Jeyamohan's Blog, page 716

September 14, 2022

ஜெயமோகன் 60

நன்னெறிக் கழகம், கோவை மற்றும் கோவை இலக்கிய வாசகர்கள் இணைந்து ஒருங்கிணைக்கும ஜெயமோகன் 60 விழா

நாள் – 18 செப்டெம்பர் 2022, ஞாயிறு

வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் – மாலை 4:30 மணி

விழா – மாலை  6:30

இடம் – சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, R. S. புரம், கோவை

பங்கெடுப்போர்: இயாகோக்கோ சுப்ரமணியம், Dr. எம்.கிருஷ்ணன், பவா செல்லத்துரை, தேவதேவன், கல்பற்றா நாராயணன், பாரதி பாஸ்கர், யுவன் சந்திரசேகர், மரபின் மைந்தன் முத்தையா, எஸ்.நடராஜன்

தொடர்புக்கு  9842731068

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2022 07:42

September 13, 2022

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்- வாசிப்பு பயிற்சி முகாம்

நண்பர்களே,

வாசிப்பின் முதல் நிலையில் உள்ள வாசகன் தன் வாசிப்பை தீவிரப் படுத்தவும், ஒரு தீவிர வாசகன் தன் வாசிப்பை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ளவும் இம்முகாமை நடத்துகிறோம்.

இது அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் (சனி காலை 10.30 முதல் ஞாயிறு மதியம் 1.30 வரை) ஈரோடு அருகே நிகழும். புனைவு, கவிதைகள், அபுனைவு ஆகியவற்றை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

தங்குமிடம் உணவு உட்பட கட்டணம் தலா ரூ 1200, பெண்களுக்கு தனி தங்கும் இடம் உண்டு.

போகன் சங்கர், அனீஷ், ராஜகோபால், எம் கோபால கிருஷ்ணன் ஆகியோர் அமர்வு நடத்த ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் சிலர் இணையக் கூடும்.

பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண், இதற்கு முன் கலந்துகொண்ட நிகழ்வுகள் ஆகியவற்றை தெரிவித்து முன்பதிவு செய்யலாம் :

கிருஷ்ணன்,

ஈரோடு.

98659 16970.

salyan.krishnan@gmail.com

 •  1 comment  •  flag
Share on Twitter
Published on September 13, 2022 11:45

அப்பாவின் தாஜ்மகால்

முழுக்கோடு வீடு அமைந்தது அப்பாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. அதுவரை அத்தனை பெரிய வீட்டில் நாங்கள் இருந்தது இல்லை. அருமனை, முஞ்சிறை, பத்மநாபபுரம், கொட்டாரம் எனக் குடியிருந்த வீடுகள் எல்லாமே சிறியவை. சில வீடுகளை பிறருடன் பகிர்ந்தும் கொள்ள வேண்டியிருந்தது.

அருமனைக்கு மீண்டும் மாற்றலாகி வந்தபோது அப்பா வீடுதேட ஆரம்பித்தார். அருமனையில் சிறிய வீடுகள்தான் இருந்தன. ஒரு கட்சிக்காரர் வில்லங்கத்தில் கிடந்த முழுக்கோடு வீட்டை சுளுவாடகைக்கு எடுத்துத் தருவதாகச் சொன்னார்.

அருமனையில் அப்பாவின் ஆபீஸில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அணியாட்டு வீடு. கிராமம், முழுக்கோடு. நூறு வருடப் பழைமை கொண்ட வீடு அது. மரத்தாலான மூலவீடு. அதைச் சுற்றி பெரிய அறைகள் இணைக்கப்பட்டிருந்தன. எடுத்ததுமே ஒரு பெரிய கூடம். அதில் நாங்கள் ஊஞ்சல் கட்டி ஆடுவோம். அழிபோட்ட முகப்பு. அதற்கு அப்பால் மரவீட்டின் வராண்டா. சுவர்களும் தூண்களும் எல்லாமே பலாமரத்தடியால் ஆனவை. மரத்தாலான இரு வைப்பு அறைகள். ஒரு படுக்கையறை ஒரு பத்தாயப்புரை.

மரவீட்டின் வலப்பக்கம் இணைக்கப்பட்டதாக இன்னொரு மாபெரும் கூடம். ஐம்பது பேர் சாதாரணமாகப் புழங்கலாம். இன்றைய வழக்கில் உணவுக்கூடம். அன்று அதுதான் பெண்களின் உலகம். அதையொட்டி சமையல் அறை. கிணற்றடி அறை. அதிலிருந்து மேலும் கலந்து சாய்ப்பு எனப்படும் புழக்கடை அறை. அதில் உரல்,
ஆட்டுதல், சருகு அடுப்பு முதலியவை. பிறகு வெளியே தனியாக இரு கூரைக்கட்டிடங்கள். ஒன்றில் சாம்பல் குழியும் விறகு அடுக்குகளும். அதற்கு விறகுப்புரை என்று பெயர். இன்னொன்றில் நெல் அவிக்கும் அடுப்பும் பெரிய இரு நெல்லுரல்களும் ஏணி போன்ற பொருட்கள் வைக்கும் வசதியும். அதற்கு நெல்லுபுரை என்று பெயர்.

மொத்தத்தில் அது ஒரு உதாரண நாயர் தரவாட்டு வீடு. அணியாட்டு குடும்பம் சிதறிப்போய், நிலங்கள் பாட்டக்காரர்களால் கைவசப்படுத்தப்பட்டு, நீதிமன்ற வழக்குகளில் சீக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது. அந்த வீடு எட்டேக்கர் விரிவுள்ள தோட்டம் நடுவே இருந்தது. அதில் முந்நூறு தென்னை மரங்கள், ஏராளமான மாமரங்கள், பலா மரங்கள், இலஞ்சி, அத்தி, சணாத்தி, கொன்றை, பூவரசு மரங்கள். ஒரு குட்டிக் காடு. பெரிய முகப்புமுற்றம். அதேயளவு பெரிய புழக்கடை முற்றம். இரண்டையும் சேர்த்தால் வருமளவுக்கு பெரிய அறுத்தடிக் களம். தோட்டம் ஒரு குத்தகைதாரரின் பராமரிப்பில் இருந்தது.

அப்பாவுக்குள் இருந்த குலநாயர் மெல்ல வீறு கொண்டு எழ ஆரம்பித்தார். அப்பாவின் அப்பாவுடைய சொந்த ஊர் திருவரம்பு. அங்கே அவர்களுக்குச் சொத்துகள் இருந்தன. அவர் திருவட்டாறு கோயிலடி வளாகத்தில் லட்சுமிக் குட்டியம்மாவை மணந்து அப்பாவைப் பிறப்பித்ததுமே இறந்துவிட்டார். பாட்டி அதன்பிறகு மேலும் திருமணம் புரிந்து மேலும் குழந்தைகளுக்குத் தாயானாள். அப்பாவுக்கு சிறு வயதிலேயே அவரது அம்மாவுடன் ஒத்துப்போக முடியவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அப்பா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

அதன்பிறகு அப்பாவுக்கு என வீடு இருந்ததில்லை. டியூஷன் ஆசிரியராகப் பல வீடுகளில் ஒண்டிக் கொண்டார். கேரள அரசு ஊழியரானார். பிறகு தமிழக அரசு ஊழியரானார். அவருடைய அகத்தில் தன்னுடைய அப்பாவின் சொந்த ஊர்மீது ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அங்குள்ள சொத்துகள் முழுக்க அன்றைய பெண்வழிச் சொத்துரிமை முறைப்படி மருமகள்களுக்கு கைமாறி பலவாறாகச் சிதறிப் போய்விட்டதனால் அப்பாவுக்கு திருவரம்பு வயக்க வீட்டில் ஒரு வகையான உரிமையும் எஞ்சியிருக்கவில்லை. குடும்பத்தின் பொதுச் சுடுகாட்டு நிலத்தில் கூட அவருக்கு உரிமை இருக்கவில்லை.

இருந்தாலும் அப்பா திருவரம்புக்கு அடிக்கடிச் சென்று வருவார். திருவரம்பு மகாதேவர் ஆலயத்தில் நடக்கும் திருவிழாக்களுக்கும் சிறப்பு பூஜைகளுக்கும் சென்று சாமி கும்பிடும் பாவனையில் ஊரையும் ஊராரையும் பார்த்து வருவார். அப்பாவின் பள்ளித்தோழர் நாராயணன் போற்றி திருவரம்பு மகாதேவர் கோயிலின் பூசாரியாக கோயிலருகே குடியிருந்தார். அங்கே போய் போற்றியுடன் விளையாடிவிட்டு வருவார். மானசீகமாக அப்பா திருவரம்பு ஊரில்தான் வசித்தார்.

முழுக்கோட்டு வீட்டை அப்பா மெல்ல மெல்ல தன்னுடைய அந்தரங்கக் கனவான ‘தறவாடு’ ஆக மாற்ற ஆரம்பித்தார். கொல்லைப்பக்கம் ஒரு தொழுவம் கட்டி நாலைந்து பசுக்களை வாங்கி விட்டார். அது அவருடைய நெடுநாள் திட்டம். அதன்பின் பாதி வாழ்நாளை அவர் தொழுவத்தில்தான் கழித்திருக்கிறார். இரவு நெடு நேரம் வரை மாடுகளுக்கு உண்ணி பொறுக்கியும் தடவி விட்டும் தொழுவத்திலேயே இருப்பார். தொழுவத்தில் ஈஸிசேர் போட்டு அமரக் கூடிய ஒரே ஆள் நானறிந்த வரை அவர்தான்.

அப்பா நாய் வளர்க்க ஆரம்பித்தார். சேமித்த பணத்தில் வயல் வாங்கினார். எட்டுக் கிலோமீட்டருக்கு அப்பால் திருவரம்பில் வயல் வாங்கி அவரே நேரடியாக விவசாயம் செய்ய ஆரம்பித்ததை ஊரில் டீக்கடைகள் தோறும் விவாதித்துச் சிரித்தார்கள். அதைப் பாட்டத்துக்கு விட்டுவிடலாமே என்று ஆலோசனை சொல்லப்பட்டபோது அப்பா வாய்நிறைய வெற்றிலையைத் திணித்தபடி மௌனம் சாதித்தார். அங்கே முதன்முதலாக வயல் அறுவடை செய்தபோது கற்றைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் குறுகலான பாதைகளில் பகல் முழுக்க ஓடச்செய்து திருவரம்புக்குக் கொண்டு வந்ததைக் கேள்விப்பட்டவர்கள் நம்பமுடியாமல் பாய்ந்து வந்து எங்கள் வீட்டுமுன் கூடினார்கள்.

அறுவடை செய்தவர்களே கதிரடிக்க வேண்டும் என்பது சாஸ்திரமானதனால் திருவரம்பில் இருந்தே ஆட்கள் தனி வண்டியில் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களுக்கு மீன்கறியுடன் சோறு போடப்பட்டது. அறுவடை முடிந்து பத்தாயத்தில் நெல்லைச் சேர்த்தபின் அப்பா பத்தாயப்புரை அருகே ஈஸிசேர் போட்டு அமர்ந்து கனகம்பீரமாக வெற்றிலை நீவி சுண்ணாம்பு தேய்த்து சுருட்டி வாயில் போட்டுக் கொண்டார். “அந்த நெல்லை அங்கிண கதிரடிச்சு வித்துட்டு இங்க நெல்லும் வைக்கோலும் வாங்கினா பாதிக்குப் பாதி லாபமுல்லா?” என்று வீட்டு வேலைக்கு வந்த எஸிலியம்மா கேட்டபோது அப்பா புன்னகையுடன் ‘நீ போடி மயிரே, கிருஷிக்க சுகம் உனக்கு என்ன தெரியும்?’ என்றார்.

அதே கேள்வியைக் கேட்டு முந்தின நாள் அடி வாங்கியிருந்த அம்மா “என்ன சொல்கிறார்?” என்று கேட்டபோது எசிலி “அம்மிணியே அவரு கிருழி படிக்குதாரு. அதில ரெசம் கண்டுபிட்டரு. பேடிக்க வேண்டாம். இப்பம் நஷ்டமானாலும் பிறவு பொன்னு எடுப்பாரு. வெப்ராளப்படாம இருங்க” என்றாள். அம்மா பெருமூச்சு விட்டாள். ஆனாலும் அம்மாவுக்கு ஆறவில்லை.

விவசாயியின் வீடு என்ற தோரணையை அந்த வாடகை வீட்டில் உருவாக்குவதற்காக அப்பா பணத்தை அள்ளி இறைத்தார். இருபத்து நான்கு பழுதுள்ள ஒரு பெரிய ஏணியை வாங்கிக் கொண்டுவந்து திண்ணையில் கட்டித் தொங்கவிட்டார். அது தென்னைமரம் ஏறுவதற்குரியது. தென்னைமரங்கள் எதுவும் எங்களுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. வீட்டுக்கு முன்பக்கம் பெரிய வைக்கோல்போர் கூட்டப்பட்டது. எருக்குழி வெட்டப்பட்டது. கடைசியில் அப்பா ஒரு பெரிய கலப்பையை வாங்கிக் கொண்டு வந்து வீட்டுமுன் வைத்ததும் முழுக்கோட்டில் அவர் ஒரு வாழும் தொன்மமாக ஆனார்.

அப்பா படுசிக்கனம். என்னுடைய அப்பா ஆனதனால் அப்படிச் சொல்கிறேன். வேறு ஒருவர் என்றால் கஞ்சன் என்று சொல்வேன். டீக்கடையில் ஒரு வடை சாப்பிடுவதாக இருந்தால்கூட முதலில் விலை கேட்டபிறகு தான் கையில் எடுப்பார். வீட்டில் அம்மாவும் சிக்கனம்தான். அக்காலத்தில் கிராம வாழ்வில் எல்லாமே மலிவு. அத்துடன் பத்திரங்களைப் படித்து சட்ட ஆலோசனை வழங்குவது அப்பாவுக்கு உபரிவருமானம் தரும் தொழிலாகவும் இருந்தது. சிறுகச்சிறுகச் சேர்த்து திருவரம்பை ஒட்டி நிலங்களை வாங்கினார். வில்லங்க நிலங்களை ஆராய்ந்து வாங்கி நீதிமன்றச் சிக்கல்களைத் தீர்த்து எடுப்பதில் அவர் நிபுணர்.

அப்பாவின் குடும்ப வீட்டை ஒட்டிய நிலத்தை வாங்கியது அவருடைய வாழ்க்கையின் பெருவெற்றி. அவரது குடும்பப் பெயர் வயக்கவீடு. வீட்டின் பெயர் ‘கணபதியம் விளாகம்’ அப்பா பெருமிதத்துடன் என்னையும் அண்ணாவையும் அழைத்துக்கொண்டு அந்த நிலத்துக்குப் போனார். தென்னைமரங்களை ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தார். அந்த நிலத்தில் அவர் உலவும்போது நிலவில் ஆம்ஸ்ட்ராங் உலவுவது போல இருக்கிறது என்றான் அண்ணா. நான் வேறுபக்கம் பார்த்துச் சிரித்தேன்.

நிலம் சரிவாக ஆற்றை நோக்கி இறங்கி ஆற்றுக்குள் பரவிக் கிடந்தது. அப்பா பணம் செலவு பண்ணி அந்த நிலத்தில் பாத்திகள் கட்டி அதை எழுப்பினார். ஒவ்வொரு நாளும் அங்கே வேலையாட்கள் உழைத்தார்கள். புதிய நோட்டுகளை வங்கியில் இருந்து கொண்டு வந்து செலவழித்தார். அவருக்குக் கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் இருப்பதாக ஊரில் வதந்தி பரவியது. விளைவாக அவர் புதிய புதிய ரூபாய் கொடுத்தால் வேலையாட்கள் அவற்றை வாங்க மறுத்தார்கள்.

அப்பா ஆற்றுவண்டலை வெட்டி, சுமந்து கொண்டு வந்து கொட்டி எழுப்பிய நிலத்தில் முதன் முதலாக அல்பீஸ் மரங்களை நட்டார். மேல் மண் தொடர்ந்து கரைந்து ஆற்றுக்குள் வழிந்து கொண்டிருப்பதனால் அப்பகுதி நிலங்களெல்லாமே சக்தியிழந்து மரங்கள் தேம்பி நிற்கும். ஆற்று வண்டலை அள்ளிப் போட்டுப் பாத்தி கட்டி அதன்மீது அடர்த்தியாக அன்னாசிச் செடிகளை நட்டால் மண் அரிக்காது என்று அப்பா கண்டுபிடித்தார். அல்பீஸ் மரம் மிகச்சிறந்த வணிகப்பயிர் என்பதை நிரூபித்தார் அவர். ஏழுவருடம் கழிந்து அந்த மரங்களை விற்று அதேபோல இன்னொரு தோட்டத்தை அவர் வாங்கினார்.

திடீரென்று ஒரு நாள் அணியாட்டு வீட்டின் கோயில் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு கிடைத்ததுமே அதைப் பெற்றவர் வீட்டையும் நிலத்தையும் விற்றார். வீட்டைக் காலி செய்யும்படி வாங்கியவர் சொன்னார். நான் அப்போது எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அங்கு வந்தோம். அப்பா அப்பகுதியில் விரிவாக வேர்பரப்பி விட்டிருந்தார். நான்கு மாடுகள், நாய்கள், கோழிகள், பூனைகள், வைக்கோல்போர், தேங்காய்ப்புரை, நெற்குதிர் எல்லாவற்றையும் இடம்மாற்ற வேண்டும். திருவரம்பு தவிர எங்கும் செல்ல முடியாது. திருவரம்பில் வாடகைக்கு வீடு கிடைப்பது அனேகமாகச் சாத்தியமில்லை.

இரவில் அப்பா ஈஸிசேரில் படுத்து மீண்டும் மீண்டும் வெற்றிலை போட்டார் “டீ” என்றார். அது காதல் அழைப்பு. அப்பா அம்மாவை வாரம் ஒருமுறை அப்படி அழைப்பதுண்டு. இருவரும் சிரித்துக் குலாவிக் கொள்வார்கள் – சண்டை தொடங்குவது வரை. அம்மா சென்று அருகே அமர்ந்ததும் “ஒரு வீட்டைக் கட்டிடலாம் ஏண்டி?” என்றார் அப்பா. அமமா பிரமித்துப் போனாள். ஒன்றும் சொல்ல முடியவில்லை. “நான் யோசித்து விட்டேன். நமக்குச் சொந்தவீடு இல்லாமல் முடியாது. ஒரு பிளான் போட்டேன்” அப்பா பெட்டியிலிருந்து ஒரு கத்தைத் தாள்களை எடுத்தார் ஏழெட்டு வருடங்களாகவே போட்டு வைத்த கணக்குகள். அதன்படி பத்தாயிரம் ரூபாய்க்குள் ஒரு வீட்டைக் கட்டி விடலாம். “நீ என்ன சொல்றே?” அம்மா சம்மதித்தாள்.

அப்பா மேற்கொண்டு வீட்டைப்பற்றிப் பேச ஆரம்பித்தபோது அம்மா துணுக்குற்றாள் “ஓட்டு வீடா? இப்போ யார் ஓட்டு வீடு கட்டுகிறார்கள்? டெரஸ் வீடு கட்டுவோம்” “ச்சீ போடி எரப்பாளி நாயே…” அப்பா பொங்கினார். “குடும்பத்தில் பிறந்தவன் சிமிண்ட் வீடு கட்டுவானா? கோழிக்கூடு மாதிரில்ல இருக்கு அது? மரம் அறுத்து அடுக்கி வீடு கட்டுவது தான் நாயருக்கு மரியாதை. அதெப்படி, நல்ல குடும்பத்தில் பிறந்தால்தானே தெரியும்?” தன் குடும்பத்தைச் சொன்னால் அம்மா கொதித்து எழுவாள் அப்பா பதிலுக்கு எகிறுவார். வழக்கம்போல அடிதடி. அப்பா பீரோவைப் பிடித்து ஆவேசமாகத் தள்ளினார். அது டமாரென்று சரிந்து விழுந்தது. அம்மா போய் சமையல் அறைக்கதவை ஓங்கி அறைந்தாள்.

ஊரில் உள்ள எல்லாருமே அப்பாவிடம் உபதேசித்தார்கள். டெரஸ் வீடுதான் உறுதியானது. அதுதான் வரும்காலத்தில் மதிப்பு உள்ள கட்டிடம். செலவும் ஓட்டு வீட்டைவிடக் குறைவுதான். நல்ல மரம் போட்டு ஓட்டு வீடு கட்டுவதற்கு டெரஸ் வீட்டை விட அதிகம் செலவாகும்.  அப்பா அவருக்குப் பிடிக்காத எதையும் கேட்டதே இல்லை. வெற்றிலை குதப்பியபடி பேசாமல் பார்த்துக் கொண்டே இருப்பார்.

ஓட்டு வீடு கட்டுவதற்குத் தெரிந்த ஆசாரிமாரே இப்போது இல்லையே என்றார் அப்பாவின் நண்பர் கிருஷ்ணபிள்ளை. அப்பா அதையும் பல வருடங்களுக்கு முன்னரே பார்த்து வைத்திருந்தார். அப்பாவின் தேர்வான புண்ணியம் குமாரன் ஆசாரி திருவனந்தபுரத்தில் மகாராஜாவுக்கு ஒரு பெரிய ஓட்டு வீடு கட்டிக் கொடுத்தவர் என்றார் அப்பா. அப்பாவின் அப்பா வசித்த பழைய கணபதியம் வளாகத்து வீட்டுக்கு அருகிலேயே இடம்பார்த்தார். ஸ்தானம் பார்த்த அப்பாவின் அண்ணாவும் சோதிடரும் வைத்தியருமான கேசவபிள்ளை ‘தோஷமில்லை’ என்றுதான் மையமாகச் சொன்னார். அங்கே வீடுகட்டுவதென்ற இறுதிமுடிவை அப்பா எடுத்து நெடுநாட்களாகி விட்டிருந்தது.

வாஸ்துமண்டலம் போடுவதற்கு குமாரன் ஆசாரியின் அப்பா பாச்சு ஆசாரியை மாட்டு வண்டியில் கொண்டுவந்தார்கள். கிழவருக்கு எண்பது தாண்டிவிட்டிருந்தது. நல்ல திடமான உடல். மார்பில் சோப்புநுரை போல நரை மயிர். கீழ்த்தாடையை மாடு அசைபோடுவது போல ஆட்டும் வழக்கம் இருந்தது. பல்லில்லாத ஈறுகள் அப்போது உள்ளே ஒன்றுடன் ஒன்று வழுக்கி உரசும். வாஸ்து மண்டலத்தை அவர் ஏற்கனவே வரைந்து கொண்டு வந்திருந்தார்.

வண்டியிலிருந்து இறங்கி மாமரத்தடியில் சிறுநீர் கழித்து விட்டு திரும்பி மகா தேவர் கோயிலை நோக்கிக் கும்பிட்ட பிறகு ‘எங்கயாக்கும் தலம்?’ என்றார். அப்பா பவ்யமாக வந்து கீழவரை அழைத்துச் சென்று இடத்தைக் காட்டினார். கிழவர் அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தார். “இங்கிண வீடு நிக்காதே நாயரே” என்றார். “இதாக்கும் நமக்கு வேண்டிய எடம்” என்றார் அப்பா. “இந்த எடம் வலது எடது மீட்டு கெடக்கு. கெழக்க வாசல் வைக்கப் பிடாது வடக்க வாசல் வச்சா ஐசரியக்கேடுல்லா?” அப்பாவின் கண்கள் மாறுபட்டன. “இதாக்கும் நான் சொல்லப்பட்ட எடம்” என்றார்.

மூத்தாசாரி தன் மகனை நோக்கி “புலையாடிமோனே, எங்கல போனே?” என்றார். குமாரன் ஆசாரி அருகே வந்து “அப்பன் வரணும் சொல்லுதேன்” என்றார். “எங்கல வாறதுக்கு? எரப்பாளிக்க மோனே’உடையோன் சொல்லுதாண்ணு நிக்கா தலத்துலே எடம் பாத்தியா லே?”” என்று கிழவர் ஊன்றி வந்த வெள்ளிப்பூண்பிரம்பால் மகனை அடிக்கப் போனார். “அப்பன் வரணும்” என்று குமாரன் ஆசாரி தந்தையை இழுத்துச் சென்றார்.

வண்டிச்சக்கரத்தின் அருகே நின்று இருவரும் பேசிக் கொண்டார்கள். அப்பா என்னிடம் திரும்பி “வாய் பாத்துட்டு நிக்கிறியா? ஓடுடா” என்றார். நான் சற்றே விலகினேன். குமாரன் ஆசாரி வந்து “அப்பம். காரியங்கள் சொன்னது போல. தறிவச்சுப் போடுவோம்” என்றார். சற்றுத்தள்ளி எசிலியும் அம்மாவும் நின்றிருந்தார்கள். அம்மா என்னை அழைத்து ஆசாரியை அருகே கூட்டி வரச் சொன்னாள். ஆசாரி சற்றுத் தயங்கியபடிதான் அருகே வந்தார். அம்மா “எந்தா விசேஷம் குமாரா?” என்றாள். “ஒண்ணுமில்லை அம்மிணி. ஒண்ணுமில்லை”.  “மூத்த ஆசாரி என்ன சொல்லுறார்?” குமாரன் ஆசாரி அம்மாவைப் பார்க்காமல் “கிழக்கு பாகத்தில் ஒரு வாசல் கூட வைக்கலாம் என்று அவருக்கு அபிப்பிராயம்” என்றார்.

அம்மா மிகவும் கூர்ந்து நோக்கி “அதாக்குமா அவர் சொன்னது? உள்ளதைச் சொல்லணும்” என்றாள். ஆசாரி “அது மாதிரித்தான்” என்றார். “உள்ளதைச் சொல்லணும் ஆசாரியே” என்று அம்மா மன்றிடும் குரலில் கூறினாள். ஆசாரி “இங்க வீடு நிக்காதுண்ணு சொல்லு தார் அம்மிணி. சாஸ்திரப் பிரகாரம் கிழக்கு வாசல் உள்ள மூலைக்கெட்டு இங்க நிக்கும். இங்க கிழக்கு வாசல் வைக்க வழியில்லை. அதைச் சொல்லுதார்” அம்மா வாயில் கை வைத்தாள். “அம்மிணி பயப்பட வேண்டாம். கிழக்கு பாத்து சாஸ்திரத்துக்கு ஒரு வாசல் வைப்போம். சாஸ்திரப்படி உள்ள சடங்குகள் எல்லாம் அதில் செய்வோம். வடக்கு வாசல் நம்ம உபயோகத்துக்கு. பிறவு என்ன?”

“சாஸ்திரத்தையும் ஏமாற்றிவிடலாமா ஆசாரியே?” என்றாள் அம்மா “அம்மிணி இதெல்லாம் பழங்கணக்குகள். இன்னைக்கு இதையெல்லாம் ஆருபாக்குதா? நாசர் கோவிலில் ஓரோருத்தனுக்கு இருக்கப்பட்டது. உள்ளங்கை மாதிரி பூமி. அதில அவன் அவனுக்கு வேண்டிய வீட்டைக் கெட்டுதான். என்ன சாஸ்திரம் பாக்க முடியும்?”

அம்மா “அது வேற கணக்கு. தெருவுங்கிற அமைப்பு இருந்தா ஒட்டுமொத்த ஊருக்கு வாஸ்து பாக்கணும். இது அப்பிடி இல்லியே” “அம்மணி, நான் சொல்லவேண்டியத சொல்லியாச்சு இனி ஏதாவது உண்டுமானா. பிள்ளைவாள்கிட்ட சொல்லுங்க”. அம்மா “நான் என் பிள்ளைகள் கூட வாழ வேண்டிய எடமாக்கும் ஆசாரியே” என்றாள். ஆசாரி வேறுபக்கம் பார்த்தபடி “அதை அவருக்க கிட்ட சொல்லுங்க” என்றார்.

வாஸ்து குறிக்கப்பட்டது. கன்னி மூலையில் முதல் தறி அறையப்பட்டது. மஞ்சள் பூசப்பட்ட தென்னைமரத்தடியாலான தறியை அப்பா இரண்டு கைகளாலும் எடுத்து மெல்ல நட்டார். எசிலியும் வேறு இரு உள்ளூர்ப் பெண்களும் குலவையிட்டனர். அம்மா இரு கைகளாலும் வாயைப் பொத்தியபடி பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் முகம் அழுவது போலிருந்தது. இரு செங்கல் எடுத்து வைத்து சுண்ணாம்புச் சாந்து வைத்துப் கட்டிய பிறகு அந்த மூலைக்கு வாழையிலையில் பூ, பழம், வெற்றிலை  பாக்கு, தீபம் தூபம் வைத்து பூஜை செய்யப்பட்டது. சிவன் கோயிலில் இருந்து பூசைசெய்து கொண்டு வரப்பட்ட தேங்காய் உடைக்கப்பட்டது. மஞ்சள் பூசப்பட்ட சரடுக்கண்டு எடுத்து ஒரு நுனியை முதல்தறியில் கட்டி இழுத்து பிற தறிகளை அறைய ஆரம்பித்தார்கள் ஆசாரியும் உதவியாளர்களும்.

வாழைக்கரை வீட்டு கணேசபிள்ளை அப்பாவிடம் “எத்தனைகோல்?” என்றார். அப்பா “இருபது கோல்… சிலப்போள் பேர் கூடும்” என்றார் அவர் ஆச்சரியத்துடன் “ஒற்றை புரையாட்டா?” என்றார். அப்பா பெருமித பாவனையில் புன்னகை செய்தார். “அப்பம் உயரம் அறுபதடிக்கும் மேலே வருமே”

அப்பா சிரித்தபடி “மாமன் பழைய கணபதியம் விளாகத்து வீட்டைப் பாத்ததுண்டா?” என்றார். “எங்க? நான் இங்க வாரப்பமே கூரை இடிஞ்சு போச்சே அதுக்கு?” அப்பா “ம்ம்” என்றார் “இந்தத் திருவரம்பிலேயே உயரமான வீடு அது. நாப்பத்தெட்டு அடி உயரம். இது அதைவிட பதினஞ்சடி உயரம் கூடுதல் இருக்கும்” என்றார். கிருஷ்ணபிள்ளை மாமா “அப்பம் அதாக்கும் பிளான்?” என்றார். அப்பா சிரித்தபடி “பின்ன? இதுக்கு பேரு வச்சு இருவது வருஷமாகுது தெரியுமா? மனசுக்குள்ள இருக்கு இந்த வீடு” என்றார்.

கிருஷ்ணபிள்ளை கணபதிப்பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு “என்னவாக்கும் பேரு?” என்றார். “கணபதியாம் விளாகத்து மேக்கே வீடு” என்றார் அப்பா. “ஐஸ்வரியமுள்ள பேராக்குமே” என்றார் கிருஷ்ணபிள்ளை மாமா. “எல்லாரும் இருந்து சாப்பிட்டுட்டுப் போகணும் மடைப்பள்ளியில் சொல்லியிட்டுண்டு” அப்பா சொன்னார்.

தரையில் வீட்டின் வரைபடம் சரடுகளும் தறிகளுமாக உருவாகி வந்தது. பலாமரத்தடியில் ஒரு கல்மீது குந்தி அமர்ந்து அப்பா அதையே பார்த்துக் கொண்டிருந்தார். வெயில் படர்ந்த குளத்தின் கரையில் இருப்பவர்போல அவர் முகத்தில் ஒரு ஒளி தள தளத்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மஞ்சணாத்தி மரத்தின் அடியில் விஜியும் எசிலியும் அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அம்மா தலை குனிந்து சோர்ந்து அமர்ந்திருந்தாள்.

அந்த வீட்டை அப்பாவால் கட்டி முடிக்கவே முடியவில்லை. பணத்தை இழுத்துக் கொண்டே இருந்தது. நான் காசர்கோட்டில் வேலைக்குச் சென்றபோதுதான் அதன் வேலை பெரும்பாலும் முடிந்தது. பெயின்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்நாட்களில் தான் அப்பாவும் அம்மாவும் உச்சக்கட்ட மனக் கசப்பை அடைந்தார்கள். ஒருநாள் அம்மா தூக்கில் தொங்கினாள். சமையலறையை ஒட்டிய சிறிய வைப்பு அறையில்.

அதன்பின் அப்பா அந்த வீட்டில் தன்னந்தனியாக ஐம்பத்து ஐந்து நாட்கள் இருந்தார். அதன்பிறகு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீட்டை நாங்கள் மூவருமே கைவிட்டோம். அது பாழடைந்து இருண்டு கிடந்தது. அதைத் திறந்துகூட பார்க்காமல் விற்றோம். லாரன்ஸ் பெருவட்டர் அதை இடித்து மரங்களைக் கழற்றி விற்றார். வீடிருந்த இடத்தை சமப்படுத்தி ரப்பர் நட்டார். இப்போது அங்கு ஒரு வீடு இருந்த தடம்கூட எஞ்சாது. தெரியவில்லை, நான் அப்பா இறந்தபிறகு திருவரம்புக்கே போனது இல்லை.

[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 ]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2022 11:34

சே.ப.நரசிம்மலு நாயுடு, ஒரு காவிய வாழ்க்கை

காவிய வாழ்க்கை என சில வாழ்க்கைகளையே சொல்ல முடியும். வாழும் காலம் முழுக்க, ஒவ்வொரு கணமும், அடுத்த நிமிடம் கிளம்பபோகிறவர்கள் போல செயலாற்றிக் கொண்டே இருப்பவர்கள். சே.ப.நரசிம்மலு நாயுடு அவர்களில் ஒருவர். எத்தனை வாழ்க்கைக் களங்களில் அவர் தமிழகத்திற்கு முன்னோடி என்னும் திகைப்பு எவருக்கும் உருவாகும். இன்றைய தமிழகத்தின் சிற்பிகளில் ஒருவர்

சே.ப.நரசிம்மலு நாயுடு

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2022 11:34

ஏனென்றால் காதல்கொண்டேன் உன்மேல்…

இந்த வினோதமான பாடலை ஒருநாள் தற்செயலாக பார்த்தேன். அந்த இரவில் திடீரென என்ன ஏது என்றே தெரியாத ஒரு மொழிப்புலத்திற்குள் சென்று உலவி மீண்டேன். ஒரு விந்தையான அரைக்கிறுக்கு நிலை. இதன் வரிகளை கம்பதாசன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவர் வசனமாகவே எழுதிக்கொடுக்க எவரோ எப்படியோ பாட ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டிருக்கிறது.

’உன்னை என் மனையாளாய் செய்யாவிடில்

ஒரு நாள் என் பெயரை மாற்றியழை

நான் கருங்கல்லை பாகாய் உருக்கிடுவேன் காண்பாயே

ஒன்றும் கடினமில்லை!’

*

படம் முரட்டு அடியாள் 1952

இசை நௌஷாத்

பாடகர் ஹூசைன்தீன்

கம்பதாசன் தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2022 11:33

சாரு, சமஸ் வாழ்த்து

விஷ்ணுபுரம் விருது,2022

சாருவுக்கு வாழ்த்துகள்: சமஸ்

நவீன தமிழ் இலக்கியத்தை ஒரு சிறு கூட்டத்திலிருந்து பெரும் கூட்டத்துக்குக் கடத்தியதில் என் தலைமுறையில் நால்வருக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன்.

இப்படிச் சொல்லும்போது ஏனையோர் பங்களிப்பை நான் மறுதலிக்கவில்லை. அதேபோல, தமிழ்  இலக்கியத்தில் என்னுடைய ஆதர்ஷங்களும் இவர்கள் இல்லை. ஆனால், இலக்கியம் தெரியாதவர்களிடமும் இலக்கியம் குறித்த மதிப்பைக் கூட்டியவர்கள் இவர்கள். அதனாலேயே, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணியாற்றுகையில்  ஒவ்வொரு புத்தகக்காட்சி சிறப்பிதழ்களின் நிறைவு நாளிலும் இவர்கள் நால்வரைப் பற்றிய செய்திகளையும்  கட்டாயமாகச் சேர்க்கச் சொல்வேன். “நமக்கு ரஜினி, கமல் பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். இண்டஸ்ட்ரிக்கு அவர்கள் முக்கியம் என்பதை நினைவில் வையுங்கள்!” என்று சகாக்களிடம் சொல்வேன். எட்டாண்டுகளில் ஒருமுறைகூட இது தவறியது இல்லை. அடிதடிகள் தனிக்கதை.

சாருவுக்கு இணையாக அபுனைவு எழுத்துகளை சுவாரஸ்யமாக எழுதும் ஒருவர் தமிழில் இன்று இல்லை என்பது என்னுடைய உறுதியான முடிவு. தமிழில் முழு காஸ்மோபாலிடன் எழுத்தாளர் என்றும் அவரையே நான் சொல்வேன். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம் விருது’ சாருவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது ஒரு தாதா இன்னொரு தாதாவுக்கு கேக் அனுப்புவதான உணர்வை இன்று காலை தந்தது.

சாருவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

– சமஸ்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2022 11:31

எம் கே தியாகராஜ பாகவதர்- கடிதம்

எம் கே தியாகராஜ பாகவதர். தமிழ் விக்கி

என் திருமணத்திற்குப் பின் இந்த இருபத்தைந்து வருடங்களாக என்னுடைய புகுந்த வீட்டில் தினம்தோறும் சொல்லப்படும் பெயர் பாகவதர். என்னுடைய பெரிய மாமனார் (அவர் இறக்கும் வரை கூட்டுக்குடும்பம்தான்). பாகவதர் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மேல் சொல்ல முடியாத ஒரு பாசம். மிகப் பெரிய சட்டமிட்ட அவருடைய புகைப்படங்கள் வீட்டில் உண்டு. எம். ஜி ஆர் அவர்கள் புதிய கட்சி தொடங்கிய போது அவருடன் நெருக்கமாய் இருந்த என்னுடைய பெரிய மாமனார் முதன் முதலில் புதிய கட்சியின் கூட்டம் திருச்சியில் நடத்தியபோது கலையரங்கம் என்ற பெயர் கொண்ட அரங்கத்தை தியாக ராஜ பாகவதர் மன்றம் என்று பெயர் மாற்ற பிரயாசைப்பட்டார். இந்தத்தகவலை கேள்விப்பட்டு பாகவதரின் மனைவியும், மகனும் எங்கள் வீட்டை விசாரித்து வந்து எங்கள் மாமனாரை பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு குடும்ப நண்பர்களாகவே ஆகிவிட்டனர். பாகவதரின் மகள் ஒருவர் என் மாமியாரின் பள்ளித்தோழி.

“கான்மியான் மேட்டுத்தெரு” அரசு ஆவணங்களில்தான் அந்தப் பெயர். ஆனால் எங்களுக்கு அது பாகவதர் சத்துதான் இப்போது வரைக்கும். அந்தத் தெருவை தாண்டித்தான் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் ஜெபமாலை மாதா கோவிலுக்கு செல்வோம். அந்தத் தெருவில் இருந்த வீடு வேறொருவர் கையில் இருந்தது. அதை எங்கள் மாமனார் உதவியுடன் மீட்டு விற்பனை செய்து கடன் அடைத்திருக்கிறார்கள். பாகவதரின் ஒரே மகன் ஆனால் அவர் தன் மகனை விஷம் போல் வெறுத்திருக்கிறார். மகன் அவ்வளவு அழகு அல்ல. நிறமும் கறுப்பு. அவருடைய எல்லா வீழ்ச்சிக்கும் தன் மகன்தான் காரணம் என்று நம்பி அதை தன் மகனின் மனதிலும் விதைத்திருக்கிறார். எப்போதுமே அவருடைய மகன் தலை குனிந்தேதான் இருப்பாராம்.

சமஸ்தானங்களில் பாடும்போது அருமணி கற்கள் கொண்ட தட்டை அப்படியே அவர் தலைமீது கவிழ்ப்பார்களாம். அவர் வீடு வந்து படுத்துத்தூங்கி எழும்போது படுக்கையில் வைரகற்கள் இருக்குமாம். அதை எடுத்து பத்திரம் பண்ணி வைக்கக்கூட எனக்கு அப்போது தெரியவில்லை என்று அவருடைய மனைவி அழுவார்கள் என்று சொல்வார்கள். பாகவதரின் சொந்தக் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி இருந்திருக்கிறார்கள். ஆனால் அவருடைய பணம் மற்ற சொத்துக்கள் எல்லாம் பிற யாரோ அனுபவித்து இருக்கிறார்கள். தமிழ் விக்கியின் இந்தக்  கட்டுரையை வீட்டில் வாசித்துக் காட்டினேன். அன்று முழுவதும் ஒரே பாகவதர் கதைதான்.

டெய்ஸி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2022 11:30

September 12, 2022

அர்ஜுனனும் கர்ணனும்

அன்புள்ள ஜெ,

உங்களிடம் கிறுக்குத்தனமான ஒரு கேள்வி, மன்னிக்கவும்.

தன் தம்பிகளை எதிர்த்தும், நண்பனை (துரியோதனனும் அவன் சகோதரனே) கைவிட முடியாத நிலையில் அதிக தத்தளிப்பும் மனஉளைச்சலும், தர்மசங்கடமும் கொண்ட ஒருவனாக பாரதத்தில் கர்ணன் தானே இருக்க முடியும். அவனுக்கு ஏன் கீதை உபதேசிக்கப்படவில்லை?

அன்புடன்,

கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ண மூர்த்தி,

இத்தகைய கேள்விகள் நல்லது. ஆனால் இவற்றை இப்படிக் கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக நீங்களே விடைகளை தேடவேண்டும். அத்தகைய எந்த தேடலும் உங்களுக்கான நூல்களை நோக்கிக் கொண்டுசெல்லும்.

உங்கள் கேள்விக்கு ஒரு சிறு பதில், தூண்டுகோலாக மட்டும் அமைவது. மகாபாரதத்தில் கர்ணன் மெய்ஞானம் தேடி எந்தப் பயணத்தையாவது செய்திருக்கிறானா? எங்காவது அலைந்திருக்கிறானா?

மாறாக அர்ஜுனன் திசைப்பயணம் செய்துகொண்டே இருந்தவன். சிவனையே சந்தித்து பாசுபதம் பெற்றவன். தேடுபவனுக்கே சொல்லப்படும் இல்லையா?

கர்ணன் இளமையிலேயே அகம் புண்பட்டவன். ஆகவே அதற்கு எதிர்நிலையாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன். அத்தகையோருக்கு ஞானத்தேடல் இருப்பதில்லை. அவர்கள் எதையும் அடைவதுமில்லை.

அவமதிப்பு, இழப்புகள் வழியாக எவரும் மெய்ஞானம் நோக்கி வரமுடியாது. அவை புண்கள். அப்புண்களின் வலியும் அதிலிருந்து உருவாகும் உணர்வுநிலைகளும் மட்டுமே அவர்களிடமிருக்கும். அவர்களின் வாழ்க்கையே அதனால் முடிவாகியிருக்கும்.

புண்களை குணப்படுத்திக்கொண்டு, அவற்றில் இருந்து வினாக்களை உருவாக்கிக்கொண்டு, அவ்வினாக்களுக்கான விடைதேடுபவர்களுக்குரியது மெய்ஞானம். உலகியல் சார்ந்த பெரும்பற்று இருந்தாலும் தீவிரவெறுப்பு இருந்தாலும் கல்வி நிகழாது.

அத்துடன் ஒரு ஆர்வமூட்டும் அம்சம் உண்டு. விந்தையான ஓர் உண்மை. ஒருவகை அகச்சலிப்புதான்  நம்மை ஞானம் நோக்கிக் கொண்டுசெல்கிறது.  இங்கிருக்கும் அனைத்திலும் கொள்ளும் சலிப்பு அது. ஏற்கனவே அடையப்பட்ட அனைத்திலும் நாம் உணரும் சலிப்பு.

ஆனால் உளச்சோர்வில் இருந்து வரும் சலிப்பு அல்ல அது. சோர்விலிருந்து வரும் சலிப்பு எல்லாவற்றையும் விலக்கச் சொல்கிறது. சோம்பலை அளிக்கிறது. செயலின்மையில் நிறுத்துகிறது. இது நிறைவின் சலிப்பு. இது செயலூக்கத்தை அளிக்கிறது. அலையச் செய்கிறது. ஒவ்வொன்றிலும் நுழைந்து அறிந்து கடக்கவைக்கிறது. நிரந்தரமான தேடலில் ஆழ்த்துகிறது.

அச்சலிப்பு ஒருவனை புதிய எதையும் பேரார்வத்துடன் எதிர்கொள்ளச் செய்கிறது. அவர்களே மெய்ஞானம் நோக்கிச் செல்பவர்கள். அவர்களே மிகச்சிறந்த மாணவர்கள். அர்ஜுனன் மகாபாரதம் முழுக்க அப்படித்தான் சித்தரிக்கப்படுகிறான். கீதைக்குப் பின்னர் மேலும் மேலும் பயணம் செய்து அவன் கீதையை புரிந்துகொள்கிறான்.

இன்று இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு உலகியல் ஆசைகள், உலகியல் இலக்குகள் உள்ளூர நிறைந்துள்ளன. அரிதாகச் சிலர் உலகியலில் புண்பட்டு விலகி அதன் உளச்சிக்கல்களை நோய் என கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மெய்யியலிலும் தத்துவத்திலும் பெரிதாக எதையும் கற்க முடியாது. கர்ணன்கள் அவர்கள். அவர்களின் அகம் கொந்தளிக்கலாம். ஆனால் அது எவ்வகையிலும் அறிதலுக்குரிய ஆர்வமாக ஆவதில்லை. அவர்களுக்குத் தேவை ஆறுதல் மட்டுமே.

கர்ணன்கள் எவரையும் கவனிப்பதில்லை. அவர்கள் ஒன்று வெளியுலகில் மூழ்கி அதை வெல்லும் வெறியில் இருப்பார்கள். அல்லது, தங்களுக்குள் ஆழ்ந்து, தங்கள் உள்ளச் சொற்களில் உழல்வார்கள். அவர்களுக்கு எதுவும் உரைக்கப்பட முடியாது.

பொதுவாக, வழிதவறியோ தேடியோ வந்துசேரும் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே அர்ஜுனன்களாக இருக்கிறார்கள். அவர்கள் அலைபவர்கள், நிலைகொள்ளாதவர்கள், சலிப்புற்றவர்கள். ஆனால் கற்பதற்குத் திறந்த உள்ளம் கொண்டவர்கள். கற்றவற்றை வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளும் துணிவு கொண்டவர்கள்.

இந்திய மெய்யறிவர்கள் வெள்ளையின மாணவர்களைப் பெரிதும் விரும்புவது இதனால்தான். ‘அவர்களில் பதர் குறைவு’ என்று நித்யா ஒருமுறை சொன்னார். வருபவர்கள் பத்துபேர் என்றால் ஏழுபேர் ஒவ்வொரு சொல்லும் விதையென முளைக்கும் வளம் மிக்க உள்ளம் கொண்டவர்கள். எஞ்சிய மூன்றுபேர் நிலையில்லாமல் அடுத்த இடம் நோக்கிச் சென்றுவிடுவார்கள்.

மாறாக இந்தியர்கள் தினம் நூறுபேர் தேடி வருவார்கள். ஒரு மெய்யாசிரியர் தன் வாழ்நாளில் சில ஆயிரம் பேரைச் சந்திக்க நேரும். கடைசியில் சலித்துச் சலித்து எடுத்தால் ஐந்துபேர் தேறுவார்கள். இதை நான் கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.

அர்ஜுனர்களுக்கே கீதை சொல்லப்படமுடியும். ஒரு போரில் எதையும் அடையும் நோக்கம் இல்லாமல், எதற்கும் எதிராக இல்லாமல், கடமையின்பொருட்டே வில்லெடுப்பவர்கள் அர்ஜுனர்கள்தான். அவர்கள் வில்லை தாழ்த்துவது சொல்லைப் பெறுவதற்காகவே.

ஜெ

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2022 11:35

வண்டிமலைச்சி

வண்டிமலைச்சி அம்மன் தெற்குத்தமிழ்நாட்டில் பரவலாகக் காணக்கிடைக்கும் தெய்வம். படுத்திருக்கும் கோலம் கொண்டது. ஆனால் ஆகம முறைப்படி பெருமாள் தவிர வேறு தெய்வங்கள் படுத்திருக்கலாகாது. அண்மைக்காலத்தில் வண்டிமலைச்சி பெருந்தெய்வ வழிபாட்டுமுறைக்குள் வந்தபோது படுத்திருப்பதற்கும் அமர்ந்திருப்பதற்கும் நடுவிலுள்ள சாய்மானநிலையில் நிறுவப்பட்டது. பெயர் சுட்டுவதுபோல இத்தெய்வம் வண்டிகளில் செல்வபர்களுக்குக் காவல்தெய்வமாக வணங்கப்பட்டிருந்தது. விஷ்ணுபுரம் நாவலில் இதற்கிணையான ஒரு தெய்வம் வரும்

வண்டிமலைச்சி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2022 11:34

சாரு, கடிதங்கள்

[image error]

விஷ்ணுபுரம் விருது,2022

இந்த ஆண்டு விஷ்ணுபுர விருது சாருக்கு அளிக்கப்படும் என்பது பெரும் மகிழ்வை அளிக்கிறது. இதை சிறிதும் எதிர்பார்க்க வில்லை ஏன் என்றால் விஷ்ணுபுர வாசகர் வட்டத்தைச் சார்ந்த எவரும் சாருவை ஒரு இடத்தில் கூட குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. புனிதப்படுத்தலுக்கும் அதிகார குவியலுக்கும், அதிகாரத்தால் வரும் பாசிச தன்மைக்கும் எதிரா சுயவரலாரும் புனைவும் கலந்த வெளிப்படை தன்மை கொண்ட எழுத்து அவருடையது. சமூகத்தால் போலி பாசாங்குகள் மூலம் அழுத்தி வைக்கப்பட்ட பாலியல் குற்றங்களை பேசுவதால் வாசகனின் புனிதப்படுத்தல் சிதைவுருகிறது.

உதாரணமாக தாய் என்னும் புனிதப்படுத்தல் ஆனால் அதே தாய் ஒரு பெண்ணாக குடும்பத்தில் எவ்வாறு சுரண்டப்படுகிறாள் என்பதை அவர் சுட்டும் போது அது வாசகனை நேரடியாக தாக்குகிறது உடனே வாசகன் பொங்கி எழுந்து தனது வெற்று கூச்சல்களை வசையாக அவர் மீது வைக்கிறான். அவரது உலகம் முற்றிலும் வேறானது அவரை முதலில் வாசிக்கும் எவரும் என்ன இது ஒரே சுயபுராணமாக இருக்கிறது என்று தோன்றும் ஆனால் அதுதான் அவரது பானி என்று புரிந்து கொண்டு அணுகும் போது அவர் நமக்கு வேறொரு உலகத்தை காட்டுகிறார். தமிழில் எந்த எழுத்தாளரும் நேரடியாக என்னை பதித்தது இல்லை சாருவின் எழுத்தே என் ரசனையை சிந்தனையை , வாழ்வின் மீதான பார்வையை மாற்றியது… வாழ்த்துக்கள் சாரு ..

ஏழுமலை.

 

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

சாருவிற்கான இந்த ஆண்டு விஷ்ணுபுர விருது மிக முக்கியமான அங்கீகாரம். இந்த தளத்தில் சில நாட்களுக்கு முன் பகவத் கீதை பற்றி சொல்லும் போது “அது ஒரு மருந்து. நோய்பட்டவன்தான் சாப்பிடணும். நோய் இல்லாதவன் மருந்து‌ சாப்பிட்டா புது நோய்கள்தான் வரும்!” என்று தங்கள் பெரியப்பா கூறியதாக எழுதியிருந்தீர்கள். ஒரு வகையில் சாருவின் எழுத்துக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன்.

என்னுடைய இருபதுகளின் துவக்கத்தில் சில பிரச்சனைகளால் மிகுந்த மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணங்களோடு இருந்தேன்.  அந்த பித்து மனநிலையில் அது வரை நான் அறிந்த இயல்பான வாசிப்பு, இசை, நட்பு, உறவுகள் என எதுவும் என்னை ஆற்றுபடுத்தவில்லை. அனைத்தையும் களைத்து போட்டு அதில் தெரியும் உண்மை ஒன்றை சாருவின் எழுத்தில் நான் கண்டேன். பல மாதங்களாக தொடர்ந்த அந்த பித்து மனநிலையில் என்னை சாரு மிக தீவிரமாக ஆட்கொண்டார். அவர் வழியாக நான் அறிந்த பிறழ் சினிமா கலைஞன் கிம் கி டுக். இவர்களின் பித்து நிலை ஒரு வகையில் என்னுடைய பித்து நிலையை மிகச் சிறிய கோடாக மாற்றி என்னை குணப்படுத்தியது எனலாம். அந்த மனநிலையில் சாரு, கிம் கி டுக் மற்றும் சாரு வழியாக அறிமுகமான பிறழ் இசை இவை அளித்த எக்ஸ்டஸியை இப்போது என்னால் அடைய முடியாது. இந்த நோயுற்றவனை காப்பாற்றிய மருத்துவர்கள் அவர்கள். 

சாரு அவரே பலமுறை கூறியது போல் ஒரு ஹெடோனிஸ்ட். ஒருவகையில் ஒரு மனிதன் இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் தன்னளவில் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலமே நம் துயரங்களை கேள்விக்குள்ளாக்குகிறார். அவர் ஒரு மகாரசிகர். இலக்கியம்‌‌, சினிமா, இசை இவற்றில் தன்னை பாதித்தவற்றை இந்த அளவுக்கு எக்ஸ்டஸியுடன் எழுத முடிந்ததை சாருவிடம் மிகவும் வியக்கிறேன். சாரு எப்போதும் புதுமையை நாடுபவர். எங்கு தான் விரும்பும் திறமை இருந்தாலும் அதை உரத்துச் சொல்ல தயங்காதவர்.

சாரு ஒரு ஐகனோகிளாஸ்ட். தமிழ் மரபில் பெரும்பாலும் எந்த ஒரு கலைஞருக்கும் மிக கறாரான விமர்சனம் அவர்கள் மறைவுக்கு சில காலம் பின்னரே எழுதப்படுகிறது. ஆனால் சாரு அவருக்கே உரித்தான எல்லாவற்றையும் உடைக்கும் இயல்பினால் இளையராஜா, கமலஹாசன் போன்ற மாபெரும் சமகால பிம்பங்களையும் உடைத்து நம்மை உலுக்கக்கூடியவர். ஆனால் அவர்களே தன்னை பாதிக்கும் ஒரு அற்புத கலைபடைப்பை செய்யும் போது மிகவும் ரசித்து எழுதுபவர்.  இதில் நம் தனிப்பட்ட கருத்தைத் தாண்டி ஒரு எழுத்தாளன் தன் அகத்தில் உணர்ந்ததை உள்ளதை உள்ளபடி எழுதினான், எதன் பொருட்டும் தணிக்கை செய்ததில்லை என்பதே எத்தனை ஆச்சரியம். உண்மையில் சமூகத்தில் எழுத்தாளர்களுக்கு மட்டுமே அந்த தார்மீக உரிமை உண்டு.

சாரு ஒரு மிகச்சிறந்த மிருக அபிமானி. ஏன் என்று யோசித்தால் பல சமயம் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் அன்பு அதிகாரத்தில் சென்று முடிவதை பார்த்து வரும் ஒவ்வாமையினால் தானோ என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு பெற்றோர் பிள்ளைகள் மேல், பிள்ளைகள் பெற்றோர் மேல், கணவன் மனைவி மேல், மனைவி கணவன் மேல் என்று எப்படி ஒவ்வொருவரும் அன்பின் வெளிப்பாடாக அதிகாரத்தைக் கொண்டுள்ளனர் என்று தொடர்ந்து பேசுபவர். அதேபோல் சக மனிதர்களின் சின்னத்தனங்களை தைரியமாக விமர்சித்து எழுதுபவர். பணத்தை இறக்காமல் வாய்ச்சவடால் அடிப்பவர்கள், பொய்யாக முகஸ்துதி செய்பவர்கள், நேரத்தை வீணடிப்பவர்கள், தன்னை மிகைப்படுத்துபவர்கள், அடுத்தவர்களை பேசவிடாமல் உரையாடுபவர்கள், தேவையற்ற ஆலோசனை கொடுப்பவர்கள், இடம் பொருள் அறிந்து பேசத் தெரியாதவர்கள், பிறர் உழைப்பை உறிஞ்சுபவர்கள், அழையா விருந்தாளியாக ஒரு இடத்தில் தோன்றுபவர்கள் என்று அவர் எடுத்துக்காட்டும் ஒவ்வொன்றிலும் சாமானிய மனிதர்களான என் போன்றோர் சிலவற்றில் எங்கள் தவறை அடையாளம் கண்டுகொண்டு எங்கள் அறிவின்மையை உணர்ந்து  முன்னேற எண்ணற்ற வாய்ப்புண்டு.

சாரு ஒரு அற்புதமான இசை ரசிகர். தான் விரும்பும் இசை எங்கு இருந்தாலும் அதை அடையாளம் காட்ட தவறாதவர். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, ராப், பாப் என்று எல்லா வித இசையையும் ஆழ்ந்து ரசிக்கக் கூடியவர். அவர் எழுத்தின் வசீகரத்தினாலேயே எந்த இசை நுண்ணுணர்வும் இல்லாத நான் அவர் அறிமுகப்படுத்திய பல இசையை ரசித்துள்ளேன். “Cradle of Filth” ஒரு காலத்தில் நான் இருந்த பித்து நிலையில் மருந்தாயிருந்தது என்றால், “Four Seasons”  எப்போதும் ஒரு இனிய இசை அனுபவமாய் இருக்கிறது. Camila Cabello, Eminem, செம்பை வைத்தியநாத பாகவதர், Saad Lamjareed போன்று அவர் மூலம் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு அறிமுகமான இசை எண்ணிலடங்காதது.

சாரு ஒரு ஆச்சரியமான பயணி. பயணங்களுக்கு அவர் ஒரு இளைஞராக தன் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் விதமே என் போன்று உடல் ஆரோக்கியத்தை ஏதோ பேங்கில் போட்ட பணம் போல பத்திரமாக இருக்கும் என நினைக்கும் பலருக்கும் மாபெரும் பாடம்.

சாருவின் எழுத்தும் அவரது வாழ்க்கையும் வேறு வேறு இல்லை என்பதால் என் அளவில் சாருவிடம் நான் அடைந்தது என்ன என்பதை இங்கு எழுதி உள்ளேன். என் வாழ்வில் மாபெரும் ஆசானாக நான் மதிக்கும் தங்களின் தலைமையில், என் வாழ்வின் மிக கடினமான காலத்தில் இறையருளால் நான் கண்டடைந்த எழுத்து மருத்துவரான சாருவிற்கு வழங்கப்படும் இந்த விருதினால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் இருவருக்கும் இறைவன் நூறாண்டு ஆரோக்கியமான ஆயுள் தர இறைவனை பரிபூரணமாக வேண்டுகிறேன். நன்றி.

அன்பும் நன்றியுமுடன்,

சங்கர் கணேஷ் 

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.