Jeyamohan's Blog, page 718
September 10, 2022
‘தாமரை’ வெளியீட்டுவிழா உரை
ரவி சுப்ரமணியம் இயக்கிய தாமரை என்னும் திரைப்படம் நீதிபதி சுவாமிநாதனின் துணைவி காமாக்ஷியும், அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் சௌந்தர் -ராதா சௌந்தர் இருவரும் இணைந்து தயாரித்திருப்பது. மாற்றுத்திறனாளிகள் மீது சமூகப்பார்வையை கோரும் ஒரு நல்லெண்ணத் திரைப்படம் இது.
10- செப்டெம்பர்-2022 அன்று சென்னையில் நிகழ்ந்த கூட்டத்தில் நான் ஆற்றிய உரை
சாரு, கடிதங்கள்
நெடுங்காலமாக கூகிளில் ஜெயமோகன் என்று தேடினால் ஜெயமோகன் ஒரு மனநோயாளி என்று ஒரு பேச்சுதான் கிடைக்கும். பலர் அதன்பின் உங்களை மனநோயாளி என எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில்கூட ஒரு விவாதத்தில் ஒருவர் விரிவாக தரவுகளுடன் அப்படி எழுதியிருந்தார்
நான் என் நண்பர்களுடன் ஒருமுறை பேசும்போது தவறிப்போய் உங்கள் பெயரைச் சொன்னேன். நாலைந்துபேர் ‘அவருக்கு கொஞ்சம் மெண்டல் இல்நெஸ் உண்டுல்ல?’ என்று சீரியஸாகவே கேட்டார்கள். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டேன். அவர்களின் மனப்பதிவை நம்மால் மாற்ற முடியாது.
இப்போது சாருநிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபோது சும்மா சாரு நிவேதிதா என்று இணையத்தில் தேடினேன். நாலைந்து பதிவுகளுக்குள் சிக்கியது சாரு நிவேதிதா மனநோயாளியா என்ற கட்டுரை. அதன்பின் இணையத்தில் பலர் அப்படி எழுதியிருப்பதைக் கண்டேன்.
இந்த ஒரு காரணத்தாலேயே சாரு விஷ்ணுபுரம் விருது பெறுவதற்குத் தகுதியானவர் என நினைக்கிறேன். ஏனென்றால் இந்த மனநோயாளி முத்திரை சாதாரணமானது அல்ல. ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் சற்று சுதந்திரமாகச் சிந்திக்கும் அத்தனைபேரும் மனநோயாளி என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். சோவியத் ருஷ்யாவில் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மனநோயாளி என்ற முத்திரைதான் குத்தப்பட்டது
ஓர் எழுத்தாளன் மனநோயாளி என்ற முத்திரையை பெறுவதென்பது மிக மிக முக்கியமானது. சேனிட்டி என்று அந்த சமூகம் ஒரு வட்டத்தை உண்டு பண்ணி வைத்துள்ளது. அதற்குள் வாழ்ந்தாகவேண்டும் என அத்தனைபேரையும் அது கட்டாயப்படுத்துகிறது. வாழாதவர்களை அது தண்டிக்கிறது. கண்ணுக்குத்தெரியும் ஒரு மாரல் வட்டம் உண்டு. அப்படி தெரியாத ஒரு சூட்சும வட்டம் இது.
எந்த ஒரு சமூகமானாலும் அதன் சூட்சுமமான அதிகாரத்தை சீண்டுபவனை மனநோயாளி அல்லது குற்றவாளி என்றுதான் சொல்லும். ஆனால் அப்படிச் சீண்டாமல் ஒரு நல்ல எழுத்தை உருவாக்கவும் முடியாது. அப்படி ஒரு சீண்டலை நீங்கள் நிகழ்த்தியிருப்பதைத்தான் இந்த மனநோயாளி முத்திரை காட்டுகிறது. வாழ்த்துக்கள.
ராஜேஷ் கிருஷ்ணகுமார்
*
அன்புள்ள ஜெ
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வாசிக்க ஆரம்பித்தபோதே சாரு உடனிருக்கிறார். இலக்கியம் என்பது போதிப்பதும் வழிகாட்டுவதும் அல்ல நம்மை நிலைகுலையச் செய்வதும் நம்வழியை நாமே தேடவைப்பதுமாகும் என்று காட்டியவர் சாரு. அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதில் மகிழ்ச்சி. சாரு சுட்டிக்காட்டிய பல படைப்பாளிகளை என் வாசிப்பின் வழியாக கடந்து வந்துவிட்டேன். ஆனாலும் இன்றும் சாரு என் வாசிப்புக்குரியவராகவே நீடிக்கிறார். சாருவுக்கு என் வணக்கம்
ஜெயக்குமார் அருண்
September 9, 2022
மைத்ரி, ஓர் இணைய உரையாடல்
மைத்ரி நாவல் பற்றி அதை வாசித்த நண்பர்கள், வாசிக்க விரும்புபவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தலாமென்று எண்ணுகிறேன். வாசகர்களை நேருக்குநேர் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அதை எண்ணுகிறேன்.
ஸூம் செயலியில் இக்கலந்துரையாடல் நாளை (செப்டெம்பர் 11 ஞாயிறு) மாலை 6 மணிக்கு நிகழலாம் என நினைக்கிறேன். ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன்
Topic: மைத்ரி – நாவல் – கலந்துரையாடல்Time: Sep 11, 2022 06:00 PM IndiaJoin Zoom Meeting
https://us02web.zoom.us/j/83464011811Meeting ID: 834 6401 1811பாஸ்வர்ட் தேவையில்லை.
அஜிதன்
—————————————————————————————————– மைத்ரி அச்சுநூல் வாங்க மைத்ரி அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் மைத்ரி மின்னூல் வாங்க மைத்ரி நாவல் இணைய தளம்மேற்கத்திய இசை அறிமுகப் பயிற்சி வகுப்பு, நிறைவு
மேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், அறிவிப்பு
நண்பர்களுக்கு,
நேற்று இரவு மேற்கத்திய இசைப்பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியது. இப்போது இடங்கள் நிறைந்துவிட்டமையால் அறிவிப்பு நிறுத்தப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இருப்பதனால் இன்னொரு வகுப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
அஜிதன்
சென்னையில் ஒரு படவிழா
சென்னையில் 10- 9-2022 அன்று, சனிக்கிழமை ஒரு திரைப்பட விழா. என் நண்பரும் உறவினருமான ரவி சுப்ரமணியன் இயக்கும் தாமரை என்னும் படத்தின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் சௌந்தர் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவர். நான் கலந்துகொள்கிறேன். சென்ற சில நாட்களாகவே முழுநேர சினிமாவாகவே செல்கிறது வாழ்க்கை.
இடம்: NFDC தாகூர் சென்டர்,
தமிழ்நாடு இசைக்கல்லூரி வளாகம்
சத்யா ஸ்டுடியோ பின்புறம்
இசைக்கல்லூரி சாலை
ராஜா அண்ணாமலை புரம்
சென்னை 29
நாள் 10- 9 -2022தொடர்புக்கு 9940045557, ravisubramaniyan@gmail.com
கவிதையை பயில்தல்
Poetry and Manஅன்புள்ள ஜெயன்,
கவிதைகளை தொகுப்பாக கொண்டு வருவதற்கு வயது முக்கியமா? எனக்கு 22 வயதாகிறது. 17 வயதில் இலக்கியம் படிக்கத் தொடங்கினேன். தமிழில் கல்யாண்ஜி, இசை, சாம்ராஜ், வெய்யில், நரன், ஷங்கர் ராம சுப்ரமணியன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சில கவிஞர்களின் கவிதைகளை படித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த், ஆஸ்கர் வைல்டு, டி. எஸ்.எலியட், ராபர் ப்ராஸ்ட், வால்ட் விட்மன், டிக்கின்சன் ஆகியோரின் கவிதைகள் பரிட்சயம். ரொமாண்டிக் கவிதைகளுக்கும், பின்நவீனத்துவ கவிதைகளுக்கும் இடையில் அவ்வப்போது சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு சில சமயங்களில் தோன்றும்.
நான் இரண்டு வருடமாக கவிதை எழுதி வருகிறேன். சிற்றிதழ்களுக்கு அனுப்பியுள்ளேன். கனலி இணைய இதழில் சில கவிதைகள் பிரசுரமாகின. 60-70 கவிதைகளை தொகுப்பாக கொண்டுவர எண்ணமுள்ளது. எனவே, ஒரு வளர்ந்து வரும் பதிப்பகத்தை தொடர்பு கொண்டேன். அவர் இப்படிச் சொன்னார். ” உங்கள் கவிதைகளை படிக்க நேரம் கிடைக்கவில்லை. இப்போது தான் நேரம் கிடைத்தது. நீங்கள் ஆரம்ப நிலையில் உள்ளீர்கள். உங்களின் கவிதையில் படிமம், குறியீடுகள் அவ்வளவாக இல்லை. இன்னும் முயற்சி செய்யுங்கள் ” என்றுச் சொன்னார். அவர் என் கவிதைகளை முழு கவனத்துடன் படித்தாரா என்பதில் சற்று சந்தேகமுள்ளது.
நான் இப்போது தொகுப்பாக கொண்டு வர முடிவெடுத்துள்ளேன். இருந்தாலும் எனக்குள் நிறைய கேள்விகள். இன்னும் மூன்றாடுகள் காத்திருந்து பார்க்கலாமா என. ஒரு தெளிவு வேண்டி உங்களிடம் இதை கேட்கிறேன்.
( நீங்கள் விரும்பினால், சில கவிதைகளை உங்களுக்கு அனுப்புகிறேன்)
இப்படிக்கு
தீ.
***
அன்புள்ள நண்பருக்கு
இந்தக்கேள்வி எழுதத்தொடங்கும் பெரும்பாலானவர்களால் கேட்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலும் கவிதையில் தான் எழுத்தாளர்கள் தொடங்குகிறார்கள். அதற்கான காரணம் ஒன்றுதான். தொடக்க காலத்தில் எழுதவருபவர்களிடம் அனுபவத்துளிகள் மற்றும் எண்ணத்துளிகள் மட்டுமே இருக்கும். அந்தத்துளிகளை அப்படியே பதிவு செய்வது அல்லது வெளிப்படுத்துவது மட்டுமே அவர்களால் இயலும். அதற்கு உரிய வடிவமாக அவர்களுக்குத் தோன்றுவது கவிதைதான். ஏனெனில் கவிதை மிகச் சிறியதாக இருக்கிறது. ஒருகுறிப்பிட்ட வெளிப்பாட்டுத்தருணம் மட்டும் அதற்குப் போதுமானது.ஆகவே அவர்களுக்குக் கவிதை உகந்ததாக, எளிதானதாக உள்ளது.
நாம் எண்ணுவது போல புதுக்கவிதை உருவானபின்னர் அனைவரும் கவிதை எழுதித் தொடங்கினார்கள் என்று சொல்ல முடியாது. அதற்கு முன்பு செய்யுள் காலகட்டத்திலும் அனைவருமே எழுதிக்கொண்டிருந்தது கவிதைதான். சொல்லப்போனால் புதுக்கவிதையை விட செய்யுள்தான் இன்னும் எளிமையானது. அந்த யாப்பமைதியை கற்றுக்கொண்டால் எதைவேண்டுமானாலும் அதற்குள் அமைக்க முடியும். ஒரு குறிப்பிட்ட ஓசை அமைந்துவிடுவதனால் அது கவிதை போல தோன்றவும் செய்யும். யாப்பு சென்ற பிறகு இன்று புதுக்கவிதை எழுதுவது இன்னும் கடினமாகியது என்பதே உண்மை. ஏனெனில் குறைந்தபட்சம் அது வசனமல்ல கவிதை என்றாவது தோற்றமளிக்கவேண்டும்.
இன்று புதுக்கவிதைக்குரிய யாப்பு முறை காலப்போக்கில் உருவாகி வந்துள்ளது. அதில் ஓர் அனுபவத்தை குறைவான சொற்களில் வரிகளை மடித்து எழுதிவிட்டால் கவிதை போலத் தோற்றமளிக்கிறது. ஆகவே சென்ற காலங்களில் அன்றாட வாழ்க்கையை அப்படியே சொல்லும் பல்லாயிரக்கணக்கான வெண்பாக்கள் எப்படி எழுதிக்குவிக்கப்பட்டனவோ அப்படி இப்போது புதுக்கவிதையும் எழுதிக் குவிக்கப்படுகிறது. இதை எவரும் எதுவும் செய்யமுடியாது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பண்டிதர்கள் இந்த வெண்பா- ஆசிரியப்பா பெருக்கத்தைப் பற்றி புலம்பி எழுதியிருக்கிறார்கள்.
குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை. குறும்பியளவாக் காதைக்குடைந்து தோண்டி
எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லியில்லை. இரண்டொன்றாமுடிந்து தலையிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை விளையாட்டாக் கவிதைதனை விரைந்துபாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகளுண்டு தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே
என்ற புலம்பல் இங்கு பதினாறாம் நூற்றாண்டு முதலே உள்ளது. உ.வே.சாமிநாதய்யர் அவருடைய தன் வரலாற்றில் இத்தகைய செய்யுள் பெருக்கத்தைப்பற்றி ஏராளமாக வருந்தியும் கேலியாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் காலத்தின் வெள்ளத்தில் அச்செய்யுடகள் பெரும்பாலும் காணாமலாயின.
எண்ணிப்பாருங்கள் பாரதியின் காலத்தில் எழுதிய இன்னொரு கவிஞர் உங்களுக்கு நினைவுக்கு வருகிறாரா? அதற்கு முந்தைய காலத்து கவிஞர்களில் எத்தனை பேர் உங்கள் நினைவில் எஞ்சுகிறார்கள். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை எழுதிய பலநூறு தனிப்பாடல்கள், ஏராளமான புராணங்கள், சிற்றிலக்கியங்களில் ஓரிரு வரிகள் மட்டுமே இங்கு எஞ்சுகின்றன ஆகவே கவிப்பெருக்கம் என்பது எப்படி இயல்பானதோ அவற்றில் பெரும்பாலானவை காலத்தில் அழிந்து நினைவில் எஞ்சும் சிலவே வரலாறாகின்றன என்பதும் இயல்பானது தான்.
தொடக்கநிலையாளர்கள் அனுபவத்தின் துளிகளை கவிதைகளாக எழுதும்போது அவை அவர்களுக்கு மிக அந்தரங்கமானவை என்பதனால் தீவிரமான கவிதைகள் என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகிறது. புள்ளிகளை வைத்தாலே கோலம் போடுபவரின் உள்ளத்தில் ஒரு கோலம் தோன்றிவிடுவது போல. ஆனால் வாசகனிடம் சென்றடைபவை வெறும் புள்ளிகள்தான். மிக வழக்கமான வடிவில் போடப்பட்ட புள்ளிகள் என்றால் மிக வழக்கமான ஒரு கோலத்தை பார்ப்பவனும் கற்பனை செய்து விட முடியும். ஆனால் அதில் கலையில்லை.
கவிதையில் தொடங்கும் பெரும்பாலானவர்கள் காலப்போக்கில் தாங்கள் கவிஞர்கள் அல்ல என்று கண்டுகொள்கிறார்கள். அனுபவத்தின் துளிகளை சிந்தனை சார்ந்தும் உணர்வு நிலைகள் சார்ந்தும் ஒன்றோடொன்று இணைத்து சித்திரங்களாக ஆக்க தங்களால் இயலும் என்று தெரிந்துகொள்கிறார்கள். அவர்களை அது புனைவு நோக்கி கொண்டுவருகிறது. நானும் அவ்வாறு புனைவு நோக்கி வந்தவன்தான். கவிதையிலேயே நீடிப்பவர்கள் தங்களுடைய வெளிப்பாட்டு முறை கவிதை என்பதை கண்டுகொண்டவர்கள்.
கவிதையின் வெளிப்பாட்டு முறை என்பது கற்பனை சார்ந்ததோ சிந்தனை சார்ந்ததோ அல்ல. முழுக்க முழுக்க மொழி சார்ந்தது. கவிதையின் அடிப்படை அலகென்பது சொல். சொல்லிணைவுகளின் அழகுகளின் ஊடாக எண்ணங்களோ உணர்வுகளோ வெளிப்படும்போது மட்டும்தான் அது கவிதை. ஒருகவிதை காலத்தில் நிலைகொள்வது அது உருவாக்கும் சொல்லிணைவுகளின் அழகினால் மட்டுமே. நவீன கவிதை படிமங்களை உருவாக்குகிறது. பலசமயம் படிமங்கள் அந்தக் கவிதையிலிருந்து பறந்தெழுந்து படிமங்களாகவே நிலைகொள்கின்றன. ஒரு கவிஞனின் படிமத்தை அவன் சொன்ன வரிகளில் அன்றி வேறு வரிகளில் நாம் நினைவுகூர்வோம் என்றால் அது கவிதையல்லாது ஆகிவிடுகிறது என்பதுதான் உண்மை.
கவிதையை எப்படி மதிப்பிடுவது என்பதுதான் உங்கள் வினா. உண்மையில் கவிப்பெருக்கம் என்பது மிகப்பெரிய தீங்கை கவிதைக்குதான் விளைவிக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு கவிதைக்கும் அளிக்கப்படவேண்டிய கூர்ந்த கவனத்தை அது இல்லாமலாக்குகிறது. கவிதையைப் பொறுத்தவரை கூர்ந்து படித்தால் மட்டுமே அது கவிதையாகிறது. விரைவாகப் படித்து செல்லுகையில் அது தொடர்புறுத்த மறந்துவிடுகிறது. பலசமயம் நல்ல கவிதையை இணையப்பக்கத்தில் போகும் போக்கில் படிக்கும்போது அது ஒரு அனுபவக்கீற்றென்றோ, எளிமையான கருத்தென்றோ, அறிவிப்பென்றோ தோன்றிவிடும். அதை ஒரு விமர்சகன் எடுத்து ஒரு உணர்வுப் பின்புலத்தில் பொருத்திக்காட்டும்போது மகத்தான கவிதையாக மாறிவிடுகிறது.
மிக அரிய கவிதைகள் வெறும் சொற்கூட்டுகள் மட்டுமே. (Poetic Utterence) என்று அதைச் சொல்வார்கள். வெறும் சொல் வெளிப்பாடுகள் அவை. அவற்றின் மேல் வாசகன் உள்ளம் குவிந்து வாசகனின் உள்ளத்தில் புகுந்து அவை தங்களைத் திரும்ப திரும்ப ஒலிக்க விடும்போது தான் அவை கவித்துவ அனுபவத்தை அளிக்கின்றன. இந்தக் கவனம் கவிதைக்கு வாசகனால் அளிக்கப்பட வேண்டும். அதற்கு கவிதையை வாசிப்பால் அடிக்கோடிட வேண்டும். கவிதை என்பதே அடிக்கோடிடப்பட்ட சொல்லாட்சி என்றொரு விவரணை உண்டு.
இந்தக் கவனத்தை இன்றைய சூழலில் வாசகர்கள் கொடுப்பதில்லை அதற்கு அவனுக்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு இணைய இதழிலும் ஏராளமான கவிதைகள் வெளியாகின்றன. சிற்றிதழ்களில் பக்க நிரப்பிகளாகவும் இடைவெளி நிரப்பிகளாகவும் கவிதைகள் வெளியாகின்றன. பெரும்பாலும் அவற்றை எழுதுபவர்கள் தொடக்கநிலை கவிஞர்கள் அதாவது கட்டுரையாளரோ எழுத்தாளரோ ஆகவேண்டியவர்கள் ஒரு பயிற்சிக்காக கவிதைகளை எழுதி தொடங்குகிறார்கள்.
இத்தனை கவிதைகளிலிருந்து தரமான ஒரு கவிதையை அடையாளம் காண்பதென்பது தொடர்ந்து வாசிப்பும் தொடர்ந்து கவனமும் அளிப்பவர்களால்தான் முடியும் .அத்தகையோர் ஐம்பது பேருக்குள் தான் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள். நான் அந்த ஐம்பது பேரை நம்பிதான் அடுத்த கட்ட வாசிப்பையே நிகழ்த்துகிறேன். கவிதையின் முழுப்பெருக்கத்தையும் படிப்பதற்கு எனக்கு பொழுதில்லை. அவ்வாறு ஒரு தேர்ந்த வாசகன் ஒரு கவிதையை அடையாளப்படுத்திவிட்டால் அவற்றின்மேல் வாசக கவனம் குவிவதை அக்கவிதை மேலும் மேலும் படிக்கப்படுவதை வாழ்வதை நீங்கள் காணலாம்.
இன்றைய சூழலில் கவிதைத் தொகுப்புகளை போடுவது மிக எளிது. நூறு பிரதிகளுக்குள் அச்சிடலாம். அல்லது எந்த செலவும் இல்லாமல் அமேசானில் ஏற்றலாம். அவற்றுக்கான வாசகனை கண்டடைவது தான் இங்கு அரிதினும் அரிது. முன்பே இங்கு கவிதை தொகுதிகள் தொடக்கநிலை கவிஞர்களால் எழுதப்பட்டு, சொந்தத்தில் அச்சிடப்பட்டு, சுண்டல் போல விநியோகிக்கப்படுகின்றன. பிரசுர நிலையங்கள் கவிதைகளை வெளியிடுவது மிக அரிது .ஏனெனில் வாசகர்கள் கவிதைகளை வாங்குவதில்லை. வாங்குவது அத்தனை உகந்ததும் அல்ல. நூறு ரூபாய் பணம் கொடுத்து ஒரு கவிதைத் தொகுப்பை வாங்கினால் அதில் ஒரு கவிதையேனும் நன்றாக இருக்கவேண்டும் என்ற உறுதிப்பாடை அளிக்கும் தொகுதிகளே ஆயிரத்தில் ஒன்றுதான் இங்கு.
அப்படியானால் எவ்வாறு கவிதையை எழுதி வெளியிடுவது? உலகெங்கும் உள்ள வழிமுறை உண்டு. கவிதைக்கான Peer Groups எனப்படும் தேர்ந்த வாசக வட்டங்களை சார்ந்து செயல்படுவது. எக்காலத்திலும் தமிழில் அவ்வாறு தான் இருந்திருக்கிறது. ஒரு கவிஞன் தனக்குத்தானே எழுதிக்கொண்டு ,எங்கோ ஒரு சிற்றூரில் வாழ்ந்துகொண்டிருப்பான் என்றால் அவன் தன்னைத்தானே பார்க்கவோ தன்னைத்தானே செழுமைப்படுத்திக்கொள்ளவோ வாய்ப்பு அமைவதே இல்லை. அவன் கவிதையை இன்னொருவர் உளம் குவித்து படிப்பதற்கான வாய்ப்பே அமைவதில்லை. ஆகவே முற்றிலும் கவனிக்கப்படாதவனாக, படிக்கப்படாதவனாக அவன் எஞ்சுவதே வழக்கம். காலப்போக்கில் அவன் கசப்பு கொண்டவனாகிறான். ஏதோ வஞ்சமோ சதியோ செயல்பட்டு தன்னை முழுக்க வே நிராகரிக்கிறது என்ற உளநிலைக்கு செல்கிறான். அதன்பின் புலம்பிக்கொண்டே இருக்கிறான். எந்தக்கவிதையை எவர் அங்கீகரித்தாலும் அங்கு வந்து தன் கசப்பையும் காழ்ப்பையும் கொட்டுகிறான்.
ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறு கவனிக்கப்படாத கவிஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் மெய்யாகவே கவித்திறன் கொண்டவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆனால் எப்படிக் கண்டுபிடிப்பது? அவர்கள் செய்யக்கூடிய ஒன்றே ஒன்றுதான் உள்ளது. மூத்த தலைமுறை கவிஞர்கள் மற்றும் கவிதை வாசகர்களுடன் உறவு கொண்டிருப்பது. அவர்களின் அரங்குகளில் பங்கெடுப்பது. அவர்களுடன் விவாதத்தில் ஈடுபடுவது. அவர்களுடன் தொடர்ந்து கவிதை குறித்து உரையாடி தன்னை மேம்படுத்திக்கொள்வது. தமிழில் நான் அறிந்து சிலர் மிக எளிதாக சிறந்த கவிதையை கண்டுபிடிக்கவும், சற்று பிசிறடிக்கும் கவிதையை செம்மைப்படுத்தவும், ஒரு தொகுதிக்கு தேவையான சரியான கவிதைகளைத் தேர்ந்தெடுக்கவும் திறன்கூடியவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக லக்ஷ்மி மணிவண்ணன்.
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுபெற்ற மதார் மிக ஆரம்பநிலைக்கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் குறுகிய காலத்திற்குள் அவருக்கு நெல்லையிலும் குமரியிலும் இருகும் நல்ல கவிதை வாசகர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவர்களுடன் தீவிரமாக உரையாடலில் ஈடுபடுகிறார். அவருடன் கவிதைகளின் தரம் அதன் வழியாக மேம்படுகிறது. தொடர்ச்சியாக அவருடைய கவிதைகளின் மேல் ஓர் இலக்கிய கவிக்குழுவின் வாசிப்பும் விமர்சனமும் நிகழ்கிறது. அது அவரை மேம்படுத்துகிறது. ஒருகட்டத்தில் அவர் சிறந்த கவிதைகளை எழுதத் தொடங்குகிறார். அக்கவிதைகளிலிருந்து சிறந்த கவிதைகளைத் தெரிவு செய்து ஒரு தொகுதியாக லக்ஷ்மி மணிவண்ணன் கொண்டு வருகிறார். அத்தொகுதி இன்று தமிழகம் முழுக்க கவனிக்கப்பட்ட நூலாக உள்ளது.
இன்னொரு உதாரணம் ஆனந்த்குமார். ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே அவருடைய கவிதைகளின் தரம் மேம்பட்டதை அவருடைய கவிதைகள் தமிழகம் முழுக்க வாசகர்களால் ஏற்கப்பட்டதைக் கண்டேன். அவருடைய உருவாக்கத்திலும் லக்ஷ்மி மணிவண்ணனின் பங்களிப்பு உண்டு
ஆகவே ஒரே வழிதான் உள்ளது. கவிதை எழுதுவதும் இதழ்களுக்கு அனுப்புவதும் தேவைதான். ஏனெனில் இதழ்களின் ஆசிரியர்கள் கவிதைகள் வாசிப்பை ஒரு தெரிவை நிகழ்த்துகிறார்கள். அது இன்றியமையாதது. அதற்கு இணையாகவே உங்க்ள் கவிதைகளைக் கவனிக்கும் உங்கள் கவிதைகளின்மேல் தொடர் விவாதத்தை உருவாக்கும் மூத்த கவிஞர்களின் வாசகர்களின் வட்டத்தை அணுகுங்கள் அவர்களுடன் இருங்கள்.
ஜெ லக்ஷ்மி மணிவண்ணன் தமிழ் விக்கி மதார் தமிழ் விக்கி ஆனந்த்குமார் தமிழ் விக்கிபொன்னியின்செல்வனும், வரலாறும்
பொன்னியின் செல்வன் ட்ரைலர் பார்த்தேன். இந்த வகை மாதிரியில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அவை அனைத்தையும் மறக்கும் வண்ணம் தற்கால க்ராஃபிக் நாவல்கள் போன்றதொரு ஓவியத் தன்மையில், ஈர்க்கும் பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு கொண்டு, தீவிரமான கதாபாத்திர வெளிப்பாடுகள் கொண்டு, fresh ஆக வந்திருக்கிறது.
இரண்டு பாகங்களும் வெளியான பின்னர், உயர்தர தயாரிப்பில் இப்படத்தின் வண்ணமிக்கு காட்சி சித்திரங்களை நிறைத்து, இதன் திரைக்கதை புத்தகமாக வெளியாகும் என்றால் அது மணிரத்னம் அவர்களின், பொது வாசிப்பு சூழலுக்கான என்றென்றைக்குமான பங்களிப்பாக இருக்கும்.
உண்மையில் இந்த டிரைலரை நிலம் குத்தி நிற்கும் புலிக்கத்தி எனும் பொ.செ குழு வெளியிட்ட முதல் சித்திரம் துவங்கி ஒவ்வொன்றாக அடுத்தடுத்து அது வெளியிட்ட சித்திரங்கள் பாடல்கள் வழியே ஒவ்வொன்றாய் வரிசையாக பார்த்தபடி இறுதியாக வந்து சேர்ந்தேன். முதல் ஓவியத்தில் உள்ள கத்தி துவங்கி, அந்தக் கத்திவெட்டில் காட்சி அறுந்து முடியும் ட்ரைலரின் இறுதி கணம் வரை, பொ.செ குழு இதை பொது மக்களுக்கு கொண்டுவந்த விதம் அபாரம்.
இவற்றுக்கு வெளியே நான் மிக மிக ரசித்தது மார்க்குலக மைந்தர்கள் இவற்றின் மேல் நிகழ்த்திய ‘காத்திரமான‘ உரையாடல்களை. முதல் போஸ்டர் வெளியானதுமே ஐயைய்யே சோழர் கத்தி இப்புடியா இருக்கும், என்று துவங்கி வைத்தது மார்க்குலக மைந்தர்களில் ஒன்று.
உண்மையில் போர்க் கத்திகள் எனும் தலைப்பு அதன் வழியே ஒட்டு மொத்த உலக போர் வரலாறுகளையே தொகுத்து எடுத்துவிடலாம் ஒரு மாபெரும் தகவல் சுரங்கத்தைக் கொண்ட ஒன்று. இணையத்தில் தேடினாலே போதும்.
பொ.செ முதல் ஓவியத்தில் வரும் கத்தி பொம்பியி க்ளாடியஸ் எனும் வகையை சேர்ந்தது. நவீன போர்த் தளவாடங்கள் உள்ளே நுழையும் வரை பண்டைய போர்களில் ஆதிக்கம் செலுத்தியது இந்த வகை கத்தியே. பயின்று பயின்று அதன் வசதி மற்றும் சாத்தியங்கள் பொருட்டு உலகம் முழுவதும் எல்லா போர்களிலும் இவ்வகை கத்தியே ஆயுதங்களில் முன்னணி வகித்திருக்கிறது. சோழர்காலத்தில் யவனக் கத்திகள் நிறையவே புழக்கத்தில் இருந்திருக்கின்றன.
மார்க்குலக மைந்தர்கள் சோழனின் கத்தி என்றதுமே வேதாளம் சொல்லும் கதை ஓவியத்தில் விக்ரமாதித்தன் வைத்திருப்பானே அந்த கத்தி என்று நினைத்து விட்டார்கள். அந்த வகை கத்தியும் போரில் பயன்படும் ஒன்றுதான் ( பொ.செ வில் அதை ஊன்றி எழும் போஸில் தான் ஜெயம் ரவி இருக்கிறார் ) அந்த கத்திப் பட்டையின் முன் பகுதி கூர்மையாகவும் , கத்தியை எடை கொள்ள செய்யும் பொருட்டு பட்டையின் பின் பகுதி தடித்தும், கத்தி முனை சற்றே பின் பக்கம் வளைந்தும் ,கைப்பிடி வளையத்தோடும் இருக்கும். இது வெட்டுக் கத்தி. தலைக்கு மேலாக ஓங்கி வெட்டுகயில் கத்தி கை விட்டு நழுவி விடாதிருக்கவே அதன் கைப்பிடியில் வளையம் கொண்டிருக்கிறது.
இந்த பொ.செ முதல்விளம்பரக் குத்துக் கத்தி கொண்டு வெட்டவும் முடியும் தோல் கவசத்தை துளைத்து குத்தவும் முடியும். இந்த கத்தியின் பட்டை இரு புறமும் கூரானது. அந்த பட்டையின் நடுப்பகுதி தடித்து, அது கத்தியின் முனையில் சென்று ஈட்டியின் கூர்மையில் முடியும். மணிக்கட்டை சுழற்ற வசதியாக அதன் கைப்பிடி உள்ளங்கை அகலத்தை தாண்டாது. வளையமும் இருக்காது. இந்த கத்தியை மண் நோக்கும் விதத்தில் தலைகீழாக பிடித்தும் பயன்படுத்த முடியும். சுழன்று சென்று இலக்கை தாக்கும் வண்ணம் வீசி எறியவும் முடியும். (க்ளாடியேட்டர் படத்தில், இந்த கத்தியை போரில் எத்தனை விதமாக பயன்படுத்த முடியுமோ அனைத்தையுமே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்) இந்த பொ.செ ஓவியத்தில் மேலதிகமாக இந்த கத்தியில் சேர்க்கப்பட்ட ஒன்றே ஒன்று பிடியில் உள்ள புலிகள். இணையாக மற்றொரு தகவலாக ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களில் ஒன்று இந்த வகை கத்தி. அதாவது இந்த வகை கத்தியின் சங்க கால வடிவம்.
இரண்டாவதாக மார்க்குலகமைந்தர்கள் அங்கலாய்த்த விஷயம் கதாபாத்திர தேர்வுகள். இதற்கு முன்னர் கமல் நேர்காணல் ஒன்றில் இதற்கு பதில் சொல்லி இருக்கிறார். அது
” எழுத்தில் கோழி முட்டை போட வேண்டும் என்றால் சிக்கல் குறைவு. அதே கோழி சினிமாவில் முட்டை போட வேண்டும் என்றால் நூறு பேர் வேண்டும் நிறைய செலவு ஆகும். அதற்கு பின் அதை பார்ப்பவர் ஐயயோ என் மனசுல இருந்த கோழி முட்டை சிகப்பு கலர்ல சதுரமா இருந்துச்சி இந்த சினிமா கோழி முட்டை என்னை ஏமாத்திருச்சி அப்டின்னு வருத்த படுவார். வாசகர்கள் கனவில் இருக்கும் பொதுவான கோழிமுட்டை என்பது வேறு, சினிமாவால் நனவில் எந்த எல்லை வரை (அந்த கனவின் அருகே) செல்ல முடியுமோ அது வரை சென்று, எல்லோருக்குமான முட்டை எதுவோ அதை மட்டுமே காட்ட முடியும். எழுத்தில் உள்ள கோழி முட்டை உங்கள் மனதில் உள்ள கோழிமுட்டையாக மாறுவதற்கு இடையே ஒரு பிராசஸ் இருக்கிறது. உங்கள் மனதில் உள்ள முட்டை அந்த பிராசஸ் வழியே உருவானது. சினிமாவில் அதெல்லாம் கிடையாது. அது நேரடியாக முட்டையைக் காட்டி விடும். அந்த பிராசஸ் இல்லாமல் முட்டையை பார்க்கும் நிலை இருக்கிறதே அதைத்தான் எழுத்து மாதிரி சினிமா இல்ல என்று சொல்லி விடுகிறோம். சினிமா பார்ப்பது என்பது வேறு. அதை நாம புரிஞ்சிக்க கொஞ்ச நாள் ஆகும். பாப்போம்“
இது மகாநதி படத்தின் சூழலின் போது கமல் பேசியது. அந்த கொஞ்ச நாள் இன்னும் வர வில்லை என்றே தோன்றுகிறது.
மூன்றாவதாகவும் (தற்போதைக்கு) இறுதியாகவும் ட்ரைலர் பார்த்து மார்க் மைந்தர்கள்கள் கண்டுபிடித்திருக்கும் அடுத்த விஷயம் ‘ஜெயமோகனுக்கு விவரமே பத்தல, இலங்கை எனும் பெயர் சோழர் காலத்தில் கிடையாது’ என்பது. கல்கி இலங்கை என்ற வார்த்தையையே பொன்னியின் செல்வன் நாவலில் பயன்படுத்தவில்லை என பலர் எழுதியிருந்தார்கள். மார்க் மைந்தர்கள் அறியாதது கல்கியின் பொன்னியின் செல்வனில் இலங்கை என்றுதான் உள்ளது.‘இது இலங்கை‘ என்ற குரல் காதில் ஒலிக்கவே வந்தியத்தேவன் கண் விழிக்கிறான் என்றே கல்கி எழுதுகிறார். அந்த அத்தியாயத்தின் தலைப்பே இலங்கை என்பதுதான்.
இவை போக இலங்கை எனும் பெயர் எப்போதில் இருந்து புழக்கத்தில் இருந்திருக்கும் என்று அங்கே இலங்கை வரலாற்றாய்வாளர்களும் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்கள் வந்து சேர்ந்த இடம் சிறுபாணாற்றுப்படை. தமிழ்நாட்டில் உள்ள மாவிலங்கை எனும் சிற்றூரை ( இந்த ஊர் எங்க ஊர் பக்கம்தான் இருக்கிறது. இங்கே ஒரு குடைவரை கோயில் உண்டு. நமது தளத்தில் எழுதியும் இருக்கிறேன்) பாணன் புகழ்ந்து பாடுகையில் ‘தொன்மையான அந்த இலங்கையின் பெயரை கொண்ட‘ என்ற வரிகளை சுட்டிக் காட்டி, அது இன்றைய இலங்கையாகவே இருக்க வாய்ப்பு மிகுதி என்று சொல்லி காரணங்களையும் நிறுவி இருக்கிறார்கள். (நூலகம் ஆர்க் தளத்தில் நூல்கள் பல உண்டு)
பாடல் கீழே
நறு வீ நாகமும், அகிலும், ஆரமும்,
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய,
பொரு புனல் தரூஉம் போக்கறு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய,
நல் மா இலங்கை மன்னருள்ளும்,
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்,
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடிக்கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை
பல் இயக் கோடியர் புரவலன் (116-125)
பொருளுரை:
நறுமணமுடைய மலர்களை உடைய சுரபுன்னை, அகில், சந்தனம் ஆகிய மரங்களின் துண்டுகளை நீராடும் துறையில் உள்ள பெண்களின் தோள்களுக்குத் தெப்பமாகக் கொண்டு வந்து தரும், கரையை இடிக்கின்ற ஆற்றினையுடைய, தொன்மையான பெருமைமிக்க இலங்கையின் பெயரை, நகரம் தோன்றிய பொழுதில் இருந்து கொண்ட, அழித்தற்கு அரிய மரபை உடைய, மாவிலங்கையின் சிறந்த மாவிலங்கை மன்னர்கள் பலருள்ளும் மறு இல்லாது விளங்கும், பழியில்லாத குறியைத் தப்பாத வாளினையுடைய, புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடையவன் அவன்.
உ.வே.சா அவர்களும் தமது உரையில் இவ்வாறே குறிப்பிடுகிறார். மாக்குலக மைந்தர்ககள் தாராளமாக இவர்களை நம்பலாம்.
உண்மையில் இத்தனை சில்லறைத்தனங்களும் எதற்காக? ஒரு வெகுஜன சினிமா இவர்களையும் உள்ளிட்ட எல்லோரையும் நோக்கித்தானே எடுக்கப்படுகிறது. இந்த வெகு ஜனத்தில் நானும் ஒருவன் இல்லை எனும் ஊமை ஈகோ தவிர இவற்றுக்கு பொருள் என்ன?
கமல் இதற்கும் ஆளவந்தான் சூழலில் மிக அழகான பதில் ஒன்றை தந்திருக்கிறார்.
“நான் புதுசா ஒரு சமையல் ட்ரை பண்ணிருக்கேன். எப்டி இருக்கு சொல்லுங்க அப்டின்னு உங்க கிட்ட தரேன். நீங்க என்ன பண்றீங்க அதை தரைல கொட்டி, விரலால கிண்டி பாத்து, இதுல மிளகு சரியா பொரியல, கிழங்கு சரியா வேகலை அப்டின்னு சொல்றீங்க. சாப்பிட்டு பாத்துதானே சொல்லணும் அதானே முறை ”
இன்றும் அதே நிலை அவ்வாறே நீடிக்கிறது.
காசு கொட்டி நிறுவனம் செய்த விளம்பரங்களை கடந்து இது போன்றவைகளும் எப்படியோ படத்துக்கான புரமோஷன் என்று மாறி விட்டதுதான் ஆச்சர்யம் :).
கடலூர் சீனு
*
அன்புள்ள சீனு,
நம் மக்கள் கவனிப்பது சினிமா ஒன்றையே. பொன்னியின் செல்வன் சினிமாவை வைத்து இத்தனை சரித்திர ஆராய்ச்சி நடைபெறுகிறது. ஆனால் எத்தனைபேர் சரித்திரக்கட்டுரைகள் போடும் இணையப்பக்கத்துக்குச் செல்வார்கள். ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. ஆகவேதான் நான் வரலாறு சினிமாவாக வரவேண்டும் என்று சொல்கிறேன். அடுத்த தலைமுறைக்கு ராஜராஜ சோழன் பெயர் சென்று சேர அது ஒன்றே வழி.
இங்கே ஒரு சினிமா வெளிவந்ததுமே எல்லா அரசியல் தரப்புகளும் வந்து அதை சர்ச்சை செய்கின்றன. அதன்பொருட்டு அதை சர்ச்சைக்குள்ளாக்குகின்றன. ஏன்? அந்த அரசியல் தரப்பை அடுத்த தலைமுறை கவனிக்கச் செய்ய வேறு வழியே இல்லை.
அந்த சர்ச்சைகள் காழ்ப்பின் மொழியில் அமையாதவரை நல்லவைதான். அப்படியாவது சோழர்காலத்தில் என்ன கத்தி பயன்படுத்தப்பட்டது, சோழர் காலத்தில் இலங்கை எப்படி அழைக்கப்பட்டது என்று தெரிந்துகொண்டால் சரி.
ஜெ
ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்தில் முதல் சந்திப்பு
ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் அலுவலகத்தில் வரும் 11.8.22 ஞாயிறு காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை அகர முதல்வன், சாரு நிவேதிதா ஆகியோரின் படைப்புகள் மீது கலந்துரையாடல் நடைபெறும். கடலூர் சீனு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதில் பங்கேற்க விரும்புவோர் முன்தகவல் கொடுத்துவிட்டு வரவும்.கிருஷ்ணன்,ஈரோடு.98659 16970.
வின்ஸ்லோ, அகராதி அறிஞர்
தமிழின் முதல் பேரகராதியை அமெரிக்க மிஷன் மதப்பணியாளரான மிரன் வின்ஸ்லோ தொகுத்தார். அதற்கு முன்பு பீட்டர் பெர்ஸிவல் போன்றவர்கள் தொடங்கிய பணியை அவர் முழுமை செய்தார். 30 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் அவர் செய்த பணி அது. அதன் விரிவாக்கமே நாம் இன்று பயன்படுத்தும் சென்னைப் பல்கலைக் கழக பேரகராதி. வின்ஸ்லோ பற்றிய ஏறத்தாழ எல்லா செய்திகளையும் தொகுத்திருக்கும் இப்பதிவு, இதிலிருந்து செல்லும் தொடுப்புகள் வழியாக ஒரு நூலாகவே விரியும்தன்மை கொண்டது.
வின்ஸ்லோசாரு, கடிதங்கள்
எழுத்தாளர் சாருவுக்கு இந்தவருட விருது அளிக்கப்படுவது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிக்கிறது, மகிழ்ச்சி அவருக்கு இந்த விருது மூலம் கிடைக்கும் இலக்கிய அங்கீகாரம் பற்றி அல்ல.
ஏற்கனவே இந்த விருது சாஹித்ய அகாடமி விருதைவிட உயர்ந்ததாக கருதப்படுகிறது, ஆனாலும் இலக்கியத்தின் சில தரப்புகளை இந்த விருது இன்னமும் பொருட்படுத்தவில்லை என்ற பொருமல் சில நடுநிலையாளர்களிடம் உண்டு.
வேத மறுப்பும் உள்ளடக்கியது தான் இந்திய மெய்யியல் மரபு. காமத்தை பழகும், பிணத்தை மெய்தேடலுக்கான கருவியாக உபயோகிக்கும் வாமாச்சார முறையையும் உள்ளடக்கியது தான் தாந்த்ரீக மரபு.
அந்த வகையில் பிறழ்வெழுத்தையும் உள்ளடக்கி இந்த இலக்கிய விருது முழுமை அடைகிறது என்பதே என்னுடைய புரிதல், என் புரிதலும் இலக்கிய அறிவும் எல்லைக்குட்பட்டது.
சாகித்ய அகாடமியை நம் விருது என்றோ தாண்டி சென்றுவிட்டது, விருது வளர்ந்து ஞானபீடத்தையும் கடக்க வேண்டும் என்பதே என் ஆசை.
(வாமாச்சாரம் பற்றி : https://www.jeyamohan.in/762/)
சங்கர் பி
அன்புள்ள ஜெ
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிக்கிறது. என் வரையில் என் மனதில் ஓஷோவுக்குச் சமானமான ஒரு இடம் சாருவுக்கும் உண்டு. நான் ஒரு சின்ன குடும்பத்தில் வளர்ந்தவன். செண்டிமெண்டுகள்தான் எங்களுக்கெல்லாம் சங்கிலி. அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், தங்கை செண்டிமெண்ட். அதோடு சாதி, மதம், திமுக அரசியல். எல்லாம் சேர்ந்து என்னை மூச்சுத்திணறச் செய்யும் காலத்தில்தான் சாருவும் ஓஷோவும் அறிமுகமானார்கள். நான் கட்டுண்டிருக்கிறேன் என்பதையே நான் அவர்கள் வழியாகத்தான் அறிந்தேன். சாரு எனக்கு அறிமுகம் செய்த எழுத்தாளர்கள் ஒருவகை. ஓஷோ அறிமுகம் செய்த எழுத்தாளர்கள் இன்னொரு வகை. நான் அவர்கள் வழியாக சென்றேன், எனக்கான வழியை நான் கண்டுகொண்டேன். ஆனால் இன்றைக்கு நம் முன் செண்டிமெண்டுகளையும் டாபூக்களையும் களைந்து வெளியே செல்ல இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர்கள் இவர்கள் இருவரும்
செல்வராஜ்.எஸ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



