Jeyamohan's Blog, page 865
December 16, 2021
விக்ரமாதித்யன் எனும் சோதிடர்
அன்புள்ள ஜெ
நேரடியாகவே ஒரு கேள்வி கேட்கவேண்டும். விக்ரமாதித்யன் அவர்கள் தன்னுடைய தடம் இதழ் பேட்டியில் தன்னுடைய சோதிடப்பார்வையை முன்வைத்தே எல்லாவற்றைப் பற்றியும் பேசியிருந்தார். சோதிடம் அவருடைய தொழில் போலவே இன்று இருக்கிறது, ஒரு கவிஞன் எப்படி சோதிடனாக இருக்க முடியும்? உங்களுக்குச் சோதிட நம்பிக்கை உண்டா? நீங்கள் அவரிடம் சோதிடம் பார்த்தது உண்டா?
ஆர்.என்.சேகர்
அன்புள்ள சேகர்,
எனக்கு சோதிடம் மேல் நம்பிக்கை உண்டா இல்லையா என்று சொல்லமுடியாது. ஏனென்றால் நான் சோதிடம் பார்த்துக் கொண்டதில்லை.அந்த வட்டத்திற்குள் செல்லவேண்டாம் என்று நினைக்கிறேன். இன்றுவரை விலகியே இருக்கிறேன்.
ஆனால் சோதிடத்தில் ஆர்வமும் பயிற்சியும் கொண்ட பல நண்பர்கள் எனக்குண்டு. அவர்கள் விக்ரமாதித்யன் அண்ணாச்சி மிகச்சிறந்த, மிகமிக மரபார்ந்த சோதிடர் என்றே சொல்கிறார்கள். குறிப்பாக ஜாதகம் பார்ப்பதிலும், பரிகாரங்கள் சொல்வதிலும் அவருடைய நுண்ணுணர்வை பலர் பாராட்டி கேள்விப்பட்டிருக்கிறேன்.
குறிப்பாக திருமணப் பொருத்தம் பார்ப்பதிலும், திருமணம் சார்ந்த சிக்கல்களுக்கான பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் சொல்வதிலும் அவர் நிபுணர் என்று மாதம் ஒருமுறையாவது எனக்கு அணுக்கமான எவரேனும் சொல்கிறார்கள். முழுக்க முழுக்க சைவம் சார்ந்தது அவருடைய அணுகுமுறை.
எதிர்மறைப் பண்பு அற்றவரும், மானுடர் மேல் இயல்பான அன்பு கொண்டவருமான விக்ரமாதித்யன் அவர்கள் மணநாள் கணிப்பது என்பது ஒரு பெருங்கவிஞனின் வாழ்த்து என்னும் வகையில் மிக முக்கியமானது என்று எண்ணுகிறேன்.
என்னுடைய நண்பர்கள் மூவர் அவரிடம் தங்கள் சிக்கல்களின்போது சோதிடம் கேட்டு பரிகாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அவரால் பயனுற்றனர் என்று உண்மையான மனஎழுச்சியுடன் சொல்லக்கேட்டிருக்கிறேன். அது சோதிடமா அல்லது அவருக்குரிய மானுடரை அவதானிக்கும் கலையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. என் வரையில் அதற்குள் செல்லவேண்டாம் என்பதே என் கொள்கை.
அவர் இன்று தொழில்முறையாகவே சோதிடம் பார்க்கிறார். ஆனால் மற்ற சோதிடர்கள் போல அதையே நாள்முழுக்கச் செய்வதில்லை. அதன்பொருட்டு எங்கும் செல்வதுமில்லை. அவர் தன் சுவாரசியத்துக்காகவே அதைச் செய்கிறார். அவரிடம் சோதிடம் பார்க்க விரும்புபவர்கள் தென்காசிக்கு அவர் இல்லத்திற்குத்தான் செல்லவேண்டும்.
பல எழுத்தாளர்கள் அவரிடம் ஓசி சோதிடம் பார்த்துக்கொள்வது எனக்குத் தெரியும் . அவர்களில் பலர் முற்போக்குத்திராவிடர்கள். அவர்கள் பார்ப்பதில் பிழையில்லை, அவருக்கான கட்டணத்தை அளிப்பதே முறை என்பதே என் கருத்து. மனிதர்களின் துயர்களும் சஞ்சலங்களும் எல்லையற்றவை.அனைவரும் மனிதர்கள் என்னும் நிலையில் எளியவர்களே.
கவிஞன் சோதிடம் பார்க்கலாமா? கவிஞன் எதையும் செய்யலாம். கமிஷன் மண்டியில் வேலைபார்த்த கவிஞர்கள் உண்டு. அரசியல் தொண்டர்களான கவிஞர்கள் உண்டு.பெரும்பாலான கவிஞர்கள் அரசு ஊழியர்களே. அவற்றையெல்லாம் விட அன்றாடம் மானுடரை, அவர்களின் பாடுகளை அறியுமிடத்தில் இருக்கும் சோதிடம் கவிஞனுக்கு மிக அணுக்கமான தொழில் என்று நினைக்கிறேன்
ஜெ
விக்ரமாதித்யன் [சோதிட அழைப்புகளுக்கு] 9629085708, 9942026089
விக்ரமாதித்யன் ஆங்கில விக்கிபீடியா
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-3
மருந்து நீ அருந்திடவேண்டும்
பெத பிரம்மதேவம் என்கிற கிராமம். முதிர்ப்பச்சை விரித்த
வயல்கள். எந்த பழந்தமிழ் கவியின் கனவோ
சாளுக்கியர்களின் காலத்து சிவன்கோவில். பூங்குளம்.
வெண்நீலப் பனித்திரைகளுக்குப் பின்னால் முதல் சுடராட்டு.
எத்தனை அழகான நிலங்களுக்கு சென்றாலும், எல்லா
இடத்திலும் உன் தோற்ற மயக்கங்களே. உன் வேதனை அப்படி கிடக்கட்டும்,
உன்னையே நம்பி இருப்பவர்களின் வேதனை? இப்படியொரு பாசக்கயிறுதான்
சிவனை இங்கு கட்டிப்போட்டதென நினைக்கிறேன்.
சரி இனி என் சங்கதி? எதற்காக பிறந்தேன்? எங்கு
சேர்ந்தேன்? மீண்டும் எங்கு செல்கிறேன்?
ஒன்று மட்டும் புரிந்துவிட்டது. உன்னை நேசிப்பவர்களின்
நோய் தீரவேண்டும் என்றால் மருந்து நீ தான் அருந்தவேண்டும்.
* பெத பிரம்மதேவம் – ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சாமல்கோட்டை அருகில் உள்ள சிறு கிராமம்.
சுடரில் உள்ளதே விட்டிலிலும் உள்ளது.
Something inside the moth is made of fire – jalaluddin rumi
மாநில கலை அருங்காட்சியகத்தில் ‘சுக்தாய்’ கேலரி. இன்னும்
விருந்தினர்கள் வராத உணவு மேசைபோல். நொடிக்குநொடி இங்கு
மது குடுவைகளை நிரப்புகிறார்கள், ஹுக்கா
எரிந்துக்கொண்டே இருக்கிறது. மயங்கி விழ இதயங்கள்தான் இல்லை.
‘உன்னை எனக்கு பிடிக்கும்’ என்கிறாள் அவள். பசும்
செடி போன்ற அந்த தேகத்தின் முன் காதலின் பரவசத்துடன்
நின்றிருக்கும் என் கண்களில் கத்திகளை பார்க்கிறாள்.
‘இது வாள் அல்ல மணமாலை’ என்றால் நம்ப மறுக்கிறாள்.
உடல்களின் எடையை குறைத்தான் சுக்தாய். உருவங்களுக்கு
சிறகுகளை அளித்தான். அவன் முன்னிலையில் நிழல்கள் கூட
வெளிச்சங்கள் பாய்ச்சும். பொருட்களும் பாடல்கள்
பாடும். கொடுங்கோலர்களும் கவிதை வாசிப்பார்கள்.
சத்தமேதும் இடாத இந்த ஏரியில் ஒரு தூண்டிலிட்டுள்ளார்கள்.
இத்தனை காலத்திற்குப்பின் மீன் ஒன்று அதன் குரலைக் கேட்டது.
இந்த மண்அகலில் ஆறாத பிழம்பு. குமரியே,
ஒரு சொல் கேள், சுடரில் உள்ளதே விட்டிலிலும் உள்ளது.
(சுக்தாய் – அப்துல் ரஹ்மான் சுக்தாய்(1897-1975) நீர்வண்ண ஓவியர். கோடுகளின் நளினதுக்கும், மென்மையான நிற கலவைகளுக்கும் புகழ் பெற்றவர்
தெலுங்கில் இருந்து தமிழில் ராஜு
https://www.dawn.com/news/1201477)
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்
ஊர்த்துவதாண்டவம், கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
‘ஊர்த்துவ தாண்டவம்’ கதை குறித்த என் பார்வையைப் பகிர்கிறேன்,
“சிவனோட கால்கள் கொண்டது ஊர்த்துவம்ன்னா
தாட்சாயணியோட கண்கள் கண்டது அந்த ஊர்த்துவம்”
எல்லாக் கலைகளும் அதைக் கூர்ந்து ரசிப்பவர்களால் பல படிகள் எழுந்துவிடுகிறது, ‘கொண்டதை, கண்டது’ நிறைவு செய்கிறது. ஒன்றுடன் ஒன்று கலந்து இட்டு நிரப்பிக் கொண்டு, அதுவாகவே மாறி உன்மத்தம் அடைகிறது.
சிவன் சக்தியின் கதை ஒரு தொன்மம், அதன் தொடர்ச்சியாக முப்பிடாதி பொம்மி என ஒரு உண்மை நிகழ்வு, பின் முப்பிடாதி பொம்மியின் கதையும் தொன்மமாதல் என கதையில் ஒரு முடிச்சு தொடர்ந்துகொண்டே இருப்பது அரிதான பண்பு.
முப்பிடாதியும், பொம்மியும் இணைந்து நிகழ்த்தும் ஊர்த்துவ தாண்டவத்தை நவின் உக்கிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அசாத்தியமான கதை சொல்லல், வித்தியாசமான பின்புலம் என இந்தக் கதை முழுமையான ஒன்றாக மனதில் நிலைக்கிறது. எழுத்தாளர் நவினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்பும் நன்றிகளும்,
பாலாஜி ராஜூ
அன்புள்ள ஜெ
ஜி.எஸ்.எஸ்.வி விநவீன் எழுதிய ஊர்த்துவதாண்டவம் கதை வாசித்தேன். நெல்லை மாவட்டத்தின் பண்பாட்டின் உள்ளடுக்குகளைச் சொல்வதனால் இது ஒரு சுவாரசியமான கதையாக ஆகிறது. அந்தச் சூழலின் நாட்டுப்புறத்தன்மையையும் உக்கிரத்தையும் கதையில் ஆசிரியர் நன்றாகவே காட்டியிருக்கிறார்.
ஆனால் இன்றைய வாசகனுக்கு இந்தக்கதை ஒரு நிகழ்த்துகலையின் சித்திரம் என்பதைக்காட்டிலும் மேலதிகமாக என்ன தருகிறது என்பது முக்கியமான கேள்வி. ஒரு நல்ல நிருபர் ஒரு சின்ன ஊருக்குப்போய் இப்படி உண்மையிலேயே நடக்கும் ஒரு கூத்தை பதிவுபண்ணி தந்தால் இதே அனுபவம் கிடைக்கும் என்றால் இதை ஏன் எழுதவேண்டும்?
ஊர்த்துவதாண்டவம் என்பது சைவ மரபிலே உள்ளது. அதை ஃபோக் மனம் எப்படி புரிந்துகொள்கிறது என்பது ஒரு கேள்வி. ஊர்த்துவ தாண்டவம் என்பது ஒரு உச்சம். செங்குத்தாக வானுக்கு எழுவது என்று அதற்குப்பொருள். ஒரு ஆண் பெண்ணின் வாழ்க்கையில் அந்த நிகழ்ச்சி குறியிட்டு ரீதியாக என்னவாக பொருள்படுகிறது என்பது இன்னொரு கேள்வி.
இப்படிப்பட்ட கேள்விகள் வழியாக மேலும் ஆழமாகச் சென்றிருக்கலாம்.
ஆர்.ஸ்ரீனிவாஸ்
ஜா.தீபா – கடிதங்கள்-3
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
அன்பு ஜெ,
”ஒற்றைச் சம்பவம்” வாசிப்பிற்குப் பின் தற்கொலையைப் பற்றி, தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றி, மரணத்தைப் பற்றி என எண்ணங்களை நீட்டிக் கொண்டிருந்தேன். வாழ்க்கையை நோக்கி அதன் இருத்தலை நோக்கிய கேள்வியின் நுனியில் மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் வராமல் இருப்பதில்லை. நான் சாக வேண்டும் என்று நினைத்த தருணங்களையெல்லாம் நினைவுகூர்ந்தேன். பொதுவாக இன்ன காரணம்தான் என்று சொல்லமுடியவில்லை. உச்ச அழுத்தத்தின் விழைவில் “இனி என்ன? ஏன் இருக்க வேண்டும்? இனி இருந்தால் மட்டும் என்ன?” என்ற கேள்வியின் விளிம்பில் மரணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பேன். எனக்காக அழ வேண்டியவர்கள் பட்டியலை மனதில் ஓட்டிப் பார்ப்பேன். சில வேளைகளில் அந்த பட்டியலின் முதன்மை நபர்கள் மீது ஏற்படும் அதீத வெறுப்பின் உச்சத்தில் என் மரணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்து அது அவர்களுக்கு எத்தனை பெரிய தண்டனையாகும் என்பதை மனதில் ஓட்டுவேன். ஆனால் ஒருபோதும் சாவதற்கு எனக்கு துணிவிருந்ததில்லை. ஒருவன் தன்னைக் கொலை செய்வதற்கு மிகுந்த தைரியம் அல்லது பித்து கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுமெனக்கு. என் வரையில் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நெஞ்சழுத்தம் வேண்டும். சுய வெறுப்பால் அல்ல. சுற்றியிருப்பவர்களின் மீதான வெறுப்பால். பிறரைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற அதீத வெறுப்பால் அது சாத்தியம். அந்த நுண்மையை ஜா.தீபா அவர்கள் கதையில் கடத்தியிருந்தார்.
ஒருத்தர் தற்கொலை செய்துக்க காரணம் நிச்சயமா இருக்கணுமா? என்ற கேள்வியை மணிமாலாவின் வழி அவர் எழுப்பும்போது ”இல்லை” என்றே சொல்லத்தோன்றியது. தற்கொலைக்கு ஒரே ஒரு காரணமோ, பல காரணங்களோ இல்லை. உண்மையில் காரணங்களே இல்லாதது தற்கொலை. என் மிகவும் நெருங்கிய தோழியும் உறவினர் பெண்ணுமானவள் தன் பதினாறு வயதில் தற்கொலை செய்து கொண்டாள். தற்கொலை செய்து கொண்ட அறையின் ஜன்னலுக்கு வெளியே அவள் புத்தகங்களை கிழித்துத் தூக்கி வீசி எறிந்திருந்தாள். மூக்குக் கண்ணாடியை உடைத்து எறிந்திருந்தாள். அவள் இது நாள் வரை மறைத்து வைத்திருந்த செல்பேசியை நொறுக்கி அதிலுள்ள சிம்கார்டை இரண்டாக பிளந்து வீசியிருந்தாள். இறுதியாக தனக்கு மிகவும் விருப்பமான அந்தப் பையனுடன் பேசியிருக்கிறாள். தற்கொலை செய்யப்போவதாக அவனிடமும் சொல்லவில்லை. அவனை மிகவும் விரும்பியிருந்தால் அவனுக்காகவாவது அவள் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அதைவிட அதீத வெறுப்பை தன் தந்தையின் மேல் வைத்திருந்தாள் என இன்று நினைத்துக் கொள்கிறேன். அவளுடைய மரணம் அவள் தந்தையை குற்றவாளியாக்கவே. ஒப்பாரி வைக்கும்போது மாமாவைப் பார்த்து அத்தை “என் லட்சுமிய கொன்னுட்டியே பாவி..” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். இங்கு நாதனுடைய தற்கொலையைப் பற்றி மணிமாலா சொல்வதாகச் சொல்லும்போது,
”நாதன் எனக்காக தற்கொலை செய்துட்டாரு.. அவர் தனக்குத்தானே திருப்திபடுத்த முடியாம செத்துப் போயிட்டாரு. ஒவ்வொரு தற்கொலையிலும் யாருக்கான செய்தியோ இருக்கும் மேடம்.. நாதனோட மரணத்துல அவரே அவருக்கான செய்தியை சொல்லிக்கிட்டாரு.” என்கிறாள்.
இந்த வரிகளுக்குப் பின் மீண்டும் என் தோழியின் தற்கொலை நாளை ஓட்டிப் பார்த்தேன். அவள் தற்கொலை செய்த போது நான் கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். செய்தியைக் கேள்விப்பட்டதும் சென்னையிலிருந்து நண்பர்கள் இரவோடு இரவாக பேருந்தில் ஏற்றி விட்டார்கள். ஊருக்கு வரும் வரை அவளை நோக்கி ஒற்றை வரியை கேட்டுக் கொண்டே வந்தேன். “என்கிட்ட சொல்லியிருக்கலாமே. என்கிட்ட சொல்ல முடியாத அந்த தீர்க்க முடியாத பிரச்சனை உனக்கு என்ன? என்ன மறந்துட்டல்ல” என்று தான் அணத்திக் கொண்டே வந்தேன். நாங்கள் பகிர்ந்து கொள்ளாத விடயங்களே இல்லை. அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் அறியாத ரகசியங்கள் எதுவுமே அவளிடமில்லை என்று தான் அன்று வரை நினைத்தேன். ஆனாலும் இன்ன காரணத்திற்காகத் தான் தற்கொலை செய்திருப்பாள் என்று இன்று வரை என்னால் அமைய முடியவில்லை.
”அஞ்சு நிமிஷத்துக்குள்ள ஒரு வாழ்க்கையை சொல்லச் சொல்றீங்க.. எங்க ரெண்டு பேரோட மனநிலையை பேசணும்னு சொல்றீங்க.. ஒரு மனுஷன் ஏன் செத்துப் போனான்னு செத்த அவனுக்கேத் தெரியுமான்னு தெரியாது..” என்ற தீபாவின் வரிகள் ஆழமானவை. அவை கொண்டு நோக்கினால் எந்தத் தற்கொலையையும் ஒற்றைக் காரணத்தை, ஒற்றைச் சம்பவத்தைக் கொண்டு மட்டும் விளக்கிவிட முடியுமா என்றே ஐயம் எழுகிறது.
அதேபோல் உடற்குறைபாடுகள், மன நலக் குறைபாடுகள் கொண்ட மனிதர்களைப் பற்றி சிந்திக்கும் போது எப்போதும் எனக்குத் தோன்றும் ஒன்றுண்டு.. அவர்களின் உலகில் நாமெல்லாம் மாற்றுத்திறனாளிகள் தானே. நிறங்களைக் காணவியலாதவருக்கு, குறிப்பிட்ட நிறத்தை வேறாகக் காண இயல்பவருக்கு அவற்றை வேறு விதமாகக் காணும் நாம் மாற்றுத் திறனாளிகள் தானே. பெரும்பான்மை மனிதர்கள் காண்பதையே நாம் காண்பதால் மட்டுமே நாம் இயல்பில் இருக்கிறோம் என்று சொல்வதே முட்டாள்தனமாக இருக்கிறது இப்போதெல்லாம். இந்த இயல்பிலிருப்பவர்கள், பெரும்பான்மைக்காரர்கள் கட்டமைத்த பொருளாதாரக் கட்டமைப்பில் வேறு வழியில்லாமல் தானே இந்த வித்தியாசமானவர்கள் என நாம் கருதுபவர்கள் போட்டி போட வருகிறார்கள். அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதாலேயே நாம் ஏதோ கொடையாளி போல பெருந்தனமைவாதிகளாக காட்டிக் கொள்வது எவ்வளவு அபத்தம். நிர்பந்திக்கப்பட்ட இந்த ஓட்டத்தில் அவர்கள் இழப்பது தன் சுயமதிப்பைத்தான். சுயமதிப்பு இல்லாதவனுக்கு இதைப்பற்றிய அக்கறை இல்லை. இதைப் பற்றி பேசுவது கூட ஒரு பொருளில்லை. ஆனால் வலிகளைக் கடந்து அதில் வந்து சாதித்து நிற்பவர்களிடம் தான் கணம் கணமும் இந்த சுயமதிப்பு பறிக்கப்படுகிறது
”நான் உடைக்க நினைக்கறேன் மேடம். எனக்கு இந்த சமூகம் செய்யற ஒவ்வொன்னும் இயல்பா இருக்கணும்னு நினைக்கறேன். ஆனா ஒவ்வொரு முறையும் நான் தோற்கடிக்கப்படறேன். எப்பவும் எல்லாருக்கும் நன்றியுள்ளவளா இருக்கணும்னு கட்டாயபடுத்தப்படறேன். அது என் வீட்டுல இருந்தே தொடங்கும்போது அதோட வலியை எப்படி மேடம் ஒரு சம்பவமா சொல்ல முடியும்?” என்ற வரிகள் வலி மிகுந்தவை. “விருதுகள் எனக்கல்ல.. இழந்த என் கண்களுக்கானவை” என்ற வரிகளில் வெற்றியின் பொருட்டும் அவமானப்பட வேண்டும்போது வாழ்வே பொருளற்றதாக அல்லவா மாறிவிடுகிறது என்றே நினைத்தேன்.
கண் தெரிந்த மணிமாலா ஆக விரும்பியது ஒரு ஓவியராக. ஐந்து வயதிற்குப் பிறகு கண் பார்வை இல்லாத மணிமாலா அதன் தொடர்ச்சியாக ஆக விரும்பியது கற்பனாவாதியாக. The job of the artist is always to deepen the mystery” என்ற பிரான்சிஸ் பேகனின் வரிகளைப் பிடித்த மணிமாலாவை எத்துனை நுண்மையாக தீபா சித்தரித்திருக்கிறார்.
மர்மங்களை கண்டடையறது தான் ஒரு கற்பனைவாதியோட வேலையா இருக்க முடியும் இல்லையா? நான் மர்மங்களை கண்டடைய விரும்பினேன்… அஞ்சு வயசுல எனக்கு கண்ணு போச்சு.. அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் மனசுலேயும் உள்ள மர்மங்களை நான் தேட ஆரம்பிச்சேன்.. ஒரு ஓவியரா ஆக முடியலேனாலும் பேகன் சொன்ன மாதிரி மர்மங்களைக் கண்டுபிடிக்க நினைக்கற ஒவ்வொருத்தருமே ஓவியர் தான்.. என்ற வரிகளின் மணிமாலாவை ஆரத்தழுவ வேண்டும் போல் இருந்தது.
தான் செய்ய வேண்டும் என்று நினைக்கும் விடயங்களிலிருந்து விலக்கி “நீ இயல்பானவன் அல்ல. நீ ஒரு பெண். நீ ஒரு தலித். நீ ஒரு சிறுபான்மையாளன். நீ ஒரு மாற்றுத்திறனாளி. நீ ஒரு மூன்றாம் பாலினத்தவர்” என்று எத்தனை வளையங்கள் நம்மை நோக்கி வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலெழுந்து வரும்போது அவனின் திறமையினாலன்றி இன்ன காரணத்திற்காக கவனிக்கப்படுகின்றான் எனும்போது ஏற்படும் வலி அதைவிடக் கொடியது. விளக்கமுடியாதது. வளையங்கள் மாட்டப்பட்டு விட்டதாலேயே அந்த வளையத்திற்கு உட்பட்ட விடயங்களில் மட்டுமெ ஈடுபடச் சொல்வது அபத்தத்தின் உச்சம். அந்த ஒட்டு மொத்த சித்திரத்தை மணிமாலாவின் ஆற்றாமையின் வழி ஜா.தீபா சொல்ல முற்பட்டிருக்கிறார்.
நாதன் போன்றோர்களைப் பார்த்து ”யாராவது யாரையாவது உருவாக்க முடியுமா?” என்று கேட்கத் தோன்றுகிறது. “விருதுகள் எனக்கல்ல.. இழந்த என் கண்களுக்கானவை” என்ற வலி அளப்பறியது.
இந்த எண்ணங்கள் யாவும் மனதிற்குள் உழன்று வரவே நீங்கள் கோவை கவிதை முகாமின் மாலையில் சிறிய நடை செல்லும் போது பகிர்ந்து கொண்ட அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்தது. நீங்கள் கொரனா வார்டில் சந்தித்த செவிலியப் பெண்ணைப் பற்றிய சம்பவம் அது. இந்த நோயச்ச காலத்தில் ஆபத்தான இந்தப்பணி வேண்டாம் இல்லையேல் பிரிந்து விடலாம் என்ற கணவனிடம் தைரியமாக “நான் என் பிள்ளையள பாத்துக்கிடுதேன். வேலைய விட்டுத்தான் உன்கூட இருக்கனும்னா வேணாம், நீ போ” என்று அவனை மறுத்தவளைப் பற்றி மிகப் பெருமையாக எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ”தான் இல்லாமல் ஒரு பொம்பளையால இயங்கிட முடியும் என்பதை எந்த ஆம்பளையாலயும் உடனே தாங்கிக்க முடியாது. அதுக்கப்பறம் அவன் வேலைய விடறத பத்தி பேசவே இல்லனு அவ சொன்னா” என்று கூறி வாய்விட்டுச் சிரித்தீர்கள். “பொம்பளைக்கு அப்படி ஒரு கெத்து வேணும்லா. அந்த நிமிர்வு முக்கியம்” என்று எங்களைப் பார்த்துச் சொன்னீர்கள். என்னை நீங்கள் முதல்முறை பார்த்த போது சொன்ன வார்த்தையும் அது தான். அன்பில் குழைந்து நின்றிருந்த என்னை அருகணைத்து “நிமிர்வோட இருக்கனும்” என்று தோள் சேர்த்துக் கொண்டீர்கள். அன்பிலும் கூட அந்த நிமிர்வை பெண்கள் விட்டு விடக்கூடாது என்ற உங்களின் எண்ணம் பிடித்திருந்தது.
மணிமாலா அப்படிப்பட்ட நிமிர்வானவள்.அவரோட உதவியில்லாம நான் வாழ முடியுங்கறதை அவரால ஏத்துக்க முடியல. இத்தனை நாள் என்னோட வெளிச்சம்னு அவர் எல்லார்கிட்டயும் வாங்கின பேரை, என் சாதனைக்கு பின்னாடி ஒளிவட்டமா அவர் இருந்ததை நிரூபிக்க நான் இல்லாமப் போனதை அவரால தாங்கிக்க முடியல.. என்கிட்டே தோற்றத்தை அவரால ஏத்துக்க முடியல. அவரோட சாவுல என்னைத் தோற்கடிக்க நினைச்சாரு… இதை நான் ஒரு சம்பவமா எப்படி சொல்றது மேடம்? மாற்றுத்திறனாளி என்பதற்காக கணகணமும் அவள் நிமிர்வை கேள்விக்குள்ளாக்கும் சமூகத்திடம் அவள் இத்துனை தெளிவாக இருப்பது பிடித்திருக்கிறது. ஒற்றைச் சம்பவத்தால் மட்டும் விளக்க முடியாத கதையிது. இங்கிருந்து விரிந்து விரிந்து பல வகையான மணிமாலாக்களின் உள்ளத்திலும், நாதன்களின் உள்ளத்திலுமென விரித்துக் கொண்டே செல்லக் கூடியது.
பிரேமையுடன்
இரம்யா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஜா. தீபாவின் மறைமுகம் கதை எளிய பெண்ணிய கதை போன்ற பாவனை செய்கிறது. வரலாற்று வீரனை மணந்த எளிய பெண்ணின் புலம்பல்கள் போல, தன் இயாலமைகளை அடுக்கி, அதுவும் அப்பாவியான பெண் அவன் குறைகளை கூறாமல், தன் அறியாமையால் அந்த தீவிரத்தை அறிய முடியாதவள் போல கதை அமைந்துள்ளது. ஆனால் பாலகனகனின் சொற்களாக வரும் இந்த வரி ஒரு முக்கியமான முரணை மௌனமாக முன்வைக்கிறது.
”துன்பத்தில் உழன்று தன்னையே காப்பாற்றிக்கொள்ள வழியில்லாத ஒருவரைத் தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் எல்லாம் இந்த நாட்டின் நரம்புக்குள் விஷமாய் புகுந்திருக்கிறார்கள் என்று கூச்சலிடுவான் ”.
இது காந்தியையே குறிக்கிறது என கொள்ளலாம். அப்படியென்றால் பாலகனகன் வரலாற்றில் நிற்பதாக நினைத்து செய்யும் யத்தனம் அர்த்தமற்று போகிறது. அப்படியென்றால் காமாட்சி, பாலகனகன் போராடும் பாரததின் குறியீடே. அவனின் போராட்டமும் அவனின் நொய்ந்த குழந்தை போல இறந்துவிடுகிறது. வரலாற்று உணர்வற்ற அந்த போராட்டம் அவளை கருத்தில் கொள்வதேயில்லை. அத்தகைய பெண்களை கொண்டுதானே காந்தியின் சுதந்திர இயக்கம் நடந்தது. காமாட்சி இறந்த பாலகனகனை வாசனை மூலமாக அறிய முயன்று தோற்பது ஒரு கோரமான குறியீடு. கண்களற்ற வரலாறு அவன் இருப்பை அறியாமல் வெளியே தள்ளுகிறது.
இந்த கதையை வாஞ்சிநாதனுடன் இணைத்துகொள்வதற்காண சாத்தியங்களை கொண்டது. ஆனால் பாலகனகன் தீவிர போராளிகளின் பிரதிநிதியே.
அன்புடன்
ஆனந்தன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
வசந்த், மாற்று சினிமா- கடிதம்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினராக என் பிரியத்துக்குரிய இயக்குநர் வசந்த் சாய் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. நான் அவருடைய ஆர்ப்பாட்டமில்லாத திரைமொழிக்கு ரசிகன். தமிழில் அவருடைய இடமே அந்த ஃப்ளோவை அவர் இயல்பாக உருவாக்குவதனால்தான். அவருடைய கேளடி கண்மணி, ஆசை ரிதம் எல்லாம் நல்ல அனுபவங்களாக நினைவில் நிற்கின்றன.
பிற்பாடு அர்பன் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை எல்லாம் டிவி சீரியலுக்குரிய விஷயங்களாக மாறின. டிவி சீரியல்களில் அவற்றையெல்லாம் பேசிப்பேசியே சலிக்க வைத்தனர். ஆகவே சினிமா ரௌடியிசம் நோக்கிச் சென்றது. அதெல்லாம் வசந்துக்கான ஏரியா இல்லை. வன்முறையை ஜாஸ்தியாகக் காட்ட அவரால் முடியாது. பக்கா கமர்சியல்களும் ஒத்துவராது. அவருடையது காட்சிவழியாகவே செல்லும் திரைமொழி. டிவி அவருக்கு ஒத்துவராது. ஆகவே அவருக்கு பின்னடைவு உருவானது.
ஆனால் இப்போது சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும் வழியாக வசந்த் ஆற்றலுடன் திரும்பி வந்திருக்கிறார். எந்த வெளிநாட்டு இயக்குநரின் பாதிப்பும் இல்லாமல், இயல்பாக உருவான திரைமொழி. அசோகமித்திரனின் நடை போல அப்படியே வாழ்க்கை என்று தோன்றச் செய்வது. நான் மூன்றுமுறை அந்த சினிமாவைப் பார்த்தேன். வசந்த் இயக்கிய பாயசம் படம் [நவரசாவில் ஒன்று] முக்குயமானது.
எதையுமே அழகுபடுத்தி, அதற்கான லைட்டிங் யோசித்து அமைத்துக் காட்டுவதே நாம் அறிந்த சினிமா. ஆபாசம் குரூரம் ஆகியவற்றையே கூட அதற்கான அழகுடன் காட்டுவார்கள். உண்மையில் லைட் போட்டாலே யதார்த்தம் அடிபட்டுவிடும். ஜன்னலில் ஒரு பழைய திரையை போட்டு அதன்மேல் லைட் விழும்படிச் செய்தாலே அழகு உருவாகிவிடும். சினிமா தெரிந்தவர்களுக்கு தெரியும். சினிமாவில் அழகு இல்லாமல் எடுப்பதுதான் உண்மையான முயற்சி தேவைப்படும் செயல்
’அழகே’ இல்லாமல் அப்பட்டமாக எடுக்கப்பட்டதுபோல் இருப்பதுதான் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சினிமாவின் முக்கியத்துவம். காமிரா நேரடியாக வாழ்க்கையை காட்டியதுபோல் இருக்கிறது. அதுவும் சலிப்பூட்டக்கூடிய அன்றாடத்தைக் காட்டி, சர்வசாதாரணமாக ஆகிவிட்ட அழகில்லாத தன்மையை காட்டுவது முக்கியமானது.
கொடூரம், இருட்டு என்றெல்லாம் காட்டுவதும் ஒருவகை ரொமாண்டிசிசம்தான். அதை நெகட்டிவ் ரொமாண்டிசிசம் எனலாம். கிம் கி டுக் இரண்டு வகையான ரொமாண்டிசிசத்தைத்தான் எடுப்பார். ஆனால் அது ஒரு செயற்கையான வாழ்க்கை. நம் வாழ்க்கை என்பது சலிப்பூட்டக்கூடிய, சர்வதாசாதாரணமான யதார்த்தம். அதை எடுப்பதற்கு அதற்குரிய ஏஸ்தெடிக்ஸ் வேண்டும். அதைத் தேடி கண்டடைந்திருக்கிறார் வசந்த்.
உதாரணமாக சரஸ்வதி வாழும் அந்த வீடு. இடுங்கலான ஒண்டுக்குடித்தனம். அந்த மாதிரி வீடுகளில் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். அதைப்போன்ற வீடுகள்தான் சென்னையில் 90 சதவீதம். இடுங்கல் நெரிசல்தான் அவற்றின் இயல்பு. அங்குள்ள மனிதர்கள் அங்கே வாழ்ந்து வாழ்ந்து அதற்குப் பழகியிருக்கிறார்கள். அங்கே மகிழ்ச்சியாகவும்கூட இருக்கிறார்கள். அவர்களின் மனசுகள் அப்படி ஆகியிருக்கின்றன
ஆனால் அப்படிப்பட்ட வீடுகள் எந்த சினிமாவிலாவது வந்திருக்கின்றனவா? மெயின்ஸ்டிரீம் சினிமாவுக்காகச் செட் போட்டு எடுப்பார்கள். ஆகவே குடிசைகள்கூட அகலமாக இருக்கும். ஒண்டுக்குடித்தன வீடு பெரிய கூடமாக இருக்கும். இதே வாழ்க்கையைக் காட்டிய விசுவின் படங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அவள் ஒரு தொடர்கதை முதல் இன்றைக்கு வரும் டிவி சீரியல் வரை வீடுகள் அப்படித்தான் இருக்கும்.
அப்படி இருந்தால்தான் வெவ்வேறு கோணங்களில் ஷாட் கம்போஸ் பண்ண முடியும். ஒரு காமிரா டீம் வேலை செய்ய முடியும். ஆகவே அதை காட்டுகிறார்கள். உண்மையான வாழ்க்கையை இன்றைக்கும் சினிமாவில் காட்ட முடியாது. கமர்ஷியல் சினிமாவில் நாம் அதை விரும்புவதுமில்லை.
சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும் அவ்வகையில் ஒரு முக்கியமான தொடக்கம். இன்று அதன் முக்கியத்துவத்தை நாம் அறியவில்லை. நாம் இப்போதும் நமது கலைப்படங்கள் அமெரிக்க ஐரோப்பிய சினிமாக்கள் போல இருக்கவேண்டுமென நினைக்கிறோம். இந்த சினிமாதான் உண்மையில் நமது சினிமா. இது ஒரு ஸ்கேலை உருவாக்குகிறது. யதார்த்தம் என்றால் என்ன என்று கண்டடைய முயல்கிறது. அதன் வாய்ப்புகளையும் சிக்கல்களையும் நேர்மையாக எதிர்கொள்கிறது இங்கிருந்து தொடங்கி மேலும் மேலும் ஆழமான வாழ்க்கைச் சிக்கல்களுக்குள் செல்லமுடியும்.
நம்முடைய மாற்று சினிமா என்பது மெயின்ஸ்ட்ரீம் சினிமாவின் நிர்ப்பந்தங்கள் சிலவற்றில் இருந்து விலகிச் செல்வதாகவே இருக்கமுடியும். கதைநாயகனை மையமாக்கியே கதைச் சொல்வது, பரபரவென ஓடும் நிகழ்வுகளால் கதை சொல்வது, பலவிதமான கோணங்களில் காட்சிகளை அமைக்கும் திரைமொழி ஆகிய மூன்றும் வணிகசினிமாவுக்கு உரியவை. அவை இல்லாமல் மெயின்ஸ்ட்ரீம் சினிமா இல்லை. அவற்றை தவிர்க்காமல் மாற்றுசினிமா எடுக்கமுடியாது.
இன்றைக்கு சிவரஞ்சனி பற்றி வந்துகொண்டிருக்கும் ஏராளமான விமர்சனங்களில் பாதிக்குமேல் மெயின்ஸ்ட்ரீம் சினிமாவின் ஸ்கேல்களை வைத்து இதை மதிப்பிடுவதுதான். கதையில் வேகம் இல்லை, அடுத்தது என்ன என்ற பரபரப்பு இல்லை, காட்சிக்கோணங்களில் புதுமை இல்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த வழக்கமான டெம்ப்ளேட்களுக்கு வெளியே நின்று நம் வாழ்க்கையைக் காட்டுவதற்கான முயற்சி இது என அவர்களுக்கு தெரியவில்லை.
மாற்றுச் சினிமா பேசுபவர்களிடமும் அந்தத் தெளிவு இல்லை. அதற்கான காரணமும் உண்டு. சென்ற இருபதாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக உலகசினிமாச் சூழலில் மெயின்ஸ்டிரீம் சினிமா கலைப்படம் என்ற வேறுபாடு அழிந்துவிட்டது. கலைப்படம் என்பது ரசிகனை கவர முயற்சிசெய்யாமல் உண்மையைச் சொல்வது. அதுதான் அதன் டெஃபனிஷன். அந்தவகையான சினிமாக்கள் ஏராளமாகவே வந்தன.
ஆனால் இன்றைய உலகத்தில் டிவிக்குப் பிறகு விஷுவல் மீடியா மிகப்பிரம்மாண்டமாகப் பெருகியிருக்கிறது. இப்போது இன்னும் பிரம்மாண்டமாக ஆகிவிட்டது. ஆகவே பார்வையாளர்களைக் கவர பெரிய போட்டி வந்துவிட்டது. கலைச்சினிமாகூட ரசிகனை கவரவேண்டும், அவனை உட்கார வைக்கவேண்டும். அதற்கு அது விசித்திரமான காட்சிக்கோணங்கள், ஒளியமைப்புகள், வேகமாக ஓடும் whatnext திரைக்கதை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது.
ஆகவே இன்றைக்கு கலைச்சினிமாவே இல்லை. உதாரணம் கிம் கி டுக். அவர் பார்வையாளனை ரசிகனாக பார்ப்பவர். அவனை அதிரடிக்க வைப்பவர். அது சினிமாக்கலையின் வழிமுறை அல்ல. அது ஒருவகையான தெருமுனை வித்தை.
இந்தவகையான சினிமாக்களே இன்றைக்கு எல்லா இளைஞர்களாலும் பார்க்கப்படுகின்றன. இளம் சினிமாவிமர்சகர்கள் கூட இவற்றையே பார்த்திருக்கிறார்கள். சத்யஜித் ரே அல்லது அடூர் கோபாலகிருஷ்ணன் படங்களைப் பற்றிப் பேசுபவர் இல்லை. ஆகவேதான் கலைப்படத்திலும் நாம் மெயின்ஸ்ட்ரீம் சினிமாவின் உத்திகளை எதிர்பார்க்கிறோம். [நான் கமர்ஷியல் சினிமா என்று சொல்ல மாட்டேன். எல்லா சினிமாவும் கமர்ஷியல்தான்]
ஆனால் நாம் நம் வாழ்க்கையைச் சொல்லவேண்டியிருக்கிறது. அப்பட்டமாகவும் நேர்மையாகவும் நம்மைப்பற்றிப் பேசவேண்டிய தேவை உண்டு. அதற்கான அழகியல் என்பது நிதானமானதும் அழகுபடுத்திக்கொள்ளாதுமான விஷுவல்களால்தான் இருக்கும். அந்த முயற்சியாகவே நான் சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும் படத்தைப் பார்க்கிறேன். அந்த சினிமாமொழியை நாம் மேலெடுத்தால் நம்மால் நம்மை உலகுக்குக் காட்டமுடியும். இல்லாவிட்டால் உலகம் நமக்கு காட்டுவதை நாம் திரும்ப எடுத்து அவர்களிடம் காட்டிக்கொண்டிருப்போம்.
சிவரஞ்சனியும்… படத்திலுள்ள கண்டெண்ட் மேல் எனக்கு சிறு விமர்சனம் உண்டு. அந்த படங்கள் மூன்றுமே கொஞ்சம் முற்போக்குப் பெண்ணியமாக முடிக்கப்பட்டுள்ளன. அது ஆசிரியரின் குரல். வசந்தின் சினிமாமொழியில் உள்ள நுட்பமும் அடக்கமும் திரைக்கதையில் இல்லை. சரஸ்வதி கதையில் கணவனிடம் அவள் ம் என்று சொல்கிறாள். அந்த ஒரு உருமல் அவனை பிரித்துவிடுகிறது. அந்த சத்தம் எப்படி வந்தது, என்ன செய்தது என்பதுதான் கதை. தேவகிச்சித்தியின் டைரி கதையில் அந்த டைரியில் என்ன இருந்தது என வாசகன்கூட கேட்கக்கூடாது என்பதுதான் கதை.
ஆனால் சினிமாவில் அவை இரண்டு புள்ளிகளும் கடந்து செல்லப்படுகின்றன. சரஸ்வதியின் பிந்தைய வாழ்க்கை சேர்க்கப்பட்டுள்ளது. தேவகியின் கதையில் அவள் அந்த டைரியில் இன்னொசெண்டான சிலவற்றையே எழுதினாள் என்று இயக்குநர் சொல்கிறார். அவளுடைய வாழ்க்கையும் மேலும் சொல்லப்படுகிறது.
இந்த அம்சங்களால்தான் இன்று இந்த சினிமா பெண்களாலும் பல விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது என்பதும் உண்மையே. தமிழில் இப்போது இந்தப் பார்வையை முன்வைக்கவேண்டும் என்பதும் உண்மை. அதற்கான தேவை உண்டு. ஆனால் இலக்கியம்போலவே சினிமாவுக்கும் சப்டெக்ஸ்ட் முக்கியமானது என்பது என் கருத்து.
நான் இந்த சினிமாவிலே காண்பது இதிலுள்ள அசலான திரைமொழி. நமக்கு நாம் எப்படி சினிமா எடுக்கவேண்டும் என்று காட்டுகிறது அது.அதன் இயல்பான ஃப்ளோவும் காட்சிகளின் திறமையான எடிட்டிங் வழியாக உருவாக்கப்படும் சரியான யூனிட்டியும் முக்கியமானவை.
வசந்த் ஒரு முன்னோடியாக இருக்கிறார். நாம் இந்தப் பாதையில் இனிமேல் முன்னால் செல்வோமா என்பதுதான் கேள்வி
எஸ். ராம்குமார்
சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும்- கடிதம்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் விகடன்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் காமதேனு
December 15, 2021
ஜீவா நினைவாக ஒரு நாள்
ஈரோடுக்குச் செல்வதும் சென்னைக்குச் செல்வதும் ஒருவகை அன்றாடச்செயல்பாடுகள் போல ஆகிவிட்டிருக்கின்றன. சென்ற டிசம்பர் 11 அன்று வழக்கமான கோவை ரயிலில் வழக்கமான பெட்டியில் வீட்டில் இருப்பதுபோலவே உணர்ந்தேன். மறுநாள் வி.ஜீவானந்தம் அவர்களின் நினைவு விழா.
நான் செல்லும் வழியெல்லாம் ஜீவா பற்றிய நினைவுகளை தொகுத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் ஒன்று கவனித்திருக்கிறேன், எழுதும்போது மட்டுமே நான் குவிய முடிகிறது, சீராக நினைவுகூரவும் முடிகிறது. நினைக்கத் தொடங்கினால் சிதறிச்சிதறிச் செல்கின்றன எண்ணங்கள்.
ஈரோட்டில் அன்று எனக்கு அணுக்கமாக இருந்தவர்களில் ஒருவரான நண்பர் ரிஷ்யசிருங்கர் இன்றில்லை. அண்மையில் இதயநோயால் மரணமடைந்தார். அவருடைய குடும்பம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அந்நினைவுக்குச் சென்று வேறெங்கோ தவறி நெடுந்தொலைவில் தன்னுணர்வு கொண்டேன்.
காலையில் ரயில்நிலையத்தில் நண்பர் பிரகாஷ் என்னை வரவேற்று அறைக்கு அழைத்துச் சென்றார். சென்னை டாக்டர் தங்கவேல் அறைக்கு வந்தார். நான் அறைக்குச் சென்று இன்னொரு சிறு தூக்கம் போட்டேன். நண்பர்கள் அனைவரும் காஞ்சிகோயிலில் சென்னை செந்திலின் பண்ணைவீட்டில் தங்கி உரையாடி பின்னிரவில்தான் தூங்கியிருந்தனர். அவர்கள் கிளம்பி வர எட்டரை மணி ஆகிவிட்டது.
காலை பத்துமணிக்கு நிகழ்ச்சி. நான் மாலைநிகழ்ச்சி என ஏனோ நினைத்துக்கொண்டிருந்தேன். மாலையில் வேறு சந்திப்புகள் இருந்தன. குளித்து முடித்து கிளம்புவது வரைக்கும்கூட ஜீவா பற்றிய நினைவுகளை கோவையாக அமைக்க முடியவில்லை. குளித்துவிட்டு வந்தபோது ஜீவா குளியலுக்குப் பின் சற்று அமிர்தாஞ்சனத்தை ஒரு நறுமணப்பொருள்போல நாசியிலும் மோவாயிலும் போட்டுக்கொள்வார் என்பதை நினைவுகூர்ந்தேன். தொட்டுத் தொட்டு நினைவுகள் எழுந்தன.
எனக்கு ஜீவா அறிமுகமானவர் என்றாலும் அவர் என்னை ஓர் எழுத்தாளராகக் கவனித்தது சுபமங்களாவில் ஜகன்மித்யை வெளிவந்ததும்தான். என்னை தேடிவந்து தொலைபேசி நிலையத்தில் சந்தித்தார். முன்பு சூழியல் ஆர்வம் கொண்ட இளைஞர்களில் ஒருவராக மெல்லிய அறிமுகம் இருந்த என்னை அவர் புதிதாகக் கண்டடைந்தார் என நினைக்கிறேன். அல்லது முன்பு கண்டது நினைவில்லாமலும் இருந்திருக்கலாம்.
ஏனென்றால் நான் அதற்கு முன் என்னை எழுத்தாளனாக நினைத்துக் கொள்ளவில்லை. என்னை சூழியல்- சமூகச் செயல்பாட்டாளனாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஒரு அண்ணா ஹசாரே, பாபா ஆம்தே,சுந்தர்லால் பகுகுணா ஆகிவிடலாமென கனவுகண்டுகொண்டிருந்தேன். சுந்தர ராமசாமியுடனான நெருக்கம் அதை உடைத்து என்னை நான் ஓர் எழுத்தாளனாக கண்டடையச் செய்தது.
அத்துடன் என் அப்பா அம்மாவின் சாவு உருவாக்கிய வெறுமையை இலக்கியம் மட்டுமே நிகர்செய்ய முடியுமென்றும் கண்டுகொண்டிருந்தேன். படுகை, போதி, மாடன்மோட்சம்,திசைகளின் நடுவே ஆகிய கதைகள் வெளியாகி எனக்கு ஓர் இலக்கிய இடத்தையும் உருவாக்கியிருந்தன.
செயல்பாட்டாளனாக என்னை எண்ணிக்கொள்வதை விட்டுவிட்டிருந்தேன் என்பது மட்டுமல்ல அதெல்லாம் வெட்டிவேலை என்றும் அந்த அகவைக்குரிய முதிர்ச்சியின்மையுடன் எண்ணிக்கொண்டும் இருந்தேன். இலக்கியவாதியின் பரிணாமத்தில் அது ஒரு கட்டம். எழுதுவது தவிர வேறு அனைத்துமே பயனற்றவை என்று நினைக்கும் ஒரு நிலை.
அந்த படிநிலைகளை இன்று எண்ணும்போது புன்னகைதான் வருகிறது. முதிரா இளமையில் நம்மை நாம் ஓர் இலட்சியவாதி, உலகைக் காக்கும் பொறுப்பு கொண்டவர், உருவாகிவரும் வரலாற்று ஆளுமை என எண்ணிக்கொள்கிறோம். அப்போது ஒருவகை இலட்சியவாத வெறி உருவாகிறது. அதன்பின் அந்த நம்பிக்கை இல்லாமலாகி அந்த இடத்தில் இளம் அறிவுஜீவிக்குரிய உருவாகும் அவநம்பிக்கையும் ஏளனமும் உருவாகிறது.
இலக்கியவாதியின் இருள் என்பது ஆணவம். அது இல்லாமல் எழுதமுடியாது. ஆனால் அந்த இருளால் நம் பார்வை சிறைப்படாமல் இருக்கவேண்டுமென்றால் இலக்கியத்துக்கு அப்பால் ஒரு பிடிமானமும் தேவை. ஒருவகை கயிற்றுமேல் நடை அது.
அதாவது, நாம் ’உப்பக்கம்’ காணும் திறன் கொண்டவர்கள், இலட்சியவாதிகளும் செயல்பாட்டாளர்களும் ஒருவகை அப்பாவிகள் என்னும் எண்ணம் நமக்கு எழுகிறது. நாம் சில நூல்களை வாசித்துவிட்டோம், சிலவற்றை எழுதிவிட்டோம் என்பதனாலேயே அனைத்தையும் அறிந்து மதிப்பிடும் தகுதிகொண்டவர் என எண்ணிக்கொள்கிறோம். அந்த ஆணவம் இல்லாமல் எழுதமுடியாது.ஆனால் அங்கேயே நின்றுவிடும் எழுத்தாளன் மிகச்சிறிய படைப்பாளி.
அனைத்து மானு ட இருள்களையும், அத்தனை வரலாற்றுச் சிடுக்குகளையும் உணர்ந்தபின் அந்த இலட்சியவாதத்தின் பெறுமதியை உணர்ந்தவனே மெய்யான படைப்பாளி. அது புறத்தை நோக்கி, அகத்தை பரிசீலித்து சென்றடையவேண்டிய ஓர் நுண்மையான இடம். ஒரு சமநிலைப்புள்ளி.
என் கசப்பு, எள்ளல், எதிர்மறை நிலை ஆகியவற்றில் இருந்து ஜீவா வந்து மீட்டார். என்னை மீண்டும் சூழியல் செயல்பாடுகளின் உலகுக்கு கொண்டுவந்தார். ஆனால் இம்முறை துண்டுப்பிரசுரங்களை எழுதுவது தவிர எதிலும் நான் பங்கெடுக்கவில்லை. ஒன்றிரண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தேன். காந்தி பற்றி சித்தார்த்தா பள்ளியில் நிகழ்ந்த ஓர் உள்ளரங்க விவாதத்தில் பேசினேன். அக்கட்டுரை ஓர் இதழில் வெளியானது. மற்றபடி அவருக்கு நெருக்கமானவனாக இருந்தேன் என்று மட்டுமே சொல்லமுடியும். நான் என் இலக்குகளையும் என் எல்லைகளையும் கண்டுகொண்டிருந்தேன்.
நான் பலமுறை சென்று அமர்ந்து பேசிய ‘நலந்தா மருத்துவமனை’ வளாகம். [நாளந்தா அல்ல. நலம் தா என்பதன் சுருக்கம்] அதை புதுப்பித்து ஜீவா நினைவிடமாக ஆக்கியிருந்தனர். அங்கே சமூகப்பணி, சூழியல்பணிகளுக்காக நிகழ்ச்சிகளை நடத்தலாம். பணியாளர்கள் வந்தால் தங்கிக் கொள்ளலாம். நூலகம் மற்றும் நிகழ்வுக்கூடம் உண்டு. ஜீவா பேரில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் அந்த இடம் இருக்கும்.
ஏற்கனவே முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும் சமூகநீதிச் செயல்பாட்டாளருமான சந்துரு வந்திருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தேன். ஜெய்பீம் பற்றிய பேச்சு வந்தது. ஜெய்பீம் சினிமா என்னும் ஊடகத்திற்குரிய மிகை கொண்டது. குறிப்பாக அது நீதிமன்றம் பற்றி அளிக்கும் சித்திரம் மிகையானது. சினிமாவில் நீதி ஓரிரு மாதங்களில் கிடைத்துவிட்டது. மெய்வாழ்க்கையில் நீதிமன்றத்தில் 14 ஆண்டுகள் வழக்கு நடைபெற்றபின்னரே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.
சந்துரு அவருடைய அனுபவம் ஒன்றைச் சொன்னார். ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஜெய்பீம் பார்த்துவிட்டு நடிகர் சூரியாவின் படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டனர். அந்த வழக்கறிஞரைப் பார்த்தால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என அவர்கள் நம்பினர். ஆட்டோ ஓட்டுநர் அவர்களிடம் பேச்சுக்கொடுத்து, அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, சந்துரு இல்லத்துக்கு கூட்டிவந்துவிட்டார்.
சந்துருவைக் கண்டு அவர்களுக்கு அவநம்பிக்கை. அவர்கள் நம்பி வந்த வழக்கறிஞர் வேறு. ஜெய்பீம் படத்தின் உண்மையான வழக்கறிஞர் இவர்தான் என நம்பவைக்க நெடுநேரம் ஆகியது. அதன்பின் அவர்கள் தங்கள் பிரச்சினையைச் சொன்னார்கள். காவலர்கள் குடும்பத்தலைவரை கைதுசெய்து கொண்டுசென்றுவிட்டனர். அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர்களுக்கு ஆந்திராவின் நீதிமன்ற எல்லை வேறு என்றும், அங்கே நல்ல வழக்கறிஞர்கள் பலர் உள்ளனர் என்றும் சொல்லி புரியவைக்க பெரும் போராட்டம் தேவைப்பட்டது.
அத்துடன் அவர்களுக்கு திரும்பிச் செல்ல பணமும் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் அந்த சினிமாக் கதைநாயகனை தெய்வம்போல நம்பி, அவரிடம் வந்தால் எல்லாமே சரியாகிவிடும் என எண்ணி, கிளம்பியிருந்தனர். அதைச் சொல்லிவிட்டு “இங்கே இன்னும்கூட தனிமனிதர்களின் சாகசம், கதைநாயகத்தன்மை ஆகியவற்றையே நம்புகிறார்கள். தெய்வநம்பிக்கையின் இன்னொரு வடிவம். கொள்கைகள், அமைப்புகள் ஆகியவற்றை மக்கள் நம்புவதில்லை” என்றார் சந்துரு.
காந்தியப் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் , பழங்குடிகளுக்காகச் செயல்படும் வி.பி.குணசேகரன் அருஞ்சொல் இதழாசிரியர் சமஸ், பச்சைத்தமிழகம் நிறுவனர் உதயகுமார், பாடகர் கிருஷ்ணா, எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன், காந்திய ஆய்வாளர் சித்ரா பாலசுப்ரமணியம் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். குக்கூ -தன்னறம் நண்பர்கள்தான் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சிவராஜ், சிவகுருநாதன், அய்யலு குமாரன், பொன்மணி, மைவிழிச்செல்வி என எல்லாமே தெரிந்த முகங்கள்.
சற்றுநேரத்தில் மேதா பட்கர் வந்தார். அவரை எதிர்கொள்ள நானும் மற்றவர்களுடன் சென்றேன். அவர் சட்டென்று என்னை அடையாளம் கண்டுகொண்டு “நாம் பார்த்திருக்கிறோம்” என்றார். “ஆமாம், புனேயில்” என்றேன். ஆம் என்றார். அது முப்பதாண்டுகளுக்கு முன்பு. அன்று நான் எதிலும் எவ்வகையிலும் பங்கேற்க முடியாத குழம்பிய, பயனற்ற முதிரா இளைஞன். அவருக்கு நினைவிருப்பது வியப்புதான். அந்நாளை மகிழ்ச்சியாக ஆக்கியது அது.
ஜீவா நினைவிடத்தை மேதாபட்கர் திறந்துவைத்தார். ஜீவா சிலையை நான் திறந்து வைத்தேன். சந்துரு ஜீவா நினைவு சந்திப்புக் கூடத்தை திறந்துவைத்தார். அழகிய கூடம். அதில் ஜீவாவின் வெவ்வேறு புகைப்படங்கள்.
பதினொரு மணிக்கு சித்தார்த்தா பள்ளி வளாகத்தில் பொதுநிகழ்வு. ஜீவா குறித்த நினைவுகள் மற்றும் அவருடைய இலட்சியங்கள் பற்றி மேதா பட்கர், சந்துரு, வி.பி.குணசேகரன், சமஸ், உதயகுமார் ஆகியோர் பேசினர். ஜீவா நினைவுமலர் வெளியிடப்பட்டது. ஜீவா அறக்கட்டளையின் இலக்குகள் திட்டங்கள் பற்றி ஜீவாவின் தங்கையும் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான ஜெயபாரதி பேசினார்.
ஜீவா நினைவு பசுமைவிருதுகள் பாடகர் கிருஷ்ணா, சமஸ், விஷ்ணுப்ரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. விருதுகளை மேதா பட்கர் வழங்கினார். விழாவில் நான் இருபது நிமிடம் ஜீவா நினைவு, அவருடைய சிந்தனைகள் ஆகியவற்றைப் பேசினேன். அதன்பின் மேதா பட்கருடன் ஓரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழா முடிந்து வழக்கம்போல இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வாசகர்களுடன் உரையாடி, நூல்களில் கையெழுத்திட்டு அளித்து அங்கே நின்றிருந்தேன்.சிவராஜ் அறிமுகம் செய்துவைத்த தாமரை மிக இனிய பாடல் ஒன்றை எனக்காக பாடினார். இயல்பாகவே சுருதியும் பாவமும் இணைந்த அழகான குரல்.
நினைவுகளால் நிறைந்த இனிய நாள். ஜீவா இன்றில்லை. அறக்கட்டளை என்பது அவருடைய ஆளுமையே ஒரு நிறுவனமாக ஆனதுபோலத்தான். அது நீடித்து வளரவேண்டும்.
ஜெய்ராம் ரமேஷ் – பாலசுப்ரமணியம் முத்துசாமி
2021 ஜனவரி இறுதியில், நாடெங்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் இயக்கம் மூன்று நாட்கள் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்த இந்த இயக்கம், 17 கோடிக் குழந்தைகளுக்கு மூன்று நாட்களில், போலியோ நோய்த்தடுப்புச் சொட்டு மருந்தை கொடுத்துச் சாதனை செய்தது. 24 லட்சம் தன்னார்வலர்கள், 1.7 லட்சம் கண்காணிப்பாளர்கள், உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், ரோட்டரி மற்றும் தன்னார்வல நிறுவனங்கள் பங்கு பெற்ற மகத்தான நிகழ்வு.
இது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் மிகப் பெரும் சமூக இயக்கமாக நடைபெற்று வருகிறது. 1980 களில், உலகின் 70% போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் இருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டில் இந்தியா காலடி எடுத்து வைக்க வேண்டுமானால், ஆரோக்கியமான குழந்தைகள் இருப்பது முக்கியம் என்பதை அரசு உணர்ந்தது.
டிப்தீரியா, கக்குவான், டி.பி, போலியோ, மீஸில்ஸ், டெட்டனஸ் என அன்று இந்திய மக்களைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருந்த நோய்களுக்கெதிரான தடுப்பூசிகளைப் பெருமளவில், இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாகப் போட வேண்டும் என்னும் கொள்கை முடிவை அரசு எடுத்தது.
அன்று, இந்தியாவில், மிகச் சில தடுப்பூசிகளே உற்பத்தி செய்யப்பட்டன. பெரும்பாலான தடுப்பூசிகள், வெளிநாட்டில் இருந்தது அதிகச் செலவில் இறக்குமதி செய்யப்பட்டன. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டுமெனில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் தேவைப்படும். இது அந்நியச் செலாவணியைக் கோரும் செயல் என உணர்ந்து, இந்தியாவிலேயே தடுப்பூசிகளைத் தயாரித்துக் கொள்ள அரசு முடிவெடுத்தது.
ராஜீவ் காந்தி அரசு, சாம் பிட்ரோடா என்னும் தொழில்நுட்ப வல்லுநர் தலைமையில், தொழில் நுட்ப இயக்கம் என்னும் ஒரு புதிய அணுகுமுறையை முன்னெடுத்தது. குடிநீர், தடுப்பூசி, எண்ணெய் வித்துக்கள், தொலைத்தொடர்பு, கல்வி என்னும் துறைகளில் பெரும்பாய்ச்சலை நிகழ்த்த வேண்டும் என்னும் நோக்கத்துடன், திட்டங்கள் வகுக்கப்பட்டன.
தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நோக்கத்தோடு ரஷ்யா, ஃப்ரான்ஸ் நாடுகளின் உதவியோடு முதலில் போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசிகளைத் தயாரிக்கத் தொடங்கியது அரசு. உயிர்த் தொழில்நுட்பத் துறை என்னும் துறை புதிதாக உருவாக்கப்பட்டு, பேராசிரியர் எம்.ஜி.கே மேனன் தலைமையில் திட்டங்கள் உருவாகத் தொடங்கின.
இதில், தடுப்பூசித் திட்டம், குறிப்பாக போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தை அரசின் தரப்பில் இருந்து உருவாக்கி, அதை மாநில அரசுகளின் துணையுடன் நிர்வகிக்கும் பொதுநலத்திட்டத்தை முன்னெடுக்க உதவியாக இருந்தவர் ஜெய்ராம் ரமேஷ். அனைவருக்குமான இலவசத்தடுப்பூசி இயக்கம், பல அரசுகளைத்தாண்டி, இந்தியாவின் மிக வெற்றிகரமான பொதுநலத்துட்டங்களுள் ஒன்றாக மாறியது. 2013 ஆம் ஆண்டு, இந்தியாவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டது.
ஜெய்ராம் ரமேஷ் 1954 ஆம் ஆண்டு சிக்மகளூரில் பிறந்தவர். தந்தை ரமேஷ் மும்பை ஐஐடியில் கட்டுமானத் துறைப் பேராசிரியராக இருந்தார். சிறு வயதில், ஜவஹர்லால் நேருவின் அறிவியல் அணுகுமுறையின் பால் ஈர்க்கப்பட்டவர். பால் சாமுவேல்சன், கன்னர் மிர்டால் போன்ற பொருளாதார அறிஞர்களின் புத்தகங்களை இளம் வயதிலேயே படித்திருந்தார். அவரின் உலகப் பார்வையை அவைப் பெருமளவில் பாதித்தன. மும்பை ஐஐடியில் இயந்திரவியல் படித்தவர், மேற்படிப்புக்காக, தன் துறையை விடுத்து, பொதுநலத் திட்டம் மற்றும் மேலாண்மைத் துறையைத் (Public Policy and Public Management) தேர்ந்தெடுத்து, அமெரிக்காவின் கார்னகி மெல்லான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதன் பின்னர், முனைவர் பட்டம் படிக்கும் நோக்கத்தில், மாசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். குடும்ப நெருக்கடி காரணமாக, படிப்பைத் தொடர முடியாமல், இந்தியா திரும்பினார்.
இந்திய அரசாங்கத்தில் பொதுநலத் திட்டங்களை உருவாக்கும் பணியில் 1979 ஆம் ஆண்டு சேர்ந்து தொழில்துறை, சக்தி, திட்டக்குழு என பல்வேறு துறைகளில் பணிபுரிந்தார். சாம் பிட்ரோடாவின் தொழில்நுட்ப இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார். வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில், பிரதமரின் விசேச அலுவலராக (Officer on Special Duty) பணி புரிந்தார்.
1991 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர், பி.வி.நரசிம்மராவின் அலுவலத்திலும், விசேச அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடிவெடுத்த நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கினார். ஆனால், முக்கியமான தொழில் துறையைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள முடிவெடுத்தார். ஜெய்ராம் ரமேஷை, புதிய தொழில்கொள்கையைப் பற்றிய ஒரு திட்டக் குறிப்பை எழுதச் சொன்னார்.
(1988 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணிச் சிக்கல் பெரிதாகத் தொடங்கிய போதே, நாட்டின் திட்ட உருவாக்குநர்கள், மற்றும் பொருளியல் அறிஞர்களிடையே, பொருளாதாரக் கொள்கைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது பற்றிய ஒருமித்த கருத்துகள் உருவாகத் தொடங்கியிருந்தன. இடது சாரித் தரப்பில் இருந்தது இதற்கான எதிர்ப்பும் இருந்தது. வி.பி.சிங் காலத்திலேயே, பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்வைக்கும் ஒரு திட்ட வரைவை செயலர் மாண்டெக் சிங் அலுவாலியா உருவாக்கியிருந்தார். அது, அதிகார வளாகங்களில், ‘எம் டாக்குமெண்ட்’, என ரகசியமாக அழைக்கப்பட்டது)
ஜெய்ராம் ரமேஷ், திட்டக் குழுவின் இன்னொரு உறுப்பினரான ராகேஷ் மோகனுடன் இணைந்து, ஒரு புதிய தொழிற் கொள்கைத் திட்ட வரைவை எழுதி நரசிம்ம ராவிடம் சமர்ப்பித்தார். அது இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வழியே, நரசிம்மராவ் அரசின் பட்ஜெட் வெளியாகும் அன்று காலை கசிய விடப்பட்டது.
பட்ஜெட் பாராளுமன்றத்தில் பாசாகி விட்டாலும், கட்சியில் பெரும்பூகம்பம் வெடித்தது. நரசிம்மராவின் அரசியல் எதிரிகள், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் காங்கிரஸ் கட்சியில் சோசலிசக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளன என, பல்வேறு வகைகளில் முட்டுக் கட்டைகள் போட்டார்கள். அரசின் திட்டங்கள் மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என நரசிம்மராவ், சிதம்பரம் இருவரைத் தவிர, மந்திரிசபையில் மற்றவர்களால் முடிவெடுக்கப்பட்டது.
அந்தப் பொறுப்பு ஜெய்ராம் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி, படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கனவு என மானே தேனெ பொன்மானே எல்லாம் போட்டு, முதலில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைவையே சிற்சில மேலோட்டமான மாற்றங்களுடன் மீண்டும் மந்திரிசபையில் சமர்ப்பித்தார். இம்முறை அது பலத்த கரகோஷத்துக்கிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதற்குப் பிறகு, அரசின் பல்வேறு துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். 1996-98 ஐக்கிய முன்ணணியின் நிதியமைச்சரான ப.சிதம்பரத்தின் ஆலோகராகப் பணியாற்றினார்
ஜெய்ராம் ரமேஷ் என்னும் அரசியல்வாதி /அமைச்சர்:
2004 பாராளுமன்றத் தேர்தல்களில், காங்கிரசின் தேர்தல் திட்டக்குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தார். தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், தேசிய ஆலோசனைக் குழுவின் (National Advisory Council) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்தத் தேசிய ஆலோசனைக் குழு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்தை வகுத்தது. அதன் முக்கியக் குறிக்கோள்கள், பெருமளவில் மக்கள் நலத்திட்டங்களையும் உழவர்கள் மேம்பாட்டுக்கும் புதிய திட்டங்களையும் வகுப்பதாகும்.
இதன் உறுப்பினர்களாக, சிறந்த அரசு நிர்வாகிகள் (என்.சி.சக்சேனா), பொருளாதார அறிஞர்கள் (ஜான் ட்ரெஸ்), மக்கள் நல தன்னார்வலத் தலைவர்கள் (அருணா ராய்), தொழிலதிபர்கள் (அனு ஆகா), வேளாண் அறிஞர்கள் (டாக்டர்.எம்.எஸ்.ஸ்வாமிநாதன்) சூழலியல் அறிஞர்கள் (மாதவ் காட்கில்) போன்ற பல துறைகளின் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன் தலைவரான சோனியா காந்தி, கேபினட் அந்தஸ்தைக் கொண்டிருந்தார். எனவே அமைச்சரவைக் குறிப்புகள் அனைத்தும் சோனியா காந்திக்கும் செல்லும் என்னும் அளவில், அவர் அரசு நிர்வாகத்திலும் இருப்பார் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமரிசித்தன. வழக்கமான அரசு ஆதரவு நிலையை எடுக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிக்கைகளும் இதைக் கடுமையாக விமரிசித்தன.
இந்தத் தேசிய ஆலோசனைக்குழு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மிக முக்கியமான மக்கள் நலச் சட்டங்களை, திட்டங்களை உருவாக்கின. அவற்றுள் முக்கியமானவை:
டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் தலைமையிலான, உழவர்களுக்கான தேசியக் குழுதகவலறியும் உரிமைச்சட்டம் ஜூலை 2005ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செப்டெம்பர் 2005வன உரிமைச் சட்டம் டிசம்பர் 2006கல்வியுரிமைச் சட்டம், ஆகஸ்ட் 2009உணவுப் பாதுகாப்புச் சட்டம், செப்டெம்பர் 2013அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான சரியான நஷ்ட ஈடு வழங்கும் சட்டம் 2013மனிதர்கள் மனிதக் கழிவை அகற்றுதல் தடைச் சட்டம் 2013இதில் ஸ்வாமிநாதன் கமிட்டி, உழவர்களுக்கான சரியான விலையைக் கொடுக்கும் ஒரு திட்ட வடிவைத் தயாரித்தது. ஆனால், இன்றுவரைஅது சரியாக நிறைவேற்றப்படவில்லை.
அதையடுத்து இயற்றப்பட்ட 7 சட்டங்கள், இது வரை இயற்றப்பட்ட சட்டங்களில் இருந்து அடிப்படையில் மாறுபட்டவை..அதுவரையில், மக்கள் நலச் சட்டங்கள், தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களாக கொண்டுவரப்பட்டன.. அதாவது, மக்களுக்குத் தேவை என்ன என்பதை அரசு உணர்ந்து, அதைப் பூர்த்தி செய்ய முற்படுவது.
ஆனால், 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டுவரப்பட்ட மேற்சொன்ன சட்டங்கள் அனைத்தும், மக்கள் உரிமைச் சட்டங்கள். இது ஒரு அடிப்படை மாற்றமாகும் (paradigm shift).
இதற்கு முன்னால் இருந்தவை திட்டங்கள்.. அரசு விரும்பினால் நிறைவேற்றலாம். விரும்பவில்லையெனில், யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மேற்சொன்ன மக்கள்நலத் திட்டங்கள், பயனாளிகளுக்கான உரிமைச்சட்டங்கள். சட்டப்படி பயனாளிகளுக்கான நிவாரணம் கிடைக்கவில்லையெனில், அவர்கள், நீதி மன்றத்தை நாடும் உரிமையை இச்சட்டங்கள் சாதாரண மனிதருக்கு வழங்குகின்றன.
’ஆனால், இவை உரிமைச் சட்டங்களாகத் தொடக்கத்திலேயே திட்டமிடப்படவில்லை. இன்று பின்னோக்கிப் பார்க்கையில், அப்படி ஒரு ஒருங்கமைவு (retrospective coherence) உருவாகி வந்துள்ளது தெரிகிறது’, என நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.
வழக்கமாக மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி முன்னுரிமை கொடுக்கப்பட்டால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். பொருளாதார வளர்ச்சியடைந்த பிறகே மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி கிடைக்கும் என்பது போன்ற கருத்துக்களை இந்தக் காலகட்டம் தவறு என நிரூபித்தது. 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7.7% வளர்ந்துள்ளது. இது இந்திய வரலாற்றில் இல்லாத ஒரு தசாப்த தொடர் வளர்ச்சி.
பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு என்ற போதும், இச்சட்டங்கள் அனைத்துமே, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டவை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்
உரிமைச் சட்டங்கள் என்னும் முறையை கொஞ்சம் விமரிசனப்பார்வையுடன் அணுகலாம்.. எடுத்துக்காட்டாக, சமூகத்தில், மக்களுக்கு வருடம் 100 நாள் திறனில்லா வேலையை (unskilled work), மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உரிமையாக வழங்குகிறது. இது கிடைக்கவில்லையெனில், வேலைவாய்ப்புக் கிடைக்காத ஒரு கிராமத்து மனிதர் கோர்ட்டுக்குப் போக முடியுமா என ஒரு விமரிசகர் கேள்வியெழுப்பலாம். நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால், அவர்கள் சார்பாக ஏதேனும் தன்னார்வல நிறுவனம் நீதிமன்றம் செல்ல முடியும். இந்த சாத்தியமே, அரசுகளை இந்தத் திட்டத்தைக் குறைந்த பட்ச நாட்களேனும் நடைமுறைப்படுத்தும் கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
அதே போல, தகவலறியும் சட்டம், குடிமக்கள் கேட்கும் தகவல்களை, குறித்த காலத்துக்குள் ஒவ்வொரு அரசு அலுலவரும் தந்தாக வேண்டும். இல்லையெனில், அதற்கு அபராதம் விதிக்கும் விதிகள் சட்டத்துள் உருவாக்கப்பட்டன.
இவ்விரண்டு சட்டங்களும், இந்தியச் சமூகத்தில் அரசியலில், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உலகின் மிக முக்கியமான மக்கள் நல மேம்பாட்டுத் திட்டமாகச் சொல்லப்படுகிறது. பன்னாட்டு நிதியமைப்புகள், இக்காலகட்டத்தில் வறுமை பெருமளவு குறைந்து, கிட்டத்தட்ட 14 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்தார்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
தகவலறியும் சட்டம், ஆளும்கட்சிக்குத் தீராத தலைவலியைத் தந்த ஒன்று. ஆளும் கட்சிகளின் ஊழல்களை வெளியில் கொணர இந்தச் சட்டங்கள் பெருமளவு உதவின.
2009 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. இந்த முறை, ஜெய்ராம் ரமேஷ், சுற்றுச் சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவரது செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள் என, செயல்தளத்தில், அவருக்கு எதிராக நின்று பல போராட்டங்களில் கலந்து கொண்ட சுற்றுச் சூழல் செயல்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன் அவர்களைக் கேட்டேன். ஜெய்ராமுக்கு வேண்டப்பட்ட விரோதியான அவரது மதிப்பீட்டை கீழே தருகிறேன்.
’சுற்றுச் சூழல் அமைச்சராக, ஜெய்ராம் ரமேஷ், மிகவும் எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். தனது கருத்துக்களில் உறுதியாக இருந்த அதே சமயத்தில், எதிர்த்தரப்பின் கருத்துக்களை, திறந்த மனதுடன் கேட்கக் கூடியவராக இருந்தார்.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில், இரண்டு முக்கியமான நடந்த இரண்டு முக்கியமான விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும்,
மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் மற்றும் கடற்கரை நிர்வாகம் தொடர்பான சட்டங்களை உருவாக்குகையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, பொதுமக்கள் குரல் கேட்பு நிகழ்வுகளை நடத்தினார். அது மக்களாட்சியின் மாண்பை மதித்த செயல்.அவரது காலத்தில் அவர் தொடங்கிய ஆய்வுகள் இந்தியச் சுற்றுச் சூழல் துறையில் மிக முக்கியமானவை. அதில், இந்தியக் கடற்கரையின் உயர் அலை எல்லை (Mapping of High Tide line) களை அளந்து குறித்தது மிக முக்கியமான செயலாகும். இன்று கடற்கரை ஆக்கிரமிப்புகளைக் கண்டறியப் பெரிதும் உதவுகிறதுஅதேபோல, செயற்கை கோள் துணையுடன், இந்தியாவின் நீர் நிலைகள், நீர்ப்பாசனப் பகுதிகள், அபாயகரமான தொழிற் பகுதிகள் முதலியவற்றை அளந்து குறிக்கும் ஆய்வுகளைச் செய்து முடித்தார். இந்த அடிப்படைத் தரவுகள், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும், திட்டமிடுதலுக்கும் மிக முக்கியமானவை
7-8 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், அவரைப் பற்றிய எனது மதிப்பீடு மிக எதிர்மறையாக இருந்திருக்கும். இன்றைய சூழலை வைத்துப் பார்க்கையில், அவர் ஒரு நல்ல சுற்றுச் சூழல் அமைச்சராக, சமூகத்தின் பல்வேறு எதிர்பார்ப்புகளையும் அணைத்துச் செல்பவராக இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது’, என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.
ஆனால், ‘ஜல்லிக்கட்டு’, க்கான தடையும் இவர் காலத்தில்தான் நடந்தது. இது போன்ற பிரச்சினைகளில், இவர் மேட்டிமை நோக்கு கொண்டவர் என்னும் விமர்சனங்கள் எழுந்தன.
வரலாற்றாசிரியர்:
நமது பத்திரிக்கைகளின் தரம் என்பது மிக மேலோட்டமான மேட்டிமை வர்க்கத்தால் நிரப்பப்பட்டது. அவர்களின், தங்கள் பார்வையில், சமூக அரசியல்த் தளங்களில் நிகழும் வம்புகளைப் பற்றி எழுதுவதே பெரும்பாலான மக்களைச் சென்றடைகின்றன. சமகாலத்தில் நடந்த, நடக்கும் அரசியல், பொருளாதார நிகழ்வுகளின் உண்மையான பின்ணணி, அலகு போன்றவை சாதாரண மனிதர்களைச் சென்றடைவதில்லை.
சமகால அரசியல், பொருளாதாரம், சமூக மாற்றம் பற்றிய ஆழமான எழுத்துக்களும், விவாதங்களும் மிகவும் சீரிய அறிவார்ந்த ஏடுகளில், செறிவான மொழியில் நிகழ்கின்றன. அவையும் சாமானிய மனிதர்களைச் சென்றடைவதில்லை.
இந்த இரண்டு தளங்களுக்குமிடையில் மிகப் பெரும் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை இட்டு நிரப்பும் எழுத்துக்கள் ஜெய்ராம் ரமேஷ் அவர்களுடையது.
அறிவார்ந்த அபுனைவு எழுத்துக்களை, சுவையான நடையில், பொருட்சேதமில்லாமல் எழுதுவது பரவலான வாசகத் தரப்பைச் சென்றடையும் சாத்தியங்கள் கொண்டது.
அந்த வரிசையில், ஒரு முக்கியமான வரலாற்று எழுத்தாளராக மிளிர்பவர் ஜெய்ராம் ரமேஷ். இதுவரை ஏழு நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் நான்கு, அவர் அரசாங்கத்தில் பணிபுரிந்த அனுபவத்தின் பின்ணணியில் எழுதப்பட்டவை.
எளிமையான நடையில், சரித்திரத் தரவுகளின் பின்ணணியில், அவர் உருவாக்கும் சித்திரங்கள் இதுவரை பொதுவெளியில் பத்திரிக்கைகளால் உருவாகியிருக்கும் பிம்பங்களை உடைக்கின்றன.
Intertwined lives – Indira and Haksar என்னும் புத்தகத்தில், வங்காளப் போரில் அரசுத் தரப்பு எப்படிச் செயல்பட்டது என்பதை அவர் தரவுகளுடன் விளக்குகையில், பத்திரிக்கைகள் கட்டிய பிம்பங்கள் சரிவதைக் காண முடியும்.
எடுத்துக்காட்டாக, இந்திரா காந்தி, (1971 ஏப்ரலில்) மானெக்ஷாவை பங்களா தேஷ் மீது உடனடியாகப் படையெடுத்துச் செல்ல அவசரப்படுத்தியதாகவும், டிசம்பருக்கு முன்னால் செல்ல முடியாது என அவர் மறுத்ததாகவும் ஒரு நாடோடிக்கதை உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜெய்ராம் தரவுகள் மூலமாக வைக்கும் சித்திரம் முற்றிலும் வேறாக இருக்கிறது.
Indira – a life in nature என்னும் புத்தகம், இந்தியாவில் சுற்றுச்சூழல் நிர்வாகம் உருவான வரலாறும், இந்திய அரசாங்கம் எப்படி, இந்தத் துறையில் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டது என்பது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அரசியலும், அரசாங்கமும் ஊழல் நிறைந்தவை என்னும் பிம்பமே பொதுவெளியில் உள்ளது. ஆனால், உண்மையில், அரசாங்கத்தின் திட்டங்கள் உருவாகும் தளங்களில், மிகச் சிறந்த அறிஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களின் பங்களிப்புகள், பொது வெளியில் அதிகம் பேசப்படாதவை. அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் பொதுவெளியில் பேசப்படுமளவுக்கு, எம்.ஜி.கே மேனும், ராஜா ராமண்ணாவும், எம்.எஸ்.ஸ்வாமிநாதனும், மாதவ் காட்கில்லும் பேசப்படுவதில்லை. அவர்களை நிர்வாகத்தில் அமர்த்திய முடிவுகளின் பின்ணணி அரசு நிர்வாகத்தின் செயல்திறனை நமக்குக் காட்டுகின்றன.
ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள், அரசின் கோப்புக் கருவூலங்களில் மட்கிக் கொண்டிருக்கும் ஏடுகளில் இருந்தது, பேசப்படாத பல பேரறிஞர்களின், நிர்வாகிகளின் பங்களிப்பை மிகச் சுவையான வரிகளில் பொதுவெளியில் வைப்பது மிக முக்கியமான பணியாகும்.
இதுவரை எழுதிய புத்தகங்களின் தளத்தில் இருந்தது விலகி, ’The light of Asia – The poem that defined Budhha’, என்னும் முக்கியமான ஒரு புத்தகத்தை மிகச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். பௌத்த மதத்தினால் ஈர்க்கப்பட்ட இவர் தன்னை இந்து-பவுத்தன் எனச் சொல்லிக் கொள்கிறார். தலாய் லாமாவின் ஆசியோடு வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் விமரிசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் கூறும் நல்லுலகம் இதுவரை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
கே.பி.வினோத்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டி ஓர் ஆவணப்படம் எடுக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது 2015ல் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது. அன்று என் மகனிடம் ஒரு நல்ல காமிரா இருந்தது. கே.பி.வினோத் அந்த காமிரா மட்டும் இருந்தால் போதும் ஓர் ஆவணப்படம் எடுக்கலாம் என்று சொன்னார்.எங்களிடம் அன்று நிதி இல்லை. பணம் தரமுடியாது என மறுத்தோம்.
[விஷ்ணுபுரம் அமைப்பின் அன்றைய வருடச் செலவு இரண்டு லட்சம் ரூபாய். இன்று அது பத்துலட்சம் ரூபாய். முக்கி முனகி அதை தேற்றிக்கொள்கிறோம்.தமிழில் ஓர் ஆண்டில் கார்ப்பரேட் ரெஸ்பான்ஸிபிலிட்டி என இங்குள்ள தொழில்நிறுவனங்கள் கலை இலக்கியச் செயல்பாட்டுக்கு கணக்கு காட்டும் தொகை ஐநூறு கோடிக்கும் மேல். இலக்கியவளர்ச்சிக்காக பல்கலைகழகங்கள் வழியாக யூஜிசி செலவிடும் தொகை ஏறத்தாழ முப்பது கோடி. அவை கணக்கில் மட்டும் வாழ்பவை. எங்கோ பொசிபவை]
பணம் வேண்டாம் என்று வினோத் சொன்னார். முழுப்பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். ஒளிப்பதிவு, இயக்கம்,படத்தொகுப்பு உட்பட அனைத்தையும் அவரே செய்தார். வெறும் ஆறாயிரம் ரூபாய் செலவில் ஞானக்கூத்தன் ஆவணப்படம் தயாரானது. அந்த தரத்தை பார்த்தபின்னர்தான் குறைந்த செலவில் ஆவணப்படம் எடுக்கமுடியும் என்னும் நம்பிக்கை உருவானது. பரிசுபெறும் படைப்பாளிகளைப் பற்றிய ஆவணப்படங்களை எடுக்க ஆரம்பித்தோம்.
தமிழ்ப்பண்பாட்டில் இந்த மாபெரும் படைப்பாளிகளைப் பற்றி பெரும்பாலும் எந்த காலப்பதிவும் இல்லை என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். இது எத்தனை பெரிய பணி என்பதை நாங்களே மெல்லமெல்லத்தான் அறிந்துகொண்டோம்.
இன்று விஷ்ணுபுரம் விருதுகளின் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாக இந்த விருது ஆவணப்படங்களும் உள்ளன. நண்பர் கே.பி.வினோத் அவ்வகையில் தமிழிலக்கியத்துக்கு அளித்துள்ள பங்களிப்பு மிகப்பெரியது.
ஞானக்கூத்தன் ஆவணப்படம் இலைமேல் எழுத்து
இயக்கம் கே.பி,வினோத்
தேவதச்சன் ஆவணப்படம் நிசப்தத்தின் சப்தம்
இயக்கம் சரவணவேல்
வண்ணதாசன் ஆவணப்படம் நதியின்பாடல்
இயக்கம் செல்வேந்திரன்
சீ முத்துசாமி ஆவணப்படம் ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்
இயக்கம் ம.நவீன்
பாட்டும் தொகையும் ராஜ் கௌதமன் ஆவணப்படம்
இயக்கம் கே பி வினோத்
அந்தர நடை கவிஞர் அபி ஆவணப்படம்
இயக்கம் -கே.பி.வினோத்
ஒளிப்பதிவு -பிரகாஷ் அருண்
இசை -ராஜன் சோமசுந்தரம்
தயாரிப்பு -ராஜா சந்திரசேகர்
தற்செயல்களின் வரைபடம்சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்இயக்கம் & படத்தொகுப்பு: K.P.வினோத்
ஒளிப்பதிவு: ஆனந்த் குமார்
இசை: ராஜன் சோமசுந்தரம்
தயாரிப்பு: விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
கவிதைகள், இணைய இதழ்
கவிதைக்காக மட்டுமே வெளிவரும் இணைய இதழான கவிதைகள் இணைய இதழ் டிசம்பர் இலக்கம் வெளியாகியிருக்கிறது. இவ்விதழ் விக்ரமாதித்யன் சிறப்பிதழ். லக்ஷ்மி மணிவண்ணன், சாம்ராஜ், நிக்கிதா, ஜிஎஸ்எஸ்வி நவீன், விஜயகுமார் ஆகியோர் விக்ரமாதித்யன் பற்றி எழுதியிருக்கிறார்கள். மேலும் கவிதைகள், கவிதை பற்றிய விமர்சனக்குறிப்புகள் கொண்ட இதழ்
கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 12
நண்பர்களுக்கு வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் பன்னிரெண்டாவது வெண்முரசு கூடுகை, 19ஆம் தேதி, ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான “பிரயாகை” – யின் 10 முதல் 13 வரையுள்ள பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்
பகுதிகள்:
மீள்பிறப்புகாட்டின் மகள்நிலத்தடி நெருப்புஇனியன்வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 19-12-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

