Jeyamohan's Blog, page 675

November 25, 2022

இனிமையின் கணங்கள் – கடிதங்கள்

ஆனையில்லா வாங்க

ஆனையில்லா மின்னூல் வாங்க

ஜெயமோகன் நூல்கள் வாங்க  

அன்புள்ள ஜெ

புனைவுக் களியாட்டுக் கதைகளை இப்போதுதான் மனம் ஒன்றி வாசிக்கிறேன். அன்றைக்கு அந்த நோய்ச்சூழலில் வேலை சார்ந்த பதற்றங்கள் நடுவே ஒரு மென்மையான மனநிலைக்காக மட்டுமே படித்தேன். இப்போது படிக்கும்போது வேறொரு தளத்தில் ஒவ்வொரு கதையும் திறப்பதை உணர முடிகிறது. 

உதாரணமாக மூன்றுகதைகளில் பாஷை பற்றி வருவதை சொல்லத்தோன்றுகிறது. ஒரு கதையில் இரு குழந்தைகள் தங்களுக்குள் ஒரு தனிமொழியை உருவாக்கிக் கொண்டு பேசுகின்றன. அந்த மொழிக்குள் இன்னொருவருக்கு இடம் இல்லை. அந்த கதையே மிக அழகானது

இன்னொரு கதையில் நாய் ஒரு துளி மூத்திரம் விட்டு யானைகளை சமாதானம் செய்து வைக்கிறது. அது இன்னொரு வகையான பாஷை. இன்னொரு கதையில் அப்பா பூஸ் ஆனதுமே அன்னிய பாஷை பேச ஆரம்பிக்கிறார். தன் பாஷையை விட்டு அவர் வெளியே செல்ல விரும்புகிறார். 

இப்படி இந்தக்கதைகள் ஒன்றுடன் ஒன்று கதைகள் தொடர்பு கொண்டுள்ளன. இந்த வாசிப்பு இவற்றை நூல்வடிவில் வாசிக்கும்போதுதான் கிடைக்கிறது

ராகவேந்திரன்

*

அன்புள்ள ஜெ

ஆனையில்லா தொகுதியை இன்று வாசித்து முடித்தேன். இந்த தொகுதியை இன்னும்கூட வாசிப்பேன் என நினைக்கிறேன். வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு கதையை என் வீட்டில் அனைவரும் கூடி வாசிப்போம். அந்த கொண்டாட்ட மனநிலையே அபாரம். அண்மையில் என் அம்மா தவறிவிட்டார்கள். அப்பா மிகவும் டிப்ரஸ் ஆகிவிட்டார். வீடே சோர்வாக இருந்தது. அத்தனை சோர்வையும் இந்த தொகுப்பு போக்கிவிட்டது. உண்மையில் தமிழில் வாசிக்கவேண்டிய படைப்பு இது. உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கும் கதைகள்.

ஜெமினி கிருஷ்ணகுமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2022 10:31

November 24, 2022

அஞ்சலி- நாரணோ ஜெயராமன்

[image error]

தமிழ் நவீனக் கவிதையின் உருவாக்க காலத்தில் செயல்பட்டவர்களில் ஒருவர் பேராசிரியர் நாரணோ ஜெயராமன். கசடதபற போன்ற இதழ்களில் எழுதினார். பிரமிள் முன்னுரையுடன் அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியாகியது. சுந்தர ராமசாமி நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதிய பல்லக்கு தூக்கிகள் தொகுப்பின் முன்னுரை நாரணோ ஜெயராமன் எழுதியது.  தத்துவப்பேராசிரியராக இருந்தார். அவருடைய எழுத்துவாழ்க்கை எழுபதுகளிலேயே நின்றுவிட்டது.

நாரணோ ஜெயராமன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 16:33

என்னைப் பற்றிய ஆவணப்படத்துக்கு விருது

சென்ற ஆகஸ்ட் மாதம் மலையாள தொலைக்காட்சியான ஆசியாநெட் என்னைப்பற்றிய ஒரு முப்பது நிமிட ஆவணப்படத்தை எடுத்தது. எம்.ஜி.அனீஷ் அதை இயக்கியிருந்தார். ஓணம் நாளில் அது ஒளிபரப்பானது. அதே ஓணம் நாளில் மழவில் மனோரமா (மலையாள மனோரமா இதழின் தொலைக்காட்சி) சார்பில் இதழியலாளர் ஜெயமோகன் என்னைப்பற்றி இன்னொரு ஆவணப்படம் எடுத்து அதுவும் வெளியாகியது. 

2022 ஆம் ஆண்டுக்கான ஊடக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எம்.ஜி. அனீஷ் என்னைப்பற்றி தயாரித்த ஆவணப்படம் ‘தோராக் கதகளுடே நாஞ்சிநாடு’ (ஈரமுலராத கதைகளின் நாஞ்சில்நாடு) சிறந்த வாழ்க்கைவரலாற்று– ஆளுமைச் சித்திர ஆவணப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது.

எம்.ஜி.அனீஷுக்கு பாராட்டுக்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 10:36

நமது அறிவியலும் நமது புனைகதையும்

விசும்பு – அறிவியல்புனைகதைகள் வாங்க

இந்தக் கதைகளை நான் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவே எழுதினேன் என்று சொல்லமுடியாது. கதைகள் வழக்கம்போல சம்பந்தமில்லாத ஏதோ தொடக்கப்புள்ளியில் இருந்து முளைத்து கிளைவிட்டு எழுந்தவைதான். ஆனால் இவற்றை எழுதும்போது பல காலமாகவே என் மனத்தில் இருந்த ஓர் எண்ணம் துணையாக அமைந்தது.

அதாவது அறிவியல் என்று நாம் இன்று சொல்லிக் கொண்டிருப்பது ஐரோப்பிய அறிவியலை மட்டுமே. கிரேக்க ஞானமரபில் வேர்கொண்டு, ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் பேருருவம் கொண்ட அறிவியல் அது. உலகமெங்கும் உள்ள அறிவியல் ஞானங்களை முழுக்க அது தன்னுடைய தர்க்கக் கட்டுமானத்துக்குள் கொண்டுவந்து இன்று உலகின் ஒட்டுமொத்த அறிதல்முறையாக மாறிவிட்டிருக்கிறது.

ஆனால் இது அல்லாத அறிவியல்கள் உலகில் இருந்திருக்கின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தனித்தன்மை கொண்ட அறிவியல்கள் இருந்தன. அவை ஐரோப்பிய அறிவியல்களைப் போல நவீனகாலத்துக்காகப் புதுப்பிறவி கொள்ளவில்லை. இன்றைய தேவைகளைச் சந்திக்குமளவுக்கு வளர்ச்சியும் அடையவில்லை. ஆனால் அவற்றின் மூலங்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்திய அறிவியலைப் பொருத்தவரை மருத்துவம், யோகம் ஆகிய இரு தளங்களில் அது மேலை அறிவியலைத் தாண்டிய பல நுண்ணிய தளங்களைத் தொட்டிருக்கிறது.

சமீபமாக உளவியலாளர் சி.ஜி.யுங்கின் எழுத்துக்களை விரிவாக வாசிக்கும்போது அது மேலும் உறுதிப்படுகிறது. யுங் இந்த உண்மையை உணர்ந்திருந்தார். மேலை உளவியல் என்பது இந்திய யோகமுறையுடன் ஒப்பிடும்போது குழந்தை நிலையிலேயே இருக்கிறது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தன் எழுத்துக்களில் மேலை அறிவியலின் தர்க்கத்தைக்கொண்டு அதைப் புரிந்துகொள்ள யுங் மிகத்தீவிரமாக முயற்சி செய்கிறார்.

அறிவியல் புனைவு குறித்தும் எனக்கான ஒரு புரிதல் உள்ளது. அறிவியல் புனைகதைகள் என்பவை ஒரு வழக்கமான திகில்கதை அல்லது துப்பறியும் கதையில் சில அறிவியல் கூறுகளைக் கலந்துகொள்வன என்ற அளவிலேயே தமிழில் நம்மால் இதுவரை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அறிவியல் என்றால் தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் அல்லது வியப்பூட்டும் ஊகங்கள் என்றும் நாம் எண்ணுகிறோம். ஆகவே நம் அறிவியல் கதைகள் எந்திரன்கள், வான்வெளிப் பயணம், வேற்றுக்கோள் உயிர்கள் ஆகியவை சார்ந்தே உள்ளன. இவையல்லாமல் அறிவியல் கதைகளை நம்மால் கற்பனை செய்ய இயலவில்லை.

என் நோக்கில் அறிவியல் கதை என்பது இருதளங்களில் செயல்படக்கூடியது. ஒன்று அறிவியலின் கேள்விகளுக்கு இலக்கியத்தின் வழிமுறையான கற்பனையைக் கொண்டு பதில் சொல்ல முயல்வது. இது ஒரு மேலோட்டமான தளம். இரண்டு, வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளுக்கு அறிவியலின் படிமங்களைப் பயன்படுத்திப் பதில் தேட முயல்வது.

எப்படி புனைகதையானது வரலாற்றில் இருந்து படிமங்களை எடுத்துக்கொண்டு வரலாற்றுக்கதைகளை உருவாக்குகிறதோ அப்படி அறிவியல்புனைவு அறிவியலில் இருந்து படிமங்களை எடுத்துக்கொண்டு முன்செல்லவேண்டும்.. காலம், மரணம், பிறப்பு மற்றும் இறப்பின் பொருள், இருத்தலின் நோக்கம், மானுட உறவுகளின் சிக்கல்கள், மானுட உணர்ச்சிகள் என எவற்றையெல்லாம் வழக்கமாக இலக்கியம் ஆராய்கிறதோ அவற்றையே அறிவியல் புனைகதைகளும் அறிவியலின் படிமங்களைக்கொண்டு ஆராய்கின்றன.

இவ்விரு வகைகளில் எழுதப்படும் அறிவியல் புனைகதைகளுக்கே இலக்கிய மதிப்பு இருக்க முடியும்.மற்றவை வெறும் வேடிக்கைகள் மட்டுமே. அப்படிப்பட்ட இலக்கியத்தரமான அறிவியல் புனைகதைகள் அறிவியலும் மானுட ஆழ்மனமும் சந்திக்கும் புள்ளியில் இருந்து உருவாகின்றன. நம்முடைய ஆழ்மனமானது நம் மரபில் இருந்து வந்துள்ள நம் அறிவியலுடனேயே அதிகமும் உரையாடுகிறது. அதில் இருந்தே அது வலுவான படிமங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே நாம் எழுதும் அறிவியல் புனைகதைகள் நம்முடைய சொந்த அறிவியலை இன்னமும் நுணுகிக் கையாளக்கூடியவையாக இருக்கவேண்டும். எப்படி நம் இலக்கியம் நம் பண்பாட்டில் இருந்து உருவாகின்றதோ அப்படி நம் அறிவியல் புனைகதைகளும் நம் பண்பாட்டில் இருந்து உருவாக வேண்டும்.

அந்த நம்பிக்கையுடன் நான் 2002 ல் இந்தக் கதைகளை திண்ணை இணைய இதழில் எழுதினேன். பின்னர் பி.கே.சிவக்குமார் முன்னுரையுடன் எனி இண்டியன் பதிப்பக வெளியீடாக இவை 2006ல் நூல்வடிவம் கொண்டன.

இவை இந்திய அறிவியல்கதைகள். தமிழ் அறிவியல் கதைகள். இந்திய, தமிழ் எழுத்தாளனால் மட்டுமே எழுதப்படத்தக்கவை. இவை ஒரு முன்னுதாரண முயற்சிகள். இன்னமும் வீரியம் கொண்ட கதைகள் இந்தத் தளத்தில் மேலும் தமிழில் உருவாகி வரவேண்டும். இவ்வகை அறிவியல் புனைகதைகள் மேலைநாட்டு அறிவியலைஒட்டி அங்குள்ள அறிவியல் புனைகதைகளைச் சார்ந்து எழுதப்படும் கதைகளைவிட தமிழ் மனத்தை ஆழமாகப் பாதிக்கக்கூடியவை.

இந்த நம்பிக்கை கடந்த வருடங்களில் இந்நூல் மூலம் மிக மிக உறுதிப்பட்டது. இத்தொகுப்பில் உள்ள “உற்று நோக்கும் பறவை”, “ஐந்தாவது மருந்து” போன்ற கதைகளைப் பற்றி இன்றுவரை தொடர்ச்சியான விவாதங்கள் பல தளங்களில் நடந்த படியே உள்ளன. தமிழில் வேறெந்த அறிவியல் புனைகதைகளையும் பற்றி இத்தனை கவனம் குவிக்கப்பட்டதில்லை. இவ்வளவு நீண்ட தொடர் விவாதம் நிகழ்ந்ததில்லை. காரணம், இவை பேசும் கேள்விகள் ஏற்கெனவே தமிழ் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருப்பவை என்பதும் அக்கேள்விகளை மிகத் தீவிரமாகவே இக்கதைகள் எதிர்கொள்கின்றன என்பதும்தான். அறிவியல் புனைகதை என்பது மன மகிழ்வூட்டும் ஒரு வேடிக்கைப் புனைவுதான் என்ற தளத்தில் இருந்து இக்கதைகள் மூலம் தமிழிலக்கியம் முன்னகர்ந்திருக்கிறது.

ஜெயமோகன்

(விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ள விசும்பு அறிவியல்புனைகதைகள் நூலுக்கான முன்னுரை)

விசும்பு அறிவியல்புனைகதைகள் – பி.கே.சிவக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 10:35

ஊத்துக்காடு

[image error]

அருண்மொழியை கடுப்பேற்ற நான் அடிக்கடி (உச்ச ஸ்தாயியில்) பாடும் பாடல் ‘தாயே யசோதா!” . அதை பல கர்நாடக வித்வான்கள் “தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த..” என்றுதான் பாடியிருப்பார்கள். ன்+அ புணர்ச்சியும், அதில் உச்சரிப்பில் அழுத்தம் விழுவதும் உருவாக்கும் மாயம். கிருஷ்ணன் ஒரு நாயர் என்பதை இந்தப்பாடல் ஆதாரபூர்வமாக நிறுவுகிறது.(இதைச்சொன்னால் தஞ்சை காவேரிக்கரைப்பகுதி பெண்கள் கோபம் கொள்கிறார்கள்)

இதன் ஆசிரியர் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர். தமிழில் நாம் ரசிக்கும் பல இசைப்பாடல்கள் அவரால் எழுதப்பட்டவை

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் [image error] ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 10:34

வல்லினம், ஜார்ஜ்டவுன் இலக்கிய விழா சிறப்பிதழ்

வல்லினம் மலேசியா இணைய இதழ் இந்த மாதம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. 25 நவம்பர் 2022 அன்று காலை நான் வாசகர்களுட்ன உரையாடுகிறேன். என்னுடைய அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம்  Stories of the True வெளியிடப்படுகிறது

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா நிகழ்ச்சி நிரல்

வல்லினம் இதழ்

 

Jeyamohan: The Free and Ferocious Elephant of Tamil Literature

GTLF & வல்லினம் இலக்கிய விழா நிரல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 10:32

ஆழத்தை துப்பறிதல், கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் வாங்க பத்துலட்சம் காலடிகள் மின்னூல் வாங்க ஜெயமோகன் நூல்கள் வாங்க

அன்புள்ள ஜெ

நான் துப்பறியும் கதைகளை விரும்பிப் படிப்பவன். அது ஏன் என நானே யோசித்திருக்கிறேன். நண்பர்களிடம் பேசும்போது அவர்களெல்லாம் துப்பறியும் கதைகளை உதாசீனம் பண்ணி பேசுவதுண்டு. என்ன காரணம் என நான் யோசிப்பேன். துப்பறியும் கதையின்  பார்ம் என்பது மனுஷ மனசு ஒரு விஷயத்தை ஆராய்ந்து அறியக்கூடிய அதே பார்ம் தான் . ஒரு சின்ன க்ளூ கிடைத்ததுமே நம் மனசு அலெர்ட் ஆகிவிடுகிறது. அதை அலசிக்கொண்டே இருக்கிறோம். மேலே மேலே செல்கிறோம். அப்படித்தான் எல்லாவற்றையும் அறிகிறோம். இதேதான் துப்பறியும் கதைகளில் உள்ளது. கதைகளுக்கு ரெண்டு பேட்டர்ன்தான் உள்ளது என நான் நினைக்கிறேன். ஒன்று துப்பறிந்துகொண்டே செல்லும் கதை. இன்னொன்று அறிந்ததை விஸ்தாரமாகச் சொல்லும் கதை. நம்மவர் என்ன நினைக்கிறார்கள் என்றால் இரண்டாம் பேட்டர்ன் தான் சிறப்பு என்று. அத்து அப்படி இருக்கவேண்டும் என்னும் அவசியம் இல்லை. துப்பறிந்துசெல்லும் பேட்டர்னும் நல்ல கதையாக இருக்கலாம். உலகில் ஏராளமான கதைகள் அப்படி உள்ளன. எனக்கு அந்த பாணி கதைகளில் எடித் வார்ட்டன் மேல் பெரிய ஈடுபாடு உண்டு. அவருடைய பேய்க்கதைகளும் துப்பறியும் கதைகளும் மனுஷ மனசுக்குள் ஆழமாகச் செல்லும் கதைகள்.

இந்த புனைவுக் களியாட்டுக் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் ஔசேப்பச்சன் வரும் கதைகள்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானது. (இழை என்ற கதையும் துப்பறியும்கதைதான்) இந்தக்கதைகளிலுள்ள lucidity யும்சரி foreceம் சரி சாதாரணமான கதைகளில் வருவதில்லை. அதிலும் ஓநாயின் மூக்குதான் இந்தவகையில் மிகச்சிறப்பான கதை என நினைக்கிறேன். அது சரித்திரம் முதல் சமகாலம் வரை இருந்து வரும் ஒரு மானசீகமான தொடர்ச்சியை அல்லது subconscious continuity மாதிரி ஒன்றைச் சொல்கிறது. சரித்திரம் சமகாலம் மனுச மனசு எல்லாமே ஒரே  narration தான் என்று சொல்கிறது. சிறப்பான கதைகள்

ரங்கராஜ் கிருஷ்ணசாமி

*

அன்பிற்குரிய ஜெ

பத்துலட்சம் காலடிகள் முதலிய கதைகளை வாசித்தேன். மிகச்சிறப்பான கதைகள். துப்பறியும் கதைகளுக்குரிய கிளீஷேக்கள் இல்லை. துப்பறியும் கதையில் அறிவியல் முறைகளைவிடpsychological வழிமுறைகளே அதிகமும் கடைப்பிடிக்கப்படுகின்றன. துப்பறிவதன் தியரிதான் அதிகமும் பேசப்படுகிறது. அது சுவாரசியமாக உள்ளது

என்.ஜெ.மாணிக்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 10:31

கனவு இல்லம்

கனவு இல்லம்- செய்தி

இவ்வாண்டுக்கான கனவு இல்லம் திட்டத்தின்படி பத்து எழுத்தாளர்களுக்கு இல்லங்கள் அளிக்கப்பட்டிருக்கும் செய்தி கண்டேன். நிறைவூட்டும் அறிவிப்பு இது. இல்லம் பெற்றவர்களில் திலகவதி போன்றவர்கள் ஏற்கனவே செல்வந்தர்கள். பொற்கோ போன்றவர்கள் துணைவேந்தர்கள். இந்த இல்லத்தில் அவர்கள் குடியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது.ஆனால் இவ்விருதில் பொருளியல் நிலையை அளவுகோலாகக் கொள்ள இயலாதுதான்.பொதுவான அளவுகோலையே கொள்ள இயலும்.

எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கு இந்த இல்லம் மிகுந்த உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். இன்று தமிழகத்தில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் பரிசுகளில் இதுவே பணமதிப்பிலும் பெரியது. இது இந்திய அளவிலும் ஒரு முன்னோடி திட்டம். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இல்லம்பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 10:31

இமையத்திற்கு குவெம்பு விருது

கன்னட இலக்கியத்தின் தலைமகன் என கருதப்படும் குவெம்பு (கே.வி.புட்டப்பா) நினைவாக வழங்கப்படும் இலக்கியத்துக்கான குவெம்பு தேசிய விருது 2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2013 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. ரூ ஐந்து லட்சமும் சிற்பமும் அடங்கிய விருது இது. தமிழில் இவ்விருது பெறும் முதல் எழுத்தாளர் இமையம்.

இமையத்திற்கு வாழ்த்துக்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 08:00

தமிழ் விக்கி, மலேசியா விழா

கூலிம் நவீன இலக்கியக் களம் தமிழ்விக்கியில் மலேசியாவின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.மிக விரிவான தரவுகளுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியது. மலேசியாவில் தமிழ் விக்கி பங்களிப்பாளர்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வு 25 நவம்பர் 2022 அன்று ஏற்பாடாகியுள்ளது தமிழ் விக்கி: எழுத்தாளனுக்குக் கொடுப்பதென்ன?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2022 07:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.