Jeyamohan's Blog, page 864
December 18, 2021
விஷ்ணுபுரம் விழா, வாசிப்புப் பரிந்துரைகள் பற்றி…
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருது விழா இன்று தமிழின் முக்கியமான இலக்கியத் திருவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. நான் முதல் முறையாக இதில் கலந்துகொள்கிறேன். இந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று திட்டமிட்டபிறகுதான் உங்கள் தளத்தை பிரத்யேகமாகக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எவ்வளவு படிக்கவேண்டியிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்பட்டது.
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் கோகுல்பிரசாத், காளிபிரசாத், ஜா.தீபா, சுஷீல்குமார்,எம்.கோபாலகிருஷ்ணன், திருச்செந்தாழை, செந்தில் ஜெகன்னாதன், சோ.தர்மன் என ஒர் எழுத்தாளர்கலின் பட்டியல்.இவர்கள் ஒவ்வொருவருக்கும் இணைப்புகள் வழியாக அவர்களின் படைப்புகளும், அப்படைப்புக்கள் பற்றிய கட்டுரைகளும் பேட்டிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சிறப்புவிருந்தினர் ஜெய்ராம் ரமேஷ். அவருடைய நூல் தமிழில் வெளிவந்துள்ளது. அவரைப்பற்றிய கட்டுரைகள் அளிக்கப்படுகின்றன. சிறப்புவிருந்தினரான சின்ன வீரபத்ருடுவின் கவிதைகள், தெலுங்கு கவிதைகளின் வரலாறு என ஒரு வாசிப்பு சிலபஸ் வேறு
இத்தனைக்கும் முன்பாக விக்ரமாதித்யன் கவிதைகள். அவரைப்பற்றி எழுதப்பட்ட ஏராளமான கட்டுரைகள். இவ்வளவையும் வாசிக்கவேண்டியிருக்கிறது. இவ்வளவுபெரிய சிலபஸ் ஒரு இலக்கிய விழாவுக்கு என்பது பிரமிக்கச் செய்கிறது.
இதற்கும் மேல் தேவை என்றால் பழைய விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புகள். ஆவணப்படங்கள். உரைகளின் காணொளிகள். வாசகர் கடிதங்கள் என்று இணைப்புகள் குவிந்துகிடக்கின்றன. ஒருநாள் ஒன்றரை மணிநேரம் வீதம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் பெங்களூரிலும் டெல்லியிலும் இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவையெல்லாம் சம்பிரதாயமாகவே இருக்கும். இந்த விழாவின் இந்த பிரம்மாண்டமான அறிவுசார்ந்த முன்னேற்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன. இவற்றையெல்லாம் வாசிக்கவேண்டுமே என்ற பதற்றமும் ஏற்படுகிறது. வாசிக்காமல் வரக்கூடாதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஆர்.ரவிச்சந்திரன்
அன்புள்ள ரவி,
விழாவுக்கு நல்வரவு,
இந்த வாசிப்புப் பரிந்துரை எதற்காக? விஷ்ணுபுரம் விழாவுக்கு அதிகாரபூர்வ விருந்தினர்கள் பதினொருவர். விருதுபெறுபவர் விக்ரமாதித்யன். மேலும் இருபது படைப்பாளிகளாவது இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். வாசகர்களாக அங்கே வருபவர்கள் அவர்களிடம் ஆக்கபூர்வமான உரையாடலை நடத்தவேண்டும் என்றால் அப்படைப்பாளிகளின் இலக்கிய உலகில் அறிமுகம் இருந்தாகவேண்டும். உண்மையில் ஓர் எழுத்தாளரை சற்றேனும் படித்திருப்பது அளிக்கும் தன்னம்பிக்கை மிகமிக உதவியானது. உரையாடலே நிகழ்த்தவில்லை என்றாலும் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை அருகே நின்று கேட்பதற்காகவாவது நாம் வாசித்திருக்கவேண்டும்
இலக்கியத்திற்குள் நுழைந்து பலகாலம் ஆனவர்கள் எல்லா படைப்பாளிகளையும் ஓரளவு வாசித்திருப்பார்கள் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எங்கள் விழாக்களில் இலக்கியத்துக்குள் அறிமுகமாகும் இளம் வாசகர்களும் பலர் வருவதுண்டு. அவர்களுக்கு ஓரு விரிவான அறிமுகம் அளிக்கவேண்டும் என்பதனாலேயே இந்தக் கட்டுரைகள் இணையத்திலேயே அளிக்கப்படுகின்றன. எப்போது வேண்டுமென்றாலும் வாசிக்கலாம். அந்த விழாவிலேயே அவர்களிடம் சென்று பேசுவதற்கு முன்பு அவசரமாகக்கூட வாசித்துப் பார்க்கலாம். இம்முறை அவர்களின் ஆக்கங்கள் ஒரே இணையப்பக்கமாக கிடைக்கும்படிச் செய்திருக்கிறோம்.[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
எழுத்தாளர்- வாசகர் சந்திப்புகளை தமிழ்ச்சூழலில் சாகித்ய அகாதமி செய்துவருகிறது. அது ஒரு சிறுவட்டத்துக்குள் , சிறிய அளவில், மிக அரிதாகவே நிகழ்கிறது. அதைவிட்டால் விஷ்ணுபுரம் அரங்கே மிகப்பெரிய எழுத்தாளர் வாசகர் சந்திப்பு. தமிழ்ச்சூழலில் எழுதுபவர்கள் அனைவருக்குமே அவர்களை எவரேனும் வாசிக்கிறார்களா என்னும் ஐயம் உண்டு. அந்த ஐயம் எழுவதற்கான முகாந்திரமும் உண்டு. ஆகவேதான் இந்த அரங்குகள். இவற்றில் எழுதத்தொடங்கும் இளம்படைப்பாளிகள், அறியப்பட்ட படைப்பாளிகள் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி அமைத்துள்ளோம்.
இந்த கேள்விபதில் சிறப்பாக நிகழவேண்டும் என்றால் அரங்கில் பெரும்பான்மையினர் அப்படைப்பாளியை வாசித்திருக்கவேண்டும். குறைந்தபட்ச அறிமுகம் அனைவருக்கும் வேண்டும். ஆகவேதான் இந்த விரிவான படைப்புப் பரிந்துரைகள் அளிக்கப்படுகின்றன. வாசித்தவர்கள் வினா எழுப்பி ஆசிரியர்களுடன் உரையாடவேண்டும், எஞ்சியோர் கேட்டுக்கொண்டிருந்தால்போதும் என்பது எங்கள் எண்ணம். அதையே அப்படைப்பாளிகளும் விரும்புவார்கள்.
மேலும், இப்படி ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அப்படைப்பாளிகளைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை அளிக்கலாமே என்றும் நினைக்கிறோம். எழுத்தாளரைப் பொறுத்தவரை வாசகர்களிடம் ஓர் ஆளுமை என அறியப்படுவதுதான் உண்மையான தொடக்கம். ஒரு கதையில் அவர் பெயரை கண்டதுமே வாசகர்கள் அவர் யார் என்று நினைவுகூரவேண்டும், உடனே வாசிக்கவேண்டும். இந்த அறிமுகங்களின் நோக்கம் அது.
வாசிக்காமல் வரலாமா? வரலாம். மௌனமாகக் கவனிக்கலாம். அதுவும் பயனுள்ளதே. ஆனால் வாசித்துவிட்டு வந்து உரையாடுவதே மெய்யாகவே இந்த நிகழ்வை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது
ஜெ
விஷ்ணுபுரம் விருது, கடந்த ஆண்டு…
விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை
விஷ்ணுபுரம் விருதுகள் முழுப்பதிவுகள்
விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
விஷ்ணுபுரம் விருது விழா, நினைவுகளில்…
விக்ரமாதித்யனின் வண்ணங்கள்- ஜெயராம்
விக்ரமாதித்யனின் ஆன்மிகம் – போகன்
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-4, ஜெயமோகன்
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள் – ஜெயமோகன்
எல்லாமுமான கவிஞன் – காளிப்பிரசாத்
நிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி
ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்
மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்
இன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.
நந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா
கவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ
கிறங்கித் திரியுமொரு தமிழ்ப் பாணன் – ரவிசுப்பிரமணியன்.
ஆசியஜோதியின் வரலாறு – முன்னுரை
ஜெய்ராம் ரமேஷின் லைட் ஆஃப் ஏசியா வாங்க
ஜெய்ராம் ரமேஷ் எழுதிய The Light of Asia: The Poem that Defined The Buddha என்னும் ஆய்வுநூல் சர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய புகழ்பெற்ற காவியநூலின் பிறப்பு, செல்வாக்கு பற்றிய ஆய்வு. ஒரு நூலின் வாழ்க்கை வரலாறு எனலாம். அந்நூல் தமிழிலும் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையால் ஆசியஜோதி என்ற பேரில் தழுவி எழுதப்பட்டுள்ளது. அந்நூலின் முன்னுரை இது
முதற்சொல்
இது கவிதை வடிவில் எழுதப்பட்டு ஜூலை 1879ல் லண்டனில் முதலில் வெளியான ஒரு காவியநூலின் வரலாறு. இது வெளியான உடனேயே இங்கிலாந்தில் முக்கிய கவனத்தைப் பெற்றது. பின்னர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகவும் புகழடைந்தது. அது ஏற்படுத்திய பரவசம் உலகின் பிற பகுதிகளையும் தொற்றிப் பரவி பல்லாண்டுகள் அதன் தாக்கம் நீடித்தது. இப்புத்தகம் இந்தியாவின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவரான ஆன்மீகத் துறவி ஒருவரையும் ஈர்த்தது – சுவாமி விவேகானந்தர். ஏறக்குறைய அதே நேரத்தில் அநகாரிக தர்மபாலா என்று வரலாற்றில் பின்னர் புகழ் பெற்ற கொழும்பில் இருந்த ஒரு இளைஞனையும் அது ஆழமாக உலுக்கியது. இது 1889 இல் லண்டனில் ஆர்வமும் உத்வேகமும் நிறைந்த இந்திய வழக்கறிஞர் ஒருவரின் கவனத்தையும் ஈர்த்தது.அவரே பின்னர் மகாத்மா காந்தி என்று காலத்தால் அழியாப்புகழ் கொண்டார்.
சில ஆண்டுகளில் இது அலகாபாத்தில் இருந்த ஒரு இளைஞனை பாதித்தது, அவர் 1947 இல் இந்தியாவின் முதல் பிரதமராக ஆனார் – ஜவஹர்லால் நேரு.இப்புத்தகத்தின் இரண்டு பிரதிகள் இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி பி.ஆர். அம்பேத்கரின் புத்தக அலமாரிகளை அலங்கரித்தன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்னிந்தியாவில் சமூக நீதிக்கான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மனிதர்களின் பணியை இது வெளிப்படுத்தியது.
உலகம் முழுவதிலுமிருந்து குறைந்தது பதினொரு இலக்கிய ஆளுமைகள் மீது இந்த புத்தகம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் நோபல் பரிசு பெற்றவர்கள்:1907 இல் ருட்யார்ட் கிப்ளிங், 1913 இல் ரவீந்திரநாத் தாகூர், 1923 இல் டபிள்யூ.பி.யீட்ஸ், 1933 இல் இவான் புனின் மற்றும் 1948 இல் டி.எஸ். எலியட். மற்ற அறுவரும் பெரும்புகழ் பெற்ற ஆளுமைகள்: ஹெர்மன் மெல்வில், லியோ டால்ஸ்டாய், லாஃப்காடியோ ஹெர்ன், டி.எச். லாரன்ஸ், ஜான் மாஸ்ஃபீல்ட் மற்றும் ஜோஸ் லூயிஸ் போர்ஜஸ். இது ஜோசப் காம்ப்பெல்லுக்கு புதிய எல்லைகளைத் திறந்து வைத்து, பின்னாளில் தொன்மங்களின் ஒப்பீட்டு ஆய்வுகளில் முன்னோடி ஆக்கியது.
அறிவியல் மற்றும் தொழிற்துறையிலும் இதன் தாக்கம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இது மெட்ராஸில் ஒரு இளம் அறிவியல் மாணவரின் வாழ்க்கையை வடிவமைத்தது – 1930 இல், இயற்பியலுக்கான இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமன். ரஷ்ய வேதியியலாளரும் கால அட்டவணையின் கண்டுபிடிப்பாளருமான டிமிட்ரி மெண்டலீவ் மற்றும் ஸ்காட்டிஷ்-அமெரிக்க தொழிலதிபர்-பரோபகாரர் ஆண்ட்ரூ கார்னெகி ஆகியோர் அதில் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்டிருந்தனர். ரஷ்ய வேதியியலாளரும் தனிம அட்டவணையை உருவாக்கியவருமான டிமிட்ரி மெண்டலீவ் மற்றும் ஸ்காட்டிஷ்-அமெரிக்க தொழிலதிபரும் மனிதநேயருமான ஆண்ட்ரூ கார்னெகி ஆகியோர் இப்புத்தகத்தோடு ஒரு பிணைப்பைக் கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் இராணுவத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் ஆனால் அவரது காலகட்டத்தில் ஒரு நாயகனாகவும் விளங்கிய – ஹெர்பர்ட் கிச்சனர் – அவர் எங்கு சென்றாலும் இந்த புத்தகத்தை அவருடன் எடுத்துச் செல்வார். பின்னர் நோபல் பரிசுகளை உருவாக்கி வழங்கிய ஸ்வீடிஷ் தொழிலதிபர் ஆல்ஃபிரட் நோபலின் தனிநூலகத்தில் இது இடம்பெற்றுள்ளது.
1925 ஆம் ஆண்டில், ஜெர்மன்-இந்திய அணியால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மௌனப்படங்களில் ஒன்றிற்கு இது அடிப்படையாக இருந்தது. இப்படம் சர்வதேச அளவில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. பின்னர் 1945 இல், இது ஒரு ஹாலிவுட் கிளாசிக் திரைப்படமான “The Picture of Dorian Gray”யில் இடப்பெற்றது. 1957 ஆம் ஆண்டில், மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பிரிட்டிஷ்-அமெரிக்க துப்பறியும் கதையாசிரியர் ரேமண்ட் சாண்ட்லருக்கு இந்த புத்தகத்தைப் படித்து ஆறுதல் அடையுமாறு அவரது நீண்டகால செயலாளர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
இப்புத்தகம் பதின்மூன்று ஐரோப்பிய மொழிகளிலும், எட்டு வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் மற்றும் பதினான்கு தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் பல நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் மற்றும் ஓபராக்கள் இதிலிருந்து தழுவி எழுதப்பட்டன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், இது கல்வித் துறையினரின் ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. மற்றும் ஐக்கிய நாடுகள், கனடா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் அறிவார்ந்த வெளியீடுகளின் கருப்பொருளாக இது இருக்கிறது. இவற்றில் மிகச் சமீபத்திய ஆய்வுக்கட்டுரை ஜேம்ஸ் ஜாய்ஸ் படைப்புகளில் இப்புத்தகத்தின் செல்வாக்கைக் குறித்து பிப்ரவரி 2020 இல் வெளிவந்தது.
சர் எட்வின் அர்னால்ட் எழுதிய புத்தரின் வாழ்க்கை மற்றும் அவரது செய்தியை விளக்கும் “ஆசியாவின் ஒளி”(தி லைட் ஆஃப் ஏசியா) என்ற புத்தகம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் புத்தரின் மறு கண்டுபிடிப்பு நிகழ்ந்ததில் இப்புத்தகம் ஒரு மைல்கல். நவீன பௌத்தத்தின் வரலாற்று ஆய்வெழுத்தில் இது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இப்புத்தகம் எப்படி, எதற்காக எழுதப்பட்டது, அக்காரணிகளால் அதன் செல்வாக்கு நாட்டிற்கு நாடு வளர்ந்தது, குறிப்பாக இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்தரைத் தோற்றுவித்த இத்துணைக் கண்டத்தில் அது எவ்விதம் வளர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள நான் முற்பட்டேன்.
நான் முதன்முதலில் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வை எனது பதின்ம வயதுகளில் மத்தியில் படித்தேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அது என்னுடன் தொடர்ந்து உடன் வருகிறது. இரண்டு சமீபத்திய நிகழ்வுகள் இந்தக் கவிதையையும் அதன் ஆசிரியர் பற்றிய எனது நினைவுகளையும் மீண்டும் எழுப்பின.
முதலாவது, ஜவஹர்லால் நேருவின் கடிதங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது:
“‘ஆசியாவின் ஒளி’ என்ற சொற்றொடரை நீங்கள் நினைவுறுவீர்கள் என்று நம்புகிறேன். கம்யூனிஸ்ட் பயிற்சிக் கட்டளைக் கையேடுகள் போலல்லாமல் தனி மனிதனின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் இலட்சியமாகக் கொண்டு ஆசியா முழுவதுக்குமான வழியைக் காட்டுவதில், குறைந்தபட்சம் சிந்தனைத் துறையில் இந்தியாவை வழிநடத்துவதில் வேறு எந்த மனிதனாலும் செய்ய முடியாததை உங்களால் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.”
இவ்வரிகளை சர்ச்சில் பிரிட்டிஷாரால் 1921-இல் இருந்து 1945 வரை ஒன்பது முறை ஏறக்குறைய பாத்து வருட காலம் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரைப் பார்த்து எழுதி இருக்கிறார். நேரு நீண்ட காலம் தொடர்ச்சியாக சிறையில் இருந்த காலம் 1942 ஆகஸ்டு முதல் 1945 ஜூன் வரை சர்ச்சில் பிரதமராக இருந்த பொழுதுதான். அதுவே இந்தக் கடிதத்தை மிகவும் கவனிக்கத்தக்கதாக ஆக்குகிறது. இது மட்டும் அல்ல. நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 30, 1955இல் , சர்ச்சில் மீண்டும் நேருவுக்கு எழுதியிருக்கிறார்:
“ஏப்ரல் 8 ஆம் தேதியன்று நீங்கள் எழுதிய கடிதத்திற்கு பதிலளிப்பதில் தாமதமானதை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் மற்றும் இங்கு நடந்த பொதுத் தேர்தல் ஆகியவை கடிதம் எழுதுவதில் தாமதத்தை ஏற்படுத்திவிட்டன.
நீங்கள் சொன்னது என் மனதை மிகவும் தொட்டது. நான் பதவியில் இருந்த கடைசி சில ஆண்டுகளின் மிக இனிமையான நினைவுகளில் ஒன்று நமது தொடர்பு. எங்கள் மாநாடுகளில் [காமன்வெல்த் தலைவர்களின் மாநாடுகள்] உங்கள் பங்களிப்பு முதன்மையானதாகவும் ஆக்கபூர்வமான ஒன்றாகவும் இருந்தது.
கடந்த காலத்தில் நம்மிடையே பிரிவை ஏற்படுத்திய பேதங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களில் கூட கசப்பில்லாத அமைதிக்கான உங்கள் தீவிர விருப்பத்தை நான் எப்போதும் பாராட்டுகிறேன். நீங்கள் ஏற்றிருப்பது உண்மையிலேயே ஒரு பெரும் சுமை மற்றும் பொறுப்பு. உங்கள் தேசத்தின் பல கோடி மக்களின் தலைவிதியை வடிவமைத்து, உலக விவகாரங்களில் உன்னதமான பங்கை வகிக்கும் பொறுப்பு. உங்கள் பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். ‘ஆசியாவின் ஒளி!’யை நினைவில் கொள்ளுங்கள்.”
புத்தக விரும்பிகளான இரண்டு பிரதம மந்திரிகளுக்கு இடையேதான் தங்கள் வாழ்வின் கடைசி பத்தாண்டுகளில் தங்கள் இளமைக் காலத்தில் படித்த புத்தகத்தை நினைவுகூர்ந்து அதைக் குறித்து இவ்விதம் கடிதம் எழுதிக்கொள்ள முடியும். உண்மையில், நேரு லக்னோ சிறையில் ஆங்கிலேயர்களால் இரண்டாவது முறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர் தனது தந்தைக்கு 13 ஜூலை 1922 அன்று இவ்விதம் கடிதம் எழுதியிருக்கிறார்.
“உங்கள் அன்பான கடிதம் எனக்கு கிடைத்தது. . . எனது உடல்நிலை பற்றி நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். நான் அதை கவனமாக பார்த்து வருகிறேன். . . நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் கிடைத்தன. இப்போது பின்வருபவை கிடைத்தன:
பாபரின் நினைவுகள்சர்க்காரின் சிவாஜிபெர்னியரின் பயணங்கள்வின்சென்ட் ஸ்மித்தின் அக்பர்மனுச்சியின் ஸ்டோரியா டூ மோகோர் (முகலாயர்களின் வரலாறு)பிரைஸின் புனித ரோமானியப் பேரரசுகீட்ஸின் கவிதைகள்ஷெல்லியின் கவிதைகள்டென்னிசனின் ஐடில்ஸ் ஆஃப் தி கிங்அர்னால்டின் லைட் ஆஃப் ஏசியாஹாவெல்ஸின் இந்தியாவில் ஆரியர்களின் ஆட்சி (இது தனியாக வந்தது)பேட்டரின் மறுமலர்ச்சி (நேற்று வந்தது)
ஆனந்த் பவனில் [அலகாபாத்தில் உள்ள நேரு குடும்பத்தின் இல்லம்] இருக்கும் மேலும் பல புத்தகங்களை நான் கேட்டிருந்தேன். . .”
அவரது மகள் சுவிட்சர்லாந்தில் உள்ள லேசினில் ப்ளூரிசியில்(நுரையீரல் அழற்சி) இருந்து குணமடைந்து கொண்டிருந்தபோது, நேரு 22 பிப்ரவரி 1940 அன்று ‘அர்னால்டின் இரண்டு சிறிய புத்தகங்களை அனுப்பி வைத்தார்: ‘தி லைட் ஆஃப் ஏசியா’ மற்றும் ‘தி சாங் செலஸ்டியல்’.
இரண்டாவதாக, ராமாயண இதிகாசத்தின் நாயகனான ராமர் பிறந்த இடம் குறித்த சர்ச்சையால் சமகால இந்திய அரசியலில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. நான்கரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அயோத்தி நகரத்தில் அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் ஒரு மசூதி இருந்தது. அந்த மசூதி 1992 டிசம்பர் 6 அன்று வன்முறைக் கும்பலால் இடிக்கப்பட்டது. நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நவம்பர் 2019 இல் இந்து அமைப்புகள் அந்த இடத்தைக் கைப்பற்றின. இப்போது அங்கு ஒரு கோயில் கட்டப்பட்டு வருகிறது.
இதே போல 1886 மற்றும் 1953 க்கு இடையில், கௌதம சித்தார்த்தர் ஞானம் பெற்று புத்தராக மாறிய போத்கயாவில் உள்ள ஒரு கோவிலின் உரிமை தொடர்பாக சிறிய ஒரு சர்ச்சை ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு இந்த புனித தலத்திற்கு வருகை தந்த சர் எட்வின் அர்னால்ட், பதினேழாம் நூற்றாண்டிலிருந்து கோவிலின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு இந்து பிரிவினருக்கும் மகாபோதி சொசைட்டியை நிறுவிய இலங்கை துறவி அநகாரிக தர்மபாலாவுக்கும் இடையிலான நீண்ட ஒரு சச்சரவைத் துவக்கி வைத்தார். சர் எட்வின் ஆதரவுடன், புத்த கயா மீதான இந்து கட்டுப்பாட்டில் இருந்து பௌத்த உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தை தர்மபாலா தொடங்கினார். இந்த பிரச்சனை இறுதியாக 1953 இல் அமைதியாக தீர்த்து வைக்கப்பட்டது.
எட்வின் அர்னால்ட் எல்லா வகையிலும் ஒரு சிறந்த விக்டோரியனாகத் திகழ்ந்தவர். பன்மொழிப் புலமையாளர் – அவர் கிரேக்கம், லத்தீன், அரபு, துருக்கியம், பிரஞ்சு, ஜெர்மன், ஜப்பானியம், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளை அறிந்தவர். சுமார் நாற்பது ஆண்டுகள் லண்டனின் ‘டெய்லி டெலிகிராப்’ செய்தித்தாளின் முன்னணி எழுத்தாளராக இருந்தார். அவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் குடிகளை நாகரீக சமுதாயமாக்கும் பணியில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார், ஆனால் அதே நேரத்தில் அவர் தீவிரமாக இந்தியாவை நேசித்தவராக இருந்தார்.
அவர் பூனாவில் உள்ள புகழ்பெற்ற டெக்கான் கல்லூரியின் முதல் முதல்வராக 1857 இன் பிற்பகுதியிலிருந்து 1860 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை இரண்டரை ஆண்டுகள் இந்தியாவில் பணிபுரிந்தார். மண்ணின் மக்களுக்கான கல்வி குறித்த அவரது கருத்துக்கள் அக்கால அளவுகோல்களின்படி முற்போக்கானவை. அவர் 1885 இன் பிற்பகுதியில் நூறு நாட்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் வந்தார். மேலும் இந்த பயணத்தின் தெளிவான குறிப்புகளை எழுதியிருக்கிறார், அவை இன்றும் கூட படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன. அவர் பல பாரசீக, அரபு மற்றும் சமஸ்கிருத செவ்வியல் மொழிகளின் மொழிபெயர்ப்புகளாக ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
சர் எட்வின் இந்து மதம், பௌத்தம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். அவர் ‘தி லைட் ஆஃப் தி வேர்ல்ட்’ (உலகின் ஒளி) என்ற பெயரில் இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் எழுதியிருக்கிறார். பகவத் கீதையை அவர் “விண்ணுலக கீதம்” (தி சாங் செலெஸ்டியல்) என்ற பெயரில் மொழிபெயர்த்த படைப்பே மகாத்மா காந்தியை முதன்முதலில் இந்த உன்னதமான நூலுக்கு அறிமுகப்படுத்தியது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு எழுதும் நூல்களில் ஒன்றாக அது அமைந்தது. இருப்பினும், அர்னால்டின் பிற படைப்புகள் எதுவும் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் புகழையும் நீண்ட ஆயுளையும் அடையவில்லை. லண்டனின் சைவ உணவுக்கழகச் செயல்பாடுகளில் காந்தி மற்றும் அர்னால்டு இருவருமே முக்கிய பங்காற்றினர், மேலும் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் போற்றியதாகத் தோன்றுகிறது.
ஆனால் அர்னால்ட் அவரது பல்துறை சாதனைகளுக்குப் பின்னரும் ஒரே ஒரு தீவிர வாழ்க்கை வரலாற்றாசிரியரை மட்டுமே ஈர்த்துள்ளார், அது 1957 ஆம் ஆண்டிலேயே நடந்துவிட்டது. எனவே, சர் எட்வின் அர்னால்ட் யார், அவருடைய வாழ்க்கை எப்படி மலர்ந்தது, அவருக்கு இந்தியாவுடனான பிணைப்பு எவ்விதம் தொடங்கியது, அவர் எப்படி ஆசியாவின் ஒளியை எழுத வந்தார் என்பதைப் பற்றி புதிய வெளிச்சம் போட முற்பட்டேன். ஆசியாவின் ஒளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பாக தன்னை நிரூபித்துவிட்ட ஒன்று. ஒரு பண்டைய தத்துவம் மற்றும் நம்பிக்கையின் மறு கண்டுபிடிப்பில் நீடித்த மைல்கல்லாக நிலைத்துவிட்ட ஒன்று.
[image error]
எட்வின் அர்னால்டுக்கு இந்தியத் தொடர்பைத் தவிர பிற முக்கிய முகங்களும் இருந்தன. உதாரணமாக, அவர் 1874-76 இல் ஹென்றி மார்டன் ஸ்டான்லியின் முதல் காங்கோ பயணத்தில் ஒரு முக்கிய பயண வீரராக இருந்தவர். அங்கு ஒரு மலைக்கும் நதிக்கும் அவர் பெயரிடப்பட்டது.
ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் காலனித்துவ நலன்களை முன்னிறுத்திய ‘கேப் டு கெய்ரோ’ ரயில் இணைப்பை முதன்முதலில் ஆதரித்தவர். 1890 முதல் அவரது வாழ்க்கை பெரும்பாலும் ஜப்பானை மையமாகக் கொண்டது. அவரது மூன்றாவது மனைவி ஜப்பானியர், லண்டனில் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் அவரது மறைவுக்குப் பின்னர் வாழ்ந்தவர். ஜப்பானுடனான பிரிட்டிஷ் உறவின் வரலாற்றில், அவரது குரல் மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. விக்டோரியா மகாராணி அர்னால்டை மிகவும் விரும்பினார். அவளுடைய விருப்பம் நிறைவேறி இருந்திருந்தால், 1892 இல் டென்னிசன் பிரபு இறந்தபோது அர்னால்டு பிரிட்டனின் அரசவைக் கவிஞராக மாறியிருப்பார்.
சர் எட்வின் அர்னால்டுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். ஒருவர் இலங்கையில் காப்பித் தோட்டம் அமைப்பதற்கு முயன்றார், அது தோல்வியடைந்ததால், அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆனார். மற்றொருவர் மெக்சிகோவில் யுகடானை ஆராய்ந்து, அந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி எழுதி, பின்னர் பர்மாவில் இதழாசிரியராகப் பணியாற்றி பின்னர் அந்த பிரிட்டிஷ் நிறுவனத்தை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர், இந்தியாவுக்குச் வந்து, போபால் அரச குடும்பத்திற்கு ஆசிரியராக ஆனார். இந்து இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி நன்கு அறியப்பட்ட இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்தியா, தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எட்வின் அர்னால்டின் கொள்ளுப் பேரக்குழந்தைகளைக் கண்டுபிடிப்பதுடன் எனது கதை நிறைவுறுகிறது.
தமிழாக்கம் சுபஸ்ரீ
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ் ஜெய்ராம் ரமேஷ் – பாலசுப்ரமணியம் முத்துசாமி ஆசிய ஜோதி டிஜிட்டல் லைப்ரரியில் வாசிக்க Light Of Asiya வாசிக்கபுத்த கயா ஒரு பழைய விவாதம்
கயாவும் இந்துக்களும்சின்ன வீரபத்ருடு கவிதைகள்-5
வார்த்தையைத் தேடி
உன்னைத் தொந்தரவு செய்யும் அந்த ஒரு வார்த்தையைத் தேடி
எத்தனையோ பகல்களை எதிர்கொள்கிறாய்
யார்யாரையோ சந்திக்கிறாய்,
எவற்றையெல்லாமோ தியாகம் செய்கிறாய்.
சரியான வார்த்தை உன் மனதினில் ஒளிர
படகுமீனவனைப்போல்
கடலை ஒவ்வொரு நாளும் சலித்தெடுக்கிறாய்
புலரி வெளிச்சத்தின் முதல் தளிர்களுக்காக காத்திருக்கிறாய்.
பனி மூடியுள்ளது.
இரவில் பொழிந்த
மதியொளி குளமாகி
தொடுவானத்தின் எல்லை வரை நீள்கிறது
அதில் அவ்வப்போது எழும் சிற்றலைகளில் வெள்ளி மினுக்கு
தூரத்து கண்டாமணிகளின் ஒலிகளாக
தூரத்து பாய்மரம் முதல்முறை தெரிவதுபோல்
கன்னிக்கதிரொன்றை காண்கிறாய் நீ.
உடனே,
மறுகரையிலிருந்து வலை வீசி மூடியதுபோல்
ஒளிநிழல்களின் சட்டகம் ஓழுகிச்செல்கிறது
வானின் சாளரங்கள் ஒவ்வொன்றாக திறந்துகொள்கின்றன
பட்டுக்கை ஒன்று கண் முன் தோன்றி
மரஉச்சிகளின் மேல் உள்ள இலைத்திரைகளை விலக்குகின்றன
அப்போது
மொக்கவிழும் இனிய சுருதி ஒன்று
கேட்கிறது
புதிய உவமைக்காக
சுற்றி எங்கும் இலையுதிர்ப் பருவம்.
பட்டைக்குள்ளும், தண்டுக்குள்ளும், ஒவ்வொரு உயிரணுவின் ஆழத்தில் உரையும் உயிர்ப்புக்குள்ளும்
பசுமை திரும்பியாக வேண்டிய காலம்
கண்முன்னே இதுவரை ஒலித்துக்கொண்டிருந்த சங்கீதங்கள்
சகடையில் சுருட்டி எடுப்பதுபோல் இடையறாமல் சுழன்று பின்வாங்குகின்றன
பனிக்காலம் முடிகிறது. சருகுகள் எழுந்தாடும் குளிர்க்காற்று.
வெளிர்ந்துபோன சோகையடைந்த நடனம்.
பீங்கான் ஜாடிகளை சாலையோரம் அடுக்கிவைத்தாற்போல் மரங்கள்
பழைய, கறைபடிந்த பித்தளைச் சாமானுக்கிடையில்
பூஜாடிகளைப்போல் பெத்தோடியா பூக்கள்.
பின்வாங்கிச்செல்லும் ஒவ்வொரு பருவத்தின் முன்னாலும்
கைக்கூப்பி நின்றுகொண்டு என்ன பிரார்த்தனை செய்கிறாய்?
கவர்ச்சி ஒளிரும் காட்சி ஒவ்வொன்றிலும்
ஏன் அத்தனைத் தீவிரமாகக் கண் பதிக்கிறாய்?
வெறிகொண்டு காலத்தை சல்லடைப் போடுவதெல்லாம்
உன் கவிதைக்கு ஒரு புதிய உவமை தோன்றுவதற்காகத்தானே?
பிறந்துகொண்டிருக்கும் பாடல்
பகல் இன்னும் புலரவில்லை
மலையடிவாரத்துக் கோயிலிலிருந்து சுப்ரபாதம் ஒலிக்கிறது
காலைப்பனியில் நகரம்
தன் கனவுகளின் எடையில் கவிழ்ந்துவிடாமல் இருக்கப்
படகென மிதக்க,
சுழலும் இசை ஒன்று அதை கரை நோக்கி இழுக்கிறது
வானமும் பூமியும் ஒன்றையொன்று அணைத்துக்கொண்டு
ஆழமான உறக்கத்தில் இருக்கின்றன.
வீடுகளும் மரங்களும்
விழிப்புக்கு முந்தைய ரெம் தூக்கத்தின் நெடுமூச்சில்
விம்முகின்றன.
சீக்கிறமே வீடுகளெல்லாம் ரீங்கரிக்கத்தொடங்கும்
நகரஒளிகள் மின்னிச்செல்லும் நீரோட்டத்தில் மூழ்கிவிடும்
நான் சுப்ரபாதத்தில் லயித்திருக்கிறேன்
விடியல் சற்றுநேரம் பிந்தக்கூடாதா
என்று ஏங்கிகிறேன்
நாள் தொடங்குகிறது.
கடிதங்கள், வரவேற்புகள், அறிவுறுத்தல்கள், ஒப்படைப்புகள்
எல்லாம் என்னைக் கடந்து செல்கின்றன
எதுவுமே உள்ளே இறங்கவில்லை
இரவு ஆழம்கொள்கிறது
என் மேஜையிலிருந்து கடிதங்களெல்லாம் கிளம்பிவிட்டன.
அப்போது
சுப்ரபாதம் நினைவுக்கு வருகிறது
மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும்
ஆத்மதோழியின் கடிதத்தைப்போல்
உள்ளே ஓடத்தொடங்குகிறது
அதிகாலை கருக்கிருட்டில்
என்னை கட்டி இழுத்தக் கொடி
பின்னிரவில் பூக்கிறது
அதன் நறுமணத்தை நுகர்ந்தபடி
மீண்டும் விடியல் வரை காத்திருக்கிறேன்
அது என்ன பூ என்று அறிய.
ஆங்கிலம் வழித் தமிழாக்கம் சுசித்ரா
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்
சின்ன வீரபத்ருடு -கடிதங்கள் 2
அன்புள்ள ஜெ
தெலுங்குக் கவிதையா என ஓர் ஆர்வமின்மையுடன்தான் வாசிக்க ஆரம்பித்தேன் என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் சட்டென்று ஆச்சரியம். எவ்வளவு வேறுபட்ட அழகியல் கொண்ட கவிதைகள். எவ்வளவு புதியவை. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு கே.ஜி.சங்கரப்பிள்ளை வந்தபோது வெளியான கவிதைகளில்தான் இப்படி முழுக்கமுழுக்க புதிய ஓர் அழகியல் வெளிப்பட்டது.
[இதை நினைக்கும்போது ஒன்று தோன்றுகிறது. ஒரு சூழலில் உள்ள கவிதைகள் எல்லாமே எவ்வளவு வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் ஒரே அழகியலைத்தான் கொண்டிருக்கும். சங்ககாலம் முதல் அப்படித்தான். ஏனென்றால் கவிதை மிகவும் அகவயமானது. புனைகதைகள் வெளியுலகை வைத்து வேறு அழகியலுக்குள் செல்லமுடியும். கவிதை ஒரு சமூகத்தின் கலெக்டிவ் அன்கான்சியஸின் வெளிப்பாடு]
தெலுங்கிலிருந்து வந்த இந்தக் கவிதையை தமிழில் எவரும் எழுதிவிடமுடியுமா? குன்றிமணியின் கருப்பு- சிவப்பு பக்கங்கள் சூரியனுக்கும் மண்ணுக்கும் இடையே உள்ள இணைப்பு என்கிறார். கருப்பும் சிவப்பும் இணையாக இருக்கும் ஒரு அறிவிப்பு அது. ராகத்தில் உள்ள ஆரோகணம் அவரோகணம்போல. சூரியனும் மண்ணும் சமமாக கலந்தது. அப்படி ஒன்றை படித்த தன்னால் உருவாக்கமுடியாது. அந்த கொடி வெளிப்படுத்திவிட்டது. சின்னவீரபத்ருடு சின்னவீரபத்ருடுவாகவே இருந்தால் அதை எழுதியிருப்பான் என்று சொல்கிறார். அவருடைய எளிய கிராமப்பின்னணியை அது சுட்டுகிறது.
அந்தப் படிமத்தை அவர் வெறும்பேச்சாகவே சொல்லியிருப்பது, வெறும் குறிப்பீட்டின் பலத்திலேயே அக்கவிதை நிலைகொள்வது ஓர் அற்புதம்தான்
ராமச்சந்திரன் எஸ்
அன்புள்ள ஜெ
சின்ன வீரபத்ருடுவின் கவிதைகளை ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன்
இஸ்மாயில் என்னும் கவிஞரைப் பற்றிச் சொல்லும்போது
நீர் நிறைந்த ஜாடியின் புனித மௌனம்
விடாது எழுந்தமைகின்றன அலைகள்
என்னும் வரி வருகிறது. ஒரு கவிஞனைப் பற்றிச் சொல்ல மிகச்சிறந்த வரிகள் இவை. அமைதியானவன், நிறைந்தவன். ஆனால் உள்ளே எழுந்தமைந்துகொண்டே இருக்கின்றன அலைகள்.
சரவணக்குமார்
அன்புள்ள ஜெ
என்றென்றைக்குமாக நறுமணம் நம்மை காயப்படுத்தியபோது ஓர் அழகான கவிதை. அந்த தலைப்பே அழகானது. காதலைப் பற்றி எழுதப்பட்ட ஒரு மகத்தான கவிதை. காதலித்தவர்களுக்குத் தெரியும் சில நறுமணங்கள் வாளால் ஓங்கி வெட்டுவதுபோல நம் மீது வந்து விழும் என்று.
ஒருவரிடமிருந்தொருவர்
பெறக்கூடியதையெல்லாம் ஈர்த்துக்கொண்டு
எஞ்சியவற்றை
மொய்க்கும் வண்டுகளுக்கும்
தென்றலுக்கும்
தேவதூதனுக்கும் விட்டுச்சென்றோம்
நறுமணத்தை வண்டுகளுக்கும் தென்றலுக்கும் தேவதூதனுக்கும் விட்டுச்சென்றோம் என்னும் வரியை எண்ணிக்கொண்டே இருக்கிறேன். அது கோடையின் நறுமணம்.வேம்பின் மணம். என் ஊர் முழுக்க அந்த மணம். விடுமுறைக்காலத்தின் மணம். ஆறுவிட்டுச்சென்ற தடம்போல அந்த மணம் மட்டும் எஞ்சுகிறது என்று வாசித்தபோது நெஞ்சு விம்மிவிட்டது. அவ்வளவு நினைவுகள், ஏக்கங்கள். இழந்தகாதல் என்பது ஒரு பெரிய காயம்
எஸ்
அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில்
பனி உருகுவதில்லை. அருண்மொழி நங்கை. சீரோ டிகிரி பதிப்பகம்- வாங்க
அன்புள்ள ஜெ
நலம்தானே?
தங்கள் மனைவி அருண்மொழி நங்கையின் முதல் புத்தகம் பனி உருகுவதில்லை வெளிவந்திருப்பதை அறிந்தேன். முக்கியமான நூல் அது. அதன் முழுக்கட்டுரைகளையும் நான் வாசித்திருக்கிறேன். மிக இயல்பான ஒழுக்கு கொண்ட கதைபோன்ற கட்டுரைகள். நுட்பமான படிமங்கள் வழியாக மையத்தைச் சுட்டுபவை. குறிப்பாக இரட்டைப் படம் கொண்ட ஒரு டாலரை சிறுமி கடித்து ஒன்றாக்குவது, பிரிப்பது வழியாக அவளுடைய ஆழ்மனம் வெளிப்படும் ஒரு கட்டுரை ஒரு ரேமண்ட் கார்வர் சிறுகதையின் அமைதியை கொண்டிருந்தது.
நான் கேட்பது ஒரு சின்ன வம்புதான். ஏன் ஸீரோ டிகிரி பதிப்பகம் அந்நூலை வெளியிடுகிறது? விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாக உங்களுடைய நூல்கள் மட்டுமே வெளியாகும் என்ற கட்டுப்பாடு ஏதாவது உண்டா?
அர்விந்த்
அன்புள்ள அர்விந்த்,
விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இப்போது என் நூல்கள் மட்டுமே வெளிவருகின்றன. ஆனால் எதிர்காலத்தில் எல்லா நூல்களும் வெளிவரும். அருண்மொழியின் நூலும் அதில் வெளிவந்திருக்கலாம். ஆனால் அவள் ஸீரோ டிகிரி பதிப்பகம் வழியாக அது வெளியே வரவேண்டுமென விரும்பினாள். காரணம் சாரு நிவேதிதா மீது கொண்டிருக்கும் பிரியம்.
நெல்லை, குமரி மாவட்டத்தினருக்கு ஊர்ப்பற்று அதிகம் என்று ஒரு பேச்சு உண்டு. ஆனால் தஞ்சைக்காரர்களுக்கு இருப்பது நம்மூர் மொழியில் சொல்வதென்றால் ’அதுப்பு’. அவர்களைப் பொறுத்தவரை தஞ்சையில் பிறந்தால் இலக்கியம், சங்கீதம் எல்லாம் தானாகவே வரும். மற்றவர்களுக்கு என்னதான் செய்தாலும் அந்த அளவுக்கு வராது, கஷ்டப்படவேண்டும். அருண்மொழி மாயூரம் வேதநாயகம் பிள்ளை தொடங்கி சுரேஷ்பிரதீப், மயிலன் சின்னப்பன் வரை ஒரு பட்டியல் போடுவாள். அருண்மொழி கணக்கில் சிதம்பரம்காரரான மௌனிகூட தஞ்சாவூர்தான். அது எப்படி என்று கேட்பவர்களுக்கு நுண்ணுணர்வு போதாது என்று பொருள். ஏன் வம்பு?
அருண்மொழிக்கு சாரு நிவேதிதா, அ.மார்க்ஸ் எல்லாம் அவளுடைய ஊர்க்காரர்கள். அதற்கு அப்பால் சாரு தன்னிச்சையான அகஓட்டம் கொண்ட ஒரு படைப்பாளி. கட்டுரைக்கும் புனைவுக்கும் இடையேயான வேறுபாட்டை அழித்த கலைஞர். சாரு நிவேதிதா அவள் கட்டுரை எழுத ஆரம்பித்ததுமே அழைத்து பாராட்டியதனால் பரவசம். ஆகவே சீரோ டிகிரி பதிப்பகமே அவள் நூலை வெளியிடவேண்டும் என்று விரும்பினாள்.
அவளுடைய ‘சொந்த’ எழுத்தாளர் என்று யுவன் சந்திரசேகரைச் சொல்லலாம். இசை அவர்களுக்கிடையே பொதுவானது. அவருடைய இசை பற்றிய நாவல்களுக்காக மட்டும் ஒரு கருத்தரங்கு அமைக்கும்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். தமிழின் எழுத்தாளர்கள் பலருடன் அவளுக்கு நல்ல நட்பு உண்டு. எம்.கோபாலகிருஷ்ணன், தேவதேவன் எல்லாம் அவளுக்கு இருபத்தைந்தாண்டுக்காலப் பழக்கம். பதினைந்தாண்டுகளுக்கு முன்பு, அவள் ஒரு வரியும் எழுதாமலிருந்தபோதே ”ஒரு புத்தகம் எழுதினால் அசோகமித்திரன் அல்லது அ.முத்துலிங்கம்தான் முன்னுரை எழுதணும்” என்றாள்.
அவளுடைய இலக்கிய வாசிப்பு, ரசனைகள் தனியானவை. இருபதாண்டுகளுக்கு முன்பு நான் சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ நல்ல நாவல் அல்ல என்று ஒரு கட்டுரை எழுதினேன். அடுத்தவாரமே அது ஒரு சிறந்த நாவல் என அவள் ஒரு கட்டுரை எழுதினாள். அதில்தான் பெண்கள் ரொமாண்டிஸைஸ் பண்ணப்படாமல் வெளிப்பட்டிருக்கிறார்கள் என்பது அவள் பார்வை. அந்நாவல் பற்றி வந்த சிறந்த மதிப்பீடு அதுவே என்று சுந்தர ராமசாமி கடிதம் எழுதினார். “நான் ஓர் இலக்கியவாதியைப் பார்க்கிறேன், தொடங்குங்கள்” என அதில் எழுதியிருந்தார்.
ஆனால் அவள் எழுத ஆர்வம் காட்டவில்லை. நிறைய வாசிப்பவர்களுக்கு அந்தத் தயக்கம் வருவதுண்டு. இசை கேட்பதும் எழுதாமலாக ஒரு காரணம். யுவன் சந்திரசேகர் அவன் வாழ்க்கையில் நடுவே ஒரு பத்தாண்டுகளை அப்படி இசையில் விட்டிருக்கிறான். தன் தம்பியின் இழப்பு உருவாக்கிய ஆழமான உளநெருக்கடியை கடக்கும்பொருட்டு அருண்மொழி எழுதினாள். அது அவளை மீட்டது. இதிலுள்ளது ஒரு அந்தரங்கமான காலப்பயணம். அதில் நான் எவ்வகையிலும் தலையிடவில்லை. அது அவள் விருப்பபடியே வெளியாகிறது.
ஜெ
அ.முத்துலிங்கம் முன்னுரை https://www.vishnupurampublications.com/December 17, 2021
வேதசகாய குமார் நினைவில்…
இன்று, டிசம்பர் 17 வேதசகாயகுமார் மறைந்து ஓராண்டு ஆகிறது. ஒர் உற்ற நண்பரின் சாவின் ஓராண்டு என்பது சிக்கலானது. அவரை கடந்து வாழ்க்கை எவ்வளவு ஓடியிருக்கிறது என்னும் வியப்பு உருவாகிறது. கூடவே எண்ணியதுபோல அவர் கடந்துசெல்லவில்லை, அழுத்தமாக நினைவில் செறிந்திருக்கிறார்.
என்ன நடந்தது? முதலில் ஒரு நிலைகுலைவு. அதன்பின் அவருடைய சொற்கள் மற்றும் நினைவுகளைக்கொண்டு அவரை சுருக்கி ஒரு சொந்த வேதசகாயகுமாரை உருவாக்கிக் கொண்டேன். இதற்கு அவர் உடலுடன் குரலுடன் இருக்கவேண்டிய தேவை இல்லை. இந்த வேதசகாய குமார் நினைவில் வந்துகொண்டே இருக்கிறார். எப்போதும் பேச்சில் எழுகிறார்.
வேதசகாயகுமார் எழுதியதை விட பேசியது மிக அதிகம். உரையாடல்தான் அவருடைய வழிமுறை. அதில் அவர் சொன்னவை என் பண்பாட்டுப்புரிதலை பலமடங்கு கூராக்கியவை. தமிழகச் சாதிகளின் வளர்ச்சி பற்றி, தமிழ் பொருளியலின் பரிணாமம் பற்றி, தமிழிலக்கியத்தின் வெவ்வேறு காலகட்டங்கள் பற்றி அவருக்கே உரித்தான ஆய்வுகள், பார்வைகள், ஊகங்கள் எப்போதுமிருந்தன. இந்த முப்பதாண்டுகளில் அவரும் அ.கா.பெருமாளும்தான் என் சிந்தனையை மிகப்பெரிய அளவில் பாதித்தவர்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் அவர் ஓர் உரையாடலில் சொல்லத் தொடங்கினார். ஆதன் என்னும் சொல் சங்க இலக்கியப்பரப்பில் எப்படிப் பயின்று வருகிறது. நல்லாதனார், ஆதனார், ஆதன் முதலிய பல பெயர்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. ஆதன் என்றால் தந்தை, மூத்தவர் என பொருள். இந்த ஆதன்கள் ஒரு தனிக்குலமாக இருந்தார்களா? பண்பாட்டுக்குள் ஒரு தனிப்பண்பாடா?
அல்லது ஆதன் என்பது ஒரு தெய்வமா? பின்னாளில் சிவனை ஆதன், அத்தன் என்கிறார்கள். சிவனுக்கு முன் ஒரு தொல்தெய்வம், தெய்வத்தின் முதல்வடிவம் [Proto God] இருந்ததா?
வேதசகாயகுமாரின் உரையாடல்கள் அவ்வண்ணம் மின்னல்களை உருவாக்கிக்கொண்டே செல்பவை. ஆனால் அவர் பெரும்பாலும் அவ்வாறு சென்று உறுதியான கொள்கைகளை உருவாக்குவதில்லை. அதற்கான பொறுமை அவருக்கில்லை. அவர் விதைத்துவிட்டுச் செல்லவே விரும்பினார் என்று படுகிறது. அ.கா.பெருமாள் அவர்கள் சீரான, தெளிவான ஆய்வுநூல்கள் வழியாக தன் முடிவுகளை முன்வைத்துச் செல்வதுபோல வேதசகாயகுமார் செய்யவில்லை.
இருபதாண்டுகளுக்கும் மேலாக நான் வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் மற்றும் குமரிமைந்தன் ஆகியோரின் உரையாடல்களத்திலேயே இருந்திருக்கிறேன். மண்டையை வெடிக்கவைக்கும் பண்பாட்டு முடிச்சுகள், திகைப்பூட்டும் வரலாற்று ஆழங்களை கண்டுகொண்டே இருந்தேன். ஆகவேதான் ஏதாவது ஒரு மேலைநாட்டு கல்வியாளரின் இலக்கிய- பண்பாட்டுக் கொள்கையை பார்த்ததுமே பரவசமடைந்து, தலைமேல் ஏற்றுக்கொண்டு, பரவசக்கூச்சலிடும் தமிழ் முதிரா அறிவுஜீவிகளை ஒரு மென்மையான புன்னகையுடன் கடந்துசெல்கிறேன். நாம் இங்கே அகழவும் அறியவும் எல்லையற்ற நுட்பங்களும் ஆழங்களும் உள்ளன.
வேதசகாயகுமாரின் தனிப்பெரும் சாதனை என்பது தமிழ் இலக்கிய விமர்சன வரலாற்றுக் கலைக்களஞ்சியம். இணையத்தில் வெளியாகி நீண்டநாள் இருந்த அந்நூலை மேலும் செம்மைசெய்து அச்சுவடிவில் கொண்டுவர அவர் விரும்பினார். அதன்பொருட்டு இணையவடிவை விலக்கிக் கொண்டார். அதைச் செய்திருக்கக்கூடாது, இணையவடிவமே மிக உதவியானது என்பது என் எண்ணம். அவர் அவ்வண்ணம் நினைக்கவில்லை. அவருக்கு இணைய உலகமே அறிமுகமில்லை. அடையாளம் வெளியீடாக அந்தப் பெருநூல் வெளிவரவிருப்பதாகச் சொன்னார்கள். வெளிவரவேண்டும்.
இன்று காலை பத்துமணிக்கு வேதசகாயகுமாரின் கல்லறை திறப்பு என்று அவர் மகன் விஜய் கூப்பிட்டுச் சொல்லியிருந்தான். ஆனால் என் மனதில் எப்படியோ டிசம்பர் 16 என பதிவாகியிருந்தது. நேற்றே காலையில் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன்.திருமதி வான்மதி கௌசல்யா வேதசகாயகுமார் அவர்களை பார்த்துவிட்டு திரும்பி வந்தேன்.
இன்று காலையில் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அருகே தனியாக அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்துக்கு சென்றோம். முப்பதுபேர், அனைவருமே குடும்ப உறுப்பினர்கள். வேதசகாய குமாரின் கல்லறை அழகாக அமைந்திருந்தது. கரியகல்லில் அவருடைய படம் புள்ளிகளால் வரையப்பட்டிருந்தது. மெல்லிய குறும்பு கொண்ட அச்சிரிப்பை உருவாக்க முடிந்திருந்தது.
“தீபச்சுடரை கொளுத்திக்கொண்டவன் அதை மறைத்துவைக்க மாட்டான். அனைவருக்கும் உதவும்படி அதை ஓர் உயர்ந்த மேடை மேல் பொருத்தி வைப்பான்” என்னும் பைபிள் வரி பொறிக்கப்பட்டிருந்தது. அவருக்கு உகந்த வரிதான்.
அமைதியான சூழலில் அவருக்காக ஒரு பிரார்த்தனை. மலர்கள் சூட்டி அவர் கல்லறையை வணங்கினோம். அதன்பின் திரும்பி வந்தேன். எனக்காக மலையாள இயக்குநர் வினோத் காத்திருந்தார். அவருடன் பேசினேன். சைதன்யாவின் தோழி கிருஷ்ணகிரி அன்பு வந்திருந்தாள். பேச்சின் வழியாக வேதசகாயகுமார் நினைவிலிருந்து அகன்றார்
மாலையில் லக்ஷ்மி மணிவண்ணனும் கோயில்பட்டியில் இருந்து உதவி இயக்குநர் மாரிமுத்துவும் நடிகர் பெருமாளும் வந்திருந்தனர். இருவருமே அங்காடித்தெருவில் பணியாற்றியவர்கள். பெருமாள் அதில் கழிப்பறை கழுவத் தொடங்கி மெல்ல அங்காடித்தெருவில் நிலைகொள்ளும் உழைப்பாளியாக நடித்தவர்.
நெல்லைமாவட்ட சாதிகளின் எழுச்சி வீழ்ச்சி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நெல்லையின் பண்பாட்டுச் சிக்கல்களை நோக்கி பேச்சு சென்றது. நான் அதைப்பற்றி வேதசகாயகுமாரின் கருத்து என்ன என்று விரிவாகப் பேசிக்கொண்டிருந்தபோது சட்டென்று இன்று அவர் நினைவுநாள் என நினைவுகூர்ந்தேன். மணிவண்ணனிடம் அதைச் சொன்னேன். இனி அவ்வாறுதான் பிரியத்துக்குரிய குமார் என்னுடன் வாழ்வார்.
விரியும் கருத்துப் புள்ளிகள் : வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.
வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்
எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்-நாகர்கோயில்
வேதசகாயகுமார்- கமல்ஹாசன் அஞ்சலி
வேதசகாயகுமார், இயற்கைவேளாண்மை,வசை
அருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை
பனி உருகுவதில்லை. அருண்மொழி நங்கை. சீரோ டிகிரி பதிப்பகம்- வாங்க
2015ம் ஆண்டில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதினைப் பெற ஜெயமோகன் கனடாவுக்கு அழைக்கப்பட்டபோது அவருடன் அருணாவும் வந்திருந்தார். ஜெயமோகன் பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டார். நண்பர்கள் வீட்டு விருந்துகளில் நீண்டநேரம் இலக்கியம் பேசினார். காரசாரமான விவாதங்கள் நடந்தன. அருணாவும் உட்கார்ந்திருந்தார். அவருடன் பேசும்போது சமையல் பற்றியும், அவருடைய குழந்தைகள் பற்றியும், வேலை பற்றியும் பேசினர். இப்பொழுது அதை யோசித்தாலும் வெட்கப்பட வேண்டியுள்ளது. அருணா, ஆர்தர் ஆஷ் போல மௌனமாக உட்கார்ந்திருந்தார். அவருடைய பெருந்தன்மையையும், அடக்கத்தையும் யோசித்து இன்றைக்கும் நான் வியக்கிறேன்.
அ.முத்துலிங்கம் முன்னுரை
வசந்த், மாற்று சினிமா- கடிதங்கள்
இன்று ஜெ தளத்தில் சிவரஞ்சனியும் சில பெண்களும் திரைப்படம் குறித்த யெஸ், ராம்குமார் அவர்களின் பார்வை முக்கியமானது. அதே சமயம் சில எல்லைகளையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக கீழ் கண்ட வரிகளில் அந்த எல்லை துலங்குவதைக் காணலாம்.
‘இலக்கிய வாசகனாக’ நின்று கலைச் சினிமாவை ரசனை மதிப்பபீடு செய்வதால் உருவாகும் எல்லை இது. இலக்கியத்தை அடிப்படையாக கொண்ட மாற்று சினிமா என்பது மொழி வெளிப்பாடான அந்த இலக்கியத்தை ‘அப்படியே’ காட்சியாக மாற்றிக் காட்ட வந்த ஒன்று அல்ல. ஏன் ஓவியத்தையோ இசையையோ நாடகத்தையோ கூட அப்படியே காட்சியாக ‘காட்ட’ வந்த ஒன்று அல்ல.
‘தன்னுடைய’ ‘சினிமா எனும் தனித்த கலைக்கு’ அதன் உயிர்ப்பொருளுக்கான அடிப்படையை உருவாக்க அவ்வியக்குனர் ஓவியம், நாடகம், இசை, இலக்கியம் இவற்றில் இருந்தெல்லாம் எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும் எடுத்துக் கொள்கிறார். சிலவற்றை மறு வார்ப்பு செய்கிறார். அப்படித்தான் சினிமா ‘இயக்குனர்’ கலை என்று மாறுகிறது.
இந்த மறு வார்ப்பில் கேளிக்கை சினிமா ஓடை கோருவது எதுவோ அப்படி மறு வார்ப்பு செய்யப்பட்ட இலக்கிய கதையை கொண்ட படம் அசுரன் எனக் கொண்டால், கலைச் சினிமா ஓடை கோரும் (அங்கேயும் கணக்குகள் உண்டு. உதாரணமாக வெற்றி மாறனின் விசாரணை எந்த ‘பிரிவில்’ இடம் பெற்றது என்பதை அவதானிப்பதில் இருந்து அறியலாம். அந்த மாற்று ஓடைக்கும் அது வெளியாகும் பிளாட்பாரம் களில் ‘லேபில்கள்’ உண்டு. அந்த லேபில்களை ஒப்பு கொள்ளும்படி படம் இருக்க வேண்டியது அந்த ஓடையின் வணிக விதி) மறு வார்ப்பு எதுவோ அதையே வசந்த்தும் செய்திருக்கிறார். அந்த விதிகளுக்கு உட்பட்டு அதே சமயம் ‘over do’ செய்யாமல் ஒரு கலைப்படம் எடுத்திருக்கிறார் வசந்த்.
இந்த அடிப்படையில் இந்த சினிமாவைப் பார்க்கும் போது மூல இலக்கியத்தில் வெளிப்படும் ‘அதே’ சப் டெக்ஸ்ட் இதில் வெளிப்படா விட்டாலும், இந்தக் கலைப்படம் ‘காட்சி வழியே’ பொதிந்து வைத்துள்ள சப் டெக்ஸ்ட் என்பதும் முக்கியமானதே.
உதாரணமாக முதல் கதையில் நெருப்பு உக்கிரமாக எரிய, அதை கக்கும் புகை போக்கி கொண்ட ஆலையும் சரஸ்வதியும் சில் அவுட் இல் நிற்கும் காட்சி.
இரண்டாம் கதையில் முதலில் வீட்டுக்கு உள்ளே மாடியில் பரண் மேல் இருளில் யார் கண்ணிலும் படாமல் கிடக்கும் பந்து இறுதியில் தெருவில் கிடக்கும் காட்சி.
மூன்றாம் கதையில் நாயகி தான் ஓடிய பிரம்மாண்ட மைதானத்திலிருந்து புழுதி அடைந்த குடோனில் வந்து அமர்ந்திருக்கும் காட்சி. அவள் இருக்கும் வீட்டின் கதவு ஒரு கிளி கூண்டின் கதவு போலவே இருப்பது, இப்படி படத்திலிருந்து நிறைய சொல்லிக்கொண்டே போக முடியும். இப்படி எல்லா வகையிலும் இப்படம் உலக அரங்கில் தமிழ் நிலத்திலிருந்து ஒரு படம் என்று முன்வைக்க மரியாதைக்குரிய முன்னோடி முயற்சிதான்.
எனினும், இது இவ்வாறாக இப்படி ஒரு உரையாடல் நிகழ வேண்டும் என்றாலும் கூட அதற்கு இன்று தமிழில் இருக்கும் ஒரே வெளி jeyamohan. in தளம் மட்டுமே. விஷ்ணுபுரம் நண்பர்கள் கூடி, டு லெட், மாடத்தி, கூழாங்கல், சிவரஞ்சனி இந்த நான்கு படங்களின் இயக்குனர்களை ஒரு மேடையில் அமர்த்தி அவர்களுக்கு ஒரு நாள் ரசனை விமர்சன அரங்கத்தோடு இணைந்த பாராட்டு விழா ஒன்றை எடுக்க முயலலாம். ஜெயகாந்தன் உள்ளிட்ட தமிழின் கலைச்சினிமா முன்னோடிகள் குறித்து அங்கே பேசலாம். யார் அறிவார், தமிழின் மாற்று சினிமா ஓடைக்கான தளம் என்ற ஒன்று நாளை அமையுமானால், அதன் உற்று முகம் இவர்களே எனும் வரலாற்று பதிவாக அது அமையவும் கூடும்
கடலூர் சீனு
அன்புள்ள ஜெ
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் பற்றி ராம்குமாரின் கடிதம் கண்டேன். நல்ல கடிதம். ஆழமான சில பார்வைகளை முன்வைத்திருந்தார். முக்கியமாக நாம் நம்முடைய சூழலுக்கு உகந்த ஒரு திரைமொழியை உருவாக்கிக் கொள்ளவேண்டிய தேவை பற்றி எழுதியிருந்தார். அது ஒரு முக்கியமான பார்வை. நாம் இன்று ஹாலிவுட் உருவாக்கிய பரபரப்பான திரைக்கதை, அறைந்து இழுக்கும் காட்சிமொழி ஆகியவற்றுக்கு பழகிவிட்டோம்.
அந்த காட்சிமொழி உருவாக்கும் உலகம் ஒரு ஃபேண்டஸி. அதில் நம் வாழ்க்கையின் உண்மைகளைச் சொல்ல முடியாது. நமக்கான சினிமா மொழியை ரே.கட்டக், அடூர் போன்றவர்கள் உருவாக்கினார்கள். ஆனால் இன்றைய சினிமா ரசிகர்களுக்கு அந்த மொழி அன்னியமாக உள்ளது. அவர்கள் அவற்றிலிருந்து விலகி கவற்சியான காட்சிமொழிக்கு வந்துவிட்டனர். அந்த மரபு அறுந்துவிட்டது. இன்றைக்கு ‘நல்ல சினிமா’ என்று சொல்லப்படுவதெல்லாம் பரபரப்பான சினிமா, கவற்சியான சினிமா, சிக்கலான திரைக்கதை கொண்ட சினிமாதான்.
நாம் ஒருவகையான அப்பட்டமான, எளிமையான சினிமாவை உருவாக்கவேண்டும். அதை ரசிக்கும் பயிற்சியை அடையவேண்டும். மக்கள் பழகிப்போயிருக்கிறார்கள்., விரும்புகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு பிடித்த சினிமாபாஷையில் நாம் பேச ஆரம்பித்தால் நம் உலகைப் பேசமுடியாது.
ஏனென்றால் சினிமா என்பது காட்டுவது. ஒரு லொக்கேஷனை மாற்றினால் சினிமாவே மாறிவிடுகிறது. சிவரஞ்சனியும் கதையில் அந்த மூன்றுகதைகளுக்கும் இடையேயான வேறுபாடே அவர்களின் வீடுகள் வேறுவேறு என்பதுதான்.
அதைச் சொல்லும்போது ஒன்றைச் சொல்லவேண்டும். சினிமாவின் சப்டெக்ஸ்ட் வேறு, இலக்கியத்தின் சப்டெக்ஸ்ட் வேறு. சினிமாவின் சப்டெக்ஸ்ட் அதன் மொழியிலும் அது கூறாது விட்டதிலும் இருக்கிறது. சினிமாவின் சப்டெக்ஸ்ட் அதன் காட்சிகளில் உள்ளது. சரஸ்வதியின் கொல்லைப்பக்கம் – வீட்டு முகப்பு இரண்டுக்குமான வேறுபாட்டை சினிமா காட்டுகிறது. அதன் சப்டெக்ஸ்ட் அங்கேதான் இருக்கிறது.
மேலோட்டமாக சினிமா பார்ப்பவர்களுக்கு சிவரஞ்சனி மீண்டும் ஓடுகிறாள், அவளுடைய ஓட்டத்திறன் இதுக்குத்தான் பயன்படுகிறது என்று தோன்றும். சப்டெக்ஸ்ட் என்பது அவள் விட்டுவிட்ட சிலவற்றை துரத்திப்பிடித்துவிட்டாள், அவளால் முடியும் என உணர்ந்துவிட்டாள் என்பது
அருண்குமார்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:வசந்த் சாய்சின்ன வீரபத்ருடு – கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
சின்ன வீரபத்ருடு அவர்களின் கவிதைகள் உண்மைலேயே ஒரு புன்னகையை வரவைக்கிறது. நீங்கள் யாரை கவிஞன், எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று தொடர்ந்து உங்களைப் படிக்கும்போது கண்டு கொள்கிறேன். மொழி, இனம் எல்லாம் நல்ல இலக்கியத்திற்கு இல்லை.
“சுற்றுக்கள் நிறைவடைகையில் விதை ஒன்று முளைவிடும்.
என் முனைப்புக்கு ஒரு உருவத்தை அருள்வித்து
அதிகாலை கதிரொளி ஒன்று உயிர் தெளிக்கும்.
மாமரங்கள் சாட்சியாக என் வாழ்க்கை அப்போதோரு
பச்சிளம் குழந்தையாக மாறும்”. இது நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கின இடத்தை காட்டுகிறது.
ஒரே நிலத்தடி நீர் கிணறாகவும், அடி பைப், நாம் மோட்டார் போட்டு நிரப்பும் தண்ணீராகவும் இருப்பதுபோல் ஒரே ஞானம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் வெளிப்படுகிறது. ஒரே வாழ்க்கை ஒவ்வொரு மொழியிலும், எப்படி எல்லாம் கைவரப்படுகிறது. ஆனால் அடிநாதம் ஒன்று இல்லையா? கவிதையோ, கதையோ அந்த மானுட மீட்பைத் தொட்டுவிட்டால் அதுவே சிறந்த படைப்பு. உங்களையும் மற்றவர்களையும் நேரில் சந்திக்க பயமாய் இருந்தாலும், ஒரு ஆசையும் துடிப்பும் இருக்கிறது.
வாழ்த்துகளுடன்
டெய்ஸி.
அன்புள்ள ஜெ
சின்ன வீரபத்ருடு அவர்களின் கவிதைகள் நாம் வாசித்துக் கொண்டிருக்கும் கவிதைகளில் இருந்து முற்றிலும் வேறொன்றாக இருக்கின்றன. அந்த அழகியலுக்குள் செல்ல கொஞ்சம் தாமதமாகியது. முதல் சிக்கலாகத் தோன்றியது நாம் நிறுத்தி நிறுத்தி உடைத்து எழுதும் தமிழ் இவற்றில் இல்லை. இவை நீளமான முழுமையான சொற்றொடர்களாக உள்ளன. அது மொழியாக்கத்தலும் இருக்கலாம். ஆகவே கவிதையை வாசிக்க கொஞ்சம் கவனம் எடுக்கவேண்டியிருந்தது.
ஆனால் அதைவிட முக்கியமானது இந்தக் கவிதைகளின் சென்ஸிபிலிட்டி முழுக்கமுழுக்க புதிசாக இருப்பதுதான். உதாரணம் இக்கவிதை
முரட்டு கம்பளியில் சுருண்டு கிடக்கும் மரங்கள்.
வெளியில் தெரியும் லோலாக்குகள் போல
எட்டி பார்க்கும் தளிர் இலைகள்.
பச்சைக் கம்பிளிக் குல்லாய் போல மரத்தின் இலைகள். லோகாக்கு காதுமடலில் எட்டிப்பார்ப்பதுபோல பொன்னிறத் தளிர்கள். புத்தம்புதிய உவமை. ஆனால் மரபார்ந்த கவித்துவம் கொண்டது.
ஆனால் அந்த மரபார்ந்த உவமையே ஒரு புதிய வரியால் வேறொன்றாக ஆகிவிடுகிறது. காலைவெயில் விழுந்த மாமரத்தளிர் மென்மையான சருமம் கொண்ட குழந்தை.
அதிகாலை கதிரொளி ஒன்று உயிர் தெளிக்கும்.
மாமரங்கள் சாட்சியாக என் வாழ்க்கை அப்போதோரு
பச்சிளம் குழந்தையாக மாறும்.
அந்த வரியை அடுத்து அவர் நீட்டிச்செல்லும்போது ஒரு புன்னகை உருவாகிறது. அதுதான் நவீனக்கவிதையின் அழகியல்.
பிள்ளையை தொட்டிலில் போடும் நாளில்
அனைவருக்கும் சொல்லி அனுப்புகிறேன்
தெலுங்குக் கவிதை பற்றி நான் இதுவரை கொண்டிருந்த எல்லா எண்ணங்களையும் மாற்றியமைத்துவிட்டன இக்கவிதைகள். மிகமிக நவீனமான கவிதைகள் அங்கே எழுதப்படுகின்றன. எப்படி தமிழர்களாகிய நாம் அரசியல்கூச்சல், சினிமா வழியாக வெளியே அறியப்படுகிறோமோ அதே விதிதான் தெலுங்குக்கும். இப்படி ஒரு நவீனக் கவிஞர் தன் புதிய கவிதைகளுடன் முன்வரும்போதுதான் நாம் எத்தனை பிழையாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று தெரியவருகிறது
மோகன்குமார் ஆர்
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-4
நான் கவிதையாய் மாறும் தருணம்
நாள் முழுதும்
எங்கு சென்றாலும் ஏது செய்தாலும்
பிரார்த்தனை நேரம்
மேற்திசை நோக்கும்
என் சோதரன் போல,
நான் கவிதையாய் மாறும் நேரம்
வான்திசை நோக்குவேன்.
உங்களிடமிருந்து எனை நான்
துண்டித்துக்கொள்ளும் தருணம் அது.
யாரை சந்தித்தாலும், பேசினாலும்
நாள் முழுவதும் இறைக்கிறேன்,
எண்ணற்ற குறிப்புகள், குரல்கள்,
சில இனிமையானவை சில கடுமையானவை.
ஆழிமேற்பரப்பின் அலைகளென
உருக்கொண்ட உடனேயே
உடைந்து சிதறுபவை.
பெருகிய உணர்வுகளின்
தடங்கள் ஏதும் எஞ்சுவதில்லை.
சொர்க்கத்தை சில கணங்கள்
வேண்டி அழைக்கிறேன்.
தலைவனின் சொற்கள் முன்
திரண்டெழும் குடிகளின் நிசப்தம் போல,
மௌனம் எனது நாடி நரம்புகளில் ஊடுருவுகிறது,
உடலே செவியாகிறேன்.
ஒற்றைக் குரலைக் கேட்கிறேன்.
அதுவரை அலைக்கழித்த
பல ‘நான்’கள்
உடைந்து சிதறி பொடிந்து கரைய
தனித்த ‘நான்’ எழுகிறது,
விந்தை! அறிந்தோரும் அயலாரும்
அம்முகத்துடன்
அடையாளம் காண்கிறார்கள்
… ஒரே போல.
மகாபலிபுரக் கடற்கரையில் ஒரு கோவில்
கடற்புறத்து விதானத்தின்
வரைதிரையில்
யாரோ ஒரு கவிதையை
செதுக்கி விட்டுச் சென்றார்.
வார்த்தைக்கு வார்த்தை
மொழியில் புகுத்தப்பட்ட
எண்ணம் போல ,
ஒவ்வொரு கல்லாய்
அமைத்தார்.
ஒவ்வொரு மாலையும்
அங்கு குழுமும் கூட்டம்.
கவிதை தொடர்ந்து எதிரொலிக்கிறது.
அதை பொருள்கொள்ள
யார் வருகிறார்கள்?
கண்ணில் படும்
சில கிளிஞ்சல்கள்
உல்லாசக் குதிரைகள்
நீந்துபவர்கள்
காதலர்கள்
ஒரு உறைந்த கவியும்
கரைந்து இடையறாது பாயும்
அவரது கவிதையும்
நானும் ஒரு மாலை அங்கு சென்றேன்
அக்கவிதையின் நறுமணம்
வாழ்வுக்கும் எனை நீங்காது.
இடி உரைத்த சொல்
ஒரு சித்திரை முன்மதியம்
கிராமத்து மாந்தோப்பின்
நிழலின் கீழ்,
தூக்கத்தின் அலைகளில்
நான் சோம்பிக் கிடந்தபோது
இடி தன் உரையாடலைத்
தொடங்கியது.
கோடை முதல் மழையில்
முளைத்தெழும் காளான் போல,
யுகங்களாய் உறங்கிய நினைவுகள்
உயிர்கொண்டது போல,
ஆண்டுகளாய் ஓரிடத்தில்
நின்றுவிட்ட ரயில்
உறக்கத்திலிருந்து உலுக்கப்பட்டது போல;
துருப்பிடித்து வலுவிழந்த
திருகுகளில் இருந்து
விடுதலையடைந்த கதவுகள்
அடித்துக்கொள்வது போல,
இடிமுழக்கம் உள்ளே கிளர்த்திட்ட சஞ்சலங்கள்.
சுட்டெரிக்கும் சூரியன் மேல்
கனத்த முகில்திரை வீசி
பழகிய இருள் பகலைக் கவ்வ,
மறந்துவிட்ட சமிக்ஞைகள் உயிர்கொள்கின்றன.
ஆதியில் நீ பேசக்கற்றுக்கொண்டதை விடத்
தொன்மையான மொழியில்
அமைந்ததச் சொற்கள்.
செவிகளைவிட
நினைவின் அடுக்குகளைக் கொண்டே
கேட்க இயலும்
இடியின் செய்தியை.
இதுவரை மக்களின் பேச்சைக்
கேட்பதின் ஆயாசத்தில் இருந்தாய்,
அவர்களது வாக்கியங்களைப்
பொருள் கொள்ள
முயன்று கொண்டிருந்தாய்.
அவர்களது கருத்து
உன் செவிகளைத் தொடும் முன்னரே
முடிவுற்றிருந்தன உரையாடல்கள்.
அன்று மதியம்
அந்த இடி
உரையாடிய நேரமெல்லாம்,
நிறைமலர்ந்த பூமரத்தின் மீது
தேனீக்கள் முனகுவது
போலிருந்தது.
நீ எதிர்பார்த்தது
வார்த்தைகளின் சலசலப்பு அல்ல,
தேனின் இனிமையான ஒரு துளியை.
அதுவரை ஒருவருடன்
அர்த்தமுள்ள உரையாடலில்
இருந்ததன் அடையாளமாக
ஒரு நறுமணக் காற்றின் கீற்று
உன்னைச் சூழ்கிறது.
இடி உரைத்ததென்ன என்ற
உலகத்தின் கேள்விக்கு
சொற்களைக் குறைக்காதே,
விளக்கவும் முயலாதே.
ஏதும் பேசாமலிருந்துவிடுவது நல்லது.
சொர்க்கத்தின் புல்வெளிகளில்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய்.
மாமர நிழலைத்
துணையெனக் கொண்டு
நீ கேட்டதனைத்தையும்
நினைவுமீட்டு.
ஆங்கிலம் வழி தமிழில் சுபஸ்ரீ
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

