Jeyamohan's Blog, page 671

December 1, 2022

பெங்களூர் இலக்கிய விழாவில்…

பெங்களூர் இலக்கியவிழாவில் பங்கேற்கிறேன். வரும் டிசம்பர் 3 அன்று நிகழும் பெங்களூர் இலக்கிய விழாவில் Stories of the True பற்றிய உரையாடல். மொழியாக்கம் செய்த பிரியம்வதாவும் கலந்துகொள்கிறார்

உரையாடல் டிசம்பர் 4  காலை 11 15 மணிக்கு லலித் அசோக் விடுதியில் நடைபெறும்.

டிசம்பர் 3 ஆம்தேதி காலை பெங்களூர் வந்து நான்காம் தேதி மாலை திரும்பி வருவேன்.

ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 03:39

November 30, 2022

பனிநிலங்களில்- 1

எங்கள் ஸ்வீடன் பயணம் திடீரென்று திட்டமிடப்பட்டது. சென்ற ஜூன் மாதம் அஜிதனும் சைதன்யாவும் ஓர் ஐரோப்பியப்பயணம் திட்டமிட்டனர். அவர்கள் இருவருமே இசைமேதை வாக்னரின் ‘அடிப்பொடிகள்’ அதை இசைப்பற்று என்பதை விட ஒருவகை வழிபாடு என்பதே பொருத்தம். ஜெர்மனியில் பேய்ரூத் என்னும் ஊரின் வாக்னரால் கட்டப்பட்டு, இன்று வாக்னரின் ஓப்பராக்களுக்காக மட்டுமே நிகழும் இசைநிகழ்ச்சியில் பங்கெடுக்க இடம் முன்பதிவு செய்திருந்தார்கள். அதில் இடம் கிடைக்க பல ஆண்டுகள் காத்திருப்பு தேவைப்படும். கொரோனாவில் அவ்வாறு முன்பதிவு செய்திருந்த பலர் மறைந்தனர், பலர் தவிர்த்தனர். ஆகவே சட்டென்று இடம் கிடைத்தது. முழுமையாகப் பணம் கட்டி உடனடியாக இருக்கைகளும் பெற்றுக்கொண்டனர். 

ஆனால்  விசா மறுக்கப்பட்டது. விசாவுக்கான நிபந்தனைகள் எல்லையில்லாமல் நீள்பவை. பேய்ரூத் முன்பதிவு இருப்பதனால் நோக்கம் தெளிவு என்பது விசா கிடைக்க எளிதாக இருக்கும் என கணித்தது தவறாகப் போய்விட்டது. அஜிதன் கொஞ்சம் சோர்வில் இருந்ததை உணர்ந்த அரங்கசாமி நண்பர் செந்தழல் ரவி வழியாக ஸ்வீடனுக்கு ஓர் அழைப்புக்கு ஏற்பாடு செய்தார். அங்குள்ள தமிழ் அமைப்பின் அழைப்பும் இணைந்தது. நானும் அருண்மொழியும் இருமுறை ஐரோப்பா சென்றவர்கள். ஆகவே விசா கிடைக்கும் என்றும், அஜிதனுக்கும் சைதன்யாவுக்கும் முதல்முறை விசா கிடைத்தால் அடுத்தமுறை எளிதாகக் கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.

செந்தழல் ரவி பவா செல்லத்துரையின் உரையாடலில் அடிக்கடி வரும் பெயர். எஸ்.கே.பி.கருணா, செந்தழல் ரவி ஆகியோரை பவாவுடன் ஆழமாக இணைக்கும் அம்சம் அவர்களிடமிருக்கும் பொதுநலன் சார்ந்த, மனிதநேயம் சார்ந்த பார்வைதான். பிறருக்கு இயல்பாகவே உதவுபவர்கள். சென்ற ஆண்டுகளில் வெவ்வேறு பொதுநலன் சார்ந்த செயல்பாடுகளுக்காக அவர்களை நானும் நண்பர்களும் அணுகியிருக்கிறோம். ஒருமுறை கூட அவர்கள் அவற்றைச் செய்யாமலிருந்ததில்லை. ரவி ஸ்வீடனில் தமிழ்ப்பணிகளை ஒருங்கிணைக்கிறார். பலநூறுபேருக்கு வேலைபெற உதவியிருக்கிறார்.

ஆனால் நடுவே மலேசியாவின் ஜார்ஜ் டவுன் இலக்கிய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு, விமானச்சீட்டு பதிவுசெய்திருந்தேன். நவம்பரில் ஸ்வீடன் சென்றால்தான் உண்டு, இல்லையென்றால் ஜூன் ஜூலைதான். ஆகவே நவம்பர் 9ல் கிளம்பி 19ல் திரும்பி வருவதாக திட்டமிட்டோம். விசா விண்ணப்பம் அனுப்பும்போது உறுதியான நம்பிக்கையுடனிருந்தோம். ஏனென்றால் செந்தழல் ரவி ஸ்வீடனின் நிலையான குடிமகன், அங்கே வணிகம் செய்பவர்.

விசா வந்தது, ஆனால் மிகத்தாமதமாக. விசா கையில் கிடைத்தது நவம்பர் 12 அன்றுதான்.ஆகவே டிக்கெட்டை மாற்றிப்போட்டோம். நவம்பர் 13 அதிகாலையில் கிளம்பி நவம்பர் 21 காலையில் திரும்பி வரும்படியாக. ஏற்கனவே திட்டமிட்டிருந்த டென்மார்க் பயணம் தவிர்க்கப்பட்டது.

குறுகிய பயணம் என்றாலும் மிக நிறைவூட்டும் அனுபவமாக இருந்தது. ஸ்டாக்ஹோம் நகருக்கு 13 ஆம் தேதி மதியமே சென்று சேர்ந்தோம். இப்போது எனக்கு அன்றாடவாழ்க்கையில் சில நினைவுச்சிக்கல்கள், அதன் விளைவான குளறுபடிகள், ஆகவே உருவாகும் ஒருவகை பதற்றம். அருண்மொழியை நம்பித்தான் பயணம்.

அருண்மொழியும் அஜிதனும் ஸ்டாக்ஹோமில் நேரடியாக வெளியே சென்றுவிட்டனர். நானும் சைதன்யாவும் வேறொரு திசையில் திரும்ப அங்கே ஒரு அம்மாள் எங்களிடம் போர்டிங் பாஸ் கேட்டாள். இல்லையேல் வெளியே செல்லமுடியாது என்றாள். கையில் போர்டிங் பாஸ் இல்லை. ஆகவே அதீதப் பதற்றம் அடைந்து, அங்குமிங்கும் அலைமோதினேன். சைதன்யாதான் பேகேஜ் கிளெய்ம் பகுதிக்கு நேரடியாகச் செல்லலாம் என அறிவிப்புகளை கொண்டே முடிவுசெய்து நடந்தாள். ஒன்றும் சிக்கல் இல்லை. வெளியே வந்துவிட்டோம். ஆனால் அதற்குள் சைதன்யாவை பதற்றம்கொள்ளச் செய்துவிட்டேன்.

ரவி, மகள் க்ளாரா

செந்தழல் ரவியும் அவர் நண்பர் பிரகாஷும் வந்து மலர் தந்து வரவேற்றனர். பிரகாஷ் என் நல்ல வாசகர். செந்தழல் ரவியை பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்திருக்கிறேன். பவா செல்லத்துரையை பற்றி அவர் ஓர் ஆவணப்படம் எடுத்தார். அதில் நான் ஒரு பேட்டி அளித்திருந்தேன். ரவியின் சொந்த ஊர் திருவண்ணாமலைக்கு அருகே . அவர் இல்லத்தில் அவர் மனைவி அர்ச்சனாவும், மகள் கிளாராவும் மகன் அலெக்ஸும் இருந்தனர். அலெக்ஸுக்கு ஒருவயது. ஸ்வீடிஷ்குழந்தையாக ஆகிக்கொண்டிருக்கும் பருவம். ஒருநாளில் நாலைந்து கொண்டாட்டங்கள், நாலைந்து அழுகைகள், நாலைந்து தூக்கம், நாலைந்து விழிப். எப்போதும் கையில் பால்புட்டியும் சப்புவதற்கு ஒரு சிவப்பு போர்வையும் இருக்கும்.

செந்தழல் ரவி சவுத் இண்டியன் என்னும் உணவகத் தொடரை அங்கே நடத்துகிறார்.(சவுத் இந்தியன் உணவகம் Radmansgatan 52, Stockholm) கொரோனாவின் சிறு பின்னடைவுக்குப் பின் சிறப்பாக நடைபெறும் உணவகங்கள். மாலையில் வெள்ளைக்காரர்கள் நெரிசலிட்டு அமர்ந்து பரோட்டா, மட்டன் சுக்கா எல்லாம் சாப்பிடுவதைக் காண உற்சாகமாக இருந்தது.

ரவி ஒரு கொள்கை கொண்டிருக்கிறார். பொதுவாக இவ்வகையான ஐரோப்பிய, அமெரிக்க உணவகங்களில் காரமும் புளிப்பும் உப்பும் குறைவாக, வெள்ளைநாக்குக்கு உகந்ததாக மாற்றப்பட்டிருக்கும். ரசத்தில்கூட சீஸ் கொஞ்சம் இருக்கும். ரவி சரியான தமிழ்ச்சுவை கொண்ட உணவுகளை அளிக்கிறார். ஆச்சரியமாக ஸ்வீடன் மக்களுக்கு அவை பிடித்திருக்கின்றன.

 

பொதுவாக நான் நல்ல இந்திய உணவுகளை இந்தியாவுக்கு வெளியில், குறிப்பாக சிங்கப்பூரிலும் மலேசியாவிலுமே சாப்பிட்டிருக்கிறேன். நல்ல சமையற்காரர்களுக்குரிய ஊதியம் அவர்களாலேயே அளிக்கப்பட முடியும் என்பது ஒரு காரணம். அங்கெல்லாம் உணவுப்பொருட்களின் கலப்படம் அனேகமாக இல்லை என்பதும், உணவுத்தரம் மேல் அரசின் கட்டுப்பாடு மிகக்கறாரானது என்பதும் இன்னொரு காரணம். ஓர் உணவக அதிபர் ஒருமுறை சொன்னார். இந்தியாவில் உணவுத்துறை அமைச்சர் இல்லத்தின் சமையலுக்கே கொஞ்சமாவது கலப்படம் கொண்ட உணவுப்பொருள்தான் கிடைக்கும், இங்குள்ள பொதுவான அமைப்பு அப்படி என.

ரவியின் ஸ்வீடன் தென்னிந்திய உணவகம் நான் சாப்பிட்ட மிகச்சிறந்த அசைவ உணவு கொண்டது. அதன் சமையல்நிபுணர் சேகர் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். அமெரிக்காவிலும் ஹவாயிலும் சமையற்பணி செய்தவர். போடிநாயக்கனூரில் தோட்டங்களும் இல்லங்களும் கொண்ட செல்வந்தரும்கூட.

முதல் நாள் ஓய்வு. இரண்டாம்நால் ஸ்டாக்ஹோம் நகரைச் சுற்றிப் பார்த்தோம். ஓர் ஐரோப்பிய நகரை குளிர்காலத்தில் நான் பார்ப்பது இதுவே முதல்முறை. நகரே குளிர்ந்து உறைந்துபோய் இருந்தது. மரங்கள் இலைகளை உதிர்த்து பனிப்பொழிவுக்காகக் காத்திருந்தன. மிகமிகத் தூய்மையான நகரம். செங்கற்கள் மிகச்சீராக அடுக்கப்பட்டு கட்டப்பட்ட அழகிய சுவர்களும் வளைவுகளும் கொண்ட  கட்டிடங்கள். செஞ்சுண்ணக் கல்லும் சாம்பல்நிறச் சுண்ணக்கல்லும் வெட்டி அடுக்கி எழுப்பப்பட்ட ஓங்கிய மாளிகைகள்.

பழைய கட்டிடங்கள் சாளரங்களும் உப்பரிகைகளும் கொண்டவை. புதிய கட்டிடங்கள் சாளரங்களே இல்லாமல் கண்ணாடி நீள்சதுரங்கள். சாலைகளில் கருங்கல்வெட்டுகளோ, செங்கற்களோ பரப்பப்பட்டிருந்தன. வளைவான அலைகளாக அவற்றின் அமைப்பு. ஒரு பெரும் இலையுதிர்காலம் முடிந்திருந்தது. ஆனால் எங்கும் சருகுகளே இல்லை.

ஸ்வீடனின் முதன்மைச் சிறப்பாக நான் கண்டது அந்த பரபரப்பின்மை. ஜப்பான் மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். அமெரிக்கர்கள் விரைவுநடையிலேயே இருந்தனர். ஸ்வீடனில் எவருக்கும் அவசரமில்லை. எந்த முகத்திலும் பரபரப்பு இல்லை. ஒருவகையான நிதானம். அங்கே வேலைச்சூழலும்கூட நெருக்கடிகள் அற்றதுதான் என்று ரவி சொன்னார். குளிர்காலம் நெருங்கும்போது இன்னமும் நிதானம் கைகூடுகிறது. 

(மேலும்)

செந்தழல் ரவி இயக்கிய பவா என்றொரு கதைசொல்லி ஆவணப்படம் பகுதி 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2022 10:35

இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி தமிழிலக்கியத்துடன் எழுபதாண்டுகளாக இருந்து வருகிறார். ஒருமுறை அவர் சொன்னார், ”வழக்கமாக சிற்றிதழ்களில் எழுதி பேரிதழ்களுக்குச் செல்வார்கள். நான் பேரிதழ்களிலிருந்து சிற்றிதழ்களுக்குச் சென்றேன்”.

குறும்பான மெல்லிய நகைச்சுவை இபாவின் அடையாளம்.  ‘அமெரிக்காவில் மகனுடன் இருந்திருக்கலாமே, ஏன் இந்தியா வந்தீர்கள்?’ என்று நான் ஒருமுறை கேட்டேன். “Jeyamohan, i want a country to hate” என்றார்.

இந்திரா பார்த்தசாரதி தமிழ் விக்கி

[image error] இந்திரா_பார்த்தசாரதி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2022 10:34

வைணவங்கள் உரை -கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

புதுவை வெண்முரசு குழுவினரின் சார்பாக திரு. அரிகிருஷ்ணன் அவர்களின் அறுபதாவது அகவையின் மணிவிழாவை இலக்கிய விழாவாகவும் கொண்டாட எண்ணியதின் பேரில் தங்களின் உரையை இரண்டாவது முறையாக நேரில் கேட்க முடிந்தது.

முதன்முறையாக தங்களின் உரையை நான் கேட்பதற்கும் காரணமாக அமைந்தது அரிகிருஷ்ணன் அவர்கள் தான். புதுவை வெண்முரசு கூடுகையின் ஐம்பதாவது சிறப்பு நிகழ்வாக தங்கள் பங்கேற்று வெண்முரசு பற்றியும் வரலாறு பற்றியும் நீண்ட தெளிவான உரையை அளித்தீர்கள்.

சமீப காலங்களில் உங்களின் வருகையை தவிர்த்து நான் பெரிதும் உற்சாகமடைந்த தருணங்கள் மிகவும் குறைவு. குறுகிய காலத்திலேயே என்னை மீண்டும் மீண்டும் உற்சாகமடைய செய்த புதுவை வெண்முரசு கூடுகை நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கு முயன்று, பின் தோற்று இப்போது அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். முன்னதாக ஐம்பதாவது சிறப்பு கூடுகை நிகழ்ச்சியின் போது வரலாறு குறித்த தங்களின் உரை என்னை மீண்டும் ஒரு மாணவன் என்ற மனநிலையில் அங்கு இருக்க வைத்தது.

காலந்தோறும் பண்பாட்டுவரலாறு எப்படி தொகுத்துக் கொண்டே பலவற்றை சேர்த்துக் கொண்டே வருகிறது என்பதை அறிய முடிந்தது. அரசியல், பண்பாடு என அனைத்தையும் உள்ளடக்கிய தெளிவான உரை. ஆறு தரிசனங்கள் பற்றியும் அதனை எப்படி இந்திய தத்துவத்தில் அணுக வேண்டும் என்பதை பற்றியும் மாணவர்களுக்கு எப்படி போதிக்க முடியும் என்று தங்களின் உரை மூலமாக நான் கற்றுக் கொண்டேன். அதற்கு உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இரண்டாம் உலகப் போரின் போது பசிபிக் தீவுகளில் இருந்த அமெரிக்க -ஜப்பானிய படை வீரர்களுக்கு உணவு பொட்டலங்களும் வேண்டிய பொருட்களும் ஆகாய மார்க்கமாக கொடுக்கப்பட்டது. விமானிகள், வீரர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள அமெரிக்க ஜப்பானிய கொடிகளும் பீரங்கிகளும் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவற்றின் மூலம் வீரர்களுக்கு வேண்டிய பொருட்கள் மேலே இருந்து கிடைத்துக் கொண்டிருந்தன.

பொருட்கள் மேலிருந்து கீழே விழுவதை கண்ட தீவு வாசிகள் அவர்களும் இதே போல கொடியை நிறுத்தி மேலே இருந்து பொருட்களை பெற்றுக் கொண்டிருந்தனர். போர் முடிந்து சொந்த ஊருக்கு வீரர்கள் திரும்பி விட்டதும் பொருட்கள் மேலே இருந்து கீழே போடுவதை நிறுத்திவிட்டார்கள்.

போர் பற்றிய விவரம் அறியாத தீவு வாசிகள் திரும்பவும் அதே போன்று கொடியை நிறுத்தி வைத்து பொருட்களை விழ வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு கோணத்தில் கொடியை நிறுத்தி வைத்து பொருட்களுக்காக அவர்களின் காத்திருப்பு தொடர்ந்தது. ஏதாவது ஒரு கோணத்தில் சரியாக வைக்கும் பொழுது நிச்சயம் பொருட்கள் மேலே இருந்து விழும் என்று நம்பி இருந்தனர். அதைப்பற்றிய விவரிப்புடன் நீங்கள் மதங்களைப் பற்றிய உரையை தொடங்கினீர்கள். (கார்கோ கல்ட்)

உலகில் உள்ள பெருவாரியான அல்லது அனைத்து நாடுகளிலுமே கடவுள் மேலே இருக்கிறார். கீழே இருந்து நாம் வேண்டிக் கொண்டால் நமக்கான பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதை சுட்டிக்காட்ட இரண்டாம் உலகப் போரின் கதையை தொட்டு சொல்லி இருந்தீர்கள்.

வைணவங்கள் உரைக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது அந்தக் கதை. வைணவமா?வைணவங்களா? என தலைப்பை அலசிச் சென்ற விதமும் அருமை.

உருவம் அருவம் பற்றிய விளக்கமும் என் நெடுநாளைய சந்தேகத்தைப் போக்கிற்று. ஒன்றைக் குறிக்க, உருவகப்படுத்த வேண்டி உள்ளது. ஆனால் அது அப்படியானது அல்ல என்று உரைத்தது எனக்கு நன்றாக உரைத்தது. இந்த சிலை கடவுள், ஆனால் இது கடவுள் இல்லை. உரையை நேரில் கேட்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய வரி என்று நினைக்கிறேன்.

அறிவியலோடு ஆன்மீகத்தை தொடர்புபடுத்தி உரையை விளக்கியதும் எனக்கு மிகவும் பிடித்தது. குறிப்பிட்ட வேகத்தில் அலைவரிசையில் இயங்கும்போது ஒரு நிலையில் இருக்கும் ஒரு பொருள் தன் இயல்புகள் மாறினால் வேறொன்றாக மாறிவிடும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒரு நிலையில் தற்காலிகமாக இருந்து வேறொன்றாக மாறிக்கொண்டே இருக்கும் இயல்பை கொண்டது என்பதை பொருத்திப் பார்க்க முடிகிறது.

நெடு நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு ஒரே உரையில் விடை அளித்தது போன்ற ஒரு அற்புதம் நிகழ்ந்தது. எந்தக் கேள்வியையும் நான் நேரடியாக கேட்கவே இல்லை. ஆனால் சொன்ன அத்தனை பதில்களும் எனக்கானது போலவே என்னால் உணர முடிந்தது.

எல்லோரிடமும் பொதுவாக ஒரு விஷயம் இருக்கும் என்றால் அது உண்மையாகத்தான் இருக்கும். நான் வழிபடுவதும் கடவுள்தான். நீ வழிபடுவதும் கடவுள்தான். வடிவங்களும் வடிவங்கள் இல்லாமல் இருப்பதும் வெவ்வேறு தன்மை கொண்டதும் அனைத்தும் உண்மைதான்.

அடுத்த தரிசனத்திற்கு காத்திருக்கிறேன்..

மகிழ்ச்சியுடன்,
திருமுருகன்.சு

 

ஜெயமோகன் நூல்கள்

 

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்கஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2022 10:31

இந்து மதம் என ஒன்று உண்டா? – கடிதங்கள்

இந்து மதம் என ஒன்று உண்டா? இந்து மதம் என ஒன்று உண்டா?- 2 இந்து மதம் என ஒன்று உண்டா?-3

அன்புள்ள ஜெ

இந்துமதம் என்று உண்டா என்னும் தொடர் மிக மிக முக்கியமான ஒன்று. நீங்கள் பலவாறாகச் சொல்லிவரும் சித்திரம்தான். ஆனால் அவற்றை மீண்டும் ஒருமுறை தொகுத்து, சுருக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். மதங்களின் பரிணாமம், இருவகை மதங்கள், இயற்கையாக வரலாற்றில் உருவாகி வரும் மதங்களுக்கு இருக்கும் தொகுத்துக்கொண்டு முன்செல்லும் தன்மை மற்றும் உள்விவாதத் தன்மை ஆகியவற்றை மிக விரிவாகவே விளக்கியிருக்கிறீர்கள். இவற்றை ஏதேனும் பிரபல ஊடகங்களில் எழுதியிருக்கலாம். ஏனென்றால் இவை இங்கே கவனிக்கப்படாமலேயே கடந்துசெல்லப்படும். ஆறுமாசம் கழிந்து மீண்டும் அதே பல்லவியுடன் ஆரம்பிப்பார்கள்.

சந்தானகிருஷ்ணன்

*

அன்புள்ள ஜெ,

இந்துமதம் என்று ஒன்று உண்டா என்னும் தொடரை மிகக்கூர்ந்து பலமுறை படித்தேன். இந்தக் கட்டுரை வழியாகத்தான் மதம் என்னும் சொல்லையே ஆங்கிலம் வழியாக வந்த ஐரோப்பியக் கருத்து என்று புரிந்துகொண்டேன். மரபான இந்து ஞானியர் இந்துமதம் என நாம் சொல்லும்போது உறுதியான ஒற்றை தரப்பு என்று சொல்கிறோம் என்று சொல்லி அதை மறுத்து இந்து என ஒரு மதம் இல்லை என்கிறார்கள். சைவம் அந்த மதத்திற்குள் உள்ள துணைமதம் அல்ல என்கிறார்கள். ஆனால் இந்து மெய்ஞான மரபு என்று ஒன்று இல்லை என அவர்கள் சொல்வதில்லை. இந்து மதம் என நாம் சொல்வது இந்து மெய்ஞான மரபைத்தான். அந்த மரபுக்குள் உள்ளவைதான் ஆறுமதங்களும். இந்துமெய்ஞான மரபே இல்லை என்று சொல்லும் இந்து எதிர்ப்புக்கும்பல் சொல்வதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடுண்டு.

தேவிப்பிரசாத்

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்கஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2022 10:31

November 29, 2022

ஊர் திரும்பல்

சென்ற 12 நவம்பர் 2022 அன்று நாகர்கோயிலில் இருந்து கிளம்பி ஒரு நீண்ட பயணம்.  நானும் அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் ஸ்வீடன் சென்றோம், அங்கிருந்து ஃபின்லாந்து, ஆர்டிக் வட்டத்திற்குள் ரோவநாமி (Rovaniemi) என்னும் ஊர் வரை. அங்கிருந்து திரும்பி சென்னை.

வந்திறங்கி சிலமணிநேரம் ஓய்வெடுத்து நானும் அருண்மொழியும் மட்டும் அப்படியே மலேசியா சென்றோம். அங்கே புகழ்பெற்ற ஜார்ஜ்டவுன் இலக்கியவிழாவில் (GTLF) கலந்துகொண்டோம். அருண்மொழி அவ்விழாவின் துணைநிகழ்வான பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் மொழியாக்கங்களின் வெளியீட்டில் உரையாற்றினாள். அதைப்பற்றி ஒரு கட்டுரை முன்னர் எழுதியிருக்கிறாள். என்னுடைய Stories Of The True நூல் அங்கே வெளியிடப்பட்டது. என்னுடன் ஒரு வாசகர் உரையாடலும் நடைபெற்றது.

அதன்பின் பினாங்கிலும் கூலிமிலும் சிலநாட்கள். 29 நவம்பர் 2022 அன்று திரும்பி சென்னை வந்து இன்று 30-நவம்பர் 2022 நாகர்கோயில் திரும்பினேன்.உலகைச் சுற்றி வந்த உணர்வு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2022 10:36

பொருநை விழா, வினாக்கள் எதிர்பார்ப்புகள்

[image error]

லக்ஷ்மி மணிவண்ணன்

ஆனந்த் குமார்

அன்புள்ள ஜெ,

பொருநை விழா பற்றிய முகநூல் குறிப்புகளைக் கண்டிருப்பீர்கள். லக்ஷ்மி மணிவண்ணன் அங்கே அளிக்கப்பட்ட மதிப்புறு ஊதியங்களில் பாகுபாடு இருந்ததாக அறிவித்திருக்கிறார். அங்கே போதிய ஆட்களைக் கூட்ட முடியாமல் அரங்குகளை உயர்நிலைப்பள்ளி மாணவர்களைக் கொண்டு நிறைத்து நவீன இலக்கிய உரைகளைச் செய்யவைத்துள்ளனர். சபரிநாதன் பேசிய கூட்டத்தில் அனேகமாக எவருமே இல்லை என்று ஆனந்த் குமார் எழுதியிருக்கிறார்.

மொத்தமாகவே அவ்விழா ஒரு தோல்வி என்பது முகநூலில் பலர் எழுதும் கருத்துக்களில் இருந்து தெரியவருகிறது. பல கடுமையான எதிர்வினைகள் வந்துள்ளன. அந்த விழா பற்றி கருத்துச் சொல்லும் எழுத்தாளர்களை உபி கூட்டம் இழிவு செய்து எழுதுகிறது. உங்கள் கருத்து என்ன? இந்த விழாக்களை விஷ்ணுபுரம் அமைப்பு நெடுங்காலமாகவே செய்து வருகிறது. இவற்றை சிறப்பாக நடத்த என்ன வழி?

ஆனந்த் எம்

 

அன்புள்ள ஆனந்த்,

பொருநை இலக்கியவிழாவின் குளறுபடிகள், போதாமைகள் எதிர்பார்க்கத் தக்கவையே. இவ்வாறு ஒரு விழா அரசு சார்பில் முன்னர் நடைபெற்றதில்லை. ஆகவே இப்பிழைகள் நிகழாமலிருக்க வாய்ப்பில்லை. இவற்றில் இருந்து என்னென்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை மட்டும் கூற விரும்புகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் இந்நிகழ்வுகளை மேம்படுத்தலாம்.

முதலில் இவ்விழாக்களில் உள்ள முக்கியமான அம்சத்தை எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டும். இதில் இலக்கியம், இலக்கியவாதிகள் மேல் இந்த அரசுக்கு இருக்கும் நல்லெண்ணம் வெளிப்படுகிறது. தமிழகத்தின் சென்ற எழுபதாண்டுக்கால வரலாற்றில் அரசு நவீன இலக்கியத்தை நேரடியாக ஆதரிப்பது இதற்கு முன் நடைபெற்றதில்லை. எந்த வகையான ஊக்கமும் அளிக்கப்பட்டதில்லை. அவ்வகையில் இந்த முயற்சி முன்னோடியானது, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமானது, பாராட்டப்படவேண்டியது.

அந்த நல்லெண்ணத்துக்கு நவீன இலக்கியச் சூழல் கடமைப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி என்னும் வகையில் நான் அரசுக்கு நன்றி சொல்லவேண்டியவன்.  முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி-  பண்பாட்டுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி.

இத்தகைய விழாக்களில் நிகழும் முதல்சிக்கல் என்னவென்றால் அரசு அதிகாரிகளிடம் விழாவை நடத்தும் பொறுப்பை முழுமையாக விட்டுவிடுவதுதான். அரசதிகாரிகளில் மிகச்சிலர் தவிர அனேகமாக எவருக்கும் இலக்கியம், நவீன இலக்கியம் எதுவுமே தெரியாது. அவர்கள் அறிந்ததெல்லாமே ‘நடைமுறை மரபு’ (புரோட்டோக்கால்) மட்டுமே. அவர்களுக்கு எந்த நவீன இலக்கிய ஆளுமையையும் தெரிந்திருக்காது. எந்த இலக்கிய அரங்கையும் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆகவே இத்தகைய அரங்குகளை இலக்கிய ஆர்வம் கொண்ட அதிகாரிகளை சிறப்புப் பொறுப்பில் நியமித்து, அவர்களுக்கு நிதிப்பொறுப்பும் அதிகாரமும் அளித்து ஒருங்கிணைக்கவேண்டும். அவருக்கு உதவ உள்ளூர் இலக்கியவாதிகளின் ஒரு நல்ல குழுவையும் உருவாக்க வேண்டும். வழக்கமான அதிகாரிகளிடம் இது செல்லக்கூடாது.

கல்பற்றா நாராயணன் போல பிறமொழி எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் அரங்குகள் இப்படி பொறுப்பில்லாமல் அமையும்போது தமிழகம் மீது தவறான உளப்பதிவு உருவாகிறது. இது குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்டதாக அரசுக்கு அமையும். 

சாமானிய அதிகாரிகளிடம் பொறுப்பு சென்றால் என்ன ஆகும் என்பதற்கு எனக்கு ஓர் அனுபவம் உண்டு. ஒருமுறை தஞ்சை தமிழ்ப்பல்கலையில் நான் அழைப்பின்பேரில் கல்லூரி ஆசிரியர்களுக்கு இலக்கிய வகுப்பெடுக்க சென்றிருந்தேன். மாணவர்களான கல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் வசதியான உயர்தர அறைகள் அளிக்கப்பட்டன. ஆசிரியனாகச் சென்ற எனக்கு கடைநிலை ஊழியர்களுக்கான அறை.

ஏனென்றால் நடைமுறை மரபின்படி கல்வித்தகுதி, பதவி இரண்டின் அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படவேண்டும். எனக்கு கல்வித்தகுதி உயர்நிலைப்பள்ளி அளவுதான் (பட்டப்படிப்பை முடிக்கவில்லை) எனக்கு பதவியும் இல்லை. நான் என்னை அழைத்தவர்களை தொலைபேசியில் அழைத்தேன். தொடர்பு கொள்ள முடியவில்லை. இயக்குநர் பாலாவின் திரைப்பட நிறுவன நிர்வாகியை அழைத்து எனக்கு ஒரு நட்சத்திர விடுதியை தஞ்சையில் அமர்த்திக்கொண்டு, வண்டி வரச்செய்து கிளம்பிச் சென்று அங்கே தங்கி காலையில் வகுப்புக்கு வந்தேன்.

இதுவே இங்கும் நிகழ்ந்துள்ளது. அரசில் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்று பார்த்து அந்த அடிப்படையில் கௌரவஊதியம் வழங்கியுள்ளனர். கௌரவ ஊதியம் என்பது அனைவருக்கும் நிகராகவே அளிக்கப்படவேண்டும் என்பது உலகம் முழுக்க வழக்கம். இப்போது புகழ்பெற்ற பினாங்கு ஜார்ஜ்டவுன் இலக்கிய விழாவில் கலந்துகொண்டு திரும்புகிறேன். எனக்கு ஒரு சிறப்பு அமர்வும், என் நூல் (Stories of the True) வெளியீடும் இருந்தது. அருண்மொழி நங்கை அதில் துணைநிகழ்வாக நடைபெற்ற சிங்கை  எழுத்தாளர் பி. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த ஷேக்ஸ்பியர் நாடகங்களின் வெளியீட்டில் ஒரு பேச்சாளர். ஆனால் மதிப்புறு ஊதியம் நிகரானதே.

எங்கும் இலக்கியவிழாக்களில் நிகழ்வது இதுதான். தமிழக அரசு நடத்தும் இலக்கியவிழாவின் முக்கியத்துவம் என்ன என்பதை ஒரே உதாரணம் கொண்டு சுட்ட விரும்புகிறேன். இதே சென்னையில் ஹிந்து லிட் ஃபெஸ்ட் என ஓர் சர்வதேச இலக்கியவிழா பற்பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுக்க இருந்து இலக்கியவாதிகள் வந்து கலந்துகொள்கிறார்கள்.அவர்கள் எவருக்கும் தமிழில் நவீன இலக்கியம் என ஒன்று உள்ளது என்பதே அறிமுகப்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் அங்கே முக்கியமான தமிழ்ப்படைப்பாளிகள் அழைக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலம்பேசும் சென்னை மக்களின் விழா அது. அம்மக்கள் அதிகம்போனால் கல்கி, சுஜாதா, பாலகுமாரனை அறிந்தவர்கள்.

ஹிந்து லிட்ஃபெஸ்ட் நிகழ்வுக்கு க்ரியா, காலச்சுவடு ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய ஓரிருவர் அவ்வப்போது அழைக்கப்படுவார். எந்த அரங்கையும் எவ்வகையிலும் கவனிக்கச்செய்யும் தகுதி கொண்ட முதன்மைப் படைப்பாளிகளாக அவர்கள் இருப்பதில்லை. அவர்களுக்கு அளிக்கப்படும் அரங்கும் எப்போதுமே ஒதுக்குபுறமானதாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் பத்துபேர் அரங்கில் அமர்ந்திருப்பார்கள்.

ஹிந்து லிட் ஃபெஸ்டுக்கு  வந்த இலக்கியவாதிகளை பின்னர் மும்பையில் அல்லது திருவனந்தபுரத்தில் சந்திக்கையில் அவர்கள் தமிழில் நவீன இலக்கியமே உருவாகவில்லை என்றும், ஒருசிலர் சமூகசீர்திருத்த எண்ணத்துடன் எழுதும் சில எழுத்துக்களே உள்ளன என்றும், அவை கல்வியறிவில்லா தமிழர்களால் எதிர்க்கப்படுகின்றன என்றும் மனப்பதிவு கொண்டிருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். நான் தமிழில் எழுதுகிறேன் என்றால் திகைப்பார்கள்.

இதுவரை நான் ஹிந்து லிட்பெஸ்டுக்கு அழைக்கப்பட்டதில்லை. இம்முறை என்னை அங்கிருந்து ஓர் அம்மாள் கூப்பிட்டு அவ்விழாவுக்கு அழைத்தார். இலக்கியவாதியாக என்னை அழைக்கவில்லை. மணி ரத்னம் ஓர் அரங்கில் பொன்னியின் செல்வன் பற்றி பேசுவார் என்றும், அதை நான் அவரிடம் கேள்விகேட்டு நடத்தவேண்டும் என்றும் கோரினார். (தமிழில் நான் அருவருக்கும் ஆளுமைகளில் ஒருவர் அந்தப் பெண்மணி, பொய்யே உருவான வம்பர்) மேற்கொண்டு எதன்பொருட்டும் என்னிடம் தொடர்புகொள்ளலாகாது என்று எச்சரித்து தொடர்பை முறித்தேன்.

இச்சூழலில்தான் இந்த பொருநை விழா முதலியவை நடைபெறுகின்றன. நிகழ்வு ஒருங்கமைவில் போதாமைகள் இருக்கலாம். ஆனால் ஓர் இலக்கிய விழாவில் நவீன இலக்கியவாதிகள் ஏறத்தாழ அனைவருமே அரசால் அழைக்கப்படுவதென்பதே முக்கியமான ஒரு நிகழ்வு என நான் நினைக்கிறேன். இதை நாம் மேம்படுத்தலாம். நல்லெண்ணத்துடன் செயல்பட்டு ஓர் அறிவியக்கமாக, ஒரு சமூக இயக்கமாக ஆக்கலாம். அரசு நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

இதைப்போன்ற நிகழ்வுகளுக்கு இயல்பாகவே கூட்டம் வருவதில்லை. கூட்டம் வரவில்லை என்று அரசை அல்லது அதிகாரிகளைக் குறைசொல்வதில் பொருளில்லை. நிகழ்ச்சியை விளம்பரம் செய்தால் மட்டும் கூட்டம் கூடிவிடாது. தமிழ்ச்சமூகத்திற்கே இலக்கிய ஆர்வமும், இலக்கியம் மீதான மதிப்பும் மிகமிக குறைவு. அதை உருவாக்கவே அரசு முயல்கிறது. தானாகவே வந்து அரங்கை நிறைக்கும் அளவுக்கெல்லாம் நம்மிடம் இலக்கிய ரசிகர்கள் எங்குமில்லை.

ஆகவே கொஞ்சம் முயற்சி செய்துதான் அரங்கை நிரப்பியிருக்கவேண்டும். சற்று ஒருங்கிணைப்பு இருந்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். அப்பகுதியின் கல்லூரிகளுக்கு அழைப்பு அனுப்பியிருக்கவேண்டும். அங்கிருந்து வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஒரு சான்றிதழ் அளித்திருக்கலாம். தமிழ்த்துறைகளில் இருந்து மாணவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என ஓர் அரசாணை அளித்து அவர்களுக்கு வருகைப்பதிவும் சான்றிதழும் அளித்திருக்கலாம். அவர்களின் கல்விக்கு மிக உதவியான மேலதிகக் கல்வியை அளிப்பவை இந்த அமர்வுகள். இது பற்றிய புரிதல் இல்லா நிலையிலேயே தொடக்கப்பள்ளி மாணவர்களை கொண்டுவந்து அமரச்செய்யும் அபத்தம் நடைபெற்றிருக்கிறது.

இந்நிகழ்வின் செலவில் ஒரு பகுதியை ஒதுக்கி தமிழகத்தின் எப்பகுதியில் இருந்தும் நிகழ்வில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு பேருந்துக் கட்டணம், பொதுத் தங்குமிடம் ஆகியவற்றை அளித்திருக்கலாம்.  இலக்கிய ஆர்வலர் வந்து கூடியிருப்பார்கள். விழா மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கும். ஏதேனும் ஓர் அரசுக்கல்லூரிக்கு விடுப்பு அளித்து அவர்களின் மாணவர் விடுதிகளை இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்தியிருந்தாலே போதுமானது.

இத்தகைய நிகழ்வுகளில் ஏராளமான நிகழ்ச்சிகளையும் அரங்குகளையும் அமைக்கக்கூடாது. எதிலும் கூட்டமில்லாமல் ஆகிவிடும். அரங்குகள் கலவையாக இருக்கவேண்டும்.பொதுரசனைக்கு உரிய புகழ்பெற்ற ஆளுமைகளின் அரங்கும் சிறுவட்டத்திற்குள் செயல்படும் இலக்கியவாதிகளின் அரங்கும் கலந்தே அமைந்திருக்கவேண்டும். ஒரே சமயம் இரண்டு அரங்குகளுக்கு மேல் நிகழாமலிருப்பது நல்லது.

சற்று திட்டமிட்டிருந்தால் களையப்பட்டிருக்கக்கூடிய பிழைகள்தான். நெல்லை பொதுவாகவே இலக்கியத்திற்கு பெரிய அளவில் கூட்டம் வராத சிறுநகரம். உண்மையில் அதற்கு நகரம் என்னும் இயல்பே இல்லை. கடந்தகாலத்தில் உறைந்துவிட்ட ஒரு பகுதி அது. அங்கே மேலதிக முயற்சி இருந்திருக்கவேண்டும். அடுத்தடுத்த நிகழ்வுகளில் இப்பிழைகளை சீர்செய்யலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2022 10:35

ஆ.சிங்காரவேலு முதலியார்

[image error]

தமிழறிஞர்களில் எவரெல்லாம் பாடநூல்களில் இடம்பெறுகிறார்கள் என்று பார்த்தால் ஒன்று தோன்றியது. ஏதேனும் அரசியலுடன் தொடர்புடையவர்களே பெரும்பாலும் பாடநூல்கள் வழியாக அடுத்த தலைமுறைக்குச் செல்கிறார்கள். திராவிட இயக்கம் அவர்களின் அறிஞர்களை மட்டுமே முன்வைத்தது. அதற்கு முன் காங்கிரஸ் செய்ததும் அதுவே. அதனால்தான் தமிழுக்குப் பெரும்பணி ஆற்றிய ஆ,சிங்காரவேலு முதலியார் பற்றி நாம் பாடநூல்களில் தெரிந்துகொள்ளவே இல்லை. அபிதானசிந்தாமணி பற்றியும்.

ஆ.சிங்காரவேலு முதலியார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2022 10:34

பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ

சில கதைகளை  வாசித்தபின் நீண்டகாலம் கழித்து மீண்டும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகும். அந்த வாசிப்பு ஒருவகையான ஏக்கத்தை அளிப்பது. அந்த முதல் தித்திப்பு மீண்டும் இருக்காதா என்னும் எண்ணம் வரும். அத்தகைய கதைகள் அடங்கிய தொகுப்பு பொலிவதும் கலைவதும். அந்தக் கதையே அந்தவகையான மனநிலைகளை உருவாக்கக்கூடியது. எல்லா கதைகளுமே ஆண்பெண் உறவின் நுணுக்கமான விஷயங்களைப் பேசுபவை. பல கதைகளை ஒருவகையான melancholy மனநிலையில் வாசித்தேன். சிறப்பு.

அருண்குமார்

*

அன்புள்ள ஜெ

பொலிவதும் கலைவதும் கதையை வாசிக்கையில் தெரியவில்லை. ஆனால் சென்ற பல நாட்களாகவே அதன் தலைப்பு நாவில் ஒரு இனிப்பு போல இருந்துகொண்டிருக்கிறது. பொலிவதும் கலைவதும்தானே வாழ்க்கை இல்லையா?

எஸ்

பொலிவதும் கலைவதும் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2022 10:31

போகன், இரு கவிதைகள்

போகன் சங்கர் – தமிழ் விக்கி

கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் சொன்ன  ஒரு வரி உண்டு. கவிஞன் திரும்பத் திரும்ப  ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’ என்று கேட்கிறான். மேலே இருந்து மேற்படியான் ‘போடா மயிரே’ என்று அதற்குப் பதில் சொல்கிறான். கவிஞன் திருப்தியுடன் ‘அப்டிச்சொல்லு, பின்னே?’ என்றபடி கவிதை எழுத ஆரம்பிக்கிறான்

*

குருவிகளின் வாழ்வில் பலதரம் உண்டு
பெரு நகரத்தில் உயரமான கட்டிடங்களின் ஜன்னல் விளிம்புகளில்
ஒண்டி வாழ அனுமதிக்கப்பட்ட குருவிகள்
பச்சைப் பச்சைச் சதுரமாய்
நீண்டு போகும் வயல்வெளிகளை
மின்சாரக் கம்பிகளின் மீது
அபாயகரமாக நின்றுகொண்டு
மேற்பார்வை செய்யும் குருவிகள்
காட்டில் இலையோடு இலையாக
வளவளக்கும் குருவிகள்
வேட்டையாடிகள் கையால்
சுடப்பட்டுத் தின்னப்படும் குருவிகள்.
பாடலின் திளைப்பில் கவனமற்ற பொழுதொன்றில்
சர்ப்பத்தின் வாய்ப்படும் குருவிகள்
வானத்துக் குருவிகளைப் பாருங்கள்
அவை நாளை தங்களுக்கு
என்ன நிகழும் என்று அறியாதிருக்கிறார்கள்.

*

வானில் கோடு கிழித்தாற்போல்
பறக்கும் நாரைக்கு
ஒரு அர்த்தமும் இல்லை.
கம்பத்தில் வளைந்து வளைந்து
உயிராவேசத்தோடு
ஏறும் கொடிக்கொரு அர்த்தம் இல்லை.
பாம்பின் நாக்கு போல
வெளியைத் துழாவும்
அதன் கைகளுக்கு ஒரு அர்த்தம் இல்லை.
அந்தகர் செய்வது போல்
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளாய்த் தடவி
அதன் அர்த்தத்தைக் கேட்க முயல்கிறேன்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2022 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.