Jeyamohan's Blog, page 1686
January 21, 2017
ஜல்லிக்கட்டு இரு கருத்துக்கள்
ஜெ,
நண்பர் Rajkumar Rathinavelu ஜல்லிக்கட்டு மற்றும் அது சார்ந்த அறிவியல்,வணிக,சமூக மற்றும் கலாச்சார பரிமாணங்களை ஆய்ந்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். எளிமையாகவும் தெளிவாகவும் பலவிஷயங்களை அக்கட்டுரை விளக்குகிறது. (Tamil translation by Mathi)
A1 மற்றும் A2 , அவற்றின் விளைவுகள் :
இன்று மிகப்பரவலாக பேசப்படும் , பசுவின் பாலிலுள்ள A1 மற்றும் A2 வகை புரதங்களின் அறிவியலை சற்று அறிந்து கொள்வோம்.அவை அடிப்படையில் , பாலிலுள்ள பீட்டா( β) கேசின் புரதங்களின் இரண்டு திரிபு(mutant) வகைகள். அவை தம்மை நிர்ணயிக்கும் அடிப்படை கட்டமைப்புகளில் 67வது இடத்தில் உள்ள அமினோ அமிலத்தின் வகைகளால் வேறுபடுகின்றன. A1 வகை புரதம் தன் கட்டமைப்பில் 67வது இடத்தில் ஹிஸ்டிடின் எனும் அமினோ அமிலத்தையும் A2 வகை புரதம் ப்ரொலைன் எனும் அமினோ அமிலத்தையும் கொண்டுள்ளது.
இதில் A1 வகை புரதம் அல்லது A1 வகை பீட்டாகேசின் உட்கொள்ளப்படும் போது ஏழுவகை அமினோஅமிலங்களின் தொகுப்பான BCM7 எனும் பெப்டைடுகளை உருவாக்குகிறது. இந்த BCM7 ஆனது மனித உடலுக்கு ஊறு விளைவிக்கும் அபாயங்கள் கொண்டதென கருதப்படுகிறது. குறிப்பாக நரம்புகள், சுரப்பி நாளங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளை பாதிக்கும் சாத்தியங்கள் வாய்ந்தது. தீய கொழுப்புகளை ஆக்சிஜனேற்றம் செய்வதன் மூலம் திசுச் சேதங்களை உண்டாக்குவதிலும் பங்குவகிக்கிறது
நாட்டுவகை பசுக்கள் (ஜெபு இனம்) மற்றும் எருமைகளையும் , அயல்வகை பசுக்களையும்(டாரின் இனம் ) வைத்து நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வுகள், அயல்வகை கால்நடைகளில் A1ஆக உருப்பெறும் மரபணுக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாகவும், ஆனால் இந்திய வகை பசுக்களிலும், எருமைகளிலும் A2 வகையை உருவாக்கும் மரபணுக்கள் மட்டுமே இருப்பதாகவும், ஆகவே அவை பாதுகாப்பான பாலை உருவாக்கும் மூலாதாரங்களாக இருப்பதையும் வெளிக்கொணர்ந்தன. A2 வகை பீட்டாகேஸினால் ஆன பாலைப் பருகும் மக்கள்தொகைக்கு இருதய மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஆளாகும் சாத்தியங்கள் மிக்க குறைவு என்பதையும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
A1 உருவான விதம்:
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய இடப்பெயர்வின்போது அங்கு கொண்டுசெல்லப்பட்ட கால்நடையினங்களில் மரபணுசார் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன்விளைவாக, அம்மாடுகள் A1 மற்றும் A2 வகை புரதங்களை சம அளவில் கொண்ட அல்லது A1 வகையை அளவில் மிக அதிகம் கொண்ட பாலை சுரக்கத்துவங்கின. ஆகவே , ஐரோப்பா, அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடையினங்கள் A1 வகை புரதம் நிறைந்த பாலை சுரப்பவையாக இருக்கையில் , இந்திய மற்றும் ஆப்ரிக்க கால்நடைகள் A2 வகை புரதம் நிறைந்த பாலை உற்பத்தி செய்கின்றன.
இந்திய சூழல் சந்திக்க இருக்கும் அபாயம்:
ஒரு காளை மற்றும் பசுவினை இனப்பெருக்கத்துக்கு உட்படுத்துகையில். அவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ A1 வகை புரதத்தை உருவாக்கும் கால்நடை ஒன்றின் சந்ததியாக இருக்கும் பட்சத்தில், அப்பசுவின் சந்ததிகள் A1 வகை புரதத்தை உருவாக்குபவையாகவே பிறக்கும். A1 வகை புரதத்தை உருவாக்கும் மரபணுவே ஓங்கு தன்மை கொண்டது என்பது அறிவியல் பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது இருக்கும் 37 வகை நாட்டு மாட்டினங்களில் ( ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இதில் 150 வகைகள் இருந்தது!!!) 36 வகை மாட்டினங்கள் A2 வகை புரதம் உருவாக்கும் மரபணுக்களை கொண்டிருக்கின்றன.மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மால்வி எனும் ஒரே ஒரு நாட்டு மாடுகளினத்தில் மட்டுமே A1 வகை புரதம் உருவாக்கும் மரபணுக்கள் இருக்கின்றன.ஆனால் இந்த மால்வி வகைக் காளைகள் பெரும்பாலும் ஏர் உழவும் , பசுக்கள் மிகக் குறைவான பால் தருபவையாகவும் இருப்பதால் கவலை கொள்ளத்தேவையில்லை. தமிழ்நாட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ள 6 வகை நாட்டு மாட்டினங்கள் அனைத்துமே A2 வகை புரதம் சுரக்கும் மரபணுக்கள் கொண்டவை, ஆகவே அவை பாதுகாக்கப் படுதல் மிகமிக அவசியமாகிறது .
உள்நாட்டு கால்நடைஇனங்களை பாதுகாக்க ஜல்லிக்கட்டு எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கும் முன் , நாட்டு வகை காளைகள் இல்லாமல் போனால் என்னாகும் என்று பார்ப்போம். அது நாம் செயற்கைமுறை இனப்பெருக்கத்தை சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும். அது நாமும் நம் சந்ததியினரும் A1 வகை புரதம் நிறைந்த பாலை உண்டு வாழ வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளும். விளைவாக நீரிழிவு மற்றும் ஆட்டிஸம் போன்ற நோய்கள் பெருகும் நிலை உருவாகும். செயற்கை இனப்பெருக்கத்தின் இன்னொரு தீய விளைவு அவை உருவாக்கும் கால்நடை சந்ததிகள் இயல்பிலேயே வலிவற்றவையாக இருக்கும். அவற்றின் மரபணு தொகுப்பு உள்ளூர் சூழலுக்கும் கால நிலை மாற்றங்களுக்கும் தம்மை தக்கவைத்துக் கொள்ளும் திறனற்றும் இருக்கும்.
PETA :
இங்குதான் அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் பால் விநியோகம் செய்யும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை அறிந்து கொள்ள வேண்டும். இந்த நிறுவனம், மாடுகள் A1 வகை புரதம் சுரக்கும் மரபணு கொண்டதா அல்லது A2 வகை புரதம் சுரக்கும் மரபணு கொண்டதா என்பதை நிர்ணயிக்கும் மரபணு சோதனைக்கான காப்புரிமை(PATENT)யை கையகப்படுத்தி உள்ளது. இன்னும் தொந்தரவுக்கு உள்ளாக்கும் விஷயம், A2 வகை மரபணுக்கள் கொண்ட மாடுகளை செயற்கைமுறையில் இனப்பெருக்கம் செய்ய உதவும் காளைகளின் உயிரணுக்களுக்கான காப்புரிமையும் அவர்களிடம் இருப்பதே. A2 மரபணுவை ஓங்கு தன்மை பெறச்செய்யும் முறைமைக்கான காப்புரிமையும் அவர்களிடமே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் உள்நாட்டு கால்நடையினங்கள் ஒரு கட்டத்தில் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டால், ஒன்று இங்கு நாம் A1 வகை புரதம் நிறைந்த பாலையே உருவாக்கும் நிலை வரும்.அன்றி A2 வகை மரபணுக்கள் கொண்ட கால்நடைகளை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யவேண்டுமெனில் மிகப்பெரிய தொகையை நாம் அந்நிறுவனத்துக்கு ராயல்டியாக வழங்க வேண்டி வரும். இதுவே இன்று தமிழகத்தில் நாட்டு மாடுகளை வளர்ப்பவர்களின் பெருங்கவலை. இன்று நம்முன் உள்ள கேள்வி என்னவெனில், A2 வகை மரபணுக்கள் கொண்ட கால்நடைகளை நாமே தலைமுறை தலைமுறையாக போற்றி பாதுகாத்து வந்து கொண்டிருக்கும்போது, அவற்றை இழந்துவிட்டு எதிர்காலத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு ராயல்டி செலுத்தும் அவல நிலையை நோக்கி நம்மை நாமே ஏன் தள்ளிக்கொள்ள வேண்டும் என்பது தான். அப்பன்னாட்டு நிறுவனம் பீட்டா (PETA ) அமைப்புக்கு பெரும் நிதியளிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது , ஆனால் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இப்பன்னாட்டு நிறுவனம் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் பீட்டா அமைப்பின் கிளைகளுக்கு நன்கொடைகளை அள்ளி அள்ளி வழங்கி வருவது பெரும் ஐயங்களை தோற்றுவிக்கிறது. ஆனால் இந்தியாவில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைக்குப்பின் இவர்களின் கரங்கள் இருப்பதான ஐயங்கள் இருக்கிறது;இன்னும் ஆதார பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை.
ஜல்லிக்கட்டு எவ்வாறு உதவுகிறது?
இன்று தமிழ்நாட்டில் காளை வளர்ப்பவர்கள் அவற்றை ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தற்காகவே முதன்மையாக வளர்க்கிறார்கள். இன்றைய சூழலில், தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் காளைகளை வளர்க்கும் பொருளாதார வசதி பெற்றவர்கள் அல்ல. நாட்டு மாடுகளின் கால்நடைப் பெருக்கத்திற்கு அவர்கள் ஒன்று ஜல்லிக்கட்டு காளைகளையோ, அல்லது அவர்கள் ஊரில் கோயில் காளைகள் இருந்தால் அவற்றையோ மட்டுமே நம்பியே உள்ளனர். ஜல்லிக்கட்டு இவ்வகையில் காளைகளை தொடர்ந்து பேணுவதற்கான ஒரு சந்தையை உருவாக்குகிறது.
இன்னும் சற்று முன் சென்று ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு, முன்னும் பின்னும் உள்ள கால வரிசை நிகழ்வுகளை பார்ப்போம். ஜல்லிக்கட்டு பொங்கலின்போது நடைபெறுகிறது (அதாவது தை மாதம்). அங்கிருந்து புதிய உழவுக்காலம் துவங்குகிறது.அதுவே கால்நடைகளின் இனப்பெருக்க காலமும். ஜல்லிக்கட்டில் வலிமையானவை என அடையாளம் காணப்பட்ட காளைகள் கால்நடை இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப் படுகின்றன. அவை வீர்யம் வாய்ந்தவையாக இருப்பதுடன் தயார் நிலையில் இருப்பதும் அவசியம். அவை தேவையான ஹார்மோன்களை சுரக்க வேண்டும், அவற்றின் அட்ரினலின் சுரப்பு அதிகரிக்க வேண்டும், இதயத் துடிப்பு வேகம் பெற வேண்டும். ஜல்லிக்கட்டு அதற்கான தயாரித்தலை நிகழ்த்துகிறது. வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு களத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை நோக்கி காளைகள் ஓடுகையில் அவற்றில் டெஸ்டோஸ்டரான் அளவு அதிகரிக்கறது. இதயத் துடிப்பு வேகம் பெறுகிறது. இது காளையின் வலிமையை அதிகப் படுத்துகிறது. தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறைக்கு இவை யாவும் அத்தியாவசியம்.
சரி, ஜல்லிக்கட்டு இல்லாமல் இவற்றை செய்ய இயலாதா ? செய்யலாம். ஆனால் மாடுகளின் இனப்பெருக்கத் திறன் வெகுவாகக் குறையும். மேலும் ,நாட்டு மாடுகளுக்கு செயற்கை இனப்பெருக்க முறை பெரும்பாலும் நடைமுறையில் நம் நாட்டில் இல்லாத நிலையில் , நாளடைவில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அவை இல்லாமலாகும்.
ஜல்லிக்கட்டு நடைபெறாத இடங்களில் பிறக்கும் கன்றுகள், காளைகளாக இருந்தால் அவற்றால் வேறு பயன் ஏதும் இன்றில்லை( ஏர் உழவுக்கென காளைகள் பயன்படுத்தப் படுத்தல் முற்றிலுமாக நின்று போய் இன்று இயந்திரங்களே பயன்படுத்தப் படுகின்றன). எனவே அவை கறிக்காக விற்பனை செய்யப்பட்டு கொல்லப்பட்டுவிடும் அவலம் மட்டுமே நேர்கிறது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் மட்டுமே காளைக்கன்றுகள் பேணப்பட்டு வலிவூட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன. அவ்விடங்களில் காளைகளை காட்சிப்படுத்துதலும் , கௌரவச் சின்னமாகக் கொள்ளுதலும் காரணிகளாய் அமைந்து காளைகள் பேணப்படுவதை ஊக்குவிக்கின்றன.
இவ்வாறாக, விளையாட்டு என்ற ஒன்றினை தாண்டி வீரிய கால்நடையினங்களை காலங்கள் தாண்டி எடுத்துச் செல்லும் திட்டம் ஒன்றையும் ஜல்லிக்கட்டினுள் நம் கலாச்சாரம் போற்றி பாதுகாத்து தலைமுறைகளின் வழியே முன்னெடுத்து செல்கிறது. யோசிப்போம்.
ஆய்வு மற்றும் ஆங்கில மூலக்கட்டுரை : Rajkumar Rathinavelu.
கடலூர் சீனு
ஜல்லிக்கட்டும் அதன் பின்னணியும்
நடேசன்
மிருகவைத்தியர் அவுஸ்திரேலியா
தாய்லாந்து போனபோது என்னுடன் வந்தவர்கள் யானையில் ஏறி சவாரி செய்தார்கள். நான் ஏறவில்லை. அதற்குக் காரணம் யானைகளை சவாரிக்குப் பழக்கும்போது அவற்றை அடிபணிய வைக்க துன்புறுத்துவார்கள். அதற்கான ஆதாரங்கள் யானைகளில் வெள்ளைத் தழுப்புகளாக அதன் உடலில் பல இடத்தில் இருக்கும். அதேவேளையில் ஆசிய நாடுகளில் யானைகள் பல்கிப் பெருகியுள்ளன. அதற்குக் காரணம் அவை மனிதர்களுக்கு வழிபாட்டிற்க்கும்; தொன்மக் கதையாடல்கள் அரசபடை மற்றும் கூலியற்ற வேலையாள் எனப் பல வகைகளில் பயன்படுகின்றன. ஆனால் ஆபிரிக்க யானைகள் மனிதரோடு சம்பந்தப்படாது காட்டுயானையாக வளர்வதால்; அவற்றின் தந்தத்திற்காக வேட்டையாடுகிறார்கள். யானைளைப் பழக்குதலில் புதிய விஞ்ஞான முறைகளைப் பாவிக்கவேண்டும். இப்படியான நடைமுறைகள் தற்போது நாய்களை குதிரைகளைப் பழக்குவதிலும் பயன்படுத்தபடுகின்றன
மிருகங்களை கொல்வதும் துன்புறுத்தப்படுவதும்; தடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியவர் புத்தர்
புத்தசமயத்தால் கவரப்பட்ட அசோகனே குதிரைகள் இளைப்பாறுவதற்கும் காயங்களுக்கு பச்சிலை கட்டுவதற்கும் முதலாவதாக வைத்திசாலையை கட்டியவன். இதனாலயே மிருகவைத்தியசாலை பணியின் அனுபவத்தை எழுதிய கற்பனையான நாவலுக்கு அசோகனின் வைத்தியசாலை எனப்பெயர் வைத்தேன்.
இதற்கு மாறாக 10-12 ஆம் நூற்றாண்டில் அதாவது ஆதிசங்கரர் இராமானுஜர்கள் காலம் வரை இருந்த சனாதன மதம் அல்லது வேத பிராமணியம் உயிர்களை கொல்லுவது பாவமில்லை என்றது. மாட்டிறச்சியும் உணவாகியது. அதேபோல் மீன்கள் சாகரபுஸ்பமாக இன்னமும் வங்காளப் பிராமணரால் உண்ணப்படுகிறது.; பெரும்பான்மையான ஆதிவாசிகளும் தலித் மக்களும் சிறு தெய்வ மூதாதையினர் வழிபாட்டாளர்கள் அவர்கள் மிருகங்களை உயிர்பலி கொடுத்தும் மாமிசங்களை உண்பவர்கள். இதனால் இவர்களிடத்தில் மிருகங்கங்கள் சம்பந்தமான சிந்தனை உருவாகவில்லை.
ஆபிரகாமிய மதங்கள் மிருகங்களை வெட்டி அவர்கள் கடவுளுக்கு பலி கொடுப்பவர்கள். அதற்கான பல விடயங்கள் வேதாகமம் குரானில் உள்ளன.
13ஆம் நூற்றண்டில் பிராஸ்சிஸ் அசிசி Saint Francis Assisi) என்பவர் ஆண்டவனாலே மற்றைய உயிர்கள் படைக்கப்பட்டன அவை மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என்ற கருத்தை வைத்தவர். தனது காலத்தில் குருசுப்போரை நிறுத்த எகிப்திய சுல்தானை சந்தித்தவர். பிற்காலத்தில் அவர்(saint for ecology) எனப்பிரகடனப்படுத்தப்பட்டார். அவரை மதிக்க தற்போதைய பாப்பாண்டவர் பிரான்சிஸ் என்ற பெயரை எடுத்தார். பிரான்சிஸ் அசிஸ் புரட்டஸ்தாந்து மெதடிஸ்ட் என்ற மற்றைய மதப்பிரிவுகளாலும் கவுரவிக்கப்பட்டவர்.
அன்றில் இருந்து தொடர்ச்சியாக மேற்கு நாடுகளில் மிருகவதை பற்றிய எண்ணங்களில் மிகவும் சீரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவைகள் படிப்படியாக கிழக்கு நாடுகளிலும் செல்கின்றன.
நாய்களை உணவாக்கும் சீனா கொரியா வியட்நாம் போன்ற நாடுகளில் இப்பொழுது அதற்கு எதிரான உணர்வுகள் வளர்ந்து வருகிறது. தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அப்படியானதே. முக்கியமாக புளுக் குரஸ் (Blue Cross)செய்யும் விடயங்களால் முக்கியமாக நகரங்களில் நல்ல மாற்றங்கள் வந்துள்ளன. இளம்தலைமுறையினரிடம் அதிகமாகியுள்ளது. மேனகா காந்தி இந்த விடயத்தில் முக்கியமானவராக பலகாலமாக இருக்கிறார்.
தற்போது நாம் எதிர்கொள்ளும் மிருகவதைகளுக்கு எதிரான விடயங்கள் எல்லாம் மேற்கு நாடுகளில் 18 – 19 ஆம் நூற்றாண்டுகளில் உருவானவை. அவை பல தனிப்பட்டவர்களாலும் நிறுவனங்களாலும் போராடிப்பெற்றவை.
நான் தென்னமெரிக்கா சென்றபோது அங்கு காட்டுமிருகங்களை வைத்து சேர்க்;கஸ் நடத்;துவது தடைசெய்யப்பட்டதால் பல காட்டுமிருகங்கள் ஆபிரிக்காவில் உள்ள தனியார் காடுகளுக்கு செல்கின்றன. அங்குள்ள மக்களால் இந்தவிடயத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது.
அதேபோல் இலங்கையில் தெகிவளை மிருகக் காட்சிச்சாலைக்குப்போனபோது ஒரு குரங்கு தனது கழுத்தை தொடர்ச்சியாக ஆட்டியபடி இருந்ததை பார்த்தேன். அதேபோல் ஒரு யானையின் நடத்தையையும் பார்த்தபோது அவைகள் மிகவும் துன்பப்படுவதையும் அவதானித்தேன். இவைகள் எல்லாம் காட்டுமிருகங்கள். அவற்றை சிறிய இடங்களில் அடைக்கும்போது அவை துன்பப்படும்.
நாய்கள் ஆரம்பத்தில் காட்டுமிருகங்கள்தானே எனக்கேட்கலாம்…?
ஆனால், காலம் காலமாக மனிதர்களோடு அவைகளால் தற்பொழுது காட்டில் வாழமுடியாது.
குதிரை கழுதை போன்ற மிருகங்களும் காலம் காலமாக மனிதரோடு வாழ்பவை. மேலும் அவர்களது உடலும் மனமும் தொடர்ச்சியான வேலைக்கும் பாரங்களைத் தூக்கவும் பரிமாணமடைந்தவை. ஆனால், இதே இனத்தைச் சேர்ந்த வரிக்குதிரையால் பாரமிழுக்க முடியாது. குதிரை மற்றும் கழுதை மீது அதிகம் பாரமேற்றுதல் அடித்தல் என்பன வதையாக கருதப்படுகின்றது.
உணவுக்கு வளர்க்கப்படும் மிருகங்கள் ஆடு, மாடு, பன்றி என்பனவற்றை மனிதர்கள் வளர்க்கும்போது அவைகளின் உணவும் வாழ்விடமும் அத்துடன் அவைகளை வாகனங்களில் கொண்டுசெல்லுவது முதலான விடயங்கள் மிகவும் கருத்திலெடுக்கப்படுகிறது. இப்படியாக உணவுக்கு பாவிக்கப்படும் மிருகங்களை கொடுமையாக நடத்துவதில் மத்திய கிழக்கு நாடுகளும் இந்தியாவும் இன்னமும் அதே நிலையில்தான் இருக்கின்றன.
இதற்குக்கு காரணம், மிருகங்கள் பற்றிய விஞ்ஞான அறிவு பரந்த அளவில் அங்கு இல்லாமையே. உணவுக்காக மிருகம் துன்புறுத்தப்பட்டால் அதனால் அது களைத்துவிட்டால் அதனது இறைச்சி கடினமாகும்.
இனி நான் சொல்ல வருவது தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிகட்டுக்கு எதிரான போராட்டம் பற்றியது. இதுவும் பல அடுக்குகளைக்கொண்டது. ஸ்பெயினில் நடந்த மாட்டோடு சண்டை என்ற பாரம்பரிய விளையாட்டை பார்க்கவேண்டும் என்று சென்றேன். ஆனால், என்னால் அந்தக்காட்சியை தொடர்ந்து பார்க்கமுடியாமல் இடையில் வெளியே வந்துவிட்டேன். அந்தளவுக்கு கொடுமையானது அல்ல ஜல்லிக்கட்டு என்பதைச் சொல்லிவிடவேண்டும்.
இதைத் தடைசெய்வதற்கு சொல்லப்படும் காரணங்கள்:- ஜல்லிக்கட்டு மாடுகளை இதற்குத் தயாராக்கும்போது அவற்றுக்கு மதுவைக் கொடுக்கிறரகள், வாலை பிடித்து முறுக்குகிறார்கள். மிளகாய்த்தூளை காளையின் ஆசன வாயிலில் திணிக்கிறர்கள். இக்காரணங்கள் உண்மை என்றே நம்புகிறேன்.
அவுஸ்திரேலியாவில் கிரேகவுண்ட் ரேசுக்கு (Greyhound Dog Race) நான் மிருகவைத்தியராக கடமையாற்றப் போயிருக்கிறேன். ஒவ்வொரு நாய்க்கும் ஏதாவது வலி காயம் இருக்கிறதா என அவற்றின் உடலின் அனைத்துப் பாகங்களையும் சோதித்துவிட்டே அனுமதிப்பேன். ஏதும் வலி காயம் இருந்தால் அந்த நாயை பந்தயத்தில் இருந்து விலக்கிவிடுவேன். ஆனால், தற்பொழுது அவுஸ்திரேலிய நியு சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இந்த ரேஸ் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதேபோன்றே ஜல்லிக்கட்டிற்கும் இந்திய மத்திய அரசாங்கம் ஒரு கண்காணிப்பு சபையை நியமித்து நடத்தியிருக்கலாம். இவ்வாறு கண்காணிப்பு சபைகளை உருவாக்கும்போது நன்மை தீமைகளை மக்களுக்குப் புரியவைத்து விழிப்புணர்வை தோற்றுவித்திருக்கலாம். சட்டங்களில் உள்ள நன்மை தீமைகளை புரியவைக்காமல் அதை நடைமுறைக்கு கொண்டுவரும்போது மக்கள் தங்களுக்கு எதிரானது எனத்தான் நினைப்பார்கள். அதுவே தற்பொழுது தமிழகத்தில் நடக்கிறது.
இந்த விளையாட்டில் ஈடுபடும்போது மனித உயிர்களும் போவதைபற்றி எவரும் கணக்கெடுக்கவில்லை .
தமிழக அரசியல் அறிந்தவர்கள் இந்தப் போராட்டம் ஜல்லிகட்டு சம்பந்தப்பட்டது மட்டுமா எனவும் பார்க்கவேண்டும்.
தமிழகத்தில் காவேரித் தண்ணியில்லாமல் ஒவ்வொருநாளும் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். பல நகரங்களில் நிலத்தடி நீர் இல்லை. உலகத்தில் டெல்லி மாசுபடிந்த நகரமாக உள்ளது. சென்னையும் அப்படியான நிலைக்கு வருவதற்கு அதிக காலமில்லை. கடந்த வருடத்தின் வெள்ளம் வந்ததிற்கான காரணிகள் மாறிவிட்டதா…?
இப்படியான பல முக்கியமான விடயங்களை விட்டு விட்டு ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் கொந்தளிப்பது நியாயமானதா…?
தற்போது தமிழக எதிர்க்கட்சிகள், அரசியலில் ஜெயலலிதா மறைந்தபிறகு ஒரு வெற்றிடம் உள்ளது என நினைக்கின்றன. அதற்காக மக்களைத்திரட்ட ஜல்லிக்கட்டைப் பாவிக்கிறர்கள்.
பணநோட்டுக்களை இல்லாமல் செய்ததில் மக்களிடம் மத்திய அரசின்மேல் வெறுப்பு உள்ளது.; மத்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாகவும் சிலர் இதனைப்பார்க்கிறார்கள்.
இவர்களது கோசங்களில் உண்மையுள்ளதா…?
தமிழர்களின் பண்பாடு என்பது பலவீனமானது. தமிழ்நாட்டில் அரைவாசியினர் வேட்டியையும் சேலையையும் அணிவதை விட்டுவிட்டார்கள்.
காப்பி தேநீர் எல்லாம் எமது பாரம்பரியமா…?
சாதிக் கலவரம், உயிர்ப்பலி என்றும் கத்திவெட்டு, கன்னம் வைத்தல் , வழிப்பறி என எல்லாம் தமிழ்நாட்டில் அக்காலத்தில் நடந்தன. இவையெல்லாம் இன்றும் பாதுகாக்கப்படவேண்டுமா…?
ரோமர்கள், அடிமைகளை சிங்கத்தோடு மோதவிடுவதும் அமெரிக்கர்கள் அடிமைகளை வைத்திருந்ததும் வரலாற்றுக்கூறுகள் தானே…? பாதுகாக்க முடியுமா…?
அந்தக்காலத்தில் அதிக விளையாட்டுகள், கேளிக்கைகளாக இருக்கவில்லை.
நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை எந்த நாடுகளிலும் பார்க்க முடியாது. நீதியின் தீர்ப்புகளை விமர்சிக்க முடியாது. காரணம் ஜனநாயகம் சட்டங்களின் மீது உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டங்களில் நம்பிக்கை வைத்து நாம் வாழும்போது அந்தச் சட்டத்தை மதிக்கவேணடும். அந்தச் சட்டம் தவறாக இருந்தால், சட்டங்களை மாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் அதைச் செய்யவேண்டும். நீதிபதிகள் அமுலில் இருந்த சட்டத்தை மட்டும் பார்த்து தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
இந்த ஜல்லிக்கட்டுக்காக 7 கோடி மக்களது வாழ்வுகள் ஸ்தம்பிப்பதும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நட்டப்படுவதும் தமிழ்நாட்டிலே மட்டுமே நடக்கும். இந்தக் கேலிக்கூத்தை இலங்கையிலும் ஆதரிக்கும் நிகழ்வு நடந்தது என்பதை அறியும்போது என்னதான் செய்யமுடியும்…?
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
’வெண்முரசு’ – நூல் பதிமூன்று- ‘மாமலர்’
வெண்முரசு நாவல்தொடரின் பதிமூன்றாவது நாவல் பெப்ருவரி ஒன்றாம் தேதி தொடங்கும். இன்னமும் எழுத ஆரம்பிக்கவில்லை. எழுதலாமென ஓர் எண்ணம் வந்துவிட்டது. ஒரு தோராயமான வடிவமும் உள்ளத்தில் எழுந்துவிட்டது. இதற்கான மொழிநடையை நான் அடைந்ததும் தொடங்கவேண்டியதுதான். நாலைந்து பொய்த்தொடக்கங்கள் நிகழ்ந்தன. சரியாக வரவில்லை. வழக்கம்போல சரியாக நாவல் வராதபோது உருவாகும் நம்பிக்கையின்மை, சலிப்பு, இனம்புரியாத சினம். தனிமை.
வரும் 26 ஆம் தேதி நண்பர்கள் சிலருடன் ஷிமோகா வழியாக கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் செல்கிறேன். குடஜாத்ரி மலை ஏறிச்செல்லலாம் என எண்ணம். கிராதம் இப்படி ஒரு தத்தளிப்பில் நின்றிருந்தபோது கேதார்நாத் சென்று மீண்டது மிகப்பெரிய அளவில் உதவியது. இந்த இடங்கள் அளிக்கும் மனநிலை ஓர் ஆழமான அகத்தூண்டலை அளிக்கிறது. அப்படி ஏதேனும் நிகழுமென நம்புகிறேன்
நாவல் பீமனைப்பற்றியது. கல்யாண சௌகந்திக மலர்தேடி பீமன் சென்ற பயணமே நாவல். அவன் தேடிச்சென்றது அழியாமாமலர். அடைந்தது என்ன என்பது நாவலில் கண்டடையவேண்டியது. கிராதம் சைவப்பின்னணி கொண்ட நாவல். இது சாக்தப் பின்னணியில் அமையலாம்.
கிராதம் ஒருகட்டத்தில் அன்றன்று எழுதுவதாக ஆகிவிட்டது. பலநாட்கள் இரவு ஒன்பது மணிக்குமேல்தான் வலையேற்றினேன். ஆகவே ஷண்முகவேல் ஒருசில நாட்கள் கடந்த பின்னர்தான் படங்கள் வரைய முடிந்தது. பெரும்பாலும் அத்தனை படலங்களுக்கும் அவர் வரைந்துள்ளார். அன்றன்று வாசிப்பவர்கள் பலர் அவருடைய அற்புதமான பல படங்களை பார்த்திருக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. இம்முறை அது நிகழலாகாது.
தெய்வம் ஆட்கொள்வதன் பரவசமும் அது விலகிச்செல்வதன் பெரும் சோர்வுமாகக் கடந்து சென்று கொண்டிருக்கின்றன இந்நாட்கள். இந்த பெருக்கே என்னை கொண்டு செல்லவேண்டும். நான் செய்வதற்கு ஒன்றுமில்லை, ஒப்புக்கொடுப்பதைத் தவிர.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நைஜீரியா என்னும் அறிவிப்பு
நைஜீரியா : டிரம்புக்கு ஆதரவாக பழங்குடியினர் மேற்கொண்ட பேரணியில் வன்முறை போகிறபோக்கில் தமிழ் ஹிந்து நாளிதழில் இச்செய்தியை வாசித்தேன். இச்செய்திக்கு எந்த வகையான முக்கியத்துவமும் ஒரு பொதுவாசகனின் உள்ளத்தில் தோன்றமுடியாது. ஆனால் இதன் பின்னணி சற்று புரிந்தால் இது அளிக்கும் திறப்புகள் பல.
பையாஃப்ரா குடியரசு என்பது என்ன? நைஜீரியாவும் இந்தியாவும் சமானமான வரலாறு கொண்டவை. நம்மைப்போலவே அவர்களும் பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்தனர். நாம் 1947ல் சுதந்திரம் அடைந்தோம். நைஜீரியா 1960ல்தான் சுதந்திரம் அடைந்தது. பிரிட்டிஷார் செல்வதற்கு முன் நைஜீரியாவை ஒட்டச்சுரண்டிவிட்டனர்.
1947ல் நாம் பெற்ற சுதந்திரம் வேறுவழியில்லாமல் பிரிட்டிஷார் நம்மை விட்டுச்சென்றதனால் வந்தது என்றும் காந்திக்கோ காங்கிரஸுக்கோ அதில் பங்கேதுமில்லை என்றும் ஒரு கும்பல் இங்கு சொல்லிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நைஜீரியா மிகச்சிறந்த உதாரணம். உலகப்போருக்குப் பின்னால்தான் தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. கனிவளங்களுக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்தது. ஆகவே நைஜீரியாவின் மாபெரும் எண்ணைக்கிணறுகள்மேல் முழுமையான ஆதிக்கத்தை பெற்றபின்னர் போதிய அளவில் அடிமைப்படுத்தும் ஒப்பந்தங்கள் போட்டுவிட்டுத்தான் பிரிட்டன் வெளியேறியது.
அந்த ஒப்பந்தங்களால் இன்றும் நைஜீரியா பிரிட்டிஷ், ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. பெருமளவு எண்ணையை உற்பத்திசெய்யும் இந்நாடு இன்னமும் வறுமையின் கீழ்மட்டத்திலேயே உள்ளது. உண்மையில் எண்ணையை எடுப்பதற்கு நிறுவனங்கள் அளிக்கும் உரிமைத்தொகையை அப்படியே அவர்களுக்கு திருப்பி அளித்து தன் உபயோகத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணை வாங்கிக்கொண்டிருக்கிறது நைஜீரியா.
பிரிட்டிஷார் வருவதற்கு முன் நைஜீரியாவில் இருந்தவை பழங்குடி மதங்களும் இஸ்லாமும். பிரிட்டிஷார் பெருமளவு மதமாற்றங்களைச் செய்து வலுவான ஓர் கிறித்தவச் சிறுபான்மையினரை உருவாக்கினர். நைஜீரியாவின் இக்போ,யோரூபா பழங்குடியினர் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தனர். பிரிட்டிஷார் வெளியேறியபோது அவர்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டுமென போராட ஆரம்பித்தனர். அந்த கிறித்தவநாடே பையாஃப்ரா குடியரசு என அழைக்கப்பட்டது
1960 முதல் ஏழாண்டுக்காலம் இந்தக் கிளர்ச்சி நடைபெற்றது. 1967ல் அது உள்நாட்டுப்போராக வெடித்தது. பயங்கரவாதச் செயல்களில் ஏராளமான நைஜீரியத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் இறந்தனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஆதிக்கத்திலிருந்த, கிறித்தவப் பெரும்பான்மை கொண்ட சில ஆப்ரிக்க நாடுகள் பையாஃப்ராவை ஆதரித்தன. நைஜீரியா மேல் உச்சகட்ட அழுத்தம் விழுந்தது. அது ஐரோப்பா போட்ட எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு எண்ணை வயல்களை அவர்களுக்குத் திறந்து கொடுத்தது. பதிலுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொண்டு பையாஃப்ரா போராட்டத்தை நசுக்கியது.
1970 ல் பையாஃப்ரா போராட்டம் சரண் அடைந்தது. அதன்பின்னரே நைஜீரியா மெல்ல வளர ஆரம்பித்தது. சென்ற இருபதாண்டுகளாக அது பொருளியல் வளர்ச்சி அடைந்து வருகிறது. எண்ணைவயல்கள் மீதான தன் உரிமைகளைப்பற்றிப் பேச ஆரம்பிக்கிறது. உடனே அதன் ஒருமைப்பாடு மீதான தாக்குதல்கள் ஆரம்பித்தன. பையாஃப்ரா போராட்டம் மீண்டும் தூண்டிவிடப்பட்டது.
எப்படி என்பது மேலும் சுவாரசியமானது. பையாஃப்ரா போராட்டம் பற்றிய ஆய்வுகளை செய்ய அமெரிக்கப் பல்கலைகழகங்கள் நிதிக்கொடைகளை அளித்தன. விளைவாக அப்போராட்டம் பற்றிய ஒற்றைப்படையான சித்திரம் உருவாக்கப்பட்டது. அதைப்பற்றிய செய்திக்கட்டுரைகள் நைஜீரிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதப்பட்டன. அதன்பின்னர் அதைச் சித்தரிக்கும் புனைவெழுத்துக்கள் அமெரிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டன. அவற்றை எழுதியவர்களில் முதன்மையானவர் சிமமெண்டா அடிச்சி.
அடிச்சி நைஜீரியப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் மகள். 19 வயதிலேயே அமெரிக்கப் பல்கலைகளில் கல்விகற்கச் சென்றார். அங்கே செய்தித் தொடர்பியல், புனைவெழுத்து பயின்றார். பையாஃப்ரா குடியரசு நசுக்கப்பட்டதைப்பற்றிய கொடூரமான சித்திரங்கள் அடங்கிய கதைகளையும் நாடகங்களையும் எழுதலானார். இவை ‘மனித உரிமைகளுக்காக வாதாடும்’ படைப்புகளாக அமெரிக்க பல்கலைகளாலும் ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டன.
அடிச்சி தொடர்ச்சியாக பல்கலைகளின் நிதிக்கொடைகள், உயர் விருதுகளைப் பெற்றுக்கொண்டே இருந்தார். அவரை இந்நூற்றாண்டின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் என அமெரிக்க விமர்சகர்கள் எழுதினர். ஒரு கீழைநாட்டுப் பொதுவாசகனுக்கு மிகச்சாதாரணமான பிரச்சார எழுத்தாகவே அவை தோன்றும். ஆனால் நாம் சொந்தமாக மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதில்லை. மேற்கே சொல்லப்படுவனவற்றை அப்படியே ஏற்பதே நம் வழக்கம். ஆகவே தமிழகத்தில்கூட எஸ்.வி.ராஜதுரை போன்ற இடதுசாரிகள் அடிச்சியை மாபெரும் மனிதாபிமானியாகச் சித்தரித்து கட்டுரைகள் எழுதினார்கள். அடிச்சியின் ‘இலக்கிய நுட்பங்கள்’ பரவசத்துடன் ரசிக்கப்பட்டன
எதிர்பார்த்ததுபோல 2009 முதல் பயாஃப்ரா கிளர்ச்சி மீண்டும் ஆரம்பித்தது. நாடுகடந்த பயாஃப்ரா அரசு உருவாக்கப்பட்டது. அமெரிக்க ஆதரவுடன் தொடர்ச்சியாக கிளர்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. ஒரு உள்நாட்டுப்போர் நிகழும் என நைஜீரிய அரசை தொடர்ச்சியாக அச்சுறுத்தி நினைத்ததை அடைந்துகொண்டிருக்கின்றன எண்ணை நிறுவனங்கள். நைஜீரியா முழுமையாக பணிந்து அத்தனை கனிவளத்தையும் அளிக்காவிட்டால் அந்நாடு உள்நாட்டுப்போரால் அழிக்கப்படும்.
மிகமிக எளிது இந்தப்போர். இதன் ராணுவமுகாம்கள் அமெரிக்காவின் டிரெக்ஸெல் பல்கலை, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை போன்ற கல்விநிறுவனங்கள். இதன் தளபதிகள் சிமெனெண்டா அடிச்சி போன்ற எழுத்தாளர்கள். பத்திரிகைகள் இதன் துருப்புகள். உலகமெங்கும் அறிவுஜீவிகள் என்னும் ஐந்தாம்படையினர்.
இந்தப்பின்னணியில் டிரம்ப்புக்கு ஆதரவாக பையாஃப்ரா போராட்டக்காரர்கள் நிகழ்த்திய பொது ஆர்ப்பாட்டத்தை கண்டால் தமிழ் ஹிந்துவின் அச்செய்தி எப்படிப் பொருள்படுகிறது? கிறித்தவ அடிப்படைவாதம் பேசும் டிரம்ப் பயாஃப்ராப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கிறார். அவர்கள் அவரை தங்கள் தலைவராக அறிவிக்கிறார்கள். அந்த கிளர்ச்சி அப்பட்டமான தேசத்துரோகம். ஆனால் அதன்மேல் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டதை மாபெரும் அடக்குமுறையாக அமெரிக்க ஊடகங்கள் சித்தரிக்கின்றன. டிரம்ப் நைஜீரிய அதிபருக்கு தனிப்பட்ட முறையில் கடும் எச்சரிக்கையை விடுக்கிறார்!
நைஜீரியா இந்தியாவுக்கு மிகப்பெரிய, முன்னுதாரணமான பாடம்
ஜெ
***
===================
முந்தைய கட்டுரைகள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மிருகவதை – கடிதம்
மரபணு மாற்றப்பட்ட பூனை
அன்பின் நண்பருக்கு,
‘மிருக வதை எனும் போலித்தனம்’ எனும் தலைப்பில் இன்று உங்கள் தளத்தில் வெளிவந்துள்ள கார்த்திக்கின் கட்டுரை பல நினைவுகளைத் தூண்டி விட்டது. நல்லதொரு பதிவு. அவரது பட்டியலில் இன்னும் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கனடா, அமெரிக்கா, நமீபியா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ரஷ்யா, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஒன்பது நாடுகளில் பிரசித்தமான கடல்வாழ் உயிரினங்களான சீல் பிராணிகளின் வேட்டை (Seal hunting) பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருவதும், விலங்குகளின் மீது திணிக்கப்படும் மிருக வதைகளில் மிகவும் முக்கியமானதும் ஆகும்.
மலையாள எழுத்தாளர் டி.டி.ராமகிருஷ்ணனின் ஆல்ஃபா நாவல், பேராசிரியர் குழுவொன்று ஒரு ஆராய்ச்சிக்காக ஆல்ஃபா எனும் தனித் தீவில் இருபத்தைந்து வருட காலம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி சொல்கிறது. அப்பேராசிரியர் குழுவிலிருந்து உருவாகும் சந்ததிகளாக தீவில் எஞ்சிய நாற்பத்தெட்டு இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் தமது உணவுக்காக மீன்களை, பறவைகளை, விலங்குகளை வேட்டையாடி பச்சையாக உண்பதையும் ஒரு புனைவாக விவரித்திருப்பார் எழுத்தாளர். நம் ஆதி மனிதர்களும் அவ்வாறுதானே இருந்திருப்பர்? கற்காலத்தில் பசியின் தூண்டுதலில் சக விலங்கை வேட்டையாடிச் சுவைத்துப் பழகி, பசி நீங்கிய பின்னரும் வேட்டை என்பதே நடைமுறைப் பழக்கமாகி, பின்னர் அது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கக் கூடும். அந்தப் பாரம்பரியத்தையே இந்த நூற்றாண்டிலும் கடல் சீல் பிராணிகளை, திமிங்கிலங்களை வேட்டையாடுவதன் மூலம் இன்றும் தொடர்கிறார்கள். அந்த வேட்டையை நியாயப்படுத்தும் சமூக நல ஆர்வலர்கள் இன்னும் இன்றும் இருப்பதுதான் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது.
அதைப் போலவே அண்மைக்காலமாக புதிதாக ஆனால் மிகவும் இலாபத்தைத் தரத்தக்க ஒரு வியாபாரமானது, இந்நூற்றாண்டில் தோன்றியிருக்கிறது. கர்ப்பிணிக் குதிரைகளின் குருதியை உறிஞ்சி (Pregnant horse blood trade) எடுத்து, ஐரோப்பிய மருந்துத் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வது மிக இலாபம் தரும் தொழிலாக மாறியிருப்பதால், குதிரை வளம் கொண்ட அநேக நாடுகள் மறைமுகமாக இதனைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காகவென்றே பண்ணைகளும் இருக்கின்றன.
பாண்டா கரடி போல அறுவைசிகிழ்ச்சை வழியாக மாற்றப்பட்ட நாய்
ஆசிய நாடுகளில்தான் விவசாயத்துக்கென விலங்குகளை வளர்ப்பதுவும், பயிற்றுவிப்பதுவும் இன்னும் நடைமுறையிலிருக்கிறது. ஏனைய நாடுகளில் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இறைச்சிக்காகவும், பொழுதுபோக்குக்காகவுமே அவை வளர்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வித விதமான செல்லப்பிராணிகள் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. பல நிற வண்டுகள் முதற்கொண்டு கரடி வடிவிலான நாய்கள், கைக்கடக்கமான பூனைகள், சிறகு வெட்டப்பட்ட பேசும் கிளிகள், கழுகுகள் எனப் பலதும் அதில் அடங்கியிருக்கின்றன.
இங்கு இணைக்கப்பட்டுள்ள பனிக்கரடி வடிவத்தையொத்த நாய்க்குட்டி மூன்று மாத வயதுடையது. கார்த்திக் சொன்னதுபோல designer dog பிரிவில் இதனை உள்ளடக்கலாம். இதன் மயிர்கள் சுடப்பட்டு, தோலினூடாக வர்ணப் பூச்சுக்களையேற்றி பனிக்கரடியாக்கியிருக்கிறார்கள். வளர்ச்சிக்காக வேண்டி அதிக ஊட்டச்சத்துக்களும், ஊசி மருந்துகளும் ஊட்டப்படுகின்றன. ஒரு நாள் முழுவதுமாயினும், உடற்கழிவுகளை அகற்றாமலிருக்கப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பூனைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், அதன் எலும்புகளை முடங்கச் செய்யவும் சிறிய போத்தல்களில் போட்டு அடைத்து வைப்பதும் நடக்கிறது. சிட்டுக் குருவிகள் முதற்கொண்டு பல வகைப் பறவைகளையும் சிறகுகளை வெட்டி, கூட்டை விட்டு வெளியே விற்பனைக்காகக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறான நாய்களையும், பூனைகளையும், ஏனைய விலங்குகளையும் ஒரு விளையாட்டுப் பொருள் போல வாங்கிச் செல்லும் அரேபியர்களும், ஏனையவர்களும், பின்னர் அவற்றைப் பராமரிக்க இயலாமல் தெருவில் எறிந்து விடுவதுவும் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கிறது. திடீரென தெருவில் விடப்படும் சடை வளர்த்த நாய்களும், பூனைகளும் தமக்கான உணவைத் தேட இயலாமல், தெருவில் நடமாடத் தெரியாமல், ஏனைய வலிய விலங்குகளினதோ அல்லது வாகனங்களின்மீதோ தாக்குதல்களுக்கு இலக்காகி வீதிகளில் மரித்துக் கிடக்கும். சுத்திகரிப்பாளர்கள் தெருவை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விடுவார்கள். அந்த நாளும், அந்தப் பிராணியின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து விடும்.
ஆனால், முடியாத ஒன்று இருக்கிறது. மேற்படி விலங்குகளை, பறவைகளை கொடூரமாகப் பயிற்றுவிக்கும் வேலைகளில், சொற்ப சம்பளங்களோடு ஈடுபடுத்தப்படுவது நமது இலங்கை, இந்திய, நேபாள, பங்களாதேஷ் நாட்டு இளைஞர்கள். வருடக்கணக்காக இதையே தொழிலாகச் செய்யும்போது அவர்களது சக உயிர்கள் மீதான கருணையும், மனிதாபிமானமும் மரித்துப் போகத்தான் செய்யும். அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பும்போது அம்முரட்டுத்தனத்தை, அக்காருண்யமற்ற நடத்தைகளை அவர்கள் தம்மோடு தமது கிராமங்களுக்குக் காவி வருவது ஆபத்தானது. சாதாரணமாக விலங்குகள், பறவைகளைக் காணும்போது கூட அவர்கள் அதற்கு ஏதாவது தீங்கினைச் செய்து விடுகிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசுவதற்கோ, அவ்வாறானவர்களின் மனப் பிறழ்வுகளை மாற்றியமைக்கும் சிகிச்சையளிப்பதற்கோ எந்த விலங்கு நல அமைப்புக்களும், சமூக நல ஆர்வலர்களும் முன்வருவதில்லை என்பது இன்னும் மிக மிக ஆபத்தானது.
- எம்.ரிஷான் ஷெரீப்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குறளுரை கடிதங்கள் -4
அன்புள்ள ஜெ வணக்கம்.
குறளினிது உரைக்கு நன்றி.
ஜுலை 7 2014ல் வெண்முரசு விவாதம் கடிதத்தில் உங்களிடம் திருக்குறள் உரை எழுதவேண்டும் என்று ஒரு விண்ணப்பம் வைத்து இருந்தேன். இன்று உங்கள் குறள் இனிது உரையை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யதார்த்தமாக கீழ்கண்ட இணைப்பை திறந்தேன் அதில் திருக்குறளுக்கு உரைவேண்டிய விண்ணப்பம் உள்ளது. அது எழுத்தாக உள்ளது என்பதே மறந்துவிட்டது. கேள்வி கேட்டது ஒரு இனிய தருணம். உரைமுழுவதும் கேட்டு கடிதம் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு நல்லக்கடிதம் எழுதமுடியுமா? பார்ப்போம். மிகவும் சிறந்த ஒரு உரையை நிகழ்த்துகின்றீர்கள். இந்த உரை குறளுக்கு இனிது குறனிது என்பதை அறிவதற்கு. நன்றி
http://venmurasudiscussions.blogspot.com/2014/07/blog-post_4197.html
அன்புடன்
ரா.மாணிக்கவேல்.
***
அன்புள்ள ஜெ
உங்கள் திருக்குறள் உரையில் நீங்கள் ஒருவகை பட்டியல்களை அளிக்கிறீர்கள். அந்த உரையின் செறிவை அளிப்பது அதுதான். அது போகிறபோக்கிலே சொல்லப்படுவதாக இல்லாமல் ஒரு தேர்ந்த ஆய்வமைப்பை அளிக்கிறது அதனால்தான் என நினைக்கிறேன்.
ஜனநாயகத்தின் அடிப்படைகளாக மூன்று தன்மைகளைச் சொல்கிறீர்கள். .அதிகாரத்தில் பங்களிப்பு, சமத்துவம், மதச்சார்பின்மை.
குறளை நம்மவர்கள் ஒரு மூலநூலாக ஆக்கும்போது மூன்றுவிஷயங்களைச் செயற்கையாகச் செய்வதாகச் சொல்கிறீர்கள். தொன்மை, தூய்மை, மாறாமை.
பழைய நூல்களை பதிப்பிக்கும்போது மிதமிஞ்சிய பரவசம் உண்டானதுக்கு மூன்று காரணம் சொல்கிறீர்கள். 1. கல்வி பரவலாகி அனைவரும் வாசிப்பது 2. நடுக்காலத்தில் உருவாகியிருந்த வீழ்ச்சி 3 சமண மதங்கள் மறைந்துபோனது.
குறள் ஐந்து அடிப்படைகளை உருவாக்குகிறது என்கிறீர்கள். அரசு,குடும்பம்,காதல்,சான்றோன், அறம்
பட்டியலில் பெரும்பாலும் மூன்று மூன்றாகவே சொல்கிறீர்கள் என்பதைக் கவனித்தேன்
விஜயகுமார்
***
அன்புள்ள ஜெ
மூன்றாம்நாள் உரையை இப்போதுதான் கேட்டு முடித்தேன். ஒரே இரவில் ஐந்தரைமணிநேரம் தொடர்ச்சியாக உரைகளைக் கேட்டேன். மீண்டும் காலையில் இருந்து கேட்டு இப்போது முடித்தேன். உரைகள் தொழில்முறைப் பேச்சாளருடைய உரையாக இல்லை. ஆகவே அவை மொனோடொனஸ் ஆகத்தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் எவரோ நம்மிடம் பேசிக்கொண்டே இருப்பதுபோலத்தான் தோன்றியது. அதுதான் இந்த உரைகளின் கவர்ச்சி. நாம் அணுக்கமாக உணரும் ஒருவருக்கு நாம் அருகே இருந்து பேசிக்கேட்பது போலிருந்தது.
இலக்கியத்தை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்த உரை. சுந்தர ராமசாமி திருவள்ளுவர் என்னும் நண்பர் என ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சுமாரான கட்டுரைதான். ஆனால் அதன் மையக்கருத்து எனக்கு அப்போது பிடித்திருந்தது. குறளை வாழ்க்கையின் பகுதியாகவே பார்க்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். உங்கள் உரை குறள் உங்கள் வாழ்க்கையில் என்ன பொருள் அளிக்கிறது என்பதைச் சார்ந்தே இருந்தது.
மூன்றாம்நாள் உரையில் சான்றோரைப்பற்றிச் சொன்னீர்கள். சுந்தர ராமசாமியின் கதை சான்றோன் சாமானியரை நோக்கி எப்படிச் செல்கிறான் என்பதை காட்டியது.ஜெயகாந்தன் கதை சாமானியன் சான்றோனை எப்படிப்புரிதுகொள்கிறான் என்பதைக் காட்டியது
ஆர்.ரமேஷ்
***
ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண
குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist
https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஜல்லிக்கட்டு -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..ஜல்லிக்கட்டு பற்றிய பதிவுகளை படித்தேன்..பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னால் சூடு பிடிக்க ஆரம்பித்த போது என் முதல் எண்ணம் ” மாட்டுப்பொங்கல்வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கொதிப்பார்கள், அதன் பின் அடுத்த பொங்களுக்கு 4 நாட்கள் முன் மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பிப்பார்கள்..இடைபட்ட நாட்களில் இதற்க்காக கடந்த வருடம் முழுவதும் உழைத்துக்கொண்டிருந்த சிறு எண்ணிக்கையில் உள்ள அமைப்பினர் உழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று தான் இருந்தது.. ஆனால் கடந்த ஒரு வாரம் நடந்தது ஆச்சரியபட, பெருமை பட வைத்த போராட்டம், போராட்ட முறை… தொலைக்காட்சி, நண்பர்கள், வீட்டு உரையாடல்கள் எல்லாம் சிந்திக்க வைத்து மேலெழுந்த எண்ணங்களை பதிவு செய்ய தூண்டியது தங்கள் பதிவும், எதிர் வினைகளும்.. சரியா தவறா தெரியவில்லை..
ஜல்லிக்கட்டு பற்றிய என் எண்ணங்கள்
தீர்ப்பு:
சுப்ரீம் கோர்ட் 2016ல் அளித்த தீர்ப்பை படித்ததில், ஜல்லிகட்டு தடை செய்யப்படவேண்டும் என்று வழக்கு தொடுத்த அமைப்புகள், கீழே வரிசை படுத்தப்பட்ட காரணங்களுக்காக இந்த தடையை கோருகின்றன.
காளைகள் வாடிவாசல் திறப்பதற்க்கு முன் காக்க வைக்கப்பட்டிற்கும் இடம் மிக மிக சிறியதாக இருப்பதும், அந்த சிறிய இடத்தில் பல காளைகள் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும்.
மேல் கூறிய இடத்தில் இருந்து வாடிவாசல் திறந்து காளைகள் ஜல்லிக்கட்டு வழியில் ஓட விடும் முன், காளைகளின் வால்களை கடித்து, காளைகளை கத்தி, அருவாள் (sickle) ஆகிய ஆயுதங்களால் குத்தி அவை துன்புறுத்தப்படுவதும், அவற்றிற்க்கு மிரட்சி ஏற்படுத்தப்படுவதும்.
காளைகள் நிற்கும் இடங்களிலேயே அவை சாணம், சிறுநீர் கழிக்கின்றன. இவ்வாறு பெரும் அளவில் கழிக்கப்படும் சிறுநீர், சாணம் அகற்றப்பட்டு, அந்த இடம் சுத்தப்படுத்தப்படாமல், அந்த சிறுநீர், சாணம் அடங்கிய அசுத்தங்களின் மேலேயே காளைகள் நாள் முழுவதும் நிற்ப்பதும், அதனால் நோய்கள் வர வாய்ப்பிருப்பதும்.
காளைகளுக்கு வெறி ஊட்டுவதற்க்காக மது சாராயம் போன்றவைகளை கட்டாயப்படுத்தி காளைகளை குடிக்க வைப்பது
மேலே வரிசை படுத்தப்பட்ட காரணங்கள் , உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதிபதிகள் விவரித்த காரணங்கள். தடை கோரும் அமைப்புகள் தங்கள் வாதங்களில் மேலும் காரணங்கள் கூறியுள்ளார்களா என்று தெரியவில்லை.
விளையாட்டு:
தீர்ப்பை படித்த வரை, தடையை நீக்க வாதாடிய தமிழ் நாட்டின் தரப்பு எந்த புள்ளிகளை வைத்து வாதாடப்பட்டது என்று தெரியவில்லை. இந்த பிரச்சனையில், மற்றுமோர் வாதம், ஜல்லிக்கட்டை தடை செய்தால், நாட்டு மாடுகள் முற்றிலுமாக அழிந்து, விவசாயம், பால் வர்த்தகத்தில் ஜெர்சி வகை பசுக்கள் முழுவதுமாக ஆக்ரமிக்கும். இதனால், நம் விவசாயிகள், இந்த ஜெர்சி பசுக்களை இஅக்குமதி செய்யும் மேல் நாட்டு நிறுவனங்களின் விலைகளுக்கு கட்டுப்பட்டு, முழுவதுமாக அவர்களை சார்ந்து இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது. இந்த கருத்து, தீர்ப்பில் கோடிடப்படவே இல்லை.
ஆனால் தடைக்கான மேலே உள்ள காரணங்கள் அனைத்தும், ஒரு முழுமையான தடை விதிக்க போதுமான காரணங்களாக எடுத்துக் கொள்ள போதுமானதா? என்ற கேள்விக்கு “இல்லை” என்றே கூறுவேன். நான்கு குற்றச்சாட்டுக்களுமே, ஜல்லிக்கட்டு நடைமுறை படுத்தப்படும் வகை பற்றியே. இவை யாவும் சுலபமாக ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் சில கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் விதிப்பதன் மூலம், முற்றிலுமாக தடுத்து விட முடியும். உதாரணமாக
காளைகள் காத்து நிற்க்கும் இடம் குறைந்த பட்சம் அளவு கொண்டதாய் விதி நிறுவலாம். அல்லது, காளைகளின் எண்ணிக்கை கொண்டு இடத்தின் அளவை நிறுவலாம். ஒவ்வொரு காளைக்கும் குறைந்த பட்ச இடம் என கட்டுப்பாடு கொண்டு வரலாம்.
துன்புறுத்தலை தடுக்க, கண்கானிப்பு காமராக்கள், காளைகள் நிறுத்தும் இடத்தில் காவல், கண்கானிப்பு குழு போன்ற வரைமுறைகள் கட்டாயமாக்கப்படலாம்
காளைகளை அடக்கும் போது அடக்கும் வீரர்களுக்கு உயிர் பாதுகாப்பு, தீவிர காயம் ஏற்படுவதை குறைக்க, அனுபவம் உள்ள, பயிற்சி பெற்ற வீரர்களை மட்டுமே விளையாட அனுமதிக்கலாம்..
இந்த பிரச்சனையை, தமிழர் பண்பாடு, நாட்டு மாடுகளின் அழிவை தடுப்பது என்ற கோணங்களை விடுத்து, குதிரை பந்தையம், போலோ போன்று மற்றுமொரு “விளையாட்டு” என்ற நோக்கில் கட்டுப்பாடுடன் கூடிய அனுமதி என்ற கோணத்தில் உச்ச நீதி மன்றத்தை அனுகலாமே ?
அவசர சட்டம்:
இப்போது, இளைஞர்கள் எழுச்சியால் அவசர சட்டம் மூலம் தடையை நீக்கும் தீர்வை அரசு எடுத்து இருக்கிறது. இது சரியான பாதை இல்லை என்று தோன்றுகிறது. என் வரையில் ஜல்லிக்கட்டை முழுதுமாக தடை செய்வது தவறு என்றே கூறுவேன். அதில் மிருக வதை அந்த காளைகள் விளையாட்டு முடிவில் கொல்லப்படுவது இல்லை. ஆம், வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ பதிவில், முதலில் கூறிய துன்புறுத்தல் அனைத்தும் காட்டப்படுகின்றன. சமூக வலைதளங்களில், திரும்ப திரும்ப கூறப்படும் விளக்கங்கள் – அவை பொய்யான வீடியோ, பழைய வீடியோ, இப்போது அது போல் நடப்பதில்லை என்பது போன்ற பதிவுகள். நடந்ததோ, நடக்கவில்லையோ எதுவானாலும், உரிய கட்டுப்பாடுகளுடன், நடப்பதை தடுக்க முடியும். அனைத்து கட்டுப்படுகளையும் கண்கானிக்க, அரசு, ஜல்லிக்கட்டு நிர்வாகிகள், மிருக ஆர்வலர்கள், காவல் துறை அனைவரும் உள்ள ஒரு கண்கானிப்பு அமைப்பு உருவாக்கி , இந்த அமைப்பு அனைத்து விதிகளும் மதிக்கப்பற்றிருக்கின்றனவா என உற்திப்படித்து விட்டு, அனுமதி அளித்த பின்னரே ஜல்லிக்கட்டு நடை பெறும் என அனைத்து தரப்பும் புரிந்துணர்வுக்கு வரலாம்.
இத்தகைய அனைவர் தரப்பும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் தீர்வை விடுத்து, அவசர சட்டம் மூலம் ஏற்படும் தீர்ப்பு, மேலும் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என தோன்றுகிறது. மிருக ஆர்வலர், இந்த அவசர சட்டத்திற்க்கு ஒரு தடை என்று செல்லலாம். மீண்டும் வெறுப்பு பிராச்சாரங்கள் ஆரம்பமாகும்… ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் “காலம் காலமாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் பாரம்பரிய நிகழ்வுக்கு, திடீரென்று நாம் ஏன் ஒரு வெளி நாட்டு அமைப்பு எதிர்பதற்க்கு பயந்து இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என கூறலாம்..ஆனால், அனைத்து வேறுபாடுகளுக்கு அப்பால், ஜல்லிக்கட்டு ஆதர்வாளர்கள், மிருக ஆர்வலர்கள் இரு தரப்பும் ஒன்று படும் கருத்து, களைகளை துன்புறுத்தலுக்கு ஆளாக்க கூடாது என்பது தான். இந்த கருத்தை மனதில் கொண்டு புரிந்துணர்வுக்கு வரலாம் தான் ?.
இளைஞர்கள் எழுச்சி:
இந்த பிரச்சனையில் எந்த தரப்புக்கு வெற்றி பெற்றாலும், உண்மையான வெற்றி தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு தான். எப்படி இந்த எழுச்சி ஒரு வலுவான தலைமை இல்லாமல் இவ்வளவு கட்டுப்கோப்பான , வன்முறை, முறைமீறல்கள் இல்லாத போராட்டமாக , தமிழ் நாடு முழுவதுமாக நடை பெறுகிறது என்று பிடி படவில்லை… கண்டிப்பாக சமூக வளைதளங்கள் பெறும் பங்களித்திருக்கின்றன… சுப்ரமணிய சுவாமியின் கடும் வார்த்தைகள் ( அவை, அனைத்து போராளிகள் பற்றி இல்லாமல், அவரை ட்விட்டரில் தாக்கல் செய்த சிலரை குறித்தாலும்), PETA அமைப்பின் தலைவர், கூறியதாக வலம் வந்த கருத்துகள், தமிழர் பண்பாடு, தமிழர் பெருமை பற்றிய memes அனைத்தும் பங்களித்தன எனலாம்.
இரண்டு நாட்கள் நான் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள இரு கல்லூரிகளின் மாணவர்கள், சாலையின் ஒரு பக்கத்தில் அமர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். முக்கியமான சாலை ஆதலால் போக்குவரத்து அதிகம். சரியாக கட்டுப்படுத்தாதிருந்தால், பெரிய போக்குவரத்து குழப்பமாகியிருக்கும். ஆனால், மாணவர்களின் ஒரு பகுதியினரே, களமிரங்கி சாலை நடுவில் வரிசையாக நின்று ஒரு பக்க சாலையை இரு பகுதிகளாக பிரித்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க வழிவகுத்தனர். மெரினா சாலையிலும் இதே பங்களிப்பை பற்றியும், குப்பைகளை மாணவர்களே அப்புறப்படுத்தியதையும் பற்றி படித்தேன்.. உண்மையிலேயே உலக அளவில் பேசப்பட வேண்டிய உதாரண போராட்டமாகவெ இது பார்க்கப்பட வேண்டும்..
இப்படி பட்ட போராட்டங்களில் போராட்டத்தின் வீரியம், தேவை இல்லாத இதர எதிர்ப்பு கோஷங்களால் போராட்டத்தின் முக்கிய கூறிக்கோள் நீர்த்து போக செய்யலாம். பீட்டா அமைப்பு பற்றி, பெப்சி, கோக் நிறுவனங்கள் குறித்த கோஷங்கள் உதாரணம்…திரு கார்திகேயன் சேனாபதி மெரினாவில் தன் உரையிலும் இந்த கருத்தை கூறினார். மேலும், உண்மையில், பீட்டா போன்ற அமைப்புகளுடன் தங்களை சேர்த்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக்க்கணக்கான மக்களும், பிரபலங்களும் உணர்வுப்பூர்வமாக மிருகங்களின் நலனுக்காக தான் பீட்டாவுடனோ, மற்ற அமைப்புகளுடனோ சேர்ந்த்திருக்கின்றன..உணர்ச்சி வேகத்தில், இந்த அமைப்புகள் மீதோ, அமைப்பில் பங்கெடுக்கும் மக்கள் மீதோ வெறுப்பு எழுப்புவதால், போராட்டத்தின் உண்மையான அற எழுச்சி திசை திரும்ப வாய்ப்புள்ளது..
கேள்விகள்:
இந்த இளைஞர் எழுச்சி எப்படி இவ்வளவு வீரியம் பெற்றது , ஏன் ஜல்லிக்கட்டு பின்னனி, வரலாறு, வழக்கின் பின்னணி, விவரங்கள் ( ஒருவேளை, பார்த்தும் இருக்காத) முழுவதும் தெரியாத பலர், இவ்வளவு உணர்ச்சிபூர்வமான போரட்டத்தில் தங்களை இணைத்து கொண்டார்கள் (கடந்த 5 நாட்களில் பல முறை கேட்ட கேள்வி – காவிரி நீர் பிரச்சனையின் போதும், பங்களூரு பற்றி எரிந்த போதும் வராத போராட்டம்)?.. ஒரு எண்ணம் தோன்றியது..
சென்ற பல வருடங்களாக, கதைகளிலும், சினிமாக்களிலும், மீண்டும் மீண்டும் எடுத்தாளப்படும் ஒரு கருத்து, கார்ப்பரேட்களும், வெளி நாட்டு நிறுவனங்களும், அமைப்புகளும் நம் நாட்டு வளங்களையும், விவசாய வாழ்வாதாரங்களையும் சுரண்டி கொண்டிருக்கின்றன, தங்களின் சொந்த லாபங்களுக்காக மக்களை சூரையாடுகின்றன என்ற கருத்து மூலக்கதைகளிலோ, கிளை கதையாகவோ பார்ப்பவர் மனதில் பதியப்படுகின்றன.. இவ்வளவு நாள் கருத்தாகவோ, எண்ணமாகவோ இருந்த குமுறல், இன்று ஒரு தெளிவான எதிர்ப்பு சக்திகளாக ( பீட்டா, உச்ச நீதி மன்ற தீர்ப்பு, உரிய நேரத்தில் சட்ட மாற்றம் கொண்டு வராத மத்திய, மாநில அரசுகள்…) கிடைத்ததால் tipping pointஐ அடைந்து விட்டதோ என்று தோன்றியது..?
நாட்டு காளைகளின் வகைகள் 137 என்று இருந்த எண்ணிக்கை இப்போது 37 ஆக உள்ளது என்று ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள் கூறுகின்றன..ஏன் குறைந்தது என்று தெரியவில்லை..காரணம் முழுவதும் ஜல்லிக்கட்டு இல்லை என்றே தோன்றுகிறது. இப்போது இருக்கும் வகைகளை காப்பது ஜல்லிக்கட்டு மூலம் மத்தும் தான் சாத்தியமா ?. வேறு பராமரிப்பு வகைகளில் சாத்தியமில்லையா?.. ஜல்லிக்கட்டு நடந்த்தாலும், வருடத்திற்கு ஒரு நாள் ( ஒரு மாதம் ?) மட்டும் நடக்கும் விளையாட்டினால் இவற்றை காப்பாற்ற முடியுமா ?
மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க, பால், பால் சார்ந்த பொருள்களின் தேவை கூடிக்கொண்டு தான் போகப்போகிறது. ஜல்லிக்கட்டு பரவலாக நடந்த்தாலும், பெருகும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க நாட்டு காளைகளை வைத்து சமாளிக்க முடியுமா ? நாட்டு காளைகள் இருந்தால் ஜெர்சி பசுக்கள் வரவை முழுதுமாக தடுத்து விட முடியுமா ?…
இந்த துறை பற்றிய என் புரிதல் பூஜ்ஜியம் தான்.. அதனால் தான் இந்த கேள்விகள் மனதில் எழுகின்றன…
அன்புடன்
வெண்ணி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மதுரை நிகழ்ச்சி ரத்து
மதுரையில் 23 அன்று நான் பேசுவதாக இருந்த நிகழ்ச்சி ஜல்லிக்கட்டு போராட்டம், ரயில்கள் நிறுத்தப்பட்டமை காரணமாக ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவதாகச் சொன்ன நண்பர்கள் தவிர்த்துவிடலாம்.
நன்றி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அரவிந்தன் பதில்
இல்லாத கறையான்களும் இலக்கிய நச்சுப் பொய்கையும்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம்.
தி இந்து தமிழ் நாளிதழின் இலக்கியப் பக்கங்கள் பற்றிச் சில விமர்சனங்களை (?) முன்வைத்திருக்கிறீகள். உள்நோக்கம் கொண்ட கருத்துக்கள், அவதூறுகள், வெறுப்பைத் தாங்கிய சொற்கள் ஆகியவற்றுக்குப் பதில் சொல்வதில் எனக்கு நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. என்னுடைய செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்துவருபவர்களுக்கு என்னைப் பற்றிய உங்கள் கருத்துக்களின் பெறுமானம் என்ன என்பது நன்கு தெரியும். எனவே உங்கள் கருத்துக்கள் அனைத்திற்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. எனினும் தகவல் சார்ந்த தவறான பதிவுகளை நேர்செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஏனென்றால் இந்தப் பதிவுகளில் உள்ள தவறுகள் என்னை மட்டுமின்றி, நான் சார்ந்துள்ள நிறுவனத்தையும் என் சக ஊழியர்களையும் பாதிக்கக்கூடியவை.
முதலில் ஒரு விஷயம். தி இந்துவில் எந்தப் பக்கமும் யாருடைய தனிப் பொறுப்பும் அல்ல. அது ஒரு குழுவாலேயே ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது.
என்னுடைய பொறுப்பில் உள்ள இலக்கியப் பக்கத்தில் உங்களை எழுதும்படி கேட்பதில்லை எனச் சொல்லியிருக்கிறீர்கள். அது பொய் என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேலே நான் குறிப்பிட்டுள்ளபடி அது என் பொறுப்பில் இல்லை. அதைக் கவனித்துக்கொள்ளும் அணியின் தலைமைப் பொறுப்பில் நான் இருக்கிறேன். என்னுடைய அணியினரின் பொறுப்பில் வரும் தி இந்துவின் இலக்கியப் பக்கங்களில் நீங்கள் பல முறை எழுதியிருக்கிறீர்கள். அசோகமித்திரனின் பிறந்த நாளை ஒட்டி நாங்கள் உங்களிடமே கட்டுரை வாங்கி வெளியிட்டோம். பெண் எழுத்து குறித்த விவாதத்தில் அம்பை முன்வைத்த கருத்துக்களுக்கு நீங்கள் எழுதிய பதிலை உரிய முக்கியத்துவத்துடன் பிரசுரித்தோம். ஜெயகாந்தனின் மறைவின்போது அவரைப் பற்றி உங்களிடம் கட்டுரை வாங்கிப் பிரசுரித்தோம்.
வெண்முரசு பற்றி ஒரு குறிப்புக்கூட வரவில்லை என்பது தவறான தகவல். வெண்முரசுவை மையப்படுத்தி உங்களுடைய விரிவான நேர்காணலை தீபாவளி மலரில் 12 பக்கங்களுக்குச் சிறப்பான முறையில் வெளியிட்டோம். அதன் சுருக்கமான வடிவத்தை நாளிதழின் இலக்கியப் பக்கத்தில் கிட்டத்தட்ட முக்கால் பக்க அளவுக்கு வெளியிட்டோம். தற்போதைய புத்தகக் காட்சிக்கான சிறப்புப் பக்கங்களிலும் நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள். தி இந்துவின் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறீர்கள். என்னுடைய அணியினரின் பொறுப்பில் வரும் ஆன்மிக இணைப்பிதழிலும் எழுதியிருக்கிறீர்கள். எங்கள் அணியின் பொறுப்பில் வெளிவந்த முதல் மலர் 2013 தீபாவளியை ஒட்டி வந்தது. அதில் உங்கள் கட்டுரை இடம்பெற்றது.
நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், கண்மணி குணசேகரன் முதலான பலரை இலக்கியப் பக்கங்களில் எழுதும்படி கேட்பதில்லை எனச் சொல்லியிருக்கிறீகள். யுவனின் கதைகள் என்னுடைய அணியின் பொறுப்பில் வரும் சிறப்பு மலர்களில் மூன்று, நான்கு முறை இடம்பெற்றிருக்கின்றன. அண்மையில் வெளியான பொங்கல் மலரிலும் எழுதியிருக்கிறார். இலக்கியம் குறித்தும் இந்துஸ்தானி இசை குறித்தும் கலை இலக்கியப் பக்கங்களில் எழுதும்படி அவரைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நேரமின்மையால் பங்களிக்க இயலவில்லை என்று அவர் சொல்லிவருகிறார்.
நாஞ்சில் நாடனின் கட்டுரையும் பொங்கல் மலரொன்றில் இடம்பெற்றிருக்கிறது. அதன் பிறகும் பல முறை அவரைத் தொடர்புகொண்டு கேட்டுவருகிறோம். நண்பர் நெய்தல் கிருஷ்ணன் இல்லத் திருமணத்தில் அவரைச் சந்தித்தபோது நான் தனிப்பட்ட முறையில் அவரிடம் கோர்க்கை விடுத்தேன். பல்வேறு காரணங்களால் நேர நெருக்கடியில் சிக்கியிருப்பதாகச் சொன்ன அவர், கூடுமானவரை முயற்சிசெய்து எழுதுகிறேன் என்று சொன்னார். அவரிடமே கேட்டு இதைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
கண்மணி குணசேகரனின் படைப்பு குறித்த கட்டுரை இலக்கியப் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. மனுஷ்யபுத்திரனின் கட்டுரை, நேர்காணல் ஆகியவை இலக்கியப் பக்கங்களில் வந்திருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா ஆகியோரும் தொடர்ந்து புத்தகம், இலக்கியம், திரைப்படம் ஆகியவை குறித்துப் பங்களித்துவருகிறார்கள். மலர்களிலும் எழுதிவருகிறார்கள்.
யுவன் சந்திரசேகரும் நாஞ்சில் நாடனும் என் கதைகள் குறித்து ஏதேனும் எழுதியிருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அப்படியே அவர்கள் என் கதைகளை எதிர்மறையாக விமர்சித்திருந்தாலும் நான் அதை முக்கியமானதாகவே கருதுவேன். காரணம் அவர்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதை.
2016ஆம் ஆண்டின் முக்கியமான முகங்கள் பட்டியலில் இலக்கிய ஆளுமையாக தேவிபாரதி பெயர் இடம்பெற்றது. அது இலக்கியப் பக்கம் அல்ல. நடுப்பக்கம். அது என் பொறுப்பில் வரும் பக்கமல்ல. ஆனால், உரிய காரணத்தை முன்வைத்தே தேவிபாரதி 2016ஆம் ஆண்டின் முகங்களில் ஒருவராக முன்னிறுத்தப்பட்டார். அந்தப் பட்டியல் ஒரு தனி நபரின் தேர்வாக இருக்க முடியாது என்பது வெளிப்படை.
இதேபோன்றதொரு பட்டியலில் 2014இல் நீங்கள் இடம்பெற்றிருந்தீர்கள்.
அதற்கான சுட்டி:
கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் பற்றிய செறிவான பதிவுகள் இலக்கியப் பக்கங்களில் வந்துகொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், இமையம், மனுஷ்யபுத்திரன், எஸ்.ரா., சாரு நிவேதிதா, தேவதச்சன், வண்ணநிலவன், ஞானக்கூத்தன், வண்ணதாசன், பிரபஞ்சன், இரா. முருகவேள், முதலான பலரது ஆக்கங்களைப் பற்றியும் கவனப்படுத்தும் குறிப்புகள் / கட்டுரைகள் / நேர்காணல்கள் தி இந்துவில் வந்துள்ளன. போகன் சங்கர், சரவணன் சந்திரன் முதலான இளம் எழுத்தாளர்கள் குறித்தும் தொடர்ந்து எழுதிவருகிறோம்.
முன்னோடிகளான பாரதியார், ந.பிச்சமூர்த்தி, மௌனி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சார்வாகன், சி.மணி, ஜி.நாகராஜன், லா.ச.ராமாமிர்தம், பூமணி, சோ.தர்மன் பிரமிள் முதலான படைப்பாளிகளைப் பற்றியும் சிறப்பான முறையில் கட்டுரைகள் / நேர்காணல்கள் வெளியிட்டிருக்கிறோம். இவர்களில் யாருடைய பெயரையும் ‘தி இந்து’ என்னும் சொற்களுடன் சேர்த்து கூகிளில் தேடினால் வந்து விழும் இணைப்புகளே இவற்றுக்குச் சான்று. சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களை மட்டுமின்றி, விஷ்ணுபுரம் விருது, விளக்கு விருது, இயல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்களைப் பற்றியும் செறிவான பதிவுகளை வெளியிடும் ஒரே வெகுஜன இதழ் தி இந்துதான். ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன் ஆகியோரின் மரணத்திற்கு மிகச் சிறப்பான அஞ்சலிகளை வெளியிட்டிருக்கிறோம். லா.ச.ரா.வின் நூற்றாண்டைச் சிறந்த முறையில் கொண்டாடினோம். இலக்கியத்தைப் பற்றி மட்டுமல்லாமல், நவீன நாடகம், நவீன ஓவியம், நாட்டார் கலை ஆகியவை குறித்தும் காத்திரமான பதிவுகள் வருகின்றன. கலை, இலக்கியம் சார்ந்த உள்ளடக்கம் எந்தப் பகுதியில் வந்தாலும் நாங்கள் அனைவரும் இணைந்தே அதற்கான பணிகளை ஒருங்கிணைக்கிறோம். இவை அனைத்திலும் என்னுடைய பங்கு கணிசமானது.
எத்தனையோ படைப்பாளிகளைப் பற்றியும் கலை இலக்கியத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் நாங்கள் எழுதியும் தேவிபாரதி என்னும் ஒரே ஒரு பெயர் மட்டுமே ஒருவரது கண்களுக்குத் தெரிகிறது என்றால் அது எங்கள் குற்றம் அல்ல.
எத்தகைய முயற்சிகளிலும் போதாமைகளும் விடுபடல்களும் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தாராளமாகச் சுட்டிக்காட்டலாம். ஆனால், உள்நோக்கம் கற்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.
இலக்கியம், நூல் மதிப்புரை பக்கங்களில் பதிப்பகங்களுக்கான இடம் பற்றிச் சொல்கிறீர்கள். நாங்கள் நூல்களின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தியே இந்தப் பக்கங்களுக்கான உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கிறோம். படைப்பு, படைப்பாளி ஆகியவற்றுக்குப் பிறகே பதிப்பகம். இதன்படி நற்றிணை உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களின் பல்வேறு நூல்களுக்கும் உரிய கவனம் கிடைத்துவருகிறது. நற்றிணை பதிப்பகத்தின் நூல் ஒன்றுக்கு (பிரபஞ்சனின் மகாபாரதம்) நானே மதிப்புரை எழுதியிருக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன். வெறுப்பும் கசப்பும் நிறைந்த அபிப்பிராயங்களுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்பதால் தகவல் சார்ந்த பதில்களுடன் நிறுத்திக்கொள்கிறேன். யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளக்கூடிய தகவல்கள் இவை. தகவல் சார்ந்த இந்த மறுப்பை நீங்கள் வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.
*
என்னுடைய எழுத்து, பத்திரிகையாளராக என் செயல்பாடு ஆகியவை பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். வெறும் அட்டைக்குள் சுருங்கிவிடக்கூடிய என் நாவல்களைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் விரிவான மதிப்புரைகளை எழுதியிருக்கிறார்கள். நீங்கள் சொல்லியிருப்பது எதுவுமே விமர்சனம் அல்ல, வெறும் கசப்பு என்பது உங்களுக்கே தெரியும். எனவே அவற்றை நான் பொருட்படுத்த வேண்டியதில்லை.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக உங்களை அறிவேன். உங்கள் இலக்கிய அபிப்பிராயங்களின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் ஆகியவை பற்றியெல்லாம் நான் நன்கு அறிவேன். என்னைப் பற்றி நீங்கள் கூறியிருக்கும் இந்தச் சமயத்தில் அவற்றைக் குறித்து எழுத வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவேன். இந்தக் கட்டுரையில் நீங்கள் வெளிப்படுத்தியுள்ள ‘பொறுப்புணர்’வை விளக்க என்னுடைய படைப்புகள் பற்றி நீங்கள் எழுதியுள்ள ஒரே ஒரு வரி போதும். சில நாட்களுக்கு முன்பு உங்கள் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு இலக்கானவர் வண்ண நிலவன். இன்று கௌதம சித்தார்த்தனும் நானும்.
சூழலின் விவாதத்தின் மையமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதில் தவறில்லை. ஆனால், அதற்கு இதுபோன்ற கட்டுரைகளை எழுதாதீர்கள். மெய்யான விவாதங்களை உண்மையான தகவல்களின் அடிப்படையில் முன்னெடுப்பதே சூழலுக்கு நல்லது. இதுபோன்ற விவாதங்கள் சூழலை மாசுபடுத்தவே உதவும். அவசரப்பட்டுக் கருத்து சொல்வதன் எதிர்மறை விளைவுகளை நீங்களே அனுபவித்திருக்கிறீர்கள். கறையான்களை இல்லாத இடத்தில் தேடி வெறுப்பை உமிழ்ந்து உங்கள் தளத்தை நச்சுப் பொய்கையாக மாற்றிக்கொள்ளாதீர்கள்.
அன்புடன்
அரவிந்தன்
***
அரவிந்தன்,
எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் உண்டு. நீங்கள் சொல்லக்கூடும் ஒரே விளக்கம் என்பது நீங்கள் செய்வது கூட்டுப்பணி என்பதும் உங்களுடன் பணியாற்றும் பிறர் செய்வதும் உங்களுடைய பணிதான் என்பதுதான். அதைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று. இதற்குமேல் ஒரு நிறுவனத்தின் உள்விவகாரங்களை விளக்க முடியாது.
உங்கள் மனச்சான்றைப்பற்றி நான் அறிவேன். குறைந்தபட்சம் இனி ஒரு கட்டாயமாவது தொடரும் என்றால் அது நல்லதுதான்.
ஜெ.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
January 20, 2017
ஒரு மலைக்கிராமம்

டிசம்பர் [2008] ஐந்தாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பி ராசிபுரம் நோக்கி பயணம். ஒரு மாருதிவேனில் நான் விஜயராகவன், கிருஷ்ணன், சிவா, தங்கமணி, பிரபு ஆகியோர் நண்பர் அசோக்குடன் அவரது சித்தப்பா வாழ்ந்த கிராமத்துக்குக் கிளம்பினோம். ராசிபுரத்திலேயே லட்சுமி கபேயில் சாப்பிட்டுவிட்டு ராசிபுரத்தை தாண்டி பட்டணம் என்ற ஊருக்கு வந்து அங்கிருந்தும் சென்று மதியம்தாண்டி அந்தக்கிராமத்துக்குச் சென்றோம். போதமலை என்று கிராமத்துக்குப் பெயர்.
போதமலை கிராமத்தை ஒட்டி செங்குத்தாக உயர்ந்து நிற்கும் மலை. மலையின் உடலெங்கும் பச்சை அடர்ந்த காட்டுப்பரப்பு. சிகரங்களுக்கு மேல் வெண்மேகத்துணுக்குகள். மழை பெய்து ஓய்ந்து இரண்டுநாட்கள்தான் ஆகியிருந்தன. தெளிந்த நீலவானம். மலையிலிருந்து பரவி வந்தது போல பச்சை நிறவயல்களில் பெரும்பாலும் மக்காச்சோளம் போட்டிருந்தார்கள். சில இடங்களில் மரவள்ளிக்கிழங்கு. மக்காச்சோள ஓலைகள் பளபளவென எண்ணைபூசப்பட்ட பச்சைநிற வாள்கள் போல காற்றில் ஆடின.
அசோக்கின் சித்தப்பா பழனிச்சாமியும் அவரது மனைவியும் மட்டும்தான் அந்த பண்ணைவீட்டில் இருந்தார்கள். நிறைய இடவசதிகொண்ட தாழ்வான கிராமத்துவீடு. எருமை, பசு, காளைகள் இருந்தன. பெரிய பம்புசெட். எருமையும் பசுவும் குட்டிபோட்டிருந்தன. பசுக்கன்று மிகச்சிறியது. நான்குவாரம் இருக்கும். எதைக்கண்டாலும் மிரண்டு துள்ளிக்கொண்டிருந்தது. எருமைக்கன்றுக்கு இந்த உலகம் மீது பற்று இருப்பதாகவே தெரியவில்லை. பாவமாக நின்று மிகமிக மெல்ல திரும்பிப்பார்த்தது.
வீட்டு முகப்பில் கயிற்றுக்கட்டிலைப் போட்டுக்கொண்டு கொஞ்சநேரம் படுத்துக்கிடந்தோம். நல்ல காற்று சுற்றிலும் செழிப்பான தென்னைகள். இளநீர் வெட்டி குப்பிகளில் அடைத்துக்கொண்டோம். புளிசாதம் எலுமிச்சை சாதம் பொட்டலம் கட்டி எடுத்துக்கொண்டோம். மூன்று மணிக்கு, டீ குடித்துவிட்டு கிளம்பினோம்.
பழனிச்சாமிதான் வழிநடத்திக்கூட்டிச்சென்றார். இரண்டுகிலோமீட்டர் நடந்ததும் மலையை அடைந்தோம். பிறகு உருளைக்கற்கள் பரவிய காட்டுப்பாதை வழியாக செங்குத்தான மலை ஏற்றம். மலை ஏறும்போது முதலில் நம் இதயத்துக்கு அது பழக்கம் இல்லாத காரணத்தால் திடும் திடும் என்று அது அடித்து அவ்வப்போது குப்பென்று வியர்த்து தலைசுற்றும். அப்போது சற்று அமர்ந்து இளைப்பாற வேண்டும். மூச்சு திணறி மார்பு அடைத்து சற்றுநேரம் நுரையீரல் தொங்க வாயால் மூச்சுவிட்டால்தான் இளைப்பு ஆறும்.
ஆனால் இரண்டுமணிநேரம்தாண்டியதும் உடம்பும் நுரையீரலும் அந்த ஏறுதலுக்குப் பழகிவிட்டிருக்கும். அப்போது அதிக மூச்சுவாங்குவதில்லை, தலைசுற்றல் நின்றுவிட்டிருக்கும். கால்களில் நல்ல வலி இருந்தாலும் உடலெங்கும் ஓர் உற்சாகமும் இருக்கும். மலையேறுவதில் உள்ள ஆனந்தம் என்றாலே அந்த உற்சாகம்தான். அதன் பின் சிறிய இடைவெளி விட்டபடி பல மணிநேரம் மலை ஏறமுடியும்– இதயச்சிக்கல்கள் இல்லாமலிருந்தால். குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்கள் அந்த தருணத்தில் உணரும் எடையின்மையை எப்போதுமே தங்கள் உடலில் உணர முடியாது.
நான்கரை மணிநேரம் மலையில் ஏறிச்சென்றோம். ஏறக்த்தாழ பன்னிரண்டு கிலோமீட்டர். ஊரிலிருந்து தெரியும் உயர்ந்த சிகரத்தை ஏறி அதன் பக்கவாட்டில் சர்ந்து சென்று மறுபக்கம் சென்று இன்னொரு சிகரத்தை ஏறி சற்றே இறங்கினால் கீழூர் என்ற ஊர் வந்துவிடுகிறது. கீழே விரிந்த வயல் வெளிகள் மாலை வெயிலில் கண்கூசச் சுடர் விரித்து, ஒளி ததும்பிய தொடுவானம் வரை நீண்டுக்கிடந்தன. எதிரே மலையடுக்குகள் பச்சை செறிந்த உடல்மடிப்புகளுடன் கண்களை நிறைத்து சூழ்ந்திருந்தன. மலையடுக்குகளில் உள்ள ஆழ்மௌனம் நம்முள் குடியேறும்போதுதான் நம் காட்டு அனுபவம் தொடங்குகிறது
வழியில் ஒரு காட்டு நீரோடை தொட்டால் மீன்னதிர்ச்சி போல குளிர் தாக்கும் தெளிந்த நீருடன் பாறைகள் நடுவே கொட்டி குறுக்காகச் சென்றது. தங்கமணியும் பிரபுவும் அதில் குளித்தார்கள். நான் வழியில் இருந்த புளியமரத்தில் புளியங்காய் பறித்து தின்றேன். இளம்பச்சைப்புளி. ஒரு இடத்துக்குச் சென்றதும் அங்குள்ள எதையாவது பறித்துத்தின்றால் அப்பகுதியுடன் ஒர் உறவு உருவாகிவிடுகிறது. அங்கிருந்து மேலே சென்றபோது வயல்கள் வர ஆரம்பித்தன.
போதமலைக்கீழூர் சேலம் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது. மலைஉச்சியில் இருக்கும் இந்த ஊரில் பழங்குடிகளும் காட்டுநிலம் திருத்தி விவசாயம்செய்யும் கவுண்டர்களும் குடியிருக்கிறார்கள். இந்த ஊருக்கு இப்படி மலை ஏறித்தான் வந்தாகவேண்டும். அந்த ஊர்க்காரர்கள் மூன்று மணி நேரத்தில் தலையில் கனத்த சுமைகளுடன் வேகமாக அத்தனை தூரம் ஏறிவிடுகிறார்கள்.
ஊரைச்சுற்றி அடுக்கடுக்காக மலைவயல்கள். அவற்றில் அதிகமும் மக்காச்சோளம்தான் பயிரிட்டிருந்தார்கள். ஊருக்கு மின்சார வசதி இல்லை. சூரிய சக்தி விளக்குகள் பல அமைக்கப்பட்டிருந்தன. இரண்டுவிளக்குகள் பஞ்சாயத்துக்குச் சொந்தமானவை. சில விளக்குகள் தனிப்பட்டவர்களால் அவர்கள் வீட்டுக்கு அமைக்கப்பட்டிருந்தன. சூரியசக்தியால் இயங்கும் பஞ்சாயத்து தொலைக்காட்சி ஒன்று ஊர் நடுவே சதுக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் தமிழ்த்திரையின் குத்துநடனங்கள் அலையடித்தன.
இருட்டுக்குள் வயல்கள் வழியாக தடுமாறி சதுக்கத்தை வந்தடைந்தோம். சூரியவிளக்குகளில் ஒன்றுதான் எரிந்தது. தொலைகாட்சி பார்க்க நாலைந்து கிராமவாசிகள் கனத்த போர்வையை முட்டாக்கு போல போர்த்திக்கொண்டு வந்து குந்தியிருந்தார்கள். பொதுவாக ஊரில் அதிக மக்கள் நடமாட்டம் இருப்பதாகத்தெரியவில்லை. இருளுக்குள் போர்வையுடன் நிழல்கள் போல சில பெண்கள் நடமாடினார்கள். சதுக்கத்தில் ஒரு மாரியயம்மன் கோயில். ஏற்ற இறக்கமான நிலமெங்கும் பாறைகள் போல புல்வேய்ந்த குடிசைவீடுகள்.
அதற்கு வடக்காக ஒரு பள்ளி. அது பழங்குடியினர் மற்றும் சீர்மரபினருக்கான உண்டு உறைவிடப்பள்ளி. ஆனால் அப்போது அதில் யாரும் உண்டு உறைவதாகத்தெரியவில்லை. பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை உண்டு. ஒரே ஒரு ஆசிரியர்தான். அவர் கீழே இறங்கிச்சென்றுவிட்டார். அங்கே பள்ளியின் சமையற்காரர் மட்டும் உள்ளே ஓர் அறையில் தங்கியிருந்தார். பள்ளிமுன் உள்ள அறிவிப்புப் பலகையில் அந்த ஊர்த்தலைவர் மாதப்பன், துணைத்தலைவி மணிமேகலை என்றும் கண்டேன். இருபது சூரிய விளக்குகள் இரு தொலைக்காட்சிகள் இயங்கும் ஊர் அது என்றது பலகை.
பழனிச்சாமி அங்கே தங்கியிருந்த சமையற்காரரைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்து பள்ளியைத்திறந்தார். நல்ல இருட்டு. பள்ளியில் பெஞ்சுகள் ஏதும் இல்லை. பிள்ளைகள் எல்லாம் தரையில் அமர்ந்துதான் படிக்கவேண்டும் . ஐந்தாம் வகுப்புக்கு மேல் கீழே இறங்கிச்சென்று விடுதியில் தங்கிப் படிக்கவேண்டுமாம். அந்தப்பள்ளியில் இரவு தங்குவதென முடிவெடுத்தோம். கடும் குளிர். போர்வைகளால் நாங்களும் முட்டாக்கு போட்டுக்கொண்டோம்.
அந்த தொலைக்காட்சியை நிறுத்தினால் நன்றாக இருக்குமே என்றார் கிருஷ்ணன். இது அவர்கள் ஊர் , வந்ததுமே நீங்கள் அவர்கள் மீது உங்கள் ஆதிக்கத்தைக் காட்டவேண்டுமா என்று நான் சொன்னேன். இந்தக் குப்பையை எல்லாம் ஏன் இவர்கள் பார்க்கவேண்டும் இதை அவர்களிடம் நான் ஏன் சொல்லக்கூடாது என்று கிருஷ்ணன் வாதிட்டார். இந்த தொலைக்காட்சி மட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வெளியுலக வாசல் என்றேன் நான். ஆனால் பிறகு தெரிந்தது, அது தொலைக்காட்சி அல்ல, சிடி பிளேயர்தான். அதைவைத்து சினிமாப்பாடல்களும் சினிமாவும் தினமும் ஒளிபரப்புகிறது பஞ்சாயத்து.
முட்டாக்கு போட்டுக்கொண்டு ஒரு வயசாளி அருகே வந்து பவ்யமாக அமர்ந்துகொண்டார். நாங்கள் எது கேட்டாலும் பலவீனமான குரலில் வாய் பொத்து ‘தெர்லீங்’ என்று சொன்னார். உற்றுபார்த்துக்கொண்டே இருந்தார். வாய்பொத்தியிருப்பது அவர் குடித்திருப்பதனால் என்று தெரிந்தது.
பள்ளிக்குள் சென்றோம். முன்று பாய்கள்தான் கிடைத்தன. விஜயராகவன் அவருக்கு ஒற்றைத்தலைவலி என்று சொன்னார். இன்னொருபாய்க்காக சிவா ஊருக்குள் சென்றார். ஊரில் யாருமே வாசல் திறக்கவில்லை. பழனிச்சாமிக்கு தெரிந்த ஒருவர் ஒரு பாய் கொடுத்தார். நான்குபாய்களையும் சேர்த்து விரித்துக்கொள்வதென முடிவு செய்தோம். வெளியே விளக்கொளியில் அமர்ந்து புளிச்சாதமும் எலுமிச்சை சாதமும் கலர்து சாப்பிட்டோம். உள்ளே சென்று செல்போன் ஒளியில் அறைக்குள் பரவி அடுக்கியது போலச் சேர்ந்து படுத்துக்கொண்டோம். அசோக் ‘எங்கே செல்லும் இந்தப்பாதை?’ என்று சோகமாகப் பாடினார்.
படுத்தபோதுதான் உடம்பெங்கும் பரவியிருந்த களைப்பு தெரிந்தது. கணுக்கால்களும் கெண்டைச்சதைகளும் முதுகும் கடுமையாக வலித்தன. உடல்வலி காரணமாக ஒவ்வொருவரும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தோம். தரையில் இருந்து குளிர் உடம்பில் ஊறி ஏறி எலும்புகளை தொட்டது. ஆனால் கடும் களைப்பு காரணமாக நன்றாகவே தூங்கிவிட்டோம்.
நள்ளிரவில் நான் சிறுநீர் கழிக்க வெளியே வந்தேன். வெளியே மலைக்காற்று வீர் வீர் என்று கடும் குளிருடன் மரங்களை சுழற்றியபடி வீசியது. மிக அருகே தெரிவதுபோல நட்சத்திரங்கள் வானில் பரவி நடுங்கிக்கொண்டிருந்தன. கோள்கள் சிவப்பாக மலையுச்சி விளக்கு போல நல்ல ஒளியுடன் தெரிந்தன. கைநீட்டினால் தொட்டுவிடலாமென்பதுபோல பிரமை. தரையில் கேட்காத இரவின் ஒலி. சீவிடுகளின் சுருதியுடன் இணைந்தும் சட்டென்று எழுந்தும் ஒலிக்கும் காற்றின் ஒலி. அப்பால் ஒரு நீரோடையின் ஒலி. சட்டென்று விசித்திரமான ஒரு க்ராக்! பறவையா விலங்கா தெரியவில்லை.
குளிரின் உடலைக் குறுக்கியபடி வெளியே சென்றேன். சிறகுபோல போர்வை படபடத்தது. பனிமூடிய நிலவொளியில் வானம் ஆரஞ்சுநிற மேகங்களுடன் விரிந்திருக்க, மரங்கள் மற்றும் ஓலைக்கூரைகள் மீது பனிமூடிப்பரவியதனால் அற்புதமான ஒரு நீலநிறம் எங்கும் சூழ்ந்திருந்தது. காட்டிலிருந்து எழுந்து வந்த பச்சைஇலைவாசனை. தூரத்தில் ஆடு சினைப்பதுபோல ஒரு சத்தம்.
வானத்தைப் பார்த்தபின் தரையைப்பார்த்தபோது கண்தெரியவில்லை. நான் என் நோக்கியா செல்·போனை அழுத்தினேன். நீல ஒளிகண்டு அங்கே சுருண்டு கிடந்த கரிய நாய் எழுந்து பதறி ஊளையிட்டு அலறியபடி ஓடி தூரத்தில் நின்று குரைத்தது நான் சற்று அசைந்ததும் குலை பதறி மேலும் ஓடி நின்று குரைத்தது. அதன் கண்கள் ஒளிவிட்டன.
மறுநாள் காலையில் ஆறுமணிக்கு எழுந்தோம். மேகம் இல்லாததனால் நன்றாகவே ஒளி பரவியிருந்தது. கூரைவீடுகள் மீது சமையற்புகை பரவியது. ஊருக்குள் நடந்து மறுபக்கம் காட்டு விளிம்பை அடைந்தோம். ஒன்று கவனித்தேன், அது மிகமிகச் சுத்தமான ஊர். அதனாலேயே மிக அழகியது என்ற எண்ணமும் ஏற்பட்டது. தெரு என்ற அமைப்பு இல்லை. ஒவ்வொரு வீடும் நான்கு பக்கமும் முற்றங்களுடன், மண்சுவர்களும் புல்கூரைகளுமாக தனித்து நின்றன. ஒவ்வொரு வீட்டுமுற்றமும் ஒவ்வொரு உயரத்தில் பல தட்டுகளாக இருந்தன
செங்குத்தாக எழுந்த புல்கூரைகள் கருகி பாறைகள் போன்றிருந்தன. சில வீடுகளில் புதிய ஓடு. சுவர்கள் ¨கையால் கட்டப்பட்டு விரல்தெரிய சுண்ணாம்பு பூசப்பட்டவை. திண்ணைகள் பச்சைச்சாணிபூசப்பட்டவை. முற்றங்களெல்லாம் கூட்டி சுத்தமாக இருந்தன. நம் ஊர்களில் எங்கும் குவிந்துகிடக்கும் பாலிதீன், காகிதக் குப்பைகள் அறவே இல்லை. கண்பட்ட இடமெங்கும் துப்புரவாகக் கூட்டப்பட்டிருந்தது.
அந்தக்காலை வேளையில் நூறுவயதுகூட தோற்றமளித்த ஒரு பாட்டி முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருந்தாள். மூன்றுவயதுக் குழந்தை முற்றம் கூட்டிக்கோண்டிருந்தது. காலையில் ஊரைத் தூய்மைப்படுத்துவதை அத்தனைபேரும் சேர்ந்து செய்வதுபோல தோன்றியது. சாக்கடைகள் வழிந்து தேங்கியிருக்கவில்லை. நெருக்கமாக மக்கள் வாழும் நம் ஊர்களில் உள்ள முடைநாற்றமே இல்லை. அப்போதுதான் நேற்றிரவு கொசுவே இல்லை என்பதை நினைத்துக்கொண்டேன். இப்போது ஊட்டி போன்ற மலையுச்சிகளில்கூட கொசு பிடுங்கி எடுக்கிறது
வீடுகளில் சிறுகுழந்தைகளும் முதியவர்களும்தான் அதிகமாகக் கண்ணில்பட்டார்கள். இளையவர்கள் அனைவருமே அவர்களின் காட்டுநிலங்களில் வலைசெய்யப்போய் அங்கேயே தங்கிவிடுவார்களாம். ஊரைக்கடந்து காடுவரைக்கும் போனோம். வயல்களில் புஞ்சைநெல் விவசாயம்செய்திருந்தார்கள். அப்பகுதியில் காட்டில் பலாப்பழம் அதிகம். ஆனி ஆடி மாதங்களில் காடே பலாப்பழவாசனையால் நிறைந்திருக்கும் என்றார் அசோக்.
ஊருக்கு வெளியே கூட குப்பைமலைகள் காணபப்டவில்லை. அங்குள்ள மக்கள் பொட்டலமாக்கப்பட்ட பொருட்களையும் பாலிதீன் உறைபோடப்பட்ட பொருட்களையும் மிகக் குறைவாகப் பயன்படுத்துவதனால் வந்த சுத்தமாக இருக்கலாம். நமது ஊர்களில் அந்த குப்பைகளை என்ன செய்வதென்றே தெரிவதில்லை. நாகர்கோயிலில் அந்தக்குப்பைகளை அகற்ற எவ்விதமான ஏற்பாடும் அரசு சார்பில் செய்யப்படுவதில்லை.
திரும்பிவந்தோம். அந்த நூற்றுப்பாட்டி ஓர் உரலில் எதையோ இடிக்க ஆரம்பித்திருந்தாள். ஊரில் பொதுவாக வசதிகள் குறைவு இல்லை. தண்ணீர் தொட்டி இருந்தது. அடிபம்பு போடப்பட்டிருந்தது. ஊர்ச்சதுக்கம் சிமிண்ட் போடப்பட்டது. ஆனால் அங்கே கடை என்று ஏதும் இல்லை. ஒரு டீ குடிக்கக்கூட வழி இல்லை. வீடுகளில் கேட்டுப்பார்க்கலாமென்றால் அங்குள்ள மக்கள் எங்களை தவிர்ப்பது போல தெரிந்தது.
எட்டுமணிக்கு இறங்க ஆரம்பித்தோம். அங்குள்ள மக்கள் எங்களைக் கண்டு அஞ்சிவிட்டார்கள் என்றார்கள் நண்பர்கள். காரணம் அங்கே வெளியாட்கள் வருவது அனேகமாக வனத்துறையினரும் சாராயவேட்டைக்காரர்களும்தான். அவர்கள் அகப்பட்டவர்களை அடிப்பார்கள். மலைக்கிராமங்களில் ஓரளவு சாராயம் காய்ச்சும் தொழில் உண்டு, ஆனால் உண்மையாக சாராயம் காய்ச்சுபவர்களை எளிதில் பிடிக்க முடியாது. ஏழைப்பழங்குடிகளைப்பிடித்து வழக்குபோட்டு உள்ளே தள்ளுவதே போலீஸ் செய்வது. ஊர்க்காரர்கள் எங்களைக் கொஞ்சம்கூட வரவேற்காதது ஏன் என்று அப்போது புரிந்தது.
திரும்பிவரும் வழியில் ஓடையில் சிவாவும் தங்கமணியும் குளித்தார்கள். மலை இறங்குவதும் சற்றே சிரமமானதுதான். மதியம் பன்னிரண்டு மணிக்கு கீழே இறங்கிவிட்டோம். கீழே வெயில் கண்களைக் கூசியது. அதுவரை இருந்த குளிர் சில கணங்களிலேயே பொய்யாய் பழங்கதையாய் மாறி பின்னுக்கு மறைந்தது.
பழனிச்சாமியின் வீட்டில் மதியம் சாப்பிட்டோம். கொல்லையிலேயே பறித்த பூசணிக்காய், முருங்கைக்கீரை, காய்கறிகளால் சாம்பாரும் கூட்டும். புதியகாய்கறிகளுக்கே உரிய சுவை. நடந்த களைப்பில் ஒவ்வொருத்தரும் இரண்டு ஆள் கணக்குக்கு உருட்டி உருட்டி சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம். கயிற்றுக்கட்டிலில் படுத்து அரைத்தூக்கம் போட்டோம். காற்று வீசும் மெல்லிய சலசலப்பு அல்லாமல் எந்த ஓசையும் இல்லை
சேலம் வானொலியில் பழைய பாட்டு போட்டார்கள். ”ரேடியோல்லாம் கிராமத்திலேதான் கேக்கணும் சார்”என்றார் கிருஷ்ணன். ”ஆமா, அதிலயும் நல்ல வெயில் அடிக்கிறப்ப மத்தியானத்துக்குமேலே கிராமத்திலே ஒரு அமைதி வரும் பாருங்க, அப்ப கேக்கணும்…ஒரு மாதிரி மயக்கமா இருக்கும்”என்றேன். பாட்டுகேட்டுக்கொண்டு கொஞ்சம் தூங்கிவிட்டேன்.
இரண்டரை மணிக்கு காரில் ராசிபுரம் திரும்பினோம். நான் இரவு பத்து மணிக்கு கோவை-நாகர்கோயில் ரயிலைப்பிடிக்கவேண்டும். காரில் பேசிக்கொண்டே வந்தபோது கிருஷ்ணன் ‘நாம இறங்கிவாரப்ப அந்த ஊர்க்காரங்க எவ்ளவுவேகமா ஏறிப்போனாங்க பாத்தீங்களா?” என்றார். அசோக் சிவாவிடம் ”போனவாட்டி அந்த கர்ப்பிணியைப் பாத்தமே” என்றார். ஒரு ஏழுமாத கர்ப்பிணி இடுப்பில் குழந்தையுடன் தலையில் மூட்டையுடன் மலைஏறி அந்த கிராமத்துக்குச் செல்வதை அவர்கள் கண்டார்களாம்.
”நாம மலை ஏறி ரசிச்சுட்டுவர்ரோம்…அங்க இருக்கிறவங்களை நெனைச்சா பாவமா இருக்கு”என்றார் சிவா. நான் அந்த நூற்றுப்பாட்டியின் ஆரோக்கியத்தையும், அந்த ஊரின் அமைதியையும் சுத்தத்தையும் நினைத்துக்கொண்டேன். அங்கே ஆரோக்கியமாக இல்லாத முதியவர்களே கண்ணில் படவில்லை. பரிதாப்பபடவேண்டியவர்கள் யார்?
============================================================
முதற்பிரசுரம் Dec 10, 2008 /மறுபிரசுரம்
====================================================
மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
விளையாடல்
தேசம்
பயணம்- கடிதம்
கனடா – அமெரிக்கா பயணம்
இமயச்சாரல் – 21
இமயச்சாரல் – 20
இமயச்சாரல் – 19
இமயச்சாரல் – 18
இமயச்சாரல் – 17
இமயச்சாரல் – 16
இமயச்சாரல் – 15
இமயச்சாரல் – 14
இமயச்சாரல் – 13
இமயச்சாரல் – 12
இமயச்சாரல் – 11
இமயச்சாரல் – 10
இமயச்சாரல் – 9
இமயச்சாரல் – 8
இமயச்சாரல் – 7
ஜல்லிக்கட்டு தடை -எதிர்வினைகள்
நண்பர்களே ,
2 ஆண்டுகளுக்கு முன் வந்த தீர்ப்பு மற்றும் அதையொட்டிய பதிவு .
தற்போது தமிழகத்தில் நிகழ்வது ஒரு பேரெழுச்சி, இந்த அளவில் முன்னெப்போதும் இருத்திராதது. இது ஒரு குறிப்பிட்ட அமைப்பினாலோ தலைமையாலோ ஒருங்கிணைக்கப் படுவதில்லை, வழிநடத்தவும் படுவதில்லை. அதேபோல ஒரு பயன்பாட்டு நோக்கை முன்னிறுத்தியதும் அல்ல, ஒரு கலாச்சார அடையாளத்தை முன்னிறுத்தி ஒரு ஒருங்கிணைவு. இந்த வகையில் இது இந்தியாவுக்கே முன் மாதிரி. இறுதியில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இத்துடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும்.
சமீபத்தில் இதற்கு முன் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் தமிழகம் முழுக்க பரவி சுமார் 2 மாதங்களுக்கு நீடித்தது, அண்ணா ஹசாரே உண்ணா நோன்பு ஆதரவு போராட்டம் தமிழகம் முழுவதும் நிகழ்த்தப்பட்டது. சசி பெருமாள் ஆதரவு போராட்டமும் ஓரளவு தமிழகம் முழுக்க நிகழ்ந்தது. கூடங்குளம் போராட்டம் ஓராண்டு நீடித்தது. இந்த அளவில் தொடர்ந்து வேறெந்த மாநிலத்திலாவது நடைபெற்றிருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை.
இந்திய அளவில் தில்லி நிர்பயா ஆதரவு போராட்டம் போல அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் இந்த அளவில் இல்லை, எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது போகப் போக தான் தெரியும். இன்றைய தேதி வரை நமது அரசு மாணவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது, கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கவில்லை, இந்த இரு காரணங்களும் மிகப் பெரிய பலம். அரசு இதை ஒடுக்க நினைத்தாலோ அல்லது விடுமுறை அறிவிக்கப்பட்டாலோ போராட்டம் பிசுபிசுக்க வாய்ப்புண்டு. ஒரு தலைமை இல்லாததும் ஒரு பின்னடைவே.
சமூக ஊடகங்களின் பங்களிப்பை அறிவு ஜீவிகள் எப்போதும் குறித்து மதிப்பீட்டுக்கு கொண்டேதான் இருக்கிறார்கள், சென்னை வெள்ளத்தில் அது தனது பொறுப்பையும் பலத்தையும் காட்டியது இப்போது இந்த விஷயத்தில். இது இந்திய அளவில் தமிழகத்தின் மதிப்பை உணர்த்தும் எனவே நான் எண்ணுகிறேன்.
நான் மேலே கண்ட தீர்ப்பை முழுமையாகப் படித்துள்ளதால் கொள்கை ரீதியாக அத்தீர்ப்பு சரி என்றே நினைக்கிறன். உயிர் வதை எவ்வடிவத்தில் வந்தாலும் அது தடுக்கப் படவேண்டும், பௌத்த சமண மதங்களின் தாக்கம் நமது சிந்தனைக்குள் உண்டு.
இந்தியாவெங்கும் பசுவதைக்கு எதிரான சிந்தனை சராசரி மனிதர்களிடையே உண்டு. அதே போல உயிரின வதைக்கு எதிரான சிந்தனையும். தத்துவாரதமாகப் பார்த்தல் உணவுக்காக உயிர்கள் கொல்லப் படக்கூடாது, நாம் உயிருடன் இருக்க இன்றியமையாத குறைந்த பட்ச சுரண்டலையே இப்புவி மீது நாம் செலுத்தவேண்டும். உயிரினம் எவ்வகையிலும் வதைக்கப் படக் கூடாது. இது நமது இந்து மதமும் ஏற்றுக் கொள்கிறது. அதே சமயம் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் தொன்மையான கலாச்சார அடையாளம்.
ஒரு பிராந்தியத்தின் அல்லது ஒரு இனதின் தனி தனிக்கலாச்சாரம் இந்திய அல்லது இந்து கலாச்சாரத்திற்கு எதிராக இருந்தால் என்ன செய்வது எனபதே இங்கு முக்கிய கேள்வி. இந்திய/இந்து கலாச்சாரமே நவீன முற்போக்கு சிந்தனைகள் மேற்கில் இருந்து வந்ததை ஏற்றுக் கொண்டு தமதை கைவிட்டதை நாம் பார்க்கிறோம். சிந்தனை ரீதியாக எது உயர்ந்தது என்பதே நமது அளவுகோலாக இருக்க முடியும். ஜல்லிக்கட்டில் காளை வதைக்கப் படுகிறது, அச்சுறுத்தப் படுகிறது இது நிஜம். உணவுக்கும் உழவுக்கும் பயன்படுத்தப் படுகிறது இதுவும் நிஜம். உயிர்வதை செய்யாமை உயர்ந்த கொள்கையே. தத்துவார்த்தமாக அனைத்தையும் எதிர்க்கவேண்டியது தான். இந்த இனமே (genetic pool) அதனால் அழியும் என்றாலும் கூட.
கொள்கை ரீதியாக ஜல்லிக்கட்டை எதிர்க்கவும், சமூக செயல்பாடு என்கிற இயக்கத்தின் கண் இந்த கட்டுப்பாடான அறவழி போராட்டத்தை பாராட்ட வேண்டிய நிர்ப்பத்திலும் நான் உள்ளேன். சில இலட்சியங்கள் சரியானவையாக இருந்து வழிமுறை தவறானவையாக இருந்ததை நாம் பார்த்துள்ளோம், இப்போது லட்சியம் தவறு வழிமுறை மட்டும் சரி.
இதுகுறித்து உங்கள் கருது என்ன ?
கிருஷ்ணன்
அன்பின் ஜெ..
கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஏறுதழுவுதல் தடைக்கெதிரான தானாக எழுந்த மக்கள் எழுச்சியைக் காண்கையில் மிகப் பரவசமாக இருக்கிறது. தமிழகத்தின் அரபு வசந்தம் என ஒரு நாளிதழ் தலைப்பிட்டிருந்தது.
இதன் பின்னர், சமூக ஊடகங்களின் பங்கும், இதில் ஈடுபட்டுள்ள சில முக்கிய மனிதர்களின் க்ரெடிபிலிட்டியும் இருக்கின்றன.
இதில் ஒரு சார்பு நிலை எடுக்கும் மனநிலை இல்லையெனக்கு. “வெள்ளைப் புரட்சி” யின் பொருளாதார நன்மைகளை உணர்ந்தவன். ஆனால், அது மேலோங்கி, உள்ளூர் இனங்கள் ஒதுக்கப்பட்டதையும் வேதனையுடன் காண்கிறேன். எது சரி எனச் சொல்ல முடியவில்லை.
ஆனால், எனது பரவசத்தின் காரணங்கள் சில:
எழுந்தது பெரும்பாலும் இளைஞர்கள்.
எழுச்சி அமைதியானது. இந்தியாவெங்கும் நடந்த போராட்டங்கள் வன்முறையில் முடிவதே வரலாறு.
பெண்களின் பங்கேற்பு அதிகம்.
கீழ்மைத்தனத்தின் உச்சமாக, மாலை விளக்குகள் அணைக்கப்பட்ட போது, பெண்களை ஒரு தொந்தரவும் செய்யாமல் நின்ற இளைஞர் சமூகம் மிகப் புதிது.
ஒரு காவல் அதிகாரி, உங்களுடன் நாங்கள், சீருடையில் என முகநூல் நிலைத்தகவல் இடுகிறார். ஒரு நிறுவனத் தலைவர், தம் ஊழியர் இதில் பங்கு பெற அனைவருக்கும் ஒரு நாள் விடுப்பு தருகிறார். ஒரு நாள் வருமானம் உங்கள் உணர்வுகளை விடப் பெரியதல்ல என்கிறது அவர் நிலைத் தகவல்.
பங்கேற்க முன் வந்த அனைத்து அரசியல் தலைவர்களையும் தவிர்த்திருக்கிறார்கள்.
மிக மிக முக்கியமாக, தாங்கள் குழுமியிருந்த இடத்தின் குப்பைகளை தாமே அகற்றியிருக்கிறார்கள்..
இந்தப் பிரச்சினையில், எழுந்த நின்ற மக்களின் கண்ணியமும், அமைதியாக தம் எதிர்ப்பைச் சொன்னவிதமும், எல்லாத் தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது.
இந்த எழுச்சி சுட்ட வருவதென்ன என எனக்கு இதன் முழுப் பரிமாணமும் தெரியவில்லை. ஆனால், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகம் ஒரு சரியான தலைமை வேண்டி நிற்கிறது எனத் தோன்றுகிறது.
பாலா
ஜல்லிக்கட்டு தடை: விதையின் அழிவு.
நமது கூடாது கூடாது சட்டங்களில் முதல் சிக்கல், அது இயற்றப்பட்ட உடனேயே செத்துப் போய்விடுகிறது என்பதே. பிரச்னைகள் எரிந்துகொண்டிருக்க கூடாதுக்கள் கூழாங்கற்கள் போல குளித்து உறைந்து கிடக்கிறது.
உதாரணம் புலிகளை காக்க இயற்றியவை அருகி வரும் அவ் இனத்தை காத்தது. நல்லது. இன்று பெருகி நின்று விவசாயிகளுக்கு தொல்லை தரும் மயிலை இந்த நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்னைக்கு உறைந்து கிடக்கும் கூடாதுக்களில் சமரசம் இல்லை இதுவே நிதர்சனம்.
முப்புரி வேலில் செருகிய மனிதத் தலை, எலுமிச்சம் பழமாக மாற, [கூடாதுக்கள் உட்பட] எத்தனை மறுமலர்ச்சி அலகுகள் தேவையோ அத்தனையும் இங்கே ஜல்லிக்கட்டுக்கும் தேவை.
லட்சியவாதம் என்பது என்றென்றைக்குமான கனவு. நடைமுறையில் இங்கே இப்போது என்ன நிகழ்கிறதோ அதற்க்கே செயல்பாட்டு தாக்கம் அதிகம்.
பல்லுயிர் ஓம்புதல் வழியே மானுடம் ஜீவித்திருக்கும் அந்த அலகே இன்றைய உலக ஜீவ காருண்ய நோக்கின் சாரம். ஏரி மலை வாயில், கக்கும் லாவாக் குழம்பின் எல்லைக்குள்ளும் உயிர் வாழும் நுண் உயிர்கள் உண்டு. ஆக எந்த சூழலிலும் இந்த பூமியில் உயிர் வாழ்தலின் தொடர்ச்சி அறுந்து விடாது. இது போதாதா? போதாது அந்த எல்லை வரையே இன்றைய மானுட ஜீவ காருண்யத்தின் பண்பாட்டு வளர்ச்சி நிற்கிறது.
கொல்லாமையை போதித்த இந்த நிலத்தில், வடக்கிருந்து உயிர் துறக்கும் காலாச்சாரமும் செயல்பட்டு இருக்கிறது. கருணைக் கொலைக்கு இடமற்ற, கூடாதுக்கள் இன்னும் பண்பாடு வளர்ச்சி அடையாத ஒன்றே.
கொல்லும் க்ரோதமும், கொள்ளும் மோகமும், பரவும் காமமும் மனிதத்தின் ஆதார விசை. அதில் கட்டுப்பாடுகள் தேவை. ஆனால் அவை இல்லாமல் போக வேண்டும் என்பது மானுட குல விரோதம் . மண்ணின் உப்பு போல. உப்பானது சாராமற்று போகச் செய்யும் அனைத்து கூடாதுகளும் இங்கே கூடாதுதான். நடனமாடும் சிவனின் தத்துவம் போதும், சன்னதம் கொண்டு ஆடும் சாமியாடி தேவை இல்லை என்பதைப் போலானது இது.
ஜல்லிக்கட்டில் நிகழ்வது மனிதனின் இயல்பில் உறையும் அடிப்படையான மீறல் ஒன்றினை கண்டு கொண்டு அதில் களிப்பு எய்தும் தருணம். இந்த விதை அழியாமல் காக்க, இங்கே ஜல்லிக்கட்டு தேவை. அதற்கான கடுமையான விதிகளுடன், அனைத்து அலகுகளிலும் அரசாங்கத்தின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நிகழ்த்தும் புதிய விதிமுறைகள்தானே அன்றி கூடாதுக்கள் அல்ல.
குடித்து சாகும் கிராமங்களை விட, வருடம் ஒரு முறை ஏறு தழுவ தயாராக்கிக் காத்திருக்கும் கிராமங்கள் எல்லா நிலையியலும் மேம்பட்ட கிராமமே.
பொதுவாக வெளியில் இருந்து ஒரு அடி நமது கலாச்சாரத்தில் பண்பாட்டில் விழும் போது, பெரிய அளவில் ஒரு மறுமலர்ச்சி நிகழும் என்பது ஆசான் சூட்டிக் காட்டுவது.
நிகழ்கால சாதக பாதகங்களுக்கு அப்பால், அந்த மறுமலர்ச்சியின் தலைவாயிலாக இன்று சாலையில் நிற்கும் அனைத்து மனங்களுக்கு என் வந்தனம்.
கடலூர் சீனு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

