Jeyamohan's Blog, page 919
September 10, 2021
மண்ணுள் உறைவது- கடிதங்கள்
மண்ணுள் உறைவது
வணக்கத்திற்கும் பேரன்புக்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடனான ஏசியாநெட் மற்றும் கைரளி தொலைக்காட்சி நேர்காணல்கள் மிகவும் அருமையாக இருந்தன. அவற்றை யூட்யூபில் ஆழ்ந்து ரசித்து சிரித்து சிந்தித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
சுஷில்குமார் அவர்கள் எழுதிய மண்ணுள் உறைவது கதையை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். விண்ணில் உள்ளதே மண்ணிலும் உள்ளது. மானுடனின் ஒவ்வொரு எண்ணமும் சொல்லும் செயலும் பிரபஞ்சப் பெருவெளி எங்கும் எழுதாமல் எழுதப்பட்டு கொண்டுதானே இருக்கிறது. மெய்யியலின் உள்ளுறை ஞானம் அவர் கதைகளில் மிகச் சிறப்பாக பயின்று வருகிறது. அவரின் கதைகள் ஒவ்வொன்றும் எளிதில் உணர்த்தப் பட முடியாத சூட்சுமமான கர்ம வினைக் கொள்கை போன்ற விஷயங்களை அழகாக காட்சிப்படுத்துகின்றன. காரிய காரணங்களை மிகச்சரியாக தொடர்புபடுத்த முடியாவிட்டாலும் மானுட இனம் ஏதோ ஒருவகையில் செயல் விளைவு தத்துவத்தை உணர்ந்துதான் இருக்கிறது. இதை ஒரு கதையின் மூலமாக வாசிக்க நேரும் பொழுது அது மனதில் ஆழப்பதிந்து நல்வழி நடப்பதற்கான ஊக்கத்தையும் மன வலிமையையும் வாசகர் அறியாமலேயே அவருக்குள் அது கடத்திவிடுகிறது.
ஒவ்வொருவர் வாழ்விலும் இதுபோல எத்தனையோ எளிதில் அவிழ்த்து விட முடியாத மர்ம முடிச்சுகள் நிறைந்து தான் இருக்கின்றன. ஒரு இலக்கியவாதி தனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு சிறு நிகழ்வையும் எப்படி கதையாக விரித்து எடுக்கிறான் என்பதே அவனின் வெற்றியை தீர்மானிக்கிறது. ஒரு நல்ல கதை என்பது இலக்கியவாதியின் வெற்றி மட்டுமல்ல அவன் வாழுகின்ற சமூகத்திற்கான பெரும் கொடையும் கூட. உயிரிய மானுட விழுமியங்களை வளர்ப்பதில் சிறுகதைகளின் பங்கு மிக முக்கியமானது. தொடர்ச்சியாக மறை விஷயங்களைக் குறித்து தனது சிறுகதைகளில் மிக அழகாக எழுதி வருகின்ற நண்பர் சுசில் குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
***
அன்புள்ள ஜெ
சுஷீல்குமாரின் சிறுகதை ஒரு சிறந்த படைப்பு. நீங்கள் சொன்னதுபோல கதையை எப்படியும் எந்த வடிவிலும் சொல்லமுடியும். ஏனென்றால் இந்தக்கதை நெரேஷனின் வலிமையால் நிலைகொள்ளவில்லை. மையமாக அமைந்த மெட்டஃபரின் வலிமையால் நிலைகொள்கிறது. உலக இலக்கியத்தை எடுத்துப்பார்த்தால் மெட்டஃபர்களை உருவாக்குவதுதான் இலக்கியத்தின் உச்சகட்ட சாதனையாக இருந்திருக்கிறது. நினைவில் அவைதான் வளர்கின்றன. மொழியழகு, வடிவ அழகு எல்லாம் அந்தச் சமயத்துக்குத்தான். மிகச்சிறந்த படைப்பு.
மண்ணுக்குள் என்ன இருக்கிறது என்ற கேள்வி பல படைப்புகளை ஞாபகப்படுத்துகிறது. மண்ணின் ஆழத்தில் அக்கினி இருக்கிறது என்பது ஒரு நம்பிக்கை. முதலில் நீர். அப்புறம் நெருப்பு. மண் என்பது ஒரு மாபெரும் நினைவு என்று ஆப்ரிக்கபழமொழி உண்டு. எல்லாவற்றையும் மண் ஞாபகம் வைத்துக்கொள்ளும். மண்ணில் புதைந்தவை எல்லாமே எப்படியோ முளைக்கும்.
அழகான கதையை எழுதிய சுஷீலுக்கு பாராட்டுக்கள்.
ராஜேந்திரன் எம்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். விக்ரமாதித்யனுக்கு இந்த வருட விஷ்ணுபுரம் விருது என்று அறிவிக்கப்பட்டதும் அகமகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். எழுபதுகளின் இறுதியிலிருந்து வாசிக்கும் எனக்கு , மிகவும் பரிச்சயமான கவிஞர்களில் ஒருவர், விக்ரமாதித்யன். மரபுக்கவிதை எழுதுபவர்கள் நவீனக் கவிதை எழுதுபவர்கள் மேல் ஈயைத்தை காய்ச்சி ஊற்றாத குறையாக சாடுகின்ற காலம். என்னைப் போன்றவர்கள், இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என்று விழித்த காலம். அப்பொழுது இவரது கவிதைகள் எளிமையாக மனதில் வந்து அமரும். நான் அறிந்த வாழ்க்கை, என் அனுபவம் அவரது வார்த்தைகளில் வந்து விழும். எதுகை, மோனை, சீர், ஓசை என்று எதுவும் பிரித்துப் பார்த்து அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. நல்ல வேலை கிடைக்காமல், காலையில் தாமதமாக எழுந்தால், அம்மாவிடமிருந்து காப்பி கூட கிடைக்காது. இருத்தலே, கேள்வியாக இருந்த காலத்தில், இப்படி ஒரு கவிதை அவரிடமிருந்து ஆறுதலாக.
எப்படியும்
இருந்துகொண்டே இரு
காட்சியில் இல்லையென்றால்
காணாமல்தான் போவாய்
காணாமல் போனதுக்காக
கவலைப்படுவார் யாருமில்லை
அவரவர் பாத்திரத்துக்கு
அவரவரே பொறுப்பு
எவர் கையையும் எதிர்பாராது
எதுக்காகவும் அலட்டிக்கொள்ளாது
ஏனென்று விசாரம்விடுத்து
இருந்துகொண்டே இரு
இருக்கும்வரை இருந்துகொண்டே இரு
எப்படியும்.
வார்த்தைகள், புரிதலைத்தாண்டி உணர்வுப்பூர்வமாக சென்றடைவது சொந்த மொழியில் வாசிக்கும்பொழுதும், கேட்கும்பொழுதும்தான் என்பது என் எண்ணம். ‘காற்று’ என்று யாரேனும் சொல்லக் கேட்டால் புயல், தென்றல் இரண்டும் வந்து அலைமோதுகிறது. ‘மழை’ என்று சொன்னதும் ஊரில் இன்னும் மழை இல்லையே என்ற கவலை வந்து ஒட்டிக்கொள்கிறது. விக்ரமாதித்யனின் கவிதை நூல்களில் ஒன்றின் பெயர் , ‘சும்மா இருக்கவிடாது காற்று’. இந்த நூலை வாங்கி அட்டையில் இருக்கும் தலைப்பைப் பார்த்தால் போதும். கவிதைகள் அப்புறம்.
கருத்துச் சொல்ல பிடிப்பதில்லை. யாரும் கருத்துச் சொன்னால், அவர் மேல் கோபம் வருகிறது. அவரது ‘பூமிபோல’ கவிதை என்னை ஆற்றுப்படுத்துகிறது.
நடக்கும்
நடக்காதென்று சொல்ல
நான் யார்
வேண்டும்
வேண்டாமென்று நினைக்கத்தான்
நான் யார்
.
நன்மை
தீமையென யோசிக்க
நான் யார்
உண்மை
பொய்மையென கருதத்தான்
நான் யார்
பூமிபோல
இருக்கவேண்டியதுதான் சாமி
கவிஞர் விக்ரமாதித்யனின், கவிதைகளுடன், அவரது கட்டுரைகளும் வாசகனாக எனக்கு கற்றுக்கொடுத்தவை உண்டு. கற்றுத் தேறுவதுதான் வித்தை என்ற அவரது கட்டுரையிலிருந்து.
சங்கக் கவிதையிலிருந்து கவிதை நுணுக்கமும் கூர்மையும் கற்றுக் கொள்ளலாம். காவியங்களிலிருந்து பலவகைப்பட்ட சொல்லும் விதமும் கவிதையை வளர்த்தெடுத்துச் செல்லும் வழி வகையும் விரிவான கதைசொல்லும் முறையும் தெரிந்துகொள்ளலாம்.
அகமும்புறமும் ஆழ்ந்து வாசித்து குறுந்தொகையும் நெடுந்தொகையும் உள்வாங்கி, பதிற்றுப்பத்தும் பட்டினப்பாலையும் மனசிலாக்கிக் கொண்டால் கவிதையின் சூட்சுமம் தன்னைப்போல பிடிபடும். நல்ல கவிதை தெரியாது. நல்ல கவிதை எழதமுடியாது
இன்று காலை போனில் அழைத்து, அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன். ‘கவிதையை என்னால் அனுபவிக்கத்தான் முடியும். விமர்சனம் வைக்கத் தெரியாது’ என்றேன். ‘சரியா சொன்னீங்க, சரியா சொன்னீங்க’ என்று சிரித்தார். எனது வேலை விபரங்கள் எல்லாம் கேட்ட பிறகு, “இவ்வளவு வேலைக்கு அப்புறமும் வாசிக்கிறீர்களா?“ என்றார். “துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிற வாழ்க்கையில் உங்கள் கவிதைகள்தான் ஆறுதல் படுத்துகிறது” என்றேன். “ஓ.. அப்படியா, என் வாழ்விற்கு ஒரு அர்த்தம் இருக்குங்கிறீங்க” என்றார். “என்ன ஐயா, இப்படி சாதாரணமா சொல்லீட்டிங்க!” என்றேன். லட்சுமி மணிவண்ணன் வார்த்தைகளை கடன் வாங்கி, ‘நீங்கள் தமிழின் அலங்காரம்’ என்றேன். “எனது அழைப்பால், அவரது நாள், நன்றாக அமைந்தது” என்றார். அவர் கவிதைகள்தானே, நம் நாட்களை நன்றாக வைத்திருக்கின்றன.
அன்புடன்,
சௌந்தர்,
ஆஸ்டின்
***
September 9, 2021
காந்தியும் பிராமணர்களும்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ அவர்களுக்கு,
வணக்கம். 1940களுக்கு பிறகு காந்தி கலப்பு திருமணங்களை மிகவும் வற்புறுத்தினார் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். வைதீக தமிழ் பிராமணர்களும் காந்தியை மிகவும் கொண்டாடியதாகத் தெரிகிறது. வர்ணாஸ்ரம தர்மம் இக்காலத்திற்கு ஏற்றதாக இருக்காது என நம்ப ஆரம்பித்த காந்தியை வைதீக தமிழ் பிராமணர்கள் ஏற்றுக்கொள்ள என்ன காரணம்?
ஹேராமில் கூட ஹேமமாலினி காந்திய முறைகளை உயர்த்தி பேசுவார். காந்தியை தமிழ் பிராமணர்கள் போற்றியதற்கு ராஜாஜியின் ஆளுமைக்கும் பங்கு உண்டா? ஒரே சமயத்தில் தலித்துகள், பிராமணர்கள் ஆதரவு காந்திக்கு எவ்வாறு கிடைத்தது? அந்த சமயங்களில் தனி மனித சிந்தனை பெரிதாக இல்லாததால் சாதிய அடையாளங்களை வைத்து இக்கேள்வி. பிழை இருந்தால் மன்னிக்கவும்.
கிருஷ்ணமூர்த்தி.
***
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
வைதீகத் தமிழ் பிராமணர்கள் காந்தியை ஆதரித்தார்கள் என்பது பிழையான புரிதல். உண்மையில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்த முற்போக்கான மாற்றங்களை எதிர்க்கும் விசையாகவே அவர்கள் இருந்தனர். தியோசஃபிக்கல் சொசைட்டியின் அன்னிபெசண்ட் முதல் காந்தி வரை சீர்திருத்தம் பேசிய அனைவரையும் அவர்கள் எதிர்த்தனர். காந்தி முன்வைத்த ஆலயநுழைவு உட்பட அனைத்தையும் அவர்கள் சீரழிவாகவே பார்த்தனர்.
ஆனால் தமிழகத்தில் மதச்சீர்திருத்த எண்ணங்களும், சமூகமாற்றச் சிந்தனைகளும் பிராமணர்களிடையேதான் வலுவாக இருந்தன. தமிழகப் பண்பாட்டு மறுமலர்ச்சியில் முதன்மைப் பங்காற்றியவர்கள் அவர்களே. காங்கிரஸின் முன்னணித் தொண்டர்களாகவும் பிராமணர்களே இருந்தனர். அவர்கள் காந்தியை ஏற்றுக்கொண்டு போற்றினர்.
தமிழ் வைதிகப் பிராமணர்கள் காந்தியை எப்படி அணுகினர் என்பதற்கு ராதா ராஜன் எழுதிய Eclipse Of The Hindu Nation: Gandhi And His Freedom Struggle என்ற நூல் சான்று. இந்நூல் சமீபத்தில், 2009ல் எழுதப்பட்டது. காந்தியைப் பற்றி அன்றுமுதல் தமிழ் வைதிகப் பிராமணர்களிடையே இருந்துவரும் கருத்துக்களை இந்நூல் தொகுத்துச் சொல்கிறது.
ஒரு நூலை வாசித்து நான் உண்மையாகவே குமட்டல் அடைந்தேன் என்றால், ஒரு மானுட உள்ளம் எந்த எல்லைவரை கீழ்மை அடையமுடியும் என்பதைக் கண்டேன் என்றால், அறிவுச்செயல்பாட்டின் அசிங்கத்தை அறிந்தேன் என்றால் இந்நூலில்தான். சாதிமேட்டிமைத்தனம், ஈவிரக்கமற்ற மானுடமறுப்பு, அறமென்னும் உணர்வே அற்ற மௌடீகம் ஆகியவற்றின் வெளிப்பாடு இந்நூல்.
பல்லாயிரம் பேரை கொன்றொழிக்கும் வெறுப்புகள் எங்கிருந்து ஊறி எழுகின்றன என்பதை இந்நூல் போல இன்னொன்று காட்டுவதில்லை. மானுட உள்ளத்தில் இத்தனை அழுக்கு இருக்கமுடியுமா என்னும் திகைப்பும், வரலாறெங்கும் இத்தகைய கீழ்மைகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன என்னும் கையறுநிலையும் ஒருங்கே உருவாயின.
எந்த வகையான சரித்திரவுணர்வும் இல்லாமல், எல்லாச் செய்திகளையும் சலிக்காமல் திரித்தும் வளைத்தும் பேசும் இந்நூல் ஏதேனும் ஒருவகையில் அறிவியக்கத்தில் செயல்படும் ஒவ்வொருவரும் அருவருத்துக் கூசிச்சுருங்க வேண்டிய ஒன்று. ஆனால் இங்கே வைதிகப் பிராமணர்களில் எவரும் இந்நூலை வெளிப்படையாகக் கண்டித்து எதையும் எழுதியதில்லை. பலர் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
காந்தி இந்துராஷ்ட்ரம் உருவாகாமல் தடுக்க பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட கைக்கூலி என சித்தரிக்கும் இந்நூல் காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களின் ஆசியுடன் வன்முறை வழியில் இந்துக்கள் விடுதலைப் போரை நடத்தியிருக்கவேண்டுமென வாதிடுகிறது. தீண்டாமை உள்ளிட்ட அனைத்தையும் ‘தர்மம்’ என நிறுவ முயல்கிறது.
இந்நூலை இந்துத்துவர்களில் ஒருசாரார் வெளிப்படையாகக் கொண்டாடி முன்வைக்க, பலர் ரகசியமாக வழிபடுகிறார்கள். இந்த அம்மையார் இந்துத்துவத் தரப்பாக நெடுங்காலம் தொலைக்காட்சிகளில் தோன்றியிருக்கிறார். இத்தனைக்கும் இந்த அம்மையார் தங்கள் குரலை ஒலிக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் நிராகரித்திருக்கிறது.
காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி காந்தியின் ஆலயநுழைவு இயக்கத்தை எதிர்த்தபோது கல்கி கிருஷ்ணமூர்த்தி மிகக்கடுமையாக ஒரு தலையங்கம் எழுதினார். “நீங்கள் உலககுரு ஒன்றும் கிடையாது, ஒரு மடத்தின் தலைவர். உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு வாயைமூடுங்கள்” என்றார்.
தமிழகத்தின் புதுயுகத்தை உணர்ந்த பிராமணர்கள், காங்கிரஸ் ஆதரவாளர்கள், வைதிகத் தரப்புக்கு அளித்த பதிலாகவே அதைக் காணவேண்டும். பின்னாளில் காந்தி பெரும்புகழ்பெற்று, தேசப்பிதாவாக உயர்ந்தபோது காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆசிபெற்று காந்தி போராடினார் என திரித்து வரலாறு அமைத்துக் கொண்டனர்.
ஆனால் இன்றும் வைதிகப் பிராமணர்கள் காந்தி, நேரு மேல் கடும் கசப்பு கொண்டவர்களே. வெளியே அதை சொல்லிக் கொள்ள மாட்டார்கள். சமீபகாலமாக இந்துத்துவ அலை தோன்றிய பின் மெலிதாக காழ்ப்புகளைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஜெ
உலகின் உச்சிப் பாதையில் ஒரு பைக் பயணம்
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
தாங்கள் சொல்லி சொல்லி உளம்பதிந்த வாக்கியம் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ”சிலநாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் உறங்கி, ஒரே இடத்தில் எழுந்து ஒரே டீயை பருகுவது மிகவும் சலிப்பானது”. ஒரே இடத்தில இருக்கமுடிவதில்லை, மனம் பயணம் பயணம் என்று ஏங்குகிறது. நோய்த்தொற்றுகாலத்தின் கட்டுப்பாட்டின் காரணமாக நீண்ட பயணங்கள் இல்லாமலாகிவிட்டன.
தற்போது ஏற்பட்ட தளர்வுகளினால் உடனடியாக நண்பர்கள் பெங்களூரு கிருஷ்ணன், சிவா, சிவாவின் உறவினர் முருகேஷ் மற்றும் எனது அலுவலக நண்பர் ஜான்சன் ஆகிய ஐந்து பேர் ஓரு பயணம் திட்டமிட்டோம். மொத்தம் 10 நாட்கள். ஸ்ரீநகர் வரை விமானத்தில் சென்று அங்கிருந்து கார் மூலம் இரு நாட்களில் லே- லடாக்கை அடைந்து, அதன்பிறகு பைக்கில் ஆறு நாட்களில் சுமார் 1000 கி.மீ சுற்றி, பல்வேறு பகுதிகளைப் பார்த்துவிட்டு லேவில் இருந்து விமானத்தில் சென்னை திரும்ப திட்டம்.
ஆகஸ்ட் 6 விமானத்தில் ஸ்ரீநகர் சென்றோம். இரவு சிறு படகில் தால் ஏரியில் ஒரு மணி நேரம் பயணித்தோம். யாருமற்ற ஏரியில், இரவொளியில், ஆழ்ந்த அமைதியில் நீரலைகளின் மேல் மிதப்பது பெரும் பரவசம் அளிப்பது. கரையில் இருந்த விளக்கொளிகள் தூரம் செல்லச்செல்ல மறைவது போல் நாமும் சிறிது சிறிதாக மறைந்து சூழ்ந்துள்ள நீருடன் முற்றிலும் கலந்து ஒன்றாகிவிட்ட ஒரு உன்னத நிலை. பிறகு அங்குள்ள ஒரு படகு இல்லத்தில் தங்கினோம்.
அடுத்த நாள் காலை உமர் என்பவரின் இன்னோவா காரில் லே நோக்கி பயணம். செல்லும் வழியில் ஹஸ்ரத்பால் தர்காவிற்கு (Hazratbal Shrine) சென்றோம். இது முகமது நபி அவர்களின் முடியை வைத்திருக்கும் மிக முக்கியமான புனித தலமாகக் கருதப்படுகிறது. தால் ஏரியை ஒட்டி அமைந்த பெரிய பரப்பளவில் உள்ள இடம். உள்ளே நுழைகையில் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள் பின்பு பெயர்கேட்டார்கள். ஒரு நிமிட யோசனைக்கு பிறகு Most welcome என்று கூறி வரவேற்றார்கள். உள் அறை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. அங்கு அமர்ந்து சிறிது நேரம் பிராத்தனை செய்துவிட்டு கிளம்பினோம்.
வழியெங்கும் காஷ்மீர் போலீஸ் மற்றும் ராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள். எங்கள் கார் ஓட்டுநர் உமர் ஸ்ரீநகரில் பிறந்து வளர்ந்த சன்னி வகுப்பை சேர்ந்த இளைஞன். அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தாலும் பொருளாதார வளர்ச்சிதான் அனைத்திற்கும் தீர்வு என்ற நம்பிக்கையோடு செயல்படக் கூடியவர். எங்களுடன் மிக அன்பாகவும், நட்பாகவும் பழகினார். காரில் சுஃபி பாடல்களையும், காஷ்மீரில் திருமணம் போன்ற விழாக்களில் பாடப்படும் பாடல்களையும் கேட்டுக்கொண்டே வந்தோம். இரு நாட்களும் காஷ்மீர் இசையில் மூழ்கி இருந்தோம்.
இரவு கார்கிலில் சென்று அங்கு தங்கினோம். கார்கில் தற்போது காஷ்மீர் மற்றும் லடாக்கின் எல்லைப் பகுதி. தங்கியிருந்த இடத்திற்கு எதிரே இந்துஸ் ஆற்றின் கிளை நதியான சுரு மிக ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டிருந்தது. அதிக பாறைகள் கொண்ட இடம் எனவே இரவு முழுதும் நீரோசை அச்சமூட்டும் வகையில் இருந்தது.
ஹஸ்ரத்பால்கார்கில் எதிர்பார்த்ததை விடவும் பெரு நகரம். முக்கிய வணிக தளம். காஷ்மீரின் முக்கிய உணவான ரோகன்ஜோஷ் மற்றும் ரிஸ்டா எனப்படும் மட்டன் உருண்டைகள் அனைத்து இடங்களிலும் மிக தரமாகவும், சுவையாகவும் கிடைக்கின்றன.
கார்கிலில் இருந்து காஷ்மீரின் நிலப்பரப்பு மாறத் தொடங்குகிறது. அழகிய பசுமை போர்த்திய மலைத்தொடர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, கொஞ்சம் கூட பச்சை இல்லாத மண்ணும் பாறையும் மலையென நிற்கின்றன. கார்கில் நகரில் இருந்து சிறு தொலைவிற்கு அப்பால் கார்கில் யுத்த நினைவுப் பகுதி முக்கியமான சுற்றுலாத் தலமாக உள்ளது. யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களின் சிலைகளும், குறிப்புகளும் உள்ளன. நடுவில் மிக உயரத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
அடுத்த நாள் காலை முல்பெக் மொனாஸ்ட்ரி (Mulbekh Monastery) சென்றோம். 800 ஆண்டுகால பழமையான மடாலயம். உள்ளே நுழைகையில் 30 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான மைத்ரேய புத்தர் பாறையில் செதுக்கப்பட்டு விஸ்வரூப காட்சி அளிக்கிறார். உள்ளே பல அழகான புத்தரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன.
மதியம் லாமையுரு மொனாஸ்ட்ரி (Lamayuru) சென்றோம். இந்தியாவின் பெரும் ஞானிகளில் ஒருவரான நரோபா (Naropa) அவர்களால் 1000 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது இந்த மடாலயம். லடாக்கின் மிகப் பழமைவாய்ந்த மற்றும் பெரிய மடாலயம் இது.
வெளியிலிருந்து பார்ப்பதற்கு புதிது போல் தோன்றியது ஆனால் உள்ளே அதன் பழமை மாறாமல் நன்றாகப் பராமரிக்கிறார்கள். உள்ளே சிறு சிறு அறைகளாக சென்று கொண்டே இருக்கிறது. ‘தங்க புத்தகத்தின்’ இடங்கள் போலவே இருந்தது. இங்கிருக்கும் அவ்லோகிதேஸ்வர சிலை அழகின் உச்சம். இங்கு ஓரிடத்தில் “even criminals can enter” என்றிருந்தது. அதிர்ந்துவிட்டேன் பிறகு தான் நீங்கள் குறிப்பிட்ட சமண மதத்தில் இருந்த “அஞ்சினான் புகலிடம்” பற்றி நினைவு வந்தது.
இரவு லே நகரை சென்றடைந்தோம். லே லடாக் பகுதி தான் உலகத்தின் உயரமான பகுதியில் அமைந்த குடியிருப்பு. நகரம் அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எங்கும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வெகு விரைவில் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக மாறுவதற்குரிய அனைத்து செயல்களும் விரைந்தோடி கொண்டிருக்கின்றன. நகரத்தின் வெளியில் தொடர்ச்சியாக ராணுவ முகாம்கள். ஒரே இடத்தில் இத்தனை முகாம்களும், வீரர்களும் இந்தியாவில் வேறு எங்கும் பார்த்ததில்லை.
ஆனால் காஷ்மீர் போல் இங்கு எந்த சோதனைகளும், கட்டுப்பாடுகளும் இல்லை. இங்குள்ள மனநிலையே வேறு. லே லடாக் பகுதிகளை இவ்வளவு காலம் காஷ்மீர் உடன் இணைத்து வைத்திருந்தது பெரும் வரலாற்று பிழை என்று நினைக்கிறேன். எந்த வகையிலும் காஷ்மீர் உடன் இணைந்திராத பகுதி. வேறுபட்ட நிலப்பரப்பு, மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் வேறுபட்டது ஆனால் காஷ்மீர் உடன் இணைத்து இப்பகுதிகளை, மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டார்கள் என்று தோன்றுகிறது. லே, லடாக்கை தனியாக பிரித்தது இப்பகுதிக்கு அளித்த பெரும் கொடை.
அடுத்த நாள் காலை பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயணித்தோம். இந்த பகுதிகளில் பைக் ஓட்டுவதெற்கென்றே பல பேர் இந்தியா முழுவதிலிருந்தும் வருகிறார்கள் குறிப்பாக ஐடி துறையிலிருக்கும் ஆண், பெண்கள் குழு குழுவாக வருகிறார்கள். இந்த பகுதியே “பைக் ஓட்டுபவர்களின் சொர்க்கம்” என்று அழைக்கப்படுகிறது.
இங்கு ஆகஸ்ட் மாதம் சுற்றுலாவிற்கான காலமல்ல வசந்தமும் இல்லாமல் பனிப்பொழிவு இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட காலமிது. சுமார் பகலில் 20, இரவில் 5 டிகிரி உள்ளது. இருப்பினும் நகரத்தில் பெரும் சுற்றுலா கூட்டம் அலைமோதியது.
பைக் வாடகைக்கு அளிப்பதற்கு பல்வேறு கடைகள் இருந்தாலும் வண்டி கிடைப்பது மிகவும் சிரமமாயிற்று. ஐந்து பேருக்கு நான்கு பைக்குகள் எடுத்துக்கொண்டோம். அனைத்தும் ராயல் என்பீல்டு புல்லட். அங்கு 90% புல்லட் தான். பெரும்பாலும் நகரத்தை இரண்டு, மூன்று நாட்கள் பைக்கில் சுற்றி விட்டு போகும் ஆண் பெண் இணை தான் அதிகம். குறைவானவர்கள்தான் பைக்கில் அதிக தூரம் பயணிக்கிறார்கள்.
நாங்கள் சந்தித்த இரண்டுமூன்று பேர் தமிழ்நாட்டிலிருந்தே பைக்கில் வந்துள்ளார்கள். சில பெண்களும் தனியாக வந்துள்ளார்கள். தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை பயன்படுத்தி இங்கு வந்து தங்கி வேலையும் செய்து கொண்டு ஊரும் சுற்றுகிறார்கள்.
இமயமலைத் தொடரின் மிக வித்தியாசமான பகுதி லே, லடாக். மழையே இல்லாத குளிர் பாலைவனம். இப்போது பனிப்பொழிவு இல்லாததால் மண் போர்த்திய மலைகள் வெறுமையாக நிற்கின்றன ஆனால் இரண்டு, மூன்று மலை மடிப்பு களுக்கு பின்னே பனி மூடிய சிகரம் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதே போன்ற நிலப்பரப்பான ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் நாம் பயணித்துள்ளோம். ஆனால் அது கார் பயணம். பைக்கில் பயணிக்கையில் இதன் வேறுபாட்டை மிக உணர்ந்தேன்.
கார் பயணம் பைக்கை காட்டிலும் பல மடங்கு பாதுகாப்பான பயணம். உடல் சோர்வை அளிக்காது. மேலும் ரொம்ப தூரத்திற்கு பயணிக்கலாம். பல இடங்களை பார்க்கலாம். இந்த பகுதிகளில் பைக்கில் பயணிப்பது என்பது பரமபத விளையாட்டு தான் ஏறிக்கொண்டே இருப்போம். ஏதாவது நடந்தால் அதாள பாதாளம் தான். உயிர் பயம், உடல் வேதனை என்று பல சவால்கள் இருந்தாலும் வாழ்க்கையில் இந்த பகுதிகளில் பைக்கில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டும்.
காரில் பயணிக்கையில் நிலப்பரப்பிற்கும் நமக்கும் ஒரு இடைவெளி இருக்கும் ஆனால் பைக் பயணத்தில் ஒவ்வொரு நொடியும் அந்த நிலத்தில் நாம் உயிர்ப்புடன் நின்றிருப்போம். நாம் வேறு அது வேறு அல்ல அதனுடன் முற்றிலும் கலந்துவிட்ட உணர்வு. காரில் ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்ட கோணத்தில் மட்டும் பார்த்து வரமுடியும். ஆனால் பைக்கில் கிடைக்கும் காட்சியனுபவம் கண் கொள்ள முடியாதது. ஓரிரு நாட்களுக்கு பிறகு ஒரு சீரான வேகத்தில் செல்கையில் காற்றில் பறப்பது போன்றே இருக்கும். பிரமிப்பும், பயமும், பரவசமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.
மலைப்பாதையில், உச்சியில், விளிம்புகளில் பைக் ஓட்டும் போது ஏற்படும் சாகச உணர்வை அனுபவிக்கத்தான் பெரும்பாலும் வருகிறார்கள். ஆனால் இந்த பகுதிகளில் பைக்கில் செல்வது என்பது வெறும் சாகசம் அல்ல மாறாக பெரும் பரவசம். இரு பெரும் மலைகளுக்கு இடையே சிறு எறும்பு போல் ஊர்ந்து செல்வோம். மகத்தான பிரபஞ்சவெளியின் முன் சிறு புள்ளியாய் இருப்போம். இயற்கையின் பிரமாண்டம் என்பதை அங்கு மட்டுமே உணர முடியும். யாருமற்ற முடிவில்லாத நீண்ட பாதையில் பயணிக்கையில் இந்த உலகத்திலேயே நாம் இல்லை என்று தோன்றும்.
அஜித் ஹரிசிங்கானிபைக்கில் பயணிப்பதை பற்றி எழுதிய முக்கியமான புத்தகம் அஜித் ஹரிசிங்கானி என்பவரின் “One life to Ride”. இதில் பைக் பயணத்தை ஒரு தவம் போல் விவரிக்கிறார். உலகத்திலே உயரமான இடத்தில் உள்ள வாகனம் செல்லும் சாலை கர்துங்லா கணவாய் இதன் உச்சியில் ஒரு காஃபி கடையும் அருகில் சிறு குன்றின் மேல் புத்த வழிபட்டு தளமும் உள்ளது. ஆனால் இங்கு சுமார் 10 நிமிடத்திற்கு மேல் இருந்தால் கடுமையான தலை வலியும், மூச்சு திணறலும் ஏற்படும்.
பைக்கில் வரும் பெரும்பாலானோர் செய்யக்கூடிய தவறு, லே வந்தவுடன் அங்கிருந்து பைக்கில் கிளம்பி உயரமான பகுதிகளுக்கு உடனடியாக வந்துவிடுவார்கள் உடல் அந்த தட்பவெப்ப நிலைக்கு உடனடியாக மாறமுடியாமல் எதிர்வினையாற்றும். மொத்த பயணமும் வேதனையில் முடிந்து ஒரு கசப்பான அனுபவமே எஞ்சும்.
அதேபோல அதிகம் பேர் அங்கு இருக்கும் சுற்றுலா நிறுவனங்களால் ஏற்பாடு செய்யும் தொகுப்பு பயணத்தில் (Package Trip) வருகிறார்கள். ஒரு நல்ல பயணி செய்யவே கூடாதது அது. பார்க்கும் இடம், உண்ணும் உணவு, தங்கும் இடம் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். சுற்றுலா எண்ணத்தில் வருகிறவர்களுக்கு இது பரவாயில்லை. இயற்கையை தரிசிக்க விரும்புவர்கள் சொந்தத் திட்டத்தில், சுதந்திரமாகவே செல்லவேண்டும்.
நாங்கள் எந்த ஒரு இடத்திலும் எதையும் முன்பதிவு செய்யவில்லை. நமது ஊரில் சமதள பரப்பில் பைக் ஓட்டும் கணக்கில் அங்கும் தூரத்தையும், நேரத்தையும் கணித்து எங்கள் பயணத்தை திட்டமிட்டோம் அது பெரும் தவறு. சாலைகள் மிக நன்றாக இருந்தாலும் மலையில் ஏறுவதும், இறங்குவதும் சற்று கடினம் கொஞ்சம் தப்பினாலும் மரணமே. மேலும் குறைவான ஆக்சிஜன், குளிர் காற்று என்று பல காரணிகளால் ஒரு நாளைக்கு 150 கி.மீ ஒட்டினாலே அதிகம்.
கல்சர் என்ற இடத்தில் எங்களது ஒரு பைக் பஞ்சர் ஆகிவிட்டது. 20 கி.மீ பயணித்து ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்து சக்கரத்தை கழட்டி மறுபடியும் பயணித்து பஞ்சர் ஒட்டி திரும்பி வந்து சரி செய்து கிளம்ப நான்கு மணி நேரத்திற்கு மேல்ஆகிவிட்டது.
மொத்த பகுதியும் பாலைவனம் என்றாலும் நம் மனதில் பதிந்த மணல் நிரம்பிய பாலைவன சித்திரம் ஹன்டர்பகுதியில் தான் பார்க்கமுடியும். ஆனால் தார் பாலை போல் மணல் பெரிதாகவும், அடர்த்தியாகவும் இல்லை மிகச்சன்னமான, வெளிர் நிறத்தில் மெல்லிய படலம் போர்த்தியது போல் பரப்பி உள்ளது. பகலில் கண்ணாடி போல் காட்சியளிக்கிறது.
மலைக் காட்சி குறைவாகவும், நீண்ட மணல் போர்த்திய நிலப்பரப்பு மிகுதியாகவும் உள்ள இயற்கையை லடாக்கில் இப்பகுதியில் மட்டுமே காணமுடியும். தார் பாலை போல் இங்கும் ஹான்டர் ஊருக்குள் இருக்கும் மணற் பரப்பை ஒட்டி ஏகப்பட்ட கூடாரங்கள், சுற்றுலாவிற்கான நிகழ்ச்சிகள், பெரும் கூட்டம். எனவே நாங்கள் உள்ளே செல்லவில்லை.
துர்துக் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கிராமம். கார்கில் யுத்தத்திற்கு முன் வரை அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாகிஸ்தான், இந்தியா என்றில்லாமல் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. பெரும்பாலும் உறவினர்கள். போருக்கு பின் எல்லைகள் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டது. துர்துக் வருபவர்கள் எல்லை கிராமத்தை மலையின் ஓரத்தில் காட்சி முனை ஒன்றிலிருந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள்.
நாங்கள் அங்கிருந்து அரைமணி நேரம்நடந்து மலையிறங்கி கிராமத்தை சென்றடைந்தோம். அழகான, செழிப்பான கிராமம் கோதுமை அறுவடைக்கு பின்னான வேலைகள் நடந்துகொண்டிருந்தது. அருகே சிந்து நதி பெரும் பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்தது. இன்னும் சில தூர அளவில் பாகிஸ்தானுக்குள் புகுந்துவிடும். நமக்கு தானே எல்லைகள்? அதற்கு எல்லைகளை மீறுவதுதானே மரபு! ஊருக்குள் மேல் தளத்தில் முழுதும் மரத்தால் கட்டப்பட்ட ஒரு பழைய மசூதிக்குச்சென்று திரும்பினோம்.
பல இடங்களில் மண் சரிவு இருந்துகொண்டே இருக்கிறது இங்கு மண் சரிவு என்பது மலையே சரிவது தான். நேற்று நின்ற மலை இன்று படுத்துள்ளது. இருப்பினும் எல்லை சாலை அமைப்பு (B R O) நினைத்துப்பார்க்க முடியாதளவிற்கு மலைச்சரிவை சரி செய்து சாலை அமைத்து கொண்டே இருக்கிறார்கள். உலகில் நிலப்பரப்பில் வேறுயெங்கும் மனிதனுக்கும், இயற்கைக்கும் இவ்வளவு பெரிய போராட்டம் நிகழுமா என்றுதெரியவில்லை. இவன் சரி செய்துகொண்டே இருக்கிறான் அது அதை அழித்து கொண்டே இருக்கிறது. புரியாத விளையாட்டு.
இந்த பகுதிகளின் நில, மலை அமைப்பை பற்றி நீங்கள் “நூறு நிலங்களின் மலை” யில் மிக விரிவாக எழுதியுள்ளீர்கள். நான் பச்சை நிறத்தில்தான் அத்தனை வேறுபாடுகளை காட்டில் கண்டுள்ளேன். மண்மலையில் இத்தனை நிற வேறுபாடுகள் இருக்கும் என்பதை இங்குதான் கண்டு பிரமித்தேன். இராணுவ உடைநிறத்திற்கான காரணம் இங்குதான் புரிந்தது.
பாங்கொங் ஏரி இந்தியாவின் அழகான காட்சிப்பகுதிகளில் ஒன்று. தமிழ் பாடல்களில் அடிக்கடி கேட்ட ‘நீலவானம்’ என்பதன் சரியான பொருள் அங்குதான் விளங்கும். பொதுவாகவே லடாக் பகுதிகளில் காற்று மாசு, ஒளிச்சிதறல் போன்றவை இல்லாததால் வானம் மிக தெளிந்து இரவில் நட்சத்திரங்களை ரசிப்பதற்கு மிக உகந்ததாய் இருக்கும்.
பாங்கொங் ஏரியில் நீரும் வானமும் நீலத்தின் உச்சம். ஒரு மாலைப் பொழுதை அங்கு கழிப்பது நமக்குகிடைத்த வரம். இங்கும் தற்போது எண்ணற்ற குடில்கள் போடப்பட்டு ஒரு வரைமுறை இல்லாமல் சுற்றுலா செயல்பாடு நடந்துகொண்டு உள்ளது.
அதை விட மோசமாக, 3 இடியட்ஸ் படத்தில் ஒரு காட்சி அங்கு எடுக்கப்பட்டதால் அந்த காட்சியில் நாயகி வரும் ஸ்கூட்டர் போன்று 10,20 ஸ்கூட்டர்களையும், நாயகன் அமரும் பின்பக்கம் போல் வடிவம் கொண்ட இருக்கைகளையும் வரிசையாக எரிக்கரையோரம் அமைத்துள்ளார்கள். வார்த்தையில் விவரிக்க முடியாத ஓர் பேரழகு இயற்கை காட்சியின் முன் இந்த அவலம். மக்கள் அங்குதான் கூடி அதில்அமர்ந்து புகைப்படம் எடுத்து தள்ளுகிறார்கள். நாங்கள் நடந்து வெகுதூரம் சென்று மறைந்துவிட்டோம்.
இந்த பகுதிகளின் ஐந்து நாட்கள் பைக் பயணம் என் வாழ்வின் மகத்தான தருணங்களின் நிகழ்வுகளில் ஒன்று. பெரும் வாழ்க்கை அனுபவம். கடைசி இரண்டு நாட்கள் திரும்பவும் புத்த கோவில்களையும், மடாலங்களையும் சென்று தரிசித்தோம்.
ரிஞ்சென் ஸ்ங்ப்பூ (Rinchen Zangpo) என்பவரால் 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது அல்சி மடாலயம் (Alchi Monastary). இவர் சமஸ்கிருதத்தில் இருந்த புத்த மத நூல்களை திபெத்தியன் மொழிக்கு மொழிபெயர்த்து, திபெத்தில் புத்த மதம் வளர பெரும் காரணியாக இருந்த மகா ஞானியாகக் கருதப்படுகிறார்.
இந்து கோவில் அமைப்பை போல் ஒவ்வொரு இறை வடிவத்திற்கும் ஒரு கோவில் என்று மொத்தம் ஆறுகோவில்கள் அமைந்த வளாகம் இது. இதில் உள்ள மஞ்சுஸ்ரீ கோவில் முக்கியமான ஒன்று. உட்புற சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் லடாக் பகுதியில் அமைந்த பழைமையான ஓவியங்கள் ஆகும். ஓவியங்களை பார்த்து ரசிப்பதற்கு மட்டுமே ஒருநாள் தேவைப்படும்.
மிக அழகான, நுட்பங்கள் நிறைந்த புத்த மதத்தை விவரிக்கும் ஓவியங்கள் சிலவற்றில் அரசர்களைப் பற்றிய ஓவியங்களும் உள்ளன. இண்டிகோ, ஆரஞ்சு மற்றும் தங்க பூச்சு போன்ற நிறங்கள் அனைத்து ஓவியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எமா எனப்படும் எமதர்ம ராஜா பல கோணங்களில் பலவர்ணங்களில் காட்சியளிக்கிறார்.
அங்கிருந்த புத்த பிட்சு ஒருவர் சில ஓவியங்கள் தொடர்பான கேள்விகளுக்கும், சில மந்திரங்களை பற்றியும், மடாலாலயங்களின் பிரிவுகள் (sect) பற்றியும் விரிவான விளக்கமளித்தார். சிதிலமடைந்த பகுதிகளை புனர்பிக்கிறோம் என்று கூறி பழங்காலத்து ஓவியங்கள் மேல் புது ஓவியம் வரையப்பட்டதை மிக வருத்தத்துடன் கூறினார். வளாகத்தின் கீழ்புறம் சிந்து நதி சலனமற்று ஓடிக்கொண்டிருந்தது.
11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹெமிஸ் மடாலயம் (Hemis Monastery) மற்றுமோர் மிக முக்கியமான மடாலயம் ஆகும். இங்கு பத்மசம்பவா எனப்படும் குரு ரின்போச்சேவை மையமாக கொண்டு வழிபாடு நடக்கிறது. அமர்ந்தவடிவில் உள்ள அவரின் மிகப்பெரிய சிலை உள்ளது. பத்மசம்பவா அவர்களின் தாந்திரீக மரபை இங்கு பின்பற்றுகிறார்கள். பத்மசம்பவாவை போற்றும் வகையில் வருடம்தோறும் இங்கு நடக்கும் முகமூடி நடனம் உலகப்புகழ் பெற்றது.
இந்த வளாகத்துக்குள் ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளார்கள். புத்த மதவரலாற்றின், அதன் தத்துவத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு படங்கள், ஓவியங்கள், பொருட்கள் அதன் விளக்கங்களுடன் வைத்து சிறப்பாக பராமரிக்கிறார்கள்.
புலி மூக்கு என்று அழைக்கப்படும் ஸ்டக்ன (Stakna Monastery) மடாலயம் லடாக்கில் இருக்கும் ஒரே பூட்டான்புத்த மரபை சேர்ந்த மடாலயம். இது சுற்றுலா தள வரைபடத்தில் இல்லாததால் யாரும் இல்லாமல் புத்தமடாலயத்துக்கே உரிய ஆழ்ந்த அமைதியில் உறைந்திருந்தது. அவ்வளவு பெரிய இடத்தில் ஒரே ஒரு துறவி மட்டும் இருந்தார் எங்களுக்காக கதவை திறந்து வழிபட அனுமதித்தார்.
பிரம்மாண்டமான ஆர்யஅவலோகிதேஸ்வரா சிலை, சுற்றிலும் ஓவியங்கள். புத்தர், தாரா தேவியின் புணர்ச்சி ஓவியத்திற்கு நீங்கள்கூறிய விளக்கத்தை நண்பர்களிடம் சொன்னேன். “அளவற்ற ஆற்றலும், அளவற்ற கருணையும் இணைவது”. எவ்வளவு பெரிய தரிசனம் அது. கண்ணீருடன் கை கூப்பி அமர்ந்திருந்தோம்.
திகசெய் (Thiksey) மடாலயம் மிக பெரியது. இந்த பகுதியின் நவீன மடாலயம். “கரு” வில் வருவது போன்றுமலை உச்சியில் தொங்கி கொண்டிருக்கும் மடாலயத்தில் இருந்து பக்கவாட்டில் அறைகள் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள் பழைய அறைகள் இடிந்து சிதிலமடைந்து உள்ளன. உள்ளே சில அறைகள் மிக சின்னதாய் ஒருவர் மட்டும் படுக்கும் அளவிற்கு மட்டுமே உள்ளது. அங்கு துறவிகள் தங்குகிறார்கள். உள்ளே இருப்பது கருவறைக்குள் இருப்பது போல் என்று நினைத்தேன்.
இரண்டு அடுக்குகளில் சிமென்டில் கட்டப்பட்ட 49 அடிமைத்ரேய புத்தர் இதன் சிறப்பு முகம் பொன் நிறத்தில் மின்னுகிறது. அவர் முகத்தில் உள்ள சாந்தத்தை நான்வேறெங்கும் கண்டதில்லை. 21 தாரா தேவியின் சிலைகள் இதன் மற்றுமோர் சிறப்பு.
இங்குள்ள குறை என்பது அனைத்து சுற்றுலா பயணிகளையும் அனுமதிப்பது. எதை பற்றியும் எந்த அடிப்படை அறிதலும் இல்லாமல், குறைந்தபட்ச பொது நாகரிகம் இல்லாமல் கண்டபடி கத்திக்கொண்டு, பழமையான ஓவியத்தின் மேல் சாய்ந்து கொண்டு, அனைத்து இடத்திலும் தற்படம் எடுத்துக்கொண்டு அந்த இடத்தின் புனிதத்தை குலைகிறார்கள்.
சிவா சொல்லிக்கொண்டே இருந்தார். இமயமலை தொடரை ஐ.நா போன்ற உலக அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதன் மைய நோக்கம் இயற்கையையும், அங்குள்ளவர்களின் தனித்தன்மையையும் பாதுகாப்பதாக அமைய வேண்டும். இமையம் என்பது இறை, இயற்கையாக உறையும் இடம். பெரும் ஞானிகள் வாழ்ந்த, வாழுகிற இடம். அது இயற்கையை நேசிப்பவர்களுக்கும், இறையை வழிபாடுபவர்களுக்கும், உணர்பவர்களுக்கும் மட்டுமே உரிய இடம். எவ்வித அரசியலும் அங்கு இருக்கக் கூடாது.
நீங்கள் ஒரு முறை கூறினீர்கள், “திபெத்தை சீனா ஆக்கிரமித்தல் என்பது, ஒரு அரசை மற்றொன்று பிடிப்பதல்ல, ஒரு நிலத்தை மற்றோர் நாடு எடுத்துக்கொள்வது அல்ல மாறாக மனிதகுல வரலாற்றில் தோன்றியமாபெரும் உன்னதமான ஒரு பண்பாட்டை அழிக்கும் செயல். மனித பேரினத்திற்கு இழைக்கும் மாபெரும் அநீதி. ஆகவே திபெத் அதன் அடையாளம் மாறாமல் பாத்துக்கப்படவேண்டும்”. உங்கள் கூற்று லே, லடாக் பகுதிகளுக்கும் பொருந்தும்.
V.S.செந்தில்குமார்.
ஜெயமோகன் நூல்கள் வாங்க

இரண்டு நாட்கள்
செப்டெம்பர் முழுக்க என்ன செய்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டால் பெரும்பாலான நேரம் சும்மா இருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். கலந்துகட்டி படித்தேன் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ட்யூராங்கோ, மாடஸ்டி பிளேய்ஸ் காமிக் நூல்கள். Arthur Machen, Robert Graves எழுதிய பேய்க்கதைகள்.
நிறைய பாட்டுகள் கேட்டேன். வழக்கமான நஸ்டால்ஜியாதான். அதற்குமேல் ஆழமாக இசைகேட்டால் இலகுவாக இருக்க முடிவதில்லை. அதன்பின் ஊரைச் சுற்றி காலை மாலைநடை. தொலைபேசி உரையாடல்கள். பெரிதாக எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. என்ன ஒரு சுகம்! ஒரு யோக நிலை.
செப்டெம்பர் எட்டாம் தேதி நண்பர் அருள் திருமணம். பெண் ஓசூர் பக்கம். திற்பரப்பு அருவி அருகே ஒரு திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி. காலையிலேயே நானும் அருண்மொழியும் கிளம்பி பத்மநாபபுரம் சென்று கே.பி.வினோதை அழைத்துக்கொண்டு சென்றோம். நான் வெள்ளைவேட்டி சட்டை. வேட்டிசட்டை அணிவது இன்று ஒரு ‘லக்சுரி’ சொந்தக்காரில் செல்பவர்களுக்கு வசதியானது.
அங்கே ஜெயராம் வந்திருந்தார். அவருடன் திருமணத்திற்குச் சென்று முதலில் சிற்றுண்டியை சாப்பிட்டோம். ஒழிமுறி படத்தில் போலீஸ்காரராக நடித்தவர் அங்கே கோயில், கல்யாண மண்டபம் இரண்டுக்கும் பொறுப்பாளர். அவர் உபசரித்தார்.
கொரோனா காரணமாக மிகச்சிறிய அளவில் திருமணம் நடந்தது. முப்பதுபேருக்குள்தான் இருக்கும் விருந்தினர்கள். அருள் அஜிதனின் நண்பன். அஜிதன் சென்னையில் ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் திருமண நிச்சயத்திற்குச் சென்றதனால் இங்கே வரமுடியவில்லை. ஆகவேதான் நான் போகவேண்டியிருந்தது.
எனக்கு திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் பெரிய ஒவ்வாமை உண்டு. போகவேண்டுமே என நினைத்தாலே ஒரு பாரம்போல ஆகிவிடும். கூடுமானவரை சொந்தக்காரர்களின் மணநிகழ்வுகளை தவிர்த்துவிடுவேன். சினிமா வேலைகள் நிறைய இருக்கையில் மணநிகழ்வுகளுக்கு போகவும் முடிவதில்லை. அருண்மொழி திருமண நிகழ்வுகளை விரும்புபவள். அவள் வருவது அனைவருக்கும் பிடிக்கும்.
மழைக்காலம், மலையில் மழை அறுபடாது நின்றிருப்பதனால் அருவியில் நீர் கொட்டிக்கொண்டிருந்தது. பெருமுழக்கத்துடன் அறைந்து நிலத்தை அதிரச்செய்து வெள்ளிச்சுடர் போல கொந்தளித்துக் கொண்டிருந்தது அருவி. அருகே போகமுடியாது. அருவி இன்னும் திறக்கவில்லை. கோயிலுக்கு அருகே நின்று அருவியை பார்த்தோம்
திற்பரப்பு மகாதேவர் கோயில் என் நினைவில் பலவிதமாக படிந்திருப்பது. நாலைந்து கதைகள் அக்கோயில் பற்றியே எழுதியிருக்கிறேன். மலையாளப் பாணியில் கல்லில் கட்டப்பட்டது. சிவன் இங்கே கிராதமூர்த்தியாக வழிபடப்படுகிறார். [காட்டாளன்] பழைய காலத்தில் காளாமுகர்களின் தாந்த்ரீக வழிபாடு இருந்திருக்கிறது.
உள்ளே சென்று வழிபட்டுவிட்டு திரும்பினோம். வந்ததுமே படுத்து ஒரு நீள்துயில். குமரிமாவட்டத்தில் காரில் சென்றாலே எனக்கு தலைசுழலும். ரங்கராட்டினத்தில் சுழன்றதுபோல. சாலைகளை சுழற்றிச் சுழற்றி போட்டிருப்பார்கள். அதோடு மொத்தச் சாலைகளும் பல்வேறு வீட்டுமுகப்புகள் அடுக்களைகள் வழியாகவே செல்லும். சாலையை ஒட்டி வீட்டைக் கட்டுவது குமரிமாவட்டத்தின் உளச்சிக்கலளில் ஒன்று.
இங்கே காரில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் உறுப்பு பிரேக்தான். கார்கள் பிரேக் டேன்ஸ் ஆடுகின்றன என்றே சொல்லலாம். பிரேக் அழுத்தங்கள் முழுக்க என் தேய்ந்த கழுத்தெலும்பில்தான் அழுத்தம் அளிக்கும். தூங்கி எழுந்து ஒரு சுற்று நடை சென்று வந்து ஒரு காமிக்ஸ் வாசித்தபோது ஒருநாள் நிறைவுற்றது. ஆகா!
ஒன்பதாம் தேதி என் அண்ணாவின் மகளுக்கு திருமணத்திற்கு ‘நாள்கொடுப்பு’ சடங்கு. அக்காலத்தில் திருமணநாளை ஓலையில் எழுதி கொண்டுவந்து கொடுப்பார்கள். ஆண்கள் மட்டும் மணமகன் வீட்டில் இருந்து வரவேண்டும். அதிகம்போனால் பத்துபேர். பெண்வீட்டில் ஒரு பத்துபேர். ஒரு சடங்குதான், விழா அல்ல.
காலையில் எழுந்து வேட்டி கட்டி வெள்ளைச்சட்டை போட்டு மீண்டும் ஒரு பயணம். முன்பு தக்கலை வரைக்குமான சாலையில் வலப்பக்கம் வேளிமலைகள் பசுமையாக எழுந்திருப்பதை பார்த்தபடியே செல்வது ஒரு பெரிய அனுபவம். இன்று மலை ஆங்காங்கேதான் கண்ணுக்கு தென்படுகிறது. முழுக்க கட்டிடங்கள்.
அண்ணாவின் வீட்டில் எளிமையாக சடங்கு முடிந்தது. காலையுணவு அங்கேதான். மணமகன் வீட்டிலிருந்து வந்தவர்களை எனக்கு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் தெரியும். நாங்கள் முழுக்கோடு என்னும் ஊரில் அணியாட்டுவீடு என்னும் வீட்டில் தங்கியிருந்தபோது அவர்கள்தான் பக்கத்து வீட்டுக்காரர்கள். ராஜம். லலிதா என இரு அக்காக்கள். பிரேமி என இளையவள். லாளி என அழைக்கும் லலிதா அக்காவின் மகன்தான் மணமகன்.
அக்காலத்தில் அக்காக்களின் அடிப்பொடிகளாக திகழ்ந்தோம். அடிவாங்கியும் திரிந்தோம். பெண்கொடுக்கும் சம்பந்திகளை பையன் வீட்டு பெண்கள் வாடா போடா என அன்பாக அழைக்கும் சூழல். பேசிக்கொண்டிருந்தோம். நான் என்ன செய்கிறேன் என்று கேட்டபோது சினிமாவில் செய்வதென்ன என தோராயமாக விளக்கினேன். மணி ரத்னம், சங்கர், கௌதம் மேனன் எவர் பெயரும் எவருக்கும் சரியாக தெரிந்திருக்கவில்லை. சரி ஃபகத் ஃபாஸில் பெயரைச் சொன்னால் அவர் பெயரும் எந்த மணியையும் அடிக்கவில்லை.
பெண்களுக்கு சீரியல். ஆண்களுக்கு கட்டிடம், நிலம், சொந்தக்காரர்களின் விழாக்கள் வியாஜ்ஜியங்கள். ஆயிரமாண்டுகளாக இரண்டு தாலுக்காக்களுக்குள்ளேயே திரண்டு முழுமைபெற்ற வாழ்க்கை. இதை நான் ஏற்கனவே முங்கிக்குளிவாழ்க்கை என வரையறை செய்திருந்தேன்.
திரும்பி வந்து மீண்டும் ஒரு தூக்கம். மீண்டும் ஒரு காமிக்ஸ். மண்டையில் ஒரு காற்றோட்டம். வீட்டை காலி செய்யும்போது எல்லா பொருட்களையும் வெளியே எடுத்துவிட்டபின் ஒரு காற்றோட்டம் இருக்குமே அது.
மிருகமோட்சம்
பொதுவாக லௌகீகம் எதிர் ஆன்மீகம் என துருவப்படுத்தி ஆன்ம பயணத்தில் எவ்வாறு லௌகீகம் தடையாகிறது என சிந்திப்போம். அடுத்த கட்டத்தில் காமகுரோதமோகம் எவ்வாறு தடையாகிறது என சிந்திப்போம். ஆனால் அசல் சவாலான ஆன்மத் தேடலில் ஆன்மிகத் தடை அதாவது அலௌகீக தடை பற்றி குறைவாகவே சிந்திக்கிறோம். ஆன்மிக வேட்கையும் அது தரும் அலௌகீக சஞ்சலமும் பிரிக்க இயலாது, இன்றி அமையாதது. இக்கதை இதை பரிசீலிப்பதால் முக்கியமானது.
இக்கதையில் இயற்கை இட்ட சட்டகத்தை கடத்தல் என்பது மீறலா விரிவா என்கிற வினா எழுகிறது. விரிந்தபின் சுருங்குதல் என்பது அதே அளவு வலிமிக்கதா என்கிற வினாவும் எழுகிறது. இதற்கு ஒரு தேடல் மிகு வாசகன் விடைகாண முயலலாம்.
ஒரு மரணத் தருவாயில் உயிர் கடந்த ஒன்று சற்று நேரம் தன் மறு பாதியுடன் கைகோர்த்து பிரிந்து மிஞ்சி நிற்கும் கணம் தோறும் கரைந்து கொண்டிருக்கும் கை வெம்மையில் உணரும் அனுபவம் மகத்தானது. இக்கதையில் இது போன்ற அருவமான உணர்வுகள் சாத்தியமான மொழியில் வெளிப்பாடு கண்டுள்ளது. கதை முடிவுற்ற இடத்தில்
மச்ச கூர்ம வாமன என பத்து அவதாரங்களும் ஒரு ஆன்மிக வழியின் பத்து படி நிலைகள் என ஒரு மின்னல் நம்முள் வீசுகிறது.
ஒரு புதுவரவு என சொல்லத் தகுதி வாய்ந்த கதை இது, நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
கிருஷ்ணன்,
ஈரோடு.
மிருகமோட்சம் – விஜயகுமார்விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10
அன்புள்ள ஜெயமோகன்
விக்கிரமாதித்தனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நீண்ட நாட்கள் ஆயிற்று விக்ரமாதித்தன் அவர்களின் கவிதைகளை நான் படித்து. நடுவே இலக்கியம் எல்லாவற்றிலும் இருந்து ஒரு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. சிறு பத்திரிகைகள் எல்லாம் நின்றுபோய் இலக்கியம் என்பதே இணையத்திற்கு மாறிவிட்டது. இன்னும்கூட எனக்கு இணையத்தில் படிப்பது முடிவது இல்லை. நான் பழைய சிறுபத்திரிகைகளைச் சேர்த்து வைத்து அவற்றை தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
நம்பிக்கு விருது கிடைத்த செய்தி அடைந்தபோது பழைய இதழ்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அவற்றில் இருந்த அவருடைய கவிதைகளை படித்துக் கொண்டிருந்தேன். கடந்த ஒரு 40 ஆண்டுகளாகவே தமிழ் சிற்றிதழ் இயக்கத்துடன் அவர் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய பெயரில்லாத சிறுபத்திரிகைகளில் குறைவாகத்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப சின்ன பத்திரிகைகளில் கூட அவர் எழுதி இருக்கிறார் 50 காப்பி 100 காப்பியடிக்கும் சிறிய இதழ்களில் கூட அவருடைய கவிதைகளை நான் பார்ப்பேன். அவருக்கு எந்த சிறுபத்திரிகை என்ற பேதம் எப்போதும் இல்லை. அதை யாராவது படிப்பார்களா என்று கூட அவர் வந்து யோசித்தது கிடையாது. அவர் ஒரு கலைஞனாக தன்னைப் பற்றி மட்டுமே எண்ணி தன்னிலேயே நிறைவு கொள்பவராக இருந்திருக்கிறார். அவருடைய சிறிய வட்டத்துக்குள்ளேயே அவருடைய கவிதை நிறைவடைந்திருக்கிறது
யோசித்துப் பார்த்தால் சங்ககாலத்தில் இருந்து தமிழ்க் கவிஞர்கள் எல்லாருமே அப்படித்தான் இருந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் இருந்த ஒரு பாணன் அவன் எழுதிய கவிதையை ஏட்டில் எழுதி வைத்து இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கழித்து வாசிப்பார்கள் என்றெல்லாம் நினைத்திருக்க மாட்டார். ஔவையார் பாடிய ஒரு கவிதை உண்டு. உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் என்றன் உளம். விக்ரமாதித்யனும் அப்படித்தான். அத்தகைய ஒரு கவிஞர்களின் மரபு விக்கிரமாதியனுக்குப் பின்னால் இருக்கிறது.
அவருடைய கவிதைகளை இப்போது பார்க்கையில் அவர் தமிழிலிருந்து ஒரு மரபை தனக்கென்று ஒரு எடுத்து வைத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. அந்த மரபு இங்கே எப்போதுமே இருந்தது. அலைந்து திரிபவர்களாகவே கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். நான் தமிழ் கவிஞர்களை ஒரு நீண்ட வரிசை பின்னால் எடுத்து பார்த்தேன். எல்லாரும் அலைந்தவர்கள்தான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஊராகச் சென்று பாடல் பாடியிருக்கிறார்கள். தனிப்பாடல் கவிஞர்கள் எல்லாருமே பிரபுக்களை நாடிச் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். மிகப்பெரிய ஒரு பேரரசின் அவைக்கவிஞராக இருக்கும் பாக்கியம் பெற்றவர் கம்பர். ஆனால் அவருக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை. உங்கள் ஊரில் தான் அவர் தலைமறைவாக இருந்தார் என்று இங்கே சோழநாட்டிலே சொல்வார்கள்.
தெய்வங்கள் நிலைத்திருக் கவேண்டும், கவிஞன் அலையவேண்டும் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். விக்ரமாதித்தன் தமிழகத்தில் அலைந்து கொண்டிருக்கிறார். என்றாவது அவர் எந்தெந்த ஊர்களைப் பற்றி பாடியிருக்கிறார் என்று கணக்கில் எடுத்தால் அது பழைய பக்தி இயக்கக் கவிஞர்கள் அளவுக்கு இருக்கும் என்று தோன்றியது. அவர் எந்தெந்த மனிதர்களைப் பற்றிப் பாடியிருக்கிறார் என்பதுகூட ஒரு பட்டியல் போடலாம். ஒட்டுமொத்தமாக அவருடைய கவிதைகளை தொகுத்து இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு
எல்லா கவிகளையும் போலவே அவருடைய கவிதைகளில் நெல்லும் பதரும் கலந்துதான் இருக்கின்றன. நெல்லு பிரித்து எடுப்பதுக்கு அவருடைய எழுத்தில் ஒரு பயிற்சி தேவை. பசியுள்ள பறவைகளுக்கு அந்த பசியே அந்த பயிற்சியை கொடுத்துவிடும். அவர் ஒரு கவிஞராக இங்கே இந்த நிலத்தில் அலைந்து கொண்டிருக்கிறார். ஏராளமான விஷயங்களை எழுதியிருக்கிறார். அரசியலையோ சமூகசீர்திருத்தக் கருத்துக்களையோ அவர் எழுதவில்லை. இங்கிருக்கும் அன்றாட வாழ்க்கையை பார்த்துத் தன் மனதுக்குப்பட்டதைச் சொல்லியிருக்கிறார். அவருடைய இரு கவிதையை மட்டுமே எடுத்து தனியாகப் பேசிவிட முடியாது. ஒட்டுமொத்தமாக அவருடைய கவிதைகளைக் கொண்டு அவரை ஒரு ஆளுமையாக எடுத்துக் கொண்டு அந்த ஆளுமையின் ஒரு வெளிப்பாடாக அத்தனை கவிதைகளையும் பொருட்படுத்துவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவரைப் போன்ற ஒருவர் ஒருவர் நம்முடைய ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். குடும்பத்திற்கு வெளியே குடும்ப அரசியல் தெரியாதவராக இருப்பார். ஆனால் சரியான சந்தர்ப்பத்தில் சரியான நியாயத்தை அவர் தான் சொல்வார். எனக்கு அப்படி ஒரு சித்தப்பா இருந்தார். அவரை நான் அப்படித்தான் நினைத்திருக்கிறேன். அவரைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு நெடுங்காலமாக பெரிய விவாதங்கள் நீடித்து அதிலிருந்து அவருடைய ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு பெரிய விவாதங்கள் வேண்டும். எந்தக் கவிதைகளை காலம் நிலைநிறுத்துகிறது என்று நமக்குத் தெரிய வேண்டும். இப்போது ஒரு வாசகனாக அவரை மரியாதை செய்வது மட்டுமே நாம் செய்யவேண்டிய விஷயம். விஷ்ணுபுரம் விருது அவருக்கு அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
சி.செல்வமுருகன்
‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
வெண்முரசு’ நாவல்தொடரில் 26ஆவது நாவல் ‘முதலாவிண்’. இது வெண்முரசின் இறுதி நாவல். இது பக்க அளவில் மற்ற 25 நாவல்களையும்விடச் சிறியது. ஆனால், இந்த நாவல் கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் அளப்பரியவை.
இந்த நாவலின் தலைப்பு, உள்ளடக்கம் பற்றி எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள்,
‘‘ ‘முதலாவிண்’ நாவல் பாண்டவர்களின் விண்புகுதலைப் பற்றியது. ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்ற சீவகசிந்தாமணியின் முதல்வரியிலிருந்து எடுத்து, நீட்டிக்கொண்ட சொல்லாட்சி. ‘பிறக்காத, தோற்றமே அற்ற வானம்’ என்று பொருள். ‘முதற்கனல்’ என்னும் தலைப்பின் மறு எல்லை.”
என்று குறிப்பிட்டிருந்தார்.
குருஷேத்திரப் போரில் வெற்றிபெற்ற பின்னரும்கூடப் பாண்டவரால் ஒன்றிணைந்து வாழ முடியவில்லை. அவர்களின் வாழ்க்கை முற்றிலும் அலைச்சலிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. உடலும் மனமும் அலைய அவர்கள் ஒரு கணமும் நிலைகொள்ளவில்லை. ஒன்றிணைய முடியவில்லை. அதற்குக் காரணமாக முன்னைய தீச்சொல் ஒன்றினை எழுத்தாளர் நினைவுபடுத்துகிறார்.
“அவர்கள் ஐவரும் அஸ்தினபுரியில் ஒன்றிணைந்து இருந்தால் அஸ்தினபுரி அழியும், அன்றி அவர்களுடைய தொல்குடி முற்றழியும் என்றொரு தீச்சொல் உண்டு” என்று சூதன் ஒருவன் சொன்னான். “இளமையில் அவர்கள் வாரணவதம் எனும் ஊரில் தங்கள் அன்னையுடன் சென்று தங்கியிருக்கையில் துரியோதனனால் அவர்கள் தங்கியிருந்த மாளிகை எரியூட்டப்பட்டது. அதிலிருந்து தப்பும் பொருட்டு அவர்கள் ஐந்து மைந்தருடன் வந்த வேட்டுவ அன்னையொருத்திக்கு ஊனளித்து அவளை அரக்கு மாளிகையில் வைத்து பூட்டிவிட்டு நிலவறையினூடாக ஒளிந்து விலகிச் சென்றனர். எரிந்து பொசுங்கி அழிந்த அம்மைந்தரும் அன்னையும் இறக்கும் தருவாயில் அந்தத் தீச்சொல்லை விடுத்தனர்.”
“மலைக்குறத்தியின் சொற்கள் எரியென்றே எழுந்தன. ‘உங்கள் அன்னையுடன் துணைவியருடன் மைந்தருடன் கூடிவாழும் குடிவாழ்வு இனி ஒருபோதும் உங்களுக்கு அமையாது. அவ்வண்ணம் கூடியமையும் நாளில் நீங்களும் இதுபோல் முற்றழிவீர்கள். உங்கள் நகர் உடனழியும். எரி அறிக இச்சொல்!’ என்று அந்த அன்னை உரைத்தாள். தன் மைந்தர் ஊனுருகி எரிவதைக் கண்டு மேலும் வெறிகொண்டு நெஞ்சிலறைந்து ‘உங்கள் மைந்தர்கள் ஒருவர் எஞ்சாமல் அனைவரும் இவ்வண்ணமே எரியுண்டு அழிவார்கள்… அறிக மண்ணுள் வாழும் எங்கள் மூதாதையர்!’ என்று அவள் தீச்சொல்லிட்டாள்.”
அவர்கள் தங்களின் உயிரைக் காத்துக்கொள்ளவே கூடிவாழும் குடிவாழ்வைப் புறக்கணித்தனரோ? அல்லது அவர்களைக் காக்கவே அவர்களின் ஊழ் அவர்களை ஒருவரைவிட்டு ஒருவர் விலகியே இருக்கும்படிச் செய்ததோ? அவர்களின் இந்த மண்ணில் எய்தியதுதான் என்ன? என்ற ஓர் அடிப்படையான வினா வாசகரின் மனத்தில் எழுந்தபடியேதான் இருக்கிறது.
பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற பின்னர் அஸ்தினபுரியைத் துரியோதனன் மிகச் சரியாக ஆண்டு வந்தான். குருஷேத்திரத்தில் பாண்டவர்கள் வென்று, அஸ்தினபுரிக்குள் நுழைந்த பின்னர் அதை ஆண்டது யுயுத்ஸும் சம்வகையும்தானே? பாண்டவர்கள் குருஷேத்திரத்தில் பெற்றதுதான் என்ன? இந்த பாரதவர்ஷத்துக்கு அவர்கள் கொடுத்ததுதான் என்ன?
முற்றழிவுக்குப் பின்னர் அவர்கள் பேரறத்தை நிலைநாட்டினார்கள் என்றால், அவர்கள் விரும்பியது அதைத்தானா? பேரறத்தின் விலை முற்றழிவுதானா? எல்லாத்தையும் அழித்த பின்னர், இழந்த பின்னர் பேரறத்தின் அடிப்படையில் அவர்கள் எந்த வாழ்வை வாழ்ந்தார்கள்?.
காட்டுத்தீயில் காடு முற்றழிந்த பின்னர் இயற்கையாகவே புதுப்புல் முளைப்பது போல அடுத்த தலைமுறையினர் பாரதவர்ஷம் எங்கும் எழுந்தனர். குருஷேத்திரம் வழங்கிச் சென்ற பாடத்தை அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. துவாரகையில் செயற்கைப் பேரழிவுகள் நடந்தன! ஒருவரை ஒருவர் கொன்றுகுவித்தனர். மூத்த யாதவர் பலராமர் மீண்டும் நாற்களமாடினார்!
இனி, எத்தனை குருஷேத்திரம் நடைபெற்றாலும் மானுட மனம் பேரறத்தின் பாதையில் நடக்காதுபோலத்தான் தெரிகிறது. பேரறம் மானுடத்தின் முன் நிற்கிறது. மானுடம் அதை மீறிக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் ஏதோ ஒரு வகையில் பேரறத்தின் பாதையில் பயணித்தமைக்காகவே அதற்குப் பெருநிலையினை அடைவதற்குரிய ராஜபாதை திறக்கப்படுகிறது. அந்த அதிஉன்னதப் பாதையில் முன்னேறி இலக்கை அடையும் உயிரே பெருநிலையினைப் பெறுகிறது. அந்த வகையில் இந்த ‘வெண்முரசு’ நாவல்நிரையில் இடம்பெறுவோரில் தருமர் மட்டுமே அந்த நிலையினை எய்துகிறார்.
“இப்பெருங்காவியத்தின் பாட்டுடைத்தலைவன் விண்மறைந்தான். அது பேரெழிலுடன் கூறப்பட்டுள்ளது. காவியத்தின் கதை அங்கே முடிவடைகிறது. எனினும் ‘காவிய நிறைவு’ என்பது, இது அல்ல. பெருங்காவியம் அலைகொண்டு கொப்பளிக்கலாம். ஒன்பது உணர்வுகளையும் எட்டு வழிகளையும் ஆறு தத்துவங்களையும் ஐந்து நிலங்களையும் நான்கு அறங்களையும் மூன்று ஊழையும் இருமையையும் ஒருமையையும் வெறுமையையும் அது கூறலாம். எனினும் அனைத்தும் உருகி ஒன்றென ஆகி அமைதியில் இறுதிச்சுவை அடைந்தாக வேண்டும். சாந்தம் அமையாது காவியம் நிறைவுறுவதில்லை” என்றான் ஆஸ்திகன்.
அந்த வகையில் இந்த நாவல் ‘வெண்முரசு’ நாவல் நிரை முழுமைக்கும் ஒரு நிறைவினை அளிக்கிறது. இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக உயிர்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இந்த நாவல்.
பாண்டவர் ஐவரும் உயிர்துறக்க மனம் ஒருங்குகின்றனர். அவர்கள் ஐவரும் ஒரு குகைக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பிறரைப் பற்றி எக்கவலையும் இன்றித் தன்னுடைய அகவிடுதலையை மட்டுமே நினைத்து, முன்னேறி நடக்குமாறு பணிக்கப்படுகின்றனர். ஆனால், திரௌபதி கால்தளர்ந்து அமர்கிறாள்.
நகுலன் யுதிஷ்டிரனின் அருகே வந்து “மூத்தவரே, திரௌபதி விழுந்துவிட்டாள், அதைக் கண்டு பீமசேனன் திரும்பிவிட்டார்” என்றான். யுதிஷ்டிரன் அச்சொற்களைக் கேட்கவில்லை, அவ்வண்ணம் ஒருவர் தன் அருகே வந்ததையே உணரவில்லை.
மற்ற நால்வரும் அவளைப் பற்றிக் கவலையின்றி முன்னேறி நடக்க, பீமன் மட்டும் அவளுக்காகத் தன் நடையைத் தளர்த்தி, அவளோடு நின்றான்.
பீமன் ஓடிச் சென்று அவளை அணுகி, கையை நீட்டினான். திரௌபதி அவன் கையை விலக்கி, “செல்க!” என்றாள். “இல்லை. நீயில்லாது செல்லப் போவதில்லை” என்றான் பீமன். “என் எடையையும் நீங்கள் சுமக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். “நீ என்றும் எனக்குச் சுமையாக ஆனதில்லை” என்றான் பீமன். “செல்க, செல்க, எனக்காக நீங்கள் எதையும் இழக்க வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “உன்னை இழந்து நான் பெறுவதொன்றுமில்லை” என்று பீமன் சொன்னான். “எழுக, உன்னை நான் தூக்கிக்கொள்கிறேன்!” என்றபோது அவன் புன்னகை புரிந்தான். “நம் இளமையில் உன்னைச் சுமந்தபடி கங்கையில் நீந்தினேன்.” அவள் முகம் மலர்ந்து, “ஆம்” என்றாள். “நம் முதல் சந்திப்பில்.” அந்த இனிமையால் இருவருமே எடைகொண்டவர்களானார்கள். பீமன் கால் தளர்ந்து அவளருகே அமர்ந்தான். “எடை நான் நினைத்ததைவிட மிகுதி” என்றான். அவளால் கையையே அசைக்க முடியவில்லை. “துயருக்குத்தான் எடைமிகுதி என எண்ணியிருந்தேன்” என்றாள். “சென்றகாலத்து இன்பம் பலமடங்கு எடைகொண்டது” என்றான் பீமன். “இனி நாம் செல்ல இயலாது. நம் மீட்பு இதுவரை மட்டுமே” என்று பீமன் கூறினான். “எனில் இந்த இடமே நன்று” என்றாள் திரௌபதி. “இங்கே இனிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது. முடிவிலி வரையென்றாலும் இங்கிருப்பது நன்றே.”
ஆம்! ஐவரில் அவளுக்கு அவனே பெருங்காதலன், பெருங்கணவன். அவளுக்காகப் பீமன் மீண்டும் மீண்டும் அஸ்தினபுரியில் பிறக்கவும் காட்டில் அலைந்து திரிந்து வாழவும் குருஷேத்திரத்தில் குருதியைக் குடிக்கவும் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறான். பெருநிலையை எய்த விழையாமல், முடியாமல் அவர்கள் அந்தக் குகைக்குள் பாதிவழியிலேயே அமர்ந்து, தங்களின் பழைய காதல் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அந்த இனிமையில் திளைத்தபடி தேவர்கள் என முகம் மலர்ந்து அவர்கள் கைகளைத் தொட்டுக்கொண்டு அங்கே அமர்ந்திருந்தனர். திரௌபதி தன் குழல்முடிச்சில் இருந்து ஒரு மலரை வெளியே எடுத்தாள். “இது என்னவென்று தெரியுமா?” என்றாள். “இது கல்யாண சௌகந்திகம்” என்று பீமன் வியப்புடன் சொன்னான். “இதை நீ கொண்டுவந்தாயா என்ன?” “ஆம், என் உடைமைகளைத் துறக்கவேண்டும் என்று எண்ணி ஒவ்வொன்றாக அகற்றிய போதெல்லாம் இதை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். இங்கு வரும்பொருட்டு புறப்படும்போதும் இறுதியாக இதை வைத்திருந்தேன். நூறுமுறை வீச எண்ணினேன். என்னால் இதை வீச முடியாதென்று அறிந்தேன். அந்தக் குகையினூடாக வந்தபோது என் ஆடையனைத்தும் அகன்றது. ஆனால், எழுந்தபோது என் குழற்சுருளில் இது எஞ்சியிருந்தது” என்றாள் திரௌபதி. “இதன் எடையால்தான் நான் நடை தளர்ந்தேன்.”
இந்த மலரைப் பற்றி மட்டும்தான் ‘மாமலர்’ என்ற நாவல் முழுக்கப் பேசுகிறது. அந்த மலர் திரௌபதியின் நெஞ்சில் இருந்த கனவு மலர். அதைப் புறவயமாக அடைவதே பீமனுக்கு மெய்மையாக அமைந்தது. அதைத் தேடிய அலைந்த பீமனின் பெரும்பயணத்தைப் பற்றியதுதான் ‘மாமலர்’ நாவல். பீமன் அந்த மலரைக் கைப்பற்றினான். திரௌபதியின் நெஞ்சில் அவன் நீங்கா இடம்பெற்றமைய அந்த மலரே அவனுக்கு வழி வகுத்தது.
அவர்களைச் சூழ்ந்து பொன்னிற வானம் இறங்கி வந்தமைந்தது. அவர்கள் பொன்னொளிரும் உடல் கொண்டவர்களானார்கள். “நீங்கள் என்னைத் தேரில் வைத்து இழுத்த நாளை நினைவுறுகிறேன்” என்று திரௌபதி நாணத்துடன் சொன்னாள். பீமன் உரக்க நகைத்தான். அக்கணம் முதல் அவர்கள் வாழ்ந்த காலத்தின் இனிய காதற்கணங்களை மட்டுமே தொடுத்து உருவாக்கிய ஒரு காலத்தில் அவர்கள் அங்கிருந்தனர். அக்கணங்களில் பல்லாயிரத்தில் ஒன்றுமட்டுமே புறத்தே நடந்தது. எஞ்சியவை எல்லாமே அகத்தில் பொலிந்தவை என்று அவர்கள் உணர்ந்தனர்.
பீமனும் திரௌபதியும் அடைந்த, எய்திய பெருநிலையின் எல்லை இதுவரைதான். இதுவே அவர்களுக்கு உவப்பானதாக இருந்தது. அவர்கள் தங்களை அங்கேயே, அதே அகமனநிலையில் இருத்திக்கொண்டனர்.
‘வெண்முரசு’ நாவல் தொடரை எழுதுவதற்கு முன்பே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள், தான் ஏன் இந்த நவீனக் காவியத்துக்கு இந்தப் பெயரினை இட்டேன் என்பது பற்றி, நாவல்வரிசைக்கான பொதுத்தலைப்பு ‘வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு எனச் சொல்லத் தெரியவில்லை, தலைப்பு தோன்றியது, அவ்வளவுதான். அறத்தின் வெண்முரசு. எட்டுச் சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட முரசு.
என ஒரு குறிப்பு எழுதியிருந்தார். இந்த நாவலில் ஒரு வரி இடம்பெற்றுள்து. அதாவது, ‘அறத்தின் நிறம் வெண்மை’ என்பதுபோல.
“அனைத்து வண்ணங்களும் இணைந்து வெண்மையென்றாவதுபோல. வெண்மையே அறத்தின் நிறம்.”
உண்மைதான். அறத்தின் நிறம் வெள்ளை. அதில் துளி கறை இருக்க இயலாது. துளி நிறம் மாறினாலும் அது அறக்குறையாகவே இருக்கும். அறம் என்றைக்கும் முழுமையானது. ‘வெண்முரசு’ அறத்தின் முரசு. அதன் முழக்கம் வெற்றியின் ஒலி. அறம்சார்ந்த வெற்றியே நிலையானது. அதையே ‘வெண்முரசு’ குறிப்புணத்துகிறது.
வியாசர், “எனது காவியம் வெற்றியைப் பாடுகிறது என்பது உண்மை. அதற்குப் பின்னால் உள்ள தோல்விகளையும் சரிவுகளையும் சொல்கிறது. தோல்விக்குப் பின்னால் உள்ள பெருமைகளைப் பாடுகிறது. அன்புக்குள் வாழும் வெறுப்பையும் வஞ்சத்தின் ஊற்றுமுனையாகிய அன்பையும் சொல்கிறது. ஆக்கமும் அழிவும் கூடிமுயங்கும் வாழ்வையே என் காவியம் கூறுகிறது. மானுட வாழ்வு எனும், ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத பெருக்கைப் பற்றியே நான் எழுதியுள்ளேன். அந்தப் பெருக்கை வழிநடத்துவது விண்பேரறம். அப்பேரறத்தின் காட்சி இங்குள்ள வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் தெரியக் கூடும். என் காவியம் காட்டுவது அதையே” என்றார்.
ஆம்! இந்த ‘வெண்முரசு’ நாவல்நிரை காட்டுவதும் அதையே. பேரறத்தை மகாபாரதமாக நமக்கு வியாசர் காட்டினார். அந்த வியாசர்தான் ஜெயமோகனாகப் பிறந்தார். இந்த வெண்முரசினை இயற்றினார். நம் காலத்தில் எழுதப்பட்ட நவீனப் பெருங்காவியம் இதுவே. இனி, இதை வெல்லும் காவியம் எழுதப்பட சில நூற்றாண்டுகள் ஆகலாம். ஜெயமோகன் மீண்டும் வியாசராகப் பிறக்கும் வரை உலகம் காத்திருக்க வேண்டும். அதுவரை இது நல்லோர் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.
‘‘பராசரரின் புராணசம்ஹிதையில், ‘விண்ணில் மாலவன் உறையும் பாற்கடல் பெருமுரசென ஓயாது அலையெழுந்து அறைந்து கொண்டிருந்தது’ என்று சொல்லப்படுகிறது. வெண்பெருமுரசு. அவ்வலைகள் அமுதைத் திரட்டிக்கொண்டே இருக்கின்றன. இங்குச் சொல்லென்று நாம் உணர்வது அதன் ஓசையை. அறமென்று நாம் அறிவது அதன் அலைகளை. மெய்மையென்று சுவைப்பது அதன் அமுதின் இனிமையை. அமுதின் ஆழியில் அவன் மீண்டும் சென்றமைக! அறிதுயிலில் அவன் அமிழ்க! அவன் கனவில் புடவிகள் எழுந்து நிகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் யுதிஷ்டிரன்.
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ நாவல்நிரையினை எழுதி முடித்தமைக்காகவே அவர் பெருநிலையை எய்திவிட்டார் என்பேன். அந்த நாவல் நிரையினைப் படித்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பெருநிலையினை அடைவதற்குரிய ராஜபாதை திறக்கப்படும் என்று நம்புகிறேன். நான் இப்போது அந்த அதியுன்னதப் பாதைக்குள் நுழைந்துவிட்டேன். ‘பெருநிலையினை எய்துவேன்’ என்ற நம்பிக்கை என்னுள் பெருகுகிறது. ஒவ்வொருவருக்கும் இத்தகைய வாசிப்பு சார்ந்த மனவெளிப் பயணம் கிடைக்கவும் அது இனிதே நிறைவு பெறவும் வாழ்த்துகிறேன். ஆம்! அவ்வாறே ஆகுக.
‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்
‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
நாஞ்சில்நாடன், கம்பராமாயண விளக்கம்
நாஞ்சில் நாடனின் கம்பராமாயண அரங்கு. கம்பராமாயணத்தின் ஆரண்யகாண்டத்தை நாஞ்சில்நாடன் நிகழ்த்துகிறார்.
நாள் : செப்டெம்பர் – 11, 2021
டொரெண்டோ நேரம்: சனிக்கிழமை காலை 10:30 மணி
இந்திய நேரம் : சனிக்கிழமை மாலை 08:00 மணி
சூம் 894 6957 2959
பாஸ்கோட் maca2021
September 8, 2021
குழந்தைகள் தேவையா?
2015 அமெரிக்கா வந்த புதிதில் ஒருநாள் அமெரிக்கரான என் மேலாளர் சுமார் 50 வயதைக் கடந்த பெண்மணி. அவர் எப்படி திருமணமான புதிதில் அவரும் அவர் கணவரும் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததையும் அந்த முடிவிற்காக உறவினர்கள் எப்படி விமர்சித்தனர் என்று கூறினார். என்னைத் தூக்கிவாரிப் போட்ட தருணங்களில் ஒன்று அது.
என்னுடைய குழப்பம் எல்லாம் பிறகு எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே? அதுவரை நான் அறிந்தது இரண்டே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது, இரண்டு மணம்முடித்து பிள்ளை குட்டிகளுடன் வாழ்வது, மிஞ்சிப்போனால் குழந்தைப்பேறை தள்ளிப் போடுவது. இப்படியிருக்க திருமணம் உண்டு, ஆனால் குழந்தைகள் வேண்டாம் என்போரின் மனநிலையை புரிந்துகொள்ள நெடுநாட்கள் ஆகியது. இதுதான் cultural clash போலும் என்று எண்ணிக்கொண்டேன்.
நம் சூழலில் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பிரதான தேவைகளுக்காக குழந்தை பெற்றுக்கொண்டார்கள். சிறுவயதில் அம்மாவின் வசைகளெல்லாம் நினைவிற்கு வந்தது “நீ இப்போவே இப்படி பண்ற, கடைசி காலத்துல என்ன உக்காரவச்சு சோறுபோடுவியா?”
இவ்வாறிருக்க முதலாளித்துவ மனநிலையின் நீட்சிதான் மேலைநாடுகளில் குழந்தைகள் தேவையில்லை என்று எண்ணக் காரணம் என்று ஒருவாறு யூகித்தேன். அரசாங்கத்தின் ஓய்வுகால சலுகைகள், உள்கட்டமைப்பு, சார்பின்மை இவையும் பெரும்பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.
இணையத்தில் சில நாட்களுக்கு முன் இந்த காணொளியை கண்டேன். காணொளியின் தலைப்பு “எனக்கு குழந்தை தேவையா?” (“Do I want kids?”). காணொளியைப் பார்த்தது முதல் அன்றாடம் மனதிற்குள் குழப்பமே எஞ்சுகிறது. எதற்காக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்? ஆதலால் உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணினேன்.
காணொளி கமெண்ட்களில் பலர் உலகம் வெப்பம் அடைந்துவிட்டது, உலகம் அழிந்து கொண்டிருக்கிறது அதனால் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்ற தொனியில் பதிவிடுகிறார்கள். இது முற்றிலும் ஒரு புதிய கோணத்தை காட்டுகிறது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்துக்கொள்ளும் அளவுக்கு உலகம் நாசமாகி விட்டதா என்ன? இல்லை, இணையம் மக்கள் மனதில் அப்படி ஒரு பதிவை பதித்துள்ளதா?
பல்வேறு காரணங்களால் பெரும்பாலான இந்தியத்தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். என்றாவது ஒரு நாள் இந்தியாவிலும் தம்பதிகள் குழந்தைகள் வேண்டாமென்று முடிவெடுக்கும் காலம் வருமா?
அன்புடன்,
அருண்
***
அன்புள்ள அருண்,
இங்கே என் நட்புச்சூழலிலும் இலக்கியச் சூழலிலும்கூட குழந்தைகள் தேவையில்லை என்னும் முடிவில் இருக்கும் பல தம்பதியினரை எனக்குத் தெரியும். அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் பல.
அ. உலகம் மோசமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. சூழியல் அழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளை உருவாக்கி விடுவது தவறு.
ஆ. வாழ்க்கை அனுபவிக்கப்பட வேண்டியது. அதற்குச் சுதந்திரம் தேவை. குழந்தைகள் பொறுப்பும் சுமைகளும் ஆக உள்ளன. தங்களுக்கு இருக்கும் மலையேற்றம் பயணம் போன்ற விசேஷமான வாழ்க்கைமுறைக்கு குழந்தைகள் ஏற்றவை அல்ல.
இ. குழந்தைகள் பெற்று குடும்பமாக ஆவது ஒரு வழக்கமான வாழ்க்கைமுறை. அதில் நம்பிக்கை இல்லை. வேறொரு வாழ்க்கை முறையை விரும்புகிறோம்.
இந்த மூன்று காரணங்களுமே சரியானவை அல்ல.
அ. இந்த உலகம் நூறாண்டுகள் முன்புவரை பெரும்போர்களும் தொற்றுநோய்களும் பஞ்சங்களும் கொண்டிருந்தது. சமூகப்படிநிலையும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருந்தது. இன்று அவற்றிலிருந்து விடுபட்டு ஒரு வசதியான வாழ்க்கையை வந்தடைந்திருக்கிறோம். நாளை இன்னும் மேலான வாழ்க்கையே வரும். இதுவே உண்மை.
உலகம் அழிவைநோக்கிச் செல்கிறது என்பதெல்லாம் சிலவகை சோர்வுவாதப் பார்வைகள் மட்டுமே. நூறாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரும் சொந்தக் குழந்தைகளின் சாவை பார்த்தாக வேண்டும். ஒவ்வொருவரும் கடும் உடல்வலிகளைச் சந்தித்தாக வேண்டும். இன்று அத்தகைய வாழ்க்கை இல்லை. நாம் நம் பிள்ளைகளுக்கு நம் தந்தையர் தந்ததைவிட மேலான வாழ்க்கையையே அளித்துச் செல்கிறோம்.
இனிவரும் உலகம் எதுவாக இருக்கும், என்ன நிகழுமென்று அறுதியாக எவரும் சொல்லிவிடமுடியாது. அதை முடிவுசெய்வது நம் கையில் இல்லை. நம்மை இயற்கையை, பிரபஞ்சத்தை முற்றறிந்த ஞானிகளாக நினைப்பதன் ஆணவத்தையே உலகின் எதிர்காலம் பற்றிய மிகையான கவலை, உறுதிப்பாடுகளில் காண்கிறோம்.
உலகம் நாளையே அழியலாம், கோடி ஆண்டு நீடிக்கவும் செய்யலாம். நாம் அதில் ஓரளவுக்குமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை. நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு பிரபஞ்ச நியதிகளுக்கு வழிவிட்டு நம் இடத்தை உணர்ந்து அமைவதே நம்மால் செய்யக்கூடியது.
இயற்கை மனிதனுக்கு இட்ட ஆணைகளில் ஒன்று குழந்தைகளை பெற்று அடுத்த தலைமுறையை உருவாக்குவது. அதை நிறுத்திக்கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை. குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திக் கொள்கிறோம். இயற்கையே தன் கடுமையான ஆயுதங்கள் வழியாக தகுதியுள்ளதை வாழச்செய்யும். ஆனால் அது வலிமிக்க துயர்மிக்க வழி. அந்த துயரை தவிர்ப்பதற்காக நாம் குறைவாக பெற்று அவற்றை தகுதியுடையவர்களாக ஆக்குகிறோம். அவ்வளவுதான்.
ஆ. உலகியலில் உள்ள மகிழ்ச்சி, சாதனை முதலிய எதன்பொருட்டும் குழந்தைகள் பெறாமல் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து நூறுரூபாய் மதிப்புள்ள பொருட்களைப் பெறுபவர்கள். உலகியலின் முதன்மை இன்பமும் நிறைவும் மக்கட்பேறே. வள்ளுவரைவிட அதை சிறப்பாக எவரும் சொல்லிவிடமுடியாது. அதில் பொறுப்பு, பதற்றம் ஆகியவை உள்ளன. ஆனால் உலகியலின் எந்த களியாட்டுக்கும் வெற்றிக்கும் அதைவிடப் பலமடங்கு பொறுப்பும் பதற்றமும் உண்டு. உலகியல் களியாட்டின் பொருட்டு வெற்றியின் பொருட்டு குழந்தைகளைத் தவிர்ப்பவர்கள் மெல்லமெல்ல வெறுமையை, இழப்புணர்வைச் சென்றடைவார்கள்.
இ. குடும்ப அமைப்புகள் உலகில் பல உள்ளன. பெருந்திரள் குடும்பம் என்னும் அமைப்பே பழங்குடிகளில் உள்ளது. கம்யூன்கள் உள்ளன. ஆனால் அனைத்துக்கும் நோக்கம் ஒன்றே. நன்மக்கள் பேறு. குழந்தைகளுக்குச் சிறப்பான வளர்ச்சிப்புலத்தை உருவாக்குவதே எந்தக் குடும்ப அமைப்புக்கும் அடிப்படை நோக்கம். குழந்தைகளில்லா குடும்பம் என்பது நோக்கம் அற்றது. வேறுவகை குடும்பம் என்றால் வேறுவகை குழந்தை வளர்ப்பு என்றே பொருள்.
ஒருவருக்கு இங்கே பிறந்தமையாலேயே சில கடமைகள் உண்டு. பெற்றோர் பேணல், சுற்றத்தாருக்கு உதவுதல். அந்தப்பொறுப்பை தட்டிக்கழித்தால் குற்றவுணர்வே எஞ்சும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே மண்டையின் அத்தனை சொற்களையும் செலவிட்டு, எதிர்மறையானவர்களாக ஆகவேண்டியிருக்கும். எதிர்மறை இருப்பு என்பது உடலுடன் இருக்கும் சாவுநிலை.
பிறருக்குச் செய்யும் கடமைகளை தவிர்ப்பவர்கள் நடைமுறையில் தங்களுக்குப் பிறரும் எதுவும் செய்ய வேண்டாமென அறிவிப்பவர்கள்தான். இப்புவியில் அப்படி ஒரு வாழ்க்கை இயல்வதல்ல. அது தனிமையும் வெறுமையும் மட்டுமே கொண்டது.
சரி, குழந்தைகளை தவிர்த்தல் எந்நிலையில் ஏற்கத்தக்கது?
ஆன்மீகத்தின் பொருட்டு மட்டும்தான். அந்நிலையில் நூறு ரூபாய் கொடுத்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றை பெறுகிறோம். இழப்புதான், ஆனால் ஈட்டுவது பெரிது.
ஆன்மீகத்தின் வழிகள் மூன்று. கல்வி, சேவை, ஊழ்கம். மெய்ஞானத்தை கற்று அறிதல். எளியோருக்கும் உயிர்களுக்கும் சேவை செய்தல். ஊழ்கத்திலமர்ந்து நிறைவுகொள்ளல். மூன்றுக்கும் துறத்தல் அவசியம். முழுமையான துறத்தல் இலக்கு. ஆனால் சற்றேனும் துறக்காமல் அவற்றை அடையவே முடியாது.
உலகியல் துறப்பே ஆன்மீகத்திற்கான வழி. ஆடம்பரங்களை துறப்பது. வசதிகளைத் துறப்பது. உடைமைகளை துறப்பது. பெருமைகளைத் துறப்பது. அடையாளங்களைத் துறப்பது. அதன் ஒரு பகுதியாக குடும்பத்தையும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதையும் துறப்பது வருகிறது. காலகாலமாக அந்த வாழ்க்கைமுறை இங்கே உள்ளது
ஆனால் அதை வெறும் விழைவால் அல்லது விருப்புறுதியால் எவரும் இயற்ற முடியாது. அவ்வண்ணம் துறந்து வாழ்வதற்கு சரியான வழிகாட்டுதல்கள் வேண்டும். அதில் பல படிநிலைகள் உள்ளன. ஒவ்வொன்றாக கடக்கவேண்டும். ஒவ்வொரு நிலையிலும் சரியாகத்தான் செல்கிறோமா என நாமே நம்மை மதிப்பிடவேண்டும். நம்மை பிறர் மதிப்பிடவேண்டும். அதற்கான அமைப்பில் நாம் இருக்கவேண்டும்.
துறவு என்பது குடும்பம் போலவே தொன்மையான இன்னொரு வாழ்க்கைமுறை. குடும்பம் போலவே அங்கும் பிரச்சினைகள் உண்டு, நெறிகளும் உண்டு.
ஜெ
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


