Jeyamohan's Blog, page 680
November 17, 2022
சோழர் பாசனம் – கடிதம்
ஒரு முக்கியமான முன்னெடுப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
தங்கள் “ஒரு முக்கியமான முன்னெடுப்பு” பதிவை வாசித்தேன்.எந்த மன்னராட்சியும் அதற்கான ஒடுக்குமுறை, அதிகார அடுக்குமுறையுடனேயே இருக்கும். அதைவிட பலமடங்கு கொடூரமான ஒடுக்குமுறையும் அதிகார அடுக்குமுறையும் கொண்ட கம்யூனிச சர்வாதிகார அரசுகளை விழுந்து விழுந்து கொண்டாடியவர்கள் அதை விமர்சிக்கும் தகுதி அற்றவர்கள். மக்களாட்சியிலும் அதற்குரிய அடக்குமுறையும் அதிகார அடுக்கும் இருப்பதைக் காணலாம்.
நாம் பொற்காலங்களை பின்னால்திரும்பி பார்த்துக் கண்டடைய வேண்டியதில்லை. அதை எதிர்காலத்தில் தேடுவோம்.
சோழர்களே தமிழகத்தின் பாசனக்கட்டுமானத்தின் அடித்தளத்தை அமைத்தவர்கள். அவர்கள் அமைத்த பாசன ஒழுங்கையே இன்றும் கடைப்பிடிக்கிறோம். அதன்மேல்தான் மொத்த தமிழகப்பொருளியலும் பண்பாடும் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
சந்திரசேகர ராவ் தெலுங்கானாவில் ராஷ்டிரகூட ஏரிச்சங்கிலி எனப்படும் மாபெரும் பாசனத்திட்டத்தை புதுப்பித்தார். ராஷ்டிரகூடப்பேரரசி ருத்ராம்பா தேவியால் உருவாக்கப்பட்ட ஏரிவரிசை அது. நூறாண்டுகளுக்கும் மேலாக பராபரிப்பின்றி கிடந்தது. அது தெலுங்கானாவின் வாழ்க்கைமுறையையே மாற்றியது.
கோயம்புத்தூரில் 2000-க்கில் குடிநீர் பிரச்னை ஏற்பட்ட போது சிறுதுளி அமைப்பானது மக்களிடையே பாரம்பரிய குளங்களை குறித்த விழிப்புணர்வு ஊட்டி கோவை சிறுவாணி மலையில் இருந்து நொய்யல் நதி மற்றும் அதன் வழியில் இருந்த குளங்களை தூர் வாரி மீண்டும் பயனுக்கு கொண்டு வந்தது. சிறுதுளியின் இந்த நடவடிக்கையால் கோவையில் நிலத்தடி நீர் பிரச்னை சரியானது.
சிறுதுளி அமைப்பின் செயல்பாடு அருகில் உள்ள மற்ற சிறு நதிகளை மற்றும் குளங்களை மீட்டெடுக்கும் அமைப்பினருக்கு மிக்க ஊக்கமாக இருக்கிறது.
தங்கள் பதிவில் குறிப்பிட்ட தெலுங்கானா ஏரிச்சங்கிலி குறித்து இணையத்தில் தேடியபோது கீழ்கண்ட செய்திப்பதிவு கிடைத்தது :
https://telanganatoday.com/chain-of-tanks-in-telangana-built-by-chola-kings-v-prakash-rao
அதில் தெலுங்கானா மாநில நீராதாரங்கள் மேம்பாட்டு வாரிய தலைவர் திரு. வீரமல்லா பிரகாஷ் ராவ் அவர்கள், பலர் ஏரிச்சங்கிலி காகதீய ஆட்சியின் போது உருவாக்க பட்டது என்று கருதுகிறார்கள், ஆனால் உண்மையில் சோழர்கள் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள பனகல் ஏரியும் மற்றும் அதன் சங்கிலியில் உள்ள ஏரிகளையும் உருவாக்கினர் என்கிறார்.
மிக்க நன்றி.இப்படிக்கு
அன்புடன்
சந்தானம்
November 16, 2022
அறைக்கலன் -அவதூறு
பேட்டியில் மறைந்து போன சொற்களை மீண்டும் கொண்டு வந்தேன் என சொன்ன பின்தான் அறைகலன் பற்றிக்கூறி இருக்கிறீர்கள். இந்த சொல்லை நீங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை. இது நினைவுப் பிழை அல்ல ஒப்புக் கொள்ளல் பிழை. மிதமிஞ்சிய சமூக ஊடக உலாவிகளின் காய்ச்சல் உங்களுக்கும் தொற்றி விட்டது.
கிருஷ்ணன் ஈரோடு
*
நண்பர் கிருஷ்ணன் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார் நான் இப்போது பின்லாந்தில் Rovaniemi என்ற ஊரில் உறைநிலைக்கு கீழே 11 பாகை குளிர் சூழ இருக்கிறேன். மின்னஞ்சல்களைப் பார்க்க நேரமில்லை. அருஞ்சொல் பேட்டியை முழுசாக பார்க்க முடியவில்லை. அது நேர் உரையாடலாக தன்னியல்பாக நடந்தது. பேசிய விஷயங்கள் எனக்கு சரியாக நினைவிலும் இல்லை. ஆகவே வாட்ஸப்பிலும் மின்னஞ்சலிலுமாக நான் அறைக்கலன் என்ற வார்த்தையை உருவாக்கியதாக அப்பேட்டியில் நானே சொல்லியிருப்பதாக பலர் சொன்னபோது இருக்கலாம் என்று நானும் நினைத்தேன்.
கிருஷ்ணன் சொல்வது போல அது நினைவுப்பிழை அல்ல, ஏற்பு பிழை. இப்போது அந்தப் பேட்டியைப் பார்த்தால் அதில் நான் அச்சொல்லை உருவாக்கியதாக எங்குமே சொல்லவில்லை. மாறாக சீவகசிந்தாமணியிலிருந்து ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் பழைய மரபிலிருந்து ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் எடுத்து பயன்படுத்தியிருப்பதாகத்தான் அந்தப்பேட்டியில் சொல்லியிருக்கிறேன். மரபிலிருந்த சொல்லை மறுபடியும் புழக்கத்திற்கு கொண்டுவந்ததற்கு உதாரணமாக அச்சொற்களை சொல்லியிருக்கிறேனே ஒழிய அதை நான் உருவாக்கியதாக கூறவில்லை.
அப்படி என்றால் ஏன் முந்தைய குறிப்பில் அதை சொன்னேன். உண்மையில் சமூக வலைதளங்களில் உலவும் நாலைந்து நண்பர்கள், அதாவது என்மேல் நல்லெண்ணம் கொண்டவர்கள், எனக்கு மின்னஞ்சல் வழியாக அதை தெரிவித்தார்கள். நான் ஏன் அப்படி சொன்னேன் என்று கேட்டார்கள். ஆகவே ஒரு அவசர விளக்கமாக அதை எழுதினேன். இப்போது அந்த நண்பர்களை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு “நான் அப்படி சொல்லவே இல்லையே நீங்கள் எதை நம்பி என்னிடம் அப்படி கேட்டீர்கள்? நீங்கள் அந்தப்பேட்டியை முழுக்க பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர்களும் அந்தப்பேட்டியை முழுக்க பார்க்கவில்லை என்றார்கள். அவர்கள் அனைவருமே பெருமாள் முருகன் என்ற ஒரு நபர் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டவர், அவர் சொன்னதனால் நான் சொல்லியிருப்பேன் என்று நம்பியிருக்கிறார்கள். மற்ற திமுக அல்லக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
நான் சொன்னேன்…
“அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான் இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நபர் கூறியதை ஒட்டி எப்படி நீங்கள் இதை என்னிடம் கேட்கலாம்? ஓராண்டுக்கு இனிமேல் நாம் நண்பர்களாக இல்லாமல் இருப்போம். உங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்தபின் நாம் நண்பர்களாக இருப்போம்” என்றேன். அதன்பின் அவர்கள் மீண்டும் வருந்தி கடிதமிட்டார்கள். எப்போதுமே முதல்கட்ட சீற்றத்திற்கு பிறகு நண்பர்களிடம் இசைந்துவிடுவது எனது வழக்கம். சரிதான் விட்டுவிடுவோம். யாரோ எதையுமே படிக்கவோ எழுதவோ சிந்திக்கவோ தெரியாத ஒரு வெற்று அரசியல் கூட்டம் உருவாக்கும் ஓசைகள். அதற்காக நாம் நட்பை இழக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
சமூக ஊடக வெளியில் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் இந்த கும்பல் தன்னிச்சையாக கூடியதல்ல. இது ஓர் அரசியல் இயக்கத்தின் ஊடக அணி. எழுத்தாளர்களின் மேல் கட்சிகளின் ஊடக அணிகள் நடத்தும் இந்த அவதூறுத் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் அதைப்பற்றி சற்று விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது.
எண்ணிப்பாருங்கள், வெண்முரசு போன்று ஒரு பிரம்ம்மாண்டமான ஒரு படைப்பு இங்கே நிகழ்ந்திருக்கிறது. அது நிறைவுற்றபோது தமிழில் எந்த சமூக வலைதளம், எந்த இணைய ஊடகம் அதைப்பற்றி ஒரு வரி செய்தியாவது போட்டது? ஆனால் இவர்கள் உருவாக்கும் இந்த முற்றிலும் அடிப்படைகள் அற்ற அவதூறுக்கு பத்துக்கும் மேற்பட்ட இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தினமலர் நாளிதழ் உட்பட இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. எங்கு வரை கொண்டு சேர்க்க இவர்களால் இயல்கிறது! இந்த அவதூறை அவர்கள் சில லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்திருப்பார்கள். அவர்களிடம் பதில் சொல்ல நமக்கு ஊடகம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நாமாவது இதை தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். நமக்கு நாமேயாவது நிதானத்துடனும் தெளிவுடனும் இருந்தாகவேண்டும்.
வெண்முரசு நூல் ஒன்று – முதற்கனல் செம்பதிப்பு
வெண்முரசு நூல் எட்டு – காண்டீபம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் ஒன்பது – வெய்யோன் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பத்து – பன்னிரு படைக்களம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பதினொன்று – சொல்வளர்காடு செம்பதிப்பு
வெண்முரசு நூல் பன்னிரண்டு – கிராதம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பதின்மூன்று – மாமலர் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பதினான்கு – நீர்க்கோலம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் இருபது – கார்கடல் செம்பதிப்பு
வெண்முரசு நூல் இருபத்து மூன்று – நீர்ச்சுடர் செம்பதிப்பு
வெண்முரசு நூல் இருபத்து நான்கு – களிற்றியானை நிரை செம்பதிப்பு
இலக்கியமும் நவீன இலக்கியமும்
தமிழகத்து கோயில்களின் சடங்குகளைப்பற்றிய ஓர் உரையாடலில் குமரிமைந்தன் சொன்னார், ‘நான் நாத்திகன். ஆனால் கோயில் சடங்குகளை மாற்றக்கூடாது என்றே சொல்வேன். ஏனென்றால் அவை மாபெரும் பண்பாட்டு ஆவணங்கள். அவற்றில் நாம் இன்னும் அறிந்திராத தமிழ்ப்பண்பாட்டுத் தகவல்கள் உறைந்துள்ளன’
நான் அதைப்பற்றி மேலும் யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு பொருளை மதச்சடங்குக்கும், கோயில்வழிபாட்டுக்கும் பயன்படுத்துகிறோமா இல்லையா என்பது எவ்வளவு முக்கியமான தகவல்! உதாரணமாக கன்யாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 16 வகையான வாழைப்பழங்கள் பயிராகின்றன. ஆனால் ஒரே ஒரு பழத்தை மட்டுமே நாம் இறைவனுக்கு நிவேத்யமாக படைக்க முடியும். அது கதலிவாழைப்பழம். அதில் வெள்ளைக்கதலி ,ரசகதலி, செங்கதலி என மூன்று வகை உண்டு
சங்க காலத்தில் வாழைக்கு கதலி என்றுதான் பெயர். ஆம், சங்ககாலம் முதல் நம்மிடம் உள்ள வாழைப்பழம் அதுதான். ஆகவேதான் நம் தெய்வங்களுக்கு அவை பிரியமானவையாக உள்ளன. சடங்குகளை மாற்றக்கூடாது என்ற நம் மரபுசார்மனம் அந்தப்பழத்தின் தனியடையாளத்தை, அதன்மூலம் அந்த பழத்தின் வரலாற்றை இன்றுவரை பேணிவருகிறது.
மட்டிப்பழம், நேந்திரன் பழம், பேயன்பழம், பூவன்பழம், மொந்தன்பழம், சிங்ஙன்பழம் போன்ற பிற பழங்கள் அனைத்துமே கடந்த ஈராயிரம் வருடங்களில் நம்மிடம் வந்துசேர்ந்த பழங்கள் மட்டும்தான். வெறும் அறுபது வருடங்களுக்குள் வந்த பழம்தான் பச்சை நாடாப்பழம். நாம் அவற்றை ஏற்றுக்கொண்டு விட்டோம், நம் தெய்வங்கள் இன்னமும் ஏற்கவில்லை
பழங்களில் கொய்யாவும் ஆரஞ்சும் இன்னமும் கடவுள் அருகே செல்லவில்லை. ஆப்பிள் சொல்லவே வேண்டாம். காய்களில் வழுதுணை என்று சொல்லபப்டும் நீளமான பச்சைக்கத்தரிக்காய் நம்முடையது. ஊதாநிறமுள்ள குண்டு கத்தரிக்காய்கள் வரவு. ஆகவே அது சடங்குகளுக்கு உரியது அல்ல.
நமக்கு இலக்கியத்திலும் இத்தகைய ஒரு மானசீகமான பிரிவினை உள்ளது. நம்முடையது என சிலவற்றை நாம் பேணி வருகிறோம். பிற அனைத்தையும் பிறிது என தமிழன்னையின் கருவறைக்குப் புறத்தே தள்ளி வைத்துவிடுகிறோம். அந்த மனநிலையை ஒட்டுமொத்தமாக நான் குறைசொல்ல மாட்டேன். நம் அடையாளங்களும் தனித்தன்மையும் முக்கியமானவைதான். அவை பேணப்படவும் வேண்டும். நெடுங்கால செவ்வியல் மரபு உள்ள பண்பாடுகளில் இந்த மனநிலை உருவாகிவிடுகிறது ஆனால் அந்த மனநிலை நம்மை மாற்றங்கள் அற்றவர்களாக ஆக்கிவிடும். தேங்கச்செய்துவிடும்.
ஒரு பண்பாடு தன் மையத்தை நிலையானதாக வைத்துக்கொள்ளவும் , கூடவே அனைத்து பாதிப்புகளையும் ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றியமைத்துக்கொள்ளவும் ஒரே சமயம் முயலவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். இந்த இரு விசைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு அந்த முரணியக்கம் மூலமாக உருவாகும் வளர்ச்சியே ஆரோக்கியமானது. மையத்தை காக்கும் நிலைச்சக்தி இல்லையேல் அந்தப்பண்பாடு காலப்போக்கில் வெறும் எதிரொலிகளின் தொகுப்பாக மாறி மறையும். புதியன புகும் இயக்க விசை இல்லையேல் அப்பண்பாடு காலப்போக்கில் இறுகி அழியும்.
தமிழின் நல்லூழ் என்னவென்றால் எப்போதுமே இதில் இவ்விரு விசைகளும் தீவிரமாக இருந்துள்ளன என்பதே. சிலசமயம் நிலைச்சக்தியும் சில சமயம் செயல்சக்தியும் முன்னூக்கம் பெறுகின்றன. அதற்கேற்ப அந்தக்காலகட்டத்தின் இயல்பு அமைகிறது. நிலைச்சக்தி ஓங்கிய நாட்களில் இலக்கணங்கள் உருவாகின்றன. உரைநூல்களும் வழிநூல்களும் அதிகமாக வெளிவருகின்றன. செயல்சக்தி ஓங்கும்போது புத்திலக்கிய அலை கிளம்புகிறது.
தமிழிலக்கிய வரலாற்றை எடுத்துப்பார்த்தால் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளை நிலைச்சக்தி மேலோங்கிய காலம் எனலாம். இலக்கியம் தேங்கிக்கிடந்தது. புராணங்களும் சிற்றிலக்கியங்களும் எழுதப்பட்டன. அவை கோயில்களையும் சிறு மன்னர்களையும் சார்ந்து வாழ்ந்த கவிராயர்களால் அந்தச் சபைகளைச்சேர்ந்த சிலருக்காக உருவாக்கப்பட்டன. இந்தக் காலகட்டமே ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பெரிய அரசுகள் இல்லாமலாகி வறுமையும் பண்பாட்டுத்தேக்கமும் நிலவியகாலம்தான். தமிழகம் நிலப்பிரபுக்களின் பிடியில் இருந்தது.
அந்தத் தேக்க காலத்தில் இருந்து மிகுந்த வீச்சுடன் எழுந்த மாற்றத்தின் விசையையே நாம் சுப்ரமணிய பாரதி என்று சொல்கிறோம். பாரதியும் ஒரு கவிராயராக எட்டயபுரம் அரசரின் சபையில் இருந்தவர்தான். ஆனால் அந்த பதவியை உதறி அவர் சென்னைநகரின் இதழியல் உலகுக்கு வந்துசேர்ந்தார். அந்தப்பயணமே பண்டைய இலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் நோக்கிய நகர்வின் அழகிய குறியீடு. ஒன்று எட்டையபுரம், இன்னொன்று சென்னை!
பாரதியே தமிழ் நவீன இலக்கியத்தின் முக்கியமானபுள்ளி.தன் கவிதையை பாரதி நவகவிதை என்றே எப்போதும் சொல்கிறார். புதியன வேண்டும் என்ற குரலை நாம் பாரதியிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். ‘புத்தம்புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே… அத்தனையும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்’ என்ற அறைகூவலை அவனது கவிதைகளும் கட்டுரைகளும் எழுப்பிக்கொண்டே இருந்தன. பாரதியின் ஒட்டுமொத்த அறிவியக்கத்தையே புதுமைநாட்டம் என்று சொல்லலாம்
ஆகவேதான் பாரதி நவீன இலக்கியத்தின் எல்லா துறைகளிலும் புதிய அலை உருவாக முதற்புள்ளியாக அமைந்தான். தமிழின் நவீன உரைநடையின் தொடக்கம் அவனே. தமிழ் இதழியலும் அவனிடமிருந்தே ஆரம்பிக்கிறது. தமிழ்க்கலைச்சொல்லாக்கம் அவனால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்ச் சிறுகதையும் தமிழ் நாவலும் அவன் விதையிட்டவை. தமிழ்ப்புதுக்கவிதைக்கும் அவனே பிதா. பாரதி தொடங்கிவைத்ததே தமிழ் நவீன இலக்கியம்.
பாரதி எட்டயபுரம் ஜமீந்தாரில் இருந்து இதழியலுக்கு வந்தது என்பது மிகக்கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய பரிணாமம். கவிராயர்களின் புரவலர்கள் நிலக்கிழார்கள். அவர்களின் ரசிகர்களும் அவர்களே. ஆனால் நவீன இலக்கியத்தின் புரவலர்கள் வாசகர்கள் என்னும் ஒரு பெரும்கூட்டம். அதாவது பொதுமக்கள். அவர்களுக்காகவே நவீன இலக்கியம் எழுதப்பட்டது. பாரதியே அதை சொல்கிறான், நவீன இலக்கியத்திற்கு புரவாலர்கள் மக்கள்தான் என்று
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பழைய இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் மிக எளிதாக பிரித்துவிடலாம். பழைய இலக்கியம் அரசர்சபைகளை நோக்கி, சான்றோரை நோக்கி பேசுகிறது. நவீன இலக்கியம் மக்களை நோக்கிப் பேசுகிறது. பழைய இலக்கியம் நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தைச் சேர்ந்தது. நவீன இலக்கியம் ஜனநாயக காலகட்டத்தைச் சேர்ந்தது.பழைய இலக்கியம் மாறாத மதிப்பீடுகளை முன்வைக்கிறது புத்திலக்கியம் மாறும் காலத்தில் அவற்றின் இடமென்ன என்று பார்க்கிறது.
சின்ன சங்கரன் கதை என்ற நூல் பாரதியால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவை நாவல். முடிக்கப்படவில்லை. அதில் ஒரு ஜமீந்தாரின் சித்திரம் வருகிறது. அவர் ஊதிப்பெருத்துப்போன மனிதர். அவர் காலையில் குதிரைச்சவாரி மேற்கொண்டாகவேண்டும். ஏன் என்றால் அவர் மன்னர். ஆனால் இருப்பது ஒரே குதிரை. அதுவும் வயதான சோனிக்குதிரை. காலையில் அதை நிற்கச்செய்வதற்கு வேலைக்காரர் உதவிதேவை.
அது நான்கு கால்களில் நின்றதும் ஜமீந்தார் ஏறி அதன் மேல் அமர்கிறார். காலுக்கு ஒருவர் என வேலைக்காரர் நின்று ஜமீந்தாரை தாங்கிக்கொண்டு செல்கிறார்கள். அதாவது அந்தரத்திலே செல்லும் ஜமீந்தாருக்கு கீழே குதிரை ஒன்றும் அறியாமல் தள்ளாடிச் செல்கிறது. நிலப்பிரபுத்துவ காலகட்டங்களையும் அதன் ஆசாரங்களையும்தான் பாரதி கிண்டல் செய்கிறான். அதைசெத்த குதிரை என்று சொல்கிறான். செத்த காலத்தின் உப்பிப்போன அரசு அமைப்பு. அவன் அதிலிருந்து தப்பி தன் இடத்தை புத்திலக்கியச்சூழலில் கண்டுகொண்டிருந்தான்.
ஆகவே இவ்வாறு சொல்லலாம், எதற்காக நவீன இலக்கியம் பிறந்தது? ஏன் அது தேவையாகிறது? நவீன இலக்கியம் ஜனநாயக யுகத்தின் சிருஷ்டி. ஜனநாயகமே நவீன இலக்கியத்தை உருவாக்குகிறது. முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு கவிராயருக்கும் பாரதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கவனித்தாலே இது புரியும். கவிராயருக்கு எந்த அரசியலும் இல்லை. மக்களிடம் அவருக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லை. அவரது கடமை மன்னரிடம் மட்டுமே. அவரது அறம் என்பது மரபான அறம் மட்டுமே. அவர் மக்களுக்கு மனமகிழ்ச்சியூட்ட, ஆசியளிக்க எழுதுகிறார்.
ஆனால் பாரதிக்கு அரசியல் இருந்தது. அவன் ஒரு புரட்சியாளன். கிளர்ச்சியாளன். அவன் தன்னை மக்களை வழிநடத்துபவனாகவே எண்ணிக்கொண்டான். மக்களை மகிழ்விப்பவனாகவோ அல்லது ஆசியளிப்பவனாகவோ நினைக்கவில்லை. அவனது அறம் என்பது நவீன ஜனநாயக அறம் தான். தன் காலகட்டத்தின் ஒட்டுமொத்தமான பொறுப்பையும் அவன் எடுத்துக்கொள்கிறான். ‘சேரவாரும் ஜகத்தீரே’ என்று அழைக்கிறான். ‘இனியொரு விதிசெய்வோம்’ என்று அறைகூவல் விடுக்கிறான்.
ஆகவே பாரதி கவிராயர்களுக்கு மட்டுமே புரியும் கவிதை வடிவங்களை கைவிட்டுவிட்டு மக்களுக்குப் புரியும் சிந்து போன்ற வடிவங்களை கையாள்கிறான். ஒரு காவியம் எழுதும்போதுகூட சிறிது மொழிப்பயிற்சி உள்ள மக்கள்கூட எளிதில் கற்று இன்புறும் நூலாக அது இருக்கவேண்டும் என்று அவன் அக்கறைகொள்கிறான். நவீன இலக்கியத்தின் வடிவங்கள் அனைத்தும் இவ்வாறு நேரடியான வாசக உறவு மூலம் உருவானவை. மரபின் வடிவங்கள் நேற்றில் இருந்து வந்துசேர்பவை. நவீன இலக்கியத்தின் வடிவங்கள் நிகழ்காலத்தில் இருந்து உருவாகக்கூடியவை என்று சொல்லலாம்.
பாரதியைப் பார்த்தால் இன்னொரு விஷயம் தெரியும். ‘கலைச்செல்வங்கள் அனைத்தும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று அவன் கூவுகிறான்.’திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்கிறான். அவனுக்கு ஓர் உலகம்தழுவிய பார்வை இருந்தது. இலக்கியம் ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்’ பேசுவதாக இருக்கக் கூடாது என்றும் அது உலகுடன் உரையாடும் ஊடகமாக இருக்கவேண்டும் என்றும் அவன் நினைத்தான். இந்த உலகளாவிய நோக்கும் நவீன இலக்கியத்தின் அடிபப்டைகளில் முக்கியமானதாகும்.
நவீன இலக்கியத்திற்கும் பண்டைய இலக்கியத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இது. நவீன இலக்கியத்திற்கு ஓர் உலகப்பீடம் உள்ளது. தல்ஸ்தோயும் ஷெல்லியும் அமர்திருக்கும் பீடத்திலேயே பாரதியும் புதுமைப்பித்தனும் அமர்கிறார்கள். ஆனால் மாம்பழக்கவிசிங்கராயரின் பீடம் என்பது கம்பனும் கபிலனும் அமர்ந்திருப்பதுதான்.
ஜனநாயகம், உலகளாவிய நோக்கு ஆகிய இரண்டும் நவீனத்துவத்தின் இரு முக அடையாளங்கள். இவ்விரு கூறுகள் இலக்கியத்தில் செயல்படும்போதே அந்த இலக்கியம் நவீன இலக்கியமாகிறது. தமிழில் பாரதி அந்த மாற்றத்தை உருவாக்கினான்.
ஜெர்மனிய பெரும்கவிஞரான கதே உலகம் முழுக்க உள்ள இலக்கியம் ஒந்றே என்ற நோக்கில் உலக இலக்கியம் என்ற சொல்லை கையாண்டார். அதன்பின் இலக்கியத்தை அதன் இட கால அடையாளங்களை மீறிச்சென்று உலக இலக்கியமாக அணுகும்போக்கு ஐரோப்பிய்ச்சூழலில் உருவாகியது. உலகையே ஒன்றாக முயன்ற காலனியாதிக்கமும் அந்த மனநிலைக்கு உதவியது.
காலனியாதிக்கத்தின் விளைவாக உலகமொழிகளில் இருந்து ஆக்கங்கள் பிரெஞ்சு ஆங்கில மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. அம்மொழிகளில் உலக இலக்கியம் ஒரே பெரும் அமைப்பாக கிடைக்க ஆரம்பித்தது. அம்மொழிகளைக் கற்றவர்களுக்கு உலக இலக்கியம் என்ற போதம் எளிதில் உருவானது. அம்மொழிகளை அறியாதவர்களிடம் அந்த பிரக்ஞ்ஞையே இல்லாத நிலை இருந்தது. இன்றும் அந்நிலை தொடர்கிறது.
யோசித்துப்பாருங்கள் பாரதிக்கு முந்தைய எந்தக் கவிஞனுக்கும் உலக இலக்கியம் என்ற எண்ணமே இல்லை. தான் எழுதுவது உலக இலக்கியத்தின் பெரும்பரப்பில் அமைகிறது என்ற பிரக்ஞையுடன் எழுதிய முதல்படைப்பாளி பாரதி. உலக இலக்கியப் பிரக்ஞையே இலக்கியவாதியை நவீன இலக்கியவாதி ஆக்குகிறது. அது எளிதில் ஒருவனை தன் குறுகிய எல்லைகளில் இருந்து விடுதலை கொள்ளச் செய்கிறது.
காலனியாதிக்கம் மூலம் பொதுவான கல்வி உலகம் முழுக்க பரவியபோது ஜனநாயகக்கோரிக்கைகள் உலகமெங்கும் உருவாயின. அந்த இரு அம்சங்களும் இணைந்தே நவீன இலக்கியம் பிறந்தது. அதற்கு ஐரோப்பிய இலக்கியங்கள் முன்னுதாரணங்களாக அமைந்தன. பாரதிக்கும்கூட ஷெல்லி மிகப்பெரிய முன்னுதாரணமாக அமைந்தான். மானுட உரிமைக்கும் சமத்துவத்துக்கும் அறைகூவும் போராளியாக கவிஞனின் ஆளுமை மாறுவதை நாம் ஷெல்லியில் காண்கிறோம். நவ கவிஞன் என்ற வடிவத்தின் முதல்பெரும் சிலை அவன். பாரதி நமது ஷெல்லி.
இவ்வாறுதான் தமிழில் நவீன இலக்கியம் உருவானது. அதன்பின் நாம் சொல்லும் முக்கியமான பெயர் புதுமைப்பித்தன். பெயரே சொல்வது போல அவ்ர் புதுமைக்காக நிலைகொண்டவர். அந்த துடிப்பே அவரது எழுத்து. இன்றைய நவீன இலக்கியத்தின் மாபெரும் முன்னோடி அவர். இன்று நாம் எழுதும் எல்லா இலக்கிய வகைகளிலும் புதுமைப்பித்தன் வெற்றிகரமாக முதல்முயற்சி செய்திருக்கிறார். புராணங்களை மறு உருவாக்கம் செய்வது, யதார்த்தவாதக் கதை, உருவகக்கதை, பேய்க்கதை, துப்பறியும் கதை, மையமற்ற கதை, நேர்கொட்டுத்தன்மை இல்லாத கதை என அவர் முயலாத கதை வடிவங்களே இல்லை.
பாரதியும் புதுமைப்பித்தனும் நவீன இலக்கியத்தின் இரு மூதாதையர். அதன் பின் ஒரு பெரும் தொடர்ச்சி நமக்குண்டு. கு.ப.ராஜகோபாலன், லா.ச.ராமாமிர்தம்,க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்,ப.சிங்காரம்…இன்று வரை அந்த மரபு தொடர்கிறது
இவர்களில் பாரதியும் புதுமைப்பித்தனும் மரபை அறிந்து அதையும் உள்வாங்கி எழுதிய நவீன படைப்பாளிகள். சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் மரபில் இருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியவர்கள். இவர்கள் அனைவரிடமும் ஓங்கிநிற்பது மாற்றத்துக்கான புதுமைக்கான விழைவே.
ஆம், நவீன இலக்கியம் நமக்கு ‘வந்துசேர்ந்த’ ஒன்றுதான். அது புதுமைநாடுவதை தன் ஆதார இயல்பாகக் கொண்டது. ஆகவே மாற்றத்தையே அது விரும்புகிறது. மரபில் இருந்து தன் வடிவத்தை எடுத்துக்கொள்வதை விட்டுவிட்டு அது சமகாலத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறது. அது தன்னை உலகளாவிய ஒரு போக்கின் பிரதிநிதியாக நிறுத்திக்கொள்கிறது. அது ஜனநாயகத்தின் இலக்கிய வடிவம். ஆகவே அது இன்றைய இலக்கியம்.
மரபான இலக்கியவாதிகள் இன்றும் மன்னர்களை நோக்கியே பாடுகிறார்கள். மகிழ்விக்கவே இலக்கியம் படைக்கிறார்கள் என்பதைக் காணலாம். பரிசில் கோரி பாடிய அந்த சங்ககாலக் குரலையே இன்றும் நாம் மேடைதோறும் பார்க்கிறோம். ஐயா நீர்தான் இமையமலைக்கே உயரத்தை கற்பித்தவர் என்று பரங்கிமலை பாண்டித்துரையைப்பற்றி பாட அவர்களுக்கு கூச்சமே இல்லை. அவர்கள் பாடும் சொற்களில் பெரும்பகுதி இச்சகம்பேசுதலே
ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்கள் நம் நிலப்பிரபுத்துவ மரபை சேர்ந்தவர்களாக இருப்பதனால் அவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் போல் இருக்கிறார்கள். ஆகவே நாம் அவர்களை உடனேஏற்றுக்கொள்கிறோம். அவர்களை நம்முடைய கவிஞர்களாக எண்ண ஆரம்பிக்கிறோம். ஒரு தனிமனிதன் முகஸ்துதி செய்தால் நமக்கு கூச்சமாக இருக்கிறது, கவிஞன் செய்தால் அது அவனுடைய தொழில்தானே என்று நினைத்துக்கொள்கிறோம். பெண்ணின் கையைப்பிடித்து இழுப்பது தப்பு, ஆனால் வளையல்விற்பவனின் தொழிலே அதுதானே,இல்லையா?.
அத்துடன் மரபான இலக்கியவாதிகளை போலிசெய்யும் வணிக இலக்கியவாதிகளையும் நாம் எளிதில் ஏற்றுக்கொள்கிறோம். எதனால் நாம் ஒரு மேலோட்டமான வணிக இலக்கியத்தை இலக்கியம் என ஏற்கிறோம் என்று பார்த்தால் ஒன்று தெரியும், அது நம் மரபின் கலைச்செல்வங்களை எளிமையாக திருப்பிச் சொல்லியிருக்கும் என்று. அதாவது அது ஒரு போலித்தங்கம். ஒரு கல்யாண புரோக்கர் சொன்னாராம் பையன் கலெக்டர் என்று. பிடிபட்டதும் அவர் வாதாடினார், டிக்கெட் கலெட்க்ராக இருந்தாலும் கலெக்டர் கலெக்டர்தானே?
எங்கே நவீன இலக்கியம் மரபிலக்கியத்தை சரியாக சமன் செய்யவில்லையோ, எங்கே மக்கள் நவீன இலக்கியத்தை புறக்கணித்து மரபை மட்டுமே போற்றுகிறார்களோ அங்கே போலிமரபிலக்கியம் உருவாகும். அது நவீன இலக்கியத்துக்குப் பதிலாக கொண்டாடப்படும். தமிழில் நிகழ்வது அதுவே.
வணிக இலக்கியவாதி நமக்கு பிடித்ததைச் சொல்கிறான். அவன் ஒரு விற்பனையாளன். கோல்கேட் மாதிரி. நாம் கொஞ்சபேர் நமக்கு கடுக்காய் ருசியிலே பற்பசை வேண்டுமென்றால் உடனே கொண்டுவந்துவிடுவார்கள். என்ன தேவை சொல்லுங்கள் என நம் வாசல்முன் நிற்கிறான் வியாபாரி. ஞானம் அப்படி வந்து நிற்காது. அதை நாம் தேடிச்செல்லவேண்டும். அது எப்படி இருக்கிரதோ அப்படி அதை ஏற்க பழகவேண்டும்
நவீன இலக்கியவாதி நம்மை சீண்டுகிரான். நம் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் மாற்றிக்கொள்ளச் சொல்லி நம்மை அறைகூவுகிறான். அவனை நம்மால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆகவே அவனை நாம் பலசமயம் புறக்கணிக்க விரும்புகிறோம். புரியவில்லை என்று சொல்லிவிடுகிறோம். நவீன இலக்கியவாதியை அடக்கம் இல்லாதவன் என்றும் கிறுக்கு என்றும் சொல்லிவிடுகிறோம்.
ஒருமுறை சுந்தர ராமசாமியிடம் கேட்டேன், வணிக எழுத்தாளர்கள் எழுத்தாளர் மாதிரி தோன்றுகிறார்கள். ஜிப்பா போடுகிரார்கள். நீண்ட மயிர் வைத்துக்கொள்கிறார்கள். கழுத்திலே ஆணி போட்டு இறுக்கியதுபோல விரைப்பாக இருக்கிறார்கள். வயகாரா விளம்பர மாடல் போல கம்பீரமாக எந்நேரமும் இருக்கிறார்கள். ஏன் நவீன இலக்கியவாதி அப்படி இருப்பதில்லை?
சுந்தர ராமசாமி சொனனர் ‘அது வேஷம். சட்டையை கழட்டிவிட்டால் அந்த ஆசாமிகள் சாதாரண லௌகீக ஆசாமிகளாக ஆகிவிடுவார்கள். ஆனால் நவீன இலக்கியவாதி ரோட்டிலே நடந்துபோனால் தெரியும் அவன் வேறு ஆள் என்று. கத்தரிக்காயை போட்டுக் கட்டிவைத்த மூட்டைக்கும் பூனையை போட்டு கட்டி வைத்த மூட்டைக்கும் உள்ள வேறுபாடுதான். நவீன இலக்கியவாதிக்குள் ஏதோ ஒன்று நிமிண்டிக்கொண்டே இருக்கிரது… அதுதான் அவனை எழுதச்செய்கிறது”
அதை மாற்றத்துக்கான துடிப்பு என்பேன். ஒரு செடியில் தளிரின் நுனியில் மட்டுமே அதன் உயிர்விசை உச்சத்தில் இருக்கிறது. வளர் வளர் என அந்தச்செடி அதனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்த சுருள் காற்றில் ஆடுகிறது. தவிக்கிரது. எது கிடைத்தாலும் பற்றிக்கொண்டு மேலே எழுகிறது. அதுதான் நவீன இலக்கியம். அது ஒருசமூகத்தின் வளர்ச்சி நுனி. அது தீயின் நாக்கு. அது உலகையே உண்ண விரும்புகிறது . அது பாம்பின் இருநாக்கு. அதன் கண்ணும் காதும் மூக்கும் அதுவே.
நாம் வளர வேண்டுமென்றால், இன்றைய ஜனநாயக யுகத்தின் ஆதாரமாகிய பண்புகள் நம்முள் உருவாகவேண்டும் என்றால் நவீன இலக்கியம் அன்றிவேறு வழி இல்லை. நவீன இலக்கியம் வலுவாக இல்லாத மொழியில் ஜனநாயகம் காலப்போக்கில் அழியும். ஜனநாயகம் இல்லாத நாட்டில் காலப்போக்கில் நவீன இலக்கியமும் அழியும். இரண்டும் ஒன்றுடன் ஒன்றுதொடர்புள்ளவை. ஆரோக்கியமான சமூகம் தன் மரபை அழியவிடாது பேணிக்கொள்ளும். நவீன இலக்கியத்தை எல்லா திசைகளில் இருந்தும் அள்ளிக்கொள்ளும்
நாம் கருவறையில் வைத்து கும்பிடுவதற்கு மரபை வைத்துக்கொள்வோம்.. கதலிப்பழம் நம்மிடம் இருக்கட்டும் வழிபாட்டுக்காக. ஆனால் கோயில் பிரசாதத்தை மட்டுமே உண்டோம் என்றால் ரத்தசோகை பிடித்து அழிவோம். நமக்கு விதவிதமான உணவுகள் தேவை. அவை உலகமெங்கும் இருந்து வரட்டும். அவற்றில் இருந்து நாம் நமது உணவை உருவாக்குவோம். அதுவே நம்மை வல்லமை மிக்கவர்களாக ஆக்கும்
மரபும் நவீனமும் சந்திக்கும் ஆரோக்கியமான புள்ளியில் நிகழட்டும் நமது இன்றைய இலக்கியம்
நன்றி
[07.-09-10 அன்று பினாங்கு சுல்தான் அப்துல் அலீம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் நடத்திய உரை]
முதற்பிரசுரம் Sep 11, 2010/மறுபிரசுரம்
ஜெயமோகன் நூல்கள் வாசிப்பின் வழிகள் வாங்க வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க வணிக இலக்கியம் வாங்கவணிக இலக்கியம் மின்னூல் வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்கபொன்னி
பொன்னி இதழ் பாரதிதாசனை முன்வைக்கும்பொருட்டே உருவான தமிழ் வெளியீடு. ’பாரதிதாசன் கவிதைகளையும் அவர் இலக்கியச் சிறப்பையும் தமிழுலகத்தில் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆரம்ப முதலே பாவேந்தரின் கவிதையை ஒவ்வோர் இதழிலும் வெளியிட்டு வந்தோம்’ என்று அவ்விதழின் ஆசிரியர்களில் ஒருவரான முருகு சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். நாரா. நாச்சியப்பன், மு. அண்ணாமலை ஆகிய இருவரும் முருகு சுப்ரமணியனுக்கு உதவினர்.
பொன்னி இதழ்
பொன்னி – தமிழ் விக்கி
கலைச்சொல்
அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.
இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும் புழங்குவதாக உள்ளன. அறைக்கலன் என்ற சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும் பார்க்க முடியும்.
நன்று, அகராதியில் அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன். அதனால் வெண்முரசு தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம் புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன என்பதோ சென்ற நூறாண்டுகளில் எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.
அச்சொல்லை பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ் மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.
வெண்முரசு நூல் ஒன்று – முதற்கனல் செம்பதிப்பு
வெண்முரசு நூல் எட்டு – காண்டீபம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் ஒன்பது – வெய்யோன் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பத்து – பன்னிரு படைக்களம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பதினொன்று – சொல்வளர்காடு செம்பதிப்பு
வெண்முரசு நூல் பன்னிரண்டு – கிராதம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பதின்மூன்று – மாமலர் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பதினான்கு – நீர்க்கோலம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் இருபது – கார்கடல் செம்பதிப்பு
வெண்முரசு நூல் இருபத்து மூன்று – நீர்ச்சுடர் செம்பதிப்பு
வெண்முரசு நூல் இருபத்து நான்கு – களிற்றியானை நிரை செம்பதிப்பு
யன்மே மாதாவும் ரேணுகா அன்னையும் -ராஜமாணிக்கம்
ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்
அன்புள்ள அண்ணா,
யன்மே மாதா கட்டுரையில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் வெண்முரசில் மீள மீள சொல்லப்பட்டு வந்திருப்பதை படித்தவுடன் உணர்ந்தேன். இந்து தர்ம வாழ்வியலில் நீடித்த அற வாழ்க்கை முறை (சனாதான தர்மம்) காட்டும் வழி அதுவே என்றும் உணர்கிறேன். அதோடு பழங்குடி ஞான விவேகம் இந்து பண்பாட்டின் அடிச்சரடாய் இருப்பதையும் வணக்கத்தோடு உணர்ந்தேன்.கலை ஆரண்யகங்களான எல்லோரா, அஜெந்தா, எலிபெண்டா, உள்ளிட்ட கலை, தத்துவ பள்ளிகளை காணச்சென்றதன் தொடர்ச்சியாக மாஹீர் ரேணுகா மாதா வின் ஆலயத்திற்கும், சென்றிருந்தேன். அங்கு அன்னையின் பாதத்தில் அமர்ந்து யன்மே மாதா என்று மனதில் தோன்றியவுடன் கண்ணீரோடு மெய்ப்பு கொண்டு அமர்ந்திருந்தேன். நித்ய சுமங்கலியான கோடிக்கணக்கான அன்னைகளுக்கு எள்ளும் நீரும் கொடுத்து பலி அன்னம் மானசீகமாக கொடுத்தேன். யன்மே மாதா கட்டுரையில் நீங்கள் சுட்டி இருந்த பண்பாட்டு மாற்றம் திரெளபதி கால கட்டத்தில் நிகழ்ந்ததாக சொல்லி இருந்தீர்கள். எனக்கு மழைப்பாடலில் ரேணுகா அன்னை, அனுஷியா, தத்தாத்ரேயர் தொன்ம காலத்திலேயே இந்த மாற்றம் வந்து விட்டதா என்று தோன்றியது.
வண்ணக்கடலின் நெற்குவை நகர் பகுதியில் பரசுராமரை தேடி செல்லும் துரோணர் தெற்கே தண்டகாரண்யம், விந்தியத்தில் பரசுராம ஆசிரமம் இருப்பதை தேடி கண்டடையும் இடத்தை படித்தது போலவே தான் இன்றும் இருக்கிறது. ரேணுகா அன்னை ஆலயம், பரசுராமர் மீண்டெழும் குளம், அனுஷியா அன்னை ஆலயம், தத்தாத்ரேயர் ஆலயம். நீண்ட காலமாக ஆண்ட தேவகிரி யாதவ அரசர்களின் அரண்மனை மிச்சங்கள். மந்தையாக செல்லும் கால் நடைகள் என்று மாஹீர் பகுதியே வரலாற்றில் உறைந்து இருக்கிறது. நான் பிரத்யட்சமாகவே வெண்முரசின் வண்ணக்கடல் காலத்தில் உலாவி வந்தேன்.
ரேணுகா அன்னையே எல்லம்மா என்றும் ஏக வீரம்மா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார் என உணர்ந்து கொண்டேன். மூதன்னையை வழிபடும் போது தான் பார்த்தேன். அன்னை உருவம் ஒரு கல்பதிட்டை என்று, மற்ற மூதன்னையும் தொல் பழங்கால கல் ப்ரதிஷ்டையே, மென்ஹிரின் மேல் பரப்பாகவும் இருக்க சாத்தியமான வழிபாட்டு வடிவம். தொல்குடி மூதாதை வழிபாடு மூதன்னையர் வழிபாடு எல்லாம் எவ்வளவு நெடுங்காலமாக நம்மை தொடர்ந்து வருகிறது . கிமு 2 ஆம் நூற்றாண்டு பெளத்த விஹாரமும், சைத்யமும் இருக்கும் கார்லே குகைகளுக்கு அருகிலும் ஏக வீரம்மா ஆலயம் இருந்ததை பார்த்தோம். அந்த அன்னையும் இப்படி ஒரு நெடுங்கல் வழிபாடாகவே , சுயம்பு வடிவாக வழிபாடு செய்யப்படுவதையும் பார்த்தேன். நடுகல், கல்வட்ட, கல் பதிஷ்ட்டை , கல் ஆயுதங்கள் வழிபாடு எல்லாம் நம்மோடு நம் தொல்மூதாதையரை பிணைக்கும் முக்கிய இணைப்பு சரடாக கால, தேச வர்த்தமானங்களுக்கு அப்பால் இன்றும் இருந்து வருகிறதா? இவை எல்லாம் நம் அறிதலுக்கு அப்பால் ஏன் உள்ளது. ? இந்து பண்பாட்டின் , இந்து ஞானத்தின் முக்கியமானமான இந்த தொல்குடி வழிபாட்டு முறை பற்றி நம் ஸ்ருதிகளிலும், ஸ்மிருதிகளிலும் எதேனும் குறிப்போ, தொடர்ச்சியோ இருக்கிறதா?
அன்புடன்
ராஜமாணிக்கம்
கவிதைகள் நவம்பர் இதழ்
லட்சுமி மணிவண்ணன்அன்புள்ள ஜெ,
நவம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் தேவதச்சன், தேவதேவன், இசை, இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் குறித்து கவிஞர் லட்சுமி மணிவண்ணன், பார்கவி, ஜெகதீஷ் குமார், வி. வெங்கட பிரசாத் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ‘கவிதைகளில் நான்‘ என்ற தலைப்பில் கடலூர் சீனு எழுதிய கட்டுரையும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.
நன்றி,
ஆசிரியர் குழு.
குமரித்துறைவி, கடிதங்கள்
அன்புள்ள ஜெ
குமரித்துறைவி குறுநாவலை ஒரே மூச்சில் வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். அற்புதமான ஒரு அனுபவம். அதை என்னால் சொல்லிவிட முடியாது. ஒரு தெய்வீகக் கல்யாணம். கல்யாணமே தெய்விகமானதுதான். ஏனென்றால் அதிலே சம்பந்தமில்லாத இருவர் விதியால் இணைக்கப்படுகிறார்கள். இது விதியை ஆட்சிசெய்யும் சக்தியும் சிவமும் செய்துகொள்ளும் திருமணம். சிவசக்தி லயம் இது. அவ்வளவு அழகான கதை. அதற்குமேல் சொல்லத்தெரியவில்லை.
எம். திருமகள்
*
அன்புள்ள ஜெ
குமரித்துறைவி நாவல் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. எனக்குத்தெரிந்த அனைவரிடமும் அதைப்பற்றிச் சொல்கிறேன். விலைகொடுத்து வாங்கி தேவைப்படுபவர்களுக்குக் கொடுங்கள் என்று சொல்கிறேன். பரிசாகக்கொடுக்க தமிழிலேயே நல்ல புத்தகம் சங்கசித்திரங்கள்தான் என்று சொல்லிவந்தேன். இப்போது இந்நூலைச் சொல்வேன். இது ஒரு அற்புதமான கதை மட்டுமல்ல. நம் பண்பாட்டின் சித்திரமும்கூட
ஜானகி கிருஷ்ணன்
November 15, 2022
பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-2
பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல் – 1
பௌத்தம் மீண்டும் இந்தியாவில் தழைக்க முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன? தடைகள் என்ன?
முதன்மையாக பௌத்தம் இந்தியாவில் மறுபடியும் தழைக்குமென்றால் அது ஓர் இந்திய மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். பௌத்தம் இந்தியாவுக்கு ஊழின் பெருங்கொடை. அது நிலைகொள்ளவேண்டும், பெருகவேண்டும்.
உலகமெங்கும் பௌத்தத்தின் வளர்ச்சி எவ்வகையில் எல்லாம் நிகழ்கிறது என்று பார்ப்பது இந்த விவாதத்திற்கு உதவும்
பௌத்தம் நான்கு வகைகளில் உலகமெங்கும் செயல்படுகிறது. முதல்வகை மரபார்ந்தது. இரண்டாவது வகை சீர்திருத்த பௌத்தம். மூன்றாவது வகை அரசியல் பௌத்தம். நான்காவது வகை தத்துவார்த்தமான பௌத்தம்.
மரபார்ந்த பௌத்தம், பௌத்த மத அமைப்புகள் வழியாக செயல்படுவது. இன்று உலகளாவிய தளத்தில் தாய்லாந்தின் பௌத்தமரபு வலுவாக உள்ளது. திபெத்தின் கெலுக்பா பௌத்த மரபு தலாய் லாமாவால் உலகளாவிய ஓர் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. அதன் கிளைகள் எல்லாமே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இலங்கை பௌத்தத்தின் அமைப்புகள் அரசியல்மயமாகி தேக்கநிலையில் உள்ளன. ஜப்பானிய பௌத்த மடாலயங்கள் பெரும்பாலும் செயலற்ற நிலையிலேயே உள்ளன.
மரபான பௌத்த்ததிற்கு இந்தியாவில் தொடர்ச்சி அறுபட்டுவிட்டது. ஆகவே அதை மீட்க இயலாது. இந்தியாவில் இன்று தாய்லாந்து, திபெத் பௌத்த அமைப்புகள் நன்றாகச் செயல்படுகின்றன. அவை இந்தியாவில் வலுப்பெறலாம்.
ஆனால் மரபான பௌத்தம் நீண்டகால வரலாற்றுப்பின்புலம் காரணமாக கூடவே இனஅடையாளத்தையும் கொண்டுள்ளது. தாய்லாந்து, திபெத் பௌத்த மரபுகள் வேற்றினத்தவருக்கு இயல்பான உள்நுழைவை, இடத்தை அளிப்பவையாக இல்லை. அவ்வாறு அவை மாறக்கூடுமென்றால், அவற்றை முன்னெடுத்துச்செல்ல தலாய் லாமா போன்ற மாபெரும் ஆளுமைகள் உருவாகக்கூடும் என்றால் இந்தியாவில் அவை வேரூன்றி வளரலாம். அது ஒரு வாய்ப்பு.
அநகாரிக தம்மபாலாசீர்திருத்த பௌத்தம் என்று சொல்லப்படும் பௌத்தம் அயோத்திதாசர் முதலியவர்களால் முன்வைக்கப்பட்டது. அது பலவகையான தொடக்கமுயற்சிகளாக தேங்கிவிட்டது. அவை இந்தியாவில் முன்னெடுக்கப்படலாம். அவ்வகை பௌத்தமரபு இங்கே மேலோங்குவதற்கு சில அடிப்படைத் தேவைகள் உள்ளன. முதன்மையாக, மரபார்ந்த பௌத்த படிமங்களும் ஆசாரங்களும் முழுமையாக மறுவிளக்கம் அளிக்கப்பட்டு நிறுவப்படவேண்டும். அதைச்செய்ய ஓரிரு தலைமுறைக்காலம் தொடர்ச்சியாகச் செயல்படும் அமைப்புகளும், அவற்றில் வலுவான சிந்தனையாளர்களும் ஆளுமைகளும் தேவை.
அரசியல் பௌத்தம் அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டது. அதன் எல்லைகள் கண்கூடானவை. மதத்தை அரசியலின் பொருட்டு முன்வைத்தால், அந்த அரசியல் எந்த வகையான உயர்நோக்கம் கொண்டது என்றாலும், அந்த மதம் அரசியலின் ஒரு துணைக்கருவியாக சூம்பி நிலைகொள்ளுமே ஒழிய வளராது. அந்த அரசியலையும் அது வளர்க்காது. மகாராஷ்டிரத்தில் பயணம் செய்யும்போது அம்பேத்கர் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பல சிறு பௌத்த ஆலயங்களை பார்ப்பதுண்டு. அவற்றுக்கு நிலையான கட்டிடமெல்லாம்கூட இருக்கும். ஆனால் வருகையாளர்கள் இல்லாமல் கைவிடப்பட்டு, பாழடைந்தே கிடக்கும். அவ்வாறு பலவற்றை பயணங்களில் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.
அந்நிலை ஏன் வருகிறது? அரசியலை விட மதம்தானே ஆழமானது? மக்கள் பங்கேற்பு உள்ளது? அவ்வாறு மதம் நிலைகொள்ளவேண்டும் என்றால் மதம் அதன் அடிப்படை நோக்கங்கள், இயல்புகளுடன் முன்வைக்கப்படவேண்டும். மதம் ஒருவகை அரசியலாக முன்வைக்கப்படலாகாது. எந்த மதமும் அடிப்படையில் அதன் நம்பிக்கையாளனுக்கு வாக்களிப்பது ஆன்மிக அறிதலையும், ஆன்மிகமான மீட்பையும்தான். எளிய மக்களுக்கு மதத்தில் இருந்து கிடைக்கவேண்டியது வேண்டிக்கொள்ள சில தெய்வங்கள். அதையும் மதம் அளிக்கவேண்டும்.
அம்பேத்கரின் நவயான பௌத்தம் அரசியல்சார்ந்த எதிர்ப்பாக முன்வைக்கப்பட்டது. அம்பேத்கரின் நோக்கங்கள் ஆன்மிகமான, தத்துவார்த்தமான, அறவியல் சார்ந்த ஒரு மதத்தை உருவாக்குவது என அவருடைய பௌத்தமும் அவருடைய தம்மமும் என்னும் நூல் காட்டுகிறது. ஆனால் அதற்கான வாழ்நாள் அவருக்கு அமையவில்லை. அவருக்குப்பின் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் அறிவுத்தகுதியின் ஆன்மிகத்தகுதியும் கொண்ட வழித்தோன்றல்கள் அவருக்கு அமையவில்லை. ஆகவே ஓர் அரசியலியக்கமாகவே நவயானம் நின்றுவிட்டிருக்கிறது. அது தன்னை ஒரு சீர்திருத்த பௌத்தமாக இங்கே முன்வைக்கும் என்றால் நிலைகொள்ளவும் பரவவும்கூடும்.
தலாய் லாமாஎந்த மதமும் நேர்நிலையான மனநிலையை உருவாக்குவதன் வழியாகவே நிலைகொள்ள முடியும். உலகியலில் துயருற்று உழலும் மனிதர்கள் அமைதி. நிலைபேறு நாடியே அதற்கு வருகிறார்கள். அங்கேயும் சழக்கும் பூசலும் என்றால் அவர்கள் அதை நாடமாட்டார்கள். மதச்சழக்கும் பூசலும் மதங்களை தங்கள் ‘தரப்பு’ என எடுத்துக்கொள்ளும் மிகச்சிறுபான்மையினருக்கு உரியவை. ஆகவே சீர்திருத்த பௌத்தமோ, நவயான பௌத்தமோ பூசலிடுபவர்களால் உருவாக்கப்பட இயலாதவை. மெய்யறிவர்களால் நிலைநிறுத்தப்படுபவை.
ஆகவே இங்கே இன்று வெவ்வேறு அரசியல்கோணங்களில், ஆய்வுக்கோணங்களில் முன்வைக்கப்படும் பௌத்தம் சார்ந்த பேச்சுக்களால் எப்பயனும் இல்லை. அவையனைத்துமே எதிர்வினைகளும் எதிர்ப்புகளும்தான். அவற்றை முன்வைப்பவர்களுக்கு மெய்யியலோ, தத்துவமோ முக்கியமும் அல்ல. அவர்களால் பௌத்தமென எதையும் உருவாக்க, நிலைநிறுத்த இயலாது. பௌத்தம் நிலைகொள்ளவேண்டும் என்றால் பௌத்தம் வழியாக தன் மீட்பை தேடும், அடைந்து முன்வைக்கும் மதஞானிகள், மத அறிஞர்களே தேவையானவர்கள்.
இன்னொரு பக்கம், புத்தரை தங்கள் அரசியலுக்கேற்றபடிச் சுருக்குபவர்கள் உண்மையில் பௌத்தத்திற்கு எதிரானவர்கள். அவரை எளிய நாத்திகராக மட்டுமே பார்ப்பவர்கள், வெறும் எதிர்ப்பரசியலின் ஆளுமையாக எண்ணுபவர்கள் இங்கே பௌத்தம் உருவாவதற்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து விலகி, மெய்ஞானத்தின் விடுதலையை முன்வைத்தாலொழிய பௌத்தம் நிலைகொள்ள முடியாது. புத்தரை ஒரு சிறு அரசியல்குறியீடாக ஆக்குவதனால் பௌத்தம் சிறுமைப்படுகிறது. பௌத்தம் வாக்களிக்கும் மெய்ஞானத்தையும் விடுதலையையும் பொருட்படுத்தாதவர்களுக்கு பௌத்ததில் என்ன இடமிருக்கமுடியும்?
உண்மையில் அநகாரிக தம்மபாலாவின் பெருங்குறைபாடே அவருடைய ‘எதிர்ப்பு’தான். அவர் மரபான பௌத்ததின் தேக்கநிலையை எதிர்க்கும் விசைகொண்டிருந்தார். ஆனால் அந்த எதிர்நிலையே பேரறிஞராக இருந்தும் அவரை கசப்பும் காழ்ப்பும் கொண்டவராக ஆக்கியது. ஆன்மிகமாக எதையும் அடையாதவராகவும், எதையும் அளிக்காதவராகவும் ஆனார். அவர் எந்த ஆன்மிக இயக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. அவருடைய பங்களிப்பு முழுக்கமுழுக்க அரசியலுக்காகவே இன்று அடையாளம் காணப்படுகிறது. சொல்லப்போனால் சிங்கள இனவாதத்தின் தந்தையாகவே அவர் இன்று அறியப்படுகிறார்.
சீர்திருத்த பௌத்தம் நிலைகொள்ளவேண்டும் என்றால் அதற்குச் சில இன்றியமையாத தேவைகள் உள்ளன.
அ. வலுவான மத அமைப்பு. நிதிப்பின்புலமும், மையநிர்வாகமும் கொண்ட மத அமைப்பு இன்று சீர்திருத்த மதங்கள் அனைத்துக்கும் இன்றியமையாதது. தலாய் லாமாவின் பௌத்த மதப்பிரிவை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். ஊர்கள் தோறும் பௌத்தத்தின் கிளைகள் அமையவேண்டும். அவை மையக்கட்டுப்பாடும் கொண்டிருக்கவேண்டும்
ஆ. வலுவான மதக்கல்வியும் மதப்பிரச்சாரகர்களும். பௌத்த சங்கங்கள் பௌத்த தத்துவம் மற்றும் பௌத்த மெய்யியலில் பயிற்சியை அளிக்கவேண்டும். அங்கே பயிற்சிபெறும் பிரச்சாரகர்கள் நாடெங்கும் சென்றபடியே இருக்கவேண்டும். அவர்கள் மதக்கிளைகளை நிறுவவேண்டும். எந்த மதமும் அர்ப்பணிப்புள்ள பிரச்சாரகர்களால்தான் நிலைகொள்கிறது.
இ. வலுவான வழிபாட்டு மரபு. எந்த மதமும் குறியீடுகள் வழியாகவே நிலைகொள்கிறது. குறியீடுகள் அன்றாடவாழ்க்கையில் நிகழவேண்டும் என்றால் சடங்குகளும் ஆசாரங்களும் வேண்டும். இந்தியாவில் சீர்திருத்த பௌத்தம் அத்தகைய வலுவான வழிபாட்டு மரபை உருவாக்கவில்லை. அது உருவாக்கப்படவேண்டும். புத்தர், தாராதேவி, போதிசத்வர்கள் என ஒரு வழிபாட்டுக்குரிய குறியீடுகளின் நிரை உருவாகவேண்டும். வழிபாட்டுக்கான ஆசாரங்கள் நிறுவப்படவேண்டும். தொடர்ச்சியான வழிபாடு நிகழ்வது உறுதிப்படுத்தப்படவேண்டும்
ஈ. அன்றாடத்தன்மை. எந்த மதமும் அதன் நம்பிக்கையாளர்களின் வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் செல்வாக்கு செலுத்தும்போதே வாழ்கிறது. புதிய பௌத்தம் அதன் நம்பிக்கையாளர்களின் பிறப்பு, திருமணம் குழந்தைப்பேறு, சாவு உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் பங்களிப்பாற்றவேண்டும். அனைத்துக்கும் இடமிருக்கவேண்டும். நவபௌத்தம் சார்ந்து செயல்படும் கர்நாடக மாநில எழுத்தாள நண்பர் ஒருவரிடம் பேசும்போது நான் சொன்னேன். இன்றைய நவபௌத்தம் பௌத்த ஆலயத்தை மட்டும் உருவாக்கினால்போதாது, கூடவே கல்யாணமண்டபமும் இருந்தாகவேண்டும் என்று. உலகியலை தவிர்த்து மதங்கள் நிலைகொள்ள முடியாது.
உ. பௌத்த மெய்யியல் சார்ந்த அறிவியக்கம் ஒன்று நிகழவேண்டும். அதாவது அதற்கான இதழ்கள், வலைத்தளங்கள் பிரசுரநிறுவனங்கள் தேவை. நான் சொல்வது அரசியல் பிரச்சாரத்தை அல்ல. முழுக்கமுழுக்க மததத்துவம் சார்ந்த அறிவியக்கத்தை. இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களுக்கும் அப்படிப்பட்ட அறிவியக்கம் உள்ளது
ஊ. இறுதியாக, எந்த மதமும் அதன் முகங்களாக அறியப்படும் ஆளுமைகளாலேயே நிலைகொள்கிறது, வளர்கிறது. மதஞானிகள், மத அறிஞர்கள் உருவாக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படவேண்டும். நவயானாவுக்கு ஒரு தலாய் லாமா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று மட்டும் எண்ணிப்பாருங்கள்.
இவை எதுவுமே இன்றைய சூழலில் நவயான பௌத்தம் அல்லது மற்ற சீர்திருத்த பௌத்த மரபுகளுக்கு இல்லை என்பதை எவரும் காணலாம். ஆகவே வெறும் அரசியலாகவே அது இங்கே நிலைகொள்கிறது. அதாவது இங்குள்ள தலித் அரசியலின் ஒரு தோற்றம் மட்டும்தான் அது. தலித் அரசியலுக்கு நவயானம் இன்றியமையாததாகவே இருந்தாலும்கூட அது அவ்வரசியலில் நேரடியாக ஈடுபடுவதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, முழுமையாகவே ஒரு மதமாக தன்னை முன்வைப்பதே அது நிலைகொள்வதற்குரிய வழி. அது நிலைகொண்டால் அது தலித் விடுதலைக்கும் வழிவகுக்கும்.
தத்துவார்த்தமான பௌத்தம் வெறுமே சிந்தனையில் செயல்படும் ஒரு செல்வாக்கு மட்டுமே. கிரேக்க மதம் இன்றைய ஐரோப்பிய சிந்தனையில் செல்வாக்கு செலுத்துவதுபோல. பௌத்தத்தின் சூனியவாதம், விக்ஞான வாதம் போன்றவை நவீன சிந்தனைகளுக்கு அணுக்கமானவை, அவற்றின் பல இடைவெளிகளை நிரப்புபவை. ஜென் பௌத்தமும் சீன சான் பௌத்தமும் பலவகையில் இன்றைய சிந்தனைகளுக்கு பங்களிப்பாற்றுபவை. ஆனால் அந்த செல்வாக்கை மதம் என சொல்லமுடியாது
இன்னொன்றும் உண்டு. புத்தர், பௌத்தம் என்றும் இங்கே இருந்துகொண்டிருக்கும் வல்லமைகள். ஏனென்றால் வேதாந்தத்திற்குள் பௌத்த சிந்தனை உள்ளது. அத்வைதம் அதை தொடர்ந்து அடையாளம் காண்கிறது. ராமகிருஷ்ண மடம், நாராயணகுருகுலம் போன்ற நவீன வேதாந்த அமைப்புகள் எல்லாமே பௌத்தத்துக்கு அணுக்கமானவை, என்றும் புத்தரை முன்வைப்பவை.
பௌத்தம் திபெத், தாய்லாந்து மரபைச் சேர்ந்த தொன்மையான முறையிலும், இன்றைய சீர்திருத்த முறையிலும் ஒரே சமயம் இங்கே வளர்ச்சியடையலாம் என நினைக்கிறேன். இரு தரப்பும் உரையாடல் வழியாக தங்களை செழுமைப்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு நிகழுமென்றால் அது இந்தியப் பண்பாட்டுக்கும் இந்திய சிந்தனைக்கும் பெரும்கொடையாக அமையும். பௌத்தம் கற்க ஆயிரம் மையங்கள் இந்தியாவில் உருவாகுமென்றால் அந்த இந்தியா எப்படி இருக்கும்!
கனவுதான், ஆனால் நிறைவேறமுடியாதது அல்ல.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

