Jeyamohan's Blog, page 2319
August 30, 2011
சேலத்தில் பேசுகிறேன்
வரும் 3-09-2011 அன்று சேலத்தில் தலித் ஆய்வுமையம் சார்பில் நடத்தப்படும் நான்கு தலித் நூல்களின் ஆய்வு அரங்கில் நான் பேசுகிறேன்
மதுரையைச்சேர்ந்த தலித் ஆய்வு-பதிப்பு நிறுவனமான எழுத்து நூறாண்டுகளுக்கும் மேலாக வெளியே தெரியாமலிருந்த முக்கியமான தலித் நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் மீதான விமர்சனக்கூட்டம் சேலத்தில் நிகழவுள்ளது. நூல்கள்
1. பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்
2. தலித் மக்களும் கல்வியும் – ஹென்றிஸ்டீல் ஆல்காட்
3. தலித் விடுதலையும் திராவிட இயக்கமும் [மறைக்கப்பட்ட உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்.] தி.பொ.கமலநாதன்
4 பஞ்சமி நில உரிமை
இவற்றில் ஆல்காட் பற்றி நான் பேசுவதாக உள்ளேன்
இடம்: இலக்குமி அரங்கம், சாமுண்டி சூப்பர் மார்க்கெட் வளாகம், நான்குரோடு சேலம்-9
நாள் 03-09-2011
நேரம் மாலை 5.30
பங்கேற்போர்
1. பேராசிரியர் மார்க்ஸ் [புதுவை பல்கலை கழகம்]
2.பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
3. ஜெயமோகன்
4 முனைவர் ஜெரோம் சாம்ராஜ்
ஒருங்கிணைப்பு
ஸ்பீடோ இயக்கம்
94877 01037 , 9080314744
எழுத்து
சிரோன் குடில், ஜோஸ்புரம் முதல் தெரு
பசுமலை
மதுரை 4
eluthualex@yahoo.com
பழைய கட்டுரைகள்
எம்.சி.ராஜா-வரலாற்றில் மறைந்த தலைவர்
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?
அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்
அண்ணா ஹசாரே சாதிவெறியரா?
குழும விவாதத்தில் ஒருவர் அண்ணா ஹசாரேபற்றி இன்று இடதுசாரிகளில் சிலர் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளைச் சொன்னார். அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராம அமைப்பில் தலித்துக்கள் அசைவம் சாப்பிடத் தடை இருந்தது. அப்படி சாப்பிட்ட தலித்துக்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டார்கள். இரண்டு, அங்கே ஜனநாயகமே இல்லை. பஞ்சாயத்து தேர்தல்கள்கூட அனுமதிக்கப்படவில்லை. ஆகவே அவர் பிராமணிய வெறியர், சர்வாதிகாரி.
இதைச் சொன்ன ஒரு இடதுசாரி கட்டுரையாளர் இதையெல்லாம் அவரே சென்று பார்த்தது போல எழுதினாராம். அதற்கு நான் எழுதியபதில் இது.
அண்ணா ஹசாரே பற்றி தான் நேரில் போய் பார்த்ததாக அவ்விமர்சகர் சொன்னவை ராமச்சந்திர குகா அண்ண ஹசாரே பற்றி எழுதிய http://www.telegraphindia.com/1110827/jsp/opinion/story_14423092.jsp என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை. அந்தக் கட்டுரையை மட்டும் வாசித்ததனால் முழுமையான பார்வையை உருவாக்க முடியாமல் துண்டாகச் சொல்லப்படும் முழு அவதூறுச் சித்திரம் அது.
குகா அவரது கட்டுரையியில் அண்ணா ஹசாரே பற்றி முகுல் சர்மா எழுதி வெளிவரப்போகும் ஒரு நூலில் இப்படி இருப்பதாக எழுதியிருந்தார்.
The strengths and limitations of Anna Hazare are identified in Green and Saffron, a book by Mukul Sharma that shall appear later this year. Sharma is an admired environmental journalist, who did extensive fieldwork in Ralegan Siddhi. He was greatly impressed by much of what he saw. Careful management of water had improved crop yields, increased incomes, and reduced indebtedness. On the other hand, he found the approach of Anna Hazare "deeply brahmanical". Liquor, tobacco, even cable TV were forbidden. Dalit families were compelled to adopt a vegetarian diet. Those who violated these rules — or orders — were tied to a post and flogged.
என்ற பத்தியில் இருந்து எடுத்தவை இடதுசாரிகளின் அவதூறுவரிகள். அதற்கு ஆதாரம் கேட்டால் சொல்லமுடியாது. ஆகவே தானே சென்றதாகப் பீலா விடுகிறார் அந்த விமர்சகர். பொது விவாதத்துறையில் இது மிகமிக அபாயகரமான ஓர் உத்தி. இந்தக்கட்டுரை வெளிவருவதற்கு முன் எங்குமே இவர் இதையெல்லாம் சொன்னதில்லை. அண்ணா ஹசாரே பற்றி அவருக்கு முன்பு எதுவுமே தெரியாது என்பதே உண்மை.
உண்மையில் அவர் அதே முகுல் சர்மா எழுதிய கட்டுரையை http://kafila.org/2011/04/12/the-making-of-anna-hazare/ என்ற தளத்தில் வாசித்திருந்தால் ஓரளவேனும் உண்மை தெரியும். முகுல் சர்மா அமெரிக்க ஆய்வாளர். முதலாளித்துவ நோக்கு கொண்டவர். அவர் தன்னிறைவுள்ள காந்திய அமைப்பை உருவாக்கமுயலும் அண்ணாவின் முயற்சியை எப்படிப் பார்ப்பார் என்பது நமக்கு தெரியும். ஆனாலும் அவர் எழுதுவது இவர்கள் சொல்லிய சித்திரத்தை அல்ல.
அண்ணா ஹசாரே அந்த பின்தங்கிய சாதிவெறிக் கிராமத்தில் எப்படி தீண்டாமையை முழுமையாக ஒழித்தார், எப்படி சாதிய சமத்துவத்தைக் கொண்டுவந்தார் என்று சொல்கிறார் முகுல் சர்மா.
In Ralegan, there are a few Mahars, Chamars, Matangs, Nhavi, Bharhadi and Sutars. Since the beginning of his work, Anna has been particularly emphasizing the removal of approachability and discrimination on caste basis meted out to people, who are popularly referred to as Harijans here. The concept of 'village as a joint family', or all inhabitants of the village as 'almighty God', has prompted the villagers to pay attention to the problems of Harijans. The integration of Dalits into an ideal village has two components in Ralegan. One is to assume that they were always there to perform some duties and necessary services and that their usefulness justifies their existence in the present. The other component is hegemonic, designed to get Dalits into a brahaminical fold. It is not only manifested in the way food or dress habits are propagated; it is prevalent in several other forms.
அந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்த்தரமாக நடத்தப்பட்டமைக்கு எதிராக அண்ணா ஹசாரே தனிமனிதனாக நிகழ்த்திய ஒரு போர் அது. அங்கே அவர் தீண்டாமையை ஒழித்தார். தலித் மக்களுக்குக் கிராமசபைகளில் சம அதிகாரம் கொண்டுவந்தார். அவர்களைப் பொருளாதார விடுதலை பெறச்செய்தார். அதை நம்முடைய மதுரைப் பக்க கிராமங்களில் முதலில் செய்து காட்டிவிட்டு அல்லவா இந்த இடதுசாரிகள் அண்ணா ஹசாரேவைக் குற்றம் சொல்லவேண்டும்? கண்ணெதிரே தலித்துக்கள் ஊர்-சேரி என இரண்டுபட்ட அமைப்பால் ஒதுக்கப்பட்டு வாழும்போது அதைக் கண்டும் காணாமல் ஐம்பதாண்டுகளாக அரசியல் பேசும் இவர்களுக்கு அண்ணா ஹசாரேவைப் பேச என்ன யோக்கியதை?
ராலேகான் சித்தியில் தலித் மக்களை ஒதுக்குவதற்காக உயர்சாதி சொன்ன சாக்கு அவர்கள் மாடு தின்கிறார்கள் என்பது. அதைத் தடுக்க அண்ணா ஹசாரே கண்டுபிடித்த ஓர் உத்தி அந்த மக்களை மாடு சாப்பிடுவதில்லை என அவர்களே முடிவெடுக்கவைப்பது. அந்தச் சாதிக்கட்டுப்பாட்டுக்கு அவர்கள் ஒவ்வொருவரும் கட்டுப்பட்டாகவேண்டும். அவர்களை அண்ணா ஹசாரே தண்டித்தார் என்பதை அவதூறு என்றே சொல்ல வேண்டும்
உண்மையில் வட இந்தியாவில் சாதாரணமாகவே அசைவ உணவு குறைவு. மகாராஷ்டிர கிராமங்களில் பெரும்பாலான சதவீதம் சைவ உணவுதான். சப்பாத்தி ,தயிர், வெங்காயம், சப்ஜி ,தால், கொஞ்சம் சோறு. தலித்துக்கள் மிக மிக அபூர்வமாக செத்த மாட்டின் கறி உண்பார்கள். குளத்துமீன் இன்னும் அபூர்வமாக.
வடக்கத்தி கிராமங்கள் எல்லாம் இன்றும் பல்வேறு சாதிகள் வாழும் தனிப்பகுதிகளாகவே இருக்கும்[ இங்கும்கூட பல ஊர்களில் அப்படித்தானே? ]அந்த பகுதிகளுக்குள் சந்திப்போ உரையாடலோ சாத்தியமல்ல. அண்ணா ஹசாரே உருவாக்க முயன்ற கிராமசுயராஜ்ய அமைப்பு ஒரே பொருளாதார மண்டலம். எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒரே அமைப்பாக வாழ்ந்தாகவேண்டியிருந்தது. அதில் பெரும்பான்மையினரான சாதியினருக்கு தலித் மக்கள் மேல் கடுமையான வெறுப்பு இருந்தது. தலித்துக்கள் வாழ்ந்த நிலை பொருளியல் அடிமட்டம்.
முகுல் சர்மாவே அண்ணா ஹசாரெ தலித்துக்களை உள்ளே கொண்டுவர இரு வழிகளை கையில் எடுத்தார் என்கிறார். ஒன்று, அவர்கள் ஆற்ற வேண்டிய பணியை சுட்டிக்காட்டுவது. அவர்கள் இல்லாமல் கிராமம் இல்லை என்பது. இரண்டு அவர்கள் மாடு தின்பதை விலக்குவது. அந்த சாதிக்கட்டுப்பாட்டையே அசைவம் சாப்பிடத் தடை என்று இவர்கள் இன்று திரிக்கிறார்கள்.
முகுல் சர்மாவே அவரது நூலில் அண்ணா ஹசாரேவைக் கண்டிக்கும் தோரணையில் எழுதும்போதுகூட இப்படித்தான் சொல்கிறார். கிராமமே கடவுள் என்பது அண்ணாவின் கொள்கை. அந்த அமைப்புக்குள் சமமான உரிமை கொண்டவர்களாக தலித் மக்களைக் கொண்டுவருவதற்கு அவர் கண்டுபிடித்த வழிமுறைதான் பிராமணிய தன்மையை தலித் மக்களுக்கு அளிப்பது என.
அதாவது தலித்துக்களை ஒடுக்குவதற்காக அண்ணா அதைச் சொல்லவில்லை. சம உரிமைக்காக, பொருளாதார விடுதலைக்காக அவர் அங்கே சமயோசிதமாக உருவாக்கிய ஒரு வழி அது. அதை அவரை சாதி வெறியர் என்று சித்தரிக்கப் பயன்படுத்துவது அப்பட்டமான மோசடி மட்டுமே.
அண்ணா தலித்துக்கள் மாடு உண்ணக்கூடாது என சத்தியம் வாங்கியது தப்பு என சிலர் சொல்லலாம். ஆம் அது ஒரு வலுவான வாதம். [அது பாரதி தலித்துக்களுக்கு பூணூல் போடவேண்டும் என்று சொன்னது போன்ற ஒரு செயல்] அங்குள்ள சூழலில் 1970களில் அது தேவைப்பட்டிருக்கலாம். [1986ல் அந்நிலை கண்டிப்பாக இல்லை. அங்கே சாதாரணமாகவே குளத்துமீன் சாப்பிடக்கிடைத்தது என் நேரடி அனுபவம்] அதை நானும் ஏற்க மாட்டேன். ஆனால் அண்ணா ஹசாரே அந்த மக்களுக்கு கிராமசபையில் சம இடத்தையும் பொருளியல் மேம்பாட்டையும் உருவாக்கிக் கொடுத்தார். ஆகவேதான் அவர்களின் மறுக்கமுடியாத தலைவராக ஆனார். அவர்கள் அவரை எங்கள் கடவுள் என்று சொல்லும் அளவுக்கு.
அண்ணா ஹசாரே உருவாக்க எண்ணியது ஒரு நவீன ஜனநாயகலட்சிய சமூகத்தை அல்ல. ஒரு நடைமுறைக் கிராமசமூகத்தை. அங்கே எது உடனடி சாத்தியமோ அதைத்தான் அவர் செய்ய முடியும். அவருக்கு வெறுமே உயர்ந்த ஜனநாயக லட்சியங்களைச் சொல்லிக்கொண்டு சும்மா இருப்பவரல்ல அவர். உடனடியாக கள்ளச்சாராய கிராமமாக இருந்த ராலேகான் சித்தியை ஒரு தன்னிறைவான வேளாண்மைகிராமமாக ஆக்க அவர் முயன்றார்.
சுற்றிலும் சாதிவெறி தாண்டவமாடும் ஒரு சமூகத்தில், அம்பேத்கார் சிலையைக்கூட தொடாத ஒரு சமூகத்தில், அவர் தலித்துக்களை கிராமசபைகளில் சம உரிமை கொடுக்க வைத்த சாதனையைக் கொச்சைப்படுத்த அவர் விதித்த கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவதில் என்ன நேர்மை இருக்கிறது? அவரது நோக்கத்தை அங்கீகரித்து, அவரது வழிமுறைகளை ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் நோக்கத்தையே சிறுமைசெய்கிறார்கள் . இதே வழிமுறையை இவர்களின் தலைவர்களிடம் செய்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ன?
அண்ணா ஹசாரே அந்த கிராமத்தில் அரசியல்கட்சிகள் நுழையாமல் பார்த்துக்கொண்டார். அதற்குக் காரணம் உண்டு. அது கள்ளச்சாராயத்துக்கு புகழ்பெற்ற ஊர். அந்த கள்ளச்சாராயம் அரசியலால் மீண்டு வரக்கூடாதென நினைத்தார். இன்றுகூட தமிழகத்திலும் பல மாதிரி கிராமங்களில் ஊருக்குள் அரசியலை நுழையவிடாமல் வைத்திருக்கிறார்கள். அண்ணா ஹசாரே அங்கே சர்வாதிகாரத்தை உருவாக்கவில்லை, மாறாகப் பழைய கிராம பஞ்சாயத்து முறையை கொண்டுவந்தார்.
அவர் உருவாக்கிய பஞ்சாயத்து அமைப்புகள் முழுமையான ஜனநாயக முறைப்படித்தான் செயல்பட்டன. தலைவர் தேர்தல் மட்டுமல்ல எல்லா தீர்மானங்களும் எல்லாரும் வாக்களித்தே எடுக்கப்பட்டன– தலித்துக்கள் வாக்களிக்கும் அமைப்பு கொண்ட ஒரே மகாராஷ்டிர கிராம அமைப்பும் அதுதான்.
அண்ணாவின் வழிமுறைகள் முன்னுதாரணங்களா? தேசிய அளவில் கொண்டுசெல்லப்படமுடிபவையா? நானும் ராமச்சந்திர குகாவுடன் சேர்ந்து ஐயப்படுகிறேன். காந்திய கிராமசுயராஜ்யமே எனக்கு ஐயத்துக்கிடமானதே. அண்ணா அதை நம்புகிறார். கொண்டுவர முயல்கிறார். நான் நவீனக் கல்வியும் நவீன உலகத்தொடர்பும் நவீனத்தொழில்நுட்பமும் கொண்ட ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையே சிறந்ததாக நினைப்பேன். கிராமசமூகத்தை மூடப்பட்டுவிட்ட ஒன்றாகவே நினைக்கிறேன்.
ஆகவே நானும் அண்ணா ஹசாரேவின் கிராமசுயராஜ்ய கனவை விமர்சிப்பேன். ஆனால் அவரை சாதிவெறியன் என்றும் சர்வாதிகாரி என்றும் சொல்லும் போக்கு இலட்சியக்கனவுகளை அவமதிக்கும் மனச்சிறுமையை வெளிப்படுத்துவது என்றே நினைக்கிறேன்.
அவதூறுகள் சொல்லாமல் இவர்களால் அண்ணா ஹசாரே பற்றி ஒரு விமர்சனம் கூட முன்வைக்கமுடியவில்லை என்பதே அவர் எப்படிப்பட்டவர் என்பதற்குச் சான்று.
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
அன்பும் மதிப்புமிகு ஜெயமோகனுக்கு,
உங்களின் யானை டாக்டர் படித்தேன். மனசு மத்தாளமானது.உங்களைக்காண வந்த எஸ்.எல்.எம்.ஹனீபா மூலம் கிட்டியது.

ஒட்டமாவடி அறாபத்
ஊமைச்செந்நாய்க்கு நிகரான படைப்பு.இன்றைய தமிழ்ச் சூழலில் ஜெயமோகன் என்கின்ற உங்களால் மட்டும்தான் இவ்வாறு எழுத முடியும். இது முகஸ்துதியோ புகழ்ச்சியோ அல்ல,சத்தியம்.உங்களைக்கண்டு வந்த எஸ்.எல்.எம்.என்னிடம் ஜெயமோகன் என்கின்ற புத்தனைக்கண்டு வந்தேன் என்றார்.புத்தனின் மறு பெயர் ஈரம்.யானை டாக்டரின் ஒவ்வொரு பத்தியிலும் அந்த ஈரம் சொட்டுகிறது.
இலங்கையில் 6200 யானைகள் வாழ்ந்தாலும் எங்கள் காடு 2200 யானைகளுக்கே போதுமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள்.
புலிகளுடனான சண்டைமுடிவுக்கு வந்த வேளை, யானைகளுடனான சண்டை ஆரம்பம்.எங்கள் வாழ்விடங்களிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் யானைகளின் குடியிருப்பு. எங்களுர் மக்களுக்கு யானைகளுடன் தீராப்பகை.ஒவ்வொரு வருடமும் யானைகள் பலரின் உயிரைப் பறித்து விடும். இந்தச்சூழலில் யானை டாக்டர் கதை எங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என நான் சொல்லத்தேவையில்லை.
இலங்கையில் எழுத்தாளர்கள் என்று கோலம் போடுபவர்களின் அடியேனும் ஒருவன். மூன்று சிறு கதைத்தொகுதிகளைக் கொண்டு வந்திருக்கின்றேன்.அதில் அடையாளம் பதிப்பகம் " உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி " என்ற தொகுதியைக் கொண்டு வந்திருக்கின்றது. அந்தத் தொகுதியிலிருந்து இரண்டு கதைகளை உங்களுக்கு அனுப்புமாறு எஸ்.எல்.எம் வேண்டிக்கொண்டார்.உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றேன்.
உங்களைக்காண இன்ஷா அல்லாஹ் பார்வதிபுரம் வருவேன்.
அன்புடன்
அறபாத்- இலஙகை
அன்புள்ள அறபாத்
நான் ஆபிதீனின் பக்கங்களில் உங்கள் கதைகளையும் கடிதங்களையும் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். தொகுப்பு வாசித்ததில்லை. அடையாளம் சாதிக் நல்ல நண்பர்தான். பெரும்பாலான நூல்களை அனுப்பித் தருவார். இந்நூலையும் அனுப்பச் சொல்கிறேன்.
உங்கள் கதைகளில் உள்ள சாதாரண மனிதனின் வாழ்வுக்கான ஏக்கத்தை மிகுந்த நெருக்கத்துடன் உணர்ந்தேன். குறிப்பாக ரெயில்வே ஸ்டேஷன் கதையில் சரசரவென வந்துமறையும் முகங்கள். காலம் ஒரு ரயில் போல ஜன்னல்முழுக்க முகங்களுடன் ஓவென அலறி இரும்புப்பேரொலியுடன் கடந்து மறைந்ததைக் காட்டிய கதை அது.
ஒரு எழுத்தாளன் அவன் கைக்குள் சிக்கக்கூடிய ஒரு வாழ்க்கைக்குள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காட்ட முயலவேண்டும் என நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் அளவும் அகலமும் அல்ல அது எதைச்சுட்டி நிற்கிறது என்பதே நல்லகதைகளை அடையாளப்படுத்துகிறது.
வீடு போர்த்திய இருள் கதையும் என்னைத் தனிப்பட்டமுறையில் பாதித்தது. காலம் இதழில் நான் அக்கதையை வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட அதே தளத்தில் ஒருகதை 'அம்மன் மரம்'எழுதியிருக்கிறேன்.
நாம் சந்திக்கும்போது சிறுகதை பற்றி இன்னும் நிறையப் பேசமுடியுமென நினைக்கிறேன். தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்கவேண்டும்
எழுதுகிறேன்
ஜெ
அன்புமிகு ஜெயமோகன்
உங்கள் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியது.ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப்போய்விடுகிறது. எழுதி என்ன செய்ய என்று மனம் அலுத்துக்கொள்ளும்.உங்களைப்போன்ற சிகரங்களின் எழுத்துக்கள் அதை மீண்டும் புத்துயிரூட்டும். நெரிசல்மிகு வாழ்க்கையில் வாசிப்பும் எழுத்தும்தான் புனித ஜிஹாத் என்பேன்.நான் அந்தப் புனித யுத்தத்தைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்திக்கொண்டிருக்கின்றேன்.
என்னுடைய கதைகள் பற்றிய தங்கள் மதிப்பீடு மிகுந்த மன எழுச்சியைத்தருகிறது.என்னைப்போன்றவர்களின் படைப்புக்களை நீங்கள் வாசிப்பதற்கு அவகாசம் கிடைக்காது என்பது என் எண்ணமாக இருந்தது,
நேற்று என் தோட்டத்தில் இருந்த போது மாமரத்திலிருந்து நழுவி என் கையில் விழுந்த புழு ஒரு கைக்குழந்தையாகத் தவழ்ந்தது. என்ன ஒரு உயிர்ப்பான வார்த்தைகள். உங்களின் யானை டாக்டரைப்படித்த பின் நான் இப்படித்தான் புழுக்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். இன்னும் அந்தக்காட்டிலிருந்து மீளவும் என் கிராமத்திற்கு வரமுடியவில்லை.
இலங்கையில் தற்போது புழுக்கத்தில் இருக்கும் 1000 ரூபா நோட்டில் யானையுடன் ஒரு பாகனும் இருப்பார்கள். அது எங்கள் ஊருக்குப்பக்கத்திலுள்ள கிராமத்து முஸ்லிம் ஒருவரால் தலதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட யானை. பாகன் தலையில் குல்லாய் போட்டிருப்பார் .கிடைத்தால் பாருங்கள் புரியும்.
நூற்றாண்டுகள் கடந்தாலும் மஹிந்த அரசு அந்த வரலாற்றைப்பேணி வருவதற்கு காரணம் அது அவர்களின் பவுத்த மதத்தின் அடையாளம் என்பதால்.
அன்புடன்
அறபாத்.
அன்புள்ள அறபாத்
உங்கள் மனநிலை எனக்குப்புரிகிறது.
எழுத்தாளனுக்குச் சோர்வு புறச்சூழல்களினால் ஏற்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குமேல் அது நீடித்தால் அது அவனுடைய பிழை. நீண்டகாலத்துக்கு நீடித்தால் அவனுடைய குற்றம்.
எழுத்துத்திறன் என்பது ஒரு இயற்கைக் கொடை. அல்லா உங்களுக்கு அதை ஒரு காரணத்துக்காகவே அருளியிருப்பான். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதற்கான விளக்கத்தை அல்லாவிடம் கோர உரிமை கிடையாது.
ஆக, முடிந்தவரை தீவிரத்துடன் ,உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருப்பதே முக்கியமானது. அத்துடன் நம் கடமை முடிகிறது. எழுதுங்கள்.
ஜெ
August 29, 2011
மூவருக்கு தூக்கு தள்ளிவைப்பு
பேரறிவாளன் உட்பட மூவருக்கான தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் இரண்டு மாதத்துக்கு ஒத்திப்போடத் தீர்ப்பளித்துள்ளது. நேற்று திருவனந்தபுரத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசும்போது கிட்டத்தட்ட இதுவே நிகழும் என்று சொன்னார் -மூன்று மாதம் ஒத்திப்போடக்கூடும் என்று. காரணம், இந்த சிக்கலான வினாக்களுக்கு உடனடியாக விசாரணையை முடிக்கமுடியாது. ஆகவே கால அவகாசம் அளிக்கப்படும்.
வழக்கு ஒத்திப்போடப்படும் என்றால் அனேகமாக மீண்டும் சிலமுறை ஒத்திப்போடப்படும் என்றும், கடைசியில் தூக்கு ரத்தாக பெரும்பாலும் வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னார். ஏனென்றால் பொதுவாக இந்திய நீதிமன்றங்கள் தூக்குக்கு எதிரான மனநிலையுடன் உள்ளன. தூக்கு ரத்துசெய்வதற்கான முகாந்திரங்கள் எதையுமே அவை நிராகரிப்பதில்லை. ஆகவே நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
போராடியவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்லது நிகழவேண்டுமென ஆசைப்படலாம்
http://www.maalaimalar.com/2011/08/30103505/murugan-santhan-perarivalan-pu.html
ஹனீபா-கடிதம்
அருமை ஜெயமோகனுக்கு
சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது.
இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது.
எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட பண்டமாகவே தொடர்ந்தும் வினியோகிக்கப்படுகிறது.இங்கு பெரும் ஆரவாரத்துடன் வெளிவரும் மல்லிகை, ஞானம், செங்கதிர்,(அம்பலம் கலைமுகம்) பார்த்திருந்தால் எனது கருத்தை மறுக்கமாட்டீர்கள்.உங்களின் பெரும்பாலான நூல்களைப்படித்து விட்டேன்.அது பற்றியெல்லாம் ஒரு சந்திப்பில் மட்டும்பகிர்ந்து கொள்ள முடியாது என்பதை அறிவீர்கள்.அன்றும் நான் எவ்வளவோ பேச வந்தேன். உங்களைப்பார்த்த பரவசத்தில் எல்லாமே பின்வாங்கி விட்டது போல் இப்பொழுது படுகிறது.
அம்ருதாவில் உங்களின் 2ஜி பற்றிய பதிவுகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன் அதையும் மறந்து போனேன்.புகழ் பெற்ற அந்த ஊழலைப்பற்றி பலரும் ஒரேவிதமாகப்பார்க்க நீங்கள் மட்டும் மரபுவழி நின்று அதைச்சொன்ன விதம் உயர்வானது. ஜெயமோகன் போன்றவர்களால் மட்டுமே அவ்வாறு எழுத முடியும் என்ற முடிவுக்கு என்னைவரவழைத்தது.
உலோகம் நாவல் பற்றிய மதிப்புரை படித்தேன். அதில் வருகின்ற ஜோர்ஜ் அவன் காதலி என் ஆத்மார்த்தமான நண்பர்கள். ஜோர்ஜ் புலிகளாலும் அவள் இராணுவத்தாலும் கொல்லப்பட்டார்கள். அருமைத்தோழர் பத்மநாபாவின் நெருக்கத்திற்குரியவர்கள்.அவர்களைப்பற்றிய தகவல்கள் பெரும்பாலும் உண்மையானது அந்த நாவலைக் கொண்டு வரவில்லையே என்று இப்போது கவலைப்படுகிறேன். இலங்கையில் இப்போதைக்குக் கிடைக்காது.
வரும் டிசம்பரில் எமது பல்கலைக்கழங்களில் இடம் பெறும் புத்தகக் கண்காட்சியில் உங்களின் அனைத்து நூல்களையும் காட்சிப்படுத்த எண்ணியிருக்கிறேன்.என்னிடம் இல்லாத உங்களின் நூல்களின் பட்டியலை அடுத்த மெயிலில் அனுப்பி வைப்பேன்.நீங்கள் எனக்கு அதை சேகரித்து தரவேண்டும்.இன்ஷா அல்லாஹ் அடுத்த அடுத்த மாதங்களில் மீண்டும் உங்களைக்காண வருவேன்.மெய்தான்.அம்ரிதா எம்மின் தொகுதியில் படித்துப்பார்த்தீர்களா ? எமது எழுத்தில் ஒரு மாற்றம் புலப்படுகிறது அல்லவா அந்தக்கதைகள் பற்றிய உங்கள் பதிவைப் பார்க்க விரும்புகிறேன்.
ஓட்டமாவடி அறபாத் எனது உறவினன்.உங்களுக்கு எழுதுமாறும் அவன் கதைகளில் இரண்டை உங்களுக்கு அனுப்புமாறும் கேட்டு்க்கொண்டேன்.அது பற்றியும் எனக்கு எழுதுங்கள்.
அன்புடன்
எஸ்.எல்.எம்.ஹனீபா
குறிப்பு:
கோணங்கியை இங்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை கவிஞர் அனாரும் நானும் செய்து கொண்டிருக்கிறோம்.ஜெயமோகன் கடல்வழிக்கப்பலில் ஒருக்கா இலங்கை வந்து போகலாமே !
[image error]
அன்புள்ள ஹனீபா அவர்களுக்கு
உங்கள் கடிதம் கண்டு மிகுந்த மனநிறைவடைந்தேன்.நலமாகத்தான் இருப்பீர்கள்.உங்களுக்கென்ன!
வாழைக்குலையுடன் நீங்கள் நிற்கும் தோரணையே அலாதி. ஒரு வெற்றி வீரனைப்போல. அதிலேயே நிறைவுகண்டுவிட்டீர்கள் போல. உங்கள் வருகையின் அலை இப்போதுமிருக்கிறது. நினைவுகூரும்போதே ஒரு புன்னகை வருவதுபோல.
அங்கே வரவேண்டும். இப்போது மீண்டும் பார்க்கவேண்டிய பெரியவர்களின் பட்டியல் பெரிதாகிவிட்டது. மௌனகுரு, நீங்கள், தெளிவத்தை ஜோசப் என. வருகிறேன். முன்னர் எனக்கு [பழைய சில அரசுப்பதிவுகளினால்] இலங்கை விசா கிடைப்பது தடைபட்டிருந்தது. இனி அந்த பிரச்சினை இருக்காதென நினைக்கிறேன்.
கோணங்கி வருவது உற்சாகமான விஷயம். அவர் எழுத்தைவிடப் பலமடங்கு பெரிய ஆளுமை அவர். அவர் உருவாக்கும் ஆழமான மனப்பதிவு நெடுநாள் நீடிக்கும். ரசித்துச் சாப்பிடுவார். ஈழ சிறப்பு உணவுகளுக்கு ஏற்பாடு செய்யவும்
ஜெ
அமெரிக்கன் கல்லூரி ,மதுரை
மதுரை அமெரிக்கன் கல்லூரி தென் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்று. கல்விக்கூடம் என்பதற்கு அப்பால் சுதந்திரமான தேடலையும் கலையிலக்கிய ஆர்வங்களையும் அனுமதித்தது. அந்நிறுவனத்தில் பயின்ற யுவன் சந்திரசேகர், பாலா போன்ற பலரிடம் அது உருவாக்கிய ஆழமான மனப்பதிவுகளைப் பார்க்கையில் எனக்கு அப்படி ஒரு கல்விக்கூட அனுபவமே இல்லையே என்ற ஏக்கமே எழும்.
அமெரிக்கன் கல்லூரியின் அமெரிக்க தொடர்பு பிரிவு ஒன்றுக்காக நான் ஒரு சிறுகதைப்பட்டறை நடத்தியிருக்கிறேன்,கொடைக்கானலில். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது அது. ஆனால் என் நண்பரும் தமிழ் எழுத்தாளருமான சு.வேணுகோபால் எல்லாத் தகுதிகளும் இருந்தும் இந்து என்பதற்காக அங்கே பணியாற்றிப் பணிநிரந்தரம் பெற முடியாமல் வெளியேற்றப்பட்டபோது அந்நம்பிக்கை சிதைந்தது
அமெரிக்கன் கல்லூரியின் இன்றைய சிக்கல்களைப்பற்றி இளங்கோ கல்லானை எழுதிய கட்டுரை
தூக்கு- எதிர்வினை
திரு ஜெ,
( நான் சொல்ல வந்த விஷயத்தின் கருத்து கெடாமல் இந்தக் கடிதத்தின் அளவை மாற்றி வெளியிட சம்மதிக்கிறேன்)
நீங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின் மாதிரிகளை வைத்து, இது தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் 'இந்த' தூக்கு தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த தண்டனைக்கு எதிரான கருத்துள்ள கடிதம் ஒன்றாவது வெளியிடப்பட்டிருந்தால் சரியாயிருந்திருக்கும். எனவேதான் 'இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாக' நீங்கள் சொன்னதற்குப்பின்பும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
[image error]
இந்த தூக்கு தண்டனை குறித்த ஓரே ஒரு கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய இம்மூவரும் ராஜீவ் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் அல்ல மாறாகக் கொலைக்கு உடந்தையாய் செயல்பட்டார்கள் என்பதே குற்றச்சாட்டு. (நேரடியாக ஈடுபட்டதாக சொல்லப்படுபவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டார்கள் அல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள்). இவ்வகைக் குற்றச்சாட்டிற்கு மரண தண்டனை என்பது அதிகப்படியானது அதுவும் ஏற்கனவே இருபது ஆண்டுகாலம் அவர்கள் வாழ்க்கை சிறையில் கழிந்திருக்கும் நிலையில்.
மேற்குறிப்பிடப்பட்ட மூவரில் பேரறிவாளன், இன்றைக்கும் தான் குற்றமற்றவர் என்று கூறி வருகிறார். அவர் எழுதியுள்ள புத்தகத்தை நீங்கள் படித்துப்பார்த்தீர்களானால், தண்டனக்குப்பயந்து செய்த தவறை இல்லை என்று மறுக்கும் கேவலமான புத்தி உள்ளவர் அல்ல என்பது தெரியும்.
அவர் குற்றமற்றவர் என்று நம்பும் என் போன்றோர்க்கு மிக இளம் வயதிலிருந்தே அவர் அனுபவித்து வரும் சிறைத்தண்டனையே பெரும் வேதனையான விஷயமாகத்தெரியும் போது அவரது மரண தண்டனையை எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும்?
உங்கள் கட்டுரை குறித்து விமர்சனம் எழுதியுள்ளோர்களின் ஒரு சில வரிகளையும் அதற்கான என்னுடைய பதிலையும் கீழே அளித்துள்ளேன்.
"இந்த விஷயத்தில் இறங்கிப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். இவர்கள் இன்றுவரை இந்தியாவில் நடந்த எந்த ஒரு நல்ல விசயங்களுக்கும் தோள்கொடுத்தவர்களே அல்ல. இந்தியா அழியவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள். அதற்காக இவ்வளவுநாளாகப் பிரச்சாரம் செய்யகூடியவர்கள்.எவ்வளவோ வெளிநாட்டுக் காசு வாங்கிக்கொண்டு பேசுபவர்கள்." –சாமிநாதன்.
சாமிநாதனின் இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது, மிகப்பெரிய அபாண்டமான குற்றச்சாட்டின் மூலம்,தான் எதிர்ப்பவர்களை ஒரேயடியாக சிறுமைப்படுத்தும் முயற்சி.
"இப்போதுகூட 2047லே இந்தியாவைத் துண்டுதுண்டாக சிதறடிப்போம் என்றுதான் வைகோ பேசிக்கொண்டேஇருக்கிறார். 'இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா' என்று இந்திய அரசாங்கத்தையே மிரட்டுகிறார். இவர்களை நம்பியா நாம் ஆதரவு கொடுப்பது?" –சாமிநாதன்.
வைகோ-வைப்பற்றி இவர் தெரிந்து வைத்திருப்பது இவ்வளவுதான். வைகோ-இந்திய அரசாங்கத்திற்கெதிராகக் கோபமாக சொல்லும் வார்த்தைகளை மட்டும் எடுத்து அவருக்கெதிராகப் பயன்படுத்தும் இவர்கள் அந்தக் கோபத்திற்கு மூலகாரணமாக இருக்கும் மனித இனத்திற்கெதிரான கொடுஞ்செயல்களை, முற்றிலுமாக மறைத்து விடுகிறார்கள், மிக சாமர்த்தியமாக.
ராஜீவ்காந்தி இந்தியாவின் அதிபராக இருந்தவர். ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு இருந்தவரும் கூட என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அவரைக் கொன்றது கொலை அல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களைப் புண்படுத்தியது. அது ஒரு தேசிய அவமானம்-சாமிநாதன்.
சாமிநாதனின் இந்தக் கருத்திற்கு அவரது கருத்தையே கொண்டிருக்கும் சரவணனின் கருத்தையே பதிலாகத்தருகிறேன்.
'அதாவது அவர்கள் நம்மைக் கொல்வது நியாயம், நம் அரசு திருப்பி அவர்களைக் கொல்வது அநியாயம். இதுக்கு என்ன அறிவுஜீவி பசப்பு?' –சரவணன் ஆ
ராஜீவ் மரணம் குறித்த என்னுடைய கருத்தைத் தெரிவிப்பது அவசியம் என்று கருதுகிறேன், அது என்னைப்பற்றி மட்டுமல்ல என்னைப் போன்ற தமிழீழ ஆதரவாளர்களைப்பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள உதவும். ஒரு சராசரி மனிதனாக, இந்தியனாக மற்றவர்களைப்போன்றே என் மனதிலும் மிக ஆழமான ஒரு காயத்தை ஏற்படுத்தியது ராஜீவ் கொலை. 1991 மே- 21ம் தேதி நள்ளிரவில் செய்தி தெரிந்த நொடியில் எனக்கேற்பட்ட பெரும் அதிர்ச்சியும் வேதனையும் இன்றும் என்னால் உணர முடிகிறது. மற்றொருபுறம் அதே சராசரி மனிதனாய், தமிழைத் தாய் மொழியாகக்கொண்டவனாக, ஈழத்தில் இந்தியாவின் தலையீட்டால் அவர்களுக்கேற்பட்ட பல்லாயிரம் மடங்கு அதிகமான வேதனைகளும் இழப்புகளும் என்னை பாதிக்கிறது. மிகக்குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால்,
அ) போருக்கு முன்பாகப் புலிகளின் 19 முக்கிய தளபதிகளின் மரணம்(அவர்களுள் பலர் புதிதாய்த் திருமணமானவர்கள்) மற்றும் காந்திய வழியில் போராடி மடிந்த திலீபனின் மரணம்.
ஆ)போரின் போது கொல்லப்பட்ட 12-ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிப் 'பொது' மக்களின் மரணம். குறிப்பாக யாழ் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 87 பேரின் படுகொலைகள் மற்றும் வெல்வெட்டித் துறையில் கொல்லப்பட்ட 300க்கும் அதிகமான பொது மக்களின் மரணம்.
இ) இந்தியாவின் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்- தகவலின் படி ஒப்பந்தத்திற்கெதிரான முறையில் புலிகளையும், பிரபாகரனையும் கொல்ல இந்தியா முயற்சித்தது.
மேலும் நாட்டிற்காகப் பணி செய்ய ராணுவத்தில் இணைந்த நம்து வீரர்களை, எம் மக்களுடனே போரிடச்செய்ததால் ஏற்பட்ட 1400 இந்திய போர் வீரர்கள்களின் மரணம் மற்றும் தனது இன அழிப்பைத்தடுக்கப் போராடிய 4000-க்கும் அதிகமான தமிழ்ப்போராளிகளின் மரணம்,
ஆகிய காரணங்களாலும் இதையொத்த இன்னும் பல காரணங்களாலும் ராஜீவ் மரணத்தைத் தாங்கிக்கொள்ளப் பழகிக்கொண்டேன்.
-அறிவுடை நம்பி.
அன்புள்ள அறிவுடைநம்பி,
உங்கள் கடிதத்தை முழுமையாகவே வெளியிடுகிறேன். நான் இதை முடித்துக்கொள்ளலாமென நினைத்தது ஜனநாயக விவாதம் என்ற பேரில் இருபக்கத்தையும் பேச ஆரம்பித்து ஓர் உணர்ச்சிகரமான விஷயத்தை மழுங்கடிக்கவேண்டாமென்றுதான்.
இருவிஷயங்களில் நான் மிகத் தெளிவாகவே இருக்கிறேன். ஒன்று, இம்மூவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனை அவர்களின் சிறைவாசத்துடன் சேர்க்கும்போது அடிப்படை மனிதநீதிக்கு மேலாக போகுமளவுக்கு மிகையானது. ஆகவே தூக்கு அநீதியானது. உடனடியாக நிறுத்தப்படவேண்டியது.
முதற்குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் மரணதண்டனை எப்படி மிகையாகப்பார்த்தாலும் கொலைபற்றிய நேரடித்தகவல்கள் எதையுமே அறிந்திருக்க வாய்ப்பில்லாத பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டிருப்பதும் பிழையானதே. அந்தக் கடுமைக்கு அன்றிருந்த தடா சட்டம் காரணம் . அது பின்னர் பிழை என விலக்கிக்கொள்ளப்பட்டதனால் சட்டபூர்வமாகவும் தண்டனை மறுபரிசீலனைக்குரியதாக ஆகிறது
அரசியல் குற்றங்களை உலகமெங்கும் அவை நிகழ்த்தப்பட்ட அரசியல் சூழலையும் கருத்தில்கொண்டுதான் பார்ப்பது வழக்கம். அப்பட்டமான வெறும் குற்றமாகப் பார்க்கும் வழக்கம் நாகரீக உலகில் இல்லை. இந்தியாவிலும் அதே நிலைப்பாடுதான் நாகா, மணிப்பூர் பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள் விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று இக்குற்றம் நிகழ்த்தப்பட்ட சூழல் முழுமையாகவே மாறி விட்டமையால் இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டாகவேண்டும். ஆகவே இந்தக் கடும் தண்டனையை மறுபரிசீலனை செய்ய எல்லா அரசியல் நியாயமும் உள்ளது. முன்னுதாரணங்களும் உள்ளன.
ஆகவே இந்தத் தூக்குத்தண்டனையை ரத்துசெய்வதே மனிதாபிமானம். அரசியல் விவேகம். அடிப்படைப்பொதுப்புத்தி. ஒரு சமூகத்தின் தார்மீகத்துக்கு எதிராக அரசு செயல்படக்கூடாது.
காங்கிரஸ் அரசு பரிசீலிக்காவிட்டாலும் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றே நினைக்கிறேன். இருபத்தைந்தாண்டுக்கால தனிமைச்சிறையை மரணதண்டனையை ரத்துசெய்வதற்கான வலுவான காரணமாகக் காட்டலாம், அதற்கு நிகரான பத்து முன்னுதாரணங்களாவது இந்திய வரலாற்றில் உள்ளன.
அதற்கு எதிராக இன்று தமிழகத்தில் உருவாகியிருக்கும் மனிதாபிமான இயக்கத்தை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.கடைசிக்கணத்திலாவது அரசும் உண்மைநிலையை உணரக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். ஆகவே இன்னும் ஒரு நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.
அல்லது, அப்சல்குருவை தூக்கிலிடுவதை மதச்சார்பற்ற சித்திரமாகக் காட்ட இம்மூன்று உயிர்களும் தேவைப்படுகின்றன என்றால் அது என்றென்றும் இந்திய ஜனநாயகத்துக்குக் களங்கம்தான்.
காங்கிரஸ் அரசு போர்க்குற்றவாளியான ராஜபக்ஷேக்கு அளிக்கும் ஆதரவின் மூலம் அறுபதாண்டுகளாக சர்வதேச அளவில் அதற்கிருந்து வந்த ஒரு அடிப்படை மரியாதையை இழந்து கோழையான,செயலற்ற, வன்மம் கொண்ட அரசு என்ற சித்திரத்துடன் இன்று நின்றுகொண்டிருக்கிறது.
அதன் மூலம் இந்திய வம்சாவளியினருக்கு உலகமெங்கும் இந்தியா காவல் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் அரசு சிதைத்துவிட்டது. இது ஒரு வரலாற்றின் முடிவு. ஒரு தார்மீகத்தின் அழிவு. அதை இந்தியசமூகம் இன்னமும் உணரவில்லை.
இன்று இந்த தூக்குத்தண்டனை மூலம், அதன் குடிமக்கள் மனத்திலும் அந்தச்சித்திரத்தையே அது நிலைநாட்டப்போகிறது. அது காங்கிரஸ்அரசுக்கு மட்டும் அல்ல நம் ஜனநாயகத்துக்கும் பேரிழப்பே.
ஜெ
தூக்கு-கடிதங்கள்
தூக்கு-எதிர்வினைகள்
August 28, 2011
எஸ்.எல்.எம்.ஹனீஃபா
சிலநாட்களுக்கு முன்னால் என்னைப்பார்க்க இலங்கையிலிருந்து ஓர் எழுத்தாளர் வந்திருந்தார். சுந்தர ராமசாமி வீட்டுக்குச் சென்று எம்.எஸ்ஸும் அவருமாக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். நான் சமீபகாலத்தில் அவரைப்போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு மனிதரைப்பார்த்ததில்லை. இருபது வயது இளைஞர்களுக்குரிய உற்சாகமும் அலைபாய்தலும் துருதுருப்பும் கொண்டவர். அடங்கிய மனிதரான எம்.எஸ்ஸுக்கு நேர் எதிர். ஆனால் இருவருக்கும் ஒரே வயது. எழுபது பிளஸ் என்று சொல்லாவிட்டால் கோபம் கொள்வார் என நினைக்கிறேன்.
எல்.எல்.எம்ஹனீஃபா இலங்கை எழுத்தாளர்களில் இஸ்லாமிய வாழ்க்கையின் உள்ளடுக்குகளைச் சொல்லும் படைப்பாளி. மக்கத்துச் சால்வை என்ற அவரது சிறுகதைத் தொகுதியின் சிலகதைகள் மிக முக்கியமானவை. ஆனால் மிகமிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். நிறைய எழுதியிருக்கக் கூடும். ஆனால் அவரது எழுத்துமுறைக்கும், அரசியலுக்கும் சரிப்படாது. மெல்லிய எள்ளலும் எகத்தாளமுமாக அன்றாடவாழ்க்கையைச் சித்தரிப்பவை அவரது கதைகள். அரசியல் அற்றவை. பதற்றமான அரசியல்சூழலில் அவருக்கு இயல்பாகவே எழுத்துவேகம் குறைந்தது இயல்பானதே.
மக்கத்துச் சால்வை கதை சிலம்பாட்டப்போட்டியை சித்தரிப்பது ஆபிதீனின் வலைத்தளத்தில் அதை வாசிக்கலாம். அப்பவெல்லாம் மூன்று நான்கு நாள்களுக்கு முந்தியே பெருநாள் மணக்கத் தொடங்கிவிடும். போன்ற சுவாரசியமான எளிய சித்தரிப்புகள். பறங்கி வாழைக்குலை என்கிறார். செவ்வாழையைச் சொல்கிறாரா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு படைப்பு அது முளைத்த பண்பாட்டின் பிரதிநிதி. அது அளிக்கும் தகவல்களுக்கு முடிவே இல்லை என்பதற்கான உதாரணம் இந்தக்கதை.
முதல் வாசிப்பில் ஒரு மனிதாபிமானத்தின் கதை இது. ஆனால் அந்த சிலம்பப்போட்டியை வாழ்க்கைப்போட்டியின் அடையாளமாகக் கொண்டால் மிஞ்சிநிற்பது என்ன என்ற கேள்வியை முன்வைக்கும் ஆழமான கதையாக ஆகிவிடுகிறது. வெற்றி தோல்விகள், கௌரவங்களுக்கு அப்பால் செல்வது இந்த வாழ்க்கை முதிர்ந்து மட்கி முடியும் என்ற உண்மை. அதற்கும் அப்பால் செல்வது மானுட அன்பு என்றுமிருக்கும் என்ற பேருண்மை. அதையே ஆயிரம் வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்– மீண்டும் எழுதியிருக்கிறார் ஹனீஃபா
ஹனீஃபா விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது எழுத்தார்வம் மட்டுப்பட்டமைக்கு அதுவும் காரணமாக இருக்கலாம். விவசாயம் ஒரு விஷகன்னி [எஸ்.கெ.பொற்றெகாட்டின் தலைப்பு] அவள் காதலித்தே கொல்லக்கூடியவள். ஹனீபாவின் புகைப்படங்களில் அவரது வயலும் சூழலும் தெரிந்த்து. எங்களூரைப்போலவே வயல்நடுவே நீராழி. உபரி நீரை அதில் வடித்துவிட்டு விவசாயம் செய்வோம்.
இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே விடப்பட்ட கப்பலில் இந்தியா வந்ததாகச் சொன்னார். அந்தக் கப்பல் ஒரு முக்கியமான தொடர்பு ஊடகம், ஒரு நல்ல அனுபவம் என்று சொல்லி என்னை இலங்கைக்கு அழைத்தார்.முதல்முறை அவர் இந்தியா வந்ததே லா.ச.ராமாமிருதத்தைச் சந்திப்பதற்காகத்தான். தென்காசி அருகே வங்கி ஊழியராக இருந்த லா.ச.ராவுடன் ஹனீஃபா நிற்கும் படத்தைப் பார்த்தேன். இளமையாக அழகாக இருந்தார். அதைச்சொன்னபோது ஆவேசமாக 'இப்பவும் இளமை இருக்கு…நான் இனியும் பெண்ணு கெட்டுவேன்' என அறிவித்தார். ஹனீஃபாவுக்கு ஜெயகாந்தனும் ஆதர்ச எழுத்தாளர்.
ஈழச்சூழலில் அவர் முன்வைக்க விரும்பும் எழுத்தாளர்களின் சில தொகுதிகளை எனக்காகக் கொண்டுவந்திருந்தார் ஹனீஃபா. அவற்றை வாசித்துவிட்டேன், எழுதவேண்டும். விடைபெறும்வரை சிரித்துக்கொண்டே இருந்தேன். இஸ்லாமில் மார்புறத்தழுவும் ஆசாரம் உள்ளது. எனக்கு மிகப்பிடித்தது அது. மிக அபூர்வமாகவே மார்புறத்தழுவிக்கொள்ளத்தூண்டும் ஆளுமைகளைப் பார்க்கிறோம். ஹனீஃபா அத்தகையவர். அவர் இனிமேலாவது தொடர்ச்சியாக எழுதலாம். இலக்கியம் என்பது ஒரு மாயப்பறவை. நூறு கைக்குச்சிக்கினால் ஒன்றுதான் ஆன்மாவுக்குச் சிக்குகிறது
ஹனீபாவின் மக்கத்துச் சால்வையின் மொத்தச் சிறுகதைகளும் நூலகம் தளத்தில் உள்ளன
தூக்கு-எதிர்வினைகள்
ஜெ,
நாளைக்கே அப்சல் குருவுக்கு ஆதரவுக் கட்டுரை போட்டமாதிரி உங்க முன்னாள்நண்பர் மனுஷ்யபுத்திரன் அஜ்மல் கசாப்புக்கும் கட்டுரை போடுவார். அஜ்மல் கசாப் நிரபராதி என்றும் இந்திய நீதிபதிகள்தான் குற்றவாளிகள் என்றும் சொல்லுவார். 'நாம் எப்படிப்பட்ட கொடுங்கனவில் வாதையை அனுபவிக்கிறோம்! அஜ்மல் கசாப் என்ற நிரபராதியான பாலகனை நம் இந்து அரசியல் கொல்லும்போது நாம் என்ன செய்கிறோம்' என்றெல்லாம் எழுதுவார், அப்போது நீங்கள் இப்போது சொல்லும் எல்லா வரிகளையும் உப்பைத் தொட்டு கொண்டு முழுங்கவேண்டியிருக்கும்.பிறகு உங்கள் இஷ்டம்
அரங்க.முத்தையா
ஜெ,
தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று நீங்கள் எழுதின கட்டுரையை வாசித்தேன். பொதுவாக ஒரு நியாயத்தின் அடிப்படையிலேயே நீங்கள் பேசுவீர்கள். ஆனால் இங்கே அந்த நியாயத்தையே காணோம். மேம்போக்கான ஒரு உணர்ச்சிவேகம் மட்டுமே காணப்படுகிறது. மிகுந்த மனவருத்ததுடன் இதை எழுதுகிறேன்.
நீங்கள் இந்த விசயத்திலே இணையத்திலும் வெளியே மேடைமேலும் கூப்பாடு போடும் அரசியல்வாதிகளுக்கு செவி கொடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேசுவதிலே ஒரு நியாயமான லாஜிக் கூட கிடையாது. எனக்கொரு நீதி மற்றவனுக்கு வேறு நீதி என்ற தடிகாரன்போக்குதான் தெரிகிறது.
இந்த விஷயத்தில் இறங்கிப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். இவர்கள் இன்றுவரை இந்தியாவில் நடந்த எந்த ஒரு நல்ல விசயங்களுக்கும் தோள்கொடுத்தவர்களே அல்ல. இந்தியா அழியவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள். அதற்காக இவ்வளவுநாளாகப் பிரச்சாரம் செய்யகூடியவர்கள்.எவ்வளவோ வெளிநாட்டுக் காசு வாங்கிக்கொண்டு பேசுபவர்கள். இவர்கள் இந்திய தேசியத்தையும் நம் அரசியல்சட்டத்தையும் நீதிமன்றங்களையும் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தினார்கள்.
இவர்கள் காந்தியையும் இந்தியாவின் பெரிய இலட்சியமனிதர்களையும் இவ்வளவுநாளாக எப்படியெல்லாம் அவமதித்தார்கள். அன்னா ஹசாரேயின் போராட்டம் பற்றி என்னென்ன நக்கலும் கிண்டலும் செய்கிறார்கள். அவர் ஊழல்வாதி என்றும் சாதியவாதி என்றும் மனசாட்சியே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நம்முடைய மனசாட்சியை நோக்கிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
இப்போதுகூட 2047லே இந்தியாவைத் துண்டுதுண்டாக சிதறடிப்போம் என்றுதான் வைகோ பேசிக்கொண்டேஇருக்கிறார். 'இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா' என்று இந்திய அரசாங்கத்தையே மிரட்டுகிறார். இவர்களை நம்பியா நாம் ஆதரவு கொடுப்பது?
இன்றைக்கு ஒரு மனவலிமையும் நேர்மையும் இல்லாத அரசாங்கம் நமக்கு உள்ளது. இந்த நாட்டையே சீரழிக்கும் குற்றவாளிகளை சட்டம் பேசித் திறந்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் காந்தியின் கொலை என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. ராஜீவ்காந்தி இந்தியாவின் அதிபராக இருந்தவர். ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு இருந்தவரும் கூட என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அவரைக் கொன்றது கொலை அல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களைப் புண்படுத்தியது. அது ஒரு தேசிய அவமானம்.
ஒரு ஜனநாயகநாடு இந்தமாதிரி விஷயங்களில் என்னென்ன உரிமைகளைக் கொடுக்குமோ எல்லாவற்றையும் நாம் கொடுத்துவிட்டோம். எல்லா சலுகைகளையும் கொடுத்துவிட்டோம். இனி சட்டம் தன் கடமையைச் செய்வதே சரியானது. இதிலே உணர்ச்சிகளுக்கெல்லாம் இடமே கிடையாது
சாமிநாதன்
*
ஜெ,
இன்றைக்கு சிலர் ஒரே குரலிலே அண்ணா ஹசாரேவைப் பற்றியும் தூக்குத்தண்டனை மன்னிப்பு பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணா ஹசாரேவைப் பற்றிப் பேசும்போது இவர்கள் பேசுவது பெரிய அறிவுஜீவிகளைப்போல. ஆனால் அதே சமயம் தூக்குத்தண்டனை பற்றிப் பேசும்போது தெருவில் இறங்கி நின்று பேசும் தோரணை.
1. அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்கவேண்டும் என்று போராடுகிறார். தன்னையே வருத்திக்கொள்கிறார். நாடு அவருக்கு ஆதரவளிக்கிறது. அதை இவர்கள் ஜனநாயக விரோதம் என்கிறார்கள். அண்ணா எலக்ஷனில் நின்று ஜெயித்து வரட்டுமே என்று சொல்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அண்ணா பேசக்கூடாதாம். அது மக்களை அவமதிக்கும் பிளாக்மெயிலாம். அவர் அரசியல்சட்டத்தின் மாண்பை அழிக்கிறாராம்.
ஆனால் வை.கோ போன்றவர்கள் 'ரத்த ஆறு ஓடும்' 'நாடு துண்டுதுண்டாகும் ' என்று அரசாங்கத்தை மிரட்டுவது ஜனநாயக நடவடிக்கை என்கிறார்கள். இத்தனைக்கும் வை.கோவால் ஒரு தொகுதியில்கூட டெப்பாசிட் பெறமுடியாது. அவர்களுக்குப் பின்னால் பத்துப்பேர் கூடக் கிடையாது. உச்ச நீதிமன்றமே தண்டித்த குற்றவாளிகளை வை.கோ நிரபராதிகள் என்று அறிவிக்கிறார். இது அரசாங்கத்தையோ மக்களையோ அவமதிப்பது கிடையாதாம். அரசியல் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றும் செயலாம்.
2. அண்ண ஹசாரேவுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஷோ என்று கிண்டல்செய்கிறார்கள். காந்தியவழிகள் எல்லாம் வெறும் காமெடி என்கிறார்கள். இவர்களும் அதே மெழுகுவர்த்திகளைத்தான் ஏந்துகிறார்கள். அதே மாதிரி உண்ணாவிரதம்தானே இருக்கிறார்கள்.
3. ஒருபக்கம் வை.கோவும் ராமதாஸும் இவர்கள் நிரபராதிகள் என்கிறார்கள். அதனால் இவர்களை விட்டுவிடவேண்டுமாம். ஆனால் இன்னொரு பக்கம் தூக்குத்தண்டனையே வேண்டாம் என்கிறார்கள். தூக்குத்தண்டனை வேண்டாம் என்று சொல்வதற்குத்தான் அருந்ததி ராய் போன்றோர் ஆதரவு அளிக்கிறார். இவர்கள் இந்தக் குற்றவாளிகள் மூவரும் நிரபராதிகள் என்று சொல்லி அவர்களின் ஆதரவு திரட்டட்டுமே. இதென்ன மோசடி?
4 .இந்த மூன்று குற்றவாளிகளும் ராஜீவ் கொலை தப்பு என்றும் வருத்தப்படுகிறார்களென்றும் இன்றைக்கு வரை சொல்லவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி செண்டிமென்டுகளை உண்டுபண்ண முயற்சி செய்கிறார்கள். ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான் என்று இப்போதும் இவர்கள் மேடையிலேயே சொல்கிறார்கள். 'தமிழ்ப்பெண்களைக் கற்பழிக்க ராணுவத்தை அனுப்பியவர்களுக்கு உரிய தண்டனையைத் தமிழர்கள் கொடுத்தார்கள். அதை அவர்கள் செய்திருக்க கூடாது, நாம் செய்திருக்கவேண்டும்' என்று சீமான் ஈரோட்டிலே பேசினதை நானே கேட்டேன். அமிர்தலிங்கம் போன்றவர்கள் கொல்லப்பட்டதை 'துரோகிகளுக்குப் புலிகள் கொடுத்த தண்டனைகள்' என்று சொன்னார் வை.கோ. இப்போது மரணதண்டனை தப்பு என்கிறார்கள். இஸ்லாமிய நாட்டிலே அல்லாஹூ அக்பர் என்று சொல்லிக் கழுத்தை அறுப்பது நியாயம். இந்தியாவில் அப்சல்குருவைத் தூக்கிலே போட்டால் அநியாயம். அதாவது அவர்கள் நம்மைக் கொல்வது நியாயம், நம் அரசு திருப்பி அவர்களைக் கொல்வது அநியாயம். இதுக்கு என்ன அறிவுஜீவி பசப்பு?
இந்த முரட்டுமுட்டாள்தனத்துக்கெல்லாம் துணைபோகாதீர்கள் , தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்
சரவணன் ஆ
அன்புள்ள நண்பர்களுக்கு,
என் கருத்து இதுவே.
மனிதாபிமானக் கண்ணோட்டத்தால் மட்டுமே உண்மையான ஆதரவைத் திரட்டவும் முடியும். நீதிமன்றத்தைப் பழி தூற்றுவதும், காங்கிரஸை வசைபாடுவதும், பிரிவினைவெறி பேசுவதும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.
காரணம் அரசியல்கட்சிகளுக்குப் பல கட்டாயங்கள் உண்டு. அவை நீதிமன்றத்தைத் தாண்டிச்செல்லமுடியாது. ராஜீவ் காந்தி கொலை போன்ற நுட்பமான விஷயத்தை அவை கவனமாகவே கையாள முடியும். உதாரணமாக பாரதிய ஜனதா. அது இவ்விஷயத்தை ஆதரித்தால் அது காங்கிரஸ் எதிர்ப்பால் ராஜீவ் கொலையாளிகளை ஆதரிக்கிறது என்ற நிறம் வரும். இதே இக்கட்டு மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் எல்லாம் உண்டு. காங்கிரஸ் அதை வசதியாக இந்தியா முழுக்க பரப்பும். ஆகவே யோசிப்பார்கள். பிரிவினைவாதம் பேசினால் எந்த அரசியல்கட்சியும் ஆதரவை அளிக்காது.
ஆகவே மனிதாபிமானக் கண்ணோட்டம் மட்டுமே உண்மையாக செல்லுபடியாகக் கூடியது. ஆனால் நம்மில் அந்த விவேகமுள்ளவர் அனேகமாக யாருமில்லை. 'தமிழகம் தனிநாடாகவேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த மூவருக்கும் விடுதலை தேவை என்று சொன்னால் மட்டுமே அவர்களை ஏற்போம் , இல்லையேல் கீழ்த்தரமாக வசைபாடுவோம்' என்கிறார்கள் தமிழிய ஆதரவாளர்கள். அவர்களின் எதிர்ப்பு கடைசியில் ஒரு சின்னக் குமிழியாக உடைந்து போகும். அதிகபட்சம் 10 நாள் நீடிக்கும் ஒரு அனுதாப அலை -அதிலும் பெண்கள் பொருட்படுத்தவே போவதில்லை
இவர்களின் இந்த அரசியல்கண்மூடித்தனமே அம்மூவரையும் தூக்கு நோக்கி உந்திச்செல்கிறது என நான் அஞ்சுகிறேன். இப்போதிருக்கும் சின்ன வாய்ப்பையும் அரசியல் மூலம் கெடுக்கிறார்கள். தூக்கு நடக்கட்டும், அதை அரசியல் கருவியாக ஆக்குவோம் என்று நினைக்கிறார்கள். மிச்சபேருக்கு இந்தத் தருணத்தில் முற்போக்காகத் தோற்றமளிப்பது தவிர ஆர்வம் இல்லை.
நாம் நம்மைக் காட்டிக்கொள்வதற்கான தருணம் அல்ல இது. இவர்கள் [ஏன் நானும்தான்] தூக்கு முடிந்த பத்தாம் நாள் யார் அந்த மூவரும் என்று கேட்கும் நடுத்தரவர்க்கம். மாபெரும் மானுடப்படுகொலையைக் கண்டும், தீக்குளிப்புகளைக் கண்டும், காங்கிரசுக்கு வாக்களித்த நம் மக்கள் முன்னால் இதை ஒரு நேரடியான மனிதாபிமானப் பிரச்சினையாக அல்லவா வைக்கவேண்டும்? 'ரத்த ஆறு ஓடும்', 'ராஜீவ் குடும்பமே பதில் சொல்லவேண்டியிருக்கும்' என்று நாகர்கோயிலில் இவர்கள் பேசுவதைக் கேட்டேன். துரதிருஷ்டம், வேறென்ன சொல்ல?
இனி இதில் பெரிதாக நான் சொல்ல ஏதுமில்லை. எனக்கு வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்களுக்கு மாதிரியாக இவற்றை வெளியிடுகிறேன். இவ்விஷயத்தை இங்கே முடித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்.
ஜெ
August 27, 2011
இந்தப்போராட்டத்தில்…
சமகால அரசியலைப் பற்றிப் பேசக்கூடாது என்பது,என் சுயக் கட்டுப்பாடுகளில் ஒன்று. அதை மீறிய முதல் தருணம் இந்த அண்ணா ஹசாரே போராட்டம். அது தன்னிச்சையாக நடந்தது. தொடக்கத்திலேயே அந்த நிகழ்வு ஒரு முக்கியமான வரலாற்றுத்திருப்புமுனை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை சற்றும் புரிந்துகொள்ளாத மேலோட்டமான எள்ளலும் உள்ளீடற்ற தர்க்கங்களும் அதிகமாகக் காதில் விழுந்தபோது எதிர்வினையாற்றினேன். அது ஒரு தொடர் செயல்பாடாக இன்றுவரை நீண்டு வந்துவிட்டது. அவ்வாறு உடனடி எதிர்வினை ஆற்றலாகாது என்ற என் எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.
என் குழுமத்தில் கிட்டத்தட்ட 450 பேர் இருக்கிறார்கள். வழக்கமாகக் கடிதம் எழுதும் அனைவரும் அங்கேயே நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மிக அதிகமாக விவாதம் நடக்கும் குழுமம் அது. அதற்கு அப்பால் எனக்கு வழக்கமாக வரும் கடிதங்களின் எண்ணிக்கை முன்பிருந்ததில் பாதிதான். ஆனால் இந்தப் போராட்டம் பற்றி எழுத ஆரம்பித்தபின்னர் மீண்டும் என் மின்னஞ்சல்பெட்டி நிறைந்து வழிய ஆரம்பித்தது. நெடுநாட்களுக்கு பகலிரவாக பதில்களை எழுதிக்கொண்டிருக்க நேரிட்டது.
காரணம் இணையத்தில் இலகுவாக அகப்படும், எதிர்வினையாற்றும் எழுத்தாளன் இன்று நான் மட்டுமே என்பதுதான். ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கும்போது உணர்ச்சிகள், சஞ்சலங்கள் உச்சநிலையில் உள்ளன. எங்கும் எல்லாரும் அதையே விவாதிக்கிறார்கள். அதே வேகத்துடன் தான் விரும்பும் எழுத்தாளனுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் எந்த எழுத்தாளனும் பல்லாயிரம்பேருடன் விவாதிக்கமுடியாது. விவாதிக்க ஆரம்பித்தால் அது வளர்ந்து வளர்ந்து அது அவன் ஆற்றலை உறிஞ்சி காலியாக்கிவிடும். நான் தனிப்பட்ட பதிலளிக்காத மின்னஞ்சல்கள் ஆயிரத்திஐநூறுக்கும் மேல் உள்ளன. அவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.வரும் நாட்களின் வேலையே அவற்றுக்கு பதிலெழுதி முடிப்பதுதான்.
இந்த நாட்களில் அண்ணா ஹசாரே போராட்டம் பற்றி நான் கிட்டத்தட்ட 60 கட்டுரைகள் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். என் இணையதளமே அண்ணா ஹசாரேவுக்கான தளமாக ஆகிவிட்டது. அதன் கொள்ளளவும் வருகையாளர்களும் அதிகரிக்கவே வேகம் குறைந்து வேறு சர்வர் தேடவேண்டியிருந்தது.ஒருநாள் முழுக்க தளம் இயங்காமல் போனது/எதிர்வினைகளையும் பிரசுரித்திருந்தால் இன்னும் ஐந்தாறு மடங்கு இடம் தேவைப்பட்டிருக்கும். வேறு எந்த விஷயமும் இடம்பெறாது போயிற்று.
அந்தக் கட்டாயம் என்னுடன் விவாதிப்பவர்களால்தான் எனக்கு ஏற்பட்டது. ஐயங்கள் நேர்மையானவை என்பதனால் என்னால் விலக்க முடியவில்லை. அந்த எழுத்துக்கு தமிழ்ச்சூழல் சார்ந்து ஒரு தேவையும் இருந்தது. தொடர்ச்சியாக அண்ணா ஹசாரே பற்றிய விரிவான விளக்கங்களை அளித்த தளம் என்னுடையதுதான். ஆனால் வேறு எதுவுமே செய்யமுடியாமலாகியது. சமகால அரசியல் சார்ந்து உடனடியாக இணையவிவாதங்களில் ஈடுபடுவதன் அபாயம் இது. அந்நிகழ்ச்சி முடிந்தபின் என்றால் எல்லாப் பக்கங்களையும் தொகுத்துப்பார்த்து அதிகபட்சம் இரு கட்டுரைகள் எழுதியிருந்தால் தெளிவாகவே எல்லாவற்றையும் பேசிவிடலாம். ஆகவே இனிமேல் சமகால அரசியல் நிகழ்வுகளை உடனுக்குடன் விவாதிக்கப்போவதில்லை.
இந்த விவாதங்களில் என் நண்பர்களும் தீவிரமாக ஈடுபட்டது நிறைவளிக்கிறது. இதையொட்டி அண்ணா ஹசாரே பற்றிய என் எழுத்துக்களின் ஆங்கில மொழியாக்கம் http://thesabarmati.wordpress.com என்ற தளத்தில் பிரசுரமாகிவருகிறது. அண்ணா ஹ்சாரே பற்றிய கட்டுரைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட http://annahazare-tamil.blogspot.com/ என்ற வலைமனை நண்பர்களால் http://www.gandhitoday.in/ என்றபேரில் ஒரு வலையிதழாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காந்தி, காந்தியப்போராட்டங்கள் பற்றிய எல்லாத் தகவல்களையும் ஒரே இடத்தில் தொகுப்பதே அதன் நோக்கம்.நண்பர்கள் மொழியாக்கம் செய்து உதவலாம்.
அண்ணா ஹ்சாரே பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு கிழக்கு பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. 'அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான காந்தியப்போராட்டம்'
சிறிய அளவிலேனும் இதில் பங்கெடுத்த நிறைவு எனக்குள்ளது. இப்போதைக்கு இது போதும்.
தளங்கள்
காந்தியம் இன்று இணையதளம் காந்திய கட்டுரைகள்
சபர்மதி இணையதளம் ஆங்கில மொழியாக்கங்கள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

