Jeyamohan's Blog, page 683

November 12, 2022

புரூனோ மன்சர், இன்னொரு மகாத்மா

புரூனோ மன்சர் மலேசியாவின் பழங்குடிகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சூழியல் போராளி. அவருடைய ஆதர்சம் காந்தி. காந்தி ஒருபோதும் மானுடத்தின் உள்ளத்தில் மறைவதில்லை என்பதற்கான ஆதாரம் அவர். சாமானியர் காந்தியை உதாசீனம் செய்வார்கள். அரசியலாளர்களான சிறுமதியர் அவரை வெறுப்பார்கள், ஏனென்றால் ஆன்மிகமாக அவர்களுடைய நேர் எதிரி காந்திதான். ஆனால் அவரிடமிருந்தே மாமனிதர்கள் தோன்றுவார்கள். காந்தி மகாத்மா மட்டுமல்ல, மகாத்மாக்களை உருவாக்கும் வேர்

புரூனோ மன்சர்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2022 10:34

விஷ்ணுபுரம் விருந்தினர் – கடிதம்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருந்தினர்களின் பட்டியலைப் பார்த்தேன். அதிலுள்ள கலவைத்தன்மை எனக்குப் பிடித்திருந்தது. இடதுசாரிகள், நவீனத்துவர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்… இன்று தமிழிலக்கிய இயக்கத்தின் எல்லா முகங்களும் சரியாக அமைந்திருந்தன. விஷ்ணுபுரம் இலக்கியவிருதின் முக்கியமான அம்சமே இந்த விஷயம்தான். ஒருவரை அழைத்து விருது கொடுப்பது முக்கியமல்ல. இப்படி பல எழுத்தாளர்கள்கூடிய சபை சாரு நிவேதிதாவுக்கு விருது அளிக்கும்போதுதான் அது உண்மையில் விருதாக ஆகிறது. ஊர்கூடி தேர் இழுக்கவேண்டும். ஊரே கூடி இழுத்தால்தான் அது தேர்.

எஸ்.ராஜமாணிக்கம்

*

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருந்தினர்களின் பட்டியல் நிறைவளித்தது. ஒவ்வொரு ஆண்டும் இளம் எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி அவர்கள்மேல் வாசகர்களின் வெளிச்சம் விழச்செய்கிறீர்கள். அதற்காக அவர்களை வாசிக்கச் செய்கிறீர்கள். இது சாருவுக்கான விருது மட்டும் அல்ல, ஒருவகையில் இந்த விருந்தினர் அனைவருக்குமே விருது அளிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

ஜெயக்குமார் ஆனந்த்

————————————————————————

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

 

விஷ்ணுபுரம் விருந்தினர் 7, குளச்சல் மு.யூசுப்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2022 10:32

ஜெயமோகனும் பெண்ணியமும், கடிதம்

தேவி வாங்க

அன்புள்ள ஜெ,

அண்மையில் ஒரு பெண் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயமோகன் பெண்ணிய எதிர்ப்பாளர் என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் நன்றாகவே வாசிப்பவர். எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். இணையத்தில் உழலும் நாலைந்து அரசியல் லும்பன்களின் முகநூல் குறிப்புகளை சுட்டிக்காட்டினார். எரிச்சலாக இருந்தது.

ஆனால் இரண்டுநாட்களுக்குப்பின் அவருக்கு புதிய பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியது என்று சொல்லி அவருக்கு இரண்டு சிறுகதைகளை அனுப்பியிருந்தேன். அவர் அடாடா என்று பரவசமாகி கடிதம் எழுதியிருந்தார். ‘அசலான பெண்ணியக் கதைகள். சர்வதேசத் தரம்கொண்ட கதைகள்’ என்று எழுதியிருந்தார். உங்களுடைய கூந்தல், என் பெயர் ஆகிய இரண்டு கதைகளும்தான் அவை.

அவருக்கு நான் அக்கதைகள் நீங்கள் எழுதியவை என மின்னஞ்சல் செய்தேன். பதிலே இல்லை. அதன்பிறகுதான் தெரிந்தது, அவருக்கு உண்மையை எதிர்கொள்ள மனமில்லை என்பது. அது ஒரு பாவனை. அண்மையில் பெண்கள் தங்களை சுதந்திரமாக காட்டிக்கொள்ளும் ஒரு பாவனையாக அதீதமான அரசியல்சார்பு, அதனுடன் இணைந்த பெண்ணியம் ஆகியவற்றைப் பேசுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் அரைகுறைச் செய்திகளால் உருவான பிரமைகளையே பேசுகிறார்கள். முகநூலில் புரட்சிகரமாக தென்படுவது மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது.

நான் அவருக்கு இன்னொரு மின்னஞ்சல் செய்தேன். தமிழில் எழுதப்பட்ட நல்ல பெண்நிலைவாதக் கதைகள் என்று ஒரு ஐம்பது கதைகளை எடுத்தால் பத்து கதைகள் ஜெயமோகன் எழுதியவையாக இருக்கும். அவர் அளவுக்கு எவரும் தீவிரமாகவும் தரமாகவும் எழுதவில்லை. நீங்கள் எழுதிய கதைகளின் ஒரு பட்டியலையும் அனுப்பினேன். பெரியம்மாவின் சொற்கள் ஓர் அற்புதமான உதாரணம். இன்னொரு கதை துணை. தேவி கூட சிறந்த கதைதான்.

நீங்கள் பெண்நிலைவாதக் கதைகள் என்ற தலைப்பிலேயே இத்தகைய கதைகளை மட்டும் தொகுத்து ஒரு நூல் போடலாம். எவர் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்போம். இதை ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன்

சீனிவாசன் கண்ணன்

***

அன்புள்ள சீனிவாசன்,

நான் என் கதைகளை ‘பெண்நிலைவாதம்’ என்று சுருக்க நினைக்கமாட்டேன். அவை அக்கதைகளின் விரிவை தடுத்துவிடும்.

நான் பெண்மையச் சமூகம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன். வலுவான அம்மா, பாட்டி என ஆளுமைகளைக் கண்டவன். ஆகவே பெண்களின் தன்னிமிர்வு, சுதந்திரம் ஆகியவற்றை எழுதுகிறேன். அவை இயல்பான வெளிப்பாடுகளே ஒழிய எந்தவகையான அரசியல் கருத்துக்களும் அல்ல.

தேவி தொகுதியில் புனைவுக் களியாட்டின்போது எழுதிய பெண்கள் சார்ந்த கதைகள் உள்ளன. மலைபூத்தபோது, ஆயிரம் ஊற்றுக்கள் போன்ற தொகுதிகளிலும் மிக வலுவான பெண் ஆளுமைகளைச் சித்தரிக்கும் கதைகள் உள்ளன.

நான் உணர்ந்ததுதான், இங்கே தமிழில் ‘ஒடுக்கப்பட்ட பெண்களின் துன்பங்களை’ எழுதும் கதைகளே பெண்நிலைவாதக் கதைகளாகக் கருதப்படுகின்றன. நான் எழுதுபவை அப்படி அல்ல. ராணி பார்வதிபாய் போன்ற ஒரு பெண்ணை சமகால வரலாற்றின்முன் கொண்டுவந்து நிறுத்துவதே உண்மையான பெண்நிலைவாதம். அத்தகைய பெண்நிலைவாதத்தை தமிழில் இன்னொருவர் எழுதி நான் படித்ததில்லை – எந்தப் பெண் எழுத்தாளரும்.

என் பெண்நிலைவாத ஆதரவு என்பது பெண்கள் எழுதியமையாலேயே எல்லா குப்பைகளையும் புகழ்வது அல்ல. அவர்களின் கூட்டுப்பாவலாக்களை ஏற்றுக்கொண்டு பேசுவதும் அல்ல. என் அழகியல் அளவுகோல்கள் வெளிப்படையானவை, திட்டவட்டமானவை. அவை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான். பெண்கள் பெரிதாக எழுதமுடியாது என்று சொல்லி அவர்களை அனுதாபத்துடன் பார்ப்பதில்லை. அவர்களிடம் அவர்களின் மிகச்சிறந்ததையே எதிர்பார்க்கிறேன். அவற்றை படைக்கும் ஆற்றலுள்ள பெண்களுக்கு விருப்பமான எழுத்தாளனாகவும், முன்னோடியாகவும்தான் இருக்கிறேன்.

பெண்களில் சிலர் வசைபாடட்டும். அதனாலும் அளவுகோல்கள் மாறாது. அம்பை எனக்கெதிராக ஒரு ‘கையெழுத்தியக்கம்’ நடத்தினார். என்னை பெண் வெறுப்பாளர் என்று எழுதினார். பெண்களிடம் அசடுவழியும் எழுத்தாளர்களின் பட்டியலிலும் நுட்பமாக என்னைச் சேர்த்தார். ஆனாலும் என் அழகியல்பார்வையில் அம்பை தமிழின் முக்கியமான எழுத்தாளர்தான். ஒரு அணுவிடை அவர் இடத்தை குறைக்க மாட்டேன்.

அதேசமயம், என் ஆதர்சப் படைப்பாளிகளான ஆஷாபூர்ணா தேவி போலவோ குர்ரதுலைன் ஹைதர் போலவோ தமிழில் பெண் எழுத்தாளர்கள் இல்லை என்பதையும் சொல்ல தவறமாட்டேன். அடுத்த பட்டியலில் உள்ள மாதவிக்குட்டி (கமலாதாஸ்) பிரேமா காரந்த், இஸ்மத் சுக்தாய், அம்ரிதா ப்ரீதம் ஆகியோருக்கு நிகரானவர் அம்பை என்றும் சொல்வேன்.

முதல்நிலைப் படைப்பாளிகள் பெண்களிலிருந்து உருவாகி வரவேண்டுமென்னும் எதிர்பார்ப்பையும் எப்போதும் பதிவுசெய்வேன்.

ஜெ

மலை பூத்தபோது வாங்க ஆயிரம் ஊற்றுகள் வாங்க கூந்தல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2022 10:31

தெளிவத்தை ஜோசப் -நினைவேந்தல்

தெளிவத்தை ஜோசப் – விக்கி

அன்பின் ஜெ,

நலம்தானே?

இன்று (நவம்பர் 6, ஞாயிறு) தமிழ் மொழிச் செயற்பாட்டகம் (ACTL – Activity Centre for Tamil Language) ஏற்பாடு செய்திருந்த தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கான நினைவேந்தல் இணைய நிகழ்வில் கலந்து கொள்ளும் பேறு கிடைத்தது. நிகழ்வு பற்றிய தகவலை நண்பர் சாண் தவராஜா மும்பை இலக்கியக்கூடத்தின் வாட்ஸப் குழுவில் பகிர்ந்திருந்தார். நிகழ்வு சிறப்பாய் அமைந்தது.

நிகழ்வை மஹ்ரூஃப் ஃபவ்சர் ஒருங்கிணைத்தார். ஜோசப் எனும் பேராளுமையை நன்கறிந்த, அவருடன் கலந்து பழகிய, நெருக்கமான நண்பர்கள் –  ஆசிரியர், எழுத்தாளர் கந்தப்பொல தாமரை யோகா, எழுத்தாளர் பிரமிளா பிரதீபன் (“விரும்பித் தொலையுமொரு காடு” – யாவரும் பதிப்பகம்), எம். சிவலிங்கம், கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தம் ஆகியோர் அவ்வன்பாளுமையுடனான தங்கள் நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்கள். ஜோசப்பின் முதல் தொகுப்பு (“நாமிருக்கும் நாடே”) கொண்டுவந்த வைகறை நித்யானந்தன் முத்தையா ஜோசப் ஐயாவின் படைப்புகள் குறித்தும், சார்ந்து முன்னெடுக்க வேண்டிய சில பணிகள் குறித்தும் உரை நிகழ்த்தினார். தஞ்சைத் தமிழ் பல்கலையில் தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புகளை முன்வைத்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் இலக்கியா நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

ஜோசப்பின் கணக்காளர் பணி நாட்களின் சில அனுபவங்களையும், ஜோசப்பின் எழுத்துகளால் அவர் பணிபுரிந்த தோட்டத்தில், மேலிருந்து உண்டான அச்சுறுத்தலையும், ஜோசப் எழுதிய “புதிய காற்று” ஈழத் தமிழ் திரைப்படத்தில் (1975) ஜோசப் தனக்குத் தந்த “மாயாண்டி” கதாபாத்திரத்தைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார் சிவலிங்கம். ஜோசப் தன் எழுத்தாளத் தோழமைகளுக்கு எழுதித்தந்த அணிந்துரைகளை மட்டுமே இணைத்து ஒரு தொகுப்பாகக் கொண்டுவரலாமென்றார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் துவக்கத்தையும், அதன் செயல்பாடுகளையும் சுருக்கமாகக் குறிப்பிட்ட அவர் வீரகேசரியும் அம்மன்றமும் இணைந்து அறுபதுகளில் நடத்திய நான்கு சிறுகதைப் போட்டிகள் பற்றியும் முதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜோசப் (“பாட்டி சொன்ன கதை”; அடுத்த போட்டியிலும் அவர்தான் முதல் பரிசு “பழம் விழுந்தது” சிறுகதைக்கு) பின்பு அப்போட்டிகளின் நடுவரானதையும் சுவாரஸ்யத்துடன் உரையில் தெரிவித்தார். துறவி விஸ்வநாதன் மூலமாக ஜோசப் கொண்டுவந்த 35 மலையகச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு பற்றியும், ஜோசப்பின் “மலையகச் சிறுகதை வரலாறு” நூலின் முக்கியத்துவத்தையும், இலங்கையின் பல பிரதேச் எழுத்தாளர்களின் 55 சிறுகதைகள்  கொண்ட “உழைக்கப் பிறந்தவர்கள்” தொகுப்பைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

பிரமிளாவின் பேச்சும், அருளானந்தம் அவர்களின் உரையும் உணர்வுமயமானதாய் இருந்தது.

பதினைந்து/பதினேழு எழுத்தாளர்களைக் கூட்டி வந்து திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலையிலும், மதுரை தமிழ்ச்சங்கத்திலும் மலையக இலக்கிய விழாக்கள் நடத்தியிருக்கிறார் ஜோசப். வரும் 2023 ஜனவரியில் கூட தஞ்சைத் தமிழ்ப் பல்கலையில் “மலையகம் 200” என்ற தலைப்பில் ஒரு இலக்கிய விழாவை திட்டமிட்டிருந்திருக்கிறார் (தன் 87-ம் வயதில்). ஆனால் அதற்குள் அச்சுடர் அணைந்தது.

இந்நினைவேந்தல் நிகழ்வு மனதுக்கு நிறைவாய் இருந்தது ஜெ. தெளிவத்தை தோட்டத்து ஜோசப்பின் அன்பை, ஆளுமையை இன்னும் அண்மையில் நெருங்கமுடிந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், உரை நிகழ்த்திய ஆளுமைகளுக்கும் நன்றியும் அன்பும்.

வெங்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2022 10:31

November 11, 2022

சுந்தர ராமசாமியின் ஜீவா

சுந்தர ராமசாமி, தமிழ் விக்கி

சுந்தர ராமசாமி ப.ஜீவானந்தம் பற்றி எழுதிய நினைவோடை வரிசை படைப்பை ஒரு நூல் என்பதைவிட சற்று பெரிய கட்டுரை என்றே கூற வேண்டும். அரவிந்தன் அவரை உரையாட வைத்து பதிவு செய்து எழுத்துவடிவமாக்கியது. இந்த நூலில் உள்ள ஜீவாவின் சித்திரம் ஏற்கனவே ’காற்றில் கலந்த பேரோசை’ என்ற பெயரில் அவரால் ஜீவா மறைந்தபோது ஓர் அஞ்சலிக் கட்டுரையாக எழுதப்பட்டது தான். சுந்தர ராமசாமி கட்டுரைகள் என்னும் அழகிய தொகுப்பு. 1984-ல் வெளிவந்தபோது அதிலிருந்த குறிப்பிடத்தகுந்த கட்டுரைகளில் ஒன்று அது.

ஆளுமைகளைப்பற்றி அந்த ஆளுமைகளுடன் மிக நெருக்கமாக நெடுங்காலம் வாழ்ந்தவர்களால் பதிவு செய்ய முடியாது போனதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஜெயகாந்தன் பற்றி இன்று வரைக்கும் கூட ஒரு முழுமையான நல்ல அனுபவப்பகிர்வு கிடையாது. அவருடன் ஏராளமான நண்பர்கள் பல்லாண்டுகள் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பெரும் பரவசத்துடன் அவரைப்பற்றி பதிவு செய்திருக்கிறார்கள். அவை உதிரி நினைவுக்குறிப்புகளாகவே எஞ்சுகின்றன.

ஓர் எழுத்தாளன் மட்டுமே ஒருவரை முழுமையாக பதிவு செய்ய முடியும். ஏனெனில் எழுத்துக்கு உண்மைநிகழ்வுகளின் நினைவுகள் மட்டும் போதாது. நிகழ்வுகளின் நுண்தகவல்கள் வேண்டும். அவை அனைத்தையும் கண்முன் காட்சியென ஒருங்கிணைக்கும் புனைவுத்திறனும் தேவை. புனைவு கலக்காத உண்மை ஒரு படி குறைவான உண்மை. அது மெய்யென நம் உள்ளத்தில் நிகழ்வதில்லை. வெறும் தரவுகளாக நம்மை வந்தடைகிறது. நாம் வாழ்ந்து அறியாத தரவுகளை உடனடியாக மறந்துவிடுகிறோம். புனைவெழுத்தாளன் உருவாக்கும் ஆளுமைச்சித்திரங்கள் மட்டுமே நீடிக்கின்றன. நல்ல புனைவெழுத்தாளனால் எழுதப்படாதவர்கள் எவராயினும் காலப்போக்கில் வெறும் பெயர்களாகவும் அடையாளங்களாகவும் மட்டுமே எஞ்சுவார்கள்.

சான்று, புதுமைப்பித்தன் வரலாறு. தொ.மு.சி.ரகுநாதன் மொண்ணையான எழுத்தாளர். அவருடைய நூல் அளிக்கும் சித்திரம் புதுமைப்பித்தனை நமக்குக் காட்டுவதில்லை. ஆனால் க.நா.சுப்ரமணியம் புதுமைப்பித்தன் கதைகளுக்கு எழுதிய முன்னுரையில் வேகமான தீற்றலாக வரும் புதுமைப்பித்தனின் ஆளுமைச்சித்திரம் நினைவிலிருந்து அழியாதது. கற்பனையில் வளர்வது. ‘உங்க கதைகள் படிச்சேன், நல்லா இருந்தது’ என்று சொல்லும் வாசகனிடம் ‘நம்ம கதை எப்பவுமே நல்லாத்தான் இருக்கும்’ என்று சொல்லிச் சிரிக்கும் புதுமைப்பித்தன் நான் நேரில்பழகியறிந்தவர் போல் இருக்கிறார்.

எழுத்தாளர்கள் அனைவருக்குமே சராசரிக்கும் பல மடங்கு மேலான நினைவுத்திறனுண்டு. அதுதான் அவனை எழுத்தாளன் ஆக்குகிறது. அவனுடைய வரமும் சாபமும் அதுதான். சாமானிய வாசகர்கள் இதெல்லாம் எப்படி நினைவில் இருக்கும் என்று திரும்பத்திரும்ப கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். நினைவில் நிற்காததனால் தான் நீ வாசகன் அவர் எழுத்தாளர் என்பதுதான் அதற்கான பதில். நினைவும் கற்பனையும் பிரித்தறியமுடியாதபடி கலக்கும் ஒரு களமே படைப்புகளை உருவாக்குகிறது.

சுராவின் நினைவோடைக் கட்டுரைகள் அனைத்திலுமே மிகத்துல்லியமான சிறுசெய்திகள் பதிவாகியிருப்பதை பார்க்கலாம். சிறு புள்ளிகள் வழியாக அவர் உருவாக்கும் ஒட்டுமொத்த ஆளுமைச்சித்திரம் அந்த ஆளுமைகளைப்பற்றி பிறர் எழுதிய எந்தக் குறிப்பிலும் இல்லாமல் இருப்பதையும் காணலாம். ஜீவாவைப்பற்றி அவருடனேயே இருந்த பல்வேறு ஆளுமைகள் அவர்களில் சிலர் எழுத்தாளர்களும் கூட வாழ்க்கை வரலாறுகளை நினைவுக்குறிப்புகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஜீவா என்னும் மானுடனை, அரசியல்வாதியை, இலக்கிய ஆர்வலரை பொதுவுடைமைவாதியை வாசகனிடம் துல்லியமாக நிறுவுவது இந்த மீச்சிறு நூல்தான்.

ஜீவாவின் ஆளுமையை சிறுவனாக தன் மாமா பரந்தாமனுடன் சென்று சந்தித்ததை சுரா இந்நூலில் சொல்கிறார். பரந்தாமன் எனக்கும் நன்கு அறிமுகமானவர். அவரைப்பற்றிய ஒரு சிறு ஆளுமைச்சித்திரம் இந்நூலில் உள்ளது. லச்சம் என்ற பேரில் அவரேதான் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் நாவலிலும் வருகிறார். தன் எல்லைகளை தொடர்ந்து மீறிக்கொண்டே இருந்த விந்தையான மனிதர். மீறல் தவிர தனிப்பட்ட திறன் என்று எதையும் வளர்த்துக்கொள்ளாதவர். ஆகவே அம்மீறல் அதில் சந்தித்த ஆளுமைகள் தவிர வேறேதுவும் இல்லாதவர். ஆயினும் நான் பேசிய எல்லாத்தருணங்களிலும் உற்சாகமான நினைவுக்கொப்பளிப்பாகவே அவருடனான உரையாடல்கள் இருந்திருக்கின்றன. எம்.என்.கோவிந்தன் நாயர் பற்றி தொடக்க கால கம்யூனிஸ்ட் கட்சிகளைப்பற்றி அவர் கூறிய பல செய்திகளை ஒட்டியே பின் தொடரும் நிழலின் குரலில் நான் எழுதிய சித்திரங்கள் அமைந்துள்ளன.

ஜீவா சிறுவனாக தன்னைப்பார்க்க வந்த சுந்தர ராமசாமியை ஓர் ஆளுமையாக, கட்சிக்கு ஒரு புதிய வரவாக நினைத்து பழகுகிறார். இறுதி வரை அந்த இயல்புத்தன்மையும் இணையான தன்மையும் இருந்துகொண்டே இருந்தது இந்நூலில் வெளிப்படுகிறது. மேடையில் பேசும் ஜீவாவின் அழகிய சித்திரத்தை சுரா நாவலில் உருவாக்குகிறார். பேசியபடியே பெண்கள் பக்கம் திரும்புபவர், சட்டென்று குரலைத் தாழ்த்திக்கொண்டு வேடிக்கை பேசத்தொடங்குபவர், உணர்ச்சிக் கொந்தளிப்புடன் முழக்கமிடுபவர், ஆவேசமாக அரசியலை சுட்டிக்காட்டி பேசுபவர்.

முழுக்க முழுக்க லட்சியவாதியாகவும் மறுபக்கம் பழுத்த யதார்த்தவாதியாகவும் ஜீவா இருக்கிறார். அன்றாட யதார்த்தங்களை ஒருபோதும் மிகையான கற்பனாவாதத்தால் அவர் மதிப்பிடுவதில்லை. மனிதர்கள் அப்படித்தான், நாம்தான் கொஞ்சம் பரிவுடன் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் தெளிவு எப்போதும் அவரிடம் இருக்கிறது. அந்த தெளிவு அவர் தொடர்ந்து சாமானிய மக்களிடம் உரையாடி வந்ததனால் உருவானது என்று இந்நூலில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் நூல்களைப் படித்தவர்கள். நூல்களிலிருந்தே ஞானத்தை அடைந்துவிட முடியும் என்று நம்பியவர்கள். ஜீவா அவர்கள் அளவுக்கு படித்தவர் அல்ல. ஆனால் தொடர்ந்து சாதாரண மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். ஒவ்வொரு சாதாரண மனிதரிடமும் அவர் தன் உரையாடலைத் தொடங்கும் விதம், அவர்களுக்கு அவர் அணுக்கமாக ஆகும் விதம் இந்த நூலில் வந்துகொண்டே இருக்கிறது.

ஜீவா சாதாரண மக்களிடம் தான் அறியாத ஞானம் உள்ளது என்று நம்பினார். அதிலிருந்து கம்யூனிஸத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார். அன்று அதை மாவோ தான் சொல்லிக் கொண்டிருந்தார். மக்களிடம் கற்றுக்கொள் என்று. ஆனால் அன்றும் இன்றும் மாவோயிஸ்டுகள் அதைச் செய்தவர்கள் அல்ல. மக்களை கருவிகளாக மட்டும் கருதுபவர்கள். சொன்னாரே ஒழிய, மாவோவே மக்களிடமிருந்து கற்றுக்கொண்டவர் அல்ல. மக்களிடமிருந்து எழுந்தவர். ஒருகட்டத்தில் மக்களை அடக்கி அழிக்கும் சக்தியாக மாறினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு அன்று மாவோ அறிமுகமானவரல்ல . ஜீவாவுக்கு மாவோ அறிமுகமாகியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஜீவாவின் முகத்திலேயே மாவோவின் சாயல் இருப்பதாக இந்த நூலைப் படிக்கும்போது தோன்றியது. அவர் கம்யூனிஸ்ட் என்பதை விடவும் மனித நேயர் என்ற எண்ணமே உருவாகியது. அவருக்கு மனிதர்களைப் பிடித்திருக்கிறது. அவர்களின் வறுமை ஒழிந்து வாழ்க்கை இன்னும் சற்று மேம்படலாமே என்று எண்ணுகிறார். அதன்பொருட்டு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டுமென்று முயற்சி எடுக்கிறார்.

சு.ரா காட்டும் ஜீவா திரும்பத்திரும்ப எளிய மனிதாபிமான அரசியலாளராகவே தோன்றுகிறார். புரட்சியாளராக அல்ல. அவரால் உறுதியாக ஒற்றைப்படையாக ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. ஆகவே வன்முறையில் அவரால் ஈடுபடமுடியுமென்பது எண்ணிப் பார்க்கத் தக்கதாக இல்லை. அவர் ஜனநாயகவாதியாகவே செயல்படமுடியும். தன் தரப்புக்கு இணையாகவே மறுதரப்புக்கும் ஏதேனும் நியாயம் இருக்கக்கூடும் என்ற எண்ணம் ஜனநாயகத்தின் அடிப்படை. ஜீவா அத்தகையவர். ஆகவே அவர் ஸ்டாலினிஸ்டோ மாவோயிஸ்டோ அல்ல. ஈ.எம்.எஸ்ஸைப்போல இந்திய ஜனநாயகத்தின் மறுக்கமுடியாத ஓர் உறுப்பாகவே அவரால் திகழ்ந்திருக்க முடியும். அவரும் சட்டசபையில் பணியாற்றியிருக்கிறார். அதுவே இயல்பானது. மார்க்சிய ஜனநாயகத்தலைவர் என்று அவரை மதிப்பிட முடியும் என்று தோன்றுகிறது.

[image error]

ஜீவாவின் ஆளுமைக் குறைபாடுகளை மிக மென்மையாக சொல்லிச் செல்கிறார் சுந்தர ராமசாமி. ஜீவாவுக்கு உணவின் மீது இருந்த மிதமிஞ்சிய விருப்பம், பெண்கள் சார்ந்து (திருமணத்துக்கு முந்தைய காலகட்டத்தில்) இருந்த பலவீனம் ஆகியவற்றை பூடகமாக சுட்டிக்காட்டிச் செல்கிறார்.  ஜீவா அவருடைய அனைத்து குறைபாடுகளிலிருந்தும் மேலெழுந்து குன்றாத மனிதாபிமானம் வழியாக, ஒவ்வொருமுறையும் மறுதரப்புக்குச் செவி கொடுக்கும் ஜனநாயகப்பண்பு வழியாக ஆளுமையாக நிலைகொள்வதை சுரா அடையாளப்படுத்துகிறார்.

இத்தகைய நேரிய அடையாளப்படுத்தல், தெளிவான வரையறை பிற நூல்களில் ஜீவாவைப்பற்றி இல்லை. அந்நூல்களில் இருக்கும் கண்ணீர் மல்கும் புகழ்மொழிகள் வாசகர்களிடம் அவநம்பிக்கையை உருவாக்குகின்றன. சட்டென்று இந்த சித்திரம்தான் ஏறத்தாழ எல்லா அரசியல்வாதிகளைப் பற்றியும் தலைவர்களைப் பற்றியும் தொண்டர்களால் சொல்லப்படுகிறது என்கிற எண்ணம் வரும்போது அது ஓர் ஆளுமைச்சித்திரமாக அன்றி ஒரு பொதுச் சித்திரவார்ப்பாகவே நம் மனதில் தங்கிவிடுகிறது. எவரும் எவரைப்பற்றியும் அவற்றைச் சொல்லலாம். ஒரு டெம்ப்ளேட், அவ்வளவுதான்.

சுராவின் சொற்களினூடாக ஜீவாவின் உடற்பயிற்சி ஆர்வம், வாலிபால் விளையாட்டில் இருக்கும் தேர்ச்சி, அவருடைய புடைத்த தசைகள், பின்னாளில் சர்க்கரைநோய் வந்து உடற்தசைகள் தொய்ந்து நோயாளியாக அவரைப் பார்த்தது என ஜீவா தெளிவடைந்தபடியே செல்கிறார் . காக்கி கால்சட்டை அணிந்திருப்பவர் .வீட்டுக்கு வந்தால் கொல்லைப்பக்கத்தில் சென்று துவைக்கும் கல்லில் அமர்ந்து பாத்திரம் கழுவும் பெண்மணியிடம் பேச்சுக் கொடுப்பவர். அவருடன் ஒரு ரத்த உறவுத்தொடர்பை உருவாக்கிக் கொள்பவர் .மேடைப்பேச்சில் கையில் கிடைக்கும் ஒரு எளிமையான கருத்தில் இருந்து மிக விரிந்த ஒரு சித்திரத்தை உருவாக்கும் திறன் காண்டேகர் பாரதி கம்பன் என்று அவருடைய ஆர்வம் விரிவடையும் விதம்.

இந்நூல் ஜீவாவை மட்டுமல்ல ஜீவா புழங்கிய மொத்த அறிவுத்தளத்தையே விவாதத்திற்கு கொண்டு வருகிறது. ஜீவா இரண்டு எல்லைகளுக்கு நடுவே செயல்பட்டவர். ஓர் எல்லை கம்யூனிஸ்டுகள். பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள். அவர்களின் அறிவியல்நோக்கும் நூல்கல்வியும் கொண்டவர்கள் அறிஞர்களின் தோரணையும், அதற்கான விலகலும் கொண்டவர்கள். தர்க்கபூர்வமாகவும் வரலாற்று பிரக்ஞையுடனும் பேசுபவர்கள்.

மறுபக்கம் ஈ.வெ.ரா. ஈ.வெ.ராவுடையது மூர்க்கமான தனிநபர் தாக்குதல் .அவருடைய நோக்கம் எதுவாக இருந்தாலும் அவர் சமூகப்பிரச்னைகளை தனிநபர் பூசல்களாக மாற்றிக்கொண்டு வசைபாடும் மொழியில் பேசினார்.

இவ்விரண்டுக்கும் அப்பால் ஒரு நடுப்பாதை ஜீவாவுடையது. அவர் நூலறிவோரின் மொழியில் பேசியவர் அல்ல. அதே சமயம் மக்களைக் கவரும்பொருட்டு எளிய வசைபாடல்கள் ,வம்புகள், காழ்ப்புகள் ஆகியவற்றில் திளைத்தவரும் அல்ல. பெரும் லட்சியத்தை நோக்கி மக்கள் மொழியில் பேசியவர். மக்களிடமிருந்து ஒருவரென கம்யூனிஸத்தை உயர் லட்சியத்தை நோக்கி எழுந்த ஒரு முனை என்று ஜீவாவைச் சொல்லலாம்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து சுந்தர ராமசாமி விலகும்போது ஜீவா அவரைப் பார்க்கிறார். அன்று சுரா கம்யூனிஸத்தை ஒழிக்க புறப்பட்ட கோடாரிக்காம்பென்று அடையாளப்படுத்தப்பட்டு உச்சகட்ட வசைகளுக்கு ஆளாகிக்கொண்டிருந்தார். அதைப்பற்றிய கொந்தளிப்பும் வருத்தமும் அவருக்கு இருக்கிறது. ஜீவா “எவ்வகையிலேனும் நீ கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டிரு. எழுத்தாளருக்கு தனிப்பார்வை இருக்கலாம் என்று இன்று கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த இடத்திற்கு அது வந்து சேரும்” என்று சொல்கிறார். “உன் மனசாட்சிக்கு நீ எழுதுவது முற்போக்கு எழுத்து என்று தோன்றினால் அதை எழுது” என்கிறார்.

சுந்தர ராமசாமி தன்னை முழுக்க முழுக்க முற்போக்கு எழுத்தாளர் என்றே ஜீவாவிடம் அடையாளப்படுத்திக் கொள்கிறார். எந்தவகையிலும் முற்போக்குக்கு எதிரான ஒன்றை தான் எழுதவில்லை என்றும் ,எழுதப்போவதில்லை என்றும், இயல்பாகவே தான் முற்போக்கானவர் என்பதனால் எவருடைய சான்றிதழும் தனக்கு தேவையில்லை என்றும் சொல்கிறார் அதை ஜீவா ஏற்றுக்கொள்கிறார். ஏறத்தாழ அவர்களின் இறுதிச் சந்திப்பு அது

ஒருவகையில் ஜீவா கம்யூனிஸம் என்ற மரத்தின் கனி. அந்த மரத்தின் உறுதியும் துவர்ப்பும் இனிமையாக மாறியது அவரிடம்தான். அந்தக்கனியை சுவைக்க தருணங்கள் வாய்த்தது சுராவுடைய நல்லூழ். இன்று கம்யூனிஸ்ட் கட்சி தன்னை திமுக வைநோக்கி கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. ஓர் அரசியலியக்கமாக அது நலிந்து, தனக்கான பார்வையையும் பாதையையும் இழந்து வேறு அரசியலியக்கத்தின் ஒட்டுண்ணி அமைப்பாக மாறி, அதன் குரலில் பேசுவது அதன் வீழ்ச்சியின் சித்திரமே. திராவிட இயக்கத்தின் மேடைப்பேச்சாளர்களின் மிகைநடிப்பும், வசைபாடலும் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளர்களுக்கும் வந்துவிட்டிருக்கிறது. அனைத்துக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சி இன்று தமிழகத்தில் பண்பாட்டு அடிப்படைவாதத்தை மிகத்தீவிரமாக முன்வைக்கும் தரப்பாக மாற்றம் கொண்டிருக்கிறது.

அன்று பெரியாரின் திராவிட இயக்கத்திலிருந்து வந்தவர் ஜீவா. அவர்தான் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் பெரியாருக்கு மிகவும் நெருக்கமானவர். மற்ற மார்க்சியர் அவரை ஒரு வசைபாடி முதியவர் என்று மட்டுமே பார்த்தார்கள். இந்நூலில் சுரா தன்னுடைய கூற்றாக ஒன்று சொல்கிறார். “ஜரிகை துப்பட்டா போட்டுக்கொண்டு சில அரசியல் வாதிகள் வருகிறார்களே பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பின்னால் இவை எல்லாம் மாறிவிட்டன. இவை எல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தின் மதிப்பீடுகள் தான் எளிமையை அழித்து அடியோடு ஒழித்துக்கட்டியது. பெரியாருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் சம்பந்தம் கிடையாது என்று தான் நான் சொல்வேன்.

ஒருவிதத்தில் பெரியாரியத்தை நசிக்கச்செய்து வீரியமிழக்கச் செய்தவர்கள் தான் பின்னால் வந்த திராவிட கட்சியினர். பெரியாருக்கும் ஜீவாவுக்கும் இடையில் சம்மந்தம் இருக்கிறது. பெரியாருக்கும் காந்திக்கும் இடையில் சம்மந்தம் இருக்கிறது. பெரியாருக்கும் காமராசருக்கும் இடையில் சம்மந்தம் இருக்கிறது. அவர்களுக்கிடையே கொள்கை அடிப்படையில் வேற்றுமைகள் இருந்தாலும் வாழ்க்கை சார்ந்த மதிப்பீடுகள் பல விஷயங்கள் ஒரே விதமான அபிப்ராயம் தான் இருக்கிறது.

பெரியாரின் மொழி தார்மீக கோபத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களிலும் தனிநபருக்குரிய வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. சமூகத்தில் அவரது கருத்துகள் பரவ மிகப்பெரிய தடையாக இருப்பது அந்தக்கருத்துகளின் கூர்மை மட்டுமல்ல அந

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 10:35

ம.பெ.ஸ்ரீனிவாசன்

வைணவ ஆய்வுகள் வைணவ சம்பிரதாய மரபுக்குள்ளும் தமிழ் ஆய்வுமரபுக்குள்ளும் தனித்தனியாக நடைபெற்று வந்தன. அவற்றுக்கிடையே ஆய்வுமுறைமைகளிலும் வேறுபாடுகள் உண்டு. ம.பெ.ஸ்ரீனிவாசன் அவ்விரு ஆய்வுமரபுகளையும் ஒருங்கிணைத்து, தொகுப்புநோக்கில் தன் நூல்களை எழுதினார்.

ம.பெ.ஸ்ரீனிவாசன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 10:34

யானைகளும் அரசர்களும் -கடலூர் சீனு

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நானும் ஜாஜாவும் நின்று பாகனால் உணவு ஊட்டப்பெற்றுக்கொண்டிருந்த இளைய யானைக்கன்றினை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் குளித்து முடித்து  ப்ரும்மாண்ட கரும்பஞ்சு பொதி போல நின்றிருந்தான்.  வாலாட்டிக்கொண்டே, ஜொள்ளு வடிய, துதிக்கை உயர்த்தி, வாழைப்பூ பிளந்தன்ன வாய் திறந்து கவளம் கவளமாக வாங்கி உண்டான்.

“பாலூட்டிகள் வரிசையில் ஆண் யானை கிட்ட ஓரு விசித்திரம் உண்டு தெரியுமா” என்று ஜாஜா கேட்டார்.

“என்னது”

“அதாகப்பட்டது ஆண் யானைக்கு ஜூ ஜூ மட்டும்தான் இருக்கும். பந்துகள் இருக்காது”

பார்த்தேன். அடப்பாவமே. உண்மைதான்.

உணவு முடிந்ததும் பாகன் கை காட்ட ஓரம் போய் நின்றான். உணவுக்கலம் ஒழித்து திரும்பி வந்த பாகன் அவனுக்கு கண்ணேறு கழித்தார். அவன் துதிக்கை உயர்த்தி முன் கால்கள் கொண்டு மண்டியிட்டு நிற்க, கழிப்பு வஸ்துக்களை அவன் முகம் முன்னால் மும்முறை சுற்றினார். சுற்றி முடித்து கை காட்ட, அவன் எழுந்து கொண்டு கழித்த பொருளை துதிக்கை கொண்டு மும்முறை துப்பினான். அட என்றிருந்தது. யானைக்கு இதை எப்போது எப்படி கற்று கொடுத்திருப்பார்கள்?

வீடு வந்ததும் இணையம் கொண்டு சொற்ப ஆங்கில அறிவு வழியே கிண்டிக் கிண்டி வாசித்துப் பார்த்தேன் யானையின் ஜனன மண்டலம் முழுவதுமே தனிதன்மை கொண்டு பரிணமித்து வந்த ஒன்றாக இருக்கிறது. யானை எப்போது மனிதனால் டொமஸ்டிக்கேட் செய்யப் பட்டது என்று தேடிப் பார்த்தேன். நாய் யானை இரண்டுமே முதலில் இந்தியாவில்தான் பழக்கப் படுத்தப் பட்டிருக்கவேண்டும் என்றன கட்டுரைகள்.

மேலதிகமாக தேடி நான் கண்டடைந்தது காலச்சுவடு வெளியீடாக, தியடோர் பாஸ்கரன் மற்றும் ஜெகநாதன் இணைந்து மொழியாக்கம் செய்த, தாமஸ் ஆர் டிரவுட்மன் எழுதிய யானைகளும் அரசர்களும் எனும் நூல்.

தாமஸ் ஆர் ட்ரவுட்மன். திராவிட சான்று எனும் நூல் வழியே அறிவுத்துறைக்கு நன்கு அறிமுகமான பெயர். அமெரிக்கர். வியத்தகு இந்தியா நூலினை எழுதிய ஏ. எல். பாஷாம் அவர்களின் மாணவர். இந்தியவியலாளர். அர்த்த சாஸ்திரம் நூல் மீது பாண்டித்தியம் கொண்டவர். தமிழ் அறிந்தவர். இந்தியவியலாளர். சூழலியல் சார்ந்தும் ஆர்வம் கொண்டவர். தியடோர் பாஸ்கரன் அவர்களின் நண்பரும் கூட. அவர் எழுதிய நூல் இது.

தலைப்பை ஒட்டி யானைகளும் அரசர்களும் கொண்ட உறவு, அதன் வழியே யானைகள் வரலாற்றிலும் சூழலிலும் பெற்ற மாற்றங்களை ஹரப்பா முதல் ஆங்கிலேய ஆவணங்கள் வரை  (ஒருவர் அவருக்கு துப்பாக்கி சுட தெரியும் என்பதற்காக, சும்மாச்சிக்கும் நூற்றுக் கணக்கில் யானைகளை வேட்டையாடி இருக்கிறார்) அர்த்த சாஸ்திரம் முதல், கஜ சிக்ஷா, பல்காப்பியரின் ஹஸ்தி ஆயுர்வேதா, ( இந்திய புராண கதைகளின் படி இந்த பல்காப்பியரே முதல் யானை டாக்டர்) ஐனி அக்பரி, தமிழ் சங்க இலக்கியங்கள் வரை பரிசீலித்து இந்தியாவில் இன்றைய நிலையில் யானைகள் வரை தனது பார்வையை இந்நூலில் முன்வைக்கிறார்.

எட்டு அத்யாயங்கள் கொண்ட இந்த நூலில் என்னைக் கவர்ந்த அம்சங்களில் முதன்மையானது வரலாறு நெடுக ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்திய நிலப்பரப்பு நெடுக இருந்து மெல்ல மெல்ல சுருங்கி இன்றய நிலைக்கு வந்திருக்கும் வனப் பகுதிகள் குறித்த வரைபடங்கள். மேற்கு கடற்கரை பகுதிகளில் ஒருகாலத்தில் வனங்களும் அதில் யானைகளும் இருந்திருக்கின்றன. இன்று அசாம் தமிழ்நாடு (நாம் ரயில் கொண்டு மோதியவை போக)  கேரளா போன்ற மிக சில காடுகளில் மட்டுமே உயிரை கையில் பிடித்து யானைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

யானை வகைகளுள் இன்று எஞ்சி நிற்கும் ஆப்ரிக்க ஆசிய யானை இனம் போக முன்பிருந்த கம்பளி யானை முற்றிலும் அழிந்தமைக்கு காரணம் பனி யுகமும், தோல் இறைச்சி யின் பொருட்டு ஆதி மனிதர்களின் முதல் வேட்டை  இரையாக கம்பளி யானைகளே இருந்ததுமே என்கிறார் நூலாசிரியர்.

ஹரப்பா நாகரீகத்தில் யானைகள் மனிதர்களுடன் இருந்தமை குறித்து தொல்லியல் தரவுகளை நூல் அளிக்கிறது. அதன் பின்னர் வந்த வேத காலம் ஆரியர் ஊடுருவல் என முன்வைக்கப்பட்டமைக்கு காரணங்கள் சிலவற்றை தாமஸ் அளிக்கிறார். முதலாவது ஹரப்பா நிலத்தில் மட்டுமே கண்ட, பரவலாக புழக்கத்தில் இருந்த குறிப்பிட்ட வகை எருதால் இழுக்கப்பட்ட, ஆரம் இல்லாத சக்கரம் கொண்ட சுமை இழுக்கும் வண்டி. வேத இலக்கியத்தில் அவை குறித்து எதுவும் இல்லை. மாறாக ஹரப்பாவில் இல்லாத, குதிரை கொண்டு இழுக்கும் ரதம் (இது சுமை வண்டி அல்ல) வருகிறது. ஹரப்பாவில் பல இடங்களில் காணப்படும் யானை குறித்த அடையாளங்கள் ஏதும் முற்கால வேதத்தில் இல்லை. பெயர் சுட்ட இயலாமல் கை உள்ள விலங்கு என்று மட்டுமே சில இடங்களில் வருகிறது. பிற்கால வேதம் யானைகளை நன்கு அறிந்து ரதங்களை வாகனங்கள் என்று கொண்ட வேதக் கடவுளர்கள் மத்தியில் ஐராவதம் எனும் யானையை வாகனமாக கொண்ட கடவுளை பேசுகிறது.

யானை மேல் மனிதன் அமர்ந்து சவாரி செய்யும் முதல் தொல்லியல் சான்று மெசப்பட்டோமியாவில் கிடைக்கிறது. யானை மேல் மனிதன் சவாரி செய்யும் நிலை வந்த உடன் இந்தியாவில் போரில் யானைகளை ஈடுபடுத்தும் நிலை வந்து விடுகிறது. இங்கே தாமஸ் சுவாரஸ்யமான ஒரு அவதானத்தை முன்வைக்கிறார். எப்போது யானை மேல் அல்லது குதிரை மேல் அமர்ந்து சவாரி செய்ய துவங்கினோம் எனும் காலம் திட்டவட்டமாக தெரியாவிட்டாலும், அப்படி ஒரு திறன் கிடைத்த பிறகு, போரில் ரதங்கள் எண்ணிக்கையில் குறைந்து, குதிரைகளும் பெருகி, ரத கஜ துரக பதாதி வழியே வியூகம் அமைக்கும் வகைமை உச்சம் கண்டு விட்டது என்று தரவுகள் கொண்டு கூறுகிறார் தாமஸ்.

ஐரோப்பியர் வருகை நிகழும் வரை, போரின் முதன்மை செல்வமான குதிரைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலமும், யானைகளுக்கு தேவையான வனப் பகுதியும் இந்திய அரசர்களால் நன்கு புரக்கப்பட்டிருக்கிறது. காட்டில் வளரும் காட்டானயை இருபது வயதில் பிடித்து பழக்க படுத்த வேண்டும். இருபது வயது வரையிலான அதன் காட்டான் தன்மையே (நினைவில் காட்டுள்ள மிருகம்)  போர்க்கள யானையின் அடிப்படை ஆற்றல். ஆகவே போருக்கு தேவையான யானைகளின் உற்பத்தி கேந்திரமான வனங்கள் நன்கு பாதுகாக்க பட்டிருக்கின்றன.

காட்டாளர்கள், யானை பிடிப்பவர்கள், பாகன்கள், உதவியாளர்கள், போர் யானை பயிற்சியாளர்கள், போர் யானை வீரர்கள், யானை மருத்துவர்கள் என ஒரே ஒரு யானையை அடியொற்றி ஒரு சமூக அடுக்கே செயல்பட்டிருக்கிறது. வயது ஆக ஆக யானைக்கு ஆற்றல் கூடிக்கொண்டே போகும். அறுபது வயதில் அதன் பற்கள் விழுந்து உணவு உண்ண இயலாமல் ஆன பிறகே பலம் குன்றி மெல்ல மெல்ல உயிர் விடும். ஆக நாற்பது வருடமும் இந்தியப் படையில்  முற்றுகையிடவும், கோட்டை கதவுகளை உடைக்கவும், உள்ளே புகுந்து துவம்சம் செய்யவும் யானைகளே முன்னணி வீரர்கள். யானைகள் இன்றி போர் வெற்றி இல்லை. போர் வெற்றி இன்றி உபரி இல்லை. உபரி இன்றி எதுவுமே இல்லை. இந்தியா என்பதை அதை உருவாக்கிய பல்வேறு காரணிகளில் யானைகளும் அதன் வல்லமையும் ஒன்று என்று தரவுகளுடன் பேசுகிறது நூல்.

அலெக்சாண்டர் படையெடுப்பு வழியே போர் யானைகள் இந்தியாவுக்கு வெளியே அறிமுகம் ஆகி, உலகம் முழுவதும் பரவினாலும் ( 500 போர் யானைகளுக்கு ஈடாக சில நிலங்களை செலுக்யேஸ் நிகேடார் திருப்பி அளித்திருக்கிறார்)  நவீன போர் தளவாடங்கள் வரும் வரை இந்தியாவில் யானைகள் போரில் ஈடுபடுத்தபட்ட அளவு, வேறு எங்கும் போரில் யானைகள் பயன்படுத்தப் படாமைக்கு  தாமஸ் முன் வைக்கும் காரணம் பல, இங்கே யானைகள் புழங்கும் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமான பருவமழை சுழற்சி உருவாக்கும் நில அமைப்பு வெளியே பெரும்பாலான நிலங்களில் இல்லை. அடுத்ததாக யானைகளின் உடல் அமைப்பு. போரில் யானைகளை குறிப்பிட்ட முறையில்தான் பயன்படுத்த வேண்டும். துஷ்ப்ரயோகம் செய்தால் யானைகளுக்கு வியர்வை சுரப்பி கிடையாது என்பதால் உள் முகமாக வியர்த்து அது வெளியேற வழியின்றி யானை நோய்வாய் பட்டு விடும். கண் பார்வை இழக்கும் யானைகள் கூட உண்டு. போரில் இத்தகு யானைகள் பெரும் சுமை. இவை போக பிழை நிகழ்வு வழியே தனது படையையே துவம்சம் செய்யும் யானைகளும் உண்டு. இதற்கு வெளியே மற்றொரு முக்கிய காரணம் உண்டு. குறிப்பாக சீனர்கள் வசம்.  அது அறமின்மை. அன்றைய அரசு நீதி முதல்  இன்று ஜனநாயக நீதி வரை இந்திய யானைகள் உடன் நிற்கும் அந்த அறம் இந்திய நிலத்துக்கு வெளியே யானைகளுக்கு கிடைத்ததில்லை. எந்த அறமும் இன்றி உலக உயிர் வலையை கொன்று தின்பதில் அன்றும் இன்றும் சீனா முன்னணி வகிக்கிறது.

இந்தியாவில் அரசர் காலம் முடிந்து நிகழும் ஐரோப்பியர் வரவில் யானைகளின் சரிவு துவங்குகிறது. ( தே ஒரு இலையின் கதை நூலில் ராய் மாக்ஸாம் யானைகளின் வாழிடமான அசாம் காடுகள் யானைகளை கொண்டே அழிக்கப்பட்டு அவை தேநீர் தோட்டங்களாக மாறும் சித்திரத்தைக் காட்டுகிறார்) யானைகளை கொண்டு ரயில் தண்டவாளத்துக்கு காட்டு மரங்கள் வெட்டி சுமக்கப் படுகின்றன. யானைகள் மீதேறு பாதுகாப்பாக நின்றுகொண்டு புலி கரடிகள் சுட்டு கொல்லப் படுகின்றன. எல்லாம் முடிந்ததும் மிஞ்சிய யானைகள் சுட்டுக் கொல்லப் படுகின்றன. இவற்றில் மிஞ்சிய யானைகளின் தலைமுறையே இப்போது இந்திய நிலத்தில் நாம் காணும் யானைகள்.

இன்றைய இந்திய யானைகள் எதிர் நிற்கும் ஆபத்து என்ன என்பது வெளிப்படை. வாழிடமும் அதன் வழியே உணவும் சுருங்குவது. நீர் பற்றாக்குறை. கள்ள சந்தை. மோதும் ரயில்கள், பீர் புட்டிகள் இன்னும் பல .குறிப்பாக இந்திய மனிதர்கள் வசம் குறைந்து கொண்டே வரும் பெருந்தன்மை. வசுதைவ குடும்பத்தை மனதில் இருந்து உதறி புனிதமான பூஜை அறையில் வைத்து பூட்டி விட்டோம். அந்த கோயிலை காக்கும் பணியை புனிதமான ஒன்றையணா அரசியல்வாதிகள் வசம் விட்டு விட்டோம். இதன் வழியே எந்த அறமும் இன்றி பிற உயிர் குறித்த எந்த போதமும் இன்றி எதை வேண்டுமானாலும் வாங்கி விற்று துய்த்து வாழ்ந்து சாகும், தன்னைத் தவிர பிற எதுவுமே பொருட்டில்லாத காலத்துக்குள் வந்து நிற்கிறோம். அந்தப் பேருயிர்கள் அஞ்சி நிற்பது இந்த காலத்தின் முன்புதான்.

மாறும். அந்த மாற்றத்துக்கு துணை நிற்கும் ஜெயமோகன் யானை டாக்டர், ராமன் சுகுமாரன் என்றென்றும் யானைகள் போன்ற நூல் வரிசையுடன் படித்துப் பரவலாக்கம் பெறவேண்டிய மற்றொரு முக்கியமான நூல் தாமஸ் ஆர் ட்ரவுட்மன் எழுதிய இந்த யானைகளும் அரசர்களும் நூல்.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 10:31

தெய்வம் பொய்யாதல் – கடிதம்

க.நா.சுப்ரமணியம் தமிழ் விக்கி பொய்த்தேவு தமிழ் விக்கி

அன்பின் ஜெ,

நலம்தானே?

நீங்கள் 2001 மார்ச்சில், 2000 வரையிலான தமிழ் நாவல்களில் விமர்சகனின் சிபாரிசாகப் பரிந்துரைத்த பட்டியலையே இன்னும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை. “கண்ணீரைப் பின்தொடர்தல்” பட்டியலிலும் பல பாக்கியிருக்கின்றன. மலைத்து பின்வாங்கிவிட வேண்டாம் என்று அடிக்கடி மனதுக்கு சொல்லிக்கொள்கிறேன். மெய்யியல் சார்ந்து தேடல்கொண்ட படைப்புகளாக பதினைந்தை பரிந்துரைத்திருந்தீர்கள் (2021 மார்ச்). சில நாவல்களை வாசித்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.

சென்ற வாரம் “பொய்த்தேவு” வாசித்தேன். மனம் நிறைக்கும் வாசிப்பனுபவம். “ஆலயமணியின் ஓசை” என்று தலைப்பிட்டு ஒரு சிறிய வாசிப்பனுபவக் குறிப்பெழுதி அம்முவிற்கும் அனுப்பி அம்முவையும் நாவலை வாசிக்கச் சொன்னேன்.

[image error]

ஆலய மணியின் ஓசை

“பொய்த்தேவு” முதல் பதிப்பு 1946-ல் வெளியாகியிருக்கிறது (மறுபதிப்புகளை அகரம், புதுப்புனல், காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், டிஸ்கவரி போன்ற பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன). கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு கடந்தபின்னும் அதன் வாசிப்பின்பம் கிஞ்சித்தும் குறையவில்லை. சிறிதும் தொய்வில்லாத சுவாரஸ்யம். விறுவிறுவென்று நகரும் பக்கங்கள். ஆயாசம் கொண்டு வேகம் குறைக்க வைக்காத நடை. அதன் உள்ளடக்கம்/பேசு பொருள்/விவாதிக்கும் புள்ளி, இன்றும் so contemporary.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் எட்டாம் திருமுறையில் வரும் ஓரு பதிகப் பாடல்…

“அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றற்றநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

இப்பாடலின் “பொய்த்தேவு” எனும் வார்த்தை தன் மனக்காதில் ஒலித்துக் கொண்டேயிருந்ததென்றும் அதனையொட்டிய எண்ணங்களே சோமுவின் கதையை எழுத்தாக்கின என்றும் க.நா.சு முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவரின் முழுவாழ்வை நேரடியாகச் சொல்வது போல் முதல் 900 பக்கங்கள் எழுதி அது சரியாக வராமல் அதனை முந்நூறு பக்க நாவலாகச் சுருக்கி பின் அதுவும் திருப்தி தராமல் மீண்டும் குறுக்கி, நாவலை தற்போதைய வடிவத்திற்கு கொண்டு வந்ததாகச் சொல்கிறார். கச்சிதமான கட்டமைப்பு! தெளிவான இயல்பின் அழகுடன் அத்தியாயங்கள். நாவலை வாசித்து முடித்தபின் முன்னிருக்கும் அத்தியாயத் தலைப்புகளை மட்டும் மறுபடி படித்தாலே முழு நாவலையும் தொட்டெடுக்கும் பரவசம். “பொய்த்தேவு” தவறவிடக்கூடாத கிளாஸிக்.

நாவல் சோமுவின் வளர்சிதை மாற்றம். அவ்வாழ்வின் வட்டம். நதிப் பெருக்கின் கொண்டாட்டமும், இயல்பொழுக்கின் அமைதியும் சங்கமமும். கும்பகோணத்தை ஒட்டிய காவிரி நதிக்கரை கிராமமான சாத்தனூரில் (ஊர் நடுவில் இனிய நாதம் எழுப்பும் மணியுடன் சிவன் கோயில்) மேட்டுத் தெருவில் கறுப்ப முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக அவதரிக்கிறான் சோமு. சோமு, சோமுப் பயலாகி, சோமசுந்தர முதலியாராக வளர்ந்து, மனதில் மணியோசையின் அழைப்பு கேட்டு சோமுப் பண்டாராமாக உருமாறும் கதை.

கறுப்ப முதலி, வெள்ளையம்மாள், பாப்பாத்தியம்மாள், பள்ளிக்கூட உபாத்தியாயர் சுப்பிரமணிய ஐயர், ரங்க ராவ் ராயர், சோனிபாய், கங்காபாய், சாம்பமூர்த்தி ராயர், கோவிந்தப் பிள்ளை, வாசக சாலை சாமா, ரங்காச்சாரியார், கோமளவல்லியம்மாள், கமலாம்பாள், பாலாம்பாள்… எல்லோரின் வாழ்வினூடே ஒரு பயணம் சென்று வந்ததில் மகிழ்வும், நிறைவும்.

மேட்டுத் தெரு, சாத்தனூர் எல்லைகள், பள்ளிக்கூடத்து நிழல், கல்யாண ஏற்பாடுகள், கல்யாண விமரிசை, ஸ்டேஷன் மகஜர் அத்தியாயங்கள் வெகு சுவாரஸ்யமானவை. முதல் நாள் பள்ளி சேர்ப்பு வைபவமும், சாத்தனூர் மேட்டுத் தெருவில் பிறந்த பிரபல தீவட்டிக் கொள்ளைக்காரன் பிச்சாண்டியின் கைவரிசை அத்தியாயமும் அபாரமானவை.

***

இந்தப் பண்டாரம் வேடிக்கையான பண்டாரமாயிருந்தார். நம்ம கிட்டே குடுக்கை, கந்தைத் துணி, கஞ்சா உருண்டை ஏதாவது இருக்கு. இவர்கிட்டே அதுகூடக் கிடையாது! என்ன பண்டாரங்கிறேன்!” என்றார் ஒரு பண்டாரம்.

மற்றவர், “போகலாம் கிளம்பு. இன்னுஞ் சித்தெப்போனால் கும்பி கொதிக்கும். நாலு இடம் பார்த்தாத்தானே சோறு கிடைக்கும்?” என்றார்.

நேத்து ராத்திரி ஒரு விஷயம் சொன்னார் இந்தப் பண்டாரம்என்றார் முதல் பண்டாரம்.

சொல்லுஎன்றார் இரண்டாவது பண்டாரம்.

நேத்து ராத்திரி தெய்வம் ஒண்ணுதான்னு இந்தப் புதுப் பண்டாரத்துகிட்டெச் சொன்னேன். ஏதோ பேசிகிட்டிருக்கச்செ சொன்னேன். இந்தப் பண்டாரம்இல்லே. தெய்வம் ஒண்ணு மட்டுமில்லே. எத்தனையோ உண்டுஅப்படின்னார். ‘முப்பத்து முக்கோடின்னு சிவ புராணம் சொல்லுது. அது தப்புன்னேன் நான். ‘தப்புத்தான்னார் அவர். ‘முதல்ல அப்படிச் சொன்னீர், இப்ப இப்படிச் சொல்றீரேன்னு நான் கேட்டேன். ‘தெய்வங்கள் முப்பத்து முக்கோடி மட்டுமில்லே. முப்பத்து முப்பத்து முப்பத்து முக்கோடி. எத்தனையோ முப்பத்து முக்கோடி தெய்வம் இருக்குன்னார். ‘எப்படித் தெரிஞ்சிச்சு உங்களுக்கு?’ன்னு நான் கேலியா கேட்டேன். உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வம் உண்டு. இனி இருக்கப்போற விநாடிக்கும் விநாடிக்கொரு தெய்வம் உண்டுன்னார் அந்தப் பண்டாரம். எனக்குப் புரியல. பின்னாடி கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்என்றார்.

பதில் அறிய அவசியம் சோமுப் பயலையும், மளிகை மெர்ச்சண்டு சோமசுந்தர முதலியாரையும் சந்திக்க வேண்டும் அம்மு.

வெங்கி

பொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 10:31

முதற்கனல் வாசிப்பு- இந்துமதி

முதற்கனல் மின்நூல் வாங்க முதற்கனல் அச்சுநூல் வாங்க

அன்புள்ள ஜெ,

இந்த ஆண்டு ஜூன் மாதம் உங்கள் கொற்றவை நாவலை வாசித்து முடித்தேன். அந்த வாசிப்பின் எழுச்சியில் நேரடியாக வெண்முரசுக்குள் நுழைந்தேன். முதற்கனலை வாசிக்க ஆரம்பித்தேன். முதற்கனலின் முதல் ஐந்து அத்தியாயங்களைக் கடந்து வேள்விமுகம் தாண்டிய போது வெண்முரசின் மொழியும் , வர்ணனைகளும், உவமைகளும் ஈர்த்துக்கொண்டு முதற்கனலின் உலகத்தில் முழுவதுமாக  பிரவேசிக்க வைத்தது. நிலம் பற்றிய வர்ணனைகளும்,தட்சன் தாட்சாயிணி,சிபிச் சக்கரவர்த்தி போன்ற கிளைக்கதைகளும்,ஷத்ரிய அறம் பற்றிய விளக்கங்களும் வாசிக்க வாசிக்க பருப்பொருளிலிருந்து உருவான இப்புடவியின் ஒவ்வொரு நிலமும்  காலத்தின் போக்கில் அதற்கான வலுவான வரலாற்றையும் பண்பாட்டையும் அடைந்தவிதத்தை சிந்தித்துப் பார்க்கையில் ஒரு பிரமிப்பும் வியப்பும் எழுந்தது. இதற்கு முன் முக்கண்முதல்வனிலிருந்து தொடங்கும்  கொற்றவையை வாசித்த போது அப்படி ஒரு உளஎழுச்சியை அடைந்தேன். முதற்கனலின்  வாசிப்பில் அந்த உணர்வின் ஆழம் இன்னும் பன்மடங்காகியதை  உணர முடிந்தது.

முதற்கனலின் முதல்வாசிப்பில் சத்யவதி ,விசித்திரவீரியன் ,பீஷ்மர் ,அம்பை, சிகண்டியே உச்சமாக பதிந்தார்கள். சந்தனுவிற்கு, சத்யவதிக்கு, அஸ்தினாபுரத்திற்கென்று தன் சுயவிருப்பு வெறுப்புகளைத் துறந்த பீஷ்மரின் தியாகமே பீஷ்மரைப் பற்றிய முதல் நினைவாய் மனதில் பதிந்தது.
சத்யவதி காசி மன்னனின் இளவரசிகளை கவர்ந்து வர சொல்லி
பீஷ்மருக்கு கட்டளையிட்டபோது உள்ளம் கலங்கி கிருஷ்ண துவைபான வியாசரின் பீஷ்மர் ஆலோசனை கேட்கச்சென்றபோது, சால்வனை உதறி காசி சென்று திரும்பிய அம்பை பீஷ்மரிடம் அன்பைக்கோரி மன்றாடியபோது,அஸ்தினாபுரியை நீங்கிச் சென்ற பீஷ்மர் இரவில் கல்மண்டபத்தில் தங்கியபொழுது சூதர்கள்  பாடல்கள் வழியாக எள்ளிநகையாடியதைக் கேட்டபோது,’இந்த பாரதவர்ஷத்தில் எங்காவது நான் ஒரு குடும்பம் அமைத்து வாழவிரும்புவேன் என்றால் அது இங்குதான். ஆனால் இப்பிறவியில் எனக்கு அந்த நன்னிலை இல்லை’ என்று அந்தக் கிராமத்து முதியவரிடம் பீஷ்மர்  சொன்ன போது, “பெண்ணின் அன்பைப்பெறாதவன் பிரம்மஞானத்தால் மட்டுமே அந்த இடத்தை நிறைத்துக்கொள்ளமுடியும். நான் இரண்டுக்கும் தகுதியற்றவன். பழிசூழ்ந்தவன்” என்று தன்னை மணக்க விரும்பிய கிராமத்து இளையபெண்ணிடம்  பீஷ்மர் கூறிய  போது, நாக முனிவரின் ஆடியில் யயாதியாய் பீஷ்மர்  தன்னைக் கண்டபோதும், இந்த எல்லா சூழ்நிலைகளிலும் அத்தனை  இறுக்கங்களிலிருந்தும்  அறுபட்டு ஒரு பெரும் விடுதலைதலையுணர்வை இறைஞ்சும் பீஷ்மரையே உணர முடிந்தது . ‘நான் என்னை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பே அளிப்பதில்லை.என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கேன்’ என்ற பீஷ்மரின் வார்த்தைகளில் அடிமனக் கலக்கமும், வலியும் தோய்ந்த உண்மையாகவே அது  வெளிப்பட்டது.

முதற்கனலின்  வழி  நெடுகவே உறவுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும்  இடையில் ஒருவர் பிறிதொருவரை நிறைக்கும் முழுமையை ,கூரிய அவதானிப்புகளை  விளக்கும் நிகழ்வுகளும் ,வரிகளும் ஏராளம். “உங்கள் விழிகள். அவற்றில் ஆணே இல்லை.ஆண்களின் கண்களில் உள்ளவை இருவகை உணர்வுகள். ஒன்று, வேட்கை. எப்போதும் எரியும் அதன் சுவாலை விலகினால் தெரிவது புறக்கணிப்பின் ஏளனம்…அதையே ஆண்மை என்கிறார்கள். அவை உங்கள் கண்களில் இல்லை. இவை என் அன்னையின் கண்கள் போலிருக்கின்றன,” என்று அம்பிகை விசித்திரவீரியனிடம் மஞ்சத்தில் சொன்ன வார்த்தைகள், “எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…’ என்று அம்பிகையையும் விசித்திரவீரியனையும் பற்றி சத்யவதி பீஷ்மரிடம் சொன்னது, “ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு? அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான்,” என்று சத்தியவதி உதிர்த்த வார்த்தைகள் யாவும் அதற்கான சாட்சிகள்.

ஆண் பெண் உறவில் ஒருவர் பிறிதொருவரை நிறைக்கும் இடம் போல், ஆணவத்தால் ஒருவர் பிறிதொருவரை பிரியும் பிளவும் இப்பிரபஞ்ச ஆட்டத்தின் ஆண் பெண் விளையாட்டின் ஒரு அங்கம்  போல. தாட்சாயிணியால் தோல்வியுற்ற தட்சன் ‘களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்’ என்ற சொன்னபோது ஒரு ஆணின் வலிமை பெண்ணின் அன்பின் முன்னால் தோற்றதை உணரும்போது  அது அடக்கமுடியா ஆணவமாக வெளிப்பட்டுவிடுகிறது. அப்படி அம்பை மன்றாடி தன் தூய்மையான அன்பை வெளிப்படுத்தி அதை ஏற்குமாறு பீஷ்மரிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணின் அன்பின் முன்னால் நாம் படிப்படியாக தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே  பீஷ்மரிடம் ஏளன சுழிப்பாக வெளிப்பட்டிருக்கக்கூடும். அதை கண்டுகொண்ட அம்பாயாகிய திருமகள் அக்கணத்திலிருந்து  எரிக்கும் கொற்றவையானாள். முதற்கனலின் அம்பை கொற்றவையின் கண்ணகியை நினைப்படுத்தினாள். தான் நேசிக்கும் ஆணின் மீது அப்பழுக்கற்ற அன்பை சுமந்திருக்கும் போது அவள் கனிந்து நிறைந்திருக்கும் திருமகளாகவே இருக்கிறாள். கோவலன் மாதவியிடம் சென்ற போதும் கோவலன் கண்ணகி மீது கொண்ட அன்பிற்காக அல்ல , கண்ணகி கோவலன் மீது கொண்ட தூய்மையான அன்பிற்காகவே அவள் காத்திருந்திருக்கக்கூடும். அந்த அன்பின் சாட்சியான கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அவள் கொற்றவையாகி மதுரையை எரித்து , முலையறுத்து நோன்பு பூண்டு பின் சமாதி நிலையடைந்தாள். இங்கு அம்பைக்கு  எல்லா நிலையிலும் யாவரும் அநீதியே  இழைத்தார்கள். நினைத்த சுயம்வரம் நடக்காமல், நேசித்த மணவாளன் கிடைக்காமல், நேசித்த சால்வனை அடைக்கலம் தேடி சென்ற போது அவனும் கீழ்மையான   சொற்களால் அம்பையை நிராகரித்து, இறுதித் தஞ்சம் என்று நினைத்துச்  சென்ற பிறந்தவீடான காசிநாடாலும் கைவிடப்பட்டு, பின்   கடைசியில் ஒற்றை சரணாகதியாய் பீஷ்மரிடம் அன்பைக்கோரி மண்டியிட்டபோது பீஷ்மர்  அவள் தன்மானத்தை சீண்டி அவர்  மீது கொண்ட அன்பில் பிழை கண்டபோது  இந்தத் திருமகளும் கொற்றவையாகி  இறுதியில் நெருப்புக்கு அவியானாள். பீஷ்மர் அம்பை இவ்விருவரையும் நினைக்கையில்  இந்த இருவர்மீதுமே கருணை தோன்றியதே  தவிர குறைபட முடியவில்லை. இருவருமே அவரவர் சூழ்நிலையில் அவரவர் சரியே  என்றாலும் ‘பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடுபோல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச் செல்கிறது ‘ என்ற முதற்கனலின் வரிகளே அம்பை பீஷ்மர் பகுதியை  வாசித்தபோது அப்போது நினைத்துக்கொண்டேன்.

ஆடியின் ஆழத்தில் அக்னிவேசர் மற்ற சிஷ்யர்களிடம், துரோணரிடம் ,சிகண்டியிடம் சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மந்திரமாக பதிந்தது.முதற்கனல் வாசிப்பின் போது கூடவே ஒரு கல்வி நிகழ்வதையும் உணர முடிந்தது. எண்ணற்ற வாக்கியங்களும் உவமைகளும் அகத்தில் அமர்ந்து நிறைந்திருக்கின்றன.

‘எந்த சொற்களையும் விட உடல் ஆன்மாவை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.’

‘விழியற்றவனுக்கு கண்களில் நிறங்கள் இல்லை.
விழியிருப்பவனுக்கு உடலில் நிறங்கள் இல்லை ‘.

‘கரைகளால் நதி கட்டுப்படுத்தப்படுவதில்லை.
கரைகளை நதிகளே உருவாக்கிக்கொள்கின்றன ‘.

‘ஞானம் என்பது அடைவதல்ல.
ஒவ்வொன்றாய் இழந்தபின் எஞ்சுவது ‘.

இப்படி உள்ளுக்குள் உணர்ந்து வியந்த வரிகள் இன்னும் எத்தனையோ. முதல் வாசிப்பில் நிச்சியமாக பல விஷயங்களை தவற விட்டிருப்பேன் என்பதையும் உணர முடிந்தது. மீண்டும் மீண்டுமான மீள்வாசிப்புகளில் அக்குறையை நிறைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். வெண்முரசு தொடர் ஒரு கிளாசிக் என்று ஏன் சொல்லப்படுகிறது என்று இப்போது புரிகிறது. எவ்வளவு முறை படித்தாலும் தீராமல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒன்று கிளாசிக். கொற்றவையும் முதற்கனலையும் இவ்வாண்டு  வாசித்ததில் ஒரு கிளாசிக்கை படிப்பதே எனக்கு உகந்த வாசிப்பு என்று கண்டுகொண்டேன். மழைப்பாடலை தொடங்கியிருக்கிறேன்.

அன்புடன்,
இந்துமதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 10:30

November 10, 2022

நாயாடிக்காப்பனும் இந்து மதமும்

அன்புள்ள ஜெய்,

உங்கள் “இந்து மதம் என ஒன்று உண்டா?” மூன்று பாகமும் வாசித்தேன் – அருமை! ஒவ்வொரு இந்துவும் படிக்க வேண்டும்.  தங்களின் மூன்று பாகத்தையும் படித்த பின்பு அந்த கட்டுரைகளை அசை போட்ட படியே நடந்த போது தோன்றியது – ஒரு “நாயாடி  காப்பன்” பார்வையில் நம்ம இந்து மதம் எப்படி தோன்றும்?

பாலா
ராலே

*

அன்புள்ள பாலா,

நாயாடி என கேட்காமல்  காப்பனின் பார்வையில் என்று கேட்டீர்கள். காப்பன் கல்வி கற்றவர். ஆகவே வரலாற்றையும், சமூகவியலையும், மானுடப்பரிணமாத்தையும் அறிந்தவர். அவருக்கு சில தெளிவுகள் இருக்கும். அரசியல்வாதிகள் உருவாக்கும் எளிமையான ஒற்றைவரிகளை கொண்டு வரலாற்றையும் பண்பாட்டையும் புரிந்துகொள்பவராக இருக்கமாட்டார். எல்லாமறிந்தவர் போல முகநூலில் சலம்பிக்கொண்டிருக்கவும் மாட்டார்.

நாயாடி காப்பன் இப்படிச் சொல்வார்

என்மீதும், என் மக்கள் மீதும் இருந்த கடும் ஒடுக்குமுறை என்பது மதத்தால் உருவாக்கப்பட்டது அல்ல. மதத்தை அவற்றுக்கு பொறுப்பாக்குவது முழுமையான அறியாமை. ஒடுக்குமுறையும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான போராட்டமும் மானுட வரலாறு முழுக்கவே நடைபெற்றுள்ளன. இரண்டுக்குமே மதம் கருவியாகியுள்ளது.

ஐரோப்பிய வரலாற்றில் மதவிசாரணை, மதம் சார்ந்த ஒடுக்குமுறைகள் வழியாகவே ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டது. அவற்றை வென்று மானுட சமத்துவம், மானுடநீதி பற்றிய கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளவும் அதே மதம்தான் கருவியாகியது.

மானுட இன வரலாற்றில், சமூகங்களின் பரிணாமத்தில் ஈவிரக்கமில்லாத போட்டியே நிகழ்ந்திருந்தது .நியாண்டர்தால் அரைக்குரங்கு வாழ்க்கை முதல் பிற இனக்குழுக்கள் மேல் கொண்ட வெற்றி, அதன் விளைவான சுரண்டல் வழியாகவே மனித இனம் வளர்ந்தது. வரலாற்றில் அவ்வண்ணம் வெற்றிகொள்ளப்பட்ட எத்தனையோ இனக்குழுக்கள் முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ இனக்குழுக்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளன.

மனித இனம் வளர்ந்தது உபரிச்செல்வம் வழியாக. அச்செல்வம் அடிமைகளை பயன்படுத்துவதன் வழியாக ஈட்டப்பட்டது. அந்தச் செல்வமே கல்வியும், கலைகளும் ஆக மாறியது. அக்கல்வியும் கலைகளுமே அடிமைமுறையை உதறி முன்செல்லும் அறத்தை உருவாக்கின. அடிமைமுறைக்கு மாற்றான இயந்திரங்களை உருவாக்கின. அடிமைமுறையை வலியுறுத்தியவர் பிளேட்டோ. பிளேட்டோ இல்லாமல் ஐரோப்பிய சிந்தனை இல்லை. ஐரோப்பிய இலட்சியவாதமே அடிமைமுறையை அழித்தது.இந்த முரணியக்கத்தை புரிந்துகொள்ளாதவர் வரலாற்றை அறியாதவர்.

ஆகவே, மானுட வரலாற்றில் எங்கும் எக்காலத்திலும் ஒடுக்குமுறை இருந்துள்ளது. ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும் இருந்துள்ளனர். ஒடுக்குமுறை இல்லாத பண்பாடே இல்லை. அதன்பொருட்டு மானுடப்பண்பாட்டையே நிராகரிக்கிறேன் என எவரும் சொல்லமுடியாது.

ஆக்ரமிப்பது, அடக்கியாள்வது, சுரண்டுவது ஆகியவற்றினூடாகவே நேற்றுவரை சமூகவரலாறு இருந்துள்ளது. (இன்று அது வேறுவகையில், நுண்வடிவில் உள்ளது) நேற்று நாயாடிகள் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர். அவர்களுக்கு நேர்மேலே இருந்த பறையர்களும் புலையர்களும் அவர்களை ஒடுக்கினர், சுரண்டினர், விலக்கி இழிவு செய்தனர், அவர்களுக்கு மேலே இருந்த ஈழவர்கள் புலையர்களையும் பறையர்களையும் ஒடுக்கினர், சுரண்டினர், இழிவு செய்தனர். அவர்களை நாயர்கள் ஒடுக்கினர், சுரண்டினர், இழிவுசெய்தனர்

அவ்வாறு அது மேலே மேலே சென்றது. அந்த அடுக்கின் உச்சியில் இருந்த நம்பூதிரிகளுக்குள்ளேயே இளையது என்னும் நம்பூதிரிப்பிரிவு அவர்களுக்கு மேலே இருந்த நம்பூதிரிகளால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு இழிவுசெய்யப்பட்டது. நாயாடிகளேகூட அவர்களை விட கீழ்நிலையில் இருந்த மலைப்பண்டாரம் போன்ற பழங்குடிகளை தீண்டுவதில்லை.

சென்றகால நிலப்பிரபுத்துவ முறையில் இந்தவகையான அதிகார அடுக்குமுறை எல்லா சமூகங்களிலும், எல்லா நாடுகளிலும் இருந்தது. இதை நிலைநிறுத்த, நியாயப்படுத்த மதங்களை பயன்படுத்திக்கொண்டனர். மதங்களின்மேல்தான் அரசுகளும் பேரரசுகளும் உருவாக்கப்பட்டன. மதங்களே அரசுகளின் அடித்தளங்கள். அவை சமூகத்தை உறுதியான அமைப்பாக ஆக்கும் நோக்கம் கொண்டவை.

ஆகவே மதங்களிலுள்ள கொள்கைகள், நம்பிக்கைகள் எல்லாமே ஆட்சியின் தேவைசார்ந்து   விளக்கப்பட்டன. சமூகக் கட்டமைப்பு தெய்வ ஆணை என முன்வைக்கப்பட்டது. மதநிறுவனங்கள் அந்த அமைப்பை காத்து நின்றன. இதற்கு விதிவிலக்கான ஒரு மதம்கூட உலகில் இல்லை.

ஆனால் அதே மதங்களில் இருந்தே அந்த சமூக அமைப்பை மாற்றும் சிந்தனைகளும் எழுந்தன. அந்த மததத்துவங்களை மறுவிளக்கம் அளித்து, ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் கடக்கும் கொள்கைகள் காலந்தோறும் உருவாயின. அவையும் இந்திய வரலாற்றிலேயே பதிவாகியிருக்கின்றன.

மகாபாரதத்திலேயே கிருஷ்ணன் அப்படிப்பட்ட ஓர் ஆளுமைதான். அசுரர் உள்ளிட்டவர்களை இணைத்து ஷத்ரிய ஆதிக்கத்தை வென்று புதிய அரசுமுறையை அவர் உருவாக்கியதையே மகாபாரதம் பேசுகிறது. சங்கரர், ராமானுஜர் என தொடரும் அந்த ஞானியரின் மரபு மிக நீண்டது. அவர்களின் கொள்கைகளில் இருந்து உருவான இந்திய பக்தி இயக்கமே இந்த தேசத்தில் அடித்தளமக்களின்  அதிகாரம் உருவாக வழியமைத்தது. இந்தியாவில் பத்தாம்நூற்றாண்டுக்குப்பின் உருவான பேரரசுகள் பலவும் அடித்தளச் சாதிகள் எழுச்சி பெற்று உருவாக்கியவையே.

அந்த மரபுதான் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வள்ளலார், நாராயணகுரு என நீள்கிறது. இன்றும் அத்தகைய பெரும் சீர்திருத்தவாதிகள், சமூகப்பணியாளர்கள் மதத்தினுள் இருந்து உருவாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அதாவது, மதம் சுரண்டலின் கருவியாக இருந்தது உண்மை. விடுதலையின் கருவியாகவும் அதுவே திகழ்ந்தது

அவ்வண்ணம் விடுதலைக்கு மதத்தை பயன்படுத்தியவர் நாராயண குரு. அவருடைய மரபில் வந்த ஒருவரின் வழியாகவே என் மீட்பும் வந்தது என்று காப்பன் சொல்வார். தன் குருநாதரின் அத்வைத தரிசனமே தனக்கான மெய்வழி என்று சொல்வார். அவரைப்போன்ற சில ஆயிரம் அத்வைதிகள் இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றியுள்ளனர், அடித்தள மக்களுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றினர் என்பார். கேரளத்தின் தலித் பேரியக்கத்தின் தந்தையான ஐயன்காளியே அத்வைதிதான், அவருடைய ஆசிரியர் ஓர் அத்வைதியான துறவிதான் என்பார்.

காப்பன் இவ்வாறுதான் சொல்வார். மதத்தில் பல்லாயிரமாண்டுக்கால மரபு உறைகிறது. பழங்குடி வாழ்க்கைமுதல் இருந்து வரும் மெய்யியல் மதத்தில் குறியீடுகளாக சேமிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நவீன மனிதன் தன் ஆதிதொல்காலத்துடன் ஆன்மிகமாக, ஆழுள்ளம் சார்ந்து ஓர் உறவு கொண்டிருக்கவேண்டுமென்றால் மதம் அன்றி வேறு வழியே இல்லை. ஆகவே தொல்குடி வாழ்க்கையில் வேரூன்றி இன்றும் நீடிக்கும் இந்து மெய்மரபுதான் தன் வழி என்பார்.

அது தொல்மரபு என்பதனாலேயே சென்றகாலத்தின் எதிர்மறையான பல நம்பிக்கைகளும் ஆசாரங்களும் அதில் இருக்கும். அதில் காலாவதியாகிப்போனவையும் இருக்கும். அவற்றை கண்டடைந்து களைந்து மெய்யியல் பயணத்துக்குரியவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பார்.

அந்த விவேகம் என்றும் மனிதனிடம் இருந்து வந்துள்ளது. மதத்தில் எந்த அளவுக்கு எதிர்மறைக்கூறுகள் இருந்தனவோ அதேயளவு எதிர்மறைக்கூறுகள் அரசியலிலும் இருந்தன. அவற்றை கண்டு, களைந்துதான் நாம் ஜனநாயகம் வரை வந்திருக்கிறோம். ஜனநாயகத்தை கண்டடைவதற்கு முன்பு பல வழிகளை பரிசீலித்திருக்கிறோம்.மாபெரும் அழிவுகளையும் அடைந்திருக்கிறோம். இந்த ஜனநாயகத்தின் குறைகளை களைந்து மேலே செல்வோம்.

நவீன அறிவியலும்கூட அவ்வகையில் பல கொடிய எதிர்க்கூறுகள் கொண்டதுதான். அணுகுண்டு தீயது என்றும் அலோபதி நல்லது என்றும் பகுத்தறியவும், தேவையற்றவற்றை விலக்கி நல்லவற்றை கொண்டு மேலே செல்லவும் மனிதனால் இயன்றது. அதையே மதத்திற்கும் கைக்கொள்வோம்.

மதமே பிற்போக்கானது, தவிர்க்கவேண்டியது என எண்ணும்  மனநிலை என்பது நவீனத்துவ (modernism) காலத்திற்குரியது. அந்தக் காலம் மறைந்துவிட்டது. அது மனிதனின் தர்க்கபுத்தியை மட்டுமே நம்பியது. இன்று நாம் குறியீடுகளின் வல்லமையை அறிந்திருக்கிறோம். இது பின்நவீனத்துவ யுகம். (post modern) இன்று அப்படி மதத்தையோ, பழங்குடிவாழ்க்கையையோ, நாட்டாரியல் ஞானத்தையோ தூக்கிவீசிவிட அறிவுள்ளோர் முயலமாட்டார்கள்.

இன்றைய மனிதன் வெறும் நுகர்வோன் ஆக சுருங்காமலிருக்கவேண்டும் என்றால், வெறும் அறிவியல்பிண்டமாக ஆகாமலிருக்கவேண்டும் என்றால், அவனில் கவித்துவமும் மெய்ஞானமும் திகழவேண்டும் என்றால் அவனுக்கு மதத்தில் இருந்து கிடைக்கும் அடிப்படையான தரிசனங்களும், அத்தரிசனங்களின் வடிவங்களான படிமங்களும் இன்றியமையாதவை

நாயாடிகளை ஒடுக்கியது இந்துமதமே என ஒருவன் என்னிடம் சொல்வதை நம்பி நான் வெளியே சென்றால் எந்த மதத்திற்குச் செல்வது? ஆஸ்திரேலியாவிலும் தென்னமேரிக்காவிலும் எகிப்திலுமெல்லாம் தொல்மானுட இனங்களையே முற்றாக அழித்த மதங்களுக்கா? தொல்குடிகளின் குருதி படியாத மதம் எது? இல்லை, மார்க்ஸியன் ஆகவேண்டுமா?சைபீரிய வதைமுகாம்களில் கொன்றழிக்கப்பட்ட பல லட்சம் கொசாக்குகளின் குருதியை என் குருதி என நான் கருதினால் அங்கே எப்படிச் செல்வேன்? இல்லை நவீன லிபரல் ஆகவேண்டுமா? அவர்கள்தானே ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசிவிட்டு அதை நியாயப்படுத்தவும் செய்தவர்கள்?

மதம் தேவை என உணர்ந்தேன் என்றால் என் மதத்தை தொல்மரபுகளில் இருந்து நானே கண்டடைவேன். வேண்டியதை கொண்டு அல்லாதவற்றை விலக்கி எனக்குரிய வகையில் உருவாக்கி கொள்வேன். எல்லா மதங்களிலும் மெய்ஞானியர் உள்ளனர். பெருந்தியாகத்தால் மானுட இனங்களுக்கு கல்வியும் மருத்துவமும் அளித்த கிறிஸ்தவ இறைப்பணியாளர்கள். அன்னமிட்டு உலகுபுரந்த சூஃபிகள். நாராயணகுருவும், வள்ளலாரும் போன்ற மெய்யியலாளர்கள். நான் அவர்களையே மதத்தில் இருந்து பெற்றுக்கொள்வேன்

இவ்வாறு காப்பன் சொல்வார்.நான் சிந்திக்கும் மனிதன். வரலாற்றின் இழிவுகள் அல்லது இருளுக்கான பழியை மதம் அல்லது மரபின்மேல் சுமத்தும் மூர்க்கமும் அறியாமையும் என்னிடமில்லை. நான் வரலாற்றின் இயக்கத்தை புரிந்துகொள்வேன். அதை கடந்துசெல்வதைப் பற்றி யோசிப்பேன். என் வழித்தோன்றல்களுக்கு அந்த ஞானத்தை கையளிப்பேன்

இது முழுக்கக் கற்பனை அல்ல. காப்பன் அவ்வாறு சிந்தனைசெய்பவர்.

ஜெ

ஜெயமோகன் நூல்கள்

சாதி ஓர் உரையாடல் வாங்க

சாந்தி ஓர் உரையாடல் – மின்னூல் வாங்க 

இந்து மெய்மை வாங்க

இந்து மெய்மை மின்னூல் வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

ஆலயம் எவருடையது மின்னூல் வாங்க 

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2022 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.