Jeyamohan's Blog, page 678
November 19, 2022
கலைச்சொல், அவதூறு, கடிதம்
அன்புள்ள ஜெ,
இணையவெளியின் விவாதங்களை தவிர்க்க முடியாமல் பார்க்க நேரிட்டது. பெரும் சோர்வு உருவானது. பெரும்பாலான இணையக்குறிப்புகளில் நீங்கள் அறைக்கலன் என்ற ஒரே ஒரு சொல்லை ‘கண்டுபிடித்ததாக’ச் சொன்னீர்கள் என்றும் அது பொய் என்று ‘நிரூபித்துவிட்டார்கள்’ என்றும்தான் எழுதியிருந்தார்கள். அதற்கு ஆயிரம் நக்கல்கள், நையாண்டிகள். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று எவருக்கும் தெரியாது.
அந்த பேட்டியை எவரும் பார்க்கவில்லை. வெட்டி காட்டப்பட்ட 20 செகண்ட் நேர காணொளி தவிர எதையும் எவரும் பார்க்கவில்லை. எவருக்கும் நீங்கள் வெண்முரசு என ஒரு பெரும் நாவல் தொடர் எழுதியிருப்பதும், அது தூய தமிழில் அமைந்திருப்பதும், சமகால இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனை அது என்றும் தெரியாது.
இவர்கள் இப்படி என்றால் பத்திரிகைகளின் தரம் அதைவிட கீழாக உள்ளது. இந்த இணைய வம்புகளை அவர்கள் செய்தியாக எழுதுகிறார்கள். ஒரு பத்திரிகைக் குறிப்பில்கூட வெண்முரசு என ஒரு நாவல்தொடரை நீங்கள் எழுதிய செய்தியே இல்லை. அறைக்கலன் என்ற ஒரே ஒரு சொல்லை ஜெயமோகன் அவரே கண்டுபிடித்தார் என சொன்னார் என்றுதான் செய்தி போடுகிறார்கள் .
நான் தேடித்தேடிப் பார்த்தேன். அமெரிக்காவின் பென் அமைப்பு ஒரு சர்வதேச போட்டியில் உங்கள் நாவலை தேர்வுசெய்திருப்பது எவ்வளவு பெரிய செய்தி. தமிழுக்கே பெருமை தேடித்தந்த செய்தி. இதுவரை ஒரு தமிழ் நாவலும் அந்த போட்டியில் வென்றதில்லை. தென்னிந்தியாவிலேயே வென்ற முதல் நாவல் அது. ஏறத்தாழ முந்நூறு நாவல்கள் உலகம் முழுக்க இருந்து வெளிவந்துள்ளன. அதில் வெள்ளையானை தேர்வாகியிருக்கிறது. ஒரே ஒரு செய்திக்குறிப்பு கூட இல்லை. இணையப்பத்திரிக்கைகள், தினமலர், தினத்தந்தி, தமிழ் ஹிந்து எதிலும் ஒரு சிறு குறிப்புகூட இல்லை.
அறைக்கலன் பற்றி நீங்கள் சொல்லாததை திரித்து அவதூறு செய்தபோது ஆளாளுக்கு கருத்து சொன்ன எந்த எழுத்தாளரும் இதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ஒரு சம்பிரதாய வாழ்த்து கூட இல்லை.
இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இந்த அற்பக்கூட்டத்தின் நடுவே நீங்கள் சிறுமைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். மிகப்பெரிய சோர்வு உருவானது.
எம்.ராஜேந்திரன்
அன்புள்ள ராஜேந்திரன்,
இது எதிர்பார்க்கக்கூடியதுதான், இப்படித்தான் நூறாண்டுகளாக இங்கே நடைபெறுகிறது.
சோர்வடைய ஏதுமில்லை. இந்த புழுதியைக் கடந்து நாம் செய்வதெல்லாமே சாதனைகள். காலம் கடந்து நிலைகொள்ளவிருப்பவை இவையே. ஆறுமாதம் முன்பு தமிழ் விக்கி சார்ந்து எவ்வளவு வசைகள், அவதூறுகள் எழுந்தன. இன்று தமிழ் விக்கி எந்த இடத்திற்கு வந்துள்ளது!. இன்றைய தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தின் மகத்தான தொகுப்பு அது. ஒரு முறை, ஒரு பதிவை வாசிப்பவர்களுக்கே அது தெரியும். இதோ பென் பரிசு வரை நம்மிடம் உள்ளவை சாதனைகள் மட்டுமே. அவற்றை மட்டுமே நம் கணக்கில் வரலாறு பதிவுசெய்யும்.
இந்த விவாதங்களை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும்? ஒருபோதும் தகுதியற்றவர்களுக்கு பதில் சொல்லக்கூடாது. இதையெல்லாம் வாசிப்பவர்களில் 90 சதவீதம்பேர் எளிய அறிவுத்திறன் கொண்டவர்கள், அவர்கள் வம்புகளில் மட்டும் ஈடுபட்டு அப்படியே இளித்துவிட்டு கடந்து செல்வார்கள். எஞ்சியோர் இதில் உண்மையில் நிகழ்வதென்ன என்று உணரும் அடிப்படை அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களில் சிலர் இப்படித்தான் என்னைப்பற்றியோ விஷ்ணுபுரம் அமைப்பு பற்றியோ அறிந்துகொள்வார்கள். தேடி வந்து சேர்வார்கள். நம்மிடமுள்ள அனைவருமே இப்படி வந்தவர்கள்தான் – நீங்கள் கூட.
பெரிய இலக்குகள் நம்மை இயக்கட்டும். பெருமரங்களுக்கு நெருப்பும் நன்மையையே பயக்கும்.
ஜெ
அறைக்கலன், வெண்முரசில் இருந்ததா?
வணக்கம் ஜெ,
உங்களது அருஞ்சொல் ஊடகத்தில் வந்த உரையாடலை பலர் வெட்டிப் பரப்பிக் கொண்டு இருந்தனர். அப்போதே முழு காணொளியை பார்த்தேன் அதில் மறைந்து போன வார்த்தைகள் வெண்முரசு வழியாக மீண்டும் புழக்கத்திற்கு வந்தன என்று நீங்கள் சொன்னதைப் புரிந்து கொண்டேன். ஆனால் வெண்முரசிலிருந்து விக்சனரிக்கு வந்தது என்பதை மட்டும் மறுத்து வந்தேன்.
நேற்று வெண்முரசு நாவலில் உள்ள கலைச் சொற்களைச் சேகரிக்கும் பொருட்டு உருபனியல் பகுப்பி (Morphological parser) கொண்டு 1.3805 கோடி சொற்களையும் திரட்டி ஒரு சொல்லடைவை உருவாக்கினேன். அப்போது தான் ஒரு அதிர்ச்சி கிடைத்தது. வெண்முரசு நாவலில் எங்கும் அறைக்கலன் என்ற சொல் கிடைக்கவில்லை. இதில் ஏதேனும் பிழை ஏற்பட்டுள்ளதா அல்லது நினைவுப் பிழையா என்று குழப்பம் ஏற்படுகிறது. எத்தனையோ புதிய சொல்லாட்சிகள் இந்த அடைவில் கிடைக்கிறது. ஆனால் அறைக்கலன் என்ற சர்ச்சை இதைக் கெடுத்துவிடுகிறது. வாய்ப்பிருந்தால் உங்கள் கருத்தினை அறியத் தரலாம்.
https://tech.neechalkaran.com/2022/11/venmurasu-concordance.html
அன்புடன்,
நீச்சல்காரன்
அன்புள்ள நீச்சல்காரன்,
நான் மொழியியலாளன் அல்ல. தமிழில் கலைச்சொல்லாக்கத்தை ஓர் அறிவுச்செயல்பாடாகச் செய்தவர்கள் அருளி, மணவை முஸ்தபா போன்றவர்கள்.
நான் தனித்தமிழியக்கத்தின் மேல் ஆர்வம் கொண்டவன் – முப்பதாண்டுகளாக. நவீன இலக்கியக் களத்தில் இருந்துவந்த தனித்தமிழியக்க மறுப்பு போக்குக்கு எதிரான நிலைபாட்டை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தவன். அதற்குக் காரணம் எம்.கோவிந்தன். அவர் தனித்தமிழியக்கத்துக்கு நிகரான பச்சைமலையாளம் அல்லது நாட்டுமலையாளம் என்னும் இயக்கத்தை கேரளத்தில் உருவாக்க முயன்றவர். அது அங்கே வெல்லவில்லை. ஆனால் நான் அவர் மரபினன். (ஆகவே மலையாளத்திலும் கூடுமானவரை சம்ஸ்கிருதம் கலக்காமலேயே எழுதுவேன். அது அங்கே மிகமிகக் கடினம். ஆனால் எனக்கான நடையை அதுவே உருவாக்கி அளித்தது)
நான் புனைகதை எழுதுபவன். புனைகதை எழுதும்போது நம் ஆழ்நினைவில் உள்ள சொற்களஞ்சியம் தொட்டு எழுப்பப்படுகிறது. என் நினைவில் இருந்து எழும் சொற்களையே பயன்படுத்துகிறேன். அவ்வண்ணம் சொற்கள் இல்லை என்றால் இயல்பாகவே சொற்களை உருவாக்குகிறேன். கொற்றவை, வெண்முரசு ஆகிய நாவல்களிலும் கட்டுரைகளிலும் நான் உருவாக்கிய கலைச்சொற்கள் அவ்வண்ணம் உருவாகி வந்தவை. திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அல்ல. ஆகவே எவை நான் உருவாக்கியவை என நான் தொகுத்துக்கொள்ளவில்லை. பிறர் தொகுக்கும்போது பார்த்து தெரிந்துகொள்கிறேன். எழுதும்போது ஒருவகை கூர்நினைவுநிலை உருவாகிறதென்பது இலக்கியவாதிகளுக்கு தெரியும். அப்போது நாம் எழுதுவதை நாமே திரும்பச் சென்று வாசித்துத்தான் அறிய முடியும்.
அறைக்கலன் என்னும் சொல்லை நான் 1988லேயே பயன்படுத்தியிருப்பதை ஒரு நண்பர் கடிதம் வழியாகத் தெரிவித்தார். வெண்முரசில் பயன்படுத்தியதாகச் சொன்னது வேறொரு நண்பர் ஒருமுறை என்னிடம் சொன்னதை ஒட்டித்தான். வெண்முரசில் இல்லை என்பதும் புதிய செய்திதான். உங்கள் தொகுப்பு போல வெண்முரசின் கலைச்சொற்கள், புதிய கலைச்சொற்கள் பெரிய தொகுதிகளாக வேறுபலரின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜெ
***
வெண்முரசு நூல் ஒன்று – முதற்கனல் செம்பதிப்பு
வெண்முரசு நூல் எட்டு – காண்டீபம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் ஒன்பது – வெய்யோன் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பத்து – பன்னிரு படைக்களம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பதினொன்று – சொல்வளர்காடு செம்பதிப்பு
வெண்முரசு நூல் பன்னிரண்டு – கிராதம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பதின்மூன்று – மாமலர் செம்பதிப்பு
வெண்முரசு நூல் பதினான்கு – நீர்க்கோலம் செம்பதிப்பு
வெண்முரசு நூல் இருபது – கார்கடல் செம்பதிப்பு
வெண்முரசு நூல் இருபத்து மூன்று – நீர்ச்சுடர் செம்பதிப்பு
வெண்முரசு நூல் இருபத்து நான்கு – களிற்றியானை நிரை செம்பதிப்பு
ஸ்வீடன் வானொலி,நூலகம்
ஃபின்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்கு வந்துவிட்டேன். ஓர் இரவு ஒரு ஆடம்பரக் கப்பலில் பயணம். இன்று வானொலியில் ஒரு பேட்டி. இணையத்தில் கேட்கலாம் (Twitter spaces link ). ஸ்வீடனில் ஒரு நூலகத்தை திறந்து வைக்கிறேன்
November 18, 2022
தனிமையோகம்
அன்புள்ள ஜெ
சற்றேறக்குறைய கடிதம் எழுதி ஒரு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று காலையில் தனிமையும் இருட்டும் பதிவை வாசித்த பின் தொடர்ந்து வரும் கேள்வி ஒன்றுள்ளது.
வெண்முரசை வாசித்து முடித்தவுடன் என்றோ ஒருநாள் அந்த யோகத்தனிமையில் சென்று அமர்வீர்கள் என நினைத்து கொண்டேன். இன்று அது எந்தவகையானது என்று எந்த அனுபவமும் எனக்கில்லை. ஆனால் இங்கிருக்கும் எதுவும் அல்ல அது என்பது தெளிவு. மானுட மொழியில் அமையும் இன்பமோ துன்பமோ தனிமையோ விரக்தியோ அருவருப்போ வன்முறையோ கருணையோ எதுவுமல்ல. நம் எல்லைகளுக்கு அப்பால் அமையும் பிறிதொன்றிலாமை. வெகு அரிதாக சிந்திக்கையில் சித்தம் சென்று ஸ்தம்பிப்பதை அணு துளியென்று அறிவதுண்டு. அந்த இடத்தை நீங்கள் சென்றடைவதை உணர்ந்தவுடன் இப்போதைக்கு இல்லை என்ற ஆசுவாசமும் ஏற்பட்டது. வாசக அற்பத்தனம் தான். இருந்தாலும் மறைப்பதற்கோ நாணுவதற்கோ தேவையில்லை என்று நினைக்கிறேன்:)
இந்த பதிவை வாசிக்கையில் ஜெ 60 மணிவிழாவில் நீங்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி நினைவுக்கு வந்தது. உங்களது நெகிழ்ச்சி மிக்க உரைகளில் ஒன்று அது.
“நீ ஒரு எழுத்தாளன் மட்டும் தான். விழித்திருக்கும் கணம் முழுக்க எழுத்தாளனாக வாழ்வதே அவர் எனக்கு விதித்திருக்கும் கடமை. எழுத்தாளன் அன்றி பிறிதொன்றல்ல.” என்று அம்மாவின் சொற்களை நினைவு கூர்கிறீர்கள்.
எழுத்தாளன் தனிமையில் இருப்பவன். எனினும் உலகியலுக்கு அப்பால் சென்றவன் அல்ல. விண் அளாவும் பருந்தே காவிய கர்த்தன். ஆனால் அவன் பாடு பொருள்கள் மண்ணுக்குரியவை.
உங்களை எழுத்தாளராக செதுக்கி கொண்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இப்புவியில் பிறக்கையில் நம் மேல் விழும் அடையாளம் குடி அடையாளம் மாத்திரமே. நவீன யுகத்தில் அதை திமிரவே அத்தனை உள்ளங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஒருகட்டத்தில் பெரும்பாலானவர்கள் அத்தளையே இனியே கூடாக கதகதப்பை தருவதை உணர்கிறார்கள். அந்த உணர்வு தன் செயல்களால் அடையாளத்தை உருவாக்கி கொள்ள இயலாதவர்களின் மன ஆறுதல். நீங்கள் அவர்களில் ஒருவரல்ல. அன்னையின் கனவை செயலாக்கி தன் நிமிர்வுடன் எழுத்தாளன் என்று நிற்பவர்.
அதாவது நீங்கள் ஒரு எழுத்தாளராவது கருவில் முதிர்ந்த கனவு. ஆறுபது ஆண்டு காலத்தில் ஒவ்வொரு துளியும் அதன் பொருட்டே செலவிட்டும் இருக்கிறீர்கள். அண்ணன், தம்பி, தந்தை, மைந்தன், காதலன், கணவன் என்று அத்தனை வேடங்களும் எழுத்தாளன் என்ற தன்னுணர்வை தீட்டி கொள்ள பயன்படுத்தியிருக்கிறீர்கள். வெண்முரசு என்னும் அனல் தவத்திற்கு பின்னும் அன்னையின் சொற்கள் கூர் மழுங்காது நின்றிருப்பது அதன் வலிமைக்கு சான்று.
இந்நிலையில் எழுத்தாளன் என்ற அடையாளத்தையும் உரித்து போர்த்திய பின் தானே யோகாரூடனாக விற்றிருக்க இயலும் ? அல்லது எழுத்தாளன் சென்றடையும் யோகத்தனிமை என்பது ஒரு யோகியினுடையதில் இருந்து வேறானதா ?
அப்படி யோகத்தனிமையில் விற்றிருத்தல் என்பது விசாலாக்ஷி அம்மாவின் கனவில் இருந்து நிறைந்து வெளியேறுவது தானே ?
அன்புடன்
சக்திவேல்
பி.கு: ஒருவேளை இந்த கேள்விகளுக்கு சொல்லில் விடை இல்லையா ? சொல்லப்படுவதை தேடிச்சென்று உணர்ந்தால் தான் உண்டா ?
*
அன்புள்ள சக்திவேல்,
இக்கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. இவை அகவயமான அனுபவங்கள். இவற்றை பொதுமைப்படுத்தி வரையறை செய்து சொல்லமுடியாது, சொல்லக்கூடாது.
சிலவற்றைச் சொல்லலாம், ஓர் அனுபவப் பகிர்வாக. அது வாசிப்பவர் சிலருக்கு அவர்களின் அகத்தை புரிந்துகொள்ள உதவமுடியும்.
இந்தப் புவியில் உள்ள எல்லா உயிர்ப்பிரக்ஞைகளும் ஒன்றாக, ஒட்டுமொத்தமாகவே உள்ளன. தாவரங்கள், சிற்றுயிர்கள், பேருயிர்கள் எல்லாமே. இந்தப் புவியில் உள்ள எல்லா தனிப்பிரக்ஞைகளும் தனிமையிலேயே உள்ளன. எவற்றுக்கெல்லாம் அப்பிரக்ஞை உள்ளதோ அவையெல்லாமே.
தனிப்பிரக்ஞையையே ஆணவமலம் என்றனர். அணுவாக இருக்கையிலேயே உயிர் உணரும் ‘நான் இருக்கிறேன்’ என்னும் உணர்வு அது. ‘நான் வளர்க’ என எண்ணுவது அதன் அடுத்த படிநிலை.
கைக்குழந்தைக்குக் கூட அந்த தன்னுணர்வு உண்டு. (மேலைநாட்டு உளவியலாளர் 18 மாதம் வரை அதெல்லாம் இல்லை என்பார்கள். அதெல்லாம் அவர்களின் அறிவின்மை) கைக்குழந்தைகூட தன்முனைப்பு கொண்டிருக்கும். அவமதிப்பை உணரும், சீண்டப்படும், சீற்றம் கொள்ளும். முலைக்கண்ணில் இருந்து அதன் வாயை கொஞ்சம் விலக்கிப் பார்த்தால் தெரியும்.
அங்கிருந்து தொடங்கும் அந்தத் தனிமை கடைசிவரை நீடிக்கும். ஒவ்வொரு உயிரிலும். அந்த தனிமையை ஈடுகட்ட ஒரே வழி தனிப்பிரக்ஞையை விரித்து விரித்து உயிர்ப்பிரக்ஞை என ஆக்கிக்கொள்ளுதலே. ‘வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ என்னும் உளநிலை. இங்குள்ள அனைத்துமே நான் என்னும் மனவிரிவு.
நாம் இயற்கையில் இருக்கையில் உணரும் பெருநிலை என்பது அதுவே. இசை கேட்கையில், கலையனுபவங்களில், மாபெரும் அறிதலனுபவங்களில் அடைவது அதையே. சேவையில், அறிவுச்செயல்பாட்டில் அடைவதும் அதுவே. உறவுகளில், நட்புகளில் மகிழ்கையிலும் அதையே அனுபவிக்கிறோம். பெருந்திருவிழாக்களில் கூட்டங்களில் கரைகையிலும் அவ்வுணர்வை அடைகிறோம்.
நாம் வாழ்வது இவ்விரு புள்ளிகள் நடுவே. தனிப்பிரக்ஞையால் தனிமையை அடைந்து உடனே உயிர்ப்பிரக்ஞையால் அத்தனிமையை வென்று மீண்டும் தனிப்பிரக்ஞை நோக்கி வருகிறோம். அனைவருமே இவ்விரு புள்ளிகள் நடுவே ஊசலாடிக்கொண்டிருக்கிறார்கள்.
எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் கலைநிகழ்கையில் அந்த ஊசலாட்டத்தை மிகப்பெரிய அளவில், மிகத்தீவிரமாக அடைகிறார்கள்.எல்லா கலைப்படைப்புகளும் கலைஞனின் அகத்தனிமையில் இருந்து தொடங்குகின்றன. அவன் அதை வென்று இயற்கையென்றே, பிரபஞ்சமென்றே தன்னை உணர்கையில் நிறைவடைகின்றன. மீண்டும் தனிமை.
அந்த தனிமையை கலைஞன், எழுத்தாளன் எழுதித்தான் கடக்கமுடியும். எளிமையாக மற்றவர்கள் போல உறவுகளிலோ பிறவற்றிலோ ஈடுபட்டு கடக்கமுடியாது. நான் எழுதும்போது தனியன். முடிக்கையில் பேருருவன். மீண்டும் அதிதனியன்.
யோகிகள் அந்த தனிமையை தவிர்க்கும் பயணங்களை கைவிட்டுவிட்டவர்கள். அந்த தனிமையை மேலும் மேலும் கூர்மைப்படுத்திக்கொண்டே செல்வர்கள். யோகத்தன்மை, யோக இருள் என அது சொல்லப்படுகிறது. பிறர் தனிமையை தவிர்க்க சென்றடையும் உயிர்ப்பிரக்ஞையை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.
அந்நிலையில், அதன் உச்சியில் பிரபஞ்சப்பிரக்ஞை ஒன்று அவர்களுக்கு வாய்க்கிறது. அவர்கள் பிரபஞ்சமென்றாகி அமர்ந்திருக்கிறார்கள். அதுவே சமாதி எனப்படுகிறது. அது வேறொரு தளம்.
’பிரக்ஞையே பிரம்மம்’ என்னும் நிலையில் இருந்து ‘இவையனைத்திலும் இறை உறைகிறது’ என்று செல்லும் ஓர் ஊசலாட்டத்தையே சொன்னேன். அவை இரண்டையும் கடப்பவன் ‘இறையே நான்’ என அமர்கிறான்.
அவ்வளவுதான், அதற்குமேல் விளக்க முடியாது. விளக்க விளக்கக் குழப்பமே மிகும். உணரமுடிந்தால் நன்று. இல்லையேல் காத்திருங்கள்
ஜெ
தமிழ் எங்கள் உயிர்நிதி
மலேசியாவில் தமிழர்கள், குறிப்பாக அடித்தளத் தமிழர்கள் நடுவே தமிழ் சார்ந்த ஒரு மிகையுணர்வு உண்டு. நான் முதலில் மலேசியா சென்றபோது சங்ககாலம் 2200 ஆண்டுகள் தொன்மையானது என்று சொன்னபோது ஒருவர் மேடைக்கு வந்து கொதிப்புடன் என்னை அவர் அடிக்காமல் விடுவது நான் விருந்தினர் என்பதனால்தான் என்றார். சங்க இலக்கியம் ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையானது என்பது அவருடைய கருத்து. இன்றைக்கும் தேவநேயப் பாவாணரின் கால ஆராய்ச்சியை தலைக்கொண்டு திருக்குறள் பத்தாயிரம் ஆண்டு பழமையானது என நம்பும் மக்கள் ஏராளம்.
ஆனால் அதற்கான காரணம் அவர்களின் வரலாற்றில் உள்ளது. அங்கே குடியேறிய தமிழ் மக்கள் அந்நிலத்தில் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்த கடுமையாக போராடியிருக்கிறார்கள். சாதிமத வேறுபாடுகளைக் கடந்து அவர்களை ஒருங்கிணைக்கும் அடையாளமாக தமிழ் இருந்துள்ளது. அன்று ‘நியூக்ளியர் மைனாரிட்டி’களாக இருந்த மலையாளிகள் தங்களை தமிழர்களுடன் இணைத்துக்கொண்டு காலப்போக்கில் தமிழர்களாகவே ஆகிவிட்டனர். அங்கே நான் சந்தித்த பல முக்கியமான விவிஐபிக்களின் வீட்டில் அவர்களின் பூர்விகம் மலையாளம் என அறிந்தேன்
தமிழ் எங்கள் உயிர்நிதி – வரலாறு
தமிழ் எங்கள் உயிர் நிதி வரலாறு – தமிழ் விக்கி
எழுதுவது, கடிதம்
அன்பு ஜெ,
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போதுதான் இந்திய பயணம் உறுதியானது. டிசம்பர் 19 சென்னை வருகிறேன் ஜனவரி இறுதியில் திரும்புகிறோம். நான்கு ஆண்டுகளுக்கு பின்னான பயணம்.
நண்பர்களிடம் சொன்னபோது விஷ்ணுபுரம் டிசம்பர் 17/18 லேயே நடக்கிறதே என்றார்கள். நேஹாவுக்கு கடைசி பரிட்சை முடிந்தவுடன் கிளம்புகிறோம், இல்லை என்றால் சில நாட்கள் தள்ளி டிக்கெட் போட்டிருக்கலாம். விழாவை அடுத்த ஏதேனும் நிகழ்வில் சந்திக்கும் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன். (தத்துவ பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு பார்த்தேன் ஜனவரியில் ஏதேனும் நிகழ்ந்தால் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். )
சில நாட்களாகவே நான் வாசிக்கும் விஷயங்கள் குறித்து முழுமை பார்வையுடன் விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அதை இன்றே ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. தமிழில் அதிகம் அறியப்படாத, பல்வேறு துறைகளில் நிகழும் சிந்தனை போக்குகள், ஆளுமைகள், இன்றிருக்கும் சிந்தனை போக்கிற்கும் இதற்கும் இடையேயான உறவுகள், சாதக பாதகங்கள் தொட்டு எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
இதை ஒரு பட்டியல் போன்றோ, துறைசார் கருத்து பெட்டகம் போன்றோ உருவாக்காமல் இவை உண்டாக்கும் இணைவுகள், அதனால் விளையும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன். உத்தேசம் இதுதான் ஆனால் முழுமை வடிவம் எப்படி வரும் என்று தெரியவில்லை.இதற்கு தமிழில் வாசக பரப்பு குறித்தும் அதிகம் தெரியவில்லை.
இந்த சிறு முயற்சிக்கு உங்கள் நற்சொல் துணையாக அமைந்தால் மகிழ்வேன்.
விரைவில் சந்திப்போம்.
அன்புடன்
கார்த்திக் வேலு
https://www.arunchol.com/author/karthikvelu
அன்புள்ள கார்த்திக்
எழுதுவதை இரண்டு வகையில் முன்னரே மனசுக்குள் வகுத்துக் கொள்ளவும். ஒன்று, தொடர்ச்சியாக பலவகை கட்டுரைகள் எழுதுவதாக இருந்தால் உங்களுக்குள் ஓரிரு தலைப்புகளில் அவை தொகுக்கும்படியாக இருப்பதாக அமைத்துக்கொள்ளுங்கள். குறைவாக எழுதுவதாக இருந்தால் ஒரே தலைப்பில் தொடராக எழுதவும். எழுதுவதெல்லாம் ஏதேனும் வகையில் நூலாகவேண்டும். நூல்கள் மட்டுமே காலத்தை கடப்பவை.
ஜெ
*
ஜெயமோகன் நூல்கள் வாசிப்பின் வழிகள் வாங்க
வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க
வணிக இலக்கியம் வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க
விஷ்ணுபுரம் விருந்தினர், கடிதம்
விஷ்ணுபுரம் விருந்தினர் வரிசையை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் எவரெல்லாம் அழைக்கப்படப்போகிறார்கள் என்னும் எதிர்பார்ப்பு உருவாகிவிடுகிறது. பல புதிய எழுத்தாளர்களை என்போன்ற வாசகர்கள் அப்போதுதான் அறிமுகம் செய்துகொள்கிறோம்.
இதிலே பல சிக்கல்கள் இஙே உள்ளன. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு அங்கே ஒரு வட்டம் உண்டு. ஆனால் அந்த எழுத்துக்கள் வழியாக நம்மால் அவர்களை சரியாக மதிப்பிட முடியாது. அவ்வப்போது இணையப்பத்திரிகைகளிலும் அச்சுப்பத்திரிகைகளிலும் ஏதாவது கதைகள் வரும். அதைக்கொண்டும் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
ஒரு தலைமுறையில் யாரை கவனிக்கவேண்டும் என்பதை விமர்சகர்கள் சொன்னால்தான் உண்டு. அப்படி ஒரு தொடர்ச்சியான விமர்சனச் செயல்பாடு இப்போது இங்கே இல்லை. எழுத்தாளர்களின் சிபாரிசுகள்தான் முக்கியமானவை.
இந்த விழாக்களில் ஒருவரை அழைப்பதே ஒரு சிபாரிசுதான். வாசிக்கும்படிச் சொல்லும் ஆணைதான். அதன்பின் அந்தச்சந்திப்பில் அவர்களைப் பற்றிப் பேசப்படும்போதும் அவர்கள் கேள்விகளுக்குப் பதில்சொல்லும்போதும் அவர்களின் அடையாளமென்ன என்று தெரிந்துவிடுகிறது. அதன்பின் அவர்களைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம். ஆச்சரியமாக உள்ளது. இன்றைக்கு தமிழில் இதைப்போன்ற ஒரு அவை வேறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்த்துக்கள். நிகழ்ச்சியை எதிர்நோக்குகிறேன்.
ராமசாமி அருண்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, கமலதேவி
விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்
தங்கப்புத்தகம், கடிதம்
அன்புள்ள ஜெ
தங்கப்புத்தகம் தொகுப்பை ஒரு நண்பர் அளித்து இன்றுதான் வாசித்து முடித்தேன். எங்கெங்கோ சுழற்றிச் சுழற்றி கொண்டுசென்று பலவகையான கனவுகளையும் தரிசனங்களையும் அளித்த அற்புதமான கதைகள் இவை.
இந்தக்கதைகளை படிக்கும்போது ஒன்று தோன்றியது. தமிழில் நவீன இலக்கியத்தை 40 ஆண்டுகளாக நான் வாசிக்கிறேன். ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன். நான் இந்த விஷயத்தை பலபேரிடம் பேசியதுமுண்டு. தமிழ் நவீன இலக்கியத்தை யதார்த்தவாதம் என்று சுருக்கிவிட்டார்கள். ஆசிரியன் அவனுக்குத் தெரிந்த வாழ்க்கையை எழுதினால்தான் நம்பகமாக இருக்கும் என்று ஒரு கருத்து வேரூன்றிவிட்டது. அதை உருவாக்கியவர்கள் ஆரம்பகால யதார்த்தவாத எழுத்தாளர்கள். அதை அவர்கள் இங்கே இருந்த வணிக எழுத்துக்கு எதிராக உருவாக்கினார்கள். கொஞ்சம் கற்பனை கலந்தால்கூட அதை உடனே வணிக எழுத்து பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். ஆனால் அவர்களுக்கு அப்போதே வாசிக்கக்கிடைத்த உலக இலக்கியமெல்லாம் அப்படி இல்லையே என்ற கேள்வி அவர்களுக்கு எழவே இல்லை.
இந்தக்காரணத்தால் தமிழிலே ஒரு நல்ல இலக்கியச் சரித்திரநாவல் அக்காலத்திலே வரவே இல்லை. ஒரு நல்ல ஃபேண்டஸி வரவில்லை. எல்லாமே அன்றாடவாழ்க்கை சார்ந்த எழுத்துக்கள். ஆகவே இளமைப்பருவ வாழ்க்கை அல்லது நடுப்பருவ காதல். அவ்வளவுதான் எழுதப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வாசிக்கும்போது நவீனத் தமிழிலக்கியம் போல சலிப்பூட்டும் விஷயமே இல்லை என தோன்றுகிறது. Fun கிடையாது. அபூர்வமாக ஒன்றுமே கிடையாது. கண்டடையவோ பயணம்செய்யவோ ஒன்றுமே இல்லை. பெரும்பாலும் சலிப்பூட்டும் ஒற்றைப்படையான சுயசரிதைகள்.
திகில்கதை, பேய்க்கதை எல்லாமே இலக்கியத்தின் வகைகள்தான். அவற்றை வரலாற்றின் ஆழத்தையும், மனுஷமனசின் ஆழத்தையும் சொல்ல ஓர் எழுத்தாளன் பயன்படுத்தினால் அது உயர்ந்த எழுத்து தான். அந்த இயல்பு கொண்ட எழுத்து அபூர்வமாகவே இருக்கிறது. கொஞ்சநாள் முன்னால் இணையத்தில் ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா பற்றி படித்தேன். அந்நாவல் ஒரு பொழுதுபோக்கு நாவலுக்குரிய பாஷையில் எழுதப்பட்டது. அதன் பிரச்சினை அதுதான். ஆனால் அந்த தீம் எவ்வளவு பெரிய இலக்கிய படைப்புக்குரியது. அதை ஏன் நவீன இலக்கியவாதி எழுதவில்லை?
தங்கப்புத்தகம் வாசிக்கும்போது அதைத்தான் நினைத்துக்கொண்டேன். அவ்வளவு அற்புதமான கதைகள். அவை அளிக்கும் ஒரு supernatural தரிசனம் யதார்த்தவாதக் கதைகளில் அமையாது. எதையோ தேடிப்போவதும் கண்டுபிடிப்பதும் நழுவிப்போவதுமாக மனுஷனின் அந்த ancient play அந்தக்கதைகளில் அற்புதமாக வந்திருக்கிறது.
ஆனந்த் பார்த்தசாரதி
November 17, 2022
வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி
வெளியே உறைநிலைக்கு கீழே எட்டு பாகை குளிரில் வெண்பனி பொருக்குகள் உதிர்ந்துகொண்டிருக்கையில், இரவு பதினெட்டு மணி நேரம் நீளம் கொண்டதாக இருக்கையில், ஆர்ட்டிக் வட்டத்தில் Rovaniemi எனும் ஊரில் அமர்ந்து இச்செய்தியை வாசிக்கையில் ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. உலகளாவிய இலக்கிய போட்டி ஒன்றில் ’பென் அமெரிக்கா’(PEN America) என்னும் அமைப்பு வெளியிடுவதற்காக தெரிவு செய்த பதினொரு நாவல்களில் பிரியம்வதா மொழிபெயர்ப்பில் ’வெள்ளை யானை’ தெரிவு செய்யப்பட்டுள்ளது. பென் வரலாற்றில் தெரிவு செய்யப்பட்ட முதல் தென்னிந்திய நாவல் இதுவே.
வெள்ளை யானை முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. அதன் சுருக்கமும் முதல் இரு அத்தியாயங்களும் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே இத்தெரிவு நடந்துள்ளது. முதலிரு அத்தியாயங்களிலேயே அதன் இலக்கியத்தரமும் மொழியின் கூர்மையும் அவர்களுக்கு புலப்பட்டிருக்கின்றன. நாவல் அவர்களாலேயே வெளியிடப்படும். உலகளாவிய வாசகர்களுக்கு கொண்டு செல்லப்படும். மிக விரைவிலேயே ஒரு இந்திய – அமெரிக்க தயாரிப்பு திரைப்படமாகவும் இந்நாவல் வெளிவர உள்ளது பேச்சு வார்த்தைகள் நிகழ்ந்துகொண்டுள்ளன.
என்னுடைய படைப்புகள் தொடர்ச்சியாக உலக வாசகர்களை சென்றடைய தொடங்கியுள்ளன. இன்னும் ஐந்தாண்டுகளில் பெரும்பாலும் முக்கியமான எல்லாப்படைப்புகளும் ஆங்கிலத்தில் உலக வாசகர்களுக்காக கிடைக்கத் தொடங்கிவிடும். பாதி வேடிக்கையாகவும் பாதி நம்பிக்கையுடனும் நான் எப்போதும் சொல்லும் ஒரு வரி உண்டு. என்னுடைய படைப்புகளை ஒருவர் நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அதை உலகின் எந்த இலக்கியப் போட்டிக்கும் அனுப்பலாம், எந்த பதிப்பகத்துக்கும் அனுப்பலாம். ஒருபோதும் அவை நிராகரிக்கப்படாது. ஏனெனில் இன்று எனக்கு நிகராக எழுதிக்கொண்டிருப்பவர்கள் உலக அளவிலேயே மிக மிக குறைவானவர்கள். அடிப்படை இலக்கிய பயிற்சி கொண்ட எவருக்கும் ஓரிரு அத்தியாயங்களிலேயே அவற்றின் தரம் புரிந்துவிடும்.
ப்ரியம்வதாவின் மொழி பெயர்ப்பு அழகியது, நவீனத்தன்மை கொண்டது. மிக இயல்பாக என்னுடைய படைப்புகளின் அழகை ஆங்கிலத்திற்கு கடத்துகிறது. ஓர் இணை ஆசிரியராகவே அவர் எனக்கு செயல்படுகிறார். தொடர்ந்து குமரித்துறைவி ஏழாம் உலகம் ஆகியவை ஆங்கிலத்தில் வெளிவர உள்ளன. இவற்றை தனிப்பட்ட வெற்றியாக நான் கருதவில்லை. மாறாக தமிழ் இலக்கியத்திற்கு ஓர் உலகளாவிய அங்கீகாரமாகவே கருதுகிறேன். ஏனெனில் இங்கிருந்து படைப்புகள் இங்குள்ள அரசியல் செயல்பட்டாளர்களாலோ சமூக சேவையாளர்களாலோ மொழிபெயர்க்கப்படுகின்றன. அவர்களுக்கு இலக்கியத்தரம் என்பது புரிவதில்லை. உகந்த கருத்துகள் என்பதையே அவர்கள் இலக்கியத்துக்கான அளவுகோல்களாகக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே எளிமையான சமூகசீர்திருத்த, முற்போக்கு கருத்து கொண்ட நாவல்களே இங்கிருந்து சென்றிருக்கின்றன. இவை மட்டுமே இங்குள்ளன என்ற எண்ணமும் உலகளாவ உள்ளது. அவ்வெண்ணம் மாற இந்த மொழியாக்கங்களால் இயலலாம். தமிழ் நவீன இலக்கியம் மீது மேலும் கவனம் விழலாம் .
என்றுமுள்ள கனவுகளில் இருந்து…
இந்து மதம் என ஒன்று உண்டா? – 1
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்து மதம் என ஒன்று உண்டா? கட்டுரையில் மதம் பற்றி விரிவாக எழுதியிருந்தீர்கள்.
இது சம்பந்தமாக அண்மையில் படிக்கக் கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. (ஒரு வேளை ஏற்கனவே உங்கள் கவனத்திற்கு வந்திருக்கலாம்)
துருக்கியில் கோபெக்லி டெபெ (Gobekli Tepe) அகழாய்வுகளின் சான்றுகள்படி இந்த இடம் சுமார் 11,000 வருடங்களுக்கு முன்பு வழிபாட்டுத்தலமாக இருந்திருக்கிறது. கோவில் போன்ற வளாகத்தில் உயர்ந்த ஒற்றைக்கல் தூண்களில் விலங்குகளின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த வளாகம் கி மு 9500 லிருந்து கி.மு. 8000 வரை உபயோகத்திலிருந்தது என்று அனுமானிக்கப்படுகிறது.
ஆனால் அருகாமையில் அந்தக் காலகட்டத்தில் எங்கும் வேளாண்மை செய்யப்பட்டதற்கோ, கால்நடைகள் பரமாரிக்கப்பட்டதற்கோ தடயங்களே இல்லை. வேளாண்மை தொடங்கிய பிறகே நிரந்தரமான குடியிருப்புகள் அமைந்தன. அதன் பிறகே மத அமைப்புகள் உருவாகின என்று இதுநாள்வரை நம்பப்பட்டு வந்ததை இந்த அகழாய்வு கேள்விக்குள்ளாக்குகிறது. வேட்டை சமூகங்கள் வேளாண்மை செய்வதற்கு முன்னரே, ஏன் கால்நடை சமூகமாவதற்கு முன்பே, பெரும்சுவர்கள் கட்டி கோவில் எழுப்பி வழிபாடுகள் நடத்தினார்கள் என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக அருகாமையிலுள்ள காரஹான் டெபெ (Karahan Tepe) என்ற இடத்தில் அண்மையில் நடந்த அகழாய்வுகளில் இதற்கு சற்றும் குறையாத கோவில் அமைப்புகள் வெளிவந்துள்ளன. இந்த இடம் சுமார் 200 ஆண்டுகள் பிந்தையதாக கருதப்படுகிறது. இங்கு சுவர்களில், விலங்குகள் அல்லாமல் மனித உருவங்கள் தென்படுகின்றன. ஓர் உள்ளறையில் லிங்கம் போன்ற சிற்பங்களும், பலி கொடுத்த திரவங்களை வெளியே கொண்டு செல்ல ஓடைகளும் காணப்படுகின்றன. இயந்திரங்கள் இல்லாமல் நெடுந்தொலைவிலிருந்து பெருங்கற்களை கொண்டுவந்து ஒரு பெரும் உயரத்திற்கு ஏற்றியிருக்க வேண்டும். யார் இவர்கள்? எது இவர்களை இப்படி செய்ய வைத்தது?
நீங்கள் அடிக்கடி சொல்வது போல மதம் என்று இன்று நாம் நம்புவதன் பெரும்பகுதி பழங்குடிகளின் வாழ்க்கைமுறையின் தொடர்ச்சியாக நம் ஆழ்மனத்தில் உறைந்துள்ள படிமங்களால் ஆனது என்பதே நிரூபணமாகிறது.
– வைகுண்டம்
மதுரை
அன்புள்ள வைகுண்டம்,
நாகரீகங்களைப் பற்றிய பொதுவான புரிதல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனையாளர்களின் புரிதல்களை ஒட்டியே இன்னமும் மார்க்ஸியர்கள் சிந்திக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை உபரி என்பதே நாகரீக வளர்ச்சியாக ஆகும். (ஒரு சமூகத்தில் அவர்களின் வாழ்க்கைத்தேவைக்கு மேல் உற்பத்தியாகும் பொருள் உபரி. அதுவே செல்வமாகி முதலீடாகி, நாகரீகங்களை உருவாக்குகிறது) ஆனால் வேட்டைச்சமூகங்களில் உபரி இருக்காது. ஏனென்றால் வேட்டைப்பொருட்களை பெரிதாகச் சேமிக்க முடியாது. வேட்டைப்பொருட்களை விற்க சந்தைகளும் இல்லை.
வேட்டைச்சமூகங்கள் தேவைக்கு மட்டுமே வேட்டையாடுபவை. அவை உற்பத்திச் சமூகங்கள் அல்ல. ஆகவே வேட்டைச்சமூகங்களால் பெரிய நாகரீகங்களை உருவாக்க முடியாது. அவை நிலையான சமூகங்களாகவும் இருப்பதில்லை. அவை பெரும்பாலும் நாடோடிக்குடிகளே. வேட்டைச்சமூகத்தில் இருந்து மேய்ச்சல் சமூகங்கள் உருவாகின்றன. அவை காலப்போக்கில் வேளாண்மைச் சமூகங்கள் ஆகின்றன. இதெல்லாம்தான் நாம் அறிந்து, இயல்பான உண்மைகளாக ஏற்றுக்கொண்டிருக்கும் கருத்துகள். இவை மார்க்ஸிய சமூக – வரலாற்றாசிரியர்களால் உருவாக்கப்பட்டவை.
இந்தக் கருத்துகளின் போதாமைகள் இரண்டு. ஒன்று, இவை மானுட உள்ளத்தின் இயல்பான கற்பனைத்திறனை, மானுட இனத்தின் கூட்டுக்கனவை உதாசீனம் செய்கின்றன. மானுடர் செய்பவை எல்லாமே ‘தேவை’யின் பொருட்டே என இவை புரிந்துகொள்கின்றன. தேவை இல்லாத எதையும் மானுடர் செய்வதில்லை என்பதனால் எதைக் கண்டாலும் ‘இதன் தேவை என்ன?’ என்றே இக்கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு கேட்கிறார்கள். தொல்பழங்கால மக்களின் பெருங்கற்களை காண்கையில் அவை எல்லாம் இடம்சார்ந்த எல்லையை வரையறை செய்வதற்கானவை என விளக்குகிறார்கள். அதற்கு ஏன் அத்தனை பெரிய கற்கள் என்றால் நெடுந்தூரம் தெரிவதற்காக என்று சொல்கிறார்கள். அதற்கு ஒரு மரத்தின்மேல் ஒரு தோலை கட்டி தொங்கவிட்டாலே போதுமே? மாபெரும் குலக்குறித்தூண் (Totem Pole) களையும் அவ்வாறே விளக்குகிறார்கள். அதற்கு அத்தனை கலைத்திறன் மிக்க செதுக்குவேலைப்பாடுகள் எதற்கு என அவர்களால் சொல்ல முடிவதில்லை.
வேட்டைப்பழங்குடிகள் வேளாண்பழங்குடிகளைப்போல பெரும் எண்ணிக்கையில் இருக்க முடியாது, அவர்களின் சமூகங்களில் அதிகம்போனால் ஆயிரம்பேர்தான் இருக்க முடியும், ஆகவே அவர்களிடம் பெரிய அளவில் உபரி திரளாது, ஆகவே அவர்களால் பெரிய கட்டட அமைப்புகளை உருவாக்கமுடியாது என்பது இன்னொரு கொள்கை. ஒரு குறிப்பிட்ட நிலஅளவுக்குள் வேட்டையாடியாக வேண்டிய, மேய்ச்சல் செய்தாகவேண்டிய பழங்குடிகளின் எண்ணிக்கை பெருகாது என்பதும் வேளாண்மை வழியாகவே குறைந்த நிலத்தில் அதிக உணவு உருவாக முடியும் என்பதும் பரவலாக ஏற்கப்பட்ட கொள்கைகள்.
ஆனால் பெருங்கற்கள் இந்தக் கொள்கையை மறுக்கும் தடையங்கள். அவை பல ஆயிரம்பேரின் கூட்டான உழைப்பால் மட்டுமே நிகழக்கூடியவை. வேட்டைச்சமூகங்கள்தான் அவற்றை நிலைநிறுத்தியுள்ளன. உலோகங்களில்லாத காலத்திலேயே மண்ணுக்குள்ளும் வெளியிலுமாக ஐம்பது அடி நீளம் கொண்ட எடைமிக்க பெருங்கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு, கற்களைக்கொண்டே சீராக உடைக்கப்பட்டு, குன்றுகளின் மேல் கொண்டுசென்று நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை அப்படி நிறுத்தவேண்டிய தேவை என்ன, அதற்கான சமூக அமைப்பு என்ன ஆகிய வினாக்களுக்கு மரபான மானுடவியலில் பதில்கள் இல்லை. மார்க்ஸியர்களிடமும் விளக்கம் இல்லை.
அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லிவிடலாம் – கடவுள். பெரும்பாலான பழங்குடிகளை இயக்குவது அந்த நம்பிக்கைதான். கடவுள்களின் ஆணைகளே அவர்களை இயக்குகின்றன. கடவுளின் ஆணையாலேயே அவர்கள் ஒன்றுகூடுகின்றனர், பெருங்கட்டுமானங்களை உருவாக்குகின்றனர். சிலசமயம் மிகமிகக் கடுமையான உழைப்பால் கட்டப்பட்ட கட்டுமானங்களை அப்படியே கைவிட்டுவிட்டு இடம்பெயர்கின்றனர். அமெரிக்காவில் நியூமெக்ஸிகோ மாநிலத்தில் செவ்விந்தியப் பழங்குடிகள் மாபெரும் மலைக்குகைக்குள் உருவாக்கிய சிறுநகர்களை கட்டிய சில ஆண்டுகளிலேயே தெய்வங்களின் ஆணையால் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
ஆஸ்திரேலியப் பழங்குடிகளும் வேட்டைச் சமூகங்களே. ஒரு சமூகக்குழுவில் ஆயிரம்பேர் இருப்பது அரிது. ஆனால் அவர்கள் தெய்வங்களால் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை இப்போது கன்பரா என அழைக்கப்படும் நகர் இருக்குமிடத்தில் கூடி பொது முடிவுகளை எடுத்தனர். கூட்டாகச் செயல்பட்டனர். அப்படித்தான் தொல்குடிகளும் செயல்பட்டிருக்க வேண்டும். அக்கூட்டங்கள் இணைந்து பெருங்கற்களை நிறுவின. அவர்களே பின்னர் பெருங்கட்டுமானங்களை உருவாக்கியிருக்கலாம். அதைப் புரிந்துகொள்வதற்கு இந்த வழக்கமான உபரி இருந்ததா என்னும் ‘டெம்ப்ளேட்’ சரிவராது.
அவர்களை இயக்கும் அந்தக் கடவுள் என்பது என்ன? அவர்களின் கூட்டான ஆழுள்ளமா? அல்லது இயற்கையிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட உள்ளறிதலா? அல்லது மானுடஇனத்துக்குள் அதனுயிரியல்பாகப் பொறிக்கப்பட்டுள்ள ஏதாவதா? ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெருங்கற்களை நிறுவிய தொல்குடிகளுக்கு சமைக்கக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் காலம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். எதிர்காலத்தை கற்பனை செய்திருக்கிறார்கள். முடிவிலா எதிர்காலத்தில் தங்கள் குலச்சின்னம் நின்றிருக்கவேண்டும் என கனவு கண்டிருக்கிறார்கள். அந்த அகப்புரிதல், அந்த அடிப்படை உருவகங்கள், அந்தக் கனவு அவர்களுக்குள் எப்படி வந்தது?
வரலாற்றையும் சமூகத்தையும் புறவயமாகவே புரிந்துகொள்ள முயலவேண்டும், புறவயமான தரவுகளும் தர்க்கங்களுமே அடிப்படையானவை. அதை நான் முழுமையாகவே ஏற்பவன். ஆனால் எல்லாவற்றையும் அப்படி புறவயமாகப் புரிந்துகொள்ள முடியாது. மானுட உள்ளத்தை இயக்கிய அடிப்படை விசைகளை புறவயத்தர்க்கம் வழியாக மதிப்பிட்டுவிட எவராலும் இயலாது. அதற்கு முயன்றால் அதை சில்லறைப்படுத்துவோம் (trivialize) அல்லது அன்றாடப்படுத்துவோம். ஆய்வாளர் பலர் செய்வது அதைத்தான்.
பெரிதினும் பெரிது உருவாக்க, தங்கள் எல்லைகளை ஒவ்வொரு கணமும் கடந்துபோக மானுடம் முயன்றபடியே இருக்கிறது. மானுடம் தேவைகளால் இயக்கப்படவில்லை, கனவுகளால் இயக்கப்படுகிறது. உன்னதம், உச்சம், அழகு ஆகிய மூன்றுமே கனவுகளால் வடிவமைக்கப்படுவனதான். ஆகவேதான் அது மாபெரும் ஆலயங்களை எழுப்புகிறது. பெருங்காவியங்களை உருவாக்குகிறது. இலியட்டும் ஒடிசியும் ராமாயணமும் மகாபாரதமும் நமக்கு கிடைக்கின்றன. அக்காவியங்களே சுட்டுவதுபோல மாகாவியங்கள் பல நாவிலேயே புழங்கி மறைந்தன. அதைப்போன்று எத்தனையோ மாநகர்களும் மாளிகைகளும் மறைந்திருக்கும். கல்லில் உருவாக்கப்பட்டவையாதலால், பாலைநிலத்து மணலில் மூழ்கியவை என்பதனால் எஞ்சி நமக்கு கிடைப்பவை சிரியா, துருக்கி பகுதியின் தொல்நகர்கள்.
மனிதனின் ஆணவமும் படைப்பூக்கமும் திகழ்வது அவன் கனவுகளிலேயே. அங்கே அவன் கடவுள்களால் ஆட்டிவைக்கப்படுகிறான், அவ்வப்போது கடவுளுக்கு நிகர் எனவும் உணர்கிறான். பாபேல் கோபுரத்தை மானுடர் விண்ணை தொட்டுவிடும்பொருட்டு கட்டினர் என்பது வெறும் புராணம் அல்ல, ஓர் அடிப்படையான உருவகம்.
ஜெ
***
ஜெயமோகன் நூல்கள் சாதி ஓர் உரையாடல் வாங்கசாந்தி ஓர் உரையாடல் – மின்னூல் வாங்க
இந்து மெய்மை வாங்க
ஆலயம் எவருடையது மின்னூல் வாங்க
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



