Jeyamohan's Blog, page 1688
January 18, 2017
திருக்குறள் உரைகள் காணொளியாக
அவர்களுக்கு,
ஐயா ஜேயமோகன் ஆற்றிய இந்த உரையினை பதிவு செய்து வெளியிட வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.
கோவையில் இருந்த நாட்களில் தங்களது தம்பிகள் போன்று கவனித்து கொண்ட விஷ்ணுபுர வாசக வட்டத்தை சார்ந்த ஆரங்கா, செந்தில், மீனா க்கும் நன்றி.
முதல் நாள் படம்பிடித்த காட்சிகளை எடிட் செய்யவே சற்று சவாலாக இருந்தது. அதனால் ஒரு நாள் தமதாமாக இன்று அனைத்து காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண
குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist
https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M
தனித்தனி சுட்டிகள் :
குறளினிது – ஜெயமோகன் உரை | Day – 01 | Part – 01
https://www.youtube.com/watch?v=XV0HRviblEs
குறளினிது – ஜெயமோகன் உரை | Day – 01 | Part – 02
https://www.youtube.com/watch?v=JqW4rA-bvqU
குறளினிது – ஜெயமோகன் உரை | Day – 02 | Part – 01
https://www.youtube.com/watch?v=yFCE9o3S9cs
குறளினிது – ஜெயமோகன் உரை | Day – 02 | Part – 02
https://www.youtube.com/watch?v=N2tt4NVHOxo
குறளினிது – ஜெயமோகன் உரை | Day – 03 | Part – 01
https://www.youtube.com/watch?v=lsl8i0CltJ0
குறளினிது – ஜெயமோகன் உரை | Day – 03 | Part – 02
https://www.youtube.com/watch?v=Pn5LbffjAS4
நன்றி
கபிலன்
for www.shruti.tv
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
January 17, 2017
தேசத்தின் முகங்கள்
கோதாவரியின் கரையில் ஒரு முகம்
எங்கள் பயணங்களில் எப்போதுமே நண்பர் வசந்தகுமார் மனித முகங்களை எடுப்பதில்தான் ஆர்வம் காட்டுவார். பலசமயம் பயணம் முடிந்து திரும்பிவரும்போது சென்ற இடங்கள் மிகக்குறைவாகத்தான் படமாக்கப்பட்டிருக்கும். அதைவிடக்குறைவாகவே சென்றவர்கள் படத்தில் இருப்பார்கள். பயணத்தில் இருக்கும்போது எதற்கு இவர் வழியில் பார்த்த அனைவரையுமே படமெடுக்கிறார் என்ற எண்ணம் வந்து கொண்டிருக்கும்.
பயணம் முடிந்து வந்ததுமே புகைப்படத்தொகுப்புகளைப் பார்க்கும்போது அவற்றில் நிறைந்திருக்கும் முகங்களைப்பார்த்து ஒரு ஏமாற்றம் ஏற்படும். ஏனெனில் நாம் அவற்றில் நமது முகத்தைத் தேடுவோம். அப்போது விதவிதமான நிலங்களில் நாம் நின்றுகொண்டிருந்த காட்சியே நம் உள்ளத்தில் இருக்கும் அதை புகைப்படத்தில் பார்க்க விரும்புவோம்.
ஆனால் ஓராண்டு கழிந்த பின்னர் முகங்களின் புகைப்படத்தைப் பார்க்கும்போது துணுக்குறும் அளவுக்கு அவை அந்த நிலப்பகுதியை ,பண்பாட்டை, வாழ்க்கை முறையை வெளிக்காட்டுவதைப்பார்ப்போம்.
பூடானில் ஒரு பாட்டி சிறுமி ஒருத்தியைக் கைபற்றி நடந்து போகும் ஒரு புகைப்படம் மொத்த பூடானையே கொண்டு வந்து முன்னால் நிறுத்துகிறது. இமயமலையின் புத்த மடாலயத்தின் படியில் அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவரின் சுருங்கிய முகம் இமயமலையாகவே கற்பனையில் மாறிவிடுகிறது. முகங்களைப்போல வாழ்க்கையைக் காட்டும் எதுவுமே இல்லை.
கால் முளைத்து நான் வீட்டை விட்டு பயணம் கிளம்பிய பத்தொன்பதாவது வயதில் புறப்பாடு என்ற பெயரில் அந்த பயண அனுபவங்களை எழுதியிருக்கிறேன். பின்னர் பலமுறை வீட்டை விட்டு கிளம்பினேன். எனக்கென வீட்டை அமைத்துக் கொண்ட பின்னரும் கூட வீட்டில் தரிக்காதவனாகவே நான் இருந்து கொண்டிருக்கிறேன். இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக பயணம் ஏதுமின்றி வீட்டில் இருந்த நாட்கள் அதிகம் போனால் இருபது இருபத்தைந்து நாட்களாகத்தான் இருக்கும்.
பத்து நாட்கள் ஒரே தெருவில் நடந்து, ஒரே முகங்களை பார்த்து, ஒரே கடையில் டீ குடிக்கும்போதே உள்ளம் ஏங்கத் தொடங்கிவிடுகிறது. அறியாத ஊர் ஒன்றில் முற்றிலும் புதிய முகங்கள் நடுவே நின்று டீ குடிக்கும் ஒரு சித்திரம் உள்ளத்தில் எழுகிறது. அதன் பின் இருக்க முடியாது. கால்கள் பதறும் கிளம்பு கிளம்பு என்று. உடல் எம்பும் ஹீலியம் நிறைக்கப்பட்ட பலூன் மண்ணிலிருந்து எழத் துடிப்பது போன்றது தான்
இப்போதெல்லாம் என்னைவிட பயணத்துடிப்புள்ள நண்பர்களின் பெரிய படையே திரண்டுள்ளது. சென்ற இரண்டு மாதங்களில் சென்ற பயணங்களில் மூன்று நான்கு கார்களில் இருபது பேருக்கு மேல் சேர்ந்துகொண்டார்கள். பல்லவர்கால சமணக்கோயில்களைப் பார்க்கப்போனபோது காஞ்சிபுரத்தில் ஒரு கல்யாணமண்டபத்தையே வாடகைக்கு எடுத்து தங்கினோம்.
வருடத்தில் குறைந்தது இரண்டு வெளிநாட்டு பயணங்களும் மூன்று விரிவான இந்தியப்பயணங்களும் ஆறேழு தமிழகப் பயணங்களும் செய்து கொண்டிருக்கிறேன். சென்ற இரு வருடங்களாக பயணத்தில் இருந்த நாட்களை அன்றாட வாழ்க்கையின் நாட்களை விட அதிகம். பறவை சிறகு கொண்டிருப்பது பறப்பதற்காகத்தான் அது இளைப்பாறலாம் ஆனால் காற்றில் மிதந்து கொண்டிருக்கும்போது மட்டும் தான் அது பறவை.
என் பயணங்களைப்பற்றி எழுத எண்ணும்போது இந்தியா என்னும் சித்திரம் எழுந்து வருகிறது. உலகில் பல நாடுகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மண்ணின் மேல் இருக்கும் மோகம் ஒவ்வொரு கணமும் கூடிக்கூடி வருகிறது. எத்தனையோ பயணங்களுக்குப் பின்னரும் இதை இன்னும் பார்க்கவில்லை, உணரவில்லை என்னும் ஏக்கமே எஞ்சுகிறது. ஒவ்வொரு முறை வரைபடத்தை எடுக்கும்போதும் நான் பார்க்காத நிலங்கள் கண்முன் எழுந்து வந்து துயர் கொள்ளச்செய்கின்றன. இன்னும் எஞ்சும் வாழ்நாளில் இங்கிருப்பதில் எத்தனை பகுதியை பார்க்கமுடியும் என்னும் எண்ணம் சுமையெனக் கனக்கிறது.
இந்த உணர்வு இந்தியா என் நாடு என்பதற்காக மட்டுமல்ல. இந்த நிலம் முழுக்க நிறைந்திருக்கும் உலகின் தொன்மையான பண்பாடு ஒன்றின் துளியே நான் என்று என்னை உணர்கிறேன் என்பதனால் மட்டும் அல்ல. இந்தியா எனக்கு ஒரு ஆன்மிகமான அனுபவம். அதில் பயணம்செய்வது ஒரு வகையான தியானம்
இந்தியாவை அறிய அறிய எனது மொழியை நான் நன்கு அறியத்தொடங்கினேன். இந்தியாவில் பயணம் செய்யும் தோறும் இந்தியாவின் இலக்கிய மரபு, மெய்ஞான மரபு ஆகியவற்றை மேலும் அணுகி அறியத் தொடங்குகிறேன். காசியை , கங்கையை, இமையத்தை அறிந்தால் நான் என் பாட்டனை பாட்டியை மிகநுட்பமாகப் புரிந்துகொள்கிறேன்.
இந்தியாவில் இருக்கும் இத்தனை பிரம்மாண்டமான பன்மை அனேகமாக உலகின் எந்தப்பகுதியிலும் இல்லை. ஆறுமாதம் பயணம் செய்தால் அமெரிக்கத் துணைக்கண்டமே சலிக்கத் தொடங்கிவிடும். மீண்டும் மீண்டும் ஒரே சாலைகள். ஒரே வகைக்கட்டிடங்கள்.ஒரே வகை மனிதர்கள். ஒரே வாழ்க்கை. ஆனால் இங்கே வெறும் ஐம்பது கிலோமீட்டருக்குள் நிலப்பகுதியும் மொழியும் உணவும் உடையும் இனமும் கூட முற்றாக மாறும்
இந்தியா ஒரு மாபெரும் கலைடாஸ்கோப் ஒரு சின்ன அசைவில் மொத்த தோற்றமும் மாறிவிடுகிறது.நாம் நோக்க நோக்க முடிவிலாது மாறிக்கொண்டே இருக்கிறது இந்தியா ஒரு பண்பாட்டுக் களஞ்சியம் மொழிகளின் இனங்களின் வாழ்க்கை முறைகளின் மாபெரும் கருவூலம். — வாசித்து முடிக்கவே முடியாத நூல்
இத்தனை பன்மைக்குள்ளும் ஓடும் ஒருமையை நான் தொட்டறிந்திருக்கிறேன் என்பதனால் தான் முதன்மையாக இந்தியன் என்றே என்னைச் சொல்லிக் கொள்வேன்.
இந்தியத் தேசியத்தின்மீது இறைநம்பிக்கைக்கு நிகரான ஒன்றை நான் கொண்டிருக்கிறேன்.. ஏனெனில் இறைவனை நேரில் கண்ட ஒருவனின் நம்பிக்கைக்கு நிகரானது அது. அவனிடம் நீங்கள் நாத்திகம் பேசமுடியாது.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை கோஹிமாவிலிருந்து அமிர்தசரஸ் வரை இந்தப்பண்பாட்டில் எந்தப்பகுதியிலும் என்னுடையது என்று நான் உணரும் இடம் உண்டு. . என்னவர் என்று நான் உணரும் மக்களே அங்கு இருக்கிறார்கள். இத்தனை பயணங்களில் மிகக்குறைவாகவே கசப்பான அனுபவங்கள் எனக்கு நிகழ்ந்துள்ளன. என்னைத் தன்னவர் என்று உணரும் மக்களையே இந்த நிலம் முழுக்க நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தியா என்று சொல்லும்போது நாளிதழில் படிக்கும் ஒரு வார்த்தையாகவே பலருக்கு உள்ளம் பொருள்படுகிறது. சிலருக்கு அது பாடப்புத்தகத்திலிருக்கும் ஒரு சொல். சிலருக்கு பணத்தாளிலிருக்கும் ஒரு அடையாளம். சிலருக்கு அதிகாரபீடம். சிலருக்கு ஒரு வரைபடம். எனக்கு அது முகங்களின் பெருக்கு
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக நான் கண்டு என் நினைவில் பெருகியிருக்கும் பல்லாயிரம் முகங்கள்தான் என் இந்தியா. என்னிடம்பேசியவை. நான் அணுகி அறிந்தவை. ஆகவே தான் இத்தொடரை முகங்களின் தேசம் என்று தலைப்பிட்டேன். முகங்களினூடாகவே இத்தேசத்தை கண்டடைவதற்கான ஒரு முயற்சி இந்நூல்
அது நீர் நிலையில் ஒரு நீர்த்துளியை தொட்டு எடுப்பது போலத்தான். அறியத்தெரிந்தவர்க்கு முழு நீர்நிலையையும் அது கற்பிக்கும்
நன்றி
குங்குமம் முகங்களின் தேசம் முடிவுப்பகுதி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
எதிர்மறை வருமான வரி- பாலா
அரசின் பணப்பரிமாற்றத் திட்டத்தை ஆதரித்த சில பொருளாதார நிபுணர்களில் சுர்ஜித் பல்லா மிக முக்கியமானவர்.
ஜனவரி ஏழாம் தேதி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தித்தாளில், சமூக நலத் திட்டங்களான பொது விநியோக முறை மற்றும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களை நிறுத்திவிட்டு, அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்னும் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார்.
சமூக நலக் கொள்கைகளின் அடிப்படையை தலைகீழாகப் பார்க்கிறது இந்தக் கொள்கை.
அதன் தொடர்ச்சியாக இன்று வெளியான இன்னொரு கட்டுரை – எதிர்மறை வருமான வரி. அதாவது Negative Income Tax. இதை அவரும் அர்விந்த் விர்மானி என்னும் இன்னொரு நிபுணரும் எழுதியிருக்கிறார்கள்
இந்த இரண்டு கட்டுரைகளையும் தொடர்ச்சியாகப் பார்க்கும் போது, இந்த அரசு மிகவும் பெரிதாக இந்தத் தளங்களில் திட்டமிடுகிறார்கள் என்பது புரிகிறது. வரப்போகும் பட்ஜட்டிற்கான வெள்ளோட்டமாக இந்தக் கட்டுரைகள் இருக்கலாம் எனக் கருதுகிறேன்.
இவை மிக நிச்சயமாக, இந்தியப் பொருளாதார வரலாற்றைப் புரட்டிப் போடக் கூடிய திட்டங்கள்.
இவர் சொல்வதில் மிக முக்கியமானது:
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் பெறும் அனைவருக்கும் ஒரே அளவில் 12% வருமான வரி. இப்போது அது பல அடுக்குகளாக இருக்கிறது.
India Income tax slabs 2016-2017 for General tax payers
Income tax slab (in Rs.)
Tax
0 to 2,50,000
No tax
2,50,001 to 5,00,000
10%
5,00,001 to 10,00,000
20%
Above 10,00,000
30%
உலகின் மிக முக்கிய நாடுகளின் வருமான வரி, இது போன்ற அடுக்குகள் நிறைந்தவை தாம். அமெரிக்காவும் 10-39 சதம் வரையான அடுக்கைக் கொண்டது.
இந்த அடுக்கின் பின்னுள்ள வாதம் – அதிக வருமானம் உள்ள மனிதர்கள், அரசுக்கு அதிகமாகப் பங்கைச் செலுத்த வேண்டும் என்பதே. லைசென்ஸ் பர்மிட் ராஜ்ஜியத்தில், இது முட்டாளதனமாக 90% வரை இருந்தது. ஆனால், 80 களுக்குப் பிறகு, இவை படிப்படையாகக் குறைக்கப்பட்டு, இப்போது 30% ஆக இருக்கிறது.
இந்த 12% என்பது, இப்போது, இந்தியர்கள் சராசரியாகச் செலுத்தும் வருமான வரி. இதை எல்லோருக்குமான ஒரு அளவாக்கும் போது. அதிகச் செல்வம் சேர்க்கும் மனிதர்களுக்கு, கறுப்புப் பணம் சேர்க்கும் ஆசை குறைந்து, வரி செலுத்தும் விகிதமும், எண்ணிக்கையும் அதிகமாகும் என்கிறார்.
இத்திட்டத்துக்கு இன்னொரு புறமும் உள்ளது. அதாவது வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் இல்லாதவர்களுக்கு, அரசு வழங்கும் மானியம். அதாவது 2.5 லட்சம் வரை வருமானத்துக்கு மேல் உள்ளவர்கள் தாம் வருமான வரிகட்டுவார்கள் என்றால், அதற்குக் கீழுள்ளவர்களுக்கு மானியம். பல்லாவின் யோசனைப்படி, வருமானமே இல்லாதவருக்கு, அரசு வருடம் 30000 ரூபாய் வழங்கும். அதிலிருந்து படிப்படியாக வருமானம் உயர உயர, மானியம் குறையும். வருடம் 2.5 லட்சம் வருமானம் உள்ளவருக்கு எந்த மானியமும் வராது.
இந்த மானியம், அரசின் கஜானாவில் இருந்து வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த யோசனை நிறைவேறினால், பொது விநியோக முறை, ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்கள் போன்ற திட்டங்கள் நிறுத்தப்படும். அவற்றில் உள்ள ஊழல்களும் இருக்காது என்கிறார்.
இந்த யோசனை, 40 களில் இங்கிலாந்து அரசியல்வாதி ஒருவரால் முன்வைக்கப்பட்டு, பின்பு 50 களில் மில்டன் ஃப்ரீட்மேன் என்னும் அமெரிக்க சுதந்திரச் சந்தை பொருளாதார நிபுணரால் ஒரு கொள்கையாக முன்வைக்கப்பட்டது.
இதில், ஒரே வருமான வரி என்பது 30-35 நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. ரஷ்யா / கஜக்கிஸ்தான் / ரோமானியா / பல்கேரியா / பொலீவியா என்பவை இதில் முக்கிய நாடுகள். எந்த முன்னேறிய நாட்டிலும் இது போன்ற ஒரு வரிவிதிப்பு இல்லை – ரஷ்யா தவிர.
இதில் சில நேர்மறை அம்சங்கள் இருக்கின்றன.
மிகக் குறைந்த வருமான வரி என்பதால் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். வழக்கமாகக் கட்டுபவர்களும், தமது வருமானத்தைச் சரியாக கணக்குக் காண்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏன் 12% வரி என்றால், அதுதான், 2013-14 ஆம் ஆண்டு இந்தியர்கள் சராசரியாகச் செலுத்திய வரி என்கிறது கட்டுரை.
வெளிநாடுகளில் கொண்டு சென்று பதுக்கப்படும் பணத்தின் அளவு குறையும்.
தற்போதுள்ள பொது விநியோக முறையில் உள்ள ஊழல் அளவு குறையும்.
சில எதிர்மறை அம்சங்களும் உள்ளன.
இன்றையப் பொது விநியோக முறை, அரசின் உணவு தானியக் கொள்முதலோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது தொடருமா எனத் தெரியவில்லை. தொடரவில்லையெனில், அரசு உணவு தானியங்களின் மிகப் பெரும் கொள்முதலாளி. இது நிறுத்தப்பட்டால், தானிய உற்பத்திக் காலங்களில் பெருமளவில் விலை வீழ்ச்சி ஏற்படும். கிட்டத்தட்ட 30-40% உணவு தானிய உற்பத்தி அரசால் கொள்முதல் செய்யப்படுகின்றது.
நிறுவன ஊழியர்களின் ஊதியத்துக்கு வரி விதித்தல் எளிது. தொழில் செய்வோரின் வருமானத்தை எவ்வாறு கணக்கிடப் போகிறார்கள். இது பெரும் பிரச்சினை. பட்டயக் கணக்காளர்களின் துணை கொண்டு நஷ்டக் கணக்கு எழுதுவது மிக எளிது. இதற்கான வரி விதிப்பு வழி ஒன்று தேவை.
மிக நிச்சயமாக பொது விநியோக முறையை நிறுத்தி விட்டு, நேரடியாகப் பண மாநியம் வழங்குவது, பின் தங்கிய மாநிலங்களில் உள்ள ஏழை மக்களுக்கு எவ்வாறு சாத்தியம் எனத் தெரியவில்லை. வங்கிகள் அதிகமில்லாத மாநிலங்களில், இது பெரிதும் பாதிப்பை உருவாக்கும்.
2.5 லட்சம் வருமானத்திற்குக் குறைவானவர்களின் வருமானத்தைக் கணக்கிடும் முறை சரியாக இருக்க வேண்டும்
இந்தத் திட்டம் முன்னோக்கிய திட்டமாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அரசு முன்கூட்டி யோசித்து, மாற்றுத் தரப்பினரையும் அழைத்துப் பேசி, மாநில அரசுகளோடும் உறவாடி மட்டுமே செயல்படுத்த முடியும். செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், பணப்பரிமாற்றத்தை விட அதிகப் பிரச்சினைகளை உருவாக்கும்.
எனக்குத் தோன்றுவது இது:
முதல் ஆண்டில், வருமான வரி வரம்பை 12% ஆக மாற்றலாம்.
நேரடி மானியத் திட்டத்தை, சோதனை முறையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மிக முன்னேறிய, மிகவும் பின் தங்கிய பகுதிகளில், ஒரு மாவட்டம் முழுதும் அமுல் படுத்தலாம். இதில் உள்ள பிரச்சினைகளைக் களைந்து, அடுத்த ஆண்டு நாடெங்கிலும் அறிமுகப்படுத்தலாம்.
அரசு தானியக் கொள்முதல் திட்டத்தைக் கைவிடாமல், உற்பத்திக் காலங்களில், கொள்முதல் செய்யவோ அல்லது நல்ல விலை கொடுக்கவோ ஒரு புதிய திட்டம் வகுக்க வேண்டும் – இது நிறுத்தப்பட்டால், அது பெரும் நாசத்தில் போய் முடியும்.
வியாபாரம் செய்பவர்களின் வருமான வரியை நிர்ணயிக்க புதிய வழிகள் கொண்டு வரப்பட வேண்டும். இன்று, நிறுவனப்படுத்தப்பட்ட பெரும் நிறுவனங்கள் / ஊழியர்கள் எவரும் வரி ஏய்ப்பதில்லை, ஆனால், சிறு / மத்திய அளவிலான வியாபாரிகள் மிகப் பெரும் ஏய்ப்பாளர்கள்.
சுருங்கச் சொல்வதானால், பணப் பரிமாற்றத் திட்டம் போல், இங்கே அதிரடி தேவையில்லை. தகுந்த சோதனைகள் செய்து, பிழைகளைக் களைந்து முன் செல்லலாம். அதேபோல், கொள்கை அருமை. இதன் வெற்றி, அதை நிறைவேற்றுவதில் தான் இருக்கிறது.
ஒரு வேளை 12% வரி விதிப்பின் குறிக்கோள்கள் எட்டப்படவில்லையெனிலும், பெரிதாக நஷ்டம் ஏற்படாது.
இந்தக் கொள்கை, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அது வரி வசூலிப்பில், ஊழல் குறைப்பில் மிக முக்கியமான அத்தியாயமாக இருக்கும்
பாலா
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சம்ஸ்காரா- நவீன்
சம்ஸ்காரா திரைப்படத்தில் பிராணேஸாச்சாரியராக கிரீஷ் கர்நாட்
ஜெ, தத்துவங்களைப் பேசும் நாவல்கள் சட்டென ஒரு மனச்சோர்வை தருகின்றன. அதற்கு முதல் காரணம் நம்முன் இருப்பவர்களை சட்டென மன்னிக்க வைப்பதாக இருக்கலாம். அல்லது இவ்வளவு பெரிய வாழ்வின் யார் இவர்கள் என்ற அலட்சியமாக இருக்கலாம். தெரியவில்லை. ‘சம்ஸ்காரா’ நாவலில் பிராணேசாச்சாரியாருடன் சட்டென சந்திரியுடன் கூடல் நடக்கிறது. முன்பின் திட்டமிடாத கூடல். வாழ்க்கை அவ்வாறானதுதான் என தோன்றும் நிமிடம் பதற்றம் அதிகரிக்கிறது. இந்த தற்செயலை வாழ்வின் அனைத்துடனும் பொருத்திப்பார்க்கும்போது ஒரு பயமும் அனைத்திலிருந்துமான விடுபடலும் தோன்றுகிறது. எல்லாமும் சாத்தியமாகியிருக்கின்ற வாழ்வு இது. சமஸ்காரா குறித்து எழுதிப்பார்த்தேன். எனக்குள் நான் நடத்திப்பார்க்கும் உரையாடல்தான். உங்கள் வாசிப்புக்கு.
நவீன் மலேசியா
நவீன் எழுதிய கட்டுரை
அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா, நான் எழுதிய கட்டுரை.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
January 16, 2017
வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
இந்த வருடத்தின் முதல் வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக திரு. அருட் செல்வப் பேரரசன் கலந்து கொள்ளவிருக்கிறார்.
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
நேரம்:- வரும் ஞாயிறு (22/01/17) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை
இடம்:
SOUNDAR.G
Satyananda Yoga -Chennai
11/15, south perumal Koil 1st Street
Vadapalani – Chennai- 26
9952965505
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வானதி- அஞ்சலிகள்
அன்புடன் ஆசிரியருக்கு
மீண்டும் வெய்யோன் படித்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட வெய்யோன் நிறைவுற்ற போது தான் வானவன் மாதவி இயலிசை வல்லபி ஆகியோரைப் பற்றி தளத்தில் ஒரு பதிவினைப் பார்த்தேன். அமைதியின்மையையும் உத்வேகத்தையும் அளிப்பதாக இருந்தது அவர்களின் பணி. சில நாட்களுக்கு முன் வெய்யோன் குறித்து பிரபுவிடம் உரையாடிய போது பேச்சு இயல்பாகவே அந்த சகோதரிகளை நோக்கிச் சென்றது.
நேற்று முன்தினம் மூத்த சகோதரியின் இறப்பு குறித்த செய்தி மிக மிகத் தனிமையான ஒரு துயரை அளித்தது. பகிர்ந்து கொள்ள முடியாத துயர். ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்கும் வலியுடன் வாழ்வதே என்னால் எண்ணிப் பார்க்க முடியாததாக இருக்கிறது. அதையும் ஏற்றுக்கொண்டு பெருஞ்செயல் புரிந்திருக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் இன்று இல்லையென்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் என் மூத்த சகோதரியின் வயதுகூட இன்னும் ஆகாதவரின் ஒருவரின் மரணத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
அஞ்சலி போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் இதற்குத் தான் போல. அவருக்கு என் அஞ்சலி.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். வானதி அவர்களுடைய மறைவுச்செய்தியைப் படித்து சில கணங்கள் பேச்சற்று அமர்ந்துவிட்டேன். மனம் தளராமல் நம்பிக்கையுடன் போராடி வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் வானதியைப் போன்றவர்களை கிரியா ஊக்கிகளாகவும் வழிகாட்டும் விண்மீன்களாகவும் எண்ணுகிறவன் நான். மற்றவர்கள் வாழ்வில் நம்பிக்கையை விதைப்பது மாபெரும் செயல். அவ்வழியில் ஊறிப் பெருகும் ஆற்றலே இந்தப் பாதையைக் கடந்துசெல்லும் விசையை எனக்குள் நிறைக்கிறது. அவர் மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது.
அன்புடன்
பாவண்ணன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மேடையில் நான்
ஒருவழியாக திருக்குறள் உரைத்தொடர் முடிந்தது. கடைசிவரியைச் சொல்லிவிட்டு மேடைவிட்டு இறங்கியதும் எழுந்தது மிகப்பெரிய ஆறுதல், விடுதலை உணர்ச்சி. எனக்கு எப்போதுமே மேடைக்கலைஞர்கள் மேல் பெரிய வியப்பும் கொஞ்சம் பொறாமையும் உண்டு. மேடைமேல் எழுந்து நின்று அங்கேயே தன்னை மறந்து வெளிப்படுவதென்பது ஓர் அருள். எழுதும்போது மட்டுமே நான் அதை உணர்கிறேன். நல்ல மேடைப்பேச்சாளர்கள், நடிகர்கள், பாடகர்க ள் மேடையாலேயே தூண்டப்படுகிறார்கள். மேடையிலேயே ஆளுமைமுழுமை கொள்கிறார்கள்
என் மூன்று உரைகளையுமே அற்புதமானவை, ஆழமானவை, செறிவானவை, கவித்துவமனாவை என பொங்கிப்பொங்கிப் பாராட்டினர். ஆனால் நான் உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்ததை, என் ஆழம் பதைத்துக்கொண்டிருந்ததை நான் மட்டிலுமே அறிவேன். இந்த உரைகளுக்காக நீண்ட கட்டுரைகளைப்போல குறிப்புகளை எழுதி பலமுறை அவற்றை உளப்பாடம் செய்தபின்னரே மேடையேறினேன். ஆனாலும் நடுக்கம் இருந்துகொண்டிருந்தது
இரு சிக்கல்களை நான் காண்கிறேன். ஒன்று தேர்ந்த மேடைவிற்பன்னர்கள் சிறந்த குரல்வளம் கொண்டவர்கள். உச்சரிப்பை பட்டைதீட்டி வைத்திருப்பார்கள். ஆகவே தெள்ளத்தெளிவாகப் பேசுகிறார்கள். என் குரல் கம்மியது. உச்சரிப்பு எப்போதுமே மெல்லிய குளறுபடிகள் கொண்டது. அதை பயின்று மேம்படுத்தல் என்னால் ஆகாதது. இரண்டாவதாக மேடைப்பேச்சாளர்கள் ஒரே பேச்சை பலமுறை நிகழ்த்துகிறார்கள். சில உரைகளை நூறுமுறைகூட அவர்கள் அப்படியே திரும்பப்பேசிவிடுகிறார்கள். ஆகவே அவை தங்குதடையின்றி வெளிப்படுகின்றன. நான் எல்லா பேச்சையும் முற்றிலும் புதியதாகவே நிகழ்த்துகிறேன். அந்த மேடையில் சிந்தனை நிகழ்ந்தாகவேண்டும். சமயங்களில் நிகழாமலும் போகக்கூடும் என்னும் இடர் உண்டு. அதோடு இத்தனை எழுதியபின் நான் பேச எழுவதனால் புதியதாக எதையாவது சொல்லியாகவேண்டும். திரும்பச் சொல்லி சலிப்பூட்டக்கூடாது.
நான் பேசும்போது என்னென்னவோ நிகழ்கின்றன. முதல் விஷயம் மறதி. நான் என் மூச்சின் பகுதியென்றே கொண்டிருக்கும் செய்யுட்கள் கூட மறந்து போய் உள்ளம் ஒழிந்து கிடக்கும். அந்த திகைப்பு எழுந்து நடுங்கிவிட்டேன் என்றால் அடுத்தடுத்து ஒன்றுமே நினைவில் எழாது. மிகமிகச் எளிய சொற்கள் மேடையில் நிற்கையில் நினைவிலிருந்து அகன்றுவிடுகின்றன. இன்னொரு சிக்கல், ஒரு கருத்தைச் சொன்னதும் அதிலிருந்து முற்றிலும் தொடர்பற்ற ஒரு உளத்தாவல் நிகழ்கிறது. அதை அடக்கி உரைக்கு மீண்டும் வரவேண்டியிருக்கிறது. மேடையில் சிந்தனையும் சேர்ந்தே நிகழ்ந்தால் உரை சிதறிவிடுகிறது
கடைசியாக ஒன்றுண்டு. அது நினைவுமாற்றம். ‘உறங்குவதுபோலும் சாக்காடு’ என்னும் குறளை ‘துஞ்சுவதுபோலும் சாக்காடு’ என நினைவு ஏனோ பதிந்து வைத்துள்ளது. சில பெயர்களை நினைவு வேறுவகையில் சேர்த்திருக்கிறது. அதை எத்தனை பயிற்றுவித்தாலும் மேடையில் தன்னிச்சையாக நாவில் அதுதான் எழும்.
ஆகவே ஒவ்வொரு உரையையும் பெரும் பதற்றத்துடன் எதிர்கொள்கிறேன். பலமுறை தயாரித்துக்கொள்கிறேன். உரைக்கு தெளிவான திட்டம்- கட்டமைபு ஒன்றை முன்னரே உருவாக்கிக் கொள்கிறேன். ஒருவகை மன்னிப்புகோரலுடன் மட்டுமே பேசத் தொடங்குகிறேன். என் பேச்சைக் கேட்பவர்கள் என் வாசகர்கள்தான் என்பதனால் பெரும்பாலும் சிக்கலில்லாமல் கடந்துசெல்கிறேன்
ஆனால் ஒன்றுண்டு, இன்றுவரை வெறுமே அரங்கை மகிழ்விக்கும் உரை என ஒன்றை ஆற்றியதில்லை. மேடைநேரத்தை வீணடித்ததில்லை. என் உரைகள் அனேகமாக அனைத்துமே அச்சேறியிருக்கின்றன. பதிவாகியிருக்கின்றன. என் முன் அரங்குக்கு வந்தமர்ந்தவர்களிடம் எப்போதுமே அவர்கள் அறியாத சிலவற்றை முன்வைத்திருக்கிறேன். அந்தவகையில் என்னை நானே ‘பரவாயில்லை, நீயும் ஒரு பேச்சாளன்தான்’ என பாராட்டிக்கொள்கிறேன்
சவுண்ட் கிளவுடில் என் உரைகள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மிருகவதை என்னும் போலித்தனம்
அன்பு ஜெ ,
கொஞ்சம் ஜல்லிகட்டை ஒரு புறம் ஒதுக்கி விட்டு சிறிது நேரம் மிருகவதை என்பது தற்காலத்தில் உலகம் முழுதும் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகிறது எப்படி புரிந்து கொள்ளப் படுகிறது என்று பார்த்தால் சிவாரசியமாக இருக்கும்.
மிக முன்னேறிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் , திமிங்கலங்களை வேட்டையாடும் விஷயத்தில் உலக நாடுகள் அனைத்தையுமே பகைத்துக்கொண்டுள்ளது .அருகிவரும் உயிரின,மான திமிங்கலத்தை ஜப்பான் “அறிவியல் ஆராய்ச்சி” என்ற போர்வையில் நூற்றுக்கணக்காக கொன்று குவித்து வருகிறது . ஜப்பானியர்களுக்கு மீன் உணவில் மிக இன்றியமையாத விஷயம் என்று தெரியும் அவரிகளின் per capita consumption உம் அதிகம் .ஜப்பான் திமிங்கல வேட்டை தங்கள் பாரம்பரியம் , திமிங்கல இறைச்சி எங்கள் உணவின் இன்றியமையாத பகுதி , அது எங்கள் உரிமை என்ற ரேஞ்சுக்கு பேசுகிறது.
சீனா சுறாதுடுப்பு (Shark fin) சூப்புக்கு பெயர் போனது , இந்த துடுப்புகளை அறுவடை செய்யும் முறை மிகக் கொடுமையானது , நடுக்கடலில் சுறாக்கள் பிடிக்கப்பட்டு கப்பலிலேயே அவற்றின் துடுப்புகளை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு ,வெட்டப்பட்ட சுறாக்களை அப்படியே கடலில் தள்ளிவிட்டுவிடுவார்கள். சுறா துடுப்புகளை சீன சந்தைகளில் கருவாட்டு போல குவியல் குவியலாக கொட்டி வைத்திருப்பார்கள் , அவை ஒரு aphrodisiac என்று கருதப்படுவதால் அதற்கு நல்ல டிமாண்ட். கொரியாவிலும் வியட்நாமிலும் இறைச்சிக்காகவே நாய் பண்ணைகள் இருந்தாலும் தெரு நாய்கள் மிக குரூரமாக வேட்டையாடைப்படுவது இன்று வரை தொடர்கிறது.அப்படி ஒரு நாய்ப்பண்ணை வைத்திருக்கும் ஒரு பெண்மணி ஒரு பேட்டி ஒன்றில் தான் செல்ல நாய் பற்றி மிகப் பிரியமாக பேசுகிறாள் , இந்த முரணை பேட்டி எடுத்த மேற்கத்தைய BBC பெண் நிருபரால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை .
ஆசியாவின் அமெரிக்காவாக வலம்வரும் ஆஸ்திரேலியா ஜப்பான் திமிங்கலங்களை வேட்டையாடுவதை மிகக் கடுமையாக எதிர்க்கிறது , சர்வதேச நீதிமன்றம் எல்லாம் போய் சண்டை கூட போட்டு வந்தது ஆனால் ஆஸ்திரேலியாவில் Grey Hound racing எனும் வேட்டை நாய் பந்தயத்தில் நடக்கும் பல்வேறு குரூரங்களை கண்டும் காணாமல் இருந்து வந்து போன வருடம் தான் தடை செய்தது. வருடம் ஒன்றிற்கு 5000/6000 நாய்கள் பந்தயத்திற்கு உகந்தவை அல்ல என்றோ அல்லது காயம் பட்டவை என்ற காரணத்தினாலேயோ கொல்லப்பட்டு வந்தன . மேலும் அவற்றை பழக்கும் பொருட்டு live baiting என்ற “உயிருள்ள பொறிகளாக“ முயல் குட்டிகளையும் பயன்படுத்த் வந்தனர் . இந்த தடை மூணு மாதமோ என்னவோ தான் நீடித்தது , லாபிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் , தன் அரசே ஆட்டம் காணலாம் என்ற நிலைக்கு வந்த நியூ சவ்த் வேல்ஸ் பிரிமியர் அபவுட் டர்ன் அடித்து தடையை திரும்ப வாங்கிக்கொண்டார் .
உலகிலேயே மிக அதிகமாக கால்நடைகளை (live cattle trade ) ஏற்றுமதி செய்யும் நாடு ஆஸ்திரேலியா . செளதிக்கு மட்டும் வருடம் ஒன்றிற்கு 10 லட்சம் செம்மரி ஆடுகள் ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தன , அதே போல இந்தோனேஷியாவிற்கும்.இதெல்லாம் 2012 ல் ஒரு முடிவுக்கு வந்தது – இவ்விதம் ஏற்றுமதிசெய்யப்படும் ஆடுமாடுகள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்படும் ஒளிப்படங்கள் இணையத்தில் கசிந்தன.இது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியையும் சினத்தையும் உண்டாக்க அரசு உடனே மிருகங்களை உயிரோடு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது .கால்நடை விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள் , உயிரோடு ஏற்றுமதி செய்யப்படும் ஆடுகளுக்கு இருக்கும் வரவேற்பு குளிரூட்டப்பட்டு இறைச்சியாக விற்கப்படுகையில் கிடைக்கவில்லை.இப்போது கால்நடை வளர்ப்போர் சார்பாகவும் , விவசாயிகள் சார்பாகவும் இந்த தடையை நீக்கக் கோரி மீண்டும் வலுவான கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன .
ஜரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒப்பு நோக்க செல்லப்பிராணிகளை மிக காருண்யத்துடனே நடத்தப்படுகின்றன ஆனால் இது வேறுவகை சிக்கல்களை கொண்டுவருகிறது.ஒரு ஆர்வத்தில் பிரியப்பட்டு செல்லப்பிராணிகளை விளையாட்டு சாதனங்களாக பாவித்து அவற்றை வாங்கி, பின் அவற்றிற்கு உணவு , பராமரிப்பு , மருத்துவச்செலவு என்று சமாளிக்க முடியாமல் அவற்றை பிராணிகள் காப்பகத்தில் மீண்டும் விடும் போக்கு அதிகரித்துள்ளது.அமெரிக்காவில் இப்படி திரும்ப விடப்படும் பிராணிகள் எண்ணிகை மட்டும் 50 லட்சம் இதில் கிட்டத்தை 60%-70% வேறு யாரும் தத்தெடுக்க முன்வராததாலோ கருணைக்கொலை செய்யப்படுபவை .அதாவது நல்ல உடல்நலத்துடன் இருந்தும் பர்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் கொல்லப்படுபவை.இதன் இன்னொரு முகமாக exotic pets மீதான மோகம் அதிகரித்துள்ளது , எல்லோரும் ஒரே வகையான நாயகளை வைத்திருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது .Designer dogs எனப்படும் இயற்கையில் இல்லாத இனஙகளை குறிப்பிட்ட தோற்றத்தை உருவாக்கும் பொருட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டு உருவாகும் கலப்பினங்கள் ஏதாவது ஒரு மரபணு குறையுடனே வாழவேண்டியிருக்கும் .
இன்னும் நூதனமான செல்ல பிராணி வேண்டுமென்று சாதாரணமாக காட்டில் மட்டுமே இருக்கும் , வீட்டில் வளர்க்க தடைசெய்யப்பட்ட மிருகங்களையும் , அழியும் அபாயமுள்ள மிருகங்களையும் வளர்ப்பது ஒரு மோஸ்தராகி வருகிற்து .ஆப்பிரிக்காவிலிருந்தும் ஆசியாவிலிருந்தும் இவ்வகை மிருகங்களை சட்டவிரோதமாக கடத்தி விற்கும் பெரும் மாஃப்பியாக்கள் செயல்பட்டு வருகின்றன . ஆமைகள் , பல்வேறு குரங்குகள் , பாம்புகள் , தவளைகள் என்று இவற்றில் ஒரு பெரும் சதவிகிதம் இப்படி சட்டவிரோதமாக கடத்தப்படுகையில் அவை பாதிவழியியிலேயே இறப்பதும் சர்வசாதாரணம் .
கனவான்களின் கனவானாக பார்க்கபடும் இங்கிலாந்தில் கூட நரி வேட்டை 2005 வரை சட்டப்பூர்வமாகத்தான் இருந்தது . இப்போது தடை செய்யபட்டதிருந்தாலும் அந்த வழக்கம் இன்னும் நின்று போகவில்லை இன்னும் 50000 மேலானோர் வருடா வருடம் இந்த வேட்டையில் கலந்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.சரி பிரான்சில் கொஞ்சம் எட்டிப் பார்ப்போம் .”foie gras” (போய் க்ரா) எனப்படும் delicacy ஜரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்சில் ரொம்ப பிரபலம் .அது தயாரிக்கப்படும் முறை இதுதான் , வாத்துக்களில் வாயில் நம் ரேஷன் கடையில் மண்ணென்னைய் ஊற்றும் புனல் போன்ற ஒன்றை பொருத்தி அதன்மூலம் அவற்றிற்கு கட்டாய உணவூட்டுவது .இப்படி கட்டாயமாக , தேவைக்கு மிக அதிகமாக ஊட்டப்படும் உணவு அவற்றின் ஈரலை இயற்கையாக இருப்பதை விட 10 மடங்கு வரை பெரிதாக்கும் இப்படி குரூரமாக கொழுப்பேற்றப்பட்ட வாத்தின் ஈரல் தான் foie gras – மிகவும் சுவையானது.பிரான்சின் உள்நாட்டு அறுவடை மட்டுமே வருடம் ஒன்றிற்கு 20000 டன் அளவை தாண்டும் அப்படியானால் எவ்வளவு வாத்து ஈரல்கள் என்று ஒரு சின்ன சிகரெட் அட்டை கணக்குப் போட்டுக்கொள்ள்லாம் அது தவிர மேலும் 4000 டன் அளவு பல்கேரிய செக் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி வேறு செய்கிறது.
இந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலே கூட இதில் ஒவ்வொரு தரப்பின் நிலைபாட்டையும் கவனிப்பது சுவாரசியமாக இருக்கும் .பிரான்ஸ் இது – நம் பழனி பஞ்சாமிர்தம் போல – ஒரு டெலிகசி தனது உணவின் பண்பாட்டின் ஒரு பகுதி , இதை தடை செய்வது தனது ஆதார பண்பாட்டு , அடையாளத்தின் ஒரு பகுதியையே வெட்டுவதற்கு நிகரானது என்கிறது . பெல்ஜியம், இதற்கு இருக்கும் சந்தையை தெரிந்து கொண்டு பிரான்சிற்கு அடுத்து உலக அளவில் அதிகம் வாத்து ஈரல் உற்பத்தி செய்யும் நாடாக ஆகிவிட்டது ஆனால் அவர்கள் இதை பெரும்பாலும் உன்பதில்லை எல்லாமே பிரான்சிற்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள் . ஏனைய ஜரோப்பிய நாடுகள் foie gras உள்நாட்டில் அறுவடை செய்வதை தடை செய்துவிட்டன ஆனால் இறக்குமதிக்கு ஆட்சேபனை இல்லை . ஆஸ்திரெலியா foie gras உள்நாட்டு உற்பத்தியை முன்னமே தடை செய்துவிட்ட்து , இங்கு அதை சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் உலகப் போருக்குபின் இங்கு குடியேறிய ஜரோப்பியர்களிடையே மட்டுமே இருந்து வந்தது அவர்களுக்கு அடுத்த தலைமுறை பலர் இதை ஒறுத்தும் அதன் சுவையே அறியாமலும் வளைந்தவர்கள் எனவே இயல்பாகவே இறக்குமதி செய்து உண்பது வெகுவாக குறைந்து விட்டது .நாளை அரசு தடாலடியாக foie gras வை முற்றிலும் தடை செய்துவிடால் கூட பெரும் சலப்பு ஏதும் எழாது.
இதில் உள்ள மிருக வதை என்பது எளிய உண்மைதான் என்றாலும் அவரவர் தேவையும் சூழ்நிலையும் பொறுத்து அவர்களின் கோணம் ஒரு நிலைபாட்டுத் தரப்பின் (Spectrum ) அவரவருக்கு வசதியான , இயன்ற இடங்களில் நிலைகொள்வதை பார்க்கலாம்.இன்னும் ஒருபடி மேலே போய் இதை இன்னும் சுவாரசியமாக்க வேண்டுமானால் பிரான்சில் உள்ள NGO க்கள் யாருக்காவது நம் டாட்டா பிர்லா அம்பானிகளின் டிரஸ்ட் மூலமாக நிதியளித்து மிருகவதையை தடுக்க கோரி பிரெஞ்சு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பார்க்கலாம் :)
உணவுக்காகவும் , உடலுழைப்பிறகாகவும் , கேளிக்கைக்காவும் , செல்ல பிராணிகளாகவும் , பண்பாட்டு செயல்பாட்டின் பகுதியாகவும் மிருகங்ளுடனான நம் தொடர்பு அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது .உடலுழைப்பு , வேட்டையாடுவதல் போன்றவை இயல்பாக அருகிவந்தாலும் மற்ற காரணிகள் அதிகரித்தபடியே தான் இருக்கும் . உலகெங்கிலும் மிக வேகமாக வளர்ந்துவரும் மத்தியவர்க்கம் உணவிற்கு மற்றும் செல்லப்பிராணியாக வளர்க்கவும் மேலும் மேலும் மிருகங்களை இன்றியமையாதாகவே ஆக்கும் . வளரும் முதலாளித்துவ நடுத்தரவர்க்கத்தின் கூட்டு விளைவான தேசிய பெருமிதங்களும் , cultural revival & patrimony உம் அது அளிக்கும் பண்பாட்டு அடையாளங்களும் இவ்வகை தடைகளின் பின் உள்ள wisdom என்ன என்று கேள்வி எழுப்பிக்கொண்டே தான் இருக்கும்.
மேற்சொன்ன உதாரணங்களை நான் முன்வைத்தது அங்கெல்லாம் மிருக வதை நடக்கிறது அதனால் நாம் செய்வதில் பிழை ஒன்றும் இல்லை என்று வாதிட அல்ல . உலகெங்கிலும் மிருகங்களுக்கும் மனிதரிகளுக்குமான காலங்காலமா உறவும், அந்த உறவின் தன்மையில் உருவாகிவந்த தவிர்க்கவியலா அங்கமான குரூரங்களும் அளிக்கும் பின்புலத்தின் ,அந்த spectrum ல் ஜல்லிக்கட்டு எங்கு பெருந்துகிறது என்று நாம் உணர்ந்துகொள்ளும் பொருட்டே . இந்த context ஏ இங்கு மிக முக்கியமாகிறது.
ஜல்லிக்கட்டிற்கு நிகரான விஷயங்கள் உலகெங்கும் நடக்கின்றன – அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நடக்கும் rodeo க்களோ அல்லது போட்டி இறுதியில் காளைகளை குத்திக் கொல்லும் ஸ்பானிஷ் bull fight போன்றவையோ ஜல்லிக்கட்டை விட மூர்க்கமான விளையாட்டுகள் அங்கும் இது போன்றே பிராணி நல ஆர்வலர்கள் வெகு நாடகளாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் .ஆனால் பல கட்டுப்பாடுகளூடனும் பாதுகாப்பு வழமுறைகளை பின்பற்றியும் அவை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன ,குறிப்பாக ரோடியோக்கள். இவற்றோடு ஒப்பிட்டால் ஜல்லிக்கட்டு ஒரு low impact sports தான் . இதையும் இதன் கலாச்சார பின்புலத்தையும் முக்கியத்துவத்தையும் வைத்து பார்க்கும் போது இதை தடைசெய்ய வலுவான காரணங்கள் இல்லை என்று தான் தோன்றுகிறது.
ஜல்லிக்கட்டை நெறிப்படுத்தும் விதமாக நாமும் நம் சூழ்நிலைகளுக்கு தேவையான ,ஒத்துவரும் கட்டுபாடுகளை விதிக்கலாம். ஜல்லிக்கட்டு ந்டக்கும் இடத்திலேயே தேவையான மருத்துவ வசதிகள் , பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் ,அணிந்துகொள்ள பாதுகாப்பு கவசங்கள் ,பங்கேற்பாளர்களுக்கு வயது வரம்புகள் , காளைகளுக்கு சரியான மருத்துவ பரிசோதனைகள் / வசதிகள்.public liablity insurance போன்று யோசிக்கலாம்.நம் எடுத்த தலைமுறை நம்மிலும் விழிப்புணர்வுடன் தான் வருவார்கள் , ஜல்லிக்கட்டும் கால்த்திற்கேற்ப தன்னை இயல்பாக உருமாற்றிக்கொண்டு இருக்க முடியும் என்றே சொல்வேன்.
சமீபத்தில் சீனா யானை தந்தங்களை விற்க தடை விதித்துள்ளது , இது போன்ற விஷயங்களில் தடை செய்வது என்னும் அணுகுமுறை சரியாக இருக்கும் ஆனால் ஜல்லிக்கட்டு போன்றவற்றிற்கு அல்ல .
நீங்கள் சொன்னது போல இந்திய நீதி அமைப்பு சட்டங்கள் இயற்றுவதிலும் தீர்ப்புகள் வழங்குவதிலும் மிகவும் முற்போக்கானவை ஆனால் அவற்றை செயல்படுத்த வேண்டிகையில் நாம் மந்தமானவர்கள் .மனிதக் கழிவுகளை மனிதர்கள் கொண்டே எடுப்பதை தடை செய்யும் சட்டம் வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் பக்கம் ஆகிவிட்டது ஆனால் இன்னும் சாக்கடை தூர்வாருகையில் இறப்போர் எண்ணிக்கையில் தமிழகம் தான் முன்ன்ணியில் உள்ளது.அப்படி இறந்தவர்களுக்கும் அவர்களுக்கு முறையாக சட்டப்படி கிடைக்க வேண்டிய தொகை கூட முழுதும் கிடைப்பதில்லை . ஜல்லிக்கட்டை தடைசெய்ய அயராது பாடுபடுபவர்கள் இந்த வழக்கத்தையும் நிதர்சனத்தில் தடை செய்ய போராடினால் புண்ணியமாகப் போகும்
அன்புடன்
கார்த்திக்
சிட்னி
https://img.rt.com/files/2016.07/orig...
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெண்கடல் – விமர்சனங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களது ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பினை சில நாட்கள் முன்புதான் படித்து முடித்தேன். ‘கைதிகள்’ அப்பு போலீசால் கொன்று புதைக்கப்படுவது ஒருவித பதைபதைப்பை ஏற்படுத்தியது அதே சமயம், சாகும் போதும் அவனது சிரிப்பும் நடத்தையும், உறுதியும், போலீஸ் தரப்பிற்கு எந்த வகையிலும் குறைவில்லாத கொடூரம் அவனது இயக்கத்தின் தரப்பிலும் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. மரணத்தை சிரிப்புடன் ஏற்க ஒன்று ஞானியாக இருக்க வேண்டும் அல்லது ஆழமான கொள்கை வெறியனாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. வெல்லப்பாகில் தள்ளிக் கொல்லப்பட்ட எளிய அந்த பெண்ணிடம் மனம் பரிவு கொள்கிறது. அந்த நாயுடு கொல்லப்பட்டிருக்க வேண்டும். ‘அம்மையப்பம்’ – எந்த கலைஞன் ஆனாலும் அவனுக்குரிய இடம் கிடைக்காவிட்டால், புரிந்தவர்களின் பரிதாபத்திற்கும் புரியாதவர்களின் கேலிக்கும் உரித்தாகிறான் என்று தோன்றியது. ‘வெண்கடல்’ – தாய்மை உணர்வு. ‘வெறும் முள்’ – ஏசுவை கிழக்கத்திய கண்ணோட்டத்தில் விரிவாக வரலாற்றுப் புனைவாக தரும் எண்ணம் உண்டா? – இதை சொல்லும் போது இன்னொரு எண்ணம் – இந்து கோயில் போலவே கோபுரங்களுடன் கட்டப்பட்ட ஒரு கிறிஸ்தவ கோயிலின் புகைப்படத்தை முகநூலில் சில நாட்கள் முன்பு பார்த்தேன். கோபுரத்தில் ஏசுவின் பொம்மை இருக்கிறது. சிரிப்பாக இருந்தது, பாடுபட்டு இந்துக்களை கிறிஸ்தவர்களாக கன்வெர்ட் செய்துவிட்டு பிறகு தங்கள் கடவுள் ஏசுவை இந்துவாக கன்வெர்ட் செய்து மொத்தமாக இந்து சமயத்திற்குள் வந்து விடுவார்களோ என்று. எவ்வாறாயினும் ஏசுவின் வேர்கள் கீழைத் திசையின் ஆழங்களுள் தொடர்பற்றதாக இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்.
வழக்கம் போல் உங்கள் வலை. தினமும் எப்படியும் படிக்கவைத்து விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக – பின்னர் வேகமாக வருவேன்.
வாழ்க உமது ஓய்வறு எழுத்து!
இறைவன் ‘ஜெயத்தை’ உங்களுக்கும்,
உங்கள் எழுத்துக்களின் மீதான “மோகத்தை’ எனக்கும் தரட்டும்.
உங்கள் திருக்குறள் உரை கேட்க ஆவலுடன் எதிர்நோக்கும்,
அன்புள்ள,
விக்ரம்
ஜெயமோகனின் “வெண்கடல்”, வாழ்வின் வெளிச்சங்கள்
நவீன இலக்கிய உலகில் கடந்த ஆண்டு சில அதிர்வுகளை ஏற்படுத்திய “அறம்” சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு 2013–ஆம்-ஆண்டு வெளிவந்துள்ளது ஜெயமோகனின் “வெண்கடல்” சிறுகதைத் தொகுப்பு.
முன்னுரையில் ஜெயமோகனே குறிப்பிட்டிருப்பது போல இதில் உள்ள 11 சிறுகதைகளும் வெவ்வேறு தளத்திலியங்கும் பல்சுவைத் தன்மை கொண்டவை.
பொதுவாகவே ஜெயமோகனின் கதைகளில் உரையாடல்கள் நேர்த்தியாக இருக்கும். கதைகளுக்கேற்ப அவை ஆழமாகவும் இருக்கக் கூடும். “குருதி” சிறுகதையின் இறுதியில் சேத்துக்காட்டார் கூறும்”மனுசனா வாழணும்ல—-நாயா, பன்னியா வாழாதே; மனுஷனா வாழு—-மனுஷனா வாழுலே—-லே, மனுஷனா வாழுலே” எனும் சொற்கள் முகத்திலே அறைகின்றன என்றால் “நிலம்” கதையில் ‘உன்னைப் பார்த்தா கே.ஆர்.விஜயா மாதிரின்னு சொன்னாங்க; அவ என்ன உன்னைய மாதிரி உளுந்து நெறத்திலயா இருக்கா?” என்று அவன் முதலிரவில் கேட்டான். “ஆ, அவள பெயிண்ட் அடிக்கறதுக்கு முன்னாடி பாத்துட்டு வந்து கேளுங்க” என்றாள் அவள்” என்பவை மயிலிறகால் வருடுவதுபோல் இருக்கின்றன.
அதுபோலவே அவர் புதிய, புதிய மனத்திற்குள் பதியவேண்டிய உவமைகளை எழுவதையும் பார்க்கலாம். ”சூடான முயலை வெளியே எடுத்துக் கருகிய காதுகளையும் கால்களையும் பிய்த்து முறு முறுவென அப்பளம் வற்றல் தின்பது போலத்தின்று——————-”
”வேடத்துக்குள்ளிருந்து வெளிவரும் சதனம் ராமன் நாயர் பூவுக்குள்ளிருந்து வரும் வண்டுபோலத் தோன்றுவார்”
”அவர் எங்கோ நினைப்புக்கு அப்பாற்பட்ட புராண காலத்தில் இருந்து நழுவி நழுவி விழுந்து வந்துகொண்டே இருப்பார் பசுவைப் பிளந்து கன்று சலமும் நீருமாக வந்து தொழுவத்தில் கிடப்பது போல”
”விளக்கின் சுடர் சிறிய சங்குப் பூவின் இதழ்போல அசையாமல் நின்றது”
ஆனால் இத்தொகுப்பில் அதிகமான உவமைகள் இல்லை. பாத்திரங்கள் மற்றும் படைப்பாளன் கூற்றிலும், உரையாடல் மூலமாகவும் கதை நகர்ந்து செல்கிறது
தொகுப்பின் மிகச்சிறிய கதை ‘தீபம்’. தனக்கு நிச்சயமாகிவிட்ட முறைப்பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறான் முருகேசன். வீட்டில் மாமன் அத்தை யாரும் இல்லை. லட்சுமி மட்டும் இருட்டில் இருந்தே பழங்கால வழக்கப்படி வரவேற்று உரையாடி இருக்கச் சொல்கிறாள். இருட்டில் நின்றுகொண்டு இருக்கும் அவளிடம் “எப்ப வந்தாலும் இருட்டயில்ல பாத்துட்டுப் போறம்——-?” என்கிறான் முருகேசன்.
அவளோ “சாமியைக் கூட இருட்டிலதான் பாக்கிறீய’ என்கிறாள். இவனோ “சாமிய வெளக்கு கொளுத்திக் காட்டுறாங்களே” என்று பதில் கூறுகிறான்.
உடனே அவள் உள்ளேபோய் சாமி கும்பிடும் லட்சுமி விளக்கை ஏந்தி வருகிறாள். அதன் ஒளியில் அவள் முக அழகை முழுமையாகப் பார்க்கும் முருகேசன் “இனிமே எங்கயானாலும் ஒரு சாதாரண விளக்கே போதும்; உன் முகத்தை நானே பாத்துக்குவேன்” என்று கூறுவதுடன் கதை முடிகிறது
பெண்ணை மங்கள விளக்கென்றும் குடும்ப விளக்கென்றும் கூறும் மரபில்தான் இக்கதை எழுந்து நிற்கிறது. தீபம் அழகு; பெண்ணும் அழகு; அதுவும் இலட்சுமி விளக்கை எடுத்து வரும் லட்சுமியே அழகு. தீப ஒளியில் முழுமையாக மனத்தளவிலும் உணர்ந்து விடுகிறான் முருகேசன். பெண்களைப் பாடாய்ப்படுத்தும் இன்றைய உலகில் பெண்களைப் புனிதப்படுத்தும் இக்கதை இருவரின் உரையாடல்களிலேயே உலவுகிறது.
ஜெயமோகன் கதைகள் பெரும்பாலும் ஆற்றொழுக்காய்ச் சென்று தன்போக்கிலேயே இயற்கையாய் முடிவு பெறும். படித்து முடித்த வாசக மனத்தில் ஒரு தேடல், ஒரு முரண், ஒரு முடிச்சு அல்லது ஒரு கேள்வி ஏதாவது ஒன்று எழத்தான் செய்யும்.
டெல்லிக்கு பத்மஸ்ரீ விருது வாங்கச் சென்ற ஷண்முகனின் அப்பா அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்ட நிலையிலும் கதகளி ஆடும் சதனம் ராமன் நாயரின் காலில் விழுந்து “மன்னிக்க வேண்டும்; மன்னிக்க வேண்டும்” என்று கேட்பது ‘விருது’ கதையில் தெரிகிறது. காரணம் வாசகனை ஊகிக்க வைக்கிறது.
அதுபோலவே ‘கைதிகள்’ கதையில் காட்டில் ‘என்கவுன்ட்டர் செய்யப்படுவன் யாராக இருக்கும் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. ஜெயமோகன் கூறுவதுபோல அது ‘அறம்’ தொகுப்பில் சேர்க்க வேண்டிய உண்மைக் கதை. காலனின் தூதனாக அல்லது காலனாகவே தொடர்ந்து வரும் கருங்குருவி எல்லாம் முடிந்ததும் காணாமல் போகிறது. இருந்த ஒரு சாட்சியும் அதுதான். அதனால் என்ன பயன்? சங்க இலக்கியத்தில் “நானும் தலைவனும் சந்தித்தமைக்குச் சான்று அங்கிருந்த ஒரே ஒரு குருகுதான், அதுவும் சாட்சி சொல்ல வராது” என்று தலைவி கூறுவது நினைவுக்கு வருகிறது..
கதையின் இறுதியில் வரும் ‘பஞ்ச்’ வசனம் ஜெயமோகன் கதைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. சுடப்படுமுன் அந்த அயிட்டம் ‘இங்க வேலை ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்” என்று கேட்கிறான். அந்தத் தோழர் என்ற சொல் ஆயிரம் ஊகங்களுக்கு இடம் தருகிறது.
இதுபோலவே கிடா, வெண்கடல், நிலம் கதைகளிலும் பார்க்க முடிகிறது. ‘கிடா கதையில் தனக்கு முடிவு செய்யப்பட்ட ஜானகி தன் தம்பியை விரும்புவதை அறிகிறான் அண்ணன். இறுதியில் பெரியவர்களிடம் தம்பிக்கே அவளை நிச்சயம் செய்யச் சொல்கிறான்.
தம்பி தன்னை அவள் விரும்புவது “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்க “நமக்குப் பிடிச்சிருக்கிறவங்களுக்கு நம்ம மேலே பிரியமிருக்கான்னுதானே நாம பாப்பம்” என்று அண்ணன் கூறுவது இன்னும் ஒரு கதை இக்கதையில் மறைந்துள்ளதைக் காட்டுகிறது. இக்கதையில் கிடா, அதைவெட்டுவது, குடிப்பது எல்லாமே நம் கண் முன்னால் தெரிவது போல ஜெயமோகன் எழுத்து அமைந்துள்ளது.
’நிலம்’ கதையில் தனக்குக் குழந்தை இல்லாவிடினும் மனைவியை விட்டு விட்டு வேறு பெண்ணை மணம் முடிக்க மறுக்கிறான் சேவுகப்பெருமாள். ஆனால் அவன் நிலம், நிலம் என்று பல வழிகளில் சேர்த்துக் கொண்டே இருக்கிறான். அவன் மனைவி ராமலட்சுமி “பிள்ளையில்லாமே எதுக்கு சாமி இந்த மண்ணாசை?” என்று கோயிலில் படுத்திருக்கும் பண்டாரத்திடம் கேட்கிறாள். பண்டாரமோ “பிள்ளை இல்லாததனாலதான்———-” என்று கூறிச் சிரிக்கிறார்.
உலகில் ஆசை இல்லாதவர் யாரும் இல்லை. ஓரிடத்தில் ஆசை வைக்க இயலாமல் போனால் அந்த ஆசையை அளவுக்கு மீறி வேறோர் இடத்தில் வைப்பதே உலக இயல்பு. அதை உணர்ந்த பண்டாரம் பிள்ளைமேல் வைக்க இயலாப் பற்றைத்தான் அளவு கடந்து நிலத்தின் மீது அவன் வைப்பதாக மறைமுகமாய் உணர்த்துகிறார்.
”வெண்கடல்” அற்புதமான கதை. தாய்ப்பாலே இங்கு வெண்கடலாகிறது. குழந்தை இறந்து பிறக்கிறது. தாய்க்கோ மார்புகளில் பால் கட்டிவிட இரண்டு நாள்களாய்த் துடிக்கிறார். நாட்டு வைத்தியரிடம் அழைத்துக் கொண்டு வரப்பட அவர் குளத்தின் அட்டைகளைக் கொண்டுவந்து மார்புகளில் கட்டுகிறார். வலிக்காமல் அட்டைகள் பாலை உறிஞ்சி எடுத்துவிட அவள் குணமாகிறாள். வைத்தியர் அட்டைகளக் கொண்டுபோய், கோழிக்குப் போடச் சொல்ல அவளோ “அய்யோ, வேண்டாம் அய்யனே ………………….கொல்ல வேண்டாம், எனக்க பாலு குடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்………………”என்கிறாள். கதை இந்தக் கூற்றில்தான் நிற்கிறது. தாயின் இதயம் கொண்டு சென்ற மேலை நாட்டுக்கதை நினைவுக்கு வருகிறது.
தன்னுடலையே தேசமாக உருவகிக்கும் மகாத்மாவைக் குறியீடாகக் கொண்ட ‘பாபு’ வே பாத்திரமாக உலவும் கதை ‘நீரும் நெருப்பும்’ உணர்வுக் குவியல்.
ஜெயமோகனே குறிப்பிடுவதுபோல் கதைகள் எல்லாம் பல்சுவைத் தன்மை தருகின்றன. ‘பிழை’ மற்றும் ‘வெறும் முள்’ இத்தொகுப்பிற்குள் ஒத்துவராமல் துருத்திக் கொண்டு நிற்பதையும் சொல்லித்தானாகவேண்டும். வம்சி யின் நூல் அமைப்பு நேர்த்தியாக உள்ளது.
வளவதுரையன்
தொடர்புடைய பதிவுகள்
வெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்
வெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா
‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’
லட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’
யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’
தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’
குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘
கவிதையின் அரசியல்– தேவதேவன்
பிரயாகை- கேசவமணி
காடு வாசிப்பனுபவம்
அழியாக்குரல்-சமஸ் கட்டுரைகள்
அம்மா வந்தாள்: மூன்றாவது முறை…
மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு
வெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை
செ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!!
எங்கள் மக்கள் கவிஞன் இன்குலாப்பைஇழிவுபடுத்தி வசைபாடும் செயமோகனே!நீயார்? அவரது மேன்மையை உரசிப் பார்க்க.***
எங்கள் மண்ணின் பாவலன் இன்குலாப்
ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் இன்குலாப்
சேரியில் ஒதுக்கப்பட்ட மக்களின் தோழன் இன்குலாப்.
***
ஆமாம் செயமோகா….
உனக்கும் அவருக்கும் என்ன பகை?
உனது “விசுணுபுர”த்து மக்களுக்காக
எங்கள் பாவலன் பாடவேண்டுமா?
அல்லது
நீ “வெண்கொற்றம்” புடிக்கும்
காவிக் கூட்டத்திற்கும்
சாதிவெறிபிடித்த சனாதனிகளுக்கும்
மேட்டிமை நிறைந்த உனது
தொண்டரடிப் பொடியாகளுக்கும்
வெண்சாமரம் வீசவேண்டுமா?
எங்கள் கவிஞரிடம் என்ன எதிர்பார்ப்பு
உனக்கு?
ஆமாம் செயமோகா
எழுதுபவர்கள் உன்னிடம்
நற்சான்றிதழ் பெற வேண்டுமா?
அல்லது உன் அடிவருடித்தான் எழுத வேண்டுமா?
என்வென்று புரியவில்லையே செயமோகா?
உனது எழுத்தை சொறிபவர்களுக்குத்தான் நீ ஆசான்.
தமிழ் எழுத்துக்கோ அல்லது
தமிழ் இலக்கியத்திற்கோ
நீ கொம்பனல்ல புரிந்து கொள்!
***
எங்கள் பூட்டன் வள்ளுவன் சொல்வான்
“அரம்போலும் கூர்மைய ரோனும் மரம்போல்வர்
மக்கட் பண் பில்லா தவர்”
என்று.
அடிப்படை பண்பில்லாத
உம்மைப் போன்றவர்களை நினைத்துத்தான்
எழுதினார் போலும்.
***
“அறக்கதைகளை” புனைவெழுத்தில் எழுதும்
மரத்துப் போன மனம் படைத்தவன் நீ!
மனவியலிலும் மனஇறுத்கத்திலும்
வளர்ந்தவன் தானே நீ
உனக்கெப்படித் தெரியும் “மனித நேயம்”
எங்கள் பாவலன் இன்குலாப்
விருதுகளை தூக்கி எறிந்தவன்!
மிரட்டிய அதிகாரங்களை எட்டி உதைத்தவன்!
இன்னொன்று கேள்.
அவரது சிறுகதைத் தொகுப்புக்குப் பெயரென்ன தெரியுமா?
“செடிகளுக்கும் கொஞ்சம் பூக்கள் வேண்டும்” என்று
பூப்பூத்த செடிகளும் வாடிவிடுமே என்று
ஏங்கியவன் எங்கள் பாவலன்.
***
செயமோகா நிறுத்து உன் ஏகடியத்தை
வசைபாடுதலுக்கும் ஒரு
வரையறை வேண்டும்
என்றும் எங்கள் இதயங்களில் வாழும்
மக்கள் கவிஞன் இன்குலாப் அவர்களை
வசைபாடுதலை நிறுத்து.
இல்லையென்றால்
உன்னைப் “பின்தொடரும் நிழலாய்”
தமிழ்ப் பகை நிச்சயம் எழும்.
வேனில் கிருஷ்ணமூர்த்தி
கோவை
10.01.2017
தொடர்புடைய பதிவுகள்
எதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

