளித்தனர். அவள் கைபற்றி ஏழு அடி வைத்து அனல் முன் நின்று “இவள் என் துணைவியாகுக!” என்று அர்ஜுனன் சொன்னான். “இவளைப் போற்றிய தேவர், காத்த கந்தர்வர், அருளிய தெய்வங்கள் அனைவரும் அறிக, இனிமுதல் இவள் என்னவள். இவளுக்கு தேவரும் கந்தர்வரும் தெய்வங்களும் ஆக நான் திகழ்வேன். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.
அவன் கைபற்றி தலைகுனிந்து நின்ற பார்வதி புன்னகைத்தாள். அவளுக்கு இருபுறமும் நின்ற தோழியர் அவள் உடல் மயிர்ப்புகொண்டு புள்ளிகளாவதைக் கண்டனர். மணம் முடிந்து அவளை தனித்தழைத்துச் செல்கையில் “வென்றுவிட்டாய்” என்றாள் ஒரு தோழி. அவள் “நான் தோற்றதே இல்லை” என்றாள்.
அன்றிரவு மணவறை மென்சேக்கையில் இளவெம்மையுடன் போர்த்தியிருந்த மயிர்த்தோல் போர்வைக்குள் அவளுடன் மெய்தழுவிப் படுத்திருக்கையில் அர்ஜுனன் சொன்னான் “இங்கிருந்து நான் சிலநாட்களில் கிளம்பிச் செல்லப்போகிறேன், இளையோளே. எனக்கு குடிக்கடனும் அரசகடனும் உள்ளன. மீண்டு வருதல் என் கையில் இல்லை. ஆனால் ஊர்ணநாபனின் குலத்திலிருந்து ஒரு சரடு என்றும் என்னுடன் இருக்கும் என அறிவேன்.”
இரு கன்னங்களும் புன்னகையில் குழிய “ஆம், உங்கள் குருதி இங்கு வாழும்” என்றாள் பார்வதி. அவன் தோளை வளைத்து முகத்தருகே தன் முகம் கொண்டு அவள் கேட்டாள் “ஒன்று கேட்பேன், அக்குகைக்குள் ஏன் நுழைந்தீர்கள்?” அர்ஜுனன் சொன்னான் “அதை நான் முன்பு அறிந்திருந்தேன். நூறுமுறை என் கனவில் நான் நுழைந்த வழி அது.” விழிகளில் வினாவுடன் அவள் நோக்கினாள். “உள்ளே சென்று நின்று நான் சொன்னேன் எழுக இளைய யாதவரே. இங்குளேன் நான்!”
அவள் விழிகள் மாறின. “அவரா?” என்றாள். “ஆம், படையெதிர் நின்று என்னை வென்றவர். அவரை போருக்கு அறைகூவினேன். முதலில் அவர் விழிகளில் திகைப்பைக் கண்டேன். அது ஏன் என அக்குகைச்சுவரின் ஈரத்தில் என் உருவம் தெரிந்தபோது அறிந்தேன். நான் சடைமுடித்திரளில் பிறைசூடி முக்கண் முகத்துடன் சிவமென நின்றிருந்தேன். அவர் புன்னகையுடன் இது நிகர்ப்போர். எனவே முடிவிலாதது. இருவரும் தோள்தழுவுதலே உகந்தது என கைகளை விரித்தார்.”
“இருவரும் தழுவி நின்றோம். பின்னர் வெடித்துச் சிரிக்கலானோம். இளமைந்தராக அன்று அஸ்தினபுரியில் கண்ட நாட்களில் ஒருவர் மேல் ஒருவர் கங்கைக்கரைச் சேற்றை வாரி வீசிவிட்டு ஓடிச்சென்று நீரில் பாய்கையில் சிரித்ததுபோல மீண்டும் சிரித்தோம்” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் அவனைத் தழுவினாள். “ஆம், நீங்கள் சிவம், ஏனென்றால் நான் மலைமகள்” என்றாள். அவன் முகத்தருகே மீண்டும் முகமெழுந்து “அவர் எத்தோற்றத்தில் இருந்தார்?” என்றாள். “பெருகும் முகம் கொண்ட விருத்திரனின் உருவில்” என்றான் அர்ஜுனன்.
தொடர்புடைய பதிவுகள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
January 7, 2017
அராத்து விழா உரை- வீடியோ
https://youtu.be/5ayHUNFvISE
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அராத்து விழா -கடிதம்
அன்புள்ள ஜெமோ
விஷ்ணுபுர விருது விழா , வெண்முரசு விவாதம் போன்ற உங்கள் வாசகர்கள் கூடுகின்ற கூட்டங்களில் உங்கள் உரை எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அதே போன்ற சிறப்பான உரை ஒன்றை அராத்துவின் 6 நூல்கள் வெளியீட்டு விழாவில் வழங்கினீர்கள். நன்றி… சற்றே எதிர் கருத்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றுவதே ஒரு சவாலான பணி.. அதுவும் எதிர்கருத்து கூறுவது என்பது மிக மிக சவாலானது.. ஆயினும் மிக ஆழமான அற்புதமாக உரை வழங்கி கூட்டத்தை உங்கள் நாவன்மையால் கட்டிப்போட்டீர்கள்..
உங்கள் உரையில் சில கேள்விகள் எழுந்தன…
மீண்டும் மீண்டும் ஆண் பெண் உறவுச்சிக்கல்களே அராத்து கதைகளில் வருவதாக சொன்னீர்கள்..
ஆனால் அப்படி வருவதுதான் 2016 எனும் இக்கால கட்டத்தை சரியாக பிரதிபலிப்பதாக கொள்ளலாம் அல்லவா..
காதலர்கள் இணைவது என்பது முன்பு பிரச்சனையாக இருந்தது… ஆனால் இன்றைய பிரச்சனை என்பது முறியாத உறவுகள் என்பதே என நினைக்கிறேன்.. அந்த அளவுக்கு திருமண உறவு , காதலர்கள் பிரச்சனைகள் உள்ளன அல்லவா?
சுவாரஸ்யத்தன்மை கலைக்கு முக்கியமல்ல என சொன்னீர்கள்.. சுவாரஸ்யம் என்பது கலை ஆகாது என்றாலும் ஒருவர் சுவையாக எழுதினால் அதற்கான பாராட்டுக்கு அவர் தகுதியானவர்தானே..
நல்ல எழுத்து என்பதற்கு சில வரையறைகள் சொன்னீர்கள்.. வரைமுறைகளுக்குள் அடங்காத நல்ல எழுத்துகளும் இருக்கக்கூடும் என முன்பு ஒரு முறை சொல்லி இருந்தீர்கள்… இந்த அம்சத்தை இன்னும் கொஞ்சம் விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..
கூட்டத்தில் இன்னொரு கேள்வி கேட்க நினைத்தேன்.. ஆனால் செல்ஃபி எடுப்பதில் வாச்கர்கள் உங்களை பிசியாக வைத்திருந்ததால் உங்களுடன் பேச முடியவில்லை…
அசோகவனம் நாவல் எந்த நிலையில் இருக்கிறது ?
என்றென்றும் அன்புடன்
பிச்சை
அன்புள்ள பிச்சைக்காரன்
நலமா?
நீங்கள் முகம் காட்டியிருக்கலாம்.
இங்கு வாசகர்கள் எண்ணுவதுபோல, அல்லத்ய் சமூக ஊடகங்களில் கட்சிகட்டப்படுவதுபோல முகாம்கள் ஏதும் இல்லை. நான் எல்லா படைப்பாளிகளுக்கும் அணுக்கமானவனாக இருக்கவே எப்போதும் முயன்றிருக்கிறேன். தனிப்பட்ட எதிரிகள் என எவரையும் எப்போதும் எண்ணிக்கொண்டதில்லை. அதை எனக்கு நானே உறுதிசெய்துகொள்ளவும் வேண்டியிருக்கிறது. அத்துடன் சாரு நிவேதிதா மீது எனக்கு எப்போதும் மதிப்பும் உண்டு
அழகியல்ரீதியான விமர்சனம், வாழ்க்கைநோக்கு சார்ந்த மாற்று அணுகுமுறை என்பது வேறு. என் எதிர்நிலைகள் முற்றிலும் அத்தளங்கள் சார்ந்தவையே. அதையும் நானே எனக்கு அடிக்கடி உறுதிசெய்துகொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கான சந்தர்ப்பங்களை நான் விடுவதில்லை.
நான் அங்கே உரையில் சொன்னவற்றில் அடிக்கோடிடும் வரிகள் இவைதான். பொதுவாக அதிகம் என்னை வாசிக்காத வாசகர்கள் அவ்வகை எழுத்தை ஒழுக்க, அற நோக்கில் நான் எதிர்ப்பதாக நினைக்கிறார்கள். அப்படி அல்ல, இலக்கியத்திற்கு ஒழுக்கநோக்கோ அற அடிப்படையோ கட்டாயம் அல்ல. அது மனிதனை அறியும் முறை. மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டுசென்று அறியலாம். உச்சியோ பாதாளமோ எதுவும் நன்றே, மனிதன் எந்த அளவுக்கு வெளிப்பட்டுள்ளான் என்பதே முக்கியம்.
என் அளவுகோல் மரபு சார்ந்தது என நினைப்பவர்கள் சிலர் உண்டு. அவர்களை அங்கே நேரடியாக மேடைமுன் சந்திக்கும் ஒரு வாய்ப்பு. அவர்களிடம் நான் சொன்னதும் இதுவே. மரபு எனக்கு முக்கியம், அனைவருக்கும் முக்கியம் என நான் நினைக்கவில்லை. வரலாறு அற்ற, அந்தந்த தருணங்களை மட்டுமே எழுதக்கூடிய, நிலைபாடுகள் அற்ற புனைவுகளின் இடத்தையும் நான் புரிந்துகொள்கிறேன். எந்த மரபையும் நான் நிபந்தனையாக வைக்கவில்லை. எல்லா வகையான எழுத்துக்களும் இலக்கியத்திற்கு முக்கியம்தான்
நான் முன்வைப்பது அந்த வகைமைக்குள் அது கலையாகியிருக்கிறதா என்றே. கலை என நான் சொல்வது மனித உண்மை வெளிப்படுகிறதா என்பதுதான். அதன் காலப்பெறுமானம் என்ன காலம்கடந்த மதிப்பு என்ன என்பது மட்டும்தான். அழகியல்நோக்கு என்பது அது மட்டுமே. அதையே அங்கும் முன்வைத்தேன்
என் வாசிப்பின் விளைவாக நான் அங்கே முன்வைத்த முழுமையான எதிர்நிலையை அராத்துவிடம் முன்னரே சொல்லியிருந்தேன். ‘நீங்கள் பாராட்டுவீர்கள் என நம்பிக்கூப்பிடவில்லை. உங்கள் கருத்து எனக்கு நன்றாகத்தெரியும். திட்டினால்கூட பரவாயில்லை’ என்றார். எதையும் ஒருவகை வேடிக்கையாகப்பார்க்கும் அடுத்ததலைமுறையின் உற்சாகமான மனநிலை அது. அந்தமனநிலை என்னைக் கவர்ந்தது. நான் சொன்ன இந்த மாறுபாட்டைத்தான் சாருவும் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
நான் நல்ல எழுத்துக்கான வரையறையைச் சொல்லவில்லை. நல்ல எழுத்தில் நான் என்ன எதிர்பார்ப்பேன் என்று மட்டுமே சொன்னேன். அதையொட்டித்தான் என் விமர்சனம். வரையறை செய்வதில் எனக்கு நாட்டமில்லை. வரையறை என்பது மாறாதது. நான் சொல்வது என் வாசிப்பின் தரப்பிலிருக்கும் குரலை மட்டுமே.
சுவாரசியம் என்பது இலக்கியத்துக்கான, கலைக்கான நிபந்தனை அல்ல என்று மட்டுமே சொன்னேன். சுவாரசியமான மாபெரும் படைப்பாளிகள் உள்ளனர், கி.ரா போல. ‘சுவாரசிய’மற்ற பெரும் படைப்பாளிகளும் உள்ளனர், பூமணி போல. இதை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.
ஒரு விமர்சனமாகவே அங்கே என் தரப்பை முன்வைத்தேன். எல்லா விமர்சனங்களும் விவாதத்துக்கான தொடக்கமே. விழா சிறப்பாக நிகழ்ந்தது. உற்சாகமான வாசகர்கள், சாருவின் ஆழ்ந்த குரலில் நூல்வாசிப்பு மற்றும் உரை அனைத்துமே மனநிறைவூட்டுவனவாக இருந்தன..
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மாக்காயீக்கா மாண்புகள்
முப்பதாண்டுகளுக்கும் மேலாக மகஇக போன்ற அமைப்புக்களிலிருந்து விலகியவர்கள் வந்து கண்ணீருடன் புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லாக் குறுங்குழுக்களுக்கும் இருவகைப் பண்புகள் இருக்கும். ஒன்று அது சிறியது என்பதனாலேயே எந்த விதமான நீக்குபோக்கும் இல்லாத மட்டையடித் தீவிரம் ஒன்று இருக்கும். ஆகவேதான் இளைஞர்கள் அது ‘நேர்மையான’ அமைப்பு என நம்பத்தலைப்படுகிறார்கள். அவர்களுக்கு நேர்மையான அமைப்பாகத் தோற்றமளிப்பது தவிர வேறு பணிகளும் இல்லை என்பதனால் வண்டை வண்டையாக வசைபாடுவதை முழுநேரமும் செய்துவருவார்கள். அது ஒருவகையான விறுவிறுப்பை சின்னப்பயல்களுக்கு அளிக்கிறது
ஆனால் சிறிய அமைப்பு என்பதனாலேயே உள்ளே நம்பமுடியாத அளவுக்கு சர்வாதிகாரப்போக்கு இருக்கும். ஆணையிடும் தலைவர் அடிமைகள் என்னும் அமைப்புக்கு அதிமுகவுக்கே இவர்கள் பாடம் எடுப்பார்கள். எதையும் விவாதிக்கலாம், விவாதித்தபின் மறுபேச்சின்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே வழிமுறை. அந்த சூடு பட்டதுமே பலபேர் வெளியே பாய்ந்துவிடுவார்கள்.
இதைத்தவிர மூன்றாவது பண்பு இதிலுள்ள ரகசியத்தன்மை. ரகசியத்தன்மை அளிக்கும் ‘திரில்’ ஒன்றுக்காகவே சரக்கடிப்பதையே ரகசியநடவடிக்கையாகச் செய்வார்கள். எல்லா ரகசிய அமைப்புகளிலும் உள்ள முதன்மைப்பிரச்சினை பிற ரகசியநடவடிக்கைகள் அனைத்தும் இயல்பாக வந்து இணைந்துகொள்ளும் என்பதுதான். பாலியல் மீறல்கள், சாதிப்பெருமிதங்கள், மூடநம்பிக்கைகள் ,ஊழல்கள் இன்னபிற. சர்வாதிகாரம் இவற்றுடன் இணைகையில் உள்ளே உளுத்துநாற ஆரம்பிக்கிறது
மகஇக போன்ற அமைப்புக்காள் டவுன்பஸ் போல இருப்பது இதனால்தான். உள்ளே சென்றவர்கள் அதே விசையில் மறுபக்கம் இறங்கிவிடுவார்கள். இவர்களின் ஆள்சேர்ப்பு முகம் அதிதீவிரமாக நிகழ்வதென்பதனால் வேறுபத்துபேர் அந்தப்பக்கம் ஏறிக்கொண்டிருபபர்கள். தலைவர்கள் ஓட்டுநரும் நடத்துநரும். வண்டி முக்கிமுக்கிச் சென்றுகொண்டே இருக்கும்
இதற்கும் அப்பால் கொஞ்சநாள் மஜாவாக உள்ளே சென்றுவந்தால் என்ன என்று யோசிப்பவர்களுக்கு ஒருவரி – இவர்களின் முதல் செயல்முறை விதியே குட்டிக்குரங்குதான் சூடு அள்ளவேண்டும் என்பதுதான்
இணையத்தில் மகஇக பற்றிய அந்தரங்களைப் பேசும் இந்த இணையப்பக்கத்தைப் பார்த்தேன். இந்த கட்டுரைகளில் இருக்கும் அப்பட்டமான உண்மை முகத்திலறைகிறது..குறிப்பாக அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினரின் மனைவியின் சொந்த வேலைகளைச் செய்த அனுபவம் [ நரோத்னிக்கா தலைமைப்பண்பு] சிரிப்பை வரவழைத்தாலும் பின்னர் வருந்தவும் வைத்தது
தோழர் கோட்டைக்கு ஓர் எதிர் அஞ்சலி
எழில்மாறன் என்ற….
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
தாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்
அன்பு ஜெ ,
தாளில்லா பொருளியல் கடிதங்கள் -அரங்கா
தாளில்லா பொருளாதார குறித்து வந்த கடிதங்களை பார்த்தேன்.எந்த மாற்றதையும் அது அளிக்கும் வசதி மற்றும் அதனால் வரப்போகும் நன்மைகளை மட்டுமே வைத்து எடைபோட்டுவிடலாகாது .
மோடி அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் பீம் செயலி , பெயரிலிருந்து அது எப்படி செயல்படும் என்பது வ்ரை எல்லாம் சரிதான் . ஆனால் இது குறித்த முக்கிய இரண்டு விஷயங்களையும் நாம் கணக்கில் கொண்டே அது அளிக்கவிருக்கும் தாக்கத்தை எடைபோடுவது சரியாக இருக்கு.
1. பிரைவசி
ஆதார் என்ற ஒற்றை அடையாளம் அரசு சேவைகளை பெற உபயோகப்படுத்து வரை அதற்கான தேவை நியாயப்படுத்திவிடலாம் ஆனால் அந்த அடையாளத்தை நேரடியாக அரசு சேவையற்ற , அடையாளத்தை நிறுவ தேவையற்ற விஷய்ங்களுக்கு பயன்படுத்துவது மிக தவறான முன்னுதாரனம் and Privacy Breach.
நான் எந்த பெட்டிக்கடையில் போய் என்ன வாங்குகிறேன் , எவ்வளவு வாங்குகிறேன் , எப்போதெல்லாம் வாங்குகிறேன் என்பதெல்லாம் இந்த செயலியின் மூலம் அரசு மிக எளிதாக நேரடியாக திரட்ட இயலும் . இதே ஆதார் எண்ணுடன் தான் என் வங்கி கணக்கும் லிங்க் செய்யப்பட்டுள்ளது அது நான் எங்கு வேலை செய்கிறேன் , எவ்வளவு சம்பாதிக்கிறேன் , என் வங்கியில் சேமிப்பு எவ்வளவு , எவ்வளவு கடன் வாங்கியுள்ளேன், எவ்வளவு வரி கட்டியுள்ளேன் என்று ஒருவரின் மொத்த பொருளாதார நடவடிக்கையையும் மேப் செய்துவிடும் .
முன்பொரு கடிதத்தில் சொன்னது போல தகவல் என்பது ஒரு புது Asset Class அரசு என்பது உச்சஅதிகார மையம் இவ்விரண்டின் இணைவு என்பது தகவலதிகாரமாகவே மிக இயல்பாக உருமாறும் .
2. அரசின் செயல்தளம்
அரசே நேரடியாக Digital Wallet & Payment gateway சேவை நடத்துவது நீண்ட கால நோக்கில் ஒரு சிறந்த அணுகுமுறையாக தோன்றவில்லை.இந்தியா போன்ற mixed market economy என்றாலும் கூட அரசு இதுபோன்ற Fintech விஷயங்களில் நேரடியாக ஈடுபடுவது போட்டியை நீர்த்துப் போகச்செய்து , சேவை , புதிய தொழில்நுட்பம் போன்ற விஷயங்களில் தேக்கமும் வளர்ச்சிக்குறைவும் நிகழும் சாத்தியத்தை அதிகமாகும் .
அரசே நேரடியாக இலவச Low Value Payments ல் களமிறங்கினால் மற்ற வணிக நிறுவனங்கள் இந்த களத்தில் போட்டி போட எந்த ஆதாயமும் இன்றிப் போய் இது அரசு மட்டுமே கையாளும் monopoly ஆகிவிடும்.
மேலும் இவ்வகை தகவல்களை திரட்டி பாதுகாப்பாக கையாளவது எளிதான விஷயமே அல்ல.கல்யாண வீட்டிற்குள் போய் வருவது போல அமெரிக்க அரசு கணினி வசதிகளினூடே ரஷ்ய ஹாக்கரகள் போய் வருவது ஊரறிந்த ரகசியம் .சமீபத்தில் நிகழ்ந்த அமெரிக்க தேர்தலில் போக்கையே இவை நேரடியாக பாதித்தது என்பதும் நாம் அறிந்ததே.
இந்திய அரசின் cyber security Infrastructure வளர்ச்சி என்பது மிக ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது .திடீரென்று ஒரு இடத்தில் ஆதார் எண்ணும் அந்த எண் சார்ந்த அனைத்து பண பரிவர்த்தனையும் ஒரே இடத்தில் திரட்டி வைப்பது திருப்பது உண்டியலை திறந்துவிடுவது போன்றதுதான் .
இதற்கு மாற்றாக அரசு இந்த LVP சந்தையை மற்ற தொழில்நுட்ப / வணிக நிறுவனங்களிடமே விட்டுவிட்டு , அதை ஊக்குவிக்கும்விதமாக அந்நிறுவனங்கள் அளிக்கும் குறைந்த மதிப்பு வர்த்தக சேவைக்காண செலவை அரசே நேரடியாக அந்த நிறுவனங்களுக்கு அளித்துவிடலாம் . அந்நிறுவங்ங்களுக்கு உலக தரம் வாய்ந்த cyber security & privacy சட்டங்கள் ,நிபந்தனைகள் விதிக்கலாம் , அதை கண்காணிக்கலாம் .
அதே போல ஆதார் எண்ணை அவசியமில்லாத தளங்களில் கோருவதையும் தவிர்க்க வேண்டும் . ஒருவர் ஈட்டிய பணத்தை அவர் “தனது” என்று ஊர்ஜிதப்படுத்த முடிந்தால் போதுமானதாக இருக்க வேண்டும் அது “தான்” தான் என்று நிறுவப்பட வேண்டியிருக்கக்கூடாது. (சந்தேகத்திற்குரிய அல்லது நிலம் வாங்குதல் போன்ற High value payments க்கு கோரலாம் ) இதற்கான நடைமுறை செயலிகள் இப்போதே வங்கிகளில் உள்ளன AML / KYC போல .
கருப்புப் பணம் ஒழிப்பு என்ற நிலைப்பாடு மெல்ல விரவி தாள் இல்லா பொருளியல் பின் அதுவே கண்கானிப்பு பொருளியலாக உருமாறுதை நம் கண்முனே காண்கிறோம் .
மோடி எண்ணங்கள் நல்லவையாக இருக்கலாம் ஆனால் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பிழையான கொள்கைகள் அதற்குண்டான விளைவை உருவாக்கியே தீரும் .
இது வேறெந்த அரசும் முன்னெடுக்காத மிகச்சிக்கலான மிகப்பெரிய சீர்திருத்தம் இதில் பிழைகள் தவிர்க்கமுடியாதது ஆனால் அதை இது குறித்த (அரசியல் நோக்கம் தவிர்த்த ) விமர்ச்னங்களை உள்ளெடுத்துக்கொண்டு மாற்றங்களை கொண்டு வர தயாராக இருக்க வேண்டும்.நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே என்னிடம் தர உள்ளது அவநம்பிக்கையாளர்களுக்கு அல்ல போன்ற பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும்
மிக முக்கியமான இதை நோக்கி ஆக்கப்பூர்வமாக வைக்கப்படும் விமர்சனங்களைக் கூட தேசத்துரோகம் என்று முத்திரை குத்தும் மூர்க்கத்திலிருந்து நாம் வெளிவ்ர வேண்டும் .
அன்புடன்
கார்த்திக்
சிட்னி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81
[ 35 ]
அர்ஜுனன் கைலையின் மண்ணில் எடுத்த அந்தக் கூழாங்கல்லை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் அதை கேலிக்கென சொல்லவில்லை என்பதை அவர்களின் முகக்குறி காட்டியது. கொம்பன் அவனிடம் “நீங்கள் அடுகலை கற்றவரா?” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு?” என்றான். அவன் சற்று எண்ணிநோக்கி “அதுவும் அமுதே” என்றான்.
எண்ணியிரா கணத்தில் நூறு சிறுவர்கள் மன்றுக்குள் நுழைந்தனர். பெருங்கூச்சலுடன் மன்றை நிறைத்து சுழன்று கைவீசி துள்ளி விரிந்தோடினர். ஒரு சிறுவன் சடையனின் தோள்மேல் தாவி அப்பால் விழுந்து எழுந்து ஓடினான். ஒருவனின் தோளில் குமரன் இருப்பதை அர்ஜுனன் கண்டான். அவன் “ஓடு ஓடு ஓடு” என துள்ளிக்கொண்டிருந்தான். “இச்சிறுவர்களை வெறிகொள்ளச் செய்பவன் அவனே” என்றார் எரியன். “ஆம், அவனைச் சுற்றியே எப்போதும் இவர்கள் அனைவரும் இருக்கிறார்கள்” என்றார் பேயன்.
“என் இளையோன்” என்றான் கொம்பன் பெருமிதத்துடன். “நானும் இதைப்போல அவனை தூக்கிக் கொள்வேன்.” சடையன் “அவர்களுடன் சென்று விளையாடுவதுதானே?” என்றார். “ஏன்?” என்றான் அவன் புரியாதவனாக. “சிறுவர் என்றால் விளையாடவேண்டுமே?” என்றார் பேயன். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். “விளையாடாவிட்டால் எப்படி உடல் உறுதிகொள்ளும்?” என்று பேயன் கேட்டார். “நான் நிறைய உண்பேன். என் உடல் உறுதியாகும்” என்றான் கொம்பன். “நன்று, அவனுக்குரியதை அவன் செய்கிறான்” என்று எரியன் நகைத்தார்.
இல்லத்திலிருந்து காளன் வருவதை அர்ஜுனன் கண்டான். அவனுக்குப் பின்னால் காளி ஒரு பெரிய மரக்குடைவுக் கொப்பரையுடன் வந்தாள். கொம்பன் முகம் மலர்ந்து “அது இன்கடுங்கள். இங்குள்ள நெடும்பனைகளில் ஊறிய தேன்” என்றான். “பனைகள் எங்குள்ளன?” என்றான் அர்ஜுனன். “அங்கே மேற்குச்சரிவில். அங்குதான் வெம்மையும் மிகுதி. மழையும் குறைவு” என்றபின் அவன் “இன்கடுங்கள்ளில் மூதாதையர் பாடல்கள் உறைகின்றன என்று எந்தை சொன்னார்” என்றான். “இளையோர் கள்ளருந்தலாமா?” என்றான் அர்ஜுனன். “இளையோர் எதையும் அருந்தலாம்” என இயல்பாக சொல்லிவிட்டு அவன் தந்தையை நோக்கி ஆவலுடன் சென்றான்.
காளன் சிரித்தபடியே அணுகினான். கொம்பன் அன்னையிடமிருந்து கொப்பரையை வாங்க முயல அவள் அவனை வெருட்டி விலக்கியபடி வந்தாள். காளன் அர்ஜுனன் அருகே வந்ததும் “இவர்கள் காலகுடியின் மூத்தவர்கள். இவர்களின் அருள் பெற்றுவிட்டாயா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். அவன் கையிலிருந்த கூழாங்கல்லை நோக்கியபின் சிரித்து “பாசுபதம் அளித்துவிட்டார்களா?” என்றான் காளன். அர்ஜுனன் மெல்ல புன்னகைத்து “ஆம், ஆனால் அது இத்தனை எளிதென்று நான் அறிந்திருக்கவில்லை” என்றான்.
“அரியவை, அடைதற்கரியவை என்பது எளியமானுடரின் எண்ணம்” என்றான் காளன். “ஆனால் மெய்நோக்கினால் அரியதொன்றை உணர்ந்த ஒருவன் அதை சென்றடையாமல் ஓய்வதில்லை. அவ்வுணர்வை அடைவதே அரிது” என்றபடி அங்கிருந்த உருளைக்கல் ஒன்றில் அமர்ந்தான். காளி அருகே வந்து கொப்பரையை நடுவே வைத்து அதிலிருந்து மூங்கில் குவளையில் நுரையெழும் கள்ளை ஊற்றி அர்ஜுனனுக்கு அளித்தாள். “அவர் மிகுதியாக அருந்தினால் நோயுறுவார்” என்றான் கொம்பன். “வாயை மூடு… விலகிச்செல்” என்றாள் காளி.
கள் இனிப்பும் புளிப்பும் கலந்த மணத்துடன் இருந்தது. “அருந்துக!” என்றாள் காளி. அர்ஜுனன் பிறரும் குவளைகளை வாங்குவதற்காக காத்தான். “தந்தை இரவில்தானே அருந்துவார்?” என்றான் கொம்பன். “அப்பால் செல்லும்படி சொன்னேனா இல்லையா?” என்று அவள் கையை ஓங்க அவன் அதை பொருட்படுத்தவே இல்லை. காளன் கையில் குவளையை வாங்கியதுமே குடித்துவிட்டு புறங்கையால் வாயை துடைத்துக்கொண்டு மீண்டும் நீட்டினான். “போதும் போதும்” என்று கொம்பன் சொன்னான்.
காளன் இன்னொரு குவளையை வாங்கி அதே விரைவில் மாந்திவிட்டு “நன்கள்… பனைவேர் அறிந்த அனல் ஊறியிருக்கிறது அதில்” என்றான். முதியவர்கள் குவளைகளை பெற்றுக்கொண்டதும் “முதியவர்களுக்கு ஒரு குவளைக்குமேல் அளிக்கலாகாது” என்றான் கொம்பன். “சும்மா இருக்கப்போகிறாயா இல்லையா?” என்றாள் காளி. அர்ஜுனன் அந்தக் கள்ளின் துவர்ப்பை முதலிலும் புளிப்பை பிறகும் உணர்ந்தான். உடல் உலுக்கிக்கொண்டது. பின் அடிநா இனிப்பு கொண்டது. காளன் மீண்டுமொரு குவளை கள் பெற்றுக்கொண்டான். “போதும், தந்தையே” என்றான் கொம்பன்.
“இவன் குடிக்கவிடமாட்டான்” என்றாள் காளி. “போதும், அவனே அருந்தட்டும்” என்றான் காளன். அச்சொல் முடிவதற்குள் கொம்பன் கொப்பரையை தூக்கிக்கொண்டு அப்பால் சென்றான். “அதை முழுக்க அவர் அருந்துவாரா?” என்றான் அர்ஜுனன் வியப்புடன். “அருந்துவான். ஆனால் மயக்கு கொள்வதில்லை” என்றாள் காளி திரும்பி நோக்கி சிரித்தபடி. “ஏன்?” என்றான் அர்ஜுனன். “மயக்கெழுந்தால் உணவருந்த முடியாதே” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் கையிலிருந்த குவளையை உருட்டியபடி முதியவர்களை பார்த்தான். அவர்கள் குவளைகளை கைகளில் வைத்தபடி பழுத்த விழிகளில் சிரிப்புடன் கொம்பனை பார்த்தனர்.
சடையன் “மீண்டும் மீண்டும் இவர்கள் இங்கு பிறந்தபடியே இருக்கிறார்கள். அழகனும் ஆனையனும்” என்றார். “இங்குள்ளவர்கள் இறப்பதே இல்லை” என்றார் எரியன். “தளிர்வந்து இலையாகி பழுத்துச் சருகாகி உதிர மரம் மாறா இளமையுடன் நின்றிருக்கிறது.” காளன் “காளி, பாசுபதம் அளிக்கப்பட்டுவிட்டது” என்றான். காளி “எப்போது?” என்றாள். அர்ஜுனன் “சற்றுமுன்” என்று நாணச்சிரிப்புடன் சொன்னான். “பாசுபதம் பெற்றவர்கள் மாகாலர்கள் என்றழைக்கப்படுவார்கள். இனி நீயும் காலனே” என்றான் காளன்.
உதட்டைச் சுழித்து நொடித்தபடி “இதெல்லாம் வீண்பேச்சு. அது எதற்கு உனக்கு? வீசிவிட்டு உன் அன்னையிடம் திரும்பு” என்றாள் காளி. அர்ஜுனன் பணிவுடன் “அன்னையே, நான் இதற்கென்றே அருந்தவம் இயற்றி இங்கே வந்தேன்” என்றான். அவள் முகவாயைத் தூக்கி “வந்து எதை அடைந்தாய்? இச்சிறுகல்லையா?” என்றாள். “இதைக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?” அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கினான். “அங்கே உங்களுக்கென வேதங்கள் உள்ளனவே! ஏன் வேதங்களிலிருந்து வேதங்களென முளைக்கச் செய்கிறீர்கள்? ஏன் வேதவேர் தேடி ஆழ்ந்திறங்குகிறீர்கள்? அடைந்த வேதத்தை முற்றறிந்துவிட்டீர்களா என்ன?”
“ஏன் தொடுவானில் ஏதோ கனிந்திருக்கிறதென்று எண்ணி சென்றுகொண்டே இருக்கிறீர்கள்? இருந்த இடத்தில் நிறைந்து கனிவதற்கு உங்களைத் தடுப்பது எது?” என்று அவள் கேட்டாள். அவன் புன்னகையுடன் “தெரியவில்லை” என்றான். “ஏன் உன்குலத்துப் பெண்டிர் காடேகி தவமியற்றி கொடைகொள்ளவில்லை?” என்று கேட்டாள். “அவர்கள் அமர்ந்து முழுமைகொள்ள நீங்கள் மட்டும் ஏன் அலைந்து சிதைவுறுகிறீர்கள்?”
அர்ஜுனன் கைகூப்பி “நான் இதை எண்ணிப்பார்த்ததே இல்லை, அன்னையே” என்றான். காளன் எழுந்து அர்ஜுனனின் தோளைப்பற்றித் திருப்பி “நான் சொல்கிறேன், ஏனென்றால் நீயும் நானும் இங்குள்ள ஆண்கள் அனைவரும் இவர்களின் கருவறையிலிருந்து கிளம்பியிருக்கிறோம். இவர்களிடமில்லாத ஒன்று நம்மில் எழ வாய்ப்பில்லை. மண்ணிலில்லாதது மரத்தில் மணக்காது…” என்றான்.
திரும்பி கொம்பனைச் சுட்டி அவன் சொன்னான் “இதோ இவனுடைய தீராப்பசியும் இளையவனின் இனியஅழகும் இரண்டும் இவளுக்குள் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். இளையவனே, நீ உன் அன்னையின் அகம் தேடித்தவிக்கும் தொலைதிசைகளிலேயே அலைந்துகொண்டிருக்கிறாய்.” காளி சினத்துடன் “எதற்கும் இறுதியில் பெண்ணைப் பழி சொல்வதே வழக்கமாகக் கொள்க… வேறென்ன தெரியும் உங்களுக்கு?” என்றாள். “நீங்கள்தானே பெற்றீர்கள்?” என்றான் காளன். “நாங்கள் என்ன வெறுமனே பெற்றோமா? நீங்கள்தானே தொடக்கம்?” என்று அவள் கேட்டாள்.
காளன் எழுந்து கைகளைத் தட்டியபடி “இப்போது சொல்லிவிட்டாய் அல்லவா? நான்தான் தொடக்கம்… போதுமா? முடிந்துவிட்டதா?” என்றான். நடனமிட்டபடி “சொல்! தோற்றாய் என்று சொல்…” என்றான். அவள் முகம்சீற “சொல்மாற்றவேண்டாம். அது வேறு பேச்சு” என்று கூவினாள். “எல்லாம் ஒரே பேச்சுதான்… சொல்வதெல்லாம் இங்குதான் காற்றில் இருக்கும். அந்தக் காற்றுதான் இதுவும்” என்றான் காளன். “அப்படியா? சொல் மாறாதா? அப்படியென்றால் நேற்று பேசிய பேச்சு ஒன்றை சொல்கிறேன்” என்று அவள் கைநீட்டி கூவ “கையை நீட்டிப்பேசாதே…” என்று அவன் கூவினான்.
இருவர் நடுவே இயல்பாக புகுந்து இப்பால் வந்த கொம்பன் “கடுங்கள்ளின் அடிமண்டி சிறந்தது…” என்றான். “எங்கே?” என்றான் அர்ஜுனன். “முழுக்க முடிந்துவிட்டது. ஆனால் குடிலுக்குள் மேலே ஓர் உறியில் இருக்கிறது கள். நாம் சென்றால் எடுத்து குடிக்கலாம்” என்றான். சடையன் “அதாவது அவன் முழுக்கொப்பரையையும் குடித்ததுபோக அடிமண்டியை உனக்குத் தருவான், இளையோனே” என்றார். காளி சொல் நிறுத்தி திரும்பி “அங்கே என்ன செய்கிறாய்? போய் விளையாடு” என்றாள். “பன்றி ஆறிக்கொண்டிருக்கிறது” என்றான் கொம்பன். “அதை சுடும்போது அழைப்போம். சுடுவதற்குள் தின்றாகவேண்டுமா என்ன? போ” என்றாள். அவன் தயங்கியபடி நின்று பன்றியை காதலுடன் நோக்கிவிட்டு அப்பால் சென்றான்.
அவள் அர்ஜுனனிடம் “இதோ பார் இளையோனே, இந்த பாசுபதமெல்லாம் உனக்கெதற்கு? எளியவனாக இரு. ஒவ்வொரு உயிருக்கும் அளிக்கவேண்டியதென்ன என்று உலகாளும் அன்னைக்குத் தெரியும்… போ!” என்றாள். “நில், பெண்சொல்லைக் கேட்டால் அடுக்களைக்குள் இருக்கவேண்டியிருக்கும். பெற்றுப் புறந்தருவார்கள். எஞ்சிய வாழ்நாளெல்லாம் திரும்ப கருவறைக்குள் இழுக்க முயல்வார்கள்” என்றான் காளன். “நான் உங்களிடம் பேசவில்லை. பித்தர்களிடம் பேச நான் பிச்சி இல்லை” என்று காளி சொன்னாள்.
“நீதான் பிச்சி, பேய்ச்சி” என்று காளன் கூச்சலிட்டபடி அவளை நோக்கி சென்றான். அமர்ந்திருந்த சடையன் ஒரு கல்லை எடுத்து காளன்மேல் எறிந்து “நில், இதோ இவரிடம் சொல், பாசுபதம் என்றால் என்ன என்று” என்றார். “பாசுபதம் என்றால்…” என அவன் சொல்லெடுக்க முனைந்து சொல் தகையாமல் குழம்பி மூவரையும் நோக்கிவிட்டு “அது பெரிய ஒரு…” என்றபின் “அதாவது அது பாசுபதம் என்னும்…” என்றபின் காளியிடம் “என்னடி அது?” என்றான். “எனக்குத் தெரியாது” என்று அவள் சொன்னாள். “என் கண் அல்லவா? என் கரியோள் அல்லவா? நான் உனக்கு நீ கேட்ட வெள்ளைச் செண்பகப்பூவை நாளை கொண்டுவந்து தருவேன்” என்றான் காளன்.
“எனக்குத் தெரியாதென்று சொன்னேனே?” என்றாள் காளி. “நான் உனக்கு எரிமுகடேறிச்சென்று அருமணி கொண்டுவந்து தருவேன். சொல்!” என்றான் காளன். அவள் கண்களில் சிரிப்புடன் சிறிய உதடுகளை அழுத்தியபடி “என்னவென்று தெரியாமல்தான் இத்தனை தொலைவுக்கு அழைத்துவந்தீரா?” என்றாள். “நான் எங்கே அழைத்துவந்தேன்? அவனை நீதான் வரச்சொன்னாய்.” அவள் சிரித்துவிட்டாள். “அப்படியென்றால் எதை எண்ணி தலைதொட்டு வாழ்த்தினீர்?” அவன் “அது எல்லோரும் வாழ்த்துவதுதானே? மேலும் நான் முதியவன்” என்றான்.
“முதியவனா? நேற்று அப்படி சொன்னதற்குத்தானே முப்பிரிவேலை எடுக்கப்போனீர்?” என்று அவள் சொல்ல “அதை பிறகு பேசுவோம். பாசுபதம் என்றால் என்ன? சொல், அதை எப்படி சொல்வது?” என்றான். அவள் “அந்த கரிக்குழாயை எடுத்து புகையை இழுப்பதுதானே? வந்துகொட்டுமே சொல்லும் ஆட்டமும்… எனக்கு வேலை இருக்கிறது” என எழுந்தாள். அவன் பாய்ந்து அவள் கையைப்பிடித்து “சொல்லிவிட்டுச் செல்… என் செல்லம் அல்லவா?” என்றான்.
“என்னிடம் இனிமேல் சண்டை போடக்கூடாது” என்றாள். “இல்லை, மெய்யாகவே இல்லை” என்றான். “நான் சொல்வதை எல்லாம் ஒப்புக்கொள்ளவேண்டும்” என அவள் கையை நீட்டினாள். அதைப்பற்றி அவன் “நான் என்றைக்கு மீறினேன்?” என்றான். “இப்போது சொல்லுங்கள், இன்னும் சற்றுநேரத்தில் அங்கே வந்து மல்லுக்கு நிற்பீர்… சிறியவனை வேறு காணவில்லை. எந்த மரக்கிளையில் இருக்கிறான் என்றே தெரியவில்லை.” அவன் அவள் தாடையைப்பிடித்து “எத்தனைமுறை கேட்டுவிட்டேன்! சொல்லடி!” என்றான்.
அவள் “இளையவனே, ஓர் அனல்கொழுந்தின் முடியை காணமுடியுமா?” என்றாள். அர்ஜுனன் அவ்வினாவால் ஒரு கணம் திகைத்து பின் “கண்ணுக்குத் தெரியும் நுனி…” என்றபின் “ஆம்! அது முடிவிலாது சென்றுகொண்டிருக்கிறது. அது வானமேயாகிறது” என்றான். “அதன் அடியை?” என்றாள். அவன் தலையசைத்து “இன்மையிலிருந்து எழுந்து ஒளியென்றாவதையே காணமுடியும். அது விறகில் அந்த மரம்நின்ற மண்ணில் மண்ணென்றான பொருளில் இருக்கிறது. முடிவிலாதது” என்றான்.
“அனலின் அடிமுடியை காண்பதெப்படி?” என்று அவள் கேட்டாள். “எப்படி?” என்று காளன் அவளிடம் ஆவலாக கேட்டான். “ஆமாம், நீங்களே கேளுங்கள்! உங்களிடம் கற்கவந்த இவன் முன்னால் வைத்தே கேட்டு இழிவுகொள்ளும்” என கைநீட்டி காளனை திட்டியபின் “இளையோனே, அனலை அறிவதற்கு ஒரே வழி அனலென்றாவதே. அனலென்பது அனைத்தையும் தானென்றாக்கும் பெருவிழைவின் வெளிச்சம். அனலுடன் இணைக, அனலாகுக!” என்று சொன்னாள். “அதுவே பாசுபதம் எனப்படுகிறது.”
அர்ஜுனன் கைகூப்பினான். “நான் உனக்கு இனிமேல் விளக்குகிறேன். மிகமிக எளியது. அதாவது நாம் அனலை ஒரு சிறு மண்குழாயில் எடுத்துக்கொள்கிறோம். அதில்…” என காளன் தொடங்க “இதோ பார்! வரும்போதே சொன்னேன் உன்னிடம், இந்த புகையாட்டெல்லாம் உனக்கு வேண்டியதில்லை. இவரிடம் நீ கற்கவேண்டியது ஒன்றே. இருநிலையழிந்து ஒன்றென்றாதல்” என்று அவள் சொன்னாள். “அதை அவரிடம் கேட்காதே. சிவப்புகையை உன் மூச்சில் திணிப்பார். அவருடன் இருந்து அவரென்றானதை அறி!”
அவள் எழுந்து செல்வதை அர்ஜுனன் நோக்கிநின்றான். காளன் “அவளுக்கு எல்லாமே தெரியும்” என்றான். அர்ஜுனன் “எனில் ஏன் ஓயாது பூசலிடுகிறீர்கள்?” என்றான். “பூசலா? நாங்களா?” என காளன் திகைத்தான். “ஆம், நானே பலமுறை கண்டேனே!” என்றான் அர்ஜுனன். “அதுவா பூசல் என்பது? அவளை நான் வேறு எப்படித்தான் அணுகுவது?” என்று காளன் சொன்னான். “அவளை சற்றுநேரம் தனித்துவிட்டுவிட்டால் பனியிலுறையும் ஏரி என அமைதிகொண்டுவிடுவாள். அதன்பின் எரிமலை எழுந்தாலொழிய சொல்மீளமாட்டாள்.”
அர்ஜுனன் “ஆம், அவ்வாறே நானும் எண்ணினேன். அன்னை எண்ணுவதும் பேசுவதும் இயங்குவதும் பிறர் பொருட்டே” என்றான். அவன் சொன்னதை செவிகொள்ளாத காளன் எழுந்து தன் புலித்தோலை இடையில் சீரமைத்து “அவள் அங்கே தனித்திருக்கிறாள். நான் அவளிடம் சென்று பாசுபதம் பற்றிய இந்தக் கதையை அவள் எங்கே தெரிந்துகொண்டாள் என்று கேட்டுவருகிறேன். பெரும்பாலும் நானே சிவப்புகை வெறிப்பில் சொன்னதாக இருக்கும். அதை இங்கே சொல்லி என்னை அறிவிலி என்று காட்டிவிட்டுச் செல்கிறாள்” என்றபடி நடந்தான்.
[ 36 ]
அவன் செல்வதை நோக்கி சிரித்த எரியன் “இக்குடியின் ஆண்களும் பெண்களும் இப்படித்தான் எப்போதுமிருக்கிறார்கள்” என்றார். சடையன் திரும்பி பாறைகளாக பெருமுகம் கொண்டிருந்த அன்னையரையும் தந்தையரையும் சுட்டி “அவர்களும் இப்படித்தான் இருந்திருப்பார்கள். அன்னையரின் புன்னகைக்கு வேறொரு ஏது இருக்க வாய்ப்பில்லை” என்று நகைத்தார்.
“அன்னை சொன்னவற்றுக்கு என்ன பொருள், சடையரே?” என்றான் அர்ஜுனன். சடையன் “இளையோனே, கீழே மண்ணில் வாழும் உங்களை ஆள்வது இருமை. அன்னமும் எண்ணமும் என, உள்ளமும் உடலும் என, சொல்லும் பொருளும் என, துரியமும் சித்தமும் என அனைத்தும் இரண்டெனப் பிரிந்துள்ளன அங்கு. உங்கள் வாழ்வின் துயரென்பது அப்பிளவு அளிக்கும் துன்பமே. நீங்கள் அடையும் இன்பமென்பது அவ்விருநிலை அகன்று அமையும் சிலகணங்கள் மட்டுமே. உணவில் உறவில் காமத்தில் கலையில் அறிதலில் ஊழ்கத்தில் அதை அறிகிறீர்கள்” என்றார்.
“ஊன்சுவை கண்டபின் கூண்டிலடைபட்டிருக்கும் சிம்மக்குருளை போன்றிருக்கிறீர்கள் நீங்கள். அறிந்த ஒன்றை அடைவதற்கான தவிப்பு. தவமென்பது என்ன? இரண்டழியும் முழுநிலை. இருத்தல்நிறைவு. இன்மையென்றாதல்” என சடையன் தொடர்ந்தார். “காளனை நீ ஏன் போரில் வெல்லவில்லை என்றறிக! உன் வாழ்நாளெல்லாம் நீ கற்ற விற்கல்வி என்பது உளமென உடலை ஆக்கும் பயணமே. உன் உடல் உள்ளமென்றே ஆகிவிட்டமையால்தான் நீ இருநிலை வில்லவன் எனப்படுகிறாய்.”
“ஆனால் அந்நிலையிலும்கூட உன் உளம்வேறு உடல்வேறுதான். உளம் உடலுக்கு அப்பால் வியந்தபடி தனித்திருக்கிறது. எங்கள் குலத்துக் காளனின் உடல் அவன் உள்ளமேயாகும். அவன் உடலுள்ளம் அம்புகளைத் தவிர்க்க விழைந்தாலே போதும். ஆற்றுவதல்ல அவன் செயல், ஆவதேயாகும்” என்றார் பேயன். “அதைத்தான் நீ கற்பதற்கு வந்தாய். அறியக்கற்பது கல்வி. ஆவதற்கான வழியே பாசுபதம்.”
“இளையோனே, இந்நிலம் என்றும் இவ்வண்ணமே இருந்தது. மண்ணின் அல்குல்குழி இது என்று சொல்கின்றன எங்கள் கதைகள். விண்நீர் முதலில் விழுந்த இடம். உயிர்த்துளி முதலில் முளைத்த நிலம். எங்கள் குலமுதல்வனை என்றோ யாரோ சிவப்பன் என்றனர். பின் வந்தோர் அச்சொல்லை சிவம் என்றாக்கினர். அவன் ஆளும் இந்நிலத்தை சிவநிலம் என்றுரைத்தனர்” என்றார் எரியன்.
“இங்கு வாழ்ந்திருந்தார் அவர். அவர் இடம் அமைந்த துணையை சிவை என்கின்றன கதைகள். அவர்களின் முகமென்ன என்றறியோம். அன்றி, இந்நிலத்தைச் சூழ்ந்தமைந்த பாறைகள் அனைத்திலும் செதுக்கப்பட்டிருக்கும் அத்தனை முகங்களும் அவர்களுடையனவே என்று சொல்வோம்” என சடையன் சொன்னார். “திமிலெழுந்த வெண்காளை ஒன்று அவருக்குத் துணையென்றிருந்தது. அதனால் அவர் பெயர் பசுபதி எனப்பட்டது. மழு அவர் படைக்கலம். உடுக்கு அவர் காலம். மான் அவர் கொடி. பைநாகம் அவர் கழுத்தணிந்த ஆரம். கதைகள்சொல்லி வரைந்ததெடுத்த ஓவியமே இன்று அவர்.”
“வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்தவர் அவர்” என்று சடையன் சொன்னார். “விண்ணுடன் நேர்த்தொடர்பு கொண்டிருந்தார். ஒளியணையாத சொல் வகுத்தார். பித்தர், எருக்குமாலை சூடும் பேயர், ஆட்டர், ஆராக்காதலர். ஒருமுறை இந்நிலத்தைச் சூழ்ந்திருந்த மலைகள் நகைக்கத்தொடங்கின. வானில் பெருமரங்கள்போல முகில்கள் எழுந்து நின்றன. அதன் பொருள் அறிய தன் வெள்விடை ஏறி தனித்து மலையேறிச் சென்றார். மீள்கையில் அவர் நுதலில் ஒரு செவ்விழி திறந்திருந்தது. ஊன்விழி கடந்து கண்டமைக்கு சான்று அது.”
“இங்கு பிறந்திறந்த பல்லாயிரவரில் அவர் மட்டும் தன் முதிர்ந்த துணைவியுடன் வெள்ளெருது ஊர்ந்து அந்த முடிமலைமீது ஏறிச்சென்று மறைந்தார் என்கின்றன மூதாதைச் சொற்கள். குடியினர் கூடிநின்று கைதொழுது அவர்கள் செல்வதை நோக்கி நின்றனர். மேலேறிச்சென்றவர் ஏழாவது நாள் விசும்புகடந்து செல்லும் அனலுருவாக மலைமேல் எழுந்து நின்றார். பதினெட்டு நாட்கள் அத்தழல்பேருரு வானை ஏந்தியிருந்தது. பின் அது குளிர்ந்து செம்முகிலென ஆனபோது கூனலிளம்பிறையொன்றைச் சூடியிருந்தது. பிறைக்குளிர்கொண்டு அதன் பித்து அணைந்தது.”
“செந்தழலென எழுந்தவரை சிவப்பர் என அழைக்கலாயினர் எங்கள் குடிகள். அவர் கொண்ட மூவிழியையும் பிறையையும் தாங்களும் அணிந்துகொண்டனர்” என்று சடையர் சொன்னார். மன்றில் இருந்த சிவக்குறியைச் சுட்டி “நீத்தோருக்கு கல்லமைத்து வணங்குதல் எங்கள் குடிவழக்கம். கிடைக்கல்லாக அன்னையரும் நிலைக்கல்லாக தந்தையரும் நின்று மலரும் கள்ளும் ஊனும் படையல்கொண்டு அருள்புரிவார்கள். மலையேறிச் சென்று அனலென எழுந்த அன்னையையும் தந்தையையும் வழிபட கிடைக்கல்மேல் நிலைக்கல் நாட்டி ஒன்றென வழிபடலானோம். அதுவே எங்கள் மன்றுகளில் இன்று சிவக்குறி என அமைந்துள்ளது.”
“பாசுபதம் எங்கள் வேதம்” என்று எரியன் சொன்னார். “எரியென எழுந்த மூதாதையின் ஒலிகளிலிருந்து எங்கள் குடிமூத்தோர் எடுத்தமைத்தது அது. இளையோனே, உங்கள் வேதங்கள் மானுடர் எரியிடம் உரைப்பவை. எங்கள் வேதம் எரி மானுடரிடம் உரைப்பது. எரியென்றானவர்களுக்குரிய மொழி அது. மானுடப் பொருள்தொடாத் தூய்மை உடையது.”
“அது முந்நூறாயிரம் நுண்சொற்கள் கொண்டது. நூறாயிரம் நுண்சொற்கள் எண்ணங்களாகவே உள்ளன. நூறாயிரம் நுண்சொற்கள் மூச்சென அமைந்துள்ளன. நூறாயிரம் நுண்சொற்கள் ஒலியென்றாகின்றன. இறுதிச் சொல் ஒன்று மட்டுமே மொழியென்று வருகிறது. அதை நாங்கள் ஓம் என்று உரைக்கிறோம். அதுவரையிலான அத்தனை நுண்சொற்களையும் ஏற்று மெய்யென்று சான்றுகூறுகிறது அவ்வொரு மொழிச்சொல்” என்றார் சடையன்.
“அச்சொற்களும் அதனுடன் இணைந்த ஆயிரத்தெட்டு விரல்குறிகளும் இணைந்ததே பாசுபதவேதம். வேதமென மண் அறிந்த முதல்வேதம் அதுவே” என்றார் எரியன். அர்ஜுனன் நீள்மூச்சுடன் மெல்ல நெகிழ்ந்தமைந்தான். “மூத்தோரே, ஓம் எனும் அம்மொழிச் சொல்லை முதலென்றாக்கி ஒலிக்கத் தொடங்கியவையே எங்கள் வேதங்கள் அனைத்தும்” என்றான். “அசுரரும் நாகரும் நிஷாதரும் கொண்ட வேதங்கள் எல்லாம். நால்வேதமென்றான வாருணம், மகாருத்ரம், மாகேந்திரம், மகாவஜ்ரம் அனைத்தும்.”
பேயன் “ஆம், அவை எங்கள் வேதத்தின் நீர்ப்பாவைகள்” என்றார். “இன்று இந்த மண்ணின் துளியொன்றைப் பெற்று எங்களுள் ஒருவனாக ஆனாய். பாசுபதத்திற்குள் நுழைந்து முழுமைகொள்க!” என்று சடையன் அர்ஜுனனை வாழ்த்தினார். அர்ஜுனன் கைகூப்பினான்.
தொடர்புடைய பதிவுகள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
January 6, 2017
அபிப்பிராயசிந்தாமணி
அபத்தப்பகடி எழுதுவது மிக எளிது, நம் அபிப்பிராயங்களைச் சொன்னாலே போதும். இவை அவைதான். சென்ற காலங்களில் ரத்தம் கக்கி பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். சொல்லி முடித்ததுமே ‘ரெம்ப ஓவராப்போயிடுச்சோ’ என்னும் சந்தேகம் வந்துவிடும். உடனே ஒரு பகடிக்கட்டுரையை எழுதுவேன். அது இந்தப்பக்கமாக ஓவராகப்போய்விடும். அடுத்து அந்தப்பக்கமாக ஓவராகப்போவதற்கான விசையை இது அளிக்கும். இப்படியாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.
நானெல்லாம் எழுத வந்தகாலகட்டத்தில் பெருமூச்சுவாதம் என்னும் இலக்கிய அழகியல் பிரபலமாக இருந்தது.. என்னத்தச்சொல்ல என்னும் பாவனையில்தான் கட்டுரைகள் ஆரம்பிக்கும் ‘மூன்றாமுலகநாடுகளில் வஞ்சனைகளின் வரலாறு தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அழகியலும் அரசியலும் …..” என்றிவ்வாறு கட்டுரைகள் நிகழ் அல்லது புதியநம்பிக்கைக்கு எழுதலாம். அல்லது “இவனுக்கு அலுப்பாக இருந்தது, ஏன் உயிர்வாழவேண்டும் என நினைத்துக்கொண்டான்., நினைத்துக்கொண்டானே ஒழிய உயிர்வாழ்ந்துதானே ஆகவேண்டும்’ என்று கதைகள் கணையாழிக்கு.
எனக்கு என்னவோ பெருமூச்சு சரியாக வரவில்லை. ஏற்கனவே கடுமையான மனச்சிக்கல்கள். அதன் விளைவாக மற்றவர்களுக்கு மேலும் சிக்கல்கள். அவர்கள் அதன் விளைவாக நமக்களித்த சிக்கல்கள். ஆகவே கொஞ்சம் மஜாவாக இருப்போமே என்றுதான் நான் இலக்கியத்திற்கே வந்தேன். என் ஆரம்பகாலக் கதைகள் அனைத்திலுமே ஒரு நக்கலும் சிரிப்பும் இருந்துகொண்டிருக்கும். அதன்பின்னர் எழுதிஎழுதித்தான் ஒருமாதிரி சமனப்பட்டு ‘சீரியஸான’ ஆளாக ஆனேன். இன்றைக்கு மாடன் மோட்சம் மாதிரியான கதைகளையெல்லாம் பார்க்கையில் அய்யோப்பாவம் எத்தனை சிக்கலுக்குள்ளாகியிருந்தால் இப்படியெல்லாம் பகடி எழுதியிருப்பான் இந்தாள் என்னும் அனுதாபம் ஏற்படுகிறது.
இந்தக்கட்டுரைகளை கட்டுரைகளா என்று கேட்டால் கதைகள் என்றும் கதைகளா என்று திடுக்கிட்டால் கட்டுரைகள் என்றும் சொல்லும்விதமாக எழுதியிருக்கிறேன். பலவிஷயங்களைப்பற்றிய என்னுடைய ஆழமான கருத்துக்கள் இதில் உள்ளன. மிக ஆழமானவையாதலால்தான் பகடியாகத் தோற்றமளிக்கின்றன. இணையத்தில் வெளிவந்தபோது பலர் இதற்காகச் சிரித்தார்கள்
எழுத்துருமாற்றம், பெருந்தொகை நோட்டு அகற்றம் குறித்தெல்லாம் நான் எழுதிய கட்டுரைகளையும் இதில் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று என் செல்லக்குட்டி சைதன்யா அடம்பிடித்தாளென்றாலும் இன்னும் அதேபாணியில் கொஞ்சம் எழுதியபின் ஒன்றாகச்சேர்த்து வெளியிடலாமென்று இப்போது தோன்றுகிறது. வயதாக வயதாக நாம் எந்தமுயற்சியும் செய்யாமலேயே நகைச்சுவை எழுத்தாளராக ஆகிக்கொண்டிருக்கிறோம்.
இந்நூலை என் அன்புக்குரிய நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெயமோகன்
கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் அபிப்பிராயசிந்தாமணி நூலின் முன்னுரை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களை பற்றியும் உங்கள் படைப்புகள் பற்றியும் நன்கறிந்தாலும் உங்கள் இணையதளத்துக்குள் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்குள் நான் சமீபத்தில்தான் நுழைந்தேன். விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ் கண்டு ஒரு வித தயக்கத்துடன்தான் கோவை வந்தேன். வந்தவுடன்தான் அறிந்தேன் ‘சோற்றுக்கடன்’ என்பது ஒரு சிறுகதை மட்டுமல்ல என்று. கெத்தேல் சாஹிப் உயிருடன்தான் இருக்கிறார் என்று. பசிக்கு மட்டுமல்ல, செவிக்கும், சிந்தைக்கும், வயிற்றுக்கும் விஷ்ணுபுரம் வட்டம் கெத்தேல் சாஹிப் கரம் போன்று உணவை அள்ளி அள்ளி தந்து திணறடித்து விட்டனர். ஒரு டிஜிட்டல் உண்டியலை நிரந்தரமாக வைத்து விடுங்கள். உங்கள் படைப்புகளால் பயனடைந்தவர்களும், இன்றைய மாணவர்கள் நாளை சம்பாதித்து அந்த உண்டியலை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். அறம் செழிக்கட்டும்.
விஷ்ணுபுரம் இலக்கிய அமர்வுகள் அனைத்துமே சிறப்பு. அமர்வுகளின் நடுநடுவே, வாசலில், வெராண்டாவில், மாடி படிக்கட்டுகளில், அதிகாலை டீக்கடையில், காத்திருந்த வரிசைகளில் என்று நீங்கள் நின்றுகொண்டே நிகழ்த்திய குறு அமர்வுகள் படு சுவாரசியம். ஒரு கல்ட் தத்துவமாகி, பின் அந்த தத்துவம் மதமாவதை அழகாய் விவரித்தீர்கள். போகிற போக்கில் காஷ்மீர சைவத்தையும் கடலூர் சைவத்தையும் இணைத்து நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பிரமிக்க வைத்தன. தூரத்தில் இருந்து கொண்டு உங்களுடன் கடிதத்தில் உரையாட முடிகிறது. ஆனால் அருகில் வந்தும் உங்களை நெருங்கி பேச முடியவில்லை. எப்போதும் நீங்கள் நின்ற இடத்தை சுற்றிலும் மலரை மொய்க்கும் வண்டுகளாய் வாசகர்கள். ஒரு கட்டத்துக்கு மேல் உங்களை புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன். நான் உங்களை எடுத்த புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளேன்.
விஷ்ணுபுரம் வட்டத்தின் முன்னோடிகள் புதியவர்களை அன்புடன் அரவணைத்தார்கள். மீனாம்பிகை, செந்தில், விடாக்கொண்டன் கொடாக்கண்டன், மற்றும் பலர் பம்பரமாக சுழன்று வேலை செய்தார்கள். விஷ்ணுபுரம் வட்டத்தை பற்றி மற்றும் உங்கள் இணையதளத்தை பற்றி கடலூர் சீனு நன்றாக விளக்கினார். செல்வேந்திரன், ராஜகோபாலன், ராம்குமார், அரங்கா போன்றோரின் ஆளுமை மலைக்க வைத்தது. பேருந்தில் வந்தவர்கள், ரயிலில் வந்தவர்கள், விமானத்தில் வந்தவர்கள், ஆண்கள், பெண்கள், மாணவர்கள், முன்னோடிகள், கிராமம், நகரம், தமிழிலக்கியம், பிற மொழி இலக்கியம் என்று பல தரப்பட்ட மனித மனங்களின் சங்கமமாய் இந்த விழா திகழ்ந்தது. டார்மெட்ரியில் சிறு சிறு குழுவாய் நடந்த விவாதங்கள் அனைத்தும் அருமை. பலரது நட்பு கிடைத்து, அவர்களுடன் வாட்ஸப் மூலம் இணைந்து இலக்கிய பரிவர்த்தனை இன்றும் தொடர்கிறது.
இரண்டாம் நாள் காலை அமர்வில், வண்ணதாசன் அவர்களின் நெகிழ்ச்சியான உரை விழாவின் உச்சமான கணங்கள். நடுவில் வந்து உட்கார சொன்னதற்கு, ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே மையத்தையும் பிற அனைத்தையும் பார்க்க விரும்புவதாக கூறினார். உங்கள் கதவுகளை திறந்து வையுங்கள், அதன் வழியே நான் நுழைந்து வருகிறேன் என்றும் சொன்னார். தன்னை காண வந்த வாசகியை மட்டுமன்றி அவருடன் வந்த தோழியை நினைவு கூர்கிறார். சால்வை நழுவியபோது விருதுகள் கூட இப்படித்தான் நழுவி செல்கிறது என்று சட்டென சொன்ன நகைச்சுவை அபாரம். அன்று மாலை விழாவுக்கு வந்த வாசகர்களை மட்டுமன்றி, செல்வராஜ் போன்ற வராத வாசகர்களையும் அவர் சிலாகித்து பேசியது, ஒற்றைக்கண்ணால் உலகத்தை பார்க்காமல், வண்ணதாசன் எப்படி அனைத்தையும் முழுமையாக ஒட்டு மொத்தமாக பார்க்கிறார் என்று தெள்ளத்தெளிவாய் புரிந்தது
நீங்கள் சமீபத்தில் ஒரு சிறுகதையில் சொன்னது போல், ஃப்யூஜியாமா என்கிற மலையை நேரில் சென்று பார்க்காத வரை, ‘ஃப்யூஜியாமா’ என்பது ஒரு சொல் மட்டுமே. வண்ணதாசன் அவர்கள் காலை அமர்வில் சொன்னது போல், ஒரு மீனையோ, மீன்கொத்தியையோ பார்க்காத வரை, ‘நொடி நேர அரை வட்டம்’ என்பது ஒரு வரி மட்டுமே. விஷ்ணுபுரம் விழாவை நேரில் சென்று பார்க்காத வரை, அதை எழுத்துக்களால் காணொளிகளால் புரிந்து கொள்வதென்பது சிரமம் என்றே நினைக்கிறேன்.
விழா முடிந்து வீட்டுக்கு வந்த பின்பும், அலுவலக அல்லலுக்குள் நுழைந்த பிறகும், புது வருடம் பிறந்த பின்னும், “கனியான பின்பும் நுனியில் பூ” போன்று, விஷ்ணுபுரம் விழா நெஞ்சுக்குள் தேனாக ஒட்டிக்கொண்டு இனிக்கின்றது.
நன்றி.
அன்புடன்,
ராஜா,
***
முந்தைய பதிவுகள்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 1 விஷ்ணு
விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 3 ராகேஷ்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 4 சுரேஷ் பிரதீப்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 8 யோகேஸ்வரர்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 11 குறைகள்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 12 சசிகுமார்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 13 ராஜீவ்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 16 தூயன்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு-19 பேசப்பட்டவை கிருஷ்ணன்
ஒருங்கிணைதலின் கொண்டாட்டம் ஜெயமோகன்
உரைகள்
காணொளிகள்
எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை
புகைப்படங்கள்
புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்
=============================================================
விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு
============================================================
விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்
வண்ணதாசன்- விலகும் திரை – ஏ வி மணிகண்டன்
வண்ணதாசன்- சுவையாகி வருவது ஜெயமோகன் 1
வண்ணதாசன்- சுவையாகி வருவது ஜெயமோகன் 2
வண்ணதாசன்- மனித முகங்கள் வளவதுரையன்
வண்ணதாசன்- கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்
வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்
வண்ணதாசன்- குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா
வண்ணதாசன்- வண்ணமும் மென்மையும் – சௌந்தர்
வண்ணதாசன்- சிவசக்தி நடனம் கடலூர் சீனு
==============================================================================
==============================================================================
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 5
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11
வண்ணதாசன்- மென்மையில் விழும்கீறல்கள்
சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்
வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

