Jeyamohan's Blog, page 1687
January 20, 2017
குறளுரை கடிதங்கள் 3
ஆசிரியருக்கு,
அருமையான உரை. குறளின் வரலாற்று பார்வை அறிமுகம், குறள் தமிழில் பொருந்துமிடம், இந்திய தத்துவ புலத்தில் பொருந்திய இடம், சமணர்களின் பங்கு பற்றியெல்லாம் தெரிந்து கொண்டேன்.
அரசு, குடும்பம் பற்றியெல்லாம் மிக நன்றாக இருந்தது. மணிமேகலை முன் எழுந்த தெய்வம் மணிமேகலை, கல்வி பற்றி பேசியதெல்லாம் சிறப்பாக இருந்தன.
மிக்க நன்றி.
அன்புடன்
நிர்மல்
***
அன்புள்ள ஜெ
குறள் உரை மிக நீளமானது கிட்டத்தட்ட ஐந்தரை மணிநேரம். ஆகவே தொகுத்துக்கொள்வது மிகக் கடினமானது. நான் குறிப்புகளாக எழுதிவைத்தேன்.
முதல்நாள் உரை.
குறளை கவிதையாக வாசிக்கவேண்டும். அறிஞர்களுக்கு அதை அடைய தடை உள்ளது
2 குறளை மூலநூலாக கொள்ளக்கூடாது. மூலநூல்கள் ஒற்றையான வாசிப்பை சொல்பவை
4 ஆனால் குறள் ஜனநாயகக் காலகட்டத்தில் மதச்சார்பின்மைநோக்குடன் வாசிக்கப்பட்டதனால் முக்கியத்துவம் அடைந்தது. அது இயல்பானதுதான்
5 குறள் இரண்டுமுறை கண்டுபிடிக்கப்பட்டது
6 குறளை கைப்பற்ற முயல்பவர்களும் அதை பாதுகாக்க முயல்பவர்களும் உருவாக்கும் தகரடப்பாச்சத்தத்தைக் கடந்துசென்றாகவேண்டும்
7 குறளை ஒட்டி உள்ள அறிவுச்சிடுக்குகளுக்குள் சிக்காமல் அதை அணுகவேண்டும்
8 குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல். ஆகவே சமண நூல். சமணர்களின் பொற்காலத்தில் எழுதப்பட்டது
9 சமணரால் பொது நீதிநூலாக எழுதப்பட்டது குறள்.சமணர்கள் மதமாற்றம் செய்யவில்லை. அன்று ஒருவர் சமணராகவும் கூடவே இந்துவழிபாட்டுக்குள்ளும் இருக்கமுடியும்.
இரண்டாம்நாள் உரை
குறளை நாம் இன்று வாசிக்கிறோம். பழங்காலத்தில் அது பயிலப்பட்டது
2 அன்று செவிவழிக்கல்வி இருந்தது. நூல் கடைசியில்தான் முதலாதாரமாக இருந்தது
3 குறள் ஒரு பெரிய குருமரபின் நூல். அது தியான்நூலாகவும் ஞானநூலாகவும் பயிலப்பட்டது
4 குறளை வாசிக்கும் வழிக்கு அனுசிக்கி என்றுபெயர். அது மூன்று கட்டம் கொண்டது
5 மனப்பாடம் செய்தல்
6 சொல்லெண்ணி எல்லா சொல்லையும் புரிந்து வாசித்தல்
7 எல்லா அர்த்தங்களையும் எடுத்து வாசித்தல்
8 சொற்களை மாற்றிப்போட்டும் விலக்கியும் வாசித்தல்
9 வைப்புமுறையை கவனித்தல்
10 அதற்குமேல் தியானம். குறள் வாழ்க்கையின் தருணங்களில் இயல்பாக எழுந்துவரும் அனுபவங்கள்
மூன்றாம்நாள் உரை
1.குறளை ஒரு செவ்வியல் நூலாகச் சொல்லலாம். குறள் யானைபோல
2.செவ்வியல் என்றால் இரண்டுவகை. ஒரு பண்பாட்டின் ஆதாரநூல். ஒருபண்பாட்டின் உச்சநூல். குறள் இரண்டுவகையிலும் செவ்வியல்நூலே
3 குறள் ஏன் ஆதாரநூல் என்றால் சங்க இலக்கியத்தின் பொருண்மொழிக் காஞ்சித் திணை முதல் தொடங்கிய நீதி விவாதம் அதில்தான் முழுமை அடைந்தது. பின்னர் நூல்கள் அதனடிப்படையில் உருவாயின.
4 குறள் ஏன் முதன்மை நூல் என்றால் அதுதான் நாலடியார்போன்ற நூல்களுக்கு அடிப்படை
குறள் நீதியை கவிதையாகச் சொன்னது. கவிதையாகவே அதை புரிந்துகொள்ளமுடியும்
6 குறள் ஐந்து அடிப்படைகளை உருவாக்கியது.
1 நல்ல அரசு
2 நல்ல குடும்பம்
3 நல்ல ஆண்பெண் உறவு
4 அறம் என்னும் விழுமியம்
5 சான்றோன் என்னும் உருவகம்
சரியாகச் சொல்லியிருக்கிரேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் முந்தையநாள் உரையை நீங்கள் சுருக்கி அளித்தது மிகமுக்கியமானதாக இருந்தது
செல்வன்
***
அன்புள்ள ஜெமோ
உங்கள் உரையின் இரு முக்கியமான விஷயங்கள். ஒன்று, தமிழில் பதிப்பியக்கம் ஆரம்பித்து நூல்கள் அச்சில் வந்தபோது நிகழ்ந்த மனநிலைகலைப்பற்றிய உங்கள் கவனிப்புக்கள். அன்றிருந்த அம்னக்கிளர்ச்சி, பரவலான கல்வி இருந்தமையால் நூல்களை அனைவரும் வாசித்தது , சமணம் பௌத்தம் எல்லாம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய கருத்துக்கள் முக்கியமானவை.
அதோடு திருக்குறள் மூலநூலாக ஆனதனால் அதை கைப்பற்ற ஒருசாரார் முயல இன்னொருசாரார் அதைக் காப்பாற்ற முயல இருதரப்பிலும் அவரவருக்குப்பிடித்தமாதிரி நூல்களை விளக்கம் அளித்து ஒரு விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதைக் களையவேண்டும்.
இந்த இரு அடிப்படைகளில் வாசிக்கும்போது குறள் ஒரு ஞானநூலாகவும் கவிதையில் நீதியைச் சொல்வதாகவும் எஞ்சுகிறது. அதை நீங்கள் விரிவாக இரண்டாவது உரைகளில் விளக்கினீர்கள்.
முதல் உரையில் குரல் மைக் சரியாக ஒத்துழைக்கவில்லை. நிறைய சொற்களை விழுங்கி விழுங்கிப்பேசுகிறீர்கள். அதை கடந்து புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. இரண்டு மூன்றாம் உரைகளில் அந்தச்சிக்கல் இல்லை.
லட்சுமணன்
*
ஜெயமோகனின் குறள் உரை- ஆர் அபிலாஷ்
*
ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண
குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist
https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மோட்டார் சைக்கிள் பயணம்
அன்பின் ஜெ
எனக்கு வாசிப்பு அனுபவம் என்பது பெரிய அளவில் இல்லை என்றபோதும் ஒருசில சமயங்களில் இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் நேரம் போகாது இருக்கும் சமயங்களில் உங்களது வலைதளத்திற்கு வந்து நீங்கள் எழுதியிருக்கும் பத்தியோ அலது சிறுகதைகளையோ படிப்பேன்.
எனக்கு பயணிப்பது என்பது மிகவும் விருப்பமானது. எந்தளவிற்கு என்றால் என்னை ஒரு ஆண் என்றோ இன்ன ஜாதி அலது இன்ன மதத்தைச் சேர்ந்தவன் என்றோ என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை விடவும் என்னை ஒரு travellorராக அறிமுகபடுத்திக் கொள்வதில் தான் எனக்கு பெருமையும் அதிகம் பெருமிதமும் அதிகம்
நீங்கள் என்று இல்லை, இன்னும் பல தமிழ் இலக்கிய ஆளுமைகளின் வலைதளத்தில் அவர்களது பயண கட்டுரை அலது பயணத்தைக் கருவாக கொண்ட புனைவுகளை படித்திருக்கிறேன். அத்தனை பேரும் நடந்து சென்ற/ காரில் – ரயிலில் – பேருந்தில் – விமானத்தில் பயணித்த அனுபவங்களைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார்கள். பைக் பயணம் என்றவொன்றைப் பற்றி எவருமே எழுதியதாய் நான் பார்த்ததில்லை. (சாரு மட்டும் லடாக் பைக் ரேலி குறித்து எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். அதிலும் பைக் என்பது ஊறுகாய் அளவுக்கே பயன்படுத்தி இருந்ததாய் ஒரு ஞாபகம்)விஷயத்திற்கு வருகிறேன்
நான் நடைபயணம் துவங்கி பைக், கார், பேருந்து, ரயில், விமானம் என அனைத்திலும் பயணித்திருக்கிறேன். மற்ற எவற்றிலும் கிடைக்காத ஒரு அனுபவம் எனக்கு பைக்கில் மட்டுமே கிடைத்திருக்கிறது. எப்படியெனில் நாகர்கோவில் – சென்னை நெடுஞ்சாலையில் மதுரை தாண்டி எந்த இடம் என்றே தெரியாத ஒரு இடத்தில் ஓய்வுக்காக வண்டியை ஒதுக்கிவிட்டு அந்த உச்சி வெயிலிலும் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தபடியே சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாரென்றே அறியாத மற்றொரு பைக் பயணி நட்புடன் புன்னகைத்து கையசைத்து விட்டு சென்றான்.
மற்றொரு முறை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு வருகையில் விடியற்காலை நான்கு மணி சுமாருக்கு கோவில்பட்டியில் ஒரு நெடுஞ்சாலையோர தேநீர் கடையில் நான் குடித்த இஞ்சி டீக்கும் புகைத்த சிகரெட்டுக்கும் பணம் வாங்க மறுத்துவிட்டார் அந்த கடைக்காரர்
போலவே தான் நான் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஏதொவொரு டீக்கடையில் அலது நெடுஞ்சாலையோரத்தில் அறிமுகமே இல்லாத யாரோ ஒருவர், நான் வலிந்து சென்று எதுவும் பேசாத போதும் என்னிடம் வந்து நட்புடன் பேசுவது, பயணத்தை ஊக்குவிப்பது என்று அன்பு பாராட்டுகிறார்கள்
மனித மனத்திலிருக்கும் மனிதம் இன்னும் மரத்து போகவில்லை மனிதம் என்பதை எவரும் மறந்தும் போகவில்லை என்ற உண்மையினை ஒவ்வொரு பைக் பயணமும் எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. (feb 5 பறக்கையில் நாம் சந்திக்கும் பொழுது இன்னும் அதிகமாக என் அனுபவங்களைப் பகிர்கிறேன்)
இறுதியாக இந்த கடிதம் எதற்காகவென்று சொல்லி விடுகிறேன் .
பைக் பயணம் குறித்த கட்டுரையோ அலது ஒரு புனைவையோ நீங்கள் எழுத வேண்டுமென விரும்புகிறேன். அப்படி எழுத உங்களுக்கு ஒப்புதல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் இடத்திற்கு பைக்கில் அழைத்து செல்ல நானும் தயாராய் இருக்கிறேன்.
Never quit. winners never quit, quitters never wins…
thanks & regards
வாஸ்தோ
அன்புள்ள நாகராஜன்
Zen and the Art of Motorcycle Maintenance என்னும் புகழ்மிக்க நூலை கேள்விப்பட்டிருப்பீர்கள். பயணம் என்பது பைக்கில்தான் மிகச்சிறப்பாக அமையும் என வாதிடும் நூல். அதில்தான் ‘உள்ளே இருக்கும்’ அனுபவம் ‘பறக்கும்’ அனுபவம் கிடைக்கிறது என்கிறது
ஆனால் நான் பைக்கில் பின்னால் அமர்ந்துதான் செல்லமுடியும். அது ஒரு நல்ல அனுபவம் அல்ல
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
January 19, 2017
ஊடகக் கறையான்கள்
தமிழில் ஆனந்தவிகடன் வழியாகவே கேளிக்கை இதழ் x இலக்கிய இதழ் என்னும் வேறுபாடு உருவானது. அதைப் பழித்தும் இழித்தும் உரைப்பது சென்றகாலத்தில் சிற்றிதழ்களில் ஒரு மரபாக இருந்தது. ஆனால் நான் ஒரு சமூகப்பரிணாம நோக்கில் அவை இன்றியமையாத நிகழ்வுகள் என்றே அணுகிவந்தேன், அதையே எழுதியிருக்கிறேன்.
சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி மிகச்சிறுபான்மைக்குரியதாக இருந்தது. ஆகவே இலக்கியமும், கருத்துச்செயல்பாடும் அவ்வண்ணமே நீடித்தன. அக்காலகட்டத்தில் உருவான செய்தி இதழ்களும் இலக்கிய இதழ்களும் அறிவுப்பரிமாற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டவை, ஆகவே சிறிய வட்டத்திற்குள் புழங்கியவை. அவை வாசக அளவால் சிற்றிதழ்கள். அன்றைய அச்சுமுறையும், வினியோக அமைப்புகள் விரிவாக இல்லாததும் அவை சிற்றிதழ்கள்போல செயல்பட்டமைக்கு காரணங்கள்.
ஆனால் 1920 களில் இந்தியாவில் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட தேசியக் கல்வி இயக்கம் கல்வியை மக்களிடம் பரவலாக்க ஆரம்பித்தது. தேசியக்கல்வி இயக்கத்தைப்பற்றி பாரதி விரிவாக எழுதியிருக்கிறார். அதற்கான பாடங்களைக்கூட பரிந்துரைத்திருக்கிறார். அதற்குமுன் அன்றைய ஆட்சியாளர்களாலும் மதநிறுவனங்களாலும் கொண்டுவரப்பட்ட கல்விப்பரவல் சிறிய அளவில் நகர்சார்ந்ததாக இருந்தது. தேசியக்கல்வி இயக்கம் ஒருவகை குடிசைக்கல்வி. மிகக்குறைந்த பணவசதியுடன் கிராமங்களில் உருவாக்கப்பட்ட ஓராசிரியர்பள்ளிகள் அவை.
ஆரம்பக் கல்வியை பரவலாக்கும்பொருட்டு இந்தியாவில் நிகழ்ந்த முதல்பேரியக்கம் இதுவே. ராமகிருஷ்ண மடம், ஆரியசமாஜம், நாராயணகுருவின் இயக்கம் போன்ற பலநூறு இயக்கங்கள் அதில் பங்கெடுத்தன. நம் ஊர்களில் உள்ள பள்ளிகள் எப்போது எவரால் தொடங்கப்பட்டன என்று பார்த்தாலே அவ்வியக்கத்தின் வீச்சை கண்ணால் காணமுடியும்
.
தேசியக்கல்வி இயக்கம் வழியாக உருவான கல்விப்பரவல் வாசிப்பார்வத்தை உருவாக்கியது. கூடவே அச்சுத்தொழில் வளர்ச்சியும் இணைந்துகொண்டபோது எளிய வாசிப்புக்குரிய இதழ்களின் தேவை உருவானது. வாசிப்பு ஒருவகை உயர்தரக் கேளிக்கையாக உருவெடுத்தது. இந்தியாவெங்கும் முப்பதுநாற்பதுகளில் வணிகப்பிரசுரமும் கேளிக்கை சார்ந்த இதழியலும் உருவாகி வந்தன. சுதந்திரத்திற்குப்பின் கல்வி மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டபோது அதன்விளைவாக வாசிப்புக்கு மேலும் மேலும் மக்கள் வந்தனர்.
அதன் அடுத்தபடியாகவே வாசிப்பு எனும் கேளிக்கை பேருருவம் கொண்டது. அது பெருவணிகமாக ஆகியபோது தமிழ் போன்ற மொழிகளில் ஓர் உடன்விளைவாக சீரிய வாசிப்பு, கருத்தியல் செயல்பாடு ஆகியவை சிறுபான்மையினரிடம் ஒடுங்கி நிற்கநேரிட்டது. ஒருகட்டத்தில் இலக்கியமும் கருத்தியல் செயல்பாடும் அமைப்புபலமே இல்லாமல் தனிநபர் முயற்சிகளால் சிறிய அலகுகளுக்குள் மட்டுமே நிகழவேண்டிய நிலை உருவானது, புதுமைப்பித்தன் உண்மையில் அன்றைய மைய இதழ்களில்தான் எழுதினார். அவர் எழுதிய கலைமகள் மாத இதழ் அன்று இலக்கிய இதழாக இருந்தது. அறுபதுகளில் அது தன்னை ‘குடும்ப இதழ்’ என அறிவித்துக்கொண்டு வணிகப்பெருக்குக்குள் சென்றது.
புதுமைப்பித்தனுக்கு அடுத்த தலைமுறையில் தீவிரஇலக்கியம் மெல்ல அமைப்புகளின் ஆதரவை இழந்தது. இலக்கிய இயக்கமே நின்றுவிடக்கூடும் என்றநிலை, வெகுமக்களால் ரசிக்கப்படுவது மட்டுமே வாழக்கூடும் என்னும் அச்சம் உருவாகியது. க. நா. சு, சி. சு. செல்லப்பா இருவரும் சிற்றிதழ் இயக்கத்தை உருவாக்கியமைக்கான காரணம் இதுவே.
சரியான பொருளில் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ மாத இதழ்தான் ‘அறிவித்துக் கொண்ட’ சிற்றிதழ். அதாவது பெரிய இதழாக உத்தேசித்து விற்காமல் போன இதழ் அல்ல அது. குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் வாசிக்கப்பட்டால் போதும், அமைப்பின் பின்புலம் தேவையில்லை, ஆகவே சமரசங்கள் கூடாது என கொள்கைமுடிவு எடுத்துக்கொண்ட சிற்றிதழ் அது. தமிழின் சிற்றிதழ்களின் தொடக்ககாலம் என அறுபதுகளைச் சொல்லலாம். பொற்காலம் என எழுபது எண்பதுகளைச் சொல்லலாம்.
.
இக்காலகட்டத்தில் தீவிர இலக்கியம் முழுக்க முழுக்க சிற்றிதழ்களை மட்டுமே நம்பி இயங்கியது. மனைவி தாலியை அடகுவைத்து சிற்றிதழ்கள் நடத்தியவர்கள் உண்டு. கையில் சிற்றிதழ்களுடன் அலைந்து திரிந்து விற்றவர்கள் உண்டு. தமிழ்ச்சிற்றிதழ்களின் வரலாறு பி.எஸ்.ராமையா [மணிக்கொடிக் காலம்] வல்லிக்கண்ணன் [தமிழ்ச் சிற்றிதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்] வ.ஜயபாஸ்கரன் [சரஸ்வதிக்காலம்] போன்ற நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
க.நா.சு, [இலக்கியவட்டம், சூறாவளி], சி.சு.செல்லப்பா [எழுத்து], எம்.வி.வெங்கட்ராம் [தேனீ], ரகுநாதன் [சாந்தி], வ.ஜெயபாஸ்கரன் [சரஸ்வதி] ஞானக்கூத்தன் சா.கந்தசாமி [கசடதபற], பரந்தாமன் [அஃ], சிவராமன் [நடை], ஞாநி [தீம்தரிகிட], ரவிசங்கர் [பிரக்ஞை ], ஞானி [நிகழ்], எஸ்.என்.நாகராஜன் [புதியதலைமுறை], சிற்பி, நா.காமராஜன் [வானம்பாடி], அ.மார்க்ஸ், ரவிக்குமார் [நிறப்பிரிகை], பிரேம் [சிதைவு ], கஸ்தூரிரங்கன், அசோகமித்திரன் [கணையாழி], நா.பார்த்தசாராதி [தீபம்], பாக்கியமுத்து, சரோஜினி பாக்கியமுத்து [நண்பர்வட்டம்], ஆ.அமிர்தராஜ் [அரும்பு], ஆத்மாநாம் [ழ], தமிழவன் [இங்கே இன்று], பிரம்மராஜன் [மீட்சி], பொன்விஜயன் [புதியநம்பிக்கை], வனமாலிகை [சதங்கை], ராஜகோபாலன், ராஜமார்த்தாண்டன் [கொல்லிப்பாவை], உமாபதி [தெறிகள்], சுந்தரசுகன் [சுகன்], வெங்கட்சாமிநாதன், அ.கா.பெருமாள் [யாத்ரா], கால. சுப்ரமணியன் [லயம்], சுப்ரபாரதிமணியன் [கனவு], கி.ராஜநாராயணன் [கதைசொல்லி], மகாதேவன் [முன்றில்], அழகியசிங்கர் [விருட்சம்] மு.ஹரிகிருஷ்ணன் [மணல்வீடு] லட்சுமி மணிவண்ணன் [சிலேட்] ரோஸ் ஆண்டோ [படிகம்] என இந்த மரபில் நினைவுகூரப்படவேண்டிய சிற்றிதழ்களும் அவற்றை நடத்தியவர்களும் பலர் உண்டு
அன்று எழுதவந்த அனைவருக்கும் சிற்றிதழ் நடத்தும் கனவு இருந்தது. நான் ’சொல்புதிது’ என்னும் சிற்றிதழை நண்பர்கள் எம். கோபாலகிருஷ்ணன், சதக்கத்துல்லா ஹசநீ ஆகியோருடன் இணைந்து நடத்தியிருக்கிறேன்; அசோகமித்திரன், ஜெயகாந்தன் முதலிய மூத்த படைப்பாளிகளையும் பாவண்ணன், யுவன் சந்திரசேகர் போன்ற இளம்படைப்பாளிகளையும் அட்டையில் வெளியிட்டு முதன்மைப்படுத்தியது சொல்புதிது. எஸ். ராமகிருஷ்ணன் ’அக்ஷரம்’ என்னும் சிற்றிதழை நடத்தியிருக்கிறார். கோணங்கி கல்குதிரை என்னும் சிற்றிதழையும் யூமாவாசுகி குதிரைவீரன் பயணம் என்னும் சிற்றிதழையும் நடத்திவருகிறார்கள்.
தொண்ணூறுகளில் அச்சிதழ்களில் இடைநிலை இதழ்கள் தோன்றலாயின. எண்பதுகளின் இறுதியில் ’தமிழினி’ வசந்தகுமார் [புதுயுகம் பிறக்கிறது] எஸ்.வி.ராஜதுரை [இனி] போன்ற சில முயற்சிகள் நிகழ்ந்தாலும் நீடிக்கவில்லை. முதல் வெற்றிகரமான இடைநிலை இதழ் கோமல்சுவாமிநாதனின் சுபமங்களாதான். அதன் வெற்றி அதற்குமுன் சுந்தர ராமசாமியால் சிற்றிதழாக ஆரம்பிக்கப்பட்டு நின்றுவிட்டிருந்த காலச்சுவடை அவரது மகன் கண்ணன் சுந்தரம் இடைநிலை இதழாக மாற்றி கொண்டுவர வழிசெய்தது. மனுஷ்யபுத்திரன் முயற்சியால் உயிர்மை உருவாகியது. திலகவதி பொறுப்பில் அமிர்தா சுதீர் செந்தில் முயற்சியில் உயிரெழுத்து ஆகியவை இடைநிலை இதழ்களாக இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன
சுபமங்களாவுக்கு ஊக்கமளித்த முன்னோடி நிகழ்வு ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராகியதும் தமிழ்மணி என்னும் இலவச இணைப்பை நவீன இலக்கியத்திற்காக ஒதுக்கியதும். தமிழ் பொதுவாசகர்களுக்கு புதுமைப்பித்தன் பெயரே அப்படித்தான் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாலன், வாசந்தி ஆகியோர் இந்தியா டுடே ஆசிரியர்களாக வந்தபோது நவீன இலக்கியத்தை அதில் அறிமுகம் செய்தனர். அதுவும் ஒரு ஊக்கத்தை அளித்தது
இரண்டாயிரத்தில் இரு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. இணையம் பிரபலமாகியது. இணையம் வழியாக உலகமெங்கும் தமிழ்நூல்கள் அறிமுகமாகத் தொடங்கின. இணையம் இலக்கிய விவாதக்களமாக ஆகியபோது அனேகமாக எல்லா இலக்கியவாதிகளும் அறிமுகமாயினர். கூடவே சென்னை புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நிகழத்தொடங்கியது. இலக்கியவாசிப்பு இன்றிருக்கும் அளவுக்கு தமிழில் என்றுமே இருந்ததில்லை. இன்றைய அளவுக்கு நூல்கள் விற்கப்பட்டதே இல்லை. இது இவ்வாறு உருவாகி வந்த வளர்ச்சிதான்.
இந்த வளர்ச்சியில் ஒவ்வொரு இலக்கியவாதியும் தங்கள் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். பேரிதழ்களுடன் தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளர்கள் இலக்கியத்தை அங்கே கொண்டு சென்று சேர்க்க தங்களால் முடிந்தவரை முயன்றிருக்கிறார்கள். நா.பார்த்தசாரதி, சுஜாதா, பாவைச் சந்திரன் போன்றவர்களின் முயற்சிகள் வழியாகவே சிற்றிதழ் சார்ந்த இலக்கியம் பொதுச்சூழலில் அறிமுகமாகியது.
சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற முதன்மைப்படைப்பாளிகள் பேரிதழ்களில் எழுத வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிற்றிதழ்சார்ந்த இலக்கியத்தை கொண்டுசென்று அறிமுகம் செய்ய முயன்றிருக்கிறார்கள். இளம் எழுத்தாளனாக நான் அறிமுகமானபோது இவர்கள் அனைவராலும் தொடர்ந்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டேன்.
எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியபோது கதாவிலாசம் என்னும் தொடர் வழியாக தமிழின் அத்தனை முக்கியமான எழுத்தாளர்களையும் பொதுவாசகர்களுக்குக் கொண்டு சென்றார். நான் பெரிய இதழ்களில் அதிகம் எழுதியதில்லை. எழுதிய தருணங்களில் எல்லாம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறேன்.
என் இணையதளத்தில் தமிழின் நவீன இலக்கியத்தின் அத்தனை எழுத்தாளர்களைப் பற்றியும், இலக்கிய இயக்கங்கள் பற்றியும் மிகவிரிவான குறிப்புகள் உள்ளன. உண்மையில் இத்தனைபெரிய ஒரு தொகுப்பு இணையத்தில் வேறில்லை இன்று. இலக்கிய வாசகர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுகிறேன். இலக்கிய வாசிப்பின் சிக்கல்களை விளக்குகிறேன். புதிய இலக்கிய வாசகர்களுக்காக விரிவான தகவல்களுடன் நவீன இலக்கிய அறிமுகம் என்னும் நூலை எழுதியிருக்கிறேன். இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்யும் ‘கண்ணீரைப்பின் தொடர்தல்’ சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ‘புதியகாலம்’ போன்ற நூல்களை எழுதியிருக்கிறேன்
சாரு நிவேதிதா ரசனைமுறையில் கடுமையான விமர்சனங்கள் கொண்டவர் என்றாலும் அவர் பிரபல ஊடகங்களில் எழுதிய பழுப்புநிறப் பக்கங்கள் போன்ற எழுத்துக்களில் நவீன இலக்கிய இயக்கத்தை மிக விரிவாக அறிமுகம் செய்திருக்கிறார். இதுதான் சென்றகால இலக்கிய இயக்கம்மீது பற்றுள்ளவர்களின் வழிமுறையாக இருக்கிறது.
.
ஆனால் துரதிருஷ்டவசமாக இன்று கசப்பூட்டும் ஒரு போக்கு உருவாகியிருக்கிறது, அதை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். அது இளையோர் மீதான ஒரு கண்டனமாக ஆகக்கூடும் என்னும் தயக்கம் என்னிடம் இருந்தது. ஆனால் அது இன்று தொடர்ந்து வளர்ந்துவருகிறது.இப்போதாவது அதைப் பதிவுசெய்தாகவேண்டும் – இப்படி நடக்கிறது என்பதை இலக்கியவாசகர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக. வரலாற்றுப்பதிவுக்காக
சிற்றிதழ்சார்ந்த நவீன இலக்கியம் மிகுந்த அர்ப்பணிப்புகொண்ட உழைப்பின் விளைவாக மெல்ல இன்று பரவலாக அறிமுகமாகிறது. அதற்கு வாசகர்கள் உருவாகி வருகிறார்கள். பிரபல ஊடகங்கள் அதைக் கவனிக்கின்றன. அதற்குச் சில பக்கங்கள் ஒதுக்குகின்றன. அதில் பணியாற்றும் வாய்ப்பைச் சில இளைய எழுத்தாளர்கள் பெறுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் முதிராவாசகர்கள், ஆரம்பகட்ட எழுத்தாளர்கள்
இவர்களில் சிலர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் மிக வருத்தம் அளிப்பது. இலக்கிய வம்புகளையும் தங்கள் முதிர்ச்சியில்லா கருத்துக்களையும் மட்டுமே அதன் பக்கங்களில் கொண்டுசெல்ல இவர்கள் முயல்கின்றனர். வசைபாடி எவர் எழுதினாலும் அச்சேற்றுகின்றனர்.சென்ற காலங்களில் சிற்றிதழ்களைச் சிறுமைப்படுத்தி கேலிப்பொருளாக்கும் பலநிகழ்வுகளை இவர்கள் அங்கே பிரசுரம் செய்தனர்.
குமுதம் இதழ் தீராநதி என்னும் இலக்கிய இதழை ஆரம்பித்தபோது அதை வெற்றுவசைகளால் நிரப்பி கிட்டத்தட்ட இன்று அது அழிந்து இல்லாமலாகும் நிலைக்குக் கொண்டு சென்றது இவர்களின் ஆளுமைச் சிறுமை. ஒன்று, தனிப்பட்ட காழ்ப்புகள். இரண்டு இயல்பாகவே வம்புகளில் உள்ள ஆர்வம்.
ஆனால் மிக ரகசியமானவர்கள் இவர்கள். ஒரு கீழ்வம்பு பிரசுரமாகும்போது அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள். உதாரணம் சொல்கிறேன். ஒரு கவிதைநூலை சில கவிஞர்கள் சென்னை பறக்கும்ரயிலின் ஒரு பெட்டியில் வைத்து வெளியிட்டனர். பங்கேற்பாளர்கள் பதினைந்துபேர்தான். அன்று பறக்கும்ரயில் காலியாகவே ஓடும், எதற்கு கூடம் வாடகைக்கு எடுக்கவேண்டும் என அங்கேயே விழாவை நடத்தினர். குமுதம் இதழ் ‘கவிதைநூலை கிழித்துச் சாக்கடையில் வீசி வெளியீட்டுவிழா” என செய்தி வெளியிட்டது. இன்றுவரை அச்செய்தியை எழுதியது எவர் எனத் தெரியாது.அவர் சிற்றிதழ்ச்சூழலிலும் இயங்கும் ஓர் இதழாளர் என்பது மட்டும் தெளிவு
அரவிந்தன், தமிழ் ஹிந்து
இன்று இதேபோல வரலாற்றினால் அளிக்கப்பட்ட நல்வாய்ப்பை இயல்பான கீழ்மையால் அழித்துக்கொண்டிருக்கும் இருவரைச் சுட்டிக்காட்டியாகவேண்டும். ஒருவர் தமிழ் ஹிந்து நாளிதழின் இலக்கியப் பகுதிகளின் ஆசிரியராகச் செயல்படும் அரவிந்தன். அடிப்படையில் எந்தக்கூர்மையும் இல்லாத மழுங்கலான ஆளுமை கொண்டவர். அந்நாளிதழில் இவர் எழுதும் வெறும் அரட்டைகளான எட்டுபக்க அரசியல் கட்டுரைகளை பதினைந்து வரிகளாகச் சுருக்கிவிடமுடியும். அதைவிட அவர் எழுதிய நாவல்களை அட்டை மட்டுமாகச் சுருக்கிவிடமுடியும். இத்தகைய மழுங்கல் மனிதர்களுக்கு வம்புகளில் வரும் ஆர்வம் மிக ஆச்சரியமூட்டுவது
தமிழ் ஹிந்து நாளிதழ் தமிழில் நிகழ்ந்துவரும் ஒரு அரிய நிகழ்வு. தமிழில் தரமான இலக்கியத்தை, கருத்துச்செயல்பாட்டை அறிமுகம் செய்யும் ஒரு பெருமுயற்சி என்பது எவ்வகையிலும் நவீன இலக்கியம்சார்ந்த ஒருவருக்கு மனஎழுச்சி ஊட்டுவது. ஆனால் இவர்கள் பசுமரத்திலும் படர்ந்தேறும் கறையான்கள். இத்தகைய அத்தனை முயற்சிகளிலும் முதலில் கறையான்கள் எப்படி குடியேறுகின்றன என எண்ணி எண்ணி வியப்பதைத் தவிர வேறுவழியில்லை.
அரவிந்தன் காலச்சுவடு இதழுக்கு நெருக்கமானவர். அப்பிரசுரங்களின் பொறுப்பில் இருக்கிறார் என்கிறார்கள். தானும் பங்குபெறும் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களை பிரச்சாரம் செய்வதற்காகவே தமிழ்ஹிந்துவின் இலக்கியத்துக்குரிய பக்கங்களை பயன்படுத்திக்கொள்கிறார் அரவிந்தன். காலச்சுவடு நூல்கள் மேல் மிதமிஞ்சிய புகழ்களை ஆசிரியர் கூற்றாக எழுதிவைப்பது [உதா: சென்ற 2016 ஆண்டு தமிழிலக்கியத்தில் தேவிபாரதிவருடம் என கொண்டாடப்படுகிறது- தமிழ் ஹிந்துவின் சென்றவருட இலக்கிய அவதானிப்பு] அந்தக் குழுவின் எழுத்தாளர்களைக் கொண்டு மாறிமாறி மதிப்புரை எழுதச்செய்வது.
இதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம், இந்தச் சிறிய ஆசாமியின் காழ்ப்புகளை அந்த மாபெரும் மேடை ஏன் தாங்கவேண்டும்? தமிழ்ஹிந்துவின் இலக்கியப் பக்கங்களில் இன்றுவரை நான் இடம்பெற்றதில்லை. பிறரால் தயாரிக்கப்படும் அதன் பொதுப்பக்கங்களுக்காக மட்டுமே என்னிடம் படைப்புகள் கோரப்பட்டுள்ளன. அதன் இலக்கியப்பக்கங்களில் இன்று தமிழில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய இலக்கியமுயற்சியான வெண்முரசு பற்றிகூட ஒரு சொல் எழுதப்பட்டதில்லை.
இந்த அச்சிதழ் அல்ல, எந்த அச்சிதழும் எனக்கு நேற்றும் இன்றும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. எனக்கு ஊடகமாக அவை தேவையும் இல்லை. இன்று எந்த அச்சிதழும் என் இணையதளம் அளவுக்கு இலக்கிய வாசகப்பரப்பு கொண்டது அல்ல. ஆகவே அரவிந்தனின் சிறுமை எனக்கு ஓரு தனிப்பட்டப் பிரச்சினை அல்ல. ஆனால் நம் சூழலில் அரிதில் நிகழும் ஒன்றைக்கூட தன் சிறுமைக்குக் களமாக ஆக்கும் கீழ்மையே அருவருப்பூட்டுகிறது.
நான் மட்டும் அல்ல சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன் எவரும் அப்பகுதிகளில் எழுதவைக்கப்பட்டதில்லை. அவர்களைப் பற்றிய நக்கல்களும் கிண்டல்களும் மட்டுமே அவற்றில் அச்சாகியிருக்கின்றன. நாங்கள் காலச்சுவடு முகாமின் எதிர்விமர்சகர்கள். ஆனால் காலச்சுவடு இதழின் ஆதரவாளர்களான் நாஞ்சில்நாடன், யுவன் சந்திரசேகர் குறித்துக்கூட அரவிந்தன் பொறுப்பில் உள்ள தமிழ் ஹிந்து பக்கங்களில் செய்திகளோ கட்டுரைகளோ வந்ததில்லை. காரணம் இவர் பொறுப்பில் காலச்சுவடு இருந்தபோது அதில் இவர் எழுதிய மொண்ணைக்கதைகளையும் அதைப்பாராட்டி இவரே வெளியிட்டுக்கொண்ட கடிதங்களையும் எங்கோ ஓரிருவரிகளில் இவர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
தமிழின் எந்த முக்கியமான எழுத்தாளர்கள் தமிழ் ஹிந்துவில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள். கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் என தமிழில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் எவரையும் தமிழ் ஹிந்துவின் பக்கங்களில் காணமுடியாது. ஏனென்றால் இந்த சில்லறை ஆத்மாவை அவர்கள் புனைவாளராக பொருட்படுத்தியதில்லை.
தமிழ் ஹிந்துவுக்கு இதைப்பற்றி வெவ்வேறு புகார்கள் இதற்குமுன்னரும் அனுப்பப் பட்டுவிட்டன. குறிப்பாக நற்றிணை யுகன் நேரடியாகவே ஆதாரங்களுடன் அவர்களின் நிர்வாகத்துக்கே எழுதியிருக்கிறார். ஆனால் அரவிந்தன் அவர் பணியாற்றும் நிறுவனங்களின் அதிகார அமைப்புகளுடன் தொற்றிக்கொள்ளும் கலையறிந்தவர். பொதுவாக ஆளுமைச் சிறுமை கொண்ட இத்தகையவர்களுக்கு தங்கிவாழும் கலை தெரிந்திருக்கும். குடல்புழுக்களை எளிதில் அகற்ற முடியாது, அவற்றுக்கிருக்கும் தொற்றும் வல்லமை பிற உயிர்களுக்கு இருக்காது.
கௌதம சித்தார்த்தன்
இன்னொருவர் கௌதம சித்தார்த்தன். இருபதாண்டுகளாக எனக்கு இவரை சிற்றிதழ்ச்சூழலில் சுற்றிக்கொண்டிருப்பாவராகத் தெரியும். கால்முதல் தலைவரை போலியான மனிதர். போலித்தனத்திற்குப் பின்னாலிருப்பது ஆழமான தாழ்வுணர்ச்சி. ஏனென்றால் முறையான கல்வி இல்லை. ஆங்கிலத்தில் அடிப்படையாகக் கூட வாசிக்கமுடியாது. இணையம் வந்தபின் தினம் ஒரு ஆங்கில நூலை வாசித்ததாக சொல்கிறார் என்கிறார்கள். எதுவும் தமிழ்நாட்டில் சாத்தியம்தான். நானறிந்தவரை ஒரே ஒரு சிறுகதை மட்டும் வாசிப்புத்தகுதி கொண்டதாக எழுதியிருக்கிறார். மற்றபடி அசட்டு முதிரா எழுத்து மட்டுமே. ஆகவே இயல்பாக எங்கும் எவராலும் பொருட்படுத்தப்படுவதில்லை, அந்த வன்மமே அவரை ஆட்டுவிக்கிறது. ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர்.
தமிழ் ஹிந்து வெளிவரத்தொடங்கியதும் தினமலர் சிலபக்கங்களை இலக்கியத்திற்கு ஒதுக்கலாமென முடிவுசெய்தது. உண்மையில் இது தமிழிலக்கியத்திற்கு ஒரு பெரிய வாய்ப்பு. அக்கணம் வரை இலக்கியம் என்றால் என்னவென்றே அறிந்திராதவர்களுக்கு முன்பாக அறிவுலகைத் திறந்துவைப்பதற்கான சந்தர்ப்பம் அது. பல்லாயிரம் இளைஞர்கள் பயன்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் சிலபல தொடர்புகள் காரணமாக தேர்ந்தெடுத்தது கௌதம சித்தார்த்தனை. தவறான தேர்வுகள் நிகழலாம், ஆனால் நம் சூழலில் முட்டாள்தனமான தேர்வுகள் மட்டுமே தவறாமல் எப்படி நிகழ்கின்றன என்பது எண்ண எண்ண வியப்பூட்டுவது.
தினமலரின் பக்கங்கள் தாழ்வுணர்ச்சியின் வன்மம் நிறைந்த இந்த நபரால் கிட்டத்தட்ட கழிவறை போல பயன்படுத்தப்படுகின்றன. நவீனத்தமிழிலக்கியத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாடே கீழ்மையானது என்றும், நவீன எழுத்தாளர்கள் அங்கீகாரத்திற்கு அலையும் இழிபிறவிகள் என்றும், தான் மட்டும் எஞ்சிய மேதை என்றும் தொனிக்க நக்கல் கிண்டல் மட்டும் நிறைந்த அசட்டு எழுத்துக்கள் இவரால் எழுதப்பட்டன.
உண்மையில் இலக்கியச்சூழல் என்னும் சிறிய வட்டத்திற்குள் உள்ள தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவ்வளவுபெரிய மேடையைக் களமாக்குவதில் உள்ள மடமைகூட இவர்களுக்கு உறைக்கவில்லை. அந்தக்களத்தில் எவருக்கும் இவர்கள் எவர் மேல்நஞ்சைக் கக்குகிறார்கள் எவரை கொட்டுகிறார்கள் எதுவுமே தெரியாது. யாரோ யாரையோ எதனாலோ ஏதோ சொல்கிறார் என வாசித்துச்செல்கிறார்கள்.
இது தமிழ்நாட்டின் கீழ்மனநிலைகளில் ஒன்று. ஓர் அலுவலகத்தில் கோப்புகளை எடுத்து அதிகாரியின் மேஜைமேல் வைக்கும்பொறுப்பில் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வோம், அவர் அதை ஓர் அதிகாரமாக ஆக்கிக்கொள்வார் -முறைகேடாக அச்செயலைச் செய்வதன்மூலம். தனக்கு வேண்டியவரின் கோப்பை மேலே வைப்பார். பகைப்பவரின் கோப்பை எடுத்து ஒளித்துவைப்பார். அந்தச் சிறு அதிகாரத்தைக்கொண்டு அந்த அலுவலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயல்வார். அதைக்கொண்டு ஊழல் செய்வார்.
அவரை நேரில்சென்று பார்த்தால் அந்தத் தோரணை வியப்பூட்டும். நம் மக்களும் அவரை அந்த அலுவலகத்துக்கே தலைவர் என நடத்தி சார் ஐயா என்பார்கள். இந்த அதிகாரம் இங்கு திகழவேண்டும் என்றால் மேலதிகாரியின் கருணை வேண்டும் என இந்த ஆசாமிக்குத்தெரியும். ஆகவே மேலதிகாரிகளுக்கு முன் உருகும் வெண்ணையாக இருப்பார் அவர்.
இவர்கள் இலக்கிய விமர்சகர்கள் அல்ல. சொல்லும்படியான படைப்பாளிகள் அல்ல. நல்ல இலக்கியவாசகர்க்ள் கூட அல்ல. இவர்கள் அந்நிறுவனத்தின் ஊழியர்கள். அந்த இதழ் தரமாகவும் வாசிப்புத்தன்மையுடனும் அனைத்து இலக்கியப்போக்குகளையும் உள்ளடக்கும் இயல்புடனும் இருக்கும்படிச் செய்வது மட்டுமே இவர்களின் பணி. ஆனால் இவர்கள் இலக்கியத்தை ஆட்சிசெய்யும் செங்கோலை ஏந்தியிருப்பதாக கற்பனைசெய்துகொள்கிறார்கள்.
இது தமிழின் தீயூழ் என்றே சொல்லவேண்டும். வரலாறு அளிக்கும் ஒவ்வொரு நல்வாய்ப்பையும் அழிக்கும் கிருமிகளே எங்கும் முந்துகின்றன. அத்தனையையும் கடந்து இங்கே இலக்கியம் நின்றுகொண்டிருப்பது தகுதியறிந்து வாசிக்கும் சிலராலும் அர்ப்பணிப்புடன் எழுதுபவர்கள் சிலராலும் மட்டுமே. நேற்று சிற்றிதழ் நடத்தி தெருத்தெருவாக அலைந்தவர்களின் மரபைச்சேர்ந்தவர்கள், அம்மரபை மதிப்பவர்கள் இன்றும் அதே அர்ப்பணிப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களிடையே தனிப்பட்ட பூசல்கள் இருக்கலாம், மாறுபட்ட கருத்துக்களும் அதன் விளைவான கசப்புகளும் இருக்கலாம், ஆனால் அடிப்படையில் அவர்களை இயக்குவது இலக்கியம் என்னும் ஒட்டுமொத்த இயக்கம் மீதான நம்பிக்கை மட்டுமே. தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சி அவர்களின் கைகளிலேயே உள்ளது. இன்றுவரை இதைக் கொண்டு வந்து சேர்த்த அவர்களால் இக்களைகளைக் கடந்தும் அதைக் கொண்டு சென்று சேர்க்கமுடியும்.
வாசகர்கள் இது குறித்த தங்கள் கண்டனத்தை ஹிந்து தமிழ், தினமலர் ஆசிரியர் மற்றும் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். பல பதிப்பகங்களின் புகார்கள் சென்றபின்னரும் அரவிந்தன் அதே மூர்க்கத்துடன் நீடிக்கிறார் என்றால், இருப்பவர்களிலேயே மொக்கையான ஒருவரை தினமலர் தெரிவுசெய்கிறது என்றால் அதற்கு நாம் அறியாத காரணங்கள் இருக்கும். ஆகவே புகார்களால் ஆகப்போவதொன்றும் இல்லை. குறைந்தபட்சம் இத்தகைய தருணங்களில் வாசகர்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு, அவர்கள் எதிர்வினையாற்றுவர் என்பதையாவது அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குறளுரை -கடிதங்கள்-2
வணக்கம் அய்யா,
நான், நீங்கள் உரையாடிய “குறளினிது” நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்றவன், நீங்கள் ஒவ்வொருநாளும் வழங்கிய இலக்கிய உரை மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாக இருந்தது பொதுவாக எழுத்தாளர்களுக்கு, பேச்சாளர்கள் போல் பேசுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் உங்கள் உரையாடல் சராசரியாக 2 மணி நேரம் என்னை கட்டி போட்டது. உங்கள் உரையாடலானது தி ஹிந்து வில் அப்துல் கலாம் அய்யா எழுதிய என் வாழ்வில் திருக்குறள் என்ற கட்டுரையை நினைவூட்டியது. உங்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கும் எனது நன்றிகள்
வணக்கத்துடன்
திருமலைராஜ்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
திருக்குறள் உரையில் நீங்கள் திராவிட இயக்கத்தின் பங்களிப்பைப்பற்றிச் சொன்னீர்கள். அவர்களின் தனிப்பெரும் சாதனை குறளை ஒரு மதச்சார்பற்ற நூலாக ஆக்கி அதை மக்களிடையே கொண்டு சென்றதுதான் என்றீர்கள். ஆனால் மரபை அதிலிருந்து விலக்கியதன் வழியாக அவர்கள் அதை ஒற்றைப்படையான வாசிப்புக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்றீர்கள். திராவிட இயக்கத்தின் பங்களிப்பென்பது சிற்பங்கள் மேல் மணல்வீச்சு போல என்று சொன்னீர்கள். சிற்பங்களை மணல்வீச்சு மொண்ணையாக்கியது போல திராவிட இயக்கம் குறளை மொண்ணையாக ஆக்கிவிட்டது என்றீர்கள்.
அய்யா, எந்த ஒரு நூலும் பலகோணங்களில் பலரால் படிக்கப்பட்டாகவேண்டும். பல்லாயிரம்பேர் படிக்கும் போதுதான் அதற்கு பலவகையிலான வாசிப்பு வரும். அதன் வழியாகவே அது துலங்கிவரும். திராவிட இயக்கம் குறளைப் பிரபலப்படுத்தினதினால்தான் நீங்களேகூட வந்து பேசுகிறீர்கள். நீங்கள் நாலடியார் பற்றியோ ஆசாரக்கோவை பற்றியோ ஆத்திச்சூடி பற்றியோ ஏன் பேசவில்லை என்று நினைத்தால் இது புரியும்.
சிவக்குமார் செல்லையா
***
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
கோவையில் திருக்குறள் பற்றி தாங்கள் மூன்று நாட்கள் ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டேன். உரை மிகவும் ஆழமாகவும் விரிந்த பார்வை கொண்டதாகவும் இருந்தது. இந்த உரையின் விழைவாக என்னுள் எழுந்த சில ஐயங்களை உங்கள் முன் வைக்கிறேன்.
திருக்குறள் எழுதப்பட்ட காலம் சங்ககாலம் எனில், சமணமதத்தைச் சேர்த்த திருவள்ளுவர், வைதிக மதத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளதால் சமணமதமும், வைதிக மதமும், ஒரு சேர சங்க காலத்தில் பின்பற்றப்பட்டது அதில் வைதிக மதத்தின் நெறிகளையே மக்கள் பெரும்பாலும் பின்பற்றினார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? .
மேலும் தங்கள் உரையில் திருக்குறள், பண்பாடு சற்றே நெகிழ்வாக இருந்த காலக்கட்டத்தில் மக்களை நெறிப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல் என்கிறீர்கள், ஆனால் அதற்கு முன்பு நீங்களே திருக்குறள் பல காலம் சமுதாயத்தில் நடந்த விவாதத்தின் முடிவில் உருவான செவ்வியல் படைப்பு திருக்குறள் என்கிறீர்கள், அப்படி என்றால் பண்பாடும் கலாச்சாரமும் உச்சநிலையை அடைந்த காலகட்டத்தில், அத்தகைய விவாதங்கள் நடக்க சாத்தியமுள்ள காலகட்டத்தில் தானே திருக்குறள் எழுதப்பட்டிருக்கவேண்டும்? இரண்டும் முரண்பட்டதாக உள்ளதே? தெளிவுபடுத்தவும்..
ராஜேஷ்
கோவை.
***
அன்புள்ள ராஜேஷ்
ஒரு உரை என்பது பலவகையான திறப்புகளை அளிக்கும். கூடவே பல கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பும். அவற்றை நாமே குறளில் இருந்தும் பிறநூல்களில் இருந்தும் தேடி எடுத்து தெளிவு செய்துகொள்வதே முறை. ஒரு உரையை அல்லது கட்டுரையை எதிர்கொள்ளவேண்டிய முறை அது.
சங்ககாலத்தின் இறுதிமுதல் தமிழகத்தில் இருந்த மதச்சூழ்நிலையை சிலப்பதிகாரம் காட்டுகிறது. கோவலன் மணிவண்ணன் கோட்டம், இந்திரன் கோயிலையும் அருகர் கோயிலையும் வணங்கிவிட்டுத்தான் நகர்நீங்குகிறான். சிலப்பதிகாரத்திலேயே ஆய்ச்சியர் குரவையில் விஷ்ணு பாடப்படுகிறார். கவுந்தி அருகர்நெறியைப் புகழ மாங்காட்டுமறையவன் விஷ்ணுவை புகழ்கிறான். இளங்கோவடிகளுக்கு கண்ணகி கதையைச் சொன்ன சீத்தலைசாத்தனார் பௌத்தர். மூன்று மதங்களும் பூசலின்றி ஒன்றாக இருந்ததையும் ஒருமதத்தவர் மற்றமத தெய்வங்களை இயல்பாக வழிபட்டதையும் காண்கிறோம்.
சங்ககாலத்தின் இறுதியில் தொடங்கிய அறவிவாதமே குறளாக முழுமை அடைந்தது.
ஜெ
***
ஜெ
குறள் குறித்த விவாதங்களைப் பார்த்தேன். திருக்குறளை ஒரு மகத்தான கவிதைநூலாக வாசிக்கவேண்டும்., அதை ஒரு ஞானநூலாக அறியவேண்டும், ஆனால் என்றுமே வழிகாட்டும் நீதிநூலாக மதநூலாக நிறுத்திவிடக்கூடாது. அதைத்தான் விரிவாகச் சொன்னீர்கள். முதல்நாள் உரை மிகச்செறிவானது. பல புதிய மின்னல்கள். குறள் மதச்சார்பற்ற நூலாக நவீன காலகட்டத்தில் ஏன் வாசிக்கப்பட்டது என்பதற்கு சைவநூல்களின் எழுச்சியும் ஒரு காரணம் என்று நீங்கள் சொன்னதை மிக வியப்புடன் நினைத்துப்பார்க்கிறேன். குறளை உரிமைகொண்டாட முயல்பவர்கள் சொல்விளக்கம் கொடுத்து அதை தூய்மையான நூலாகக் காட்டமுயல்பவர்கள் அனைவரையும் விலக்கி வாசிப்பது எப்படி என்று விளக்கிய அந்த முதல் உரைதான் நீங்கள் ஆற்றிய உரைகளிலேயே சிறப்பு.
மதுசூதனன்
***
ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண
குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist
https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மதுரையில் பேசுகிறேன்
சங்கக் கவிதைகளை மறுவாசிப்பு செய்யும் கருத்தரங்கு
2017 ஜனவரி 23 & 24
சங்கக் கவிதைகளைப் பண்பாட்டுப் பிரதிகளாகப் பாவித்து பொருள் கொள்வதில் சில அனுகூலங்களும் சில ஆபத்துகளும் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் உருவான இலக்கியப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு, அக்காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கு இலக்கிய இனவரைவியல் போன்ற முறையியல்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் நம்மிடம் உள்ளன.
சங்கக் கவிதைகளை மறுவாசிப்பு செய்வதன் மூலம், அவை எழுதப்பட்ட காலகட்டத்தின் சிந்தனையோட்டங்களையும், அக்காலகட்டத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும், அம்மாற்றங்களைத் தோற்றுவித்த காரணிகளையும் நம்மால் சரியாகக் கணிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அந்த வகையில் சங்கக் கவிதைகள் சித்தரிக்கும் காலகட்டமானது, புதிய பண்பாட்டுக் கூறுகளின் அறிமுகம் (திருமணம்…), புதிய உணவு உற்பத்தி முறையின் மேலாண்மை (விளைவித்தல்…), புதிய அரசியல் அமைப்பின் எழுச்சி (அரசு, நாடு…), புதிய வாணிப முறைகளின் பரிச்சயம் (உள் நாட்டு, கடல் கடந்த வணிகங்கள்), புதிய அழகியலின் வருகை (கவிதை…), புதிய மொழிவடிவின் ஊடாட்டம் (எழுத்து), புதிய வாழிடங்களின் உருவாக்கம் (ஊர், பேரூர்…) என்று பல்வேறு புதிய ஒழுங்குகளுக்கு ஆட்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
இக்கவிதைகளில், புதிய அல்லது நவீன என்ற பொருள் தரும் ‘யாணர்’ என்ற சொல்லின் பயன்பாடும், அதனையொத்த உச்சரிப்பை உடைய ‘அமணர்’, ‘யவனர்’ என்ற சொற்களின் அர்த்தமும், தமிழக நிலவுடைமைச் சமூக ஒழுங்கமைப்பு வேளாண்மையால் மட்டுமல்லாது முதலாளித்துவ சாயல் கொண்ட வணிகத்தாலும் கட்டப்பட்டிருக்கிறது என்பதையே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
பேராச்சரியமாக, இத்தகைய ஒட்டுமொத்த சமூக மாற்றத்தின் ஒரு பகுதி விளைவான கவிதையே தான் இக்காலகட்ட மாற்றங்களை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் இருக்கிறது.
Dr. T. Dharmaraj
Head and Chairperson
Department of Folklore and Culture Studies
School of Performing Arts
Madurai Kamaraj University
Madurai – 625 021.
சங்கக் கவிதைகளில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும்
கருத்தரங்கம் – 23,24, ஜனவரி 2017.
இடம்: சந்தானம் அரங்கு, நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
தொடக்க விழா
23.01.2017 , திங்கள் கிழமை
முற்பகல் – 10.00 – 1.00 மணி
தலைமை – முனைவர் டி. தருமராஜ்
கருத்தரங்க தொடக்க உரை - எழுத்தாளர் ஜெயமோகன்
கருத்தரங்க மைய உரை – முனைவர் இ. முத்தையா
மதிய உணவு 1.00 – 2.00
அமர்வு – 1 – பிற்பகல் 2.00 – 3.30 மணி
கருத்துரையாளர்: முனைவர். பக்தவத்சலபாரதி
தேநீர் இடைவேளை – 3.30 – 4.00
அமர்வு – 2 பிற்பகல் 4.00 – 5.30 மணி
ஒருங்கிணைப்பாளர்: முனைவர் டி. கோபிநாத்
கருத்துரையாளர்கள்: முனைவர். பாரதி
முனைவர். அ. கலையரசி
ரா. ராதிகா
24.1.2017 , செவ்வாய் கிழமை
அமர்வு – 3 முற்பகல் 10.00 – 11.15 மணி
கருத்துரையாளர்: முனைவர் ந. முருகேச பாண்டியன்
தேநீர் இடைவேளை 11.15 – 11.45
அமர்வு – 4 முற்பகல் 11.15 – 1.00 மணி
ஒருங்கிணைப்பாளர். முனைவர். பாரதி
கருத்துரையாளர்கள்: முனைவர். அரிபாபு
கோ. சுபா காந்தி
மதிய உணவு – 1.00 – 2.00
அமர்வு – 5 பிற்பகல் 2.00 – 3.00 மணி
கருத்துரையாளர்: கவிஞர் சக்தி ஜோதி
தேநீர் இடைவேளை – 3.00 – 3.30
அமர்வு – 6 பிற்பகல் 3.30 – 5.30
ஒருங்கிணைபாளர்: பேரா. சி. ஜஸ்டின்செல்வராஜ்
கருத்துரையாளர்கள்: பேரா. பெ.க.பெரியசாமி ராஜா
முனைவர் ஹமீம் முஸ்தபா
முனைவர் கந்தசுப்பிரமணியன்
தொடர்புடைய பதிவுகள்
என் உரைகள், காணொளிகள்
என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
வாழும் கணங்கள்
கவிதையின் அரசியல்– தேவதேவன்
கசப்பு அண்டா மனிதன்! -செல்வேந்திரன்
தொடுதிரையும் கவிதையும்
பிழைத்தல், இருத்தல், வாழ்தல்
பத்து சட்டைகள்
பாலக்காட்டில் பேசுகிறேன்
வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்
ஈரம்
மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்
விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.
கடலின் அலை
புதியநாவல் (உரை)
மலையாள இலக்கியம்
நமக்குள் இருக்கும் பேய்
பசியாகி வரும் ஞானம்
சென்னையில் இன்று உரையாற்றுகிறேன்
ஆலமர்ந்த ஆசிரியன்
வானதி -அஞ்சலிகள்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
செல்வி வானதி மறைவிற்கு வருத்தம்.
இந்த கடிதம் தசை இறுக்க நோய்க்கான மருந்துகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதற்காக.
பொதுவாக மரபணுக் குறைபாட்டிற்கு மருந்துகள் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். அப்படி கண்டு பிடித்தாலும் அவைகளின் செயல்திறன் அல்லது பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக அமைவதில்லை. 2016ம் ஆண்டில் இரண்டு மருந்துகள் தசை இறுக்க நோய்களுக்கு பலன் செய்யலாம் என கருதி விற்பனை செய்ய அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
1. nusinersen (brand name – Spinraza) – for spinal muscular atrophy
2. eteplirsen (brand name – Exondys 51) – for Duchenne muscular dystrophy
இந்தியாவில் இந்த மருந்துகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. எப்போது வரும் என்றும் தெரியவில்லை. பொதுவாக நோயுற்றவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தால் இப்படிப்பட்ட மருந்துகள் விற்பனைக்கே வராது ஏனென்றால் மருந்துகளின் விற்பனை நன்றாக இருக்காது. ஆனால் நோயாளிகள் மருத்துவர்களின் உதவியோடு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். அதற்கு நமது அரசாங்க அனுமதி பெற வேண்டும்.
நன்றி
டாக்டர் அருண்குமார்
***
அன்புள்ள ஜெ
செல்வி வானதியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில்கூட மரபணுப்பிரச்சினையால் வரும் நோய்களுக்கு தொடர்ந்த பயிற்சி மட்டுமே சிறு மருத்துவ வாய்ப்பாக உள்ளது. அந்தக் குறைபாட்டைக் கடந்து அவர்கள் வென்று எழுந்ததையும் அவர்கள் சாதித்ததையும் நினைக்கும்போது பெருமிதம் ஏற்படுகிறது. இன்றுவாழும் அனைவருக்கும் அவரைப்போன்றவர்கள் மிகப்பெரிய ஆறுதல் என நினைக்கிறேன்.
சரவணன்
***
ஜெ
வானதியை உங்கள் குறிப்புகளின் வழியாகத்தான் அறிமுகம். மனிதர்கள் எதிர்ச்சூழ்நிலையில்தான் மிகப்பெரிய ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள் என்று அவருடைய வாழ்க்கை காட்டியது. போரில்தான் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. போர் ஒரு பெரிய இக்கட்டு. அதைப்போன்ற ஒரு இக்கட்டில்தான் மனிதர்களின் ஆற்றல் வெளிப்படுகிறது. அதைக் காட்டிய ஒரு இலட்சிய வாழ்க்கை அவருடையது. என் அஞ்சலிகள்.
மகராஜன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
January 18, 2017
சுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு
கொள்ளுவன கொள்ளுக
கொண்டபின்
கொடுப்பவர் ஆகுக ;
தள்ளுவன தள்ளுக
தள்ளியபின்
தவமொன்று இயற்றுக;
சொல்லொன்று சொல்லுக
சொல்லில்
சுடரொன்று ஏற்றுக. . .
[ஜெயகாந்தன்]
என் தங்கை சிகிழ்ச்சையின் போது, மருத்துவர்களும் மருத்துவம் பயியலும் மாணவர்களும் அவள் மேல் காட்டிய அக்கறை அளப்பரியது. எட்டு மணிநேரம் பிடிக்கக்கூடிய சிக்கலான அறுவை என முடிவானதும். தங்கை ”ஒருக்கால் திரும்ப வர முடியாம போச்சுன்னா இந்த உடம்ப இந்த ஹாஸ்ப்பிட்டலுக்கே குடுத்திட்டு. வெச்சிக்கிட்டு இவங்க ஏதாவது படிக்கட்டும்” என்றாள். அன்றெல்லாம் ஏதேதோ சிந்தனைகள். இதோ முடிவு என உணரும்போதுதான் இந்த வாழ்வை நிறைவுள்ள பயனுள்ள ஒன்றாக மாற்ற அகம் விரும்புகிறதா. இந்த வாழ்வு ஒரு பரிசு என உணர மரணம் வந்து வாசலில் காத்திருக்கும் செய்தி நமக்கு உரைக்க வேண்டுமா? அன்று இயல்பாக வானுவுக்குத்தான் தொலைபேசினேன். பொதுவாக இத்தகைய முன்னறிவிப்புகள் எளிய மனங்களுக்குள் எரியும் சுடரை அணைக்கவே செய்யும். வானுவுக்குள் இத்தருணமே அவளது அகச்சுடரை தூண்டிவிட்டிருக்கவேண்டும்.
அன்று திருவண்ணாமலை கிரிவல முகங்களை பராக்கு பார்த்து நின்றிருந்தேன். கழுத்துக்கு கீழே செயல்பட இயலா மகள் ஒருவளை அவளது தாய், சக்கர நாற்காலியில் வைத்து நடை பயின்று வந்து கொண்டு இருந்தாள். மக்கள் வழிக் கடை ஒன்றினில் தென்பட்ட பண்டம் எதையோ காட்டி உண்ணக் கேட்டாள். சுகாதாரம் கருதியோ செரிக்காது என்றோ அம்மா அதை மறுத்தாள். அது மோட்டார் பொருத்திய நாற்காலி. மகள் சட்டென கோபித்து, பொத்தானை இயக்கி விறு விறுவென முன்னாள் சென்றாள். அம்மாவால் பின்தொடர்ந்து ஓட இயலவில்லை. என்னென்னவோ சமாதானம் [ நீ கேட்டதை வாங்கித் தாரேன் உட்பட] சொல்லியபடி பின்னால் ஓடி வந்த அம்மாவை மகள் திரும்பியே பார்க்கவில்லை. ”அம்மாவை விட்டுட்டு போகாதடி. . ” என்று ஊர் திரும்பி பார்க்க அழுதபடி அம்மா கத்திய பின்பே மகள் நின்றாள். திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.
அன்றும் வானதிக்கு தொலைபேசினேன். ”சீனு இந்த இண்டிபெண்டண்ட் எப்படி இருக்கு தெரியுமா? சும்மா பறக்கற மாதிரி இருக்கு” என்றபடி அவள் இப்போது மோட்டார் நாற்காலியில் ஆரோகணித்து பயணிக்கும் அனுபவத்தை சொன்னாள். அவளுக்கும் எனக்குமான நட்பு. பிறிதொன்றில்லாதது. அவள் வழங்கிய நட்பின் கதகதப்பு கைரேகை போல தனித்துவமானது. முதலில் அவள் என் இலக்கியத் தோழி. வெண்முரசு குறித்து அவளுடன் பேசும்போதெல்லாம் கிருஷ்ணன் வரும் தருணங்களில் அவனை அய்யோக்கியப் பயல் என்றே விளிக்கச் சொல்வாள். [ஏன் எனில் நீலனை ஒரு கட்டுரையில் அய்யோக்கியப் பயல் என விளித்திருந்தேன்] அவளுக்கு அந்தப் பதம் மிகப் பிடிக்கும்.
ஆதவ் அதன் விதை முதல் இன்றைய விருட்சம் வரை வளர வானு அடைந்த மூன்று இடர்களும் அதை அவள் கடந்த லாவகமும் களப்பணி லட்சியவாதிகள் யாவர்க்கும் ஒரு பாடம் என்றே எண்ணுகிறேன்.
இருக்குற கொஞ்ச நாள், எதோ புஸ்தகம் படிச்சோமா, நண்பர்கள் கூட பேசுனோமா சந்தோஷமா இருந்தோமா அப்டின்னு இருக்குறத விட்டுட்டு எதுக்கு இந்த டிரஸ்ட் அது இதுன்னு வெட்டி டென்சன்? இதுவே அவள் எதிர்கொண்ட முதல் இடர். உரையாடுகையில் என்னிடம் சிரித்தபடி சொன்னாள் ”என் முன்னால ரெண்டு பாதை இருக்கு, ஒன்று பாதுகாப்பான சந்தோஷமான பாதை. மற்றொரு பாதையில் என்ன உண்டு என்ன கிடைக்கும் என்றே தெரியாது. நான் ரெண்டாவது பாதையைத்தான் தேர்ந்தெடுப்பேன். அந்த இரண்டாவது பாதையில் என்ன இருக்கிறது என கண்டு சொல்லும் முதல் ஆளாக நாந்தான் இருப்பேன்”. அவள் தேர்ந்தெடுத்த இரண்டாவது பாதைதான் ஆதவ்.
இரண்டாவது இடரும் சக மனிதர்களால் விளைந்ததே. அவளது சந்தேகமா, பயமா, அல்லது உண்மையேதானா நான் அறியேன் அவளது செயல்பட இயலா நிலையை பயன்படுத்தி அவளது சமூக பங்களிப்பில் தனது அதிகாரத்தை அவள் மேல் நிலை நாட்ட நெருங்கிய சிலர் முயல்வதாக ஒரு முறை பேச்சினிடையே சொன்னாள். ஆதவ் கட்டிட வேலையின் துவக்கத்தில் எந்த அறமும் இன்றி பணம் பறிக்க தொடர்ந்து படையெடுத்து முயன்ற மானுடக் கீழ்மைகளையும் சிரித்தபடி சொன்னாள்.
மூன்றாவது இடர் மிக முக்கியமானது. ”இதை முடிக்க முடியாதோ அப்டின்னு பயம்மா இருக்கு சீனு. ரெண்டு மாசமா ஒரு சின்ன துரும்பு கூட நகரல ” என்றாள். எந்த மாபெரும் செயலும் அது முழுமை பெரும் முன், அதை முன்னெடுப்பவர் முன் இப்படி ஒரு பெரும் இருட்டு எழுந்து நிற்கும். அதில் தொலைந்து போனவர்கள் பலர். அதை வானு கடந்து வந்த லாவகம் பேரழகு. எதிர்கால கனவுகளை மனம் துரத்துவதை முற்றிலும் தடை போட்டாள். ஒரு நாளுக்கு ஒரே ஒரு வேலை என வகுத்துக் கொண்டாள். அந்த வேலையே மிச்சமின்றி முற்ற முழுதாக முடித்தாள். ஆம் எந்த மாபெரும் பயணங்களும் காலடி காலடியாகத்தான் நிகழ்கிறது. இரண்டே மாதம் அனைத்தும் ஒருங்கிணைத்து பணிகள் துரிதம் கொண்டது.
இந்த இரண்டுக்கும் வெளியே எனக்கும் வானதிக்குமான உலகம் பிறர் அறியாத ஒன்று அழகான ஒன்று. அவளே சமைத்து அவளுக்கு பிடித்தவர்களுக்கு பரிமாறும் ஆவல் கொண்டிருந்தாள். எனது மெனுவான பருப்பு சாதம் [நெய் ஊற்றி] உருளை வறுவலை கேட்டு தெரிந்து கொண்டாள்.
அவள் உள்ளங்கைகளை என் கைகளுக்குள் பொத்திக்கொள்ளாமல் ஒரு சந்திப்பு கடந்து சென்றதில்லை. யாருமற்ற தனிமையில் மழை பெய்யும் கடற்கரையில் நின்றிருக்கவேண்டும் என்பது அவளது ஆசைகளில் ஒன்று. அவள் என்னுடன் இறுதியாக பேசிய சொற்கள் ”இன்னும் நீ ஆதவ் பாக்க வரவே இல்ல. இங்க வா ரெண்டு நாள் எங்க கூட இரு நிறைய பேசணும்” போகவில்லை. இனி என்றும் போகப்போவதில்லை.
ஒரு முறை விடை பெறுகையில் ”சீனு இரு இரு உங்களுக்கு ஏதாவது கொடுக்கணும் போல இருக்கு. . அம்மா சீனுக்கு எதுனா கொடும்மா” என்றாள் வானு. . அம்மா பதறி தேடி, கையில் இருந்த நூறு ரூபாயை தந்தார்கள். அறம் நூல் வெளியீட்டு விழா. மிஷ்கின் பேசிக் கொண்டிருந்தார். அறைக்குள் நுழைந்த பட்டாம்பூச்சி ஒன்று, வழி தேடி தவித்து, மின்விசிறியால் இழுக்கப்பட்டு…., தரையில் கிடந்த அதன் ஓற்றை இறகு நீநேரம் இழந்த வானைத் துழாவிக் கொண்டிருந்தது. வானதி வசம் விடைபெற கார் கண்ணாடி வழியே அவளை பார்த்தேன். ”பாவம்ல பட்டாம்பூச்சி” என்றாள்.
இறுதியாக அவளுக்கு தொலைபேசுகையில் வல்லபிதான் எடுத்தார். வானுவால் பேச முடியாது என்றார். பேச முடியலைன்னா என்ன கேக்க முடியும்ல ஏர் போன அவ காதுல செருகுங்க நான் அவ கூட பேசணும் என்று முதன் முறையாக வார்த்தைக்கு மூன்று நிமிட சிரிப்பை அளிக்கும் வானு வசம், ஒரு உம் கூட எழாமல் முக்கால் மணி நேரம் நான் மட்டுமே வெண் முரசு பற்றி பேசிக் கொண்டிருந்தேன். இயலா நிலையில் காலம் நமது தலையில் இறக்கும் பாரத்துக்கு நிகரான நரகு பிறிதொன்றில்லை. அன்று அந்த நிமிடங்களில் அங்கே அவளுடன் நானும் இருந்தேன்.
நண்பர் சந்திரசேகரின் மின்னஞ்சல்கள் தொலைபேசி எண் அனைத்தையும் அழித்து விட்டேன். வானுவின் தொலைபேசி எண்….
மரணம் எனும் மாறா விதி முன் துயர் கொண்டு நிற்பதை போல அபத்தம் வேறில்லை. ஆனாலும் அந்த அபத்ததில் நிற்கிறேன். காரணம் இது மரணம் மட்டுமல்ல அவள் எனக்குமட்டுமே அளித்த தனித்தன்மையான உலகம் ஒன்றின் இழப்பு இது. இனி ஒரு போதும் மீள இயலா இனிய உலகம்.
ஜெயகாந்தனின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன். அவள் ஏற்றிய சுடர் ஆதவ். காசி செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். கங்கையில் அவள் நினைவால் சுடரும் விளக்கு ஒன்றினை மிதக்கவிடுவேன்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வானதி- நினைவுகளினூடாக…
கோவையில் வானவன் மாதேவியையும் இயலிசை வல்லபியையும் முதன்முறையாகச் சந்தித்த தருணம்என்னால் [கோவை 2011 ] என்னும் கட்டுரையாகப் பதிவுச்செய்யப்பட்டுள்ளது.
கோவைக்கு புத்தகக் கண்காட்சிக்காகச் சென்றிருந்தேன். நண்பர்களுடன் நாஞ்சில்நாடன் வீட்டுக்குச் செல்லும்படி வாய்த்தது. அங்குதான் அவர்கள் வந்திருந்தனர். முன்னர் அவர்களை வாசகிகளாக அறிந்து மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாகப் பேசியிருக்கிறேன்.

நாஞ்சில்நாடன் வீட்டில்
அதன்பின் ஈரோட்டில் நிகழ்ந்த அறம் நூல்வெளியீட்டு விழாவுக்கு அவர்கள் வந்திருந்தனர். [அறம் வெளியீட்டுவிழா நிகழ்ச்சிப்பதிவு ] அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களில் அவர்கள் இருப்பதை இன்று எடுத்துப்பார்த்தேன்.

அறம் வெளியீட்டு விழா ஈரோடு
வானதியும் வல்லபியும் விஷ்ணுபுரம் நண்பர்களின் வட்டத்துக்கு மிக அணுக்கமானவர்களாகவே இருந்தனர்.

ஏற்காடு முகாம் கூட்டுப்புகைப்படம்
ஏற்காடு காவிய முகாம். கூட்டுப்புகைப்படத்தில் வானதி இருக்கிறார். [ஏற்காடு காவிய முகாம் பதிவு] எப்போதும் ஊட்டி வர விரும்பியிருந்தார். அவருடைய உடல்நிலை அங்கு வருவதற்கு ஒத்துழைக்கவில்லை.
வானதி ஏற்காடு இலக்கிய முகாம் குறித்து எழுதிய குறிப்பு ஒன்று என் தளத்தில் பிரசுரமாகியிருக்கிறது [வானதி எழுதிய குறிப்பு ஏற்காடு இலக்கிய முகாம்]
வானதில் வல்லபி இருவரும் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள். 2103 ,2014, 2015 நிகழ்ச்சிகளில் அவர்களின் வருகை ஒரு இனிய அனுபவமாக இருந்தது

ஏற்காடு இலக்கிய முகாமில் வானதி வல்லபி
நான் கடைசியாக வானதியைப் பார்த்தது அவர்களின் இல்லம் திறப்பு விழா நிகழ்ந்தபோது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் பேசினேன். வானதியை மிக மகிழ்ச்சியாகச் சந்தித்த தருணம் அது
வானவன் மாதேவி இல்லத் திறப்புவிழா குறிப்பு
அந்த இல்லத்தை நான் திறந்துவைத்தேன். ஒரு கனவின் ஈடேற்றம் என்னும் தலைப்பில் அன்று பேசினேன்.

இல்லத்திறப்பு விழா
ஆதவ் சகோதரிகள் கடிதங்கள் .போன்று பல எதிர்வினைகளில் அவர்களின் இலட்சியவாதம் மீதான பெரும் ஈர்ப்பை வாசகர்கள் வெளியிட்டிருப்பதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அறம் தொகுதிக்குப்பின் பெரும்பாலும் அதே மனநிலையில் நின்று நான் எழுதிய வெண்கடல் தொகுதியின் கதைகளை அவர்கள் இருவருக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் [பால்வெள்ளம்]
நேற்று [17-1-2017] காலை கோவையிலிருந்து கிளம்பி காரில் நண்பர்களுடன் வானதியின் இல்லத்துக்குச் சென்றேன். வல்லபியைக் கண்டு பேசிவிட்டுத் திரும்பினேன். சொல்வதற்கொன்றும் இல்லை, அவள் கைகளைப் பற்றிக்கொள்வதை விட.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சம்ஸ்காரா- கடிதங்கள்
மதிப்புமிகுந்த எழுத்தாளர் செயமோகன் அவர்களுக்கு,
தாங்கள் எழுதியிருந்த சமசுக்காரா கட்டுரைகளை வாசித்தேன். முதலில் நவின் கட்டுரை ஏமாற்றம் கொடுக்கவே உங்களதை வாசித்தேன் இரண்டுமே எனக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. நான் அந்த நாவலை இருமுறை வாசித்துள்ளேன். நண்பர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். அந்த நாவல் குறித்து விரிவாகவும் எங்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளது. எங்கள் அளவுக்கு அந்த நாவலை ஆழ புரிந்துகொண்டவர்கள் குறைவு என்றே நம்புகிறேன்.
பிராமணியத்தை எதிர்க்கும் ஒரு போராளியை இவ்வளவு மட்டமாக நீங்கள் இருவருமே தவறான புரிதலுடன் காட்டியுள்ளீர்கள். மோடியை நேரடியாக எதிர்த்ததன் மூலமே அரசியல் நிலைபாடு என்னவென்று தங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவரது கருத்துகளை தத்துவத்துக்குள் திணித்து ஆன்மிக நூல் போல சித்தரித்துள்ளீர்கள்.
இதுதான் வாசிப்பா? அந்த நாவலில் பிராமணியத்தைக் கிண்டல் செய்யும் ஒருவனிடமும் சனாதனம் இருப்பதுபோல மட்டமாக்குவதுதான் விமர்சனமா? தங்கள் ஆக்கங்கள் எந்த நோக்கத்திலும் எழுதப்படட்டும். ஆனால் அடுத்தவர்களின் எழுத்துப்போராட்டத்தை மலினப்படுத்தாமல் இருந்தால் அதுவே பேருதவி. தங்கள் நிலைபாட்டை அறிய விரும்பும்
ஈசுவர்
***
அன்புள்ள ஈசுவர்
அனந்தமூர்த்தியை தீக்கா ஆக்கிய வாசிப்பு வல்லமைக்கு வணக்கம். இங்கு எதுவும் சாத்தியமே என நிறுவிவிட்டீர்கள்
ஜெ
***
அன்புள்ள ஜெ,
அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா பற்றி மீனாட்சி முக்கர்ஜி மிக விரிவான ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார். மீனாட்சி முகர்ஜியின் அந்தக்கட்டுரை வழியாகவே மேற்குலகில் சம்ஸ்காரா புகழ்பெற்றது என்று சொல்வார்கள். அதிலுள்ள மேற்கத்திய நோக்கிலான ‘மீட்பு’ கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாமென நினைக்கிறேன். அந்தக்கட்டுரை மேற்கத்தியநோக்கில் அமைந்தது. அதாவது சிந்தனை, பாலியல் அனைத்திலும் ‘சுதந்திரம்’ மட்டுமே ஆன்மிக விடுதலை என்று அது சொல்கிறது. அந்தக்கட்டுரை மிகமுக்கியமான ஒன்று
சுந்தரம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குறளுரை கடிதங்கள்-1
வணக்கம் ஜெ,
நல்லா இருக்கீங்களா? குறள் சார்ந்து அழுத்தமாய் ஒலித்த, இன்னும் பல நாட்களுக்கு மனதில் எதிரொலிக்கும் ஆழமான குரல் தங்களின் மூன்று நாள் உரை. ‘கொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம்’ என்ற வரி என் வாழ்வில் ஏனோ அவ்வப்போது மனதில் வந்து செல்லும். ஏனென்று தெரியாத, ஆனால் எதுவோ குறித்து உணர்த்தும் விதமாக அமைந்த கணங்கள் அவை.
தங்கள் வாழ்வின் ஊடாக குறள் தன்னை வெளிப்படுத்தி நின்ற கணங்களைக் கேட்ட போது சிலிர்த்துப் போனேன். அரங்கின் கைத்தட்டல் அங்கிருந்த ஒவ்வொருவரின் சிலிர்ப்பையும் உணர்த்தியது.
மூலநூலாக கருவறையில் வைத்துவிட்டதில் விளைந்த விலக்கம் குறித்து தாங்கள் கூறியது ஒவ்வொரு இளைஞனுக்கும் ‘ஆமால்ல,’ என்ற உணர்வையே ஏற்படுத்தும் என நினைக்கிறேன். முதல் நாள் வந்து அமர்ந்ததுமே பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் அங்கு இசைத்துக் கொண்டிருந்த குரலிசை குறித்து, ‘தம்பி, இது எத்தனாவது அதிகாரம்?’ எனக் கேட்டார். நெளிந்து சற்று குறுகி ‘தெரியலீங்க’ என்றேன். அவர் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்துவிட்டு, எழுந்து நான்கு நாற்காலிகள் தள்ளிப்போய் அமர்ந்தார். தொடர்ந்து அவரைக் கவனிக்கும்போது, அடிக்கடி பக்கத்தில் இருப்பவரிடம் அவர் தன் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார். வாசிப்பதையும் பயில்வதையும் தாங்கள் வேறுபடுத்தி விளக்கியபோது, அந்த பெரியவர் வாசித்திருப்பாரா? இல்லை பயின்றிருப்பாரா? என்ற கேள்வி.
முதல் நாள் தாங்கள் உருவாக்கிய நந்தி கொஞ்சம் கூட தலைசாய்க்க மறுத்தாலும் நின்று வணங்கிச் செல்ல வைத்தது நிதர்சனம். இரண்டாம் நாள் உரை ஒரு பிரமை நிலையில் அரங்கில் இருந்தவர்களைக் கேட்க வைத்தது. மூன்றாம் நாளின் அந்த ஒற்றை விசில் சத்தம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்துதான் வந்ததாக நான் நினைக்கிறேன்.
எப்படி குறளை அதன் ‘திரு’வைத் தாண்டி பயில வேண்டும், அது எப்படி ஒரு தியானமாக மாறும், மாற முடியும், நம் வாழ்வனுவபங்களில் குறள் எப்படி நின்று நம்மை நடத்திச் செல்லும், குறளைப் பயில்தலின் படிநிலைகள் என்னென்ன, சமணம் சார்ந்த குறளின் வரலாறு என்ன, அது சார்ந்த மழுங்கடிப்புகள் எப்படி நிகழ்ந்தன, இன்றைய தலைமுறை இது எல்லாம் அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என தங்கள் மூன்று நாள் ஆராய்ச்சி பகிர்வு தமிழின் மிகப் பெரிய ஒரு நன்முயற்சி ஜெ.
‘இந்த பூமியே விசும்பின் ஒரு துளி தானே’ என்று நீங்கள் முடித்தபோதும், ‘சிரவனபெலகோலாவில் இருக்கும் நூறு காலடிச் செதுக்கல்களில் ஒன்று அய்யனுடையது, அதை வணங்கி முடிக்கிறேன்’ என்ற போதும் என்னுள் ஒரு திறப்பை விதைத்தீர்கள் ஜெ. நன்றி.
இந்த உரைத்தொகுப்பு இணையத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு தமிழனும் கண்டுணர வேண்டியது. இதன் எழுத்து வடிவம் வர வேண்டும் என விரும்புகிறேன் ஜெ. மகிழ்ச்சி ஜெ. நன்றி…
சுசீல் குமார்
***
அன்புள்ள ஜெமோ
திருக்குறள் உரையைக் கேட்க சின்னச்சேலத்தில் இருந்து வந்திருந்தேன்.. ஒவ்வொருநாளும் கலந்துகொண்டுவிட்டு திரும்பிவந்தேன். பேருந்தில் ஒரு தூக்கம் போட்டுவிட்டு விழிக்கும்போது உங்கள் குரலைக் கேட்டுக்கொண்டே இருப்பதுபோல இருக்கும்.
நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். உங்கள் குரல் உடைந்தது, கம்மியது. நீங்கள் அடிக்கடி நினைவுகளில் அரைக்கணம் சென்று தடுமாறுகிறீர்கள். அதோடு சொற்களை விழுங்கிவிடுகிறீர்கள். ஆனால் அதெல்லாமே உங்கள் பேச்சுபோல அந்தரங்கமானதாகவே இருக்கிறது. ’ஸ்டேண்டேர்ட்’ ஆக இல்லாமலிருப்பதுதான் அதன் சிறப்பே. அந்த தடுமாற்றம் எல்லாம் உங்களை மிகவும் அருகாமையில் உணரவைக்கிறது. சிந்தனை கூர்மையாக வெளிப்படும்போது அருமையான சொற்றொடர்கள் வருகின்றன. மற்ற இடங்களில் சொல்லுக்காக உங்கள் மனம் தேடுவது தெரிகிறது. ஆனால் கிளீஷேக்களுக்குள் செல்லாமல் பேசுகிறீர்கள்.
அனைத்தையும் விடமுக்கியமாக என்னதான் அச்சுத்தமிழ் பேசினாலும் வரும் கேரளநெடி. அல்லது கன்யாகுமரி நெடி. ர உச்சரிப்பை சொல்லும்போதெல்லாம் அதுதான் வருகிறது. அது உங்களை இன்னும் நெருக்கமானவராக ஆக்குகிறது. செயற்கையான கம்பீரம் செயற்கையான உச்சரிப்பு கேட்டுக்கேட்டு சலித்த மனதுக்கு அழகான அனுபவமாக இருந்தது. அதிலும் இரண்டு, மூன்றாம்நாள் உரைகளில் மேடையிலேயே உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டீர்கள். பேசமுடியாமல் திணறினீர்கள். வாழ்க்கை முழுக்க மறக்கமுடியாத முகம் அது.
மூன்றுநாள் உரையுமே அருமையானவை. முதல்நாள் உரையை பேராசிரியர் போல எண்ணி எண்ணி பேசினீர்கள். ஏராளமான தகவல்களுடன் ஒரு பெரிய அடிப்படையை அளித்தீர்கள். பின்னர் வந்த உரைகளுக்கெல்லாம் அதுதான் அடிப்படை. குறிப்பாக இரண்டாம்நாள் உரையும் மூன்றாம்நாள் உரையும் முடிந்தபின்னர்தான் முதல்நாள் உரையின் முதலுவமை புரிந்தது. தவம்செய்த ஆசாரவாதிக்குப் பிடிகிடைக்காத தெய்வம் எப்படி வேடனுக்குக் கிடைக்கக்கூடும் என்பதைத்தான் இருபதுக்கும் மேற்பட்ட குறள்கவிதைகளை உவமைகளுடன் விரிவாகச் சுட்டிக்காட்டினீர்கள்.
மூன்று உரைகளுக்கும் பின்னாடி முதல்நாள் உரை தெளிவடைய ஆரம்பித்தது. அதிலிருந்த உவமைகள் மேலும் தெளிவாகப்புரிந்தன. பகடிகள்கூட பிடிகிடைக்க ஆரம்பித்தன [குறிப்பாக திருவள்ளுவருக்கு தமிழாசிரியர்களைப் பலிகொடுப்பது பற்றிய கேலி] அப்படிப்பார்த்தபோதுதான் எவ்வளவு திட்டமிட்டு இந்த உரைகள் ஆற்றப்பட்டிருக்கின்றன, எவ்வளவு கூர்மையான வடிவம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். நன்றி.
செல்வக்குமார்
***
மேடையில் நான் படத்தைப் பார்த்தால் வேறு விதமாக அல்லவா உள்ளது?
ஆக்ரோஷமாக, கவனியாத மாணவர்கள் மேல் சாக்பீஸ் எரியும் ஆசிரியர் போல் தெரிகிறீர்கள். சிங்கப்பூரில் கற்றுக் கொண்டீர்களோ?
சிவா சக்திவேல்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சிரவணபெலகுலாவின் திருவடிகளில் அய்யனின் திருவடிகளும் இருக்கக் கூடும். அவரது அருள் எங்கும் என்றும் இருக்கும். வானதி என்ற குழந்தையின்பால் தங்கள் அன்பு – “உயிர் ஈரும்” என்பதை விட “உயிர் ஈனும்” என்பதல்லவா உங்களிடம் இருந்து திரும்பத்திரும்ப வந்தது. நிச்சயம் ஈனும். ஆரோக்கியமான, வலிமையான, அழகான உடல் ஈனும் அத்துடன் சிறப்பும் செல்வமும் ஈனும்.
வாளை மட்டுமல்ல அல்ல
வாழ்க்கையை – அத்துடன்
நேற்று வள்ளுவர் கோலையும் கூட
கண்டிருக்கக் கூடும் வானதி.
அது
திருவள்ளுவப்பெருமான் அருள்
நேரம் போவது தெரியாமல் கட்டிப்போட்டு விட்டு சிறந்த பேச்சாளர் இல்லையா? – உங்கள் கூற்றை மறுக்க மாட்டேன் பேச்சு என்பது வெறும் வாய்ச்செயல் என்றால். அது இதயத்தின் செயல் என்றால் நீங்கள் அரிதான சிறந்த பேச்சாளர்களுள் ஒருவர்.
அன்புடன்,
விக்ரம்,
கோவை
***
அன்புள்ள ஜெ
முதல்நாள் உரை சற்றுப்பெரியதாக இருந்தது. நேரத்தைச் சொல்லவில்லை. அதன் தகவல்களின் அளவைச் சொன்னேன். அப்படி கடந்துசென்றுகொண்டே இருந்தமையால் தொகுக்க முடியவில்லை. ஆனால் நான் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். பலரும் அப்படி உணர்ந்திருக்கக்கூடும். மிகச்செறிவான உரை. வழக்கமான ஆழ்ந்த குரலில் அமையவும் இல்லை. ஆனாலும் அத்தனைபேரும் அசையாமல் அமர்ந்து உரையைக்கேட்டனர். திருக்குறள் போன்ற ஒரு தீவிரமான நூலுக்கு இப்படி ஒரு தீவிரமான உரையைக் கேட்க ஆயிரம்பேர் வந்திருந்தது ஆச்சரியமான விஷயம்தான். அவர்கள் சிலைபோல அமர்ந்து கேட்டதும் மிகமிக ஆச்சரியமானது.
முதல்நாள் உரையில் அத்தனை தகவல்களையும் நினைவில் நிறுத்திக்கொள்வதற்காகத்தான் ஏழு உவமைகள், அனுபவங்கள் வழியாக அந்த கட்டமைப்பை உருவாக்கினீர்கள் என நினைக்கிறேன். குறள் எப்படி குழந்தைமனம் கொண்ட, நேரடியான கவிதைவாசகனுக்கு பண்டிதர்களைவிட அணுக்கமானது என்பது முதல் பத்தி. அதற்கு நரசிம்மத்தைத் தவம்செய்தவரின் கதை. குறள் எப்படி பக்தியுடன் ஒற்றைப்படையாக அணுகும்படி ஆக்கப்பட்டுள்ளது என்பது இரண்டாம் கருத்து .அதற்கு ஜிபிஎஸ் வைத்து சுற்றிச்சுற்றி அலைந்தது உதாரணமான கதை. இப்படி ஆறுபத்திகள்.
முதல்நாள் உரையை பிற இரண்டுநாள் உரைகளைக்கொண்டு புரிந்துகொள்ளும்படி அமைந்திருந்தது. வாழ்த்துக்கள் ஜெ
சரவணன்
***
ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண
குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist
https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

