Jeyamohan's Blog, page 863
December 20, 2021
விஷ்ணுபுரம் விருந்தினர், சில கேள்விகள்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருந்தினர் பட்டியலைப் பார்த்தேன். தொடர்ச்சியாக வாசிக்கிறேன். நான் விழாவுக்கு வரமுடியாத தொலைவில் இருக்கிறேன். ஆனாலும் இந்த விழாவில் மானசீகமாகக் கலந்துகொள்கிறேன். இந்த விருந்தினர்களின் எழுத்துக்களைப் பற்றிய கட்டுரைகள், அறிமுகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கடிதங்கள் வழியாக விவாதங்கள் நிகழ்கின்றன. எனக்குச் சில சந்தேகங்கள். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
முதல்கேள்வி, இந்த விருந்தினர் பட்டியல் எப்படி தயாராகிறது? இதற்கு ஏதாவது அளவுகள் உண்டா? இரண்டாவது கேள்வி, இந்த விருந்தினர்களில் பலர் இளம் எழுத்தாளர்கள். அவர்களில் சிலர் ஒரு தொகுப்புகூட போடாதவர்கள், அல்லது முதல் தொகுப்பு மட்டும் போட்டவர்கள். அவர்களின் படைப்புகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும் பாராட்டுக்களும் விவாதங்களும் அவர்களுக்குக் கூடுதலான தன்னம்பிக்கையை அளித்து அவர்கள் எழுதுவதே இலக்கியம் என்று எண்ணவைக்கும் என்று எனக்கு படுகிறது. அவர்களுக்குத்தேவை கறாரான விமர்சனமே ஒழிய இந்தவகையான திடீர்ப் புகழ் அல்ல.
அத்துடன் விருந்தினர்களின் பட்டியலில் இதழாசிரியரான கோகுல் பிரசாத் இருக்கிறார். அவர் பிராமணர்களைப் பற்றிய மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். கடுமையான என்று மரியாதையாகச் சொல்கிறேன். தரமற்ற விமர்சனங்கள் அவை. அதாவது வெறும் காழ்ப்புகள். விஷ்ணுபுரம் அமைப்பு இப்போது அந்த திசைநோக்கிச் செல்கிறதா என அறிய விரும்புகிறேன். இது ஒரு தொடக்கமா?
அருண் ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள அருண்,
ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் நிகழ்வுகள் பற்றிய வெவ்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கிறது. இது ஓர் உரையாடல் அமைப்பு என்பதனால் இவ்விவாதம் தேவையாகிறது. இலக்கிய ஆர்வம் கொண்ட அனைவரும் கேள்விகேட்கத் தகுதி கொண்டவர்கள். பதில்சொல்ல நாங்களும் கடமைப்பட்டவர்கள்.
விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கு இயல்பாக ஒருங்கிணைந்து வந்த ஒன்று. 2015 வரை முதல் ஆறாண்டுகள் முந்தையநாளில் இலக்கியச் சந்திப்புகளை தன்னிச்சையாக நிகழ அனுமதித்தோம். அதாவது வாசகர்கள் வந்து கூட ஓர் இடம், ஒரு கல்யாண மண்டபம் அளித்தோம். அங்கே எழுத்தாளர்களை வரவழைத்தோம். அவர்கள் தங்கள் விருப்பப்படி சந்தித்து உரையாடலாமென ஏற்பாடுசெய்தோம்.
அந்தச் சந்திப்புகள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தன. பல இனிய நினைவுகள். ஆனால் மெல்லமெல்ல கூட்டம் பெருகியது. இருநூறுபேருக்குமேல் அரங்குகளில் பங்கெடுக்கலாயினர். அந்நிலையில் உரையாடலை ஒழுங்குசெய்யவேண்டிய தேவை எழுந்தது. குறிப்பாக நிகழ்ச்சி உயர்ந்த மேடையில்தான் நிகழமுடியுமென்று ஆயிற்று. அவ்வாறுதான் இன்றைய எழுத்தாளர்- வாசகர் சந்திப்பு உருவாகியது.
இது ஓர் எழுத்தாளரை வாசகர்கள் உசாவி அறிய முயல்வது. அந்த எழுத்தாளரின் புனைவுகள், அவருடைய வாழ்க்கைப் பார்வை பற்றிய கேள்விகள் வழியாக அவரை அணுகுவது. ஒரு கேள்வி-பதில் நிகழ்வு. ஆனால் அச்சில் வாசிக்கும் பேட்டிக்கும் இதற்குமான வேறுபாடு என்பது நேருக்குநேர் ஆசிரியரை வாசகர்கள் சந்திப்பதுதான்.
இந்த நிகழ்வுக்கு எப்படி இலக்கிய ஆசிரியர்களை தெரிவு செய்கிறோம்? எழுத்தாளராக தங்கள் இடத்தை நிறுவிக்கொண்டவர்களை அழைக்கிறோம். சோ.தர்மன் அல்லது எம்.கோபாலகிருஷ்ணனுக்கு இலக்கியத்தில் இடம் ஏற்கனவே அமைந்துவிட்டிருக்கிறது. இளம்படைப்பாளிகளில் குறிப்பிடும்படியான தொடக்கம், நல்ல படைப்புகள் வழியாக சூழலில் அறிமுகம் கொண்டவர்களை அழைக்கிறோம்.
என் தளத்தை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் எவர் அழைக்கப்படுவார் என்பதைச் சொல்லிவிட முடியும். குறிப்பிடத்தக்க படைப்பாளிகளை எவரேனும் இங்கே பரிந்துரை செய்துகொண்டே இருக்கிறார்கள். ஏறத்தாழ எல்லா நல்ல படைப்புகள் பற்றியும் இங்கே பேசப்பட்டிருக்கும். அவ்வாறு பேசப்பட்டவர்களை நண்பர்களுடன் விவாதித்து நான் பரிசீலிக்கிறேன். அவர்களின் படைப்பியக்கம் மற்றும் இலக்கியம் மீதான நம்பிக்கை ஆகியவற்றையே அளவுகோலாகக் கொள்கிறேன். அவ்வாறு செயல்படும் அனைவருமே அழைக்கப்படுவார்கள்.
எவர் தவிர்க்கப்படுவார்கள்? இலக்கியத்தை முதன்மையாக எண்ணாமல் வெறும் கட்சியரசியல், காழ்ப்புகள், வெறும் இலக்கிய வம்புகள் என அலைபவர்களை அழைப்பதில்லை. அவர்களுக்குரிய அரங்கு அல்ல இது. இதன் மனநிலையும் மொழியும் முற்றிலும் வேறு. அவர்கள் தங்களுக்குரிய களங்களில் பேசிக்கொள்ளலாம். அவர்கள் எங்கே என்ன பேசினாலும் எங்களுக்கு ஒன்றுமில்லை. அவர்களை பார்வையாளர்களாகவும் நாங்கள் விரும்பவில்லை.
இளம் வாசகர்களுக்கான அரங்கில் பங்குபெறுபவர்களுக்கான அளவுகோல் சற்று நெகிழ்வானதுதான். ஏனென்றால் எவர் எவ்வண்ணம் எழுவார் என முன்னரே சொல்லிவிட முடியாது. வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்பதுதான் என் எண்ணம். அவர்கள் மேல் வாசகர் கவனம் விழுகிறது, வாசகர்களுடன் அவர்கள் உரையாடுகிறார்கள். அவ்வாய்ப்பை அவர்கள் எவ்வண்ணம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் திறன், நல்லெண்ணம் சார்ந்தது.
மிகையான புகழ் இங்கே உள்ளதா? தமிழில் பெரும்பாலும் எந்த எழுத்தாளரும் அவர்களின் தகுதிக்கேற்ப புகழை அடைந்தவர்கள் அல்ல. என் தலைமுறையில் எனக்கு ஓர் ஏற்பு உள்ளது. அதன் விளைவே இந்த விழா. மற்றபடி இளம்படைப்பாளிகள் முதல் மூத்தவர்கள் வரை அனைவருமே சூழலால் பொருட்படுத்தப் படாமல் இயங்குகிறார்கள் மட்டுமே. இந்த ஒரு தளத்தில் இந்த விழாவை ஒட்டி அவர்கள்மேல் கவனம் குவிக்கப்படுகிறது, அவ்வளவுதான்.
கறாரான விமர்சனம் என்பது கடும் விமர்சனமாக இருக்கவேண்டியதில்லை. வாசகர் அல்லது விமர்சகர் எந்த அளவுக்கு ஒரு படைப்பை புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை ஒட்டியே எந்த விமர்சனமும் பொருட்படுத்தத் தக்கதாக்குகிறது. நுண்ணுணர்வற்ற ஒருவர் படைப்பின் ஆழ்தளங்களை உணராமல் சொல்லும் கடும் விமர்சனம் ஒருவகை அசட்டுத்தனமாகவே கருதப்படும். அதற்கு இத்தகைய அரங்குகளில் இடமில்லை.
எந்தப் படைப்பாளியாக இருந்தாலும் அவரை ஆழ்ந்து பயின்று, கேட்டதுமே முக்கியமானது என்று எந்த வாசகருக்கும் தோன்றும்படியான ஒரு விமர்சனத்தை முன்வைப்பது எளிதல்ல. அத்தகைய நுண்வாசகர்களை எதிர்நோக்கியே படைப்பாளிகளை முன்வைக்கிறோம். அத்தகைய விமர்சனங்களை மென்மையாக, நட்பார்ந்த முறையில் முன்வைக்கவே இவ்வரங்குகள்.
கோகுல் பிரசாத் பிராமணர்களைப் பற்றி ஏதோ கடுமையாகச் சொன்னார் என்று நாலைந்து கடிதங்கள் வந்தன. ஆனால் எங்கள் அரங்குகளில் முன்னரும் அதைவிடக் கடுமையான பிராமண எதிர்ப்புக் கருத்துக்களைச் சொன்ன லீனா மணிமேகலை போன்றவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அது இங்கே இருக்கும் ஒரு சிந்தனைப்போக்கு அல்லது மனப்போக்கு. நான் அதை ஏற்பவன் அல்ல. எந்த ஒரு இனக்குழு, பண்பாட்டுக்குழு மீதும் பொதுவான காழ்ப்பை வெளிப்படுத்துவது அறிவியக்கவாதிக்கு மாண்பல்ல என்பதே என் உறுதியான நிலைபாடு
திரு கோகுல் பிரசாத் தமிழினி இணைய இதழை முக்கியமான இலக்கிய இதழாக நடத்திவருகிறார். ஆழமான கட்டுரைகளை வெளியிடுகிறார். கதைத்தேர்வில் ரசனை உள்ளது. இன்றையசூழலில் அத்தகைய ஆசிரியத்துவம் கொண்ட இதழின் பணி மிக முக்கியமானது. ஆகவே அவருடைய பங்களிப்பு பெரியது. அதன்பொருட்டே அவர் அழைக்கப்படுகிறார். அவருடைய இலக்கிய அளவுகோல்கள் என்ன, அவருடைய தனிப்பட்ட காழ்ப்புகள் அதில் என்ன இடம் வகிக்கின்றன என்பதையெல்லாம் வாசகர்கள் அவரிடமே கேட்கலாம்.
நாங்கள் ஒரு களத்தை மட்டுமே அமைத்துத் தருகிறோம். அதை அடிப்படையான சமநிலையை பேணியபடி நடத்துவது பங்கேற்பவர்களின் பொறுப்பு
ஜெ
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் [விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
மலைப்படிகள்
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
அரியவையும் வினோதமானவையுமான அனுபவங்களில்தான் மானுடத்தின் உச்சதருணங்கள் திரள்கின்றன. ஒரு மானுட வாழ்க்கையில் மிக அரிதாகவே அத்தகைய புள்ளிகள் வாய்க்கின்றன. அவையே இலக்கியத்தின் பேசுபொருட்கள். இலக்கியத்தைத் திரும்பிப் பார்க்கையில் செவ்வியல் புனைகதைகளினூடாக நாம் சென்று தொட்டு அறியும் பெருந்தருணங்கள் ஏராளமானவை.
ஆனால் அன்றாடத்தில், இயல்பாக ஒழுகிச்செல்லும் வாழ்க்கைத் தருணங்களில் வெளிப்படும் மானுடசாரம் என்ன என்னும் வினாவை எதிர்கொள்ளவே சிறுகதை என்னும் வடிவம் உருவானதோ என்று தோன்றுவதுண்டு. ஏனென்றால் வேறெந்த இலக்கிய வகைமையை விடவும் வாழ்க்கையின் துளிகளைச் சொல்ல வல்லது சிறுகதை. நிகழ்ந்தது அறியாமல் கடந்துசெல்லும் கணங்களை உறையச்செய்து வாழ்வெனக் காட்டும் ஆற்றல் கொண்டது.
மகத்தான தருணங்கள் எழுதப்பட்ட செவ்வியல்சிறுகதைகள் உலக இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. ஆனால் அவற்றுக்கிணையான ஆழத்துடன் அன்றாடத்தருணங்களைச் சொன்ன சிறுகதைகளும் நின்றிருக்கின்றன. செக்காவ் முதல் ஜான் ஓ ஹாரா வரை, புதுமைப்பித்தன் முதல் அசோகமித்திரன் வரை அத்தகைய சிறுகதைகள் எழுதிய முன்னோடிகள் பலர். உலக இலக்கியத்தின் அத்தகைய அன்றாடவாழ்க்கைக் கணங்களை மட்டுமே தொகுத்தால் பல்லாயிரம் புள்ளிகளைக் கொண்டு மானுட வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தையே சொல்லிவிடமுடியும்.
செந்தில் ஜெகன்னாதனின் சிறுகதைகள் இரண்டு களங்களின் அன்றாடத் தருணங்களால் ஆனவை. கீழத்தஞ்சையின் வேளாண்குடும்பம் அதன் பின்னணியாகிய சிற்றூரும். திரையுலகம். வேளாண்மை தொடர்ந்து உழவர்களைக் கைவிடுகிறது. பூச்சிமருந்து நோயளிக்கிறது. அதன் விளைவாக குடும்பங்களில் வன்முறை எழுகிறது. அந்த வன்முறையின் ஒரு தருணத்தில் பிரியத்தைக் கண்டுகொள்கின்றனர் மனிதர்கள்.
இன்னொரு பக்கம் சினிமா. அது ஒரு செயற்கையான சிற்றுலகம். புறவுலகை அது நடித்துப் பார்க்கிறது. அந்நடிப்பினூடாக வாழ்க்கையின் ஒரு தருணம் உணர்ச்சிகரமாக அல்லது பகடியாக வெளிப்படுகிறது. வாழ்க்கை சினிமா என்னும் ஆடியின் வழியாக இடம்வலம் திரும்பி வெளிப்படுகிறது.
இந்த இரண்டு உலகங்களிலும் மாறிமாறி அலையும் செந்தில் ஜெகன்னாதனின் கலை வெறுமே வாழ்க்கைச் சித்திரம் என்பதிலிருந்து அரிய கவித்துவம் வழியாக மேலெழும் தருணங்களே அவரை கலைஞராக்குகின்றன. காமிரா முன் செத்தவனாக நடித்தவனை மீண்டும் எழுந்து காமிரா நோக்கிச் சிரிக்கவைக்கிறார்கள்.வாழ்க்கையை நடிக்கும் சினிமா அதை விரும்பியபடி மாற்றிக்கொள்ளமுடியும். சாவையும்தான்.சினிமாவுக்குச் சென்ற காதலனை அதன்பொருட்டே பிரிந்தவள் அவன் முன் தன் குழந்தையை கொண்டு விட்டு நடிக்க வாய்ப்பு தேடுகிறாள். மகளாக மறுவடிவு எடுத்துவந்து அவன் முன் நிற்பவள் அவளே.
மூர்க்கமாக சாவின்மேல் முட்டிக்கொண்டே இருக்கும் தந்தையின் உள்ளிருந்து தவிப்பது எது என மகன் அறியும் தருணம் ஆயினும், நோய் என வந்து உடலை ஆட்கொண்டு பிச்சியென தாயை ஆட்டிவைப்பது வாழ்வென்று சூழ்ந்த பயிரே என்று அறிவதிலும் சரி வாழ்க்கையின் அடிப்படைத் தரிசனம் நோக்கிச் செல்லும் ஒரு பயணம் உள்ளது. அதுதான் செந்தில் ஜெகன்னாதனை இத்தலைமுறையின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவராக ஆக்குகிறது.
அன்றாடத்தருணங்களைச் சொல்ல சிடுக்கற்ற ஒழுக்குகொண்ட மொழி தேவை. தன்னிச்சையான சொற்றொடர் இணைப்புகள் வழியாக அந்த மொழி நிகழவேண்டும் என்றால் இயல்பான மனநிலையும் அதை வெளிப்படுத்தும் மொழிப்பயிற்சியும் இன்றியமையாதவை. அவை செந்தில் ஜெகன்னாதனின் கதைகளில் எப்போதுமுள்ளன. சொற்சுழற்சிகளோ செயற்கையான யத்தனங்களோ இல்லாமல் ’கிளாரினெட்டின் துளைகள் மீது தானியம் கொத்தும் சிட்டுக்குருவிகள் போல அசைந்த விரல்கள்’ என்று சொல்லிச் செல்லும் நடை அவருக்கு எப்போதும் கைகொடுக்கிறது. சிறுகதையின் கலை அவர் கதைகளில் துலங்க இந்த மொழி எப்போதும் உதவுகிறது.
சிறுகதை ஆசிரியன் ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு பெரிய மலைச்சரிவில் சிறு பாறைவிரிசல்களில் ஆணிகள் என அறைந்து இறுக்கி அவற்றின் மேல் கால்வைத்து மேலேறிக்கொண்டிருக்கிறான். மேலும் உயரத்தில் நின்று பார்க்க செந்தில் ஜெகன்னாதனுக்கு வாய்க்கட்டும்
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
சுமையும் சுவரும்- இரு கவிதைகள்
போகனின் இரு கவிதைகள், ஒன்று எடை அல்லது சுமை பற்றி. இன்னொன்று சுவர் பற்றி. நவீனக்கவிதையில் மிகமிக அடிக்கடி வந்தமையும் இரண்டு படிமங்கள் இவை. [நான் எழுதி அச்சான முதல் கவிதையே சுவர்களைப் பற்றியது. கைதி கொல்லிப்பாவை இதழில் வெளிவந்தது. அடுத்த கவிதை சுமை பற்றியது. ] மரபார்ந்த கவிதையில் அதிகமாக இல்லாத இரண்டு படிமங்கள் இவை. நவீனக் கவிதை ஏன் இந்த படிமங்களை இத்தனை தூரம் எடுத்தாள்கிறது?
அதற்குப் பதிலாக ஒன்றே சொல்லமுடியும். நவீனக் கவிதை மரபார்ந்த கவிதை நோக்காத இன்னொரு திசையை நோக்குகிறது. அது விடுதலையைப் பற்றிப் பேசுவதைவிட சிக்கிக்கொண்டவனின், துரத்தப்படுபவனின் தவிப்பைப் பற்றியே பேசுகிறது. ஆகவே களியாட்டங்கள் நவீனக்கவிதையில் பேசுபொருளாவது குறைவு. அது துயரை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது.
நான் அக்கவிதைகளை எழுதிய நாட்களை எண்ணிக்கொள்கிறேன். முதன்மையாக தனிமை, சாவின் அண்மை, தத்துவார்த்தமான வெறுமை ஆகியவற்றில் மூழ்கியிருந்த நாட்கள். அவை என் நோயின் விளைவாக உருவானவையா, நோய் அவற்றால் உருவானதா என்பது இன்றும் புரியாதது.நோய் மிக அரிதாகவே மரபிலக்கியத்தில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
ஆனால் செவ்வியலில் எல்லாமே ஏற்கனவே இருக்கும். இக்கவிதைகளின் உளநிலையைச் சொல்லும் ஒரு புறநாநூறுப் பாடல் உண்டு.
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.
[ஓரேழுழவர்]
தோலை உரித்து திருப்பியதுபோன்ற
விரிந்த வெண்மையான களர் நிலத்தில்
வேடனால் துரத்தப்படும் மான் போன்றிருக்கிறேன்.
ஓடி தப்பிவிடவும்கூடும்.
சுமந்திருக்கும் வாழ்க்கை
கட்டியிருக்கிறது கால்களை
சிஸிபஸ் போலவோ
நாரணத்துப் பிராந்தன் போலவோ
என் துயரப்பாறையை
ஒவ்வொரு முறையும்
உச்சிக்கு உருட்டிப்போகிறேன்.
ஒவ்வொரு முறையும்
அது மேலும் விசையுடன்
மேலும் எடையுடன்
என் மேலேயே உருண்டுவிழுகிறது.
அப்படியே
நீண்ட நாள் நண்பர்கள் ஆலிங்கனம் போல்
கொஞ்ச காலம் கிடக்கிறோம்
இருளில்
நானும் அதுவும்.
பிறகு மீண்டுமொரு முறை
நான் அதை உச்சிக்கு
உருட்டத் துவங்குகிறேன்.
உன்னுடன் போராடும் இந்த பிரயாணம் சலிப்பூட்டுகிறது.
நீ இன்னும் எத்தனை முறை
நம்பிக்கை இழக்காமல் இருப்பாய் நண்பா?
நாம் இங்கேயே இப்படியே
அணைத்துக்கொண்டு கிடந்தால் என்ன?
என்று மீண்டுமொருமுறை
அது கேட்கிறது.
கண்ணுக்குத் தெரியாத
சுவர் ஒன்று
எப்போதும் என்னைச் சுற்றி
நகர்ந்துகொண்டிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத கை ஒன்று
என் கையைப் பிடித்து எழுதுகிறது.
கண்ணுக்குத் தெரியாத பாதை ஒன்றில்
என் கால்கள் தாமாகவே
என்னை அழைத்துச் செல்கின்றன.
கண்ணுக்குத் தெரியாத கண் ஒன்று
இவை யாவும்
என் கண்ணுக்குத் தெரியாது நடக்கிறதா
என்று கண்காணித்துககொண்டிருக்கிறது
சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்
இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்
அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்
அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி
தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள்
முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்
க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்
சின்னஞ்சிறிய ஒன்று – கடலூர் சீனு
கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா
லக்ஷ்மி மணிவண்ணன்
வெயில்
பழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்
கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்
ச.துரை -மேலும் நான்கு கவிதைகள்
கவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்
வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்
பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு
கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்
அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை
எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்
ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்
சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை
மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்
சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு
சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்
கவிதை வாசிப்பு- டி.கார்த்திகேயன்
ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி
விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா
கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்
மார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)
ஜா.தீபா பற்றி கல்பனா ஜெயகாந்த்
காத்திரமான எழுத்துக்களை வாசிக்கும் போது மனம் குதூகலம் அடைகிறது. அதுவும் பெண் எழுத்தாளர் எழுதியதென்றால், மனம் பெருமையில் விம்மி விடுகிறது. பெண், ஆணென்ற எந்த முன்னொட்டும் அவசியம் இல்லாது, ஒரு புதுப் பார்வையை முன்வைக்கும் எழுத்தென்றால், மனம் கிறங்கித் தான் விடுகிறது. எழுத்தாளர் ஜா.தீபாவின் எழுத்துக்கள் அவ்வகையானவை.
சின்ன வீரபத்ருடு- கடிதங்கள் 3
அன்புள்ள ஜெ
தெலுங்கில் இருந்து ஆங்கிலம் வழியாக ஒரு கவிதை தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படும்போது என்ன இழப்புகள் உருவாகுமென தெரிகிறது. சொல்லாட்சிகள், மொழியழகு எல்லாமே போய்விடும். மூலத்தில் என்ன வகையாக அக்கவிதை இருந்திருக்கும் என்றுகூடச் சொல்லமுடியாது. ஆனாலும் கவிதை ஏதோ ஒரு வகையில் எஞ்சிவிடுகிறது. அழகான ஒரு பெண்ணின் படம் தினத்தந்தி புகைப்படத்திலேயே அந்த அழகென்ன என்று காட்டிவிடும்.
இன்றுவந்த கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இடிமுழக்கம் சொன்னதென்ன என்ற கவிதை ஒரு அக அசைவை உருவாக்கிவிட்டது. மாமரத்தின் அடியில் தூங்கிக்கொண்டிருப்பவனை சித்திரை மாதம் கோடையின் முதல் இடியோசை எழுப்பிவிடுகிறது. முதல் இடியோசை என்பது ஒரு மகத்தான அனுபவம். தமிழில் எவராவது அதை எழுதியிருக்கிறார்களா? மாவோ அவருடைய பல கவிதைகளில் அதைச் சொல்லியிருக்கிறார். சீனக்கவிதைகளிலும் ஜப்பானியக் கவிதைகளிலும் அடிக்கடி வருகிறது.
அந்த இடியோசையை அவர் சொல்லியிருக்கும் அடுக்கு சுவாரசியமானது. மழையில் முதல் காளான் முளைப்பது போல அவ்வளவு மென்மையாக, மெதுவாக தொடங்கி கதவுகள் அடித்துக்கொள்வதுபோல அவ்வளவு படபடப்பாக அது மாறுகிறது.
இடியை ஒரு பூமரத்தின் மேல் வண்டுகள் முனகும் ஒலியுடன் ஒப்பிடுவது கவிதை உருவாக்கும் விந்தைதான். ஆதித்தொல்மொழியில் அர்த்தமுள்ள ஓர் உரையாடலை நிகழ்த்தியபின் அமைதியடையவேண்டும் என்கிறது கவிதை. அந்த அர்த்தம் ஒரு நறுமணம் போல எஞ்சிவிடுகிறது. அவ்வளவு ஓசையில்லாததாக. அற்புதமான கவிதை
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ,
சின்ன வீரபத்ருடு அவர்களின் மகாபலிபுரம் கவிதை எனக்கு ரொம்ப பிரத்யேகமான ஒன்று. நான் முதன்முதலாக 1992ல் மகாபலிபுரம் கோயில்களைப் பார்க்கும்போது அவை அச்சிடப்பட்ட கவிதைவரிகள் போல இருந்தன. அதை நான் சொன்னபோது என் நண்பர்கள் சிரித்தனர். அந்த மேலே இருக்கும் கல்குமடு ஒரு கவிதையின் தலைப்பு மாதிரி. கீழே அடுக்கடுக்காக வரிகள். கடல் ஒரு நீலநிற நோட்டுப்புத்தகப் பக்கம் போல அந்த வரிகளை அதில் அச்சிட்டிருக்கிறது.
சின்ன வீரபத்ருடு அந்த கோயில்களை கவிதை என்று சொன்னபோது எனக்கு ஒரு சிலிர்ப்பு உருவானது. வார்த்தை வார்த்தையாக கவிதை எழுதுவதுபோல சொல் சொல்லாக காலத்தில் அடுக்கப்பட்ட கவிதை என்கிறார். கவிதை தொடர்ந்து எதிரொலிக்கிறது. அதை பொருள்கொள்ள
யார் வருகிறார்கள் என்று சொல்கிறார். அங்கே வந்துகொண்டே இருக்கிறார்கள். அனைவருக்கும் கொஞ்சம் அர்த்தம் கிடைக்கிறது. முழு அர்த்தமும் எவருக்கும் கிடைப்பதில்லை.
சிவராம் கே
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு
December 19, 2021
விக்ரமாதித்யன் ஆவணப்பட முன்னோட்டம்
வீடும் வீதிகளும்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பெருமையுடன் வழங்கும் ‘வீடும் வீதிகளும்’ ஆவணப்படம்.
2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படத்தின் முன்னோட்டம்.
ஒளிப்பதிவு- இயக்கம் ஆனந்த்குமார்
ananskumar@gmail.comசெல்பேசி 7829297409
இசை –ராஜன் சோமசுந்தரம்
rajan.sovi@gmail.com விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்பூக்கும் தாழையின் மணம் – வி.தேவதாஸ்
பா. திருச்செந்தாழை என்ற பெயரில் ஒலிக்கும் அழகிய ஓசை இவர் எழுதும் கதைகளெங்கும் தொடர்ந்து ஒலிக்கிறது. இவருடைய எழுத்துக்களின் மிகப் பெரும் பலம் இவரது மொழியழகு. சமீபத்தில் நடந்த இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் நூல் வெளியீட்டு விழாவில் மனுஷ்ய புத்திரன் கூறியது போல் இன்றைய புனைவெழுத்துகள் கவிதையை நெருங்கும் மொழி கொண்டவை. கவிதையை நெருங்கும் என்பதை விட உரைநடையும் கவிதையும் முயங்கும் புள்ளியில் திகழ்வது இவரது மொழி. லா.சா.ராமாமிர்தம், தி. ஜானகிராமன் மரபில் அவர்களுக்கே உண்டான தனி நடையின் தொடர்ச்சி இவர். இவரது நடை தனித்துவமானது ஓசை நயத்திற்கு மட்டுமே மேற்கண்ட எழுத்தாளர்களுடனான ஒப்பீடு. உதாரணமாகக் கூற வேண்டுமானால் ஜெயமோகனின் எரிமருள், கேளி, மலை பூத்த போது போன்ற சிறுகதைகளுடன் ஒப்பிடத்தக்க மொழி நடை கொண்டது. ஆனால் இவர் எழுதும் களம் வியாபாரம் சார்ந்தது. அதிகம் எழுதப்படாத களத்தைப் புலனாகக் கொண்டது.
கதைகளின் பேசு பொருள் பெரும்பாலும் ஆதி உணர்வுகளான பசி, காமம், குரோதம், மோகம் முதலியனவே. ஆதி உணர்வுகளுக்கும் நவீன சமூக மனிதனின் பராம்பரிய அற விழுமியங்களான அன்பு, பாசம், நேசம், தன்னுணர்வு, தன்னறிதல், மனசாட்சி போன்றவற்றிற்கு இடையேயான முரண்களில் எது வெல்கிறது என்பதேயே நிறைய கதைகளின் பொருள்களாகக் கையாளுகிறார்.
இன்றைய முதலாளித்துவ நவீன சமூகத்தின் புதிய குணநலன்களான நுகர்வு, ரசனை, ஒப்பீடு, போட்டி உணர்வு ஆகிய நவீன சமூக உணர்வுகளை வியாபார, தனிநபர் பின்னணியிலும் இவர் தன்னுடைய சிறுகதைகளில் கையாளுகிறார். இது அதிகமாக எழுதப்படாத புதிய கதைக் களன் ஆகும்.
2008ல் எழுதப்பட்ட ஆண்களின் விடுதி அறை எண் 12ன் பேசுபொருள் காமம். பருவமடைந்த பின்னும் இணை சேர முடியாத ஆண்களின் பாலியல் வேட்கை, பொருளாதார நிர்பந்தங்களால் இணையைப் பிரிந்து வாழும் ஆணின் காம நுகர்வினைப் பேசும் கதை. சாதாரணமான பாலியல் கதையாக கவனம் பெறாமல் சென்றிருக்கக்கூடிய சிக்கலான கதையை தான் சொல்லும் மொழியாலே இலக்கிய ஆக்கமாக மாற்றுகிறார் ஆசிரியர். கழிப்பறையில் தனது இச்சையைத் தணித்துக் கொள்ளும் ஆணின் குற்றவுணர்வு நீங்கி காமம் வெல்வதை புனிதங்களால் நிரப்பப்பட்டிற்க்கும் உறவுகளின் எல்லையைக் கடந்தது வேட்கை என்ற வரிகளில் தான் சொல்ல வந்த கதையின் சாரத்தை இயல்பாக வாசகனுக்கு கடத்துகிறார். அடுத்து பொருளாதார நிர்பந்தங்களால் மனைவியைப் பிரிந்து வாழும் ஆண் அதே காரணங்களால் தன் உடலை நுகர்பொருளாக்கும் பெண்ணிடம் இயல்பாக துய்க்கும் காமம் மனைவியிடம் தொலை பேசியில் பேசும் போது குற்றவுணர்வாக மாறுவதை அப்பெண்னின் குழந்தைகள் பற்றிய காட்சி மனக் கண்ணில் விரியும் போது குரல் குளறலாக மாறுவதன் வழியாக வாசகனுக்கு உள்ளுறையாகச் சொல்லுகிறார். நிழல் வெளியை மௌனமாய் தின்று கொண்டிருந்தது பகல் என்ற சொற்களுடன் சமூக விழுமியங்களை ஆதி உணர்வான காமம் வெல்வதைச் சொல்லும் கதை.
2006ல் வெளியான தேவைகள் கதையின் மொழி நடை இயல்பானது. தந்போதைய கவிதை நடை இல்லாமல் கதைக்குத் தேவையான நடை. சிவசு அய்யா என்ற முதிய கிராமத்து சம்சாரியின் பசி அவர் அதுவரை கொண்டிருந்த நிலப் பிரபுத்துவ மனநிலையில் இருந்து அவரை விடுவித்து, பசியாறியதின் நிறைவு வழியாக விதவை மருமகளின் உடற்பசி குறித்து உணர்வதைச் சொல்லும் கதை. பசி எனும் ஆதி உணர்வு கௌரவம் எனும் சமூக விழுமியத்தை வெல்வதைச் சொல்லும் கதை. இக்கதை கிராம விவசாயத்தின் யதார்த்தத்தை நேரடியாகவும், மிகை இல்லாமலும் சொல்கிறது. 1990களின் விவசாய மனநிலையான கடன் வாங்க கூசும் சூழல், மகனை இழந்து தொழில் உதவிக்கு வேற்று நபரைச் சார்ந்திருக்கும் முதியவரின் கையறு நிலை, கிராம சாவடியில் மருமகளின் நடத்தை குறித்தான எள்ளல் பேச்சுக்கள், மருமகளை காவல் காக்க வேண்டிய சூழலினால் உண்ட சுய கழிவிரக்கம் முதலியன மிக இயல்பாக அமைந்துள்ளன. ஒரு கிராம சம்சாரியின் வீழ்ச்சியைச் சொல்லும் நாவலாக நீட்டக் கூடிய நல்ல கருவை மிகச் சுருக்கமான சிறுகதையாக எழுதி உள்ளார்.
டீசர்ட், மஞ்சள் பலூன்கள் மற்றும் த்வநதம் ஆகிய கதைகளின் பேசு பொருள் ஆண் பெண் இடையேயான உறவுச் சிக்கல்கள் (காமமும், மோகமும்). ஒரே பிரச்சனைக்கு வெவ்வேறு பின்ணணி கொண்ட கதை மாந்தர்கள் வெவ்வேறு தீர்வுகள் காண்கிறார்கள். மூன்று கதைகளும் தனித் தனியான வாசிப்பு அனுபவம் அளிப்பவை. டீ சர்ட் கதை எனக்கு தற்போதய நுகர்வு கலாச்சாரம் ரசனை என்ற பெயரில் மனிதனில் செலுத்தும் ஆதிக்கத்தைச் சொல்லுவதாகக் கூட தோன்றுகிறது. நடுத்தர வயதுள்ள அதிகாரமும், செல்வமும் கொண்ட ஆணின் இரண்டாவது மனைவியான இளம்பெண் ஆணின் ரசனை உணர்வுகளை டீ சர்ட் மற்றும் வீட்டலங்காரம் வழியாக மாற்றி இளைஞனாக உணரச் செய்து விட்டுப் பின் வேறொரு இளைஞன் மீது மோகம் கொண்டு அவனைப் பிரிந்து செல்கிறாள். மனைவியின் காதலன் மீது குரோதம் கொண்டு அவனை வீழத்த நினனக்கும் கணவனின் தன்னை விட உயர்வாக இந்த இளைஞனிடம் என்ன உள்ளது? தான் ஏன் தன் இளம் மனைவிக்கு தீர்ந்து போனோம்? (நன்றி அருஞ்சொல்) எனும் கேள்விகளே கதையின் முடிச்சு. கேளவிக்கு பதிலாக கணவனின் நண்பனின் விளக்கமாக வரும் செய்தியான ரசனை எனும் ஒரு புள்ளியில் ஆழ்மனதில் அவர்கள் ஒருவரையொருவர் நெருங்கியிருக்கலாாம் அல்லது உன்னை அழகுபடுத்தி சலிப்படைந்து புதிய இளமையான ஒருவரை அவளின் ரசிக மனது விரும்பியிருக்கலாம் என்ற கருத்தில் தன்னுணர்வு பெற்று ஆண் அவர்களை வாழ விட்டு விலகிச் செய்கிறான். பெண்ணின் மோகமும், குரோதம் நீங்கிய ஆணின் தன்னுணர்வும் வெல்வதைச் சொல்லும் கதை.
மஞ்சள் பலூன்கள் இன்றைய நகர மாந்தரின் காதலைச் சொல்கிறது. முன்னர் மிகு காதலும் பின்னர் ஒருவர் மீது மற்றவர் கசப்படைந்து காயப்படுத்திக் கொள்ளலுமாக ஆடலும், ஊடலும் உளவியல் ரீதியில் எழுதப்பட்டுள்ளது. பிரிய நினைத்து கடைசியாக சந்திக்கும் ஆணையும், பெண்ணையும் கட்டில் மீண்டும் இணைக்கிறது. காமமும், மோகமும் வெல்வதைச் சொல்லும் கதை. கதையின் நடுவில் பெண்ணின் கூற்றாக வரும் “யசோதரையை நள்ளிரவில் பிரிந்து செல்லும் சித்தார்த்தனின் கண்ணிலிருந்து விழும் ஒரு துளி கண்ணீர் அவருக்கு பெரும் தோல்வியல்லவா? எனும் வரி ஆணைக் கட்டிப் போட்டு அவனை பிரிந்து செல்வதிலிருந்து தடுப்பதாக எனக்குப் பட்டது.
த்வந்தம் எல்லா காலத்திற்குமான ஒரு செவ்வியல் கதை (All time Classic). மீக நீண்ட காலத்திற்கு இக்கதை பேசப்படும் என நான் நினைக்கிறேன். கதை சொல்லப்பட்ட விதமும், கதையின் புதிய களமும், நிலக் காட்சிகளின் சித்திரமும், கதை மாந்தரின் குண இயல்புகளைக் காட்டும் விதமும், கதையின் இறுதித் திருப்பமும் இதை ஒரு சிறந்த சிறுகதையாக ஆக்கியுள்ளது. த்வந்தம் என்ற சொல்லுக்கு சம பலம் உடைய இரு நபர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என கதாசிரியர் அறிமுகப்படுத்தியிருந்தார். அவ்வண்ணமே கதையை நான் புரிந்துகொண்டேன். மதுரையையும் அதன் அண்டை மாவட்டங்களையும் பின்னணியாகக் கொண்டே இவர் பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார்.
ஆனால் இக்கதையின் தொடக்கம் நாஞ்சில் நாட்டில் நிகழ, நிலக்காட்சிகளும, கதை மாந்தரின் குண இயல்புகளும் அழகிய மொழியில் வாசகனின் மனதில் பதிகின்றன. நெய்யாற்ங்கரை பாலத்தில் புகைவண்டியின் வேகம் படிப்படியாக குறைய அதிகாலை வெளிச்சம் தோப்புகளின் விளிம்புகளிலும், எங்கெங்கும் தேங்கியிருக்கும் நீர்மைகளிலும் சுடரென பற்றிக் கொண்டன எனும் வரிகளில் தென்படும் அழகு கதையின் இறுதிவரை குன்றாமல் சுடரென ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. கதை மாந்தர்களான தீபனின் அசிரத்தையும், அப்பாவித்தனமும், லீலாவின் அழகும், இயல்பும், குழந்தை சசிதரனின் நோயும் கதை சொல்லியின் பார்வையில் காட்சிகள் வழியாக அறிமுகப்படுத்தப் படுகின்றன.
சிங்கிக்காரன் என அழைக்கப்படும் கதை சொல்லி இராமநாதபுர மாவட்டத்தின் கடும் வெயிலிலும், எதிர்காற்றிலும் சைக்கிள் மிதித்து ஒவ்வொரு பைசாவாகச் சேர்க்கும் அவன் தந்தையிடமிருந்து காசின் அருமையும், வியாபாரமும் கற்றுக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றி பல்வேறு வியாபாரங்களின் நுண் விபரங்களையும், வியாபார நுட்பங்களையும், மனிதர்களை எடை போடவும் கற்றுக் கொள்கிறான். பராம்பரியமாக தானிய மண்டி வியாபாரம் செய்யும் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை நபரான தீபன் வசம் அவன் வியாபாரம் கற்கு முன் தந்தை இறந்து விட மண்டி வருகிறது. இயல்பிலேயே அப்பாவியான அவன் போட்டியாளர்களாலும், சம்சாரிகளாலும் ஏய்க்கப்பட மண்டி நஷ்டத்தில் நடக்கிறது.
அப்படிப் பட்ட சூழலில் தவறான காலத்தில் தவறான விலைக்கு வாங்கப்பட்ட நவதானிய மூட்டைகள் மக்குப் பிள்ளைகள் என அவனைச் சூழ்ந்திருக்க நடுவில் அபத்தப் புன்னகையோடு நின்றிருக்கும் தீபனை கதை சொல்லி சந்திக்கிறான்.தீபனை ஏய்த்து விட்டு கேலி செய்யும் தரகனைப் பார்த்து அடுத்த தடவை சரி பண்ணிக்கிறோம் சார் என்று எதிராளியை அந்நியப் படுத்தி தீபனுக்கு உதவுகிறான். ‘சார்’ என்ற வார்த்தையை வணிக மண்டியில் பயன்படுத்துவது நீ அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்றைக்காவது நீ வியாபாரிக்கு எதிராய் திரும்புவாய் என்பதை உள்ளுறையாகக் கூறுவது. அவரிடம் வியாபாரம் குறித்த செய்திகள் பகிரப்படாது. எனவே அவன் அந்நியபடுத்தப்படுவான் அவனால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாது. இதை நுட்பமாக ஆசிரியர் சொல்கிறார்.
தீபனின் அப்பாவிதனத்தால் ஈர்க்கப்பட்டு அவனுடைய தானிய மண்டியை நடத்த அவ்வியாபாரத்தில் அனுபவமற்ற கதை சொல்லி உதவுகிறான். வியாபாாரத்தின் முக்கிய அடிப்படை செய்திகளும், அதை நிர்வகிப்பதும் தான். இது எல்லா வியாபாரங்களுக்கும் பொருந்தும். சிங்கிக்காரனாக கிராமங்களில் சுற்றும் போது நவதானியங்கள் பற்றிய நுண் செய்திகளை அறிந்து தானிய மண்டியை நடத்த உதவுகிறான். தீபனின் மனைவி லீலா மண்டிக்கு மதிய உணவு கொண்டு வர தீபனை விட சூட்டிகையாய் அவள் வியாபார நுட்பங்களை புரிந்து கொள்வதைப் பார்த்து அவளை கல்லாவில் ஒரு மணி நேரம் அமர வைத்து சம்சாரிகளிடமும். தரகர்களிடமும் கேள்விகள் கேட்க வைத்து படிப்படியாக வியாபார நுண்மைகளை கற்பிக்கிறான். அவளும் விரைந்து கற்றுக் கொண்டு மண்டியில் அதிக நேரம் செலவழிக்கத் தொடங்குகிறாள். ஓரளவு மண்டி நஷ்டம் நீங்கி செயல்படத் தொடங்குகிறது. அவளுடைய கற்றுக் கொள்ளும் திறனாலும், தன்னையொற்றி சிந்திக்கும் விதத்தாலும், ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டு கதை சொல்லி சலனமடைந்து வியாபாரத்தில் தவறுகள் செய்கிறான்.
லீலா சில வியாபாரங்களை தனியாக கையாண்டு வெல்கிறாள். பெண் இயல்பாகவே உள்ள தன்னுணர்வால் ஆணின் சலனங்களையும் அவனது உள்ளுணர்வுகளையும் அறிந்து கொள்கிறாள். தனது எண்ணங்களை அவள் அறிவதைக் கண்டு கதை சொல்லி பதட்டமடைகிறான். இச்சூழலில் குழந்தைக்கு மருத்துவம் செய்வதற்காக தீபனும், லீலாவும், கதை சொல்லியும் திருவனந்தபுரம் பயணிக்கிறார்கள். மருத்துவமனையில் நான்கு நாட்கள் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தீபன் குழந்தையுடன் தங்க முதல் அறுவடை முடிந்து வரும் தானியங்களை வாங்க வேண்டி மண்டியைத் திறக்க கதை சொல்லியுடன் லீலா ஊர் திரும்ப ரயிலேறுகிறாள். ரயிலில் இருவருக்கும் நடைபெறும் வியாபாரம் குறித்தான உரையாடலில் முதன் முதலாக மண்டிக்கு வரும் தானியங்களை அவை எத்தரதிலிருந்தாலும், நட்டம் ஏற்படுத்தினாலும் சம்சாரிகளின் நம்பிக்கை பெறவும் பின்னால் வரும் வியாபாரத்திற்காகவும் வாங்க வேண்டியதை “கரிசனத்தின் முதலீடு” என லீலா குறிப்பிடுகிறாள்.அவ்வார்த்தை கதை செல்லியின் மனசாட்சியைத் தொட அவன் லீலா உறங்கிக் கொண்டிருக்கும் போது தனது கீழ்மை எண்ணங்களை உதறி ஏதோ ஒரு நிறுத்தத்தில் ரயிலை விட்டிறங்கிச் சொல்கிறாான். எஸ். ராமகிருஷ்ணன் அவரது உரைகளில் அடிக்கடி சொல்வார்.
ஒரு மனிதனின் மனசாட்சியைத் தொட்டு விட்டால் அவனைத் தீயவற்றிலிருந்து விலக்கி விடலாம் என. அது இக்கதையில் நிகழ்கிறது இதில் கதை சொல்லியும் லீலாவும் ஒருவரின் எண்ணங்களை மற்றவர் அறிந்தவர்கள். பீஷ்மரின் மனதில் பரசுராமரைப் போல், அர்ஜுனன் மனதில் கர்ணனைப் போல, பீமன் மனதில் துரியன் போல எதிரியாயினும் உயர் மதிப்புடனே திகழ்வார்கள். ஏனெனில அவர்கள் சம பலம் பொருந்தியவர்கள். வெற்றியையும், தோல்வியையும் தீர்மானிப்பது ஊழின் மெல்லிய இழை என்பதை அவர்கள் அறிவார்கள்.எனவே எதிரியின் உள்ளத்தில் உயிர் பீடத்திலேயே வீற்றிருப்பார்கள். கற்றுக் கொண்டு செயல்படுவதன் வழியாக பெண்ணும், துறந்து செல்வதின் வழியாக ஆணும் துலாவின் முள்ளன நிகர் நிலையில் ஒருவரையொருவர் சமன் செய்கிறார்கள்.
விலாஸம் மேற்சொன்ன எந்த வரையறைக்குள்ளும் அடங்காத கதை. ஒரு வியாபாரி அல்லது தொழிலபதிரின் வென்று செல்லும் வேட்கை குறித்த கதை. இக்கதையின் சாரத்தை விளக்குவது கடினம். வியாபாரம் பற்றிய பல நுண் தகவல்களும், கூரிய அவதானிப்பின் வழி நுணுக்கங்களை கற்றுக் கொள்வதன் சித்திரமும், வியாபாரியின் தனித்துவமான சிந்தனை ஓட்டமும், எல்லா நிகழ்வு களிலும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிதானமும், எச்சூழலிலும் உணர்வுகளின் மீதான ஆளுமை போன்ற பல விஷயங்கள் கதையெங்கும் சம்பவங்களின் ஊடே விளக்கப்பட்டுள்ளன.
தனராஜ் என்ற வியாபாரியின் வளர்ச்சி அவர் மகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. தேனி நகரத்தின் பணப் புழக்கத்தை தீர்மானித்துக் கொண்டிருந்த ராம விலாஸில் நாற்பதாண்டுகளுக்கு முன் சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்த தனராஜ் 20 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் நசிந்து அப்பேரால மரத்தின் கீழ் உள்ள சிறு விதையை கண்டு கொள்கிறார். ராமவிலாஸின் பல்வேறு வியாபாரங்களில் சிறுதானியங்களும் அடங்கும் சர்க்கரை நோய் பரவலாக ஆரம்பித்த காலங்களில், சிறுதானிய வியாபாரத்தில் உள்ள வாய்ப்புகளை அறிந்து ராம்விலாஸிருந்து விலகி அத்தொழிலில் ஈடுபடுகிறார். தவிடு வீணாவதைத் தடுத்து அதிலிருந்து எண்ணெய் தயாரித்து அதன் மnற்று உபயோகத்திற்கான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அந்த தொழிலின் போட்டியாளர்களின் விலாஸங்களை நீக்கி தனிக் காட்டு ராஜாவாகி ராமவிலாஸை விட நான்கு மடங்கு பெரிதாக வளர்கிறார்.
இறுதியில் ராம விலாஸின் கிட்டங்கிகளை தனராஜிடம் குத்தகைக்கு விட ராம விலாஸ் நிர்வாகம் முடிவெடுக்க அவரது வெற்றி நிறைவு பெறுகிறது. வெற்றியின் மகிழ்ச்சியைப் புறக்கணித்து தனது அடுத்த வேலையான மழையிலிருந்து தானியங்களை காக்க ஊக்குடன் மூட்டை தூக்கச் செல்ல கதை நிறைகிறது. உழைப்பு, உணர்வுகளுக்கு இடமின்றி எல்லா இடங்களிலும் லாபம் குறித்த சிந்தனை, பொறாமை கொண்டு வார்த்தைகளில் விஷம் தடவி பேசுவோரை உதாசீனப்படுத்தி தன் வென்று செல்லும் ஆற்றலாலேயே சிறு மதியாளர்களைச் சிறுமை கொள்ளச் செய்வது போன்ற பல வியாபார மனநிலைகளும், நுட்பங்களும கதையின் மிக முக்கிய பெறுதல்கள் ஆகும். கதையின் சுவை கருதி ஆங்காங்கே மெல்லுணர்வுகளான காதலும், பாசமும் கோடி காட்டப்படுகின்றன.
துடி குரோதத்தை பாசம் வென்று செல்வதைச் சொல்லும் கதை. வெயிலின் வெக்கை, பனை மரங்களின் தனிமை, கணவாய் நரிகளின் ஊழை இவற்றுக்கிடையே வாழும் அடித்தட்டு குடும்பத் தலைவனின் மிகை கோபம் பாசத்தால் கனிவாக மாறுகிறது. கதையின் ஆரம்பக் காட்சியின் வன்முறை வாசகனின் மனதை பதற வைக்கிறது. ஒரு திகில் திரைப்படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து காண்பதைப் போல அதீத வன்முறைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் கதை இறுதியில் கும்மிருட்டில் சைக்கிளை இரு பிள்ளைகளுடனும், மனைவியுடனும், வீட்டுச் சாமான்களின் பொதியுடனும் பாதை யூகித்து மிதித்துச் செல்லும் காட்சி ஒரு செவ்வியல் திரைப்படக் காட்சி போல் நிறைவு பெறுகிறது. இடையில ஒரு சில காட்சிகளில் வரும் மனைவியின் கதாபாத்திரம் பல செவ்வியல் கதை நாயகிகளை நினைவு படுத்தும் சீதையின் வடிவம். மூத்த பையன் பார்வையில் சொல்லப்படும் ஆற்றில் தகிக்கும் மணலில் சைக்கிள் மிதிக்கும் போது வலியில் தகப்பனின் கண்ணில் துளிர்க்கும் நீர்த்துளியை காணும் பிள்ளையின் வாத்சல்யமும் அதை அவன் மறைக்க முயலும் முயற்சியும் வன்முறைகளுக்கிடையில் நெகிழ்வான தருணம்.
துலாத்தான் தானிய வியாபாரத்தில் தரகராக நீண்ட காலம் செயல்படும் அய்யாவு என்ற பெரியவரின் கதை. தானிய வியாபாரியையும், சம்சாரிகளையும், சக போட்டியாளர்களையும், இலாப நட்டங்களையும் துல்லியமாக எடை போடும் இவரால் தனது மகள், மனைவி, மருமகன் போன்ற குடும்ப உறுப்பினர்களை எடை போட்டு வெல்ல முடியாதாதன் சோகத்தைச் சொல்லும் கதை. மிகக் கடினமான சூழலில் மக்காச்சோளம் வியாபாரத்தில் வரும் போட்டியை மனிதர்களை எடை போட்டு சாதுர்யமாக வெல்கிறார். வெற்றியின் களிப்பில் நிம்மதியாக தூங்கி எழுபவரின் நினைவில் சொந்த மகளை வாழவைக்க முடியாமையின் துயரம் தாக்க அழுகையில் முடிக்கிறார். துலாவின் தட்டு தரகராகத் தாழ்ந்தும், தந்தையாக உயர்ந்தும் நிற்க நிகர் செய்ய முடியாததின் துயர அலைக்கழிப்பை அழகிய மொழி நடையில் சூழலுக்கு ஏற்ற சம்பவங்களைக் கோர்த்து சிறப்பாக கட்டப்பட்டுள்ள கதை.
ஆபரணம்- எது ஆபரணம் என்ற கேள்வியை வாசகர்களின் முன் வைக்கும் கதை. பீரோவெங்கும் ஆபரணங்களும், அழுக்கு நோட்டுகளும், காசுகளும் நிறைந்த மரியம், பழைய அழுக்கு மெழுகுவர்த்தியின் ஸ்படிகத் துளிகளென மூன்று குழந்தைகள் சூழ இருளுக்குள் நிற்கும் சித்திரை. இவர்கள் இருவரிடம் உள்ள எந்த செல்வம் ஆபரணம் என்பதே கதை. வாழையடி வாழையென வாழைகளுக்கு இடையில் கன்றுகள் ஈன்ற வாழையென நிற்கும் சித்திரையிடம் உள்ள குழந்தைச் செல்வமே ஆபரணமாக எனக்குத் தோன்றியது. அருமணிகளும், உலோகங்களும் நிரம்பிய மரியத்தின் செல்வத்தை விட சித்திரையின் செல்வம் உயர்வானது என்பது எண்ணம்.
காப்பு – ஒரு மர்மமான வாசம் கதையெங்கும் கமழ்ந்து கொண்டே இருக்கிறது. திரு உத்திரகோசமங்கையின் நீண்ட பிரகாரத்தின் முன் உள்ள தெருவில் வாலை ஆட்டியடி படுத்திருக்கும் தெருநாயிடம் ‘ பின்னே அலைச்சலா’ என்று கேட்கும் நடராஜரின் சித்திரம் 30 ஆண்டுகளுக்கு முன்பான காலத்திற்கு நம்மை காலப்பயணம் செய்விக்கிறது, இராமநாதபுர மாவட்டத்தின் தகிக்கும் வெயிலும், வறண்ட சமவெளிகளும், வான் நோக்கி உயர்ந்திருக்கும் பனைமர கூட்டம் தவிர வேறு அணிகலன் அற்ற செம்மண் நிலமும், நிலமும், வெயிலும் புணரும் போது உருவாகும் கந்தக மணமும், எண்ணெய் வழியும் கிராமங்களும், வெயிலில் காய்ந்த மனிதர்களும், உத்திரகோச மங்கையின் மூன்று தென்னைகளும், பாசி படர்ந்த குளமும், வெயிலில் வெளிறிய கோபுரத்தின் தேமலைப் போலான தோற்றமும் என கதையின் மொழி வாசகனை வசீகரித்து மயங்க வைக்கிறது.
தாழையின் வாசம் குறித்தும் அதன் மர்ம மணம் பற்றிய விவரணைகளும் இனம் புரியாத இனிமையில் ஆழ்த்துகிறது. கணவன் தரும் துன்பத்தை பொறுக்க முடியாமல் அவனைக் கொன்ற பெண்ணை காபந்து செய்து காக்கும் ஒரு கிழவரின் கதை ஒரு நிதானமான, தாழம்பூ மணத்தில் மனதைப் பறி கொடுத்த, உன்னிப்பாக முகங்களை கவனித்து கனவுகளுக்குள் ஆழ்ந்திருக்கும் சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. முப்பதாண்டுகளுக்குப் பிறகு மதுரையில் அவன் சந்திக்கும் அவனுக்குப் பரிச்சயமான உடல் மொழி கொண்ட மனிதர் யார் என்பது தாழம்பூவின் மணம் போன்று இரகசியமாகவே உள்ளது. கதை வாசித்து முடித்து நீண்ட நேரத்திற்குப் பின்னும் தாழையின் மர்ம மணம் நம் நாசிகளை விட்டு மறைவதில்லை.
திருச்செந்தாழை இக்கதைகளில் காட்டும் வியாபாரிகள், தரகர்கள், பெண்கள் ஆகியோரின் குணச்சித்திரம் வெவ்வேறு வண்ணங்களை காட்டுபவை. தானிய வியாபாரியாய் ஆரம்பித்து பெரும் தொழிலதிபரான தனராஜின் வென்று செல்லும் வேட்கை,,தனக்கு நட்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை தான் வழக்கமாக வாங்கும் சம்சாரிகளைக் கைவிடாத தீபனின் அப்பாவித்தனம், தானியேல் நாடாரின் எடை போாடும் திறனும், நீண்ட கால விளைவுகளை முன் யோசிக்கும் வியாபாரத் திறனும் (துலாத்தான்). தம்பியிடமும் தன் வியாபார சூழ்ச்சியையும், தந்திரத்தையும் பிரயோகிக்கும் திரவியம் (ஆபரணம்) என வியாபாரிகளில் தான் எத்தனை வண்ணங்கள். பிரதிபலன் எதிர்பாரமல் தீபனுக்கு உதவும் சிங்கிக்காரன், குடும்பஸ்தரான அய்யாவுவின் வியாபார, தரகு, மனிதர்களை எடை போடும் திறன் குடும்பப் பெண்களிடம் பலனளிக்காமை என இரு வேறு விதமான தரகர்களின் வண்ணங்கள்.
மரபான குடும்பப் பெண்களான லீலா (த்வந்தம்), சாம்பா (துடி), சித்திரை (ஆபரணம்) ஆகிய மூவரின் குணநலன்களும் வெவ்வேறானவை. துலாத்தானின் யசோதரை கணவனின் தொழிலில் உள்ள பாவச் செயல்கள் தான் தன் மகளின் வாழ்வை பாதித்ததோ எனும் குற்றவுணர்வு கொண்டவள், அவளின் மகளான குழந்தமை மாறா பரமு, காசைப் பாதுகாத்துப் பெருக்கும் மரியம் (ஆபரணம்), தனது ஓரகத்தி சித்திரையின் மீதான வன்மமும், குழந்தையின்மையின் துயரமும் நிறைந்தவள் என வித்தியாசமான குணநலன் கொண்ட பெண்கள். நவீனப் பெண்களான டீசர்ட்டின் இளம் மனைவியும், மஞ்சள் பலூன்களின் நிரஞ்சனாவும் வேறு வேறு வாழ்க்கைப் பார்வை கொண்டவர்கள்.
தன்னுடைய அழகிய மொழியாலும், சிறப்பான காட்சி சித்தரிப்புகளாலும், வியாபார நுண் தகவல்களாலும், மனிதர்களின் வெவ்வேறு குண நலன்களை புனிதப் படுத்தாமல் உள்ளதை உள்ளபடி காட்டுவதாலும் இக்கதைகள் சிறந்த இலக்கியப் படைப்புகளாகின்றன.
நுண்வினை ஆபரணம் – ரா.செந்தில்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
தெலுங்குக் கவிதை – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
தெலுங்கு கவிதையின் அறுபதாண்டுகளைப் பற்றிய இஸ்மாயில் அவர்களின் கட்டுரை ஒரு சுருக்கமான தெளிவான அறிமுகம். தமிழில் நமக்கு நம் அண்டை மொழிகளின் கவிதையுலகம் பற்றிய அறிமுகம் அறவே இல்லை. இங்கே இலக்கியம்பேசிக்கொண்டிருப்பவர்களில் எத்தனைபேருக்கும் கன்னடம், தெலுங்கு கவிதைகளைப் பற்றிய ஓர் அறிமுகம் இருக்கும் என்பது கேள்விக்குறிதான். நம்மைப்பற்றி அவர்களுக்கும் அறிமுகம் இல்லை என்பதும் யதார்த்தம்.
தொடர்ச்சியாக இலக்கிய உரையாடல்களை நடத்துவதன் வழியாகவே இந்த இடைவெளியை நிரப்ப முடியும். ஆனால் அது நிகழ்வதில்லை. டெல்லியில் 18 மொழிகளில் இருந்தும் கவிஞர்களை வரவழைத்து மேளா நடத்துவதில் பயனில்லை. இரண்டுமொழிகள் நடுவே இலக்கியப் பரிமாற்றம் நடப்பதுபோல கருத்தரங்குகள் உருவாக்கப்படவேண்டும். ஆனால் அத்தகைய அரங்குகள் இப்போது இல்லை. இன்றுள்ள பாரதிய ஜனதா அரசு மதம்சார்ந்த கலாச்சார அரங்குகளையே நடத்திக்கொண்டிருக்கிறது. நவீன இலக்கியத்துக்கு நிதியொதுக்குதல் இல்லை. ஆகவே நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. இச்சூழலில் இப்படி அமைப்பு சாராமல் நிகழ்ச்சிகளை நடத்துவதே உகந்தவழியாகும்.
தெலுங்குக் கவிதைகளில் திகம்பரக் கவிஞர்கள் பற்றித்தான் எல்லாருக்கும் தெரியும். அவர்களின் இடதுசாரி ஆதரவுத்தளம் அவர்களை இந்தியா முழுக்க கொண்டுசென்று சேர்த்தது. அவர்கள் நம் வானம்பாடிகளுக்கு ஒருபடி கீழானவர்கள்தான். அதிலும் கத்தார், சேரபந்தராஜு எல்லாம் வெறும் கூச்சல் மட்டும்தான். கட்டுரையாசிரியரான இஸ்மாயில் அந்த அலையை தெலுங்கு கவிதையை தேக்கமுறச் செய்த ஒரு நிகழ்வு என்றுதான் மதிப்பிடுகிறார். அவர்களில் நக்னமுனி, மகாஸ்வப்னா இருவரை மட்டும்தான் கொஞ்சம் பொருட்படுத்தப்படவேண்டியவர்கள் என்கிறார். ஆனால் அவர் மார்க்ஸியத்துக்கு எதிரானவர் அல்ல. ஸ்ரீஸ்ரீயின் மார்க்ஸிய ஆதரவுக் கவிதைகள் மிகச்சிறந்தவை என்றுதான் சொல்கிறார். கவிதையில் கூப்பாடு போடுவதைத்தான் எதிர்க்கிறார்.
மிகக்கறாரான விமர்சனபூர்வமான தொகுப்பு இஸ்மாயில் அவர்களுடையது. அவரே முக்கியமான கவிஞர். அந்த விமர்சன அளவுகோலே ஆச்சரியமளிப்பது. ஏனென்றால் இங்கே ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் பேராசிரியர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு எண்ணையும் புண்ணாக்கும் வேறுபாடு தெரியாது. பெரிய பட்டியலாகப் போட்டு உயிரை எடுப்பார்கள். அல்லது கலைச்சொற்களை நிரவிப்போட்டு அபத்தமாக ஏதாவது சொல்லி வைத்திருப்பார்கள். இஸ்மாயில் எது கவிதை என்பதை அறிந்தவர், மொத்த வரலாற்றையும் ஒற்றைவீச்சில் சொல்லத்தெரிந்தவர் என்று தெரிகிறது. இந்தவகையான ஓர் அளவுகோல் தெலுங்கில் இருப்பதே அங்கே தரமான இலக்கியம் இருப்பதற்கான சான்று என நினைக்கிறேன்.
திகம்பரக் கூப்பாடுகளில் மறைக்கப்பட்ட தெலுங்குக் கவிதை இனிமேலாவது வெளிவரவேண்டும்,
எஸ்.பாஸ்கர்
நக்னமுனிஅன்புள்ள ஜெ,
இஸ்மாயில் அவர்களின் கட்டுரை வழியாக தெலுங்குக் கவிதையின் ஒரு கோட்டுச் சித்திரம் உருவாகி வந்ததை காணமுடிகிறது. முதலில் ஒரு நவீன இலக்கிய அலை. அது கந்துகூரி வீரேசலிங்கம் அவர்களில் தொடங்குகிறது. அதன்பின் பிரிட்டிஷ் காவிய மரபை அடியொற்றிய ஒரு ரொமாண்டிக் அலை. அதன்பின் ஸ்ரீஸ்ரீ வழியாக ஒரு மார்க்ஸிய அலை. அதன்பின் நவீனத்துவ அலை.
இந்த அடுக்கு இந்தியா முழுக்க எல்லா மொழிகளிலும் சீராகவே இருக்கிறது. தமிழில் அந்த மார்க்ஸிய அலை என்றால் வானம்பாடிகள். ஆனால் அவர்களை இங்கிருந்த நவீனத்துவ அழகியல் அடித்து அப்பால் தள்ளிவிட்டது. ஒரு பத்தாண்டுகள்கூட அவர்களால் நீடிக்கமுடியவில்லை. அதுதான் வேறுபாடு.
அர்விந்த்
அன்புள்ள ஜெ
நான் ஹைதராபாதில் இருந்தபோது ஸ்ரீஸ்ரீ சிலையை பார்த்திருக்கிறேன். நம் கண்ணதாசன் போல ஒரு சினிமாக்கவிஞர் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. என்டிஆர் சினிமாக்களுக்கு நிறைய பாட்டுக்கள் எழுதியவர். ஆனால் இஸ்மாயில் அவர்களின் மிகக்கறாரான அழகியல் விமர்சனத்தில்கூட தெலுங்கின் மிகமுக்கியமான பெருங்கவிஞர், மொழியில் ஒரு திருப்புமுனை என்று அறிந்துகொண்டேன். ஆச்சரியமாக இருந்தது
ராஜன் நல்லுச்சாமி
தழல் – மூன்று கவிதைகள்
லக்ஷ்மி மணிவண்ணனின் மூன்று கவிதைகள். மூன்றிலும் தழல் இருக்கிறது. பருப்பொருள் என வந்து, நெளிந்தாடி, தன் தடத்தை விட்டுச்செல்லும் தழல். பின் பற்றி எரிந்து வளரத்தொடங்குகிறது. தழலின் இயல்பென்பது அதனால் வளராமல் நிலைகொள்ள முடியாதென்பது. ஓயாமல் வளரத்துடிக்கும் நிகழ்வே தழல்தல். தழலென்பது தழல்தலெனும் நிகழ்வு மட்டுமே. இந்நக் கவிதைகளில் தழல் வளர்ந்துகொண்டே இருக்கும் காட்சி உள்ளது. வளர்வதற்கான அதன் வேட்கையை சொல்கின்றன இக்கவிதைகள் என்று நினைக்கிறேன். அச்சத்தில், ஆன்மாவில், ஊழில், அகிலத்தில் என திகழும் தீயை சுட்டிச்செல்லும் கவிதைகள்.
யாரும் பார்க்காத ஒரு பாம்பு
சட்டையை தடயமென
விட்டுச் சென்றது
மீட்டர் பெட்டிக்குள் கிடந்த சட்டை
பாம்பின் நீளம் இதுவென வழங்கியது
மின்சார வயர்களுள் ஒயராக வளைந்து அது படமெடுத்து
ஆடியிருக்கவேண்டும்
இப்போது சட்டையில்லை
எடுத்து அகற்றிவிட்டேன்
பாம்பு இருக்கிறது என்கிறாள் மனைவி
யாரும் பார்க்காத பாம்பு
ஒவ்வொரு நாளும் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது
சட்டையை எடுத்து அகற்றியது போல
இல்லாத பாம்பை எடுத்து அகற்றுவதும்
சாத்தியமில்லை
அது வளர்வதைக் குறைப்பதும் சாத்தியமில்லை
இப்போது வந்து சென்றதைக் காட்டிலும் அதிகமாக பூரண இருப்பு கண்டு விட்டது
பாம்பின் சுவையில் திளைக்கிறது
இந்த மழைக்காலத்தில்
என்வீட்டு
மீட்டர் பெட்டி
ஜுவாலை பிறந்தது முதற்கொண்டு
எரியத்
தொடங்கிற்று
சுடலையில் பற்றி
இறுதியில்
அணைகிறது அவ்வளவே
பசியில் எரிந்தது கொஞ்சம்
புணர்வில் எரிந்தது கொஞ்சம்
தாய்ப்பாலில் இருந்து
அருந்தத்தொடங்கிய
ஜுவாலை
கொஞ்சம் கவிதைகளையும்
எழுதிற்று
கடவுள் வழிபாடும் செய்தது
நாக்கின் ஜுவாலை
நாக்கைவிட எவ்வளவு நீளம் ?
நாக்கு பாம்பிலிருந்து பெற்றதுதாமே
பாம்பின் உடல்
ஊர்ந்து அலையும்
ஜுவாலை
இல்லையா ?
அல்லது ஜுவாலைக்கு
பாம்புடல்
அல்லவா?
எத்தனையெத்தனை பாம்பால்
ஆனவன் இந்த
மனிதன் ?
தீக்குளித்தவளின் மகள்
வளர்ந்து பெரியவள்
ஆகிவிட்டாள்
தன் வடிவம் அது
சிருங்காரம்
நளினம்
தன் வடிவே தன்னால் குதூகலிக்கிறது
எதன் பொருட்டு இதனை
எரித்தேன்?
எதனையோ
எரிக்க வேண்டி
இதனை
எரித்துவிட்டேன்
எரிக்க வேண்டியது உண்மையில் எரிக்க வேண்டியதுதானா?
எரிக்க வேண்டியதை எரிக்காமல்
விட்டிருந்தால்தான் என்ன ?
எங்கிருந்தோ வந்த எரி
இங்கே எரித்துச் சென்றது
யோனித்தழல் பெருகி
எழுந்து பரவி
அடங்கியது
உடல் உருண்டு
வடுவானது
மகளில் தெரியும் தன் வடிவை
நாவால் வருட நினைத்தவள்
முத்தமிட்டு நகர்ந்தாள்
தடுக்கி விழுந்தது
ஒரு சொட்டு
கண்ணீர்த்துளி
மேற்கொண்டு செய்யமாட்டேன்
என்றது
கண்ணீர்த்துளியில் அகன்ற
ஊழ்
நட்சத்திரம் ஆயிற்றே
ஜீவா நினைவேந்தல்: ஆளுமைக்கு மரியாதை
ரொம்பப் பெரிய தனவந்தர்கள் இல்லை. சற்றே வசதியான குடும்பம், அவ்வளவுதான். ஆனால், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆளுமையின் மதிப்பையும், அவருடைய முக்கியத்துவத்தையும் அவர்கள் உளமாற உணர்ந்திருந்தனர். அதுதான் இந்நற்செயல்களுக்கான உத்வேகமாக உருக்கொண்டிருக்கிறது. “ஜீவா நினைவைப் போற்றும் வகையில் அவர் ஈடுபாடு காட்டிய, ஒவ்வொரு விஷயத்திலும் காரியங்கள் தொடர எங்களால் ஆனதைச் செய்திருக்கிறோம். இது ஜீவாவின் நினைவகமாக மட்டுமல்லாமல், அவர் விட்டுச்சென்ற பணிகளுக்கான உயிரகமாகவும் இருக்க வேண்டும்” என்றார் அவர் தங்கை ஜெயபாரதி.
ஜீவா நினைவேந்தல்: ஆளுமைக்கு மரியாதை
நீண்ட கால உறவு என்று சொல்லிட முடியாது. ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஜீவாவும் நானும் அவ்வளவு நெருக்கமாகிப்போனோம். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் அவருடைய பணிகள் வாயிலாக அவரை நான் அறிந்திருந்தேன்; என்னை அவர் என் எழுத்துகள் வாயிலாக அறிந்திருந்தார். சில சமயங்களில் செல்பேசி வழியாகப் பேசியிருந்தோம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

